Arround
vellore:
Chinnamalai
(Vallimalai) Jain cave
வள்ளிமலை (சின்னமலை) சமண குகைப்பள்ளி
Before reach, near to Vallimalai Murugan temple – Chinnamalai Jain cave situated - GPS coordinates (13.074, 79.25)
This is one more Jain Monks School in Vallimallai.
வள்ளிமலைக்கருகே
இன்னொரு சமண குகைப்பள்ளி.
மலையும் மலைச்சார்ந்த வனநிலப் பகுதியான வள்ளிமலை சமணக் குடவரை மற்றும் குகைப்பள்ளியைக் கண்ட பிறகு சின்னமலை
என்னும் சமணத்தடயத்தைக் காண வந்தோம். இங்குள்ள
சிற்பத்தொகுதிகள் அனைத்தும் அங்கு கணட சிற்பங்களை விட
மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன. நல்லதொரு சிற்பியின் கைவண்ணம் என்றே சொல்லலாம். அனைத்துமே கைக்கெட்டாமல் வடிக்கப்பட்டிருந்தாலும் கல்லால் அடித்து ஏனோ சிலர் சிதைத்துள்ளதையும்
காணும் போது மனம் வருந்தவே
செய்தது.
VIDEOS
இத்தலம் இன்னும் தொல்லியல் துறையினர் மேற்கொள்ளப்படவில்லை அதனால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளது. தன்னார்வ சிற்ப பாதுகாப்பு அமைப்புகளும் ஏனோ கண்டுகொள்ளவில்லை.
-----------------------
வள்ளிமலை மலைக்கோவிலுக்கு செல்லும் முன்பாக இடதுபுறம் செல்லும் சிறிய சாலையில் 500மீ. தூரம் பயணித்தால் அங்கே சில குடியிருப்புகளின் விரிவாக்கத்தில் சிறிய மலைப்பாதை ஒன்று தென்படும்.
அதில் ஏறிச் சென்றால் சமணக்குகை மற்றும் தீர்த்தங்கரர்கள், சாசன தேவியர் சிலைகள் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளதை கண்டு தரிசிக்கலாம்.
கரடுமுரடான சற்று செங்குத்தான காட்டுப் பாதையில் செல்வது சிரமமாக உள்ளது. படிகள் இல்லா மலையேறி பழக்கம் இல்லாதவர்கள் செல்லத் துணிய வேண்டாம். மேலும், செல்பவர்கள் பாதுகாப்பு கருதி ஆண், பெண் இருபாலருமாக கூட்டமாக சென்றால் ஆபத்தை தவிர்க்கலாம். நல்ல நண்பகல் வெயில் நேரத்தில் சென்றால் விஷ ஜந்துகளிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இந்த தொன்மையான பொக்கிஷம் இன்னும் தொல்லியல் துறையினரால் ஏற்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சிக்கு அருகே சென்றதும் மரம், செடி, புதர்களுக்குகிடையே பளீர் என்று நம்மைக் கவரும் வண்ணம் மூன்று சிற்பத்தொகுதி ஒரே பாறையில் காட்சியளிக்கிறது. மட்டுமல்லாமல் பாறையை செவ்வகமாக குடைந்து அதனுள் புடைப்புச்சிற்பங்களாக துல்லியமாக சரியான அளவு விகிதத்தில் செதுக்கப்பட்டதைக் காணும் போது, சிற்பங்கள் அனைத்தும் பாறைச் சுவரில் செவ்வகச்சட்ட அடித்து அதனுள் மாட்டப்பட்ட ஓவியம் போல காணப்படுவது ஒரு சிறப்பான அம்சம். சிற்பத்திருமேனிகளைக் காணும் போது இருகைஉயர்த்தி வணங்கவே தோன்றும் எவருக்கும்; அவ்வளவு நேர்த்தி…
முதல் சிற்பத்தொகுதி:- அம்பிகா இயக்கி (தர்மதேவி யக்ஷி) யின் சிலை இடது காலை மடித்து வலதை தொங்க விட்ட நிலையில் வேதியில் அமர்த்தப்பட்டுள்ளாள். அவளது (முன்பிறவியில் ஈன்ற) மகன்கள் சுபங்கன் மற்றும் பிரபங்கன் இருவரும் சிதைவுற்றும், பணிப்பெண் தோழி நின்ற நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளன.
தலைக்குமேல் கூரான கூம்பு வடிவ கீரீடமும், மேல்அடுக்கில்
மாமரம் போல குடையப்பட்டுள்ளது. (சில இடங்களில்
கமுகு மரம் செதுக்கப்பட்டிருக்கும்). இயக்கியின் கைகளில் இருந்த நீலோற்பமலர் மற்றும் மாங்கனி சிதைந்தும் காணப்படுகிறது. கழுத்து, காது, இடை, தோள், கைகளில்
அணிந்த ஆபரணங்கள் அரிமானத்தால் தெளிவாக தென்படவில்லை. அதற்கான புடைப்புக்கோடு அடையாளங்களே தென்படுகின்றன.
இரண்டாவது சிற்பத்தொகுதி: தீர்த்தங்கரர் அர்த்தபர்யங்காசனத்தில் சிங்காதனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். அவர் அருகபதவியை அடைந்தவர்
என்பதை தெரிவிக்க, எண்வித சிறப்புகளும் செதுக்கப்பட்டுள்ளன.
சிங்காதனம், பாமண்டலம் /ஒளிவட்டம்(halo), முக்குடை, பிண்டி மரம் தேவ துந்துபி.
தேவரசர் செளதர்மேந்திரன் ஐராவதத்திலும் மற்ற தேவஅரசர்கள் அவரவர்
வாகனத்தில் அமர்ந்து மலர்மாலை தூவுவது ,திவ்யதொனி ஓசையை தெரிவிக்க மத்தளம்போன்ற சிற்பம், சாமரைத்தேவர்கள் இது போன்ற சிற்பங்கள்
எண்வித சிறப்புகளை தெரிவிப்பதாகும். அத்துடன் வலதில் யானைமீது ஸ்ரீபிரம்மதேவரும், இடதில் சிம்மத்தின்மீது ஸ்ரீ அம்பிகா இயக்கியும்
(சிதைந்துள்ளது) செதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தொகுதி: ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிரசின்மேலே
பனாமுடி(பவன/நாக- லோக
தேவரசன் ஸ்ரீதரணேந்திரன் படமெடுத்தநிலையில்), அதன்மீது முக்குடை மற்றும் பிரபாவட்டமும், சாமரை தேவர்கள் மலர்தூவுவதைப்போன்ற தோற்றத்தில் நின்றகோலத்தில் வடிக்கபட்டுள்ளார். அவரைச் சுற்றி நான்கு அருகதிருமேனிகள்(மல்லிநாதர், வாசுபூஜ்யர், நேமிநாதர், மகாவீரர் ஆகிய நால்வர்) முக்குடை,
சாமரை தேவர்களுடன் அர்த்தபர்யங்காசன தியானக் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
இவ்வைந்து ஜினர்களும் பாலபிரம்மச்சாரிகளாவார்கள். அதாவது திருமணம் செய்துகொள்ளாமல் சந்நியாசம் ஏற்று ஜினபதம் அடைந்தவர்கள். (வள்ளிமலைக்கு இடதுபுறம் உள்ள குகைப்பள்ளியில் உள்ள
சிற்பத்தொகுதியிலும் காணப்படும். முதலில் ஓருசிற்பம் சிறிய அளவில் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த ஐவர் தொகுதி
செதுக்கியபின் பிற்காலத்தில் முதலில் உள்ள ஆறாவது திருமேனி,
சிற்பி ஒருவரின் ஆர்வத்தில் வடிக்கப்பட்டதாக இருக்கலாம்) இவ்வமைப்பு இவ்விரு தலத்திற்க்கும் கூடுதல் சிறப்பை அளிக்கிறது.
சின்னமலை உச்சியில் ஒரு குகைத்தளம் காணப்படுகிறது.
சிதைந்த சிலையிலுள்ள இக்குகையின் ஊடே மறுபக்கம் பார்க்கும்
போது ஒரு இயக்கியின் சிற்பம்
தென்படுகிறது.
அத்திசை நோக்கி இடப்புறம் வரும்போது அங்கே பாறையில் செவ்வகமாக குடைந்த ஒரு பள்ளத்தில் மிக
அழகான நேர்ந்தியான ஒரு தீர்த்தங்கரர் திருமேனி
அர்த்தபர்யங்காசன கோலத்தில் காணப்படுகிறார். கண்ணைக் கவரும் இச்சிற்பம் அத்தலத்திற்கே பெருமைச் சேர்க்கும் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அதன் அருகே மிகச்சிறிய
ஒரு பார்ஸ்வ ஜினர் பனாமுடியுடனும், ஸ்ரீ தரணேந்திரன்போல ஒரு
சிறிய உருவமும் காணப்படுகிறது. இது பிற்காலத்தில் வடிக்கப்பட்டிருக்கலாம்.
அதன் கீழுள்ள பள்ளத்தில் இறங்கிச் சென்றால் முன்பு குகைவழியே தென்பட்ட இயக்கிச் சிற்பத்தை சற்று இருளான நிழற்ப்பகுதியில் காணலாம். அது அம்பிகா இயக்கி(தர்மதேவி)யின் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
ஆனால் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் சுலபத்தில் அடையாளம் காணப்படமுடியாமல் உள்ளது.
அதனை அடுத்து ஒரு குகைத்தளம் காணப்படுகிறது.
புறத்தில் வாசல்காலுடன் கதவில்லா நுழைவாயிலுடன் காணப்படும் இக்குகையில் முனிவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
அனைவரும் ஒருமுறையாவது காணவேண்டிய சமணத்தலமாகும்.
-------------------------
பல புதிய தலங்களையும், களங்களையும் உங்கள் பதிவுகள் மூலமாகக் காணமுடிகிறது. அரிய பணி. தொடருங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி sir
Delete