சிலப்பதிகாரம் கவிதாஞ்சலி




சிலப்பதிகாரம் கவிதாஞ்சலி





என்  இனிய  சொந்தங்களே,

           இச்சிலப்பதிகாரக்  கவிதாஞ்சலி,  எனக்கு  நானே  ஆகஸ்ட்  2018ல்,  வைத்துக்  கொண்ட  தேர்வு  எனவும்  கூறலாம்.  ஒரு  பொறியாளனாக  எனக்கு  தமிழ்  எழுத  வருமா  என நினைத்து,  நான்  எழுதத்  தொடங்கிய  முதல்  நெடுங் கவிதை  எனலாம்.  பேராசிரியர்  ஸ்ரீ சந்திரன்  அவர்களின்,  ஐம்பெருங்காப்பியத்தின்  பகுதியான  சிலப்பதிகாரத்தைக்  கொண்டு  எழுதிப்  பார்த்தது.  இது  மிகக்  குறுகியதாய்  அமைந்ததற்கு  முக்கிய  காரணம்  முதல்  கவிதை  என்பதும்,  கதைத்தெரிந்தால்  போதும்  என்று  நானே  நினைத்துக்  கொண்டதும்  தான்.
           படித்துப்  பாருங்கள்,  சுவையிருந்தால்  நண்பரிடம்  கூறுங்கள்.  குறைக்  கண்டால்  தூக்கி  எறியுங்கள்.  நன்றி,  வணக்கம்.

                                     அன்புடன்  உங்கள்,
                                முட்டத்தூர்.  அ.  பத்மராஜ்.    





சிலப்பதிகாரம்  கவிதாஞ்சலி.

                     மங்கல  வாழ்த்து.

மகரந்த  தூள்  சிந்தும்,  மலர்  மாலை  சூடிய
     சோழனின்  வெண்கொற்ற,  குடை  தரும்  குளிர்ச்சி  போல்
இச்சுந்தரப்  புவியினில்,  கருணையைப்  பொழிந்திடும்
     திங்களைப்  போற்றுவோம்,  திங்களைப்  போற்றுவோம்

பொன்னி  நாடுடைய,  பொற்கால  சோழனின்
     சத்திய  ஆணைகள்,  சுழன்றிடும்  வட்டம்  போல்
அழகிய  மேருவை,  வலம்பட  சுற்றிடும்
     ஞாயிறு  போற்றுவோம்,  ஞாயிறு  போற்றுவோம்.



புகார்  காண்டம்
                    
 சேரனின் உடன்பிறப்பாம்,  செந்தமிழ்ப்  புலவனாம்
     இளங்கோவின்  கைவண்ணம்,  இணையற்ற  இச்சிலம்பு
அதிகார  மையத்தில்,  அவன்  உதித்து  வாழ்ந்ததனால்
     அதிகாரம்  பல கொண்ட,  சிலப்பதிகாரம்  இது                        1

பேரரசனானாலும்,  பெருஞ்செல்வம்,  கொண்டாலும்
     ஊழ்வினை  உடன்  வந்து,  உருத்துவது  தான்  வாழ்க்கை என்ற
மாபெரும்  சத்தியத்தை,  மண்ணுலகோர்  புரிந்து  வாழ
     மலை  நாட்டின்  தனி  இளவல்,  யாத்ததிந்த  காவிய  நூல் 2


கோணாத  கோல்  கொண்டு,  குளிர்த்  திங்கள்  குடையுடனே
     பாராண்ட  சோழனின்,  புகழ்  பரந்த  சோழத்தில்
மாதம்  மும்மாரிப்  பெய்து,  மடை  திறந்த  நீர்  வளத்தில்
     முதலிடத்தில்  திளைத்திருக்கும்,  கதை  களமே  பூம்புகார்  தான் 3

வான்மழையின்  கொடை  போன்ற,  வணிகனவன்  மாநாய்க்கன்-அவன்
     மாமணையில்  உதித்தவள்  தான்,  மதிமுகத்தாள்  மண்ணரசி
திருமகளின்  உருவத்தாள்,   தேன்  சிந்தும்  பருவத்தாள்
     பூம்புகாரே  போற்றுகின்ற,  கண்ணகி  தான்  கதை  நாயகி 4

செழுமை  கொண்ட  சோழநாட்டில்,  பெருமை  கொண்ட  பூம்புகாரில்
     வணிககுல  திலகமென,  வாழ்ந்திருந்தான்  மாசாத்துவன்
செங்கோல்  மன்னனுக்கே,  செல்வமதை  கடனளிக்கும்
     செம்மா  வணிகனென,  சிறப்புடனே  தனித்திருந்தான்   5

அத்தனை  செல்வத்தையும்,  அனுபவித்து  ஆள்வதற்கு  
     அவ்வணிகன்  குலவிளக்கு,  அவன்  பெற்ற  அழகுமகன்
 குலக்கொழுந்து  ஒன்றெனினும்,   குணவானாய்  வளர்ந்திருந்தான்
   இக்கதையின்  நாயகனே,  அந்த  மகன் கோவலன்  தான்     6

கணிகை  குல  கன்னியவள்,  மண்ணுலக  ரம்பையவள்
     ஆடல்  பாடலிலே,  விண்ணுலக  ஊர்வசியாம்
அரசவையின்  அரங்கத்தில்,  ஆயிரம்  கழஞ்சி  பொன்  பெற்ற
     தலைக்கோல்  மாதவியே,  இக்கதையின்  திருப்பு  முனை    7

தான்  பிறந்த  வணிககுலம்,  தழைத்தோங்கி  வளர்வதற்கு
     தங்கமகன்  தனி வாழ்வை,  துணையாக்கத்  துடித்து  நின்றான்
விண்ணுலக  தேவதை  போல்,  விரும்பியவன்  தேடவில்லை
     மண்ணுலகில்  மாண்பு  மிக்க,  மருமகளை  தேடி  நின்றான்  8

மாசறு  பொன்னாக,  வலம்புரி  முத்தாக,  காசறு  விதையாக,  கரும்பாக,
     காத்திருந்த  கண்ணகியின்,  கரம்  சேர்த்தான்  கோவலனை
கன்றாத  வளமையுடன்,  குன்றாத  இளமையுடன்
     தேனுண்ட  வண்டுகள்  போல்,  திளைத்திருந்தார்  இருவருமே     9

மாசற்ற  வாழ்வுடனே,  மனங்களித்து  வாழ்கையிலே
     மாதவியின்  உரு  கொண்டு,  மாந்தியவன்  வந்து  நின்றான்
இல்லாளும்,  இல்லமும்,  இமயமொத்த  செல்வமும்
     எல்லாம்  இழந்திடுவோம்,  என்று  அவன்  அறியவில்லை         10



குழலிலொடு,  யாழும்,  தாளம்,  மத்தளம்  பொருந்தி  கொட்ட
     கொடியிடை  துவள  மாதவி,  கொற்றவன்  முன்னே  ஆடினாள்
நாட்டிய  நன்னூல்  எல்லாம்,  நடனத்தில்  இலக்கணம்  ஆக்க
நாடுடை  வேந்தன்,  பொன்னொடு,  தலைக்கோல்  நீட்டினான்        11

தலைக்கோல்  மாதவியின்,  தாயவள்  சித்ராபதி
     கூனியின் கைப்பதித்தால்,  கிளிச்சிறை  பசும் பொன்னை - இதை
  விலை  கொடுத்தேற்பவன் தான்,  வேல்  விழியால்  மாதவியை
      இணைந்து  நல்  மகிழலாம்,  என்றுரைத்து  நில்  என்றாள் 12

கூனியின்  கூற்றைக்  கேட்டு  கிளிச்சிறை  பொன்னைப்  பார்த்து
     வாங்கிடப்  போகும்  அவனை  நோக்கிட  நின்றார்  மக்கள்
அவ்வழி  சென்ற  கோவலன்  அவளிரைக்  கேட்ட  பின்னர்
     கைப்பொருள்  அள்ளித்தந்து  கைதி  போல்  பின்னே  சென்றான் 13

கூனியின்  கூற்றைக்  கேட்டு  கிளிச்சிறைப்  பொன்னைப்  பார்த்து
     வாங்கிடப்  போகும்  அவனை  நோக்கிட  நின்றார்  மக்கள்
அவ்வழி  சென்ற  கோவலன்  அவளுரைக்  கேட்ட  பின்னர்
     கை  பொருள்  அள்ளித்தந்து  கைதி  போல்  சென்றான்  பின்னே 14

மாதவியின்  கரம்  பற்றி,  மனையாளை  விட்டகன்றான்
     மனம்  துடித்த  நிலையினிலே,  மனைவியவள்  தனியானால்
விழுநிதி  எளிதிற்  பெற்ற,  வறியவன்  போல்   கோவலனும்
     மதிமுகத்தாள்  மாதவியின்,  மடியுறங்கி  மகிழ்ந்திருந்தான்     15

வஞ்சியவள்  வாசலிலே,  கோலமிட்டால்  தினந்தினமும்
     கொண்டவனின்  காலடிகள்,  பதியவில்லை  ஒருதினமும்
காத்திருந்தாள்  கற்பு  மகள்,  களித்திருந்தான்  வணிக  மகன்
     பெருநிதியம்  மறையும்  வரை,  பித்தனாக  வாழ்ந்திருந்தான் 16

பூம்புகார்  கடற்கரையில்,  பொன்னிலவின்  நிழலடியில்
     கோவலன்  பாடுதற்கு,  கோலமயில்  யாழ்  தந்தாள்
காவிரியின்  பெருமைதனை,  கானல்வரி  ஆக்கியவன்
     பாடி  முடித்துவிட்டு,  பாவையிடம்  யாழ்  தந்தான்    17


முன்  பிறப்பின்  கர்மவினை,  பின்  பிறப்பில்  தொடர்ந்து  வர
     யாழிசையின்  மேல்  வைத்து,  ஊழ்வினையும்  வந்துருத்த
கயல்  விழியால்  மாதவியும்,  காவிரியை  மனதிருத்தி
     கானல்வரி  பாடியவள்,  காதலனை  நோக்கினாளே        18

ஆடவனின்  ஆழ்மனதில்,  ஆழ்ந்திருக்கும்  சந்தேகம்
     ஆடத்தி  மாதவிமேல்,  அரும்பாகி  பூத்ததிங்கு
கானல்வரி  பொருள்  மாற்றி,  காளையவன்  மனதிலேற
கோதையவள்  துடிதுடிக்க,   கோவலனும்  விட்டகன்றான்   19


கட்டியவள்  வாழ்வுதனை,  துச்சமென  வாழ்ந்தமைக்கும்
     கன்னலொத்த  கண்ணகியை,  கனலிலிட்டு  சென்றமைக்கும்
தன்மனது  குற்றத்துடன்,  தலை  கவிழ்ந்து  நடந்த  அவன்
குலக்கொடியாம்  கண்ணகியின்,  கரம்  நாடி  வீடு  வந்தான்     20

குன்றொத்த  செல்வமும்  போய்,  கொண்டிருந்த  பெருமையும்  போய்
     காவிரிபூம்பட்டினத்தின்,  கடைமகனாய்  தலைகவிழ்ந்தான்
தேடிவந்த  தன்  தலைவன்,  திருந்தி  விட்ட  நிலையறிந்து
     கோடியின்பம்  பெற்றவளாய்,  மனம்  குழைந்தாள்  கண்ணகியும் 21
மறுவாழ்வு  பெறுவதற்கும்,  மறு  வணிகம்  செய்வதற்கும்
     மதுரை  மாநகர்  நோக்கி,  மனைவியுடன்  புறப்பட்டான்
செங்கதிரோன்  வெம்மையினை,  சிறிதறியா  கண்ணகியும் – தன்
     செவ்வடி  சிவந்திடவும்,  பின்  தொடர்ந்தாள்  கோவலனை 22

ஊழ்வினையால்  வந்த  பயன்,  உள்ளத்தை  தீய்த்திடவும்
     கட்டியவள்  படும்  துயரம்,  கண்களில்  நீர்  கோத்திடவும்
கால்  நடந்த  வழியினிலே,  கவுந்தி  என்னும்  சமணச்  செம்மல்
     கண்ணகியின்  நிலையறிந்து,  கடும்பயணத்  துணையானாள்  23

ஆதவனின்  கொடுமைதனை,  அவர்கள்  அறவே  புறக்கணித்து
     அவன்  உறங்கும்  வேளையிலே,  அடி  எடுத்து  வைத்தார்கள்
கூடல்  மாநகரினிலே,  கவுந்தியின்,  கூற்றேற்கும்  மாதிரியிடம்
     நாயகனும்  நாயகியும்,  நற்துணையாய்  சரணடைந்தார் 24           
                    

மதுரை  காண்டம்

காவிரிபூம்பட்டினத்தில்  கலைமகள்  போல்  வாழ்ந்த  அவள்
     கட்டியவன்  வணிகம்  செய்ய,  கால்  சிலம்பு  உதவுமென்று
இரண்டினிலே  ஒன்றேடுத்து,  இதயமவன்  கைப்பதித்தாள்
     விற்றேடுத்து  பொருள்  கொண்டு,  புது  வணிகம்  செப்புவித்தாள் 25

சிலம்பு  பெற்ற  செவ்வணிகன்,  தெருவிறங்கி  நடக்கையிலே
     வல்வினையின்  வெம்மையினால்,  வரும்  துன்பமறியவில்லை
பொற்கொல்லர்  பின்  தொடர,  பொய்  கொல்லன்  எதிரில்  வர
     கண்ணகியின்  காற்சிலம்பை,  காட்டினான்  கயவனிடம் 26

கலை  நயம் மிக  கொண்ட,   கால்  சிலம்பை  காட்டி  வர
     அவை  நோக்கி  செல்கின்றேன்,    அகத்திலிரு  என்றுறைத்தான்
கூற்றுவனின்  கோட்டையிலே,  அடி  எடுத்து  வைப்பது  போல்
     கொல்லன்  அவன்  வீட்டினிலே,  கோவலனும்  அடி  புகுந்தான்  27

வெண்கொற்ற  குடையோடு,  கோணாத  கோல்  வீழ
அரண்மனை  வெண்  மணியும்,  அதிர்ந்து  ஒலித்து  எழுப்ப
எட்டு  திசை  நடுங்கி,   இருள்  சூந்த  கனவுதனை
     பாண்டியனின்  பத்தினியும்,  பகர்ந்திட்டாள்  தோழியிடம்     28

கோப்பெருந்  தேவியின்,   பாதச்  சிலம்பு  தனை
     குற்றமென்று   அறிந்திருந்தும்,  பதுக்கிய  அப்பொற்கொல்லன்
கோவலனைத்  திருடனென்று,  கொற்றவன்பால்  கூறிவிட
     கொற்றவனோ  கூற்றுவனாய்,  கோவலனின்  உயிரெடுத்தான்     29

கால்  சிலம்பு  விற்கச்  சென்ற,  கணவன்  வரவில்லை  என்று
     உடல்  பதைத்து  கண்ணகியும்,  ஊர்முழுதும்  தேடினாளே
அரண்மனை  வாயிலிலே,  அன்றிருந்த  காவலர்கள்
     கொலைக்கலம்  நாடி  உந்தன்,  கோமகனை  காண்  என்றார்    30

நாயகனின்  சிரம்  இழந்த,  நெடுவுடலை  கண்ட  அவள்
     உயிர்  துடித்து  துவண்டு  விட்டாள்,  உண்மையினை  கேட்டறிந்தாள்
சிரம்  அவிழ்ந்த  கூந்தலுடன்,  செந்நெருப்பு  விழிகளுடன்
      மறு  சிலம்பை  கையிலேந்தி,  மாகாளி  என  உருவெடுத்தாள்    31

 அறம்  சாயா  பாண்டியனின்,  அரண்மணை  சென்ற  அவள்
     அறிவுச்  சிதைந்ததுடன்,  அறமிழந்தோன் ,  காவலனே
தனிச்  சிலம்பு  ஒன்றுடனே,  தனல்  கக்க  ஒருத்தி  வந்து
     வாயிலில்  நிற்கின்றாள்,  என்றுரைக்க  செல்  என்றாள்  32

 

மன்னன்  தந்த  அனுமதியில்,  மா சபைக்கு  சென்ற  அவள்
     என்  கணவன்  கள்வனென,  எதைக்  கொண்டு  தீர்ப்பளித்தாய் – என்று
அவையோர்  முன்  வேந்தனிடம்,  அவள்  தொடுத்த  கனைகளினால்
     மதுரை  மாமன்னவனும்,  மலைத்துவிட்டான்  அவள் நிலையால்    33

என்னரசி  சிலம்புடனே,  ஒத்தது  தான்  இச்சிலம்பு
     கள்வன்  தந்து    சபை  கவர்ந்த,  காற்சிலம்பும்  இச்சிலம்பே
என் தேவி  சிலம்பினிலே,  இருப்பதெல்லாம்  முத்துப்  பரல்
     என்றுரைத்த  பதிலினிலே,  ஏந்திழையாள்  வெகுண்டெழுந்தாள்    34

கண்ணகியென்  காற்சிலம்பில்,  கண்டிடுவாய்  மாணிக்கத்தை
     கள்ளனல்ல  என்  கணவன்,  என்று  கண்டபின்பு  நீ  தெளிவாய்   – என
வேங்கையென  சினங்கொண்டு,  வெண்தரையில்  சிலம்பெறிய
     மாணிக்கப்  பரல்  அனைத்தும்,  மாசபையில்  சிதறியது      35

  மாணிக்கப்  பரலொன்று  தெறித்து,  மன்னனவன்  மெய்யைத்  தொட
     யானே  அக்கள்வனென,  அரியணையில்  உயிர் துறந்தான்
மறம்  உரைத்த  பேரரசன்,  மண்ணுலகை  நீத்ததனால் – அவன்
     மாபெரும்  பத்தினியாம்,  மாராணி  பின்  தொடர்ந்தாள்     36

கண்ணகியின்  கோபக்கனல்,  கடுகளவும்  குறையவில்லை – அவள்
     வெறி  கொண்ட  விழி  கண்டு,  வைகை  நகர்  வாடியது
இடமுலையை  தானறுத்து,  எதிர்திசையில்  வீசியதால்
     தென் கிழக்கு  அதிபதியும்,  சினங்கொண்டு  சீறலானான்     37

பத்தினி  பெண்டீர்கள்,   பெரு வயது முதியோர்கள்
     மறம்  சாரா  அறவோர்கள்,  மலரொத்த  மழலைகள்
ஆநிரை,  அந்தணர்கள்,  சேய்  கொண்ட  மங்கையர்கள்
     அறங்கொல்லா  உயிர்  தவிர்த்து,  அத்தனையும்  கருகியது   38

கூடல்  மாநகர்  எரிய,    கொடியிடை  மாந்தரெல்லாம்
     எந்நாட்டு  நங்கையிவள்,  யாரிந்த  மங்கையவள்
ஒரு  முலை  அறுத்தெறிந்து,  மதுரையைத்   தீயாக்கியவள்
     இந்  நானிலமே  போற்றுகின்ற,  நாரியென  வாழ்த்தினரே   39

கணவனை  இழந்து  நிற்கும்,  கைம்பெண்  கண்ணகியும்
     கடுந்துயர்  வெம்மையினால்,  கலங்கித்  திரியலானாள்
மதுராபதி  என்னும்,   மதுரையின்  தெய்வ  மங்கை
     கண்ணகி  முன்  வர  அஞ்சி,   பின்புறத்தில்  வந்து நின்றாள்     40

பாண்டியப்  பரம்பரையின்,  பழுதற்ற  குணம்  பகர்ந்து
     ஊழ்வினை  தொடர்ந்திட்டால்,  செய்  தவம்  போகுமென்றாள்
வானவர்  வடிவின்றி,  தன்  மானுடர்  வடிவினிலே
     ஈரேழு  நாளினிலே,  உன்  இல்லானை  காண்  என்றாள்        41

கோவலனைக்  கைப்  பற்றி,    கீழ் வாயில்  நுழைந்த  அவள்  – இன்று
     கொண்டவனை  இழந்துவிட்டு,  மேல்  வாயில்  நீங்களானாள்
இரவு  பகல்  பாராது,  இருள்  சூழ்  மனதுடனே
     மதுரையை  விட்டகன்று,  மலை  நாட்டை  நாடினாளே         42

சேர  மா  நாட்டினிலே  செல்லுமிடம்  அறிய  வில்லை – முடிவில்
     திருச்செங்குன்றேற,    செவ்வடி  பதிந்திட்டாள்
தேன்  கொண்ட  பூக்களை,  தன்  கிளையினிலே  சுமந்திட்ட
     வேங்கை  மரத்தடியில்,  வேதனையில்  நின்றழுதாள்  43

மதுராபதி  தெய்வம்  அன்று,  மடந்தைக்கு  உரைத்திட்ட
     ஈரேழு  நாள் கடந்து,  எதிர்பார்த்து  நின்றவள்  முன்
இந்திர  விமானத்தில்,  இந்திரர்  புடை  சூழ – கோவலன்
     கண்ணகியின்  கைப்பற்றி  விண்ணுலகெய்தினானே.   44

               

வாஞ்சி  காண்டம்

விண்ணவர்  விருந்தினராய்,  கண்ணகி  விண்  சென்றதை
     வேடுவ  மங்கையர்,  குறிஞ்சிப்  பண்  பாடினர்
சிறு  பறை  முழக்கத்தில்,  கொம்பெடுத்தூதி
     நறுமணப்  புகையுடன்,  பூமழைப்  பொழிந்தனர்   45

தன்  ஒரு  முலை  அறுத்து,  கொடி  சூழ்  கூடலை
     செந்தீ  கொண்டு   சிதைத்த   சினம்  கொண்ட  பத்தினி
குறுஞ்சியின்  வேங்கை,  மரத்தடி  நின்றவள்
     வில்  கொடி  நாட்டில்,  நம்  வேடுவக்  கடவுளே         46

வின்   மலை  முகட்டை,  வெண்  மேகம்   தழுவி விட
     புள்ளினங்கள்  பண்ணிசைக்க,  பூவினங்கள்  கண்  மலர
கிள்ளையும்  கூகையும்  மெல்லிசையில்  பாடி  வர
     குவிந்திட்ட  பேரழகை,  குறிஞ்சியில்  நாம்  கண்டிடலாம்     47

வெண்  பனி  கொட்டல்  போல்,  வீழ்ந்து  வரும்  அருவிகளும்
     வெண்சலங்கை  ஒலியுடனே,  குதித்  தோடும்  நதி  மகளும்
முத்தமிட்டு  ஒலி  எழுப்பும்,  மூங்கில்  புதர்  காடுகளும்
     நித்தம்  நித்தம்  புது  எழிலை,  அள்ளித்தரும்  குறிஞ்சி  நிலம்      48

வில்  கொடி  மாமன்னன்,  வீரன்  செங்குட்டுவன்  தன்
     சேரத்தின்  மாதேவி  வேண்மாள்,  துடியிடை  கையணைக்க
தமிழ்  நிறை  இளவள்,  தன்  தம்பி  இளங்கோ  உடன்
     மலைவளம்  காணச்  சென்று,  மகிழ்ச்சியில்  மாந்தினான்    49

குரவை  நல்  கூத்தொலியும்,  குறமக்கள்  பாட்டொலியும்
     தினை  புனம்  காப்பேரின்,  தெளிவற்ற  பேச்சொலியும்
தேன்  கூண்டை  அழித்திடும்,  குறவர்கள்  கூற்றொலியும்
     சேரனின்  படை  ஒலியில்,  செம்மண்  நீராயின      50

குறுஞ்சி  வாழ்  மக்கள்,  கோமகன்  வரவு  கண்டு
     தேன்,  தினை,  பழத்துடன்,  சேர்ந்தனர்  மன்னன்  முன்
சேரனின்  அடி  வைத்து,  சிரம்  தொட  வணங்கி நின்று
     கண்ணகியின்  கதையினை,  கண்டதை  கூறினர்  51

மண்ணுலக  உருவமுடன்,  விண்ணுலகம்  சென்ற  மகள்
     மாட்சிமை  மிக  பெற்ற,  மலை  நாட்டின்  தெய்வமவள்
வருங்கால  சந்ததிக்கும்,  வரலாறு  சொல்வதற்கும்
     வளமான  ஒரு  வழியை,  மலைநாடு  செய்ய  வேண்டும்        52

வேண்மாளின்  விருப்பமதை,  வில்  கொடியேன்  செய்வதற்கு
     தான்  ஆளும்  அமைச்சர்களை,  தனித்தனியே  வேண்டலுற்றான்
அவையோர்கள்  மட்டுமின்றி,  அங்கிருந்த  அனைவருமே
     கண்ணகிக்கு  ஒரு  கோயில்,  கட்டவேண்டும் என்றுரைத்தார்      53

தென்  பொதிகை  மலை  சென்று,  கல்லெடுத்து  வரவேண்டும்
     பொன்னான  பொன்னியிலே,  புனித  நீராட்ட  வேண்டும்
வட இமயம்  சென்று  ஒரு  கல்லெடுத்து  வரவேண்டும்
     வாழ்வளிக்கும்  கங்கையிலே,  அதை  நீராட்டி  தரவேண்டும் 54

 முப்படை  தென்னவன்,  வட திசை  ஏகினான்
     கனக  விசயர்களின்,  கர்வத்தை  வீழ்த்தினான்
இமயத்தில்  இருந்து ஓர்,  ஏற்தகு  கல்லினை
     ஏற்றினான்  அவர்கள்,  இரு  சிரம்  தாங்கிட         55  
                    
தேர்ந்த  நல்  புனித  இமயக்  கல்லினை
     நீர்  படை  நூல்  படி,  கங்கை  நீராட்டி
ஆரிய  மன்னர்கள்,  அரும்  சிரம்  தளர
     பூட்டினான்  அதை,  தென் புலம் போக்கிட      56

சேரனின்  பாடியோ  கங்கையின்,  தென்கரை 
     வீரர்கள்  அனைவரும்,  பெற்றனர்  விருதுகள்
மாடலன்  மறையோன்,  மன்னனை  வாழ்த்தினான்
     மாதவி  கானல்வரி,  ஆரியன்  சிரந்தனில்  என்றனன் 57

மாடலன்  கூறினான்,  கண்ணகி  கதையினை
     மாதரி  மறைந்தனள்,  அடைக்கலம்  பொய்த்ததால்
அன்னவர்  தீவினை,  என்னுடன்  இணைந்ததோ – என
     கவுந்தியும்  ஏற்றனள்,  உண்ணா  நோன்பினை 58

வணிகன்  மாசாத்துவன்,  மாபொருள்  விட்டனன்
     முந்நூற்றுருவர்  முன்,  தீட்சையை  ஏற்றனன்
துறவியின்  இல்லாள்,  மகன்  துயர்  தாக்க
     தனிப்பெருந்  துன்பத்தில்,  இறையடி  சேர்ந்தனள் 59

கண்ணகி  மறைவினில்  மீளா  மாநாய்க்கன்
     தவநெறி  நோக்கி,  துறவறம்  ஏற்றனன்
கண்ணகி  கோவலன்,  கடைநிலை  அறிந்து
     மாதவி  நல்லாள்,  மாதுறவேற்றனள்   60

வலம்புரி  சங்குகள்,  வெற்றியை  முழங்க,
     வஞ்சியில்  நுழைந்தான்,  வில்  கொடி  வேந்தன்
கற்புடை  நங்கை,  கண்ணகி  தேவிக்கு
     கற்சிலை  வடித்து,  ஆலயம்  நாட்டினான்   61

மன்னவன்  செங்கோல்  முறைப்பட்  ஆண்டிட
     கற்பென்னும்  பண்பை  காட்டினாள்  சோழனுக்கு
செங்கோல்  வளைந்தால்  பிரிந்திடும்  உயிரென
     வழக்கினைப்  பூட்டி  உணர்த்தினாள்  செழியனுக்கு     62

தன்  வஞ்சினம்  வென்று  தன்  வெஞ்சினம்  தணிந்த
     வாகை  மாலையின்  வளம்  பெரும்  வேந்தன்
வட  திசை  வேந்தர்கள்  அறிந்திடும்  வண்ணம்
     சேரனுக்கு  அளித்தனள்  செவ்விய  புகழ்  தனை 63

மாடலன்  எழுந்தான்  மன்னனை  தொழுதான்
     ஐம்பது  ஆண்டுகள்  ஆண்டிட்டாய்  சேரத்தை
அறக்கள  வேள்வி  இதுவரை  செய்திலை
     மறக்கள  வேள்வியை  மகிழ் உடன் செய்கிறாய்   64

கடம்பினை  வீழ்த்திய   காவலன்  இன்றிலை
     இமயத்தில்  வில்லை  பொறித்தவன்  இன்றிலை
உயிர்  கொள்வதில்  ஓர்,  வரையறை  சொல்லி
     கூற்றுவனுக்கே  கூறிய  வேந்தனும்  இன்றிலை    65

மேலும் மாடலன்  கூறினான்,  மணி  முடி  வேந்தற்கு
     எந்நிலை  கொண்டினும்,  யாக்கை  நிலையிலை
எவ்வுயிராயினும்  அதன்,  நல்வினை  தீவினை
     ஏற்றிடும்  பிறவிகள்,  என்பதே  உண்மை   66

மாடலன்  மொழியினை  மன்னவன்  கேட்டிட
     மாறினான்  நெஞ்சம்  அறவழி  சென்றிட
கனக  விசயரை  கடும்  சிறை  நீக்கினான்
     களிப்புடன்  அவர்  தம்  நாட்டிற்கு  அனுப்பினான் 67

குறுநில  மன்னர்கள்  திறை  பொருள்  நீக்கினான்
     குடிமக்கள்  தந்திடும்  இறை  பொருள்  போக்கினான்
மாடல  மறையோன்  காட்டிய  வழியினில்
     அறக்கள  வேள்வியில்  மனக்களம்  காட்டினான்      68


நல்லறம்  செய்தோர்  பொன்னுலகெய்தலும்
     நம்  நல்வினைப்  பயன்கள்  நம்மிடம்  சேர்தலும்
தீமையின்  பயன்கள்  நமை  தேடி  வருதலும்
     தொடர்ந்திடும்  மறுமையில்  பிறந்திடும்  பிறவியில்     69


                சிலப்பதிகாரத்  தொடர்  முற்றிற்று.

     இத்தொடர்  கதையறியா  சொந்தங்களுக்கு  மட்டுமே,  எழுதினேன்.  தமிழ்   இளவல்,  சமண  முனி  இளங்கோவின்  கவிதை  நடையழகும்,  கன்னித்தமிழ்  சொல்லழகும்,  சிலப்பதிகாரத்தை  ரசித்துப்  பருகிய,  அனைத்து  தமிழ்  நெஞ்சங்களுக்கும்  தெரியும்.  அன்னாரின்  குறிஞ்சி,  முல்லை,  மருதம், நெய்தல்,  பாலை  நிலங்களின்  சொல்லோவியமும்,  முத்தமிழ்  மன்னர்களின்  வித்தகப்  பெருமையைம்,  தன்  பாணியில்  தமிழ்க்கு  அவர்  தந்த  கொடையாகும்.   இது  என்  கன்னி  முயற்சி.  தவறைக்  களைந்து,  ஏற்கும்  படி  கேட்டுக்கொள்கிறேன்.   நன்றி. வணக்கம்.

                                           அன்புடன்   உங்கள்,
முட்டத்தூர். அ. பத்மராஜ்.



No comments:

Post a Comment