பாவ பாஹுடம் - 2


பாவ பாஹுடம் - 2

அகவுணர்வு விளக்க நூல் 

தொகுதி - 2 (பாடல் 91 -  பாடல் 165)


ஆசாரியர் குந்த குந்தர் அருளியது

வழிகாட்டுதலும் வாழ்த்தும்;  மிகுபணிவுக்குரிய,   ஆர்ஜவசாகர் முனிவர்

     தமிழ் விருத்தியுரை; சுல்லக் ஸ்ரீ ஆதிசாகர்ஜி மகராஜ்


             வெளியீடு

ஸ்ரீ சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம்
ஸ்ரீ விசாகாசாரியர் தப நிலையம்
குந்த குந்தர் நகர்
604 505.


வாட்ஸ்அப் பில் தினப்பதிவாக அஞ்சல் செய்ததின் தொகுப்பு.
பதிவேற்றம் - G. துரைராஜ்,செய்யாறு


         ****** 




91

ணவணோகஸாயவக்கம் மிச்சத்தம் சயஸு பாவஸுத்தீஏ |
சே இய பவயண குருணம் கரேஹிம் பந்த்தி ஜிணாணாஏ ||


(பதவுரை)

பாவஸுத்திஏ - தூய அகவுணர்வால், ணவ - ஒன்பது, ணோகஸாய வக்கம் - நோ கசாயங்கள், மிச்சத்தம் - பொய்ம்மை, சயஸு - நீக்குக, ஜிணாணாஏ - ஜிநர் ஆணையால், சேஇய - சேதியம், பவயணம் - பிரவசனம், குருணம் - குரு, பந்த்தி - பத்தியை, கரேஹிம் - செய்க.

(கருத்துரை)

தூய அகவுணர்வால் நோ கசாயங்கள், பொய்ம்மை இவற்றை விலக்குக. சைத்திய பக்தி, பிரவசன பக்தி, குரு பக்தி செய்க, ஜிநர் ஆசைக்கு இணங்க.

(விளக்கவுரை)

அகவுணர்வு தூய்மையால் அடுத்து செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கிறார்.

       இங்கே ஆசாரியர் நீக்க வேண்டிய இரண்டையும் ஏற்க வேண்டிய ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.  ஒன்பது நோகசாயங்களை* நீக்க வேண்டும் என்கிறார். நோகசாயம் உயிர் தன் இயல்பில் தோயும் நிகழ்வுக்குத் தடையகும். அதனால் அதனை விலக்க வேண்டும் என்கிறார். இரண்டாவது பொய்ம்மை. அது ஐந்தாகக் கூறப்படும். பொய்ம்மை ஆன்மாவின் நம்பிக்கை குணத்தைத் தடை செய்வதாகும். அதனால் அதனையும் விலக்க வேண்டும் என்றார்.

          ஏற்க வேண்டிய மூன்றும் முனிவர் நாள் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டியவை ஆகும். பக்தி எனில் அன்புணர்வு. பகவான் படிமைகளில், ஆகமங்களில், குருவிடம்  அன்புணர்வு கொள்ள வேண்டும். ஏனெனில் இவை நல் அகவுணர்வுக்கு ஏதுக்கள் ஆகும்.
----------------------------------------------
*காதை 83 ல் விளக்கவுரை காண்க.
---------------------------------------------- 



************************************** 


92

தித்தயரபாஸியத்தம் கணஹரதேவேஹிம் கந்தியம் ஸம்மம் |
பாவஹிஅணுதிணு அதுலம் விஸுத்த பாவேண ஸுயணாணம் ||


(பதவுரை)

தித்தயர - முழுதுணர் அறிவர், பாஸியத்தம் - அருளியது, கணஹரதேவஹிம் - கணதரரால், கந்தியம் - நூலாக்கப்பட்டது, ஸுயணாணம் - சுருத ஞானம், அதுலம் - ஒப்பற்றது, அதனை, விஸுத்த பாவேண - தூய அகவுணர்வுடன், அணுதிணு - நாள்தோறும், ஸம்மம் - நன்கு, பாவஹி - பாவனை செய்க/ சிந்தனை செய்க.

(கருத்துரை)

முழுதுணர் அறிவர் அருளி கணதரர் நூலக வடித்த சுருத ஞானம் ஒப்பில்லாதது. முனிவரே ! அதனை நாள்தோறும் தூய அகவுணர்வுடன் நன்கு சிந்திப்பாயாக.

(விளக்கவுரை)

ஆசாரியர் ஆகமம் நன்கு பயில வேண்டும் என்கிறார்.

       பன்னிரண்டு அங்கமாக ஆகமம் கூறப்படும் அதனை அருளியவர் முழுதுணர் அறிவர். நூலாக ஆக்கியவர் கணதரர். அதனை நாள்தோறும் ஓதி சுருத அறிவைப் பெற வேண்டும் என்பதாம்.

"ஆங்கவர் அங்க பூவம்
    ஆதிநூல் ஓதி யார்க்கும்
தாங்கரும் கொள்கை தாங்கி"

எனத் துறவியர் நூல் ஓதுதலைச் சுட்டுவார் வாமனர்.
---------------------------------------------
மேருமந்தர புராணம் - 124
-------------------------------------------


************************************** 



92

தித்தயரபாஸியத்தம் கணஹரதேவேஹிம் கந்தியம் ஸம்மம் |
பாவஹிஅணுதிணு அதுலம் விஸுத்த பாவேண ஸுயணாணம் ||

(பதவுரை)

தித்தயர - முழுதுணர் அறிவர், பாஸியத்தம் - அருளியது, கணஹரதேவஹிம் - கணதரரால், கந்தியம் - நூலாக்கப்பட்டது, ஸுயணாணம் - சுருத ஞானம், அதுலம் - ஒப்பற்றது, அதனை, விஸுத்த பாவேண - தூய அகவுணர்வுடன், அணுதிணு - நாள்தோறும், ஸம்மம் - நன்கு, பாவஹி - பாவனை செய்க/ சிந்தனை செய்க.

(கருத்துரை)

முழுதுணர் அறிவர் அருளி கணதரர் நூலக வடித்த சுருத ஞானம் ஒப்பில்லாதது. முனிவரே ! அதனை நாள்தோறும் தூய அகவுணர்வுடன் நன்கு சிந்திப்பாயாக.

(விளக்கவுரை)

ஆசாரியர் ஆகமம் நன்கு பயில வேண்டும் என்கிறார்.

       பன்னிரண்டு அங்கமாக ஆகமம் கூறப்படும் அதனை அருளியவர் முழுதுணர் அறிவர். நூலாக ஆக்கியவர் கணதரர். அதனை நாள்தோறும் ஓதி சுருத அறிவைப் பெற வேண்டும் என்பதாம்.

"ஆங்கவர் அங்க பூவம்
    ஆதிநூல் ஓதி யார்க்கும்
தாங்கரும் கொள்கை தாங்கி"

எனத் துறவியர் நூல் ஓதுதலைச் சுட்டுவார் வாமனர்.
---------------------------------------------
மேருமந்தர புராணம் - 124
-------------------------------------------

************************************** 

93

பீஊண ணாணஸலிலம் ணிம்மஹதிஸ டாஹஸோஸுஉம்முக்கா |
ஹோந்தி ஸிவாலயவாஸீ திஹுவண சூடாமணீ ஸித்தா ||

(பதவுரை)

ணாண - அறிவு, ஸலிலம் - நீரை, பீஊண - அருந்தி, ணிம்மஹதிஸடாஹ - அழிக்க அரிய வேட்கை தீயால், ஸோஸ உம்முக்கா - வாட்டப் படாமல் விடுவிக்கப் பெற்று, திஹுவண - மூவுலக, சூடாமணீ - முடிமணி, ஸித்தா - ஸித்தராக, ஸிவாலய வாஸீ - சிவ புரியில் வாழ்கின்றவராக, ஹோந்தி - ஆகிறார்.

(கருத்துரை )

அறிவு எனும் நீரை அருந்தி அழித்ததற் கரிய வேட்கை தீயால் தீய்க்கப்படாமல் விடுபட்டு, மூவுலக முடிமணி ஸித்தராக சிவபுரியில் வாழ்கின்றவராக ஆகின்றார்.

(விளக்கவுரை)

ஆசாரியர் தூய அகவுணர்வுடன் ஒழுகப்படும் ஒழுக்கங்களின் விளைவாக சித்த நிலை அமைகிறது என்று சுட்டுகிறார்.

       முன்னே செய்ய வேண்டிய ஒழுக்கங்களைக் குறிப்பிட்டார். (காதை 90 - 92) அச் செயல்களின் விளைவை இங்கே குறிப்பிட்டுள்ளார்.

           புலன் வேட்கை தீயாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. அத் தீயை அழிக்கும் நீராக அறிவு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இங்கே அறிவு தன்னையும் பிறிதையும் பிரித்துணரும் மெய்யறிவாகும். அம் மெய்யறிவு நீராலேயே புலன் வேட்கை தீயை அணைக்க முடியும்.

"அருள்தெளிவு ஆர்வம் சிந்தை
   அழகிய நிகழ்ச்சி ஞானம்
பொருவரு தவத்தி னாலும்
   புனிதனாம் உயிரைப் புக்கு
மருவிய வினைகள் மாற்றாம்
   மாசினைக் கழுவி வீட்டைத்
தருதலால் புனிதம் ஆகும்
   தன்மையால் புண்ணியம் ஆமே"

எனவும்,

"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து" #

எனவும்,

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலக நூல் ஓதுவது எல்லாம் - கலகல
கூஉந்துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போஓந்துனை அறிவார் இல்" ‡

எனவும் அறிவின் சிறப்பைச் சுட்டுதலைக் காணலாம்.
-----------------------------------------------
மேருமந்தர புராணம் - 95
#நாலடியார் - 132
நாலடியார் - 140
---------------------------------------------
G. துரைராஜ்/ செய்யாறு
----------------------+--+----------;-------

************************************** 

94

தஸ தஸ தோ ஸுபரீஸஹ ஸஹஹி முணீ ஸயலகால காஏண |
ஸுத்தேண அப்பமத்தோ ஸஞ்ஜமகாதம் பமோத்தூண ||

(பதவுரை) 

முணீ - முனிவரே, ஸுத்தேண - ஆகமத்தில் விளக்கியுள்ள முறையால், அப்பமத்தோ - விழிப்புடன் இருந்து, ஸஞ்ஜமகாதம் - சையமத்தின் அழிவை, பமோத்தூண - நன்கு விலக்கி, தஸ தஸ தோ - இருபத்திரண்டு, ஸுபரீஸஹ - பரீஷகங்களை நன்கு, காஏண - உடலால், ஸயலகாலம் - எப்போதும், ஸஹஹி - பொறுப்பாயாக.

(கருத்துரை)

முனிவரே ! ஆகமத்தில் விளக்கியுள்ள முறையில் விழிப்புடன் இருந்து, சையம் கெடாமல் காத்து, 22 பரீஷகங்களை உடலால் எப்போதும் பொறுப்பீராக!

(விளக்கவுரை)

 அகவுணர்வு விளக்கமுற மேலும் வழி கூறுகிறார்.

     'பரீசகம்' எனில் 'வேதனை' என்று பொருள். 'பீடை' என்றும் குறிப்பர். துன்புறுதல் என்பதாம். 22 காரணங்களால் வரும் துன்பம் 'பரீசகம்' ஆகும். அவை 1. பசி, 2. நீர்வேட்கை, 3. குளிர், 4. வெப்பம், 5. கொசுக்கடி முதலாயின, 6. அம்மணம், 7. அரதி ( ஈடுபாடு/ ஆர்வம் இன்மை), 8. காமம், 9. நடத்தல், 10. அமர்தல், 11. படுத்தல், 12. கடுஞ்சொல், 13. வதைத்தல், 14. யாசகம், 15. பொறாமை, 16. பிணி, 17. உறுத்தல், 18. மலம் (அழுக்கு), 19. பாராட்டின்மை, 20. அறிவுச் செருக்கு, 21. அறிவு குறைவு, 22. ரித்தி காணப்படாமை இவை காரணமாகத் துன்ப உணர்வு தோன்றாது இருத்தல் வேண்டும்.

     துன்புறாமல் இருத்ததற்கு ஆசாரியர் வழியும் கூறுகிறார். ஆகம உரைப்படி ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆகமப் பயிற்சி எப்போதும் செய்ய வேண்டும். அதன்வழி ஒழுக்கத்தில் உறுதி பெற முடியும். ஏனெனில், அப்போது விழிப்புடன் செயல்பட முடிகிறது. விழிப்புடன் செயல்படுவதால் வினைகள் விலகுகின்றன/ உதிர்கின்றன. அப் பொறுமையைக் கொள்ளுதலால் சையம் - அக ஒழுக்கத்தோடு கூடிய புற ஒழுக்கம் - ஓம்பப்படுகிறது. அது கேடுறுதல் இல்லை. அகவுணர்வில் உறுதி அமைகிறது.

"வேட்கையில் பசியில் நோயில்
   வேண்டலில் பொறாமை தன்னில்
தாட்சியின் இருத்தல் போதல்
   கிடத்தலில் உடாமை தன்னில்
காட்சியில் அறிவில் ஞானம்
   இன்மையில் கலங்கிச் சித்த
மாட்சியைச் செலாது அகத்துப்
   பரிசைபன் மூன்றும் வென்றான்" *

"வெப்பமும் குளிரும் மாசும்
   சிற்பமும் துறலும் வெஞ்சொல்
செப்பலும் கொலையும் தின்றல்
   குத்தலும் தீய ஊறும்
துப்புறழ் வாயி னார்தம்
   தொடர்ச்சியாம் பரிசை யுள்ளிட்டு
ஒப்பிலாப் புறத்து நின்ற
   ஒன்பதும் ஒருங்கு வென்றான்"

   என வாமன ஆசாரியர் அகப்பரிசை 13, புறப்பரிசை 9 எனக் காட்டுவார்.

      'காஏண' - உடலால் பொறுத்தல் வேண்டும் என்கிறார். அதனால் மனம் மொழி உடலால் பரிசை பொறுக்கப்பட வேண்டும் என உய்த்துணர வைத்தார்.
--------------------------------------
*மேருமந்தர புராணம் - 786
மேருமந்தர புராணம்- 787
---------------------------------------

************************************** 

95


ஜஹ பத்தரோ ண   பிஜ்ஜஇ பரிட்டிஓ தீஹகாலமுதஏண |
தஹ ஸாஹூ வி ண பிஜ்ஜஇ உவஸக்க பரீஸஹேஹிந்தோ ||

(பதவுரை)

தீஹ காலம் - நெடுங்காலம், உதஏண - நீரால், ஜஹ - எப்படி,  பத்தரோ - கல், பரிட்டிஓ - தன் இயல்பில், ண பிஜ்ஜஇ - பிளவுறுதல் இல்லை, தஹ - அப்படி, ஸாஹூவி - சாதுவும், உவஸக்க - கேடு செய்யும், பரீஸஹேஹிந்தோ - பரிசைகளால், ண பிஜ்ஜஇ - தன் இயல்பில் தளர்தல் இல்லை.

(கருத்துரை)

நெடுங்காலம் நீரில் கிடந்தாலும் கல் பிளவு படுதல் இல்லை;  தன் இயல்பான கெட்டித் தன்மையை இழப்பது  இல்லை. அதுபோல சாது, கேடு செய்யும் பரிசைகளால் தன் இயல்பில் இருந்து இழிவதும் இல்லை; உறுதியாகத் தன் இயல்பில் நிற்கிறார்.

(விளக்கவுரை)

துறவி பரிசைகளால் துவளாமல் நிற்கும் நிலையை ஓர் எடுத்துக் காட்டு  வழி ஆசாரியர் சுட்டுகிறார்.

     கல் மிகவும் கெட்டித்தன்மை உடையது. அது நீரில் நெடுங்காலம் கிடந்தாலும் நீரால் பிளவுபடுவது இல்லை. தன் இயல்பை இழக்காமல் உறுதியாக இருக்கிறது. அதே போல சாதுவின் உறுதியும் அமைகிறது. பரிசைகள் எத்தனை காலம் வந்து இடர் செய்தாலும், அவர் தன் சையம இயல்பில் இழியாது உறுதியாக இருக்கிறார். முன் காதையில் குறிப்பிட்டது போல சாது தன் அகப்புற ஒழுக்கத்தைக் காத்துப் பரிசைகளை வெல்கிறார் என்பதாம்.

************************************** 

96

பாவஹி அணுவேக்காஒ அவரே பணவீஸ பாவணா பாவி |
பாவரஹிஏண கிம் புண பாஹிரலிங்கேண காயவ்வம் ||

(பதவுரை)
முனிவரே ! அணுவேக்காஓ - ஈராறு சிந்தனை, பாவஹி - நினைப்பீராக, அடுத்து, அவரே - மேலும், பணவீஸ - இருபத்தைந்து, பாவணா - பாவனைகளை, பாவி - நினைப்பீராக, புண - உறுதியாக, பாவரஹிஏண - இப் பாவனை இல்லை எனில், பாஹிர லிங்கேண - புறத் துறவுத் தோற்றத்தால், கிம் - என்ன, காயவ்வம் - ஆக இருக்கிறது.

(கருத்துரை)
முனிவரே! ஈராறு சிந்தனை எண்ணுவீராக! 25 பாவனைகளை நினைப்பீராக! இவை செய்ய வில்லை என்றால் உம்முடைய புறவுத் தோற்றத்தால் என்ன ஆக முடியும்? (ஒன்றும் ஆகாது)

(விளக்கவுரை)
பரிசை இடையூறு வந்துற்ற போது அகவுணர்வு தூய்மையாக இருக்க வழி காட்டுகிறார்.

       அகவுணர்வு தூயதாக இல்லாமல் புறத் துறவுத் தோற்றத்தால் உயிருக்கு ஏதும் பயன் இல்லை. 22 (பரிசை) இடையூறுகள் வருங்கால், அவற்றுக்கு ஆட்படாமல் அவற்றைப் பொறுத்து அக ஒழுக்கத்தைக் காத்திட வேண்டும் என முன்னே குறிப்பிட்டார். இங்கே அவ் வக ஒழுக்கம் விளக்கமுற பாவனைகளை
நினைக்க வேண்டும் என்கிறார்.

      மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தலை 'அணு பிரேக்ஷா என்பர்.அது பன்னிரண்டாகக் கூறப்படும் அவை : அனித்தம், அரண் இன்மை, உறவின்மை, பிறிதின்மை, மாற்று, உலகம், ஊற்று, உவர்ப்பு, செறிப்பு, உதிர்ச்சி, போதி பெறற்கருமை, மனத்தின் வரல்* இப் பன்னிரண்டு பொருள் பற்றி தியானித்தல் சிந்தனை ஆகும்.


************************************** 

97

ஸவ்வவிரவஓ வி பாவஹி  ணவ பயத்தாஇம் ஸத்த தச்சாஇம் |
  ஜீவ ஸமாஸாஇம் முணீ சஉதஸகுணட்டாண ணாமாஇம் ||

(பதவுரை)

முணீ - முனிவரே, ஸவ்வ - எல்லா,  விரஓ - பற்றுகளிலிருந்து விலகிவிட்டாய்,  வி - என்றாலும்,  ணவ - ஒன்பது, பயத்தாஇம் - பதார்த்தம்,  ய - மற்றும்,  ஸத்த - ஏழு, தச்சாஇம் - தத்துவங்கள், சஉதஸ - பதினான்கு, ஜீவஸமாஸாஇம் - ஜீவ ஸமாஸை, குண்ட்டாண - குணத்தானங்கள், ணாமாஇம் - பெயர், இலக்கணம் முதலான விளக்கங்களுடன், பாவஹி - பாவனை செய்க.

(கருத்துரை)

முனிவரே!  பற்றுகள் அனைத்தையும் விட்டு உள்ள நீர்,  அக உணர்வு தூய்மை பெற  ஒன்பது பதார்த்தம், ஏழு தத்துவம், பதினான்கு ஜீவ சமாசை, பதினான்கு குணத்தானம் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்வீராக !

 (விளக்கவுரை)

அகவுணர்வு  தூய்மை போற்ற அறிவுப் பயிற்சி கூறுகிறார்.

   உயிர், உயிரல்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, வீடு,  புண்ணியம்,  பாவம் இவை ஒன்பது பதார்த்தம் ஆகும்.

"உயிரும்உயிர் அல்லதும் புண்ணியம் பாவம்ஊற்றும்
 செயிர்தீர் செறிப்பும் உதிர்ப்பும் கட்டும் வீடும்உற்ற
துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக்காய் உரைப்பன்
 மயல்தீர்ந்த காட்சி உடையோய் இதுகேள் மதித்தே"

என மொழிவர் வாமனர்.

   உயிர், உயிரல்லது, ஊற்று, கட்டு,  செறிப்பு, உதிர்ப்பு வீடு இவை ஏழும் தத்துவம்.

 சமாசம் எனில் தொகுப்பு என்று பொருள்.  உயிர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கில் அவற்றை வகைப்படுத்தித் தொகுத்தல் 'ஜீவ ஸமாஸம்' எனப்படுகிறது.  இது பலவகைப்படும், என்றாலும் ஆசாரியர் அடிப்படையான பதினான்கைக் குறிப்பிடுகிறார்.

 ஒரு பொறியின நுண்ணியன பரியன என இருவகைப்படும். இரு பொறியின,  மூன்று பொறியின,  நான்கு  பொறியின, மனமுடை ஐந்து பொறியின,  மனமிலா ஐம்பொறியின. இவ்வேழும் ஆற்றல் நிறையாதன,  ஆற்றல் நிறைந்தன என ஒவ்வொன்றும் இருவகைப்படும். அதாவது, 1) ஆற்றல் நிறையா நுண்ணிய ஒரு பொறியின, 2) ஆற்றல் நிறைந்த நுண்ணிய ஒரு பொறியின,  3) ஆற்றல் நிறையா பரிய ஒரு பொறியின, 4) ஆற்றல் நிறைந்த பரிய ஒரு பொறியின, 5) ஆற்றல் நிறையா இரு பொறியின, 6) ஆற்றல் நிறைந்த இரு பொறியின, 7) ஆற்றல் நிறையா முப் பொறியின,  8) ஆற்றல் நிறைந்த முப்பொறியின, 9)  ஆற்றல் நிறையா நால் பொறியின, 10) ஆற்றல் நிறைந்த நால் பொறியின, 11) ஆற்றல் நிறையா மனமுடைந்து என 12 ஆற்றல் நிறைந்த மன முடை  ஐம்பொறியின, 13) ஆற்றல் நிறையா மனமிலா ஐம்பொறியின, 14) ஆற்றல் நிறைந்த மனமிலா ஐம்பொறியின.

(நுண்ணியன -ஸூக்ஷ்ம ; பரியன - பாதர; மன முடையன - ஸஞ்ஞீ, மனமிலி - அஸஞ்ஞீ; ஆற்றல் நிறையாதன : அபர்யாப்தி, ஆற்றல் நிறைந்தன - பர்யாப்தி)
முனிவர் தன் மனத்தை ஒருநிலைப்படுத்த இந்த உயிர்கள் வகை - விரி தொகுப்பினை சிந்தனை செய்கிறார் என்பர்.

       மோகம், யோகம் இவற்றால் உயிர் நிகழ்வாக்கத்தில் காணப்படும் ஏற்றம் இறக்கங்களைக் குணத்தானம் என்பர்,  அல்லது உயிர் குணங்களில் காணப்படும் விளக்கத்தை குணத்தானம் என்பர்.  உயிர்களின் நிகழ்வாக்கம் (பரிணாமம்) வரம்பற்றது என்றாலும் அவற்றைப் பதினான்கு படி (வரிசை) நிலையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். அவையாவன : 1. மித்யாத்ருஷ்டி (பொய் நம்பிக்கையர்), 2. ஸாஸாதன ஸம்யக் த்ருஷ்டி (இடைநிலை நற்காட்சியர்) 3. ஸம்யக் - மித்யாத்ருஷ்டி (கலப்பு நிலையினர்), 4. அவிரத ஸம்யக் த்ருஷ்டி (விரதமிலா நற்காட்சியர்), 5. ஸய்யதாஸய்யத (அணுவிரதி), 6. பிரமத்த ஸய்யத (விழிப்பிலா ஒழுக்கத்தார்), 7. அபிரமத் ஸய்யத (விழிப்புடை ஒழுக்கத்தார்), 8. அபூர்வகரண சுத்தி ஸய்யத (புதிய புதிய ஒழுக்க விளக்கம்), 9. அணிவ்ருத்திகரண ஸுத்தி ஸய்யத (வேற்றுமை இல்லா விளக்கம்), 10. ஸூக்ஷ்ம ஸாம்பராய சுத்தி ஸய்யத (மெல்லிய கசாய ஒழுக்க விளக்கம்), 11. உபசாந்த கஷாய வீதராக சத்மஸ்த்த (தணிந்த கசாயர்), 12. க்ஷீண கஷாய வீதராக சத்மஸ்த்த (கசாயம் அழித்தவர்), 13. ஸயோக கேவலி ஜிநர் (யோகுடைய ஜிநர்), 14. அயோக கேவலி ஜிந (யோகிலா ஜிநர்)

         இவற்றைச் சிந்திப்பதால், நினைவில் நிறுத்தலால், நினைவு கூரலால் உயிரில் தூய்மை விளக்கம் பெறுகிறது. அதனால் ஆசாரியர் உரைத்துள்ளார்.


************************************** 

98

ணவ விஹ பம்பம் பயடஹி அப்பம்பம் தஸவிஹம் பமோத்தூண |
மேஹுண ஸண்ணா ஸத்தோ பமிஓ ஸி பவண்ணவே பீமே ||

(பதவுரை) 

பீமே - வீர, தஸ விஹம் - பத்து வகைப்படும், அப்பம்பம் - புணர்ச்சி வேட்கை, பமோத்தூண - விலக்கி, ணவ விஹ - ஒன்பது வகை, பம்பம் - பிரும்மசரியத்தை, பயடஹி - வெளிப்படுத்துக ! (ஏனெனில், நீர்) மேஹுண ஸண்ணா - மெய்யுறு புணர்ச்சியில், ஆஸத்தோ - மிகு ஈடுபட்டு, பவண்ணவே - பிறவிக் கடலில், பமிஓஸி - உழல்கிறாய்.

(கருத்துரை)

வீர !  புணர்ச்சி வேட்கையை  ஒழித்து ஆன்ம  இயல்பைப்  புலப்படுத்துக !  மெய்யுறு புணர்ச்சியில்  மிகு ஈடுபாடு கொண்டு பிறவிக் கடலில் உழல்கிறாய்.

( விளக்கவுரை)

அகவுணர்வு தூய்மை பெற மேலும் வழி கூறுகிறார் ஆசாரியர்.

           இந்த உயிர் மெய்யுறு புணர்ச்சியில் (மைதுன ஸஞ்ஞை) தொடக்கமற்ற காலமாக ஈடுபட்டு அகஉணர்வை மலினப்படுத்திப் பிறவியில் உழன்று வருகிறது.  இங்கே புணர்ச்சி என்பது காம உணர்வைச் சுட்டுகிறது. உயிருக்குப் பிறவி நிலையில் நான்கு உணர்வுகள் எப்போதும் காணப்படுகின்றன. அவை : காம உணர்வு, பசி உணர்வு, அச்ச உணர்வு,  பற்று உணர்வு. இதனை முறையே 'மைதுன ஸஞ்ஞை', 'ஆஹார ஸஞ்ஞை' , 'பய ஸஞ்ஞை' , 'பரிக்ரஹ ஸஞ்ஞை',  என்பர். இவை நான்குமே அகவுணர்வை மலினப்படுத்துவனவே,  என்றாலும் ஆசாரியர் இங்குக் காம உணர்வைக் குறிப்பாக எடுத்து விளக்குகிறார். அந்தக் காம உணர்வு பத்து வகை நிலைகளை வெளிப்படுத்துவன வாக அமைய முடியும். அவை காண விரும்புதல், பெற விரும்பும் விருப்பம், இடைவிடாது நினைத்தல்,  உடம்பு மெலிதல்,  பிறர்க்கு உரைத்தல்,  வெட்கம் விடுதல், பார்ப்பன எல்லாம் தான் விரும்பும் தோற்றமாகக் காணல்,  பித்தாதல், மயக்கம்,  இறந்து போதல்.

" காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற
 ஐயிரண்டு அவத்தையும் "

 என குறிப்பிடும் இலக்கண விளக்கம்.

" வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு"

 என குறிப்பிடும் தொல்காப்பியம்.#

      காம உணர்வு உடையாரிடம் காணப்படும் மெய்ப் பாடுகள் இவை. எனவே இவற்றைப் பிரம்மசரியத்துக்கு  எதிரானவை என்றனர்.  இவை விடத்தக்கன.

 பிருமசரியம் ஒன்பது வகையில் போற்றப்பட வேண்டும் என்றார். மனம், மொழி,  உடல், செய்தல், செய்வித்தல், உடனபடல் (3 × 3) என ஒன்பது வகையால் போற்றப்படல் வேண்டும்.  அல்லது பிருமசரியத்துக்கு ஊறு செய்யும் பெண்ணோடு இருத்தல் விருப்பம், 2. பெண் உறுப்புகளைத் தொடுதல்,  3. உணர்வைத் தூண்டும் உணவு, 4. பெண் பயன்படுத்திய பொருளைப் பயன் கொள்ளல், 5. பெண்ணை நோக்குதல், 6. பெண்ணைச் சிறப்பித்துப் பாராட்டுதல், 7. முந்தைய பெண் தொடர்பை நினைவுகூரல், 8. எதிர்காலத்தில் பெண்ணைச் சேரும் விருப்பம், 9. புலன் இன்பங்களில் ஈடுபடுதல், இந்த ஒன்பதினையும் விலக்கி பிருமசரியத்தை போற்றுதல் வேண்டும்.

    உண்மையில் உயிர் இயல்புக்கு எதிரான உணர்வுகள் இவை. உயிர் தொடக்கமற்ற காலமாக இவ்வுணர்வுகளில் நிகழ்ந்து, மலினப்பட்டு  வருவதால் பிறவியில் உழல்கிறது.  பிறவி அறுபட மலின உணர்வு அறுபட வேண்டும். அப்போது அகவுணர்வு ஆன்ம இயல்பில் நிகழும். எனவே ஆசாரியர் பிறவிக்கு ஏதுவைக் காட்டி அதனை நீக்க வழியும் காட்டினார்.
----------------------------------------
இலக்கண விளக்கம், பொருளதிகாரம் அகத்தினை இயல் - 33
#தொல்காப்பியம் களவு ஒழுக்கம் 9


************************************** 

99

பாவஸஹிதோ ய முணிணோ பாவஇ ஆராஹணாசஉக்கம் |
பாவரஹிதோ ய முணிவர பமஇ சிரம் தீஹஸம்ஸாரே ||

(பதவுரை)

முணிவர - பெரு முனிவரே, பாவஸஹிதோ ய - அகஉணர்வுடையவரோ, முண்ணோ - முனிவர், ஆராஹணா சஉக்கம் - நான்கு ஆராதனைகளை, பாவஇ - அடைகிறார், ச -  மற்றும், பாவரஹிதோய - அகவுணர்வு அற்றவரோ,  தீஹஸம்ஸாரே - நெடும் பிறவியில், சிரம் -  நீண்டகாலம், பமஇ - உழல்கிறார்.

( கருத்துரை) 

முனி பெரும!  அகவுணர்வுடையோர் ஆராதனைகளைப் பெறுகிறார்,  அகவுணர்வு அற்றவர் நெடும் பிறவியில் நீண்டகாலம் உழல்கிறார்.

 (விளக்கவுரை) 

அகவுணர்வின் சிறப்பையும், அது இல்லாமையின் கேட்டையும் ஆசாரியர் விளக்குகிறார்.

      முன்னர் அகவுணர்வு தூய்மையாக வழிகள் கூறினார்.  இங்கே தூய அகவுணர்வால் அடையும் சிறப்பினையும், அது இல்லாமையால் வரும் கேட்டினையும் சுட்டி, அகவுணர்வைத் தூய்மை செய்ய அறிவுறுத்துகிறார்.

    ' ஆராதனை ' என்பது முயன்று அடைதலைக் குறிப்பதாகும். நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம், நற்றவம் இந் நான்கினாலும்  முயன்று ஆன்மாவை விளக்கம் பெறச் செய்தல் வேண்டும். இந் நான்கும் உயிரில் நிலைபெறச் செய்ய வேண்டும். மங்கும் போது மீண்டும் மீண்டும் முயன்று விளக்கம் பெறச் செய்யவேண்டும். இதனையே 'ஆராதனை'  என அழைக்கின்றனர். இது அகவுணர்வு தூய்மையால் அமைவது ஆகும். தூய உயிர் வடிவ நம்பிக்கை அனுபவமே உண்மையில் அகவுணர்வு விளக்கமாகும். அவ்வுணர்வோடு கூடியவரே முனிவருள்  பெருமைக்கு உரியவர்.  அவரே இந் நான்கையும் அடைகிறார். அதன் விளைவாக அருக, சித்த நிலைகளை அடைகிறார். அவ் வுணர்வு இல்லாதாருக்கு ஆராதனை அமையாது.  மாறாக நெடும்  பிறவிச் சுழல் அமைகிறது. இதனை அறிந்து அகவுணர்வைச்  செம்மை செய்ய வேண்டும் என செப்புகிறார்.

நோன்பினை உறுதி செய்யும் பொருட்டு மீண்டும் மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்தல் 'பாவனை' ஆகும்.  முனிவர் ஏற்ற ஐந்து பெரு நோன்புகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஐந்து பாவனைகள்   உள்ளன. அவை 25 பாவனைகள் ஆகும். கொல்லாமை நோன்புக்கு மொழி அடக்கம், மன அடக்கம், நடத்தல் ஒழுக்கம், உணவு ஏற்கும் ஒழுக்கம், பொருள்களைக் கையாளுதல் ஒழுக்கம் இவ் வைந்து குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் பாவனை ஆகும்.

         திருடாமை நோன்புக்குக் குகை முதலான காலி இடங்களில் தங்குதல், பிறரால் கைவிடப்பட்ட இடங்களில் தங்குதல், உணவு ஏற்புத் தூய்மை, ஒத்த துறவியரோடு வீண் விவாதம் செய்யாமை, இவ்வைந்து குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் பாவனை ஆகும்.

          பொய்யாமை நோன்புக்கு வெகுளி விடுதல், உலோபம் விடுதல், அச்சம் விடுதல், நகைத்தல் விடுதல், ஆகமத்துக்கு இசைவாக மொழிதல்  இவ் வைந்து குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் பாவனை ஆகும்.

     பிரமசரிய நோன்புக்குப் பெண் கதை விடுதல், பெண் அவயங்களை பார்க்காமை, முந்தைய இன்ப அனுபவத்தை நினையாமை, உணர்வைத் தூண்டும் உணவை ஒழிதல், உடலை அழகு செய்தலை விடுதல் இவ் வைந்து குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் பாவனை ஆகும்.

        'அபரிக்கிரக' நோன்புக்கு ஐம்புலப் பொருள்களில் விருப்பு, உவர்ப்பு, கொள்ளாமை குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் பாவனை ஆகும்.


       ஈராறு சிந்தனையால் எல்லாவற்றையும் ஒப்ப நோக்கும் உணர்வும், புலன்களில் வேட்கை கொள்ளாமையும் அமைகின்றன. 25 பாவனைகளால் விரதங்களில் தூய்மையும், உறுதியும் அமைகின்றன. எனவே ஆசாரியர் அகவுணர்வுத் தூய்மைக்கு உதவும் இவற்றைக் கூறினார். அகவுணர்வுத் தூய்மை இல்லாமல் புறத் தோற்றத்தில் பொலிவதால் பயன் ஏதும் இல்லை என்பதாம்.


************************************** 


101

 சாயல தோஸதூஸியமஸணம் கசிஉம் அஸுத்த பாவேண |
பத்தோ ஸி மஹாவஸணம் திரியகஈஏ அணப்பவஸோ ||

(பதவுரை)

அஸுத்த -
தூய்மையில்லா, பாவணே - அகவுணர்வால், சாயால தோஸ தூஸியம் - நாற்பத்தாறு குறைகளுடைய, அஸணம் -  உணவை, கசிஉம் -  உண்டீர், (அதனால்), திரியகஈஏ - விலங்குப் பிறவியில், அணப்பவஸோ - பிறரை அண்டிய நிலையால், மஹாவஸணம் -  பெரும் துன்பத்தை, பத்தோஸி - அடைந்தீர்.

 (கருத்துரை)

முனிவரே !  மலினமான  அகவுணர்வால் நாற்பத்தாறு குறைகளை உடைய உணவை உண்டு, பிறரை அண்டி வாழும் விலங்குப் பிறவியில் உழன்று பெரும் துன்பத்தை அடைந்தீர்.

( விளக்கவுரை)

மலின உணர்வால் மலினப்பட்ட உணவை உண்டு இழிந்த பிறவியில் முனிவர் உழல்வர் என்கிறார்.

       அகவுணர்வு மலினமானால் உணவில் தூய்மை பார்க்காமல் உண்பர். ஏனெனில், அங்கே ஐம்புல வேட்கை காரணமாகிறது. முனிவர் நாற்பத்தாறு குறைபாடுகள் இல்லாத உணவை ஏற்கின்றனர். முப்பத்திரண்டு தடைகள் (அந்தராயம்) செய்கின்றனர்.  பதினான்கு குற்றமிலாதவற்றை ஏற்கின்றனர்.  முனிவராகி குற்றமுடைய உணவை ஏற்பாரானால் அவருடைய அகவுணர்வு மலினப் பட்டுள்ளது என்பதனை அறியலாம்.  அவரை நோக்கிய அறிவுரை இது.


           பதினாறு ஆக்கல்  (உத்கம்) குறைபாடுகள்,  பதினாறு ஆக்க வைத்தல் குறைபாடுகள், பத்து உணவு ஏற்பு குறைபாடுகள், நான்கு அளவு முதலான குறைபாடுகள், ஆக்கல் குறைபாடுகள் இல்வாழ்வானால்   அமைவன. ஆக்க வைத்தல் குறைபாடுகள், முனிவரால் அமைவன.  உணவு ஏற்பு குறைபாடுகள் உணவில் அமைவன. இவற்றின் விளக்கங்களை 'மூலாசாரம்' முதலான நூல்கள் வழி அறியலாம்.
          
************************************** 
102

ஸசித்த பத்து கித்தீம் தப்பேணSதீபபுத்தூண |
பத்தோ ஸி திவ்வதுக்கம் அணாஇகாலேண தம் சிந்த ||

(பதவுரை)
கித்தீம் - விருப்பத்தோடு, தப்பேணSதீ - மிகச் செருக்கோடு, ஸசித்த பத்த பாணம் - உயிரோடு கூடிய உணவு, நீர், பபுத்தூண - நன்கு உண்டு, அணாஇகாலேண - தொடக்கமற்ற காலமாக, திவ்வ துக்கம் - மிகு துன்பம், பத்தோஸி - அடைந்தாய், தம்சிந்த - அதனைச் சிந்திப்பாயாக.

(கருத்துரை)
முனிவரே ! ஙேட்கையால் மிகு செருக்கோடு உயிருடன் கூடிய உணவை உண்டு அனாதி காலமாகத் துன்பம் அடைந்துள்ளாய், அதனை எண்ணுக.

(விளக்கவுரை)
மலின அகவுணர்வின் விளைவை மேலும் கூறுகிறார்.


      அகவுணர்வின் மலின காரணம் அறியாமை ஆகும். அவ்வறியாமையால் விளைவது வேட்கையும் செருக்கும். உயிர் இயல்பை அறியாத நிலை அது. அதனால், உயிரோடு கூடிய உணவு, நீர் உண்டு அனாதி காலமாகப் பிறவித் துன்பத்தை உயிர் அடைந்துள்ளது. அதனை எண்ணிப் பார்த்து அகவுணர்வைத் தூய்மை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

**************************************


103

கந்தம் மூலம் புப்பம் கிஞ்சி ஸச்சித்தம் |
அஸிஊண மாணகவ்வம் பமிஓஸி அணந்த ஸம்ஸாரே ||

(பதவுரை)

கந்தம் - கிழங்கு,  மூலம் - மூலம், பீயம்  - விதை, புப்பம் - பூ,  பத்தாதி - இலை முதலான, கிஞ்சி - ஏதேனும், ஸச்சித்தம் - உயிருடையதை,  மாண கவ்வம் -  செருக்குற்று, அஸிஊண - உண்டு,  அணந்த ஸம்ஸாரே - அனந்த பிறவியில், பமிஓஸி - உழன்றாய்.

 (கருத்துரை) 

உயிரே! கிழங்கு, மூலம், விதை,  பூ,  இலை முதலான உயிருடையதை ஏதேனும் உண்டு வரம்பற்ற பிறவியில் உழன்றாய்.

  (விளக்கவுரை)
மலின உணர்வின் விளைவை மேலும் கூறுகிறார்.

     'உயிரோடு கூடிய உணவுப் பொருளை உண்டாய்'  என முன் காதையில் குறிப்பிட்ட ஆசாரியர் அப் பொருள்கள் சிலவற்றை இங்குக் குறிப்பிட்டுள்ளார்.

     கிழங்கு என்பது நிலத்துக்கு அடியில் தோன்றும் சேனைக்கிழங்கு முதலாயின.  மூலம் என்பது வேரே விதையாக விளங்குவது.  இஞ்சி, மஞ்சள் போன்றன. விதை  என்பது பலவகைப்படும். தண்டு விதை, கணு விதை விதை, கிளை விதை முதலாயின.  கரும்பு, பலசை, முருங்கை முதலியனவும், தானிய விதையும் அடங்கும்.  பூ, வெற்றிலை முதலாயின உண்ணத்தகாதன.

     இங்கே ஆசாரியர் உண்ணத் தக்கன, உண்ணத் தகாதன பற்றிய குறிப்பைத் தருகிறார்.  'நான் துறவி';  எனக்குக் குடும்பம் இல்லை. காட்டில் பூ , பழம் உண்டு தபம் செய்கிறேன்'  எனத் தவம் பூண்ட அஞ்ஞானி செருக்குடன் அவற்றை உண்கிறான். ஆதிநாதர் துறவு ஏற்ற போது அவரோடு துறவு ஏற்றவர்  பசி முதலான தாங்கமுடியாமல்  பூ பழம்   முதலானவற்றை உண்டு தவம் தொடர்ந்ததை இங்கே நினைவு கூரலாம்.  உயிருள்ள பொருள்,  உயிரற்ற பொருள் எனும் அறிவு இன்றி தன் விருப்பம் போல எல்லாம் உண்டான். அதனால் முனிவர் ஆகிய பிறகு உண்ணத் தகாதனவற்றைத் தள்ளி உண்ண வேண்டும் என அறிவுறுத்துகிறார். அகவுணர்வு மலினப்படாமல்  இருக்க உணவும் - தூய உணவும் வேண்டும்.

 "புல்லும் அல்லியும் போகுயர் நீள்கழை
 நெல்லும் நீர்விளை கேழலும்  தோரையும்
அல்ல தீம்பழங் காய்கிழங் காதியா
 நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்"

 எனத் துறவியர் உயிருள்ள உணவை உண்டலைச்  சுட்டும் சிந்தாமணி.

"தூங்குறிக் கிடந்து காயும்
    பழங்களும்  துய்ப்ப நில்லா
 பாங்கலா  வினைகள் என்றார்
    பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்குநீள் மரத்தில் தூங்கும்
    ஒண்சிறை ஒடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்கள் துய்ப்பப்
    பழவினை பரியும் அன்றே"

 அல்லியும் புல்லும் உண்டுஆங்கு
    ஆரழல் ஐந்துள் நின்று
சொல்லிய வகையின் நோற்பத்
    துணியும்வெவ்  வினைகள் எண்ணின்
கல்லுண்டு கடிய வெம்பும்
    கானுறை புறவம் எல்லாம்
புல்லிய வினைகள் வென்று
    புறக்கொடை காணும் அன்றே"

 என உண்ணத்தகாதன   உண்டு செய்யும் போலித் தவம் வீடு விளைக்காது என்பர் சிந்தாமணியார்.★★
-----------------------------------------
சீவக சிந்தாமணி -1422
★★ சீவக சிந்தாமணி - 1429, 1430
-----------------------------------------
 **************************************

104

விணயம் பஞ்சபயாரம் பாலஹி  மணவயகாய ஜோஏண !
அவிணயணரா ஸுவிஹியம் தத்தோ முத்திம் ண பாவந்தி ||

(பதவுரை)

ஸுவிஹியம் - நன்கு உறுதி செய்யப்பட்டுள்ள, தத்தோ - அந்த, முத்திம் - வீடுபேற்றினை, அவிணய - பணிவுடைமை இல்லாத, ணரா - மனிதர், பாவந்தி -  அடைகின்றார் இல்லை , (அதனால்) பஞ்ச பயாரம் - ஐந்து வகைப்படும், விணயம் - பணிவுடமையை, மண - மனம், மொழி, உடல், ஜோஏண - ஒன்றுபடுத்தி, பாவஹி - ஒழுகுக.

( கருத்துரை)

பணிவுடைமை குறித்து ஆசாரியர் இங்கு குறிப்பிடுகிறார்.

 (விளக்கவுரை)

பணிவுடைமை இல்லாமல் முக்தி இல்லை என்று சுட்டுகிறார்.  மும்மணி குணத்தைப்  போற்றுதல் உண்மையான பணிவாகும். விநயம் உடையாரிடம் காட்டும் பணிவு 'உபசார' மாகும். முத்தி நெறியில் இரண்டும் முதன்மையானவை ஆகும்.  ஆகம / ஆன்ம அறிவைப் பெறுவதில் குருவுக்குக்  காட்டும் பணிவு முதன்மை ஆகும். அந்தப் பணிவால்  செருக்கு அழிகிறது;  ஒழுக்கம் நன்கு அமைகிறது. ஒருவருக்கொருவர் உறவில் உரசல் வருவதில்லை. அதனால்  அதனைப் போற்ற வேண்டும் என்கிறார்.

     பணிவு அறிவுப் பணிவு, நற்காட்சிப் பணிவு, நல்லொழுக்கப் பணிவு, தபப் பணிவு, விநய குண முடையாரிடம்  பணிவு  என  ஐவகைப்படும். அல்லது கை குவித்தல், தாள் பணிதல், எழுந்திருத்தல், எதிர்கொள்ளல், பயனுடையன பேசுதல் எனவும் கூறப்படும்.


      எனவே விநயம் இல்லாது, உடை முதலான இல்லாதது முத்திநெறி என கருதுதல் விலக்கப்படுகிறது.


************************************** 

105

ணியஸத்தீஏ மஹாஜஸ பத்தீராஏண ணிச்ச காலம் மி |
தம் குண ஜிணபத்தி பரம் விஜ்ஜாவச்சம் தஸ வியப்பம் ||



(பதவுரை)

மஹாஜஸ - புகழுக்குரியவரே! தம் - நீர், ணிச்ச காலம்மி - இடையறாது, ஜிண பத்தி பரம் - உயர்ந்த ஜிண பத்தியில் ஈடுபாடு கொண்டு, ணிய ஸத்தீஏ - உன் ஆற்றலுக்கு ஏற்ப, பத்தீராஏண - பத்தி ஆர்வத்தோடு, தஸ - பத்து, வியப்பம் - வகைப்படும், விஜ்ஜாவச்சம் - சேவை, குண - செய்க.

 (கருத்துரை)

புகழுக்குரிய முனிவரே ! உயர்ந்த ஜிந பத்தியில் ஈடுபடுக !  இடைவிடாது பத்து வகைப்படும் சேவையைச் செய்க !

 (விளக்கவுரை)

இங்கே ஆசாரியர் ஜிநபத்தி,  முனி சேவை குறித்து பேசுகிறார். விநயத்துள் இவை அடங்குவதால்.

   'விஜ்ஜா வச்சம்' என்பது  'வையாவ்ருத்யம்'  ஆகும்.  பிறர் துன்பம் கண்டு ,அவருக்கு பணிவிடை செய்தல் என்பது கருத்து. இங்கே பத்து வகையான முனிவருக்கு சேவை செய்யவேண்டும் எனும் குறிப்பு 'தஸ வியப்பம்'  எனும் தொடரால் பெறப்படுகிறது. 1.ஆசாரியர், 2. உபாத்தியாயர், 3.தபமுடையார் ( தபசி), 4. இளந்துறவி (சைக்ஷ்ய), 5. பிணியுடைய துறவி (கிளான) 6. முதிய துறவியர் (கணம்), 7. பரம்பரை சீடர் (குலம்), 8. சங்கம், 9. ஸாது, 10. மனம் கவரும் துறவி. இப்படித் துறவியர் பத்து வகையாகப் பேசப்படுகின்றனர்.

       "ஆசார்யோபாத்யாயதபஸ்விசைக்ஷக்லான கண குலஸங்கஸாது மனோஜ்ஞானாம்"  என தத்துவார்த்த சூத்திரம் இப் பதின்மரையும் குறிப்பிடும்.

         நோன்பு நோற்றலுக்கு உறுதுணையாக இருப்பவர் ஆசாரியர்.  முத்தி விருப்பத்தோடு ஆகமம் பயில உறுதுணையாக இருப்பவர் உவாத்தியாயர். பெரும் பெரும் உபவாசங்களில் ஒழுகுபவர் தபசி. பாடம் (பயிற்சி) கேட்கும் துறவி இளம் துறவி  'சைக்ஷ' எனப்படுவார்.  உடல் பிணி முதலானவற்றால் தளர்வுற்ற முனிவர் 'கிளாமர்' எனப்படுவார்.  முதிய துறவியர் பரம்பரை 'கணம்'  எனப்படும். தீக்கை (துறவு) தரும் ஆசாரியர் சீடர்கள் குழு 'குலம்' எனப்படும்.  நான்கு வருண சமண குழு 'சங்கம்' எனப்படும்.  நீண்டகால துறவி சாது எனப்படுவார். உலகம் போற்றும் சாது மனதுக்கு இனியவர் (மனோஜ்ஞ) எனப்படுவார்.  இப் பதின்மரும் நோயுற்ற போது அல்லது இடையூறுகளுக்கு இலக்காகும் போது அல்லது பொய்ம்மை முதலானவற்றில் நிகழும் போது அவருக்கு உடலாலும் அல்லது பொருளாலும் உதவுதல் 'வையாவ்யருத்ய'  தபமாகும் என பூஜ்யபாத ஆசாரியர் குறிப்பிடுகிறார்.★★
-----------------------------------------
தத்வார்த்த ஸுத்திரம்  9 - 24.
★★ தத்வார்த்த ஸுத்திரம் 9 - 24 ன் உரை.
----------------------------------------

************************************** 

106

ஜம் கிஞ்சிம் கயம் தோஸம் மணவயகாஏஹிம் அஸுஹபாவேணம் |
தம் கரஹி குருஸயாஸே காரவ மாயம் ச மோத்தூண ||

(பதவுரை)

அஸுஹபாவேணம் -
  அசுப எண்ணத்தால், மணவய காஏஹிம் - மனம், மொழி, உடலால், ஜம் கிஞ்சிம் தோஸம் - எந்த குறைகள், கயம் - செய்தாய், தம் - அக் குறைகளை, காரவ -  செருக்கு, ச - மற்றும், மாயம் - கபடம், மோத்தூண -  விட்டு, குருஸயாஸே - குருவை அணுகி, கரஹி -  வெளிப்படையாகச் சொல்லுக.

( கருத்துரை)

முனிவரே !  அசுப எண்ணத்தால் மன, மொழி, உடலால் செய்த குறைகளைச் செருக்கும் கபடமும் நீக்கி, குருவிடம் வெளிப்படையாகச் சொல்லுக.

 (விரிவுரை)

குறைகளை மறைக்காமல் குருவிடம் சொல்லி குறை விலகல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

      துறவு வாழ்வில் விழிப்பு மிக வேண்டும். எண்ணங்களில் தூய்மை போற்ற வேண்டும்.  மனம் மலினப்பட்டு குறைகள் நேரும் போது, குறைகளை ஒளிக்காமலும், குறைக்காமலும், அப்படியே குருவிடம் கூறவேண்டும். அதற்கு வேண்டிய பண்புகளாக ஆசாரியர் இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று  செருக்கின்மை;  மற்றொன்று மாய மின்மை.  குறையை வெளிப்படுத்த தடையாக இருப்பது செருக்கு உணர்வாகும்.  பிறர் முன்னர் தன்னைப் பெரியோனாகக் கருதுதல்  செருக்கு உணர்வாகும்.  துறவு நிலையில் அவ் வுணர்வு இடம் பெற முடியாது.  ஏனெனில் எல்லா உயிர்களையும் ஒப்ப நோக்கும் உணர்வுடையவர் துறவியர் . ஏற்றத் தாழ்வுக்கு அங்கு இடமில்லை.  அத்தகு நிலையில் நிகழ்ந்த குறைகளைச்  செருக்கு இல்லாமல் உரைக்க வேண்டும் என்றார்.  குறையைக் களைய வேண்டும் எனும் உணர்வு அப்போது இருக்கும். அதேபோல மாயம் இல்லாமல் உரைக்க வேண்டும்.  மாயை என்பது ஒன்றைக் கபடமாகச்  செய்வது. நிகழ்ந்த குறைகளை உள்ளவாறே உரைக்க வேண்டும். அதில் மறைப்பு உணர்வு வருமானால், அது மாயை எனப்படும். அதனால் குறை களைவு நிகழ  முடியாது போகும். குறை களைவு இல்லாத போது உயிர் தூய்மை நோக்கி விளக்கம் பெற முடியாது. எனவே மாயை விட்டு குறையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

 "நுனித்தகு நன்னெறி நோக்கின னாகி
 முனிப்பிறை யோன்அடி மும்மையின் ஏத்திப்
பனிக்கடல்  அன்னதோர் பாவமும் செய்தேன்
இனிச்செய்வது என் உரையாய் எனக்கு என்றாள்"

  இதுவே குறை களைவு வேண்டும் முறையாகும். குறை களைவோனுக்கு நன்னெறி நோக்கும் குறி முதன்மையான தாகும்.  அதுவே குறை களைதலுக்கு ஏதுவாகும்.  குருவை அணுகி குறைகளை வெளிப்படையாக உரைக்க வேண்டும் என்பதன் கருத்து இதுவே.

      இந்த ஐந்தாம் காலத்தில் துறவு ஒழுக்கத்தில்  இழிபவர் குருவை நாடுவது  இல்லை. மாறாகத்  தனியாகச் சுற்றுகின்றனர். தமக்கென பக்தர்களைச் சேர்த்துக் கொண்டு நல்ல துறவு நெறிக்கு இழிவு செய்கின்றனர். என்ன சொல்லுவது?
-----------------------------------------
நீலகேசி - 146

------------------------------------------ 


************************************** 

107

துஜ்ஜணவயணசடக்கம் ணிட்டுரகுடியம் ஸஹந்தி ஸப்புரிஸா |
கம்மமலணாஸண்ட்டம் பாவேண ய ணிம்மா ஸவணா ||

(பதவுரை)

ணிம்மமா -
செருக்கற்றவர், ய ஸவணா - சமணர், ஸப்புரிஸா - அறவோர், துஜ்ஜண - தீயோரது, ணிட்டுர - கொடிய, குடியம் - இரக்கம் இல்லாத, வயண சடக்கம் -  கடுஞ் சொற்களை, கம்மமல - கரும அழுக்கை, ணாஸணட்டம் - கழுவுவதற்காக, பாவேண - பாவனையோடு, ஸஹந்தி - பொறுத்துக் கொள்கின்றனர்.

  (கருத்துரை) 

செருக்கற்ற   சமண அறவோர் தீயோர் இரக்கமின்றி கூடிய கடும் சொற்களைக் கூறும்போது முந்தைய கருமத்தைக் கழிப்பதற்கு மன ஈடுபாடுடன் அச் சொற்களைப் பொறுத்துக் கொள்கின்றனர்.

 (விளக்கவுரை)

முனிவருடைய பொறுமை குணத்துக்கான காரணத்தைக் காட்டுகிறார்.

      தீயோர்  அறவோரை நோக்கிக் கடுஞ் சொல் கூறுகின்றனர். ஏன்? அறவோர் தம் முந்தைய கருமம் உதயமாவதால்  தீயோர் கடுஞ் சொல்லைக் கேட்க நேர்ந்தது என்று எண்ணி,  உதயமான அக் கர்மம் மீண்டும் கட்டுக்கு நிமித்த மாகாமல்  கழிய வேண்டும் என அச் சொற்களைப் பொறுக்கின்றனர். ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமை அவரது முந்தைய வினையின் விளைவாகும். நன்மை தீமை பிறரால் நிகழ்வது அன்று.  ஏனெனில் நன்மை தீமையைச் செய்யும் ஆற்றல் பிறருக்கு இல்லை. தன் முந்தைய வினை பயன் தருங்கால் அதற்கான புறக் காரணம் அமைகின்றன. அந்தப் புறக் காரணங்களைக் காண்பவன் அவையே அல்லது அவரே நன்மை தீமைக்குக் காரணம் என்று அறியாமையால் நம்புகிறான்.  அதனால் அதற்கு ஏற்ப செயல்பட்டு மீண்டும் கருமத்தைக் கட்டிக் கொள்கிறான். ஆனால் அறவோர் தமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு தம் முந்தைய வினையே காரணம் என மன அமைதிகொண்டு அக் கருமங்களைக் கழிக்கின்றனர்.

" இனையன பலவும் செய்ய
  இறைவனும் இவையெ லாம்என்
 வினையின் பயன்கள் என்றே
  வெகுண்டிலன் வினைகள் மேலே நினைவினை நிறுத்தி நின்றான்"

     என முனிவர்தம் பொறுமையைச் சுட்டும் மேருமந்திர புராணம்.

 "பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்  பழவினையும் அன்ன தகைத்தே தன் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு."

 என முந்தைய வினையின் ஆற்றலை விளக்கும் நாலடியார்.★★
------------------------------------------
மேருமந்தர புராணம் - 1552
★★ நாலடியார் - 101
------------------------------------------

 ************************************** 

108

பாவம் கவஇ அஸேஸம் கமாஏ படிமண்டிஓ ய முணிபவரோ |
கேயர அமரணராணம் பஸம்ஸணீஓ திவம் ஹோஇ ||

(பதவுரை)

கமாஏ படிமண்டிஓ - பொறுமை அணி பூண்ட, மிணிபவரோ -  முனிவரர், அஸேஸம் பாவம் -  எல்லா பாபங்களையும், கவஇ - அழிக்கிறார், ய -  மேலும், கேயர அமரணராணம் -  வித்தியாதரர், தேவர், மனிதர்களால், திவம் - எப்போதும், பஸம்ஸணீஓ -  புகழப்படுபவராக, ஹோஇ -  ஆகிறார்.

 (கருத்துரை)

பொறுமை அணி பூண்ட  முனிவரர் எல்லா பாபங்களையும் அழிக்கிறார்.  அவரை வித்தியாதரர்,  தேவர்,  மனிதர் அனைவரும் எப்போதும் புகழ்கின்றனர்.

  (விளக்கவுரை) 

உத்தம பொறுமையின் பயனை விளக்குகிறார்.

     முனிவருக்கு உத்தம  பொறுமை குணமாகும்/ அணியாகும். அப் பொறுமை உணர்வால்  எல்லா பாபங்களும் கழிகின்றன. நல்லோரால் புகழுக்கு உரியவராகவும் ஆகிறார், அம் முனிவர்.

      பொறுத்தல் கோழைத்தனம் அன்று.  அது வீரம் ஆகும்.  ஏனெனில் இடையூறுகள், ஏச்சுகள் வரும் போது அவை முந்தைய வினையின் விளைவு என்று முனிவர் உறுதியாக நின்று அவற்றை வெல்கிறார். பொறுமையுடையாரை யாரும் வெல்ல முடியாது.  அவரே அனைவரையும் வென்று புகழைப் பெறுகிறார்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை."

'இன்மையுள் இன்மை விருந்து  ஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.'

 "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து."

 எனது தேவர் பொறையுடைமையின் சிறப்பினையும் புகழையும் காட்டுவார்.
-----------------------------------------
திருக்குறள் - 151, 153, 155.
------------------------------------------ 

************************************** 

110

திக்காகாலாஇம் பாவஹி் அவியாரா தம்ஸண விஸுத்தோ |
உத்தம போஹிணிமித்தம் அஸாரஸாராணி முணிஊண ||

(பதவுரை)

முணி - முனிவரே, அஸாரஸாராணி - எல்லாவற்றின் சாரமின்மையை, ஊண - அறிந்து, உத்தம போஹி - உயர்ந்த மும்மணி அடைய, ணிமித்தம் - ணிமித்தமான, அவியார - அதிசாரம் இல்லா, தம்ஸண விஸுத்தோ -  தரிசன விசுத்தி கூடி, திக்கா காலாஇம் -  துறவு ஏற்ற (தீக்ஷா) காலம் முதலானவற்றை, பாவஹி - பாவனை செய்க.

(கருத்துரை)

 முனிவரே!   உலகப் பொருள்களின் சார மின்மையை அறிந்து உயர்ந்த மும்மணி அடைய முயல்க.  அதற்கு அதிசாரம் இல்லா தரிசன விசுத்தி கூடி துறவு ஏற்ற காலம் முதலானவற்றை எப்போதும் எண்ணுக.

 (விளக்கவுரை) 

 ஆசாரியர்   துறவு ஏற்ற காலத்தை எப்போதும் எண்ண வேண்டும் என்கிறார்.

      துறவு ஏற்கும் காலத்து  அனுபவம் ஆகும் உணர்வு அற்புதமானது ஆகும். உலகப் பொருள்கள் பற்றிய உண்மை அறிவு அமைவதால், அவை மீது பற்று இல்லாத உணர்வு தோன்றுகிறது. பொருள் வழி பெரும் இன்பம் துன்பம் எனும் தெளிவு அமைகிறது. அதனால் உயிர் இயல்பு பற்றிய உறுதி  திடம் பெறுகிறது. ஆசாரியர் 'ஆதி' என்ற சொல்லை ஆளுகிறார். அதனால், துறவு காலத்தோடு துறவு உள்ளத்துக்கு நிமித்தமாக அமைந்த பிறவற்றையும் எப்போதும் எண்ண வேண்டும் என்கிறார்.

' இளமையும் எழிலும் வானத்து
    இடுவிலின் நீண்ட மாயும்
 வளமையும் கிளையும் வாரிப்
    புதியதன் வரவு போலும்
 வெளியிடை விளக்கின் வீயும்
     ஆயுவும் என்று வீட்டுக்கு
 உளபகல்  ஊக்கம் செய்வார்
     உணர்வினால் பெரிய நீரார்'

'குற்றமோர்  மூன்று நான்கு
     கதிகளில் பொறிகள் ஐந்தில்
 பற்றிய காயம் ஆறில்
     பழவினைத் திரிவுஓர் எழில்
 சுற்றிய வினைகள் எட்டில்
     தோற்றிய சுழற்சி கண்டாய்
 கற்றவர் கடக்க எண்ணும்
    மாற்றிது கடிகொள் தாரோய்' ±

     இவை போல்வன துரவு கால எண்ணங்கள். இவற்றை மீண்டும் மீண்டும் என்ன வேண்டும் என்பதாம். ஏனெனில், துறவு காலத்தில் ஏற்பட்ட உறுதி குறையாமல் தொடர்ந்து நீடிக்க இத்தகு எண்ணங்கள் துணையாகின்றன.
-----------------------------------------
மேருமந்தர புராணம் - 109
± மேருமந்தர புராணம் - 114.

----------------------------------------- 


************************************** 

111

ஸேவஹி சஉவிஹலிங்கம் அப்பந்தரலிங்கஸுத்திமாவண்ணோ |
பாஹிரலிங்கமகஜ்ஜம்ஹோஇ புடம் பாவரஹியாணம் ||



(பதவுரை)

அப்பந்தர - அகநிலை, லிங்க -  உணர்வு, ஸுத்திம் - தூய்மையை, ஆவண்ணோ - அடைந்தவர், சஉவிஹலிங்கம் -  நான்கு கூறுபடும், லிங்கம் -  புறத் தோற்றத்தை, ஸேவஹி - ஏற்கிறார்,  ஏனெனில், பாவ ரஹியாணம் -  அகவுணர்வு இல்லாமல், புடம் -  உறுதியாக, பாஹிர லிங்கம் -  புறத்தோற்றம், அகஜ்ஜம் -  பயனற்றதாக, ஹோஇ - அமைகிறது.

 (கருத்துரை)

அகவுணர்வு தூய்மையோடு புறத்தோற்றத்தை ஏற்க.  ஏனெனில் அகவுணர்வு தூய்மை இல்லாத புறத் தோற்றத்தால் பயன் இல்லை.

 (விளக்கவுரை)

அகத் தூய்மையோடு கூடிய புறத் தோற்றமே  வீடுபேறு தர வல்லது என விளக்குகிறார்.

         புறத் தோற்ற அடையாளங்கள் நான்கு என குறிப்பிடுகிறார். நான்கு எவை எனக் குறிப்பு இல்லை.  உரைகாரர் இரண்டு வகையாக்க் காட்டுகின்றனர். 1.தலைமுடி, 2. தாடி, 3.மீசை நீக்கல், 4. கீழ்ப்பகுதி மயிரைக் காத்தல், அல்லது 1. உடுத்தாமை, 2. மயிர் பறித்தல், 3. குளியாமை, 4. மயிற்பீலி உடைமை.  இவ்வாறு உரைகாரர் குறிப்பிடுகின்றனர்.

      புறத் தோற்றம் அக உணர்வு உள்ள போது ஏற்க வேண்டும் என்பது ஆசாரியர் குறிப்பு. அதனால்,  அகவுணர்வு இல்லாமலும் புறத் தோற்றம் ஏற்க முடியும் என்பதும் தெரிகிறது.

           அகவுணர்வு தூய்மை என்பது மும்மணி வடிவ ஆன்மாவை அறிவதாகும். அவ் வடிவமாக நிகழ்வதாகும்.

 "உரித்தஇப் பொருளின் மெய்ம்மை
    உணர்வது நல்ல ஞானம்
 புரைப்பறத் தெளிதல் காட்சி
    பொருந்திய இரண்டும் ஒன்றில்
 தரித்தநல் லொழுக்கம் ஆகும்
      சாற்றிய மூன்றும் ஒன்றின்
விரைபொலி தாரோய் வீட்டின்
    மெய்ந்நெறி யாவ தாமே"

    என அகவுணர்வு மும்மணி வடிவமாக ஆக வேண்டும் என்பார்.

      அகவுணர்வு இல்லாமல் இந்த உயிர் வரம்பற்ற முறை துறவு ஏற்றுள்ளது.  அதனால் ஆசாரியர்  அகவுணர்வு இல்லாத புறத் தோற்றத்தால்  பயன் இல்லை என்றார். அகவுணர்வு அமையும் போது புறத் தோற்றம் அமையவே செய்யும். ஆனால்,  புறத் தோற்றம் அமையும் போது எல்லாம் அகவுணர்வு அமையும் என்று கூற முடியாது.  பொய்யுணர்வு உடைய அபவ்வியனும் புறத்தோற்றம் ஏற்று அகமிந்திரன் ஆவதை நூல்கள் சுட்டுகின்றன. ஆனால், வீட்டின் நெறியில்  அத்தோற்றம் பயன்படாது . பொய்யுணர்வு விட்டு மெய்யுணர்வு கூடிய நிலையில் எடுக்கும் புறத் தோற்றமே பயனுடையது என்பது கருத்து.
---------------------------------------
மேருமந்தர புராணம் -107
----------------------------------------


**************************************

112

ஆஹாரபய பரிக்கஹமேஹுண ஸண்ணாஹி மோஹிஓ ஸி துமம் |
பமிஓ ஸம்ஸாரவணே அணாஇகாலம் அணப்பவஸோ ||


(பதவுரை)

துமம் - நீர், ஆஹார - உணவு, பய - அச்சம், பரிக்கஹ - பற்று, மேஹுண - காமம் எனும், ஸண்ணாஹி -  உணர்வுகளில், மோஹிஓஸி - மயங்கி, அணப்பவஸோ - உரிமையற்று, அணாஇ காலம் - தொடக்கமற்ற காலமாக, ஸம்ஸாரவணே - பிறவிப் பெருங்காட்டில், பமிஓ - சுழன்றாய்.

 (கருத்துரை)
முனிவரே ! நீர், உணவு,  அச்சம், பற்று, காமம் எனும் உணர்வுகளில் மயங்கி, உரிமை இழந்து,  தொடக்கமற்ற காலமாகப் பிறவிப் பெருங்காட்டில் சுற்றினாய்.

 (விளக்கவுரை)
அகவுணர்வுத் தூய்மை அடையாமைக்குக் காரணம் காட்டுகிறார்.

      பிறவிப் பெருங்காட்டில் இந்த உயிர் தொடக்க மற்ற காலமாகச் சுற்றி வருகிறது, ஏன் ? ஏனெனில்,  அது உணவு வேட்கை, அச்சம், பொருள் பற்று,  காம உணர்வுகளில் மயங்கிக் கிடக்கிறது. அதனால் உரிமை இழந்து அவை ஆட்டியபடி எல்லாம் ஆடி வருகிறது.

         ஸண்ணா -(ஸன்னை)  எனில் வேட்கை உணர்வில் ஆழ்ந்து இருத்தல் ஆகும்.  பசி காரணமாக உணவு வேட்கை, இன்பம் வேண்டி பொருள் வேட்கை,  அச்சம் (பாதுகாப்பு இல்லை எனும் உணர்வு), காம வேட்கை இந்த நான்கும் எல்லா உயிர்களிடமும் காணப்படுகின்றன.  பிறவிகள் தோறும் தொடர்கின்றன. இவை காரணமாகக் கருமம் கட்டுகிறது. அதனால் பிறவியில் சுழல்தல் அமைகிறது.

        இதை அறிந்து அகவுணர்வைத் தூய்மையாக்கி, சன்னைகளை ஒழிக்க வேண்டும் என முனிவருக்குக் கூறுகிறார்.


**************************************


113

பாஹிரஸயணத்தாவணதரு மூலாஈணி உத்தர குணாணி |
பாலஹி பாவ விஸுத்தோ பூயாலாஹம் ண ஈஹந்தோ ||

(பதவுரை)

முனிவரே ! பாவ விஸுத்தோ -  அகவுணர்வு தூய்மையோடு, பூயாலாஹம் -  பாராட்டு, செல்வம், ண ஈஹந்தோ -  விரும்பாமல், பாஹிர - வெட்டவெளி, ஸயணம் - படுக்கை, ஆவண - கோடைக் கால தவம்,  தரு மூலாஈணி -    மரத்தடி தவம் முதலான, உத்தர குணாணி - சிறப்பு குணங்களை, பாலஹி - போற்றுக.

(கருத்துரை)

முனிவரே!  அகவுணர்வு தூய்மையொடு, பாராட்டு, செல்வம் விரும்பாமல் வெட்டவெளியில் படுத்தல், கோடையில் பாறையில் நிற்றல், மழைக் காலத்தில் மரத்தடியில் இருத்தல் முதலான சிறப்பு குணங்களைப்  போற்றுக.

 (விளக்கவுரை)

புறத் தவங்களையும் அகவுணர்வு  தூய்மையோடு செய்யவேண்டும் என்கிறார்.

      குளிர்காலத்தில் வெட்ட வெளியில் இருத்தல், படுத்தல் 'பஹிஸயனம்' எனப்படும். கோடை காலத்தில் மலையில் நின்று தியானம் செய்தல் 'ஆதாபன யோகம்'  என்பர். மழைக் காலத்தில் மரத்தினடியில் இருந்து தியானம் செய்தல் 'தரு மூல யோகம்' என்பர்.  அப்போது மரத்தில் தங்கியுள்ள மழைத் துளிகள் உடம்பின் மீது விழும்.  அம்  மழை நீர் தூயது. அதாவது உயிர் இல்லாதது . அதனால் நீருடலி வதை இல்லை.  மழை நின்ற பிறகும் துளிகள் விழுந்து கொண்டிருக்கும். அதனால் துன்பம் மிகுதி.  இவை முதலான பிற நிகழ்வுகள் சிறப்பு குணங்கள்  - உத்தர குணங்கள் எனப்படும்.  இவற்றில் ஒழுகும் போதும் அகவுணர்வு தூய்மையுடன் ஒழுக வேண்டும். மக்கள் புகழ்வர், செல்வம் தருவர் எனும் உணர்வுடன் இவற்றைச்  செய்தல் கூடாது.  ஏனெனில் இத்தகு கடுமையான தவங்களைப் பார்க்கும்போது மக்கள் பாராட்டவே செய்வார்.  அதற்கு இரையாகிப் போனால் , அதனால் அகவுணர்வுத் தூய்மை  கெட்டுத் தவம் வீணாகிப் போகும்.  அதனால் அகவுணர்வுடன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

 "ஆதப யோகம் தாங்கி
    அருந்தவர் நின்ற போழ்தில்
மாதவம் போது கொண்டு
    பணித்தன பனியைச் சேரச்
சீதபங்  கயங்கள் கூம்ப
      விரிந்தசெங் கமலம் சிந்தை
 மாதவர் மரத்தைச் சேர
     மகிழ்ந்து வான் பொழிந்த அன்றே"

 என முக்கால யோகம் பற்றி கூறும் மேருமந்தர புராணம்.
------------------------------------------
மேருமந்தர புராணம் - 1366

------------------------------------------ 

************************************** 

114.

பாவஹி படமம் தச்சம் விதியம் ததியம் சஉத்த பஞ்சமயம் |
தியரண ஸுத்தோ அப்பம் அணாஇ ணிஹணம் திவக்கஹரம் ||

(பதவுரை)

தியரண ஸுத்தோ - மன மொழி,  உடல் தூய்மையுடன், படமம் தச்சம் -  முதல் தத்துவமாம் உயிர் தத்துவத்தை, பாவஹி - எண்ணுக, விதியம் (தச்சம்) - இரண்டாம் தத்துவமாம் உயிரியல் தத்துவத்தை, பாவஹி - எண்ணுக, சஉத்த (தச்சம்) - மூன்றாம் தத்துவமாகிய ஊற்று தத்துவத்தை,  பாவஹி -  எண்ணுக, பஞ்சமயம் (தச்சம்)  -  நான்காம் தத்துவமாகிய கட்டு தத்துவத்தை, பாவஹி -  எண்ணுக, பஞ்சமயம் (தச்சம்) - ஐந்தாம் தத்துவமாகிய  செறிப்பு தத்துவத்தை, பாவஹி -  எண்ணுக, அணாஇணிஹணம் - தொடக்கமும் முடிவும் இல்லாத, திவக்கஹரம் -  அறம் பொருள் இன்பம் எனும் மூன்று உறுதிப் பொருளை அழித்து, அப்பம் - ஆன்மாவை, பாவஹி - எண்ணுக.

 (கருத்துரை)

முனிவரே ! உயிர் உயிரல்லன, ஊற்று, கட்டு,  செறிப்பு தத்துவங்களை மன மொழி உடல் தூய்மையொடு தியானம் செய்க. முதலும் முடிவும் இல்லாத மோக்ஷ வடிவமான ஆன்மாவை தியானம் செய்க.

 (விளக்கவுரை)

தத்துவங்களையும் அகவுணர்வுடன் தியானம் செய்யவேண்டும் என்கிறார்.

         உயிர் காட்சி அறிவு வடிவமானது. நானும் அவ் வடிவினனே  என எண்ணுதல் உயிர் தத்துவ சிந்தனையாகும். புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம் இவ் வைந்தும் உயிரற்ற தத்துவங்கள்.  இவற்றிலிருந்து நான் வேறுபட்டவன் என எண்ணுதல் உயிரில் தத்துவச் சிந்தனை  ஆகும். உயிரும் உயிரற்றதும் கூடுவதால் தோன்றுவது  ஊற்று ஆகும்.  இது தொடக்க  மற்ற காலமாக வருதலால் உயிரில் விருப்பு,  வெறுப்பு,  மயக்கம் முதலான உணர்வுகள் காணப்படுகின்றன. இவற்றால் வினை ஊற்று தொடர்கிறது. அதனால் பிறவி தொடர்கிறது.  நான் இவற்றைச் செய்பவனாகக் கூடாது . என் இயல்பில் இருப்பவனாக வேண்டும் என எண்ணுதல்  ஊற்றுத் தத்துவச் சிந்தனை ஆகும்.

         விருப்பு,  வெறுப்பு,  மயக்க வடிவமாக நிகழ்தல் அறிவுணர்வின் (சேதனா) திரிபாகும். இதனால் கட்டு அமைகிறது.  பிறவி பிறக்கிறது.  இந்தத் திரிபும், கட்டும் விடத் தக்கவை - விலகத் தக்கவை என எண்ணுதல் கட்டுத் தத்துவ சிந்தனையாகும்.

       விருப்பு,  வெறுப்பு, மயக்கம் உயிரில் காணப்படும் திரிபு உணர்வாகும் - இயல்பு திரிந்தது ஆகும். இவை விலகி அறிவு காட்சி அறிவுணர்வில் நிலைத்தல் வேண்டும் என எண்ணுதல்  செறிப்புத்  தத்துவ சிந்தனையாகும்.

         இவ்வாறு இத் தத்துவச் சிந்தனையால் உயிர் தத்துவச் சிந்தனை முதன்மை பெறுகிறது.  இதனால் வினைவு உதிர்ப்பு ஆகி வீடுபேறு  விளைகிறது.  உயிரில்  முறையாக தூய்மை விளக்கம் பெறுதல் "உதிர்ப்புத் தத்துவம்" ஆயிற்று. எல்லா வினைகளும் உதிர்தல் "வீடுபேறு தத்துவம்" ஆயிற்று.

          இப்படி ஏழு தத்துவங்களையும் எண்ணுதல் வேண்டும்.  இந்த சிந்தனையால் உயிர் அறம் பொருள் இன்பம் எனும் 'மூன்று வர்க'  நிலையிலிருந்து விடுபட்டு நான்காவது ஆன வீடுபேறு உறுதிப் பொருளில் நிற்கிறது. இதனை 'மோக்ஷ புருக்ஷார்த்தம்' என்பர். மீண்டும் மீண்டும் எண்ணுதல் 'பாவனை' எனப்படும். அதனை மும்மைத் தூய்மையோடு செய்ய வேண்டும் என்பதாம். இப்படித்  தத்துவ பாவனை செய்வதால் அகவுணர்வு தூய்மை அடைகிறது.


************************************** 

115

ஜாவ ண பாவஇ தச்சம் ஜாவ  ண சிந்தேஇ சிந்தணீயாஇம் |
தாவ ண பாவஇ ஜீவோ ஜரமரண விவஜ்ஜியம் ணாணம் ||

(பதவுரை)

ஜாவ - எதுவரை, ஜீவோ - உயிர், தச்சம் -  தத்துவம், ண பாவஇ - பாவனை கொள்ளவில்லை, ஜாவ - எதுவரை, சிந்தணீயாஇம் - சிந்திக்கத் தக்கனவற்றை, ண சிந்தேஇ -  சிந்திக்க வில்லை, தாவ -   அதுவரை, ஜீவோ - உயிர், ஜர மரண - பிறப்பு, இறப்பு, விவஜ்ஜியம் டாணம் - இல்லாத இடத்தை, ண பாவஇ - அடைய இயலாது.

( கருத்துரை)

உயிர் தத்துவ உணர்வு கொள்ள வில்லை என்றால்,  தத்துவ சிந்தனை செய்யவில்லை என்றால்,  அது வீட்டினை அடைய இயலாது.

 (விளக்கவுரை)

தத்துவ சிந்தனையின் சிறப்பை விளக்குகிறார்.  ஏழு தத்துவங்களின் வழி உயிர் தத்துவத்தை தியானப் பொருளாகக் கொள்வது தத்துவ உணர்வாகும்.  தரும சுக்கில தியானங்களில் திளைத்தல் தத்துவ உணர்வாகும்.  அத் தத்துவங்களைச் சிந்தனைச்  செய்தல் குறித்து ஏற்கனவே முன் காதையில் கூறப்பட்டுள்ளது. உயிர் தத்துவத்தைத் தெளிந்து அனுபவம் செய்யாத வரை வீடு பேறு இல்லை என்பது கருத்து.

      'ஆங்கவர் அங்க பூவமாதி  நூலோதி' என துறவியர் நூல் பயிலும் பாங்கினைச் சுட்டுவர்.*
------------------------------------------
* மேருமந்தர புராணம் - 124
-------------------------------------------

 ************************************** 


116

பாவம் ஹவஇ அஸேஸம் புண்ணமஸேஸம் ச ஹவஇ பரிணாமா |
பரிணாமாதோ பந்தோ முக்கோ ஜிண ஸாஸணே திட்டோ ||


(பதவுரை)
பரிணாமா - உயிரின் பரிணாமத்தால், பாவம் அஸேஸம் -  எல்லா பாவமும், ஹவஇ - ஆகிறது, ச - மற்றும், புண்ணம்அஸேஸம் -  எல்லா புண்ணியமும், ஹவஇ - ஆகிறது, ஜிண - ஜிநர், ஸாஸணே - நெறியில், பரிணாமாதோ - பரிணாமத்தாலே, பந்தோ - கட்டும், முக்கோ - முத்தியும் ஆம் என, திட்டோ - கருதப்பட்டுள்ளது.

 (கருத்துரை)
உயிரின் பரிணாமத்துக்கு ஏற்பவே பாபமோ, புண்ணியமோ ஆகின்றன. பரிணாமத்துக்கு ஏற்பவே பந்தமோ விடுதலையோ ஆகின்றன என ஜிந நெறியில் கூறப்பட்டுள்ளது.

 (விளக்கவுரை)
உயிரின் பரிணாம சிறப்பை விளக்குகிறார்.

      பரிணாமம் என்பது உயிரின் நிகழ்வாக்க மாகும்.* உயிரில் பொய்யுணர்வு,  புலன் வேட்கை, அசுப இலேசியை முதலானவை தூக்கி நிற்கும் போது பாப ஊற்று ஏற்படுகிறது.   அருக வழிபாடு, உயிர்களிடம் அருளுணர்வு முதலான உணர்வுகள் தணிந்த கசாயமாகும்,  சுப இலேசியை ஆகும். இதனால் புண்ணிய ஊற்று அமைகிறது. உயிர் திரிவு (விபாவ) உணர்வில் நிகழும்போது கட்டு ஏற்படுகிறது. உயிர் தன் தூய உணர்வில் நிகழும்போது முத்தி பெறுகிறது. அதனால் ஆசாரியர் உயிரின் நிகழ்வைத் தூய்மை நோக்கி வைக்க அதற்கு இசைவான சுப நிகழ்வில் நிகழ்வில் நிகழ, அசுப நிகழ்வை முற்றுமாக விலக்க அறிவுறுத்துகிறார்.
------------------------------------------
*நீலகேசி - 421
-------------------------------------------

 ************************************** 

117

மிச்சத்த தஹ கஸாய ஸஞ்ஜம ஜோகேஹிம் அஸுஹ லேஸேஹிம் |
பந்தஇ அஸுஹம் கம்மம் ஜிணவயண பரம்முஹோ ஜீவோ ||

 (பதவுரை)
ஜீவோ - உயிர், ஜிண வயண -  ஜிநர் மொழியில், பரம்முஹோ - பாராமுகம் கொள்ளுதலால், மிச்சத்த - பொய்ம்மை, தஹ - மேலும், கஸாயாஸஞ்ஜம் - கசாயம், அசய்யம், ஜோகேஹிம் - யோகம், அஸுஹ லேஸஹிம் - அசுப இலேசியை இவற்றால், அஸுஹம் - அசுப, கம்மம் - கருமத்தை, பந்தஇ - கட்டுகிறது.

 (கருத்துரை)
உயிர் ஜிநர் மொழியில் பாராமுகமாக உள்ளபோது பொய்ம்மை, கசாயம் அசய்யம், யோகம், அசுப இலேசியை இவற்றில் நிகழ்ந்து அசுப (பாவ) கருமத்தைக் கட்டுகிறது.

 (விளக்கவுரை)
உயிர் பாப வினை கட்டுவதற்கான காரணத்தைக் காட்டுகிறார்.

     தத்துவ (மெய்ப் பொருள்) நம்பிக்கை இல்லாமை, பொய்ம்மை, வெகுளி முதலானவை கசாயம். பிற பொருள் ஈர்ப்பினை விடாமை அசய்யம் அதாவது பொறி வழிப் படுதல். மன, மொழி, உடல் நிமித்தத்தால் உயிரிடத்தில் தோன்றும் அலைவு யோகம்.  இவை தூக்கலாக உயிரில் தோன்றும் போது அசுப இலேசியை ஆகி பாவ வினை கட்டுக்கு ஏதுவாகின்றன. ஜிநர் மொழியை ஏலாமையே இதற்குக் காரணம் ஆகும்.

 ************************************** 


118

தவ்விவரீஓ பந்தஇ ஸுக கம்மம் பாவஸுத்திமாவண்ணோ |
துவிஹபயாரம் பந்தஇ ஸங்க்கேபேணேவ வஜ்ஜரியம் ||

(பதவுரை)
தவ்விவரீஓ - (பாபத்துக்கு) எதிரானவர், பாவ ஸுத்திமாவண்ணோ - அகவுணர்வு தூய்மையுடையவர், ஸுககம்மம் - புண்ணிய கருமத்தை, பந்தஇ - பந்திக்கிறார், இவ்வாறு, துவிஹபயாரம் -  இரு வகையாக, பந்தஇ -  பந்திக்கின்றனர் என, ஸங்க்கேபேணேவ - சுருக்கமாகவே, வஜ்ஜரியம் - கூறப்பட்டுள்ளது.

 (கருத்துரை)
பாபத்துக்கு எதிரானவர் அகவுணர்வு தூய்மையுடையவர் புண்ணிய கருமத்தைப் பந்திக்கிறார்.  இவ்வாறு இருவகையாக பந்திக்கின்றனர் என சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

  (விளக்கவுரை)
உயிர் புண்ணிய வினை கட்டுவதற்கான காரணத்தைக்  காட்டுகிறார்.

        முன் காதையில் பாப வினை  கட்டுக்குக் காரணம் காட்டினார். அதற்கு எதிரான என்றதால் தத்துவத்தை உள்ளவாறு நம்புதலும்,  வெகுளி முதலான துவர்ப்பு தொய்வடைதலும், பொறி வழிப்படாத  நல்லொழுக்கமும்,  யோக மந்தமும், சுப இலேசியையும் புண்ணிய  பந்த காரணங்களாம். உடன்  அகவுணர்வு தூய்மையும் உள்ளது.  நற்காட்சியர் சுப கருமத்தைக் கட்டுகிறார் என்பது கருத்து.  இவ்வாறு சுப - அசுப வினை பந்த வருணனை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

************************************** 

119

ணாணாவரணாதீஹிஇம் ய அட்டஹிம் கம்மேஹிம் வேடிஓ ய அஹம் |
டஹிஊண இணிம்ஹபயடமி அனந்த ணாணாஇ குண சித்தாம் ||

(பதவுரை)
ணாணாவரணாதீஹிம் - அறிவு மறைப்பு முதலான, அட்டஹிம் - எட்டு, கம்ஏஹி்ம் - வினைகளால், அஹம் - நான், வேடிஓய - சூழப்பட்டுள்ளேன், இணிம்ஹ - இப்போது, டஹிஊண - அவ்வினைகளை அழித்து, அணந்த ணாணாஇ - அனந்த ஞானம் முதலான, குண சித்தாம் - குணங்கள் வடிவ ஆன்மாவை, பயடமி - வெளிப்படுத்துகிறேன்.

(கருத்துரை)
அறிவு மறைப்பு முதலான எட்டு வினைகளால் மூடப்பட்டுள்ள நான், இப்போது அனந்த ஞான முதலான குண வடிவ ஆன்மாவை வெளிப்படுத்துகிறேன்.

(விளக்கவுரை)
ஆன்மாவின் தூய இயல்பை சிந்தனை செய்ய வேண்டும் என்கிறார்.

        அறிவு மறைப்பு, காட்சி மறைப்பு, வேதனீயம், மோகனீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம் இவை எட்டும் வினை மூலங்கள் ஆகும். பிறவி நிலையில் இவை எட்டும் வினைகளோடு கூடி உள்ளது. அதனால் தன் இயல்பான நிலையை அவ் வினைகள் மூடியுள்ளன என எண்ணுங்கால் அவற்றை அழிக்கும் சிந்தனை பிறக்கும். அதனால் நிகழ்கால நிலையையும் அதனை அழிக்கும் முறைமையும் சிந்தனை செய்ய வேண்டும். அப்போது அனந்த ஞானம் முதலான இயல்பான குணங்களை வெளிப்படுத்தும் விழைவைக் காட்டும் சிந்தனை விளையும். வினை அழிவு தூய உயிர் தியானத்தால் அமைகிறது. அதனைச் செய்ய தூண்டுகிறார், இச் சிந்தனை வழியாக.

************************************** 

120

ஸீலஸஹஸ்ஸட்டாரஸ சஉராஸீகுணகணாண லக்காஇம் |
பாவஹி அணுதிணு ணிஹிலம் அஸப்பலாவேண கிம் பஹுண ||

(பதவுரை)
முனிவரே! ஸீல ஸஹஸ்ஸட்டாரஸ -  பதினெண்ணாயிரம் சீலங்கள், சஉராஸீ குண கணாண லக்காஇம் - எண்பத்து நான்கு நூறாயிரம் (உத்தர) குணங்கள்,  இவற்றை, ணிஹிலம்  - முழுதுமாக, அணுதிணு - இடைவிடாது நாள்தோறும்,  பாவஹி -  எண்ணுக, அஸப்பலாவேண பஹுண -  அதிகமாக மாயையாகப் பேசுவதால், கிம் - என்ன பயன்?

 (கருத்துரை)
முனிவரே !  18,000 சீலங்களையும் ,84,00,000  குணங்களையும் முழுவதுமாக இடைவிடாது சிந்திப்பீர்.  வீணே மாயையான சொற்களைப் பேசுவதால் என்ன பயன்?

 (விளக்கவுரை)
சீலங்களையும் குணங்களையும் எப்போதும் போற்ற வேண்டும் என்கிறார்.

       சீலம் என்பது ஏற்ற நோன்புகளைக் காக்க மேற்கொள்ளப்படும் அகவுணர்வாகும். உயிர்  இரண்டு நிலையில் நிகழ்கிறது.  ஒன்று தன் இயல்பில் நிகழ்தல்;  மற்றொன்று தன் இயல்பு திரிந்து நிகழ்தல்.  தன் இயல்பு  திரிந்து நிற்கும் நிலையிலிருந்து தன் இயல்பு நோக்கி நிகழக் கொள்ளும் உணர்வே சீலமாகவும் உத்தர குணங்களாகவும் கூறப்படுகின்றன.

        நிகழ்வு மனம், மொழி, உடல் வாயிலாக செய்தல், செய்வித்தல், உடன்படல் எனும் அடிப்படையில் அமைவதாகும். அதனால் இவற்றைப் பெருக்க (3×3) ஒன்பது ஆகும்.  உணவு , அச்சம், காமம், பற்று  எனும் சன்னைகள் (பிறவி உணர்வுகள்). இவற்றால் பிற பொருள்கள் தொடர்பு ஆகிறது. அவற்றை விலக்க வேண்டும். அதாவது ஒன்பது வழியால் விலக்க வேண்டும். எனவே (9× 4)
 36 சீலங்கள் அமையும்.  ஐந்து பொறிகளால் பிற பொருள்கள் தொடர்பு அமைகிறது. இவற்றை விலக்க (9 × 4 × 5 ) 180 சீலங்கள் அமையும். மண், நீர், நெருப்பு, காற்று, தாவரம் ஒரு பொறி வகை ஆகும். இரு பொறி, மூன்று பொறி,  நான்கு பொறி, ஐந்துபொறி மனமுடையன, மனமிலாதன என பத்து வகை ஆகின்றன. இவற்றால் ஆகும் புறப்பொருள் தொடர்பை விலக்க (180 × 10) 1800 சீலங்கள் அமையும். கசாயம், அசய்யம் முதலானவற்றால் ஆகும் பிற பொருள் தொடர்பை  உத்தம பொறுமை முதலான தருமங்களால் விலக்க (1800× 10) 18,000  சீலங்கள் அமைகின்றன.

        இப் பதினெண்ணாயிரம் சீலங்களையும் பெண்கள் தொடர்பு நோக்கிலும் அமைத்துக் காட்டுவர். கருத்து என்னவென்றால் இவற்றால் பிரம்மா (ஆன்மா) வில்  திளைக்கும் அனுபவத்துக்கு இவை துணை நிற்கின்றன என்பதாம்.

      கொல்லாமை (அகிம்சை) முதலான மூல குணங்களைக் காக்க மிக நுட்பமாக்க் குறைகளைக் களைதல் உத்தர குணம்  ஆகும்.

        1)  கொலை 2) பொய், 3) திருடு, 4) காமம், 5) பற்று, 6) வெகுளி, 7) மானம், 8) மாயை,  9) உலோபம்,  10) அச்சம், 11)  அருவருப்பு, 12) அரதி, 13)  சோகம், 14)  மனக்  கோட்டம், 15) மொழிக்  கோட்டம், 16)  உடல் கோட்டம் (கோணல்) 17) பொய்மை, 18)  விழிப்பின்மை, 19)  கோள் சொல்லுதல், 20)  அஞ்ஞானம், 21) பொறி அடங்காமை  என குறைகள் எண்ணப்படும். இவற்றை 'அதிகிரமம்', 'வியதிக்ரமம்',  'அதிசாரம்', 'அநாசாரம்'  என நான்கு நிலைகளில் காண (21 × 4) 84 ஆகும்.  மண், நீர், நெருப்பு,  காற்று, தாவரம் முதலாக 10 வகை உயிர்கள்.  10 வகை சய்யமத்தால் பெருக்க (10 × 10 ) 100 ஆகும். இவற்றோடு 84 ஐப் பெருக்க 8400 ஆகும். இவற்றை  10 வகை சீலப் பகையால்* பெருக்க 84,000 ஆகும்.  10 பிராயசித்த குறைகளோடு பெருக்க 84,00,000 உத்தர குணம் அமைகின்றது.

            இங்கே ஆசிரியர் இந்த சீலங்களையும், குணங்களையும் மீண்டும் மீண்டும் என்ன வேண்டும், சிந்திக்கவேண்டும். இவற்றையும் அடையும் முறையில் பயிற்சி செய்யவேண்டும் என்கிறார்.  வீணே இல்லாததை இருப்பது போல பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என்று சுட்டுகிறார். அகவுணர்வு தூய்மையே எதிலும் குறிப்பாக இருத்தல் வேண்டும் என்பது கருத்து.  குணத்தாலும் குணத்தான நோக்கிலும் உத்திர குணங்களைச் சிந்திக்கலாம்.
-----------------------------------------------------
* சீலப்பகை  எனில் சீலத்தை அழிப்பது அவை 1) பெண் தொடர்பு, 2)  ஊட்ட உணவு , 3) பூக்கள் சூடுதல், 4)  மென் படுக்கை, 5)  அலங்கரித்தல், 6) இசை கேட்டு மகிழ்தல், 7)  பொருள் சேர்த்தல், 8 சீலமிலார் தொடர்பு, 9) அரசசேவை, 10)  இரவில் சுற்றுதல்.
------------------------------------------------------ 

************************************** 

121

ஜாயஹி தம்மம் ஸுக்கம் அட்ட ரஉத்தம் ச ஜாண முத்தூண |
ருத்தட்ட ஜாஇயாஇம் இமேண ஜீவேண சிரகாலம் ||

 (பதவுரை)

சிரகாலம் - நெடுங் காலமாக, ஜீவேண -  உயிரால், இமேண -  பலவாறான, ருத்தட்ட -  'ரௌத்திர'  'ஆர்த்த' தியானம், ஜாயாஇயாஇம் - தியானிக்கப் ப்பட்டுள்ளது, ( ஆகையால் இனி) அட்ட ரஉத்தம் ச - 'ஆர்த்த'  மற்றும்  'ரௌத்ர',  ஜாண - தியானத்தை, முத்தூண -  கைவிட்டு, தம்மம் ஸுக்கம் -  தரும, சுக்கில தியானம், ஜாயஹி - தியானம் செய்வீர், முனிவரே!

 (கருத்துரை)
முனிவரே !  இந்த உயிர் தொடக்கமற்ற காலமாக,  பலவான 'ஆர்த்த'  'ரௌத்ர' தியானங்களைச் செய்து வந்துள்ளது. இனி , அவற்றை விட்டுவிட்டு தரும, சுக்கில தியானம் செய்யட்டும்.

 (விளக்கவுரை)

தரும, சுக்கில  தியானங்களில் உயிர் நிலைக்க வேண்டும் என்கிறார்.

       ஒரு பொருளில் சிந்தனை ஒருமுகப்படுதல் 'தியானம்'  (ஊழ்கம்) எனப்படும். அந்த தியானம் உயிருக்கு நன்மை செய்வதாகவும் அமையலாம், கேடு செய்வதாகவும் அமையலாம். உயிருக்கு நன்மை செய்யும் ஊழ்கம் தரும,  சுக்கிலங்கள் ஆகும்.  உயிருக்குக் கேடு செய்யும் ஊழ்கம் 'ஆர்த்த' 'ரௌத்ர' ஆகும்.

         துன்ப உணர்வுக்கு ஏதுவாக அமைவது  'ஆர்த்தம்'. அச் சொல்லுக்குப் பொருள் துன்பம் தருவது என்பதாம்.   எத்தகு சிந்தனை ஒருமுகப்பாட்டால் உயிர் துன்ப அனுபவம் செய்கிறதோ, அது 'ஆர்த்த' தியானம் என்பர்.  கொடிய உணர்வுக்கு ஏதுவாக அமைவது 'ரௌத்ரம்'. அச் சொல்லுக்குப் பொருள் 'குரூர' -  கொடியது என்பதாம். எத்தகு சிந்தனை ஒருமுகப்பாட்டால் உயிர் கொடிய உணர்வு அனுபவம் செய்கிறதோ, அது 'ரௌத்ர' தியானம் என்பர்.  இவ்விரண்டும் அசுபம் ஆகும்; பிறவிக்குக் காரணமாகும். இந்த உயிர் தொடக்கமற்ற காலமாக இவ் விரு தியானங்களில் ஆழ்ந்து பிறவியில் சிக்கி உழல்கிறது. எனவே ஆசாரியார் 'இவற்றை விட்டு விலகுக' என அறிவுறுத்தியுள்ளார்.

        தரும ,சுக்கில தியானம் சுப தியானம்  ஆகும். இவற்றால் சொர்க்கம், முத்தி கிடைக்கின்றன. ஆனால் இவற்றைச் செய்யவில்லை. எனவே ஆசாரியர் 'இவற்றைச் செய்க' என அறிவுறுத்தியுள்ளார். தரும தியானத்தில் தரும ஆர்வம் உள்ளது. இது சுப ஆர்வம். அதனால் புண்ணிய பந்தம் ஆகிறது. அதோடு அகவுணர்வு தூய்மையினால் பாப வினை அழிகிறது. சுக்கில தியானம் எட்டாம் குணத்தானம் முதல் அமைகிறது. என்றாலும், அங்கும் வெளிப்படாத ஆர்வம் உள்ளது . பத்தாம் குணத்தானத்தில் மோக வினை அழிவதால் அங்கு ஆர்வம் இல்லை. அதனால் ஆர்வமில்லா சுக்கில தியானம் கரும கேட்டுக்கு ஏதுவாக அமைகிறது. எனவே ஆசாரியார் இவற்றைச் செய்ய அறிவுறுத்துகிறார்.

       'சுக்கிலத் தியான வாள் எடுத்துஇடர் வினைப்பகை உடைக்குற்றான்' *.
-----------------------------------------
*மேருமந்தர புராணம் - 161
----------------------------------------- 

************************************** 


122

ஜேகே வி தவ்வஸவணா இந்தியஸுஹஆஉலா ண சிந்தந்தி |
சிந்தந்தி பாவஸவணா ஜாணகுடரேஹிம் பவருக்கம் ||

(பதவுரை)
இந்திய ஸுஹ ஆஉலா - ஐம்புல இன்ப நுகர்வு வேட்கையர், தவ்வஸவணா - உடல் தோற்ற (திரவிய) முனிவர், கே வி - எவரும், ஜே - இந்த தரும, சுக்கில தியானங்களை, ண சிந்தந்தி - தியானிப்பவர் அல்லர், ஜாண குடரேஹிம் - தியான கோடரியால், பவருக்கம் - பிறவியாம் மரத்தை வெட்டும், பாவ ஸவணா - அகவுணர்வுடைய சமணர், சிந்தந்தி - இத் தியானங்களைச் சிந்திக்கின்றனர்.

 (கருத்துரை) 
ஐம் புல இன்பத்தில் கவலையுள்ள உடல் தோற்ற சமணர் இந்த தியானங்களைச் செய்பவர் அல்லர். தியான கோடரியால் பிறவிப் பெருமரத்தை வெட்டும் பாவ சமணரே இவற்றைச் செய்கின்றனர்.

 (விளக்கவுரை)
அகவுணர்வு உடைய முனிவரே இத் தியானங்களைச் செய்வர் எனச் சுட்டுகிறார்.

     ஆசாரியர் உடலில் முனிவர் தோற்றம் மட்டும் உடையவர் 'திரவிய சமணர்' என்கிறார்.  அக நிலையில் மும்மணி வடிவ அனுபவம் இல்லாமல் புறத்தே உடல் அளவில் முனிவராக உள்ளவர் 'திரவிய சமணர்' என்று ஆகிறது.  தரும, சுக்கில தியானங்களுக்கு அவர் பாத்திரமாகார். ஏனெனில், இத் தியானங்கள் நற்காட்சியுடையாருக்கே அமைகின்றன. நற்காட்சி இல்லாதவர் என்பதனை 'ஐம்புல இன்ப கவலையர்' என்ற தொடரால் பெற வைத்தார். அதனால் அவர் இம்மையிலும் மறுமையிலும் புலன் இன்பமே விரும்புவர். அவருடைய தவம் முதலானவையும் இந்த குறியுடையனவாகவே இருக்கும்.

     மும்மணி வடிவ அகவுணர்வு அனுபவம் உடையவர் நற்காட்சியர் ஆவர். அவருக்குப் புலன் இன்பம் துன்பமாகவே காணப்படும். அதனால் பேரின்ப ஆன்மாவைக்  துய்க்கும்  குறியுடைய 'பாவ சமணர்' தரும, சுக்கில தியானங்களைச் சிந்திக்கிறார். அவற்றால் பிறவியை ஒழிக்கின்றனர். எனவே அகவுணர்வு கொண்டு தியானங்களைச் செய்ய வேண்டும் என்பதாம்.

 "தவம் செய்வார் தம்கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு"

 "தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்தனை
 அஃதிலார் மேற்கொள் வது"

      என வரும் குறள் கருத்துக்களை இங்கே இணைத்துப் பார்க்கலாம்.*
----------------------------------------
* திருக்குறள் - 266, 262.


************************************** 

123

ஜஹ தீவோ கப்பஹரே மாருயபாஹாவிவஜ்ஜிஓ |
தஹ ராயாணிலரஹிஓ ஜாணபஈவோ வி பஜ்ஜலஇ ||

(பதவுரை)
 ஜஹ - எப்படி, தீவோ -  விளக்கு, மாருய - காற்றின், பாஹா விவஜ்ஜிஓ - இடையூறு இல்லாத, கப்பஹரே - கருவறையில், ஜலஇ - ஆடாது அசையாது ஒளி செய்கிறது, தஹ - அப்படியே, ராயாணில - ஆர்வக் காற்று, ரஹிஓ -  இல்லாத அக மனத்தில், ஜாண பஈவோவி - தியான விளக்கும், பஜ்ஜல இ - ஒளி வீசுகிறது.

 (கருத்துரை)
காற்றின் இயக்கம் இல்லாத கருவறையில், விளக்கு நின்று ஒளி தருதல் போல ஆர்வக் காற்று இல்லாத அக மனத்தில் தியான விளக்கும் நின்று ஒளி தருகிறது.

 (விளக்கவுரை)
அகவுணர்வு உடையாருக்கு தியானம் அமைகிறது என எடுத்துக் காட்டு வழி காட்டுகிறார்.

     ஆர்வம் உள்ள மனம் சலனம் உள்ள மனமாகும்.  ஐம்புல ஆர்வம் உள்ள முனிவர் மனமும் சலனம் உடையதே. அதனால் அங்கே தியானம் ஒருமுகப்பட்டு நிற்க முடியாது. ஆர்வமில்லா மனம் சலனமற்ற மனமாகும்.  ஐம்புல ஆர்வமில்லாத  'பாவ சமணர்' மனமும் அத்தகையதே. அதற்கு எடுத்துக் காட்டாக 'காற்றில்லாக் கருவறையை'க் காட்டினார். அந்த சலனமற்ற மனத்தில் தியானம் ஒருமுகப்பட்டு நிற்க முடிகிறது .  அதற்கு எடுத்துக்காட்டு அலையாது ஒளிரும் விளக்கு. ஒளி தருவது விளக்கு. காற்று இல்லாத போது அவ்வொளி ஒரே படித்தாய் அமைகிறது. அதுபோல தியான விளக்கும் ஆர்வக் காற்றில்லாத அக மனத்தில் ஒரே படித்தாய் ஒளி வீசுகிறது . பாவ சமணருக்கே தியானம் அமையும். அவருக்கே அது நன்மைசெய்யும் எனக் காட்டியுள்ளார் இங்கே .அரிய காதை இது.
      

************************************** 

124

ஜாயஹி பஞ்ச வி குரவே மங்கல சவுஸரண லோய பரியரி ஏ |
ணரசுர கேயர மஹிஏ  ஆரா ஹணணாயகே வீரே ||


 (பதவுரை) 
ணர சுர கேயர மஹிஏ - மனிதர் தேவர், வித்தியாதரரால் தொழப்படுகிற, ஆராஹண ணாயகே -  ஆராதனைக்குத் தலைவரான, வீரே - வீரரான, சவு மங்கல - நான்கு மங்கலம், சவு ஸரண - நான்கு அடைக்கலம், லோய பரியரிஏ - நான்கு உலக உத்தமமான, பஞ்ச வி குரவே - ஐந்து குரவர்களை, ஜாயஹி -  தியானிப்பாயாக !

(கருத்துரை)
ஐந்து  குரவரை (பஞ்ச பரமேட்டியை) தியானம் செய்க.

 (விளக்கவுரை)
ஐங்குரவரையும் தியானிக்க வேண்டும் என்கிறார்.

       தியானத்துக்கு உரிய பொருள் தூய ஆன்மாவே ஆகும். அத் தூய ஆன்மாக்களில் சிறந்து விளங்குபவர் ஐங்குரவர்.  அதனால் அவரையும் தியானிக்க வேண்டும், ஆன்மா தூய்மையை அடைய !

         ஐங்குரவர் சிறப்பைச் சுட்டும்போது, 'சத்தாரி மங்கலம்',  'சத்தாரி சரணம்',  'சத்தாரி லோகுத்தமா' எனச் சுட்டியுள்ளார். பாபத்தை அழிப்பவர் அல்லது பேரின்பம் தருபவர் எனும் கருத்துடையது 'மங்கலம்'.  உலகில் உயிர்களுக்கு உயர்ந்தது அருகர், சித்தர், சாது தர்மம் ஆகும். அவரே அடைக்கலம் தருபவர். இப்படி ஐங்குரவர் மங்கலமாக, அடைக்கலமாக, உத்தமராக விளங்குவதால் தியானப் பொருளுக்கு உரியவர் ஆகிறார். தரிசன, ஞான, சாரித்திர,  தவம் எனும் ஆராதனைகளுக்கு உரியவர் இவர். வினைகளை  வெல்லுபவராக இவர் விளங்குகிறார். எனவே ஆன்மத் தூய்மை இவரைத் தியானிப்பதால் அமைகிறது எனக் காட்டியுள்ளார்.

************************************** 


125

ணாணமயவிமல ஸீயலஸலிலம் பாஊண பவிய பாவேண |
வாஹி ஜர மரண வேயணடாஹவிமுக்கா ஸிவா ஹோந்தி ||

(பதவுரை)

பவிய -  பவ்வியர், பாவேண - நற்காட்சி உணர்வுடன் கூடிய, ணாணமய - அறிவுமயமான, விமல - தூய, ஸீயல - குளிர்ந்த, ஸலிலம் - நீரை, பாஊண - அருந்தி , ஜர மரண - மூப்பு இறப்பு, பிணி எனும், வேயண - துன்ப, டாஹ -  வெப்பத்திலிருந்து, விமுக்கா -  விடுபட்டு, ஸிவா -  பேரின்பத்தர் , ஹோந்தி - ஆகின்றனர்.

 (கருத்துரை)

பவ்வியர் நல் ஞான தூய குளிர்ந்த நீரைக் குடித்து மூப்பு இறப்புப்  பிணி துன்ப வெப்பத்தை நீக்கி பேரின்ப சித்த நிலையை அடைகின்றனர்.

 (விளக்கவுரை)

நல்லறிவில் ஒன்றும் தியானம் செய்ய அறிவுறுத்துகிறார்.

       தூய குளிர்ந்த நீர் குடிப்பதால் பித்த வெப்பம் அழிந்து இன்பம் ஆவது போல ஆர்வ மலம் சேராத அறிவு (நல்லறிவு) தூய்மையுடன் கவலை இல்லாது சாந்திமயமாவதால் அதனை பருகி -அதில் ஒன்றி-  பிறவிப்பிணியை கெடுத்து பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம். ஆகவே பவ்வியர் நல்லறிவில் ஒன்றிப்போக அறிவுறுத்துகிறார். உண்மையில் பிறவியைக் கெடுக்கும் சுக்கில தியானம் என்பது தூய நல்லறிவில் ஒன்றிப் போதலே ஆகும்.

************************************** 

126

ஜய பீயம்மி ய தட்டே ண வி ரோஹஇ அங்குரோ ய மஹிவீடே |
தஹ கம்மவீயதட்டே பவங்குரோ பாவஸவணாணம் ||

(பதவுரை)
ஜஹ - எப்படி, பீயம்மிய - விதை, தட்டே - எரிந்து போனால் அதில், அங்குரோ - முளை, மஹிவீடே - நிலத்தில், ண வி ரோஹஇ - தோன்றுவது இல்லை, தஹ - அதுபோல், பாவ ஸவணாணம் - அகவுணர்வுடைய சமணரிடத்தில், கம்ம வீய - கரும விதை, தட்டே - எரிந்து போவதால், பவங்குரோ -  பிறவி முளை தோன்றுவது இல்லை.

 (கருத்துரை)
நிலத்தில் இட்ட சுட்ட விதை முளைக்காதது போல பாவ சமணரிடத்தில் எரிந்துபோன கரும விதை பிறவி முளையைத் தோன்றச் செய்வது இல்லை.

( விளக்கவுரை)
தியான நெருப்பால் எரிந்துபோன கரும விதையால் பிறவி முளை தோன்றாது என்கிறார்.

    பிறவிக்கு விதை எட்டு வினைகள் ஆகும்.  இவ்வினைகள் 'பாவ' சமணருடைய தியான நெருப்பால் எரிந்து போவதால் பிறவி முளை தோன்றுவது இல்லை.  எனவே பாவ சமணராகி தரும சுக்கில தியானங்களால் கருமங்களைக் கெடுத்துப்  பிறவியை அறுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். விதையும் மரமும் அனாதியாக வந்தாலும், விதை எரிந்து போனால் மர பரம்பரை தோன்றுதல் இல்லை. அதுபோல வினைக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்பார். வினையை அழித்தால் முடிவு வரும் என்பதனை அறிய வேண்டும் எனும் குறிப்பினையும் ஆசாரியர் காட்டுகிறார்.

************************************** 

126

ஜய பீயம்மி ய தட்டே ண வி ரோஹஇ அங்குரோ ய மஹிவீடே |
தஹ கம்மவீயதட்டே பவங்குரோ பாவஸவணாணம் ||

(பதவுரை)
ஜஹ - எப்படி, பீயம்மிய - விதை, தட்டே - எரிந்து போனால் அதில், அங்குரோ - முளை, மஹிவீடே - நிலத்தில், ண வி ரோஹஇ - தோன்றுவது இல்லை, தஹ - அதுபோல், பாவ ஸவணாணம் - அகவுணர்வுடைய சமணரிடத்தில், கம்ம வீய - கரும விதை, தட்டே - எரிந்து போவதால், பவங்குரோ -  பிறவி முளை தோன்றுவது இல்லை.

 (கருத்துரை)
நிலத்தில் இட்ட சுட்ட விதை முளைக்காதது போல பாவ சமணரிடத்தில் எரிந்துபோன கரும விதை பிறவி முளையைத் தோன்றச் செய்வது இல்லை.

( விளக்கவுரை)
தியான நெருப்பால் எரிந்துபோன கரும விதையால் பிறவி முளை தோன்றாது என்கிறார்.

    பிறவிக்கு விதை எட்டு வினைகள் ஆகும்.  இவ்வினைகள் 'பாவ' சமணருடைய தியான நெருப்பால் எரிந்து போவதால் பிறவி முளை தோன்றுவது இல்லை.  எனவே பாவ சமணராகி தரும சுக்கில தியானங்களால் கருமங்களைக் கெடுத்துப்  பிறவியை அறுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். விதையும் மரமும் அனாதியாக வந்தாலும், விதை எரிந்து போனால் மர பரம்பரை தோன்றுதல் இல்லை. அதுபோல வினைக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்பார். வினையை அழித்தால் முடிவு வரும் என்பதனை அறிய வேண்டும் எனும் குறிப்பினையும் ஆசாரியர் காட்டுகிறார்.

************************************** 

127

பாவ ஸவணோ விபாவஇ ஸுக்காஇம் துஹாஇம் தவ்வ ஸமணோ ய |
இய ணாஉம் குண தோஸே பாவேண ய ஸஞ்ஜுதோ ஹோஹ ||


(பதவுரை)

பாவஸவணோ வி - 'பாவ' சமணரோ, ஸுக்கா இம் - இன்பங்களை, பாவஇ - அடைகிறார், ய - மற்றும் , தவ்வ ஸமணோ - உடலால் சமணர், துஹா இம் -  துன்பங்களை, பாவஇ - அடைகிறார், இய - இப்படி, குண தோஸே - குணம் குற்றங்களை, ணாஉம் -  அறிந்து, பாவேண ய - அகவுணர்வுடன் கூடி, ஸஞ்ஜுதோ - சய்யமியாக, ஹோஹ - ஆகுக.

 (கருத்துரை)

அகவுணர்வுடைய முனிவர் அரிய இன்பங்களை அடைகிறார். புறத் தோற்ற முனிவர் பொல்லாத துன்பங்களை அடைகிறார்.  முனிவரே! இப்படி குணம், குற்றங்களைத் தெளிந்து அகவுணர்வுடைய முனிவராக ஆகுக!

(விளக்கவுரை)

'பாவ' சமணருக்கும் உடலால் சமணருக்கும் உள்ள அனுபவ வேறுபாட்டைக் காட்டுகிறார்.

   நற்காட்சியுடையவர் 'பாவ' சமணர்(முனிவர்).
அவர் பிறவித் துன்பங்களை அழித்து இன்பங்களை அடைகிறார். நற்காட்சியிலா உடலால் சமணர் தோற்றத்தால் முனிவராகக் காணப்பட்டாலும் அகவுணர்வு இன்மையால் ஐம்புல இன்ப வேட்கையில் விழுந்து பிறவித் துன்பங்களை அடைகிறார். இருவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது.  குண - குற்றங்களால் இவ் வேறுபாடு அமைவதால் அதனைத் தெளிந்து குணங்களைப் போற்றி 'பாவ சய்யமி' யாக ஆக வேண்டும் என்பதாம்.

      நோன்பு நோற்றல், அசுபத்தில் நிகழாமை, புலனடங்கள் 'சய்யம்' எனப்படும்.  எல்லா உயிர்களையும் ஒப்ப ஓம்புதல் 'பிராணி சய்யம்';  ஐம் பொறிகளையும் மனத்தையும் புறம் போகாது அகமுகமாக ஆக்குதல் 'இந்திரிய சய்யம்'. இவ்விரண்டையும் உடைய துறவியர் 'சய்யமி' எனப்படுகிறார். அவர் நற்காட்சியுடையவர்.

 'ஈற்றில்ஆ ராதனை விதியில் ஏந்தல்தான்
 ஆற்றலுக்கு ஏற்றவாறு அன்ன பானமும்
சாற்றிய வகையினால் சுருக்கிச்  சையமேல்
 ஏற்றினான் தன்னைநின்ற இலங்கும் சிந்தையான்' *
-----------------------------------------
*மேருமந்தர புராணம்  -544

************************************** 


128

தித்தயர கணஹராஇம் அப்புதயபரம்பராஇம் ஸோக்காஇம்|
பாவந்தி பாவஸஹியா ஸங்க்கேவி ஜிணேஹிம் வஜ்ஜரியம் ||

(பதவுரை)

பாவஸஹியா - 'பாவ' சமணர், அப்புதய பரம்பரா இம் - உயரும் வழி முறையால், தித்தயர கடஹராஇம் - தீர்த்தங்கரர், கணதரர் முதலான நிலைக்குரிய, ஸோக்கஇம் - இன்பங்களை, பாவந்தி - அடைகின்றனர் என, ஸங்க்கேவி - சுருக்கமாக, ஜிணேஹிம் வஜ்ஜரியம் - தீர்த்தங்கரர் அருளியுள்ளனர்.

(கருத்துரை)

'பாவ' சமணர் தீர்த்தங்கரர், கணதரர் முதலான ஆன்ம இன்பங்களை முறையாக அடைகின்றனர் என்று தீர்த்தங்கரர் சுருக்கமாக அருளியுள்ளார்.

(விளக்கவுரை)

பாவ சமணர் இன்ப ஏணியில் உயருகின்றனர் என்று கூறுகிறார்.

      நற்காட்சியுடையார் புலன் இன்பத்தைப் பார்க்காது ஆன்மிக இன்பத்தை நோக்குதலால் இன்ப ஏணியில் மேலே உயருகின்றனர். இப்படி முறை இன்ப அனுபவத்தை 'அப்யுத பரம்பரை' அனுபவம் என்பர். ஆறு கண்ட அரச பதவி, கணதர பதவி, தீர்த்தங்கர பதவி இவை எல்லாம் அப்படி அமைவனவே. அகவுணர்வு உடைமையின் சிறப்பை இப் பதவிகளின் வழி வெளிப்படுத்தி அகவுணர்வு கொள்ள அறிவுறுத்துகிறார். புறத் தோற்றத்தில் முனிவராக உள்ளவர் இப் பதவிகளைப் பெறும் என்பது குறிப்பு.


************************************** 

129

தே தண்ணா தான் ணமோ தம்ஸணவரணாண சரண ஸுத்தாணம் |
பாவ ஸஹியாண ணிச்சம் திவிஹேண பணட்ட மாயாணம் ||

(பதவுரை)

தம்ஸண வர - நற்காட்சியில் சிறந்தும், ணாண -  நல்லறிவில் சிறந்தும், சரண - நல்லொழுக்கத்தில் சிறந்தும், ஸுத்தாணம் - தூய்மை, பாவ ஸஹியாண -  அகவுணர்வும்  கூடி, பணட்ட  மாயாணம் - மாயை இல்லாத, தே - அந்த முனிவர்கள், தண்ணா -  பெருமைக்குரியவர்கள், தாண - அவர்களுக்கு, ணிச்சம் - எப்போதும் (இடைவிடாது)  திவிஹேண - மன, மொழி, மெய்களால், ணமோ -  வணக்கம் அமையட்டும்.

 (கருத்துரை)

மும்மணியில் சிறந்தும், தூய அகவுணர்வும் கூடி மாயை இல்லாத அம் முனிவர்கள் பெருமைக்கு உரியவர்கள். அவர்களுக்கு நம்முடைய வணக்கம் எப்போதும் மனம் மொழி மெய்யால் அமையட்டும்.

 (விளக்கவுரை)

பாவ  சமணர் பெருமைக்கு உரியவர். அவரை அனைவரும் எப்போதும் தொழ வேண்டும் என்கிறார்.

       பாவ சமணரிடம் மும்மணி தூய்மையாக அமையும். அவரிடம் ஆசாரியருக்கு அரிய அன்பு (பக்தி) தோன்றுகிறது. அதனால் அவரைப் பெருமைக்கு உரியவராகப்  போற்றி வணக்கம் கூறியுள்ளார். அது பொருத்தமானதே. முத்தி ஆர்வலர் முத்தி நெறியில் முதன்மையாக விளங்குபவரைக் காணும் போது அன்பு செய்யவே செய்வர். அன்பில் நெகிழவே செய்வர்.

 "பேதுறு பிறவி போக்கும்
    பெருந்திரு உருவுக்கு ஏற்ற
 கோதறு குணங்கள் பெய்த
      கொள்கல மனைய ராகிச்
சேதியின் நெறியின் வேறு
 சிறந்தது சிந்தைசெய்யாச்
 சாதுவர்அன்றி  யாரே
   சரண்நமக்கு உலகின் ஆவார்

 என வழங்குதல் காண்க
--------------------------------------------
 யசோதர காவியம் - 56
-------------------------------------------

************************************** 

130

இட்டிமதுலம் விஉவ்விய கிண்ணரகிம்புரிஸ அமரகயரேஹிம் |
தேஹிம் வி ண ஜாஇ மோஹம் ஜிணபாவணபாவிஓ தீரோ ||

(பதவுரை)
ஜிண பாவண - நற்காட்சி (ஆன்ம) பாவனை, பாவிஓ - உடையவர், கிண்ணர கிம்புரிஸ அமர கயரேஹிம் - கின்னர, கிம்புருட  தேவர்,  கற்பவாசி தேவர், வித்தியாதரர் (இவர் விரிக்கும்), இட்டிமதுலம் விஉவ்விய -  இணையிலா ரித்தி விகுர்வணையை, தேஹிம் விண ஜாஇ மோஹம் - பார்த்தும் மோகம் அடைவது இல்லை, அவர், தீரோ -  தீரராம்.

 (கருத்துரை)
 நற்காட்சியுடைய முனிவர் தேவரும் வித்தியாதரரும், விகுர்வனையால் காட்டும் இணையிலா ரித்திகளைக்  கண்டு மயங்குவது இல்லை; அவர் வீரர் ! தீரர் !

 (விளக்கவுரை)
தேவர்  ரித்திகள் கண்டு பாவ சமணர் மயங்குவது இல்லை என்கிறார்.

       ரித்திகள் முந்தைய பிறவியில் செய்த தவம் முதலானவற்றால் அமைவது ஆகும். ஆனாலும் நற்காட்சியுடைய பாவ சமணர் இத்தகு ரித்திகளைக் கண்டு மயங்குதல் இல்லை. ஏனெனில், இவை முத்தி  நெறியில் காணப்படும் தடைக் கற்கள் ஆகும். ஐம் புல இன்பத்துக்கு ஏதுவாகும்.

'  அங்கவன் உருவம் காண
    அருந்தவன் சயந்தன் அந்தோ
 வீங்கிய தவத்தி னால்மேல்
    இவ்வுரு ஆக என்னா
நீங்கிய காட்சித் தாய
    நிதானத்தை நிறைய நின்றான்
 ஓங்கிய உலகம் வேண்டாது
     உமி கொண்ட ஒருவன் ஒத்தான் '

  என நற்காட்சி இழந்த முனிவர் ரித்தி கண்டு மயங்கியதைக் காட்டுவர்.
----------------------------------------
மேருமந்தர புராணம் - 134
------------------------------------------

**************************************

131

கிம் புணகச்சஇ மோஹம் ணரஸுர ஸுக்காண அப்பஸாராணம் |
ஜாணந்தோ பஸ்ஸந்தோ சிந்தத்தோ மோக்க முணி தவளோ ||

(பதவுரை)
முணி தவளோ - முனிவரர், மோக்க - முத்தியை, ஜாணந்தோ -  அறிகிறார், பஸ்ஸந்தோ -  நோக்குகிறார், சிந்தந்தோ - சிந்திக்கிறார், ( அவர்) அப்பஸாராணம் - அற்ப சாரமுடைய, ணரஸுர ஸுக்காண - மனிதர் தேவர்  துய்க்கும் இன்பங்களின், புண - இனி, மோஹம் - மோகத்தில், கிம் கச்சஇ - எப்படிச் செல்வார்?

 (கருத்துரை)

முனிமையில் சிறந்தோர் முத்தியை அறிகிறார்,  நோக்குகிறார், சிந்திக்கிறார்.  அவர் அற்ப சாரமுடைய மனிதர், தேவர் நாடும் இன்பங்களில் எப்படி மயங்குவார்?

 (விளக்கவுரை)

முனிவர் ஐம்புல இன்பங்களை நோக்கார் என்கிறார்.

      முன் காதையில் ரித்திகளைக் கண்டும் நற்காட்சியுடைய முனிவர் அவற்றை விரும்புவது இல்லை என்றார்.  அத்தகு சிறந்த முனிவர் மனிதர், தேவர் போல அற்ப சாரமுடைய ஐம்புல இன்பங்கள் நாடுதல் இலர். ஏனெனில், அவர் முத்தியைக்  குறியாக  உடையவர். அதனை அறிபவர்.  அதனைச்  சிந்திப்பவர்  ஆவார் என்கிறார். இணையிலா  ரித்திகளையே நோக்காதவர்,  இந்த அற்ப ஐம்புல இன்பங்களை எப்படி விரும்புவர்? விரும்ப மாட்டார் என்பதாம்.
           ------------------- 

************************************** 

132

உத்தரஇ ஜாண ஜரஇ ரோயக்கீ ஜாண டஹஇ தேஹஉடிம் |
இந்தியபலம் ண வியலஇ தாவ துமம் குணஹி அப் பஹியம் ||

(பதவுரை)

ஜரஇ - மூப்பு, உத்தர இ ஜாண - வராதவரை, தேஹஉடிம் - உடல் என்னும் குடிசையை, ரோயக்கீ - நோய் எனும் நெருப்பு, ஜா ண டஹஇ - எரிக்காத வரை, இந்திய பலம் -   பொறிகளின் ஆற்றல், ண வியலஇ -  குறையாத வரை, தாவ - அதுவரை, துமம் - நீ , அப்பஹியம் - ஆன்ம நன்மையை, குணஹி - செய்க.

 (கருத்துரை)

முனிவரே!  மூப்பும் நோயும் வரும் முன்,  பொறிகளின் ஆற்றல் அழியும் முன் உயிருக்கு வேண்டிய நன்மையைச் செய்க.

 (விளக்கவுரை)

இளமையிலேயே ஆன்ம நன்மை நாட வேண்டும் என்கிறார்.

      ஆன்ம முயற்சியில் உடலின் பங்கும் உள்ளது, அந்த உடலில் மூப்பும், பிணியும் வலி குறைவும் பற்றும் முன் உயிருக்கு நன்மை தேட வேண்டும் என்கிறார். முதுமையில் உடல் பிணியுற்று பொறிகள் பழுதடைந்து போகின்றது. அப்போது தவம் முதலானவையும் ஆகமம் பயிலுதலும் ஆன்ம சாதனையும் நிகழ்த்த முடியாது. அதனால் ஆசாரியர் ஆற்றல் உள்ள போதே சாதனை செய்யவேண்டும் என்கிறார்.

 "நடைவறும் என்றெண்ணி  நல்லறிவாளர்
 குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
 மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
இன்னாங்கு எழுந்திருப் பார்"

 என நாலடியார் இளமைத் துறவைப் போற்றுதலைக் காணலாம்.
----------------------------------------
நாலடியார் - 11
-----------------------------------------

133

சஜ்ஜீவ சடாயதணம் ணிச்சம் மணவயணகாயஜோஏஹிம் |
குரு தய பரிஹர முணிவர பாவி அபுவ்வம் மஹாசத்தம் ||

(பதவுரை)

 முணிவர -
முனிமுதல்வ, சஜ்ஜீவ - ஆறு வகைப்படும் உயிர்களிடம், ணிச்சம் - எப்போதும், மணவயண காய ஜோஏஹிம் -  மனம் மொழி மெய்யால், தய - அருள், குரு - கொள்க, சடாயதணம் -  ஆறு அவிநயம், மண வயண காய ஜோஏஹிம் -  மனம் மொழி மெய்யால்,  பரிஹர - விலக்குக, அபுவ்வம் - முன் உணராத, மஹாசத்தம் - முழுதுணரும் அறிவுடைய ஆன்மாவை, பாவி - பாவனை செய்க.

 (கருத்துரை)

முனி முதல்வ! உயிரிகளைப் போற்றி அவிநயம் விலக்கி, தூய ஆன்மாவை பாவனை செய்க.

 (விளக்கவுரை)
உயிர்களிடம் அருளுணர்வு கொள்ள வேண்டும் என்கிறார்.

    உயிர் தொடக்கமற்ற காலமாகத்  தன் அகிம்சை இயல்பை அறியவில்லை. அதனால் இமிசையில் நிகழ்ந்து வந்துள்ளது. அதனால் ஆசாரியர் தன் அகிம்சை உணர்வை வெளிப்படுத்த ஆறுவகை உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்கிறார். ஐந்து வகை ஓரறிவு உயிர் ஒரு வகை பிற உயிர்கள் என ஆறு வகை உயிர்கள் உள்ளன. அவ்வுயிர்களுக்கு ஊறு நேரா வண்ணம் போற்றவேண்டும். அது தன் அகிம்சை உணர்வை /பண்பைத் தெளியும் போது தான் அமைய முடியும்.

    அவிநயம் என்றது முத்தி நெறியில் விநயத்துக்கு உரியது அல்லாதது. அவிநயம் ஆறு வகையாகக் கூறப்படும். பொய்த்தேவன், பொய் குரு, பொய் நூல் மற்றும் இம்மூன்றையும் போற்றுவார் என ஆறு வகை. அநாதி காலமாக உயிர் இவற்றைத் தெளியாது பிறவியில் உழன்றது. அதனால் இவற்றை விலக்க வேண்டும் என்கிறார்.

       முன்னே இவ் விரண்டையும் அறியாமையால் உயிர் தன்னை அறியவில்லை. இப்போது தெளிந்தமையால் உயிரின் இயல்பு விளக்கம் ஆயிற்று. உயிர் எல்லாவற்றையும் அறிபவன் ஆகும். அந்த அறிபவனைப் பாவனை செய்ய வேண்டும் என்றார்.

            ************************************** 

134

தஸ விஹபாணாஹாரோ அணந்தபவஸாயரே பமந்தேண |
போய ஸுஹகாரண்ட்டம் கதோ ய திவிஹேண ஸயல ஜீவாணம் ||

(பதவுரை)

முனிவரே! அணந்த, - அனந்த, பவ ஸாயரே -  பிறவிப் பெருங்கடலில், பமந்தேண - உழன்று,  ஸயல ஜீவாணம் -  எல்லா உயிர்களுடைய, தஸ விஹ பாணாஹாரோ - பத்து வகைப்படும் பிராணண்களை உணவாக, போய ஸுஹ காரண்ட்டம் -  ஐம்புல இன்பத்துக்காக, திவிஹேண - மனம், மொழி, உடலால், கதோ ய - செய்துள்ளாய்.

 (கருத்துரை)

முனிவரே!  வரம்பற்ற பிறவிப் பெருங்கடலில் உழன்று எல்லா வகை உயிர்களுடைய பிராணண்களை ஐம்புல இன்பத்துக்காக முக்கரணத்தால் உணவாக உண்டுள்ளாய்.

(விளக்கவுரை)

பிறவிப் பெருங்கடலில் உழன்று உயிர்களை எல்லாம் கொன்று துன்பம் அடைகிறது உயிர் என்று குறிப்பிடுகிறார்.

      ஆசாரியர் உயிரின் இயல்பினையும், அறத்தின் இயல்பினையும் அறியாத நிலையில் உயிர் பிறவிக்கடலில் துன்புற்று வந்துள்ளது. அதற்குக் காரணமாக ஐம்புல இன்பத்துக்காக அது இமிசையைச் செய்துள்ளது என்று சுட்டி இனியாவது உயிர்களை ஒப்ப ஓம்பி, ஐம்புல இன்ப வேட்கை ஒழித்து, முத்திநெறிக்கு வருக என உரைத்துள்ளார்.

     பிறவி நிலையில் அனாதி காலமாக உயிர் அருகர் அருளிய கொல்லாமை நெறியை அறியவில்லை. அதனால் தாவர, திரச உயிர்களைக் கொன்று வந்துள்ளது. 'உணவாக உண்டாய்' எனும் தொடர் உயிர் செய்த இமிசையைக் குறிக்கிறது.

" பிறந்தவன் பொறிப்புலக்க இவரும் அப்புலம்
 சிறந்த பின் விழைவொடு செற்றம் செய்திடும்
 அறைந்தவை வாயிலா வினைகள் ஈட்டினாள்
 இறந்தவன் பின்னும்அவ் வியற்கை எய்துமே"

" பொறிகளால் புலத்தெழு போகம் துய்ப்புழி
 இறுகிய வினைகளுக்கு இறைவன்  ஆயபின்
 பிறிதொரு பிறப்பின்அவ் வினைப் பயத்தினுக்கு
 இறைவனாம் இதுஉயிர் இயற்கை வண்ணமே" *

என பிறவிக்கு ஏது ஐம்புல இன்பம் என்பார்.
------------------------------------------
சூளாமணி முக்தி இலம்பகம்
 *மேருமந்தர புராணம் -82
                            ************************************** 
135

பாணி வஹேஹி மஹாஜஸ சஉராஸீலக்க ஜோணி மஜ்ஜம்மி |
உப்பஜந்த மரந்தோ பத்தோ ஸி ணிரந்தரம் துக்கம் ||

 (பதவுரை)

மஹாஜஸ - பெருமைக்குரியவரே, பாணிவஹேஹி -   உயிர்களைத் துன்புறுத்தலால், சஉராஸி லக்க ஜோணி -  எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகளின், மஜ்ஜம்மி - நடுவில், உப்பஜந்த - தோன்றி, மரந்தோ - மடிகிறது, அதனால், ணிரந்தரம் - எப்போதும், துக்கம் - துன்பங்களை, பத்தோஸி -  நீ அடைகிறாய்.

(கருத்துரை) 

பெருமைக்குரியவரே !  உலக உயிர்களைத் துன்புறுத்தலால் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகளுக் கிடையே தோன்றி மடிந்து நீ எப்போதும் துன்பங்களை அடைகிறாய்.

 (விளக்கவுரை)

உயிர்களைத் துன்புறுத்தலால்  பிறவித் துன்பம் அமைகிறது என்கிறார்.

     உயிர்கள் பிறக்கும் கரு நிலையை எண்பத்து நான்கு நூறாயிரம்  வகையாக வகுத்துள்ளனர்.  மணி உடலி ஏழு நூறாயிரம், நீருடலி   ஏழு நூறாயிரம், நெருப்புடலி ஏழு நூறாயிரம், காற்றுடலி ஏழு நூறாயிரம், நிகோத உயிர்  பதினான்கு நூறாயிரம், தாவரம் பத்து நூறாயிரம், இரு பொறி உயிர் இரண்டு நூறாயிரம், மூன்று பொறி உயிர் இரண்டு நூறாயிரம், நான்கு  பொறி உயிர் இரண்டு நூறாயிரம், ஐந்து பொறி விலங்கு நான்கு நூறாயிரம், தேவர் நான்கு நூறாயிரம், நாரகர் நான்கு நூறாயிரம், மனிதர் பதினான்கு நூறாயிரம், யோனி வேறுபாடுகள் உடையவர். இப்படி எண்பத்து நான்கு நூறாயிரம் கருநிலை (பிறப்பிடம்) வேறுபாடுகள் உள்ளன.  இந்த உயிர் வரம்பற்ற காலமாக இந்த யோனியில் பிறந்து உழல்கின்றது.  பிற உயிர்களைத் துன்புறுத்தலால் உயிர் இந்த யோனிகளில் பிறக்கின்றது. பிறவியில் உழல்கின்றது.

       உயிரின் அகிம்சை குணம் பற்றிய அறிவு பெறாத நிலையில் இப் பிறப்பும் இறப்பும் அமைகின்றன. வினைகளைக் கட்டி பிறவியில் உழல்கிறது உயிர். பிறப்பு இறப்பு துன்பங்களை அனுபவம் செய்கிறது . அதனால் ஆசாரியர் உயிர்களிடம் அன்பு / அருள் காட்ட வேண்டும் என்கிறார்.

" வதங்கள்பன்  னிரண்டு மேவி
   வையகத்து உயிர்கட்கு எல்லாம்
 இதம்செய்து வருந்தில் வெந்தீ
   இடுவெண்ணெய் போன்று இறங்கிச்
 சிதைந்து இன்னா தனசெய் தார்க்கு
   இனியவே செய்து சிந்தைக்
 கதம்கடிந்து ஒழுகல் நல்லோர்
   கருணையைக் கொடுத்த லாமே"

  என உயிர்களிடம் கருணை காட்டலின்  இன்றியமையாமையைக் காட்டுவார்.
----------------------------------------
மேருமந்தர புராணம் - 346
---------------------------------------
 ************************************** 
136

ஜீவாணமயயதாணம் தேஹி முணீ பாணீபூய ஸத்தாணம் |
கல்லாண ஸுஹணிமித்தம் பரம்பரா திவிஹஸுத்தீஏ ||

(பதவுரை)

 முணீ- முனிவரே, ஜீவாணம் -  உயிர்களுக்கு, பாணீபூய ஸத்தாணம் -  பிராணி, பூதம், சத்துவங்களுக்கு, பரம்பரா - வழிமுறையாக, கல்லாண ஸுஹ - மங்கல சுக, ணிமித்தம் - நிமித்தமாக, திவிஹஸுத்தீஏ - மன மொழி மெய் தூய்மையுடன், அயயதாணம் - அடைக்கலம், தேஹி - தருக.

 (கருத்துரை)

முனிவரே! உயிர், பிராணி, பூதம், சத்துவம் இவை பரம்பரையில் ஆன்ம மங்கலம் அடையும் வகையில் அடைக்கலம் தருக.

 (விளக்கவுரை)

கருணை போற்றப்பட வேண்டும் என்கிறார். உயிர் அகிம்சை வடிவமாகும்.  பிறவி நிலையில் அதனை உணராத நிலையில்  இமிசை வடிவமாக நிகழ்ந்து வினைகளை ஈட்டிப்  பிறவியில் உழல்கிறது. ஆசாரியர் அதனால் அகிம்சை உணர்வு வெளிப்படும் அடைக்கலத்தை எல்லா உயிர்களுக்கும் அளிக்க அறிவுறுத்துகிறார்.

     இங்கே ஆசாரியர் உயிர்களை குறிக்க நான்கு சொற்களைக் கொடுத்துள்ளார். அச் சொற்கள் பொருளில் சிறுசிறு வேறுபாடு உடையன.  'ஜீவ' என்ற சொல் ஐம் பொறியுடைய உயிர்களைக் குறிக்கும்.  'பிராணி' என்ற சொல்  2, 3, 4 பொறிகளுடைய உயிர்களைக் குறிக்கும். 'பூத' என்ற சொல் நிலையுயி (வனஸ்பதி) ரைக் குறிக்கும்.  'ஸத்வ' என்ற சொல் மண்ணுலி, நீருடலி,  நெருப்புடலி,  காற்றுடலி உயிர்களைக் குறிக்கும்.  84 நூறாயிரம் யோனிகளில் பிறக்கும் உயிர்களை இந்த நான்கு வகைப்பாட்டில் அடக்க முடியும். இவ்வெல்லா உயிர்களை ஒத்த உணர்வோடு காணவேண்டும். அவற்றைக் காப்பாற்ற வேண்டும். இதனையே 'அடைக்கலம்' என்றார்.  இதனால் சுபவினை கட்டுவதால் 'அப்யுதய' (ஆன்மீக) சுகம் அமைவதால் பரம்பரையில் தீர்த்தங்கரர் பதவியை  முத்தியைப் பெறலாம்.
          ************************************** 

137

அஸியஸய கிரியவாஈ அக்கிரியாணம் ச ஹோஇ கலஸீதீ |
ஸத்தட்டீ அண்ணாணீ வேணஈயா ஹோந்தி பத்தீஸா ||

(பதவுரை)

கிரியவாஈ - கிரியாவாதி, அஸிய ஸய - நூற்றெண்பது வகைப்படுவர், ச - மற்றும், அக்கிரியாணம் -  அகிரியாவாதி, சுலஸீதீ - எண்பத்து நால்வர், ஹோஇ - உள்ளனர், ஸத்தட்டீ - அறுபத்தேழு, அண்ணாணீ -  அஞ்ஞானவாதி - ஹோந்தி - உள்ளனர், பத்தீஸா - முப்பத்திரண்டு, வேணஈயா - விநயவாதி, ஹோந்தி - உள்ளனர்.

 (கருத்துரை)

நூற்றெண்பது  கிரியாவாதி,  எண்பத்து நான்கு அகிரியாவாதி, அறுபத்தேழு அஞ்ஞான வாதி, முப்பத்திரண்டு விநயவாதி உள்ளனர்.

 (விளக்கவுரை)

பொய்ம்மை (மித்யத்வம்) பிறவிக்கு ஏதுவாகும். அப் பொய்ம்மை உடையார் வகையைச் சொல்லுகிறார்.

     பொருள் வரம்பற்ற பண்புகளை உடையது என முழுதுணர் அறிவர் அருளியுள்ளார். அவை  பிரமாணத்தாலும், நயத்தாலும், உறுதியாகின்றன. ஆனால் இவற்றை அறியாதார் தாம் கண்ட ஒன்றை  ஏற்று 'பொருள் இயல்பு  இப்படித்தான் உள்ளது' என்று எதிராடுகின்றனர். முழுமையை அறியாமல் பகுதியை முழுமையாக அறியும் அவரைப்  பொய் நம்பிக்கையர் என்பர். அவர் 363 வகைப்படுவர் என உரைப்பர். அவரையே ஆசாரியர் இங்குக் குறிப்பிட்டுள்ளார்.

 கிரியா வாதி -- ஏதேனும் செயலால் (கிரியையால்) முத்தி அடையலாம் என எதிராடுபவர்.  இவர் 180 வகைப்படுவர். அஸ்தி(1) தான் பிற நித்தியம், அநித்தியம் (4) உயிர், உயிரல்லது, புண்ணியம், பாபம், ஊற்று, கட்டு,  செறிப்பு, உதிர்ப்பு, முத்தி(9),   காலம், ஈசுவரர், ஆன்மா, நியதி, சுவபாவம்(5)  இவற்றைப் பெருக்க (1×4×9×5) 180 வகை கிரியாவாதி ஆவர்.

 அகிரியாவாதி -- பொருளில் செயலேதும் இல்லை அல்லது பொருளே இல்லை என எதிராடுபவர். இவர் 84 வகைப்படுவர். நாஸ்தி(1),தான். பிற (2).  உயிர் உயிர், உயிரல்லது, ஊற்று, செறிப்பு  உதிர்ப்பு,  கட்டு, முத்தி (7) காலம்.  ஈசுவரன், ஆன்மா, நியதி, சுவபாவம் (5) இவற்றை பெருக்க(1×2×7×5) 70 ஆகும். இதனோடு நாஸ்தி(1)  உயிர், உயிரல்லது, ஊற்று, செறிப்பு ,உதிர்ப்பு கட்டு, முத்தி (7), நியதி, காலம்( 2) இவற்றைப் பெருக்கி(1×7×2) வந்த  பதினான்கைக் கூட்ட 84 வகை அகிரியாவாதி ஆவர்.

 அஞ்ஞான வாதி -- கோணல் அறிவுக்கு அஞ்ஞானம் என்று பெயர்.  இந்த அஞ்ஞானம் உடையவர் அஞ்ஞான வாதி ஆவார். இவர் 67 வகைப்படுவர். அஞ்ஞான வாதி பொருள் பண்புகளை ஒவ்வொன்றாக யார் அறிவார்? என வினாத் தொகுத்து பொருளை அறிய முடியாது என்றே கருதுவர். ஒன்பது பதார்த்தம், ஏழு பங்கி இவற்றைப் பெருக்க (9×7) 63. இதனோடு, தூய பொருள்(1) உண்டு, இல்லை, உண்டும், இல்லையும் , உரைக்க ஒண்ணாமை (4), இவற்றைப் பெருக்கி(1×4) கூட்ட (63+4)  67 வகை ஆவர்.

விநய வாதி -- குணம், குணமின்மை பற்றிய தெளிவு இல்லாது எல்லாவற்றையும் ஒன்றென போற்றுதல் செய்வர். இவர் 32 வகையினர். தேவன், அரசன், ஞானி, யதி, முதியவர், பாலகர், தாய், தந்தை இவ்வெண்மரையும் மனம், மொழி, மெய், தானம்(4) இவற்றால் வினயம் காட்டுவார் (8×4) 32 வகை ஆவர்.

      இங்கே காட்டப்பட்டுள்ளவர் பொய் நம்பிக்கையர் ஆவர். ஏனெனில் தாம் கண்டவாறு ஒழுகுவதால் முத்தி அடைய முடியும் என வாதிடுவர். இவர் ஒன்றையே பற்றிக் கொண்டு எதிராடுவதால் பொய் நம்பிக்கையர் என சுட்டப்படுகின்றனர். இவர் 363 வகையினர் என சுருக்கிக் காட்டுவார். இவர் பல வகையினர் ஆவர். பலர் ஈசுவரி வாதி, பலர் கால வாதி, பலர் சுபாவ வாதி, பலர் விநய வாதி, பலர் ஆன்ம வாதி ஆவர். இவர் பற்றிய செய்திகளை  'கோமட சாரம்' முதலான நூல்களில் காணலாம்.
-----------------------------------------
கோமடசாரம் கரும காண்டம் 883 - 888 காதைகள் இச் செய்திகளைத் தருகிறது.
-----------------------------------------

 ************************************** 

138

ண முயஇ பயடி அபவ்வோ சுட்டு வி ஆயண்ணிஊண ஜிணதம்மம் |
குடதுத்தம் பி பிபந்தா  ண பண்ணயா ணிவ்விஸா ஹோந்தி ||

(பதவுரை)

குட துத்தம் பி - வெல்லம் கலந்த பாலை, பிபந்தா - குடித்தாலும், பண்ணயா - பாம்புகள், ணிவ்விஸா - நஞ்சு இல்லாமல், ண ஹோந்தி - போவன அல்ல, அது போல, அபவ்வோ - அபவ்வியன், ஜிண தம்மம் - ஜிந அறத்தை, சுட்டு வி - மிக நன்கு, ஆயண்ணி ஊண - கேட்டாலும், பயடி - தன் இயல்பை, ணமுயஇ - விடுதல் இலன்.

(கருத்துரை)

பாம்பு இனிப்பு சேர்ந்த பாலைக் குடித்தாலும் தன் நச்சுத் தன்மையை விடுதல் இல்லை. இதே போல, அபவ்வியன் ஜிநர் அறத்தை நன்கு கேட்டாலும் தன் அபவ்விய தன்மையை விடான்.

(விளக்கவுரை)
அபவ்வியன் தன் பொய் நம்பிக்கையை விடுதல் செய்யான் என்று கூறுகிறார்.

         காரணம் கிடைத்தாலும் விலகாது இருப்பதனை 'இயற்கை' (ப்ரக்ருதி) அல்லது 'இயல்பு' (சுவபாவம்) என்பர். அபவ்வியன் பொய்ம்மையைப் பொசுக்கும் அனேகாந்த தத்துவ வடிவ முரண்பாடு இல்லா ஜிந அறத்தை மிகு நன்கு ஊன்றிக் கேட்டாலும் அவனுடைய பொய் நம்பிக்கை அழிவது இல்லை. ஏனெனில் அது பொருள் இயல்பாகும். ஒருவரால் ஆக்கப்பட்டது அன்று. அபவ்வியர் யாரென்று முழுதுணர் அறிவரே அறிவார். அதனால் அபவ்வியனுடைய தன்மை போல தன் தன்மையை வைக்காமல் பொய் நம்பிக்கையை விட வேண்டும் என ஆசாரியர் அறிவுறுத்துகிறார்.
                ***



  ************************************** 
139

மிச்சத்த சண்ணதிட்டீ துத்தீய தும்மஏஹிம் தோஸேஹிம் |
தம்மம் ஜிண பண்ணத்தம் அபவ்வ ஜீவோ ண ரோசேதி ||


(பதவுரை)

தும்ம ஏஹிம் - தீய மதத்தால்,  தோஸேஹிம் -  குற்றப் பட்ட, துத்தீய - கெடுமதியால், சண்ண - மறைக்கப்பட்ட, மிச்சத்த திட்டீ -  பொய் நோக்குடை, அபவ்வ ஜீவோ - அபவ்விய உயிருக்கு, ஜிண பண்ணத்தம் - ஜிநர் மொழிந்த, தம்மம் - அறம், ண ரோசேதி - சுவைப்பது இல்லை.

(கருத்துரை)

ஏகாந்த மதத்தால்  குற்றப்பட்ட கெடுமதியால் மூடப்பட்ட பொய் நோக்குடைய   அபவ்விய உயிருக்கு ஜிநர் திருமொழியாம் தருமம் சுவைக்காது.

(விளக்கவுரை) 

அபவ்வியருக்கு  ஜிநர் அறத்தில் நம்பிக்கை இல்லாமைக்குக் காரணம் காட்டுகிறார்.

        பொய் நம்பிக்கையர் உரையால் மதி கெட்டவர் - பொய் நம்பிக்கையர் ஆவார். அவருக்கு அருகர் அருளிய அறம் சுவைக்காது. பொய் நம்பிக்கை உள்ள இடத்தில் மெய் நம்பிக்கை சுவைபடாது. அருக அறத்தில் சுவை/ நம்பிக்கை தோன்றவில்லை என்றால் அது அபவ்வியனுடைய உணர்வாகும். முழுதுணர் அறிவரே அபவ்வியனை அறிவார். ஆனால், அபவ்விய உயிருக்கு அடையாளங்கள் உள்ளன. அவற்றை ஆய்வால் அறியலாம் என்பர்.
              ******

 ************************************** 
142

பாஸண்டீ திண்ணி ஸயா திஸட்டி பேயா உமக்க முத்தூண |
ரும்பஹி மணு ஜிநமக்கே அஸப்பலாவேண கிம் பஹுணா ||

(பதவுரை) 

முனிவரே! பாஸண்டி - பாகண்டியர், உமக்க - பொய் நெறி, திண்ணி ஸயாதி ஸட்டி பேயா - 373 வகையாகும், முத்தூண - அவற்றை விலக்கி, ஜிந மக்கே - ஜிந நெறியில், மணு - மனத்தை, ரும்பஹி - நிறுத்துவீர், பஹுணா - மிகவும், அஸப்பலாவேண - விரிவாகப் பேசுவதால், கிம் - என்ன பயன்?

( கருத்துரை)

பாகண்டியர் (போலித் துறவியர்) போற்றும் பொய்ந் நெறிகள் 363 வகையாக கூறப்பட்டுள்ளன. அவற்றைச் சாராது அருக (அகிம்சை) நெறியில் மனத்தை நிறுத்துக.  மிகுதியாகப் பேசுவதால் என்ன பயன் ?

(விளக்கவுரை)

பொய் நெறியைத் தெளிந்து மெய் நெறி போற்ற கூறுகிறார்.

      பொய்ம்மை பற்றி விரிவாகப் பேசுவதால் என்ன பயன்? சுருக்கமாகச் சொன்னால் "ஜிந நெறியில் செல்க ; பிற நெறிகளைத் தவிர்க்க" என்பதே போதுமானது.

     உலகில் நெறிகள் பலவாக்க் காணப்படுகின்றன. அறநெறிகள் என்ற பெயராலேயே அவை அழைக்கப்படுகின்றன.  அறநெறி, மறநெறி பற்றிய தெளிவு வேண்டும். ஒரு துணிபாக (ஏகாந்தமாக) உரைப்பன எல்லாம் மற நெறிகள் என்பது இங்குச் சுட்டப்படுகிறது. அவற்றையே  இங்கு 363 வகையாக தொகுத்துக் காட்டியுள்ளார்.  இந்த நெறி வேறுபாடுகள் கிளைத்துக் கொண்டே போகின்றன.  அந்தக் கிளைத்தல் காலக் குறை போலும். அவற்றைச் சாராமல் அகிம்சை  நெறியில் செல்ல வேண்டும் என்பதாம்.

" தோன்றிமாய்ந்து உலக மூன்றில்
     துயரெய்தும் உயிர்கள் தம்மை
 ஈன்றதாய் போல ஓம்பி
     இன்பத்துள் இருத்தி நாதன்
மூன்றுல கிற்கும் ஆக்கி
     முடிவிலாத் தன்மை நல்கும்
 ஆன்றநல் லறத்தைப் போலும்
     அரியதுஒன்று இல்லை என்றான்"*
-----------------------------------------
*மேருமந்தர புராணம் - 117.

-----------------------------------------

 ************************************** 
143

ஜீவ விமுக்கோ ஸவஓ தம்ஸணமுக்கோ ய ஹோஇ சலஸவஓ |
ஸவஓ லோயஅபுஜ்ஜோ லோஉத்தரயம்மி சலஸபவோ ||

(பதவுரை) 

ஜீவ - உயிர், விமுக்கோ - இல்லாதது, ஸவஓ - பிணம் ஆகும், ய - மற்றும், தம்ஸண முக்கோ -  நற்காட்சி இல்லாதவர், சலஸவுஓ - நடைப்பிணம், ஹோ இ - ஆகிறார், லோய - உலகில், ஸவஓ - பிணம், அபுஜ்ஜோ -  பூசனைக்கு உரியது அன்றாம், அது போல,  சலஸபவோ - நடைப்பிணம், லோஉத்தரயம்மி - உலக உத்தமரிடையில், அபுஜ்ஜோ - வந்தனைக்குரியவர் அல்லர்.

( கருத்துரை) 

உயிரற்றது பிணம். அது உலகில் பூசிக்கப் படுவது இல்லை. அதே போல நற்காட்சி இல்லாதார் நடைப்பிணம் ஆவார். நற்காட்சியுடையவரால்  அவர் தொழப்படுவது இல்லை.

( விளக்கவுரை)

நற்காட்சி இல்லார் நடைப்பிணம் என்கிறார்.

      உயிரற்ற உடலைப் பிணம் என்பர். அவ்வுடலில் இயக்கம் இல்லை. உலகத்தார் அதனைப் போற்றுவது இல்லை. ஒன்று அதனை எரித்து விடுவர். அல்லது புதைத்து விடுவர்.  ஆனால் நற்காட்சி இல்லார் நடைப்பிணம் ஆவார். இந்தப் ' பிணம்' இயக்கம் உடையது. இயக்கம் உடைமையால் போற்றுதலுக்கோ, வாழ்த்துதலுக்கோ உரியது அன்று. இம்மையிலும் மறுமையிலும்! இம்மையில் நற்காட்சியுடைய முனிவருக்கு இடையில், அல்லது நற்காட்சியுடையவரால்,  அவர்  போற்றப்படுதல் இல்லை. மறுமையில்  இழிந்த பிறவியில் சென்று இழிவடைகிறது, அது.

  நற்காட்சி இல்லாத போலித் துறவி போற்றுதலுக்கு உரியவர் அல்லர். நற்காட்சி இல்லாதவர் பிணத்துக்கு ஒப்பாவார் என்பது கருத்து..
                ***

144

ஜஹதாரயாண சந்தோ மயராஓ மயஉலாண ஸவ்வாணம் |
அஹிஓ தஹ ஸம்மத்தோ ரிஸிஸாவய துவிஹ தம்மாணம் ||

(பதவுரை)

ஜஹ - எப்படி, தாரயாண -  தாரகைகளில், சந்தோ -  நிலாவும், மயஉலாண - விலங்குகளில், மயராஓ - விலங்கரசன்  சிங்கமும், ஸவ்வாணம் - முதன்மையோ, தஹ - அப்படி, ரிஸி ஸாவய - துறவி சாவகர் எனும், துவிஹ - இரண்டு, தம்மாணம் - அறங்களில், ஸம்மத்தோ -  நற்காட்சி, அஹிஓ - முதன்மையாகும்.

( கருத்துரை) 

தாரகை கூட்டத்தில் நிலாவும், விலங்குகள் கூட்டத்தில் சிங்கமும் முதன்மை உடையன போல, இல்லற, துறவு ஒழுக்கத்தில் நற்காட்சி முதன்மை உடையதாம்.

(விளக்கவுரை) 

நற்காட்சியின்  பெருமையைச் சுட்டுகிறார்.

         நற்காட்சி வேர் எனில் அறிவும் ஒழுக்கமும் கிளைகள் ஆகும். வேர்  இல்லை என்றால் மரம் இருக்காது. இதேபோல நற்காட்சி இல்லாமல் ஒழுக்கம் நிலைக்காது. துறவு நிலையானாலும் இல்வாழ்வு நிலையானாலும் இரண்டிலும் நற்காட்சி இல்லாமல் அற ஒழுக்கம் அமைய முடியாது. உண்மையில் நற்காட்சியுடையாரே சாவகராகவும் துறவியாகவும் ஆகின்றனர். அதனால் நற்காட்சி முதன்மையானது என்றார்.

       நற்காட்சி இல்லாத நாள்ஒழுக்கங்கள் பிறவியைக் கட்டும். அதனால் எத்தனை நாள் ஒழுக்கங்கள் - அற ஒழுக்கங்கள் - உண்டோ அத்தனையிலும் நற்காட்சி முதன்மையானது ஆகும்.

" காட்சியோடு ஒப்பதுயாம் காணோம் வையத்து
மாட்சி யுடையது உயிர்க்கு"

என்பார், அருங்கலச் செப்புடையார்.
----------------------------------------------------
அருங்கலச் செப்பு - 46
----------------------------------------------------

 ************************************** 
145

ஜஹ பணிராஓ ஸோஹஇ பணமணி மாணிக்க கிரண விப்புரிஓ |
தஹ விமல தம்ஸண தரோ ஜிணபத்தீ பவயணே ஜீவோ ||

(பதவுரை)

ஜஹ - எப்படி, பண மணி -  படங்களில் உள்ள மணிகளுக்கு இடையே உள்ள, மாணிக்க கிரண -  மாணிக்க ஒளிக் கீற்றுகளால், விப்புரிஓ - ஒளி பரவிய அழகுடன், பணிராஓ -  பாம்பரசன், ஸோஹஇ - விளங்குகிறான், தஹ - அவ்வாறு, ஜிண பத்தீ -  ஜிந பக்தியுடன், வவிமல தம்ஸண தரோ - தூய நற்காட்சியுடைய, ஜீவோ - உயிர், பவயணே -  பிரவசனத்தால் ஒளி பெற்று திகழ்கிறது.

( கருத்துரை)

பாம்பரசன் தன் படமணிகளுக்கு இடையே மாணிக்க மணியால் அழகு பெற்று திகழ்வது போல தூய நற்காட்சியுடைய உயிர் அருக பத்திக்கு இடையே பிரவசனத்தால் அழகு பெற்று விளங்குகிறது.

( விளக்கவுரை)

நற்காட்சியின் சிறப்பை மேலும் விளக்குகிறார்.

       ஆதிசேடன் தன் பட மணியாலே அழகு பெற்று விளங்குகிறான். அதுபோல நற்காட்சி உடைமையாலே அவ்வுயிர்  ஜிந பிரவசனத்தில் முதன்மை பெற்று விளங்குகிறது. நற்காட்சி பெறவேண்டும் என்பது கருத்து.

             நீரு பூத்த நெருப்பு உள்ள ஒளிர்தல் போல நற்காட்சியினால் இழி தொழிலனும் இறைவனாம் என்பது திருமொழி ஆகும். அதாவது அவனும் போற்றுதலுக்கு உரியன்,  நற்காட்சியின் சிறப்பால்,

' பறையன் மகனெனினும்  காட்சி யுடையான்
 இறைவன் எனஉணரல் பாற்று'

 என அருங்கலச்செப்பு கூறும்.
            *****

 ************************************** 
146

ஜஹ தாராயண ஸஹியம் ஸஸஹரபிம்பம் கமண்டலே விமலே |
பாவிய தவவயவிமலம் ஜிணலிங்கம் தம்ஸண விஸுத்தம் ||

(பதவுரை)

விமலே - தூய, கதண்டலே -ஆகாயத்தில், ஜஹ - எப்படி, தாராயண ஸஹியம் -  தாரகைகளோடு, ஸஸஹரபிம்பம் -  நிலவு அழகோடு உள்ளதோ, அதேபோல, பாவிய தவ வய விமலம் - தவம், விரதம் கூடிய தூய்மையாக உள்ள, ஜிணலிங்கம் - ஜிநர் தோற்றம், தம்ஸண விஸுத்தம் - நற்காட்சி தூய்மையால் அழகு பெற்று விளங்குகிறது.

( கருத்துரை)

ஆகாயத்தில் நிலா தாரகைகளோடு அழகு பெற்று விளங்குதல் போல ஜிநர் நெறியில் ஜிநர் தோற்றம் தூய தவ விரதங்களோடு தூய நற்காட்சியால் அழகு பெற்று விளங்குகிறது.

( விளக்கவுரை)

நற்காட்சியின் சிறப்பை மேலும் விளக்குகிறார்.

     "ஜிநலிங்கம்" என்றது பற்றற்ற முனித் தோற்றம் ஆகும்.  அத் தோற்றம் தாரகையிடையே நிலவு போல தவம் விரதம் முதலானவற்றுக்கு இடையே விளங்குகிறது என்றாலும், அதன் அழகு தூய நற்காட்சியால் குறைகள் இல்லாத நற் - காட்சியால் விளக்கம்  பெறுகிறது.  வெறும் உடல் தோற்றமும் அகவுணர்வு இல்லாத தவ விரதங்களும் பயனற்றன என்பது கருத்து.

            *******

 ************************************** 
147

இய ணாஉம் குணதோஸம் தம்ஸணரயணம் தரேஹபாவேண |
ஸாரம் குணரயணாணம் ஸோவாணம் படம மோக்கஸ்ஸ ||

(பதவுரை)

இய - முன்னே கூறியபடி, குண தோஸம் - நற்காட்சியின் குணச் சிறப்பையும்,  பொய்க் காட்சியின் குற்றத்தையும், ணாஉம் - அறிந்து, பாவேண - அகவுணர்வோடு, தம்ஸணரயணம் -  நற்காட்சி அருமணியை, தரேஹ - அணிக, ஏனெனில், குணரயணாணம் -  குண மணிகளின், ஸாரம் - பிழிவு/ முதன்மை ஆகும். அது, மோக்கஸ்ஸ - முக்தி நெறியில், படம் - முதல், ஸோவாணம் - படி ஆகும்.

( கருத்துரை) 

நல் நம்பிக்கையின் குணத்தையும், பொய் நம்பிக்கையின் குற்றத்தையும் தெளிந்து பாவனையோடு, நற் காட்சியை ஏற்க.  அது எல்லா குணங்களுக்கும் முதன்மையானது;  முத்தி மாடியின் முதல் படி ஆகும்.

( விளக்கவுரை)

நற்காட்சி ஏற்க/ அடைய அறிவுறுத்துகிறார்.

       முத்திநெறி நற் காட்சியிலேயே தொடங்குகிறது. நற்காட்சி இல்லாமல் முத்தி நெறியில் முன்னேற முடியாது. அதனால் அதனை விலை மதிப்பு அற்ற அரு மணிக்கு ஒப்பிடுவர். அம் மணியை பெறுவது அரிதாகும். அதனால் அதனை முயன்று பெற வேண்டும்.

       இல்லறத்தாருடைய வழிபாடு, தானம் முதலானவையும் துறவியருடைய விரதம், சீலம் முதலானவையும் முத்தி நெறியில் காணப்படும் நாள் ஒழுக்கங்கள் ஆகும். அவ் வொழுக்கங்கள் நற்காட்சியாலேயே பயனைத் தரும். அதனால் அவற்றுக்கு முதன்மையாக அல்லது அவற்றின் பிழிவாக அமைவது நல் நம்பிக்கையே. பொய் நம்பிக்கையின் குற்றங்கள் தெளிந்து அதனை விடுத்து நல் நம்பிக்கையை ஏற்கவேண்டும் என்பது கருத்து.

" இறைவனும் முனியும் நூலும்
    யாது மோர் குற்றமில்லா
 நெறியினைத் தெளிதல் காட்சி
    யாமது நிறுத்தும் வீட்டின்
 இறுகுமென் மயமும் மூடம்
       ஆறும் தீவினை யமின்றி
நெறிவிளக் குறுத்தல் ஆதி
      எட்டங்கம் நிறைந்தது என்றான்"
--------------------------------------------------
மேருமந்தர புராணம் - 355
--------------------------------------------------

 ************************************** 
148

கத்தா போஇஅமுத்தா ஸரீரமித்தோஅணாஇ ணிஹ ணோ ய |
தம்ஸண ணாணுவ ஓகோ ணித்திட்டோ ஜிணவரிந்தேஹிம் ||

 (பதவுரை)

(உயிர்) கத்தா - கருத்தனும், போஇ - துய்ப்பவனும், அமுத்தோ - அருவமானவனும், ஸரீரமித்தோ - உடல் அளவினனும், ய- மேலும், அணாஇணிஹணோ - முதலும் முடிவும் இல்லாதவனும், தம்ஸண - தரிசன, ணாண - ஞான, உவஓகோ - உபயோகமுடையவனும் ஆகும் என, ஜிணவரிந்தேஹிம் - ஜிநரால், ணித்திட்டோ - கூறப்பட்டுள்ளது.

(கருத்துரை)

உயிர்  கருத்தனாகவும், துய்ப்பவனாகவும், அருவம் உடையவனாகவும், ஏற்ற உடல் அளவினனாகவும், தோற்றமும் அழிவும் இல்லாதவனாகவும், தரிசன  ஞான உபயோகம் உடையவனாகவும் ஜிநரால் அருளப்பட்டுள்ளது.

( விளக்கவுரை) 

உயிரின் இலக்கணம் பற்றி கூறுகிறார்.

     நற்காட்சியை அடையவேண்டும் என்றார். அதனை யார் அடைவர்?  உயிரின் இயல்பை/ இலக்கணத்தை அறிந்து, நினைந்து, நம்பி தான் அந்த உயிர்தான் என அனுபவம் செய்யும் உயிரே நற்காட்சியை அடைய முடியும். அதனால் ஆசாரியர் இங்கு உயிரைப் பற்றி விளக்கியுள்ளார்.

        உயிர் குறித்து ஆறு இலக்கணங்களைக் கூறியுள்ளார்.

1) கருத்தன் - உயிர் உண்மை நய நோக்கில் தன் தூய உணர்வுகளுக்கு கருத்தா ஆகும். வழக்கு நோக்கில் தூய்மை இல்லாத திரிபு உணர்வுகளுக்குக் கருத்தா ஆகும்.

2) துய்ப்பவன்-  உயிர் உண்மை நய நோக்கில் தன் தரிசன ஞான மய அறிவுணர்வை (சேதனா) துய்ப்பது ஆகும். வழக்கு நய நோக்கில் இன்ப, துன்ப உணர்வுகளைத் துய்ப்பது ஆகும்.

 3) அருவம் - உயிர் உண்மை நய நோக்கில் நிறம் முதலான பண்புகள் இல்லாத அருவம் ஆகும். வழக்கு நய நோக்கில் புற்கலத் தொடர்பால் உருவம் உடையதாகும்.

4) உடலளவு - உயிர் உண்மை நய நோக்கில்  அயங்கியம் பிரதேசம் உடையது. ஆனால், சுருங்கி விரியும் தன்மையால் ஏற்ற உடல் அளவில் காணப்படும் என்பது வழக்கு  நயமாகும்.

5) முதலும் முடிவும் இல்லாமை - உயிர் உண்மைய நய நோக்கில் - திரவிய நய நோக்கில் - முதலும் முடிவும் இல்லாதது.  ஆனால் பையை (பரியாய) நோக்கில் தோற்றமும் அழிவும் உடையது.

6) தரிசன அறிவு உபயோகம் - உயிர் பார்த்தலும் அறிதலும் உடையது. ஆனால் வழக்கு  நய நோக்கில் நான்கு வகை தரிசன உபயோகம், எட்டு வகை ஞான உபயோகம் உடையது என்பர்.

        சமணம் உயிர் இயல்பை இரண்டு நிலையில் வைத்துப் பார்க்கிறது.  ஒன்று அதன் தூய்மை நிலை; மற்றொன்று அதன் மலின (பிறவி) நிலை. இவ்விரண்டையும் விளக்க நயங்களை வகுத்துள்ளது. அதனால் எதனையும் ஒரு துணிபாக முடிவு செய்யாமல் சார்புநிலை நோக்கில் முடிவு செய்கிறது. இதனை அந்த அனேகாந்த வாதம் என்பர். இதனால் பொருளின் இயல்பைத் தெளிவது எளிமையாக அமைந்து போகிறது.  இங்கே உயிர் பற்றி ஆசாரியர் கூறியுள்ள இலக்கணங்களை இந்த நோக்கில் பார்க்க வேண்டும்.

      பகவான் பகர்ந்துள்ள இந்தப் பண்புகளைத் தெளிந்த உயிரிடம் நம்பிக்கை, சுவை, ஈடுபாடு கொள்ள வேண்டும். அதனால் உயிர், உயிரல்லது, ஊற்று, கட்டு, உதிர்ப்பு, வீடு இவை எல்லாம் நூல்கள் வழி விளக்கம் பெறும். பிறகு நற்காட்சியை அடையமுடியும்.

                

 ************************************** 
149

தம்ஸண ணாணவரணம் மோஹணியம் அந்தராஇயம் கம்மம் |
ணிட்டவஇ பவிய ஜீவோ ஸம்மம் ஜிணபாவணாஜுத்தோ ||

(பதவுரை)

ஜிணபாவணா ஜுத்தோ - அருகர் ஆணையில் நின்ற, பவிய ஜீவோ -  பவ்விய உயிர், ஸம்மம் - நன்றாக, தம்ஸண ணாணாவரணம் - காட்சி மறைப்பு, அறிவு மறைப்பு, மோஹணியம் - மோகனீயம், அந்தரா இம் -  அந்தராயம் ஆகிய, கம்மம் -  காதி வினைகளை, ணிட்டவஇ - அழிக்கிறது.

( விளக்கவுரை)

அருக நெறியில் நன்கு நின்ற பவ்விய உயிர் காதி வினைகளைக் கெடுக்கிறது.

( விளக்கவுரை) 

உயிர் நான்கு கீதி வினைகளை அழிக்க ஏது காட்டுகிறார் .

 உயிர் பார்த்தல் - அறிதலில் இருப்பது என்றார். ஆனால் தொடக்க மற்ற காலமாகப் புற்கல வினையோடு தொடர்பு பட்டு வருவதால் தன் பார்த்தல் அறிதலில் முழுமை பெறவில்லை.  அற்ப பார்த்தல் அறிதல் அனுபவம் செய்கிறது. அங்கும் அறியாமையால்  வேண்டுவன - வேண்டாதன எனும் புத்தியினால் விருப்பு,வெறுப்பு, மயக்கம் முதலான உணர்வு கொண்டு பார்த்தல் அறிதலில் மலினப்பட்டு இன்ப துன்ப உணர்வில் அனுபவம் செய்கிறது.  இந்த உயிர் தன்னியல்பான நற்காட்சியைப் பெறும்போதுதான் அறிவு, காட்சி, சுக வீரியங்களை மறைக்கும் /திரிக்கும் வினைகளைக் கெடுக்கிறது.

      "ஜிண பாவண" என்ற தொடரால் ஜிநர் ஆணையை ஏற்றுப்  பொருள்களின் உண்மை இயல்பை உறுதி செய்து நம்பிக்கை பெரும் உயிரே வினையைக் கெடுக்க வல்லது எனக் காட்டியுள்ளார். அதாவது ஜிநர் அருளிய பாவனை அல்லது சிந்தனை என்று அத்  தொடருக்குப் பொருள் ஆகும். அதனை ஏற்று, நம்பி தன்னியல்பான நற்காட்சியைப் பெரும் பவ்விய உயிர் காதி வினைகளைக்  கெடுக்கிறது என்பதாம்.

" காட்சியும் அறிவும் இன்ன
      கதிர்ப்பஐம் பொறியும் வென்று
 பூட்சிசால் ஒழுக்கம் தாங்கிப்
       புரிந்தெழு  தியான வாளால்
 வேட்கைவேர் அறுத்துக் காதி
       வினைகளை வென்ற போழ்தில்
 ஆட்சிமூ வுலகம் ஆகும்
       அரச! மற்று அறிமோ என்றான்"

 என 'காட்சியும் அறிவும் கதிர்ப்ப' என்று குறிப்பிடுதல் காண்க.
------------------------------------------
மேருமந்தர புராணம் - 725

------------------------------------------ 

 ************************************** 

150

பல ஸோக்கணாணதம்ஸண சத்தாரி வி பாயடாகுணாஹோந்தி |
ணட்டே காஇ சஉக்கே லோயாலோயம் பயாஸேதி ||

(பதவுரை) 

காஇ சஉக்கே - காதி வினைகள் நான்கும், ணட்டே - அழிந்தவுடன், பல ஸோக்க ணாண தம்ஸண -  வீரியம், சுகம், அறிவு, காட்சி எனும் நான்கு வரம்பற்ற குணங்களும், பாயடா ஹோந்தி -  வெளிப்பட்டு நிற்கின்றன, அப்போது, லோயாலோயம் - உலகமும் உலகமல்லதும், பயாஸேதி -  ஒளி பெறுகிறது அதாவது, முழுதும் அறியப்படுகிறது.

(கருத்துரை) 

காதி வினைகள் நான்கும் கெட்டவுடன் வரம்பற்ற ஞான - தரிசன - சுக - வீரிய குணங்கள் நான்கும் வெளிப்படுகின்றன. உலகமும் உலக மல்லதும் ஒளி பெறுகிறது / அறியப்படுகிறது.

(விளக்கவுரை)

காதி வினைகள் அழிந்தவுடன் உயிரில் அனந்த நான்மை வெளிப்படுகிறது என்கிறார்.

          அறிவின் ஆற்றல் வரம்பற்றது. அறிதலுக்கும் பார்த்தலுக்கும் எல்லை இல்லை. அறிவை மறைக்கும் அறிவு மறைப்பு வினையும்,  காட்சியை மறைக்கும் காட்சி மறைப்பு வினையும், பேரின்பத்தைத் திரிக்கும் மோகனீய வினையும், ஆன்ம ஆற்றலைக் குலைக்கும் அந்தராய வினையும் அழிந்தவுடன் ஆன்மாவின் இயல்பான அனந்த நான்மைகள் வெளிப்படுகின்றன. அவற்றையே இந்த காதை சுட்டுகிறது.

        வரம்பற்ற அறிவு - காட்சியால் ஆறு பொருள்களின் கூட்டமாக இவ்வுலகில் காணப்படும் வரம்பற்ற உயிர்கள்,  அவற்றிலும் மிக வரம்பற்ற  புற்கலங்கள்,  மற்றும் தன்மம், அதன்மம், ஆகாயம் மூன்று திரவியங்கள், அயங்கியம் கால அணுக்கள் இவற்றின் முக்காலம் தொடர்பான வரம்பற்ற பையை (பரியாயங்)கள் ஒரே சமயத்தில் ஒரு சேர தெளிவாகக் காணப்படுகின்றன. அறியப்படுகின்றன. அனந்த சுகம் என்பது நிறைவான, கூடுதல் குறைதல் இல்லாத இன்பம் . அனந்த வீரியம் என்பது எந்த நிமித்தத்தாலும் - புறக் காரணத்தாலும் - மாற்றம் அடையாத நிலை ; தன்  துய்ப்பு நிலையின் ஆற்றல் ஆகும். இத்தகு சிறப்புடைய உயிரின் இயல்பை நம்புதல் - நம்பிக்கையை அனுபவம் செய்தல் நற்காட்சி ஆகும்.

' பழவினை முழுதும் பாறப் பரந்தன அனந்த நான்மை'
'காதிகள் நான்கும் வீய்ந்த கணத்துளே காணற் பாடில்'
'ஆதியாய் பிறிதின் ஆய ஒன்றிடும் அனந்த நான்மை'

 என அனந்த நான்மையின் தோற்றத்தைச்  சுட்டுவார்.

"உலக மூன்றையும் ஏந்திடும்
   ஆற்றலை ஒருகணத்து உலகத்தின்
 அலகில் நீளமும் அகலமும்
       உயரமும் அணுவினால் அளக்கிற்கும்
இலகு தன்மையை"

 என அறிவின் எல்லை அற்ற ஆற்றலைக் குறிப்பார். #

 'அனந்தஅறி வாலனந்த வீரியனு மானாய்
     அனந்ததெரி சியனந்த இன்பமுடை யோயை மனஞ்செயலின் வணங்கினவர் பணிந்துலக  மேத்த
    நினைந்தபடி எய்திவினை  நீத்துயர்வர் அன்றே'

என அவரை வாழ்த்துவார் பெரும் பயனையும் குறிப்பிடுவர்.
------------------------------------------
மேருமந்தர புராணம் -125,113.
# மேருமந்தர புராணம் - 174
மேருமந்தர புராணம் - 1294
---------------------------------------- 

************************************** 

151

ணாணீ ஸிவ பரமேட்டி ஸல்வண்ஹூ விண்ஹு சஉமுஹோ புத்தோ |
அப்போ வி ய பரமப்போ கம்ம விமுக்கோ ய ஹோஇ புடம் ||

(பதவுரை) 

ணாணீ - ஞானி, ய - மேலும், ஸிவ - சிவன், பரமேட்டி - பரமேட்டி, ஸவ்வண்ஹு - முழுதுணர் அறிவர், விண்ஹு - விஷ்ணு, சஉமுஹோ - நான்முகன், புத்தோ - புத்தன், அப்போ - ஆன்மா , வி ய - மேலும், பரமப்போ - பரமான்மா, கம்ம விமுக்கோ - வினை விலகியவன், புடம் - என தெளிவாக,  ஹோ இ - பரமான்மா உள்ளார்.

( கருத்துரை) 

ஞானி, சிவன், பரமேட்டி, முழுதுணர் அறிவர், விட்டுணு,  நான்முகன், புத்தன், ஆன்மா, பரமான்மா, வினை விட்டோன் என அனந்த நான்மை உடையவர் விளங்குகிழார்.

( விளக்கவுரை )

காதி வினைகளைக் கெடுத்து அனந்த நான்மை வெளிப்படுத்தியவர் முழுதுணர் அறிவர் ஆவார். அவருக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு சுட்டியுள்ளார். தூய்மை அடைந்த உயிரில் வெளிப்படும் குணங்கள் அடிப்படையில் இப் பெயர்கள் அமைகின்றன. இப் பெயர்களால் அவர் போற்றப்படுகிறார்.

ஞானி :  முழு ஞானத்தை உடையவர். அறிவில் எல்லையற்றவர்.
'ஆசனத்து இருந்த திருந்தொளி அறிவன்' ¹

 சிவன் :  சிவம் எனில் மங்கலம் - நன்மை உடைமை.
' சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே' ²

 பரமேட்டி :  உயர்ந்த நிலையில் (பதவியில்) உள்ளவர், அல்லது உயர்ந்த விருப்புக்கு உரியவர்.
' பரம நிலை அமர்ந்த பரமனை் நீயே' ³

 சருவஜ்ஞர் : முழுதுணர் அறிவர்
'மூஉலகினோடு அலோகின் முக்காலத்தின் நிகழ்வு எல்லாம்,
 உறலும் ஓர்தலும் இன்றியே  ஓர்கணத்து ஒற்றுமை முதலாய அறியும் நின் அறிவு'

 விஷ்ணு : திருமால்.
' முழுதுலகும் தெரிந்துஒன்றி உணர்ந்தநின் திப்பிய ஞானந்தன்னால்
 விரிந்துஎங்கும் சென்றமையால் விண்ணுவுமாய்' 5

 நான்முகன் : ஒரு முகமே நான்கு திசையிலும் நான்கு முகமாகக் காணப்படுதல் நான்முகன்.
' சார்வுற்ற நான்மையினும் சதுமுகனாய்  உயர்ந்தனையே' 6

புத்தர் : அனைத்தையும் அறிபவன்.
'தனிப் புத்தர் பாதங்கள் சாரீர் விரைந்தே' 7

 ஆன்மா :  தன் உண்மையான இயல்பில் எப்போதும் நிகழ்வது.

 பரமான்மா :  அனந்த நான்மை வெளிப்பட்ட மிக உயர்ந்த நிலை ஆன்மா.
' பரம நிலை அமர்ந்த பரமன் நீயே' 8

வினை விலகியவன் :  காதி வினைகளைக் கெடுத்தவன்.
' காதி நான்மை கடந்தோய் நீ
கடையில்  நான்மை அடைந்தோய் நீ'  9

        இங்கே சுட்டியுள்ள பெயர்கள் தூய்மை வரம்பினைத் தொட்ட ஆன்மாக்களுக்கே பொருந்தும். இப் பெயர்கள் வேறு எவருக்கும் அல்லது எந்த உயிருக்கும் பொருந்தாது. இந்தக் குணமில்லார்  இப் பெயரைக் கொள்ளுதல் பெயரளவே நிற்குமே ஒழிய குணப்பெயராக  இராது என்பது கருத்து. உலக வழக்கில் ஒரு கண் இல்லாளைத் "தாமரைக் கண்ணி " என்று அழைப்பது போலவே ஆகும். குணம் இல்லாதார் இப் பெயர்களைப் பெறுதல்.

      அருகருக்கு  அல்லது அருக நிலைக்குச் சூட்டப்பட்டுள்ள இப் பெயர்கள் நய நோக்கில் அமைந்தவை என அறிதல் வேண்டும்.
-----------------------------------------------
¹ யாப்பருங்கலம் 52 -ன் மேற்கோள் பாடல்
² நாககுமார காவியம் -20
³ நாககுமார காவியம் - 20 மேருமந்திர புராணம் -175 5 யாப்பருங்கலம் -84- ன் மேற்கோள்
6 யாப்பருங்கலம் 84 ன் மேற்கோள்,
7 திருக்கலம்பகம் - 66
8  நாககுமார காவியம் -20  9 மேருமந்திர புராணம்- 807
---------------------------------------------------


************************************** 
152

இய காஇ கம்மமுக்கோ அட்டாரஹ தோஸவஜ்ஜிஓ ஸயலோ |
திஹுவண பவணபதீஓ தேஉ மமம் உத்தமம் போஹிம் ||

(பதவுரை)

இய - இவ்வாறு, காஇ - காதி, கம்ம முக்கோ - கருமங்களைக் கெடுத்தவர், அட்டாரஹ - பதினெட்டு, தோஸ வஜ்ஜிஓ -  குற்றங்கள் இல்லாதவர், ஸயல - உடலுடையவர், திஹுவண - மூவுலக, பவண பதீஓ -  மாளிகையை ஒளி செய்பவர், மமம் - எனக்கு, உத்தமம் போஹிம் - உயர்ந்த மும்மணியை, தேஉ - அளிப்பாராக.

( கருத்துரை)

காதி கருமங்களைக் கெடுத்தவர், பதினெட்டு குற்றங்கள் இல்லாதவர், மூவுலகையும் அறிபவர், அந்த பரமான்மா எனக்கு மும்மணியை அருள்வாராக.

( விளக்கவுரை)

ஆசாரியார் அப்படிப்பட்ட அருகர் 'எனக்கு மும்மணி அருள்வாராக' என வணங்குகிறார்.

         பதினெட்டு குற்றங்கள் இல்லாதவர் அருகர். அக் குற்றங்களாவன, 1) பசி. 2) தாகம். 3) முதுமை. 4) நோய். 5) பிறப்பு. 6) இறப்பு. 7) அச்சம் . 8) செருக்கு. 9) விருப்பு.  10) வெறுப்பு. 11) மோகம். 12) சிந்தை. 13) வருத்தம்.  14) தூக்கம். 15) வியத்தல். 16) மயக்கம். 17) வேர்வை. 18) இளைப்பு.

          'ஸயல' என்ற சொல்லை ஆண்டுள்ளார்.  உடல் என்னும் பொருளது, முக்தி நெறியில் செல்ல அல்லது முத்தி நெறியை அறிய தக்காருடைய அறிவுரை வேண்டும். அவ் வுரை மொழி வடிவம் ஆகும். மொழி இல்லாமல் உரை நிகழாது. அதனால் மொழி தோன்ற உடல் வேண்டும். அதனால் அறம் உரைக்கும். அருகர் ஆயு வினையின் உதயத்தால் உடலோடு கூடியுள்ளார். இன்னோசை (ஸுஸ்வர) எனும் நாம வினை உதயத்தால் உரை தோன்றுகிறது. அதனால் உயிர்களுக்கு நன்மை தரும் உரை நிகழ்கிறது.  முத்தி நெறியின் அறிவு கிடைக்கிறது. அதனால் 'உடலுடையவர்' என்றார்.

       மும்மணி இல்லாமல் முத்திநெறி இல்லை. அதனால் மும்மணி அருள ஆசாரியார் வேண்டுகிறார். தன்னில் மும்மணியைத் தோற்றுவிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். பிறருக்கும் அதனையே கூறுகிறார்.
---------------------------------------
அருங்கலச் செப்பு - 6
---------------------------------------

************************************** 
153

ஜிணவர சரணம்புருஹம் ணமந்தி ஜே பரம்பத்திராஏண |
தே கம்ம வேல்லிமூலம் கணந்தி வரபாவ ஸத்தேண ||

(பதவுரை)

ஜே -எவர், பரம - சிறந்த, பத்திராஏண -  அன்பு (பத்தி) ஆர்வத்தால், ஜிணவர - ஜிநவரர், சரணம்புருஹம் - திருவடித் தாமரைகளை, ணமந்தி - வணங்குகிறார், தே - அவர், வர பாவ்வ. - உயர்ந்த பாவனை,  ஸத்தேண - வாளால், ஜம்ம - பிறவி, வேல்லி மூலம் - கொடியின் வேரை, கணந்தி - அழிக்கிறார்.

( கருத்துரை)

சிறந்த அன்புடன் உயர்ந்த அகவுணர்வுடன் அருகரது திருவடித் தாமரைகளைத் தொழுபவர் பிறவிக் கொடியின் வேரை அழிக்கிறார்.

( விளக்கவுரை)

அனந்த நான்மை அடைந்த அருகரைத் தொழுபவர் பிறவியை அறுக்கிறார் என்கிறார்.

         அருகரை வழிபடுதல் என்பது அவரை ஆர்வத்துடன் - ஈடுபாட்டுடன் வழிபடுதல் ஆகும். அந்த வழிபாட்டு ஆர்வம் அருகருடைய உள்ளவாறு மெய்ப்பொருளை முழுதுணரும் அறிவையும், அறியுங்கால்  விருப்பு வெறுப்பு அற்ற தூய்மையையும் அறியும் போதுதான் ஆகும்.  அதுவே நற்காட்சி தோன்ற அடையாளமாகும். அப்போது பொய்க் காட்சி அழிந்து போயிற்று என்பதும் தெளிவாகிறது.  இனி பிறவி அந்த நற்காட்சி அன்பருக்குத் தொடராது அறுந்துபோகும் .

       'வரபாப' என்ற தொடர் வழிபாட்டில் கொள்ள வேண்டிய உயர்ந்த அக உணர்வைச்  சுட்டுகிறது. அந்த உணர்வு அடிப்படையில் எழும் அன்புணர்வு (பத்தி) 'பரம பத்தி' என்று சுட்டப்பட்டுள்ளது.

' உன்னையும் என்னையும் அன்றிமற்று ஒன்றும்உள் ளாமல்உள்ளம்
 தன்னையும் நின்னருள் போல்வச மாக்கித் தரப்பெறினே'

       என அவிரோதி ஆழ்வார் அருக வழிபாட்டில் ஆழும் உபாயத்தைக் காட்டுவார்.*

 'வந்திக்க வும்புகழ் வாழ்த்தவும் தாழ்த்தில வானம்எல்லாம்
 கந்திக்க மேற்கொள்ளும் கார்க்கம லத்துஎந்தை தாள்கமலம்'
சிந்தித் தலும்பண்டைத் தீப்பரி மானத்துத் தீவினையால்
 பந்தித் ததைபண்டை  நுண்துகள் ஆகிப் பறந்தனவே'

 என அருக வழிபாட்டின் விளைவைக் காட்டுவார்.
---------------------------------------
* திருநூற்றந்தாதி -12
திருநூற்றந்தாதி-50
--------------------------------------- 

************************************** 

154

ஜஹ ஸலிலேண  லிப்பஇ கமலிணிபத்தம் ஸஹாவபயடீஏ |
தஹ பாவேண ண லிப்பஇ  கஸாய விஸஏஹிம் ஸப்புரிஸோ ||

 (பதவுரை)

ஜஹ - எவ்வாறு, கமலிணிபத்தம் - தாமரை இலை, ஸஹாவ பயடீஏ - தன் இயல்பான தன்மையால்,  ஸலிலேண - நீரால், ண லிப்பஇ - நனைதல் இல்லை, தஹ - அவ்வாறு, ஸப்புரிஸோ - நற்காட்சியுடைய நல்லவர்,  பாவேண - தன் பாவனை இயல்பால், கஸாய விஸ ஏஹிம் - துவர்ப்பு மற்றும் ஐம் புலங்களால், ண லிப்ப இ - மலினப்படுவது இல்லை.

(கருத்துரை) 

தண்ணீரில் இருந்தாலும் தாமரை அதனோடு ஒன்றிப் போவது - ஊறிப் போவது இல்லை. அதுபோல நற்காட்சியுடைய நல்லவர் தன் அக உணர்வு சிறப்பால் (இயல்பால்) துவர்ப்பு, புலன் வேட்கையில் ஒன்றிப் போவது இல்லை.

( விளக்கவுரை) 

நற்காட்சியுடையவர் பிறவிக்கு ஏதுவான புதிய வினைகளைக் கட்டிக் கொள்ளுதல் இல்லை என்கிறார்.

        நற்காட்சியுடையவருக்குப் பொய் நம்பிக்கையும் அனந்தானுபந்தி கசாயமும் இல்லை. அவை இன்மையால் பிற பொருளில் கருத்தன் உணர்வு இல்லாது போகிறது.  ஆனால் பிற கசாயங்களால் சற்று விருப்பு, வெறுப்பு உண்டாகின்றன. ஆனால், அவை முந்தைய வினைகள் உதயத்தின் விளைவு என்று அறிகிறார்.  ஆகையால் அங்கே கருத்தன் (கர்த்தா) உணர்வு இல்லை என்றாலும், அவற்றை - அவ் வுணர்வுகளை நல்லதாகக் கருதுவது இல்லை.  இப்படித் துவர்ப்பு, புலன்களில் ஈடுபாடு கொள்ளுதல் இல்லை;  சுவை கொள்ளுதல் இல்லை, தாமரை போல தனித்து நிற்கிறார். அதனால் புதிய வினைகளைக் கட்டுவது இல்லை. எனவே பிறவி தொடருவது இல்லை.
                -----÷-----

************************************** 

155

தே ச்சிய பணாமி ஹம் ஜேஸயலகலாஸீல ஸஞ்ஜமகுணேஹிம் |
பஹுதோஸாணாவாஸோ ஸுமலிணசித்தோ ண ஸாவயஸமோ ஸோ ||

 (பதவுரை)

ஜே ஸயலகலா - எல்லா நுட்பமும், ஸீல - சீலமும், ஸஞ்ஜம - சையம, குணேஹிம் - குணங்களுமுடையவரை, தேச்சிய - அவர் முனிவர், பணாமிஹம் -  என உரைப்பேன், பஹு தோஸாணாவாஸோ - பல குற்றங்களுக்கு இடமான, ஸுமலிண சித்தோ -  மிக மலின மனமுடைய, ஸோ - அவர், ண ஸாவய ஸமோ - இல்லறத்தாருக்கும் ஒப்பானவர் அல்லர்.

( கருத்துரை) 

நுட்பமும் சீலமும் சையமும்  என எல்லா குணங்களை உடைய வரை நற்காட்சி உடையவரை முனிவர் என உரைப்பேன். அப்படி இல்லாத ஏற்ற தோற்றத்துக்கு எதிரான குற்றங்களுடையவர்,மலினப்பட்ட மனமுடையவர் அவர் இல்லறத்தாரைக் காட்டிலும் கீழானவர்.

( விளக்கவுரை)

நற்காட்சியுடைய நல்ல முனிவரே நற்குணங்களை உடையவர் எனக் கூறுகிறார்.

          சீலமும்  (உத்தர குணம்) சையமும் (மூல குணம்) உடையவரே முனிவர் - நற்காட்சியுடைய முனிவர். துறவிக்கு ஆகாத குற்றங்களும் மலின மனமும் உடையவர் முனிவரும் அல்லர்; சாவகரும் அல்லர்; இழிந்தவர்.

        முனிவர் தோற்றம் கொண்டு அகவுணர்வு இன்றி, வெகுளி முதலான குற்றங்களிலும், பொய் நம்பிக்கை முதலான உணர்வுகளிலும் நிகழ்பவர் முனிவர்  ஆகார்.  முனிமைக்குப் புறத்தோற்றம் மட்டும் போதாது. அதோடு இகவுணர்வும் வேண்டும் எனக் கூறி வருகிறார் ஆசாரியர். அதனால் குற்றங்கள் உடையவர் சித்தம் உடையவராகவே இருப்பர். அது பாப வினைக் கட்டுக்கு ஏதுவாகும். பிறவித் தொடர்ச்சிக்கு விதையாகும்.

        இல்லறத்தார் நற்காட்சி உடையவர். ஏனெனில் நற்காட்சி உடையவரே இல்லறம் ஏற்க முடியும். இல்லற ஒழுக்கங்களில் பாபமும் உண்டு, என்றாலும் அவர் நற்காட்சி உடையவர் என்பதால் பாபங்களிலிருந்து விடுபட்டு மேலே வருபவர்.  ஆனால் குற்றமுடைய துறவி - வெறும் புறத் தோற்றத்தால் மட்டும் உள்ள துறவி - பிறவியில் சென்று உழல்கிறார். அதனால் அவர் இல்லறத்தாரோடும் ஒப்பானவர் இல்லை என்றார்.

" வேடம் தரித்து விதிஅந் தரிக்க ஒழுகிமெய்ந்நூல்
பாடம் தரிக்க உண்மை பாரா முனிவரின் பாயரிமான்
பீடம் தரிக்க இருந்தபெம் மான்அறம் பேனல்இன்றி
மூடம் தரித்துஎண் மயத்துநின் றார்நல்லர் மும்மடியே"

 என போலித் துறவியர் இழி நிலையைச் சுட்டுவார் ஆழ்வார்.
---------------------+----+----------
திருநூற்றந்தாதி -62
--------------------------------------- 

************************************** 

156

தே தீரவீர புரிஸா கமதமகக்கேண விப்புரந்தேண |
துஜ்ஜய பபலபலுத்தர கஸாயபட ணிஜ்ஜியா ஜேஹிம் ||

(பதவுரை)

கம தம கக்கேண விப்புரந்தேண - பொறுமை மற்றும் புலனடக்கம் எனும் ஒளி வீசும் வாளால், துஜ்ஜய - வெல்லற்கரிய,  பபல - மிகுந்த, பலுத்தர - கொடுவலிதான, கஸாய பட -  துவர்ப்புகள் எனும் படை மறவர்களை, ணிஜ்ஜியா - வென்ற, தே - அவர்களே, தீர வீர - தீரமும் வீரமும் உடைய, புரிஸா - முனிவர் ஆவார்.

( கருத்துரை)

பொறுமை மற்றும் புலனடக்க வாளால் கசாயங்களை வென்றவரே வென்றோர் ஆவார்.

 (விளக்கவுரை)

துவர்ப்புகளைத் துவர வென்றவரே வென்றவர் ஆவார் என்கிறார்.

        உலகம் போரில் வென்றவரை வீரர் எனப் பாராட்டும். உலகில் அத்தகு வீரர் பலர் உள்ளனர். ஆனால் தன்னகத்தே உள்ள  துவர்ப்புகளை வென்றவர் அரிதாகவே உள்ளனர். அவர் நற்காட்சியுடைய முனிவர் ஆவார். ஏனெனில் அவரே துவர்ப்புகளை வென்று முத்தியை அடைகிறார். அதனால் உண்மையில் அவரே தீரர்!  அவரே வீரர் !.



************************************** 

157

தண்ணா தே பயவந்தா தம்ஸண ணாணக்கபவரஹத்தேஹிம் |
விஸயமய ரஹர படியா பவியா உத்தாரியா ஜேஹிம் ||

(பதவுரை)

விஸயமயரஹர - ஐம்புலக் கடலில் , படியா - விழுந்து கிடக்கும், பவியா - பவ்வியரை, தம்ஸண ணாணக்க - நற்காட்சி, நல்லறிவு கூர்த்த, பவர ஹத் தேஹிம் - முதன்மையான இரு கைகளால், உத்தாரியா ஜேஹிம் -  கரை ஏறச் செய்கிற, தே - அம் முனிவர், தண்ணா - பெருமைக்குரியவர், பயவந்தா - பகவந்தர்  ஆவர்.

( கருத்துரை) 

ஐம்புலக் கடலில் கிடக்கும் பவ்வியரை நற்காட்சி, நல்லறிவு கைகளால் தூக்கி கரையேற்றும் முனிவரே பகவந்தர், பெருமைக்குரியவர்.

(விளக்கவுரை)

 பிறவிக் கடலைப் பவ்வியர் கடக்க செய்பவர் பகவந்தர் என்கிறார்.

       தன்னைப்போல பிற பவ்வியரையும் கரை ஏற்றும் முனிவர் பெருமைக்குரியவர் என்கிறார்.

         பிறவிக் கடலைக் கடக்க பவ்விய உயிர் நற்காட்சியை முதலில் பெறவேண்டும்.  அந் நற்காட்சி பெற்ற பின் தானே தன் முயற்சியால் பிறவிக் கடலைக் கடக்கிறது. என்றாலும், பிறவிக் கடலைக் கடக்கும் துறவியர் பிற பவ்வியரும் அக் கடலைக் கடக்க துணை செய்கின்றனர். அதனால்  காட்சி, அறிவு எனும் இரு கைகளால் ஐம்புலக் கடலில் அமிழ்ந்து கிடக்கும் பவ்வியரை கரை ஏறச் செய்கிறார் முனிவர். அதனால் நன்றி உணர்வோடு தன்னை கரை ஏற்றினார் என பவ்வியர் நெகிழ்ந்து அவரைப் பாராட்டுவது பொருத்த முடையதே. அவர் பெருமை உடையவர், பகவந்தர் என்பதன் கருத்து இதுவே.


************************************** 

158

மாயாவேல்லி அஸேஸா மோஹ மஹாதருவரம்மி ஆருடா |
விஸய விஸயபுப்பபுல்லிய லுணந்தி முணி ணாண ஸத்தேஹிம் ||

(பதவுரை)

முனி -
முனிவர்கள், ணான - அறிவு, ஸத்தேஹிம் - வாளால், மோஹ மஹா தருவரம்மி - மயக்கம் எனும் பெரு மரத்தில், ஆரூடா - ஏறியுள்ளது, விஸய விஸ - ஐம்புல நச்சு, புப்ப - மலர், புல்லிய - மலர்ந்துள்ள, மாயா வேல்லி - மாயை எனும் கொடி, அஸேஸா - முற்றுமாக, லுணந்தி - அறுக்கிறார்கள்.

 (கருத்துறை)

முனிவர் நல்லறிவு வாளால், ஐம்புல நச்சு மலர் மலர்ந்துள்ள, மாயைக்  கொடி ஏறியுள்ள, மோக மரத்தை முற்றுமாக அறுக்கிறார்.

( விளக்கவுரை)

முனிவர் திறனைப் பேசுகிறார் .

     மயக்கம் என்பது பெருமரம். அதன் மீது படர்ந்துள்ளது மாயைக் கொடி. அதில் ஐம்புல நச்சு மலர் மலர்ந்துள்ளது. வினைகளில் முதன்மையானது மோகம். அதனைப் பெருமரம் என உருவகப் படுத்தினார். பிற வினைகள் அதனைச் சார்ந்துள்ளன என்பதனைக் குறிப்பாக உணர்த்தினார். மாயை மிகவும் மறைவானது . அதன் பரவல் விரிந்தது. முனிவரையும் அது தொடுகிறது. அதனால் அதனைக் கொடியாக உருவகம் செய்தார். ஐம்புலம் வேட்கை ஆகும் - விருப்பம் கூட்டுவது. அதனால் அதனை அழகான மலராக உருவகம் செய்தார். ஐம்புல இச்சை நஞ்சு ஆகும் - உயிரை மாய்ப்பதால் - திரிப்பதால். அதனால் அதனை நச்சுப்பூ என்றார். ஞானி துறவி தன் நல்லறிவு வாளால் வேரோடு மோக மரத்தை அறுக்கிறார். அப்படி அறுப்பவரே உண்மையான முனிவர் . அவரே முத்தியை அடைகிறார்.
              -------------


************************************** 
159

 மோஹமயஹாரவேஹிம் ய முக்கா ஜே கருண பாவ ஸஞ்ஜுத்தா |
தே ஸவ்வதுரிய கம்பம் ஹணந்தி சாரித்தகக்கேண ||

(பதவுரை)

ஜே மோஹ மய காரவேஹிம் - மோஹம், மதம், கௌரவம், முக்கா - இல்லாதவர், ய - மேலும், கருண பாவ - கருணை உணர்வுடன், ஸஞ்ஜுத்தா - கூடியவர், தே - அவர், சாரித்த கக்கேண - நல்லொழுக்க வாளால், ஸவ்வ - எல்லா, துரிய - பாவ வடிவ, கம்பம் - தூணை, ஹணந்தி - சாய்கிறார்.

( கருத்துரை)

மோகம், செருக்கு, கௌரவம் இல்லாத அருளுணர்வுடைய முனிவரே நல்லொழுக்க வாளால் பாபத் தூணை வெட்டிச் சாய்க்கிறார்.

(விளக்க உரை) 

முனிவர் திறனை மேலும் கூறுகிறார்.

       பிறவற்றை எனது  என்பது 'மோகம்'.  குலம் முதலான நிமித்தமாக எழும் செருக்கு 'மதம்'. 'கௌரவம்' என்பது தன் பெருமை பாராட்டுதல். அது மூன்று வகையாகும். 'ரித்தி  கௌரவம்', 'ஸாத கௌரவம்',  'ரஸ கௌரவம்' என. தனது ஏதேனும் தவ வலிமையால் உலகில் தன் புகழ்/ பெருமை பரவினால் அதன் காரணமாகத் தற்பெருமை, மகிழ்ச்சி அடைவது 'ரித்தி கௌரவம்' -  தவ தற்பெருமை ஆகும்.  தன் உடலில் நோய் நொடி முதலான இல்லாமையால், சுகமாக மகிழ்ந்து அதில் தற்பெருமை கொள்ளுதல் 'ஸாத கௌரவம்'- சுக தற்பெருமை ஆகும். இனிய ஊட்ட உணவு கிடைப்பதால் அதில் மகிழ்ந்து தனக்கே கிடைக்கிறது என தற்பெருமை கொள்ளுதல் 'ரஸ கௌரவம்' -சுவை தற்பெருமை ஆகும்.

           இத்தகு தற்பெருமைகளை நற்காட்சி முனிவர் கொள்ளுதல் இல்லை. இத்துடன் அவர் அருளுடையவராகவும் இருப்பர். விழிப்புணர்வு உள்ள காலம் வரை பிற உயிர்களுக்கு கருணை காட்டவே செய்வார். அதனால் ஞானிமுனிவர் தன் நல்லொழுக்கத்தால் பாப- அசுப - வினையை அழிக்கிறார்.

"அடங்கல் இல்லேற்கு அருளினால், அறங்கூர் மாரிபொழிந்தோய் நின்
 தடங்கொள் செந்தாமரையடிஎன் தலைய வேஎன் தலையவே"

 என முனிவர் தம் அருளுணர்வைப் பாராட்டுவாள் நீலகேசி.
----------------------------------------
நீலகேசி - 139
----------------------------------------

************************************** 

160

குணகணமணிமாலாஏ ஜிணமயகயணே ணிஸாயர முணிந்தோ |
தாராவலிபரியரிஓ புண்ணிமஇம் துவ்வ பவணபஹே ||

(பதவுரை)

பவணபஹே -ஆகாயத்தில், தாராவலி - தாரகை வரிசைகளின், பரியரிஓ -  வட்டத்தால் சூழ்ந்துள்ள, புண்ணிமஇம் துவ்வ - முழு நிலவு போல, ஜிண மயகயணே - ஜிண மத ஆகாயத்தில், குணகண - குணங்கள் கூட்டமான, மணிமாலாஏ - மணிகள் மாலையால் சூழ்ந்துள்ள, ணிஸாயர முணிந்தோ - முனீந்திரர் எனும் நிலவு உள்ளது.

( கருத்துரை)

ஆகாயத்தில் தாரகைகளின் கூட்டத்தால் சூழ்ந்துள்ள முழு நிலவுபோல ஜிந தரிசன ஆகாயத்தில் குணங்கள் எனும் மணிகள் கூட்டத்திலான மாலையால் சூழ்ந்த முனிபுங்கவர் எனும் நிலா விளங்குகிறது.

( விளக்கவுரை)

முனிவர் பெருமையைப் பேசுகிறார்.

       ஐம்பெரு நோன்புகள், ஐந்து சமிதி, புலனடக்கம், ஆறுநாள் கடமைகள், குளியாமை, பல் விளக்காமை, உடை உடுத்தாமை, தரை படுக்கை, நின்று உணவு ஏற்றல், நாளில் ஒரு முறை உண்ணல், தலை மயிர் பறித்தல் எனும் இந்த இருபத்தெட்டு  மூல குணங்களை உடையவர். பத்தறம் போற்றல், மூவடக்கம், பதினெட்டாயிரம் சீலங்கள்,  22 பரீசக வெற்றி, 84 லட்சம் உத்தர குணங்களை உடையவர் என்றார். இக் குணங்களைப் போற்றுதலையே 'குண மணி மாலை' உடையவர் என்றார். இந்த அணி மணிகளோடு முனிவர் ஜிந சித்தாந்த (மத) ஆகாயத்தில் நிலவாக விளங்குகிறார். தாரகைகள் சூழ முழு நிலவு ஆகாயத்தில் விளங்குதல் போல.

            முழு நிலவு மக்களைத் தன் ஒளியாலும் தன்மையாலும் மகிழச் செய்கிறது. அது போல முனி நிலவு தன் குணங்களின் ஒளியாலும் ஒழுக்கங்களின் தன்மையாலும் பவ்விய உயிர்களை மகிழச் செய்கிறது. இத்தகு பெருமை உடையவர் ஜிநர் நெறியில் நடக்கும் நற்காட்சி முனிவர்.

" உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ
     உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ
இடங்கொள் இன்னா வினை எல்லாம்
 எரிக்கும் வாயில் விரித்தோய் நீ"

 என முனிவர் புகழ்பாடும் நீலகேசி.
-----------------------------------------
நீலகேசி - 139
-----------------------------------------

************************************** 

161

சக்கஹர ராமகேஸவ ஸுரவர ஜிண கணஹராஇ ஸோக்காஇம் |
சாரணமுணி ரித்திஓ விஸுத்த பாவா ணரா பத்தா ||

(பதவுரை)

விஸுத்த பாவா - அகவுணர்வு தூய்மையுடைய, ணரா -  மனிதரான முனிவர் , சக்கஹர - ஆறுகண்ட அரசர், ராம - பலபத்திரர், கேஸவ - நாராயணர், ஸுரவர - தேவேந்திரர், ஜிண - தீர்த்தங்கரர், கணஹரா இ - கணதரர் முதலான,  பதவியர், ஸோக்காஇம் - இன்பங்களையும், சாரண முணி - சாரண முனிவர், ரித்திஓ - ரித்திகளையும், பத்தா - அடைகின்றனர்.

( கருத்துரை)

அகவுணர்வு சிறப்புடைய மனிதர் ( முனிவர் )  ஆறு கண்ட அரசர்,  பல பத்திரர்,  நாராயணர், தேவேந்திரர், தீர்த்தங்கரர்,  கணதரர் முதலானோர் அடையும் இன்பங்களையும் சாரண முனிவர் அடையும் ரித்திகளையும் அடைகின்றனர்.

( விளக்கவுரை) 

தூய அகவுணர்வு உடையார் அடையும் இன்பங்களைக் கூறுகிறார்.

       மனித வாழ்வில் மிகச் சிறந்த புலன் இன்பங்களைத் துய்ப்பவர் மூன்று கண்ட அரசரரும், ஆறுகண்ட அரசரும் ஆவார். அதே போல் தேவ வாழ்வில் உயர்ந்த புலனின்பம் துய்ப்பவர் இந்திரர் ஆவார். இவ் வின்பங்கள் இம்மை இன்பங்கள். இவ் வின்பங்களைத் துய்த்து சாரண ரித்திகள், கணதரர் பதவி, தீர்த்தங்கரர் பதவி இவற்றை அடைந்து முத்தி பெறுவர் நற்காட்சி உடையவர்.

         நற்காட்சியுடைய மனிதர் உயர்ந்த உயர்ந்த இன்பங்களை அடைந்து முடிவில் முத்தி பேரின்பத்தை அடைகின்றனர்.

" மூவகைத் தேவர் ஆகார் முகடுயர்வர்
தோவகையில் காட்சி யவர்"

விச்சாதர்ரும் பலதேவரும் ஆவர்
 பொச்சாப்பில் காட்சி யவர்'

'முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சி யவர்'

 என அருங்கலச் செப்பு  நற்காட்சியின் சிறப்பைச் சித்தரிக்கும்.
----------------------------------------
அருங்கலச் செப்பு -  54, 55, 56.
---------------------------------------- 

************************************** 


162

ஸிவமஜராமர லிங்க மணோபம முத்தம் பரம விமலமதுலம் |
பத்தா வரஸித்தி ஸுஹும் ஜிண பாவணபாவியா ஜீவா ||

(பதவுரை)

ஜிண பாவண - நற்காட்சி அகவுணர்வு, பாவியா - பாவனை செய்யும், ஜிவா - உயிர்கள், ஸிவம் - மங்கலமான, அஜராமரலிங்கம் -  முதுமை இறப்புச் சின்னங்கள் இல்லாத, அணோபமம் - உவமை இல்லாத, உத்தம் - சிறந்த, பரம - உயர்ந்த, விமலம் - கரும களங்கம் இல்லாத, அதுலம் - வரம்பற்ற இன்பமான, வரஸித்தி - உயர்ந்த வீடுபேற்று, ஸுஹம் - பேரின்பத்தை, பத்தா - அடைகின்றன.

( கருத்துரை)
நற்காட்சியுடையவர் மங்கலமான, நிலையான, உவமையில்லாத, சிறந்த,  உயர்ந்த, தூய உயர்ந்த வீடுபேற்று பேரின்பத்தை அடைகிறார்.

( விளக்கவுரை)
நற்காட்சியுடையவரே முத்தியை அடைகிறார் என்கிறார்.

       இங்கே வீடுபேற்று நிலையில் உயிருடன் காணப்படும் சில பண்பு நலன்களைக் சுட்டியுள்ளார். மீண்டும் பிறவா நிலை அடைந்த உயிர் தன் தூய இயல்பில் வரம்பற்ற காலம் விளங்குகிறது. அந் நிலையை அடைய உயிர் நற்காட்சி பெற்றுத் தன் அகவுணர்வை மலினப்படுத்தாமல் மேலும் மேலும் விளக்கம் பெறச் செய்து வந்துள்ளது. அது அனுபவ நிலை ஆகும். என்றாலும், பிறவி நிலையின் பார்வையில் வைத்து அந்த நிலையைச் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த அனுபவத்தை அன்று.  அனுபவம், அனுபவம் மட்டுமே. அது சொல்லுக்கு ஆட்படுவது அன்று.

************************************** 

163

தே மே திஹுவண மஹியா ஸித்தா ஸுத்தா ணிரஞ்ஜணா ணிச்சா |
திந்து வரபாவ ஸுத்திம் தம்ஸண ணாணே சரித்தே ய ||

(பதவுரை)

திஹுவண - மூவுலகும், மஹியா - தொழுகின்ற, ஸித்தா -  சித்தர்கள், ஸுத்தா - தூயவர்கள், ணிரஞ்ஜணா - களங்க மில்லாதவர்கள், ணிச்சா - நிலையான வர்கள், தே - அவர்கள், மே - எனக்கு, தம்ஸணா -  நற்காட்சியில், ணாணே - நல்லறிவில், ய - மேலும், சரித்தே - நல்லொழுக்கத்தில், வரபாவ ஸுத்திம் - உயர்ந்த சிறந்த அகவுணர்வு, திந்து - அளிப்பாராக.

( கருத்துரை)

தூய்மையும், களங்கமின்மையும், நிலைத்த தன்மையும்  உள்ள சித்தர்கள் எனக்கு மும்மணியில் உயர்ந்த சிறந்த அகவுணர்வு (பாவம்) அளிப்பாராக.

( விளக்கவுரை)

பேரின்பத்தைப் பெற்ற சித்தர்கள் தனக்கு உயர்ந்த அகவுணர்வை அளிக்க வேண்டும் என வேண்டுகிறார்.

   ' ஸுத்தா'  என்பது புற்கல வினை. நோகம வினைகள் மலம் இல்லாத நிலையைச் சுட்டுகிறது.  'ணிரஞ்ஜணா'  என்றது விருப்பு வெறுப்பு முதலான கரும களங்கம் இல்லாத நிலையைச் சுட்டுகிறது.  'ணிச்சா' என்றது கரும தோற்றம் இனி இல்லாத, தன் இயல்பில் திரிபு இல்லாத நிலையைச் சுட்டுகிறது.

         தூய உயர்வின் விளைவு சித்த நிலை. அந் நிலையை அடைந்துள்ள சித்தரிடம் தனக்கு முழு தூய உணர்வு ஆக வேண்டும் என வேண்டுகிறார்.

              சித்தர் தன் தூய்மையில் திளைப்பவர்.  அவர் தருவதும் இல்லை, எடுப்பதும் இல்லை. என்றாலும், அவரைப் போற்றுவதால், அவரைத் தியானிப்பதால் அகவுணர்வில் செம்மையும் மும்மணியில் தூய்மையும் அமைகின்றன.  இந்த 'நிமித்திக - நைமித்திக' நோக்கில் ஆசாரியர் சித்தரை வேண்டுகிறார்.


************************************** 

164

கிம் ஜம்பிஏண பஹுணா அத்தோ தம்மோ ய காம மோக்கோ ய |
அண்ணே வி ய வாவாரா பாவம்மி பரிட்டியா ஸவ்வே ||

(பதவுரை)

கிம் ஜம்பி ஏண பஹுணா - அதிகம் சொல்ல அதிகம் சொல்ல என்ன இருக்கிறது?, அத்தோ -  பொருள், ய -  மற்றும் , தம்மோ -அறம், காம -  இன்பம், ய - மற்றும், மோக்கோ - வீடு, விந - மேலும், அண்ணே -  வேறு பலவான, வாவாரா - முயற்சிகள், ஸவ்வே - எல்லாம், பாவம் மி - அகவுணர்வில், பரிட்டியா - நிலை பெற்றுள்ளன.

( கருத்துரை) 

அறம் பொருள் இன்பம் வீடு மற்றும் பிற முயற்சிகள் அனைத்தும் அகவுணர்வு ஆதாரத்தில் உள்ளன.  பிறகு மிகுதியாகப்  பேச என்ன இருக்கிறது?

( விளக்கவுரை)

ஆசாரியர்  அகவுணர்வின் சிறப்பைச்  சுருக்கிச்ச் சொல்லுகிறார்.

       உலகில் நான்கு உறுதிப் பொருள்களாகப் போற்றப்படுகின்றன. அவை: அறம், பொருள், இன்பம், வீடு.

          இல்லறம், துறவறம் ஒழுக்கங்களைப் போற்றுதல், உயிரின் இயல்பை அறிந்து அதில் ஒழுகுதல் அறமாகும்.  ஐம்புல இன்பத்துக்கு ஏதுவான பொருள்கள் பொருள் ஆகும்.  ஐம்புலப் பொருட்களைத் துய்த்தல் காமம் ஆகும்.  உயிர்  வினைக் கட்டிலிருந்து விடுபட்டுத்  தன் வரம்பற்ற பேரின்பத்தில் திளைத்தல்  வீடுபேறு ஆகும். இவை எல்லாம் அகவுணர்வு செம்மையினாலேயே அடையப்படுகின்றன.  உலக பதங்களும் முத்தி பதமும் அடைய அகவுணர்வு தூய்மையே ஆதாரமாகும்.

           கருத்து என்னவென்றால் நற்காட்சியுடன் கூடிய அகவுணர்வாலேயே இவை அடைய படுகின்றன. ஆகையால் எப்போதும் அகவுணர்வைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும்.

      அறம் பொருள் இன்பம் வீடு என்பது இங்கு அற வழிப்படும் உறுதிகள் ஆகும். நூல்கள் அவற்றையே போற்றுகின்றன. பொய் காட்சியர் என்றும் வீடுபேறு பெறுதல் இலர்; அறத்தையும் பெறுதல் இலர். அவர் பெறும் பொருளும் இன்பமும் 'பாபானுபந்தி' புண்ணியத்தால் அமைவனவாகும்.

"அறம்பொருள் இன்பம் மூன்றில்
    ஆதியால் இரண்டும் ஆகும் இறந்ததற்கு இரங்கி னாலும்
     யாதொன்றும் பின்னை எய்தா
பிறந்துழி பெரிய துன்பம்
      பிணிக்குநல் வினையை ஆக்கும்
அறம்புணர்ந்து இறைவன் பாதம்
     சிறப்பினோடு அடைக என்றார்"

 "அறமனது உறுதிசெய் வார்கள் தாமிலை
மறமலாது இடர்செய வருவ தும்மிலை
 நெறியிவை இரண்டையும் நினைந்து நித்தமும்
 குறுகுமின்  அறநெறி குற்றம் நீங்கவே"

 என வருவன காண்க.
----------------------------------------
மேருமந்தர புராணம் - 569, 1404.
----------------------------------------

 ************************************** 

165

இய பாவ பாஹுடமிணம் ஸவ்வம் புத்தேஹி தேஸியம் ஸம்மம் |
ஜோட படஇ ஸுணஇ பாவஇ ஸோ பாவஇ அவிசலம் டாணம் ||

(பதவுரை) 

இய - இவ்வாறு, ஸவ்வம் புத்தேஹி - முழுதுணர் அறிவரால், தேஸியம் - அருளப்பெற்ற, பாவபாஹுடமிணம் - இந்த 'பாவ பாஹுடம்' எனும் நூலை, ஜோ - எவர், ஸம்மம் - நன்கு, படஇ - படிக்கிறார், ஸுணஇ - கேட்கிறார்,  பாவஇ -  நினைக்கிறாரோ, ஸோ - அவர், அவிசலம் - நிலையான, டாணம் - இடத்தை, பாவஇ - அடைகிறார்.

( கருத்துரை )

அறிவர் அருளிய இந்த "பாவ பாஹுடம்" நூலை நன்கு படிப்பவர், கேட்பவர், சிந்திப்பவர் நிலையான முத்தி நிலையை அடைவார்.

( விளக்கவுரை)

ஆசாரியர்  நூலை முடிக்கும் முகத்தான் இதனைப் படிக்க, கேட்க, நினைக்க அறிவுறுத்துகிறார்.

          அருக வழிமுறையில் தொடர்ந்து வரும் அறவுரை அடிப்படையில் நூலை ஆக்கியுள்ளமையால் அறிவர் அருளிய நூல் என்றார். இதனை படிப்பதால் கேட்பதால் முத்தி கிடைக்கிறது என்கிறார். முத்தி தூய உயிர் நிலையில் முகிழ்ப்பது.  இதனை ஓதுவதால் தூய உணர்வு வருகிறது. நூல் ஓதுதல் நிமித்த மட்டுமே.  தூய்மை தன்னில் தோன்றுவது. இப்படிப் படித்தல், கேட்டல், சிந்தித்தல் பரம்பரை காரணமாகும். ஆகையால் பவ்வியர் நூலைப் படிக்கவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

         உயிர் அறிவுணர்வு (சேதனா) இயல்புடையது.  இவ்வுயிர்  இரண்டு நிலையில் நிகழ்கிறது.  1.தூய நிலை, 2. மலினநிலை.  அறிவு - காட்சி நிலையில் மட்டும் நிகழுமானால் அது தூய நிலை ஆகும். அந் நிலையில் உயிர் தன்னையே நோக்குகிறது. இதனை 'சுத்த பாவம்' என்பர். வினை நிமித்தத்தால் விருப்பு ,வெறுப்பு, மயக்கம் முதலான உணர்வுகளில் நிகழுமானால் அது மலின நிலை ஆகும். இதனை 'அசுத்த பாவம்' என்பர். வினை நிமித்தம் தொடக்க மற்ற காலமாகத் தொடர்ந்து வருவதால், 'அசுத்த பாவம்'' தொடக்கமற்ற காலமாக  நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வால் 'சுப',  'அசுப' வினைக் கட்டு ஏற்படுகிறது. இக் கட்டின் விளைவாக, உதய காலத்தில் மீண்டும் 'சுப', 'அசுப' பாவ வடிவ உணர்வில் நிகழ்கிறது.  இப்படி தொடக்கமற்ற காலமாக இப் பரம்பரை தொடர்கிறது.

        இந்த நிலையில் அருகருடைய அறத்தை அறியும் வாய்ப்பு நேர்ந்தால் அப்போது உயிர் அதில் நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டு ஒழுகினால்,  தான் - பிற எனும் மெய்யறிவு பெற்று, தூய நிலை மலினநிலையின் வேறுபாட்டை அறிகிறது. அதற்கு இசைய ஒழுகத் தொடங்குகிறது. தூய நிலை தனக்கு நன்மை செய்வது; மலினநிலை தனக்குத் தீமை செய்வது எனத் தெளிந்து, தூய நிலையை அடைய முயற்சியும் மலின நிலையை விலக்க வழியும் ஆய்தல் செய்கிறது.

தன்னை நோக்கி முயற்சி செய்தல் உண்மை முத்திநெறி என்பர் . தேவ, குரு, ஆகம  சேவையில் ஒழுகுதல் வழக்கு முத்திநெறி என்பர். பின்னது முத்தி நெறியில் உதவி செய்வதால் அது ஒழு கப்ப டுகிறது. தன்னை நோக்கிய நெறி துறவு நெறி ஆகும். அதில் ஒழுகும்போது சற்று 'ஆர்வ' ராக  உணர்வும் காணப்படுகிறது. அதனால் சுப வினை பந்தமாகிறது. ஆனாலும் அது முதன்மையானது அன்று. ஏனெனில், அதில் நிகழும் துறவி அந்த வினையின் பயனில் ஆர்வம் அல்லது விருப்பம் கொள்ளுதல் இல்லை.

      என்றாலும் அந்த ஆர்வமும் தூண்டப்படுகிறது.  தன் தூய அறிவு- காட்சி நிலை மட்டுமே அனுபவம் ஆகும் போது உயிர் முத்தியை அடைகிறது. இந்த நெறியில் நற்காட்சி பெறுதலே முதல் படியாகும்.  அது இல்லாமல் முத்திநெறி அமையாது. அதனால் நற்காட்சி சிறப்பாகப் பேசப்படுகிறது. அருக வழிபாடு முதலானவை அந் நற்காட்சியின் அடையாளமாக ஏற்கப்பட்டுள்ளன. அது அகவுணர்வோடு ஒழுகப் படும் போது முத்திநெறி எளிதாகிப் போகிறது. அதனால் இந்த நூல் அந்த அகவுணர்வின் சிறப்பை முதன்மையாக துறவியின் நோக்கில் வைத்துப் பேசுவது என்றாலும், இல்லறத்தார்  துறவி இருவருக்கும் அந்த அகவுணர்வு (பாவம்) அடிப்படையானது என சுட்டிக் காட்ட தவறவில்லை. இந்த மெய்மையைத் தெளிந்து அகவுணர்வு செம்மையோடு ஒழுகி முத்தியை அடைய வேண்டும் என்பதே ஆசாரியர் அருளுரையாகும்.

  [ பாகவத மூலமும் தமிழ் உரையும் முற்றும்]

*ஜிநவாணி துதி - 1

 ஆகமம் படித்து முடிந்தபின் பாட வேண்டிய துதி....


 பெருந்தகைநின் தெய்வமொழி தோன்றத் தோன்றிப்
     பிறழாநின் தூயமொழி நிற்ப நின்றுன்
அருந்தகைய செய்ய மொழி செல்லச் செல்லும்
     அகல்ஞால முழுதுமுடன் என்றால் வானோர்

 பொருந்தகைய முடிநெருக்க எழுந்த சோதிப்
       பொலந்துகளைப் பூந்துணரின் மதுநீர் மாற்ற
இருந்த எயில் மூன்றுடையாய் நீ யலால்மற்று
      யாவர் படைத் தளித்தழிக்கும் இயல்பினாரே.

 *மங்கலம்*


************************************** 


மிக்க நன்றி திரு கம்பீர. துரைராஜ் அவர்கள், செய்யாறு.

No comments:

Post a Comment