விஷாபஹார ஸ்தோத்திரம்.
(மகாகவி ஸ்ரீ தநஞ்சயஸூரி என்பவரால் இயற்றப்பட்டது)
இந்த அருமையான பக்திமலரை திரு. இரவிச்சந்திரன் , போளூர் அவர்களால்
JUNC Whatsapp குழுவில் தினமும் பதிவாக அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.
நூன்முகம் - விஷாபஹாரம்
விஷாபஹாரம் மற்ற 4 ஸ்தோத்திரங்களைப் போன்றே இயற்றபட்டுள்ளது. இது 40 நான்கு வரி பாடலகளக் கொண்டது. இதனை தனஞ்ஜெயசூரி ஆசாரியர் பாடியுள்ளார். இவர் கவித்திறன் மிக்க மகாகவி என்று போற்றப்படுகிறார். இவர், காளிதாசரின் சமகாலத்தவர் என்றும், மானதுங்க ஆசாரியரின் சீடர் என்றும் அறிய முடிகிறது. மேலும் போஜராஜன் சபையில் காளிதாசனுக்கும், இந்நூலாசிரியர் தனஞ்ஜெயருக்கும் ஸ்யாத்வாத சாஸ்திரத்தில் வாதம் நடந்ததாகவும், காளிதாசன் அவ்வாதத்தில் பின் அடைந்த போது அலட்சியத்துடன், தான் மானதுங்க ஆசாரியரிடமே வாதம் செய்ய விரும்புவதாகவும், தனஞ்ஜெயரை அலட்சியபடுத்தினார் என்ற செய்தியை அறிய முடிகிறது.
இவர் தனஞ்செய நாம மாலா, த்விசந்தான காவியம், வைத்திய நிகண்டு ஆகிய மற்ற சமஸ்கிருத நூல்களையும் இயற்றியுள்ளார். அதில் வைத்திய நிகண்டு நூல் 5000 ஸ்லோகங்களைக் கொண்டது என்பதிலிருந்து இவரது கவித்துவச் சிறப்பையும், புலமையும் எளிதில் அறியலாம். தன் ஆன்ன ஸ்திதியிலேயே தோய்ந்து இருந்தாலும், மூவுலக ஜீவாதி பதார்த்தங்களின் செயல்கள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறர். ஆனால் எதிலும் ஈடுபடாதவராகவும் இருக்கிறார். அவர் அனாதி காலமாக இருந்த போதிலும், அனந்த சுகத்துடன் தன் உருவில் மாறுதல் ஏதுமின்றி நிலைத்திருகிறார் என்று ஸ்ரீ விருஷப தேவரை வியந்து வணங்கி, நூலை ஆரம்பிக்கிறார்.
சூரியன் உட்புகாத இடத்திலும், சிறிய விளக்கின் ஒளி புக முடிவது போல், யோகிகளாலும் உமது பெருமையை விளக்கிக் கூற முடியாத போதும் (அசத்தி / கதா அஸ்து) அற்ப புத்தியுடைய நான் உன் மீது தோத்திரம் செய்ய முற்பட்டுவிட்டேன் என்கிறார். இந்திரனே உம்மைப் பாட சக்தியற்றவனாய் தன் ஆவலை விட்டு விட்டான்: ஆனா;ல் நான் என் விருப்பத்தை விடவில்லை. ஏனெனில் சிறைய ஜன்னலின் வழியே பெரிய யானையையும் பார்க்க முடியுமல்லவா? அது போல் என் சிற்றறிவினால், ஸர்வ தரிசியாகிய உன்னைக் கண்டு ய்ம் பெருமையை தோத்திரம் செய்ய முற்பட்டு விட்டேன் என்று தன் அடக்கத்தை மேலும் அழகாக கூறுகிறார்.
சிறுவர்களும், பெரியவர்களும் தாங்களாகவே நோய்களையும், துனபத்தையும் தேடிக் கொள்கிறார்கள். வைத்தியரே அவர்களின் நோயைப் போக்கி துன்பத்தை நீக்குகிறார். அது போலவே தம் தீய செயல்களால் சம்சாரத் துக்கங்களையும், பிறவி சுழற்சியையும் தேடிக் கொள்ளும் ஜீவன்களுக்கு, நீர் வைத்தியராய் இருந்து, இதமாக ஞான மார்க்கத்தை கூறி மோட்சத்திற்கு வழி காட்டுகிறீர் என்கிறார். சூரியன் தினம் தினம் முகத்தைக் காட்டி மறைந்து விடுகிறான். ஆனால் நீரோ சஷண நேரத்தில் உன் தரிசன ஞான சாரித்திரத்தின் வழியில் மோட்சத்தை அளிக்க கூடியவராய் உள்ளீர் என்று சர்வக்ஞனை மேலும் வியக்கிறார்.
சமுத்திரத்தின் ஆழம் 1000 யோஜனை என்றும், மேரு மலையின் உயரம் 40 யோஜனை என்றும், இவ்வுலகின் பரப்பளவு 343 ரஜ்ஜு என்றும் ஆகமங்களினால் அறிகிறோம். ஆனால் உமது பெருமையோ இம்மூவுலகத்திலும், அதற்கப்பாலும் அளவிட முடியாமல் வியாபித்துள்ளது.
பரமசிவன் மன்மதனை எரித்தான் என்பர். ஆனால் அந்தச் சாம்பலை அவன் பூசிக் கொண்டும், தன் உடலின் பாதியை பார்வதிக்கு அளித்தும், பற்றும் காமமும் உடையவனாக இருக்கிறான். விஷ்ணுவோ எனில் தன் பெண்டு பிள்ளைகளுடன் திருபாற்கடலில் எல்லா பற்றுகளுடன், காம பீடிதராகவும், சம்சாரியாகவும் துயிலில் இருக்கிறார். ஆனால்ல் நீரோ பதினெட்டு வகை குற்றங்க்களின்றி, உண்மையில் காமனை வென்றவராயும், கேவல ஞானியாய், யாவரும் வணங்கத் தக்கவராய் இருக்கின்றீர்.
உலகம் – சூரியனுக்கு ராகுவும், நெருப்புக்கு நீரும், கடலுக்குப் பிரளய கால சூறாவளியும், சம்சார வாழ்க்கைக்கு தம்பதிகள் பிரிவும், ஒன்றுக் கொன்று விரோதமான பொருள்களைக் கொண்டே விளங்குகிறது. ஆனால் ஜினர் ஒருவரே எந்தவொரு விரோதியுமின்றி பரமார்த்த சொரூபமாய் விளங்குகிறார். அதனால் மரத்தின் அடியில் சென்றவனுக்கு நிழல் தானாகவே கிடைப்பதைப் போலவே, உம்மிடம் வேண்டியதை அளிக்கும்படி வேண்டாத போதும், உன்னை அண்டியவருக்கு சகல சுகமும், இதமும் கிடைக்கும்.
நூலாசிரியர் அடக்கத்துடன் வேண்டுவது போன்றே நாமும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து துதி செய்து வணங்குவோம்.
நூன்முகம் முற்றிற்று.
( 1 )
வ்யாபாரவேதீ விநிவ்ருத்தஸங்க I
ப்ரவ்ருத்தகா லோZப்யஜரோ வரேண்ய:
பாயாத பாயாத் புருஷ: புராண: II
குறிப்பு: இந்த ச்லோகம் விரோதாபாஸாலங்காரம் எனப்படுவது. இதில் ஒன்றுக்கொன்று விரோதமான விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த விரோதாபாஸத்தை விளக்கிக் கூறினால் உண்மையான அர்த்தம் விளங்கும். ச்லோகத்தின் விவரணமாவது:
1. எவனொருவன் ஆத்ம ஸ்வரூபத்தில் ஸ்திரமாய் இருக்கிறானோ. அவன் ஸர்வ வியாபனாக எப்படி இருக்க முடியும்? இது விரோதமானது. இதற்கு பரிஹாரமாவது: ஸ்ரீ பகவான் ஆத்ம ஞானப்பிரதேசத்தைக் காட்டிலும் ஆத்ம ரூபத்தில் தான் ஸ்திரமாய் இருக்கிறார். ஆனால், அவருடைய ஞானமானது அலோக ஆகாசதுடன் மூன்று லோகங்களிலும் உள்ள எல்லா பதார்த்தங்களையும் நேராக அறிந்திருக்கிறது. அவர் ஞானத்தினால் ஸர்வ வியாபியாய் இருக்கிறார்.
2. எவனொருவர்ன் ஜீவாதி பதார்த்தங்களின் கிரியைகள் (செய்கைகளை) எல்லாம் அறிந்திருக்கிறானோ, அவன் பரிக்கிரஹம் அற்றவனாக எப்படி இருக்க முடியும்? இது ஆபாசமானது. இதை விளக்க: அவர் முற்றிலும் துறந்தவர். ஆகவே அவர் பரிகிரஹமற்றவர்.
3. தீர்க்காயுள் உள்ள ஒருவன் கிழப் பருவம் இன்றி எப்படி இருக்க முடியும்? இது ஆபாஸமானது. இதை விவரிக்க: அவர் கர்மங்களை ஜயித்து இருக்கிறார். ஆகையால், கிழப் பருவம் அவருக்கு ஸம்பவிக்காது. அதாவது, இப்பொழுதும் முடிவு காலம் வரையிலும் ஆத்ம சுகத்துடனே ஸ்திரமாக இருப்பார் என்பதாம்.
( 2 )
பரைர சிந்த்யம் யுகபார மேக:
ஸ்தோதும் வஹந்நோகிபிரப்ர சக்ய: I
ஸ்துத்யோZத்ய மேZஸெள வ்ருஷபோ ந பாநோ:
கிமப்ரவேசே விடதி ப்ரதீப: II
( 3 )
தத்யாஜ சக்ர: சகநாபிமாநம்
நாஹம் த்யஜாமி ஸ்வதநாநு பந்தம் I
ஸ்வல்பேந போதேந ததோZதிகார்த்தம்
வாதாயநேநேவ நிரூபயாமி II
ஸ்தோத்திரஞ் செய்யக் கூடிய இந்திரனே தான் ஸ்தோத்திரஞ் செய்ய சாமர்த்தியம் உள்ளவன் என்கிற அபிமானத்தை (ஆவலை, பிரியத்தை, கர்வத்தை) விட்டுவிட்டான். ஆனால், நான் (கிரந்த கர்த்தா) ஸ்தோத்திரஞ் செய்யும் விருப்பத்தை விடவில்லை. ஆகையினால் ஒரு சிறிய ஜன்னலின் வழியாய் சிறிய வஸ்துக்களையே யன்றி, யானை போன்ற பெரிய வஸ்துக்களையும் பார்க்க கூடுவது போல், என் சிற்றறிவினால் அறியக்கூடிய பொருளைக் காட்டிலும், அதிகமான பொருள்களை விளங்கும்படியான இந்த ஸ்தோத்திரத்தை செய்ய முற்படுகிறேன் என்கிறார்.
( 4 )
த்வம் விச்வத்ரூருச்வா ஸகலை ரத்ருச்யோ
வித்வாநசேஷம் நிகிலை ரவேத்ய: I
வக்தும் கியாந் கீத்ருச இத்ய சக்ய:
ஸ்துதி ஸ்ததோZசக்திகதா தவாஸ்து II
ஏ பகவந்தரே! நீர் எல்லாவற்றையும் பார்ப்பவராய் இருந்தாலும், நீர் ஒருவராலும் காண முடியாதவர். நீர் எல்லாவற்றையும் அறிபவராயிருந்தாலும், நீர் ஒருவராலும் அறியப்பட முடியாதவர். நீர் எவ்வளவு பெரியவர், எப்பேர்ப்பட்டவர் என்று சொல்லுவதற்கு முடியாதவர். நீர் ஸர்வதர்சீ, ஸர்வஞ்ஞானி, அசிந்தியர் இப்படியாக அனந்த குணக் கடல். அவைகளை எண்ணிச் சொல்ல ஒருவராலும் முடியாது. அப்படி முடியாது என்கிற கதையே உம்முடைய ஸ்தோத்திரமாக இருக்கட்டும் என்கிறார்.
( 5 )
வ்யாபீடிதம் பாலமிவாத்ம தோஷ:
உல்லாகதாம் லோகமவாபி பஸ்த்வம் I
ஹிதாஹிதாந்வேஷண மாந்த்யபாஜ:
ஸர்வஸ்ய ஜந்தோரஸி பாலவைத்ய: II
பாலர்கள் தாங்கள் அறியாமல் செய்கிற தோஷங்களாலே ல்தாங்களே ரோகங்களை அடைகிறார்கள். பால வைத்தியன் (பாலர்களின் ரோகங்களைப் பரிஹரிக்கிற வைத்தியன்) அவைகளுக்குச் சிகிச்சை செய்து ரோகத்தை போக்குகிறான். அதே போல், ஸ்ரீ பகவான் உலகத்து ஜனங்களுக்கு ஒரு பால வைத்தியராக இருக்கிறர் என்கிறார். எப்படி என்றால், ஹிதா ஹிதங்களை (நல்ல-கெட்டவைகளை) தெரிந்து கொள்ளாமல், மனோ பிராந்தியினால், ஜனங்கள் செய்கின்ற துஷ்ட காரியங்களால், ஸம்ஸார துக்கங்களத் தாங்களே தேடிக் கொள்ளுகிறார்கள். அப்பேர்ப்பட்ட அஞ்ஞானி ஜனங்களுக்கு அஹிதமாகிய ஸம்ஸார சுழற்சிக்குக் காரணமானவற்றையும், ஹிதமாகிய மோக்ஷத்தை அடையும் மார்க்கத்தையும் போதித்து ஞான மார்க்கத்தில் திருந்துகிறபடியால் ஸ்ரீ பகவானை ஒருபாலர்களின் வைத்தியனுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
( 6 )
தாதா ந ஹர்த்தா திவஸம் விவஸ்யா
நத்ய ச்வ இத்யச்யுத! தர்சிதாச: I
ஸவ்யாஜமேவம் கமயத்ய சக்த:
க்ஷணெந தத்ஸே அபிமதம் நதாய: II
சூரியனானவன் (தரித்திரனானவன்) கடன் கொடுக்க சக்தியற்றவன் போல் இன்று, நாளை என்று ஆசை (திக்கைக்) காட்டி கொண்டு கபடத்துடன் நாளைக் கழிக்கிறானே தவிர, அவன் தன்னை வணங்கினவர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுப்பதில்லை. (சூரியன் தினம் காலையில் உதித்து, மாலையில் அஸ்தமிக்கிறதை தினம் நாளைக் கழிக்கிறான் என்கிறார்) ஆனால், அச்யுதனாகிய (ஸம்யக் தரிசன, ஞான, சாரித்திரங்களில் நழுவாதவரான) ஸ்ரீ பகவான் பவ்விய ஜனங்கள் வேண்டுகிற மோக்ஷத்தை தடையின்றி உடனே அளிக்கிறார் என்பதாம்.
விவச்வான் – சூரியன், தரித்திரன என்றும் பொருள் கூறலாம்.
ஆச்: - என்ற பதத்திற்கு ஆசை என்றும், திக்கு என்றும் இரு பொருள்கள் உண்டு. திக்கைக் காண்பித்தவனாய் என்றும் அர்த்தம் கூறலாம். இதர மதஸ்தர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வேண்டுவதைக் குறிப்பிட்டு, இந்த ஸ்தோத்திரம் செய்யப்பட்டு இருக்கிறது.
நல்ல முகத்தோடு பார்க்கிறவனுக்கு நல்ல முகத்தையும் கெட்ட முகத்தோடு பார்க்கிறவனுக்கு கெட்ட முகத்தையும் காட்டும் கண்ணாடி போல் ஸ்ரீ பகவானை சுமுகமாகப் பார்க்கிறவன் (ஸம்யக் திருஷ்டி) சுகங்களையும், மித்யா திருஷ்டி துக்கத்தையும் அடைகிறான். ஆனால் அவர் இந்த இருவருக்கும் அதே கண்ணாடியைப் போல் (மாறுதல் இல்லாது) எப்போதும் ஒரே மாதிரியாயும், சுத்த ஞானஸ்வரூபியாயும் இருக்கிறார் என்பதாம்.
( 7 )
உபைதி பக்த்யா ஸுமுக: ஸுகாநி
த்வயி ஸ்வபாவாத் விமுகச்ச துக்கம் I
ஸதாவ தாதத்யுதிரேக ரூப:
தயாஸ்த்வமாதர்ச இவாவபாஸி II
நல்ல முகத்தோடு பார்க்கிறவனுக்கு நல்ல முகத்தையும் கெட்ட முகத்தோடு பார்க்கிறவனுக்கு கெட்ட முகத்தையும் காட்டும் கண்ணாடி போல் ஸ்ரீ பகவானை சுமுகமாகப் பார்க்கிறவன் (ஸம்யக் திருஷ்டி) சுகங்களையும், மித்யா திருஷ்டி துக்கத்தையும் அடைகிறான். ஆனால் அவர் இந்த இருவருக்கும் அதே கண்ணாடியைப் போல் (மாறுதல் இல்லாது) எப்போதும் ஒரே மாதிரியாயும், சுத்த ஞானஸ்வரூபியாயும் இருக்கிறார் என்பதாம்.
( 8 )
அகாததாப்தே: ஸ யத: பயோதி
மேரோச்ச துங்கா: ப்ரக்ருதி: ஸ யத்ர I
த்யாவா ப்ருதிவ்யோ: ப்ருதுதா ததைவ
வ்யாப த்வதீயா புவநாந்தராணி II
உலகத்திலுள்ள சமுத்திரத்தின் ஆழம், மேரு மலையின் உயரம், பூமி, ஆகாயம் இவைகளின் விஸ்தாரம் இவ்வளவுதான் என்று வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. (ஸமுத்திரந்தின் ஆழம் 1000 யோஜனை. மகாமேரு மலையின் உயரம் 40 யோஜனை குறைந்த ஒரு லட்சம் யோஜனை, பூமி, லோகாசம் இவைகளின் விஸ்தாரம் 343 ரஜ்ஜு என்று சொல்லப்பட்டு இருக்கின்றன) ஆனால் ஸ்ரீ பகவானின் பெருமையானது அகில லோகங்களிலேலும், அதற்கப்பாலும் (அலோகங்களிலேயும்) வியாபித்து இருக்கிறது,. அதாவது லோகாதிசயரான ஸ்ரீ பகவான் “ஸர்வலோக வியாபி” ஆக இருக்கிறார்.
( 9 )
தவாநவஸ்தா பரமார்த்த தத்வம்
தவயா ந கீத: புநராகமச்ச I
த்ருஷ்டம் விஹாய த்வமத்ருஷடமைஷீ
விருத்த வ்ருத்தோZபி ஸமங்ஜஸஸ்தவம்: II
.
( 10 )
ஸ்மர ஸுதக்தோ பவதைவ தஸ்மிந்
உத்தூலிதாத்மா யதி நாம சம்பு: I
அசேத வ்ருந்தோபஹதோZபி விஷ்ணு
கிம் க்ருஹ்யதே யேந பவாநஜாக: II
பரமசிவன் மன்மதனை எரித்தான் என்பது பொய்யாகும். பரமசிவன் அந்த சாம்பலை பூசிக் கொண்டும், பார்வதியைக் கல்லியாணம் செய்து கொண்டும், தன் சரீரத்தில் பாதியை அவளுக்குக் கொடுத்தும், பற்றுள்ளவனாயும், காம இச்சையினால் புரளுகிறார். ஸ்ரீ மகா விஷ்ணுவோ பெண்டு, பிள்ளைகள், பரிவாரங்களோடு திருப்பாற்கடலில் ஆதி சேஷன் படுக்கையில் அவர்கள் எல்லாம் பாஹிய பரிக்கிரஹங்களோடு ஒட்டினவர்களாய் தோஷங்களோடு கூடி, காமபீதர்களாயுள்ளார்கள். ஆனால் ஸ்ரீ பகவான் ஒருவரே 18 வகை தோஷங்களும் அற்றவராய், அந்தரங்க, பஹிரங்க பரிக்கிரகங்களின்றி, உண்மையில் காமனை ஜயித்தவராயும், சுத்த கேவலஞ்ஞான் ரூபமாயும் இருக்கிறார். ஆகவே, அவர் ஒருவரே நம்மால் கிரஹிக்க (கொண்டாட – வணங்க)த் தகுந்தவர் என்பதாம்.
( 11 )
ஸ நீரஜா: ஸ்யாதபரோZகவாந் வா
தத்தோஷ கீர்த்யைவ ந தே குணித்வம்I
ஸ்வதோZம்புராசேர்மஹிமா ந தேவ
ஸ்தோகாபவா தேந ஜலாசயஸ்ய II
குளம், குட்டை முதலிய நீர்த் தேக்கங்கள் சிறியவையாயுள்ளன என்பதினால் மட்டும் பெரிய நீர்த்தேக்கமாகிய ஸமுத்திரத்திற்குப் பெருமை ஏற்பட்டு விடவில்லை. அதற்குப் பெருமை சுயமாகவே ஏற்பட்டு உள்ளது. அதே போல் மற்ற தெயவங்கள் தோஷம் உள்ளவர்கள் என்று கூறுவதினால் மட்டும் ஸ்ரீ பகவானுக்குப் பெருமை உண்டாகவில்லை. அவருக்குப் பெருமை இயற்கையாகவே அமைந்து உள்ளது.
( 12 )
கர்மஸ்திதிம் ஐந்துரநேக பூமிம்
நயத்யமும் சா ச பரஸ்பரஸ்ய I
த்வம் நேத்ருபாவம் ஹி தயோர்பவாம்தெள
ஜிநேந்த்ரா! நெளநாவிகயோரிவாக்ய: II
ஒரு படகு ஓட்டியானவன் அப்படகை ஓட்டிக் கொண்டு போகிறான். அப்படகோ அவனை ஏற்றிக் கொண்டு போகிறது. இவ்விதம் இரண்டிற்கும் ஒரு நேத்ரு பாவம் (ஒருவருக்கொருவர் எஜமானர் என்கிற தன்மை) ஏற்பட்டு இருக்கிறது. அதே போல், ஜீவன் கர்மாவில் உழலும் போது அந்த ஜீவன் பலவித பரிவர்த்தனைகளை (மாறுதலான பிறவிகளை) அடைகிறான், அந்த கர்மாவும் அந்த ஜீவனைப் பல பிறவிகளை அடையச் செய்கிறது. ஆகவே அந்த ஜீவன், கர்மா இரண்டிற்கும் நேத்ரு பாவம் (ஸம்மந்தம்) இருக்கிறது என்று ஸ்ரீ பகவான் கூறியிருப்பது வாஸ்தவம் தான் என்கிறார்.
( 13 )
ஸுகாய துக்காநி குணாய தோஷாந்
தர்மாய பாபாநி ஸமாசரந்தி I
தைலாய பாலா: ஸிகதா ஸமூஹம்
நிபீடயந்தி ஸ்புடமத்வதீயா: II
எண்ணெயை அடைவதற்காக என்று மணற் குவியலைப் பிழிகிற (மணலிலிருந்து எண்ணெய் எடுக்க முடியாது என்று அறியாத) மூடர்களாகிற சிறுவர்களைப் போல், மித்யா திருஷ்டிகள் சுகத்தை அடைவதற்காக என்று பர்வதத்தில் இருந்து விழுதல், தீக்குளித்தல் முதலிய துக்கங்களாகிய காரியங்களையும், நல்ல குணத்தை அடைய வேண்டியதற்காக வென்று சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், ருத்திராக்ஷங்களை அணிதல் முதலிய பல தோஷமான் செயல்களையும், தர்மம் செய்வதாக எண்ணி அச்வமேதம், நரமேதம் முதலிய யாகங்கள், யக்ஞங்கள் முதலியன பாபமான காரியங்களையும் செய்கிறார்கள். இவைகளால் ஒரு நன்மையும் ஏற்படாது. பல துக்க ஸம்ஸார சுழற்சிக்கே காரணம் ஆகும் என்பதாம்.
( 16 )
த்ரிகாலதத்வம் த்வமவை ஸ்த்ரிலோகீ
ஸ்வாமீதி ஸங்க்யாநியதே ரமீஷாம் I
யோதாதிபத்யம் ப்ரதி நாபவிஷ்யத்
தேZந்தேZபி சேத் வ்யாப்ஸ்யதமூநபீதம் II
( 17 )
நாகஸ்ய பத்யு: பரிகர்ம ரம்யம்
நாகம்யரூபஸ்ய தவோபகாரீ I
தஸ்யைவ ஹேது: ஸ்வஸுகஸ்ய பாநோ
உத்பிப்ரதஸ்ச்சத்ரமிவாதரேண: II
சூரியனுக்காக விருப்பத்துடன் மேலே தூக்கிப் பிடிக்கப்பட்ட குடையானது அச் சூரியனுக்கு ஒரு உபகாரமும் செய்வதில்லை. ஆனால், அது பிடிப்பவனுக்கே சூரிய உஷ்ணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. அதே போல், நித்திய நிரஞ்ஜனனான, ஞான மூர்த்தியாகிய உமக்குத் தேவேந்திரனால் செய்யப்பட்ட மனோஹரமான சேவைகளினால் ஒரு உபகாரமும் செய்வதாகாது. அந்த ஸேவையானது அந்த இந்திரனுக்கே ஆத்ம சுகத்துக்குக் காரணமாய் உள்ளது. அதாவது: ஸ்ரீ பகவானை சேவை செய்வது செய்கிறவனுடைய ஆத்ம சுகத்துக்கே காரணமாய் உள்ளதென்பதாகும்.
( 18 )
க்வோபேக்ஷகஸ்த்வம் க்வ ஸுகோபதேச:
ஸ சேத் கிமிச்சா ப்ரதிகூலவாத: I
க்வாஸெள க்வ வா ஸர்வஜகத் ப்ரியத்வம்
தந்நோ யதாதத்ய மவேவிசம் தே II
ஏ ஸ்வாமியே! நீர் விருப்பு அற்றவர். அப்படியிருக்க நீர் ஜனங்களுக்கு சுகத்தைப் போதிப்பது எப்படி முடியும்? அப்படி சுகத்தைப் போதிப்பதனால், ஜனங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாய்ப் போதிப்பது எப்படி முடியும்? நீர் ஜனங்களின் இச்சைக்கு விரோதமாய்ப் போதிக்கும் வசனமானது ஸர்வ ஜகத்துக்கும் எப்படி பிரியமாய் இருக்க முடியும்? இவைகள் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயிருக்கிறது. ஆகையினால் உம்முடைய உண்மையான தன்மையை நான் அறியக் கூடவில்லை என்கிறார்.
( 19 )
துங்காத் பலம் யத் ததகிஞ்சநாச்ச
ப்ராப்யம் சம்ருதாந்ந தநேச்வராதே: I
நிரம்பஸோZப்யுச்சதமாதிவாத்ரே:
நைகாபி நிர்யதி துநீ பயோதே: II
ஜலமே இல்லாத மிக உயர்ந்த மலையிலிருந்து பல ஆறுகள் உற்பத்தி ஆகின்றன. ஆனால், ஏராளமாய் ஜலம் நிறைந்துள்ள ஸமுத்திரத்திலிருந்து ஒரு நதியும் உற்பத்தியாகிறதில்லை. அதே போல், தரித்திரரான மிக உயர்ந்த ஸ்ரீ பகவானிடமிருந்து என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலனை, குபேரன் முதலிய லட்சுமீ ஸம்பத்து நிறைந்தவர்களிடமிருந்து அடைய முடியாது. அதாவது, ஸ்ரீ பகவானிடத்தில் ஒரு அணு கூட பரிக்கிரகம் கிடையாது. அப்படியிருந்தும், அனந்தஞானதி குணங்களினால் மிக உயர்ந்தவரான அவரிடமிருந்து அனந்த சுகங்களை அடையலாம் என்பதாம்.
( 20 )
த்ரைலோக்ய ஸேவா நியமாய தண்டம்
தத்ரே யதிந்த்ரோ விந்யேந தஸ்ய I
தத் பிராதிஹார்யம் பவத: குதஸ்த்யம்
தத் கர்மயோகாத் யதிவா தவாஸ்து: II
இந்திரன் மூன்று லோகத்தின் ஸேவைக்காக (ஜனங்களைக் காப்பாற்றுவதற்காக) கதாயுதத்தைத் தரிக்கிறான். அது அவனுடைய துவார பாலகத் தொழிலை விநயத்தோடு செய்வதற்குத் தகுதி தான். (உமக்கு அசோக விருக்ஷம் முதலிய எட்டு பிராதிஹார்யங்கள் உள்ளனவே), அதனால் அந்த ஸேவகத் தொழில் உமக்கு எப்படி உண்டாயிற்று? அதுவும் சரிதான். நீர் தீர்த்தங்கரன் என்ற நாமத்தை (பெயரை) அடைந்திருப்பதனால், அந்த நாமகர்ம யோகத்தினால் (அந்த ஜனங்களைக் காப்பாற்றும் தொழில், அல்லது எட்டு வித பிராதிஹார்யங்கள்) உமக்கு இருக்கட்டும் என்கிறார்.
எட்டு பிராதிஹார்யங்களாவன: 1. அசோக விருக்ஷம், 2. இரத்தின சிம்மாசனம், 3. பிரபா மண்டலம், 4. முக்குடை, 5. சாமரங்கள், 6. திவ்வியத்துவனி, 7. தேவ புஷ்ப வர்ஷம், 8. தேவ துந்துபி முதலியன.
குறிப்பு: பகவான் ஸ்ரீ விருஷப ஸ்வாமியானவர், இந்த பூமியானது போக பூமியாயிருந்து, கர்ம பூமியாய் மாறின காலத்தில், அந்த கர்ம பூமியினுடைய வியவஸ்தைகளச் செய்ய முற்பட்ட பொழுது, தேவேந்திரன் தேவ உலகத்திலிருந்து வந்து, கதாயுதத்தைத் தரிசித்து ஸ்ரீ பகவானுக்குப் பணிவிடை செய்ததாகச் கூறப்பட்டிருக்கிறது. அதுவே, இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
( 21 )
ஸ்ரீயா பரம் பச்யதி ஸாது நி:ஸ்வ:
ஸ்ரீமாந்த கஸ்சித் க்ருபணம்த்வதந்ய: I
யதா ப்ரகாசஸ்தித மந்தகார-
ஸ்தாயீக்ஷதேZஸெள ந ததா தமஸ்ஸ்தம் II
இருட்டில் இருப்பவன் வெளிச்சத்தில் இருப்பவனை எவ்வளவு நன்றாய்ப் பார்க்கிறானோ, அவ்வளவு நன்றாய் வெளிச்சத்தில் இருப்பவன் இருட்டில் இருப்பவனைக் காண முடியாது. இது உலக இயற்கை. அதே பேல், தனம், தானியம், முதலிய லட்சுமி (சம்பத்து)களுடன் கூடிய பணக்காரனை ஏழைகள் மிக விருப்போடு நோக்குகிறார்கள். ஸ்ரீ பகவானும் ஞானாதி அனந்த சதுஷ்டய ஸம்பத்துக்களுடன் கூடியவர். அவரும் ஒரு பணக்காரனுக்குச் சமமே. அவரையும் சம்பத்துக்கள் இல்லாதவர்கள் விருப்போடு வேண்டுகிறார்கள். ஆனால், அந்த பணக்காரர்கள் ஏழைகளை விருப்போடு பார்ப்பதில்லை. வெறுப்போடு தான் பார்க்கிறார்கள். ஸ்ரீ பகவான் ஒருவரே அவர்களுக்கு ஹிதமான உபதேசத்தைக் கொடுத்து, தன்னைப் போல் ஞானாதி ஸம்பத்துக்களையும் அளித்துச் சுகமடையச் செய்கிறார். அவரே ஒப்பற்றவர், அவரே ஸகலத்தையும் அளிக்க வல்லவர்.
குறிப்பு: பக்தாமரம் 10வது ஸ்லோகத்துடன் ஒப்பு நோக்குக.
( 22 )
ஸ்வ வ்ருத்தி நிச்வாஸ நிமேஷ பாஜி
ப்ரத்யக்ஷ மாத்மாநுபவேZபி மூட: I
கிம் சாகிலஞ்ஞேய விவர்த்திபோத –
ஸ்வரூப மத்யக்ஷமவதி லோக: II
தன்னுடைய சுய வளர்ச்சி, மூச்சு விடுதல், இமை கொட்டுதல் முதலியவற்றை அடைந்துள்ள மனிதன் தன் அனுபவத்திலும் (அவற்றை அறிய மாட்டாதவன்) மூடன் என்பது வெளிப்படை (எல்லோரும் அறிந்தது). அப்பேர்ப்பட்ட மூட மனிதன் ஸகல வஸ்துக்கலையும், அவற்றின் பர்யாயங்களையும் ஒருங்கே அறியக் கூடிய கேவலஞ்ஞானரூபனும், அமூர்த்தனம், சித்ஸ்வரூபனுமாகிய பகவானை (உம்மை) அறியவது எப்படி? (முடியாது).
( 23 )
தஸ்யாத் மஜஸ்தஸ்ய பிதேதி தேவ!
த்வாம் ஹேZவகாயந்தி குலம் ப்ரகாச்ய I
தேZத்யாபி நச்வாச்மநமித்யவச்யம்
பாணெள க்ருதம் ஹேம புநஸ்த்யஜந்தி II
தன் கையில் கிடைத்த ஸ்வர்ணத்தை (தங்கத்தை) கல்லென்றும், கல்லிலிருந்து உண்டானது என்றும் சொலி விட்டெறிந்து விடுகிறவர்கள் மூடர்களே தவிர வேறல்லர். அப்பேர்ப்பட்ட மூடர்கள் தான் ஏ பகவானே! உம்மைப் பார்த்து, நீர் நாபியின் பிள்ளை தானே என்றும், பரதனுடைய தகப்பன் தானே என்றும் அலட்சியமாக உம்முடைய குலத்தைப் பற்றிக் கூறி அவமானமாய் பேசுவார்களே ஒழிய, உம்முடைய பரமார்த்திக ஸ்வரூபத்தைத் தியானித்து, உம்முடைய அனந்த குணங்களை ஸ்துதி செய்து, பரமார்த்மாவாகிய உம்மை ஆராதிக்கிறார்களில்லை. அதாவது ஸ்வாமியினுடைய சரீர சம்பந்தத்தைக் கூறி ஸ்துதி செய்வது அவரை அவமானப்படுத்துவதாகும். ஸ்ரீ பகவானுடைய ஆத்மீய குணங்களை ஸ்மரித்து, ஆராதனை பூர்வகம் அடைய அனந்த குணங்களைத் தரித்து, நிஜ சுத்தாத்ம அனுபவத்தை அடைவது தான் அவருக்குச் செய்யும் உண்மையான ஸ்துதியாகும் என்பதாம்.
( 24 )
தத்தஸ்த்ரிலோக்யாம் படஹோZபி பூதா:
ஸுராஸு ராஸ்தஸ்ய மஹாந்ஸ லாப: I
மோஹஸ்ய மோஹஸ்த்வயி கோ விரோத்தும்
மூலஸ்ய நாசோ பலவத விரோத: II
.தேவர்களும், அசுரர்களும் மோஹத்தினால் ஜயிக்கப் பட்டார்கள் என்று மூன்று லோகங்களிலும் பறையறைவித்துப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அது அந்த மோஹத்துக்குப் பெரிய லாபம் தான். ஆனால் அந்த ஜயமடைந்த மோஹத்துக்கு உம்மை விரோதித்துக் கொள்ள எப்படி மோஹம் (விருப்பம்) உண்டாகும்? நீர் மோஹத்தை வென்றவர். தன்னை விட பலவானிடத்தில் விரோதிப்பது அடியோடு நாசத்தை அடைவிக்கும் அல்லவா?
இராக த்துவேஷ மோக பாவங்களினால், ஸகல ஜீவர்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் உம்மை அந்த இராக த்துவேஷ, மோக பாவத்தினால் வசப்படுத்த முடியாது. அதாவது, எந்த ஸம்யக் திருஷ்டி பவ்விய ஜீவனானவன் ஸ்ரீ பகவானை ஆச்ரயத்து, ஸம்யக்ஞான பாவத்தோடு (உணர்வோடு) ஹேய, உபாதேய ஸ்வரூபங்களை அறிந்து, உபாதேய பூதமாகிய ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து அனுபவிக்கிறானோ, அவன் பகவானுக்கு ஸமமாய் நிமோஹனாகி, பரமாத்மாவாக ஆகின்றான் என்பதாம்.
( 25 )
மார்கஸ்த்வயைகோ தத்ருசே விமுக்தே:
சதுர்கதீநாம் கஹநம் பரேண I
ஸர்வம் மயா த்ருஷ்டமிதி ஸ்மயேந
த்வம் மா கதாசித் புஜமாலுலோக: II
ஏ பகவானே! உம்மால் மோக்ஷத்தை அடைய ஒரு மார்க்கம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், மற்ற தெய்வங்கள் காட்டும் வழியானது தேவ, மனுஷ்ய, நரக, திருயக் என்கிற நான்கு கதிகளில் கொண்டு செல்லும்படியான வழியாய் இருக்கிறது. அதனால், நீர், ”நாம் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம்” என்று இறுமாப்பை அடைந்து, உம்முடைய தோளைப் பார்த்துக் கொள்கிறதில்லை. நீர் கர்வம் கொள்வதில்லை. அல்லது நீர் மோக்ஷபதியாயுள்ளீர். நீர் இராகம், துவேஷம், மோஹம் முதலிய எல்லாவற்றையும் விட்டவர். அன்னிய தெய்வங்கள் நான்கு கதிகளிலும் உழன்று, பிரமை பிடித்து, ஸம்ஸாரத்தில் உழலுகிறார்கள் என்று நிந்தா ஸ்துதி யாகவும் கூறலாம்.
( 26 )
ஸ்வர்பா நுரர்கஸ்ய ஹவிர்புஜோZம்ப:
கல்பாந்த வாதோZம் புரிதேர் விகாத: I
ஸம்ஸார போகஸ்ய வியோகபாவோ
விபக்ஷ பூவாப்யுதயாஸ்த்வதந்யே: II
சூரியனுக்கு இராகுவும், அக்கினிக்கு ஜலமும், ஸமுத்திரத்துக்குப் பிரளய காலத்துக் காற்றும், ஸம்ஸார போகத்துக்கு சதி – பதிகளின் பிரிவும் விரோதமானவைகள். அதாவது, உலகில் ஒவ்வொரு பொருளும் விரோதிகளை முன்னிட்டுக் கொண்டு விருத்தி அடைகின்றன. ஸ்ரீ பகவான் ஒருவரே யாதொரு விரோதியும் அற்றவர் என்பதாம்.
( 27 )
அஜாநதஸ்த்வாம் நமத: பலம் யத்
தஜ்ஜாநதோZந்யம் ந து தேவதேதி I
ஹரிந்மணிம் காசதியா ததாந:
தம் தஸ்ய புத்யா வஹதோ ந ரிக்த: II
எப்படி ஒரு பச்சை இரத்தினத்தைக் கண்ணாடி மணி என்ற புத்தியினால் (அறியாமையினால்) அணிகிற புருஷன், கண்ணாடி மணியைப் பச்சை இரத்தினம் என்ற புத்தியினால் (அறிந்தே) அணிகிற புருஷனை காட்ட்டிலும் தரித்திரன் அல்லவோ அதாவது, பின்னவன் தான் தரித்திரனே தவிர முன்னவன் தரித்திரன் அல்லன். அதே போல, ஸ்ரீ பகவானை அறியாமல் நமஸ்கரிக்கிற புருஷனுக்குக் கிடைக்கிற பலன், அன்னிய பிரம்மா, விஷ்ணு, சிவன், புத்தன் முதலியவர்களைத் தெய்வங்களென்று நினைத்து வழிபடுகிறவர்களுக்கு கிடைக்க மாட்டாது. அதாவது, ஸ்ரீ பகவான் ஒருவரே ஸகல் நன்மைகளையும் அளிக்க வல்லவர் என்பதாம். இதுவும் நிந்தாஸ் துதியாம்.
( 28 )
ப்ரசஸ்தவாசஸ்சதுரா: கஷாயை:
தக்தஸ்ய தேவவ்யஹாரமாஹு: I
கதஸ்ய தீபஸ்ய ஹி நந்திதத்வம்
த்ருஷ்டம் கபாலஸ்ய ச மங்களத்வம் II
வாக்கு சாதுர்யம் உள்ளவர்களால் கோபம் முதலிய பல குற்றங்கள் நிறைந்த தேவர்களுக்குப் பரமேச்வரன் முதலிய பல தெய்வங்கள் பெயர்களைச் சொல்லுகிறார்கள். அப்படி அவர்கள் கூறுவது அணைந்த தீபத்துக்கு திருவிளக்கு என்றும், பிச்சை எடுக்கிற மண்டை ஓட்டுக்கு திருவோடு என்கிற மங்களகரமான வார்த்தையையும் கூறுவது போல் ஆகும். பரமேச்வரன் முதலியவர்கள் தெய்வங்கள் என்று சொல்வதற்குஹ் தகுதியற்றவர்கள். ஏனென்றால், அவர்கள் குற்றம் நிறைந்த வர்களாய், ஸம்ஸாரிகளாய் இருக்கிறார்கள். ஸ்ரீ பகவான் ஒருவரே 18 வகை குற்றங்களும் நீங்கினவராய், பரமார்த்த ஸ்வரூபியாய் விளங்குகிறார். அவரே, மோக்ஷபதி, அவரே தெய்வம் என்று கூற தகுதி உள்ளவர் என்பதாம்.
( 29 )
நாநார்த்த மேகார்த்த மதஸ்த்வ துக்கம்
ஹிதம் வசஸ்தே நிசமய்ய வக்து: I
நிர்தோஷதாம் கேந விபாவ யந்தி
ஜ்வரேண முக்த: ஸுகம: ஸ்வரேண: II
ஜ்வரத்திலிருந்து விடுபட்டவனை (நீங்கினவனை) எப்படி நாம் அவனுடைய குரலிலிருந்து அறிந்து கொள்ளுகிறோமோ, அதே போல், ஏ பகவானே! உம்முடைய ஒப்பற்ற, முன் – பின் விரோதமில்லாத, எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய, பிரஸித்தமான திவ்வியத் துவனியைக் கேட்டு உம்முடைய தோஷமில்லாத தன்மையை (குணத்தை) யாரும் அறிந்து கொள்ளலாம். உம்முடைய திவ்வியத்துவனி (குரல்) அவ்வளவு மேன்மையாக இருப்பதால், நீரே தோஷமில்லாதவர், மேலானவர் என்பதாம்.
( 30 )
ந க்வாபி வாஞ்சா வவ்ருதே ச வாக் தே
காலே க்வசித் கோZபி ததா நியோக: I
ந பூரயாம் யம்புதிமித்யுதம்சு:
ஸ்வயம் ஹி சீதத்யுதிரப் யுபைதி II
பூர்ணசந்திரன் உயரக் கிளம்பும் போதே ஸமுத்திரத்தைப் பொங்க வைக்கப் போவதாக எண்ணிக் கொண்டே வெளிக் கிளம்புகிறதில்லை. சந்திரன் தானாகக் கிளம்புகிறான். ஸமுத்திரம் தானாகப் பொங்குகிறது. அதே போல், ஸ்வாமியினுடைய திவ்வியத்துவனியானது ஒரு காலத்தில் வெளிக்கிளம்பிற்று. ஆனால், அவர் ஒன்றிலும் விருப்பு, வெறுப்பு அற்றவர். அவர் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு (கருத்தோடு) த்வியத்துவனியைக் கிளப்பவில்லை. அது தானாக கிளம்பிற்று. அது ஜனங்களுக்கு நன்மையைச் செய்வதாக ஆகிறது. என்பதாம்.
ஏ குணஸமுத்திரரே! தங்களுடைய குணங்கள் கம்பீரமானவைகளாயும், ஸர்வோத் கிருஷ்டமானவைகளாயும் (உயர்ந்தவைகளாயும்) பிரஸித்தமானவைகளாயும், நானாவிதமானவைகளாயும், கணக்கற்றவைகளாயும் உள்ளன. ஸ்தோத்திரங்களினால் அவைகளுக்கு முடிவு காணமுடியாது. ஏனென்றால், அவை முடிவற்றதாய் உள்ளன. இதைவிட (இதில் அடங்காத) வேறு என்ன குணங்கள் உள்ளன? ஒன்றும் இல்லை. அதாவது தாங்கள் ஸகல குண ஸம்பன்னர். தங்களிடம் குணங்களுக்குக் குறைவே கிடையாது என்பதாம்.
கேவலம் வெறும் ஸ்துதி செய்வதால் மட்டும் நாம் விரும்பியவற்றை அடைய முடியாது. பக்தி, வணக்க்ம முதலியவையும் இருக்க வேண்டும். ஆகையினால், நான் ஏ பகவானே! தங்களை ஸ்துதி செய்வதோடு கூட எப்பொழுதும் பூஜிக்கிறேன், மனதினாலும் ஸ்மரிக்கிறேன். வணக்கத்தினாலும் வணங்குகிறேன். எப்படியாவது பலன் கிடைத்தால் போதுமானது என்பதாம்.
சாஸ்வதமாயிருப்பவரும், பரஞ்ஜோதி ஸ்வரூபரும், அநந்த வீரியத்தை உடையவரும், புண்ணிய பாபம் இல்லாதவரும், பிறருடைய புண்ணியத்துக்க் காரணமானவரும், பிறரால் சேவிக்கத் தக்கவரும், தான் பிறரை ஸேவிக்காதவரும், மூன்று லோகங்களுக்கும் ஸ்வாமியாயும் இருக்கப்பட்ட உம்மை (ஸ்ரீ பகவானை) நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.
( 31 )
குணா கபீரா: ப்ரமா: ப்ரஸந்நா:
பஹுப்ரகாரா பஹவஸ்தவேதி I
த்ருஷ்டோZயமந்த: ஸ்தாநேந தேஷாம்
குணோ குணாநாம் கிமத: பரோZஸ்தி II
ஏ குணஸமுத்திரரே! தங்களுடைய குணங்கள் கம்பீரமானவைகளாயும், ஸர்வோத் கிருஷ்டமானவைகளாயும் (உயர்ந்தவைகளாயும்) பிரஸித்தமானவைகளாயும், நானாவிதமானவைகளாயும், கணக்கற்றவைகளாயும் உள்ளன. ஸ்தோத்திரங்களினால் அவைகளுக்கு முடிவு காணமுடியாது. ஏனென்றால், அவை முடிவற்றதாய் உள்ளன. இதைவிட (இதில் அடங்காத) வேறு என்ன குணங்கள் உள்ளன? ஒன்றும் இல்லை. அதாவது தாங்கள் ஸகல குண ஸம்பன்னர். தங்களிடம் குணங்களுக்குக் குறைவே கிடையாது என்பதாம்.
( 32 )
ஸ்துத்யா பரம் நாபிமதம் ஹி பக்த்யா
ஸ்ம்ருத்யா ப்ரணத்யா ச ததோ பஜாமி I
ஸ்மராமி தேவம் ப்ரணமாமி நித்யம்
கேநாயுபாயேந பலம் ஹி ஸாத்யம் II
கேவலம் வெறும் ஸ்துதி செய்வதால் மட்டும் நாம் விரும்பியவற்றை அடைய முடியாது. பக்தி, வணக்க்ம முதலியவையும் இருக்க வேண்டும். ஆகையினால், நான் ஏ பகவானே! தங்களை ஸ்துதி செய்வதோடு கூட எப்பொழுதும் பூஜிக்கிறேன், மனதினாலும் ஸ்மரிக்கிறேன். வணக்கத்தினாலும் வணங்குகிறேன். எப்படியாவது பலன் கிடைத்தால் போதுமானது என்பதாம்.
( 33 )
ததஸ்திலோகீ நகராதி தேவம்
நித்யம் பரஞ் ஜோதிரநந்த சக்திம் I
அபுண்ய பாபம் பரபுண்ய ஹேதும்
நமாம்யஹம் வந்த்ய மவந்திதாரம் II
சாஸ்வதமாயிருப்பவரும், பரஞ்ஜோதி ஸ்வரூபரும், அநந்த வீரியத்தை உடையவரும், புண்ணிய பாபம் இல்லாதவரும், பிறருடைய புண்ணியத்துக்க் காரணமானவரும், பிறரால் சேவிக்கத் தக்கவரும், தான் பிறரை ஸேவிக்காதவரும், மூன்று லோகங்களுக்கும் ஸ்வாமியாயும் இருக்கப்பட்ட உம்மை (ஸ்ரீ பகவானை) நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.
( 34 )
அசப்தமஸ்பர்ச மரூபகந்தம்
த்வாம் நீரஸந்தத் விஷயாவ போதம் I
ஸர்வஸ்ய மாதாரமமேய மந்யை:
ஜினேந்த்ர மஸ்மார்ய மநுஸ்மராமி: II
ஏ தேவரே! சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தம் என்ற ஐந்து இந்திரியங்களின் உணர்ச்சி அற்றவரும், ஆனால் அவற்றின் குணங்களை அறிந்தவரும் எல்லாவற்றையும் அளவிடக்கூடியவரும், மற்றவர்களால் அவருடைய குணங்களை நினைக்க அல்லது அளவிட முடியாதவரும் ஆன ஜினேந்திரராகிய உம்மை நான் அடிக்கடி ஸ்மரிக்கிறேன் என்றபடி.
( 35 )
அகாத மந்யைர் மநஸாப்ய லங்க்யம்
நிஷ்கிஞ்சநம் ப்ரார்த்தித மர்தவத்பி: I
விச்வஸ்ய பாரம் தமத்ருஷ்ட பாரம்
பதிம் ஜிநாநாம் சரணம் வ்ரஜாமி:II
கம்பீரமானவரும், ஒருவராலும் மனசினால் சிந்திக்க முடியாதவரும், பற்றற்றவரும், அறிஞர்களால் வேண்டப்பட்டவரும்,ம் உலகத்துக்குக் கரையாயிருப்பவரும் (ஞானத்தை போதிப்பவரும்) தனக்குக் கரையற்றவரும் (தன் மகிமைக்கு எல்லையில்லாதவரும்) ஆன ஜினர்களுக்குத் தலைவனை ஸ்ரீ விருஷப ஸ்வாமியை சரணம் என்று அடைகிறேன்.
ஏ ஜினநாதரே! தாங்கள் குணங்களின் மூலம் கம்பீரமான வராயிருக்கிறீர். அன்னியர்கள் அந்த குணங்களின் ஆழம் வரையில் போய்ச் சேர முடியாது. பற்றற்றவர், ஒரு மரமாணு கூட பற்று இல்லாதவர், இருந்தாலும் குபேரன் முதலிய சக்கரவர்த்திகளும் உம்மை யாசிக்கின்றனர். ஏனெனில், நீர் அனந்த வீரியம், அனந்த சுகம், அனந்த ஞானம், அனந்த தரிசனம் ஆகிய அனந்த சதுஷ்டயங்களுடன் கூடி அந்தரங்க லட்சுமியினால் சோபிக்கின்றீர். அதனால், அவர்கள் யாசிப்பது நியாயம்தான். நீர் உலகத்திலுள்ள எல்லாப் பதார்த்தங்களின் எல்லையையும் கடந்து விட்டீர். மற்றவர்களையும் கடக்கச் செய்கிறீர். ஆனால் நீர் நடந்து சென்ற இடத்துக்கு மற்றொருவராலும் கடந்து செல்ல முடிவதில்லை. அப்பேர்பட்ட ஜினநாதரின் பாத கமலங்களில் சரண் அடைகிறேன்.
( 36 )
த்ரைளோக்ய தீக்ஷாகுரவே நமஸ்தே
யொ வர்த்தமாநோZபி நிஜோந்நதோ அபூத் I
ப்ராக்கண்ட சைல: புநரத்ரிகல்ப:
பஸ்சாந்ந மேரு: குலபர்வதோzபூத் II
மகா மேரு பர்வதமானது முதலில் சிறு குன்றுவாயிருந்து வளர்ந்து பெரிதாகி பெரிய குல பர்வதமாகி விடவில்லையா? ஆனால் யாரொருவர் ஸ்ரீ வர்த்தமானர் (வளர்ந்து கொண்டிருகிறவர்) தீர்த்தங்கரராயிருந்தாலும், அவர் தானே உயர்ந்தவராயிருக்கின்றார். ஏ ஸ்வாமியே! இவ்வாறு மூன்று உலகத்து ஜனங்களுக்கும் தீக்ஷையை உபதேசிக்கும் குருவாகிய உம் பொருட்டு நமஸ்காரம் செய்கிறேன் என்கிறார்.
1.வர்த்தமாந: ஸ்ரீ வர்த்தமானர் என்கிற 24வது தீர்த்தங்கரர், வளர்ந்து கொண்டிருக்கிறவர் (சந்தான காலம்) என்று இரு பொருள்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
2.இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ச்லோகத்தில் ஸ்ரீ விருஷப ஸ்வாமியாகிய ஆதி தீர்த்தங்கரரை வணங்கி, இந்த ச்லோகத்தில் 24வது ஸ்ரீ வீர வர்த்தமான ஸ்வாமியைக் குறித்து ஸ்தோத்திரம் செய்வதால், இச்சுலோகம் ஸ்ரீ வீர வர்த்தமான ஸ்வாமிக்கிகேயன்றி, 24 தீர்த்தங்கரர்களுக்கும் ஸ்தோத்திரஞ் செய்வதாகவும் கொள்ளலாம்.
( 37 )
ஸ்வயம் ப்ரகாசஸ்ய திவா நிசா வா
ந பாத்யதா யஸ்ய ந பாத கத்வம் I
ந லாகவம் கெளரவ மேகரூபம்
வந்தே விபும் காலகலாமதீதம் II
ஏ ஸ்வாமியே! நீர் கேவவலக்ஞான ஸ்வரூபத்தில் பரம ஜோதியாய் விளங்குகிறீர். உமக்குப் பகலினாலாவது, இரவினாலாவது ஒரு பாதகமும் இல்லை. அல்லது நீர் அவைகளைப் பாதிக்கிற தன்மையை உடையவராயும் இல்லை. பகல் – இரவு என்கிற பாதகம் (வித்தியாசம்) உமக்குப் கிடையாது. எப்போதும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறீர். தவிர, உமக்கு லகு தன்மையும் இல்லை, மேன்மையான தன்மையுமில்லை. (நீர் அகுருலகு, அவ்யா பாதகம் முதலிய குணங்களோடு விளங்கப்பட்டவர்). நீர் காலத்தின் அம்சமாகிய சமயங்களையும் தாண்டினவர். (நீர் காலாதீதர், ஸமயாதீதர்) நீர் ஒப்பற்ற உருவத்தை உடையவர். நீர் எங்கும் வியாபித்துள்ள பிரபுவானவர். ஆக, இப்பேர்பட்ட உம்மை நான் நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.
( 38 )
இதி ஸ்துதிம் தேவ! விதாய தைந்யாத்
வரம் ந யாசே த்வமுபேக்ஷ கோZஸி I
சாயா தரும் ஸம்ச்ரயத: ஸ்வத: ஸ்யாத்
கச்சாயாயா யாசித யாத்மலாப: II
மரத்தின் அடியை அடைந்தவனுக்கு நிழல் தானாகவே கிடைக்கும். அவன் வேண்டி அது தருவதல்ல. ஏ பிரபோ! நீர் வீதராகவர். நீர் உபேக்ஷையாய் இருக்கிறீர். நீர் ஒன்றும் கொடுக்கச் சக்தியற்றவர். உம்மை அடைந்து ஸ்தோத்திரஞ் செய்து எனக்கு வேண்டியதை அளிக்கும்படி உம்மை நான் யாசிக்கவில்லை. நான் ஸ்தோத்திரஞ் செய்வதால் என் விருப்பம் தானே ஈடேறும் என்பதாம்.
கிரந்த கர்த்தா, பாம்பு கடித்த தன் பிள்ளையை உயிர்ப்பிக்க இந்த விஷாபஹார ஸ்தோத்திரத்தை செய்து, முடிவில், இவ்வாறு வேண்ட, அப்பிள்ளை உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்தது. அதுவே இந்த ச்லோகத்தின் தாத்பர்யம் (கருத்து) ஆகும்.
( 39 )
அதாஸ்தி தித்ஸா யதி வோபரோத:
த்வய்யேவ ஸ்க்தாம் திச பக்தி புத்திம் I
கரிஷ்யதே தேவ! ததா க்ருபாம் மே
கோ வாத்ம பேஷே ஸுமுகோ ந ஸூரி: II
பண்டிதனான எவன் தான் தன்னைப் போஷிக்கிறவனிடத்தில் (தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதில்) ஆசை உள்ளவனாக இருக்க மாட்டான்? (எல்லோரும் இருப்பர்). ஆகவே, நான் விரும்புவது ஏ பகவானே! உம்முடைய அனுக்கிரகத்தினால் எனக்கு உம்மிடம் பக்தி செய்யும் புத்தி உண்டாகட்டும். அந்த புத்தி உண்டானாலே அது எனக்கு வேண்டிய கிருபையைச் செய்யும் என்பதாம்.
( 40 )
விதரதி விஹிதா யதா கதஞ்சித்
ஜிந! விநதாய மநீஷிதாநி பக்தி: I
த்வயி நுதிவிஷயா புநர்விசேஷாத்
திசதி ஸுகாநி யசோ தனம் ஜயம் ச: II
சாதாரணமாய் உலகத்தில் பக்தி செய்வது ஒன்றுமே விரும்பிய பொருளைக் கொடுக்க வல்லது. ஆனால், ஏ பகவானே! உம்மிடத்தில் பக்தியோடு ஸ்தோத்திரமும், அதாவது, ஸம்யக் தரிசன பூர்வகம் பரிணாமத்தோடு ஸ்தோத்திரம் செய்யப்படுகிறது. ஆகவே, பக்தி சிரத்தையொடு ஸ்தோத்திரம் செய்வதானது, அவ்வாறு ஸ்தோத்திரஞ் செய்கிற (கிரந்த கர்த்தா அல்லது) புருஷனுக்கு ஸகல நன்மைகளையும், புகழையும் செல்வத்தையும், ஜயத்தையும் அளிக்கும் என்பதாம்.
கிரந்த கர்த்தா இந்த ச்லோகத்தில் என்னுடைய பெயர் தனஞ்ஜெயர் என்பதை மறைமுகமாக வெளியிட்டிருக்கிறார்.
சுபம்! மங்களம்!! சுபம்!!!
---------------------------
No comments:
Post a Comment