நரி விருத்தம் கவியாக்கம்.
மெய்ப்பொருள்
காட்டி உயிர்கட்கு அரணாகித்
துக்கம் கெடுப்பது
நூல்.
உலக வாழ்க்கை
துன்பக்கடலாக உள்ளது. உயிர்கள்
எல்லாம் இன்பத்தை நாடுகின்றன.
உயிர்கள் இயல்பு வேறாகவும்,
வாழும் சூழலின் இயல்பு
வேறாகவும் முரண்பட்டுக் கிடக்கின்றன.
இந்த முரண்பாட்டை ஆராய்ந்து,
மெய்யான இன்பம் எதுவென்று,
சுட்டிக் காட்டுவது தான் இலக்கியங்களின் நோக்கம்.
அந்த வகையில் நரி விருத்தம் மிக அருமையான அற இலக்கியம் ஆகும்.
இந்த நூலை இயற்றியவர் திருத்தக்கதேவர். ஐம் , பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதியவர். சோழர் குலத்தில்
தோன்றியவர். வஞ்சிப்பகுதியில் இருந்த
பொய்யாமொழி என்பவரால் புகழப்பட்டவர். இளமையிலேயே
வடமொழி, தென்மொழிகளில் தேர்ந்து,
துறவு பூண்டு தமது ஆசிரியருடன் தங்கியவர்.
கடைசங்கம் நடைபெற்ற
காலத்தில், ஆசிரியருடன் மதுரை சென்றவர் சங்கப்
புலவர்களுடன் பழகினார். அப்பொழுது
சங்கப் புலவர் ஒருவர்,
சமணப் புலவர்கள், துறவு நூல்களில் தேர்ந்தவர்களேயன்றி, சிற்றின்ப
சுவைப்பெற்ற நூல்களில் திறம் பெற்றவர்களில்லை என்று கூறினார். தேவர்,
சமணர்கள் சிற்றின்பத்தை வெறுத்தனரேயன்றி, பாடத்தெரியாமல் இல்லை என்று மறுத்தார்.
சங்கப்புலவர், அவ்வாறாயின் சிற்றின்ப
சுவைப் பொருந்திய நூலை இயற்றிக் காட்டு
என கூற, தேவர் ஆசிரியரிடம் சென்று
நடந்ததைக் கூறினார்.
மாணாக்கரின் திறன் அறிந்த ஆசிரியர்,
குறுக்கே ஓடிய நரி ஒன்றைக் காண்பித்து,
நரிகுலத்தின் இயற்கையை வைத்து
சிறிய நூலியற்றக் கூறினார்.
தேவர் அப்படியே, ஆசிரியர்
சொற்படி, தேகம், செல்வம்
முதலியன நிலையற்றவையென விளக்கும்படி,
நரி விருத்தம் நூலை எழுதிக்காட்டினார். இந்நூலில்
முதல் எட்டு செய்யுள்கள்
மட்டுமே, நரி விருத்தாத்தங்களைக் கூறும்.
மற்ற பாடல்கள் வேறு கதைகளையும், நீதிகளையும்
கூறுகிறது.
இந்நூல் எளிய ஞானத்தைப் போதிப்பதால்,
அனைத்து சமயத்தினரும் இதைக் கொண்டாடுகின்றனர். இதன் மூலம் மட்டும்
பதிப்பிட்டிருந்தால், பாண்டித்தியம் மிக்க தமிழ் சான்றோருக்கு
மட்டுமே பயன்பட்டிருக்கும். எளியோருக்கு
பயன்படாமல் போய் இருக்கும்.
இக்குறையை திரு. வீ. ஆறுமுகன்
உரை எழுதி, தருமசீலன்
பத்திரிக்கையில் வெளியிட்டார். அதைப் புத்தக
வடிவில்,
தருமசீலன் பத்திரிக்கை அதிபர்
திரு. ஆதி நைனார் வெளிக்கொணர்ந்தார். பகவான்
மகாவீரர் 2500 ஆம் பரிநிர்வாண நினைவு
ஆண்டில், ஜைன இளைஞர்
மன்றத்தினர் வெளியீடான, இரண்டாம்
பதிப்பின் நூலைத்தழுவி, எளிய தமிழில் கவியாக்கம்
செய்துள்ளேன், நூலறியா சொந்தங்களுக்காக. குறை காணின் கூறுங்கள்.
கற்றுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
அன்புடன்
உங்கள்,
முட்டத்தூர்.
அ. பத்மராஜ்.
நரி விருத்தம்.
காப்பு
:
பால் நிற வெண்கதிர்கள்
கொண்ட பலமணிகள் கோர்த்த அழகில்
வான்மதியின் தண்ணொளி போல் விரித்த
முக்குடை நிழலில்
குளிர்கொள் செம்பிண்டி நிழலில்
குறை நீங்கி அமர்ந்த உன்னடியை
ஊன் உண்ணும் நரியின் உரையால் உனை வணங்கி
உரைக்கலுற்றேன் 1
பால்
போன்ற வெண்மையான கதிர்களையுடைய
முத்துக்களையும், பலவிதமான ரத்தினங்களையும் அழகுடன்
கோர்த்து, வானத்தில் தவழும்
முழுநிலவின் குளிர்ச்சியான ஒளியைத்
தரும், சந்திராத்தியம், நித்திய விநோதம், சகல பாசனம்
என்ற முக்குடை அடியில், குளிர்ச்சி
பொருந்திய, செழுமையான அசோக மரத்தின்
நிழலில், எல்லா குற்றங்களையும் நீக்கி,
அமர்ந்துள்ள அருகனின் திருவடிகளை
வணங்கி, மாமிசத்தை விரும்பி
உண்ணும் நரியினுடைய சொற்கள்
அடங்கிய கதையை கவிதையாகக்
கூறுகிறேன்.
நூல்
:
மூங்கில் சூழ் புதர்கள் நிறைந்த முழுமதியை
தொடும் மலையில்
குறிஞ்சி எனும் நிலத்திற்குரிய குறவர்
வாழும் குடியிருப்பில்
தினைப் புன வேடுவர் உணவாம் தேன், ஊன்,
கள், காய் கிழங்குண்ணும்
நன்னெறியில்லா வேடன் ஒருவன் நரகலோக
நரகனுக்கொப்பான் 2
மூங்கில்களால் சூழப்பட்ட
புதர்களை உடையதும், வானில் உள்ள முழுச்சந்திரனை தொட்டுத் தழுவும், மலையைக்
கொண்டுள்ள குறிஞ்சி நிலத்திலுள்ள
குறவர்கள் வாழும் சேரியில்,
தினைப்புனம் காக்கும் வேடுவர்களின்
உணவாகிய தேன், மாமிசம்,
மது, காய், கிழங்குகளை
உண்ணும், நல்ல நெறிகளும்,
நற்செயல்களும் இல்லாத வேடன் ஒருவன் இருந்தான்.
அவன் நரகலோகத்தில் இருக்கும்
நரகர்களுக்கு சமமானவன்.
வேங்கைமரம் கொண்ட பூக்கள்
விளைந்து அலர்ந்த நன்னாளில்
இந்திர தனுசு விண்ணில் பொருந்த
இளமுகில்கள் கடல்நீர் முகர்ந்து
சூல்கொண்ட கரும் மேகங்களாகி
சுழன்று பெரும் மழையை கக்க
நறவு உண்ட குறவர்கள்
தமது நன்னாளில் தினையிட
முனைந்தனர் 3
வேங்கைமரமானது தான் கொண்ட பூக்கள்
மலர்ந்து, நிறைந்து காட்சி
தரும் நன்னாளில், மழைப் பெய்யுங்காலத்தில், வானத்தில்
தோன்றும் வானவில் பரவி நிற்க, இளம் மேகங்களானது கடல் நீரை
உண்டு, அதனால் கருவுற்ற
அழகிய கருமேகங்களாகி, வானில்
சுழன்று மழையைப் பொழிய,
அது தினை விதைக்கும்
பருவகாலம் ஆனதால், குறவர்கள்
கள்ளைக் குடித்து, குறிஞ்சி
நில கடவுளுக்கு சிறப்புகள்
செய்து, தினைப் பயிர் செய்ய ஆயத்தம்
செய்தனர்.
கருவிகள் பல கையில்
கொண்டு கற்பூர, ஆர, அகில, திமிசழித்து
காட்டினை வட்ட சம நிலமாக்கி
கதிர் தினைப் புனங்கள்
மேம்பட
பரவி பாயும் மலையருவி நீரால் பைந்தினை வளர்ந்து பயிராக
குருவி, கிளிகள் கோதிடாதிருக்க குறவர்கள்
காக்கும் தினைபுனம் 4
அக்காட்டில்
வேடுவர்கள் கோடாரி, அரிவாள்,
கடப்பாறை முதலிய ஆயுதங்களால்,
கற்பூரமரம், சந்தனமரம், அகில்மரம்,
வேங்கைமரம் ஆகியவற்றை வெட்டி
அழித்து, நிலத்தை சமன் படுத்தி, தினைப்பயிர்கள் செழித்து
வளர, வளமான நிலமாக்கினார்கள். மலையருவியின்
நீர் பரவி, பாய்ந்து
வருவதால், பசுமையான தினையானது,
முளைத்து, வளர்ந்து கதிரை விளைவிக்க, அதை குருவிகளும், கிளிகளும்
கொறித்து தின்னாதிருக்க, வேடுவர்கள்
அதைக்காத்து வந்தனர்.
விசும்பினை விரும்பிய அன்பால்
வளர்ந்த அம்மலையின் அடியில்
மென்தினைக் கதிரை களிறு மாந்த வேடனும்
சினத்தைக் கொண்டான்
பூமியில் பதிந்த புற்றுமேல்
நின்று பொறுமையாய் சிலை குறி கொண்டு
களிறின் பெருமத்தகத்தை நோக்கி கணையினை எய்தான்
அவ்வேடன் 5
வானத்தின்
மேல் கொண்ட, வாடாத ஆசையால், நீண்டு
வளர்ந்த மலையின் அடிவாரத்தில்
உள்ள நிலத்தில், வளர்ந்து
செழித்துள்ள மெல்லிய தினைக்
கதிர்களை ஒரு யானையானது
உண்பதைக் கண்டான் ஒருவேடன்.
பூமியில் பொதிந்து வளர்ந்திருந்த, ஓரு பாம்பு புற்றின்
மேல் ஏறி நின்று,
பொறுமையாக தன் வில்லை
எடுத்து, யானையின் மத்தகத்தைக் குறி பார்த்து,
அதைப் பிளக்கும்படி அம்பை எய்தான்.
நூதலில் பதிந்திட்ட கணையால்
நொந்திட்ட குஞ்சரம் வெகுண்டு
மறுகணை வேடன் எய்யும் முன்னே மோதியது புற்று மேல் கணையுடன்
படுகணையும் பாய்ந்தது புற்றில்
பாம்பது சீறி பதித்தது
தன் பல்லை
குறவன் கை வில்லுடன் வீழ்ந்திட
கொடும் விஷம் கொன்றது
வேடனை 6
வேடன்
விட்ட அம்பானது, யானையின்
நெற்றியில் தைத்து அதை பிளக்க, வேழமானது
கோபத்துடன், வேடன் அடுத்த
கணையை எடுத்து தொடுப்பதற்கு
முன், வேடனைக் கொல்ல அவன் மேல் பாய்ந்தது. தன் நெற்றியில் தைத்துள்ள
அம்போடு பாய்ந்ததால், புற்றின்
மேல் மோதியது. யானையின்
நெற்றியில் உள்ள அம்பு புற்றினுள் குத்தியதால்,
புற்றில் இருந்த நாகமானது
சீறி, வேடனை தன் பற்களால் கொத்தியது.
கையில் உள்ள வில்லோடு
வேடன் கீழே விழ, நாகத்தின் விஷம் வேடனைக் கொன்றது.
யானையும் இறந்தது.
அரவத்தால் இறக்கும் முன்னே
அக்குறவன் தன் கைவாள்
கொண்டு
நாகத்தை இரு துண்டாக்கி
விட நாகமும், வேடனும்,
வேழமும் மடிய
முழையில் வாழ் பெரு நரியொன்று முற்றிய
பசியில் வாடி வந்தது
மூவுடல் கிடந்ததைப் பார்த்தது
மோகத்தால் ஆய்ந்தது அவைகளை 7
பாம்பு
கடித்த வேடன் தான் இறக்கும் முன்னே,
தன் கைவாளால் தன்னைக்
கடித்த பாம்பை இரு துண்டுகளாக வெட்டினான்.
இவ்வாறு, வேடன் அம்பு தாக்கி யானையும்,
கொடிய நாகம் தீண்டியதால்
வேடனும், வேடனின் கைவாளால்
அரவமும் இறந்தன. அப்போது
குகையில் வசிக்கின்ற நரி ஒன்று, மிகுந்த
பசியால் வாடி, வதங்கி,
இரைதேடி அவ்விடம் வர, அங்கு கிடந்த
மூன்று உடல்களைக் கண்டு மகிழ்ந்தது. மிகுந்த
பேராசையுடன் அவ்வுடல்களைத் தின்ன அவைகளை ஆராய்ந்து
வகுத்தது.
களிறுடல் தாங்கும் திங்களாறு கானவன் உடல் தரும் ஏழு நாட்கள்
வாளரவம் உணவாகும் ஒருதினம்
வகுத்து மகிழ்ந்தது நரியுமங்கு
வாய் பற்கள் வில்லின் நாண்னறுக்க வளைந்த
வில் அம்பாய் நிமிர்ந்து
முழைநரி நெஞ்சினில் கோர்க்க
முடிந்தது நரியின் வாழ்வும்
அன்றே 8
பேராசை
என்னும் மோகத்தால், நரியானது
இந்த யானையின் உடல் எனக்கு ஆறு மாதங்கள் உணவாகும்.
இந்த வேடனுடைய உடலை ஏழு நாட்கள்
உண்பதற்கு வைத்துக் கொள்வேன்.
வாள் போன்ற இந்த பாம்பின் உடல், ஒரு நாள் உணவாகும். என்று மனதில் கணக்குப்
போட்டது. பசியில் எந்த உடலையும் உண்ணாது,
வில் நாணைத் தன் வாய்ப் பற்களால்
கடித்து அறுக்க, நாண் அறுபட்டதால், வளைந்த
வில் நேராக அம்பைப்
போல் நிமிர்ந்து, நரியின்
நெஞ்சில் பாய்ந்தது. நரியும்
அவ்விடத்திலேயே இறந்தது.
குறவனால் மாய்ந்த களிறும்
கொடும் விஷம் கொன்ற குறவனும்
வாள் கொன்ற அரவமும்
கிடக்க வளைந்த சிலை கொன்ற நரிபோல்
நிலையாமை அறியா மாந்தர்கள்
நிலம், பொருள்கள் பேணி சேர்க்க
அறம் செய்யா நெஞ்சத்தோராய் அனித்தியம் அறியா மாக்களாவர் 9
குறவனால்
எய்த அம்பு பாய்ந்து
இறந்த யானையும், நாகம் கொத்திய விஷத்தால்
மடிந்த வேடனும், அவ்வேடன்
கைவாளால் உயிர் விட்ட நாகமும் அங்கே
கிடக்க, அந்த உடல்களைத்
தின்னாமல், தன் உயிர் என்றும் நிலையானது
என்று எண்ணி, பேராசையால்
ஆலோசனை செய்து, நாணை அறுக்க,
பின் வளைந்த வில் நிமிர்ந்ததால் இறந்த நரியைப்போல், மனிதர்கள்
உலக வாழ்க்கை நிரந்தரமானது
அல்ல என்று அறியாமல்,
நிலம், பொன், பொருள்களை
மேலும், மேலும் சேர்த்து,
வறியோர்க்கும், பிறருக்கும் தான தருமம் செய்யாத
மனம் உடையவர்களாய் வாழ்கிறார்கள். வாழ்க்கை
அநித்தியம் என அறியாத
அவர்கள் மிருகங்களுக்கு சமமானவர்கள்
ஆவர்.
வலிய வில் நிமிர்ந்து
மாய்த்த வற்றிய அறிவுடை
நரியைப் போல்
பற்றினால் மிகு பொருளைப் பற்றி பகுந்துண்ணா நெறியில் வாழ்வோர்
மன்னரும் திருடரும் மற்றோரும்
மாதனம் கவர்வதும் நிச்சயம்
மதியினை முற்றும் இழந்தோராய்
மா செல்வம் இழந்து தவிப்பர் 10
வலிமை
மிக்க வில் நிமிர்ந்ததனால், இறந்த அந்த அறிவில்லாத
நரியைப் போல், உலகப் பொருள்கள் மேல் மிகுந்த ஆசையினால்,
பற்று மிகுந்து, மிகுபொருள்
சேர்த்து வைத்து, அப்பொருள்களை,
தாமும் அனுபவியாமல், தம்மை சேர்ந்தவர்களுடனும், பகிர்ந்து
உண்ணாமல் வாழ்பவர்கள் செல்வங்களை,
மன்னர்களும், திருடர்களும், மற்றவர்களும்
ஒருநாள் கவர்ந்து செல்வது
நிச்சயம். அவர்கள் தங்களுடைய
அறிவை இழப்பது போல், தங்கள் செல்வங்களையும் இழந்து
தவிப்பார்கள்.
தந்திரக் குறுநரி ஒன்று தரை, பரி, தேர் படைகள்
கண்டு
தன் நெஞ்சில் கள்ளம்
கொண்டு தரை படர் பிணமாய் கிடக்க
போர் படை பெயர்ந்தது
வேறிடம் பொதுவழி செல்லும்
வழிபோக்கன்
நரியினது தோல், வால் கொய்திட நரி மாண்டது வஞ்சக மனதால் 11
தந்திரமான
குள்ளநரி ஒன்று, அங்கு கிடைத்த மாமிசத்தை
உண்ணும் போது, கடல் போன்ற, குதிரை,
தேர், காலாட்படைகள் வருவதைப்
பார்த்தது. அப்படையால் இந்த இடத்தில் சண்டை நடக்கப் போகிறது,
நிறைய பிணங்கள் கிடைக்கும்
என்று எண்ணியது. இங்கு பிணம் போல் நாம் கிடந்தால்,
சண்டை முடிந்து படைகள் போன பின் பிணங்களை உண்ணலாம் எனக் கருதி, அங்கு பிணம் போல் தரையில் கிடந்தது.
படைகள் அவ்விடத்தை விட்டு
வேறிடம் நகர்ந்து செல்ல,
அவ்வழியே வந்த வழிபோக்கன்,
நரி செத்து கிடக்கிறது
என்று, அதன் தோலையும்,
வாலையும் உரித்து எடுக்க,
பேராசை கொண்டோர் அழிவது
போல், நரியும் அழிந்தது.
முழை நரியை நிகர்த்த
மக்கள் முயன்றீட்டிய பொருளனைத்தும்
ஈதலும், நுகர்தலும் இன்றி இப்பூமி தான் நிரந்தரம் என்று
நிலத்தினில் புதைத்து வைத்து
நெடுங்காவல் செய்யும் மாந்தர்
பெறற்கரிய மனிதப் பிறப்பை
பேதமையில் கழிப்பார் வீணே 12
நாம்
முன் கூறியபடி, குகையில்
வசிக்கும் நரியைப் போன்ற மனிதர்கள்,
தாங்கள் முயன்று சம்பாதித்த
செல்வங்களையும், பொருள்களையும், பிறருக்கு
தான தருமம் செய்யாமலும், தானும்
அனுபவிக்காமலும், இந்த நிலவுலகமும்,
வாழ்க்கையும் தனக்கு நிரந்தரம்,
என்று எண்ணி, செல்வங்களைப்
புதைத்து வைத்து, காவல் செய்து வரும் மக்கள், பெறுவதற்கு
அரிய மனிதப் பிறவியை,
முட்டாள்கள் போல், வீணே வாழ்நாளைக் கழிப்பவர்களாவர்
உயர்ந்த மண்ணுலக உயிர்கள்
உண்டு, உறங்கி, அஞ்சி, தழுவலை
ஆராய்ந்து பார்க்கும் பொழுது
அனைத்துயிர்க்கும் சமமேயாகும்
மானிடராய் பிறந்த மக்களில்
மறம் நீக்கி அறம் செய்தோர்கள்
மண்டிய ஞானம் கொண்டோராவர் மற்றவர்கள் மாட்டினையொப்பர் 13
வலிமை
பொருந்திய இந்த மண்ணுலகத்தில், ஆராய்ந்து
பார்த்தால் உணவு உண்ணுதல்,
தூங்குதல், பயப்படுதல், மருவித்
தழுவுதல் போன்றவற்றை அனுபவிப்பது,
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவான,
சமமான நிகழ்வுகள் ஆகும்.
ஆனாலும், நாம் விசேஷமாக
ஆராய்ந்து, அறிந்து கொள்ளவேண்டியது, பாவங்களை
நீக்கி, தருமங்களை கடைபிடிக்கும்
மனிதர்கள், நிறைந்த ஞானம் கொண்டவர்களாகவும், மற்ற மனிதர்கள் ஐந்தறிவுள்ள
மாடுகளைப் போன்று கடைப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதேயாகும்.
திருமணக்கோலம் தினம் தினம் தேவியர் காளைக்கு
காட்டி மீள்வர்
மத்திய மண்ணுலக காரியத்தை
மா நாய்க்கன் நயமுற கேட்டறிந்து
முனிவரர் சொல் உணர்ந்ததாலே
முழு ஞானம் ஒருங்கே பதிந்திட
நிலையற்ற இல்வாழ்க்கை நீக்கி
நற்கதி அடைந்தான் துறவினால் 14
இச்செய்யுளின் பொருள்,
சுகுமாரனின் கதையை குறிக்கிறது. உஜ்ஜைனி நகரில்,
ஸ்ரீதத்தன், யசோதரை தம்பதியரின் மகன் சுகுமாரன்.
நீண்ட காலம் பிள்ளைப் பேறின்றி பிறந்தவன். பெரும் வணிகக்
குடியில் பிறந்த, அவன் துறவியாகி
விடுவான் என ஒரு முனிவர் கூறிட, அவன் தாய், அவனுக்கு
தேவ மகளீரை ஒத்த, முப்பத்தியிரெண்டு பெண்களை
மணம் செய்து வைத்து,
இல்லற சுகத்தை அனுபவிக்கச்
செய்தாள். மனைவியர் தினம் தினம் மணக்கோலத்தில்
அவனைக் கூடி மகிழ்ந்து
திரும்பினர்.
இந்நிலையில் சுகுமாரனுக்கு, ஞானம் பெறும் பக்குவம்
வர, ஒரு முனிவர்,
நள்ளிரவில் ஜினாலயத்தில் இருந்து,
அவனுக்கு கேட்கும்படி, தேவ, மனித, நரகலோக
தன்மைகளையும், பத்ம குல்பமென்னும் விமான சிறப்பினையும் கூறினார்.
சுகுமாரன், முன் ஜென்மத்தில் அவ்விமானத்தில் இருந்தவனாதலால், இல்லற சுகத்தில் வெறுப்புற்று,
வாயில்காவலர்கள் அறியா வண்ணம்
வெளியேறி, முனிவரை கண்டு வணங்கி, அவரின்
அருளுரைக் கேட்டு, துறவறம்
ஏற்று, நற்பேறு அடைந்தான்.
இக்கதை ஜீவசம்போதனை நூலின்
செய்யுளில் ( 284 முதல் 304 வரை ) கூறப்பட்டுள்ளது.
இளமையும் வனப்பும் நிற்கா
இன்பமும் நிலைத்து நில்லா
வளமையும் வாலிபமும் நிற்கா
வாழ்நாளும் நின்று நிலைக்கா
மனைவி மக்கள் உறவும்
நிற்கா மாநிதியம் மற்றவர்
கவர்வார்
மறுமைக்கும் தொடர்வது அறமே மாற்று ஏதும் உலகில் இல்லை 15
மனிதர்களுக்கு, இளமையும்,
அழகும் நிலைத்து நிற்பது
இல்லை. இன்பமும் தொடர்ந்து
இருப்பதுமில்லை. வளமையான வாழ்வும்,
வாலிபமும், வாழ்நாளும் நிலையற்றவைகளாகும். கட்டிய
மனைவியும், பெற்ற பிள்ளைகளும்,
உற்றார், உறவினர்களும் நிலைபெற்றவர்கள் இல்லை.
மேலும் நாம் சேர்த்து
வைக்கும் பெரும் பொருள்களையும்
மற்றவர்கள் கவர்ந்து செல்வர்.
இவ்வாறு நிலையற்றவற்றை நிரந்தரம்
என்று எண்ணாமல், நிரந்தரமாய்
மறுமையிலும் நம்மை தொடர்ந்து
வருவது, நாம் செய்த தருமங்கள் மட்டுமே.
அதற்கு மாற்று உலகில்
வேறு ஏதும் இல்லை என்று அறிந்து
கொள்வீர்.
வாழ்நாள் நிலைபெற்றதுமல்ல வளர் நிதியம் நிலைப்பதுமல்ல
நல்லற வேந்தன் சினவரனின்
நன்னூல் நவின்ற நன்நெறிகள்
நல்லோர்கள் மனதில் நிற்க நல்
ஞானமாம் பயனை அடைவர்
நன்னெறி மனம் ஏற்காதோர்கள்
நரகத்தில் மூடராய் வீழ்வர் 16
மனிதர்களாகப் பிறந்த
நாம், வாழும் நாட்களும்
நிரந்தரம் இல்லை. நாம் ஓடி, ஓடி சேர்த்த செல்வங்களும்
நம்முடன் நிலைத்து நிற்பதும்
இல்லை. நல்ல உயர்ந்த
அறங்களை எடுத்துரைத்த அருகபெருமானின் சிறந்த
ஆகமங்கள் சொல்லிய நல்லுரைகளை மனதில் ஏற்றால், அவர்கள்
நல்ல ஒழுக்கம் உடையவர்களாகி
பயனை அடைவர். அத்தகைய
நன்னெறிகளை ஏற்காதவர்கள் பெரும்
முட்டாள்கள் ஆகி நரகத்தில்
வீழ்ந்து துன்பம் அடைவர்.
நன்னிலம் தாங்கிய விதைகள்
நலிவின்றி நன்றாய் விளையும்
நல்பாத்திரமறிந்து செய்செயல் நல்புண்ணியம்
ஒன்பதும் கூடிட
நற்குணத் தவத்தோர்களுக்கு நல்கிடும்
நால்வகை தானங்கள்
தந்திடும் நல்வினைகள் நமக்கு
தானத்தை செய்வோம் தினம் தினம் 17
நிலமானது
செழிப்பாகவும், நன்மையுடையதாகவும் இருக்குமானால், அதில் விதைக்கப்பட்ட விதையானது,
கெடுதல் இல்லாமல் முளைத்து,
நங்கு வளர்ந்து, நல்ல விளைச்சலைத் தரும்.
அதுபோல், அரிய தவத்தையுடைய,
துதிப்பதற்கு தகுதியுடைய, நற்குண
முனிவர்களுக்கும், நல்லோர்களுக்கும்
நல் பாத்திரமாக அறிந்து,
செய்யும் செயல்களும், நால்வகை
தானங்களும், நமக்கு ஒன்பது
வகையான புண்ணியங்களை வழங்குவதால்,
நமக்கு கிடைக்கப் போகும்
நற்பயன்களுக்காக, தினம் தினம் தானத்தை செய்வோம்.
வான் தவழும் மதியைத்
தழுவிட வளர்ந்துயர்ந்த ஜினாலயம்
முன்
பொன்மயில் தன் தோகை விரித்தாட பொங்கு பேராசையில் ஒருவன் பற்ற
காக்கையாய் பறந்தது மயிலும் கரம் சோர்ந்து அர்ச்சகன் கைவிட
காலனும் அணைத்துக் கொண்டான் கடையோன் பேராசையில் அழிந்தான் 18
வானத்து
நிலவை பிடிக்க முயல்வது
போல் உயர்ந்திருந்த அருகனின்
ஜினாலயத்தின் முன், பொன் மயில்
ஒன்று, தன் அழகிய தோகையை விரித்து
மகிழ்ந்து ஆடுவதைக் கண்டு,
அக்கோயிலின் அர்ச்சகன் மனதில்
எழுந்த மிகுந்த ஆசையால்
ஓடி அதைப் பற்றினான்.
உடனே அந்த மயிலானது,
காக்கை உருவம் கொண்டு
பறந்து செல்ல, அர்ச்சகன்
சோர்ந்து போய் தன் பிடியை
விட, கீழே விழுந்து
உயிர் விட்டான்.
தேவர் இதை, சிறு கதையால்
விளக்குகிறார். அருக தர்மத்தின்படி வாழ்ந்து
வந்த ஒரு சிராவகன்,
ஒரு ஜினாலயம் கட்டி,
ஜினபிம்பத்தை நிறுவி, பஞ்சகல்யாண
வைபவம் செய்து வைத்தான்.
அதற்கு, நித்திய பூஜை முதலானவற்றிற்கு படிதரம்
ஒன்று ஏற்பாடு செய்வதற்கு
முன் அவன் இறந்து விடுகிறான்.
தேவலோகத்தில் தேவனாக பிறந்த
அவன், தனது அவதிக் ஞானத்தால், ஜினாலயத்திற்கு படிதாரம்
செய்யாமையை உணர்ந்து, அக்குற்றத்தை
நிவர்த்தி செய்ய, தான் ஒரு பொன்மயிலாக
வந்து, தினமும் இரண்டு
பொன் இறகுகளை போட்டு
வந்தான்.
அர்ச்சகன் அந்த பொன்னிறகுகளை வைத்து,
பகவானுக்கு நித்திய பூஜையையும்
செய்து, தானும் சுகமாக
வாழ்ந்து வந்தான். அப்படி
இருக்கும் போது, அர்ச்சகன்
ஒருநாள், தினம் இரண்டு
இறகுகளுக்குப் பதில், அப்பொன்மயிலைப் பிடித்துக்
கொண்டால், அனைத்து இறகுகளையும்
தான் பெற்று, பெரும் பொருள்
குவிக்கலாம் என்று எண்ணினான்.
அந்த பேராசையால் அவன் அந்த மயிலைப்
பிடிக்க, மயிலும் காக்கை
வடிவம் கொண்டு பறக்க,
அர்ச்சகனும் விழுந்து இறந்தான்.
பேராசை பெரும் நஷ்டம்
என்ற சொல்லாடலுக்கு ஏற்ப, பேராசைக் கொண்டவர்களுக்கு இத்தகைய
முடிவுதான் கிட்டும் என்பது
திண்ணம்.
நல் யோசனைகள் ஏதும் இல்லா நரி
மனம் கொண்ட பேராசை போல்
நன்னெறி அறங்கள் தவிர்த்து
நலங்கள் ஏதும் செய்யதவர்கள்
ஆலயத்தின் பயன்களுக்காக அரசன் சேர்த்த பொன் செங்கற்களை
ஆசையால் அபகரித்த லோலுபன் அடைந்த
பெருந்துயரடைவார்கள் 19
நல்ல
ஆலோசனை இல்லாத, முன்பு
கூறிய நரியின் மனதில்
ஏற்பட்ட பேராசையினால், அது துன்பப்பட்டு இறந்ததைக்
கேட்ட பின்பும், நன்னெறியான
தருமங்களையும், தானங்களையும் செய்யாதவர்கள், ஆலயம் கட்டுவதற்கு வரவழைத்த,
செங்கற்களில் உள்ள பொன் கட்டிகளை, அடைய விரும்பி, பேராசையால்
கைப்பற்றிய லோலுபன், துன்பம்
அடைந்தது போல் இன்னல்
அடைவார்கள்.
இதை தேவர் பெருமான் ஸ்ரீ புராணத்தில் (பக்கம் 61) உள்ள பிட்டு
வணிகன் கதையால் விளக்குகிறார்.
ஜயசேனன் என்னும்
ஒரு அரசன், ஒரு ஜினாலயம் கட்டுவதற்காக,
குடிமக்களிடம் செங்கற்கள் தரும்படி
கேட்டான். மக்களும் தினம் தினம் செங்கற்களைத்
தந்தனர். அப்போது அந்த நகரில் லோலுபன்
என்ற பிட்டு வணிகன்,
தன் சுயதேவைக்காக, ஒருவனுக்கு
உணவு முதலியவை கொடுத்து சில செங்கற்களை வாங்கினான்.
அவைகளில் ஒன்றில், பசும் பொன்
துண்டு ஒன்று இருப்பதைக்
கண்டான்.
அனைத்துக் கல்லிலும்
பொன் இருக்கும் என்ற பேராசையில், அந்த மனிதனுக்கு உணவுகள்
தந்து, தினமும் கற்களை
வாங்கினான். ஒருநாள் வெளியூர்
செல்ல வேண்டியிருந்ததால், தன் மகனிடம்
அந்த ஆளைக் காட்டி, அவனிடம்
தினமும் செங்கள் வாங்கும்படி
கூறிச்சென்றான். மகன் தந்தையின்
சொல்லை மறந்து விட்டான்.
ஊரில் இருந்து திரும்பி
வந்த லோலுபன், மகன் செயலை அறிந்து,
பேராசையால் மிகவும் கோபத்துடன்
மகனை அடிக்க அவன் இறந்து விடுகிறான்.
தான் ஊர் சென்றதற்காக
தன் கால்களையும் அடித்துக்
கொண்டான்.
இந்த செய்தியை
அறிந்த மன்னன், குடிமக்களிடம், அந்த பிட்டு வணிகனுக்கு
தண்டனை கொடுக்கும்படி கூற, மக்கள் கொடுத்த
தண்டனையில் லோலுபனும் இறந்து போகிறான். அடுத்த
பிறவியில் கீரியாகப் பிறக்கிறான்.
மக்களுக்கு பேராசை என்னும்
பெருநோயால் விளையும் தீமையை இக்கதை
விளக்குகிறது.
அழிந்திடும் யாக்கையின் நிலையை
ஆய்ந்திடா அறிவில் குறைந்தோன்
மெய்ப்பொருள் மெய் ஞானம் அற்று
மிகுந்திட்ட பேராசை மனதால்
மந்தியாய் பிறப்பெடுத்தானென மதி நூல்கள்
கற்றோர் உரைக்க
நிலையற்ற இவ்வுலக வாழ்வில்
நிலைப்பது அறம் ஒன்றே ஆகும் 20
பையைப் போன்ற இந்த உடம்பானது, அழியக் கூடியது, நிலையற்றது,
இழிவானது என்று ஆராயும்
அறிவில்லாதவன், உண்மைப் பொருளையும்,
உண்மையான ஞானத்தையும் அறியும் புத்தி இல்லாதவனாய், மனதில்
பொங்கும் பேராசையால், மறுபிறவியில்
குரங்காக பிறந்தான் என்று,
உண்மையான சாத்திரங்களைப் பயின்றவர்கள்
கூறுகிறார்கள். ஆகையால் நிலையற்ற இந்த உலக வாழ்வில், நிலையானது அறம் என்று கருதி, என்றும் அறத்தையே செய்வாயாக.
திருத்தக்கதேவர் இக்கருத்தை
ஒரு ஸ்ரீ புராணக் கதை ( பக்கம் 60 ) மூலம் விளக்குகிறார்.
தான்யபுரத்தில் வாழ்ந்த
குபேரதத்தன், அவன் மனைவி சுதத்தை, தம்பதியினருக்கு நாகதத்தன்
என்று ஒரு மகன் பிறந்தான். அவன் மெய்யான ஞானமும், மெய்பொருளை அறியும் அறிவும் இல்லாதவன்.
பேராசை மிகவும் உடையவன். பொருள்கள்
மேல் மிகவும் பற்றுள்ளவன். அவன் தங்கையின்
திருமணத்திற்காக, அவன் தாய், அவர்கள் கடையில்
பல விலையுயர்ந்த ரத்தினங்களை தெரிவு
செய்து வாங்கினாள். தாய் சுதத்தை வாங்கிய
ரத்தினங்களை, மோசடி செய்து
அபகரிக்க எண்ணமிட்டான் நாகதத்தன்.
அவன் எண்ணம் கடைசிவரை
நிறைவேறாததால், அக்கவலையிலேயே இறந்து போனான். அவன் பேராசையும்,
மோச எண்ணங்களும் அவனை மறு பிறவியில்
குரங்காக பிறக்கவைத்தது. இந்த கதை மூலம் ஆசையும், அதனால்
ஏற்படும் பற்றுகளும், மனிதனை
பிறவி சுழற்சியில் சிக்கவைத்து
துன்பம் தரும் என விளக்குகிறார் ஆசிரியர்.
நரியினார் விருத்தம்
கேட்டு நற்குணம் அகத்தில்
கொண்டு
நிலையற்ற இவ்வாழ்வை ஆய்ந்து
நல்லறங்கள் செய்வோரெல்லாம்
அரிவரன் ஆன்றோர் உரையை கேட்டு அதன்வழி தான் ஒழுகிச் சென்று
நற்கதியை அடைந்து நின்றதும்
நல் நீதியாம் நானிலத்தோர்க்கு 21
நரி விருத்தம் என்னும்
இந்நூலைப் படித்தும், கேட்டு
உணர்ந்தும், நற்சிந்தனை உடையவனாகி,
இம்மண்ணுலக வாழ்வு நிலையற்றது
எனக் கருதி, நல்ல காரியங்களும், தான தருமங்களும் செய்யவேண்டும். அரிவரன்
என்னும் நல்லோன் ஒருவன்,
சாத்திரங்களைக் கற்றுணர்ந்த, சாதுக்களின்
அறமொழிகளைக் கேட்டு, அதன் வழியில் வாழ்ந்து,
நல்ல முறையில் தான தருமங்களைச் செய்து,
நற்கதி அடைந்தான் என்னும்
கதையின் மூலம், கதாகோசம்
என்னும் நூல், உலகத்து
மக்களுக்கு கூறும் நீதியாகும்.
செஞ்சுடர் வேல் கையில்
கொண்ட செருக்குடைய துரியோதனனும்
பஞ்சவர்க்கு பாகம் மறுத்து
பதினென்னாள் போரில் அழிந்தான்
கைப்பொருள்கள் இல்லா நிலையிலும்
கயமையாம் ஈயாமை தவிர்த்து
இயன்ற அளவு ஈந்திடுங்கள்
இனி பிறவாப் பயனடையுங்கள் 22
சிவந்த
ஒளியை உடைய கூரிய வேலாயுதத்தை கொண்ட துரியோதனன், தன் தாயாதிகளான பாண்டவர்களுக்கு உரிய பாகத்தை, ஈரமற்ற,
ஈயாமை குணத்தால் கொடுக்க
மறுத்து, பதினெட்டு நாள் போரிட்டு, தன் உறவுகளை இழந்து,
தானும் உயிரை விட்டான்,
என்று மகாபாரதக் கதை கூறுகிறது. எனவே தங்கள் கையில்
மிகுந்த பொருள்கள் இல்லை என்றாலும், உலோப குணத்தைக் கைவிட்டு,
உங்களால் இயன்ற அளவு தருமம் செய்து,
நற்பயனைப் பெற்று, நற்கதியடையுங்கள்.
குன்றாப் பொருளாசையால் வணிகன்
குளத்தில் ஒரு கூனியைத்
தள்ள
உயிர் பயம் கொண்ட அப்பெண்ணோ உறுதியாய் காகுத்தனைப் பற்ற
தழுவிய அவள் இறுக்கத்தாலே
தண்ணீரில் இருந்து மீளாததால்
கூனிப் பெண்ணோடு காகுத்தனையும் கூற்றுவன்
கொண்டு சென்றான் 23
மனதில்
என்றும் அழியாத பொருள் ஆசையால், குளத்தின் கரையில் அமர்ந்திருந்த
ஒரு கூனிப்பெண் அணிந்திருந்த, ஆபரணங்களை கவர
நினைத்த காகுத்தன் என்னும் வணிகன், அப்பெண்ணை
குளத்தில் தள்ளினான். அப்பெண்ணோ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, காகுத்தனை
இறுகப் பற்றிக் கொண்டாள். தண்ணீரில்
இருந்து நீங்கி தப்பமுடியாத
காகுத்தன், அந்த கூனிப்பெண்ணோடு தானும்
நீரில் மூழ்கி இறந்தான்.
பொருள் பற்று வாழ்க்கையில்
எவ்வளவு பெரிய அழிவைத் தரும்
என்பதே நீதியாகும்.
நண்பன் நல்மணிகள் ஈந்து நற்காத்து தாவென சொன்னான்
மீண்டவன் தன்பொருள் கேட்க மறுத்தனன் தன் ஆசை மனதால்
நவின்ற நல்லறங்கள் ஏதும் நாடிலை அவன் நண்பனின் செவியில்
பற்றுகள் பற்றிய மனதோர்
பெரும் கேடு அடைவார்
என்றும் 24
இந்த
செய்யுளுக்கு ஸ்ரீ புராணத்தில் இருந்து
ஒரு கதையை, தேவர் பெருமான்
கூறுகிறார். தனதேவன் என்ற வணிகன் ஒருவன்,
தன் நண்பனிடம் நல்மணிகளையும், ரத்தினங்களையும் கொடுத்து
பாதுகாத்து வைக்கும்படி கூறிவிட்டு
வெளியூர் செல்கிறான். அவன் மீண்டும்
திரும்பி வந்து அவன் பொருள்களை நண்பனிடம்
கேட்க, நண்பனோ தன் மனதில் எழுந்த
பேராசையாலும், லோப குணத்தாலும்
தர மறுக்கிறான். நண்பன்
எவ்வளவு நல்லறங்களை எடுத்துக்
கூறியும், பொருள்மீது இருந்த பற்றின்
காரணமாக அவன் செவியில்
ஏதும் ஏறமறுக்கிறது. இக்கதை
மூலம் பொருள் பற்று மிகுந்தவர்கள், நன்னெறிகளைக்
கடைபிடிக்காமல் தவறுவதால், என்றும்
பெரும் துன்பத்தை அடைவார்கள்
என்று விளக்குகிறார்.
நல்லுறவழைக்க நாட்டிற்கு போக
நவமணிகள் கொண்ட ரத்தினசெப்பை
நல்லவன் மந்திரி கையினில்
தர நஞ்சணைய மனதோன்
நாடி ஏற்க
வந்தவன் தந்ததை திரும்ப
கேட்க வஞ்சகன் மனது பொய்யென மறுக்க
பொருள் கவராசையில் பாவிஇறக்க பெரும்பழி ஏற்று பாம்பாய் பிறந்தான் 25
இந்த செய்யுளின்
மூலம் மேரு மந்திர புரணத்தில்
ஒரு கதையை ஆசிரியர்
விளக்குகிறார். பத்திரமித்திரன் என்ற நல்வணிகன் ஒருவன்
தான் ஈட்டிய பொருள்களில்
மிக உயர்ந்த ரத்தினங்களை, ஒரு செப்பில் இட்டு, அந்நாட்டு
மந்திரியான சத்தியகோடனிடம் தந்து,
தான் திரும்பி வந்து பெற்றுக்
கொள்வதாக கூறி, தன் உறவுகளை அழைத்துவர
செல்கிறான். திரும்பி வந்தவன், மந்திரியிடம் ரத்தின
செப்பை கேட்க, அப்பொருள்களின் மேல் ஏற்பட்ட பெரும்
ஆசையால் மந்திரி தரவில்லை
என மறுக்கிறான்.
பத்திரமித்திரனின் பரிதாப
நிலையை அறிந்த அந்நாட்டு
ராணி ராமதத்தை, உண்மையை
அறிந்து, மந்திரி சத்தியகோடனை
சூதில் வென்று, தன் தாதி நிபுணமதி
மூலம், அவன் பொருள்களைத்
திரும்ப பெற்றுத் தருகிறாள். மன்னன்
பத்திரமித்திரனை சோதிக்க, தன் ரத்தினங்கள் பல சேர்த்து வணிகனிடம்
தர, வணிகனோ தன் ரத்தினங்களை மட்டும்
எடுத்துக் கொண்டு, மீதியை
அரசனிடம் தர, பிறர் பொருளை விரும்பாத
பத்திரமித்திரனை பாராடிய அரசன்,
மந்திரியை தண்டித்து வெளியேற்றுகிறான். மந்திரி
இறந்து, அரண்மனை கருவூலத்தில்
பாம்பாக பிறக்கிறான். மிகு பொருள்
விரும்பலும் பாவம், பிறர் பொருள் ஓம்பலும்
பெரும்பாவம் என்பதை அறிந்து, பொருள்பற்றை அறவே அழிக்க சொல்கிறார்
ஆசிரியர்.
மின்னிடும் பொற்கலம் ஒன்றினை
மிளகுக்கு வாங்கிய வணிகன்
கேணியின் அருகில் துலக்கிட
கை தவறி கலம் கிணற்றில்
வீழ
வாங்கிய, வாங்காமல் தவிர்த்த
வணிகர்கள் வருந்தி இறந்த
கதையினை தினமும் கேட்கிறோம்
கவிழ்ந்த பெரும் ஆசையழிவாம் 26
ஒரு வணிகன்,
விருப்பமுடன் ஒரு விவசாயிக்கு
மிளகுக்கு கொடுத்து ஏமாற்றி, வாங்கிய
பொற்கலத்தை, கிணற்றங்கரையில் துலக்கி கழுவும் போது, கைதவறி கிணற்றில்
விழுந்து விடுகிறது. அந்த விவசாயியிடம் முன்பே
வாங்காமல் விட்டுவிட்ட வணிகனும்
வருந்தி துன்பமடைந்து இறந்துவிடுகின்றனர் இந்தகதையை
நாம் தினமும் கேட்டு
வருகிறோம். வணிகர்களின் போராசை
போல், உயிருக்கு தீங்கு
விளைவிக்கும் ஆசைகளும், கெட்ட எண்ணங்களும் என்றும்
கூடாது.
இதை நூலாசிரியர்,
ஜீவசம்போதனை ( செய்யு. 370 ) கதை மூலம் விளக்குகிறார்.
ஒரு விவசாயி,
தன் நிலத்தில் மண் வெட்டும் போது ஒரு பாத்திரம்
கிடைக்கிறது. அது பொன்னாலான
பாத்திரம் என்று அறியாத
விவசாயி, ஒரு வணிகனிடம்
விற்கச் செல்கிறான். வணிகன்
அது பொன் என்று அறிந்து, எவ்வளவு
என்று கேட்கிறான். ஒரு நாழி மிளகு வேண்டும் என்று கேட்க, வணிகத்துக்கே
உரிய வழக்கப்படி, முதலிலேயே
ஒத்துக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில், வணிகன்
ஒரு ஆழாக்கு மிளகு தருகிறேன்
என கூறுகிறான். விவசாயியோ
அதை வேறு ஒரு வணிகனிடம் விற்று விடுகிறான். அந்த வணிகன், அந்த பாத்திரத்தை சுத்தம்
செய்ய, கிணற்றங்கரையில் துலக்க,
பாத்திரம் கைநழுவி கிணற்றில்
விழுந்து விடுகிறது. முதலில்
விவசாயிடம் வாங்காமல் விட்ட வணிகனும், மிளகுக்கு
ஏமாற்றி வாங்கிய வணிகனும், பாத்திரத்தை
இழந்ததனால், மனம் துன்பம்
அடைந்து இறந்து விடுகின்றனர்.
பிறர் பொருளின் மீது கொண்ட ஆசையால்,
ஏமாற்றி பெற்ற, பெரும்
பொருள்களின் இழப்பும் நீங்காத
துன்பத்தைத் தரும்.
இளவமுள்ளை இடித்து கூழாக்கி
இரவு பகல் உண்டு பொருளீட்டி
தான், தன் குடும்பம் நுகராமல்
தருமத்தின் செலவும் தவிர்த்து
பேராசை பூதமாய் காத்து இறந்து பாம்பாகப் பிறந்த
பின்பும்
பொருள் காக்கும் செட்டியைப் போல் பெருந்துன்பம் அடைவர் என்றும் 27
இளவமுள்ளை
இடித்து, மாவாக்கி, அதைப் புளிக்கவைத்து, கூழ் தயாரித்து, இரவு, பகல் அதையே உண்டு, பொருள்
சேர்த்து, அந்த பொருளை
தானும் அனுபவியாமல், தன் குடும்பமும் நுகராமல்,
இல்லாதவர்களுக்கு தருமமும் செய்யாமல்,
பேராசையுடன் வைத்து, காவல் காத்து, உயிர் பிரிந்தவர்கள், அடுத்த
பிறவியில் பாம்பாகப் பிறந்து,
மீண்டும் அப்பொருள்களை காக்கும்
விலங்கினமாக துன்பம் அடைவார்கள்.
இதை ஒரு ஜீவ
சம்போதனை கதை மூலம் ஆசிரியர் விளக்குகிறார். ஒரு பெருங்
கஞ்சனான செட்டி ஒருவன்,
நல்ல உணவு சாப்பிடாமல்,
இளவமுள்ளை இடித்து, மாவாக்கி,
அதை புளிக்க வைத்து,
கூழ் காச்சி, தானும்
தன் குடும்பத்தினரும் சாப்பிட்டு
வந்தனர். இதன் மூலம் சாப்பாட்டிற்கு அகும் செலவை மிச்சப்படுத்தியும், மேலும்
பொருள் சேர்க்கும் ஆசையிலும்,
பொருள்களை சேர்த்து, வாழ்நாள்
முழுவதும், அந்த பொருளால்
தானும், தன்குடும்பமும், பிறரும்
பயனடையாமல் அதைக்காத்து, இறுதியில்
இறந்தான். அந்த செட்டி
அடுத்த பிறவியிலும் பாம்பாகப்
பிறந்து, பொருள்களை பாதுகாக்கும்
விலங்கினமாக துன்பம் அடைந்தான்
என்று சீவ சம்போதனை
கூறுகிறது. இதன் கருத்து சேர்க்கும்
பொருளை, தனும், குடும்பமும் அனுபவித்து, தான
தருமங்கள் செய்து, பிறருடன் பகிர்ந்துண்டு வாழவேண்டும் என்பதாகும்.
பொய் சாது வடிவில் ஓர் கள்ளன் பொருள்
கவரும் எண்ணத்தோடு
கன்னக்கோல் கொண்டு களவ காவலர்கள்
கையில் சிக்கினான்
வேல்படை வேந்தனின் தண்டனை
வேட சந்யாசி உயிரை பறிக்க
பிறர் பொருள் கவரும்
எவர்க்கும் பெரும் துன்பம்
வந்தே தீரும் 28
ஒருவன் சந்யாசி போல் வேடம் தரித்து,
ஒரு வணிகன் வீட்டில்,
கன்னக்கோல் மூலம் துளை இட்டு திருட,
காவலர்களிடம் பிடிபட்டான். அரசன் அவனுக்கு மரண தண்டனை தர, அவன் கொல்லப்படுகிறான் என்ற கதையை கேட்டுள்ளோம்.
பிறர் பொருளைக் கவர நினைப்பவர்களுக்கு எப்போதும்
அழிவு ஏற்படும்.
சிரவகாசாரம் என்னும்
நூலின் ஒரு கதை மூலம் ஆசிரியர்
இந்த நீதியை விளக்குகிறார்.
உறித்தாபதன் என்னும்
திருடன், சந்யாசி வேடம் போட்டுக் கொண்டு,
ஆலமரம் ஒன்றில் உறியைக் கட்டிக் கொண்டு,
அதன் மேல் பெரிய யோகியைப் போல், பகல் முழுவதும்
தங்கி இருப்பான். இரவு நேரத்தில் வெளியே
சென்று, பிறர் பொருள்களை
களவாடி வருவான். இது அவன் வழக்கமாக
இருந்தது. ஒரு நாள், அவன் ஒரு செட்டியின் வீட்டில்,
கன்னக்கோலால் துளையிட்டு, பொருள்களைத்
திருடிக் கொண்டு போய் உறியில்
வைத்துவிட்டு தூங்கினான். அந்நாட்டு
மன்னன் இந்த ரகசிய திருட்டை அறிந்து,
அவனைப் பிடித்து தண்டித்ததால்
உயிரிழந்தான். இந்த கதை மூலம் பிறர் பொருளைக் கவர்தல்
என்று பெருங்கேடாக முடியும்
என்பதை அறியலாம்.
ஆயர்பாடியை சேர்ந்த ஒருவன்
அனுதினமும் மோர் வாங்கி பருக
நெடுந்தாடி ஒட்டிய வெண்ணெய்யின்
நிறை நாடி நாள்தோரும் எண்ணி
கிட்டிய வெண்ணையை நெய்யாக்கி கிட்டிடும்
பெரும்பொருள் ஆசையால்
ஏகினான் வெம்நரகர் உலகம் எண்ணத்தில் எழுந்த பேராசையால் 29
யாதவர்கள்
வாழும் ஆயர்பாடிக்கு வந்த ஒருவன், தினமும்
மோர் வாங்கி குடிக்கும்
போது, நீண்ட தாடியில்
ஒட்டிய வெண்ணெய்யை சேர்த்து
வைத்து, நெய்யாக்கி, பொருள்
சேர்க்கலாம் என்று வீண் ஆசையால், இறந்த பின்பு கொடுமையான
நரகலோகத்தில் போய் பிறக்கிறான்.
நூலாசிரியர் தேவர் இந்த நீதியை
ரத்தின கரண்டகம் நூல் கூறு கதை மூலம் விளக்குகிறார்.
பேராசை கொண்ட ஒருவன், பசுக்கள்
கூட்டம் மிகுந்த ஆயர்பாடிக்கு,
தாடி வளர்த்துக் கொண்டு
சென்றான். அங்கு வாழ்ந்த
யாதவர்கள் தந்த மோரை வாங்கி, தன் தாடியில் படும்படி
குடித்தான். அவன் தன் தாடியில்
ஒட்டிய வெண்ணெய்யை தினமும்
சேகரித்து வந்தான். அதனால்
அவனுக்கு தாடி வெண்ணெய்காரன்
என்ற பட்டப்பெயர் வந்தது.
தினமும், தன் தாடியில்
ஒட்டிய வெண்ணெயை சேகரித்து,
அதை நெய்யாக்கி, விற்று
பெரும் பொருள் சேர்க்கலாம்
என்ற பேராசை எண்ணம்
மனதில் பதிய வாழ்ந்து
வந்தான். அந்த எண்ணம்
ஈடேறாததால், இறந்த பின் நரகர் உலகத்தில்
பிறக்கிறான். பேராசை மனதில்
எழுந்தாலும் பாவமே. அது மனிதனை நரகத்திற்கு
கொண்டு செல்லும் என்னும்
நீதியை, அருங்கலச்செப்புக்கு முன் நூலான ரத்தின
கரண்டகம் என்னும் நூல் கூறுகிறது.
அறத்தினைத் தன் மனதில்
நீக்கி மறத்தினால் பாவங்கள்
செய்து
மா நிதித்திறத்தில் ஒன்றிலன் மா தாகச் சுரநோய் கொண்டனன்
ஊன் உணவு விரும்பி
உண்டனென் உயிர் வதைக்கு
காரணமானவன்
உழன்றனென் வெந்நரகம் சென்று
ஒதுக்குங்கள் தீய பாவச் செயலை
30
அரவிந்தன் என்னும்
மன்னன் தான் கற்ற அறநூல்களின் தருமங்களை எல்லாம் மறந்து,
பாப செயல்களைச் செய்து, தான் பெற்ற
வித்யாதர சம்பத்தை இழந்து, தீ போல மிக வெப்பம்
தரும் சுரக நோயால் பதிக்கப்பட்டு, தான் பெற்ற வித்யாதர
சம்பத்தை அனுபவிக்கமுடியாமல், ஊன் உணவு
உண்டு, நரகத்திற்கு சென்று
உழன்றான். ஆகவே தீய பாப செயல்களை
விட்டுவிடுங்கள்.
நூலாசிரியர், அரவிந்தன்
கதையை இச்செய்யுளின் நீதியாக விளக்கி
கூறுகிறார்.
அளகாபுரி அரசன் அரவிந்தன், வித்தியாதர
சம்பத்தைப் பெற்று, தான் அறிந்து, கேட்ட தர்மோபதேசங்களையெல்லாம் மறந்தான்.
அனைத்து பாவங்களையும் செய்து
வந்தன். அதனால், அவனுக்கு
நெருப்பைப் போன்று மிகுந்த
வெப்பம் தரக்கூடிய தாக சுர வியாதியை
அடைந்து வருந்தினான். அவன் பெற்றிருந்த வித்தியாதர
சம்பத்து வித்தைகளும் பயனற்று
போயின.
தன் மூத்தமகன்
அரிச்சந்திரனை அழைத்து, என் உடல் வெப்பம்
தாங்கவில்லை, சந்தனக் குழம்பெல்லாம்
கருகி போய் விடுகிறது.
என்னை உத்திரகுரு நகரில்
உள்ள, சீதா நதி சோலைக்கு அழைத்து
செல் என பணித்தான்.
அரிச்சந்திரனும் தன் தந்தை சொற்படி செய்ய,
தன் ஆகாச காமினி வித்தையை
ஏவ, அது அரவிந்தனின்
பாவத்தால் செயலற்று போகிறது.
ஒரு நாள் அரவிந்தன்
படுத்திருக்கும் பொழுது, அவனுக்கு
மேல் இரண்டு பல்லிகள்
சண்டையிட்டுக் கொள்ள, அவற்றின்
ரத்தத்துளிகள் அரவிந்தன் மேல் விழ, அவ்விடத்தில்
வெப்பம் தணிந்தது. அதையுணர்ந்த
அரவிந்தன், தன் வெப்ப சுரத்திற்கு இதுவே சிறந்த, விசேட மருந்து என்னும்
விபரீத ஞானத்தினால், தனது இரண்டாவது மகன் குருவிந்தனை அழைத்து,
மிருகங்களைக் கொன்று, அதன் ரத்தத்தை குளமாக்கித்
தரச் சொன்னான்.
உயிர்வதைக்கு அஞ்சிய
குருவிந்தன், ஒரு தவ முனிவர் கூற்றுப்படி,
தன் தந்தை நரகம் சென்று துன்பம்
அடைவது உறுதியென அறிந்து,
ரத்தம் போல் வேறு ஒரு திரவத்தை
உருவாக்கித்தந்தான். அரவிந்தன் அதில் அமிழ்ந்து குளிக்கும்
போது, அது குருதியில்லை
என அறிகிறான். சினம் மிகக்கொண்டு, கத்தியுடன்
மகனைக்கொல்ல ஓடினான். அப்படி
ஓடும்போது, கால் தடுக்கி
கீழே விழ, கையில்
இருந்த தன் கத்தியே அவனை குத்த, இறந்து
நரகம் அடைந்தான்.
தருமங்களை மறந்து
பாவம் செய்ததால் தாகசுர
நோயும், மிருகங்களை வதைசெய்யும்
எண்ணத்தாலும், மகனை கொல்ல நினைத்ததாலும், ஊன் உண்டதாலும், தீவினைகள்
சேர்ந்து நரகம் அடைந்தான்
என கூறுகிறது.
வீரிய வேல் கைகொண்ட வேந்தன்
வினை துறந்த தவத்தோர்கட்கு
உணவினை தானமாய் கொடுக்க
உடன் கபிலன் துணை சத்யபாமையும்
கனியுடன் ஆகார தானம் செய்ய கடலளவு
புண்ணியம் பெற்று
உத்திரகுரு போக பூமியில்
உயர்ந்த சுகம் பெற்று
நின்றாள் 31
இந்த
செய்யுளில் ஆகாரதானத்தின் சிறப்பினை,
ஸ்ரீ புராணம் கூறும் ஒரு கதையின் மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.
ஸ்ரீ
சேன மகாராஜன், கபிலன்
என்ற விலைமகளின் மகனுக்கு
சத்தியபாமை என்னும் பெண்ணை
திருமணம் செய்து வைக்கிறார்.
தான தருமங்களில் சிறந்தவரான
மன்னன், தவத்தில் சிறந்த
சாதுகளுக்கு தினமும் அன்னதானம்
செய்து வருகிறார். அந்த புண்ணிய காரியத்தில்,
மனதில் எந்தவிதமான தீய எண்ணங்களுமின்றி, கபிலனின்
மனைவி சத்தியபாமையும், கனி, உணவு முதலியவைகளுடன் சாதுகளுக்கு
வழங்கி வருகிறாள்.
இந்த ஆகார தானம் என்னும்
நற்செயலால், உத்திரகுரு என்னும்
புண்ணிய, போகபூமியில் பிறந்து,
அனைத்து சுகங்களையும் அடைந்தாள்.
இந்த கதை, ஸ்ரீ புராணம்
சாந்தி தீர்த்தங்கரர் வரலாற்றில்
பக்கம் 289ல் கூறப்பட்டுள்ளது.
துணைவன் உணவின்றி வாடினும்
துறவுற்ற நன் முனிவர்களுக்கு
தூய நல்லுணவு அளித்ததால்
துலங்கிய சாசன தேவதையானாள்
அன்னதானம் செய்திடில் கிட்டும்
ஆன்மாவுக்கு அரிய புண்ணியம்
இல்லறத்தார் என்றும் செய்து
எய்திடுங்கள் வானவர் உலகை 32
கணவனுக்கு
உண்ண உணவு இல்லாமல்
வாட்டமுற்று இருக்கும் போதும்,
துறவுற்ற நல்ல முனிவர்களுக்கு, ஆகாரதானம்
அளித்த பெண்ணானவள், மறுமையில்
சாசன தேவதையாகி ( யட்சி
) வானவர்
உலகில் பிறப்பாள். இல்லறத்தார்
இதனால், தங்கள் இல்வாழ்க்கையின் போது ஆகார தானம் செய்து ஆன்ம புண்ணியம் அடையுங்கள்.
திருத்தக்கதேவர் இந்நீதியை
ஸ்ரீசைல வரலாற்றில் உள்ள ஒரு கதை மூலம் விளக்குகிறார்.
திருமலை நகரில்,
சோமசன்மா என்னும் அந்தணனின்
மனைவி அக்னிலா என்பவள்.
ஒருநாள் அவள் தன் கணவனுக்கு பரிமாற,
உண்வு இல்லாமல் மனம் வாட்டமுற்று இருந்தாள்.
அப்போது, வரதத்தாச்சாரியார் என்ற ஜினமுனிவர், தெருவில்
வருவதை கண்டு, அவருக்கு
நவ புண்ணிய கிரமத்தின்படி, ஆகார தானம் செய்கிறாள்.
இதை கண்ட வேறு சில பிராமணர்கள்
சோமசன்மாவிடம் கூறுகின்றனர். மனைவியை
துன்புறுத்துகிறான் சோமசன்மன்.
மனைவி அக்னிலா,
துன்பம் தாங்காமல், தன் புத்திரர்களுடன் முனிவரை
சந்தித்து, நடந்ததைக் கூறி, சம்சார பந்தம்
நீங்கும் மார்க்கத்தைப் பெற்று,
அங்கேயே தங்கி விட்டாள்.
அப்போது சோமசன்மாவை தூண்டிய
பிராமணர்களின் வீடுகள் எல்லாம்
தீப்பற்றி எரிந்து அழிந்தன.
ஆகாரதானம் தந்த சோமசன்மா
வீடு மட்டும் தீ பிடிக்கவில்லை.
இதைக்
கண்ட வீடிழந்த வேதியர்கள்
முனிகளுக்கு ஆகார தானம் செய்து, மீந்த உணவை உண்டனர்.
உணவும் குறையாமல் வளர்ந்து
கொண்டே இருந்தது. இது ஆகார தானத்தின்
மகிமையே என உணர்ந்து,
அக்னிலாவை புகழ்ந்து பேசினர்.
அவளை மீண்டும் அழைத்து
வரும்படி சோமசன்மாவிடம் கூறினர்.
அவனும் அவளைத்தேடிச் சென்றான்.
மாலை நேரம் ஆனதால் வரதத்தாச்சாரியர், அக்னிலாவை
அழைத்து, இரவில் இங்கு தங்கினால், லோகாப வாதம்
உண்டாகும் எனக்கூறி போகச் சொல்கிறார். அவள் புறப்பட்டுச் செல்லும்
வழியில் உள்ள பட்ட மரங்கள் எல்லாம்
துளிர் விட்டு தழைக்க
ஆரம்பித்தன. பழமரங்கள் எல்லாம்
கனிகளைத் தந்தன. நீரில்லா
சுனைகளிலெல்லாம் நீர் நிரம்பி
வழிந்தன. அக்னிலாவும், பிள்ளைகளும்,
கனிகளை உண்டு, நீர் பருகி, பஞ்சமந்திரம்
சொல்ல ஆரம்பித்தனர்.
மிருகங்களுக்கு பயந்து,
கையில் வாளுடன் வந்த சோமசன்மாவைக் கண்ட அக்னிலா, தன்னை கொல்ல வருவதாக
எண்ணி, அருகில் இருந்த
சுனையில் குதித்து இறந்து
விடுகிறாள். பின் அவள் யட்சியாக பிறந்து
தேவருலகடைகிறாள். அழும் பிள்ளைகளைக்
கண்டு, யட்சியான அக்னிலா,
தன் பழைய உருவத்தைக்
காட்டி பிள்ளைகளை தேற்றுகிறாள்.
அங்கு வந்த சோமசன்மா,
அவளிடம் மன்னிப்பு கேட்டு,
அவள் கையைப் பற்ற, அவள் யட்சி உருவத்துடன் வானத்தில்
நின்று, நான் யட்சியாகி
விட்டேன், இனி நீ உன் பிள்ளைகளை
பார்த்துக் கொள் என கூறி மறைகிறாள்.
மனம் வருந்திய
சோமசன்மா, தன் பிள்ளைகளுடன்
சுனையில் விழுந்து உயிர் விடுகிறான். பிறகு அவன் தன் மனைவி யட்சிக்கு
வாகனமாக பிறக்கிறான். புத்திரர்கள்
நற்கதியடைந்தனர். இக்கதை ஆகாரதானத்தின்
பெருஞ் சிறப்பினையும், அதனால் கிடைக்கும்
புண்ணியத்தையும் விளக்குகிறது.
சந்தனை என்னும் மங்கையவள்
சாரணர் மாவீரன் சுவாமியை கண்டு
முற்றத்தின் முன்னே வணங்கி
முற்றிய வரகு கூழினைத்
தந்தாள்
இந்திரர்கள் இன்பங்கொண்டு எல்லையில்லா
பொன்மழை சொரிந்து
தேவதுந்துபிகள் முழங்கச் செய்து
தேன்மலரால் அர்ச்சனை செய்தனர் 33
சந்தனை
என்பவள், துன்பம் அடைந்து
இருந்த காலத்தில், ஸ்ரீ வர்தமானர், ஸ்ரீ விகாரம்
செய்யும் போது, சந்தனை
தன் வீட்டின் முன், வரகரிசியால் செய்த கூழை அவருக்கு
ஆகார தானம் கொடுத்தாள்.
அந்த புண்ணியத்தினால், மனம் மகிழ்ந்த இந்திரர்கள்,
பொன் மழையை பொழிந்தனர். தேவ துந்தூபிகளை முழங்கச்
செய்து, தேன் மிகுந்த,
மணம் வீசும் மலர்களால்
அவளுக்கு அர்ச்சனை செய்தனர்.
அதனால் ஆகார தானம், உயிர்கள்
பசியாறும் உன்னத தானமாகையால்,
அனைவரும் செய்ய வேண்டும்.
நூலாசிரியர் இந்த நீதியை ஸ்ரீ புராணம்,
ஸ்ரீ வர்தமானர் வரலாற்றில் பக்கம்
514ன் மூலம் விளக்குகிறார்.
சேடக மாமன்னனின்
மகளான சந்தனையை, ஒரு வித்தியாதரன் கவர்ந்து
செல்லுகையில், தன் இருப்பிடத்திற்கு அவளுடன்
சென்றால், தன் மனைவி கோபப்படுவாள் என்று எண்ணினான். எனவே, சந்தனையை ஒரு காட்டில் விட்டு
விட்டு செல்கிறான். அவளை ஒரு வேடன் அழைத்து சென்று,
கௌசாம்பி நகரில் விருஷசேனன்
என்னும் வைசியனிடம் விற்று
விடுகிறான்.
விருஷசேனன் அவளைத்
தன் மகளாக பாவித்து
அன்பு பாராட்டி வளர்க்கிறான். ஆனால் விருஷசேனனின் மனைவி சுப்பிரபை, கணவன் மேல் சந்தேகம்
கொண்டு, சந்தனையை கொடுமை
செய்து துன்புறுத்துகிறாள். ஸ்ரீ வர்தமானர் அப்போது
அந்நகருக்கு ஸ்ரீ விகாரம் செய்கிறார். அதை அறிந்த சந்தனை,
அவரை எதிர்கொண்டு அழைக்க
எண்ணியவுடன், அவளுக்கு இடப்பட்ட
விலங்குகள் விலகுகின்றன். பட்டாடைகளுடன்
கூந்தல் அழகு பெற, உடலெல்லாம் பொன் ஆபரணங்கள் நிறைந்தன.
கையில்
இருந்த பாத்திரம் பொன் பாத்திரமாக, அதிலிருந்த
முற்றிய வரகு கூழும்,
அறுசுவை மிகுந்த உணவாக மாறுகிறது. அந்த தூய உணவை ஸ்ரீ
வர்தமானருக்கு ஆகாரமாக தருகிறாள்
சந்தனை. அவளின் இந்த ஆகார தானத்தால்,
இந்திரர்கள் மகிழ்ந்து பொன்மழையை
பொழிந்தனர். தேவர்கள் துந்தூபிகளை
முழங்கி, மணம் கமழும்,
தேன் சிந்தும் மலர்களை
அவள் மேல் இட்டு அர்ச்சனை செய்தனர்.
இறுதியாக சந்தனையை, அவளின்
பெற்றோர்களிடம் சேர்ப்பித்தனர். இதனால்
இல்லாதோர்க்கும், துறவிகளுக்கும் அளிக்கும்
ஆகாரதானம் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கும் என்பது நீதியாகும்.
பற்றினை பற்றினால் பற்றியவள்
பாவமும் பழிகளும் செய்ததனால்
நாற்கதி துன்பத்தில் உழன்று
நலிந்தனள் நரகத்தின் வாழ்வால்
நல் ஞானம் கொண்ட மாந்தர்கள்
நல்லறத் துறவறம் ஏற்றிட
நால்கதிகள் துன்பம் போக்கி
நற்பேறினை அடைந்தனர் ஆங்கே 34
மிகுந்த
ஆசையுடைய மனதினால், அனைத்துப்
பற்றுகளையும், அதன் மேல் ஏற்பட்ட பற்றினால்,
உறுதியாக பற்றிக் கொண்ட ஒரு பெண், எல்லா பாவங்களையு,
பழிச்செயல்களையும் செய்து, நான்கு
கதிகளில் பிறந்து துன்பமுற்று,
நரக வாழ்வை அடைந்தாள்.
அதைக் கண்ட, நல்லறம்
பேணிய, நல் ஞானம் உடையவர்கள்,
உலகப் பற்றுகள் அனைத்தையும்
நீக்கி, துறவறம் ஏற்று,
முக்தியை அடைந்தனர். அதனால்
வீடுபேறு அடைய எண்ணுபவர்கள்
உலகப் பற்றுகளை நீக்கி,
துறவி கொள்ள வேண்டும்.
நற்றவத்தார் உறுதிப்
பொருள் நல்லறமும் துறவறமுமாகும்
இல்லற வாழ்வு கொண்டோர்
நெறி ஈந்து பகுத்துண்டு
வாழ்தல்
பூர்வ ஜென்ம புண்ணியம்
பெருக பொங்கிடும் தவநிலை மனதில்
சிராகவ, யதி தர்மமிரண்டும்
தந்திடும் நற்கதி மாந்தர்க்கு 35
நலாறங்கள்
கொண்ட தவத்தோர்களின் உறுதிப்
பொருளானது, முறையே செய்யும்
இல்லறமும், துறவறமும் ஆகும்.
இல்லற தருமத்தைக் கை கொண்டோர், தாங்கள்
ஈட்டிய பொருள்களை பிறருக்கு
கொடுத்து, அவர்களுடன் தாமும்
பகிர்ந்துண்டு வாழ்தல் ஆகும். பற்றுள்ள இல்லற வாழ்க்கையை விட, பற்றற்ற துறவறம்
சிறந்ததெனினும், இல்லற நெறியில்
பகிர்ந்துண்ணுதலும், தான தருமங்கள்
செய்து வாழ்தலும், பூர்வ ஜென்ம புண்ணியத்தால், மனதினில்
தவநிலை பெருகிட, இல்லற தருமம், துறவற தருமம்
இரண்டும் பெருகி, கீர்த்தியை
தருவதால், மக்கள் நற்கதியடைவார்கள்
இல்லறம் பேணும் இல்லாளுடன்
இல்லறம் இனிதே அமைந்திட
நாற்கதி துன்பங்கள் நீங்க நாடிடுவர் நற்பேறை
மாந்தர்கள்
பற்றின்றி செல்லும் இல்லறம்
பக்தியில் முக்தி வழியைக்
காட்ட
பங்கஜ இலை நீரொத்த
வாழ்க்கை பற்றறுத்து நல்கிடும்
வீட்டை 36
இல்லற
தருமத்தில், எல்லா இயல்புகளுடனும், லட்சண நெறிகளுடனும், நல் நோக்கங்களுடனும் இருக்கும்
மனைவியுடன் நடத்தும் இல்வாழ்க்கையானது, நான்குகதிகளின் துன்பத்தைப்
போக்கிடும். மக்கள் நற்பேறு
அடைவார்கள். உலகப் பற்றுகள்
அனைத்தும் நீக்கி, தாமரை இலைமேல் உள்ள தண்ணீர் போல், இல்லற தருமத்தில்
வாழ்க்கை நடத்துபவர்கள் பக்தி மேலீட்டால் முக்தி
என்னும் வீட்டை அடைவார்கள்.
நால்வகை தானம் தந்தார்க்கும்
நற்பொருள் பிறர்க்கீந்தார்க்கும்
நிர்மலன் அருளும் இடந்தான்
நல் உத்திரகுரு என்னும் பூமி
நற்காட்சி நல்லொழுக்கத்தோடு நல் ஞானம்
மூன்றையும் சேர்த்து
கடையிலா நான்கையும் தந்து தடையிலா முக்தியை அருள்வான் 37
நான்கு
வகையான உயர்ந்த தானங்களைச்
செய்து, மேகத்தில் தோன்றி
மறையும் மின்னலைப் போன்ற செல்வத்தை பெரிதாக
நினைக்காமல், நல்ல நெறியில்
ஈட்டிய அப்பொருள்களை, பிறருக்கும்
கொடுத்து, தருமநெறியில் வாழும்
மக்களுக்கு, அருக பரமேட்டி அளிக்கும்
இடம் உத்திரகுரு என்னும்
அனைத்தும் கிடைக்கும் போக பூமியாகும். மேலும், மூன்று
ரத்தின திரயங்களையும், நான்கு அனந்த ஞானம், வீரியம்,
தரிசனம், சுகத்தையும் தந்து,
தடையின்றி முக்தியையும் தருவான்.
இல்லற நெறியை கைகொண்டோர்
இலை நீர் போல் பற்றினை கொள்ள
பற்றற்ற இல்லற வாழ்க்கையும்
பயத்திடும் வீடுபேறு இன்பத்தை
பற்றற்ற இல்லற தருமத்தையும்
பற்றறுத்த துறவற வாழ்வையும்
பற்றிய உயிர்கள் அனைத்தும்
பற்றிடும் முக்தியின் உலகை 38
பற்றற்றவர்
போல் இருப்பவர் பற்றற்றவரே
என்ற நியமப்படி, இல்லறத்தில்
இருந்தாலும், தாமரையிலைத் தண்ணீர்
போல் ஒட்டாமல், உலகப் பற்றுகளின்றி, எனினும்,
பற்று உள்ளவர்கள் போல் நடித்துக்கொண்டு, மனைவி,
மக்கள், சுற்றத்தோடு, மோட்ச மார்க்கம் ஒன்றை மட்டும் மனதில்
கொண்டு வாழ்பவர்களுக்கு வீடுபேறு
கிட்டும். பற்றுகளோடு கூடிய இல்லறம்
பிறவிக்கு வித்திட்டதாகும். எந்தவித பற்றுகளில்லாத இல்லற தருமமும், அனைத்துப் பற்றுகளையும் அறுத்த துறவற
தருமமும், இரண்டில் ஏதேனும்
ஒன்றை கைக்கொண்ட உயிர்கள்
எல்லாம் முக்தி உலகையடையும்.
மற்றவுயிர்கள் பிறவிப் பெருங்கடலில்
மூழ்கி துன்பம் அடையும்.
நல்லறிவு இல்லா மனிதர்கள்
நல்லறம் கற்றுத் தெளியார்
இல்லற ஒழுக்கம் கொள்ளார்
இருள் வன தவம் மேற்கொள்ளார்
ஊன் உண்டு கொலை களவு செய்து ஒன்றியே
பொழுதைக் கழிப்பார்
மக்களாய் பிறந்தார் எனினும்
மாக்களாய் உலகில் வாழ்வார் 39
நல்ல
அறிவும் ஞானமும் இல்லாத
மனிதர்கள், பிரமச்சரிய நிலையிலேயே,
நல்ல அறங்களையும், சாத்திர
நெறிகளையும் கற்று தெளிந்திருக்கமாட்டார்கள். மனைவியரோடு
கூடி, இல்லறத்தில் ஈடுபட்டு,
தருமநெறிகளைக் கைகொண்டு வாழமாட்டார்கள். தவ முனிவர்கள்
வாழும் இருண்ட காட்டிற்கு
சென்று, நல்ல தவம் ஏதும் செய்யமாட்டார்கள். புலால்
உணவை உட்கொண்டும், கொலை செய்தல், களவு செய்தல் போன்ற தீய செயல்களைச்
செய்து, பொழுதை வீணே கழிப்பார்கள். பெறற்கரிய
மனித பிறவியை எடுத்திருந்தாலும், விலங்குகள்
போன்ற மாக்களாய் வாழுபவர்கள்
ஆவர்.
தவத்தோர்க்கு தந்து மகிழார்
தன் துணையோடு இல்லறம்
பேணார்
தனிச் சிறப்பாம் துறவு ஏற்கார் தலைச் சிறந்த முக்தியை
நினையார்
அவனியின் ஆசைகளில் மூழ்கி
அல்லலுரும் அறிவிலி மாந்தர்கள்
இல்லற தறவறம் இரண்டிலும்
இணையற்ற முக்தியை அடையார் 40
நல்லறிவு இல்லாதவர்கள் பெரிய, அரிய தவத்தையுடைய சான்றோர்களுக்கு, தேவையானவைகளைத் தந்து உபசரிக்க
மாட்டார்கள். தங்கள் மனைவிகளோடு
சேர்ந்து வாழுங் காலத்தில், இல்லற
தருமத்தைக் கடைபிடிக்க மாட்டார்கள். பற்றுகளை எல்லாம் அறுத்த
சிறந்த துறவற வாழ்வை
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லாவற்றிலும் சிறந்த
முக்திபேறை நினைக்கமாட்டார்கள். உலக ஆசைகளில் மிகுந்த
நாட்டம் கொண்டு, நான்கு கதிகளிலும் பிறந்து
துன்பம் அனுபவிக்கப்போகும் மதியில்லாத
மனிதர்கள், இல்லறம் துறவறம் இரண்டிலும் இணையற்ற முக்தியை அடையார். அவர்கள் ஒழுக்கத்தோடும்,
நன்னெறிகளோடும், சாத்திர முறைகளோடும் வாழ்ந்தார்களானால், துர்கதி
நீங்கி, முக்தி இன்பத்தை
அடையலாம்.
உத்தம உயர்ந்த தவத்தை
உலகோரே செய்திடல் வேண்டும்
உத்தம தவத்தோர்களுக்கு உயர் தானங்கள்
தந்திட வேண்டும்
உத்தம நெறியில் நின்றோர்க்கு
உன்னத சேவை செய்ய வேண்டும்
உத்திரகுரு பூமியும் கிட்டும்
உயர்ந்த தேவ பதவி வந்தடையும் 41
உத்தமமான,
உயர்ந்த, சிறந்த தவத்தை
உலக மக்களே செய்யுங்கள். அப்படி
தவம் செய்யவில்லை எனில்,
இல்லறத்தில் இருந்தாவது, நால்வகை
உயர்ந்த தானங்களை, தவமுனிவர்களுக்கும், பிறருக்கும்
செய்யுங்கள். நன்னெறியில் நின்று,
நல்லொழுக்கத்தோடு நடக்கும் சான்றோர்களுக்கும், முனிவர்களுக்கும் தேவையான
பணிகளை செய்யுங்கள். இவைகளையெல்லாம் செய்தீர்களானால், உத்திரகுரு
என்னும், நினைத்ததை கொடுக்கும்
போகபூமியும் கிடைக்கும், உயர்ந்த
தேவ பதவியும் வந்து சேரும்.
மறுவில்லா குணத்தில் மிக்க மறுவற்ற தவத்தினோர்க்கு
மறுவில்லா தானம் ஈந்தால் மறுவில்லாப் போகபூமி
மறுவிலாப் பயன் கொடுத்து மறுவிலாராதோர்
மாந்தர்
மறுவிலா மண்ணும் விண்ணும்
மறுவின்றி விளங்குமாங்கே 42
குற்றங்களும், தீய எண்ணங்களும் இல்லாத
குணத்தில் வாழும் இல்லறத்தோர்கள், குற்றங்கள்
அனைத்தையும் துறந்த மிகப்பெரிய தவத்தையுடைய முனிவர்களுக்கு, தீங்கற்ற,
புனித உத்தம தானங்களை
செய்தால், கெடுதலே இல்லாத
உத்திரகுரு என்னும் போகபூமியானது,
குற்றங்களில்லாத அனைத்துப் பயன்களையும் தருவதால், மக்களின் குற்றங்கள்
களைய, எந்தவிதமான தோஷங்களும்
இல்லாதாவர்களாகி, முடிவில், மண்ணுலகிலும்,
தேவருலகிலும் புகழ் பெற்றவர்களாகி, முக்தியினை
அடைவார்கள்.
இதன் கருத்து,
நல்ல தானப்பயனானது மண்ணுலகிலும், விண்ணுலகிலும் சிறந்த புகழைத் தந்து, போகபூமி இன்பத்தை அனுபவித்து,
முக்தி இன்பத்தை அடையும் பாக்கியம் பெற, இல்லறமே
சிறந்ததென கூறுகிறார் ஆசிரியர்.
நடுக்கத்தில் தோன்றுகின்ற நாற்கதி
துன்பத்தைப் போக்கி
இடர் இடை உய்த்தல்
இன்றி இளந்தளிர் பிண்டி
அடியில்
சுடர்கொள் வலையம் மூன்றில்
சுந்தரத் திருவுரு கொண்ட
அருகனின் அடியவர்களுக்கு அழிந்திடும்
பாவங்களெல்லாம் 43
நடுக்கத்தினடமாக தோன்றுகின்ற,
நான்கு கதிகளில் உண்டாகும் துன்பத்தையெல்லாம் நீக்கி,
மனதை துன்பமான வழியில் செலுத்தாமல்,
தளிர் தழைத்து, மலர்கள்
மலர்ந்து, மணம் வீசும்
அசோக மரத்தின் அடியில், ஆதவனின்
பேரொளி போல் ஒளிவீசும் பிரபாவலையம் ஒளியில் அழகுமிக்க
திருவுருவத்துடன் வீற்றிருக்கும் அருகபெருமானின், தரும மார்க்கத்தில் பிரவேசிக்கும்
அடியவர்களின், அனைத்துப்பாவங்களும் அழிந்துவிடும்.
நெஞ்சத்தில் பற்றினைத்
துறந்து நால்வகை தானங்கள்
ஈந்து
கள் அவிழ் மாலைகள்
அணிந்த கன்னியரோடிணைந்து வாழ்ந்து
நல்லிய துறவற நோம்பேற்று
புள் உறை வனத்தவம்
செய்யாதார்
இடும்பை நோய்க்கு இரைகளாவர் இருள் சூழ் நரகில்
வீழ்வர் 44
மது சொட்டும் மாலைகளை
சூடிய மங்கையர்களுடன் இல்லற தரும
நெறிகளை பின்பற்றி வாழ்ந்து,
தாமரையிலை தண்ணீர் போல், அந்த இல்லற வாழ்க்கையில் பற்றுகளை
விட்டொழித்து, உத்தமமான நான்கு
தானங்களைச் செய்து, உயரிய தவ நோன்பினை
ஏற்று, பறவைகள் வாழும்
காட்டிற்கு சென்று தவத்தினை
செய்யும் காரியங்களைச் செய்யாதவர்கள், கொடும்
துன்பமாகிய நோய்க்கு விருந்தாகி,
இருள் சூழ் நரகத்திற்கு
செல்வார்கள். இச்செய்யுளின் கருத்தும்
34, 35, 37, 38, 39 செய்யுள்கள் கருத்தும்
ஒன்றேயாகும்.
உயிர் கொலைய நீக்கிடுங்கள்
ஊன் உண்ணல் தவிர்த்திடுங்கள்
உண்மைப் பொருள் உணர்ந்திடுங்கள் ஊறு, சொல், செயல் ஒழியுங்கள்
நல்லிய குணங்கள் ஏற்று நலிவுறும் தீக்குணங்கள்
போக்கி
நல்லதோர் மானிடப் பிறவியில்
நற்கதி அடைய வாழுங்கள் 45
நல்லதோர்
மானிடப் பிறவியில் பிறந்த
நாம், நற்கதி அடைய வேண்டுமானால், உயிர் வதை செய்யும்
கொலையை செய்யாமலும், கொன்ற பின் அந்த உடலை உண்ணாமலும்,
மெய்ப்பொருள்களின் தன்மையை உணர்ந்து
கொள்ளுதலும், கெடுதல் செய்யும்
புறங்கூறல், கடுஞ் சொற்களை பேசுதல்
அகியவற்றை தவிர்த்தலும், ஆகியவைகளுடன், தீயசெயல்
எண்ணங்களை விட்டு விட்டு,
நல்ல குணங்களோடு, வாழ வேண்டும்.
இச்செய்யுளில் ஆசிரியர்,
கோறல், மேறல், தேறல்,
கூறல் என்று அழகுபட
பொருத்தியுள்ளார். கொலையை கோறல்,
உண்ணலை மேறல், உணர்தலை
தேறல், சொல்வதை கூறல் என கூறியிருப்பது
நயமிக்கவைகள்.
பற்றினை மனம் பற்றிவிட்டால்
பற்றிடும் எண் வினைகள் எல்லாம்
கொலையொடு பிறன்மனை ஓம்பல்
கொடும் நரகில் கால் விலங்காகும்
பற்றினை பற்றின்றி அறுத்தல்
பற்றிடும் நல் வினைகளெல்லாம்
பற்றிடும் தேவப் பேறு நம்மை பாரீரே
அறிந்து கொள்ளுங்கள் 46
மனிதர்கள்
எவ்வளவு விவேகிகளாக இருப்பினும்,
பற்று நீங்காத உள்ளத்தவர்களாக இருந்தால், அவர்களை எட்டு தீவினைகளும் பற்றிக்
கொள்ளும். கொலை செய்தல்,
பிறன்மனையை விரும்பி அடைதல்
போன்ற பாவச்செயல்கள், அவர்களுக்கு
கால்விலங்குகள் ஆகி, கொடிய நரகத்தில் தள்ளிவிடும்.
பற்றுகளை வெறுத்து, அப்பற்றுகளை
அறுத்து அழித்தால், எல்ல நல்வினைகளும் நம்மை வந்தடைந்து, தேவர் உலகை நமக்கு
அளிக்கும். உலக மக்களே
இதைப் புரிந்து கொண்டு
பற்றற்று வாழ பழகிடுங்கள்.
இல்லற தருமங்கள் ஏற்றோர்
இறைவழி பொருளைச் சேர்த்து
நல்லற தானங்கள் செய்தால்
நாடலாம் நற்கதி தன்னை
நற்கதி, இல்லறம் இரண்டும்
நிலையில்லை எனத் தெளிந்து
துறவெய்து தூய தவம் செய்தால் துலங்கிடும்
முக்தி நமக்கு 47
நற்கதி அடைய
விரும்புவோர்கள், இல்லற தருமத்தில்,
நியாயமான முறையில், ஒழுக்க
வழியில் பொருளைச் சேர்த்து,
அப்பொருளை நல்லற நெறிகளோடு,
தான தருமங்கள் செய்யவேண்டும். இல்லற இன்பமும், சுவர்காதி
பதவிகளின் இன்பமும், நிலையற்றவை
என்பதை மனம் உணர்ந்து
தெளிந்தால், அனைத்துப் பற்றுகளையும்
நீக்கி, உயர்ந்த துறவை ஏற்று, தூய தவம் செய்தால்,
நிலைத்த இன்பமான முக்தி
பேறை அடையலாம். ஆதலின்,
இல்லறம், துறவறம் என்ற இரண்டு தருமத்தில்
ஒரு தருமத்தையேனும் ஏற்று செய்ய வேண்டும்.
நல்லொழுக்கம் இல்லாதோரும் நரி விருத்தம் நூல் நெறி கேட்டு
நன்னெறி மெய்யென உணர்ந்து
நலிந்தோர்க்கு தானம் செய்ய
நற்கதியில் இன்பம் பெறுவாரென
நவின்றிடும் இந்நூலையுணர்ந்து
இல்லாதார்க்கு ஈதல் ஒன்றேதான்
இல்லற வாழ்வின் இன்பமாம் 48
நல்ல
ஒழுக்கமும், நற்குணங்களும் இல்லாதவர்கள்
கூட, இந்த நரி விருத்தம் நூல் நவிலும் நெறிகளைக் கேட்டு உணர்ந்த
பின்னராவது, இதில் கூறியுள்ள
நீதிநெறிகள், உண்மையானது என்பதை
உணர்ந்து, வறியவர்களுக்கு தருமம்
செய்தால் மட்டுமே, தாங்கள்
எடுக்கும் கதிகளில், துன்பம்
அடையாமல், இன்பத்தையே அடைவார்கள்.
இதனால் இல்லாதவர்களுக்கு கொடுக்கும்
தானமே இன்பத்தையும், நற்பேறையும்
கொடுக்கும் என்பதை உணருங்கள்.
வினை அமைத்த வாழ்நாள்
தாண்டி வாழும் உயிர்கள்
உலகிலில்லை
இதையறியா நரி தன் ஆசையால் இழந்தது
தன் ஆயுள் தன்னை
யாக்கையின் நிலையாமை உணர்ந்து நல்லொழுக்கம் கொள்ள வேண்டும்
நல்வழியில் பொருந்தாதவர்கள் நரகத்தில்
உழல்வதும் உண்மை
49
வாழ்நாளை
வரையறுக்க தனிக் கடவுள்
இல்லை. கடவுள் உண்டு என்பதை
சமணம் ஒப்புக்கொள்வதும் இல்லை.
அதனால், வினையால் அல்லது
கர்மாவால், வரையறுக்கப்பட்ட வாழ்நாளைத் தாண்டி, எந்த உயிரும் உலகத்தில்
வாழ்வதில்லை. இந்த நூலில் கூறப்பட்ட
நரியின் பேராசையால், அது தன் உயிரை இழந்தது. அதுபோல்,
இந்த உலகில் நாம் நெடுங்காலம் வாழ்வோம்
என்ற பேராசையால், உடலின்
நிலையாமையை உணராது, புலால்
உண்டும், தீய வழிகளில் சென்றும்,
நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையால்,
பொருள்களைச் சேர்த்தும், நல்லொழுக்கத்தை விட்டு
வாழும் மனிதர்கள் இருளான
நரகத்தில் போய் பிறப்பார்கள்
என்பது திட்டமான உண்மையாகும்.
இதை மேரு மந்திர
புராணம் என்னும் நூலில்
கூறும் விசித்திரமதியின் கதையால்
அறியலாம் என்கிறார் நூலாசிரியர்.
அஸ்தினாபுரம் அரசன் பிரீதிபத்திரனுக்கும், அவன் ராணி வசுந்தரிக்கும் பிறந்த
மகன் பிரீத்திங்கரன். பிரீத்திங்கரனுக்கும் அவன் மனைவி கமலிக்கும்
பிறந்த மகன் விசித்திரமதி.
இந்த விசித்திரமதி இளமை காலத்திலேயே
துறவு பூண்டு, தருமருசி,
என்னும் முனிவரிடம் தருமம்
கேட்டு, அயோதிக்கு அருகில்
வாழ்ந்து வந்தான்.
பிரீத்திங்கரன், ஒரு சமயம் அயோத்தி
வரும்போது, புத்திசேனை என்னும்
விலைமகளிடம் உணவு ஏற்று,
அவளுக்கு தரும உபதேசம்
செய்து வந்தான். பிரீத்திங்கரனால் அந்த விலைமகளின் வரலாற்றை
கேட்ட விசித்திரமதி, அவள் மேல் ஆசையுற்று,
தன் தவத்தை விட்டு
நீங்கி, அவளிடம் சென்று
தன் விருப்பத்தைக் கூறுகிறான்.
புத்திசேனை அதற்கு இணங்க மறுக்கிறாள்.
விசித்திரமதி அந்நாட்டு
மன்னனுக்கு, புலால் உணவு சமைத்து தந்து, தானும் ஊன் உண்டு,
அவன் நட்புக்கு பாத்திரமாகிறான். அந்த நட்பின் உதவியால்,
மன்னனின் செல்வாக்கில் அந்த விலைமகளுடன் சேர்ந்து,
அவளின் ஒழுக்கத்தை, சீலத்தை
கெடுக்கிறான். பிறகு விசித்திரமதி
இறந்து நரகத்தை அடைகிறான்.
புலால் உணவும், தீய நடவடிக்கைகளும் ஒருவனை
நரகத்தில்தான் கொண்டு சேர்க்கும்
என்று இந்த மேரு மந்திர புராணம் கூறுகிறது.
செல்வத்தின் செருக்கினோடும் சேர்ந்திட்ட
உறவுகளோடும்
அறம் செய்யா வாழ்வு
வாழ்ந்தோர் அவனியில் பலபேருண்டு
உயர்நீதி உணர்ந்த மக்கள்
உலோபத்தை பாவம் என்றனர்
உம் வாழ்க்கை நிலையாமை
கருதி உயர்நெறியால் நற்கதி ஏற்பீர் 50
இவ்வுலகில், உற்றார்,
உறவினர்களோடு சேர்ந்து, செல்வத்துடனும், செருக்குடனும்
வாழும் பல மனிதர்கள்,
பேராசை குணத்தினால், கஞ்சத்தனமாக
தான தருமங்கள் ஏதும் செய்யாமல், வீணே வாழ்ந்து, இறந்து,
தீக்கதிகளில் வீழ்ந்து துன்பம்
அனுபவித்தனர் என்று சரித்திரங்கள்
கூறுவதையும் நாம் அறிவோம்.
நீதிநெறிகளைக் கற்றுணர்ந்து, உயர்ந்த
ஒழுக்கங்களை கடைபிடிக்கும் மனிதர்களும்,
உலோப குணத்தை குற்றம் என்றும்,
பாவம் என்றும் கூறுகின்றனர்.
இதனால், மனித வாழ்க்கையில் யாக்கை நிலையாமையை
முற்றும் உணர்ந்து, தான தருமங்களைச் செய்து,
நற்கதியடைய வேண்டும்.
ஆக்குவதேதெனில் அறத்தையாக்குக
போக்குவதேதெனில் வெகுளி போக்குக
நோக்குவதேதெனில் ஞானம் நோக்குக
காக்குவதேதெனில் விரதம் காக்கவே 51
உலகத்து
மக்கள் எது செய்வது
என்றாலும் அறம் சார்ந்தவைகளையே செய்ய வேண்டும். தன்னிடம்
உள்ள குறைகளில் எதையாவது
நீக்க வேண்டுமானால் கோபத்தை
நீக்க வேண்டும். நாம் உலகத்தில் எதைப் பார்த்தாலும் அதில் உள்ள ஞானத்தைப்
பார்க்க வேண்டும். நாம் உலகத்தில் எதைக் காக்க நினைத்தாலும்
அணு விரதம், குண விரதம், சிட்சா விரதம் என்ற மூன்று விரதத்தைக்
காக்க வேண்டும். மகாவிரதம் துறவறத்தார்க்கு உரியது
என்பதால் மூன்று விரதம்
எனக் குறிப்பிடப்பட்டது.
நரி விருத்தம் முடிவுற்றது.
No comments:
Post a Comment