பட்டாரகர்கள்




பட்டாரகர்கள்…

ஜைன மடாபதிகள்…


சமண சந்நியாச நெறிமுறை ஐந்து கட்டநிலைகளாக வரையறைக்கப்பட்டுள்ளது. பிரம்மச்சர்யம், சுக்லக், ஐலக், திகம்பரம், ஆர்யிகை என்பன. துறவு நிலை யேற்றவர்கள் ஒரு ஸ்தலத்திலிருந்து மற்றொரு ஸ்தலத்திற்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பர். ஓரிடத்தில் நிரந்தரமாக தங்க இடவசதி தேவையில்லாமல் இருந்தது. அதாவது மடவளாகம் அவசியமில்லாமல் இருந்தது. பின்நாளில் சிராவகர்களை வாழ்வை மேம்படுத்த,  நல்வழிப்படுத்த அவசியம் ஏற்பட்ட போது பட்டாரக ஸ்வாமி எனும் பரிணாமம் உருவானது. 



இந்த துறவுநிலை பரிணாம வளர்ச்சி மஹாவீரருக்கு பிற்காலத்தில் தனித்துவமான பட்டாரகர் எனும் இத்துறவிகளிடத்தில் சிராவகர்களை ஜைன தர்மநெறியில் வழிநடத்தும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதனால் பட்டாரகர்கள் மதகுருமார்களாக, அதிலும் திகம்பர பீஸ்பந்தி எனும் உட்பிரிவில், அனைவராலும் மதிக்கப்பட்டனர்.



பட்டாரா, பலரா, பட்டோரா மற்றும் பட்டாரகர் என வெவ்வேறு வகையில் அழைக்கப்பட்டவர்கள் மாண்புமிக்கவர்களாக, வணக்கத்திற்குரிய குருமார்களாக, சத்குருவாக, சாந்தசீலராக, மெய்யுணர்வாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அவ்வழியில் நோக்குங்கால் சான்றாண்மையும், புலமையும் மேலும் மேலாண்மை மிக்கவர்களாக மதிக்கப்பட்டனர். பட்டாரகர்கள் பின்னாளில் பட்டார்சார்யர் என்ற மட அதிபதிகளாக அழைக்கப்பட்டனர். அதனால் பட்டாரகா, பண்டிதாச்சார்யா எனும் மேனிலைக்கு சமமாக கருதப்பட்டனர்.



மேலும் இப்பெயர் சான்றாண்மையும், மெய்ஞ்ஞானமும் பெற்ற மன்னரின் மாண்பினை சுட்டும் கூற்றாய் முற்கால வழக்கத்தில் இருந்துள்ளது. தீர்த்தங்கரர்களை கேவலஞானம் பெற்ற பட்டாரகார்கள் என்ற ஒரு ஆகமக்கூற்றுமுளது.



கி.பி. 1111 ச்சார்ந்த ரோனா கல்வெட்டு; பட்டாவிருத்தி பரம்பரையை, மதங்களைக் பற்றிய குறிப்பில், பட்டாரகா எனும் சொல் மன்னர்களுக்கும், குருமார்களுக்கும், சான்றோர்களுக்குமான பின்சேர்க்கைச் சொல்லாட்சியில் இருந்ததாக தெரிவிக்கிறது. இரண்டாம் நாகவர்மர் எனும் ஜைன கவிஞரும் அவ்வாறே குறிப்பிடுகிறார்.



முகமதியர்கள் படையெடுப்பின் போது எட்டாம் நூற்றாண்டிற்கு பின் ஜைன மதத்திற்கும், நிர்வாண முனிவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் மதத்தை பாதுகாக்கும் பொறுப்பும் அவற்றின் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையும் அதிகம் தேவைப்பட்டன.



அப்போதைய சவால்களை அவ்வப்போது இடம் மாறும் நிலையில் இருந்த ஆச்சார்ய சங்கங்களினால் எதிர் கொள்வது கடினமாக இருந்தது. அவ்வேளையில் தவநெறி ஏற்றும், நிர்வாகத்திறமையும் கொண்ட ஒருவரை பட்டாரகராக அங்காங்கே நியமித்தும், அவர்கள் சமண மத வளர்ச்சிக்குப் பாடுபடவும் வழி செய்தனர் அக்காலத்தில் வாழ்ந்த ஜைன சமய காவலர்கள்.



அதனால் பட்டாரகர்கள் ஒரு குறிப்பிட்ட துறவற பாரம்பரிய அமைப்புகளான சங்கம்/கணம்/ கச்சா எனும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். அந்தந்த வட்டார இல்லறத்தார்களை வழிநடத்தும் திறமையும், ஜினாலயங்களை மற்றும் ஜைன ஆகமங்களை பாதுக்காத்தல், துறவியர் சங்கங்களுக்கு அரசினரால் வரும் இடையூறுகளை எதிர் கொள்ளதல் போன்றவற்றை தலையாய பணியாக ஏற்றுக் கொண்டு  கடமையாற்றி வந்துள்ளனர்.



அவ்வழியே பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜைன மதத்தினர் கூடிவாழும் பகுதிகளில் மடங்கள் அமைக்கப்பட்டு அதில் சமண வளர்ச்சிப் பணியில் முழுநேரம் தங்களை ஈடுபடுத்த பிரம்மச்சர்ய விரதமளித்து துறவறம் ஏற்றபின்பு இயம, நியம வழிகளில் புலனடக்கத்தை கைக்கொண்டு நடப்பவர்களாகவும் மற்றும் நிர்வாகிகளாகவும் அமைய  தீட்சையும், பட்டாபிஷேக பதவியேற்றம் செய்த பின்பே அமர்த்தப்பட்டனர். அவர்களும் அக்காலம் தொட்டே அந்தந்த பகுதியில் சமணத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னேற்ற அர்ப்பணிப்புடன் வாழ்ந்தனர் என்பதை அங்காங்குள்ள மடங்களே பறை சாற்றுகின்றன.



அதனால் தனித்துவமான, இன்றியமையாத அமைப்பான மடங்கள், மடாதிபதிகளை நியமிக்கும் வழக்கம் பாரதத்தில் திகம்பர மரபினர் அதிகம் வாழும் மேற்குப் பகுதியில் அதிகம் தோன்றி கோலோச்சி இருந்து வருகிறது..



அதனால் முகமதிய போர் மற்றும் ஆக்கிரமிப்பால் வந்த சவால்களை எதிர் கொண்டு சமண சமய வளர்ச்சிக்கு  அர்ப்பணிப்புடன் யதிகளுக்கும், சிராவகர்களுக்கும் இடையிலான அந்தஸ்த்தில் அமர்த்தப்பட்ட பட்டாரகர்களின் மடங்கள் அந்தந்த வட்டார குலத்தில் பிறந்து துறவறநிலையை ஏற்கும் பக்குவம் பெற்றவர்களாவார்கள்.


அவ்வடிப்படையில் வட இந்தியாவில் -  


டில்லி, ஹிச்சூர் (ஹரியானா), மதுரா(உ.பி.);


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், நகவூரா, அஜ்மீர், சிதெளதா, பிரதாப்கர், துங்கார்பூர், நரசிம்மாப்பூர், கேஷரியாஜி, மஹாவீர்ஜி


மத்திய பிரதேசத்தில்  குவாலியர், சோனகிரி, அதேர் பிரதேஷ்(மால்வா)


குஜராத்தில்:  இதியார், சஹவடா, சூரத், பான்பூர், சொஜித்ரா, கலோல், ஜெர்ஹெத்


மஹாராஷ்ட்ரா வில்: கரஞ்சா, நாக்பூர், லாட்டுர், நாந்தெட், கோலாப்பூர், நந்தினி


கர்நாடகாவில் மலாகெட், சிரவணபெலகொளா, முதாகிரி, கார்காளா, ஹிம்சா, ஸ்வாதி, நரசிம்மராஜபுரம், கனககிரி


தமிழ்நாட்டில் ஜினகஞ்சி (மேல்சித்தாமூர்)


இத்தனை மடங்கள் சென்றசில நூற்றாண்டுகள் வரை இருந்துள்ளன.



பெரும்பாலான பாரதப்பகுதிகளில் இருந்த மடங்கள் பிற்காலத்தில் அழிந்து போயின. அவற்றுள் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த அளவில் இன்றும் அழியாமல் உள்ளன. ஒரே பிரதேசத்தில் வெவ்வேறு பாரம்பர்யத்தை சேர்ந்த மடங்களும் அதன் கிளைகளும் தோன்றின. உ-மாக கரஞ்சாவில் சேனகனா, பலத்கார கனா, கஸ்தா ஜி சங்கஜ் பரம்பரை மடங்கள் மூன்றும் தற்போதும் உள்ளன. சூரத்திலும் பலத்கார கனா மற்றும் கஸ்தா சங்க பட்டாரகர மடங்கள் ஆண்டு வருகின்றனர். 


அந்தந்த பிரதேச சமண இனத்தவரின் வட்டாரப் பெயரிலே துவக்கப்பட்டிருந்தாலும், பின்னர் போக்குவரத்து அதிகரிக்கவே அனைத்தும் ஒன்றிணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே இன்றுவரையான நிதர்சனம்.


மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவைப் பொருத்த மட்டில்
ஜைன குலமும் - அதில் தோன்றிய முதல் பட்டாச்சாரியர்களின் பட்டப்பெயர்களும், மடத் ஸ்தலமும் என்ற வகையில்…



நரசிங்கபுரா – யக்ஷகிர்த்தி - ப்ரதாப்கர்;

சைத்வாலா – விஷாலகீர்த்தி - லட்டுர்;

பஞ்சமா – லக்ஷ்மிசேனா - கோலாப்பூர்;

சதுர்த்தா – ஜினசேனா - நந்தினி ;

போகரா – தேவேந்திரகீர்த்தி - ஹும்சா;

உபாத்யாயா – சாருகீர்த்தி - மூடுபத்ரி;

வைஷ்யா – சாருகீர்த்தி - சிரவணபெலகொளா;

க்ஷத்ரியா – லிலிதகீர்த்தி – கார்காளா



அக்குலத்தை சேர்ந்தவர்களை முதன்முதலில் பட்டாபிஷேகமும், தீக்ஷையும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற்காலங்களில் அம்முறை விட்டொழிக்கப்பட்டு பாரதத்தில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவரையும் அவர்களை ஆகம அறிவின் தகுதி மற்றும் நிர்வாகத்திறமையைக் கருதி மடத்தின் பொறுப்பினை அளித்து வந்துள்ளனர். ஆனால் அக்குலப் பட்டபெயர் பாரம்பர்யம் தொடர்ந்து இக்காலத்திலும் துறவிஆட்சியாளர்களான மடாதிபதிகளுக்கு பட்டாச்சார்யார் என்ற மரியாதை பின்சேர்க்கையுடன் வழங்கப்பட்டே வருகிறது.


அம்மடங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டு அந்தந்த காலகட்டங்களில் பல வழிகளில் ஜைன மத வளர்ச்சிக்கு பாடுபட்டன என்றால் மிகையாகாது.


தற்போதைய சூழலில் பிரதேசம், குலப்பாரம்பர்ய பெயர் மடத்தலம் இவற்றை காணும் போது;


ராஜஸ்தான் – யக்ஷகீர்த்தி - பிரதாப்கர் (சித்தெளட், சித்தெளகார்)

மஹாராட்ஷ்ட்ரா – விஷால்கீர்த்தி – லட்டூர் (ஓசாமாபாத்)

மஹாராட்ஷ்ட்ரா – லஷ்மி சேனர் – கோலாப்பூர்

மஹாராட்ஷ்ட்ரா – ஜினசேனர் – நந்தினி (கோலாப்பூர்)

கர்நாடகா – சாருகீர்த்தி -  சரவணபெலகொளா (ஹாசன்)

கர்நாடகா – சார்கீர்த்தி – மூடுபத்ரி – (தக்ஷண கன்னடா)

கர்நாடகா – லலிதகீர்த்தி  - கார்காளா – (தக்ஷண கன்னடா)

கர்நாடகா -  தேவேந்திரகீர்த்தி – ஹும்சா – (ஷிமோகா)

கர்நாடகா – பட்டாகளங்கா – ஸ்வாதி – (உத்தர கன்னடா)

கர்நாடகா – லஷ்மிசேனர் – பெனுகொண்டை (நரசிங்கராஜபுரா)

கர்நாடகா – புவனகீர்த்தி - கனககிரி (மைசூரு)

கர்நாடகா – பானுகீர்த்தி – கம்பத்தஹல்லி

கர்நாடகா – தருமசேனர் – வரூர்

கர்நாடகா – ரிஷ்பசேன – லக்காவல்லி

தமிழ்நாடு – லஷ்மிசேனர் – ஜினகஞ்சி மேல்சித்தாமூர்.

தமிழ்நாடு -  தவளகீர்த்தி  - அரஹந்தகிரி, திருமலை.


வட்டார பராம்பர்யகுலத்தின் பெயரில் அழைக்கப்பட்ட பட்டாரகர்கள் அந்தந்த அம்மடங்களில் அமர்ந்திருந்தாலும் அனைத்து ஜைனர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், துறவிகளின் பாதுகாப்பிற்கும், ஜைன ஆகமங்கள் பாதுகாப்பிற்கும், கொள்கைகளைப் பரப்புவதற்கும் முன்னோடிகளாகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகின்றனர் என்பதே இன்றுவரையான நிதர்சனம்.


பொதுவாக ஜைன ஆகமங்களை நன்கு கற்றறிந்த இவர்கள் மதத்தை பரப்புவதையே பிரதான நோக்கமாக கொண்டு பல ஜினாலயங்களையும், மானஸ்தம்பங்களையும், கிளை மடங்களையும் தோற்றுவித்துக் கொண்டே வருகின்றனர். பல நூல்களையும், அரசுடன் பல மத ஒப்பந்தங்களையும், அரசு சலுகையை பெறுவதில் முழுக் கவனத்தையும் செலுத்துபவராயும் விளங்கி வருகின்றனர்.


அவர்கள் இவ்வாறான சீரிய செயலை நிறைவேற்ற அப்பகுதி ஜைனப் பெருமக்களின் ஒற்றுமை உணர்வே பிரதானமானது. அவரது பணிக்கு தம்தம்மால் எந்த வகையில், அளவில் உதவிட முடியும் என்பதில் உறுதியுடன் சிராவகர்கள் இருந்தால் அம்மடங்கள் அனைத்தும் அழியாமலும் மேலும் வளர்ச்சி யுற்று பல நன்மைகளை ஜைன சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்குமே அஹிம்சை யுணர்வு மட்டுமின்றி சமதர்மத்தையும் போதித்து எங்கும் அமைதி நிலவ உதவிடும் என்பதை இக்கால கட்டத்தில் அனைத்து ஜைன இல்லறத்தாரும் நினைவில் கொள்ளவதே சாலச் சிறந்தது.




No comments:

Post a Comment