நாககுமார காவியம் - Nagakumara kaviyam




நாககுமார காவியம்






நாககுமார காவியம்.


இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம்.

ஆனால் தமிழில் முதலில் வீரயுகப்பாடல்கள்தாம் தோன்றின. அதாவது கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச்சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். தமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியேதமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன என்பதே பல அறிஞர்களும் கூறுகின்றனர்.


காப்பியம் என்றால் என்ன?

வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் ‘காவியமே’. எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர். தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன.

இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது ‘காப்பியம்’ எனக் கருதஇடம் உண்டு. காப்பியம் என்ற இலக்கியமே, வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக - சமய - அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது.

இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப் பட்டன.

இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு. அவ்வகையில் காப்பியப்பாடல்கள் இசைவடிவில் இயம்பத்தகுதியானவை என்பதும் புலப்படும். இவ்வகையில் காப்பியம் என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது அதாவது  ‘இசை மற்றும் உரையாய் சொல்லப்பட்டு வருவது’ என்பதாகும்.

இதில் ஐம்பெரும்காப்பியங்கள், ஐஞ்சிறும்காப்பியங்கள் மற்றும் சைவக்காப்பியங்கள், வைணவக்காப்பியங்கள், கிருஸ்துவக்காப்பியங்கள் போன்ற வகைப்பாட்டில் ஏராளமான காப்பியங்கள் உள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்கள் என்றும்; உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் எண்ணப்படுகின்றன.

அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.

இவ்வாறாக சிறுகாப்பிய வகையில் நீலகேசி மற்றும் யசோதரகாவியம் இரண்டையும் குழுவில் தொடராக வழங்கிவிட்டபடியால் தற்போது நாககுமார காவியம் என்ற காப்பியநடை இலக்கியத்தை பாடல்களுடன் அதன் கதைவரிகளை மட்டும் தினமும் படித்தறிவோம் என்றளவில் வழங்கத் துவங்கலாம் என்றுள்ளேன்.

அதற்கான நூல்களில் பாடலகள், கருத்தைத் தருவித்து வழங்கும்போது ஏதேனும் தவறுகள் இருந்தால் என்னுடையதாகவும், உயர்வுகள் இருப்பின் அக்காப்பியத்தை வழங்க உதவிய சான்றோர் பெருமக்களுக்குமாக அளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.


ஜைன புராணங்கள் அறுபத்துமூன்று மகாபுருஷர்களின் சரிதத்தை தெரிவிக்கின்றன. அவர்களின் சரிதத்தை ஆதிபுராணம் மற்றும் உத்திரபுராணம் என்ற இரு நூல்கள் சேர்ந்த மஹாபுராணம் நமக்கு தெரிவிக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டில் அத்தொன்மையான நூலினை ஜினசேனாச்சாரியார் மற்றும் அவரது சீடர் குணபத்திராச்சாரியர் ஆகிய இருவரும் யாத்து தந்துள்ளனர்.

அப்பிரசித்திபெற்ற அந்த நூலில் 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்கரவர்த்திகள், 9 வாசுதேவர்கள், 9 பலதேவர்கள், 9 பிரதிவாசுதேவர்கள் இவ்வாறாக 63 உத்தமபுருஷர்களையும் அவர்களுடன் 11 ருத்ரர்கள், 24காமதேவர்கள், 9நாரதர்கள், 14 குலகர்கள் மற்றும் ஜினர்களின் தாய், தந்தையர்களைப் பற்றியும் உத்தம் புருஷர்களாக தெரிவிக்கிறது. அக்காமதேவர்களில் முதலாமவர் பகவான் பாகுபலியாவர். அதுபோன்று ஸ்ரீதரர், தர்சனபத்ரர், பிரசேனசந்திரர் என வரிசைப்படி ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்களில் 22வது தீர்த்தங்கரர் ஸ்ரீநேமிநாதஸ்வாமி காலத்தில் வாழ்ந்த 22வது காமதேவர் நாககுமாரர் ஆவார். அவரைப்பற்றிய சரிதத்தை தெரிவிப்பதோடு, சமண சித்தாந்தங்கள், துறவு, இயம,நியமங்களையும் அறியச் செய்வது இந்த நாககுமார காப்பியத்தின் நோக்கம் ஆகும். அதில் ஸ்ரீபஞ்சமி நோன்புக்கதை பற்றிய செய்திகள் உள்ளன. 

இக்காப்பிய நூலை படிக்க துணையாய் இருந்தவை.

1. நாககுமாரனின் சரிதம் என்னும் உரைநடை ஆக்கத்தை தந்தவர் வங்காரம் ஜெ. அப்பாண்டைராஜன் அவர்கள்.

2. மல்லிஷேனசூரியாரால் இயற்றப்பட்ட நாககுமாரகாவியம் என்ற சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்ட நூல். சுவடி ஆக்கமாக இருந்த நூலின் பதிப்பாசிரியர்  திரு. வீரராகவன் எம்.ஏ.,பி.எட் அவர்கள். சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு சுவடியை வழங்கியதோடு பதிப்பாசிரியருக்கு தோன்றிய பல ஐயங்களையும் தீர்த்துவைத்துவர் தஞ்சை அறம்கூறும் அன்னை, ஸ்ரீராஜலட்சுமி அம்மாள் அவர்கள். அந்த நூலை எனக்கு வழங்கியவர்  மாமா தஞ்சை திருவாளர் ச. அப்பாண்டைராஜன் அவர்கள். (sorry படித்து பதிவிடுவதாக சொல்லி  வாங்கி வந்து ஓர் ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. )

3. நாககுமார காவியம் – பாடல் மற்றும் உரைநடையுடன் நூலை வழங்கியவர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள்.
இவர் நூலாக்கம் செய்ய சுவடியைத் தந்து உதவியவர் ஜீவபந்து திருவாளர். ஜீவபந்து அவர்கள். அவருக்கு மூலபடியைக் கொடுத்துதவியது ஜைனப்பேரறிஞர் ஜெ. சின்னசாமி நைனார் அவர்கள் ஆவார்.

4. நாககுமார காவியம் – மூலம் மற்றும் உரையுடன் வங்காரம் திரு. ஜெ. அப்பாண்டைராசன் அவர்கள். வெளியீடு தமிழ்நிலையம், சென்னை.


இக்காப்பியம் இக்காலக்கட்டத்திலும் இவ்வூடகத்தினூடே தமிழகத்தில் உயிர்பெற்று உலவிட  உதவிய மூலப்படியின் துணையுடன் இந்நான்கு நூல்களையும் வெளியிட்ட சான்றோர்கள், வழங்கியோர்கள் அனைவருக்கும் முதலில் என் சார்பிலும் உங்கள் சார்பிலும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

நாககுமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170 பாடல்களையும் கொண்டுள்ளது. இது சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் முதலிய காவியங்களைப் போல விருத்தயாப்பில் அமைந்துள்ளது. தமிழில் விருத்த காவியங்களே மிகுதியாயுள்ளன.

கதை நடத்திச் செல்லுகின்ற திறத்திலும் பிற காவிய மரபுகளை இதுவும் பெற்றுள்ளது.  இடையிடையே கவிக் கூற்றாகக் கதைப் போக்கினைத் தெரிவித்து மேலே விவரித்துச் செல்வது ஒரு மரபு.  இம் மரபினை இக்காவியத்துள்ளும் காணலாகும்.

இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் ஸ்ரீமஹாவீரஸ்வாமி சரித்திரம் உரைக்கும் பகுதியாகிய ஸ்ரீ வர்த்தமான புராணத்தில் சிரேணிக மாமன்னன், தன் பெரும்தேவி ஜ்லேனியுடன் விபுலகிரி சிகரத்தில் அமைந்துள்ள சமவசரண மண்டலத்தில் ஸ்ரீ வர்த்தமானரைத் தொழுது போற்றியமையும், அங்குக் கௌதம சுவாமியிடம் தன் முன்னைப் பிறப்புத் தொடர்பினை வினவியறிந்ததும் கூறப்பட்ட நிகழ்காலத் தீர்த்தங்கரர்கள் வரலாற்றில் 22வது ஜினர் ஸ்ரீநேமிநாதஸ்வாமியின் வரலாற்றினிடையே இக்காப்பியக்கதை சொல்லப்பட்டிருக்கிறது இக்குறிப்பு ஸ்ரீபுராணத்தில் உள்ளது.

நாககுமாரன் சரிதம் முதலாக நாககுமாரனின் வீரதீரச் செயல்களும், காதல் களியாட்டங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. நாககுமாரனின் முற்பிறப்பு வரலாற்றையும், பஞ்சமி விரத நோன்பையும், அதனால் விளையும் பெரும் பயனையும், துறவு நிலையையும் எடுத்துரைக்கின்றது.

நாககுமாரன் அரசகுல மங்கையரையும் பிறரையும் திருமணம் செய்துகொள்கிறான்.  காவிய நெடுகிலும் இவன் செய்து கொண்ட திருமணங்கள் பல பேசப்படுகின்றன.  அவனும் வீரச் செயல்களைப் போலவே இன்பம் அனுபவிப்பதிலும் நாகலோக வாசிகள் போலக் காணப்படுகிறான்.  மன்னர் பலரும் மாவீரர்களும் இவனுக்கு உற்ற துணைவர்களாயிருந்தனர்.

இவ்வளவு சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த இவன் ஜைனமுனிவரிடம் தருமம் கேட்டு, ஞானம் பெறுகிறான்.  இறுதியில் தன் மகன் தேவ குமாரனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொள்கிறான்.  நாககுமாரன் துறவேயன்றி ஜெயவர்மாவின் துறவு , சோமப்பிரபனின் துறவு முதலியனவும் இக்காவியத்துள் இடம் பெறுகின்றன.  எனவே, உலக இன்பங்களில் சிக்கிச் சுழன்றாலும் இறுதியில் துறவு பூண்டு இறைநிலை பெறவேண்டும் என்னும் குறிக்கோளையும் இக் காவியம் எடுத்துரைக்கின்றது.

ஐஞ்சிறு காவியங்களுள் ஒன்றான நாககுமார காவியமும் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றிய காப்பிய நூல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனை தமிழில் எழுதியவர் யார் என்பது இன்னும் முடிவாக வில்லை. சமணப் பெண் துறவி என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

இதன் மூலநூலான நாககுமாரகாவியம் சமஸ்கிர நூலை யாத்துத் தந்தவர் ஸ்ரீமல்லிஷேனர் என்பவர். இவர் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஜினசேனர், கனகசேனர், நரேந்திரசேனர் ஆகியோர் வரிசையில் வந்தவர் ஸ்ரீமல்லிஷேனச்சாரியார் ஆவார். 

இவருக்கு கன்னடம் போன்ற பல பாஷைகள் தெரிந்திருந்ததால் உபயபாஷா கவிச்சக்கரவர்த்தி என்ற விருதும் பெற்றவர். கன்னடத்தில் இவரே ஸ்ரீபஞ்சமீ நோன்புக்கதை என்ற பெயரில் எழுதியுள்ளார்.  ஆதலால் அவரே கூட தமிழில் இவ்வாக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதாகவே தோன்றுகிறது.

இவ்வடமொழிக் காவியத்தில் ஐந்து சருக்கங்களும் அவற்றுள் முறையே 119, 74, 113, 105, 87 பாடல்களும் உள்ளன.  இக் காவியத்தில் உள்ள 498 பாடல்களுள் ஒவ்வொரு சருக்கத்தின் ஈற்றிலுமுள்ள 5 பாடல்களைத் தவிர ஏனைய 493 கவிகளும் ‘அநுஷ்டுப்‘ என்னும் பாவகையில் அமைந்துள்ளன. 

கதைப் போக்கில் இவ் வடமொழிக் காவியத்திற்கும் தமிழ்க்காவியத்திற்கும் ஒரு சில இடங்களில் மட்டுமே வேறுபாடு காணப்படுகிறது. 

மேலும் கன்னடத்தில் நாககுமார ஷட்பதி, என்னும் காவியத்தை டாக்ட்ர். ஹம்ப, நாகராஜய்யா என்பவர் பதிப்பித்துள்ளார். மேலும் பணிகுமார கதா ஸாஹித்யம் என்ற நூலும் இந்த நாககுமாரனைப் பற்றிய பல செய்திகளை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது பந்துவர்மனின் ஜீவசம்போதனக் (நாககுமார) கதைச் சுருக்கம்.

ஸ்ரீராமச்சந்திர முமுக்ஷுவின் புண்யாஸ்ரவ கதா கோசம் சமஸ்கிருதமொழி கன்னட எழுத்தில் உள்ளது.

கல்யாணக் கீர்த்தியின் நாககுமாரக் கதைச் சுருக்கம் என்றநூல்
தமிழ் மொழியில் நாககுமாரகாவியம் – மூலமும், விளக்கவுரையும் என்ற பெயரில் திரு. வி. சந்தானம் பி.ஏ. அவர்கள் பதிப்பு.

போன்ற பல பெயர்களில் பல ஆசிரியர்களால்  சமஸ்கிரதம், கன்னடம், தமிழ் என பலபாஷைகளிலும் இக்கதை பாடல்களுடன் வெளிவந்துள்ளது.

தமிழை உயர்த்திப் பார்ப்பதில் எத்தமிழனுக்கும் ஒரு மகிழ்ச்சியிருப்பது இயல்பே. அவ்வகையில் தமிழாசிரியர்களிடம் சற்று கூடுதல் மரியாதையும், ஆசியும் பெறுவதும் இயற்கையே. அத்தகுதிக்குரியவராக நம் காலத்தில் வாழும் திருத்தக்கதேவராம், நாம் உயர்வாய் மதிக்கும் தமிழாசான், திருவறக் கவிஞர் புலவர் திரு. தோ. ஜம்புகுமாரன் அவர்கள் ஆவார்.

அவர் வழங்கிய பார்ஸ்வநாத காவியத்தில் - காவியம் எனின் மூன்று இலக்கணங்களை உடையதாக இருக்க வேண்டும். குறைவான எழுத்துகள், எளிய அழகிய சொற்கள், ஆழ்ந்த கருத்துகள் என்பன அவை – என குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வகையில் இத்தமிழ் காப்பியமும் உயர்வாய் அமைந்துள்ளதா என வினவியபோது; உள்ளதெனவே அவரும் வழங்க ஆசியளித்தார்கள்.

அவர் ஆரோக்கியமாய் நீளாயுளுடன் பலகாலம் வழிகாட்டுதலை நமக்கு வழங்க ஸ்ரீநேமிநாதரை வணங்கித் தொழுகிறேன் உங்கள் சார்பாக.
---------------------------------

ஸ்ரீ மல்லிக்ஷேணசூரி என்பவரால் சமஸ்திரத்தில் எழுதப்பட்ட முல சமஸ்கிர வரிகளுடன் துவங்குவதே அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொருத்தமாய் அமையும். அப்பாடல்களுக்கான விளக்கத்தை அதன் கீழே வழங்கவில்லை. அதனால் தமிழறிந்தவர்களிடையே தொடர்ந்து சமஸ்கிர செய்யுளை வழங்குவது அர்த்தமற்றதாகி விடும். அதனால் முதல் பாடலுடன் முடித்துக் கொள்ளும் அளவில்..


|| प्र्थम: सर्ग; -  முதலாம் அத்தியாயம்

கடவுள் வாழ்த்து.

ओं नेमिजिन्मन्म्य स्र् र्वसत्वहितप्रद्म् |
व्क्ष्ये नाग्कुमारस्य चरितं दुरितापह्म्  ||


ஓம் நேமிஜினம் ஆனம்ய ஸர்வஸத்வஹிதபிரதம் |
வக்ஷ்யே நாககுமாரஸ்ய சரிதம் துரிதாபஹம் ||


கடவுள் வாழ்த்தில் ஸ்ரீ நேமிஜினரை ஆசிரியர் வணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடல் எழுதப்பட்ட நாகரி எழுத்தைப்பற்றி அறிந்து கொள்வோம்.

---------------------------------
சமஸ்கிரதத்திற்கு பயன்படும் எழுத்துக்கள் ‘நாகரி’ என்ற பெயர்.
 ‘நகரம்’ எனப்பட்ட பாடலிபுத்திரத்தின் (இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா) அடிப்படையில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், எனினும் நகரத்தார் எனப்பட்ட வணிகர்கள் அதிகம் பயன்படுத்தியதின் காரணமாக நாகரி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவர். 

நாகரி எழுத்தில் நந்திநாகரி, தேவநாகரி என இருவகை எழுத்துக்கள் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுவையாக இருந்தன. விஜய நகரர் காலச் செப்பேடுகள் பலவும் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. மாமல்லை, சாளுவன் குப்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகிய இடங்களில் இராஜசிம்ம பல்லவன் காலத்தில் பொறிக்கப்பட்ட நாகரி எழுத்துக் கல்வெட்டுகளே தமிழகத்தில் கிடைக்கும் தொன்மையான நாகரி எழுத்துக் கல்வெட்டுகளாகும்.
தஞ்சை நாயக்கர் காசுகள் பலவும் நாகரி எழுத்தால் ஆன பெயர்களைக் கொண்டுள்ளன. போன்ஸ்லே மன்னர்களின் வரலாறு முழுவதும் தஞ்சை மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியின் ஆணைக்கிணங்கத் தஞ்சைப் பெரிய கோயில் சுவரில் நாகரி எழுத்தில் கல்வெட்டாகப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


தேவநாகரி (Devanagari) என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது.

---------------------- 



முதல் சருக்கம்


கடவுள் வாழ்த்து


மணியுநற் கந்தமுத்து மலிந்த முக்குடை யிலங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர் தமக்கு மெந்தம்
இணைகரஞ் சிரசிற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.


சமஸ்கிர காப்பியம் போன்றே தமிழிலும் கடவுள் வாழ்த்துடன் தர்மசக்கரத்தை உடைய  ஸ்ரீ நேமிநாதர் எனும் ஜினரை வணங்குவதாகவே தொடங்கப்பட்டுள்ளது.

ஒளிவீசும் அழகிய நவரத்தினங்களும் நறுமணப் பொருள்களும் முத்தும் நிறைந்து, திகழுமாறு முக்குடை ஒளிவீசுகின்றது. இப்படிப்பட்ட முக்குடை நிழலின் கீழே, பிண்டி எனப்படும் அழகிய அசோகமரத்தின் அடியில் நேமிநாதர் எனப்படும் அருகதேவன் இனிதே அமர்ந்திருக்கிறார். இவருடைய திருவடிகளை வணங்குகிறேன். வாணி எனப்படும் ஜினவாணியின் பாதத்தையும், சாதுக்களின் பாதங்களையும் எம்முடைய இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி குவித்து வணங்குகிறேன்.


ஸ்ரீ நேமிசுவாமி, தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வருள் 22ஆம் தீர்த்தங்கரர். சீவக சிந்தாமணியில் ‘நிகரில் நேமிதன் நீள்நகர்’ (912) என வந்துள்ளதை காணலாம்.

அருகக் கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்றாக சூடாமணி நிகண்டும் கூறுகிறது.  தரும சக்கரத்தையுடைய இறைவன் என்பது இதன் பொருள்.  ‘அறவாழி யந்தணன்’ என (குறள்-8) வள்ளுவர் குறிப்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.

இந் நேமிநாதர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் என்று அரிவம்ச புராணம் கூறுகிறது.

முக்குடை ஒளிர்கின்றது என்பது சந்திராதித்யம், நித்தியவிநோதம், சகலபாசனம் என்ற மூன்று பெயர்களுடன் மூன்றடுக்குகளாக விளங்குவது முக்குடையாகும்.   

முக்குடைகளில் முதல் குடை - சந்திராதித்யம் -  முழுமதி சந்திரன் தோன்றியவுடன் உலகிலுள்ள உயிரினங்கள் அதன் குளிர்ச்சியினால்  மூவுலகிலும் வாழும்  உயிர்கள் அனைத்தும் இன்பம் பெறுவர்.   அது போல் அருகர் தோன்றியவுடன் மூலகிலும் உள்ள அனைத்து உயிர்களும் இன்பம் எய்துவர்.

இரண்டாவது குடை - நித்ய விநோதம்: மத்திமலோகமாகிய நிலவுலகில்  வாழும் மக்கள் தான் தவம் செய்து முக்தி அடையும் வாய்ப்பினர். முக்தி அடைந்த ஆன்மாக்கள் அழிவின்றி நித்யானந்த மயமாக ஆத்ம இன்பத்தில் தோய்ந்து இருப்பர். அருகனது அருளால்  நடுவுலக மக்களின் இந்த இன்பத்தை நித்ய விநோதம்  குறிக்கிறது.

மூன்றாவது குடை: - சகல பாசனம்:  கீழுலகில் உள்ள ஏழு நரகங்களில் உள்ள கணக்கற்ற உயிர்கள் உள்ளன. இவற்றில் மேல் தளங்களில் உள்ள உயிர்கள்  துன்பத்திலிருந்து விடுதலை  பெற்று அருகனது அருள் குளுமை நல்கும் மூன்றாம் குடை சகல பாசனம்.


மூன்று உலகத்தையும் அருகதேவர் காத்தருளும் மங்கலச்சின்னமாக முக்குடை திகழ்கிறது. அச்சிறப்பினை உடைய நேமீச ஜினரை வணங்குவதாக இப்பாடல் கூறுகிறது.



கதைச்சுருக்கம்:


சமண அண்டவியலில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றுலகில், மனிதர்கள் வாழும், நடு உலகிலுள்ள ஜம்பூத்வீபம் எனும் நாவலந்தீவில் அக்காப்பிய நிகழ்வின் போழ்து 190 நிலப்பகுதிகள் இருந்தன. அதில் பரதகண்டமும் ஒன்று. அக்கண்டத்தில் சிறப்பாக விளங்கிய 56 நாடுகளில் மகதநாடும் ஒன்றாகும்.
(ஜம்பு விருஷம் – நாவல் மரம்; நாவல்மரங்கள் நிறைந்த த்வீபம் ஆதலால் நாவலந்தீவானது.)

அமரருலகம் போன்று விளங்கிய அழகிய மகதநாட்டின் தலைநகரம் இராசமாகிரியம் (ராஜமாகிரஹம்). அதனை ஆண்ட பேரரசன் சிரேணிக மாஹா மண்டலேஸ்வரன். இவனுடைய பட்டத்தரசி சாலினி தேவி. மக்கள் ஈட்டும் வருவாயில் ஆறில் ஒன்றை வரியாய் பெற்று நற்குணத்தவனான சிரேணிகன் நல்லாட்சி புரிந்து வந்தான்.





அச்சயமம் இராசமாக்கிரிய நகருக்கு மேற்கில் விபுலாசலம் எனும் மலைமேல் தேவேந்திரனால் அமைக்கப்பட்ட சமவ சரணத்தில் பகவான் ஸ்ரீ வர்த்தமான மஹாவீரர் அமர்ந்து அறமழை பொழிந்துவந்தார்.

 பன்னிரு கணங்களாய் பிரிக்கப்பட்டு அதில் அமர்ந்துள்ள கணதரர்கள், கேவலிகள், முனிவர்கள், தேவ தேவியர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு அவரவர் புரிந்தும் கொள்ளும் முகமாக ஒரே திவ்யமொழியில் வழங்கிவருவதைக் கேட்டு சிரேணிக மன்னன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அந்நற்செய்தியை தன்நாட்டு மக்கள் அறிய முரசறைந்து தெரிவிக்குமாறு கட்டளையிட்டான். பின்னர், தம் மந்திரி, சேனைத்தலைவர் மற்றும் நாற்படைகள் படைகள் சூழ, தனது தேவியுடன் விபுலமலைக்குச் சென்று, அவ்வாலயத்தை வலம் வந்தபின் பகவானின் திருவடிகளில் விழ்ந்து வணங்கினான்.

பலவகையான தோத்திரம் செய்து போற்றிப்பாடி மகாவீரரைப் பக்திப் பரவசத்துடன் துதி செய்தான். அவர் திவ்யமொழிகேட்டு மகிழ்ந்த மன்னன், நற்றவம் புரியும் துறவியர்க்கெல்லாம் தலைவராய் விளங்கும் கெளதம கணதரரின் பாதம் பணிந்தான். அங்கிருந்த முனிவர்களின் பாதம் பணிந்த பின் அவர்கள் கூறும் அறக்கதைகளைக் கேட்டறிந்த அரசன், கெளதம் ஸ்வாமியிடம்  பஞ்சமி கதையை தனக்கு அருளுமாறு வேண்டினான். அரசனின் ஆவலையறிந்த கெளதம கணதரரும் மகத மொழியில் அன்று அவர் உரைத்த பஞ்சமீ விரதக் கதையே பின்னர் நாககுமார காவியமாய் காலம்காலமாய் வழக்கத்தில் விளைந்து இன்றுவரை வாழ்ந்து வருகிறது. 

குறிப்பு: சிரேணிக மஹா மண்டலேஸ்வரராய் திகழந்த இம்மன்னன் பகவானின் சமவ சரணம் அடைந்து தீவிரமாய் அறம் கேட்க விழைந்ததின் பயனாய் எதிர்கால தீர்த்தங்கரரான மகாபத்மனாக பிறக்கப் போகிறார் என்று கௌதம சுவாமி தெரிவித்ததாகவும் ஸ்ரீபுராணம் கூறுகிறது. 


மகத நாட்டில் இருந்த நகரங்களில் கனகபுரம் என்பதும் ஒன்று. அந்த நகரத்தை ஆண்ட மன்னன் சயந்திரன் என்பவன்.  அவன் மனைவி விசாலநேத்திரை என்பாள். இவ்விருவரின் அன்பு மகன் ஸ்ரீதரன்.  அரசன் நயந்திரன் என்பவனை அமைச்சனாக கொண்டு நல்லாட்சி நடத்தினான்.

அப்போது ஒருநாள், கடல் வாணிபம் செய்து வந்த வணிகன் வாசவன் என்பான் அரண்மனைக்கு வருகை தந்து தனக்கு அயல்நாடுகளில் கிடைத்த அரிய பொருட்கள் சிலவற்றையும், ஓர் அழகிய இளம் பெண்ணின் படத்தையும் தன் அன்பின் காணிக்கையாக மன்னனுக்கு வழங்கினான்.

படத்தில் கண்ட இளம் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன், அவள் யார் என வினவினான். அரசே அப்படத்தில் இருப்பவள் பெயர் பிரித்விதேவி என்பதாகும். சுராட்டிர நாட்டில் பரங்கியா என்ற நகரத்தில் செல்வச் சிறப்போடு வாழும் சீமான் ஸ்ரீவர்மன் அவன் மனைவி ஸ்ரீமதி, அவ்விருவரின் அன்பு மகள் தான் இந்த பிரிதிவிதேவி என்று வாசவன் பதிலுரை பகர்ந்தான். மன்னன் அவளை மணக்க விருப்பம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டான். வேள்வி முறைப்படி திருமணமும் நடந்தேறியது.

மன்னன் பிரித்விதேவிக்கு  பெருந்தேவி என்னும் சிறப்பை அளித்து தன் பட்டத்தரசியாக்கிக் கொண்டான். இருபட்டத்தரசிகளுடன் மன்னன் சயந்திரன் இனிது மகிழ்ந்திருந்தான்.

வசந்தகால விளையாட்டு அரசனும் அவன் தேவியர் இருவரும் வசந்தகால நீர் விளையாட்டிற்காக நகரின் அருகே இருந்த பூங்காவை நோக்கி புறப்பட்டனர். மன்னன் முன் செல்ல மூத்தவள் விசாலநேத்திரை தன் தோழியருடன் யானை மீது அமர்ந்து சென்றாள்.  இளையவள் பிரிதிவிதேவி தான் பல்லக்கில் ஏறி சென்றாள். தனக்கு முன்னே யானைமீது செல்பவள் மூத்த பட்டத்து அரசியை என்பதை தோழி மூலம் அறிந்தாள். யானை சற்று தொலைவில் இருப்பதை கண்டாள்.

மூத்தவள் எனக்கு முன்னே சென்று அங்கே இருப்பதன் நோக்கம் என்ன? பின்னால் வரும் நான் பல்லக்கிலிருந்து இறங்கி அவளை வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் போலும், கூடாது; நான் ஏன் அவளை வணங்க வேண்டும் என்று எண்ணிய பிரித்விதேவி தன் பல்லக்கை வேறு திசையில் திருப்பி செல்லுமாறு தோழியிடம் பணித்தாள். பல்லக்கு திசைமாறியது.

*********************** 


ஸ்ரீ மல்லிசேனசூரியாரின் சமஸ்கிரத நூலில் கூடுதலாக அளிக்கப்பட்ட தத்துவ சிந்தாந்தங்கள் நிரம்பிய கதைச் சுருக்கத்தைக் காண்போம்..


பிரித்விதேவி தன் பல்லக்கை வேறு திசையில் திருப்பி செல்லுமாறு தோழியிடம் பணித்தாள். பல்லக்கு திசைமாறியது.  அவள் செல்லும் வழியில் ஜினாலயம் வந்தது. அங்குள்ள ஜைன முனிவரைக் கண்டதாக கதைச் சுருக்கத்தில் கண்டோம்.

அதனை அறியாத விசாலநேத்திரையும் வெகுநேரம்  யானைமீது அந்த இடத்தில் காத்திருந்து சினமடைந்த அவளும் கானகம் போனாள் என்றவாறு ஸ்ரீ மல்லிசேனச் சூரியாரால் இயற்றப்பட்ட சமஸ்கிரத நாககுமார காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜினாலயம் சென்ற பிரதிவிதேவியும் பிஹிதாஸ்ரவ முனிவரை வணங்கி அவரிடம் ஜினவறம் கூறக் கேட்டறிந்தாள் என்பதாக தமிழ்க்காப்பியத்தில் கூறப்பட்டிருந்த பாடல்களையும் நாம் கண்டோம்.

ஆனால் அங்கு முனிவர் அவளுக்கு அளித்த உபதேச மொழியினை மூலநூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அவள் ஆர்வமிகுதியுடன் கேட்டறிந்தமையால் தான் அந்த உத்தமபுருஷனும் அவள் வயிற்றில் உதித்தாக நாம் கொள்ளும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றிற்கான பாடல்கள் தமிழ் நூலில் தென்படவில்லை. ஒருவேளை அவை அழிந்து பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் சமண முனிவர்கள் கண்டிப்பாக தாமறிந்த ஆகமக் கருத்துக்களை இடையிடையே தெரிவிப்பதற்காகவே முழுக்கதையை வடிவமைக்கும் மரபில் வாழ்பவர்கள். அவ்வகையில் காணும் போது ஜினவறம் தெரிவிக்கப்படும் பாடல்கள் அனைத்தும் தமிழ்நூலில்  விடுபட்டு கதைக்கு முக்கியத்துவமான பாடல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சமஸ்கிரத நூலில் பிஹிதாஸ்வர முனிவர் பிரதிவிதேவிக்கு உரைத்த தர்மோபதேசத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காண்போம்…

பிரதிவிதேவி அவரிடம் மூப்பு, மரணம் ஆகியவை அடங்கிய இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபட உதவும் தர்மத்தினைப் பற்றி போதிக்குமாறு வேண்டுகிறாள்.

அதற்கு பிஹிதாஸ்வர முனிவரும், ஜினதர்மம் இருவகையாக கூறப்படுகிறது. யதிதர்மம், கிருஹஸ்த தர்மம் (துறவறம், இல்லறம்) என இரண்டின் ஒழுக்கநெறியில் துறலறத்தாருக்கான வாழ்வியல்முறை பத்து என்றும், இல்லறத்தாரின் வாழ்வியல் தானம், பூஜை, ஒழுக்கம், உபவாச விரதாதிகள் என்ற வகையில் சிராவக தர்மம் நான்கு வகைப்படும் என்கிறார் முனிவ பெருமான்.

1. தானம்:  இல்லறத்தார் ஒழுக்கத்தில் முதலாவதாக குறிப்பிடப்படும் தானம் பசி, பயம், பிணி, அறிவின்மை ஆகியவற்றைப் போக்கும் வகையில் அன்னம், அபயம், ஓளஷதம், சாஸ்திரம் ஆகிய உட்பிரிவுகளுடன் மிளிர்கிறது.

---------------------------------
உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும், அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக்கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள்.

மூன்றவதாகிய ஒளடத தானத்தையும் சமணர். செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மடத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. (சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கியசெய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குச் திரிகடுகம், ஏலாதி, சிறு பஞ்ச மூலம் என்று மருத்துகளின் பெயரிடப்பட்டதனாலும் அறியப்படும்.) உடல் நோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உள்ளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றி வந்தனர்.

நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர், (பௌத்தர்களும்கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர்.

இதனாலேயே பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று; (பள்ளி என்றால் சமணப் பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள்.

---------------------------------

அடுத்து தானம் பெறுபவர்களைப் பற்றி…

தானம் பெறுகின்றவர்களை ஸ்த்பாத்திரம் (சிறந்த பாத்திரம்) அஸத்பாத்திரம் (சிறப்பற்ற பாத்திரம்) என்று இருவகையாகப் பிரிக்கலாம். தான மளிப்பவர் இத்தகைய இருவகைப் பாத்திரங்களையும் தன் விவேகத்தாலறிந்து சிறந்த பாத்திரத்தில் வழங்க வேண்டும். இங்கு பாத்திரம் என்ற சொல் தானம் பெறுபவரைக் குறிக்கின்றது. அவ்வகை சிறந்த பாத்திரத்தினை சிறந்தது(உத்தமம்), நடுத்தரமானது (மத்யமம்) சாதாரணமானது (அதமம்) என்று மூவகையாகப் பிரிக்கப்படுகிறது.

யாரொருவர் சமண மதத்தில் கூறப்பட்ட வேத, சாஸ்தரமான ஆகமத்தினை ஓதுபவராயும், தியானம் மேற்கொள்பவராயும் காம, க்ரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் போன்ற அறுவகை உணர்வுகளை

அதாவது காமமேன்பது :-
பேராசையினால் தனம் ,தான்யம் ,புத்திரன் ,பௌத்திராதிகளின் பேரில் அதிக பாசம் வைத்தல் பேராசை

குரோதமேன்பது :-
சினம் - ஒருவருக்கு கெடுதல் விளைவிக்க முயற்சி செய்ய விழைவு கொள்ளுதல்

லோபமேன்பது :-
கடும்பற்று - தனது சொத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்க கூடாது என்னும் எண்ணமிருத்தல்

மோகமென்பது :-
புத்திர களத்திராதிகளின் மீது அதிக பற்று வைத்திருந்து தனக்கு உண்டாகி இருக்கும் பொருள் போதாதென்று ,இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசையை விருத்தி செய்தல்  

மதமென்பது :-
பணம் பொருள் அதிகம் சேர்த்து அதனால் பிறரை அலட்சியம் செய்து பேசுதல் -  உயர்வு தாழ்வு மனப்பான்மை

மச்சரமென்பது :-
தன்னை போல் மற்றவரும் சுகம் அனுபவிப்பதை பொறுக்காமல் விளைவிக்கும் மனோ பாவத்தை உண்டாக்குதல்  - பொறாமை உணர்வு.

இத்தீய உணர்வுகளை எவர் வெற்றிகொள்கிறார்களோ அவரே சிறந்தபாத்திரம் ஆவார்.

தம்பதியராய் ஐந்து அணுவிரதங்களை – அஹிம்சை, பொய்யாமை, களவாடாமை, பிறன்மனை நோக்காமை மற்றும் மிகுபொருள் விரும்பாமை – கடைபிடிக்கின்றார்களோ அவர்களே நடுத்தரப்பாத்திரம் (மத்தியமம்)

இல்லறத்தாருக்குரிய விரத அனுஷ்டானங்களின்றி அதேசமயம் ஜினவறத்தில் ஈடுபாடுடையவர் அவரே சாதாரண பாத்திரம் (அதமம்) ஆகும்.


மேலும் விரதானுஷ்டானங்கள் இல்லாமல், குருநிந்தனையும், பொய் பேசுதலும் கொண்டவர்கள் தானம் பெறத்தகுதியற்றவர்கள் அதாவது அபாத்திரர் என்றழைக்கப்படுகிறார். அத்தகைய பாத்திரத்தில் தானம் வழங்குதல் களர் நிலத்தில் விதை விதைப்பதற்கு சமமாகும். அப்பாத்திரம் மற்றும் நற்பாத்திரத்தில் அளிக்கப்படும் அன்னம், ஒரே குளத்து நீரை வேம்பிற்கும், கரும்பிற்கும் பாய்ச்சினால் அது எப்படி கசப்பும், இனிப்புமாக மாறுமோ அதைப்போல் அதற்குத் தக்க வகையில் பயனைத் தருகின்றது.



மேலும் சுத்தமான பாத்திரத்தில் வைக்கப்படும் நெய் வீணாவதில்லை.  ஆனால் வேகாத பச்சைப் பானையில் வைக்கப்பெற்ற நெய் தானும் கெட்டு, பாத்திரத்தையும் கெடுத்து விடுகிறது.  அதைப்போலவே பசு மாடும்,  பாம்பும் ஒரே கிணற்று நீரைத்தான் அருந்துகின்றன. ஆனால் பசுமாடு குடித்த நீர் பாலாகவும், பாம்பு அருந்திய நீர் விஷமாகவும் மாறுகிறது.

இவ்வாறாக ஒருவர் பாத்திரம், அபாத்திரம் என்ற விவேகத்துடன் ஸத்பாத்திரத்தில் அன்னத்தைத் தானம் செய்தால் அது ஆலமரத்தின் விதையை பூமியில் ஊன்றி பெரிய மரமாகத் தழைப்பதற்கு ஒப்பாகிறது. அவ்வாறு அன்னதானம் புரியும்போது தானமளிப்பவர் அதற்குரிய ஒன்பது விதிகளைக் கடைபிடிப்பவராயும், ஏழு குணங்களைப் பெற்றவராயும் இருத்தல் வேண்டும்.

அன்னதானத்தின் ஒன்பது விதிகள் கீழ்வருமாறு:-
தானம் பெற வருபவரை எதிர்கொண்டு அழைத்தல் – பிரதிக்ரஹம்
தானம் வாங்குபவருக்கு உயர்ந்த ஆசனம் தருதல் – உச்சஸம்ஸ்தானம்
தானம் பெறுபவரின் காலகளைக் கழுவுதல் – பாதபிரக்ஷாளனம்
தானம் பெறுபவரை நறுமணப் பொருட்களால் பூஜித்தல் – அர்ச்சனம்
தானம் பெறுபவரை நமஸ்கரித்தல் – ஸத்பிரணாமம்
தானம் அளிக்கும்போது மனம், வசனம், காயம் ஆகிய முக்கரண சுத்தியுடனிருத்தல் – த்ரியோகம். ஆகிய மூன்று லக்ஷணம்.
தானம் வழங்கும் அன்னம் 46 வகையான தோஷங்கள் அற்று சுத்தமாயிருத்தல் – அன்னசுசி
போன்றவையாகும்.

சிரத்தை, பக்தி, அலோபம், தயை, சக்தி, பொறுமை, விஞ்ஞானம் என்பவை தானம் அளிப்பவர்க்குரிய ஏழு குணங்களாகும்.

சிரத்தை : தானம் வழங்குபவர் கிடைத்திருக்கிற ஸத்பாத்திரதைக் குறித்து, முன்செய்த நல்வினைப் பயனாய் இத்தகைய பாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது என நினைப்பதும், தானம் பெறுபவரிடம் பரிவு பாசத்தோடு இருத்தலும் சிரத்தைக்கு எடுத்துக் காட்டாகும்.

பக்தி: தானம் பெறவிருப்பவரை நாம் பாதபூஜை முதலிய உபசாரங்களைப் புரிந்து மதிப்பதே பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

அலோபம்: இவரால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது. ஆதலால் இவருக்குத் தானமளிக்கிறேன் என்ற எண்ணம் எவருக்கு வராதோ அவரே லோபம் இல்லாதவர். அவரால் அளிக்கப்பெறும் தானமே லோபமின்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

தயை: வேறு வேலையிருப்பதால் செல்கிறேன் என்று கூறாமல் வீட்டிலிருந்து புழு பூச்சிகள் இல்லாது படி கவனித்துடன் தானம் செய்பவன் கருணையுள்ளவன்.

சக்தி: அன்னதானம் செய்யும் போது அன்னம் புசிப்பவர் நிறையத் தின்பவர் என்னும் எண்ணம் ஏற்படாது அன்னமளிக்கும் உணர்வே சக்தி என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

பொறுமை: தானம் அளிக்கின்றபோது தன் மனைவி, மக்கள் ஆகியோரால் இழைக்கப்படும் செய்கைகள் குறித்துச் சிறிதும் சீற்றமடையாது விருந்தினரை இன்முகத்துடன் உபசரிக்கின்றவரே பொறுமைசாலியாவார்.

விஞ்ஞானம்: தானம் என்று சொன்னால் அதனைப்பெறுவதற்கு அங்கே பாத்திரர்களும், அபாத்திரர்களும் கூடுவர்.  ஆனால் தானம் கொடுப்பவரோ இருவகைப்பட்டவர்களின் குணவேறுபாடுகளைக் கண்டறிந்து ஸத்பாத்திரத்தில் தானம் புரிதல் வேண்டும். அவ்வாறு இனங்கண்டு கொண்டு தானம் வழங்குபவரே ஞானவான் ஆவார்.

அவ்வாறு ஸத்பாத்திரத்தில் தானம் வழங்குபவர்கள் செளதர்ம, ஈசான, மகேந்திர, பிரம்ம, பிரமோத்திரம் போன்ற உயர்ந்த சுவர்க்கத்தில் தோன்றுவார்கள். மேலும் இப்பிறவியில் இறப்பதுவரை நோய், வருத்தம் போன்றவை அற்றவராய் வாழ்ந்து மறுமையில் தேவலோகத்தில் சுகத்தைப் பெறுவர்.
இருப்பினும் மித்யாதிருஷ்டியுடன் ஸத்பாத்திரத்தில் வழங்குபவர் போகத்தின் பொருட்டு போக பூமியில் பிறப்பார்கள்.

ஸ்தபாத்திரத்தில் தானம் புரிகின்றபோது துன்பம் அளிக்கக்கூடிய பொன், பூமி, பசு, கன்னியர் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கக்கூடாது.

பொன்னைத்தானமாக அளிப்பதால் தானம் பெறுபவர், அதனைக் காப்பாற்றும் எண்ணத்திலேயே ஆழந்துவிடுவர். மேலும் அதுவே அவர்கள் உயிருக்கு யமனாகவும் மாறிவிடலாம்.

பூமியை உழுதல் போன்ற செயல்கள் கர்ப்பிணியை இம்சிப்பது போன்றதாகும். மேலும் உயிரினங்களும் அழியலாம். அதனால் இதனை வழங்குவதும் முறையல்ல.

பசுமாட்டினை கயிற்றால் கட்டுகிறோம், அடிக்கவும் செய்கிறோம். அதனால் கருணையுள்ளம் கொண்டவர்கள் பசுவைத் தானமாக அளிக்க மாட்டார்கள்.

கன்னியரை தானமாக வழங்கும் பழக்கத்தை சமணம் ஏற்கவில்லை.

தானத்தினால் விருப்பு, வெறுப்பு, துன்பம், பயம் போன்றவற்றிற்கு காரணமாகாமல் நற்செயலை வளர்க்கும் கருவியாய் அமைதல் வேண்டும். மேற்கூறிய நான்கும் இவற்றுக்கே காரணமாகின்றன. இதனைப் பெறும் மனிதர்களின் மனம் விறகுகள் இடப்படும் தீயைப் போன்றும், நதிகள் பல கலக்கும் கடலைப்போலவும் நிறைவடைவதில்லை. அதனால் அன்னம், அபயம், ஒளடதம், சாஸ்திரம் போன்ற தானங்களே தவம் முதலான நற்செயல்களை வளர்க்க வித்திடுவதோடு, மனநிறைவையும் அளிக்கின்றது.

அன்னத்தை வயிறார உண்ட ஒரு மனிதனுக்கு போதும் என்ற மனநிறைவு ஏற்படுவது இயற்கை. அதனால் அதுவே சிறப்பில் முதல்நிலை பெறுகிறது. மற்ற மூன்றினால் பயம், நோய், அஞ்ஞானம் ஆகியவை அகற்றப்படுகின்றன. இவ்வகைத் தானங்களை மேற்கொள்பவர்கள்  சில பிறவியிலேயே சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று மோட்சத்தை அடைகின்றனர்.


இல்லற தர்மத்தில் தானத்திற்கு அடுத்ததாக…

பூஜை: இல்லறத்தார்களின் இரண்டாவது வகையான தர்மம் பூஜை ஆகும். எவாரொருவர் ஜினேந்திரரின் உருவங்களை வடிவமைத்து தினமும் இளநீர், கரும்பு, மா, வாழை முதலிய ரசங்கள், நெய், பால் ஆகியன கொண்டு நீராட்டி எட்டுவகையான அர்ச்சனைகளால் பூசிக்கின்றனரோ அவர் சுவர்க்கமடைவார். (இந்தக் கருத்து தற்காலத்தில் சிலரால் மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சமஸ்கிரதநூலில் ஆசிரியரான ஸ்ரீமல்லிசேனச்சாரியார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) 

சீலம்: இல்லற தர்மத்தின் மூன்றாவது வகையான ஒழுக்கம் என்பது துர்கதியை ஒழித்து நற்கதிபெற வழி காட்டியாய் விளங்குகிறது. சீலமே புகழைப் பெற்றுத் தருவதுடன், உடலணிகலன் போன்றும் திகழ்கின்றது. அதனால் மதிப்பும் குணமும் மேலோங்குகிறது.

ப்ரோஷதம் – விரத உபவாசங்கள்: நோன்புகள் குறித்தும், அதன் பயனும் விளக்கப்படுகின்றது. ஒரு மனிதன் தனக்குரிய விரதங்களை அனுஷ்டிப்பது (மேற்கொள்வது) குறித்து, அவனது நடத்தையை சீலம் என்று நல்லோர்களால் கூறப்பட்டது.

விரதங்கள் திக்விரதம், தேசவிரதம் முதலியன. அவற்றை பஞ்சமீ, பருவ தினங்கள் போன்ற நாளில் சிந்தை, சொல், செய்கையாகிற மூன்று கரண சுத்தியோடு முனிவர்களது வழியில் மேற்கொள்ள வேண்டும். இதனால் அசுபச் செயல்களும், முன்னர் சேர்த்து வைத்த பாபங்களும் அழிந்துவிடுகின்றன. என்று கூறி தர்மபோதனையை நிறைவு செய்கிறார்.


************************ 

இரண்டாம் சருக்கம்.

கதைச் சுருக்கம்



அரசி பிரதிவிதேவி மன்னன் சயந்திரனிடம் முனிவர் கூறிய நற்செய்தியைக் கூறுகிறாள்; நற்கனவு ஒன்று காணுகிறாள். ஜினாலயத்தில் முனிவரிடம் பலன் கேட்கின்றனர். மகன் பிறப்பான் என்பதையும் புதல்வன் பிறந்ததும் நிகழும் செயல்களையும் முனிவர் கூறுகிறார். அதன்படி பிரதிவிதேவி கருக்கொண்டு நன்மகனை ஈன்றாள். அவனுக்கு ‘பிரதாபந்தன்’ என்று நற்பெயர் சூட்டினர். பின்னர் ஆலயத்தில் முனிவர் கூறிய அற்புதச் செயல்கள் நடைபெற்றன. நாகத்தின் தலைமீது சிறுவன் நின்றதால் ‘நாககுமாரன்’ என்று பெயர் சூட்டினர். உரிய பருவத்தில் கல்வி முதலான கலைகள் அனைத்தையும் மணம் செய்து வைத்தனர்.

நாககுமாரன் கின்னரியையும் மனோகரியையும் இசையில் வென்று மணம் செய்து கொள்கிறான்; யானை, குதிரையை அடக்குகிறான். விசால நேத்திரை பொறாமை கொண்டு மகன் ஸ்ரீதரினிடம் புலம்ப, அவனும் நாககுமாரனைக் கொல்வதற்கு ஏற்ற சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான்.

நாககுமாரன் நீர்விளையாட்டை மேற்கொள்கிறான். விசாலநேத்திரை மன்னனிடம் பொய்யுரை கூறுகிறாள். மன்னன் அவளைக் கடிந்து கொள்ள, நாககுமாரன் அரண்மனை அடைகிறான். பிரதிவிதேவியிடம் மன்னன் ‘நாககுமாரன் வெளியில் செல்லக் கூடாது’ என்று கட்டளை இடுகிறான். அதனை மீறி அவன் யானை மீதேறி நகர் வலம் செல்ல அரசனின் கட்டளை படி வீரர்கள் நாககுமாரனுக்குச் சொந்தமான பொருள்களை எல்லாம் கவர்ந்து வருகின்றனர்.


நாககுமாரன் அரசர்களுடன் சூதாடி மிகுபொருள் வென்று வந்து தாயின் திருவடியில் வைக்கிறான்; தந்தையை சூதில் இருமுறை வெல்கிறான். மன்னன் கவர்ந்து சென்ற பொருட்களை மீட்கிறான். சூதில் வென்ற பொருள்களை உரியவரிடம் ஒப்படைக்கிறான். புதிய அரண்மனை அமைத்து அதில் குடி புகுகிறான்.


மூன்றாம் சருக்கம்



ஓர்நாள் நாககுமாரன் நகரைத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.  அவனை நோக்கி, தேவதத்தை, ஐயனே! கன்னியா குச்சம் எனும் நகருக்கு அதிபதியாகிய மன்னன் செயவர்மன். அவனது மனைவி குணவதி, இவர்களுக்குப் புத்திரி சுசீலை.  இப் பெண்ணைச் சிம்மபுர மன்னன் அரிவர்மனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஒரு மனதாய் தீர்மானித்தனர்.  அதைக் கேள்வியுற்ற இந்த வடமதுரை நகர்க்கரசன் துட்டவாக்கியன்(துஷ்டவாக்யன்), அப்பெண்ணைத் தான் மணக்க விரும்பி கன்னியாகுச்சம் சென்று, அவளைக் கவர்ந்து வந்து சிறையிட்டுள்ளான்.  அவளோ விருப்பமின்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள்.  நீ அதைக் கண்டு ஐயுறல் வேண்டாம்.  உனது காரியத்தைக் கடைப்பிடித்துப் போய் வருவாயாக‘ என்றாள்.     


அதைக் கேட்ட நாககுமாரன் அவ்விடம் அடைந்து காவல்புரியும் போர்வீரர்களை அச்சமுறுத்தி துரத்திவிட்டுத் தன் வீரர்களை வைத்து அவளுக்குப் புகலிடம் தந்தான்.  அதனால் துட்டவாக்கியன் வெகுண்டு நாககுமாரன் மேல் போர் தொடுக்கலானான்.  அப் போரில் தனக்கு எதிரியாக வியாளன் வரக் கண்டான்.  உடனே துட்டவாக்கியன் ‘மந்திரி புத்திரனாகிய எனக்குத் இந்நகர் அரசியலையே அளித்த வள்ளல் வியாளனல்லவா’  என எண்ணி அந் நன்றி மறவாமல் அக்கணமே அவன் பொற்பாதங்களைத் தொழுதான்.  வியாளனும் அவனுக்குத் தன் தலைவனாகிய நாககுமாரனை அறிமுகப் படுத்தினான்.  அவனும் நாககுமாரனை வணங்கி நட்புடையவனானான்.  சுசீலை என்னும் பெண்மணியை முதலில் முடிவுசெய்த அரிவர்மனுக்கே உரிமையாக்கினான். (இந்நிகழ்விற்கான பாடல்கள் தமிழில் கிடைக்கவில்லை. சமஸ்கிரத நூலில் உள்ளது.)   

உறவும் பிரிவும் ஊழ்வினையால் அமைவன; நட்பும் பகையும் நம்முன்வினைக்கேற்பவே நிகழ்வனவாகும். இதை நன்குணர்த்துவதே சமணத்  தமிழ் இலக்கியங்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.
இச் சருக்கத்தில் நாககுமாரனுக்கு வாய்த்த நண்பர்களின் வரலாறு கூறப்படுகிறது.

சூரசேனம் என்ற நாட்டின் தலைநகர் வடமதுரை. அந்நாட்டின் மன்னன் செயவர்மன். அவன் மனைவி செயவதி. இவர்களுக்கு வியாளன் – மாவியாளன் என்ற இரட்டைப்புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் கோடி வீரர்களை வெற்றி கொள்ளும் உடல்வலிமையும் உள்ளத்துணிவையும் பெற்றவர்கள். வியாளனுக்குப் பிறவியிலேயே நெற்றிக்கண் ஒன்று இருந்தது.  மன்னன் முனிவர் தூமசேனரிடம் நல்லறம் கேட்ட பின்னர் புதல்வர்கள் குறித்து வினவுகிறான்.

அவரும் வீரர்கள் ஆனாலும் இருவரும் பொறுப்பை ஏற்காமல் மாறாக ஒருவனுக்கு பணிந்து சேவை செய்வார்கள் என்றுரைத்தார். மன்னன் துறவு ஏற்கிறான். புதல்வர்கள் இருவரும் அரசுரிமையை ஏற்காமல் மந்திரி துட்டவாக்கியனிடம் ஒப்படைத்து தேச சஞ்சாரமாய் வெளிக் கிளம்புகின்றனர்.

பின்னர் வியாளன் மாவியாளன் என்ற இருவரும் பாடலிபுரம் செல்கின்றனர்.  அந்நகர மன்னன் ஸ்ரீவர்மன் – அவன் தேவி ஸ்ரீமதி – இவர்கள் மகள் சுந்தரியை மாவியாளனும், தாதி மகள் இலனிதா சுந்தரியை வியாளனும் மணம் செய்து கொள்கின்றனர்.


நாககுமாரனைக் கண்டதும் வியாளனுடைய நெற்றிக்கண் மறைகிறது. உடன் நாககுமாரனை தனது ஸ்வாமியாய் ஏற்கிறான். அப்போது குமாரனின் சகோதரன் ஸ்ரீதரன் அனுப்பிய சேனையை வியாளன் தோற்கடிக்கிறான். ஸ்ரீதரன் போருக்கு வந்தபோது ஜெயந்திரனின் அமைச்சர் நயந்திரன் முயற்சியால் போரை விடுத்து, ஸ்ரீதரன் தன் மாளிகைக்கு திரும்புகிறான்.

நாககுமாரன் நண்பன் வியாளன் ஊருக்குச் செல்கிறான். அங்கு தேவதத்தை எனும் மாதரசியில் இல்லத்தில் குடிபுகுகிறான். அப்போது துட்டவாக்கியனால் சிறைப்பிடிக்கப்பட்ட சுசீலையை மீட்டு அவளுக்கு மணாளனாய் முடிவு செய்யப்பட்ட அரிவர்மனுக்கே முடிசூட்டி வைக்கிறான். துட்டவாக்கியனும் தனது அரசகுமாரன் வியாளனைக் கண்டதும் நன்றியுடன் வணங்கி வரவேற்றதுடன்,  குமாரனுக்கு நண்பனாகிறான்.  

மற்றொருநாள் கடைவீதிக்குச் செல்லும் வழியில் வீணை வாசிப்போர் கூட்டத்தின் தலைவனைச் சந்திக்கிறான். அவன் மூலம் காம்பீர நாட்டுச் செய்தியை அறிகிறான். அந்நாட்டு மன்னன் நந்தனின் மகள் திரிபுவனாரதியை வீணைப் போரில் வெற்றி பெற்று மணம் செய்து கொள்கிறான்.

வேற்று நாட்டு வணிகன் கூறிய அற்புதச் செய்தியைக் கேள்விப்பட்டு, அந்த நகரின் ஜினாலயம் சென்று அங்கு புலம்பிய வேடனைக் கண்டு, அவன் வேண்டியபடி  மனைவியை மீட்டுத் தருகிறான். அவளை சிறைபிடித்திருந்த வியந்தர தேவன் நாககுமாரனுக்கு சந்திரகாந்தம் எனும் வாள், நாகபாசனம் எனும் படுக்கை, காமகரண்டகம் எனும் செம்புச்சிமிழ் முதலியன அளிக்கிறான்.

அடுத்து இரணிய குகைக்குச் சென்று நான்காயிரம் இயக்கிகளை அடிமைகளாய் ஏற்கிறான்.  நாககுமாரன் வேடன் கூறிய மலைக் குகையில் வேதாளத்தை வதைக்கிறான். அங்கு கிடைத்த நிதிக்குவியலுக்கு இந்த நான்காயிரம் இயக்கியரை காவலுக்கு வைத்துக் கிளம்புகிறான்.
அடுத்து கிரீகூடபுர நகரத்திற்குச் சென்று, ஆலமரத்தின் விழுதில் ஊசலாட்டம் செய்த வேளையில் அம்மன்னனால் வரவேற்கப்பட்டு அவரது மகள் கணைவிழியை மணக்கிறான். பின்னர் ஜயர், விசயர் என்னும் இரு சாரண பரமேட்டியரைச் சந்தித்து வணங்கி, ஜயர் முனிவர் உரைத்தபடி  புண்டரபுரத்தை, முன்பு ஆண்ட பீமனின் பேரன் வனராசனுக்கு மீட்டுத் தருகிறான். அதனால் சதோதரன் மகாபீமனின் பேரன் சோமப்பிரபன் தோல்வியால் வைராக்கியம் கொண்டு யமதர முனிவர் உரைத்தபடி துறவு மேற்கொள்கிறான்; கடுந்தவம் இயற்றுகிறான்.


-------------------         

நான்காம் சருக்கம்

சுப்பிர திட்டம் என்னும் நகரை ஆளும் மன்னன் செயவருமன் என்பவன்.  அவனுடைய மனைவி ஜெயவதி என்பவள் ஆவாள்.  இவர்களுடைய மக்கள் அசேத்தியர், அபேத்தியர் என இருவர். அந் நகர்ப்புற வனத்தே பிகிதாஸ்வர முனிவர் விஜயம் செய்து தங்கி அறம் பகர்ந்தார்.   இருவரும் சுதந்திரமாக தன் அரசை ஆண்டு வருவார்களா என அம்முனிவரிடம் அரசன் வேண்டிம் போது, அவரும் தனது அவதிஞானத்தால் அறிந்து எவன் ஒருவன் சோமப் பிரபனைப் புண்டரபுரத்தினின்றும் துரத்தி அரசை வனராஜனுக்குக் கொடுப்பானோ அவனே இருவருக்கும் ஸ்வாமி ஆவான் என முனிவர் இன்னுரை வழங்கினார். 

 

மன்னன் ஜயவர்மன் தம் மக்கள் அசேத்திய-அபேத்தியர் வசம் தனது அரசாட்சியை வழங்கி முடிசூட்டி தான் துறவறம் ஏற்றான். முனிவர் கூறியபடி நாககுமாரன் சோமப்பிரபனை விரட்டிய செய்தியை அறிந்த மக்கள் இருவரும் அவனிடம் வந்து சேர்கின்றனர். வியாளனுடன் மூவர் நண்பர்கள் ஆயினர்.

 

அதன்பின்னர் காடொன்றில் இருந்த ஆலமரத்தின் நிழலில் அவன் அமர்ந்தான். அப்போது ஐந்நூறு வீரர்கள் அவனை அணுகி, முன்பு முனிவர் கூறிய அறித்தபடி தாங்கள் அனைவரும் தங்களிடம் அடைக்கலமாகிறோம் என்று கூறி அவனுக்கடைமையாகி அவனது ஏவலுக்கு காத்து நிற்கின்றனர்.

 

நாககுமாரன் கிரிநகரின் மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி அவனது மகள் குணவதி என்ற நங்கையை மணம் செய்து கொள்கிறான். ஏனெனில் அவளை மணக்க விரும்பிய சிந்து மன்னனிடமிருந்து அவளை மீட்டதால் இம்முடிவை ஏற்க நேர்ந்தது.

 

பின்னர் ஊர்ஜயந்தகிரி சென்று பகவான் நேமிநாதரின் திருவடிகளைப் பணிந்து போற்றுகிறான். அப்போது வில்லாளி ஒருவன் வந்து வத்சை நாட்டு மன்னன் சுபசந்திரன் என்பவனின் வரலாற்றை தூதுச் செய்தியாகக் கூறுகிறான். நாககுமாரன் வத்சை சென்று மன்னன் சுகண்டனுடன் போர் செய்து, கன்னியர் எழுவரையும் சிறை மீட்டதுடன் அவர்களைத் திருமணமும் செய்து கொள்கிறான். பின்னர் அவதிநாட்டு மேனகியை மணம் செய்து கொண்டு, மதுரையில் ஸ்ரீமதியை அவளது நடனத்திற்கேற்ற மிருதங்க இசையை மீட்டி போட்டியில் வெற்றி பெற்று அவளையும் மணக்கிறான்.

 

மதுரை வந்த வணிகன் மூலம் பூதிலகமாபுரத்தின் அதிசயம் குறித்து அறிகிறான். அங்கொரு ஆலயத்தின் முன்னர் ஐந்நூறு மங்கையர் வந்து கூக்குரல் எழுப்புவதன் காரணத்தைத் தெரிந்து கொள்கிறான். அவர்களுக்கு அடைக்கலம் தரும்வகையில் உடன் அங்குச் சென்று அதற்கு காரணமான கொடிய மன்னன் வாயுவேகனை கொன்று, அவ்வைநூற்றுவரை மணம் செய்து கொண்டு இன்பம் பெறுகிறான்.

 

பின்னர் நாககுமாரன் கலிங்கநாடு சென்று மதனமஞ்சிகையை மணம் செய்வதுடன், கங்களாள நாட்டு திருபுவன் திலகபுரம் சென்று போது, அங்குள்ள மன்னன் விஜயந்திரன் தனது மகள் இலக்கணையை மணம் செய்து வைக்க, அவளுடன் இன்பம் துய்க்கின்றான். அவ்வாறான நாட்களில் அங்குள்ள ஜினாலயத்தில் வந்து தங்கி அறம் வழங்கும் முனிபுங்கவரிடம் தனது இந்நிலைப்பற்றி வினவி விளக்கம் கேட்கிறான்.  


------------------------------------------------------------------------


நாககுமாரன் நான்காம் சருக்க முடிவில் பிஹிதாஸ்ரவ முனிவரை சந்தித்து அவரிடம் ஜினதர்மம் பற்றிய அறிவுரையை கேட்டதாக தமிழ் காப்பியத்தில் குறிப்புகள் இருந்ததைக் கண்டோம். ஆனால் அறவுரைகூறும் பாடல் சுவடிகள் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

 

ஆனால் அச்சமயத்தில் அம்முனிவர் உபதேசித்த அறவுரையை சமஸ்கிரத நூலில் விபரமாக ஸ்ரீமல்லிசேன சூரியாரால் அளிக்கப்பட்டுள்ளது.

அம்முனிவர் குமாரனுக்கு கூறிய தர்மோபதேசத்தின் விளக்கம் யாதெனின்…

குமாரனே ஒரு மரத்திற்கு வேரும், மனைக்கு அஸ்திவாரமும் எப்படி முக்கியமோ அப்படி விரதங்களனைத்திற்கும் ஸம்யக்த்வம் என்பது அடிப்படையாகின்றது. ஆப்தன், ஆகமம், தத்துவம் ஆகியவைமீது நாம் கொள்ளும் நம்பிக்கையே சம்யக்த்வம். ஆப்தன் என அழைக்கப்படும் ஸ்வாமி தோஷங்களற்றவர். ஆகமம் என்பது தீர்த்தங்கரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மூல நூல்களின் பெயர். ஜீவன் முதலான திரவியங்களே தத்துவங்கள். ஆப்தனால் ஆகமம் கூறப்பட்டது. தத்துவங்கள் அவனால் நினைக்கப்பெற்றன. ஆப்தாகம தத்துவங்கள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையாகிற ‘ஸம்யக்த்வம்’ ஆக்ஞை, அதிகமம் என இருவகைப்படும். மேலும் இல்லறத்தோரின் (சிராவகர்களின்) அறங்களாக சமணப் பெரியோர்களால் கள் அருந்தாமை, புலால் உண்ணாமை, தேன் குடியாமை ஆகியவற்றுடன் ஐவகை அனுவிரதங்களும், எட்டு மூல குணங்களும் (ஆஷ்ட குணங்கள்) ஸம்யக்த்வம்; அநந்த தர்சனம்; அநந்த ஞானம்; அநந்தவீர்யம்; சூக்ஷ்மத்வம், அவகாஹித்வம்; அவ்யாபாதத்வம்; அகுருலகுத்வம் என்பன. (பா. எண், 728ல் கூறப்பட்டன.)

 

கள் அருந்தாமை:  கள் அருந்துதல் தகாத செயல்களில் ஈடுபடுதலுக்கும், அதிக நேரம் உறங்குகைக்கும், இரக்கமின்றி உயிர்வதை செய்தலுக்கும் காரணமாகிறது. அறச்செயல்களுக்கும் அது இடையூறு விளைவிக்கிறது. ஆதலால் கள் அருந்துவதை அறவே விடுதல் வேண்டும்.

 

புலால் உண்ணாமை: மாமிசமானது பிராணிகளை வலுக்கட்டாயமாகக் கொன்று எடுக்கப்படுகின்றது. ஆதலால் புலால் உண்ணுதலைத் தவிர்த்தல் வேண்டும்.

 

தேன் குடியாமை: தேன் தேனீக்களால் உண்டாக்கப் பெறுகின்றது. தேனைப் பெற நாம் அவற்றைக் கொல்ல வேண்டும். அவ்விதம் செய்து, அந்த அசுத்தமான தேனைச் சேகரித்தல் பெரும்பாவச் செயலானதால் அறிஞர்கள் தேனருந்துதலையும் ஒப்பமாட்டார்கள்.

 

அணுவிரதம்: ஐந்து வகைப்படும். அவை முறையே அஹிம்சை; பொய்பேசாமை; பிறர் பொருள் விரும்பாமை; பிறர் மனை நவயாமை; தனக்கென சில பொருட்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை விடுதல் முதலியன. குணவிரதம்; சிக்ஷாவிரதத்தையும் சேர்த்து சீலஸப்தகம் (ஏழுவகை ஒழுக்கம்) என்று முனிவரால் கூறப்பட்டது. குணவிரதம் என்பது சிராவகர்களின் விரதமாகும். சிக்ஷா விரதம் என்பது முனி ஜீவனத்தின் சிக்ஷணத்தைப் பெற மேற்கொள்ளும் விரதமாகும்.

 

குணவிரதம்:  இது மூன்று வகைப்படும். திசைவிரதம், தேசவிரதம், அனர்த்த தண்ட விரதம் ஆகியன என மூன்றுபிரிவுகளாகும்.

 

திசைவிரதம் – நான் இத்திசையில் குறிப்பிட்ட தொலைவு மட்டும் செல்லப்போகிறேன் என்ற உறுதியை மேற்கொள்ளுவதே திசைவிரதமாகும்.

 

தேசவிரதம்: இன்ப துன்பங்களின் இடையிலும் நான் குறிப்பிட்ட அளவு (பூமியை) தேசத்தைக் கடந்து செல்ல விருக்கிறேன். (அதாவது தேசத்தின் குறிப்பிட்ட பரப்பளவிற்குள் வாழ்வேன் என்று கொள்வதே சரி) இந்த உறுதியோடு வாழ்வதை தேசவிரதம் என்றழைக்கப்படுகிறது.

 

அனர்த்ததண்ட விரதம் – விஷம் (ஜந்துக்கள்), நாய், ஆயுதம், அக்னி, பூனை, கீரிப்பிள்ளை இவைகளை வைத்திருப்பதே அனர்த்தம். இவற்றைத் தானமாக கொடுக்கக்கூடாது. இதுவே அனர்த்த தண்ட விரதமாகும்.


 சிக்ஷாவிரதம்: இது நான்கு வகைப்படும்

 

மூன்று வேளைகளிலும் ஜினரை வணங்குதல்

மாதத்தின் நான்கு பருவங்களிலும் உண்ணாநோன்பு இருத்தல்.

தாம்பூலதாரணம், உணவு உட்கொள்ளுதல், உறக்கம் ஆகியவற்றின் அளவுடனிருத்தல்

விருந்தினரை உபசரித்துப் பிறகு, தானுண்ணுதல் என்பன.

 

ஒழுக்கத்தின் ஏழுவகைகளை எடுத்துக்கூறிய ஆசிரியர், தவர்க்கப்படவேண்டிய சிலவற்றை மேலும் கூறுகின்றார்.

 

அத்தி, ஆல், அரசு, இரளி(கொன்றை) கல்லால் ஆகிய உதும்பர மரங்களிலிருந்து கிடைக்கும் பூ, காய், கனி முதலியனவற்றையும்; வெண்ணைய்யினையும்; உதிரம், தோல், எலும்பு முதலியவற்றுடன் இருப்பதால் மாமிசத்தையும்; இறந்த உடலைப்பார்த்தால் உணவையும்; தள்ளுபடி செய்த சோற்றையும் தவிர்க்க வேண்டும்.

(தயிரைக் கடைந்தெடுத்த வெண்ணைய்யை அப்போதே காய்ச்சி நெய்யாக்குதல் வேண்டும். இல்லையெனில் அதில் இருமுகூர்த்தங்களில் எண்ணிலடங்கா ஜீவஉற்பத்தி தொடங்கிவிடும்.)

 

மேலும் உணவு உட்கொள்ளும் போது மெளனமாய் இருத்தலையும், அறிவு வளர்ச்சிக்காகப் பெரியோர்களிடம் வணக்கமாயிருத்தலையும், நம்பி இருப்போரைக் காத்தலையும் முனிவர்கள் உபதேசித்து உள்ளனர்.

 

மேலும் இம்சைக்கு ஒப்பாகும் இரவு போஜனத்தை தவிர்த்தல் வேண்டும். மத்ய மாமிசவர்க்கங்களை ஏற்பவர்கள் அடையும் இன்பம் சிறிதளவேயாயினும் அது, நரகம் புகும் துன்பத்தைத் தரவல்லது. அதனால் பல்வேறு இன்னல்களுடன் கூடிய பிறப்பையும் எடுக்க வேண்டிவரும். மத்ய மாமிசங்களை ஒழிப்பவர்கள் சுவர்க்கமடைந்து அங்கே இன்புற்று மகிழ்வர். இம்மையிலும் அவர் சிறந்த புகழ்ச்சியினைப் பெறுவர் என்பதாகச் சிராவக விரதங்களைப் பற்றிக் கூறி உபதேசத்தினை பிஹிதாஸ்வர முனிவர் நிறைவு செய்தார்.

 

மேலும் பஞ்சமி நோன்பு விபரத்தையும் குமாரனுக்கு அருளும் போது:

கார்த்திகம், ஆஷாடம், பால்குணம் ஆகிய மாதங்களில் சுக்ல பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி திதியில் இந்த பஞ்சமீ விரதத்தை மேற்கொள்ளவேண்டும். இதனை மேற்கொள்ளும் முதல் நாளான சதுர்த்தி திதியன்று நீராடி முறைப்படி உண்டு, ஜினாலயத்தில் ஸாதுக்களின் அருகில் மனது, வாக்கு, காயங்களான த்ரிகரணசுத்தியோடு இந்த விரதத்தை தொடங்கவேண்டும். நோன்புச் சமயத்தில் நீராட்டம், வாசனைத் திரவியங்களின் பூச்சு, அணிகலன், வீட்டு வேலைகள், கட்டிலில் படுத்தல், உறக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து மனத்தூய்மையுடன் நோன்பு நோற்று மறுநாள் விரதோத்யனம் செய்து, பின்னர், தான் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த ஸ்ரீபஞ்சமி விரதத்தினை ஐந்து வருடங்களே, ஐந்து மாதங்களோ அதற்கு மேலான கால அளவிலோ வேறேதிலும் பற்றில்லாதவராய் அனுஷ்டித்தல் வேண்டும். விரதம் முடிந்து உத்யாபனம் செய்யாதுபோனால் மேலும் இருமடங்கு உண்ணாநோன்பு மேற்கொள்ள வேண்டுமாகும். உத்யாபனத்தின்போது மணி, தீபம், பிரதிமை, கொடி ஆகியவற்றைச் செய்து ஜினபுங்கவர்களைப் பூசித்தல் வேண்டும். மேலும் புத்தங்களைக் கபளீயந்திரத்துடன் ஐந்து சாதுக்களுக்கும் தானமாக வழங்கவேண்டும். மற்ற எல்லா ஸாதுக்களுக்கும் புஸ்தகம், ஒளஷதம் முதலானவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். சிராவகியர்களுக்கும், யாசகர்களுக்கும் தனது சக்திக்கேற்றவாறு வஸ்த்ரம், சொர்ணம், ஆஹாரம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இவ்வாறாக விரதங்கள், உபவாஸ முறைகள் பற்றிய விபரங்களை குமாரனுக்கு முனிவர் விளக்கினார்.


ஐந்தாம் சருக்க கதைச் சுருக்கம்

 

முனிபுங்கவர் பிஹிதாஸ்வரர் நாககுமாரனின் முற்பிறப்பு வரலாறு கூறுகிறார். ஐராவதச் சேத்திரத்தில் ஆரிய கண்டத்தில் விக்கிரமன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மனைவி பெயர் தேவி.

அந் நகரத்தில் தனதத்தன் என்னும் புகழ்மிக்க வணிகன் ஒருவன் இருந்தான். மனைவி தனதத்தை. அவனுக்கு நாகதத்தன் என்னும் மகன் இருந்தான்.

அதே போல் வசுதத்தன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வசுமதி, மகள் நாகவசு என்பதாம். பெற்றோர்களின் விருப்பத்தில் நாகதத்தன் நாகவசுவை மணந்தான்.

அங்குள்ள வனத்தில் அழகிய ஜினாலயம் ஒன்றிருந்தது. அதில் பரமமாமுனிவர் சங்கத்துடன் வந்து தங்கினார். ஜினபக்தி மிக்க  நாகதத்தனும் அவரை அணுகி தாள் பணிந்து அறவுரை வேண்டினான். அவரும் தத்துவக் கருத்துக்களை அவனுக்கு வழங்கினார். அத்தோடு பஞ்சமி உண்ணா நோன்பை மேற்கொள்ளுமாறு நாகதத்தனிடம் கூறினார். அதனைக் கடைபிடித்து ஒழுகும் விதத்தையும் அவனுக்கு விளக்கி அருளினார்.

 

அதனை சிரமேற்கொண்டு ஆடி, கிருத்திகை, பங்குனி மாதங்களில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியில் உண்ணா நோன்பினை ஏற்று செவ்வனே பூர்த்தி செய்து வந்தான். கடைசி நோன்புநாளில் பசிக்கொடுமை அவனை வாட்டியது. பலர் அவனை ஆகாரம் ஏற்க வற்புறுத்தவே, அவனும் மன உறுதியுடன் மறுத்ததோடு சல்லேகனை நோன்பை ஏற்றதினால் செளதர்ம கல்பத்து தேவன் ஆனான். மனைவியும் அவ்வாறே உண்ணா நோன்பை கைக்கொண்டு மறுபிறப்பில் செளதர்ம கல்பத்தில் அவனுக்கு தேவியானாள்.

 

அடுத்து இங்கு நாககுமாரனாய் வந்து பிறந்தாய். அப்போதுள்ள தேவியே இப்போது மணந்துள்ள இலக்கணையாவாள். அதனால் அவள் மீது  உனக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டுள்ளது. என்று கூறியபின் நாகபஞ்சமி விரதத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விபரத்தையும் விளக்குகிறார். அவ்வழியே நாககுமாரனும் ஐந்தாண்டு காலம் பஞ்சமி நோன்பை மேற்கொள்கிறான்.

 

அவ்வமயம் தந்தையின் அழைப்பு வரவே அவனது நாட்டிற்கு செல்கிறான். 

நீண்ட நாட்களுக்குப் பின் தந்தைக் கண்டதும் அவரும் ஆரத்தழுவிக் கொண்டார். தாய் பிரிதிவிதேவியும் அவனை அரவணைத்தாள். பின்னர் தனது மற்ற மனைவியர் அனைவரையும் அங்கு வரவழைக்கிறான். அவ்வாறான நாட்களில் தந்தையும் நாககுமாரனுக்கு முடிசூட்டி விட்டுத்துறவு மேற்கொள்கிறார். அவன் அமைச்சன் சயந்திரன், மனைவி பிரதிவி தேவியும் துறவேற்கின்றனர். அவரின் கடுந்தவத்தினால் காதி, அகாதி வினைகளை வென்று சயந்திரனும் முக்தி அடைந்தான். பிரதிவி தேவியும் தவத்தின் பயனால் தேவருலகில் பிறக்கிறாள்.

 

நாககுமாரன் தனது நாட்டில் பாதியை நண்பன் வியாளனுக்கு அளித்து விட்டு, மற்ற நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப பல பகுதிகளைப் பிரித்துக் கொடுத்தான். பின்னர் 800 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து வரும்போது, ஒருநாள் முகிற்கூட்டம் அழகாக தோன்றி  மறைவதைக் கண்டதும் விரக்தியுற்று துறவை ஏற்க துணிந்தான். அரசவையைக் கூட்டி இலக்கணையின் மகன் தேவகுமாரனுக்கு முடிசூட்டி, பின்னர் அலமதி என்னும் முனிவர் பெருமானிடம் சென்று அவர் திருவடி பணிந்து முறையாக ஜினதீட்சை ஏற்றுக் கொண்டான்.

 

இலக்கணையும் அவனுடன் துறவேற்கிறாள். நாக குமாரனின் நண்பர்கள் வியாளன், மாவியாளன், அசேத்தியன், அபேத்தியன் அனைவரும் குமாரனுடன் துறவு மேற்கொண்டனர்.

 

பலகலைகளை கற்றவனும், சிறந்த வீரனும், அபயம் வேண்டியவர்களைக் காத்தவனும், கருணைமிக்கவனும் ஆன நாக குமாரனின் இளமைக்காலம் முந்நூறு ஆண்டுகள், ஆட்சிக்காலம் எண்ணூறு ஆண்டுகள், துறவுக்காலம் அறுபத்துநான்கு ஆண்டுகள் இவ்வாறாக ஆயுட்காலம் 1164 ஆண்டுகள் வாழ்ந்து துறவற தவ ஒழுக்கத்தின் பயனால் காதி, அகாதி வினைகளை வென்று சித்த பதவியை எய்துகிறான். அவனது நண்பர்கள் வியாளன், மாவியாளனும் சித்தநிலை அடைகின்றனர். மற்றவர் அனைவரும் தேவகதியை அவரவர் ஒழுக்கத்தின் பயனுக்கேற்றவாறு பெறுகின்றனர்.

 

தமிழ் காப்பியத்தில் இல்லாத முடிவுரை;

இவ்வாறு சமவ சரணத்தில் ஸ்ரீ வர்த்தமானர் தம் திவ்யத்தொனி மூலம் ஸ்ரீநேமி தீர்த்தங்கரர் காலத்தில் வாழ்ந்து முக்தி அடைந்த நாககுமாரனின் வரலாற்றை அருளினார். இத்தகைய புண்ணிய வரலாற்றைக் கேட்பதன் மூலமும் அல்லது படிப்பதன் மூலமும் இல்லறத்தார் தம் தீவினைக் கட்டில் இருந்து விடுபட முடியும் என்றும் அவ்வாறு விடுபட முயலுதல் அவசியம் எனவும் பகவான் சிரேணிகனுக்கு அருளினார்.

 

சிரேணிக மாமன்னனும் பகவானின் அருளுரையைக் கேட்டதும் பஞ்சமி நோன்பினை ஏற்க உறுதி பூண்டு வர்த்தமானரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

இவ்வாறாக நாககுமாரன் கதை முடிவுற்றது.


முடிவுரை: 


நாககுமார காப்பியம் 170 விருத்தப்பாக்களால் அமைக்கப்பெற்று ஐந்து சருக்கத்தொகுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது. வடமொழியில் ஸ்ரீமல்லிசேனசூரியரால் உருவாக்கம்பெற்ற இக்காப்பியத்தை தமிழில் யாத்துத்தந்தவர் எவர் என்பது அறியமுடியவில்லை.

 

 

சூளாமணி, யசோதரகாவியம், நீலகேசி, நாககுமாரகாவியம் மற்றும் உதயண குமாரகாவியம் போன்ற ஐந்தும் சிறுகாப்பியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு முற்காலத்திலிருந்தே அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வைந்து மட்டுமல்ல பெரும்பாலான காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், பதினென்கீழ் கணக்கு நூல்கள் போன்ற தொன்மையான தமிழ் ஆக்கங்கள் அனைத்தும் சமணக் கருத்தை மையமாக் கொண்டே உருவாகியுள்ளன. ஜினவறத்தை அடிப்படையாகக் கொண்ட இவ்வாக்கங்கள் தமிழுக்கு பெருந்தொண்டு புரிந்துள்ளது எனின் மிகையாகாது.

துவக்கத்தில் பரத கண்டத்திலுள்ள மகதநாட்டின் தலைநகராக இராசமாக்கிரிய நகருக்கு (ராஜ்கிர்) மேற்கிலுள்ள விபுலமலையில் இந்திரனால் அமைக்கப்பட்ட சமவசரணத்தில் ஸ்ரீ வர்த்தமான மஹாவிரர் அமர்ந்து அறமழை பொழிந்தார் என்று குறிப்பிட்டுள்ளதால் இது ஜினவறம் கூறும் நூல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

பகவான், அங்கு அறவுரை நாடிவந்த மாமன்னன் ஸ்ரீ ஸ்ரேனிகராஜனுக்கும் பஞ்சநோன்பின் பெருமையை கூற வந்தபோது, அந்நோன்பினால் பயனடைந்த நாககுமாரனின் கதையை தெரிவித்ததாக இக்காப்பியம் அமைந்துள்ளது. (இப்போதைய  flash back story களுக்கு முன்னோடி நாககுமார காவியம், மேருமந்திர புராணம்; ஏன்! ஸ்ரீபுராணம் போன்றவற்றின் கதைஅமைப்பு) கதை கூறும் பாங்கில் முன்னோடியான நடையில் சிறப்பான அம்சங்களைக் கொண்டு எழுதப்பட்டவை இப்புராண நூலாக்கங்கள் ஆகும்.

 

மகத நாட்டு மன்னன் விசாலநேத்திரை மற்றும் பிரிதிவிதேவி ஆகிய இருதேவியர்களுடன் இல்வாழ்க்கை நடத்துகையில், ஒருநாள் பிரதிவிதேவி வசந்த விளையாட்டு எனும் கேளிக்கையை தவிர்த்து ஜினாலயத்திற்கு விஜயம் செய்துள்ள பிஹிதாஸ்வரர் எனும் ஜைன முனிவரை தரிசித்து அறவுரை கேட்டபின்; தனக்கு நன் மக்கட்பெற்றை வழங்குமாறு ஆசி வேண்டுகிறாள். அவரும் நற்குணங்கள் நிரம்பிய மகன் உனக்குப் பிறப்பான். அவனே புகழ்பெற்று விளங்குவான் என்று கூறி வாழ்த்துகிறார்.

 

அதனைச் செவியுற்ற பின் அரண்மனையடைந்த தேவி, அன்று பின்னிரவில் இளங்காளை ஒன்றும் இளங்கதிர்ச் செல்வனும் தன் வீட்டிற்குள் நுழைவதாக கனவொன்றைக் காணுகிறாள். மறுதினம் அம்முனிவரிடம் அதைத்தெரிவித்து வினவியபோது, அவரும் காளையை கண்டதினால் அழகிய வீரமகன் பிறப்பான். இளங்கதிரைக் கண்டதால் அதர்மிகள் பலரையும் அடக்கியாளும் வெற்றி வேந்தனாய் திகழ்வதோடு: இறுதியில் ஜின தீட்சை பெற்று இருவினைகளை அறுத்து வீடுபேறு அடைவான் என்று தனது அவதிஞானத்தினால் அறிந்து அருளினார் என்பதாகச் செல்கிறது இக்காப்பியம்.

 

உத்தமப் பெண்டிர், பின்னாளில் நிகழவிருக்கும் இன்ப துன்பச் சம்பவங்களை, முன் கூட்டியே தமது பின்னிரவுக் கனவில் அடையாளக் குறிப்புகளாக காண்பர் என்பதை ஜினவறக் காப்பியங்கள் சில எடுத்துக் காட்டுகின்றன.

 

ஸ்ரீபுராணத்தில் ஜினமாதா பதினாறு கனவுக்காட்சிகளை கர்ப்பாவதாரணமாக நாம் படித்ததோடு கண்டிருக்கிறோம்.

 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே, வர்த்தமான மஹாவிரர் காலத்தில் இறங்குகால அறச்சரிவில் நிகழவிருக்கும் காலச்சுழல் பற்றி ஆதிபகவனின் குமாரர் பரதமன்னன் தமது கனவில் குறிப்புகளாக கண்டதை சலாகா புருஷர்கள் வரலாறு தெரிவிக்கிறது.

 

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் மதுரைக்கு நிகழவிருக்கும் துயரச்சம்பவமும், கண்ணகிக்கு ஏற்படவிருக்கும் துன்பங்கள் பற்றியும் இளங்கோ அடிகள் கனவுக் காட்சியாக முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.

 

சீவக சிந்தாமணியிலும் இராசமாபுர மன்னன் சச்சயந்தன் முடிசாய்ந்ததும், ஜீவகன் பிறப்பான். பின்னர் எண்மரை மணந்ததோடு வீரத்திருமகனாய் திகழ்ந்து தந்தை இழந்த நாட்டை மீட்டு மீண்டும் தர்மவழியில் ஆள்வான் என்பதை விஜயமாதேவியின் கனவின் மூலம் திருத்தக்கதேவரும் முன்கூட்டியே அறிவிப்பதாக் காண்கிறோம்.

 

சேக்ஸ்பிரியர் போன்றோரின் ஆங்கிலக் காப்பியங்களில் கூட இவ்வாறு பிற்காலத்திய நிகழ்வுகளை கனவின் வழியே முன்கூட்டியே தெரிவிக்கும் கதைநடையும் இருந்துள்ளதையும் அறியவேண்டும்.

 

கதையின் முக்கியநிகழ்வுகளை மற்றும் முடிவினை முன்னரே தெரிந்து கொள்வதால் படிப்போருக்கு விறுவிறுப்பை அளிக்காமல் இருந்து விடும் என்றும் நினைக்கத் தோன்றுவது இக்கால இயல்பு. ஆனால் அக்காலத்திய நூலாசிரியர்கள் கொலை, கொள்ளை, பேய், பிசாசு போன்றவற்றை மையமாக வைத்து யாரென்ற துடிப்பிற்குள் திகிலுக்குள் படிப்பவரை தள்ளி இரவு உறக்கத்தையும், மன இறுக்கத்தை அதிகரிக்கும் உளவியல் குறைப்பாடுகளை அளிக்க அக்காலத்திய காப்பிய ஆசிரியர்கள் விருப்பவில்லை.

 

படிப்பவர் மனதில் அமைதியையும், நிகழ்வுகள் நடைபெறும் பிரதேசத்தில் மெல்ல நடந்தபடியே அங்குள்ள சூழலை வர்ணனைகளாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை, அப்போதைய நாகரீகத்தை, வாழ்வியலில் உறையும் பண்புகளை கிரகித்து படித்தபின்  நல்லொழுக்கத்திற்கு அழைத்துச் செல்வதே இம்முனிவர்களின் மேலான நோக்கமாக இருந்துள்ளதை உணர்தல் வேண்டும்.

 

அவ்வாறான கதை நடையும், தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய கற்பித்தலுடன் நமக்கு தொன்மையான நாகரீகம் மற்றும் பண்பாடுகளை இன்றுவரை பறைச்சாற்றிக் கொண்டு அவை நம்மிடையே வலம் வந்து கொண்டுதானே உள்ளன. அக்கால தமிழாக்கங்களின் முக்கிய நோக்கமே அறம் சார்ந்த கருத்துக்களை படிப்போரின் மனதில் விதைத்து, நல்லொழுக்கத்தில் மக்களை திசைதிரும்பச் செல்வதே பிரதானமாக இருந்துள்ளது.  

 

அவ்வாறான ஒரு கனவை பிரிதிவிதேவி கணவனிடம் விளக்கியபோது, இருவரும் பிகிதாஸ்வர முனிவரைக் கண்டு விளக்கத்தை வினவுகின்றனர். அவரும் முன்னர் கூறியதுபோல் வீரமிக்க ஒரு ஆண்மகன் பிறப்பான். இளங்கதிரை கண்டதினால் அவன் பலதீயோரையும் அடக்கியாளும் வித்தையைக் கற்று விளங்குவான் என்று கூறியபோழ்தில்; அரசன் முனிவரிடம் மூத்தவன் ஸ்ரீதரன் இருக்கும் போது, இளையவன் எவ்வாறு அரசாள முடியும் என மேலும் வினவியபோது;

 

அரசனிடம் முனிவர்பிரானும் ‘ஆம் அவ்வாறுதான் நிகழும். அதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. அதாவது இங்குள்ள நந்தவனத்தில் ஒரு சித்த கூட சைத்யாலயம் உள்ளது. அதன் கதவுகள் இதுவரை திறக்கமுடியாமல் உள்ளன. அவை குமாரனின் கால் பட்டவுடன் திறந்து கொள்ளும் அதிசயம் நிகழும். அதுமட்டுமல்லாது ஆலயத்தின் அருகிலுள்ள தடாகத்தில் இக்குழந்தை விழ்ந்து விடும். அனைவரும் காப்பாற்ற முனையும் போது எவ்வித ஆபத்துமின்றி அந்த நாகவாவியிலுள்ள நாகங்களில் ஒன்று அவனை தலைமேல் சுமந்துவந்து கரைசேர்த்துச் செல்லும் என்ற அதிசய நிகழ்வையும் காணத்தான் போகின்றீர்கள். அவன் காளைப்பருவம் எய்திய போது மதயானையை அடக்குவான் மற்றும் அடங்காத குதிரையை அடக்குவான்’ என்பதாக அவனது புகழை, அவன் பிறப்பதற்கு முன்னரே தெரிவிக்கிறார்.

 

அவ்வாறே குமாரனின் வாழ்விலும் நடந்ததை நாம் கதை ஓட்டத்தைக்காணும் போது படித்தோம். இதுபோன்ற தெய்வீக புருஷர்கள் வாழ்வில்தான் அதுபோன்ற அற்புதங்கள் நிகழும். அவ்வாறான உத்தமர்களின் வரலாற்றைக் கூறுவதுதான் ஆதிபுராணம், உத்தரபுராணம் போன்ற நூல்கள்.

 

உத்தம புருஷர்கள் முன்பிறவிகளில் சம்யக்த்வம் பெறவேண்டி வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்வில் புண்ணியங்களை ஈட்ட தானம் முதலானவற்றை செய்தவர்கள் அல்ல. அறவழியில் ஒழுகி ஆன்மத்தூய்மைப் பெற்றதினால் ஈட்டிய புண்ணிய கருமங்கள் அவை. எடுத்துக்காட்டாக அவர்களில் எவரும் புண்ணியத்திற்கான பொருளீட்டி தானம் செய்தவர்கள் அல்ல. பொருளீட்டாமலே தியாகம் செய்தவர்கள். எளிய வாழ்க்கையை இயல்பாகவே தேர்வு செய்து வாழ்ந்தவர்கள். புண்ணியாஸ்ரவத்தின் விளைவால் பொருள் சேர்ந்தாலும் நற்பாத்திரம் அறிந்து தானமளித்தவர்கள்.

 

அவ்வாறான வாழ்வியலைத் தேர்வு செய்தவர்கள் அறவழிப்பாதையில் சென்று ஆன்மத்தூய்மை பெற்றவர் ஆவார்கள். புண்ணியத்தை ஈட்டுபவர்கள் அல்ல. அறியாமல் சேர்ந்த புண்ணியத்தை செலவழித்து வாழ்பவர்கள்.

 

அதாவது அவர்களது அந்தராத்மா சுப உபயோகத்தில் கருமங்களைச் செய்யதில்லை; சுத்த உபயோகத்தில் காரியங்களை செய்தவை.. அவ்வாறான ஆன்மாக்களே பரமான்ம நிலைக்கு தள்ளப்படும். அதுபோன்ற சம்யக்த்வம் பெற்ற நற்காட்சியாளர்களது வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்வது இயற்கையே.

 

அவ்வாறாக நாககுமாரனும் உத்தமமான நாமகர்மத்தை ஈட்டியிருந்தன் காரணத்தால் காமேஸ்வரர்களில் ஒருவராக;  22 ஆவது தீர்த்தங்கரர் ஸ்ரீநேமிநாத ஜினரின் சந்தான காலத்தில் உதித்தவன். அதனால் முதல் காமதேவரான ஸ்ரீபாகுபலி பகவானை ஒத்த ரூபத்தில் பிறந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, தனது கடைசி மனிதகதியில் வீடுபேற்றை அடைந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

 

அதுபோன்ற பல உத்தம புருஷர்களும் உலகத்தில் பிறந்துள்ளதை அந்தந்த வட்டார தொன்மையான வரலாறுகளும் நமக்கு பிறமொழிகளில் அளித்துள்ளன. அவற்றை முழுவதுமாக ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது. அவர்கள் வகுத்த வாழ்வியல் முறை பிற்காலத்தில் பலவகையில் மாற்றம் செய்யப்பட்டதினால் அறமற்ற வாழ்வியலாக, மித்யாத்வ சிந்தனையாக உருமாற்றம் பெற்று விட்டன என்பதே நிதர்சனம். ஆனால் ஜினவறம் மட்டுமே தன்னியல்பில், அடிப்படையில் அஹிம்சா அறத்தை கொண்டிருப்பதால் பெருமளவில் மாற்றத்தை ஏற்காமல் தூய்மையாக நிலைத்து நிற்கிறது.

 

உதாரணமாக (மித்யாத்வ மதக்கருத்தாக ஏற்காமல்…) மரியன்னைக்கு மகனாக உதித்த உத்தம ஜீவன் தான் ஏசுபிரானும். அவர் தன்னை ஆத்மாவாகவே உணர்ந்து வாழ்ந்தவர். முட்கிரீடம் அணிவித்தல் மற்றும் சிலுவையில் ஆணிகொண்டு அறைதல் போன்ற கொடுமைகளை சந்தித்தபோதும், தன் சரீரத்திற்கு பெருந்துன்பம் அளிக்கப்பட்டிருந்தாலும் சகிப்புத்தன்மையுடன், பொறுமையின் சிகரமாக அளித்தவர்களை மன்னித்ததாகவே அவரது வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதனால் அவரும் ‘தான்’ உடலல்ல, ஆன்மனே என்ற உணர்வோடு வாழ்ந்த ஒரு சம்யக்த்வ ஜீவனாகத்தான் கருத வேண்டியுள்ளது.

 

அவரும் முற்பிறவியில் அறவாழ்வியலை ஏற்றதினால் பெற்ற அற்புதசக்திகளை உணராமலே வாழ்ந்ததாக ஆரம்ப கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஒரு ஏழை வீட்டின் முக்கிய விழாவிற்கு அழைக்கப்பட்டு விருந்துக்கு செல்கின்றனர் மேரியும், ஏசுவும். ஆனால் அவர்கள் விருந்தளிக்க, விணியோகிக்க வேண்டி சிலநாட்களாக தயாரித்த பழச்சாறு அழுகி துர்நாற்றமடித்து வீணாகிவிட்டன. அவர்கள் செய்வதறியாது பதறி அழுது கொண்டிருந்த போது;

 

மேரி தனது மைந்தனிடம் இந்த பீப்பாக்களில் நற்பழச்சாறாக உருமாற்றம் பெற முயலும் படி கூறியபோது; அவரும் எவ்வாறு அப்படி நிகழும் என்று மறுத்து விடுகிறார். ஆனால் அன்னை அவரிடம் ‘நீ ஒரு உத்தமஜீவன் உன்னால் மட்டுமே இயலும் முயற்சி செய்து பார்’ என்று உறுதியாக எடுத்துரைத்தபோது; அவர் அங்குள்ள பீப்பாக்களில் உள்ள வீணான பழச்சாறுகளை ருசியான புதிய பழச்சாறான மாற்றப்பெறச்செய்ததாக; அவர் முதல் அற்புதத்தை புரிந்ததாக பைபிள் கூறுகிறது.  அதன் பின்னரே அவர் தேவமைந்தன் என்பது அனைவருக்குமே தெரிய வருகிறது. அதுவே அவரது வாழ்வில் பல இன்னல்களை தோற்றுவிப்பதாகவும் கதையோட்டம் செல்கிறது.

 

அதாவது அறவழிப்பாதையில் பல பிறவிகளாக வாழ்ந்தவர்கள் இதுபோன்ற அற்புதங்களை தங்களது இறுதி வாழ்வில் செய்து காட்ட இயலும். அந்த ஆற்றல் தன்னிடம் இருப்பதே அவர்களுக்கே தெரியாது என்பதாக எத்தனையோ மைல்கள் தூரத்தில் உள்ள குடியிருப்புபிரதேச கதைகளிலும் இவ்வாறான ஆச்சர்யங்கள் நிகழ்ந்ததாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுள்ளனர். (அதெப்படி எல்லோரும் சேர்ந்தே அமர்ந்து முடிவுசெய்து பொய்யுரைத்திருப்பார்களா என்ற ஆராய்ச்சியும் தோன்றவே செய்கிறது)

 

அதனால் சம்யக்த்வ சிந்தனையுடன் வாழும் எந்த ஒரு மனிதனும் அறவழிப்பாதையைத்தான் தேர்வு செய்வார்கள். அவர்கள் அறியாமலே பல ஆற்றல்களை அவர்கள் இருப்பில் வைத்திருப்பார்கள். அவ்வாறான ஆற்றல் வாய்ந்த உத்தம புருஷர்கள் உலகெங்கிலும் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் காணும் போது அறவழிப்பாதையே சிறந்தது என்ற கருத்தை ஐயமின்றி ஏற்பதே நன்று எனத் தெரிகிறது. அதுவே ஜினர் கூறிய வாழ்வியல் முறை என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

(ஆனால் இப்போது பல மித்யாத்வ சிந்தனைகளால் அழுக்கடைந்த மேற்கத்திய வாழ்வியலை ஏற்றல் மூடத்தனமாகும்.)

 

அறவழியில் வாழ்பவர்கள் எவரும் விடுதலைப்பேற்றை பெற முயல்பவர்களே. அவர்களே ஸ்ரமணர்கள் (தமிழில் சமணர்கள்..) பிறப்பினால் எவரும் சமணர் ஆவதில்லை. நல்லொழுக்கத்தில் நடப்பதினால் மட்டுமே சமணர்கள் ஆகின்றனர் என்பதைத் தெரிவிப்பதே இதுபோன்ற காப்பியங்களின் நோக்கம் ஆகும்.

நாககுமாரன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். குருகுலத்தில் பல சிஷ்யர்கள் இருப்பினும்; அனைவருமே குரு கற்பிக்கும் வித்தைகளை முழுக்கவனத்துடன், நுணுக்கமாக புரிந்து கொள்பவர் அர்ச்சுனன் போன்ற ஒருவராய்த்தான் இருப்பர். குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்குபவர்களே வித்தைகளில் வல்லவராக திகழ்வார்கள். அந்த அளவில் புண்ணிய புருஷனாக அவதரித்த நாககுமாரனும் சிறந்து விளங்கினான்.

ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் முதன்மையாக திகழந்தான். குறிப்பாக போர்கலை, இசைக்கலை, விலங்குகளைக் கையாளுதல் போன்ற வற்றில் முதன்மையாக திகழ்ந்ததை இக்காப்பிய நிகழ்வுகளே தெரிவிக்கின்றன.

 

சகலகலாவல்லவனான நாககுமாரனுக்கு சகலகலாவல்லி எனும் அழகியை அவனது தந்தை திருமணம் செய்விக்கிறார்.

பின்னர் கின்னரி, மனோகரி என்ற இருவரது வீணையிசை கேட்டு, யார் வல்லவர் என நுணுகி ஆராய்ந்து இளையவளே என  தீர்ப்பு வழங்கியதனால் இருவரையும் மணக்கிறான். எப்படிப் பட்ட மனோநிலையில் வாசிப்பவர் இருக்க வேண்டும் என்பதும் நாககுமாரன் கூறுவதாக பாடலில் வருகிறது. இருவரும் வெற்றிக்கான பரிசாக அளிக்கப்பட்டவர்களே. இதே போன்ற ஒரு சூழல் சிவக நம்பி, யாழிசைப்போட்டியில் அழகியான காந்தர்வ தத்தை என்னும் வித்தியாதரநாட்டு இளவரசியை மணந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் யாழ்  எந்தரக மரத்தில் செய்யப்படவேண்டும் என்ற குறிப்புகளையும் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார்.

 

 

பொன், பொருள் போன்றே பெண்களும் பரிசாக அளிக்கப்படும் கலாச்சாரச்சுழல் அக்காலத்தில் பலபிரதேசங்களிலும் இருந்துள்ளது. மேலும் அழகிய பெண்களின் கற்பிற்கு பல வாலிபர்களால் அச்சுறுத்தல் அதிகமாய் இருந்துள்ள காலமது. அதனால் அரசனை மணமுடித்தல் அவர்களது கற்பிற்கு  பாதுகாப்பு அரணாக விளங்கிய காரணத்தினாலும் அவ்வாறான முறை இருந்துள்ளது. மேலும் அரசருக்கிடையே போர் மூளும் அபாயம் நேருகின்ற சூழலில் எளியவன் தனது மகளை வலிமையான அரசனுக்கு மணமுடித்து தனது பெருமைக்கு பங்கம்ஏற்படாமலும், போரில் பலர் இறக்க நேரிடுவதை தவிர்க்கவும், அவர்களை காப்பற்றும் அளவிலும் இவ்வழக்கம் இருந்துள்ளது. அவ்வகையில் சக்கரவர்த்தி போன்றவர்கள் பல்லாயிரம் மனைவிமார்களை கொண்டதாகவே வரலாறுகள் தெரிவிக்கின்றன.

 

பின்நாளில் நீலகிரி எனும் மதயானையை அடக்குகிறான்.  நகரவீதியில் செல்வோரைக் கடித்து குதறிய பொல்லாத குதிரையை அடக்குவதாகவும் காப்பியம் கூறுகிறது. இரண்டையும் மங்கையர்கள் போன்றே வெற்றிக்கான பரிசாகவும் ஏற்கிறான் குமாரன்.

 

பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன், சூதாட்டதிலும் வெற்றி பெறுவதாகவே கூறுகிறது. அக்காலத்தில் மன்னர்களும், தனவந்தர்களும் கூடும் சூதாட்ட இல்லம் பொழுதுபோக்கிற்காக இருந்துள்ளதாகவே தெரிகிறது. அதில் தங்கள் உடமைகளாக கருதிய செல்வங்கள், நாடு போன்றவற்றை பணயமாக வைத்து இழந்ததையும் காணலாம். வெற்றி, தோல்வி என்றவகைப்பாட்டிலுள்ள ஆட்டமாயிற்றே அதனால் இந்த அவலமும் அக்காலத்தில் நிறைவேறியுள்ளது.  (அவ்வழக்கம் இக்காலம் வரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது)

 

வியாளன், மாவியாளன் என்ற இரு அரசகுமாரர்களைத் தோழர்களாகப் பெறுகிறான். இருவருமே கோடி வீரர்களை வெல்லும் பராக்கிரமம் பொருந்தியவர்கள். அதனால் கோடிபடர்கள் என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றவர்கள். அவர்கள் நாககுமாரனை எஜமானராக ஏற்றார்கள் என்பதிலிருந்து குமாரனின் பராக்கிரமத்தை நாம் அறிந்து வியந்து நோக்கலாம். வியாளன் நெற்றிக்கண்ணுடன் தோன்றியவன் என்பதும், பின்னர் நாககுமாரனைக் கண்டதும் அது அகன்றதாகவும் காப்பியம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

 

பின்னர் சூசீலை என்ற பெண்ணை துஷ்ட வாக்கியன் என்பவனிடமிருந்து மீட்டு அவள் விரும்பிய அரிவர்மன் என்பவனுக்கு திருமணம் செய்து அவளுக்கு அடைக்கலமளிக்கிறான்.

வீணைப்போட்டியில் கலந்து கொண்டு திருபுவனாரதி என்பவளின் நானே சிறந்த கலாராணி என்ற ஆணவத்தை போக்கி அவளை மணந்து அடைக்கலமளிக்கிறான்.

பூமிதிலகம் என்ற ஜினாலயத்தில் வணங்கும் போது இரம்மியன் என்ற வேடனைச் சந்திக்கிறான். அவன் வேண்டுகோளுக்கிணங்க வித்தியாதரனிடமிருந்த அவனது காதலியை மீட்டு அவனிடம் ஒப்படைக்கிறான். இதுபோன்று எங்கு தீமைகள் அரங்கேறுகிறதோ அவற்றை விலக்கி நன்மையை தருவதே தனது குறிக்கோளாக வாழ்பவன் நாககுமாரன் என்பதாகவே காப்பியம் சித்தரிக்கிறது.


வலியோர் எளியோருக்கு துன்பம் இழைக்கின்ற வேளையில் அவர்களை மீட்பதும் அரசர்களுக்கான நீதியாகிறது. அவ்வகையில் அரச குமாரனான நாககுமாரனும் தான் பிறந்த குலமறிந்து அவ்வழியில் பல சாகசங்களைச் செய்து தனது நாட்டு பிரஜைகளுக்கு மட்டுமல்லாது; உலக சமுதாயத்திற்கு நன்மையளிப்பதையே குறிக்கோளாக வாழ்கிறான் என்பதாக காப்பிய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களே அவதார புருஷர்கள் என்பதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

 

தன் நலம், தன் குடும்பநலம், தன் சமூக நலம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து உலக சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களே அறவழியில் செல்வதாக கூறப்படுகிறது. துன்பமிழைக்காமல் இருத்தல் துன்பத்தைப் போக்குதலே அஹிம்சை நெறி எனவும் கூறப்படுகிறது. அவ்வழியில் நாககுமாரனும் தெய்வீக அம்சங்களை தன்னிடத்தில் கொண்டிருந்தான் எனின் மிகையாகாது.

 

நாககுமாரன் வேடனின் காதலையை மீட்கும்வேளை எதிரியாய் தோன்றிய வியந்திரதேவன் அவனைக்கண்டதும் சிநேகபாவத்துடன், தான் பாதுகாத்து வந்த வாள், செப்பு, படுக்கை ஆகிய சிறந்த மூன்று பொருட்களை அவனிடம் ஒப்படைக்கிறான். நல்வினை தோன்றும் வேளை நன்மைகள் தானே கூடிவரும்.

 

இயக்கியர் குகைக்கு தனியொருவனாக துணிச்சலுடன் சென்று அங்கு அடிமையாய் இருந்த  நான்காயிரம் இயக்கிகளை விடுதலை செய்தபோது அவனது பாராக்கிரமம் கண்டு அவர்களும் இவனை தலைவனாக ஏற்றுக் கொள்கின்றனர்.

 

அடுத்து ஒரு துஷ்ட வேதாளத்தைச் சந்திக்கிறான். வழிப்போக்கர்களை வாளை சுழற்றி அச்சறுத்தி வந்த அவ்வேதாளத்தை வியந்திரதேவன் அளித்த வாளால் வீழ்த்துகிறான். அதனால் அவனுக்கு நிதிக்குவியல் ஒன்றும் பரிசாகக் கிடைக்கிறது. அக்குவியலுக்கு அந்த இயக்கிகளை பாதுகாக்கும்படி கட்டளை இட்டுச் சென்று விடுகிறான்.

 

அடுத்துள்ள  நாட்டிற்கு செல்லும் போது, வழியில் ஒரு அரசமரத்தடியில் தன் படைசூழ தங்கியிருந்தபோது, அவனது வருகையைக் கேள்வியுற்ற அந்நாட்டு அரசன் வனராஜன்;  முனிவர் ஒருவர் கூறிய நல்வாக்கிற்கிணங்க குமாரனுக்கு தனது மகள் இலட்சுமிதேவியை மணமுடித்து வைக்கிறான்.

 

அப்போது மாமனார் வனராஜனது நாடு அவனது தயாதியான சோமப்பிரபன் வசம் இருந்ததை கேள்வியுறுகிறான். சோமப்பிரபனின் தந்தை அவனது தம்பியை வஞ்சித்து அந்த அரசை கைப்பற்றியுள்ளான். வஞ்சிக்கப்பட்ட அரசனின் மைந்தன் வனராஜன் ஆவான். அதனால் சோமப்பிரபன் மீது தோழன் வியாளனை ஏவி சிறைபிடித்து வர கூறுகிறான். அவனும் அவ்வாறே செய்து முன்நிறுத்தினான். அவனிடமிருந்து புண்டரவர்த்தனபுர நாட்டை மீட்டு தனது மாமனார் வனராஜனிடம் ஒப்படைத்து உரிமையை மீட்க உதவிய பின் அங்கிருந்து புறப்படுகிறான். அப்போதே தனது தவற்றை உணர்ந்த சோமப்பிரபனும் ஜினதீட்சை ஏற்று தவவாழ்வை கடைபிடிக்க தொடங்கி விடுகிறான். அவ்வாறான அறம் புரண்ட ஆட்சிப்பிரதேசத்தில் மீண்டும் நீதியை நிலைநிறுத்த தனது உயிரையும் மதிக்காமல் போராடும் பாத்திரமாக நாககுமாரன் விளங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்துள்ள சுப்ரதிட்ட நகரின் அரசனின் மைந்தர்களான அசேத்தியன், அபேத்தியன் என்ற இருவரும் மூடிசூட்டியபின் தமது எஜமானனாக நாககுமாரன் வருவான் என்பதை பிகிதாஸ்வரர் எனும் ஜினதர்மத்தை ஏற்ற முனிவர்; தனது அவதிஞானத்தால் அறிந்து அறிவித்தபடி, இருவரும் குமாரனை சந்திக்க வருகின்றனர். அவர்களும் அவனது ஏவலை ஏற்று நடக்க சித்தமாய் இருப்பதாக கூற இருவரையும் வியாளனுடன் சேர்ப்பித்து மூன்று தோழர்களாக்கிக் கொள்கின்றான்.

 

புண்டரவர்த்தனபுரத்திற்கு அருகிலுள்ள குன்றில் வாழும் ஐந்நூறு விரர்களும் நாககுமாரனை ஸ்வாமியாக(தலைவனாக) தாமாகவே ஏற்றுக் கொண்டதோடு அவனுக்கு சேவை செய்ய தயாராய் இருந்தனர்.

 

இவ்வாறாக பலவீரர்களும் குமாரனின் பெருமையைக் கேள்வியுற்று அவனது அறவழிநோக்கத்தில் பங்குபெற எண்ணி அவனிடம் தாமே வந்து சேருகின்றனர். அவனும் அவர்களது பொதுஜனசேவை குணத்தை அறிந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறான்.


 அந்நிகழ்விற்கு பின்னர் அக்கிரி நகரத்து அரசன் அரிவரன் என்பதாகவும், பக்கத்து நாட்டு அரசன் பிரத்யோதனன் தனக்கு அரிவரன் மகள் குணவதியை திருமணம் செய்ய மறுத்ததால், அவனது நாட்டிலேயே சிறைவைத்துள்ளதையும் குமாரன் அறிகிறான். அத்தீயசெயலிலிருந்து அவ்வரசனை மீட்டு அவனுக்கு விடுதலை அளிக்கிறான். அந்த நற்காரியத்தினால் உளமகிழ்ந்த அரிவரனும் தனது மகள் குணவதியை குமாரனுக்கு முறைப்படி மணமுடித்து வைக்கிறான்.

 

குணவதியை திருமணம் செய்து இன்புற்றிருந்த குமாரன் அங்குள்ள ஜினாலயத்திற்கு தவறாமல் சென்று ஜினரை பல துதிப்பாடல்களால் துதிசெய்து பூஜைமுறையை நிறைவேற்றியதாக நூலாசிரியார் தெரிவிக்கிறார். பலபிரதேசங்களுக்குச் சென்று வெற்றிபெற்றாலும் அவனிடத்தில் அகம்பாவம் குடிகொள்ளவில்லை. கடமையாக நிறைவேற்றும் காரியங்களில் கிடைத்த உயர்வுக்கும், பெருமைக்கும் காரணம் தான் வணங்கும் இறைவனே, அவனுக்கே அப்புகழ் முழுவதும் சென்றடையட்டும் என்ற உணர்வில் உறுதி கொண்டிருப்பதாகவே அவனது செயல் தெரிவிக்கிறது.

 

இவ்வாறு பல பிரதேசங்களிலும் நடைபெறும் அதர்மஆட்சி அதனால் பிரஜைகளுக்கு நேரும் தீமைகளை விலக்கி அறவழியில் ஆட்சியை அங்கு நிறுவிட உதவுபவான நாககுமாரன் திகழ்ந்தான்  என்பதாக பல நிகழ்வுகளின் மூலம் இக்காப்பியம் முடிவு வரை தெரிவிக்கிறது.  போர்க்கலையும், கற்ற வித்தையும் அவனது வீரத்தை  வெளிப்படுத்தினாலும் நோக்கத்தில் அறத்தை நிலைநாட்டும் நற்காட்சியாளனாய் கதையோட்டம் முழுவதுமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

ஒரு இல்லறத்தான் தினந்தோறும், தங்கும் இடங்களில் அமைந்துள்ள ஜினாலயம் சென்று ஜினரை துதிப்பதிலிருந்தும், நியாயத்தின்  பக்கம் நன்கறிந்து நீதியை நிலைநாட்டுவதிலிருந்து நல்லாட்சியை  விரும்பும் இளவரசாயினும் உத்தமசிராகவகனாகத்தான் முடிவு செய்யவேண்டும். அவ்வுத்தம சிராவகர்களே அறவழியில் செல்பவர் ஆவார்கள்.

 

எவர் ஒருவர் அறவழியைத் தேர்வு செய்து எண்ணம், சொல், செயல் வழியே தன்னை அடையாளப் படுத்துகின்றனரோ அவர்களே சம்யக்த்வம் பெற்றவராகிறார்கள். இவ்வுண்மை கருதியே குமாரனும் கடைசியில் முக்திக்கு சென்றதாக இக்காப்பியம் குறிப்பிடுகிறது.

 

அடுத்து வரும் இரு பிரதேச நிகழ்வுகளே அவன் அறவழியை தேர்வு செய்பவன் என்பதை நிரூபிக்கிறது.

குமாரனின் பாரக்கிரம்ம் மட்டுமின்றி அறச்சிந்தனையை கேள்வியுற்ற அஸ்தினாபுரத்து அரசன் அபிச்சந்திரன்; தனது அண்ணன் வத்சை நாட்டு மன்னன் சுபச்சந்திரன், துலங்கிபுரத்து மன்னன் கொடியவன் சுகண்டனால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவ்வரசனது மகள் எழுவரும் எங்களிடம் அடைக்கலம் அடைந்துள்ளனர். அண்ணன் சுபச்சந்திரனை விடுவிக்க வேண்டுவதாக தனது தூதுவனின் மூலமாக செய்தியை தெரிவிக்கிறான். கவலை வேண்டாம் அத்துமீறி முற்றுகை இட்டவனை விரட்டி அடிப்போம் என்று உறுதியை அத்தூதுவன் மூலம் பதிலை அளித்ததோடு; வியாளனை இருப்பிடத்து காவலனான நிலைநிறுத்திவிட்டு வத்சை நோக்கி சிறுபடையுடன் செல்கிறான்.

 

போரிட்டு சுகண்டனை தனது வாளுக்கு இரையாக்குகிறான். இறந்த சுகண்டனின் இளவரசன் வஜ்ஜிரகர்ணன் அவனிடம் சரணடைகிறான்.

 

மேலும் சுகண்டனை, அவனது நாட்டைவிட்டு மேகவாகனன் என்பவன் துரத்திவிட்டான் என்பதை இவன்மூலம் அறிந்து, அவனது சஞ்சயபுர நாட்டை மீட்டு மகன் வஜ்ஜிரகர்ணனை அங்கு அரசனாக்கினான் என்பதாக கடையோட்டம் செல்கிறது.

 

அந்நற்காரியத்திற்கு பிறகு அபிச்சந்திரனும் அவனை சிறப்பாக வரவேற்றதோடு தனது அண்ணன் மகள் எழுவருக்கும் குமாரனே பாதுகாவனாக இருப்பான் என்று கருதி அவனுக்கு திருமணம் செய்துவைப்பதாகவும். வஜ்ஜிரகர்ணனும் அவ்வாறே தனது சகோதரிகள் இருவரையும் குமாரனுக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் குறிப்பிடுகின்றது.

 

பிரதேசங்களில், அங்கு வாழும் மக்கள் நற்சிந்தனையுடன் வாழ்ந்தாலும் ஆளும் கொடுங்கோலர்களால் துன்பப்படுகின்றனர். அறவழி தவிர்த்து ஆட்சிசெய்பவர்களை விலக்கி நல்லாட்சி நிறுவும் போது, அப்பிரதேசம் மக்களும் ஊக்கமுடன் உழைப்பதால் செழிப்புற்று உலக்குக்கே நன்மையை விளைவிக்கும் என்ற பேருண்மையை விளக்குவதாகவும் இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது.


பின்னர் அவந்தி நகரின் மன்ன ஜெயசேனனின் மகள் மேனகி என்பவளையும் மணக்கிறான். அதனால் மாவீரனான மாவியாளன் என்ற வியாளனின் சகோதரன் தோழனாகிறான்.

 

பாண்டிய நாட்டு தென்மதுரையின் மன்னன் மேகவாகனனின் மகள் ஸ்ரீமதியை அவள் நடனத்திற்கேற்ற வகையில் மிருதங்கம் வாசித்து இசைத்தலைவன் என நிரூபித்ததும் அவள் கர்வம் தோல்வியுற்றதும் அவனை மணக்கிறாள்.

 

கடலின் நடுவேயுள்ள பூமிதிலகபுரம் என்னும் ஜினாலயத்தின் முன்னே தினம் தினம் நண்பகலில் ஐநூறு கன்னியர் தோன்றி அழுது கூக்குரல் இடுகின்றனர் என்பதை கேள்வியுற்று, அவர்கள் துயரம் தீர்க்க எண்ணி அங்கு சென்று விசாரிக்கிறான். அவர்களும் தங்கள் தாய்மாமன் வாயுவேகன் எங்கள் அனைவரையும் மணக்க வேண்டி தந்தையிடம் கட்டாயம் செய்தான். அவரும் மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டு எங்களை இத்தீவில் ஜினாலயத்திற்கருகில் சிறைவைத்துள்ளான் என்று கூறி காப்பாற்ற வேண்டுகின்றனர்.

 

நாககுமாரனும் வாயுவேகனுடன் போர் தொடுத்து அவனை வீழ்த்துகிறான். அவனை வென்றதால் ஐநூறு கன்னியரும் அவனை மணக்கும் படி வேண்டுகின்றனர். குமாரனும் அவர்களை மணந்து அடைக்கலமளிக்கிறான். இவ்வாறான தீயோனை அழித்த செய்தியைக் கேட்ட ஐநூறு வீரர்களும் குமாரனுடன் இணைந்து சேவை செய்ய முடிவு செய்கின்றனர்.

 

மீண்டும் பலநாடுகளுக்கு செல்லும் நோக்கில் கலிங்கநாட்டிற்கு சென்றபோது அங்குள்ள ரத்தினபுர நகரத்து இளவரசி மதனசஞ்சிகையை மன்னன் சந்திரகுப்தன் குமாரனுக்கு மணமுடித்து வைக்கிறான்.

கடைசியாக கங்காளநாட்டு திருபுவனபுரம் வந்தடைகின்றான். அந்நகர மன்னன் விஜயந்திரன் தனது மகள் இலக்கணையை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அவளுடன் இன்புற்று வாழும் நாட்களில் முனிவர் பிஹிதாஸ்வரரை சந்திப்பதாக காப்பியம் தெரிவிக்கிறது. அவரைச் சந்தித்ததிலிருந்து சிறந்த அரசனாக உலகத்தில் அறத்தை நிலைநாட்டும் நோக்கத்தில் பல வெற்றிகளை சந்தித்தவன், தனது ஆத்மா தூய்மையடையும் வழிகளை கேட்டு தன்னை வெல்லும் மோட்ச மார்க்கத் திசைநோக்கி வாழ்க்கைப் பயணத்தை மாற்ற முடிவெடுத்ததாக நூலாசிரியர் நிகழ்வுகளை குறிப்பிடுகிறார்.

 

ஐநூற்று பத்தொன்பது கன்னியரை திருமணம் செய்து அவர்களுக்கு அடைக்கலமளித்ததாகவே இக்காப்பியம் பகர்கின்றது. உலகப்பிரஜைகள் நலனுக்காக தன் உயிரை துச்சமாக எண்ணி போரிட்டு காப்பாற்ற துணிந்த போது இவ்வாறான சுபநிகழ்வுகள் குமாரனின் வாழ்வில் நடந்தேறுகின்றன. ஆனால் எந்த கன்னியர் மீதும் இச்சை கொண்டு அங்கேயே தங்கிவிடவில்லை. அடுத்த அறக்காரியங்களை ஏற்க துணிவதோடு மன உறுதியுடன், அவர்கள் விரும்பாவிட்டாலும் ஐநூற்று பதினெட்டு மங்கையரையும்,  விலகியே சென்று விடுவதாக காப்பியம் தெரிவிக்கிறது. கடைசியாக முற்பிறப்பில் வாழ்க்கைத்துணையாக விளங்கிய இலக்கணையை மட்டுமே தனது பட்டத்து அரசியாக நியமித்து சிறிதுகாலம் வாழ்ந்ததாக அவனது இல்லறவாழ்வு முடிவுறுகிறது.

 

தனது இலட்சியத்திற்கு தடையாக எந்த ஒரு மணவாழ்வையும் ஏற்று அங்கேயே  தங்கிவிட  துணியவில்லை என்பதாகவே நூலாசிரியர் தெரிவித்து கதைஓட்டத்தை நகர்த்தியுள்ளார்.

 

காமம் என்பதற்கும் காமஇச்சை என்பதற்குமான வித்தியாசத்தை முழுவதும் அறிந்தால் அவனது ஐந்நூற்று பத்தொன்பது திருமணத்திற்கு பிறகும் அவன் ஜினதீட்சை ஏற்றதை நாம் புரிந்து கொள்ள இயலும். மனிதனைத்தவிர பிறஜிவராசிகள் அனைத்தும் இயற்கை வழங்கிய காமத்தை மட்டுமே வெற்றிகொள்ள இயலாமல் வாழ்கின்றன.

ஆனால் மனிதனோ இயற்கை அளித்த காமத்தை வெல்லும் ஆற்றல் இருந்தும், மனத்தில் தங்கிய புணர்ச்சிசுகமான காம இச்சைக்கும் அடிமையாகிறான். அவ்விச்சையை வென்ற பின்னரே காமத்தையும் வெல்ல இயலும். அதன்பின்னரே பலபிறவிகளை வெல்ல இயலும்.

 

அதனால் தான் துறவறநெறியை ஏற்பவர்கள் இச்சைக்கு வித்தான காமத்திற்கஞ்சியே இல்லறவாழ்வையும் சேர்த்தே துறக்கின்றனர்.

 

இயற்கை இனவிருத்திக்காக அளித்த தூண்டுதல்கருவியே காமம். அக்காமத்தின் மீதுள்ள மோகமே இச்சையாகும். மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள்.

 

 ஆவலாதி அதாவது ஆவலுக்கான ஆதி காமம் என்றுதான் சித்தர்களும் கூறுகின்றனர். காமத்தை வெல்லவே மனிதப்பிறவி எடுக்கிறோம். ஆனால் அக்காமத்தின் மீதுள்ள பற்றான இச்சையே மேலும் பல கீழான பிறவிகளை நமக்கு அளிப்பதாகவே அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் அறிவுறுத்துகின்றன.

 

அவ்வாறான இச்சை இக்காப்பிய நாயகனிடத்தில் இல்லை. அவன் காமத்தை மட்டுமே கொண்டிருந்ததினால் இப்பிறவியிலேயே அதை வென்றான் என்பதாக நூலாசிரியர் அவனுக்கு முக்தி கிடைப்பதாக கூறுகிறார். அதே நிலையில் எண்மரை மணந்த சீவகநம்பியும் காப்பியமுடிவில் ஜீவேந்திரஸ்வாமியாகி மோட்சமடைந்ததாகவே திருத்தக்கதேவரும் தெரிவிக்கிறார்.

 

காமம் உடலில் அநிச்சையான தூண்டல் உணர்ச்சி. அதை இச்சையாக மனம் கருத முற்பட்டு அநிச்சைத்தூண்டலுக்குள் சிறைவைக்கிறது. அதுவே காமஇச்சையாகும். பின்னர் காம இச்சை அநிச்சை செயலாக உருமாற்றம் பெற்று விடுகிறது. இவ்விரண்டு உணர்ச்சிகளை வெல்வதே துறவற நெறிக்குள் நம்மை அழைத்துச் செல்லும். அதன்பின்னரே துறவறநெறியாளராகும் தகுதியைப் பெறுவோம்.

 

காமம் என்பது ஆண்/ பெண் புணர்ச்சி சம்பந்தப்பட்டதாக மட்டுமே கருதப்படுகிறது. ஐம்புலனுகர்ச்சி அனைத்துமே ஆசையின் பிள்ளையான காமத்திற்குள் அடங்கும். இருப்பினும் உடல் வழி, வாய்வழி ஸ்பரிசங்கள் அனைத்துமே பிரதானமான காமஇச்சையாக கருதப்படுகிறது. உடற்சுவை, வாய்ச்சுவை இருவகைக் கவர்ச்சியுமே மோகத்தின் வெளிப்பாட்டின் துவக்கம். அதனால் அந்த மோகனீய கர்ம வினையை வெல்ல காமத்தை வெல்ல வேண்டியுள்ளது.

 

துறவுக்கான தீட்சை ஏற்றவர்களும் பயிற்சிக்காலத்தில் முழு பிரம்மச்சர்யத்திற்கு செல்லவே காமத்தை வெல்லும் தவவாழ்வுப் பயிற்சியை ஏற்கின்றனர். பிரம்மச்சர்யம் என்றால் ஆன்மாவில் லயித்திருத்தல் என்பதே பொருள். அவ்வாறான உபவாசத்திற்கு காமமும், இச்சையும் தடையாய் இருப்பதால் அதனை விலக்கும் தவஒழுக்கத்திற்கு பிரம்மச்சர்யம் என்றே பெயரிட்டுள்ளனர். காமத்தை ஆன்மத்தீயிலிட்டு எரிப்பேன் என்பதாக துறவியர் பலரும் கஷாயம் அணிகின்றனர். அதாவது தீப்பிழம்பை ஒத்த காவியுடை தரிக்கின்றனர்.

 

இந்த தவநெறி ஒழுக்கம் சமணத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான தரிசனங்கள், மதங்களின் ஒழுக்கத்தில் முதன்மையாகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

 

கிருஸ்துவ மதத்தில் ரோமன் கத்தோலிக்க துறவியர்களான பாதிரியார்கள், கன்னிகாஸ்தீரிகளும் நம்முடைய திகம்பரதுறவியர் சங்கம் போன்றே பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர்கள். (அப்படித்தான் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது) ஆனால் நடைமுறையில் புலால் உண்ணுதல் போன்ற காமத்தில் விழ்ந்து விடுவதால் முழுதுறவற நெறி பிசகியவர்களாகவே நாம் கருதுகிறோம். (Last supper concept)

 

(எனது கல்லூரி நண்பர், பீட்டர் பொன்னுதுரை என்ற தற்போதைய கத்தோலிக்க பாதிரியாரிடம் தனிமையில் உரையாடும் போது பலநெறிகளும் நம் சமணத் துறவியருக்கான ஒழுக்கமாய் இருந்தும், உறுதியாக ஏற்று கடைபிடிக்காமல் இரண்டாயிரம் ஆண்டுகளில் பலநெறிகளில் உருமாற்றம்பெற்று அடிப்படை ஒழுக்கத்திலிருந்து விலகிச் சென்றுள்ளனர் என்பது புரிந்தது.)

 

அதே போன்று பெளத்த தரிசனத்தில் மஹாயான பிரிவில் பிக்குகள், பிக்குனிகள் என்ற துறவியர்கள் இப்போதும் உள்ளனர். பௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும். பிக்குணிகளுக்கென தனி மடாலயங்கள் உள்ளன.

 

இருப்பினும் இவர்களது சங்கத்திலும் காமஇச்சையை முழுவதுமாக தவிர்த்தாலும், காமத்தை முழுவதுமாக விலக்கவில்லை என்பதே காலத்தின் கோலம் என்றே கருத வேண்டியுள்ளது. புலால் உண்பதையும், காமம் மேலோங்கும் பொது ஆண் / பெண் உறவிலும் ஈடுபடலாம் என்று விதியுள்ளதாகவே கூறிக்கொள்கிறார்கள். (இவர்கள் உணவில் அதிக மாமிசம் சேர்ப்பதால் அத்துறவியர் சங்கத்திற்கான ஆண்டுக்கான மான்யத் தொகையை இலங்கை ராஜபக்சே அரசு குறைத்துள்ளது.)

 

யோகக்கலையும்; இக்காமம் குண்டலினிசக்தியாக கருதப்பட்டு மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை ஏழு நிலைக்கு உயிர்ச்சக்தியாக உயரும் போது பேரானந்த நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுகிறது. இதனை பயிற்சி அளிப்பதாக பல தியானக்கூடங்கள் செயல்பட்டு வருவதை காணலாம். அவ்வாறு காணும் போது காமம் கட்டுக்குள் இருந்தால் ஆன்மீக உயர்விற்கு பயன்படும் என்பதை நாம் உள்ளார்ந்த அர்த்தமாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

 

அவ்வாறான வழிகாட்டுதல் பலவற்றைக் காணும் போது காம உணர்ச்சி கர்மபலனிக்காமல் இயற்கையின் விதிப்படி காரிய பலன் மட்டுமே அளித்தால் இல்லறம் சிறக்கும். அவ்வாறாக மட்டுமின்றி கர்ம, காரிய பலனில்லாத ஒருவரால் மட்டுமே முழுப்பிரம்மச்சர்யத்தை எட்ட இயலும், உபவாசத்தை பெற இயலும் என்பதாக சமணத்துறவறநெறி கூறுகிறது. அதனால் உடலையும், வயிற்றையும் பட்டினி போடும் பலவகைப் பயிற்சிகளை துறவறச் சங்கங்களில் அளிக்கின்றனர் என்பதே நிதர்சனம்.

 

அவ்வகையில் காணும்போது எவர் ஒருவர் காமத்தை வெல்ல, இளமையில் அளவுடனும் (பிறன்மனை விளையாமை), முதுமையில் முழுவதுமாக விலக்கி வாழவேண்டும் என்பது புரிதலாகிறது. அவ்வகையில் காப்பிய நாயகர்களான நாககுமாரனும், சீவகநம்பியும் அரசகுலத்தில் உதித்த உத்தமஇல்லறத்தானாகவும், முதுமையில் முழுக்காமத்தையும் தியாகம் செய்ய எண்ணி அரசவாழ்வின் சுகபோகங்களை துறந்து ஜினதீட்சை ஏற்று உத்தமதுறவியாக திகழ்ந்ததின் பலனாக அப்பிறவியிலேயே மோட்ச சுகத்தைப் பெற்றனர் என்பதாக காப்பியங்கள் கூறுகின்றனர்.

 

இக்காப்பியத்தில் வரும் பிஹிதாஸ்வர முனிவர் நாககுமாரனுக்கு தனது தவசக்தியின் வழியே பெற்ற அவதிஞானத்தால் அறிந்து அவனுக்கு மோட்சம் பெறும் வாய்ப்புள்ளதை ஆத்மார்த்தமாக தெரிவித்து அவன் வாழ்க்கையை மோட்ச மார்க்கப் பயணத்திற்கு திசை திருப்புகிறார். அவ்வாறே தீர்த்தங்கரர் சரிதத்திலும் தேவத்துறவியர்களான லெளகாந்திக தேவர்களும் ஜினர்களை மடைமாற்றம் செய்து தீட்சை ஏற்கச் செய்வதாகவே புராணங்கள் கூறுகின்றன.

 

ஸ்ரீ பிஹிதாஸ்வரரும் ஜினமுனிவர், மூலநூலாசிரியர் ஸ்ரீமல்லிசேனசூரியும் முனிவராய் இருந்தாலும் உத்தம ஸ்ராவகநிலையிலுள்ள பவ்ய ஜீவனான நாககுமாரனுக்கு தக்க சமயத்தில் அறிவுறுத்தி அவனது காதிகர்மங்களையும், அகாதிவினைகளையும் விலக்கச் செய்து மோட்சப்பிராப்திக்கும் வழிவகுத்தனர் என்பதை ஆராய்ந்தால்;

 

 தீர்த்தங்கரரும், காப்பியர் நாயகர்களும் ஸ்ராவக நிலையிலிருந்து துறவறநெறியை ஏற்று விடுதலைப் பெற்றனர் என்ற தெளிவினை ஏற்றால்  எல்லா ஸ்ராவர்களுமே உத்தமஸ்ராவக நிலையை எய்தி துறவியருக்கு முன்னமே மோட்சத்தை பெற இயலும் என்பதை புரிந்து கொள்வதே அனைவர் வாழ்விலும் உயர்வைத்தரும் என்பதே இப்புராண காப்பியங்கள் தரும் வழிகாட்டுதலாகும்.


இல்லறம் தழுவிய காப்பியங்களை சமண முனிவர்கள் சங்க இலக்கியங்கள் மூலமாக பல எடுத்தியம்பியுள்ளார்கள். பல காவியங்கள், நீதிநூல்கள், நிகண்டுகள் சமணத்துறவியர்களால் தமிழுக்கு பெயரிடப்படாமலே அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சுவடிகள் அழிந்து பட்டிருக்க வேண்டும் என்றஉண்மையை, சூறாவளிகளை எதிர்த்து தாக்கு பிடித்து எஞ்சிய இந்தக் காப்பியங்களே தெரிவிக்கின்றன. தமிழக குகைகளில் எல்லாம் சமண, பெளத்த துறவியர்களே வாழ்ந்துள்ளர் என்ற உண்மையை இன்றைய ஆராய்ச்சியாளர்களும், நாளும் புதிய தடையங்களை கண்டறிந்து தெரியப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

 

அவ்வாறான தமிழ்ப்பாரம்பர்ய மிக்க இச்சமணத்தின் சில எச்ச, மிச்சங்களே இக்காலத்தில் நம் கையில் பொக்கிஷமாக உள்ளவை. அவற்றை நாம் பாதுகாப்பது நமது கடமை. இல்லாவிடில் நமது பண்பாடு மொத்தமும் தொலைந்து மேற்கத்திய கலாச்சாரம் தமிழகத்தில் முழுவதுமாய் புரையோடி நிற்கும் அபாயமும் உள்ளது.

 

ஏன் தொன்மையை காப்பாற்ற வேண்டும்?

அவசியமானதே? இந்தக் கேள்வி பலரிடமும்ம் தோன்ற வாய்ப்புள்ளது.

 

இவ்வாறு காப்பாற்றப்படுவதினால் என்ன நன்மை தீமை என்பதை ஊடகங்கள் பலவும் தெரிவித்துத்தான் வருகின்றன. இருப்பினும் தொன்மை என்பது நமது பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை அடையாளமிட்டுக் காப்பது.

 

பண்பாடு என்பது வேறு, நாகரீகம் என்பது வேறு.

பண்பாடு உள்ளார்ந்த ஒன்று, நாகரீகம் எனபது புறம் சார்ந்த ஒன்று.

Life style என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது வாழ்வு+நாகரீகம் என்பது. வாழ்வியல் பண்பாடே வாழ்வாக இருத்தல் நலம். நாகரீகம் மாற்றத்துக்கு ஆளானதே. போக்குவரத்து துவங்கியபோதே இந்த மாற்றத்திற்கு பிரதேசங்கள் ஆட்படுத்தப்பட்டன. இன்று தொலைத்தொடர்புச் சாதனங்கள், ஊடகங்களின் மாயைகளை முற்றிலுமாக நாகரீகத்தை ஒவ்வொரு நிமிடத்திற்குமாக ஊசிமூலம் உள்ளே செலுத்திக் கொண்டிருக்கிறது.

 

மாற்று பிரதேச நாகரீகம் ஒருகாலத்தில் பண்பாட்டை கபளீகரம் செய்து விடும் அபாயமுள்ளது.

 

 

வாழ்வியல் இங்குள்ள நிலப்பரப்பில், இங்குள்ள காற்று, மழை, உஷ்ணமாறுபாட்டில் வாழும் மனிதர்களுக்கிடையே எப்படிப்பட்ட வாழ்வியல் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிவுறுத்தி, நடைமுறைப்படுத்துவது. மொழி அதில் பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ் மொழி இப்பிரதேசத்தின் தொன்மையான மொழி. அவ்வழியில் அறிவைப் பெற்று நலவாழ்வை நடத்திய நமது முன்னோர்களின் வழிகாட்டல் அனைத்தும் இங்கு வாழ்பவர்களுக்குத்தான் பொருத்தமாய் அமைந்திருக்கும். அவை அமெரிக்கா, கனடா, சைனா முற்றுலுமாக, ஏன் வடமாநிலங்களுக்குக் கூட, பொருந்துவது எக்காலத்திலும் முழுமை பெறாது. வியாபார நோக்கில் பொருந்துவதாய் தெரிவிப்பது சமுக சீர்கேட்டையே அழித்துக் கொண்டிருக்கும் என்பதே நிதர்சனம்.

 

மேலைநாட்டு, வடநாட்டு மொழி அங்குள்ள பிரதேசத்திற்கே சரியான, பொருத்தமான வாழ்வியல் கருத்துக்களை தெரிவிக்கும் தொன்மையான நூல்களை அளிக்கும். அவ்வாறிருக்க இச்சூழலுக்கேற்ற வாழ்வியலை இதுபோன்ற தமிழ்க் காப்பியங்கள், நீதிநூல்கள், அறவழிஆக்கங்கள் அனைத்தும் நம் பிரதேசத்திற்கே நூறுசதமும் பொருத்தமாய் அமைந்திருப்பதால் நாம் சற்றே பிறமொழிக் கலப்படத்தில் துன்புறும் நிலை உயரும்போது இத்தொன்மையே நம்மை மீட்டெடுத்து இன்பத்தை அளிக்க வல்லவை.

வடமாநிலத்திலிருந்து வந்த நம் முனிவர்கள் கூட சமஸ்கிரத மொழியைக் கற்றுதந்து நம்மை முற்றிலுமாக மாற்ற முயலவில்லை. அது பல தலைமுறைக் காலத்தை விலையாக கேட்கும் என்பதால். அவர்கள் காலத்தில் ஜினவறக்கருத்துக்களை இங்குள்ள தமிழ் மொழியில் வழங்கவே முடிவு செய்து, இவ்வட்டார மொழியை ஐயமற கற்று நமக்கு தமிழ்க்காப்பியங்கள் வழியே அரச நீதி, சமூகநீதி, குடும்ப ஒழுக்கம் வரை அறத்தை புகுத்தி வரிகளை அளித்துள்ளார்கள். அவர்கள் இப்பிரதேச பண்பாட்டிற்கு மாற்றம் பெற மொழியை அறிந்து, இங்குள்ள நாகரீகத்தை அறிந்து  பின்னரே இங்குள்ள தமிழ்மொழியில் ஜினவறக்கருத்துகளை வழங்கியுள்ளார்கள். அதுவே மிகப் பொருத்தமாக இன்றளவும் உள்ளதை அனைவருமே அறிவீர்கள்.

 

நாகரீக ஊடுருவல்…

 

நாகரீகத்தில் கலப்படம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொண்டு வருவதை முன்தலைமுறையினரின் முனகலை கேட்டறிந்தால் புலப்படும். ஆனால் பண்பாட்டை இழந்து விட்டால் நாம் இங்கு வாழ தகுதியற்றவர்களாகி விடுவோம். பின்னர் எந்த மொழி நமக்கு வாழ்வளிக்கிறதோ, எந்த மண், காற்று போன்ற சூழல் காப்பாற்றுகின்றதோ அங்குள்ள பண்பாட்டிற்கு நாம் மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அவ்வாறான மாற்றத்தில் முழுமை பெற பலதலைமுறைக் காலஇடைவெளியை சந்திக்கும் அபாயமும் உள்ளது.

 

உதாரணமாக இன்றைய மேற்கத்திய நாகரீகத்தில் மூழ்கியவர்கள் தான் தனது என்ற குறுகிய வட்டக் கண்ணோட்டத்தில் வாழ்பவர்கள். தானமளிக்க தயங்கமாட்டார்கள். சமூகத்தை உயர்த்த எவ்வளவு பணமும், பொருளும் தர தயங்கமாட்டார்கள். ஆனால் அதை அரசோ, தனி தன்னார்வ தொண்டு நிறுவனமோ செய்தல் அவசியம் என்ற நோக்கில் வாழ எத்தனிப்பவர்கள். அங்கு அவ்வாறான பண்பாட்டுடனான கலாச்சாரம் அங்குள்ள சூழலுக்கு ஒத்துள்ளது.

 

அதனால் அதே பண்பாட்டை நோக்கி இங்குள்ளவர்கள் செல்வதால் முதியோர்களுக்கான, குழந்தைகளுக்கான செலவுகளை தாங்கும் வருமானம் இருந்தாலும் சேவையாக செய்வதில் கடினமாகக் கருதும் நிலை தொடர்வதை காணலாம்.  இவர்களை அரசோ, அல்லது தொண்டு நிறுவனமோ பாதுகாக்க நாங்கள் பொருளாக வழங்க உள்ளோம், மாறாக நாங்கள் கரசேவை செய்ய தயாராய் இல்லை என்ற நிலைப்பாடு இறக்குமதியாகியுள்ளதை நாம் தினம் தினம் ஊடகத்தின் வாயிலாக காண்கிறோம்.

 

பெற்றோர்கள், முதியோர்களுக்கான சேவையை முற்றிலுமாக தவிர்க்கவே இன்றைய தலைமுறை விரும்புகிறது. குழந்தைகளுக்கான சேவையும் ஒரிரண்டு என்றளவில் மட்டுமே தரஇயலும் என்ற சிரமத்துடன் வாழ்கின்றார்கள்.

தனது பெற்றோர்களையும், வீட்டு முதியோர்களையும், உற்றார் உறவினர்களையும் சமூகத்தின் ஒரு அங்கத்தினர்களாகவே கருதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். அதில் அரசே கவனம் ஏற்கவேண்டும் என்றளவில் வாக்களிக்கும் நிலையில் தான் இன்றைய இளைஞர்கள் பலரது மனநிலையில் மாசுபடர்ந்துள்ளதே உள்ளங்கை நெல்லிக்கனி.

 

அதற்கான காரணம் மேற்கத்திய கலாச்சாரம், நாகரீகமும் தான். என்றைக்கு மொழியே உள்ளே இறங்கியதோ அன்றிலிருந்து இந்த இழிநிலை துவங்கிவிட்டது. தற்போது பண்பாடு என்ற உள்ளார்ந்த இலக்கணமும் மாசுபடத்தொடங்கி விட்டது. அவ்வாறான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் தள்ளப்படுவதற்குள் தொன்மையை மிட்டு அப்போதுள்ள பண்பாட்டை, உள்ளார்ந்த அறவுணர்வை வீழித்தெழச்செய்வதே இப்போதைய போராட்டமாக கருதவேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

 

அவ்வாறான தமிழக பாரம்பர்ய, முன்னோடியான பண்பாட்டை முழுவதுமாக இழந்தால் நம் வாரிசுகள் தமிழகத்தை விட்டு எந்த கலாச்சாரம், நாகரீகம் இறக்குமதியானதோ அப்பிரதேசத்தை நோக்கி சென்று குடியேறிவிடுவர் என்பதே நிதர்சனம். ஆனால் மூடத்தனமான அவர்களது செயல் அங்குள்ள பண்பாட்டை ஏற்க இயலாமல் திண்டாடுவதை காணத்தான் போகிறது எதிர்காலம்.  

 

அவ்வாறான பிரதேச ஊடுருவல் இடைவெளிக்கால தலைமுறைகள் மொத்தமும் முதுமையில் பெரும் துன்பத்தை அடுத்தடுத்து அளித்துக் கொண்டே வரும் என்பதே உண்மை. ஆனால் நாளை நாமும் முதுமையை எட்டிவிடுவோம், முன்பு ஐந்தாறு உடன்பிறப்புகளுடன் தான் ஒன்றாக இருந்தோம் என்பதை எண்ணி அவர்களது கடைசிக்காலத்தில் நொந்து தான் அந்திம முடிவைத்தேடுவர் என்பதே இம்மாறுதல் கலாச்சாரத்தின் சாபக்கேடாகும்.

 

அதனால் இதுபோன்ற தமிழ்க்காப்பியங்கள் இருப்பின் என்றைக்கு வேண்டுமானாலும் நாம் நமது பூர்வீக பண்பாட்டிற்கு திசைதிரும்பிவிடலாம். இல்லாவிடில் திரிசங்கு போன்ற நிலைப்பாட்டில் அனலில் சிக்கிய புழுவைப்போல காலமுழுவதும் நரகவேதனையைத்தான் வரும் பலதலைமுறையினர் கழிக்க நேரிடும்.

 

பூமிதிலகம் என்ற ஜினாலயத்தில் வணங்கும் போது இரம்மியன் என்ற வேடனைச் சந்திக்கிறான். அவன் வேண்டுகோளுக்கிணங்க வித்தியாதரனிடமிருந்த அவனது காதலியை மீட்டு அவனிடம் நாககுமாரன் ஒப்படைக்கிறான் என்பதான நிகழ்வை படித்து விட்டு ஒரு அன்பர் வித்தியாதரர்கள் தேவர்களா என்ற வினாவை எழுப்பியிருந்தார். எனக்கும் இந்த ஐயம் முன்பு இருந்தது. சமண அண்டவியலைப் படித்த பின்னர் விபரங்கள் தெரிந்தது.

 

இதே போன்று சீவகசிந்தாமணி காவியத்திலும் காந்தர்வதத்தை என்னும் வித்தியாதர லோகத்து அழகிய மங்கையை யாழிசையில் வென்று ஜீவேந்திரனும் மணமுடித்ததாக திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார். அந்த நாட்டு மன்னன் கழுலவேகன் என்ற வணிகனிடம், தனது மகளை இங்குள்ள ஒரு வீரனே திருமணம் செய்யப்போவதாக நிமித்திகன் தெரிவித்ததாகச் கூறி, ஒப்படைத்துச் சென்றதாக குறிப்பும் தருகிறார்.

 

------

 

வித்தியாதரர்கள் மானுடர்களே தேவர்கள் அல்ல. ஆனால் பல்வேறு வித்தைகளைக் கற்றவர்கள். விஜயார்த்த மலையின் மறுபுறத்தில் உள்ள நாடான வித்தியாதரலோகம் என்னும் இப்பிரதேசத்தில் வாழும் இவர்கள் போர்க்கலையிலும், மாய வித்தைகள் பலவும் கற்றவர்கள் என்பதாக மூவுலக வர்ணனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஓளதாரிக, வைக்ரீயக, ஆஹாரக, தைஜச, கார்மண சரீரம் என ஐந்து வகை உடலமைப்புகளை கொண்டவை ஜீவராசிகள் என்கிறார் பகவான். அதில் ஓளதாரிக சரீரம் மனிதனுக்கும்; வைக்ரீயக சரீரம் தேவ, நாரகியர்களுக்கானது. திருமணம் என்பது ஒரேவகை உடல்களுக்கானதே யன்றி இரு சரீரத்திற்கானதல்ல. (மனிதனும் விலங்கினமும் திருமணம் செய்ய தகுதியானவையல்ல.)  ஓரே வகை சரீர அமைப்புக்களே இனவிருத்தி செய்யும் தகுதியைப் பெற்றவை. அதுவே சரியாய் அமையும் என்ற அறிவியல் உண்மையை அப்போதே சமணர்கள் அறிந்து குறிப்பிட்டுள்ளனர். இந்த குளறுபடிகள் எவையும் அறிவிற் சிறந்த சமணஅறிஞர்களிடத்தில் இல்லை என்பதே பெருமைக்குரிய விஷயம்.

 

 ஓளதாரிக சரீரத்தை உள்ளவர்கள் அதே சரீரம் உள்ள எதிர்பாலினத்தையே திருமணம் செய்து கொள்ள இயலும். ஆனால் பிற இதிகாசங்களில் வைக்ரீயக எனும் தேவசரீரத்துடன் இணைந்த மானுட பெண்களுக்கு பிறந்த பல கதாப்பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

(இப்பிழைகளை எவரும் கண்டு கொள்ளவதே இல்லை. கோவில் வேறு கட்டி கும்பாபிஷேகம் செய்து வணங்கவும் செய்கிறோம். கேட்டால் அது இதிகாசம் தேவர்களே இயற்றியது, எழுதியது என்றும் பதிலளிப்பார்கள். தேவ மற்றும் ரிஷிப்பிண்டம் இராத்தங்காது போன்ற முதுமொழிகளும் வழக்கத்தில் உள்ளன. அதுபோன்ற தவறுகள் நமது தமிழ் இலக்கியங்களில் இல்லை என்பதே உண்மை.)

 

தேவர்களுக்கு தெரிந்த பல மாயா வித்தைகளை அறிந்தவர்கள் வித்தியாதர்கள் என்பதாக குறிப்புகள் உள்ளன. அதுபோன்ற வித்தியாதரர்களையே (அசுரர்களுக்கிணையாக) சமண மஹாபாரதம் தெரிவிக்கிறது. ராவண, கும்பகர்ணர்கள் வித்தியாதர மானுடர்களே என்பதை அறியவும்.

 

அவர்களையும் வென்று சக்கரவர்த்தியானவர்களே ரிஷபகிரியில் தனது பெயரைப் பொறித்ததாக வரலாறு கூறுகிறது. பரதச் சக்கரவர்த்தி சரிதத்தில் இக்குறிப்புள்ளது. அவருக்கு தான் மட்டுமே ஷட்கண்டத்தையும் சக்ராயுதம் கொண்டு வென்று தன கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக ஒரு செருக்கு இருந்துள்ளது.

 

அவ்வேளையில் அந்த ரிஷபகிரியில் தனது பெயரை பொறிக்கச் சென்றபோது கல்வெட்டுக்கான வெற்றிடமே அந்த மலையில் இல்லை. அவ்வளவு சக்கரவர்த்திகள் முன் சகாப்தத்தில் இதே போன்ற சாதனையை படைத்து பெயரை கல்வெட்டாக பதித்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. தனது நாமத்தை பொறிப்பதற்கு முன்பிருந்த ஒரு சக்கரவத்தியின் பெயரை நீக்கினாலன்றி இடம்பெயரச்செய்ய இயலாது என்பதையுணர்கிறார்.

 

 

 

அதனால் இந்த சக்ரவர்த்தி என்ற பெருமை, புகழ் எனக்கு மட்டுமே தனித்துவமான ஒன்றல்ல. இச்சாதனையை என் முன்னோர்கள் பலர் நிகழ்த்தியிருக்கிறார் என்றுணர்ந்த போது மனதில் உள்ள மான கஷாயம் விலகியதாக அவரது சரிதம் உரைக்கிறது. இந்த வித்தியாதரர்களையும் வென்ற பின்னர் நடந்த நிகழ்வாக கூறப்பட்டுள்ளது.

 

இல்லறத்தில் இருப்போர் எங்கு சென்றாலும் அவ்விடத்திலோ அல்லது அதன் அருகிலோ ஜினாலயம் உள்ளதா என்றறிந்து தவறாது அங்கு சென்று தினம் வழிபடுதல் வேண்டும் என்பதை கடமையாக ஜினதர்மம் கருதுகிறது.

பகவானின் திவ்ய தரிசனம் அவரது திவ்யமொழிகளான அறவுரைக்கருத்துக்கள் நினைவுப்பதிவுகளா யிருந்து அவ்வப்போது தூண்டச்செய்து சிந்தையில் படிந்துள்ள தீயஉணர்வுகளை தூய்மைச் செய்யவே செய்யும் என்பதே பேருண்மை. பின்னரே அன்றாட வாழ்வைத் துவக்கும் போது அஹிம்சை நெறியும், மிகுபொருள் விரும்பாமைத் தத்துவமும் அன்றைய கடமைகளை ஆற்றும் போது விழிப்புணர்வாய் முன்னின்று வழிநடத்தும். அவ்வாறான வாழ்வியலே நல்லொழுக்க தவநெறியாகும். அதுவே வாழ்வனைத்திற்கும் பாதுகாப்பாய் செயல்பட்டு நாம் நற்குணக்கோட்டையாய் உறுதியுடன் வாழ்ந்து உயர வழிவகுக்கும்.

 

கோபுர தரிசனமும், ஆலயம் திறந்திருந்தால் மூலவர் தரிசனமும், கதைவடைத்த வேளையில் மானஸ்தம்பத்திலோ, ராஜகோபுரத்திலோ உள்ள ஜினபிம்ப தரிசனமும் நித்தம் அவசியமாகும். அன்றாடக் கிரியைகளில் முதன்மையாகக் கருதப்படுகிறது. பூசனை, அர்ச்சனை, துதிப்பாடல்கள் அதற்கு உறுதுணையாய் நிற்பவை. இவையனைத்தும் தூயசிந்தனையை, விசுத்திபாவனையை மனதில் நிலைநிறுத்துபவை.

 

இந்த உடல் உயர்ந்த கணினியைப்போன்றுதான் உருவாக்கம் பெற்றது. அதனால் தான் மனித அறிவால் உலகியல் விஞ்ஞானத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி யடைந்து வருகிறது. ஐம்புலனுக்கேற்ற சாதனங்களை, கட்டமைப்புகளை வடிவமைப்பது தான் இந்த மானுடவியலில் அடங்கியுள்ள தத்துவம். வளர்ச்சி என்பதே மாற்றத்தை தோற்றுவித்துக் கொண்டே தான் இருக்கும். இந்த மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே பகவான் உரைக்கும் தத்துவங்கள்.

 

இக்காலத்தில் பிற உயிர்களக்கு விழையும் துன்பத்தை அறியாது சாதனங்களை படைத்து இவனும் பிறஜீவராசிகளையும் துன்பத்தில் ஆழ்த்தி வருகிறான் மனிதன். அதனால் உலகையே மாசுபடச் செய்கிறான். அதற்கு காரணம் மனதில் தூயசிந்தனை அற்ற நிலையே. அந்த விசுத்திபாவனையை எட்டவே முன்னோர்கள் வகுத்த ஆன்மீகத்தத்துவங்கள், வாழ்வியல் முறைகள் அனைத்தும் நமக்கு அளித்துள்ளார்கள்.

 

அதனால்..

இவ்வுடலை வைத்துத்தான் உலகத்தில் அத்தனை கட்டுமானங்களும் வாஸ்துவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதில் அஹிம்சை வழியில் வந்த வாஸ்துவே ஜினவறம் தழுவியது . அதன் கட்டமைப்பு உடற்கட்டமைப்பை ஒத்து இருப்பதால் அனைத்தும் ஒருங்கிணைந்து சிக்கலை குறைத்து வாழ்வில் அமைதியைத் தரும். அந்தளவில் மனிதனுடைய ஆற்றலை முழுவதுமாக உபயோகித்து செயலாற்றும் திறமையை அவன் உடற்கட்டமைப்பை ஒத்த கணிப்பொறிகள் செவ்வனே செயலாற்றுகின்றன. ஆனால் அது போன்ற சாதனங்களை கையாளும் போது அறத்தன்மை குறைவதால் மனித இனமே அல்லலுறுகின்றன.

இக்கருவிகளனைத்தும் இருபுறம் கூர்மையுள்ளவை. கையாள்வதில் கவனமில்லை எனின் கலைநுணுக்கமின்றி காயப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். ஊறுகள் விளையா சிறந்த கையாளும் திறமையை, செயல்பாட்டில் பாதுகாப்பை, எல்லையை வகுத்து தந்தவர்கள் நமது ஜினர் போன்ற ஞானிகள் ஆவர். அதுவே அறமாக, அதன் வழி சிந்தனைகளாக, அவர்களது திவ்யமொழி வழியே அளிக்கப்பட்டுள்ளன.  அவ்வழியை நாம் புரிந்து நடப்பதற்கே அவர்களுக்கு திருக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் கட்டுமானமே மனிதனை ஒத்த  கனபரிமாணம் ஆகும். அதன் சாஸ்திரம் பற்றி கோவில்கள் என்ற முன் தொடரில் பகிர்ந்து கொண்டோம். (படித்திருப்பீர்கள்…!?)

 

அவ்வாறான வாழ்வியலுக்கு, உள்ளார்ந்த வழிகாட்டுதலுக்கான கட்டுமானமே கோவில்கள். சமண தரிசனத்தில் பிறந்து வளர்ந்த நமக்கு ஜினாலயமே உடல் இணக்கம் பெறுபவையாக உருவாக்கப்பட்டவை. அதன் பயன்பாடுகள் புறத்தோற்றத்தில் அடையாளப்படுத்த முடியாதவை. எவ்வாறு கணிப்பொறியின் செயலாக்கம், வழிமுறைகள் வெளித்தோற்றில் தென்படுவதில்லையோ அதே போன்று பயன்பாட்டில் முன்னிற்பவை ஜினாலயங்கள் அனைத்தும். அங்கு தினமும் சென்று தரிசனம் செய்வதே கிரியை என்னும் ஆன்மீகத்தில் முதல்நிலை அணுகுமுறை (யாகும்).

 

மனத்தூய்மையில் உயர்வு பெற்றால் அடுத்து சரியை என்னும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவோம். மூலவர் உருவம் அவரது பாவனைகள் நம் சிந்தனையை வெளியேற்றி நம் ஆளுமையை தகர்த்து அமர்ந்து விடுவதே சரியை நிலையாகும். அதுவரை நமக்கு ஜினாலய தரிசனம் அவசியமாகிறது.

 

மனத்தூய்மை பெற்ற பின்னரே தர்ம தியானம் தானாகவே உருவாகும். நகரமோ, வனமோ இரண்டுமே ஒன்றான சூழலாக தோன்றும் மனோநிலை. மனிதனோ, விலங்கோ, பறவையோ, பூச்சியோ, புழுவோ, உயிருள்ளதோ, உயிரற்றதோ என்ற வேறுபாடில்லாத சமநிலை மனோபாவம், சமதாபாவம்..  அதன் பின்னரே சுக்ல (தூயத்) தியானம், அடுத்து மோட்சம் என்ற இறுதி நிலை. இவற்றுக்கு முதற்படி இவ்வாலயங்களே என்பதை உணர்ந்தவன் இந்த நாககுமாரன் என்பதையே அவன் எவ்விடத்தில் இருந்தாலும் தினமும் ஜினாலயம் அருகிலுள்ள சென்று பூசனையும், அர்ச்சனையும் செய்தான் என்பதாக நூலாசிரியர், முனிவர் குறிப்பிடுகிறார். அவ்வழியை பின்பற்றி நடந்ததினால உத்தமஜீவனானவன் நாககுமாரன். அவ்வாறு தன் துன்பச் சிந்தனைகளான ஆர்த்த, ரெளத்ர தியானத்தை விலக்கி வாழ்ந்தவன் நாககுமாரன். அதனால் கொல்லாமை அறம் என்ற, பிறருக்கு துன்பம் விழைக்காத முதல்நிலை அஹிம்சை அறத்தில் பயணித்தவன்.  

 

அதுமட்டுமல்லாது பிறரது துன்பத்தை போக்கும் அடுத்த சேவை மனப்பான்மையை கொண்டு ஒழுகியவன் என்பதையும் இக்காப்பிய வெற்றி நிகழ்வுகளே நமக்கு தெரிவிக்கின்றன. தனது துன்பத்தை பிரார்த்தனை வழியே ஆர்த்த, ரெளத்ர பாவனைகளாக இறைவனிடத்தில் வெளிப்படுத்தி விடைதேடுபவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஜினாலய்த்தில் அவனுக்கு  கிடைக்கிறது.

 

அங்கு தரிசிக்க வரும் பக்தர்களின் மனக்குறையை கேள்வியுற்று அதனைத்  தீர்க்க முடிவு செய்து, வெற்றியும் கொண்டான் என்றே இக்காப்பியம் எடுத்துரைக்கிறது. அதனால் நாககுமாரன் அஹிம்சை அறத்தை முழுமையாக ஏற்று வாழ்வனைத்தும் ஒழுகினான். அதனால் அவன் உத்தமஜீவனாக இவ்வியற்கை ஏற்று அவனுக்கு விடுதலைபேற்றை யளிக்கிறது.

 

காமத்தை இச்சையின்றி கையாண்டவன் இக்காப்பிய நாயகனாவான். அபலைகளின் வாழ்விற்கு அடைக்கலே பிரதானம் என்ற சிந்தையில் செயலாற்றியவன். ஐநூற்று பத்தொன்பரில் ஒரு மங்கையைத் தவிர மற்றவரின் துயரைத்தீர்த்தும், சிலரது செருக்கை விலக்கியும் மணம் செய்து கொண்டதாகவே இக்காப்பியம் கூறுகிறது.

 

இவ்வாறான கதையமைப்புகள் நம் வாழ்விலும் அஹிம்சை அறத்தை யேற்று துன்பம் இழைக்காமலும், துன்பத்தை போக்க உதவிடும் ஜீவனாக மாறிடும் மானிட ஜன்மமே விடுதலையைப் பெறும் என்ற இலக்கணம் தவறாது,  தெள்ளத்தெளிவான நிகழ்வுகளை இக்காப்பியம் எடுத்தியம்புகிறது.

 

மேலும் நாம் தொலைத்துவிட்ட பாரம்பர்யம், பண்புகளை மீட்டெடுக்க முழுஅளவில் துணைபுரியும் தொன்மையான தமிழாக்கங்களில் முக்கிய சிறுங்காப்பிய இலக்கணத்தில் வரிவடிவம் பெற்றது. அதனால் நாககுமார காப்பியம் உயர்வான தமிழ் நூலாகவே போற்றப்படும். மேலும் இது என்றும் அனைவர் வாழ்வில் வழிகாட்டுதலை அளித்து நிற்கும் ஜினவறப் பொக்கிஷமாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் ஏற்படுவதற்கில்லை.

 

முற்றும்.






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பாடப்படும் பொருள்

பாடல் #1

செந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செழுமணி மண்ட பத்துள்
இந்திர னினிதி னேத்து மேந்தரி யாச னத்தின்
அந்தமா யமர்ந்த கோவி னருள்புரி தீர்த்த காலங்
கொந்தல ராசன் நாக குமரனற் கதைவி ரிப்பாம்.

---------------------------------

செந்தளிர்ப் பிண்டியின் கீழ்ச் செழுமணி மண்டபத்து உள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்து அரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரி தீர்த்தகாலம்
கொந்தலராசன் நாககுமரன் நல்கதை விரிப்பாம்.

---------------------------------

சிவந்த தளிர்களுடன் கூடிய அசோக மரத்தின் கீழே, அழகிய மணிகளால் இழைக்கப்பட்டு வளப்பம் பொருந்திய அழகிய மண்டபத்தினுள், இந்திரன் இனிமையாய் துதிபாடி நிற்க, சிங்கங்கள் தாங்கிய அரியாசனத்தின் மீது அழகுற வீற்றிருக்கும் அருகப் பெருமானின் அருளுடன், அவரது திவ்யமொழியால் வெளிவந்த ஆகமங்களின் சந்தான காலத்தில் வாழ்ந்த, மணம் மிக்க கொத்தான பூக்களை அணிந்த அரசனாகிய நாக குமாரனின் புண்ணிய சரிதத்தை விவரித்துச் சொல்லுவோம்.  

*******************  

பாடல் #2

திங்கள் முந்நான்கு யோகந் தீவினை யரிய நிற்பர்
அங்கபூ வாதி நூலு ளரிப்பறத் தெளிந்த நெஞ்சிற்
தங்கிய கருணை யார்ந்த தவமுனி யவர்கள் சொன்ன
பொங்குநற் கவிக்க டறான் புகுந்துநீர்த் தெழுந்த தன்றே.

---------------------------------

திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பர்
அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அறத் தெளிந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள் சொன்ன
பொங்கு நல்கவிக்கடல் தான் புகுந்து நீர்த்து எழுந்தது அன்றே.

---------------------------------

பன்னிரண்டு மாதங்கள், மழை, வெயில், குளிர் பாராது,  தவ நிலையில் இடைவிடாது நின்று, தம் தீவினைகளைத் தம்மிடத்தின்றும் நீக்கி நிற்பவரும், அங்கம், பூர்வம் ஆகிய தொன்மையான மூலநூட்களை குற்றம் நீங்க கற்றுத் தெளிந்து நிறைந்தவரும், நெஞ்சத்தில் கருணை தன்மையுடையவர்களே தவ முனிவர்கள்.  இம் முனிவர்கள் சொன்ன அழகு நிறைந்த நல்ல கவிக்கடலிலே மூழ்கி, அக் கடல் நீரின் குளிர்ச்சியைப் பெற்று என் உள்ளம் மகிழ்ந்தது.

அங்கம், பூர்வம் – என்ற ஆகமங்கள், சமவ சரணம் எனும் அறங்கூறும் மன்றத்தில் அமர்ந்து இவ்வுலக ஜீவராசிகள் வாழ்வு உய்ய, விடுதலை பெறும் நோக்கத்துடன் திவ்யதொனியான திருமொழியாய் அருளப்பட்டு, கணதரர்கள் முதலான ஞானியரால் விளக்கப்பட்டு, கர்ணபரம்பரையாய் வழிவந்து பின்னாளில் யதியரசரான ஆச்சாரியர்களின் திருவருளால் நூல் வடிவம் பெற்றவை. அவை பன்னிரண்டு பகுப்புடைதாய்; 14 பூர்வத்துடன் அமைந்துள்ளவை.




*******************



இராசமாகிரிய நகரம்

பாடல் # 6

திசைகளெங் கெங்குஞ் செய்யாள் செறிந்தினி துறையு நாட்டுள்
இசையுநற் பாரி சாத வினமலர்க் காவுஞ் சூழ்ந்த
அசைவிலா வமர லோகத் ததுநிக ரான மண்ணுள்
இசையுலா நகர மிக்க விராசமா கிரிய மாமே.

---------------------------------

திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும் நாட்டுள்
இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்த
அசைவிலா அமர லோகத்து அதுநிகரான மண்ணுள்
இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே.

---------------------------------

    எல்லாத் திசைகளிலும் செல்வம் நிறைந்து கொழிப்பதால் மகிழ்ந்து வாழும் இயல்பினையுடையது அந்த மகத நாடு. பல்வகை இசைக்கருவிகளிலிருந்து வெளிப்படும் நாதமும், மணம் வீசும் பாரிசாத மலர்கள் நிறைந்த   பூங்காக்களும்   உடைய மகத நாட்டின் தலைநகராகிய இராசமாகிரியம்   நடுக்கமற்ற   தேவருலகத்திற்கு ஒப்பாக இப் பூமியுள் புகழ்பெற்ற தலைநகரமாக விளங்கியது.    

****************************

பாடல் # 7

கிடங்கரு கிஞ்சி யோங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத் திலங்கு மாடங் கதிர்மதி சூட்டி னாற்போல்
படங்கிடந் தல்கு லார்கள் பாடலோ டாட லாலே
இடங்கொண்ட வின்ப மும்ப ரிடத்தையு மெச்சு மன்றே.

---------------------------------

கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல்
படம்கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும் அன்றே.

---------------------------------

    அகழியின் அருகில் அரண் (மதில்சுவர்) மிகவும் உயர்ந்து நிற்பதால், விண்ணில் பொங்கி யெழும் மேகக் கூட்டங்களை அம் மதில்கள் தாங்கி நிற்கின்றன. செம்மையான பொற் கலசங்கள் வைக்கப் பெற்றதனால் மாட மாளிகைகள் விளக்கமுற்று இருந்தன.  அம்மாளிகைகளில் ஒளிமிக்க முழுநிலவை அணிந்தாற்போல திகழும்,  பாம்பின் படம் போன்ற அல்குலினையுடைய மகளிர் பாடலும் ஆடலும் நிகழ்த்தினர். ஆதலால், விரிந்து பரந்த இன்பங்கள் நிறைந்திருந்ததாலே அந்த நகரம் தேவருலகத்தையும் குறைபடச் செய்யும் இயல்பினதாய் இருந்தது.

கிடங்கு – அகழி; இஞ்சி – கோட்டை மதில்; கடங்கள் – கலசங்கள்; உம்பர் – தேவர்.

****************************

சிரேணிக மன்னனின் செங்கோலாட்சி

பாடல் # 8

பாரித்த தன்மை முன்னம் பாலித்தற் கைம்ம டங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை யெழுந்த மேகம்
வாரித்த திசைந்த ளிக்கும் வண்கையம் பொற்றிண் டோளான்
சீரித்த தலங்கல் மார்பன் சிரேணிக ராசனாமே.

--------------------------------- 

பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம்
வாரித்து அசைந்து இளிக்கும் வண்கைஅம்பொன்திண் தோளான்
சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே. 

--------------------------------- 

   முன்பு இவ்வுலகைத் தாங்கி அரசாண்ட ஆட்சியர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு சிறந்த ஆளுமையுடன் ஆட்சி செய்பவனும்; பொலிவு மிக்க மாலைகள் கட்டப் பெற்ற அழகிய பொன்மயமான குடையை உடையனாய்; மேகம் மழை பொழிந்தாற்போல் அவரவர் விரும்பும் பொருளை வாரி அளிக்கும் வள்ளல்தன்மை பொருந்திய கைகளையும்; சிவந்த வலிய தோளையும் அதில் அழகான மாலையும் அணிந்த மார்பையுடையோனாய் சிறப்புற விளங்கியவன், சிரேணிகராசன் என்னும் பெயருடைய அம்மன்னன்.           

****************************



பாடல் # 12

வனமிகு வதிச யங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்க ளேந்தி நன்னகர் புகுந்தி ராசன்
மனையது மதிற்க டந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்தி றைஞ்சி மாமுர சறைக வென்றான்.

---------------------------------

வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்கள் ஏந்தி நன்நகர் புகுந்துஇராசன்
மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான்.

-----------------------------------

    காட்டிலே நிகழ்ந்த இந்த அதிசய அறமண்டப உருவாக்கத்தை அந்த வனத்தைக் காவல் புரியும் வனபாலன் என்பான் கண்டு வியந்தான்.  அவன் தேன் சொட்டும் மலர்களை கைகளில் ஏந்திக் கொண்டு, அழகிய நகராகிய இராசமாகிரியம் புகுந்து, அரசனுடைய அரண்மனை மதில்களைக் கடந்து சென்று, அரசனை வணங்கி, நிகழ்ந்த அதிசயத்தைப் பற்றி கூறினான்.  உடனே அரசன் மனம் மகிழ்ந்து முனிவரை பக்திகொண்டு மனதால் துதித்தான்.  அவரை நேரில் கண்டு வணங்க எண்ணியதோடு, தான் புறப்படும் செய்தியை முரசறைந்து தெரிவிக்குமாறு கட்டளை பிறப்பித்தான்.

****************************      

மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்

பாடல் # 13

இடிமுர சார்ப்பக் கேட்டு மியம்பிய வத்தி னத்தின்
படுமத யானை தேர்மா வாள்நாற் படையுஞ் சூழக்
கடிமலர் சாந்து மேந்திக் காவலன் றேவி யோடுங்
கொடிநிரை பொன்னே யிற்குக் குழுவுடன் சென்ற வன்றே.

---------------------------------

இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின்
படுமத யானை தேர்மா வாள்நால் படையும் சூழக்
கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும்
கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே.

---------------------------------

இடி போன்று முழங்கிய முரசொலிக்குப் பின் அம்மங்கலச் செய்தியை அந்நாளில், அந்நகர மக்கள் கேட்டனர்.  வனபாலன் சொன்ன அறமன்றம் தோன்றியுள்ள வனத்தை நோக்கி, யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைச் சேனைகளும் புடை சூழ, மணம் மிக்க மலர்களையும் வாசனைக் குழம்புகளையும் ஏந்திக் கொண்டு அரசன் தன் தேவியுடன் வரவீரதேவர் வந்து தங்கியிருந்த அழகிய கொடிகள் நிறைந்த அறமன்றமாய் விளங்கும் சமவசரணத்தை நோக்கிச் சென்றான்.     

****************************

பாடல் # 14

பொன்னெயிற் குறுகிக் கைம்மாப் புரவல னிழிந்துட் புக்கு
நன்னிலத் ததிச யங்கள் நரபதி தேவி யர்க்குப்
பன்னுரை செய்து காட்டிப் பரமன்றன் கோயி றன்னை
இன்னியல் வலங்கொண் டெய்தி யீசனை யிறைஞ்சி னானே.

---------------------------------

பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்கு
நன்நிலத்து அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப்
பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில் தன்னை
இன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே.

---------------------------------

பொன் ரத்தினங்களால் இழைத்த அழகிய மதிலைச் சூழ்ந்த சமவசரண மண்டபத்தை அடைந்ததும், நாடு காக்கும் மன்னன் யானை மீது இருந்து இறங்கி உள்ளே பிரவேசித்தான்.  தன் பட்டத்தரசி சாலினிக்கு வரவீரநாதரின் புகழை கூறிக்கொண்டே, நடைபெறும் அதிசயம் பற்றி விளக்கி வந்தான். வர்த்தமான மகாவீரர் வீற்றிருந்த சமவசரணக் கோயிலை வலமாக சுற்றி வந்து முனிநிலை நீங்கி ஈசனான வரவீதநாதரைப் பணிந்து வணங்கினான்.   

***************************

பாடல் # 15

நிலமுறப் பணிந்தெ ழுந்து நிகரிலஞ் சினையின் முற்றிக்
கலனணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலிற் பொங்கி
நலமுறு தோத்தி ரங்கள் நாதன்றன் வதன நோக்கிப்
பலமன மின்றி யொன்றிப் பலதுதி செப்ப லுற்றான்.

---------------------------------

நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக்
கலன்அணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி
நலமுறு தோத்திரங்கள் நாதன்தன் வதனம் நோக்கிப்
பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான்.

---------------------------------

நிலத்தில் உடல் முழுவதும் படிந்தவாறு மன்னன் வீழ்ந்து வணங்கி எழுந்தான்.  ஒப்பற்ற அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட ஆபரணங்களை அணிந்த மார்பையுடைய மன்னன், காற்றால் மோதப்பட்டுப் பொங்கியெழும் கடல் அலைபோல மனவெழுச்சியுடன், ஸ்ரீமகாவிரருடைய திருமுகத்தை நோக்கிப் சஞ்சலம் விலகிய ஒருமையுள்ளத்தோடு துதிப்பாடல்கள் பல கூறி வணங்கலானான்.

***************************   





வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்

பாடல் # 16

பொறியொடுவல் வினைவென்ற புனித னீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போத னீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்னெயிலுண் மன்னியபுங் கவனு நீயே
அறவிபணி பணவரங்கத் தமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை யகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை யாளும்
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.

---------------------------------

பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
அறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை அகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும்
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. 

----------------------------------

ஐம்பொறிகளை அடக்கி கொடிய காதி வினைகளை முற்றிலும் வென்ற புனிதமானவன் நீதான். நான்கு பக்கங்களிலும் மலர்களுடைய பொலிவுபெற்ற அசோக மரத்தின் நிழலில் அமர்ந்து முழுதுணர்ஞானம் பெற்றவன் நீதான். சமவசரணத்தில், அடுக்கடுக்காய் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைமீது நான்கு விரல் (இடைவெளி) உயர்ந்தமர்ந்து  அறம் உரைக்கும்  இறைவன் நீதான். அறம்பொழிய அரங்கத்தின் நடுவே அமர்ந்தவன் நீயேதான். கரும்பு வில்லையும், ஐந்து மலரம்பையும் கொண்ட மன்மதனை விலகச் செய்தவன் நீதான். புகழ்செறிந்த சித்த உலகத்தை ஆட்சிபுரியும் ஸ்ரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தூயோன் நீதான். 

**** ****
சமண சித்தாந்தத்தில் உயிரும், உயிரற்ற ஒரு மெய்பொருளின் கூட்டே உயிரினமாக கூறப்படுகிறது. உயிர் அரூவப்பொருளாகும். அதற்குரிய தனித்துவ பண்பு பார்த்தல், அறிதல், ஒழுகுதல், ஆனந்தம் துய்த்தல் போன்றவை. உயிரற்ற பொருட்களில் புத்கலம், தன்மம், அதன்மம், அகாயம், காலம் என ஐந்தில் புத்கலம் எனும் ஜடப்பொருளுடன் இணைந்தே உயிரினமாகிறது. அச் சடப்பொருளுக்கு எவ்வகை ஞானமும், பார்க்கும் திறனும் இல்லை.

அது அரூவ மற்றும் உருவ பரமாணுக்கட்டமைப்பு சேர்ந்த வகைகளாய் எங்கும் நிறைந்துள்ளது. அதில் அரூவ நுண்ணியப்பொருட்களில் கார்மண மெனும் வர்கணைகளே மனித வேட்கையினால் ஆன்மப் பிரதேசத்தில் ஒட்டுண்ணிபோல் பந்தம் கொள்கிறது. அச்சூட்சும வர்கணைகளே வினைகள் எனப்படுகிறது. அவற்றில் எண் வகை வினைகளே ஒவ்வொரு ஜீவனின் பிறவிச் சுழற்சிக்கு காரணமாக அமைகின்றது. துன்பவர்கணை எனும் காதியில் நான்கு, துன்பம்அருகிய (இன்பம்)  அகாதியில் நான்கு எனும் இருவினை வகைகளாய் ஆன்மனுடன் பந்திக்கின்றன.

அதில் ஞானமறைப்பு வினை, தரிசனமறைப்பு வினை, மயக்குவினை, அந்தராயம் (முட்டுவினை) என்ற இந்நான்கு காதி வினைகளே துன்பக்காரணிகளாய் உயிர்ப்பொருளான ஆன்மாவுடன் இணைந்துள்ளன. இந்த காதி, அகாதி வினைகளே பிறவி சுழற்சிக்கு வித்திடுகின்றன.  இவற்றிலிருந்து விடுபட எண்ணி; உள்ளுணர்வு, சித்தம், சிந்தனை வசம் நல்லகாட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் எனும் மும்மணியை அதனதன் நிலையில் ஏற்று ஒழுகும் தவநெறியில் தீவிரம் காட்டும் புனிதர்களில் சிலர், துன்பக் காதிவினைகளை முற்றிலும் அழித்து விடுகின்றனர். அதனால் ஞான மறைப்பு முற்றிலுமாய் விலகி முழுதுணர்ஞானத்தை ஒளிரச் செய்வதால்; அறிவு, காட்சி, வீர்யம், சுகம் இவற்றில் உச்சநிலையைப் பெறுகின்றனர்.

அவர்களில் பிறருக்கு இதமாய் உபதேசிக்கும் ஆற்றல் மிக்கவர்களுக்கு, (தீர்த்தங்கரர் எனும் நாமவினை பந்திக்கப்பட்டவராவர்)  இந்திரன் சமவசரணம் என்னும் அறங்கூறும் மாயமண்டபத்தை உருவாக்குகிறான். அம்மண்டபத்தின் மையமேடையில் உள்ள ஆயிரத்தெட்டு இதழ்கள் விரிந்த தாமரை மலர்மிசை ஏகி; அம்முழுதுணர்ஞானி பிறவிஸச்சுழலில் இருந்து அனைத்து ஜீவராசிகளின் வாழ்வு உய்ய திவ்யமொழியில், அந்தந்த ஜீவராசி மொழியிலேயே, உபதேசிக்கிறார். அம்மேலான அருகதையுள்ளவர்களே அருகர், திர்த்தங்கரர் எனும் நற்பெயரை பெறுகிறார்.

அவ்வாறு அருகநிலை பெற்றவர் உலக உயிர்களை சமமாக கருதியவராவர். அதனால் அவ்வுயிர்கள் அனைத்தும் துன்பச் சுழலிலிருந்து விடுதலை பெற்று பிறவாநிலையை எய்தும் வழியை தம் ஆயுள் (வினை) முடியும் தருணம் வரை எடுத்துரைப்பர்.  பின்னர் ஆயுள் வினை தீரும் சமயத்தில் தம் ஆன்மனில் மலமாய் தங்கிவிட்ட அகாதி வகை ஆயுளுடன் சேர்ந்த நாமம், கோத்திரம், வேதனீயம் எனும் நான்கு வினைகளையும் களைந்து சித்த உலகம் எனும் நித்தியானந்த பிரதேசம் அடைந்து சித்தநிலையில் உறைவர்.

அவ்வாறான புனித கடவுளர்கள் இருபத்து நால்வர்களில் கடைசியாக பிறவிப்பிணியை வேரறுத்த தீர்த்தங்கரர் ஸ்ரீமகாவிரர் ஆவார். அவரது சமவசரணம் பற்றியே இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

--------------------------------- 

சமண சமயத்தில் கடவுளரின் படிநிலையை உணர்த்தும் வகையில் ஐங்குரவரை வணங்கும் வழக்கமே தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. அதில் உலக உயிர்களின் விடுதலைக்கு உதவிடும் பரமகுருவாய் திகழும் அருகர்களுக்கே முதல்நிலைத் துதியை வழங்கிப் போற்றுகின்றனர். அதன்பின்னரே சித்தர், ஆச்சார்யர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் என்ற படிநிலையில் வணக்கம் செலுத்தும் வழக்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு தனிக்கடவுளுக்கும் மூலமந்திரத்தில் துதிபாடும் வழக்கம் இல்லை.

அதனால் தனிக்கடவுள் துதிபாடும் கண்மூடித்தனம் இன்றி சுதந்திரமாய் எவரொருவர் அருக, சித்த, ஆச்சார்ய, உபாத்தியாயர் என்ற நிலைகளைப்பெற;  சாதுக்களான கடைநிலை ஒழுக்கத்தை ஏற்று உயர்கிறார்களோ அவர்களே உன்னத நிலை அடைந்தவர்கள். பஞ்ச பரமேட்டியர் என்ற துதிக்கும் வழக்கமே இன்றுவரை கடைபிடிக்கபடுகிறது. சித்தநிலை தவிர மற்ற நான்கு படிநிலையில் உள்ளவர்களும் கடவுள்நிலைக்கு சமமாக கருதப்படுபவர்களே யாவர். 


**************************** 


பாடல் # 17

கஞ்சமலர் திருமார்பிற் றரித்தாய் நீயே
காலமொரு மூன்றுணர்ந்த கடவு ணீயே
பஞ்சாத்தி தானுரைத்த பரம னீயே
பரமநிலை யொன்றெனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் லுலகுதொழுந் தூய னீயே
தொல்வினையெல் லாமெரித்த துறவ னீயே  
செஞ்சொற் பாவையை நாவிற் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானெனுந் தீர்த்த னீயே.

---------------------------------

கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே. 

----------------------------------

தாமரை மலரை அழகிய மார்பில் தாங்கியவன் நீதான்.
மூன்று காலமும் உணர்ந்த முழுதுணர்கடவுள் நீதான்.
பஞ்சாத்திகாயம்** என்ற ஐவகை அத்திகாயங்களை பற்றி உபதேசித்த பரமன் நீதான்.
மேலான முத்தி நிலையைக் கூறி அதனை அடைய வழிகளைக் கூறியவனும் நீதான்.
தொய்வில்லா யோகம் செய்து தவவாழ்வு வாழும் நல்துறவியர்கள் தொழும் தூயோன் நீதான்.
பழம்வினைகள் எல்லாம் உடலில் சேராமல் பொசுக்கிய துறவோன் நீதான்.
செம்மையான சொற்களாய் விளங்கும் கலைமகளை நாவில் கொண்டவன் நீதான்.
ஸ்ரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தீர்த்தங்கரன் நீதான்.

----O----

** அஸ்திகாயம்:  – உலகம் பகுபடாப் பொருள்கள் ஐந்தினால் உருவானவை. அவை உயிர், உயிரற்றதான: புத்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம் என்ற ஐந்தும் ஆகும். இவற்றுடன் காலம் என்ற மெய்பொருளும் இயக்கத்தினை வெளிப்படுத்த உபயோகமாய் உள்ளது . அதனால் பகுபடாப்பொருள்கள் உலகில் மொத்தம் ஆறு; அதாவது மெய்ப்பொருள்கள் ஆறு. அதனை திரவியங்கள் ஆறு என்று **மகாவிரர் உரைத்த சமணம் கூறுகிறது.

அஸ்தி+காயம் – அத்திகாயம் – அத்தி என்றால் எப்போதும் நிலைத்திருப்பது. நிலைத்தல்;  காயம் – மிகு பிரதேசம் கொண்டது என்பதாகும்.

திரவியங்களை நுணுகப் பகுப்பின் கடைசித்துகள் பரமாணு எனப்படும்.  அவை தனித்தனியே தனக்குள்ள பிரதேசம் / இடத்தை ஆகாயத்தில் அடைத்துக்கொள்ளும் பண்புள்ளவை.

ஆனால் அவை ஒன்றுக்குள் ஒன்றாய் நுழைந்து செறிவாய் காணப்படும் நிலைப்பாட்டை உடையவை. அதாவது மிகுபிரதேச தன்மையும் கொண்டவை. அதே சமயம் தனது மூலகுணமான தனித்தன்மையை இழக்காமல் இருப்பவை.

அவற்றின் என்றும் நிலைத்துநிற்கும்  இருத்தல் இயல்பே அஸ்தித்துவம் என்பது.

அதேசமயம் அவை ஒன்றினுள் கூடி சிலசமயத்திற்குபின் பிரியும் தன்மையும் கொண்டவை.  அதனால் தோன்றுதலும், பின்னர் அழிதலுமாய் உள்ளன. அதனை பையை அல்லது பரியாயம் என்றுரைக்கிறது.

அகவே மெய்ப்பொருள்களின் அஸ்தித்துவம் என்பது தோன்றுதல், அழிதல் மற்றும் (தனது மூலநிலையில்) நிலைத்து இருத்தல் என்ற மூன்று நிலையையும் சேர்த்து - நிலைத்தல் என்று ஒரே சொல்லால் குறிப்பிடலாம்.

ஒரு மெய்பொருளின் நிலைத்தல் பண்பே அத்தி எனப்படுகிறது.  அவை ஒன்றுக்குள் ஒன்றாய் நுழைவதால்  மிகு பிரதேச நிலையை பெறுகிறது. அத்தன்மையே காயம் எனப்படும்.

அவ்வாறான ஐந்து மெய்பொருட்களான உயிர், புத்கலம், தன்மம், அதன்மம் மற்றும் ஆகாயம் இவ்வைந்தும் அத்திகாயம் எனப்படுகிறது.

காலம் எனும் மெய்ப்பொருளுக்கு நிலைத்தல் எனும் அஸ்தித்துவம் மட்டுமே உண்டு. ஆனால் மிகுபிரதேச தன்மை இல்லையாததால் காயம் என்ற வகைப்பாட்டில் சேர்க்க வியலாது.

ஆக உயிர், புத்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம் எனும் ஐந்தே அத்திகாயங்கள் ஆகும்.

அந்த பஞ்சஅஸ்திகாயங்களுடன் + காலம் என்ற அஸ்தித்வம் கொண்ட மெய்பொருளும் சேர்ந்த தத்துவத்தை ஆறுதிரவியங்கள் என்றும் சமணம் உரைக்கிறது.

மேலும் ஒரு பொருளின் மிகுபிரதேச செயல்பாடே பர்யாயம் எனப்படுகிறது. அதுவே அதன் ஆற்றலின் வெளிப்பாடு, அதாவது இயக்கமாக பரிணமிக்கிறது. அதற்கும் ஒரு கால அளவு உண்டு என்று பரமகுரு உரைத்துள்ளார். அதற்குதவுவதே காலத்திரவியம் ஆகும்.

இந்த இடத்தில் தற்கால அறிவியலார் உரைக்கும் பொருளின் ஆற்றல் நிலையை, அதாவது உயிரற்ற பொருளுக்கு கூறும் ஆற்றல் நிலையை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.

ஆனால் புத்கலப்பொருளில்  உருவ மற்றும் அரூவ நிலையில் பர்யாயம் தோன்றுகிறது. அதாவது அதன் செறிப்புத்தன்மையை, ஐம்புலனால் அறிவது, அறியமுடியாதது என இவ்வகை உருவாகியுள்ளது.

அதில் அறிவியலார் உருவ இயக்க நிலைவரைதான் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது. அரூவ நிலையான உளவியல் என்ற பிரிவில் சொற்ப அளவே இன்றுவரை எட்ட முடிந்துள்ளது. ஆனால் மெய்யறிவு ஞானியரால் அரூவ அற்றலில் வெளிப்பாடான இயக்கநிலையை அறுதி இட்டு முழுமையாக கூறவும் இயலும் என்பதை இந்த பஞ்சாஸ்திகாய தத்துவம் விளக்கத்தை முழுதுணர்ஞானி மகாவிரர் நிரூபித்துள்ளார்.
அந்த பஞ்ச அஸ்திகாய இயக்க நிலைத் தத்துவத்தையே இப்பாடலில் புலவர் உரைத்திருக்கிறார்.

இவற்றிலிருந்தே மகாவீரர் உரைத்த சமண சித்தாந்தத்தில் ஏழு தத்துவங்கள்; அதாவது உயிர், உயிரற்றது
மேலும் ஊற்று – வினை வரும் வழி;
செறிப்பு – வரும் வழியை தடுப்பது;
உதிர்ப்பு – ஆன்மாவிலிருந்து உதிர்ப்பது,
கட்டு – பந்திப்பது மற்றும்
வீடு - வீடுபேறுநிலை போன்றவை  விளக்கப்பட்டுள்ளன.

மற்றும் அவற்றுடன் புண்ணியம்+பாவம் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒன்பது பதார்த்தங்கள் என்றளவில் மேலும்  விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.


***********************************

பாடல் # 18

அறவனீ யமலனீ யாதி நீயே
ஆரியனீ சீரீயனீ யனந்த னீயே
திரிலோக லோகமொடு தேய னீயே
தேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே
எரிமணிநற் பிறப்புடைய யீச னீயே
இருநான்கு குணமுடைய யிறைவ னீயே
திரிபுவனந் தொழுதிறைஞ்சுஞ் செல்வ னீயே
சிரீவர்த்த மானமெனுந் தீர்த்த னீயே.

---------------------------------

அறவன்நீ அமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணம்உடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயே
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. 18

---------------------------------

தரும உருவினனாய் இருப்பவன் நீ.
குற்றங்களான உணர்விலுள்ள மலங்களை களைந்து குணத்தால் நிறைந்தவன் நீ.
மூல முதற்பொருளாய் விளங்குபவன் நீ.
எல்லாவற்றிற்கும் மேலான சித்தவுலகத்திலுள்ளவன் நீ.
அழிவற்ற நித்தியஆனந்த செல்வத்தின் இருப்பிடமானவன் நீ.
முடிவில்லாதவனாக - எல்லாமாக இருப்பவனும் நீ.
மூன்று உலகங்களையும் பிற உலகங்களையும் நாடாக உடையவன் நீதான்.
தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் புனிதன் நீ.
ஒளி வீசும் மணிபோல நல்லறிவின் பிறப்புக்கிடமானவன் நீ.
எட்டுக் குணங்களைப் பெற்றுள்ள இறைவன் நீயே.
மூன்றுலகத்தாரும் வந்து வணங்கும்படியான முத்திச் செல்வமுடையவன் நீ.
ஸ்ரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தீர்த்தங்கரன் நீயே. 

*****************************
பாடல் # 19

முனிவர்தமக் கிறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வனெனு முத்த னீயே
இனிமையா னந்தசுகத் திருந்தாய் நீயே
இயலாறு பொருளுரைத்த வீச னீயே
முனிவுமுத லில்லாத முனைவ னீயே
முக்குடையின் கீழமர்ந்த முதல்வ னீயே
செனித்திறக்கு மூப்பி றப்புந் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.

---------------------------------

முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வன்எனும் முத்தன் நீயே
இனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயே
இயல்ஆறு பொருள்உரைத்த ஈசன் நீயே
முனிவுமுதல் இல்லாத முனைவன் நீயே
முக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன் நீயே
செனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே.

---------------------------------

முனிவர்களுக்கெல்லாம் முதல்வனாய் விளங்குபவன் நீ.
என்றும் மூப்பில்லாது ஒரே தன்மைத்தாய் விளங்கும் முத்திக்குரியவன் எனப்படும் தலைவன் நீயே.
மகிழ்வூட்டும் ஆனந்த சுகத்தில் அழுந்தியிருப்பவன் நீயே.
உலகியல் வாழ்க்கைக்கான ஆறு பொருள்களை விளக்கிச் சொன்ன இறைவன் நீ.
கோபம் முதலியன தீய உணர்வுகள் இல்லாத முன்னோன் நீதான்.
முக்குடையின்கீழ் அமர்ந்து நலம் தரும் தலைவனும் நீதான்.
பிறந்து இறக்கும்படி நிகழ்விக்கும் மூப்பையும் இறப்பையும் இல்லா தொழித்தவன் நீயே.
ஸ்ரீ வர்த்தமானன் என்னும் பெயர் பெற்ற புனிதன் நீயே.          

***********************************

பாடல் # 20

நவபதநன் னயமாறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்திசைந்த னாத னீயே
உவமையிலா வைம்பதமு முரைத்தாய் நீயே
உத்தமர்த மிருதயத்து ளுகந்தாய் நீயே
பவமயமா மிருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலையமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேச னீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.

---------------------------------

நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்துஇசைந்த நாதன் நீயே
உவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே
உத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய் நீயே
பவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலைஅமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே
சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே. 20

---------------------------------

ஒன்பது பதார்த்தங்களையும், ஆறு நயங்களையும் சொன்னவன் நீ.
நல்ல முனிவர்களின் மனத்தில் பொருந்தி வாழும் தலைவனும் நீதான்.
ஒப்புமை சொல்ல இயலாத ஐங்குரவர் பதவிகளையும் சொன்னவன் நீதான்.
உத்தமராம் தூயோரின் இதயத்தாமரையில் அமர்ந்து மகிழ்விக்கின்றவன் நீயே.
பிறவிக்கு காரணமான நல்வினை தீவினை என்னும் இருவினை நிலையை விளக்கிச் சொன்னவனும் நீதான்.
பரம நிலையில் அமர்ந்துள்ள இறைவனும் நீதான்.
மங்கலமான சிவமயமாய் நின்று ஒளிவீசும் தேசத்து இருப்பவனும் நீயே.
ஸ்ரீவர்த்தமானன் என்னும் புனிதன் நீதான்.                         

*********************************** 


பாடல் 21

துதிகள் செய்துபின் றூய்மணி நன்னிலத்
ததிகொள் சிந்தையி னம்பிறப் பணிந்துடன்
நெதியி ரண்டென நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.

---------------------------------

துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்து
அதிகொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன்
நெதி இரண்டுஎன நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.

---------------------------------

செல்வம் போன்று திகழும் நீண்ட இரண்டு தோளினையுடைய சிரேணிக மாமன்னன், சமவசரணத்தில் ஸ்ரீ வர்த்தமானரை பல்வேறு பாடல்கள் மூலம் துதித்துப் போற்றினான்.  பின் ஒருநிலையுடனான மனத்துடன் தூய்மையான அழகிய நல்ல நிலத்தில் உடல்முழுவதும் படியுமாறு விழுந்து வணங்கினான்:  பின் உடனே எழுந்து, முனிவர்கள் எல்லாரும் உளமாறப் போற்றி வணங்கும் இறைவனாம் ஸ்ரீவர்த்தமானர் அருகில் சென்றான்.

********************************

பாடல் # 22

சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவ னன்மொழி யிப்பொரு ளுட்கொண்டு
அறைய மர்ந்துயிர்க் கறமழை யைப்பெயுந்
துறவ னற்சரண் டூய்தி னிறைஞ்சினான்.

---------------------------------

சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவன் நன்மொழி இப்பொருள் உள்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும்
துறவன் நற்சரண் தூய்தின் இறைஞ்சினான்.

---------------------------------

பல சிறப்புகளைக் கொண்ட சமவசரணத்தின் பன்னிரண்டு கோட்டத்தில் முதலாய் அமர்ந்து அறிவுச் செல்வமுடைய கணதரர், இறைவனுடைய திவ்யமொழியென வெளிப்படும் அறவுரையின் பொருளை விளக்கிக் கூற, அவற்றை செவிமடுத்து தன் மனத்துள் உறைவிடச் செய்தான்.  அறம்கூறும் மண்டபத்தின் மேடைமீது அமர்ந்து உயிர்களுக்கெல்லாம் நல்லற மழையைப் பொழிந்து கொண்டிருக்கும் துறவறத்தின் உச்சநிலை அடைந்த ஸ்ரீ வர்த்தமானரின் திருவடிகளைத் தூய்மையனாய் வணங்கினான்.

** அருகநிலை பெற்ற தீர்த்தங்கரர்கள் அனைவருக்கும் இந்திரனால் அமைக்கப்பட்ட சமவசரணம் பற்றி அறிந்தோம். அதன் நடுவே அமைந்த லக்ஷ்மி வர மண்டபத்தின் மீதுள்ள கந்தகுடி மேடையில் ஆயிரத்தெட்டு இதழ்கள் விரிந்த தாமரை மலர்மிசை அமர்ந்த அருகர் உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் விளங்கக்கூடிய பொதுமொழியாம் ‘திவ்யத்வனி என்ற ஓம்கார ஒலியை அனைத்துயிருக்கும் புரியும் பதினெட்டு வகையான மொழிகளில் விளக்கமாக எடுத்துக் கூறும் அறிவும் ஆற்றலும் பெற்றவர்களே கணதரர் எனப்படும் பிரதான சீடர்கள். அவ்வாறு ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் கணதரர்கள் அவரவர் காலத்தில் இருந்துள்ளார்கள். அவ்வாறு ஸ்ரீ வர்த்தமானரின் பொதுமொழியாம் திவ்யஓங்காரத்திற்கு விளக்கம் கூறியவர் கெளதம கணதரர் என்பவர் ஆவார்.

***************************************** 



தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்

பாடல் # 23

மற்றம் மாமுனி யேர்மல ராம்பதம்
உற்று டன்பணிந் தோங்கிய மன்னவன்
நற்ற வர்க்கிறை யானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்த னிறைஞ்சினான்.

---------------------------------

மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம்
உற்றுடன்பணிந்து ஓங்கிய மன்னவன்
நற்றவர்க்கு இறையானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்தன் இறைஞ்சினான்.  

---------------------------------

பெருமை படைத்த  முனிநிலையிலிருந்து இறைநிலை எய்திய ஸ்ரீவர்த்தமானரின் பாதங்களைச் சேர்ந்து பணிந்து உயர்வு பெற்ற சிரேணிக மாமன்னன்; நல்ல தவம் செய்யும் துறவியர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கி, ஐயங்களை விடுபடச் செய்யும் கௌதம கணதரரின் நற்பாதங்களை பணிந்து வணங்கினான்.  

*****************************

பாடல் # 24

இருக ரத்தி னிறைஞ்சிய மன்னனும்
பொருக யற்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவஞ் சனமுனி வர்க்குரை
இருவ ருமியைந் தின்புறக் கேட்டபின்.

---------------------------------

இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொருகயல்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரை
இருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின்.

--------------------------------- 
இரு கைகளினாலும் கூப்பி வணங்கிய அரசனும், ஒன்றுடன் ஒன்று மோதும்படியான கயல்மீன் போன்ற கண்களையும், அழகிய குண்டலங்களையும் அணிந்த மன்னனின் தேவியும், கூடியிருந்த மக்களுக்கும் முனிவர்களுக்கும் கௌதம கணதரர் உரைக்கும் அறம் சார்ந்த தத்துவங்களை மனம் பொருந்தி மகிழ்வுறக் கேட்டனர்.  அதன்பின்… 

*****************************

நாக பஞ்சமி கதையைக் உரைக்குமாறு மன்னன் வேண்டுதல்

பாடல் # 25

சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே.

 ---------------------------------

சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக என்றலும்
அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர்
குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல் உற்றதே.

---------------------------------

வீரர் அணியும் காலணியை அணிந்த மன்னன், மங்கலம் நிறைந்த பஞ்சமியின் பொருள் பொதிந்த கதையினை உரைத்தருளுமாறு வேண்டினான். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் எனும் மும்மணியை விரும்பிப்போற்றும் தவவாழ்வை ஏற்றவராதலால் பிறர் உள்ளக் குறிப்புகளை உணர்ந்து கொள்பவரான  கெளதம முனிவரும் பஞ்சமி கதையினைக் கூறத் தொடங்கினார்.

*****************************




கௌதமர் உரைத்த பஞ்சமி கதை

மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்

பாடல் # 26

நாவலந் தீவி னற்பர தத்திடை
மாவலர் மன்னர் மன்னு மகதநற்
கூவுங் கோகிலங் கொண்மதுத் தாரணி
காவுஞ் சூழ்ந்த கனக புரம்மதே.

---------------------------------

நாவலந் தீவின் நற்பரதத்துஇடை
மாவலர் மன்னர் மன்னு மகதம்நல்
கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணி
காவும் சூழ்ந்த கனக புரம்அதே.

---------------------------------

நாவலந்தீவில் அடங்கிய நல்லதொரு நிலப்பிரதேசமான பரத கண்டத்திலே; மிகுந்த வல்லமை கொண்ட பல மன்னர்களால் ஆட்சி செய்யப்படும் நாடு மகதநாடாகும். குயில்களின் ஓசையும், தேன் சிந்தும் மலர்களும் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட சிறந்த நகரமாக கனகபுரம் விளங்கியது.

*****************************

பாடல் # 27

அந்ந கர்க்கிறை யான சயந்தரன்
நன்ம னைவிவி சாலநன் னேத்திரை
தன்சு தன்மதுத் தாரணி சீதரன
நன்க மைச்ச னயந்தர னென்பவே.

---------------------------------

அந்நகர்க்கு இறையான சயந்தரன்
நன்மனைவி விசாலநன் நேத்திரை
தன்சுதன்மதுத் தாரணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே.

---------------------------------

கனகபுர நகரை ஆண்ட அரசன் சயந்தரன் என்பான்.  இவனுடைய  பட்டத்துதேவியின் பெயர் விசாலநேத்திரை என்பதாம்.  இவர்களுடைய புதல்வன் தேன்சிந்தும் மலர்மாலை யணிந்த சீதரன் எனும் பெயருடையோன்.  அம்மன்னனுக்கு வாய்த்த நல்ல அமைச்சன் நயந்தரன் என்பான். 

*****************************

                                               
வாசவன் காட்டிய படத்துருவின் மாதர் யார் என சயந்தரன் வினாவுதல்

பாடல் # 28

மற்றுந் தேவியர் மன்னுமெண் ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துறு கின்றநாள
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்
துற்ற மாதர் படத்துருக் காட்டினான்.

---------------------------------

மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துஉறுகின்றநாள்
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்து
உற்றமாதர் படத்து உருக்காட்டினான். 

---------------------------------

மன்னனுக்கு பட்டத்தரசி விசாலநேத்திரையோடு மேலும் எண்ணாயிரம் தேவியர் உரிமையாயிருந்தனர்.  வெற்றி பல கண்ட இவ்வரசன் சயந்தரன் தம் தேவியருடன் இன்புற்று வாழ்கின்ற நாட்களில்;  ஒருநாள் அம்மன்னன் அரண்மனைக்கு வணிகன் வாசவன் என்பான் வந்தனன்.  அவன் பல அரிய பொருள்களோடு மரக்கலத்தில் உடன் வந்த ஒரு அழகிய பெண்ணின் உருவப் படத்தையும் காட்டினான். 

** முற்காலத்தில் மன்னர்களின் ஆட்சிப்பற்றால், வீரபராக்கிரமத்தை நிரூபிக்க எண்ணியும் அடிக்கடி போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வரலாறுகளை நாம் அறிவோம். அவ்வாறான வேளையில் வாலிபர்கள் பலரும் இறந்து கொண்டே வந்ததினால், பல மகளிர்க்கு விவாகம் ஆகாமலே இருந்துள்ளது.  மேலும் மிக அழகிய பெண்டிருக்கும் பல ஆண்களினால் காம அச்சறுத்தல்களும் இருந்து வந்துள்ளன. மேலும்  அக்காலத்தில் மிக்க அழகியருக்கான போட்டியும் ஏற்பட்டு ஆண்கள் சண்டையிட்டு மடிந்தும் வந்துள்ளனர்.
இதுவே அக்கால இளம்பெண்டிரின் வாழ்வு நிலையையாய் இருந்துள்ளது. அதனால் அக்கால அரசர்கள்; திருமணம் நிச்சயம் அகாத பெண்டிர்களுக்கும், மிக்க அழகினால் அச்சறுத்தலுக்கு ஆளானவர்களுக்கும் அரசியர் பட்டம் சூட்டப்படும் மரபு தொடர்ந்துள்ளது. அவ்வாறான பல பெண்டிரை போரிட்டு கவர்ந்தும் வந்துள்ளனர் என்றும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

***************************************



பாடல் # 29

மன்ன னோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரி யோகி ளர்கார் மாதரோ
இன்ன ரூபமிக் காரிது வென்றலும்
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான்.

---------------------------------

மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரியோ கிளர்கார் மாதரோ
இன்ன ரூபம்மிக்கார்இது என்றலும்
மன்னும் வாசவன் வாக்குஉரை செய்கின்றான்.

---------------------------------

மன்னன் சயந்தரன் படத்தில் கண்ட மாதர் வடிவத்தைக் கண்டு மோகத்தால் மயங்கி அவள் மீது மோகம் கொண்டான்.  ‘இவ்வளவு அழகு படைத்த இவள் கின்னரர் குலப் பென்ணோ? எழுச்சிமிக்க மேகத்தினின்று பிறந்த பெண்ணோ? இவ்வளவு அழகு பொருந்திய காரிகை யாரோ‘’ என்று வினவினான்.  அரசர் வினாவைக் கேட்ட வணிகன் வாசவன் மறுமொழி கூறலானான். 

******************************************

வாசவன் மறுமொழி

பாடல் # 30

சொல்ல ரியசு ராட்டிர தேசத்துப்
பல்ச னநிறை பரங்கிரி யாநகர்
செல்வன் சிரீவர்மன் றேவியுஞ் சிரீமதி
நல்சு தையவள் நாமம் பிரிதிதேவி.

---------------------------------

சொல்அரிய சுராட்டிர தேசத்துப்
பல்சனம்நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல்சுதையவள் நாமம் பிரிதிதேவி.

---------------------------------

பலருடைய புகழுக்கும் உரியதாய் விளங்கிய சுராட்டிர தேசத்தில் பல்வகை மாந்தரும் நிறைந்து வாழ்ந்தனர். அங்குள்ள பரங்கிரியா நகரில் செல்வன் ஸ்ரீவர்மன் என்பவன் இருந்தான்.  அவனுடைய மனைவியின் பெயர் ஸ்ரீமதி.  இவர்களுக்கு பிறந்த அழகிய சிலைபோன்ற வடிவமுடைய மகளின் பெயர் பிரிதிவிதேவி என்பதாகும். 
  

******************************************


சயந்தரன் பிரிதிவிதேவியை மணந்து பட்டத்தரசியாக்குதல்

பாடல் # 31

அவ்வ ணிகன வளுடை ரூபத்தைச்
செவ்விதிற் செப்பச் சீருடை மன்னனும்
மௌவ லங்குழன் மாதரைத் தானழைத்துத்
தெய்வ வேள்வியிற் சேர்ந்து புணர்ந்தனன்.

---------------------------------

அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும்
மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன்.

---------------------------------

அந்த வணிகன் வாசவன் அவளுடைய அழகினைப் பாங்குற அழகாகச் சொல்ல, சிறப்புப் பொருந்திய அரசன் சயந்திரனும் முல்லை மலர் சூடிய கூந்தலை யுடைய அந்தப் பிரிதிவிதேவியை அழைத்து வருமாறு கூறி, தெய்வத் தன்மை பொருந்திய திருமண வேள்விச் சடங்குகளை நிறைவேற்றி, அவ்வழகியை மணந்து அவளுடன் சேர்ந்திருந்தான்.

********************************************

பாடல் # 32

மன்ன னின்புற்று மாதேவி யாகவே
நன்மைப் பட்ட நயந்து கொடுத்தபின்
மன்னு மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன வாற்றி னியைந்துடன் செல்லுநாள்

---------------------------------

மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள்.  

---------------------------------

மன்னன் சயந்தரன் பிரிதிதேவியுடன் கூடி இன்பம் நுகர்ந்து வாழும்நாளில், அவளுக்குப் பெருந்தேவிப் பட்டம் தந்து சிறப்பிக்கவும் செய்தான்.  பிற மாதர்களும் வந்து பணிந்து ஏவல் செய்யுமாறு பெருமையுடன் அவள் வாழ்ந்து வந்தாள்.  அவ்வாறு வாழ்ந்துவரும் நாளில்--    

********************************************

பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு

பாடல் # 33

வயந்த மாடவே மன்னனு மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுட்
பெயர்ந்து பல்லக்கி னேறிப் பிரிதிதேவி
கயந்த னீரணி காண்டற்குச் சென்றநாள்.

---------------------------------

வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள்.

---------------------------------

வசந்த காலத்தின் வருகையை தெரிவிக்கும் விளையாட்டின்பொருட்டு அரசனும் தேவிகளும்  விருப்பத்துடன் நல்ல மலர் நிறைந்த பூங்காவினை தனித்தனியே அடைந்தனர்.  பிரிதிதேவி பல்லக்கில் ஏறி, பூங்காவிலுள்ள குளத்தில் நீர் விளையாட்டுக் காண்பதற்காகச் சென்றாள்.  அந் நாளில் --   

********************************************


பாடல் # 34
  
வார ணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வாரணி கொங்கை யாரவ ளென்றலும்
ஏர ணிம்முடி வேந்தன்மா தேவியென்று
தார ணிகுழற் றாதி யுரைத்தனள்.

---------------------------------

வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வார்அணி கொங்கை யார்அவள் என்றலும்
ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று
தார்அணிகுழல் தாதி உரைத்தனள்.

---------------------------------

பிரதிவிதேவி பல்லக்கில் செல்லும் வழியில் தனக்கு முன்பாக யானையின் மீது அமர்ந்து செல்லுகின்ற கச்சைணிந்த முலையுடைய அம்மங்கை யார் என்று வினவினாள். ‘அழகிய திருமுடியணிந்த அரசனின் பட்டத்து மாதேவியே அவள்'' என்று மலர் மாலை சூடிய கூந்தலுடையாளாகிய தோழி உரைத்தனள். 

********************************************

பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்

பாடல் # 35

வேல்விழி மாது கேட்டு விசாலநேத் திரையோ வென்னைக்
கான்மிசை வீழ வெண்ணிக் காண்டற்கு நின்றா ளென்று
பான்மொழி யமிர்த மன்னாள் பரம னாலைய மடைந்து
நூன்மொழி யிறைவன் பாதம் நோக்கிநன் கிறைஞ்சி னாளே.

---------------------------------

வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே.   

---------------------------------

வேல் போன்ற கூரிய கண்களையுடைய பிரிதிதேவி தோழி சொன்ன செய்தியைக் கேட்டு, ‘அவள் விசாலநேத்திரையோ? என்னை அவள் காலில் விழுந்து பணிவிக்கும் பொருட்டே என்னைக் காண்பதற்கு நிற்கின்றாள் போலும்‘ என்ற யூகமொழியை உரைத்தாள்.  பின், அமிர்தம் போன்ற தூயமொழியுடைய இனிய பிரிதிவிதேவி ஜினராலயம் அடைந்து பக்திநூல்களில் சொன்ன முறைப்படியே அவர் திருப்பாதத்தை நிலம்பணிந்து வணங்கினாள்.        

********************************************  





ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்

பாடல் # 36

கொல்லாத நல்விரதக் கோமானினைத் தொழுதார்
பொல்லாக் கதியறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற் கெளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கு மியன்முனியைத் தான்பணித்தாள்.

---------------------------------

கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்
பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள். 36

---------------------------------

அழகிய அணிகலனை அணிந்த பிரித்விதேவி ஜினரை நோக்கி அஹிம்சை விரதத்தை போன்றிய கோமானே.  நின் திருவடிகளைத் தொழுபவர் தீய (விலங்கு, நரக) கதிகளிலிருந்து விடுபட்டு சிறப்புமிக்க முத்தியை சென்று அடைவது எளிதாகும் என்று கூறித் துதித்தாள்.  பின்னர், ஆன்மனில் சேராமல், எல்லா வினைகளையும் தடுத்து நிற்கும் தவநெறியில் ஒழுகி வாழும் பண்பிற்சிறந்த பிரஹிதாஸ்வர  முனிவரைத் தொழுது பணிந்தாள்.      

********************************************


முதல் சருக்கம்

முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்

பாடல் # 37

பணிபவட்கு நன்குரையிற் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நற்றவமு மாமோ வெனக்கென்றாள்
கணிதமிலாக் குணச்சுதனைக் கீர்த்தியுட னேபெறுவை
மணிவிளக்க மேபோன்ற மாதவனுந் தானுரைத்தான்,

---------------------------------

பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள்
கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை
மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான், 37

---------------------------------

தன்னை வணங்கிய பிரிதிதேவியை அம்முனிவர் நல்ஆசிகளை கூறி வாழ்த்தினார்.  முனிவரை பணிவுடன் நோக்கிய அவள், ‘மேன்மைபெற நற்றவம் எனக்குக் கைகூடுமோ?‘ என்று வினவினாள். மணிவிளக்குப் போன்று ஞானஒளிவீசும் மாதவம் பொருந்திய அம்முனிவ பெருமானும்  ‘அளவிட முடியாத நற்குணங்களுக்கு இலக்கணமாய் திகழும் புதல்வனை நீ பெறுவாய்‘ என்று கூறினார்.    

*********************************
பாடல் # 38

நின்றசனந் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை யறவுரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமனடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை யவதரித்தாற் போன்மகிழ்ந்தாள்.

---------------------------------

நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள்.

---------------------------------

விதிவென்ற பரமனின் அறவுரை கேட்டு அதன் வழி நீண்ட நெடுங்காலம் நல்தவம் புரிந்துவரும்  அம்முனிவரின் திருவடிகளைப் பிரிதிதேவி தன்னுடன் நிற்கும் தோழியருடன்  குற்றமற்ற உள்ளத்துடன் வணங்கினாள். அப்போதே தனது புகழ்மிக்க  புதல்வனைப் பெற்றாற்போல் அகமகிழ்ந்தாள்.  

*********************************

தோழியருடன் பிரிதிதேவி அரண்மனை புகுதல்

பாடல் # 39

நற்றவ னுரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுட னுணர்ந்து நல்ல பாசிழைப் பரவை யல்குல்
உற்றதன் குழலி னாரோ டுறுதவன் பாதந் தன்னில்
வெற்றியி னிறைஞ்சி வந்து வியன்மனை புகுந்தி ருந்தாள்

---------------------------------

நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்
உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள்.

---------------------------------
நல்ல தவமுடைய முனிவரின் சொற்களைக் கேட்டவுடன், வாசமுள்ளமலர்ச்சரங்களைச் சூடிய கருங்கூந்தலையுடைய பிரிதிதேவியானவள் தன் உள்ளத்தில் நினைந்து, நல்ல பசுமையான ஆபரணம் அணிந்த பரந்த …..யுடைய தனக்குரிய தோழியர்களுடன் பரவசம் அடைந்து, மிகுதவமியற்றிய முனிவனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, வெற்றிபெற்றவள் போன்ற உணர்வுடன் அவரை விட்டகன்று தன்னுடைய அகலமான பெரிய அரண்மனையிலே புகுந்து அமர்ந்திருந்தாள்.    


***********************************

(முதல் சருக்கம் முற்றும்)



இரண்டாம் சருக்கம்

சயந்தரன்-பிரிதிவிதேவி உரையாடல்

பாடல் # 40

வனவிளை யாட லாடி மன்னன் றன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காத லாலே
புனலினீ யாட லின்றிப் போம்பொருட் புகல்க வென்ன
கனவரை மார்பன் கேட்பக் காரிகை யுரைக்கு மன்றே.

---------------------------------

வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே
புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன
கனவரை மார்பன் கேட்ந்பக் காரிகை உரைக்கும் அன்றே.  

---------------------------------

பிரிதிவிதேவி தன்னுடன் வன விளையாட்டிற்கு வரவில்லையே என கவலைகொண்டான் சயந்தர மன்னன். அதனால் அந்த  வன விளையாடலை இனிதின் ஆடி முடித்துக் கொண்டு தன் அரண்மனைக்குத் திரும்பினான். அங்கு சென்றதும் மன்னன் மனத்துக்கு பிரியமான மங்கை பிரிதிவி தேவியின்மேல் தனக்குள்ள அன்பின் மிகுதியை வெளிப்படுத்த, அவளை நோக்கி, ‘நங்கையே!  நீ இனிய புனலாட்டத்தில் பங்குபெற்று இன்பம் பெறாமல்  தனியே மாளிகைக்கு வரக் காரணம் யாது?‘ என வினவினான். அதற்கு அவள் தான் விசால நேத்திரையை வணங்க மனமின்றி வேறு திசை சென்ற காரணத்தைக் கூறாமல் வேறு வகையில் புனைந்து கூறினாள்.

***********************************

பாடல் # 41

இறைவனா லயத்துட் சென்று விறைவனை வணங்கித் தீய
கறையிலா முனிவன் பாதங் கண்டடி பணிந்து தூய
அறவுரை கேட்டே னென்ன வரசன்கேட் டுளம கிழ்ந்து
பிறைநுதற் பேதை தன்னாற் பெறுசுவைக் கடலு ளாழ்ந்தார்.

---------------------------------

இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து
பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார்.

---------------------------------

பிரிதிவிதேவி தான் இறைவன் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தூயமனதுடன் வணங்கித் துதித்த பின்னர்; மனத்திலே தீயஉணர்வுகளின் சிந்தனை சிறிதுமில்லாத பிரஹிதாஸ்வரர் எனும் ஓர் முனிவரைக் கண்டு அவர் பாதங்களை வணங்கிப் புனித மான ஜினவறம் கேட்டதாக அரசனிடம் தெரிவித்தாள். மேலும் அம்முனிவ பெருமான் தனக்கு ஓர் சிறந்த புத்திரன் பிறப்பான் என்று கூறி ஆசீர்வதித்தார் என்பதனை மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாள்.  அதைக் கேட்ட மன்னன் அகத்தில் அளவிலா மகிழ்ச்சியடைந்து (கவிழ்ந்த)பிறைபோன்ற நெற்றியை உடைய பிரிதிவிதேவியுடன் இனிது இன்ப சுகந்துய்த்து வரலாயினான்.  

***********************************


பிரிதிதேவி கண்ட கனவு

பாடல் # 42

இருவரும் பிரித லின்றி யின்புறு போகந் துய்த்து
மருவிய துயில்கொள் கின்றார் மனோகர மென்னும் யாமம்
இருண்மனை இமிலே றொன்று மிளங்கதிர் கனவிற் றோன்றப்
பொருவிலாட் கண்டெ ழுந்து புரவலர்க் குணர்த்தி னாளே.

---------------------------------

இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்ந்து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப்
பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.

---------------------------------

இவ்வாறாக இருவரும் இணைபிரியாராய் இன்ப மயமான போகந் துய்த்து வருங் காலத்திலே ஒருநாள்,  இரவு நித்திரையில் இருந்த போது, மனோகரம் என்னும் நான்காம் யாமத்திலே திரண்ட திமிலைக் கொண்ட ஓர் காளையும்,  இளங்கதிர் போன்று ஒளிவீசும் செல்வனும் இருளில் தன் மனையில் புகுந்ததாகப் பிரிதிதேவி கனவு கண்டாள். உடனே விழித்தெழுந்து அரசனிடம் அக்கனவைக் கூறினாள்.   

 ***********************************



இரண்டாம் சருக்கம்

மன்னனும் தேவியும் ஜினாலய முனிவரிடம் கனவின் பயன் கேட்டல்

பாடல் # 43

வேந்தன்கேட் டினிய னாகி விமலனா லயத்துட் சென்று
சேந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கி றைஞ்சிக் கனாப்பய னுவல வென்றான்
ஏந்திள முலையி னாளு மிறைவனு மிகுந்து கேட்டார்.

---------------------------------

வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்.  

---------------------------------

அரசனும் அச்செய்தியைக் கேட்டு அகமகிழ்ந்தான். பின்னர் ஜினாலயம் சென்று, செந்தளிர்கள் உதித்த அரசமரத்தின்கீழ் வீற்றிருக்கும் அருகதேவன் சிலையை  வணங்கி போற்றித் துதித்த பின்னர், ஆங்கு உறைந்த அறிவொளி வீசும் அம்முனிவர் பெருமானைப் பணிந்தனர். அவரிடம் தாம் கண்ட கனவிற்கான பயன் யாதென்று கணித்து அருளுமாறு பணிவுடன் கேட்டபடி வணங்கி நின்றனர்.  அவரும் அக்கனவிற்கான பலனைக் கூறத் தொடங்கியதும் இளமையான தேவியும் மன்னனும் கூர்ந்து கவனித்துக் கேட்கலானார்கள்.

**ஜினாலயத்திற்குச் சென்றால் அருகப்பெருமானை வணங்கிய பின்னரே தவமுனிவரையும், பிறதெய்வங்களையும் வணங்கும் முறையை இப்பாடலில் வழியே ஆசிரியர் தெரிவிக்கிறார்.

***********************************

பாடல் # 44

அம்முனி யவரை நோக்கி யருந்துநற் கனவு தன்னைச்
செம்மையி னிருவர் கட்குஞ் சிறுவன்வந் துதிக்கு மென்றுங்
கம்பமின் னிலங்க ளெல்லாங் காத்துநற் றவமுந் தாங்கி
வெம்பிய வினைய றுத்து வீடுநன் கடையு மென்றார்.

--------------------------------- 

அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்
கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி
வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார்.

---------------------------------

அம் முனிவரர் இருவரையும் நோக்கி, ‘நீவிர் கண்ட கனாவின் பலனைக் கூறுகிறேன். கேட்பீராக‘ எனத் தன் அவதிஞானத்தாலறிந்து, ‘திமில் கொண்ட இளங்காளையைக் கண்டதால் உங்கட்கு இனிய புதல்வன் ஒருவன் பிறப்பான்.  இளங்கதிரைக்கண்டதால் அவன் இவ்வுலகையெல்லாம் வெற்றி கண்டு, குடிகளை நன்முறையில் ஆட்சி மூலம் காப்பாற்றி, சிறப்புடைய தவஒழுக்கத்தையேற்று இருவினையறுத்து வீடுபேறடைவான்  என்றருளினார். 

***********************************

புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்

பாடல் # 45

தனையன்வந் துதித்த பின்னைத் தகுகுறிப் புண்டோ வென்று
புனைமல ரலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமினக் குறிக ளுண்டென் னேர்மையிற் கேட்பி ராயின்
தினையனைப் பற்று மில்லாத் திகம்பர னியம்பு கின்றான்.

---------------------------------

தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று
புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான்.

---------------------------------

அழகான மலர்மாலையை அணிந்துள்ள அகன்ற மார்பினை உடைய மன்னன் சயந்திரன், ‘ எனக்கு புதல்வன் வந்து பிறந்த பிறகு அத்துணைச் சிறப்பு அவன் அடைவான் என்பதற்குரிய அறிகுறிகள் யாதேனும் உண்டோ?’  என்று வினவினான். தினையளவும் மனதில் ஆசையில்லாத திகம்பர முனிவர் அதற்குப் பதிலாக,  ‘ஆம், உண்டு, கூறுகிறேன், அச்சிறப்புகளுக்கான அறிகுறிகளை கவனமாக கேளுங்கள்; அப்போதுதான் பின்நாளில் யான் கூறியவை உண்மையென நினைவு கூறுவீர்கள்’ என்றார்.

** திகம்பரன்-(திக்-அம்பரா) – திசையே ஆடையாக கொண்டு வாழும் துறவியர். அதாவது உடையின்றி நிர்வாணமாக வாழும் சமண முனிவர். இருதுணி உடுத்தி துறவற நெறி ஏற்று, பின்னர் இடையில் மட்டும் அரைத்துணியுடன் வாழ்ந்து, குணத்தில் மேநிலையை அடைந்ததும் அவ்வுடையையும் விலக்கி அம்மணமாக வாழும் அமணர்கள் ஆவர். தனக்கென எந்த பொருளையும் உடைமையாக கொள்ளாத ஒழுக்கத்தில் வாழ்வதால் கையில் திருவோடு இன்றி கைகூப்பி உணவருந்தி இயம, நியமங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் துறவு ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்.  அத்தூய தவஒழுக்கத்தின் வழியே வருங்காலமுரைக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள்.

***********************************


இரண்டாம் சருக்கம்

திகம்பர முனிவரின் மறுமொழி

பாடல் # 46

பொன்னெயிலுள் வீற்றிருக்கும் புனிதன் றிருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தா னீங்குந் திருக்கதவம்
நன்னாக வாவிதனின் னழுவப் பதமுண்டாம்
மன்னாக மாவினொடு மதமடக்கிச் செலுத்திடுவான்.

---------------------------------

பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம்
நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம்
மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான்.  

---------------------------------

சமவசரணத்தில் வீற்றிருக்கின்ற ஜிநபகவானுடையதும் நின் நந்தவனத்துள்ள, தினம் தேவர்களால் வழிபாடு செய்யப்படுவதுமான சித்தகூட சைத்தியாலயத்தின் திருக்கதவு மக்களால் திறக்கமுடியாமல் உள்ளது.  உங்கள் பாலகன் பாதம் பட்டதும் தானே திறந்து கொள்ளும். பக்திப் பரவசத்துடன் நீங்கள் வழிபாடு செய்ய வழிபிறக்கும்..  அத்தருணத்தில் அப்பாலகன் ஆங்குள்ள நாகங்கள் நிரம்பிய குளத்தில் வழுக்கி விழுவான்.  ஆனால், ஆபத்தொன்றுமில்லாது மட்டுமின்றி அதிசயிக்கும் வண்ணம் நன்மையுடன் கரைசேருவான்.  மேலும் அடங்காத ஒரு முரட்டுக் குதிரையையும், எவரும் அடக்கவியலாத நீலகிரி எனும் யானையின் மதத்தையும் அடக்கிப் பெருமிதமாய்ச் செலுத்துவான் என்றவாறு வருமுன் வாக்கினை பிரஹிதாஸ்வர முனிவரும் தெரிவித்தார்.

***********************************

பாடல் # 47
        
அருள்முனி யருளக்கேட்டு வரசன்றன் றேவிதன்னோ
டிருவரு மிறைஞ்சியேத்தி யெழின்மனைக் கெழுந்துவந்து
பருமுகிற் றவழுமாடப் பஞ்சநல் லமளிதன்னிற்
திருநிகர் மாதுமன்னன் சேர்ந்தினி திருக்குமந்நாள்.

---------------------------------

அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு
இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து
பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில்
திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள்.  

---------------------------------

இங்ஙனம் கருணைமிக்க மாமுனிவர் உரைத்த அருள்மொழியைக் கேட்ட சயந்தர மன்னன் அகமகிழ்ந்து  பிரிதிவிதேவியோடு அவரடியைப் பணிந்து எழுந்தான். அவர் ஆசிகூறியதும் விடைபெற்று மீண்டும் தன் அரண்மனையை அடைந்தான். மேகம் தவழும் உயர்ந்த மாளிகையிலுள்ள பஞ்சணையில் சயந்திரன், திருமகளுக்கு ஒப்பான பிரிதிவிதேவியிடம் இனிது இன்பம் நுகர்ந்துவரும் நாளில்….

***********************************

 பிரிதிதேவி கருக் கொள்ளுதல்

பாடல் # 48

புண்டவழ் வேற்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்ணினி துண்ண வெண்ணு மைந்தன்பூ வலய மாளும்
பண்ணுகக் கிளவி வாயிற் பரவிய தீருஞ் சேரும்
கண்ணிய மிச்ச மின்னைக் கழித்திடு முறுப்பி தாமே.

---------------------------------

புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே.

---------------------------------

ஊன் படிந்த வேல் போன்ற கண்களையுடைய பிரிதிதேவி பூவுலகை ஆளப்போகும் தன் குமாரனுடைய பூரண கர்ப்பத்தினால் உண்டான மயற்கைக் குறியால் மண்ணையும் இனிதென உண்டாள்.  அம் மயற்கையினால் தோன்றிய துன்பத்தை போக்கிட, தன் புதல்வனின் இன்சொல் மொழியினை கேட்க உள்ளதை எண்ணி களிப்பில் திகழ்ந்தாள்.  மின்னல் ஒளியையும் தோற்கச்செய்யும் அவள் உறுப்பு நலம் சிவப்புற்றது.        

*********************************** 


புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்

பாடல் # 49

திங்க ளொன்பான் நிறைந்து செல்வனற் றினத்திற் றோன்றப்
பொங்குநீர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் லுவகை யாகித்
தங்குபொன் னறைதி றந்து தரணியுள் ளவர்க்குச் சிந்திச்
சிங்கநேர் சிறுவ னாமம் சீர்பிரதா பந்த னென்றார்.

---------------------------------

திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப்
பொங்குநீந்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித்
தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார்.

---------------------------------


ஒன்பது மாதமும் நிறைவடைந்து ஓர் நன்னாளில் திருக்குமரன் அவதரித்தான்.  பூர்ண சந்திரனைக் கண்டெழுந்த கடல்போல மன்னன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். உவகையடைந்த சயந்திரன் தன் கருவூலத்தை திறந்து பொன்னும் மணியென நாட்டிலுள்ள மக்கள் பலருக்கும் தானம் செய்து புத்திரஉற்சவமாக கொண்டாடி மகிழ்ந்தான்.  சிங்கம் போன்ற திறம் வாய்ந்த தன் குமாரனுக்குச் சிறப்புடன் பிரதாபந்தன் எனப் பெயரிட்டு அழைத்தனர்.       

***********************************

பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்

பாடல் # 50

பிரிதிவிழ் தேவி யோர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநற் பரமன் கோயி லன்புடன் போக வெண்ணி
விரிநிற மலருஞ் சாந்தும் வேண்டிய பலவு மேந்திப்
பரிவுள தனையற் கொண்டு பாங்கினாற் சென்ற வன்றே.

---------------------------------

பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.  

---------------------------------

ஓர் நாள் பிரிதிவிதேவி ஏனைய பெரியதேவிமார்கள் அனைவருடன் தொழுவதற்கு அருகதைவுடைய அருகப்பெருமான் கோயிலுக்கு பத்தியோடு வழிபாடு செய்யக் கருதி ஆயத்தமானாள். எனவே அழகிய மணமலர்களையும் நறுமணமிக்க சாந்தினையும் பல பொன் தட்டுகளில் ஏந்தியவளாய், அன்பார்ந்த குமாரன் பிரதாபந்தனையும் அழைத்துக் கொண்டு ஆலயம் சென்றடைந்தாள்.  

***********************************
ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்

பாடல் # 51

சிறுவன்றன் சரணந் தீண்டச் சினாலயங் கதவு நீங்கப்
பிறைநுதற் றாதி தானும் பிள்ளைவிட் டுட்பு குந்தாள்
நறைமலர் வாவி தன்னு ணற்சுதன் வீழக் காணாச்
சிறையழி காதற் றாயுஞ் சென்றுடன் வீழ்ந்தா ளன்றே.

---------------------------------

சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்
நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச்
சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே. 

---------------------------------

பிரதிவிதேவி அந்த சித்தகூட சைத்யாலத்தின் நுழைவாயிலை அடைந்தபோது அதன்  கதவிலே குழந்தை பிரதாபந்தனின் பாதங்கள் பட்டதும் அவை உடனே திறந்துகொண்டன. அவ்வதிசய நிகழ்வைக் கண்ணுற்று பரவசத்துடன் அருகனை வணங்கவேண்டி உள்ளே நுழைந்த பிரதிவிதேவி தன் பிள்ளையை வெளியே விட்டுவிட்டு உள் சென்றுவிட்டாள். அவளுடன் தாதியும் அவசரமாக உள்ளே சென்று இருவரும் வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.  அவ்வேளையில் குழந்தை புரண்டு படுக்க எத்தனித்தபோது அருகிலுள்ள நாகங்கள் நிரம்பிய நாகக்குளத்திற்குள் நழுவி விழுந்து விட்டது. அதைக் கண்டு  தாயும் பதைபதைத்தாள். உடன் சேயின் மீதுள்ள வாத்சல்யம்  அவளையும் வாபிக்குள்(குளத்திற்குள்) வீழச்செய்தது.        
  

*********************************** 

பாடல் # 52

கறைகெழு வேலி னான்றன் காரிகை நீர்மே னிற்பப்
பிறையெயிற் றரவின் மீது பெற்றிருந் தனையற் கண்டு
பறையிடி முரச மார்ப்பப் பாங்கினா லெடுத்து வந்து
இறைவனை வணங்கி யேத்தி யியன்மனை புகுந்தா னன்றே.

---------------------------------
கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்
பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு
பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே.

---------------------------------

ஊன் கறை படிந்த வெற்றிவேலினை ஏந்திய சயந்தரன் மனைவி நல்வினைப் பயனால்    யாதொரு  தீங்குமின்றி நீரில் மூழ்கிவிடாமல் மேலே நின்றாள்,  பின்னையும் பாம்பினால் தீங்குற்றாளில்லை.  பிறைச் சந்திரனைப் போன்ற நச்சுப் பற்களையுடைய நாகம் தன்னுடைய படத்தின் மேல் பாதுகாப்பாகப் புதல்வனைத் தாங்கிக் கொண்டிருந்தது.  அவ்வதிசயக் காட்சியை கண்டு வியந்தவர்கள் அரசனுக்கு செய்தியை கொண்டு சென்றனர். அரசனும் வியந்து பறையோசை போலும் இடியோசை போலும் ஆனந்த பேரிகை முழங்க, மகனையும், மற்றவர்களையும் அழைத்து வந்து மீண்டும் இறைவனை வாழ்த்தி வணங்கியபடி வழிபாடு செய்து விட்டு தன் அரண்மனையை அடைந்தான்.            


********************************** 




நாககுமாரன் எனப் பெயர் பெற்றது

பாடல் # 53

நாகத்தின் சிரசின் மீது நன்மையிற் றரித்தென் றெண்ணி
நாகநற் குமர னென்று நரபதி நாமஞ் செய்தான்
நாகநே ரகலத் தானை நாமகட் சேர்த்தி யின்ப
நாகவிந் திரனைப் போல நரபதி யிருக்க மந்நாள்.

---------------------------------

நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி
நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான்
நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப
நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள்.  

---------------------------------

நாகமானது அங்கு யாதோர் இடுக்கணும் செய்யாமல் தன் சிரசின்மீது தாங்கிக் காப்பாற்றியதால் நற்குணமிக்க நாககுமாரன் இவன் என அவனுக்கு அரசன் பெயர் சூட்டினான். பின்னர் மலைக்கு நட்பாகிய மார்பினனாகிய அக் குமாரனுக்கு முதலில் நாமகள் என்னும் கலைமகளைத் திருமணம் செய்குவித்தான். மன்னன் பவணலோகத்து இந்திரனைப்போல இன்பற்றவனாய்  வாழுகின்ற நாளில்….

*** நாமகட் சேர்த்தலாவது- மைந்தனுக்குக் கல்வியையும் கலைகளையும் பயிற்றுவித்தலாகும்.  சீவகசிந்தாமணியிலே சீவகன் கல்விப் பயிற்சிபெறும் செய்திகளைக் கூறும் பகுதி ‘நாமகள் இலம்பகம்‘ எனப் பெயரிட்டழைக்கப்படுகின்றது.  இங்கே திருத்தக்க தேவர் பின்வருமாறு இந்நிகழ்ச்சியை வருணிப்பது இங்கு ஒப்பு நோக்கற்பாலது.
பவணர்கள் என்ற ஒருவகைத் தேவர்கள் வாழும் பூமிக்கான தலைவனின் பெயர் பவணஇந்திரனாகும்.

********************************** 


கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்

பாடல் # 54

கின்னரி மனோக ரீயென் கெணிகைநற் கன்னி மாரும்
அன்னவர் தாயும் வந்தே யரசனைக் கண்டு ரைப்பார்
என்னுடைச் சுதையர் கீத மிறைவநின் சிறுவன் காண்க
என்றவள் கூற நன்றென் றினிதுடன் கேட்கின்றாரே.

---------------------------------

கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க
என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே.  

-------------------------------

ஓர் நாள் பஞ்சசுகந்தனி என்னுங் கணிகை தனது சிறந்த இரு கன்னியர்களான கின்னரி மனோகரி எனும் இருவருடன் வந்து அரசன் அடி பணிந்தாள். ‘அரசே!என் குமாரிகளாகிய இவர்கள் வீணைவித்தையில் தமக்கு நிகரானவர் உலகில் எவருமிலர் என இறுமாப்பு எய்தி நிற்கின்றனர்.  இவர்கள் புலமையைக் கூர்ந்து, திறமை மிக்கவள் யாரெனக் கூறும் காளையர் யாருமில்லை.  ஆதலால், இவர்களுடைய இசைத் திறமையை உங்களது குமாரன் கண்டு, ஆராய்ந்து, புலமை மிகுந்தவர்களைத் தெரிவு செய்தருள வேண்டும்.  இசைப் புலமை அறிந்து கூறும் வல்லானுக்கே இவர்கள் இருவரும் மனைவிமார்களாவதற்கு உரியர்‘ என்றாள்.  அவ்வாறே அரசன் ஏற்பாடுசெய்ய அனைவரும் அவர்களது இசைக் கலையின் தரத்தைக் கேட்கலுற்றனர்.   

***********************************  








பாடல் # 55

இசையறி குமரன் கேட்டே யிளையவள் கீத நன்றென்
றசைவிலா மன்னன் றானு மதிசய மனத்த னாகித்
திசைவிளக் கனையாள் மூத்தாள் தெரிந்துநீ யென்கொ லென்ன
வசையின்றி மூத்தா டன்னை மனோகரி நோக்கக் கண்டேன்.

---------------------------------

இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று
அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன
வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன்.

---------------------------------

 இசைக் கலையில் தலைசிறந்து விளங்கிய நாககுமாரன், அவ்விரு கன்னியர்களின் இசைத் தரத்தை மிகக் கூர்ந்து கவனித்த பின்னர், ‘இளையவள் இசையே இனிது‘ என்றான்.  எதற்கும் அசையாத மன்னனும் வியந்தவனாய், “யான் கண்டவகையில் இருவரும் ஒத்தபுலமை உள்ளவர்களாய்  இசையை வாசித்தளித்தார்கள். அவ்வாறு உள்ளபோது மூத்தவள் திசை விளக்குப் போன்று ஒளிவீசியது; அவள் புலமை அறியாத திசையில்லை. அவ்வாறிருக்க அவர்களுள் வேற்றுமையை நீ எவ்வாறு கண்டுணர்ந்தாய்‘ என வினவினான். அதற்கு நாககுமாரன், ‘யாழை மீட்டி வாசிக்கும் போது மூத்தவள் வேறோன்றையும் நோக்காமல் கீழ்நோக்கியே பாடினாள்.  ஆனால் இளையவளோ தான் திறமையாக வாசித்ததோடு அல்லாது மூத்தாளின் இசையையும் பாட்டின் பொருளையும் ஒருங்கே கூர்ந்து நோக்கினாள்.  இக்குறிப்பால் இளையவளது இசை சிறந்தது என அறிந்தேன்‘ என்றான்.  அவையோர்கள் அனைவரும் நாககுமாரனை பாராட்டினார்கள்.         

***********************************  




நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்

பாடல் # 56


பலகல மணிந்த வல்குற் பஞ்சநற் சுகந்த னீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரற் கீந்தாள்
அலங்கல்வேற் குமரன் றானு மாயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்தின்பக் கடலு ளாழ்ந்தார்.

---------------------------------

பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்
அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார்.

---------------------------------

பலவகையான ஆபரணங்களை அணிந்துள்ள பஞ்ச சுகந்தனி என்ற அக்கணிகையானவள், அழகிய சிற்பம் போன்று திகழும் தன் கன்னியர் இருவரையும், தூய்மையான சிந்தாமணி போன்று ஒளிவீசும் நாககுமாரனுக்கு மணம் செய்து கொடுத்தாள். அழகிய வேலினை உடைய நாககுமாரனும், மங்கையர் இருவரும் இணைந்து புலன் இன்பங்களைக் குறைவின்றித் துய்த்து இன்பக்கடலினுள் மூழ்கினார்கள்.  இவ்வாறிருக்க….

***********************************

நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்

பாடல் # 57

நாகமிக் கதங்கொண் டோடி நகர்மாட மழித்துச் செல்ல
நாகநற் குமரன் சென்று நாகத்தை யடக்கிக் கொண்டு
வேகத்தின் விட்டு வந்து வேந்தநீ கொள்க வென்ன
வாகுநற் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் ளென்றான்.

---------------------------------

நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல
நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின்ந் விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன
வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான்.  

---------------------------------

ஓர் நாள் நீலகிரி என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு கட்டுத்தறியை முறித்துக் கொண்டு, வெளிப்போந்து, மக்களையும் மாளிகைகளையும் அழிக்கத் தொடங்கியது.  அதைக் கண்டு மாந்தர் அரசனிடம் முறையிட்டனர்.  அரசன் மூத்த புதல்வன் ஸ்ரீதரனை அனுப்பினான். ஆனால் அதை அடக்க அவனால் முடியவில்லை.  பிறகு நாககுமாரனை அனுப்ப, அவன் அதன் மதத்தை அடக்கி விரைவில் ஊர்ந்து போய் அரசன் எதிரில் நிறுத்தினான்.  அரசன் வியந்து, ‘இந்த யானையை அடக்கி வெற்றியடைந்தவன் நீயேயாதலால், நீயே இதனைக் கொள்வாயாக என அவனுக்கே வெகுமதியாக வழங்கினான். 

**********************************

பாடல் # 58

மற்றோர்நாட் குமரன் றுட்ட மாவினை யடக்கி மேற்கொண்
டுற்றவூர் வீதி தோறு மூர்ந்துதீக் கோடி யாட்டி
வெற்றிவேல் வேந்தற் காட்ட விழைந்துநீ கொள்க வென்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்திற் சேர்த்தி னானே.

---------------------------------

மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி
வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.  

---------------------------------

மற்றோரு நாள் நாககுமாரன் ஓர் பொல்லாக் குதிரை எதிர்ப்பட்டாரையெல்லாம் வாயாற் கடித்தும் காலால் மிதித்தும் தன் இச்சைப்படியே திரிந்து வருவதைக் கண்டு, நகர மக்கள் அரசனிடம் முறையிட்டனர்.  அரசனும் நாககுமாரனை அனுப்ப, அவனும் அக்குதிரையையும் அடக்கி மேலேறி, நகர வீதிகள் முழுவதும் மற்றும் பல திசைகளிலும் சவாரி செய்து காட்டி, முடிவில் அரசனெதிர்கொண்டு போய் நிறுத்தினான்.  அரசனும் மகிழ்ந்து அக் குதிரையை அவனுக்கே சன்மானமாக அளித்தான்.  அவனும் அக் குதிரையை லாயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தான்.    

**********************************

நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்

பாடல் # 59

அறவுரை யருளிச் செய்த வம்முனி குறித்த நான்குந்
திறவதி னெய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறுந் தேர்மா புகழ்பெற வூர்ந்து மூன்றாம்
பிறையது போல்வ ளர்ந்து பீடுடைக் குமர னானான்.

---------------------------------

அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான். 

---------------------------------

இங்ஙனம் பிகிதாஸ்ரவ முனிவர் கூறியருளிய அறவுரையில் குறிப்பிட்ட கோயிற்கதவும் திறக்கப்படுதல், நச்சுக்குளத்தில் வீழ்தல், யானையடக்குதல், குதிரையடக்குதல் என்ற நான்கு அறிகுறிகளும் தவறாமல் நடந்தன.  நாககுமாரன் சகல கலைக் கடலையும் கரைகண்ட புலமை மிக்கவனாய் யானை, தேர், குதிரைகளை ஏறித் தன்னைப் பலரும் புகழும்படி ஊர்ந்து காட்டி, மூன்றாம் பிறைபோல் இனிது வளர்ந்து பெருமைமிக்க திருமகனாக விளங்கினான்.  நிற்க--    


********************************** 


விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்

பாடல் # 60

தூசுநீர் விசாலக் கண்ணி சுதனைக்கண் டினிது ரைப்பாள்
தேசநற் புரங்க ளெங்குந் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசொணா வகையிற் கேட்டேன் பெருந்தவ மில்லை நீயும்
ஏசுற விகழொன் றின்றி யினியுனைக் காக்க வென்றாள்.

---------------------------------

தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்
தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள்.  

---------------------------------

நாககுமாரன் அடைந்துவரும் சீரையும் சிறப்பையும் கேட்கக் கேட்கக் களிப்பின்றி உளம் கொதித்துப் பொறாமையே குடிகொண்ட விசாலநேத்திரை, தன் குமாரன் ஸ்ரீதரனை நோக்கி, இனிது எடுத்து இயம்புகின்றாள்.  ‘குமாரனே! நீயோ அரசருக்குப்பின் பட்டத்துக்கு உரியவன். எனினும், உன்னைப் புகழ்வார் ஒருவரும் இல்லை.  நாககுமாரனைப் பற்றியே நாடு நகரம் எல்லாம் புகழ்கின்றது.  அச்சிறப்பை என் வாயால் கூற முடியவில்லை.  அதற்குரிய நற்பேறு உனக்கு வாய்க்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.  உன்னைப் பலரும் இழிவாக கருதுகின்றனர்.  புகழ் இல்லாமல் வாழ்தல் உனக்கு அழகல்ல.  இனி உனக்கு இடையூறு இன்றிப் பாதுகாத்துக் கொள்வாயாக‘ என்று கூறினாள்.  

**********************************

ஸ்ரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்

பாடல் # 61

சிரிதரன் கேட்டு நெஞ்சிற் செய்பொரு ளென்னென் றேகி
குறிகொண் டாயி ரத்தினோரைக் கொன்றிடு மொருவ னாகச்
செறியுமைஞ் ஞூறு பேருஞ் சீர்மையிற் கரத்தி னாரை
யறிவினிற் கூட்டிக் கொண்டு வமர்ந்தினி திருக்கு மந்நாள்.

---------------------------------

சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி
குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள்.

---------------------------------

தாய் வருத்தத்துடன் கூறியதைக் கேட்ட ஸ்ரீதரனும் நாககுமாரன் மேல் பொறாமை தீ வளரத்தொடங்கியது. இனி அவனை எவ்வாறு வெல்லலாம் எனச் சதிதிட்ட சிந்தனையில் இறங்கினான். பின்னர் வெளியே சென்று; தம்தனது தோள்வலியால் எதிர்த்த ஆயிரம் வீரர்களை ஒருங்கே கொல்லும் ஆற்றலுடைய ஐந்நூறு மல்லர்களைத் தனக்குத் துணையாகத் திரட்டிக் கொண்டான்.  இவர்களுடைய பலத்த்தைக் கொண்டு நாககுமாரனைக் கொல்லும் சமயம் எப்போது வாய்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.    

**********************************

நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

பாடல் # 62

குமரனுநன் மாதருங் குச்சமென்னும் வாவியுள்
மமரநீரி லாடவே வன்னமாலை குங்குமஞ்
சுமரவேந்திப் பட்டுடன் றோழிகொண்டு போகையிற்
சமையுமாட மீமிசைச் சயந்தர னிருந்ததே.

---------------------------------

குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்
மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம்
சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்
சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே.

---------------------------------


ஓர் நாள் நாககுமாரன் தன் மனைவியர் கின்னரி, மனோகரி ஆகிய இருவரோடும் நகரின் அருகேயுள்ள ‘குச்சம்‘ என்னும் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தனன்.  அவ்வமயம் அவன் தாயார் பிரிதிவிதேவி அவர்களுக்கு வேண்டிய உணவும் உடையும் பூமாலையும் குங்குமமும் பொன் தட்டுகளில் ஏந்தித் தோழியையும் உடன் அழைத்துக்கொண்டு வீதி வழியே சென்று கொண்டிருந்தாள்.  அப்போது சயந்தரமன்னன் தன் மாளிகையின் மேல் மாடத்தில் வீற்றிருந்தான்.             

********************************** 



விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்

பாடல் # 63

வேந்தன்பக் கங்கூறுநல் விசாலநேத் திரையவள்
போந்தனள் மனைவியாற் புணருஞ்சோரன் றன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
யேந்திழையா ணிற்பக்கண் டினிச்சுதன் பணிந்ததே.

---------------------------------

வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே.

---------------------------------

உள்ளத்தில் பொறாமையே மிகுதியாய்கொண்ட விசாலநேத்திரையானவள் உடனே அரசனைக் கண்டு, ‘அரசே! தங்கள் காதலியாகிய பிரிதிவிதேவி ஓர் கள்ள நாயகனைப் புணர்ந்து வருகின்றாள்.  அவனுக்கு நாடோறும் உணவு உடை முதலிய வற்றை கொண்டுபோய்க் கொடுத்து வருகிறாள்.  இன்றும் அவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியுடன் வீதிவழியே சென்று கொண்டிருக்கின்றாள், அங்கே பார்!‘ எனச் சுட்டிக்காட்டினாள்.  அரசனும் ஐயுற்று அவள் போக்கைக் கவனித்து உற்று நோக்கிக்   கொண்டிருந்தான்.  பிரிதிவிதேவியோ அவ்வாறின்றித் தன் குமாரன் நீராடுகின்ற குளத்தின் கரையைப் போய்ச் சேர்ந்தாள்.  அவளைக் கண்ட நாககுமாரன் கரையேறி அன்போடு தாயிடம் சென்று அவள் பாதங்களைப் பணிந்தான். 

**********************************

பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்

பாடல் # 64

பொய்யுரை புனைந்தவளைப் புரவலனுஞ் சீறினான்
நையுமிடை மாதரு நாகநற் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் றாங்கியே
வெய்யவேற்கண் டாயுடன் வியன்மனை யடைந்தனன்.

---------------------------------

பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன். 64

---------------------------------

பிறகு அவள் கொண்டு சென்ற மாலை, சந்தனம், ஆடை முதலியவற்றை நாககுமாரனும் அவன் மனைவியரும் அணிந்து கொண்டனர். வேல் போன்ற கண்களையுடைய தாயும் தனையனும் நுண்ணிடையுடைய மருமகள்மார்களுமாகிய அனைவர்களும் தங்கள் மாளிகையை அடைந்தனர்.  இக் காட்சிகளை எல்லாம் சயந்தர மன்னன் நேரில் கவனித்துக் கொண்டிருந்தானாதலால், பிரிதிவிதேவியிடம் சற்றும் பிழை இல்லை, அவள் கற்புக்கரசியே.  விசால நேத்திரையோ இவள் மேற் கொண்ட பொறாமை எண்ணத்தால் இப்பெரும் பாதகமான பொய்யுரைகளைத் தானே கற்பனை செய்து கூறியிருக்கின்றாள் என்று உண்மையுணர்ந்து அவள்மீது அடங்காச் சீற்றங்கொண்டான்.  

**********************************

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

பாடல் # 65

மன்னன்றன் தேவியை மாதேயெங்கு போனதென்
நின்னுடைப் புதல்வனீ ராடற்காணப் போனதென்
நின்னுடன் மனைதனி லீண்டினிதி னாடலென்
நந்நகர்ப் புறத்தனைய னாடனீங்க வென்றனன்.

---------------------------------

மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.  

---------------------------------

சயந்தர மன்னன் பிரிதிவிதேவியின் மாளிகை அடைந்து, அவளை நோக்கி, ‘மாதே! நீ எங்கே, என்ன காரணத்திற்காக நகர்ப்புறத்துச் சென்றாய்?‘ என்று வினவியதும், அவளும் அரசனிடம், ‘தங்கள் புதல்வன் நீர் விளையாட்டைக் காண வேண்டிச் சென்றேன்‘ என்றாள்.  ‘இனி, நீங்கள் இருவரும் இம்மாளிகையை விட்டு எங்கும் வெளியே செல்லவேண்டாம். நாககுமாரனும் உன்னுடன் மாளிகையினுள்ளே விளையாடுவானாக.  வன விளையாட்டு புனல் விளையாட்டு என நகர்ப்புறத்தே போகவேண்டாம்‘ எனக் கட்டளையிட்டுச் சென்றான்.  

**********************************






நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்

பாடல் # 69

ஆடுவா ரணமிசை யண்ணல்வந் திழிதர
நீடுமா ளிகையடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடுஞ்சூது மனைபுகுந் தரசர்தம்மை வென்றபின்
கூடுமா பரணமே குமரன் கொண்டி யேகினான்.;

---------------------------------

ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான். 

---------------------------------

வெற்றியானை மீது அமர்ந்து உலாப்போய்கொண்டிருந்த நாககுமாரன் பவனியை முடித்துவந்து தாயின் அரண்மனையில் இறங்கி உள்ளேபுகுந்தான். அங்கு பல பொருள்கள் களவாடப்பட்டிருத்தலையும் தாய் கழுத்தணிகளை இழந்து வருந்துதலையும் கண்டு, ‘அம்மா யாது நிகழ்ந்தது‘ எனக் கேட்க, நடந்தவற்றைக் கூறி வருந்தினாள்.  நாககுமாரன், ‘அம்மா ஒன்றும் கவலை வேண்டாம், யான் உடனே சென்று, பல பொருள்களை ஈட்டித் தருகிறேன்‘ எனத் தேற்றிவிட்டு வெளியே சென்றான். அந்நகரில் பல்லாயிரக்கணக்கான அரசர்கள் கூடிச் சூதாடும் ஓர் விடுதிக்குள் புகுந்து, அவர்களோடு சூதாடி முறையே வெற்றி கண்டு, அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களை எல்லாம் கைக்கொண்டு போய்த் தன் தாயிடம் கொடுத்தருளினான்.  தாய் மனம் மகிழ்ந்தாள்.  அரசனுடைய மந்திரி முதலியோரும் தத்தம் பொருள் இழந்தனர்.  

**********************************

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்

பாடல் # 70

அரசர்க ளனைவரு மதிகரா சனைத்தொழ
அரவமணி யாரமு மான முத்து மாலையும்
கரமதிற் கடகமுங் காய்பொற்கே யூரமும்
வெரிமணிக ளிலதைவேந் தென்னவிக் கூற்றென.

---------------------------------

அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென. 

---------------------------------

சூதாட்டத்தில் தோற்ற சிற்றரசர்கள் முதலிய பலரும் அரசவை அரியணையில்  வீற்றிருக்கின்ற அரசருக்கரசனாகிய சயந்தரனைக் கண்டு வணங்கினர்.  அரசன் அவர்களை நோக்கி, ‘அரசர்களே! உங்கள் மார்பில் தவழும் மணி மாலைகள் எங்கே?  அழகிய முத்து மாலைகள் எங்கே?  கைகளை அலங்கரிக்கும் கடகங்கள், வாகுவலயங்கள் எல்லாம் எங்கே?  நீங்கள் இக்கோலத்துடன் இங்கு வரக் காரணம் யாது?‘ எனக் கேட்டான்.  

**********************************

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

பாடல் # 71

சூதினாற் செயித்துநின் சுதனணிகள் கொண்டனன்
சூதிலாட வென்னுடன் சுதனழைப்ப வந்தபின்
சூதினிற் றுடங்கிநற் சுதனுந்தந்தை யன்பினிற்
சூதிரண்டி லாட்டினுஞ் சுதன்மிகச் செயித்தனன்.

---------------------------------

சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.

---------------------------------

 ‘அரசே! நாங்கள் அனைவரும் உங்கள் மகன் நாககுமாரனோடு விளையாட்டாகச் சூதாடியதால்  அனைவரும் ஆபரணங்களைத் தோல்வியுற்றோம்.  வெற்றியடைந்த நாககுமாரன் அவற்றைக் கொண்டு போய்விட்டான்‘ எனக் கூறுவதைக் செவியுற்ற அரசன் ஆச்சரியமடைந்தவனாய்த் தானும் அவனோடு சூதாடி, அவற்றை மீட்க எண்ணி பிள்ளையை வரவழைத்தான்.  அவனுடன் அன்புகூற இன்னுரையாடிச் சூதாடத் தொடங்கினான்.  இருமுறை மட்டுமே சூதாடினார்கள்.  இரண்டிலும் நாககுமாரனே வெற்றியடைந்தான்.  வெற்றியடைந்ததும், இந்தளவு ஆட்டம் போதுமானதெனத் திருப்தியோடு மேற்கொண்டு ஆடாமல் நின்றான்.  தோல்வியுற்ற தந்தையாகிய மன்னன் தான் அணிந்திருந்த அணிகலன்களையும் கருவூலச் செல்வங்களையும் இழந்தான்.  (அதாவது அவ்வளவு பொருட்களை பணயமாக வைத்து ஆடியுள்ளான்.)  

**********************************


தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு
ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

பாடல் # 72

இனியசூதி லாடலுக் கிசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை யியல்பினாற் கொடுத்துடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருட் கொடுத்தபின்
அணியரச ராரமு மவரவர்க் களித்தனன்.

---------------------------------

இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.

---------------------------------

வெற்றியடைந்த குமாரன் வேந்தன் பொன் அறைக்குச் சென்று,  முன்னம் தன் இனிய தாயின் மாளிகையில் அரசன் கவர்ந்த பொருள்களையும் அணிகளையும், தன்னுடன் சூதாடித் தோற்ற மன்னர் எண்ணாயிரவர்களின் அணிகளையும் எடுத்துக்கொண்டு வந்து, தாய்க்குரிய பொருள்களைத் தாயிடம் கொடுத்தான் மற்றும்  சூதில் வென்ற பொன் அணிகலன்களையும் அந்தந்த அரசருக்கு வழங்கினான்.  அனைவரும் அகமகிழ்ந்து நாககுமாரனைப் போற்றினார்கள்.   

***********************************

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

பாடல் # 73

மன்னவன்றன் னேவலான் மாநகர்ப் புறத்தினின்
நன்னகர் சமைத்தினிதின் நற்சுத னிருக்கவென்
றன்னகரி னாமமு மலங்கரிய புரமெனத்
தன்னகரின் மேவுங்பொற் றாரணிந்த காளையே.

---------------------------------

மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.

---------------------------------

மன்னன் இனி நாககுமாரனுடைய வெளிவிளையாடல்களைத் தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை எனக் கருதினான். உடனே கொல்லர்களை அழைத்து அந் நகருக்கு வெளியே ஓர் அழகிய அரண்மனையை உருவாக்குமாறு கட்டளையிட்டான்.  அவ்வாறு உருவான அந்த அரண்மனையில் நாககுமாரனை விருப்பத்துடன் குடியேறச் செய்தான்.  அவ்வரச மாளிகைக்கு  ‘அலங்கரிய புரம்‘ எனப் பெயரிட்டு அழைக்கலானான்.  அன்று முதல் நாககுமாரன் அம் மாளிகையில் வசித்து வரலாயினான்.

(இரண்டாம் சருக்கம் முற்றும்)

***********************************

மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று

பாடல் # 74

அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர்வந்து சேர்ந்தது கூற லுற்றேன்.

---------------------------------

அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்ந்கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன். 

---------------------------------

அலங்கரியபுரத்தே நாககுமரன் தன் தேவியர்களுடன் தனித்தும்; எவ்விதை இடையூறின்றி அன்போடு வனவிளையாட்டும் புனல் விளையாட்டும் புரிந்து, இனிதே இன்புற்றுக் களித்து வருகின்ற நாளில், ஊழ்வினைப்பயனால் அவனுக்குத் தோழர்கள் வந்து சேர்ந்த வரலாற்றைக் கூறத் தொடங்குகிறேன்.  

*********************************** 



நாககுமாரனின் தோழர் வரலாறு

பாடல் # 75

பாரணி சூர சேனம் பண்ணுதற் கரிய நாட்டுள்
ஊரணி கொடிக ளோங்கு முத்தர மதுரை தன்னில்
வாரணி கொங்கை மார்க்கு மாரனேர் செயவர் மாவின்
சீரணி தேவி நாமஞ் செயவதி யென்ப தாகும்.

---------------------------------

பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.  

---------------------------------

பாரிலே மிகச் சிறந்த ஒப்பனை செய்வதற்கு அரியது சூரசேனம் என்னும் அழகிய நாடு. மேலும் ஒப்பற்ற அழகிய வெற்றிக்கொடி நாட்டிய அதன் தலைநகரம் வடமதுரை என்பதாகும்.  அதை அரசிருக்கையாகக் கொண்டு செயவர்மன்(ஜெயவர்மன்) என்னும் அரசன் ஆண்டுவந்தான்.  அவனுடைய அழகால் மங்கையருக்கு மன்மதனைப் போன்ற தோற்றத்தை அளித்தான்.  அவனுடைய கற்புக்கரசியாகிய கோப்பெருந்தேவி செயவதி(ஜெயவதி) எனப்படுவாள்.   

***********************************

வியாள-மாவியாளரின் தோற்றம்

பாடல் # 76

வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாளமா வியாள ரென்னுஞ்
சேர்ந்திரு புதல்வர் தோன்றிச் செவ்வியாற் செல்லு நாளில்
காந்திநற் றவத்தோர் வந்தார் கடவுணேர் தூம சேனர்
வேந்தன்வந் தடிவ ணங்கி விரித்தொன்று வினவி னானே.

---------------------------------

வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே. 

---------------------------------

இவர்களிருவரும் ஐம்புலவின்பம் முழுமையாத்துய்த்து வரும் நாளில் செயவதிக்கு முறையே வியாளன் மகாவியாளன் என்னும் இரட்டைப் புதல்வர்கள் பிறந்தனர். இருவரும் இனிதே நன்கு வளர்ந்துவரும் நாளில் பல்கலைகளில் தேர்ச்சி பெற்று அரசர்க்குரிய சிறப்போடு விளங்கினர்.  இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்மலையும் கோடி வீரர்களையும் ஒருங்கே வீழ்க்கும் உடல் வலியும் உள்ளத்திறனுமுடையவராய திகழ்ந்ததால், ‘கோடி படர்கள்‘ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுச் சீருடன்  இருக்கும் காலத்தில், ஓர்நாள் அந்நகரத்தே அறிவொளிமிக்க கடவுளுக்கு நிகராகிய அருந்தவ முனிவர் தூமசேனர் வந்தருளினார்.  அப்போது வேந்தனாகிய செயவருமன் விரைந்துவந்து அவரது திருவடியில் வீழ்ந்து வணங்கி அறவமுதம் ஆரப் பருகியபின், ஊழ்வினையால் அவரைத் தொழுது ஓர் விண்ணப்பம் செய்தான்.  

***********************************

பாடல் # 77

என்னுடையப் புதல்வர் தாமு மினியர சாளு மொன்றோ
அன்னியன் சேவை யொன்றோ வடிகணீ ரருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமு மொருவனைச் சேவை பண்ணும்
என்றவர் குறியுஞ் சொல்ல யெழின்முடி புதல்வர்க் கீந்தான்.

---------------------------------

என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.

---------------------------------

"முனியரசே! என்னுடைய புதல்வர்கள் இருவரும் இனி வருங்காலத்தில் ஒன்று அரசாள்வரோ? அயலாருக்குச் சேவை செய்வார்களோ? இவ்விரண்டில் ஒன்றைத் தாங்கள் விளக்கியருள வேண்டும்" என மன்னன் வினவினான். முனிவரும் அவதிஞானத்தால் அறிந்து, "அரசே! நின் புதல்வர்கள் இருவரும் அரசாள மாட்டார்கள், ஒருவனிடத்தே சேவை செய்வார்கள். அவற்றை அறிந்து கொள்ள சில அறிகுறிகளும் தென்படும். அஃதாவது எவனைக் கண்டவுடன், (சமஸ்கிரத நூலில் உள்ளபடி காணும்போது…) வியாளனது நெற்றியிலுள்ள கண் பார்வையற்றுப்போகிறதோ அந்த நபரே அவனுக்கு எஜமானன் ஆவார். அவனும் அடிபணிந்து சேவை செய்வான்.  மேலும் அழகில் சிறந்த மாவியாளனை கண்டதும் , எவள் ஒருவள் இவனை அழகற்றவன் என்று இகழ்கின்றாளோ, அவள் கணவனையே ஸ்வாமியாய் ஏற்று இவன் சேவை செய்வான் என்று வருங்கால முரைத்தார். இவற்றைக் கேட்ட வேந்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றவனாய் வியாளனுக்கு முடிசூட்டி மாவியாளனை இளவரசனாக்கினான்.  

(இச்செய்தியை சமஸ்கிரத நூலில் - 7த்ருதிய: சர்க:  ஐந்து, ஆறாம் செய்யுளில் காணலாம், மேலும் தூமசேனர் எனும் முனிவர் யமதரர் என்றே கூறப்பட்டுள்ளது.)


*********************************** 


வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

பாடல் # 78

மன்னன்போய் வனம டைந்து மாமுனி யாகி நிற்பப்
பின்னவ ரமைச்சன் றன்மேற் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்னிறை தேடிப் போந்தார் தரைமகட் டிலதம் போலும்
பன்னக நகர நேராம் பாடலி புரம தாமே.

---------------------------------

மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.

---------------------------------

அரசன் செயவர்மன்  அகம் மற்றும் புறப் பற்றறுத்து வனம் ஏகி அருந்த வாழ்வை ஏற்று அவ்வழி நோற்கலானான். அவன் மக்களாகிய வியாளன் மாவியாளன் இருவரும் இனிது அரசாண்டாரில்லை.  அமைச்சரிடம் தங்களுக்குரிய அரசுரிமையை ஒப்படைத்து விட்டுத் தாம் சேவை செய்தற்குரிய இறைவன் யாவன் எனத் தேடிச் சென்று முடிவில் நாக லோகத்துக்கு நிகராகிய பாடலிபுர நகரத்தை அடைந்தார்கள். 

***********************************


பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

பாடல் # 79

நன்னகர்க் கிறைவ னல்ல னாமஞ்சிரீ வர்ம னாகுந்
தன்னவன் றேவி பேருந் தக்கசிரீ மதியா மம்பொற்
கிண்ணம்போல் முலையாள் புத்ரி கேணிகாசுந் தரியென் பாளாம்
விண்ணுறை தேவர் போல வியாளமா வியாளர் வந்தார்.

---------------------------------

நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.  

---------------------------------

அப்பாடலிபுர நகருக்கான இறைவனுடைய பெயர் ஸ்ரீவர்மன் என்பான்.  அவனுடைய அரசமாதேவியின் பேர் தகுதிவாய்ந்த ஸ்ரீமதி என்பாள்.  பொற் கிண்ணம் போன்ற மார்பகங்களையுடைய இவ்வரசியின் மகள் பெயர் கணிகை சுந்தரி யாகும். அந் நகரின் வீதி வழியே சொர்க்கத்தில் வாழும் தேவர்களைப் போல சிறப்பான தோற்றமுடைய வியாளன் மாவியாளன் என்ற  அவ்வரச குமாரர்கள் இருவரும் சென்றார்கள்.   
   
***********************************

பாடல் # 80

மன்ன னைக்கண் டிருப்ப மாவியாளன் றகமை கண்டு
தன்னுடையப் புதல்வி தன்னைத் தானவற் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரி வியாள னுக்கு
மன்னியற் கொடுப்ப மன்ன ரிருவரு மின்புற் றாரே.

---------------------------------

மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.
  
---------------------------------

சென்ற இரு அரசகுமாரர்களும், பாடலிபுர நகர அரசனாகிய ஸ்ரீவர்மனைக் கண்டு வணங்கினார்.  அரசனும் அவர்களுக்கு நல்லாசி கூறி, ஓர் ஆசனத்தில் அமரச் செய்து, இனிமையான நல்லுரை கூறினான். அவர்களுடைய தோற்றப் பொலிவைப் பார்த்து அரச குமாரர்கள் என்பதை ஊகித்துணர்ந்தான். அவர்களுள் இளையோனாகிய மாவியாளனுக்குத் தன் மகள் கணிகைசுந்தரியையும் மூத்தவனாகிய வியாளனுக்குத் தன் தாதியின் மகளாகிய இலளிதாசுந்தரியையும் முறைப்படி திருமணம் செய்து கொடுக்க இருவரும் இன்புற்று இருந்தனர்.  



*********************************** 


நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

பாடல் # 81

சிறுதினஞ் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநற் குமரற் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணுஞ் சேரவே மறையக் கண்டு
சிறியன்யா னின்னா னென்றான் செல்வனு மகிழ்வுற் றானே.

---------------------------------
சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே. 

---------------------------------

சிலநாள் சென்றபின் வியாளன்மட்டும் தனியே அந் நகரை விட்டு வெளியேறி, நாககுமாரன் வாழும் கனகபுரத்தை அடைந்தான்.  அச் சமயம் நாககுமாரன் யானைமீது ஏறி நகருலாப் போய் வந்து, தனது மாளிகையின் முன்பாக யானையினின்றும் இறங்கிக் கொண்டிருந்தான்.  அவ்வேளையில் நாககுமாரனைக் கண்ட வியாளனுடைய நெற்றியில் சிறுமலரைபோன்றிருந்த முன்றாவது கண் முற்றிலுமாய் மறைந்து விட்டது.  இதனால் வியாளன் இவனே தனக்கு நாயகன் எனத் துணிந்து நாககுமாரனை வணங்கித் தன் வரலாற்றை விளக்கிக்கூறினான். அதனைக் கேட்ட குமாரனும் குதூகலமடைந்தான்.  

***********************************

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்

பாடல் # 82

செல்வனைக் கொல்வ தென்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்த தென்ன வள்ளலை வதைக்க வென்றார்
கொல்களி யானைக் கம்பங் கொண்டுடன் சாடி னானே

---------------------------------

செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே. 

---------------------------------

நாககுமாரன் நகர்வலம் சென்று வந்ததையும், இந்நிகழ்வினையும் கண்டு வியந்த அந்நகர மக்கள் இவனது சிறப்பை வானளவாப் புகழ்ந்தது.  அதைக் கேட்கக் கேட்க ஸ்ரீதரனுடைய மனம் பொறாமையால் புழுங்கியது.  இன்றே இவனைக் கொல்வேன் என வஞ்சினம் கூறித் தன் வீரர்கள் ஐந்நூற்றுவரை அவனை நோக்கி ஏவினான்.  அவர்களும் விரைந்து நாககுமாரனுடைய மாளிகையைச் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.  அவ்விடத்தில் நின்ற வியாளன் அவ்வீரர்களைக் கண்டு “நீவிர் அனைவரும் விரைவில் திடீரென போர்க்கோலங்கொள்ளக் காரணம் யாது” என்று கேட்க; அவர்களும் “வள்ளலாகிய நாககுமாரனை வதைக்கவே இவ்விடம் வந்தோம்” என ஆர்ப்பரித்தனர்  இக் கூற்றைக் கேட்ட வியாளன் கடுங்கோபம் கொண்டு, அக்கணமே அங்கிருந்த யானை கட்டும் கம்பம் ஒன்றை பெயர்த்தெடுத்து அவ்வீரர்களையெல்லாம் நையப் புடைத்தான். அவர்கள் அனைவரும் மாண்டொழிந்தார்கள்.  

***********************************

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்

பாடல் # 83

சேனைதன் மரணங் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேற் குமரன் றோன்றி யவனும்வந் தெதிர்த்த போது
மானவேன் மன்னன் கேட்டு மந்திரி தன்னை யேவ
கோனவர் குமரற் கண்டு கொலைத் தொழி லொழித்த தன்றே.

---------------------------------

சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே. 

---------------------------------

தனது சேனைகள் எல்லாம் மாண்ட செய்தியைக் கேட்ட ஸ்ரீதரன் சீற்றங்கொண்டவனாய்ப் போர்க் கோலங்கொண்டு சென்று, நாககுமாரனைத் தன்னோடு போர்புரியுமாறு அறைகூவினான்.  குமாரனும் யானைமீது ஏறிச் சென்று எதிர் தாக்குதலைத் தொடங்கினான்.  இச்செய்தியைத் தந்தையாகிய சயந்திரமன்னன் கேள்வியுற்றான். உடன் தனது மாமந்திரி நயந்தரனை அழைத்து,  சென்று ஏனது குமாரர்களைப் போர் புரியாவண்ணம் சமாதானம் செய்யுங்கள் என ஏவினான்.  அவனும் சென்று அவர்கள் ஏற்கக்கூடிய வண்ணம் எடுத்துக் கூறிப் போரை நிறுத்தினான்.  கொலைத் தொழில் ஒழிந்து அமைதி நிலவிற்று.

*********************************** 


மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

பாடல் # 84

நாகநற் குமரற் கண்டு நயந்தர னினிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டவன் வந்தா னென்ன
போகநீ தேசத் தென்று புரவலன் சொன்னா னென்ன
ஆகவே யவன்முன் போகி லவ்வண்ணஞ் செய்வ னென்றான்.

---------------------------------

நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.  

---------------------------------

நயந்தர அமைச்சன் நாககுமாரனைப் பார்த்து இனிய சொற்களால், ‘குமரனே! நீ உன் மனைக்குமட்டுமே சிறந்த சூரனாயிருக்கின்றாய் போலும்! இன்றேல் வேற்றுநாட்டினும் சென்று நின் வீரியத்தைக் காட்டுவாயன்றோ?  உடன்பிறந்தவனுடன் அன்றோ போர் புரிகின்றாய்.  வியாளன் ஸ்ரீதரன் சேனைகளை வதைத்தான். ஆதலால் ஸ்ரீதரன் வெகுண்டு போருக்கு வந்தான்.  அவனோடு போர் புரிதல் முறையன்று.  நீங்கள் இருவரும் இந் நகரிலே இருப்பீர்களென்றால் என்றும் உங்களுக்குள் உள்ள பகை ஒழிதல் அரிதாகிவிடும்.  ஆதலின் நீ இன்றே வேற்று நாடு போய்விடுதல் வேண்டும்.  நான் கூறுபவை என் சொந்த அபிப்ராயமன்று.  உனது தந்தை கூறியவையாகும்‘ என்றான்.  இதைக் கேட்ட நாககுமாரன் வருத்த முற்றானில்லை.  போவதற்கு முடிவெடுத்த குமாரன் நயந்தரனை நோக்கிச், ‘ஸ்ரீதரன் இன்னும் போனபாடில்லை.  போர்க் கருதியே நிற்கின்றான் போலும்.  அவன் முன் தன் மனைக்குச் சென்றால் யானும் போவேன்‘ என்றான்.  

***********************************

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

பாடல் # 85

நயந்தரன் சென்று ரைப்பா னல்லறி வின்றி நீயே
செயந்தனி லொருவன் கையிற் சேனைதன் மரணங் கண்டும்
நயந்தறி யாத நீயே நன்மனை புகுக வென்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்திற் சென்ற வன்றே.

---------------------------------

நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.  

 ---------------------------------

உடனே நயந்தரன் ஸ்ரீதரன் பால் சென்று, ‘அப்பா நீ அறிவிலியாக அல்லவோ இருக்கின்றாய்.  உனது வீரர்கள் யாவரும்கூடி ஒருவனை வெல்ல முடியவில்லை.  அவ்வொருவன் கைவலிமை கொண்டே உனது சேனைகள் யாவும் மாண்டன.  அவ்வொருவனே வெற்றிபெற்றான். அதை நிதானித்து அறியும் நுண்ணறிவு உனக்கு இல்லை,  இன்னும் போரிட விழைகின்றாய்,  அப்போரை விடுத்தலே உனக்கு நல்லது.  ஆதலால் விரைந்து நின் மனைக்கு சென்றிடுவாயாக‘ எனக் கடிந்துரைத்தான்.  ஸ்ரீதரனும் அச்சத்துடன் தன் சேனையோடு மாளிகை அடைந்தான்.

***********************************

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

பாடல் # 86

தந்தையா லமைச்சன் சொல்லத் தானுந் தன்றாய்க் குரைத்து
தந்திமேன் மாதர் கூடத் தோழனுந் தானு மேறி
நந்திய வியாள னன்னூர் மதுரை யிற்புக் கிருந்து
அந்தமி லுவகை யெய்தி அமர்ந்தினி தொழுகு நாளில்.

---------------------------------

தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.  

---------------------------------

தந்தையின் சொல்லாக மந்திரி கூறக் கேட்ட நாககுமாரனும் தன் மனைக்கு சென்று  தன் தாயைக் கண்டு, ‘அம்மா! இனி நான் இந் நகரை விட்டு வேற்றுநாடு செல்ல வேண்டுமாம்.  இக் கட்டளை மந்திரி வாயிலாகத் தந்தையிடப் பட்டது.  ஆதலால், நான் செல்ல வேண்டும்‘ எனத் தாயினிடத்தே விடைபெற்றுக் கொண்டு தானும் தேவிமார்களுமாக யானை மீதேறிப் புறப்பட்டுப் போய், வியாளனுடைய வட மதுரைக்குச் சென்றான். அங்கே தேவதத்தை என்னும் ஓர் மங்கையினுடைய இல்லத்தில் தங்கி, அளவற்ற மகிழ்ச்சியோடு உறைவாராயினர்.

***********************************

ஓர்நாள் நாககுமாரன் நகரைத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.  அவனை நோக்கி, தேவதத்தை, ஐயனே! கன்னியா குச்சம் எனும் நகருக்கு அதிபதியாகிய மன்னன் செயவர்மன். அவனது மனைவி குணவதி, இவர்களுக்குப் புத்திரி சுசீலை.  இப் பெண்ணைச் சிம்மபுர மன்னன் அரிவர்மனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஒரு மனதாய் தீர்மானித்தனர்.  அதைக் கேள்வியுற்ற இந்த வடமதுரை நகர்க்கரசன் துட்டவாக்கியன்(துஷ்டவாக்யன்), அப்பெண்ணைத் தான் மணக்க விரும்பி கன்னியாகுச்சம் சென்று, அவளைக் கவர்ந்து வந்து சிறையிட்டுள்ளான்.  அவளோ விருப்பமின்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள்.  நீ அதைக் கண்டு ஐயுறல் வேண்டாம்.  உனது காரியத்தைக் கடைப்பிடித்துப் போய் வருவாயாக‘ என்றாள்.   

  

அதைக் கேட்ட நாககுமாரன் அவ்விடம் அடைந்து காவல்புரியும் போர்வீரர்களை அச்சமுறுத்தி துரத்திவிட்டுத் தன் வீரர்களை வைத்து அவளுக்குப் புகலிடம் தந்தான்.  அதனால் துட்டவாக்கியன் வெகுண்டு நாககுமாரன் மேல் போர் தொடுக்கலானான்.  அப் போரில் தனக்கு எதிரியாக வியாளன் வரக் கண்டான்.  உடனே துட்டவாக்கியன் ‘மந்திரி புத்திரனாகிய எனக்குத் இந்நகர் அரசியலையே அளித்த வள்ளல் வியாளனல்லவா’  என எண்ணி அந் நன்றி மறவாமல் அக்கணமே அவன் பொற்பாதங்களைத் தொழுதான்.  வியாளனும் அவனுக்குத் தன் தலைவனாகிய நாககுமாரனை அறிமுகப் படுத்தினான்.  அவனும் நாககுமாரனை வணங்கி நட்புடையவனானான்.  சுசீலை என்னும் பெண்மணியை முதலில் முடிவுசெய்த அரிவர்மனுக்கே உரிமையாக்கினான். (இந்நிகழ்விற்கான பாடல்கள் தமிழில் கிடைக்கவில்லை. சமஸ்கிரத நூலில் உள்ளது.)           


மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

பாடல் # 87

மன்னவ குமரனு மன்னனுந் தோழனும்
அந்நகர்ப் புறத்தினி லாடன் மேவலின்
இன்னிசை வீணைவேந் திளையரைஞ் நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக் கண்ண லுரைத்தனன்.

---------------------------------

மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.  

---------------------------------

நாககுமாரனும், வியாளனும் அவனது தோழன் துட்டவாக்கியன் ஆகிய மூவரும் அந்நகருக்கு வெளியே சென்று ஓர் நாள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக யாழிசையிலே வல்லவர்களாகிய ஐந்நூறு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர்.  அவர்களைக் கண்டு நாககுமாரன் அவர்களிடம் சென்று வினவியது யாதெனில்…..   

***********************************

பாடல் # 88

எங்குளிர் யாவர்நீ ரெங்கினிப் போவதென்
றங்கவர் தம்முளே யறிந்தொரு வன்சொலுந்
தங்களூர் நாமமுந் தந்தைதாய் பேருரைத்
திங்கிவ ரென்கையின் வீணைகற் பவர்களே.

---------------------------------

எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே. 

---------------------------------

‘இளைஞர்களே! நீவிர் அனைவரும் யாவீர்?  எங்கிருந்து வருகின்றீர்கள்?  எங்குப் செல்கின்றீர்கள்?‘ என்று கேட்டான்.  அக்கூட்டத்திற்கு ஆசானாகிய கீர்த்திவர்மன், அவ்விளைஞர்கள் ஒவ்வொருவருடைய ஊரையும் பேரையும் தாய் தந்தையர் எவரென்பதையும் அறிவித்து, இவர்கள் அனைவரும் தன்னிடம் வீணை கற்பவராவார்கள் எனக் கூறினான்.            

***********************************


வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

பாடல் # 89

நந்துகாம் பீரநாட்டி னகருங் காம்பீர மென்னு
நந்தன ராசன் றேவி நாமந் தாரணியாம் புத்திரி
கந்தமார் திரிபுவ னாரதி கைவீணை யதனிற் றோற்று
என்தம ரோடுங் கூட வெங்களூர்க் கேறச் சென்றோம்.

---------------------------------

நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம். 

---------------------------------

காம்பீரம் என்ற நாட்டின் தலைநகரம் காம்பீரமாகும். அந்நாட்டின் மன்னன் நந்தன்.  அவன் பட்டத்துத்தேவி தாரணியாவள்.  அவர்களின் அழகுமிக்க புத்திரியின் பெயர் திரிபுவனாரதி என்பாள்.  நாங்கள் அனைவரும் அவளுடைய சுயம்வரத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற வீணைப்போட்டியில் தோல்வியுற்றதால், இப்போது எங்கள் ஊருக்கு திரும்பி போகின்றோம் என்றான்.       

***********************************

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

பாடல் # 90

வெற்றிவேற் குமரன் கேட்டு வியாள னுந் தானுஞ் சென்று
விற்புரு வதனத் தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை யவடன் காமக் கடலிடை நீந்து நாளில்
உற்றதோர் வணிக னைக்கண் டுவந்ததி சயத்தைக் கேட்டான்.

---------------------------------

வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான். 

---------------------------------   

அச்செய்தியைக் கேட்ட நாககுமாரன் துட்டவாக்கியனை அவ்விடத்தே  இருக்கச் சொல்லிவிட்டு, தானும் வியாளனும் விரைந்து அச்சுயம்பரத்தில் கலந்து கொள்ள காம்பீரம் சென்றனர். அங்கு வீணைப் போட்டியில் திரிபுவனாரதியை தன் இசையால் வென்றான்.  அவளைத் திருமணம் செய்து கொண்டு, அவளோடு இனிது இன்பந்துய்த்து வரும்நாளில்;  வேற்று நாட்டு வாணிகன் ஒருவன் அவ்வீதி வழியாய் வந்து கொண்டிருந்தான்.  நாககுமாரன் மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி, ‘வணிகரே நீவிர் போய் வரும் நாடுகளில் யாதேனும் அதிசய நிகழ்ச்சியுண்டோ?‘ எனக் கேட்டான். 

***********************************

வணிகன் கூறிய அற்புதச் செய்தி

பாடல் # 91

தீதில்பூந் திலக மென்னுஞ் சினாலய மதனின் முன்னிற்
சோதிமிக் கிரணந் தோன்றுஞ் சூரிய னுச்சி காலம்
ஓதிய குரல னாகி யொருவனின் றலறு கின்றான்
ஏதுவென் றறியே னென்றா னெரிமணிக் கடகக் கையான்.

---------------------------------

தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.  

---------------------------------

அவ் வணிகன் நாககுமாரனை நோக்கி, ‘ஐயா! இரம்மியகம் என்னும் காட்டிலே திரிசங்க மென்னும் மலையின் மீது ‘பூமிதிலகம்‘ என்னும் ஓர் ஜினாலயம் ஒன்று இருக்கிறது.  நாள்தோறும் வெப்பக்கதிர் வெதுப்பும் கதிரவன் நண்பகல் உச்சிப் பொழுதிற்கு வரும்வேளையில், அவ்வாலயத்தின் முன்னர் ஒருவன் வந்து நின்றபடி கூக்குரலிட்டுக் கொண்டு வருகிறான்.  யான் இன்ன காரணம் என்பதை அறியேன் என்று கூறினான்.    

***********************************


வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

பாடல் # 92

குன்றெனத் திரண்ட தோளான் குமரனுங் கேட்டுவந்து
சென்றந்த வால யத்திற் சினவரற் பணிந்து நின்று
வென்றந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்னந்த மண்ட பத்தின் முகமலர்ந் தினிதி ருந்தான்.

---------------------------------

குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.  

---------------------------------

மலைக்குன்று போல் திரண்ட தோள்வலிமைவுடைய நாககுமாரன் அதைக் கேட்டு அகம் மகிழ்ந்தான்.  அவ்வதிசய நிகழ்ச்சியைக் காண விரும்பி அவ்விடத்திற்குச் சென்று, அந்த ஜினாலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் அருகனைப் பணிந்து நின்று துதிப்பாடல்  பாடியபடி தொழுது வணங்கினான். பின்னர்  முகமலர்ச்சியோடு உச்சிவேளையில் அவ்வாலயம் வந்துசெல்லும், அறிமுகமில்லாதவனது வருகையை எதிர்ப்பார்த்து ஆங்குள்ள முன் மண்டபத்தில் காத்திருந்தான்.       

***********************************

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

பாடல் # 93

பூசலிட் டொருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக் கின்ற தென்ன வொருதனி நின்ற நீயார்
ஆசையென் மனைவி தன்னை யதிபீம வசுரன் கொண்டு
பேசொணா மலைமு ழஞ்சுட் பிலத்தினில் வைத்தி ருந்தான்.

---------------------------------

பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.  

---------------------------------

சூரியன் உச்சியில் பயணிக்கும் வேளையில் நலியவன் ஒருவன் அச்சினராலயம் வந்து ஓவென கூச்சலிட்டு கூவியபடி மூலஇறையோனிடத்தே தன் துயரத்தை முறையிட்டபடி நின்றிருந்தான்.  நாககுமாரன் அவனுக்கிரங்கி , ‘அப்பா! நீ யார்?‘ ஏன் இப்படி இறைவனிடம் அரற்றுகிறாய், என்ன ஆயிற்று உனது வாழ்வில், என்னிடம் கூறு? என வினவ, அவனும், ‘ஐயா! என் காதலியைப் பீமன் என்னும் ஓர் அசுரன் தூக்கிச் சென்று யாரும் நெருங்கவியலாத பயங்கர இருள் சுழ்ந்த மலைக்குகைக்குள் வைத்திருக்கின்றான்’ என்று கூறினான்.

***********************************
       
பாடல் # 94

இரம்மிய வனத்துள் வாழ்வே னிரம்மிய வேட னன்பேன்
விம்முறு துயர்சொற் கேட்டு வீரனக் குகைகாட் டென்னச்
செம்மையிற் சென்று காட்டச் செல்வனுஞ் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னி லண்ணலு முவந்து நின்றான்.

---------------------------------

இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான். 94

---------------------------------

மேலும்,  ‘எனது பெயர் இரம்மிய வேடன். நான் இந்த இரம்மிய வனத்துள் வாழ்கின்றேன்‘ என விம்மி துயரப்பட்டு அழுத வண்ணம் கூறினான்.  அதைக் கேட்ட குமாரன், ‘அப்பா! இனி அழ வேண்டாம்.  நான் உன் துயரைப் போக்குகிறேன்.  விரைந்து எனக்கு அக் குகையைக் காட்டுவாயாக‘  என வேடனும் அழைத்துக் கொண்டுபோய் தொலைவிலிருந்தபடி அக் குகையைச் சுட்டிக் காட்டினான்.  நாககுமாரனும் அச்சம் சிறிதுமின்றி அக்குகை வாயில் முன் நின்றான்.      

***********************************


வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

பாடல் # 95

வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநற் கிராதன் றேவி தனைவிடு வித்த பின்புச்
சந்திர காந்தி வாளுஞ் சாலமிக் கமளி தானுங்
கந்தநற் காம மென்னுங் கரண்டகங் கொடுத்த தன்றே.

---------------------------------

வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.  

---------------------------------

ஓர் வியந்தரதேவன் அக்குகையிலிருந்து வெளியே  வந்து நாககுமாரனுடைய பாதங்களைப் பணிந்து நின்று, ‘ஐயா! நான் ஓர் கேவல ஞானியாரிடம் தருமம்  கேட்கையில் என்னிடமுள்ள இச்சிறந்த பொருள்களுக்கு உரியவர் யார் எனக் கேட்டேன்.  அதற்கு அவர், இந்த இரம்மிய வேடன் கூக்குரலைக் கேட்டுப் பரிந்துவரும் ஓர் ஆடவனுக்கே அது உரியதாகும் எனக் கூறினார்.  ஆதலால், இந்த வேடன் மனைவியைக் கொண்டு வந்து இக்குகையில் வைத்துள்ளேன்‘ என உரைத்த பின்; அவளை விடுவித்து விட நாககுமாரன் ஆணை பிறப்பித்ததும், அவ்வியந்திரனும் உடன் அவளை அவன் முன் நிறுத்தினான். மேலும் நாககுமாரனைப் பணிந்து, தன் வரலாற்றைக் கூறிச் சந்திரகாந்தம் எனும் வாளும், நாகசயனம் எனும் படுக்கையும், காம கரண்டகம் எனும் செப்புச்சிமிழையும் கொடுத்துச் சிறப்பித்தான்.

***********************************
  
வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

பாடல் # 96

அங்குநின் றண்ணற் போந்து வதிசயங் கேட்ப வேடன்
இங்குள மலைவா ரத்தி லிரணிய குகையுண் டென்னக்
குங்கும மணிந்த மார்பன் குமரன்கேட் டங்குச் சென்றான்
அங்குள யியக்கி வந்து வடிபணிந் தினிது சொல்வாள்.

---------------------------------

அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்ந்குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள். 

---------------------------------

பெருமை மிக்க நாககுமாரன் அங்கு நின்ற போது, அவ் வேடனை நோக்கி, ‘இன்னும் இம் மலையில் யாதேனும் அதிசயம் உளதோ?‘ என, அவ்வேடன், ‘ஐயனே இம் மலையடிவாரத்தில் ஓர் இரணிய குகை உள்ளது‘  என்று அதை அவனுக்குச் சுட்டிக் காட்டினான். குமரனும் அங்குச் சென்றான்.  உடனே அங்குள்ள சுதர்சனை எனும் ஓர் இயக்கி தோன்றினாள். அவன் பாதங்களை வணங்கி, ‘ஐயனே! வெள்ளியம் பெருமலையின் தெற்கு பகுதியில் அளகாபுரி எனும் ஓர் நகர் உள்ளது.  அந் நகருக்கு அரசன் ‘ஜிதசத்துரு‘ என்பான்.  அவ்வரசர் பன்னீராண்டுக் கடுந்தவம் புரிந்தான்.  அதனால் என்னோடு சேர்ந்து நாலாயிரம் இயக்கிகள் அவனுக்கு ஏவலர்கள் ஆனோம்.

ஆனால் அந்த சமயத்தில் ஜெயபேரிகை முழங்கியது.  அதன் விபரத்தை அறிந்து கொள்ள அவ்வரசன் எங்களிடம் வினவ, எங்களில் ஒருத்தியாகிய அவலோகினி எனும் வித்தையை ஓதிய பின்;  அம்முரசொலி முனிசுவிரத தீர்த்தங்கரரின் கேவல ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்வுற்று பூமாரி பொழிவதோடுமட்டுமல்லாது, வானக தேவர்களால் ஜெயபேரிகையும் முழக்க மிடுகிறது என அறிந்து கூறினாள். அதனை கேள்வியுற்ற அவ்வரசர் அத்தீர்த்தங்கரரின் சமவசரணம் சென்று அவரது திவ்யமொழி வழியே அறவுரை கேட்டான். அதன் பின்னர் வாழ்க்கையில் வைராக்கியம் தோன்ற உடனே துறவு மேற்கொண்டான்.

அச்சமயம் நாங்கள் அனைவரும், அரசே எங்களை வேண்டித் தவம் புரிந்தாய், ஆனால் தற்போது எங்களை ஏற்காமல்  துறவு ஏற்கின்றீரே!  இனி  நாங்கள் அனைவரும் யாருக்கு ஏவல் புரிதல் வேண்டும்‘ எனக் கேட்டோம்.  அவரும் கேவலியிடம் சென்று அறிந்து திரும்பி வந்து, ‘தெய்வங்களே! இனிவரும் நேமித்தீர்த்தங்கரர் காலத்தில் இங்கு நாககுமாரன் எனும் ஓர் அரசிளங்குமரன் வருவான்.  அவனுக்கு ஏவல் செய்யுங்கள்‘ எனப் பணித்துச் சென்றார்’ இவ்வாறாக தம்நிலையை விளக்கி கூறினாள்.        

***********************************

பாடல் # 97

இனியுனக காள ரானோ மீரி ரண்டா யிரவர்
எனவவள் சொல்ல நன்றென் றினியொரு காரி யத்தின்
நினைவன்யா னங்கு வாவென் னீங்கிநற் குமரன் வந்து
வனசரன் றன்னைக் கண்டு வதிசயங் கேட்பச் சொல்வான்.

---------------------------------

இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான். 

 ---------------------------------

மேலும் அந்த இயக்கி “ஆதலால், நாங்கள் நாலாயிரவரும் இனி உனக்கு ஏவலர்கள் ஆயினோம்.  எங்கள் பணிவை ஏற்றுக் கொள்வீராக என்றனள்.  அதற்கு நாககுமாரன், ‘தெய்வங்களே! நன்று நீங்கள் இங்கேயே இருங்கள்.  யான் வேண்டும் காலத்தில் வாருங்கள்‘  எனப் பணித்து அவைகளிடமிருந்து விடைபெற்றான். மீண்டும் அவ் வேடனை நோக்கி, ‘இன்னும் யாதேனும் அதிசயம் உளதோ’ எனக் கேட்க வேடனும் சொல்லத்துவங்குகிறான்.      

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

பாடல் # 98


வாள்கரஞ் சுழற்றி நிற்பான் வியந்தர னொருவ னென்னக்
காலினைப் பற்றி யீர்ப்பக் கனநிதி கண்டு காவ
லாளெனத் தெய்வம் வைத்து வருகனா லையத்துட் சென்று
தோளன தோழன் கூடத் தொல்கிரி புரத்தைச் சேர்ந்தான்.

---------------------------------
வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான். 

---------------------------------

‘ஐயனே! அதோ வேதாளம் ஒன்று தன் கையில் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.  அதை அருகில் அணுகுவோர் ஒருவரும் இல்லை‘ என்றான்.  உடனே நாககுமாரன் சென்று, அவ் வேதாளத்தின் காலை பற்றி இழுத்துப் பிளந்து தள்ளினான்.  ஆங்கே பெரும் நிதிக்குவியலைக் கண்டான்.  அங்கே, ‘இவ் வேதாளத்தை வீழ்த்திய ஒருவருக்கே இந் நிதிக்குவியல் உரியதாகும்‘ என்றொரு சாசனம் இருந்தது.  அதைக் கண்டவுடன் முன்கூறிய தெய்வங்களை வேண்டி நினைத்தான். உடனே அந்த நாலாயிரம் தெய்வங்களும் வந்து பணிந்து ஏவல் கேட்டு நின்றனர். அவர்கள் அனைவரையும் அந் நிதிக்குக் காவல் வைத்து விட்டு அருகன் ஆலயம் சென்றான். அங்கே அருகனை சிரம்தரைபட வணங்கினான். பிறகு, தானும் தன் மனைவி திரிபுவனாரதியும் தோழனுமாக அங்கேயுள்ள ‘கிரிகூடபுரம்‘ என்னும் நகரத்தை அடைந்து, ஓர் ஆலமரத்தின்கீழ் அமர்த்திருந்தான்.  

---------------------------------
புண்ணியாச்ரவகதா கோசம் – பணிகுமாரகதா சாஹித்யம் என்னும் சமஸ்கிர காதையில் குறிப்பிட்டுள்ளது தமிழ் நாககுமாரன் கதையில் விடுபட்டுள்ளது.

அதாவது:  அவன் ஆலமர நிழலில் அமர்ந்தபோது அம்மரத்தின் விழுதுகள் மரத்தை விட்டுக் கிளம்பின. மிகவும் இலகுவாக அவற்றை ஒன்றுசேர்த்து ஊஞ்சலாகச் செய்து ஊசலாட்டம் புரிந்தான். அவ்வாறு ஊசலாட்டம் புரிந்தவரை எவர் என்று அறிய அம்மரத்தின் காப்பாளன் நாககுமாரனை அணுகி வணங்கி, அய்யனே இங்கு கிரிகூடநகராதிபதி வனராஜர் மற்றும் வனமாலைக்கும் பிறந்தவளான லக்ஷ்மிமதி(கணவிழி) என்பவள். மிக்க அழகு வாய்ந்தவளாய் திகழ்கிறாள். இந்நகருக்கு ஒரு சமயம் விஜயம் செய்த ‘அவதிபோதர்’ என்னும் முனிவர் வருகை தந்தார். அவரிடம் அரசன் தன் மகள் லக்ஷ்மிமதிக்கு கண்வனாக யார் வருவான் என்று வினவ, அவரும் ‘யாரது தரிசனத்தால் இந்த தேசத்திலுள்ள ஆலமரத்தின் விழுதுகள் மரத்திலிருந்து கிளம்புகிறதோ அவரே இவளது கணவன் ஆவான்’ என்று கூறினார்.

அம்மாமனிதரைக் கண்டு பிடிக்கும் பொருட்டு இம்மரத்தின் காப்பாளனாய் நான் நியமிக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, உடன் தன் அரசனிடம் இச்செய்தியை கொண்டு சென்றான்.

அம்மன்னனும் அவளது தேவியும், மகள் லக்ஷ்மிமதியும் அவ்விடம் சென்று நாககுமாரன் அவ்விழுதின் பிணைப்பில் அமர்ந்து ஊஞ்சலாடியதை கண்டு தன் நகருக்கு அழைத்துச் சென்றனர். (இனி தமிழ் காப்பியப்பாடலின் தொடர்ச்சியை காண்போம்.)

--------------------------------- 
கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

பாடல் # 99

அந்நகர்க் கதிப னான வனராசன் றேவி தானு
மன்னிய முலையி னாள்பேர் வனமாலை மகணன் னாமம்
நன்னுதற் கணைவிழியை நாகநற் குமர னுக்குப்
பன்னரும் வேள்வி தன்னாற் பார்த்திபன் கொடுத்த தன்றே.

---------------------------------

அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே. 99

---------------------------------

திரிகூடபுரத்தின் அரசனான வனராஜனுக்கும் அவன் மனைவி வனமாலைக்கும் பிறந்து பருவம் எய்திவளாய் பிறைபோலும் நெற்றி அழகும் வேல்போன்று வருத்தும் விழியழகுமுடைய கணவிழி(லக்ஷ்மிமதி) என்னும் கன்னியை நாககுமாரனுக்கு வேள்வி விதிப்படி அனைவரும் மகிழ்ந்து வாழ்த்தும் வண்ணம் திருமணம் செய்து வைத்தான்.

***********************************

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

பாடல் # 100

தாரணி வனரா சற்குத் தாயத்தா னொருவன் றன்னைச்
சீரணி குமரன் றோழன் சிறந்தணி மாமன் கூடப்
பாரணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
யேரணி வனரா சற்கு யெழில்பெறக் கொடுத்த வன்றே.

---------------------------------

தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

---------------------------------

ஓர் நாள் நகர்புறத்தே உள்ள அழகிய சோலைக்கு ஜயர், விஜயர் என்ற சாரணர் இருவர் வந்தனர். இச்செய்தியை கேட்டறிந்த  நாககுமாரன் விரைந்து அவ்விடம் சென்று வணங்கினான். அவர்களிடம் வணக்கத்துடன் வனராசனுடைய குலம் யாது என வினவினான்.  ஜயர் என்னும் மூத்த முனிவர், ‘இப் புண்டரபுரத்தரசன் அபராஜிதன், அவன் தேவிமார் சத்தியவதி, சுந்தரி என்ற இருவர்.  இவர்களுக்குப் புத்திரர்கள் முறையே பீமன், மகா பீமன் என இருவர்.  அபராஜிதன் பீமனுக்கு அரசை வழங்கிவிட்டுத் துறந்து நற்கதி அடைந்தான். ஆனால் பீமனோ மகாபீமனால் துரத்தப்பட்டு இங்கு வந்து நகர் அமைத்திருக்கின்றான்.  மகாபீமனுடைய புத்திரன் பீமாங்கன்,  பீமனுடைய புத்திரன் சோமப்பிரபன். மகாபீமனுடைய பேரனே இப்பொழுது அரசாளும் மன்னன் வனராஜன்,  சோம வம்சத்தில் பிறந்தவன்‘ என வரலாற்றை அவதிஞானத்தால் அறிந்து கூறினார். அதைக்கேட்டு மகிழ்ந்து அச்சாரண முனிவர்களை மீண்டும் வணங்கித் தொழுது தன் மாளிகை அடைந்தான்.  ஓர் நாள் சோம வம்சத்தைப் பற்றிய சிலாசாசனங்கண்டு புண்டரவர்த்தனபுரத்தை வனராஜனுக்கு உரிமையாக்கும்படி செய்வாயாக என வியாளனுக்கு எடுத்துரைத்தான். அதைக் கேள்வியுற்ற சோமபிரபனோ சினம் கொண்டவனாய், ‘அவ்வாறாயின் வனராசனுடன் யுத்த பூமியில் பெற்றுக் கொள்வானாக’, என்று கடிந்து உரைத்தான்.  அதைக் கேட்ட வியாளனும், சோமப்பிரபனுடைய படைகளைக் கொன்று, சோமப்பிரபனைக் கட்டி இழுத்து வந்து நாககுமாரன் முன் நிறுத்தினான்.  குமாரனும் சோமப்பிரபனை மன்னித்து  விடுவித்துதோடு, வனராசனுக்கு  அச்சாசனத்திலுள்ளவாறு புண்டரபுரத்தை வழங்கி முடிசூட்டினான். 

*********************************** 

பாடல் # 101

சொல்லரு நாடி ழந்து சோமநற் பிரபன் போகி
யெல்லையிற் குணத்தின் மிக்க யெமதர ரடிவ ணங்கி
நல்லருட் சுரந்த ளிக்கு நற்றவ முனிவ னாகி
யொல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.

--------------------------------

சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.  

------------------------------------------

புகழரிய நாட்டை இழந்த சோமப்பிரபன், வைராக்கியமுற்று வாழ்க்கையைத் துறந்து, பல அரசர்களுடன், வரம்பற்ற குணஸ்தான மிக்க யமதரர் என்னும் முனிவரரை வணங்கி நல்லருள் சுரந்து பல்லுயிரையும் போற்றும் மாவிரதம் பூண்டு, நற்றவனாய்ப் புகழ்தற் கரிய கடுந்தவம் மேற்கொண்டு நிற்கலானான்.                                       

(மூன்றாம் சருக்கம் முற்றும்)

***********************************  

நான்காம் சருக்கம்



சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப்
பணிந்து வேண்டுதல்

பாடல் # 102

சுப்பிர திட்ட மெனும்புர மாள்பவன்
செப்பு வன்மை செயவர்ம ராசன்றன்
ஒப்பில் பாவையு மோவியம் போற்செம்பொன்
செப்பு நேர்முலை யாணற் செயவதி.

---------------------------------

சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.  

---------------------------------

சுப்பிர திட்டம் என்னும் சிறப்பான நகரை ஆளும் மன்னன் சொல்லாற்ற லுடைய செயவருமன் என்பவன் ஆவான்.  அவனுடைய மனைவி ஒப்பிலா அழகுமிக்க சித்திரப் பாவை போன்ற ஜெயவதி என்பவள் ஆவாள்.   

***********************************

பாடல் # 103

மக்கட் சேத்திய பேத்திய ரென்றிவர்
மிக்க செல்வத்தின் மேன்மையிற் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட் டிறைஞ்சினான்.

----------------------------

மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.

------------------------

இவர்களுடைய மக்கள் அசேத்தியர், அபேத்தியர் என இருவர் செல்வமும் செழிப்பும் மிக்கோராய் பெருமையேறி வாழ்ந்து வந்தனர், அந் நகர்ப்புற வனத்தே உன்னதமான உபவாசங்களை ஏற்று குணத்தால் உயர்ந்த பிகிதாஸ்வர முனிவர் விஜயம் செய்து தங்கி அறம் பகர்ந்தார்.  செயவருமன் என்னும் மன்னனும் அம்முனிவர் இருப்பிடம் சென்று, அவருடைய திருவடிகளை வணங்கி இறைஞ்சினான். 

***********************************

பாடல் # 104

இருவ ரென்சுத ரென்னுடை ராச்சிய
மருவி யாளுமோ மற்றொரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்தறி விக்கெனத்
திருமுடி மன்ன செப்புவன் கேளென்றார்.

---------------------------------

இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

---------------------------------

அங்ஙனம் சென்ற மன்னன் இறைஞ்சி, ‘முனிவர் பெருமானே! என் குமாரர்கள் சேதிக்க, பேதிக்க முடியாதவர்கள்(அங்கஹீனம்).  இருவரும் சுதந்திரமாக என் அரசை ஆண்டு வருவார்களா என்பதைத் தாங்கள் திருவுள்ளம் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்குவீராக‘ என, அவரும், ‘அரசே! கூறுகிறேன் கேட்பாயாக‘ என்று கூறத்தொடங்கினார் 


*********************************** 


முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

பாடல் # 105

புண்டிர மெனும்புரப் புரவ லன்றனைக்
கண்டிறந் துந்திடுங் காவ லன்றனை
யண்டிநற் சேவையா ராவ ராமெனப்
பண்டிறத் தவத்தவர் பண்ணுரை கேட்டபின்.

---------------------------------

புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.  

---------------------------------

எவன் ஒருவன் சோமப் பிரபனைப் புண்டரபுரத்தினின்றும் துரத்தி அரசை வனராஜனுக்குக் கொடுப்பானோ அவனே இவர்கள் இருவருக்கும் ஸ்வாமி ஆவான். இவர்கள் அவனைக் கண்டபின் யாது சேவை என வேண்டி அவன் இடும் ஏவல் ஏற்று பணிவார்கள் என்பதாக பண்பட்ட அருந்தவ முனிவர் இன்னுரை வழங்கினார்.     

***********************************

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

பாடல் # 106

மக்கண் மிசைநில மன்னவன் வைத்துடன்
மிக்கு ணத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி யாளுநாள்.

---------------------------------

மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

---------------------------------

மன்னன் ஜயவர்மன் தம் மக்கள் அசேத்திய-அபேத்தியர் வசம் தனது அரசாட்சியை வழங்கி முடிசூட்டினான். உடனே தான் துறவறம் ஏற்று பொருண்மைத்துவம், உருவத்துவம், குணத்துவங்களைக் கைக்கொண்டு வீடுபேற்றைப் பெற சலிப்படையாமல் பிரதிமா யோகத்தில் நின்று நற்கதி அடைந்தான்.  நற்பண்புகளை உடைய புத்திரர்கள் இந்நாட்டை ஆண்டு வரும் நாளிலே --                   

***********************************

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

பாடல் # 107

நல்ல ருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை யில்குண விருடிக டம்முடன்
தொல்பு கழ்ப்புரஞ் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவி னயந்திருந் தார்களே.

---------------------------------

நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.  

---------------------------------

புண்டரவர்த்தன புரத்தினின்றும் நாககுமாரனால் கட்டவிழ்த்து விடுதலைப் பெற்றபின், சோமப்பிரபனும் சிறந்த தவமேற்கொண்டு முனிநிலையில் எல்லையற்ற நற்குணங்கள் நிறைந்த தவத்தில் முன்னேறிய முனிவர்கள் பலரோடும் புகழ்மிக்க சுப்பிரதிட்டபுர நகரத்தின் எழில் மிக்க வனத்தில் இனிதே தங்கியிருந்தார்.   

***********************************


பாடல் # 108

செயவர் மன்சுதர் சீர்நற் றவர்களை
நயம றிந்துசேர் நன்னடி யைப்பணிந்
தியம்பு மிம்முனி யிப்ப துறந்ததென்
செயந்த ரன்சுதன் சீற்றத்தி னானதே.

---------------------------------

செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.  

---------------------------------

செயவருமன் குமாரர்களாகிய அசேத்திய அபேத்தியர் இருவரும் புகழ்மிக்க அந்த தவசீலர்களைக் கண்டு வணங்கு முறை அறிந்து, அடி பணிந்து இறைஞ்சினர். பின்னர் பணிவுடன் அம்முனிவரிடம், சோமப்பிரபரெனும் இம் முனிவர் இப்போது துறத்தற்குக் காரணம் யாது? எனக் கேட்க, சயந்தர மன்னனின் புதல்வன் நாககுமாரனுடைய சீற்றத்தினால் துறந்து தவமேற்கொண்டமையைக் கூறினர்; மேலும் நாககுமாரன் புகழை விளக்கிக் கூறினார்கள்.   

***********************************

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

பாடல் # 109

என்றவ ருரையைக் கேட்டு இருவருந் துறந்து போந்து
சென்றுநற் குமரன் றன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக் காள ரானோ மென்றவர் கூற நன்றென்
குன்றுசூழ் வனசா லத்துக் குமரன்சென் றிருந்த வன்றே.

---------------------------------

என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.  

---------------------------------

நாககுமாரனுடைய பெருமையைக் கேட்ட குமாரர்கள் இருவரும் அரசை அமைச்சன்பால் ஒப்படைத்து விட்டு,  புறப்பட்டு புண்டரவர்த்தனபுரத்தை அடைந்து, குமாரனைக் கண்டு வணங்கினர். ‘இன்று முதல் நாங்கள் இருவரும் உமக்கு ஏவலாளர் ஆயினோம்’ என்று தங்கள் வரலாற்றைக் கூறினார்கள்.  குமாரனும் மகிழ்ந்து அவர்களை அழைத்துக்கொண்டு குன்றைச் சூழ்ந்துள்ள ஜாலாந்தகம் எனும் வனத்திலுள்ள ஆலமர நிழலில் அமர்ந்திருந்தான்.         

***********************************

பாடல் # 110

அடிமரத் திருப்ப வண்ண லந்நிழற் றிரித லின்றித்
கடிகமழ் மார்பன் றன்னைக் காத்துட னிருப்பப் பின்னும்
விடமரப் பழங்க ளெல்லாம் வியந்து நற்றுய்த் திருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுட் கோமக னிருந்த போழ்தில்.

---------------------------------

அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.  

---------------------------------

நல்வினை மிக்க நாககுமாரன் அம்மரத்தடியில் தங்கியிருக்கும் போது, அம்மர நிழல் வழக்கம் போல் கதிரொளியால் மாறுபாடு பெறுதல் இன்றி நிலையாக நின்று மணமிக்க வாகைமாலை சூடிய அக் குமாரனுக்கு நிழல் தந்து பாதுகாத்திருந்தது. அம்மரத்து நச்சுக் கனிகள் யாவும் வியக்கத்தக்க அமுதக்கனிகளாக மாறின. அவர்கள் அவைகளைத் தின்று ஆரோக்கியமாய் இருந்தனர்.  இவ்வாறு கோமகன் அம் மலர்ச் சோலையில் கோமகன் இருந்த சமயத்தில்-         

***********************************

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

பாடல் # 111

அஞ்சுநூற் றுவர்கள் வந்தே யடிபணிந் தினிய கூறும்
தஞ்சமா யெங்கட் கெல்லாந் தவமுனி குறியு ரைப்ப
புஞ்சிய வனத்தி ருந்தோம் புரவல னின்னி டத்தின்
நெஞ்சிலிற் குறியன் காணா யெமக்குநீ றிறைவ னென்றார்.

-------------------------

அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.  

-------------------------

ஐந்நூறு பேர்கள் வந்து குமாரனுடைய பாதங்களை வணங்கி இனிய சொற்களால், ‘தலைவா, அருந்தவ முனிவர் ஒருவரைக் கேட்டபோது, அவர் அவதி ஞானத்தால் அறிந்து, எங்கட்குப் புகலிடமாகிய தலைவர், ஜாலாந்தக வனத்து நச்சு மரக்கனிகள் யாருக்கு அமுதக் கனிகளாக மாறி இன்பம் கொடுக்குமோ, மாறாத நிழலைத் தருமோ, அவரே என்றனர்.  நின் கட்டளைக் கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம்.  எங்கட்குத் தலைமகன் நீயே‘ என்றனர்.      

***********************************

(தமிழ்ப் பாடலில் இன்றி சமஸ்கிர காப்பியத்தில் உள்ளவாறு: பின்னர் நாககுமாரன் அங்கிருந்து கிளம்பி அந்தரபட்டிணத்தை அடைந்தான். அங்கு சிம்மதரன் ஆட்சி செய்து வந்தான். அவன் குமாரனை அழைத்து தம்மாளிகையில் தங்க வைத்து மகிழந்த போது; ஒருவர் பட்டோலையைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார். அதில் குறிப்பிட்டதை குமாரனிடம் கூறினான். தன் தோழனுக்கு இன்னல் நேர்ந்துள்ளது என்று குறிப்பிருந்தது. மேலும் அது எவ்வாறெனில் செளராட்டிர நாட்டில் கிர்நகர் நகர அரசன் அரிவர்மன், அவன் மனைவி மிருகலோசனை, மகள் குணவதியாவாள். சிந்து தேசத்து அரசன் சண்டப்ரத்யோதனன் என்பவன் குணவதியை அடைவதற்காக வந்தான். ஆனால் ஹரிவர்மனோ அவளை நாககுமாரனுக்கே மணமுடிக்க உறுதி பூண்டுள்ளான். அதனால் நான் அங்கு சென்று வரும்வரை தாங்கள் இங்கேயே தங்குங்கள் என்றான். ஆனால் நாககுமாரன் அதைக்கேட்டு நகைத்தவனாய் அவனுடன் குமாரனும் கிர்நகர் சென்றடைந்தான்.)

----------------------- 

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

பாடல் # 112

அரியநல் லுரையைக் கேட்டு வவ்வணங் களிசிறந்து
உரியநல் லவர்க ளோடு முவந்துட னெழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவர னெதிர்க் கொண் டேக யவன்மனை புகுந்தி ருந்தான்.

-------------------------

அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.  

-------------------------

வாய்த்தற்கரிய இந் நல்லுரையைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைந்த குமாரன், ‘தோழர்களே! உங்கள் விருப்பம் போல நடவுங்கள்‘ என்று ஐந்தூறுவர்களிடம் கூறியதோடு; அவர்களுடன் கிரிநகர் சென்றடைந்தான். அந்நகரத்து அரசன் அரிவரனும் அதைக்கேள்வியுற்று குமாரனை எதிர் கொண்டு அழைத்து தன் மாளிகையில் தங்கவைத்தான்.


***********************************

பாடல் # 113        

அரிவர ராசன் றேவி யருந்ததி யனைய கற்பின்
மிருகலோ சனையென் பாளா மிக்கநன் மகடன் பேருஞ்
சுரிகுழற் கருங்கண் செவ்வாய்த் துடியிடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதன னிச்சித்துப் பெருநகர் வளைந்த தன்றே.

-------------------------

அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.  

-------------------------

அரிவரன் என்னும் அம் மன்னனுடைய தேவி அருந்ததி போலும் கற்புக்கரசி மிருகலோசனை என்பாள்.  இவர்களுடைய நற் குணமிக்க புதல்வி குணவதி எனும் பேருடையாள்.  சுருண்ட குழலும் கரிய கண்ணும் சிவந்த வாயும் உடைய அக் கட்டழகியைச் சிந்துதேசாதிபதி சண்டப் பிரத்தியோதனன் மணக்க விரும்பி, அதிப்பிரசண்டன் முதலிய கோட்படர்களாகிய தன் படை பலத்தோடும் வந்து, அந் நகரை வளைய முற்றுகையிட்டான்.      


*********************************** 



பாடல் # 114

நாகநற் குமரன் கேட்டு நாற்படை யோடுஞ் சென்று
வேகநற் போர்க்க ளத்தில் வெற்றிகொண் டவனை யோட்டி
நாகநல் லெருத்தின் வந்து நகர்புகுந் திருப்ப மிக்க
போகமிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்த தன்றே.

-------------------------


நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.  

-------------------------

அதைக் கேள்வியுற்ற நாககுமாரன் தன்னுடைய யானை, தேர், குதிரை, காலாளாகிய நால்வகைப் படைகளோடும் சென்று, கோபாவேசத்துடன் போர்க்களத்திலே கடுஞ்சமர் புரிந்து, அவனைப் புறமுதுகு இட்டு ஓடச் செய்தான். கிரிநகர் மக்களுடைய உயிர்ப் பயம் பொருட் பயம் அகற்றித்  வாழ்வளித்து, வெற்றிமாலை சூடியபடி , யானைமீது ஏறி வெற்றி முரசாரைய நகரை அடைந்தான்.  அரசனும் அளவற்ற மகிழ்ச்சியோடு  தன் மகள் குணவதியை வேள்வி முறைப்படித் திருமணம் செய்து கொடுத்தான்.    

***********************************

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

பாடல் # 115

வேல்விழி யமிர்தன் னாளை வேள்வியா லண்ண லெய்திக்
கால்சிலம் போசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போக மெல்லாம் பருகியின் புற்று நாளும்
நூனெறி வகையிற் றுய்த்தார் நுண்ணிடை துவள வன்றே.

-------------------------

வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.  

-------------------------

ஆடவரிற் சிறந்த நாககுமாரன் வேல் போன்ற கண்களையும் அமுதம் போன்ற மொழியினையுமுடைய குணவதியோடு காமதேவனும் இரதிதேவியும்போல நுண்ணிடை துவளவும் காற் சிலம்பு ஒலிக்கவும் கட்டித் தழுவி நாள்தோறும் காமநூல் விதிப்படி போக உபபோகங்களை நுகர்ந்து இன்புற்று மகிழலானான்.          

***********************************

பாடல் # 116

கலையணி யல்குற் பாவை கங்குலும் பகலு மெல்லாஞ்
சிலையுயர்ந் தினிய திண்டோட் செம்மலும் பிரித லின்றி
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகரின்றிச் செல்லு நாளுள்
உலைதலி லுறுவ லீயா னூர்ச்சயந்த கிரிய டைந்தான்.

-------------------------

கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.  

-------------------------

விற்போர்ப் பயிற்சியிற் சிறந்த தோள்வலிமிக்க குமாரனும் மேகலை என்னும் ஆபரணம் நுண்ணிடையில் அணிந்த குணவதியும் இரவும் பகலும் இணைபிரியாராய் தகுந்த முறைப்படி காமவின்பம் நிலைபெறும்படியாக மகிழந்து வந்தனர். ஊடலுங் கூடலும் நிரம்பிய வண்ணம் இன்பம் துய்த்துவரும் நாளில் ஓர் நாள் சோர்வில்லாத பேராற்றலுடைய நாககுமாரன் ஊர்ச்சயந்தகிரியைப் போய்ச் சேர்ந்தான்.            

***********************************

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

பாடல் # 117

வாமனா லையத்து மூன்று வலங்கொண் டுட்புகுந் திறைஞ்சி
தாமமார் மார்பன் மிக்க தக்கநற் பூசை செய்து
சேமமா முக்கு டைக்கீ ழிருந்தரி யாச னத்தின்
வாமனார் துதிகட் சொல்ல வாழ்த்து தொடங்கி னானே.

-------------------------

வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்து தொடங்கினானே.

-------------------------

அவ்விடம் சேர்ந்த வெற்றிமாலை அணிந்த மார்பன் நாககுமாரன், இருபத்திரண்டாவது ஜினரான ஸ்ரீ நேமிதீர்த்தங்கரபகவான் ஜினாலயத்தை மும்முறை பக்தியுடன் வலம் வந்து அம்பலத்துள்ளே சென்று இறைஞ்சித் துதிபாடி பூசனை செய்து மூவுலகிலும் சிறந்த பாதுகாப்பாகிய முக்குடையின் கீழேயுள்ள சிம்மாசனத்தின் மிசை வீற்றிருக்கும் வாமனார்மீது பல துதிப் பாடல்களைச் சொல்லி வாழ்த்தத் தொடங்கினான்.           

**********************************

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

பாடல் # 118

முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே.

-------------------------

முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து
இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.

-------------------------

முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சந்திராதித்யம், நித்தியவிநோதம், சகலபாசனம் ஆகியன மூன்றுதட்டுகளாய் விளங்கும் முக்குடை கீழ் வீற்றிருந்து அறவமுத மழை சொரிந்து உலக உயிர்களை உய்விக்கக்கூடிய பரம ஒளதாரிக திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரருடைய, ஜிநன் என்னும் பிறவிச்சுழற்சியை வெற்றி அடைந்த கடவுளது திருத்தமான பாதகமலங்களை, அவ் வெற்றியைத்  தாமும்  அடைய  வேண்டும்  எனும்   நோக்கத்தோடு வணங்கி வழிபடுவோர்கள் தேவராய்ப் பிறந்து தேவருலத்தில் சுகம்நுகர்ந்து ஆயுள் முடிந்து இப் பூமண்டலத்திற்கு மகாமண்டலேசுவரராய்ப் பிறந்து ஆட்சி புரிந்து பெரிய வெற்றி யானைப் பிடரியின் மீது, முத்தணிந்த வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து தலைவராக வாழ்ந்திருப்பவராவார்கள்.  
         

**********************************

பாடல் # 119


கமலமலர் மீதுறையுங் காட்சிக் கினிமூர்த்தி
யமலமலர்ப் பொற்சரணை யன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்க ளுலகத் திந்திரராய்ப் போயுதுதித்து
இமையவர்கள் வந்துதொழ வின்புற் றிருப்பாரே.

-------------------------

கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி
அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து
இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.  

-------------------------

சமவசரணத்தே தேவர்களால் இயற்றப்பட்ட பொற்றாமரை மலர் வீற்றிருக்கின்ற நற்காட்சி நாயனாகிய  திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரரின் களங்கமற்ற பொற்பாதங்களைப் பக்தியோடு தொழுபவர்கள், தேவருலகமே தலைவன் என தொழுது வணங்குமாறு இந்திரர்களாய் போய்ப் பிறப்பார்கள். அமரர்கள் தொழுது ஏவல் புரிய இன்பமுற்று வாழ்பவர் ஆவார்கள்.           

**********************************


பாடல் # 120

அரியா சனத்தின்மிசை யமர்ந்த திருமூர்த்தி
பரிவாக வுன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோக முந்தொழவே தேவாதி தேவருமய்
எரிபொன் னுயிர்விளங்கி யினியமுத்தி சேர்பவரே.

-------------------------

அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி
பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்
எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.

---------------------------------

சிம்மாசனத்தின் வீற்றிருக்கின்ற திருமூர்த்தியே! பகவானே! உன் திருவடிகளை அன்போடு பணிந்து இறைஞ்சித் துதிப்பவர்கள் மூவுலகமும் தம்மைத் தொழும்படி தேவர்க்கெல்லாம் தலைவனாய் ஒளிமிக்க பொன்னுயிராய் விளங்கிப் பின்னர் பேரின்பமாகிய முக்தியையும் அடைபவர்களாவார்கள்.

*********************************

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

பாடல் # 121

இணையிலா யிறைவனை யேத்தியிவ் வகையினாற்
துணையினிய தோழன்மார் சூழ்ந்துட னிருந்தபின்
கணைசிலை பிடித்தொருவன் கண்டொரோலை முன்வைத்து
இணைகரமுங் கூப்பிநின் றினிதிறைஞ்சிக் கூறுவான்.

-----------------------------------------------

இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்
துணைஇனிய தோழன்மார் சூழ்ந்ந்து உடன்இருந்தபின்
கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து
இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.  

-----------------------------------------------

இவ்வாறு இணையற்ற இறைவன் திருவடிகளை உயர்வாக போற்றித் தொழுத பின் தனக்கு இனிய உறுதுணைவராகிய தோழர்களோடு கூடி யிருந்தான்.  வில்லும் கணையும் கையிற் பிடித்த ஒருவன் வந்து, குமாரனைக்கண்டு வணங்கி ஓர் ஓலையை வைத்து இருகரங்களையும் சிரமேற் குவித்து வணங்கிக் கூறலானான்.      

*********************************

பாடல் # 122

வற்சையெனு நாட்டினுள் வான்புகழுங் கௌசம்பி
செற்றவரி னும்மிகு சூரன்சுப சந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகா வதியெனு நாமமினி தாயினாள்.

-----------------------------------------------

வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி
செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள்.  

-------------------------------------

வத்சை என்னும் தேசத்தின் வானவர் புகழும் கௌசாம்பி தலநகரமாகும்.  அந்நகரை பகைவர்களும் போற்றி நிற்கும்படி வீரன் சுபசந்திரன் எனும் வேந்தன் ஆண்டுவந்தான். சுகாவதி என்னும்  சலியாத கற்புடைய அவன் மாதேவியும் பல நற்குணங்களை பெற்றவளாக திகழ்ந்தாள்.

*********************************


பாடல் # 123

அன்னவர்தம் புத்திரிக ளானவேழு பேர்களாம்
நன்சுயம் பிரபையும் நாகசுப் பிரபையு
இன்பநற் பிரபையும் இலங்குசொர்ண மாலையும்
நங்கைநற் பதுமையு நாகதத்தை யென்பரே.

-------------------------------------

அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்
நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும்
இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்
நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே.  

-------------------------------------

‘அவர்களுடைய புத்திரிமார்கள் ஏழுபேர்களாகும். சுயம்பிரபை, சுப்பிரபை, சுநந்தை, கனக மாலை, நங்கை, பதுமை, நாகதத்தை என முறையே ஏழு பெயருடையவர்களாவார்கள்.  இவர்கள் நன்கு வாழ்ந்து வரும் நாட்களில்—‘         

*********************************

பாடல் # 124

வெள்ளியின் மலையில் மேகவா கனன்றுரந்திடக்
கள்ளவிழ் மாசுகண் டனவன் வந்துடன்
கிள்ளையம் மொழியினாரைக் கேட்டுடன் பெறுகிலன்
வெள்ளையங் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.

-------------------------------------

வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்
கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன்
கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன்
வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.  

-------------------------------------

வெள்ளியம் பெருமலையின் தென்சேடியில் உள்ள இரத்தின சஞ்சயபுரத்தின் அரசன் சுகண்டன், அவன்தனது சத்ரு மேகவாகனால் துரத்தப்பட்டுக் கௌசாம்பி நகர்ப்புறத்தே அமைந்துள்ள துல்லங்கிபுரம் என்னும் நகரை ஆண்டு கொண்டிருந்தான்.  அவன் சுபசந்திர மன்னனின்  கன்னியர்களை மணம் முடிக்கக் கேட்டான்.  சுபசந்திரன் கொடுக்க மறுத்தமையால், அவனைக் கொன்றுவிட்டபின் அவனது பெண்களைக் கவர முயன்றான்.  பெண்களோ, ‘நீ எங்கள் பிதாவைக் கொன்றவனாதலால் உன்னை மணக்க மாட்டோம். உன்னைக் கொல்லும் ஒருவனையே மணப்போம்என சூளுரைக்க, அவர்களை ஒரு இருட்டறையில் சிறையிட்டான்.  அவர்களில் நாகதத்தை என்பவன் மட்டும் தப்பி வந்து குருஜாங்கல தேசத்திலுள்ள அத்தினாபுரத்து அரசன் தன் பிதாவின் உடன் பிறந்தவனாதலின் அவனுக்கு இதை அறிவித்தாள்’ என்றான்.               

*********************************

பாடல் # 125

வேந்தனுக் கிளையனுன்னை வேண்டியோலை யேதர
சேர்ந்தவ னளித்தவோலை வாசகந் தெளிந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துடன்
போந்தவனைக் கொன்றனன் பூவலங்கன் மார்பனே.

-------------------------------------

வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர
சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌபிந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்
போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.  

-------------------------------------

‘சுபசந்திரனுக்கு இளைய சகோதரனாகிய அபிசந்திரன் உன்னைத் துணையாக வேண்டி இவ்வோலையைக் கொடுத்தனுப்பினான்.  ஆதலால், உமக்கு வந்து அறிவித்தேன்’ என்று அத்தூதுவன் கூறினான்.  இவ் வரலாற்றை அறிந்தவுடனே வியாளனைக் குணவதியின் காவலுக்கு வைத்து விட்டு, தன் வித்தைகள் துணை கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்று, கௌசாம்பி நகரை அடைந்து சுகண்ட மன்னனுக்குக் அக்கன்னிகைகளை விடுவிக்குமாறு தூதுவிட்டான்.  அவனும் வெகுண்டு போருக்கெழுந்து ‘யாரால் என்னை வெல்லமுடியும்’ என்று கொக்கரித்து நின்றான்.  நாககுமாரனும் எதிர்த்துப் பெரும்போர் செய்து முடிவில் சந்திரஹாசம் என்னும் வாளால் அவனைக் கொன்று வெற்றிமாலை சூடினான்.  சுகண்டன் புதல்வன் வச்சிரகர்ணன் சரணாகதியடைந்தான்.  அதனால் மேலும் இரத்தின சஞ்சயபுர மேகவாகனனைக் கொன்று  அவனது தந்தையினது அரசை மகன் வச்சிரகர்ணனுக்கு அளித்தாக்ன்.             

*********************************


நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

பாடல் # 126

அபிசந் திரன்றன்புர மத்தினாக மேகியே
சுபமுகூர்த்த நற்றினஞ் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் றன்மக ளாஞ்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியாற் செல்வனெய்தி யின்புற்றான்.

---------------------------------

அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான். 

---------------------------------

பிறகு நாககுமாரன் அபிசந்திரனுடைய தேசத்து அத்தினாபுரம் அடைந்தான்.  ஓர் நன்னாளில் அபிசந்திரன் புத்திரி சந்திரப் பிரபையையும் சுப சந்திரன் புத்திரிகள் எழுவரையும், சுகண்டன் புத்திரிகளாகிய அனுஜை, உருக்குமணி இவர்களையும் வேள்வி விதிப்படி திருமணம் செய்து இன்புற்றிருந்தான்.      

********************************

பாடல் # 127

நங்கைமார்க டன்னுட னாகநற் குமரனும்
இங்கிதக் களிப்பினா லிசைந்தினிப் புணர்ந்துடன்
பொங்குநகர்ப் புறத்தினிற் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன் றினுஞ் சேர்ந்தினி தாடுநாள்.

---------------------------------

நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்
பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள். 

---------------------------------

இவ்வாறு மணம் புரிந்த நங்கைமார்களோடு நாககுமாரனும் இங்கிதச் சேட்டையாடும் காமக்களியாட்டத்தில் மூழ்கியிருந்தான். அப்போது ஓர்நாள் அந்நகர்ப்புறத்துள்ள பூஞ்சோலைக்குச் சென்று  வனவிளையாட்டில் இன்புறும் நாளில்--           


********************************

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

பாடல் # 128

அவந்தியென்னு நாட்டினு ளானவுஞ்சை நீணகர்
உவந்தமன்ன னாமமு மோங்குஞ்செய சேனனாம்
அவன் தனன் மனைவிய ரானநற் செயசிரீ்யாஞ்
சிவந்தபொன் னிறமகட் சீருடைய மேனகி.

---------------------------------

அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்
உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம்
அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீந்யாம்
சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி. 128

---------------------------------

அவந்தி என்னும் பெரிய நாட்டின் உஞ்சை நகரைத் தலைநகராக விரும்பி ஆளும் அரசன் செயசேனன் என்பவனாவான்அவனுடைய பட்டத்தரசி செயஸ்ரீ என்பாள்.  பொன்போன்ற நிறமுடைய மகள் மேனகி பல்வகைச் சிறப்புக் குரியவள் ஆவாள்.    

*********************************


பாடல் # 129

பாடலீ புரத்திருந்த பண்புமா வியாளனு
நாடிவந் திருந்தன னன்குவுஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டவள்
நாடியவள் போயின ணன்னிதிப் புரிசையே.

---------------------------------

பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்
நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்
நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே.  

---------------------------------

பாடலிபுரத்திலிருந்த பண்புமிக்க மாவியாளனும் மேனகி மீது  விருப்பங்கொண்டு அவ்வுஞ்சை நகருக்கு வந்து தங்கியிருந்தான்.  அதை அறிந்த தோழி மேனகிக்கு அறிவித்தாள். அவளும் அவனை வந்து பார்த்துவிட்டு விருப்பமில்லாதவளாய்த் தன் கன்னி மாடத்திற்கு திரும்பிப் போயினாள்.      

*********************************

பாடல் # 130

அந்நகர்விட் டேகின னானமா வியாளனும்
சென்றுதன் றமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கின னாகநற் குமரனை
இன்றிலன்றான் யாரென வென்றம்பியவ னென்னலும்.

---------------------------------

அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்
சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை
இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும்.  

---------------------------------

மாவியாளனும் உஞ்சை நகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று, தன் தமையன் வியாளனுடைய பாதங்களை வணங்கிப் பின் நாககுமாரன் முன்னின்று வணங்கினான்.  நாககுமாரனும் இவன் யாவன் எனக் கேட்க வியாளன் என் தம்பி எனக் கூற; உடனே மாவியாளன் குமாரனை வணங்கி கூறத்தொடங்கினான்.

*********************************

பாடல் # 131

மின்னினிடை நேரிழை மேனகி யெனவொரு
மன்மதனை யிச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரிற் செல்லலு மரிவையர் தரித்திட
மன்னனம்பு வேள்வியான் மன்னிநற் புணர்ந்தனன்.

---------------------------------

மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.

--------------------------------

மின்னற் கொடிபோன்ற மெல்லிடையாள் உச்சயினி நகரத்து அரசன் ஜயசேனன் மகள் மேனகி என்ற ஓர் கன்னிகை இருக்கின்றாள்.  கட்டழகியான அவள் மன்மதனையும் விரும்பாதவள்என மகாவியாளன் கூறினான். அதனைகேட்டு நன்றென கூறிய நாககுமாரன் ஊஞ்சை நகரத்திற்குச் சென்றான். அதனைக் கேள்வியுற்று ஜயசேனனும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் எதிர் கொண்டு அழைத்தான். இனிய வரவேற்பைப்  கூறி, வேள்வி விதிப்படி நல்ல முகூர்த்தத்திலே மங்கையர் ஏந்திய பொற்கலச நீரால் தாரை வார்த்துத் திருமணம் செய்து கொடுத்தான்.  குமரனும் அவளோடு கூடி இன்புறலானான்.          

*********************************




மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று
நாககுமாரன் பெறுதல்

பாடல் # 131

மற்றுமொன் றுரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றிருந்த சிரீமதி யோர்ந்துநா டகந்தனில்
வெற்றிமுழ வேழ்வியம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன வள்பதியாம் பார்மிசைமே லென்றனன்.

-------------------------

மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில்
வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.

-------------------------

இங்ஙனம் இருப்ப, மகாவியாளன் மற்றும் ஓர் செய்தியையும் கூறினான், ஐயனே பாண்டிய நாட்டுத் தென்மதுரை எனும் நகரிலே ஆட்சிபுரியும் மேகவாகனன் மனைவி இலக்குமி மகள் ஸ்ரீமதி என்பாள்.  அவள் தன் நடனத்துக்கு ஒத்த மிருதங்க வாத்தியத்தால் யாவனொருவன் கூர்ந்து வாசித்து வெற்றியடைவானோ அவனே தனக்குரிய நாயகனாவான் என வஞ்சினம் செய்துள்ளாள் என அறிவித்தான்.       

*********************************

மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட
அதிசயம் இயம்பக் கேட்டல்

பாடல் # 133

அங்குசென்றவ் வண்ணலு மவளைவென்று கொண்டனன்
பொங்குமிக் குழலியர்ப் புணர்ந்துட னிருந்தபின்
வங்கமீது வந்தவோர் வணிகனை வினவுவான்
எங்குள வதிசய மியம்புகநீ யென்றனன்.

-------------------------

அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்
பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்
வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான்
எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.  

-------------------------

மாவியாளன் கூறியதைக் கேட்டதும் மனம் மகிழ்ந்த நாககுமாரன் அந் நகரை அடைந்து ஸ்ரீமதியை மிருதங்க வாத்திய இசைப் போட்டியில் வென்று சுயம்வரத்தால் மாலை சூட்டப் பெற்றான். அவளை மணந்து இனிதிருக்கும் நாளிலே, அவ்வரசன் அவையில் கப்பல் வாணிகன் ஒருவன் வந்தான்.  அவனை நோக்கி, ‘வணிகனே, நீ ஏதாவது அற்புத நிகழ்ச்சிகள் கண்டதுண்டோ? கண்டிருந்தால் கூறுவாய்என்றான்.    

*********************************

வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

பாடல் # 134

பொங்குமாழி யுள்ளொரு பூதிலக மாபுரம்
புங்கவன்ற னாலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமா ரைஞ்நூற்றுவர் நாடொறு மொலிசெய்வார்
அங்கதற்குக் காரணம் யானறியே னென்றனன்.

-------------------------

பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார்
அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.  

-------------------------

அலை பொங்கும் கடல் நடுவே பூமிதிலகமாபுரம் என்னும் பெயருடைய பொன்மயமான வண்ணங்களுடன் கூடிய புங்கவன் அருகன் ஆலயத்து முன்னே நாடோறும் நண்பகலிலே ஐந்நூறு விஞ்சையக் கன்னியர்கள்  வந்து  ஓவென ஒருமித்தபடி அலறிப் பேரொலி செய்கின்றனர்.  அதற்குக் காரணம் யாது என யான் ஒன்றும் அறியாமல் உள்ளேன் என்றான்.      

*********************************

நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

பாடல் # 135

தனதுவித்தை தன்னையே தானினைக்க வந்தபின்
மனத்திசைந்த தோழரோடு வள்ளற்றீ பஞ்சென்றுநற்
கனகமய வாலையங் கண்டுவலங் கொண்டுடன்
சினனடி பணிந்துமுன் சிறந்துமிக் கிருந்தனர்.

----------------------------------------------

தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்
மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்
கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன்
சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.

----------------------------------------------

அதைக் கேட்ட குமாரன் தன் வித்தியா சக்தியால் தன் வித்தைகளை நினவகத்தில் விழித்தெழச் செய்தான்.  மேலும் தனக்கு இச்சையான தோழர்களோடு அத் தீவையடைந்தான்.  அங்குள்ள பொன்மயமான அச் ஜினாலயத்தைக் கண்டு, தொழுது வலங்கொண்டு பணிந்து துதித்தெழுந்துபோய் ஆலயத்தின்முன் எதிர்நோக்கி காத்திருந்தான்.          

*********************************

ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற,
அதன் காரணம் குமாரன் வினாவுதல்

பாடல் # 136

ஒருநிரையாய் மங்கைய ரோசைசெய்யக் கேட்டபின்
திருவலங்கன் மார்பினான் சேரவழைத் தவர்களை
யருகனாலை யத்துமுன் னலறுநீங்கள் யாரெனத்
தரணிசுந் தரியவ ளவற்கிதென்று கூறுவாள்.

----------------------------------------------

ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்
திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை
அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத்
தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.  

----------------------------------------------

நண்பகல் நேரத்தில் அம் மங்கையர்கள் ஐந்நூறு பேரும் ஒரே வரிசையாக நின்று ஓவென்று அலறக்கேட்ட உடனே அழகிய மலர்மாலை அணிந்த குமாரனும் அவர்களை அழைத்து, ‘அருகனாலயத்து முன்னே இவ்வேளையில் வந்து அலறும் நீங்கள் யாவீர்’ எனக் கேட்க, அவர்களுள் தரணிசுந்தரி சொல்லலுற்றாள்.                 

*********************************

ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள்
நிலையெடுத்துரைத்தல்

பாடல் # 137

அரியவெள்ளி மாமலை யாடுங்கொடி யேமிடை
பிரிதிவி திலகமெங்கட் பேருடைய நன்னகர்
வரதிரட் சகனேமர் தந்தையை மருகனுக்குக்
கருதியெம்மைக் கேட்டனன் கண்ணவாயு வேகனே.

----------------------------------------------

அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை
பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர்
வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்
கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே.  

----------------------------------------------

ஐயனே! அருமை சான்ற வெள்ளி மலைமீது காற்றில் நெருங்கி ஆடும் கொடிகள் நிறைந்த   பிரிதிவீதிலகம் என்னும் பெயருடைய மாநகரமே எங்கள் பூர்வீகம். எங்கள் தந்தை வலதிரட்சகன் என்பான்.  வாயுவேகன் என்னும் எங்கள் அம்மான்-அழகற்றவன் அவன்-எங்கள் தந்தையிடம் வந்து தனக்கு எங்களை மணம் செய்து கொடுக்கும்படி கேட்டான்.   

*********************************


நான்காம் சருக்கம்

 

பாடல் # 138

 

எந்தையுங் கொடாமையா லெரியென வெகுண்டனன்

எந்தையை வதைசெய்து வெங்களையும் பற்றியே

இந்தநல் வனத்திருந்தா னென்றவளுங் கூறலும்

அந்தவாயு வேகனை யண்ணல்வதை செய்தனன்.

 

--------------------------------

 

எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்

எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே

இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்

அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன்.  

 

--------------------------------

 

எங்கள் தந்தை அதற்கு உடன்படாமல் போனதால் கோபா வேசத்தால் வெகுண்டுவந்து போர்செய்து தந்தையைக் கொன்று விட்டான். எங்கள் சகோதரர்களை பாதாள அறையில் சிறையிலிட்டான். தனது வித்தை ஆற்றலால் எங்களையும் பற்றிக்கொண்டு வந்து மணந்துகொள்ளும்படி கேட்டான்.  எங்கள் தந்தையைக் கொன்ற உன்னைக் கொல்பவன் எவனோ, அம் மகா புருஷனையே மணப்போம் என்றோம். என்னைக் கொல்பவனை ஆறு மாதத்திற்குள் கொண்டு வா என்றான். ஆதலால் இவ் வனத்து இருட்டறையில் எங்களை அடைத்து வைத்துள்ளான்.  இவ்வாலய வழிபாட்டிற்கு வரும் ஆடவர்களுள், வித்தியாதரர் யாரேனும் எங்களுக்குப் புகலிடம் அளித்துப் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் தினம் வந்து இப்பெருமானிடம் எங்களது வேண்டுதலை இவ்வாறு அலறி கூறி வருகிறோம் என்றாள். 

 

நாககுமாரனும் அவனுடைய காவலரைக் விரட்டியடித்து தன் காவலரை பாதுகாக்க நியமித்து, அவனுடன் போரிட  எழுந்து ஆயத்தமானான். சந்திரஹாசம் என்னும் ஆயுதத்தால் வாயுவேகனைக் கொன்று, அவனது நாட்டை இரட்சந், மகா இரட்சகன் என்ற சகோதரர்கள் வசம் அரசைக் ஒப்படைத்துவிட்டு, அக் கன்னியர்களை மணம் செய்து கொண்டான். 

 

*********************************

 

வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர்

ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

 

பாடல் # 139

 

அஞ்சுநூற்று மங்கையரை யண்ணல்வேள் வியாலெய்தி

நெஞ்சிலன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்

அஞ்சுநூற்று வர்படர்க ளாளராகி வந்தனர்

தஞ்சமா யவர்தொழு தகமகிழ்ந்து செல்லுநாள்.

 

--------------------------------

 

அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி

நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்

அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்

தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.  

 

--------------------------------

 

ஐந்நூறு மங்கையரைப் பெருமை மிக்க குமாரன் வேள்வி முறையால் மணந்து, உள்ளன்போடு உவகைக் கடலில் மூழ்கி யிருந்தான்.  பின்னர் ஐந்நூறு அடிமைகள் தாமே வலிய வந்து, ‘ஐயனே! நாங்கள் அனைவரும் ஓர் அவதிஞான முனிவரை பணிந்து தொழுது, எங்களுக்கு எஜமானன் யாவன் எனக் கேட்டோம்.  அவரும் வாய்வேகனைக் கொல்பவன் எவனோ அவனே உங்கட்கு நாயகனாவான் என்று அருளினார்.

 

அதனால் தங்களிடம் தஞ்சமடைந்தோம்‘  என கூறினர். அவனும் நன்று என கூறி உளமகிழ்ந்து  வாழ்ந்து வரும் நாளில்-

 

-------------

இப்பாடல் தரும் வரலாற்றை சமஸ்கிரத நூல்...

 

வாயுவேகனை போரிடச் சென்றபோது இவனது பாதுகாவலர் இரட்சகன் மஹாரட்சகன் இருவரும் வாயுவேகனது பாதுகாவலர்களுடன் போரிட்டு அவர்களை கொன்றனர். அதனைக் கேள்வியுற்ற வாயுவேகன் சினத்தால் வாயுவேகத்தில் வந்து போரிடத்துவங்கினான். அவன் மேக வித்தையை கற்றவனாதனால் பெருமழையை தோற்றுவித்தான். அதற்கு மாறாக குமாரன் வாயு வித்தையை பிரயோகித்து மழை மேகங்களைக் கலைத்தான்.

வாயுவேகன் இருளை தோற்றுவித்தான். குமாரனும் எதிராக வெளிச்சத்தை அளித்து விலகச்செய்தான். நீர் பிரவாக வித்தையை வீசியபோது, கடலுக்கடியிலுள்ள அக்னியை பிரயோகித்தவண்ணமாய் மாறி மாறி பல வித்தைகளை இருவரும் பிரயோகித்தனர்.

அதன் பின்னர் வித்தைகளை விடுத்து ஆயுதம் கையில் ஏந்தி போரிடத்துவங்கினர். அப்போரில் நாககுமாரன் வாயுவேகனை வெட்டி வீழ்த்தினான்.

அதன் பின்னர் இரட்சக, மஹாரட்சகர்களுக்கு நாட்டை அளித்து ஐநூறு மங்கையரையும் மணம் புரிந்தான்.

ஐநூறு அடிமைக்களுக்கு ஸ்வாமி யான பின்னர் காஞ்சீபுரம் அடைந்து, அதன் பிறகு கலிங்கம் வந்தடைந்தான்  என்கிறது வடமொழிக் காவியம்.      

 

*********************************

 

கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை

நாககுமாரன் கூடி மகிழ்தல்

 

பாடல் # 140

 

 

கலிங்கமென்னு நாட்டினுட் கனகமய விஞ்சிசூழ்ந்

திலங்கு ரத்னபுர மிந்நகர்க்கு மன்னவன்

துலங்குசந்திர குப்தன் றோகைசந் திரம்மதி

பெலங்கொளிவர் நன்மகட் பேர்மதன மஞ்சிகை.

 

--------------------------------

 

கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து

இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன்

துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி

பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை. 140

 

--------------------------------

 

பொன்மயமான மதிலாற் சூழப் பட்ட கலிங்கம் என்னும் நாட்டில் இலங்கும் இரத்தினபுரம் அதன் தலைநகராகும். அந் நகருக்கு அரசன் புகழ்மிக்க சந்திரகுப்தன் என்பான், இளமயில் சாயலை ஒத்தவள் அவன் தேவி சந்திரமதி என்பாள்.  இவர்களுடைய நற்புதல்வி மதனமஞ்சிகை என்னும் பெயருடையாளாவாள்.    

 

*********************************

 

பாடல் # 141

 

நாகநற் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்

வாகன மினிதினின்று மதன்மஞ் சிகையொடுந்

தாகமிக் குடையனாய்த் தான்லயப் பருகினான்

நாகநற் புணர்ச்சிபோல் நன்குட னிருந்தரோ.

 

-------------------------------------

 

நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்

வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்

தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான்

நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.

 

---------------------------

 

மதனமஞ்சிகையின் கட்டழகைக் கூறக்கேட்ட குமாரன் ஏறிச் செல்லும் வாகனம் இன்றி நடந்து சென்று அந்நகரை அடைந்தான்.  அவன் புகழைக் கேட்ட சந்திரகுப்த அரசனும் உளம் மகிழ்ந்து, மதனமஞ்கிகையை மந்திரங்களைக் கூறி வேள்வி விதியால் கன்னியாதானமாகக் கொடுத்தான். மணந்து, அவளோடும் பவணவாசிகளின் காதற்புணர்ச்சி போலக் காதல் வேட்கை மிக்கவனாய் லயப்பட்டுப் புணர்ந்து மகிழ்ந்திருக்கலானான்.

 

*********************************

கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன்

பெற்றுப் போகந் துய்த்தல்

 

பாடல் # 142

 

கங்கைநீ ரணிந்திலங்குங் கங்காளநன் னாட்டினுட்

திங்கடவழ் மாடநற் றிலகபுர மன்னவன்

பொங்குமகு டம்முடி பொற்புவிசை யந்தரன்

இங்கித மனைவிபேர் இயல்விசையை யென்பளே.

 

-----------------------------

 

கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்

திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன்

பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்

இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே.  

 

-----------------------------

 

அதன்பின், கங்கை நதியால் வளம் பெற்று விளங்கும் கங்காள நாட்டிலுள்ள திரிபுவன திலகபுரம் என்னும் நகரம் மேகமண்டலந் தவழும் மாடங்கள் பல நிறைந்தது. அழகுமிக்க மணிமகுடம் தரித்த மன்னன் விஜயந்தரன் ஆட்சி செய்து வந்தான்.  அவன் மாதேவி பெண்தன்மை மிக்க விஜயை என்பார்கள்.    

 

*********************************

 

பாடல் # 143

 

இலக்கணை யெனுமக ளிலக்கண முடையவள்

மிக்கவண்ண லுஞ்சென்று மெய்ம்மைவேள் விதன்மையால்

அக்கணத் தவனெய்தி யவடன்போகந் துய்த்தபின்

தொக்ககாவு தன்னுளே தொன்முனிவர் வந்தரோ.

 

-----------------------------

 

இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்

மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால்

அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின்

தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.  

 

-----------------------------

 

அவர்களுடைய புத்திரி எல்லா இலக்கணமும் நிறைந்தவளாதலால் இலக்கணை என்பாள்.  பெருமை மிக்க குமாரன் அந்நகர் அடைந்து மெய்ம்மையான வேள்வி முறையால் மணஞ்செய்து கொடுப்ப, அவளுடன் இன்பம் துய்த்து வரும்நாளில், அந் நகர்ப் புறத்தே யுள்ள உய்யானத்தே பிஹிதாஸ்ரவர் எனும் முனிவர் வந்து தங்கினார்.         

 

*********************************

 

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து

தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

 

*********************************

 

பாடல் # 144

 

ஊற்றினைச் செறித்திடு முறுதவனுடைச் சாரணை

நாற்றமிக் குமரனு நன்புறப் பணிந்தபின்

யேற்றவறங் கேட்டுட னிருந்தலக் கணையின்

ஏற்றமோக மென்னென னியன்முனி யுரைப்பரே.

 

-----------------------------

 

ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை

நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின்

ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல்

ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.  

 

-----------------------------

 

ஆன்மப் பிரதேசத்தில் சுரக்கும் வினையூற்றைத் தடுக்கும் முறையறிந்த அருந்தவமுனிவரை புகழ்மிக்க நாககுமாரன் சென்று முறைப்படி வணங்கினா. பலவாறு அவரைப் புகழ்ந்து. அவர் கூறிய நல்லறம்கேட்டு மகிழ்ந்து இருந்தான். அவ்வாறாக அம் முனிவரனை வணங்கி, ‘சுவாமி! எனக்கு மனைவிமார்கள்  பலர் இருக்கின்றனர்.  எனினும், இலக்கணையின்மீது அதிக அன்பு தோன்றற்குக் காரணம் யாது எனக் கேட்க அம் முனிபுங்கவரும் தனது அவதிஞானத்தால் உணர்ந்து கூறுகிறார்.            

 

 

(நான்காம் சருக்கம் முற்றும்)

 

*********************************

 

ஐந்தாம் சருக்கம்

 

பாடல் # 145

 

நாவலந் தீவு தன்னுள் நன்கயி ராவ தத்தின்

மேவுமின் முகில்சூழ் மாட வீதசோ கப்பு ரத்துக்

காவிநன் விழிமா தற்குக் காமன்விக் கிரம ராசன்

தாவில் சீர் வணிகன் நாமந் தனதத்த னென்ப தாமே.

 

-----------------------------------

 

நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்

மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக்

காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்

தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.  

 

-----------------------------------

 

இந் நாவலந்தீவில் ஐராவதம்  சேத்திரத்தில் ஆரிய கண்டத்திலே மின்னல் ஒளி தவழும் மேகக்குழு  சூழ்ந்த மாடங்களையுடைய வீதசோகர புரத்து அரசன் விக்கிரமன். நீலோற்பல மலர்போன்ற விழிகளையுடையாள் அத்தேவி.  அந் நகரிலே செல்வச்செழிப்புடன் புகழ்மிக்க வணிகன் தனதத்தன் என்பான் வாழ்ந்து வந்தான்.                   

 

*********************************

 

பாடல் # 146

 

மனைவிதன் றனதத் தைக்கு மகனாக தத்த னாகும்

வனைமலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் றேவிப்

புனைமலர்க் கோதை நல்லாட் பொற்புடை வசும திக்கு

மனையினன் மகடன் னாம மியன்நாக வசுவென் பாளம்.

 

-----------------------------------

 

மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்

வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்

புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு

மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.  

 

-----------------------------------

 

தனதத்தன் மனைவி தனதத்தை.  இவர்களது மகன் நாகதத்தனாகும்.  அழகிய வெற்றிமாலை சூடிய வேற்படையாளன். அந் நகரத்து மற்றொரு வணிகன் வசுதத்தன் என்பான்.   நன்மணம் பொருந்திய மாலை அணிந்த அழகுடைய நல்லாள் வசுமதி அவன் தேவி.  இவர்கட்குப் புத்திரி நாகவசு எனப்படுவாள்.   

 

*********************************

 

பாடல் # 147

 

நண்புறு நாக தத்த னாகநல் வசுவென் பாளை

யன்புறு வேள்வி தன்னா லவளுடன் புணர்ந்து சென்றான்

பண்புறு நற்ற வத்தின் பரமுனி தத்த நாமர்

இன்புறும் புறத்தின் வந்தா ரிறைவனா லையத்தி னுள்ளே.

 

-----------------------------------

 

நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை

அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்

பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்

இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.  

 

-----------------------------------

 

நற்பண்புமிக்க நாகதத்தன் நற்குணம் மிக்க நாகவசு என்பவளை அன்புமிக  வேள்வி  விதிகளின் படி   திருமணஞ்செய்து கொண்டு   அவளுடன்   இனிது கூடியிருக்கும் நாளில், நற்றவப்பண்பு மிகுந்த பரமமாமுனிவர் முனி குப்த ஆச்சாரியர் என்பவர் அந் நகர்ப்புறத்து உய்யான வனத்திலுள்ள ஓர் ஜிநாலயத்தில் வந்து தங்கியிருந்தார்.        

 

*********************************

 ஐராவதம் என்பது பரதக்ஷேத்திரம் போன்றே நாவலம் தீவில் உள்ளது. இவை போன்று மேலும் ஐந்து க்ஷேத்திரங்கள் நாவல் மரங்கள் நிரம்பிய தீவான ஜம்பூத்தீவில் உள்ளது என்பதை கரணானுயோகத்திலுள்ள மூவுலக வர்ணனையில் தெரிவிக்கப்படுகிறது.

ஆரிய கண்டம் என்னும் பிரதேசத்தில் உள்ள மனிதர்கள் காட்டுமிராண்டித்தனம் குறைந்த பண்புடன் வாழ்பவர்கள். மாறாக மிலேச்சகண்டத்தினர் குணம் முடையவர்கள் என்பதாக குறிப்புள்ளது. ஆரிய கண்டேயில் பிறந்தவர்களே முக்தியடைய தகுதியானவர்கள். 


--------------------------- 

 

பாடல் # 148

 

நாகதத் தன்சென் றந்த நன்முனி சரண டைந்து

வாகுநற் றருமங் கேட்டு அனசன நோன்பு கொண்டான்

போகபுண் ணியங்க ளாக்கும் பூரண பஞ்ச மீயில்

ஏகனற் றினத்தி னன்று யிடர்பசி யாயிற் றன்றே.

 

---------------------------------

 

நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து

வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்

போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்

ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே. 148

 

---------------------------------

 

நாகதத்தன் உடனே ஜினாலயம் சென்று, அம் முனிபுங்கவரை வணங்கி, வாழ்க்கை கடைத்தேறும் வகை நல்லறங் கேட்டு, பஞ்சமி தின உண்ணா நோன்பு விரதம் மேற்கொண்டான்.  போகங்களையும் புண்ணியங்களையும் உண்டாக்க வல்ல பூரணமானதோர் சுக்கிலபட்ச பஞ்சமி திதி விரத நாளன்று நள்ளிரவில் நாகதத்தனுக்குப் பசிப் பிணித்துன்பம் மேலிட்டது.                

 

*********************************

 

பாடல் # 149

 

தருமநற் றியானந் தன்னாற் றன்னுடை மேனி விட்டு

மருவினா னசோத மத்தின் வானவ னாகித் தோன்றி

வருகயல் விழியாள் நாக வசுவும்வந் தமர னுக்கு

மருவிய தேவி யாகி மயலுறு கின்ற வன்றே.

 

---------------------------------

 

தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு

மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி

வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு

மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.  

 

---------------------------------

 

பெற்றோர் வேண்டியும் விரதத்தை கைவிடாமல் வடக்கிருந்து நோற்றுத் தருமத்தியானமுடையவனாய் தொடந்து பின் தன்னுடலை விடுத்து சௌதருமகல்பத்து, சூரியப்பிரப விமானத்துத் தேவனாகித் தோன்றினான்.  கயல்மீன் போன்ற கண்ணாளாகிய நாகவசுவும் அவ்வாறே நோற்று அத் தேவனுக்கு மனைவியாய்ச் சேர, மகிழ்ந்து இன்பம் நுகரலானார்கள்.           

 

*********************************

 

பாடல் # 150

 

அங்கைந் துபல்ல மாயு வமரனாய்ச் சுகித்து விட்டு

இங்குவந் தரச னானா யினியந்தத் தேவி வந்து

தங்குநின் மனைவி யானாள் தவமுனி யுரைப்பப் பின்னும்

எங்களுக் கந்த நோன்பு யினிதுவைத் தருள வென்றான்.

 

---------------------------------

 

அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு

இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து

தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும்

எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.  

 

---------------------------------

 

அத்தேவகதி ஆயுளில் ஐந்து பல்லியமும் தேகசுகம் அனுபவித்து இங்கு வந்து அரசன் பிறந்துள்ளாய் நீ.  உன்னுடைய தேவி நாகவசுவே வந்து இலக்குமிமதி(இலக்கனை)யாய் பிறந்துள்ளாள். அதனால் அவள் மீது உனக்கு மிகுந்த அன்புண்டாயிற்று என்று அருளினார்.  அவ்வாறாயின் வாழ்க்கையில் வெற்றி தரும் அப்பஞ்சமி நோன்பை எங்களுக்கு கொடுத்தருள்வீராக என இறைஞ்சிக் கேட்டான்.       

 

*********************************


பாடல் # 151

 

திங்கட் கார்த்திகையி லாதற் சேர்ந்தபங் குனியி லாதற்

பொங்கன லாடி யாதற் பூரண பக்கந் தன்னில்

அங்குறு பஞ்சமியி னனசன நோன்பு கொண்டு

தங்குமாண் டைந்து நோற்றான் றானைந்து திங்க ளன்றே.

 

-------------------------

 

திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல்

பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்

அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு

தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே. 151

 

-----------------------------

கார்த்திகை மாதத்தில், பங்குனி மாதத்தில், வெப்பமிக்க ஆடிமாதத்தில் சுக்கில பட்சத்தில் வரும் பஞ்சமி தினத்திற்கு முந்தைய நான்கு நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு ஐந்தாம்நாள் பஞ்சமி தினத்தன்று உபவாச விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இதைப்போன்று ஐந்தாண்டுகள் பிரதி பருவ மாதம் பஞ்சமியில் நோன்பிருந்து விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளுக்கு மூன்று பருவங்கள் இருக்கும் அனசன நோன்பாகும். நாகபஞ்சமி நோன்பு என்பதாக கன்னடதேசத்தில் இன்றும் வழக்கத்திலுள்ளது.  அடுத்த சுழற்சியாக தொடர்ந்தால் கர்மபந்தம் விலகுவதோடு, புண்ணிய கர்மமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

*********************************

 

பாடல் # 152

 

இந்தநற் கிரமந் தன்னி லினிமையி னோன்பு நோற்று

அந்தமி லருகர் பூசை யருண்முனி தானஞ் செய்தால்

இந்திர பதமும் பெற்று இங்குவந் தரச ராகிப்

பந்ததீ வீனையை வென்று பஞ்சம கதியு மாமே.

 

-------------------

 

இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று

அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்

இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப்

பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.

-----------------------------  

 

இப்போது சொல்லிய வரிசைப்படி பஞ்சமி நோன்பை சிறந்த முறையில் மேற்கொண்டு நோற்பதுடன், எல்லையற்ற குணங்களையுடைய அருகன் பூசனையும், அருளறம் மிக்க முனிவர்கட்குத் தானங்களும் செய்ய வேண்டும். அவ்வாறு கடைபிடிப்பதன் பலனால் இந்திர பதவியும் பெற்று, மீண்டும் இங்கு வந்து பேரசரர்களாகப் பிறந்து, அருந்தவம் நோற்று, வினைக்கட்டுகளை அறுத்து வீடுபேறும் அடையலாகும்.         

 

*********************************

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன் வந்து அழைத்தல்

 

பாடல் # 153

 

என்றவ ருரைப்பக் கேட்டு யிறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை

சென்றுதன் பவனம் புக்கான் சேயிழை யோடு மன்னன்

நன்றுடன் செல்லு நாளு ணயந்தரன் வந்தி றைஞ்சி

உன்னுடைத் தந்தை யுன்னை யுடன் கொண்டு வருக வென்றான்.

 

----------------------------

 

என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை

சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்

நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி

உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.

---------------------------  

 

இவ்வாறாக முனிகுப்த ஆச்சாரியர் கூறியதைக் கேட்ட நாககுமாரன் அவரை பணிந்து வணங்கி நன்றெனப் பஞ்சமி நோன்பு விரதங் கைக்கொண்டான்.  தன் மனைவியோடும் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் தன் அரண்மனை அடைந்து மகிழ்ந்திருக்கும் நாளில்; நயந்தரன் என்னும் அமைச்சன் வந்து நாககுமாரனை வணங்கி, ‘குமாரனே! உன்னுடைய தந்தை உன்னை உடனழைத்துக் கொண்டு வாவென என்னை அனுப்பினார்.  ஆதலால், நீ வருவாயாக!என்றான்.    

 

********************************* 

 

பாடல் # 154

 

அமையுநன் கமைச்சன் சொல்லை யருமணி மார்பன் கேட்டு

சமையுநாற் படையுஞ் சூழச் சாலலக் கணையி னோடும்

இமையம்போற் களிற்றினேறி யினியநற் றோழன் மாரும்

இமையவற் கிறைவன் போல வெழில்பெறப் புக்க வன்றே.

 

------------------

 

அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு

சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்

இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்

இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.

 

-------------------

 

நவரத்தின ஆபரண மாலைகள் பூண்ட குமாரனும் அமைச்சன் சொல்லைக் கேட்டதும் நாற் படைகளும் புடைசூழ இலக்கணையோடும் இமயமலை போன்ற பெரிய பட்டத்து யானைமீது ஏறித் தன் தோழன்மார்களோடு புறப்பட்டான். தேவர்களுக்கு இறைவனைப் போன்ற பொலிவுடன் சென்று தனது தந்தை மாளிகையை அடைந்தான். 

 

************************

மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

 

பாடல் # 155

 

தாதையெதிர் கொள்ளவவன் றாழ்ந்தடி பணிந்தான்

ஆதரவி னன்மகனை யன்புற வெடுத்தும்

போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே

ஏதமில்சீ ரின்புற வினிதுட னிருந்தார்.

 

----------------

 

தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்

ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும்

போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே

ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.  

 

-------------------

 

தந்தையாகிய சயந்தர மன்னன் உடனே எதிர்கொண்டு அழைக்கக் குமாரனும் பணிவன்போடு அவர் பாதங்களைப் பணிந்து தொழுதான்.  தந்தையும் அன்போடு தன் மகனை மார்புறத் தழுவி அழைத்துச்சென்று அரண்மனை அடைந்து இனிதிருந்தனர்.            

 

************************

 

நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து

அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு

முடிசூட்டித் துறவு பூணுதலும்

 

பாடல் # 156

 

வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியி னாரை

யுற்றுடனே மாதரை யொருங்கழைக்க வந்தார்

சித்திரநற் பாவையரைச் சேர்ந்துட னிருந்தான்

பற்றறச் செயந்தரனும் பார்மகன் வைத்தான்.

 

--------------------

 

வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை

உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார்

சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான்

பற்றுஅறச் செயந்ந்தரனும் பார்மகன்மேல் வைத்தான்.

 

-----------------------

 

நாககுமாரன் தான் சென்றவிடமெல்லாம் சிறப்பாக வேள்வி முறைப்படி திருமணம் செய்து கொண்ட வேல்விழி மங்கையர்களை யெல்லாம் ஒருசேர வருக என அழைப்புவிட, அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.  சித்திரப் பாவையரைப் போன்ற அவ்வழகிய மாதர்களோடு இனிது இன்பந்துய்த்துக் குமாரன் இருக்கலானான்.  அவன் தந்தை சயந்தரனும் வாழ்க்கை நிலையாமையை நன்கு உற்று நோக்கி, வைராக்கியமுற்று அகப்பற்று புறப்பற்று களைத் துறந்து நாட்டாட்சியை மகனிடம் ஒப்படைத்தான்.                

 

************************



பாடல் # 157

 

 நாககும ரன்றனக்கு நன்மகுடஞ் சூட்டிப்

 போகவுப போகம்விட்டுப் புரவலனும் போகி

 யாகம னடைக்குமுனி யவரடி பணிந்து

 யேகமன மாகியவ னிறைவனுருக் கொண்டான்.

 

-----------------------

 

நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்

போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி

யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து

ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.  

 

-----------------------

 

நாககுமாரனுக்கு மணிமகுடம் சூட்டினான். அரச பாரம் ஏற்கச் செய்த பின்பு,  போக உபபோகம் துய்த்தலை விட்டுத் துறந்துபோய் யோகப் பயிற்சியால் மனவசன காயச் செயலை அடக்கி நோற்கும் பிஹிதாஸ்வர முனிவருடைய பாதங்களை வணங்கித் தொழுது, பல சிற்றரசர்களுடனே துறவு பூண்டு ஒருமனமுடையவனாகி இறைவனுடைய இயற்கையுருவத்தைப் பற்றறத் துறவை மேற்கொண்டான்.            

 

************************

 

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

 

பாடல் # 158

 

 இருவினை கெடுத்தவனு மின்பவுல கடைந்தான்

 பிரிதிவிநற் றேவியுந்தன் பெருமகனை விட்டு

 சிரிமதி யெனுந்துறவி சீரடி பணிந்து

 அரியதவந் தரித்தவளு மச்சுத மடைந்தாள்.

 

-----------------------

 

இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்

பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு

சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து

அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.  

 

-----------------------

 

சயந்தர மன்னனும் அருந்தவத்தால் காதிஅகாதிகளாகிய இரு வினைகளையும் கெடுத்து இன்ப உலகமாகிய தேவருலத்தை அடைந்தான்.  அவன் மனைவி பிரிதிவிதேவியும் தன் பெருமை சான்ற குமாரனை விட்டுப் பிரிந்து சென்று, ஸ்ரீமதி என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டு அருந்தவம் புரிந்து அச்சுத கற்பத்தை அடைந்தாள்.         

 

************************

 

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் நாடுகளை

அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப்

பட்டத்தரசி யாக்குதலும்

 

பாடல் # 159

 

வேந்தனர்த்த ராச்சியம் வியாளனுக் களித்தான்

ஆய்ந்தபல தோழர்களுக் கவனிக ளளித்துக்

சேர்ந்ததன் மனைவியருள் செயலக் கணைதன்னை

வாய்ந்தமகா தேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

 

-----------------------

 

வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்

ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்

சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை

வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

 

-----------------------

 

நாககுமாரனும் பாதி இராச்சியத்தை வியாளனுக்குக் கொடுத்தான்.  ஏனைய பல தோழர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்பப் பல தேசங்களை அளித்து உரிமையாக்கினான்.  தான் மணந்த மங்கையருள் இலக்கணைக்கு பட்டத்தரசி என்ற மாதேவிப் பட்டங் கொடுத்துத் மஹாராணி யாக்கினான்.  

 

************************

பாடல் # 160

 

இலக்கணையார் தன்வயிற்றி னற்சுதன் பிறந்தான்

மிக்கவன்ற னாமமு மிகுதேவ குமாரன்

தொக்ககலை சிலையியிற் பயின்றுமிகு தொல்தேர்

ஒக்கமிக் களிறுடனே வூர்ந்துதினஞ் சென்றான்.

 

--------------------------

 

இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்

மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன்

தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்

ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.  

 

--------------------------

 

இலக்கணையார் வயிற்றில் ஓர் நல்ல ஆண்மகன் பிறந்து நலமுற்றிருந்தான்.  அழகுமிக்க அவனுடைய திருநாமம் தேவகுமாரன் என்பதாகும்.  அவன் அரசர்களுக்குரிய கலை, சிற்பம், ஆயுதம் முதலியவற்றைக் கற்றுப் பயின்றும் யானை, குதிரை, தேர் ஏறி ஊர்ந்தும் களிப்புற்றுத் தினமும் செல்லும் நாட்களில்….

 

************************

 

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்

 

பாடல் # 161

 

புரிசையெழ நிலத்தின்மிசை பொற்புற விளங்கும்

அரியவரி யாசனத்தி லண்ணல் மிகஏறி

எரிபொன்முடி மன்னர்களெண் ணாயிரவர் சூழ

இருகவரி வீசவினி யெழில்பெற விருந்தான்.

 

--------------------------

 

புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்

அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி

எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ

இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான்.  

 

--------------------------

 

பெருமை சிறந்த நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய் எழுமதில் சூழ்ந்த நிலத்திலே அழகாக விளங்கும் செயற்கரிய சிம்மாசனத்தின் ஏறி ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற மணிமுடி சூடிய மன்னர் எண்ணாயிரம்பேர் தன்னைப் புடைசூழ இருமருங்கும் கவரிவீச அரசனாய் அமர்ந்திருந்தான், அவ்வாறு அழகுபெற 108 ஆண்டுகள் செங்கோலோச்சியிருந்தான்.    

 

************************

 


மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு

பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்

 

பாடல் # 163


 னி னமர்ந்திருக்கு மளவிற்

பரவுமுகின் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி

விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி

அரியதவந் தாங்கவவ னன்புட னெழுந்தான்.

 

--------------------------

 

அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்

பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி

விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி

அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.  

 

--------------------------

 

அரசர்க்களுக்கெல்லாம் அரசனாகிய நாககுமாரன் மகாமண்டலேசுவரனுக்குரிய இலக்கணம் பொருந்த வீற்றிருக்கின்ற காலத்தே ஆகாயத்தே பரவிய முகிற் கூட்டங்கள் விரைவில் தோன்றி மாய்தலைக் கண்டு, வைராக்கிய பாவனையுற்று, இலக்கணை புத்திரனாகிய தேவ குமாரனுக்கு முடிசூட்டி, வீறு பெற ஆட்சிபுரியச் செய்து, செயற்கரிய தவ வாழ்வை ஏற்க உடன்பட்டு எழுந்தான்.               

 

************************

 

இலக்கணையும் துறவு மேற்கொள்ளுதல்

 

பாடல் # 163


அமலமதி கேவலியின் அடியிணை வணங்கி

விமலனுருக் கொண்டனனல் வேந்தர்பலர் கூட

கமலமல ராணிகர்நற் காட்சியிலக் கணையும்

துமிலமனைப் பதுமையெனுந் துறவரடி பணிந்தாள்.

 

---------------------

 

அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி

விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட

கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்

துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.  

 

---------------------

 

வியாளன் முதலிய தோழர்களுடனும் தன்னிடம் வந்து சேர்ந்த  ஆயிரம் தோழருடனும் நாககுமாரன் சென்று அமலமதி என்னும் கேவலஞானியை வணங்கித் துறவு பூண்டு இயற்கையுருவாகிய நிர்வாண உருக்கொண்டு நோற்கலானான்.  செந்தாமரையை ஒத்துள்ள நற்காட்சியுடைய இலக்கணை மாதேவி முதலாயினோரும் பதுமஸ்ரீ என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டார்கள்.

 

***********************

 

நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்

 

 

பாடல் # 164

 

நறுங்குழ லிலக்க ணையு நங்கை மார்தங் கூட

உறுதவந் தரித்துக் கொண்டு வுவந்தவர் செல்லு நாளுள்

மறுவில்சீர் முனிவ னாய னாக குமாரன் றானும்

இறுகுவெவ் வினைகள் வென்று யினிச்சித்தி சேர்ந்த தன்றே.

 

---------------------

 

நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட

உறுதவம் தரித்துக்ந் கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்

மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும்

இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.  

 

---------------------

 

 

நறுமணமிக்க குழலையுடைய இலக்கணையும், ஏனைய மாதர்களுடன் மிக்க கடுந்தவத்தை உவந்து மேற்கொண்டு இருக்கின்ற நாளில், குற்றமற்ற சிறப்புடைய நாககுமார முனிவனும் தன்னைப் பற்றிய கொடிய காதி, அகாதி வினைகளை வென்று சித்திபதம் சேர்ந்தான்.        

 

***********************

 

பாடல் # 165

 

வியாளமா வியாளர் தாமும் விழுத்தவத் தனயை யென்னு

நயாவுயிர் தியானந் தன்னா னாலிரு வினைகள் வென்று

செயத்துதி தேவர் கூறிச் சிறந்தபூ சனையுஞ் செய்ய

மயாவிறப் பிறப்பு மின்றி மருவினார் முத்தி யன்றே.

 

---------------------

 

வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்

நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று

செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய

மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.  

 

---------------------

 

வியாளன் மாவியாளன் இருவரும் சிறந்த தவத்திற்குரிய தன்மை எனப்படும் உயிரியல்பாகிய தருமத்தியான சுக்கிலத் தியானங்களால் எண்வினைகளை அடியோடு நீக்க, காதிவினைகளை வெற்றி பெற்றுத் தேவர்கள் ஜெய கோஷம்செய்து துதிபாடி, சிறப்பாகிய கேவலஞான பூசனை செய்ய அகாதி வினைகள் எனும் மயக்கம் நீங்கிப் பிறப்பு இல்லாத முத்தி நகரைச் சேர்ந்தனர்.  

 

************************

 


பாடல் # 166

 

 அருந்தவ யோகந் தன்னா லச்சேத் தியபேத் தியர்தம்

 இருவினை தம்மை வென்று வின்புறுஞ் சித்தி சேர்ந்தார்

 மருவுநற் றவத்தி னாலே மற்றுமுள் ளோர்க ளெல்லாம்

 திருநிறைச் சோத மாதி சேர்ந்தின்பந் துய்த்தா ரன்றே.

 

-----------------------

 

அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்

இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்

மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்

திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.  

 

-------------------------

 

அச்சேத்திய அபேத்தியர் இருவரும் அரிய தவயோகத்தால் காதியகாதி யாகிய இருவினைகளை வென்று, பேரின்பமுடைய சித்த லோகத்தைச் சேர்ந்தார்கள்.  ஏனையோர்கள் தாம்தாம் மேற்கொண்ட தவ ஆற்றலிற் கேற்ப செல்வ மிக்க சௌதர்ம  கற்பம் முதலாகச் சேர்ந்து தேவசுகம் அனுபவித்தனர்.  

 

 

************************

 

பாடல் # 167

 

 நாகநற் குமரற் காயு நான்காண் டைஞ்நூற் றிரட்டி

 ஆகுநற் குமார கால மைந்து முப்பத் திரட்டி

 போகபூ மியாண்ட பொருவி லெண்ணூ றுவாண்டு

 ஆருநற் றவத்தி லாண்டு வறுபத்து நான்க தாமே.

 

--------------------------

 

நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி

ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி

போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு

ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.  

 

--------------------------

 

நாககுமாரனுக்கு ஆயுள் ஆயிரத்து நூற்று அறுபத்துநான்கு (1164) ஆண்டுகளாகும்.  அவற்றுள் குமாரகாலம் முந்நூறு (300) ஆண்டுகளாகும், போக மிக்க இப் பூமி ஆட்சி செய்தகாலம் எண்ணூ
று (800) ஆண்டுகளாகும், நற்றவம்புரிந்த ஆண்டுகள் அறுபத்து நான்கு (64) ஆண்டுகளாகும்.  

 

 

************************

 

பாடல் # 168

 

 மறுவறு மனைய வர்க்கு மாதவர் தமக்கு மீந்த

 பெறுமிரு நிலங்க ளெங்கும் பெயர்ந்து நற்கே வலியாய்

 அறமழை பொழிந்த கால மறுபத்தா றாண்டு சென்றார்

 உறுதவர் தேவர் நான்கு முற்றெழு குழாத்தி னோடே.

 

-----------------------------

 

மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த

பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்

அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார்

உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.  

 

--------------------------

 

நாககுமார முனிவர் காதி வினைகள் நீங்கி கேவலஞானம் பெற்று, தவத்தில் சிறந்த முனிபுங்கவர்கள் உடன் வர, நான்கு வகைத் தேவர் கூட்டங்கள் முதலிய கணங்களோடு,  குற்றமற்ற இல்லற ஒழுக்கமுடையோர்க்கும் துறவற ஒழுக்கமுடையோர்க்கும்; போகபூமி எல்லாம் திக்விஜயம் சென்று தருமோபபேசம் செய்த காலம் அறுபத்தோராண்டு களாகும்.  அதன்பின் அகாதி வினையையும் கெடுத்து, பிறவி லட்சியப் பயனாகிய சித்த நிலைப்பேற்றை அடைந்தார்.  

 

************************

 


பாடல் # 169

 

இதன்கதை யெழுதி யோதி யின் புறக் கேட்ப வர்க்கும்

புதல்வர்நற் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து

கதமுறு கவலை நீங்கிக் காட்சிநல் லறிவு முன்பாய்ப்

பதமிகு மமர யோகம் பாங்குடன் செல்வ ரன்றே.

 

---------------------------

 

இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்

புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து

கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப்

பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.  

 

---------------------------

 

இந் நாககுமாரன் கதையைப் படிப்போரும் எழுதுவோரும் கேட்போறும்; இம்மையில் புத்திரப்பேறும் பெருவாழ்வுமுடையோராய்த் தேவேந்திரன்போல வாழ்ந்து சினத்திற்கு காரணமான மனக்கவலை நீங்கி நற்காட்சி, நன்ஞான, நல்லொழுக்கமுடையவராய் வாழ்ந்து மறுமையில் தேவலோக சுகம் பெற்று இன்புறுவர்.  

 

************************

 

உலகிற்கு அறவுரை

 

பாடல் # 170

 

அறமின்றிப் பின்னை யொன்று முயிர்க்கர ணில்லையென்றும்

மறமின்றி யுயிர்க் கிடர்செய் மற்றொன்று மில்லை யென்றும்

திறமிது வுணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக் கஞ்சி

மறமிதை விட்ட றத்தில் வாழுமின் னுலகத் தீரே.

 

---------------------------

 

அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்

மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்

திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி

மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே.  

 

---------------------------

 

 

உலகத்தோர்களே! நீவிர் புலனடக்கும் உபவாச விரதம் நோற்றல் ஆகிய நல்அறவொழுக்கமின்றி நம்முயிர்க்கு இன்பந்தரும் புகலிடம் பிறிதொன்றில்லை என்றும்; நம்முயிர்க்குப் பேரிடர் புரிவது பேராசை, தீய ஒழுக்கம், மறச்செயல்கள் இன்றிப் பிறிதொன்றில்லை என்பதை அறிவீர்களாக! இந்த உணமையை உய்ந்துணர்ந்து தெளிந்து, கொடிய நாற்கதிப் பிறவிச் சுழலுக்குப் பயந்து, பேராசையால் விளையும் மறத்தை (தீவினையை) விட்டு பகவான் அருளிய இல்லற துறவற வாழ்வு நெறியைப் பின்பற்றித் திருப்தியோடு வாழுங்கள்.  

 

(ஐந்தாம் சருக்கம் முற்றும்)

 

************************

 

நாககுமார காவியத்தில் பின்சேர்க்கையாக இரு பாடல்கள் உள்ளன. அவை யிரண்டும் நூலாசிரியரால் இயற்றப்படவில்லை. ஆய்வு செய்பவர் உருவாக்கியது போன்று அமைந்துள்ளன.

 

முதற்சருக்கத்தில் தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்

அதனின்இரண்டாவதன்னில் ஈண்டுமுப்பத்து நான்காம்

பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்

விதியினான் நான்குதன்னில் நாற்பத்து மூன்ற தன்றே

 

 

இன்புறு மைந்துதன்னி லிரட்டித்த பதின்மூன்றாகும்

நன்புறக் கூட்டஎல்லா நான்கை நாற்பதின் மாற

வன்பிறை தொகையின் மேலே வருவித் தீரைந் தாகும்

இன்புறக் கதையைக் கேட்பா ரியல்புடன் வாழ்வரன்றே.

 

---------------------

 

முதல் சருக்கத்தில் உள்ள பாடல்கள் 39 ஆகும்.

அதற்கடுத்த இரண்டாவது சருக்கத்தில் 34 ஆகும்

முன்றாம் சருக்கத்தில் பாடல்கள் 28 ஆகும்.

நான்காம் சருக்கத்தில் பாடல்கள் 43 ஆகும்

ஐந்தாம் சருக்கத்தில் பாடல்கள் 26 ஆகும்.

 

இவ்வாறாக மொத்தம் 170 நூற்பாக்களை அடக்கியது இக்காப்பியமாகும்.

ஆனால் ஐந்து சருக்கங்களை கூட்டினால் 160 என்றும் மேலும் ஈரைந்து பாடல்கள் சேர்க்க மொத்தம் 170 என்று இப்பாடல் கூறுகிறது.

ஆனால் பாடலில் நான்கின் மடங்கு 160 என்றும், மற்றும் ஈரைந்தைக் கூட்டினால் மொத்தம் 170 என்றும் இரண்டாவது பாடல் தெரிவிக்கிறது.

அதற்கான விளக்கத்தை மொழி அறிஞர்கள் எவரும் குறிப்பிடவில்லை.

 


No comments:

Post a Comment