Shri Jwalamalini Thiru ahaval


ஸ்ரீ ஜ்வாலாமாலினி அம்மன்

திருஅகவல்




திருமிகு தேமலர்த் திசைதொரும் வாசந்
தருகின்ற பிண்டித்தருநிழற்  செய்ய
மந்தமாருதமும் வண்மையாய் வீசக்
கொந்தவலரசைந்து கொட்டிடத் தேன்மழை
யெங்கும் பரவ யின்பமுற்றவரெலாம்
புங்கவன்றன்னைப் புகழ்கின்ற வொலிபோல்
வண்டினமலரின் மதுவுண்டு கீதங்
கொண்டுமே பாடக் கோகிலந்தொனிக்கப்
பன்மணிக்கவிரினாற் பாலுனுமசைய
பொன்மலர் மாரி பொழிந்துமே தேவர்
ஜெயஜெயாவென்று திருநாமம் பாடி
நயலயானந்த நடனங்களாடி
ஆனந்தம் பொங்கி யடிமுடி வில்லாத
ஆனந்தனென்று அவரவர் பணிய
சிங்கவணைமேற் செந்தா மரைமிசை
திங்கண் முக்குடை சீருடனிழற்ற
திக்குடையாகச் சிறப்புடனமர்ந்த
மிக்கநல்வரதன் விளங்குமெண்குணனை
பன்னிருகணமும் பரிவேடம்போலத்
துன்னியே சூழச்  சுந்தரமூர்த்தி
திருவாய்மலர்ந்து திருவறமருளிய
நிருமலானந்த நித்தியனானஸ்ரீ
சந்திரநாதன் றாள்பணிந்தென்றுஞ்
சிந்தனை செய்யும்  ஸ்ரீசாமயக்ஷன்
தேவியே வுன்மேல் செந்தமிழ் தன்னால்
மேவியவிகவல் விளம்புவன் யானே
சீதளமிகுந்த செழுமதிமுகமுங்
காதளவோடிய கயல்விழியிணையும்
வில்லை நிகர்த்து விளங்கும் புருவமும்
முல்லை முகைபோல் முறுவல் வரிசையுந்
திருக்கிளர் பவளஞ் சிறந்தவதரமுந்
தருப்பணம் போன்ற தகைபெறு கன்னமும்
ஆம்பன்மலர்போலழகிய வாயுந்
தேம்படுகனிபோற் றிருவளர்மொழியும்
வள்ளையதுபோல் வணிதச்செவிகளும்
வெள்ளையெண்மலர்போல் விளங்குநாசியும்
முரிவளரும் முன்றாம்பிறபோற்
சீருமிகுந்த சிறந்த  நெற்றியுந்
திருவளைபோலச் சிறந்தநற்கழுத்துங்
கமலநனை போற் கதித்த தனங்களும்
விமலமாகிய மின்னல் போலிடையும்
வேய்தனையொத்து விளங்கும் புயங்களும்
வாய்ந்த வழகு  வண்மையாய்ச் சிறந்த
காந்தணமலர்போற் கரங்களினழகும்
ஏந்துங் கொங்கைக்கிசைந்த கச்சும்
பொன்னினாடையும் பொற்புள  காஞ்சியும்
மின்னுமிடையில்  விளங்குமொட்டியாணமும்
செந்தாமரைபோற் சிவந்தவடிகளில்
நந்தாதெழில்மிகு நவமணிப் பாடகமுந்
தண்டை கொலிசுஞ் சதங்கை நூபுரமும்
எண்டிசை கொண்ட விறைவியேயுந்ததனைச்
சொல்வதுபோலச் சுந்தரவாயால்
கல்கலீரென்றிரு காலதனிலொலிக்க
கரமிருநாகினுங் கனகனற்சூடா
திரமுகு நவ்வமணிதிகழ்கங் கணமுங்
கனகனற்குண்டுங் கதிர்செய் பவளமும்
இனமாயமைந்த வெழிலென்ன சொல்வேன்
மாந்தளிர் போன்றவணித விரல்களில்
சேர்ந்தயினமணி சிறந்த மோதிரமும்
பாசுபந்துடன் பசியநற்குச்சுந்
தேசுமிகுந்த திறந்தவங்கியும்
சோதிவீசுநற் றோளணியழகுந்
தீதிலா  துயர்ந்த திருமுத்தாரமுஞ்
சுந்தரநவமணி சோதிப் பதக்கமுஞ்
சந்திரஹாரஞ் சரட்டட்டிகை டீக்கா
வயிரமணியும் வளர்திருப்பொட்டுஞ்
செயிரததினமாலை  சிவந்தியட்டிகையுங்
கோதும்பச்சரமுந் குளிர்ந்தநன்மலர்
தாதுசெந்தேனுதிர் தாமமர் பழகுந்
திருவளரோலையுஞ் சிறந்தசிமிக்கியும்
பருதியொளிபோற் பகர்சந்திரமுருகும்
ஒன்னப்புசுட்டியு முயர்ந்தவாளியில்
மின்னுசிமிக்கியும் வெண்முத்துமிலங்க
முத்துமயிர் மாட்டி முகப்பினதழகும்
நத்துடன் பிலாக்கு நன்மணியொளிர
நெற்றியிற்றிலகமும் நேர்மதிப்பிறையும்
பத்திநிறைமணி பானுவின் பிறையும்
வாவுசுட்டியும் வணிதமணிவொளி
மேவுபான் பட்டியும் விளங்கிடும் பின்னற்
சடைநகைக்குச்சுந் தங்கநற்குப்பியுந்
திடமணித்தாழம்பு  திருராக்குடியுங்
கோடிசூரியன் கொண்ட வொளிபோல்
ஈடில்நவமணி மிசைந்த கீரீடமும்
எல்லாநகையு மியல்பாய்நிறைந்த
சொல்லையுடைய ஜ்வாலினியம்மா
சக்கரஞ்சூலந் தனுசுடன்  கணையும்
மிக்கநற்றுஜமும் வீசும்பாசமும்
வண்மையாய்ச்சிவந்த மாதுளங்கனியும்
தன்மையாய்க்கொண்டு ஸஜ்ஜனாள்தனக்கு
அபயந்தருநல் லஸ்தமும்விளங்க
சுபகரமளிக்குஞ் சுந்தரபூஷிணி
ஜினவரமோங்கத் திகழ்பரிபாலினி
அனவர்கள் போற்று மம்புயபத்தினி
திங்கண்மும்மாரி செறிந்துபொழிந்து
எங்குமேசெந்நே லினிதாய்விளைந்து
பொங்கியதிருவற புகழேநிறைந்து
தங்கியதிலக்குமி சகலரும்நிறைந்த
இராஜமாபுரியிலெழில்மல்லிநாதன்
புராதனமாய்மிகப்  புகழுடனமர்ந்த
ஜினாலயந்தன்னில் திகழ்வடபாலில்
முனாலையமர்ந்த முடிவிலாதுத்தமி
நித்யகல்யாணி நிரந்தரிவரந்தரும்
அத்தனடிதனை யனுதினம்பரவும்
மகிடவாகினி வந்தெனக்கார்க்குஞ்
சுகியேநிறைந்த ஜோதிரூபிணீ
மூலகாரணி  முன்னிறுகார்க்குஞ்
சூலதாரணி சுரந்தகிருபாகரி
தராதலம்புகழுமென்  தாயே வளர்க்கும்
பராசக்தியுந்தன்  பதந்தனை தொழுது
இஷ்டமானவர்க்கு இஷ்டதேவதையாய்
துஷ்டமானவர்க்கு துஷ்டதேவதையாய்
ஓங்காரங்கொண்டு வுட்கும் ரூபமாய்
ஆங்காரத்துடன் அவர்களை யழிக்கும்
பஞ்சாக்ஷரத்தி பல்பூதப்ரேத
மஞ்சாப்பிசாச  மதிபிர்மராக்ஷஸன்
மாடன்சடாமுனி மதுரைவீரனுஞ்
சாடும்பிடாரி சங்கிலிக்கருப்பும்
வீரமாகாளியும் விரிசடைபேச்சியுங்
காரங்கொண்டரி கரியகாடேரியும்
பதினெட்டாம்படி பயந்தருகருப்பும்
எதிரிட்ட  பேரை யிடறுமிருளனும்
பெரியதம்பிரான் பலிகொளுந்துர்க்கை
யெரிதனைவீட்டி  விடுகின்ற குறளியும்
பில்லிசூனியமும் பலயேவல் வைப்புங்
கொல்லும் வியாதி  கொடிதான்  திஷ்டியுந்
துன்னுமனேக துஷ்ட தேவதையெலாஞ்
சின்னபின்னமாய் தெரிகடச்செய்யும்
வல்லபிஜ்வாலாமாலினி வா வா  நமோ நமோ
ஒல்லையில் வா வா வுத்தமி நமோ நமோ
ஞாலம் புகழும் நாயகி நமோ நமோ
பாலகன்றன்னைப்  பாலி நமோ நமோ
மகிடநடன மணியே நமோ நமோ
சகந்தனில்  விளங்குஞ் சத்தி நமோ நமோ
கண்ணாற்காண கண்மணி வா வா
விண்ணோற் புகழும்  விஜயி வா வா
திக்குவேறில்லைத் தேவி வா வா
ஒக்கப்பேசு மொளியே வா வா
வாசாமகோசர மணியே வா வா
தேஜோமயமணிச் செல்வி வா வா
உரியவர்தமக்கு வொண்மதிச் சுடரே
அரியவர் தமக்கு அக்கினிச்சுடரே
ஓம் ர ர ர ர ர ர ஜ்வாலாமாலினி
வர வர வர வரந்தருந்தேவி நீ
ஓங்காரமாதி வொளிபெருமணியே
ஹிரீங்காரந் தன்னிலிருக்குமணியே
க்லீம்பென்பதற் கிளர்திருமணியே
ப்ளூம்யென்பதிற்  புகழ்வளர்மணியே
த்ராம் யென்பதிற்றங்கியமணியே
த்ரீம் யென்பதிலமர்ந்த ஜினமத
வம்ஸ திருவறம் வளர்செய்மணியே
ஹாம் யென்பதிலமர்ந்த சிரோன்மணியே
தேம் துணரணிந்தசெல்வி  மனோமணி
க்ரோம்  யென்பதிற் கூடித்திருவற
த்ரோம்  வஞ்சியரைத் துடைக்குமணியே
க்லீம் யென்பதிற்கிளர் ஜினவரத்துடன்
மலீமசமிலரை வாழ்விக்குமணியே
வஷட் வென்றதை மருவியுரைஸம்
வெளஷட் ஸுவாஹா வளமாய் நிறைந்த
ஷட்கோண  சக்ரத்தமைந்த  பிஜாக்ஷரத்
துட்பொருள் நீயே  யுலகெலாமறியும்
உனையே நினைத்து உன்மூலமந்திரம்
நினைவுடன் ஜபிக்க நிணதேவதையெலாம்
எரியிதெரியிதென் றேங்கியே யழுது
கரியிது கரியிது கருகுதுதேகம்
அம்மா அம்மா அறியோம் பெருமையை
எம்மாலறியத்தகுமா பிழைதனைக்
கொண்டு பொருத்திடு கொடிய சூலிநீ
என்றுவணங்கி  யினியிரோமென்று
கண்ணிற்காணாமற் கதறியேயோடிடும்
எண்ணுமனுகாது  வின்பமே தரும்
வல்லபியம்மாவாசையைப் பருவம்
எல்லாவர்காண யெழின்மிகச் செய்த
ஜ்வாலாமாலிணி சுபகரமளிக்கும்
மேலான தேவி மேவியுன்னடிதனை
சிரமிசைகொண்டு  சிந்தித்த பேர்க்கருள் தரவேணு
மருகதாஸநின் சரணம்.


திருஅகவல் முற்றிற்று…


No comments:

Post a Comment