Jain Cosmology – சமண அண்டவியல்
Narration delivered by Padmaraj Ramasamy,
in Arham Paatsala – Samanar Palli – Zoom cloud meeting classes on 13/14-05-2020
You tube url
சமண அண்டவியல்:
(Jain cosmology)
--------------------
(அண்டம்- cosmic - என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும்
குறிக்கின்ற ஒரு சொல்லாகும். இந்த நிலவுருண்டை (பூமி), நிலவு, வானம், சூரியன், சூரியனைச்
சுற்றி வரும் கோள்கள், விண் மீன்கள், விண் மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள்
(cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty
space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன்
குழுக்கள் (galaxy) ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும். இத்துடன் காலம்
என்ற கருத்தும் அது தொடர்பான முறைமைகளும் (laws) இதில் அடங்கும்.)
------------------
சமணமத இறைவர்கள், அறிவியலார் போன்று சூரியகுடும்பம், பால்வீதி
அண்டம் என தொலைநோக்கிகளின் துணை கொண்டு வானாராய்ச்சியை செய்து கொண்டிருக்காமல், கேவலஞானத்தின்
வழியே
- பல்லண்டத்திற்கான
(multiverse), ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கான
அமைப்பை ஆகாசம் என்று சுட்டியுள்ளனர்.
- மனிதர்கள்
வாழும் பகுதியை மத்திம லோகம் என அழைக்கின்றனர். அதன் மையத்தில் அமைந்துள்ள ஜம்பூத்வீப
என்ற நிலப்பரப்பில் ஒரு பகுதியாக பரத க்ஷேத்ரம் என இப்பூமியை குறிக்கின்றனர்.
- பல
வகையான தனித்துவமான அடுக்குகளாக (layers) தட்டையான பிரபஞ்சங்கள் ஒன்றின் மீது ஒன்றான
வடிவமாக (லோக ஸ்வரூப வடிவத்தில்) காட்சியளிப்பது போன்றுள்ளது என சமண கடவுளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜைன சமயத்தின் அண்டவியல் (Jain cosmology) இக்கால அண்டவியலை
யொத்த கருத்துக்களை அன்றே தன்னுள் அடக்கியுள்ளது எனின் மிகையாகாது.
இப்பேரண்ட அமைப்பு யாராலும் உருவாக்கப்படவில்லை, கணக்கிடமுடியாத
எண்ணிலடங்கா காலமாக உள்ளது என ஜினசேனாச்சாரியார் எழுதிய ஆதிபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் பகுபடா ஆறு திரவியங்கள் உள்ளன.
(அதாவது நுண்ணிய, சிதைக்கமுடியா பொருள்.
முதலில் அணுவை நுண்ணிய பொருளாக அறிவியலார் அறிவித்தனர்.
பின்னர் அதனுள் எலக்ட்ரான், ப்ரொட்டான், நியூட்ரான் போற்றவை
என்றனர். பின்நாளில் குவார்க் எனும் நுண்பொருளைக் கண்டறிந்தனர்….
இவ்வாறு நுண்ணிய பொருளுக்கான ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டுதான்
உள்ளது
ஆனால் சமண மெய்ஞ்ஞானிகள் நுண்ணிய, சிதைக்க இயலா மெய்ப்பொருள்கள்
ஆறினை கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.)
அவை:
ஜீவன் - உயிர்
அஜீவன் - உயிரற்றது
தன்மம் - தர்ம
அதன்மம் - அதர்ம
ஆகாயம்
காலம்
என ஆறு நிரந்தர, ஒன்றுக்கொன்று இணக்கத்துடன் இடமளிக்கும்,
பகுபடாபொருட்கள், திரவியங்கள் வியாபித்துள்ளன.
அவை ஆக்கிரமித்த ஆட்சிப்பிரதேசமே லோகஆகாசம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஜீவனும், அஜீவன் எனும் உயிரற்ற பொருளும் சேர்ந்த கூட்டுப்பொருளே
ஜீவராசி, உயிரினம் என அழைக்கப்படுகிறது.
ஜீவராசிகள் இயங்க வழிவகுப்பது தன்மம், நிலைத்து நிற்க துணையாய்
இருப்பது அதன்மம், இந்த ஜீவராசிகள், தன்மம், அதன்மம் இருக்க இடமளிப்பது ஆகாயம். ஜீவராசிகளின்
செயலுக்கும், பரியாயம் எனும் மாறுகைக்கும் காரணமாய் இருப்பது காலத்திரவியத்தின் முன்னேறும்
செயல் . (இந்த ஆறு திரவியம் பற்றி திரவியசங்க்ரகம் எனும் நூலில் விளக்கத்தினை காணலாம்.)
அனாதிகாலமாக உள்ள இப்பேரண்ட அடுக்கான லோகாகாசத்தின் தோற்றம்:
ஒரு மனிதன் கால்களை அகட்டி, இரு கைகளையும் இடையில் வைத்துக்
கொண்டு நிற்பது போன்ற வடிவம் உடையது.
இது முப்பரிமாண அடிப்படையில் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
நாம் லோகஸ்வருபம் என்பது இரு பரிமாண ஓவியமாக தரப்பட்டுள்ளதை தான் காண்கிறோம்.
கிரஹங்கள் அனைத்தும் ஒரு தட்டையான அந்தரத்தில் அனைத்தும் இயங்கிக்
கொண்டிருப்பதை தொலைநோக்கி கருவிகள் இல்லாத காலத்திலேயே சமண மெய்ஞ்ஞானியர்கள் குறிப்பிட்டுள்ளது
மிகவும் வியப்பை அளிக்கிறது.
லோகாகாசம்:
லோகாகாசத்தில் மூன்று உலகங்கள்(திரிலோக்) உள்ளன.
ஊர்த்துவ லோகம், மத்திம லோகம் (நாம் வாழும் பகுதி) மற்றும்
அதோலோகம் என்ற மூன்று பிரிவுகளும் மூவுலகத்தில் அடங்கும்.
இந்த லோகாகாசப்பகுதியில் ஆகாயத் திரவியம் மற்ற ஐந்து திரவியங்களையும்
தன்னுள் கொண்டுள்ளது.
ஆகாயம் நீங்கலாக மற்ற திரவியங்கள் இல்லா- முப்பரிமாண லோகாகாச
பகுதி அன்றி – அதற்கு வெளியே சூழ்ந்துள்ள வெற்றிடப்பகுதி அலோகாகாசம், வெட்டவெளி என்றழைக்கப்படுகிறது.
லோகாகாச அமைப்பில் நான்கு பகுதிகள உள்ளடங்கியுள்ளன.
ஊர்த்துவலோகத்தின் மேற்பகுதியாக அமைந்துள்ள சித்தஷீலா - சித்தர்கள்
உறையுமிடம்; ஊர்த்துவ லோகம் – மேலுலகம்; மத்திமலோகம் - மத்திய உலகம்: அதோலோகம் - கீழுலகம்.
சித்தஷீலா - விடுதலைபேறடைந்த ஜீவன்கள் உறையுமிடம்
ஊர்த்துவலோகமான மேற்பகுதியில் உள்ள பல்லண்டங்களில்
(multiverse) தெய்வத்தன்மை பொருந்திய தேவர்கள், உபதேவதைகள் போன்றவர்கள் சுவர்க்க அடுக்கு
அண்டங்களில் வசிக்கின்றனர்.
மனிதர்கள் வாழ்விடங்கள் மையப்பகுதியில் ஒரு சிறிய அண்டமாக(galaxy)
மேலும் கீழுமுள்ள பல்லண்டங்களுக்கு (multiverse) நடுவில் அமைந்துள்ளது.
கீழ்பகுதியில் பல அடுக்கு அண்டங்களில் பவணர்கள், அரக்கர்கள்,
பேயுருவினர் மற்றும் அவற்றுக்கு கீழே வாழ்பவர்கள் தீயாத்மாக்கள் (நரகர்கள்) வாழ்கின்றனர்.
மத்திம லோகத்தில் மையப்பகுதியில் உள்ள மஹாமேரு என்ற நெடிதுயர்ந்த
மலைஉள்ளது. அதனைச் சுற்றி பல தீவீபங்கள்(அண்டங்கள்) வளைய பூமியாக உள்ளன. ஒவ்வொன்றிற்கும்
இடையே சமுத்திரம் அமைந்துள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழுமிடங்கள் இவ்வளையத்தில்
இரண்டரை பகுதியாக அமைந்துள்ளது.
அவற்றில் மேருமலையைச் சுற்ரி ஒரு சமுத்திரத்திற்க்கு இடையே
அமைந்துள்ள ஒன்று தான் ஜம்பீத்வீபம் எனும் பகுதி.
(** த்வீபங்கள்-அண்டங்களைப்போன்று லோகஆகாசத்தில், அந்தரத்தில்,
உள்ள பிரதேசங்கள், மலைகள், கடல்கள் என்றழைக்கப்படுகின்றன)
அந்த ஜம்பூத்வீபத்தில் பரதக்ஷேத்ரம் அமைந்துள்ளது. அதாவது
நாம் வாழும் தற்போதைய பூகோளப் பிரதேசத்தை குறிப்பதாக கொள்ளலாம். (ஆனால் பூகோள ரீதியாக பல்வேறு மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது பாரதநாடு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)
மேற்கூறப்பட்ட லோகஸ்வரூப வடிவம் ஆச்சார்யஸ்வாமிகளால் வர்ணிக்கப்பட்டவை.
ஒரு அறிவியல் கதை போன்று தோன்றினாலும், பல அடுக்கான பேரண்டம், பிரபஞ்சங்கள் அனைத்தும்
அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளும் அளவிலே வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஜைன சமயத்தில் லோக அமைப்பு தற்போதைய விஞ்ஞா அண்டவியல் கண்டுபிடிப்பின்
வரம்பிற்குள் இல்லாமல் மொத்த அமைப்பும் முற்று பெறும் அளவில் சமணத் தீர்க்கதரிசிகள்
கூறியுள்ளார்கள். (அதாவது அதற்கு மேல் பிரபஞ்ச கண்டுபிடிப்பிற்கான பிரயத்தனம் இருக்காது.)
--------------------------
நான்கு பகுதி விளக்கம்
மூவுலகம் கீழ் இருந்து மேல்வரை 14 ரஜ்ஜூ** (கயிறு) பிரமாணமாகும். அதனால் அதனை பதினான்கு ரஜ்லோக், த்ரிலோக் (14 Rajlok, Trilok) என்றும் குறிப்பிடுகின்றனர்.
----------------
***(ரஜ்ஜு - 1000 கிலோகிராம் எடையுள்ள இரும்பு குண்டினை இந்திர லோகத்தில் இருந்து கீழே விட்டால் அது 6 மாதத்தில் எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரத்தின் அளவுக்கு சமம்.)
---------------
ஒரு மனிதன் கால்களை அகட்டி, இரு கைகளையும் இடையில் வைத்துக் கொண்டு நிற்பது போன்ற வடிவம் உடையது லோகஸ்வரூப வடிவம் என்று கண்டோம்.
மூவுகலத்தின் அடி அகலம், கீழே 7 ரஜ்ஜூ,
உயரம் 7 ரஜ்ஜு பின்னர்
அகலம் ஒரு ரஜ்ஜு,
பிறகு மூன்றரை ரஜ்ஜு உயரம்
மேலே சென்ற பிறகு அகலம் ஐந்து ரஜ்ஜு,
மேலும் மூன்றரை ரஜ்ஜு மேலே சென்றபிறகு
அகலம் ஒரு ரஜ்ஜு என்னும் அளவில் அமைந்திருக்கிறது.
எல்லா புள்ளியிலிருந்தும்
மூவுலகத்தின் பருமன் ஏழு ரஜ்ஜு அளவாகும்.
மொத்த கனபரிமாணம் = 343 ரஜ்ஜு
(ரஜ்ஜு என்ற அளவு பன்மையாகும்)
இவ்வுலகம் அதனைச் சுற்றி அமைந்துள்ள
1. கனவாத வலையம்,
2. கனோததிவாத வலையம்,
3. தநுவாத வலையம்
இவற்றின் ஆதாரத்தில் அமைந்துள்ளது.
அவ்வளையத்திற்குள்
அமைந்த லோகஆகாயத்தில் ஆகாஷ் திரவியம்
மற்ற ஐந்து திரவியங்களுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக இருக்க இடமளித்துள்ளது. அதனால் உயிரினங்கள்
சம்சார ஜீவன்கள் மற்றும் முக்தி ஜீவன்கள் வாழ்கின்றன.
அவ்வளையத்திற்கு வெளியே அலோகஆகாயத்தில் ஆகாஷ் திரவியம் மட்டும்
வெற்றிடமாக உள்ளது. அங்கு மற்ற திரவியங்கள் இன்மையால் ஜீவராசிகள் ஏதும் கிடையாது.
சமண திர்க்கதரிசிகள் உயிர் விடுதலை பெறும் நோக்கத்தை பூர்த்தி செய்யும் அறிவியல்
கருத்துக்களை மட்டும் சொல்லி சென்றுள்ளனர். பிற
சமூக வாழ்க்கைக்கு தேவைப்படும் விஷய ஞானத்தில் கவனம் செலுத்த வில்லை.
அனைத்தும் அறிந்த முழுதுணர் ஞானியராய் இருந்தாலும் வினைக்கட்டிற்கு
வகை செய்யும், வசதியான வாழ்விற்கு பயன்படும் அறிவியல் சாதன கண்டுபிடிப்பிற்கான நுணுக்கங்களை
தெரிவிக்கவில்லை. ஏனெனில் அனைத்துலகும் மாசுபடும், பல நுண்ணுயிரிகள் மற்றும் சில ஜீவராசிகளின்
ஒட்டுமொத்த அழிவும் சூழலியலில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் அபாயத்தினை உணர்ந்து அவ்வகை
அறிவியலை தெரிவிக்காமல் விட்டனர்.
மேலுலகத்தில் முதலாக…….
சித்த க்ஷேத்திரம்
பற்றிய விளக்கம் காண்போம்…
சித்தஷீலா –
வீடுபேறு ஸ்தலம்
முக்தி உலகம்
லோகாசாசத்தின் மேற்பகுதியான பிறை போன்று தோன்றும் (முப்பரிமாணத்தில்
குறுக்காக வெட்டப்பட்ட அரைகுழாய் போன்றுள்ளது)
40 யோசனை தூரம் நீளம் அமைந்துள்ள ஆறு திரவியங்கள் நிரம்பிய
உச்சிநிலை. அதற்கு மேல் அலோகாகாசம் எனும் வெற்றிடமே உள்ளது.
இந்த க்ஷேத்ரத்தில், கடைசி பிறவி விலகி விடுதலை பெற்ற முக்தியடைந்த
உயிர்கள் நேராக இப்பிரதேசம் வந்தடைந்து உறைகின்றன. அவர்கள் மீண்டும் கீழே உள்ள மூவுலக
பிரதேசத்தில் வந்து பிறப்பதில்லை.
பிறவா நிலையை அடைந்த சித்தஆன்மாக்களை கடவுளர்களாக வணங்குகிறோம்.
பிராகிரத மொழி சித்தாத்மனை ஊர்த்துவகாமினி (மேல்நோக்கி செல்லுதல்),
நிஹ்கம்மா (செயல் இல்லாநிலை) என்கின்றது.
எட்டு மூலகுணங்களை பெற்ற சித்தஆன்மா உருவமற்று இருப்பினும்,
தனது கடைசி பிறவி உருவின் முழுவளவில் சற்று குறைவான பிரதேசத்தை கொண்டிருக்கும்.
சித்தாத்மாக்களின் சிறப்பான குணங்களை
"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
என்கிறது சூடாமணி நிகண்டு.
இவற்றை கேவலஞானம் அடைந்தவுடன் ஆன்மா அனந்த ஞானம், அனந்த தரிசனம்,
அனந்த வீர்யம், அனந்த சுகம் ஆகிய இந்நான்கு பேறுகளையும் பெறுகிறது.
ஆன்மா சித்தநிலை எய்திய பின் சிறப்பான குணங்களான
அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீர்யம் மற்றும்
அனந்த சம்யக்த்வம் – உண்மைத் தத்துவத்தின் மீதுள்ள நம்பிக்கை.
சூக்ஷுமத்வா - மிக நுட்பமானதாக இருப்பர். புலனுணர்வுக்கு அப்பாற்றட்டு,
பொருளை நேரடியாக அறியும் ஆற்றல் மிக்கவர்.
அகுருலகுத்வா - அளவிடும் பருமனிலிருந்தாலும் உடல்வடிவமற்றதாக
இருப்பர். சித்தாத்மா தன் பிரதேசத்தில் வேறொரு சித்தாம்மா இருப்பினும் அவற்றுடன் பகிர்ந்து
கொண்டும் தனித்துவமாகவும் இருப்பர்.
அவகாஹனத்வா – தனது இடத்தில்
வேறொரு சித்தாத்மன் இருப்பினும் இடையூறாக இல்லாமலும் ஒத்திசைவாக
அதே இடத்தில் இருக்கும்.
அவ்யபாதா – எந்த நிலையில் இருந்தாலும் எண்ணிலடங்கா சுகம் நிரந்தரமாக
இருக்கும்.
இவ்வாறாக சித்தாத்மாக்கள் உறைவிடமான சித்தக்ஷேத்திரத்தில்
மேலும் சில ஏகேந்திரிய ஜீவன்களும், சில தாவர இனங்களும் இருப்பதாக சில நூற்குறிப்புகள்
தெரிவிக்கின்றன.
(சமண சமயம் இருபெரும் பிரிவாக இருப்பினும் மேலும் மும்மூன்று
கிளைகளாக எட்டு பெரும்பாண்மை சித்தாங்களைக் கொண்டுள்ளன. அனைத்தும் மஹாவீரரின் போதனையின்
அடிப்படையில் ஒன்றாக இருப்பினும், ஆகமங்களில் இடம், பெயர், அளவீடுகளில் சிறிது மாற்றங்கள்
உள்ளன. ஒற்றுமையான தகவல்களை மட்டும் கையாள்வதனால் சில வித்தியாசங்கள் தோன்ற வாய்ப்புள்ளது.)
ஜைன அண்டவியல் பற்றி கரணானுயோகம், உயிரினங்களின் வகைப்பாடு
அவற்றின் பிறப்பு, ஆயுள், இறப்பு மற்றும் பிரதேசத்தை பற்றிய அறிவியல் குறிப்புகளாக இல்லாமல், உள்ளார்ந்த விஷயங்களை தொடர்பு படுத்தி
கூறுகிறது.
மேலை நாட்டில் உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமவளர்ச்சி போன்றவைகள்
வெளிஉலகுசார்ந்த வரையறைகளை அளிப்பது போல் அல்லாமல் சமணம், மனம் சார்ந்த செயல்பாடுகளை,
வினைக்கொள்கைகளை வரையறை செய்து அதன் படி உயிரினங்கள், பிறவிகள், மரணம் போன்ற வற்றை
வகைப்படுத்தியுள்ளது.
அதனால் உயிர் அதன் தூய்மையின்னையின் காரணமே உயிரினங்களுக்கு
காரணம் என்று வலியுறுத்துகிறது. உயிரினங்களின் மேன்மை, அவை ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்க்கையில்
நேர்மைத்தன்மையும், பரஸ்பர பரோபகாரத் தன்மையே நிர்ணயம் செய்கிறது என்பதை ஸ்ரீ மகாவீரர்
வலியுறுத்திக் கூறுகிறார்.
அதன் வழியே தான் உயிரின் விடுதலை நேர்கிறது. அதனால் விடுதலைப்
பிரதேசத்தினையும், தளையில் வாழும் உயிரின் மற்ற பகுதியினை மட்டும் சமணம் விளக்குகிறது.
அதனால் லோகாசாசத்தில் வாழும் உயிரினங்கள் பற்றியும், பிரதேச
வர்ணனையினை மட்டும் சமணம் பகர்கிறது. பிரபஞ்சத்தில் மற்ற பகுதிகளின் விபரங்கள் மீது
அக்கறை காட்ட வில்லை.
ஆகாசம் (லோக, அலோக) பகுதிகள் எப்போது தோன்றியது. யார் தோற்று
வித்தார்கள் என்பதான முயற்சிகளை மேற்கொள்வதால் பலனில்லை என்பதை உணர்த்தவே, இவ்வுலகம்
அனாதி காலமாக உள்ளது என்பதை மட்டும் உறுதி செய்துள்ளது.
பிறப்பு, இறப்பிற்கான காரணம் அந்தந்த ஜீவன்களின் மனோபாவம்
மற்றும் செயல்வடிவமே நிர்ணயம் செய்கிறது என்பதை அறுதியிட்டு கூறுவதோடு, அதற்கான விளக்கங்களையும்
தருகிறது.
அதனால் சமண அண்டவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் முன்னர் உயிரினங்களின்
வகைப்பாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் வாழ்விடங்கள் அதற்கான காரணங்களும் எளிதாக புரிந்து
விடும்.
உயிரினங்களைப் பற்றி (சுருக்கமாக) தெரிந்து கொள்வோம்…..
சமணத்தில் ஜீவன் மற்றும் ஆன்மா என்பது ஒரே பொருளுடையதாக சில
இடங்களில் கூறப்படுகிறது. ஆன்மீக அல்லது உளம் சார்ந்த கூற்றில் ஜீவன் என்பது ஆன்மாவையும்,
உடல் அமைப்பு சார்ந்த கூற்றில் ஆன்மா என்பது ஜீவனாகவும் சுட்டப்படுகிறது.
உடலில் ஆன்மா உள்ளவரை, ஜீவன் வளர்ச்சி, அழிவு, ஏற்றஇறக்கம்,
மாறுபாடு, நுகர்வு, தூக்கம், விழிப்பு, செயல், பயம், ஓய்வு, அறிவு மற்றும் புலனுணர்வு,
மேலும் தன்னைகாத்தல், வாரிசு உருவாக்கல் போன்ற பண்புகளை கொண்டுள்ளது.
ஆன்மா விலகியதும்
அனைத்து அம்சங்களும் நிறுத்தப்படுகிறது. அந்த பண்புகள் அனைத்தும் உடல்சார்ந்தவை. ஆனால்
உணர்வு(சேதனா) மட்டும் ஆன்மாவின் அடிப்படையான குணமாகும்.
நமக்கு இந்த வேறுபாடுகள் உடல், ஆன்மா இரண்டும் வெவ்வேறான கூறுகள்
என்பதை உணர்த்தும்.
மேலும் ஆன்மா அது வசிக்கும் உடலுக்கேற்ப தன்னை விரிவடையச்செய்யும் ஆற்றல் கொண்டது. எறும்போ, யானையோ
எதுவானாலும் சம்மான ஆன்மாவைக் கொண்டுள்ளன.
அதனால் உடலும் ஆன்மாவும் சேர்ந்தவைகளை ஜீவன் என்றே கொள்வோம்.
-----------------------
சமண அகமத்தின் படி
லோகஸ்வருப பிரதேசமெங்கும்
ஒரு கன மில்லிமீட்டருக்கும் குறைவான கனஅளவிலும்
கண்களுக்கு தெரியாத ஜீவராசிகள் வாழ்வதாக சொல்லப்படுகிறது.
அதில் வெற்றிடமே இல்லை எனலாம்.
------------------------
ஜீவன்கள் இருவகை:
‘மோக்ஷ ஜீவன்’
விடுதலை பெற்ற ஜீவன்களிடம் வினைத்தளை யில்லை. அதனால் பிறப்பு,
இறப்பு சுழற்சி இல்லை. அதனால் சித்தக்ஷேத்திரத்தில் செயல்களின்றியும், எந்நிலையிலும்
சுகம் குறையாமலும் உறைகிறது. அரூபியான ஆன்மா குறைபாடற்ற ஞானமும், உணர்வும் கொண்டுள்ளது.
அனைத்து ஆன்மனும் உயர்வு தாழ்வற்ற நிலையில் ஒன்றுக்கொன்று இடமளித்து இணக்கமாக உள்ளன.
‘சம்சார ஜீவன்’
மாறாக சம்சார ஜீவன்கள் வினைத்தளையால் கட்டப்பட்டு பிறவி சுழற்சியில்
(தேவ, மனித, விலங்கு, நரக கதியில்) உழன்று வருகிறது. அவை கட்டுக்கடங்காத, மூர்க்கத்தனமான
உத்வேகத்தினால் வரும் சுக, துக்கங்களை அனுபவிக்கிறது. அரஹந்தரை தவிர அனைத்து சம்சார
ஜிவன்களும் வரையறுக்கப்பட்ட அறிவும், கருத்தும் கொண்டுள்ளவை.
ஜீவன்கள் பூமி, நீர்,
நெருப்பு, காற்று என அண்டம் முழுவதுமாக வியாபித்துள்ளன.
மனிதன், தேவன், நாரகன்(நரகன்), விலங்கு, மீன், பறவை, பூச்சி,
ஜந்து, தாவரம் என பல வடிவங்களில் பகுத்துணரும் படி பரவி வாழ்கின்றன.
சமணம் 84 லட்சம் வகை உயிரினங்கள் பிரபஞ்சத்தில் வாழ்வதாக பகர்கின்றது.
அவை பெற்றிருக்கும் புலனறிவால் வகைப்படுத்தலாம்.
உயிரினங்களை தொடுணர்வு, சுவையுணர்வு, வாசனையுணர்வு, பார்வையுணர்வு,
ஒலியுணர்வு என ஐவகை உணர்வுகளாக(ஐந்தறிவாக) வகைப்படுத்தப்படுகிறது. அவற்றுக்கான புலன்களை(senses)
கொண்டுள்ளன.
------------------
ஜீவராசிகளை புலன்களின் எண்ணிக்கை மற்றும் அசைவு இவற்றின் அடிப்படையில்
இரு பெரும்பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இடப்பெயர்ச்சியின் அடிப்படையில்:
அசையா அல்லது ஸ்தாவர ஜிவன்:
அவற்றால் இடம்பெயர முடியாது
மேலும் ஒருபுலன் அறிவு (ஏகேந்திரிய ஜீவன்) பெற்றவை.
அசையும் அல்லது திரச
ஜீவன்:
இடப்பெயர்ச்சி உண்டு.
மேலும் இருபுலனறிவிலிருந்து ஐந்து புலனறிவு வரை பெற்றிருக்கும்.
இடம்பெயரா – (ஸ்தாவர) ஏகேந்திர ஜீவன்களில் ஐந்து உட்பிரிவுகள்
உள்ளது.
1. மண் உடலி,
2. நீருடலி,
3. நெருப்புடலி,
4. காற்றுடலி,
5. வனஸ்பதி ஆகியவை.
ஓரறிவு ஜீவன்களில் நீர் ஒத்திசைவுடன் ஒன்றிணைந்த பல உடல்+உயிர்
சேர்ந்த அமைப்பாக இருப்பது மனித பார்வைக்கு தெரிவதில்லை.
ஆனால் பல நுண்ணுயிரிகள்(microorganisms) நீரில் வாழ்வதை நுண்ணோக்கியினால்
காணலாம்.
அதே உண்மை தீஜ்வாலையிலும், காற்றமைப்பிலும் பொதிந்துள்ளதாக
நம் சமண தீர்க்கதரிசிகள் தெரிவிக்கின்றனர்.
சமணத்தில் பஞ்ச பூதங்கள் எனும் கோட்பாடு முற்றிலுமாக கூறப்படவில்லை.
மண் (பிருத்வி), நீர்(அப்பு), நெருப்பு(தேயு), காற்று(வாயு)
போன்றவை (உடலுள்ள) ஜீவன்களாக சுட்டப்படுகிறது.
(மேலும் அவற்றுக்கு இழைக்கும் தீங்குகளும் தீவினையாக ஆன்மாவில்
பந்தமாகின்றன)
---------------
5. வனஸ்பதிகாயா – தாவர உடலிகள்:
தாவரங்கள் வெளித்தோற்ற அமைப்பு, வளர்தல், தலைமுறை உருவாக்குதல்
போன்றவற்றால் புல், பூண்டு, புதர், குறுஞ்செடி, பெருஞ்செடி, மரம் வகைப்படுத்தலாம்.
தாவரங்களில்
ஓருடல் ஒருயிர் மற்றும்
ஓருடல் பல்லுயிர்
என்ற இரு பிரிவுகளுள்ளன.
பிரத்யேக வனஸ்பதிகா – ஓருடல் ஒருயிராக உள்ளவை.
மரம், செடி, கொடி, விதை போன்றவை.
சாதாரண வனஸ்பதிகா – ஓருடலில் பல உயிர்கள் உள்ள தாவர வகை.
உதாரணம் – கிழங்கு வகைகள். வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காரட்,
பீட்ரூட், உருளைக்கிழங்கு, போன்றவை.
(அவற்றை உண்ணும் போது பல உயிர்கள்
அழிவதால் சமண நூல்கள் ஹிம்சை கருதி
உணவாக ஏற்கவில்லை)
திரச ஜீவன்கள்:
இடப்பெயர்ச்சி உண்டு.
மேலும் இருபுலனறிவிலிருந்து ஐந்து புலனறிவு வரை பெற்றிருக்கும்.
ஈரறிவு (பீயிந்திரய) ஜீவன்- ஸ்பரிச இந்திரியம் (மெய்) , ரசன
இந்திரியம் (வாய்) சுவை உணர்வு உடையவை.
சங்கு, கிளிஞ்சல், புழுக்கள், அட்டை, முதுகெலும்பில்லாஉடலிகள்
போன்ற ஜீவன்கள்
மூவறிவு(த்ரீயிந்திரய) ஜீவன் – ஸ்பரிச இந்திரியம் (மெய்)
, ரசன இந்திரியம் (வாய்) சுவை உணர்வு மற்றும் கிராண இந்திரியம் (மூக்கு) வாசனை உணர்வு
உடையவை.
எறும்பு, கரையான், தேள், மூட்டைப்பூச்சி, மரஅட்டை போன்றவை
நான்கறிவு (சதுரீந்திரிய) ஜீவன்கள் - ஸ்பரிச இந்திரியம் (மெய்)
, ரசன இந்திரியம் (வாய்) சுவை உணர்வு, கிராண இந்திரியம் (மூக்கு) வாசனை உணர்வு மற்றும்
சக்ஷு இந்திரியம் (கண்) பார்வை உணர்வு உடையவை.
ஈ, கொசு, வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி போன்றவை
ஐந்தறிவு (பஞ்சேரீந்திரிய) ஜீவன்கள் - ஸ்பரிச இந்திரியம்
(மெய்) , ரசன இந்திரியம் (வாய்) சுவை உணர்வு, கிராண இந்திரியம் (மூக்கு) வாசனை உணர்வு
சக்ஷு இந்திரியம் (கண்) பார்வை உணர்வு மற்றும் ஸ்ரோத்ர இந்திரியம் (செவி) கேட்டல் உணர்வு
ஏற்பட காரணமானது.
**************************
பஞ்சேந்திரய ஜீவன்களின் உட்பிரிவுகள் நான்கு.
1. வானவர்கள்.
2. மனிதர்கள்;
3. திரயஞ்ச ஜீவன்கள்- விலங்குகள்
4. நரகர்கள்;
--------------------------
மூவுலகில் இவ்வாறான திரச ஜீவன்களின் வாழ்விடங்களை திரச நாளி
என்றழைக்கப்படுகிறது
-------------------
பஞ்சேந்திரிய ஜீவன்களில்
மனமுள்ளவை (சம்ஞ்னி)
மனமற்றவை (அசம்ஞ்னி)
என மேலும் இரு பிரிவுண்டு.
இந்த நான்கு உட்பிரிவுகளில் வானுலக வாசிகளான தேவர்கள்(அமரர்கள்) கூடுதலான சுகங்களைப்
பெறுகின்றனர்.
அதே சமயம் கீழுலகத்தில் வாழும் நரகர்கள் சொல்லொனா துன்பங்களில்
அவதியுறுகின்றனர்.
தேவர்களோ, நரகர்களோ தவநெறியில் ஒழுக வழியில்லை, அதனால் விடுதலைப்
பேற்றை பெற வழியில்லை.
விலங்கினங்களும் வரம்பிலான உணர்வடக்கத்தை கொண்டிருப்பதால்
அவைகளும் மோட்ச உலகம் செல்ல வாய்ப்பில்லை.
மனிதப்பிறவியின் வாழ்க்கை முறையே விடுதலை பேற்றுக்கான கட்டுப்பாடும்,
தவநெறிகளையும் ஏற்று ஒழுக மிக உகந்தாக உள்ளது. அதனால் மோட்சத்தை அடைய அதுவே வழிவகுக்கிறது.
----------------------
பலவகை ஜீவன்களைக் கண்டோம். அவற்றின் உடல் அமைப்பே இத்தனை வகைப்பாடுகளுக்கும்
காரணம். உடல் அமைப்பிற்கான காரணம், ஜீவன் ஈட்டிய
வினைத்துகளே.
லோகத்தில் ஸ்தாவர, திரச ஜீவன்களின் உடலமைப்பையும், வாழுமிடங்களை
வைத்து நான்கு வகையாக தேவ, மனித, விலங்கு, நரக கதி என வகைப்படுத்துகின்றனர்.
கதி, வர்க்கம்,உடல் வகை போன்றவை எண்வகை வினைகளில் ஒன்றான நாமகர்ம
வினையே 93 வகைப்பாடுகளின் வழியே அளிக்கிறது.
அதில் முக்கியமானவைகளைப்
பற்றி காண்போம்..
4 கதிகள் - இருப்பு நிலைகள்
தேவ கதி நாம கர்மத்தினால் அமரர் இருப்புநிலை
மனுஷ்ய கதி நாம கர்மத்தினால் மனித இருப்புநிலை
திரயங்க கதி நாம கர்மத்தினால் விலங்கு இருப்புநிலை
நாரக கதி நாம் கர்மத்தினால் நரக இருப்புநிலை
-----------
5 வகை உயிரின வர்க்கங்கள்
ஏகேந்திரிய ஜாதி நாம கர்மத்தினால் ஓரறிவு ஜீவன் பிறப்பு
பீயிந்திரிய ஜாதி நாம கர்மத்தினால் ஈரறிவு ஜீவன் பிறப்பு
த்ரியேந்திரிய ஜாதி நாம கர்மத்தினால் மூவறிவு ஜீவன் பிறப்பு
சதுரிந்திரிய ஜாதி நாம கர்மத்தினால் நான்கறிவு ஜீவன் பிறப்பு
பஞ்சேந்திரிய ஜாதி நாம கர்மத்தினால் ஐந்தறிவு ஜீவன் பிறப்பு
-------------------------
5 வகை உடலமைப்புகள்
1. ஓளதாரிக சரீர
– நாம கர்மத்தினால் உருவாவது பெளதிக உடல் (விலங்கு, மனித உடலமைப்பு)
2. வைக்ரீவ சரீர – நாம கர்மத்தினால் உருவாவது தேவ, நரக உடல்
– உருவம் மற்றும் உடலளவினை விரும்பிய வண்ணம் மாற்றும் பொருட்களால் ஆனவை.
3. ஆஹாரக சரீரம் - நாம கர்மத்தினால் உருவாவது–
இடமாற்றத்திற்கு
வகைசெய்யும் உடல் –தூய்மை மற்றும் எந்தவகை தடையும் இல்லா பொருட்களால் ஆன சிறிய உடல்.
முனிவர்கள் குறுகிய கால பயன்பாட்டிற்காக உருவாக்குவர். தம் ஐயம் தெளிய, இவ்வுடலை ஜினர் அறம் வழங்கும் வேறுலகத்திற்கு அனுப்பி தெளிவு
பெறுவர்.
4. தைஜச சரீர நாம கர்மத்தினால் உருவாவது தீப்பொறி போன்று பரவும்
உடல். இது நெருப்பு புத்கலங்களால் ஆனது. உணவு
ஜீரணிக்க உதவுவது. (மேலும் சில துறவியர் பொருளையோ, உயிரினத்தையோ எரித்தழிக்க
பயன்படுத்துவர். கீழேயுள்ள குறிப்பைப் படிக்கவும்..)
5. கார்மண சரீர நாம கர்மத்தினால் உருவாவது வினையுடல்(கர்மஉடல்)
வினையுடல் சித்தஷீலா நீங்கலாக மற்ற லோகங்களில் வாழும் ஜீவனகளிடத்தில்
உள்ளது. அது கார்மண வர்கணைகளை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. எக்கணமும் புதிய வினைத்துகள்கள்
வரும் போது பழைய உடலை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கிறது. இறப்பிற்கு பின் ஆத்மாவுடன்
சென்றடைந்து புதிய பிறப்பு உடலில் அந்த ஜீவனுக்கு தகுந்தபடி மாற்றிக் கொள்கிறது.
அனைத்து வினைத்துகள்(கார்மணவர்கணைகள்) முழு உதிர்ப்பிற்கு(நிர்ஜரை)
பின் அவ்வுடலும் அழிந்து போகிறது.
இந்த ஐந்துவகை உடல்கள் ஒவ்வொன்றும் அதற்கு முன்வகையை விட மிகவும்
நுண்ணியதானதாகவும் அதிகமாகவும் அடர்த்தியுடன் உள்ளவை.
சம்சார ஜீவன்கள் ஒவ்வொன்றும் அதமனுடன் தைஜச மற்றும் வினையுடலை
இறப்பிற்கு பின்னும் எப்போதும் கொண்டிருக்கும். பிறக்கும் கதிக்கேற்ற ஒரேநேரத்தில்
ஒன்று அல்லது இரண்டு உடலை இவ்விரண்டிற்கும்
மேல் கொண்டிருக்கும்.
உதாரணமாக மனித உடல் ஆன்மா+ தைஜச உடல்+ வினையுடல் மற்றும் ஒளதாரிக
உடல் ஆகிய மூன்று உடலைக் கொண்டிக்கும். தவஒழுக்க திவிர நிலையில் ஆஹார சரீரம் தோன்றும்.
(மேலும் நாம கர்மா உதயத்தால் பல நுணுக்கமான உடல் வகைகளை ஆழமாக திரவியானுயோகத்தில்
படித்து புரிந்து கொள்ளலாம்.)
பர்யாப்தி:
எல்லா ஜீவன்களுக்கும் உடலுக்கேற்ற பிரத்யேக பண்புகளான பர்யாப்தி(வளம்)
மற்றும் ப்ராணன்(வீர்யம்) உள்ளது. ஆனால் உயிரில்லா உடற்கூறுகளுக்கு(புத்கலத்திற்கு)
இந்த பண்புகள் இல்லை.
(இப்பண்புகளைப் பற்றி சுருக்கமாக காண்போம்)
உணவு, காற்று போன்ற உலக பொருட்களை கிரஹித்து தனித்தனியாக உயிரது
ஆற்றலாக மாற்றும் சாத்தியக்கூறு, வளம்.
1. ஆஹார(உணவு) பர்யாப்தி,
2. சரீர (உடல்) பர்யாப்தி,
3. இந்திரிய (புலன்கள்) பர்யாப்தி,
4. பிராணாபான(சுவாஸோச்வாஸம், சுவாசம், மூச்சு) பர்யாப்தி,
5. பாஷா (பேச்சு) பர்யாப்தி,
6. மன(மனம்) பர்யாப்தி
என பர்யாப்திகள் ஆறு வகைப்படும்
1. ஆஹார பர்யாப்தி: ஆஹார வர்கணைகளின் பரமாணுக்கள் கல அல்லது
ரச பாக வடிவாக மாறுவதற்குக் காரணமாக இருக்கும் உயிரின் ஆற்றல் முழுமையடைவதற்கு ஆஹார
பர்யாப்தி எனக் கூறுகின்றனர்.
2. சரீர பர்யாப்தி: எந்த பரமாணுக்கள் கல வடிவமாக மாறி இருந்ததோ
அவற்றினை எலும்பு முதலான கடினமான அவயவங்கள் வடிவிலும், மற்றும் ரச வடிவமாக மாறியிருந்ததோ
அவற்றினை குருதி முதலான வடிவில் மாறுவதற்குக் காரணமான உயிரது ஆற்றல் முழுமையடைவதற்கு
சரீர பர்யாப்தி எனக் கூறுவர்.
3. இந்திரிய பர்யாப்தி: ஆஹார வர்க்கணைகளில் பரமாணுக்களானது
பொறி வடிவஉருவமாக மாறுவதில் மேலும் பொறிகள் வழியாக புலனின்ப விஷயங்களை கிரகிக்க கூடிய
உயிரது ஆற்றல் முழுமை அடைவதனை இந்திரிய பர்யாப்தி என அழைக்கப்படுகிறது.
4. சுவாசோஸ்வாஸ பர்யாப்தி : ஆஹார வர்க்கணையின் பரமாணுக்கள்
சுவாஸோச்வாஸ வடிவமாக மாற்றுவதற்கு காரணமாக இருக்கும் உயிரது ஆற்றல் முழுமை அடைவதனை
சுவாஸோச்வாஸ பர்யாப்தி என்று கூறுவர்.
5. பாஷா பர்யாப்தி : பாஷா வர்கணையின் பரமாணுக்களை மொழி (வசன)
வடிவமாக மாற்றுவதில் உயிரினது ஆற்றல் முழுமை பெறுவதனை பாஷாபர்யாப்தி என அழைக்கப்படுகிறது.
6. மனப்பர்யாப்தி : மனோ வர்க்கனையின் பரமாணுக்களை இருதயத்தில்
எட்டு இதழ்கள் உடைய தாமரை மலர் வடிவமான மனமாக மாறுவதற்கு அதனின் மூலமாக முன்னிருந்தபடி
சிந்தனை செய்வதற்குக் காரணமாக இருக்கும் உயிரது ஆற்றல் முழுமை அடைவதனை மனப்பர்யாப்தி
எனக் கூறுவர்.
இறந்தபின் எந்த ஜீவனும் ஆத்மா+தைஜஸஉடல்+கார்மண உடலுடன், ஸ்தூல
உடலை விட்டு விலகி விடும். அடுத்த ஸ்தூல உடலை
வினைவிளைவின்படி அடைந்து விடுகிறது.
உடன் அந்த பிறவிஜீவன் உணவை ஏற்றதும், தைஜச உடல் அதனை செரிக்க
வைக்கிறது. அதிலிருந்து உடலுக்கான திறன்கள் மற்றும் அவயவங்களை பெறுகிறது. மீண்டும் மீண்டும் உணவை எடுக்கும் போது இதே செயல்முறையில்
புலனறிவுக்கான அங்கங்களை தொடர்ந்து உருவாக்குகிறது. (இச்செயல்முறைகள் அனைத்தும் அந்தர்முஹுர்த்த
(48 நிமிட) நேரத்தில் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது).
பின் சுற்றுசூழல், காற்று இவற்றிலிருந்து சுவாஸம், பேச்சு,
மனத்திற்கான செயல்பாடுகளும் துவங்குகின்றன.
உணவின் வழியே முதல் மூன்று பர்யாப்திகளும்;
காற்று, சுற்றுச்சூழலிலிருந்து அடுத்த மூன்று பர்யாப்திகளுக்கான
புத்கலங்கள் கிரஹிக்கப்படுகிறது.
அவ்வழியில்:
ஏகேந்திரிய, ஓரறிவு ஜீவன்கள் ஆஹாரம், சரீர், இந்திரிய மற்றும்
சுவாஸோச்வாச பர்யாப்திகளை கொண்டுள்ளன.
இரண்டு, மூன்று, நான்கு மற்றும் அசம்ஞ்னி பஞ்சேந்திரிய ஜீவன்கள்
மேலும் பாஷா பர்யாப்தியையும் சேர்த்து ஐந்தைக் கொண்டிருக்கும்.
சம்ஞ்னி பஞ்சேந்திரிய ஜீவன்கள் மேலும் மனப்பர்யாப்தியையும்
சேர்த்து ஆறு பர்யாப்தியைக் கொண்டிருக்கும்.
மேலும் பர்யாப்த ஜீவன், அபரியாப்த ஜீவன் என இரு செயல்பாடுகள்:
அந்த இனத்திற்கான அனைத்து பர்யாப்தியும் முழுமையான வடிவமும்,
திறனுடனும் உருவாகியிருந்தால் பர்யாப்த ஜீவன்கள் ஆகும்.
அவ்வாறாக முழுமையான வடிவமும் திறனும் உருவாகாமல் அரைகுறையாக
இருப்பின் அபர்யாப்த ஜீவன்கள் ஆகும். (உறுப்புகள் பின்னமாக, செயலற்று பிறப்பது)
----------------------
பிராணன்- (ப்ரான்) வீர்யம், சக்தி
ஜீவனின் வளர்ச்சிக்கு தகுந்த படி பத்துவகைப் பிராணன்கள் வரை
உள்ளன.
1. தொடுபுலன் (ஸ்பர்ஷ் இந்திரியா) – தொடுஉணர்வை அறியும் திறன்
2. சுவைபுலன் (ரச இந்திரியா) – சுவை அறியும் திறன்.
3. வாச(னை)புலன் (கரண் இந்திரியா) – வாசம் அறியும் திறன்.
4. பார்வைபுலன்(சக்ஷு இந்திரியா) – பார்க்கும் திறன்.
5. ஒலிபுலன் (ஷ்ராவன் இந்திரியா) – ஒலி அறியும் திறன்
6. மன பலம் (மனோபல்) – சிந்திக்கும் திறன்
7. வாக்கு பலம் (வசன்பல்) – பேசும் திறன்.
8. உடல்பலம் (காயபல்) – உடல் அசைவு(க்கான) திறன்
9. சுவாசபலம் (ஸ்வாஷோஸ்வாஸ்பல்) – உள், வெளி மூச்சுத் திறன்
10. வாழ்நாள், அயுள் (ஆயுஷ்) – வாழும் திறன்.
ஓரறிவு ஜீவன் நான்கு பிராணசக்தி கொண்டிருக்கும்
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள்(வாழ்நாள்)
ஈரறிவு ஜீவன் ஆறு வகை பிராணன் கொண்டிருக்கும்.
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள் இவற்றுடன் சுவை, பேச்சு இவை.
மூவறிவு ஜீவன் ஏழு வகை பிராணன் கொண்டவை.
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள், சுவை, பேச்சு இவற்றுடன்
வாசம் இவை.
நான்கறிவு ஜீவன் எட்டு வகை பிராணன் கொண்டவை.
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள், சுவை, பேச்சு, வாசம் இவற்றுடன்
பார்வை இவைகள்
மனமற்ற ஐந்தறிவு ஜீவன் ஒன்பது வகை பிராணன் கொண்டவை.
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள், சுவை, பேச்சு, வாசம், பார்வை,
இவற்றுடன் கேட்டல் இவைகள்
மனமுள்ள ஐந்தறிவு ஜீவன் பத்து வகை பிராணன் கொண்டவை.
தொடுஉணர்வு, மூச்சு, உடல், ஆயுள், சுவை, பேச்சு, வாசம், பார்வை,
கேட்டல் இவற்றுடன் மனம் இவைகள்
ஜீவனின் இந்த பிராணன்களுக்கு நாம் விளைவிக்கும் ஊறுகளே ஹிம்சையாக
கருதப்படுகிறது.
அதாவது தெரிந்தோ தெரியாமலோ நாம் பிற ஜீவனின் பத்து வகை பிராணன்களுக்கு
இழைக்கும் தீமைக்கு / ஹிம்சைக்கு ஏற்ற வினைத்துகள்கள் நம் ஆன்ம பிரதேசத்திற்கு வந்தடைகின்றன.
அதனால் ஜிவன்களின் பத்துவகை பிராணனுக்கு ஹிம்சை அளிக்காமல்
காக்க அஹிம்சை விரதத்தினை கைக்கொள்ள வேண்டும். அந்த அஹிம்சை விரதமே நம் ஆன்மனில் வினைத்துகள்கள்
சேருவதை தடுக்கிறது.
பகவான் மஹாவீரர் அஹிம்சை நெறியே (துரித) மோட்சமார்க்கம் என
கருதி சிராவக, சிராவகியர் மற்றும் சாது, சாத்விக்கான முதல் விரதமாக அளித்துள்ளார்.
அதனால் சமணம் அஹிம்சா பரமோதர்ம என்று அறிவுறுத்துகிறது.
அவ்வழியே ஜீவன்களின் ப்ராணசக்திக்கு ஊறுநேராவண்ணம் கவனமாக
வாழ்வோம்.
கரணானுயோகம் திரவியானுயோகத்தையும் அழைத்து விடுகிறது.
இனி கரணானுயோகத்தை தொடர முயல்வோம்….
லோகஸ்வரூபம் – 8
ஊர்த்வ லோகத்திலுள்ள
தேவருலகம்
சுவர்க்க உலகம்
அமரலோகம்
வைமானிக லோகம்
மேல் உலகம் தொடர்பான திரச நாளியில்;
தேவர்கள்:
1. வைமானிக – வாகனங்கள்
உடையவர்கள், புஷ்பக விமானம், வீடு, அரண்மனை போன்ற வாகனங்கள் உடையவர்கள்.
2. ஜோதிஷ்க, - ஒளிபொருந்திய
தேவர்கள் சூரிய, சந்திர, நட்சத்திர போன்றவை
3. வியந்திர, - இங்கும் அங்கும் அலைந்து திரிபவர்கள்
4. பவண - பவணங்களில் (பெரிய மாளிகையில்) வசிப்பவர்கள்.
என்று பொதுவாக நான்கு பெரும் பிரிவினர்கள் உள்ளனர்.
-----------------------
தேவருடல்: மனமுள்ள ஐந்தறிவு ஜீவன் வகையை சார்ந்தது.
ஆத்மா+வினையுடல்+தைஜசசரீரம் – மனம்+ வைக்ரீயக சரீரத்தை உடையவர்கள்.
வைக்ரீயக உடல் ஒளதாரிக உடலைக் காட்டிலும் எண்ணற்ற மடங்கு பிரதேசங்களை
உடையது.
ஒளதாரிக உடல் ஆஹாரக உடலைக் காட்டிலும் எண்ணற்ற மடங்கு பிரதேசங்களை
உடையதாய் இருக்கிறது.
-----------
அப்படியெனில் உடல்கள் ஒன்றைக் காட்டிலும் ஒன்று அளவில் பெரியதாய்
இருக்க வேண்டும்.
ஆனால் அப்படியில்லை, பஞ்சுக்குவியல் மற்றும் இரும்பு உருண்டை
போலவாகும்.
----------------
வைக்ரீயிகம்: (protean) ஒன்று/பல; சிறிய/பெரிய என பலவகையான
உடல்களை உருவாக்கும் ஆற்றலையுடையது. இந்த விக்ரியா சக்தி உடல் உருமாற்றத்திற்கு உள்ளதால்
வைக்ரீயிக (வேறு உருவாகும் உடல்) ஆகும்.
(Fluid; the body of hellish and celestial beings, which
they can change at will)
---------------------------
வைமானிக தேவர்கள் பொதுவாக மேலான சுவர்க்க வாசிகள், விலையுயர்ந்த
நவரத்தின, மணிகளால் ஆன சொந்த வாகனங்களில் வாழ்பவர்கள். மாளிகை, பெருநகரம் போன்ற வாகனங்களையும்
கொண்டிருப்பர்.
-------------------
இவர்களில் இருவகை
கல்பாதீத தேவர்கள். - no ranking; உயர்வு தாழ்வு அற்ற, அனைவரும்
சமமானவர்கள்
கல்போபன்னா(கல்பவாசி) – (different ranking, உயர்வு தாழ்வு
தரவரிசை, இந்திரன், காவலன் போன்று)
------------------
கல்பாதீத தேவருலங்கள்:
அனுத்தரா - (ஆன்ம)ஜெயம்கண்ட அமரலோகங்கள்
ஐந்து அனுத்தரங்கள் :
1. விஜய, - வெற்றி
2. வைஜயந்த, - வெற்றிபெற்ற
3. ஜெயந்த, - வென்ற
4. அபராஜித - வென்றிடாத
5. சர்வார்த்த சித்தி. - முழுசாதனைபுரிந்த
அனுத்தர விமானங்களின் அகமிந்திரர்களின் உடல் உயரம் 1 முழம்
அளவு ஆகும்.
ஒன்று முதல் நான்கு வரை யுள்ள அனுத்தரங்களில் வாழும் அகமிந்தரர்களின்
ஆயுள் உயர் 33 கடற்காலம் குறைவான 32 சாகரோபமம்
சர்வார்த்த சித்தி கல்ப தேவர்களுக்கு
ஆயுள் உயர்ந்த/ குறைவான் 33 கடற்காலம்
-------------------------------
அநுதிசா – 9
ஒன்பது சார்திசை-இணையான சுவர்க்கங்கள் –
1. அர்சி,
2. அர்சிமாலினி,
3. வஜ்ர,
4. வைரோசன,
5. சௌம,
6. சௌமனச,
7. அங்க,
8. ஸ்படிக மற்றும்
9. ஆதித்ய.
ஒன்பது அனுதிசை சுவர்க்கங்கள்.
அனுதிஷத்தில் அகமிந்திரர்களின் உடல் உயரம் 1.5 முழம் அளவு
ஆகும்.
ஆயுள் உயர் 32 கடற்காலம் குறைவான 31 சாகரோபமம்
-------------------------
கிரைவேயகா – 9
(கழுத்து) வளைய சுவர்க்கம்
(த்ரிலோக்கை உள்ளடக்கி ஒரு மனித உருவத்தை வரைந்தால் அதன் கழுத்துப்
பகுதி போன்றமைந்தவை இந்த ஒன்பது சுவர்க்க பகுதி.)
ஊர்த்வ கிரையேகா
1. சுதர்ஷன்,
2. அமோக,
3. சுப்ரபுத்த,
அகமிந்திரர்களின் உடல் உயரம் 2 முழம் அளவு ஆகும்
மத்திம கிரையேகா
4. யசோதா,
5. சுபத்திர,
6. சுவிஷாஸ்,
அகமிந்திரர்களின் உடல் உயரம் 1.5 முழம் அளவு ஆகும்.
அதோ கிரையேகா
7. சுமனச,
8. சௌமனச மற்றும்
9. ப்ரீதிங்க.
ஒன்பது க்ரைவேயக சுவர்க்கங்கள்.
அகமிந்திரர்களின் உடல் உயரம் 1.5 முழம் அளவு ஆகும்.
மேலே நவக்ரைவேயகம், நவானுதிசை, மற்றும் பஞ்சானுத்தரங்களில்
தங்கள் விமானத்திலிருந்து கீழே வராமல் அங்கிருந்தே பதினோரு அங்கங்களை சுவாத்தியாயம்
செய்து கொண்டு உலகின் மிகச் சிறந்த சுகத்தில் ஆழ்ந்திருப்பவர்களும் அகமிந்திர வைமானிக
தேவர் என்றழைக்கப்படுகின்றனர்.
----------------------------------
கீழிருந்து மேலான 16 சுவர்க்கத்தில் வாழும் வைமானிக தேவர்களை
கல்போபாபன்னா, கல்பவாசி (ஆண்டான்…..
அடிமை போன்ற வர்க்கம் கொண்டது) என்றழைக்கப்படுகிறது.
ஒன்றின்கீழ் ஒன்றான தூண்போன்று நின்றஅமைப்பில் எட்டு சுவர்க்க
அடுக்குகள்;
அடுக்கிற்கு இரண்டாக (pairs) 16 மேலான சுவர்க்கங்கள்(கல்போபாபன்னா)
அமைந்துள்ளன. (சில நூலில் 2,2, 1,1,… என மாற்று வடிவமும் தரப்படுகிறது)
பதினாறு சொர்க்கத்தில் சௌதர் மேந்திரன், ஈசானேந்திரன் முதலிய
தேவர்களும் வாழ்கின்றனர்.
மேல் அடுக்கிலிருந்து..
1. ஆழ சுவர்க்கப் பகுதி – ஆரன;
2 இணையாக அசையா சுவர்க்கம் - அச்சுதா
3. தீர்வான சுவர்க்கப்பகுதி – ஆனத;
4. மண்டியிட்ட பகுதி – பிராணத.
5. நூறு அம்ச அமரபாகம் – சத்தார;
6. ஆயிராம்ச அமரபாகம் – சகஸ்ரார.
7. பிரகாசமான சுவர்க்கம்
– சுக்ரா;
8. மிகப்பிரகாசமான சுவர்க்கம் – மஹாசுக்ரா
9. மாயமான சுவர்க்கம் - லாந்தவ,
10 ஆலமர சுவர்க்கம் -
காபிஷ்ட
11 உன்னததேவருலகம் ; - பிரம்ம
12 மஹோன்னததேவருலகம் - பிரம்மோத்தர
13 காலவரம்பிலா இளய சுவர்க்கம் - சனத்குமார
14 மேலான உச்சதேவருலகம் - மஹேந்திர
15 மேல்மட்ட தேவருலகம் - செளதர்ம
16 உயர் தேவருலகம் – ஈசான
வைமானிக- கல்பவாசி தேவர்களில் உயர் தாழ்வின் அடிப்படையில்
இந்திர, சாமானிக மற்றும் கீழ்க்கண்ட வகையிலும் அழைக்கப்படுகிறது.
இந்திரர்: தேவ அரசர், மற்ற தேவர்களிடம் இல்லாத அணிமா போன்ற
ருத்திகளை பெற்று, கீழேயுள்ள தேவர்களுக்கு ஆணையிடுபவர்.
ஸாமானிகர்: அரசன் போல
ஆணை, வைபவம் இல்லாத ராஜ குடும்பத்தினர். இருப்பிடம், ஆயுள், சக்தி, பரிவாரம்,
போகம், உபபோகம் போன்றவற்றில் இந்திரர்களுக்கு சமமானவர்கள். தந்தை, குரு, உபாத்தியாயர்(preceptor)
போன்றவர்கள்
த்ராயஸ்த்ரிம்சர்: அமைச்சர், புரோகிதன் (priest) போன்றவர்கள்,
இந்திர சபையில் 33 பேர்கள் இருப்பார்கள்.
பாரிஷதர்: அரசவை உறுப்பினர்கள் (courtiers), நண்பர்கள்,அறிவிப்பாளர்கள்.
ஆத்மரக்ஷகர்: மெய்க்காப்பாளர் போன்றவர்கள்
லோகபாலர்: காவலர்கள் (police) போன்றவர்கள், தேவலோகத்தை காப்பவர்கள்.
அநீகர்: யானை, குதிரை, தேர், காலாட்படை, கந்தர்வர், நர்த்தவர்,
விருஷபம் ஆகிய ஏழுவகை பிரிவு படைத்தளபதிகள்
ப்ரகீர்ணகர்: குடிமக்கள் போன்றவர்கள்.
ஆபியோக்யர்: வாகனமாகும் தேவர்கள்; யானை, குதிரை போல உருவம்
எடுப்பவர்கள். இவர்கள் மீதமர்ந்து செல்வர். இந்திரன் ஏவலாட்கள் (அஞ்ஞானிகள் சிலர் இவர்களை
கடவுள் போல் வணங்குவர்)
கில்பிஷிகர்: இழிவான தொழில் செய்பவர்கள்; பாவச்செயல்கள் புரிபவர்கள்.
தொலைவில் வசிப்பர்.
இந்த பத்து பேதம் வைமானிகர் சம்பந்தமாக, லௌகாந்திக தேவர்களைத்
தவிர்த்து மற்ற எல்லா கல்பவாசி தேவர்களிலும் இருக்கிறது. கல்பாதீத தேவர்களில் இல்லை.
கீழேயுள்ள வைமானிக தேவர்களுக்கும் மேலே மேலே உயர்படியில் உள்ள
வைமானிக
தேவர்களுக்கும், கதி, உடல், பற்று மற்றும் அபிமானம் காரணமாக
வேறுபாடுகள் உள்ளன.
அதாவது முதல் கல்பம் (சௌதர்ம - ஈசான சொர்க்கம்)
இரண்டாவது கல்பம் (சனத்குமார மகேந்திர சொர்க்கம்)
இதைப்போல மேலே மேலே உயர்ந்த தேவர்களாகச் சென்றால்
உடல், உயரம், பரிக்ரஹம் மற்றும் அபிமானம் இவற்றிலும் குறைந்து
கொண்டே செல்லும்.
சௌதர்ம, ஈசான சொர்க்க தேவர்களுடைய உடலின் அளவு 7 முழம்.
ஆயுள் உயர் 2 கடற்காலம் குறைவான சிறிது அதிக பல்யோகம்
சனத்குமார, மாகேந்திர சொர்க்க தேவர்களின் உடல் 6 முழம்,
ஆயுள் உயர் 7+ கடற்காலம் குறைவான சிறிது அதிக 2 சாகரோபமம்
பிரம்ம, பிரம்மமோத்தர், லாந்தவ மற்றும் காபிஷ்ட சொர்க்கத்தின்
தேவர்களது
உடல் 4 முழம் அளவு ஆகும்.
ஆயுள் உயர் 10+ கடற்காலம் குறைவான 7+ சாகரோபமம்
ஆனத, பிராணத கல்ப தேவர்களின் உடல் 3.5 முழம் அளவாகும்.
ஆயுள் உயர் 20 கடற்காலம் குறைவான 18 சாகரோபமம்
ஆரண அச்சுத சொர்க்க தேவர்களுடைய தேவர்களின் உடலளவு 3 முழம்
அளவாகும்.
ஆயுள் உயர் 22 கடற்காலம் குறைவான 20 சாகரோபமம்
------------------------
தேவர்களைப் பற்றிய
சில செய்திகள்:
பதினாறு சொர்க்கங்களில் ஐம்பத்திரண்டு படலங்கள் (layers) உள்ளன.
9 கிரைவேயகங்களில் 9 படலங்கள்,
9 அனுதிசைகளில் 1 படலங்கள்,
5 அனுந்தரங்களில் 1 படலங்கள் = 63 படலங்கள் உள்ளன.
சௌதர்ம, ஈசான முதலிய பதினாறு சொர்க்கங்களில் உள்ள தேவர்களில்
தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாணம், சமவசரணம் அமைத்தல் போன்ற தர்ம காரியங்கள் செய்யக்கூடிய
சிறப்பு வைமானிக தேவர்களுக்கு உண்டு.
தீர்த்தங்கரர்களின் தீக்ஷா காலத்தில் அவர்களின் வைராக்கியத்தைப்
புகழ்ந்து பாட
ஐந்தாவது சொர்க்கத்தில் வசிக்கும் லௌகாந்திக தேவர்கள் இரண்டரைத்
தீவிற்கு (மனித வாழ்விடகங்கள்) வருவார்கள்.
லௌகாந்திக தேவர்கள் ஒரே பவத்தில் முக்தி பெறக் கூடியவர்கள்.
அதாவது சொர்க்கத்திலிருந்து மனிதகதி பெற்று முனி தீiக்ஷ ஏற்று
முக்தி சுகத்தை (சித்த பரமேஷ்டி பதத்தை) அடையக் கூடியவர்கள்.
இவர்கள்அனைவரும் சமமான ஐஸ்வரியங்கள் பெற்றுள்ளதால் மற்ற வைமானிக
தேவர்களில் உள்ள பிரிவுகள் போல் இல்லாமல், எல்லா லௌகந்திகர்களும் சமமானவர்களாக கருதப்படுகிறார்கள்.
ஐந்து முழம் உயரமுடைய இவர்கள் பிரம்மச்சாரிகளாக வெண்ணிற ஆடையுடைய
இவர்கள்; பதினான்கு பூர்வம் கொண்ட சுருதஞானத்தை
அறிந்தவர்களாவர்; பிரம்மரிஷி, தேவரிஷி என்று சொல்வர். மற்ற தேவகணங்கள் இந்த லௌகாந்திக
தேவர்களுக்கு மரியாதை காட்டி, பாராட்சி புகழ்ந்து பேசுவர்.
----------------------------
கல்பவாசி தேவர்களிலிருந்து மேலே வசிக்கக்கூடிய நவக்கிரைவேயகம்,
நவானுதிசை, பஞ்சாணூந்தரம் விமானங்களில் இருக்கும் தேவர்கள் மற்றும் லெளகாந்திக தேவர்கள் காமவாசனை இல்லாமல் இருப்பவர்கள்.
----------
பவணவாசி, வியந்தரர், ஜோதிஷ்க மற்றும் சௌதர்ம, ஈசான சொர்க்க
தேவர்கள் (லௌகாந்திக தேவர்களைத் தவிர) மனிதர்கள்
போலே உடலால் கூடி ஆணும், பெண்ணும் காம இன்பம் பெறுவர்.
பவணவாசி, வியந்தரர், ஜோதிஷ்க தேவர்கள் மற்றும் சௌதர்ம, ஈசான
முதலிய பதினாறு சொர்க்க தேவர்கள் காம வாசனை உடையவர்கள்.
உடல் உறவு உண்டே தவிர
குழந்தைப் பேறு இல்லை. ஏனெனில் தேவர்கள் உபபாதம் என்ற பிறப்பு வகையைச் சேர்ந்தவர்கள்.
எஞ்சியுள்ள கல்பவாசி தேவர்கள் தமக்குரிய தேவிகளைத் தொட்டும்,
உருவத்தைக் கண்டும், மொழிகளைக் கேட்டும், மனதால் நினைத்தும் இன்பமடைகின்றனர்.
3- 4 சொர்க்கத்திலுள்ள ஸாநத்குமார மற்றும் மாஹேந்திர தேவர்கள்,
தேவியர்கள் அங்கங்களை தொடுவதால் இன்பமடைகிறார்கள் (பிரவீசாரம்)
7- 8 சொர்க்கத்திலுள்ள பிரம்ம, பிரம்மோத்தர, லாந்தவ மற்றும்
காபிஷ்டம் ஆகிய தேவ, தேவியர்கள் உருவம், சிருங்காரம், களியாட்டம், அலங்காரம் முதலியவற்றாலும்;
9 – 12 சொர்க்கத்திலுள்ள தேவ, தேவியர்கள் இனிய மொழிகள், சிரிப்பு,
இசையினூடேயும்;
13 – 16 வரை சொர்க்கத்திலுள்ள தேவ, தேவியர்கள் மனதால் நினைத்த
மாத்திரத்திலேயேயும் இன்ப சுகத்தை தணிக்கின்றனர்.
இங்கு வேசித்தன்மை கிடையாது. எனினும் காம சுவை கர்ம பந்தத்திற்கு
வித்திடுகிறது.
-------------------
தேவர்கள் விக்ரியா சக்தியினால் வேறொரு சரீரத்தை எடுத்துக்
கொண்டு, மத்திய லோகத்தில் நடக்கும் பஞ்சகல்யாணம், சமவசரணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து
கொள்வார்கள். ஆனால் அவர்களுடைய மூல சரீரத்தை சொர்க்கத்திலேயே போகத்தில் ஆழ்ந்திருக்க
விட்டுவிடுவர். அதனால் மோட்ச மார்க்கத்தை முழுமையாக கடைக்கொள்ள முடியாது.
-----------------------------------
ஜோதிஷ்க, பவன, வியந்திர தேவர்கள்…….
ஜோதிஷ்க:
வானவலம் வரும் தேவர்களான ஜோதிஷ்கர்கள்..
மத்திய உலகத்தில், இந்த பூமியிலிருந்து 790 யோஜனை மேலே நூற்றுப்பத்து
யோஜனை அளவுக்குள்ளே (900 யோஜனை வரை) எல்லா ஜோதிஷ்க தேவர்களும் இருக்கிறார்கள்.
மத்திம லோகத்தில் அமைந்துள்ள 100040 யோசனையுயரமுள்ள மஹாமேருவை
1121 யோஜனை தூரத்தில் தன்னுடைய விமானத்துடன் எப்போதும் சுற்றி வட்டமிடுவண்ணம் உள்ளனர்.
இவர்களில் ஐந்து வகை யுள்ளது.
1. சூரியன்,
2. சந்திரன்,
3. கிரகம்,
4. நக்ஷத்திரம்
5. ப்ரகீர்ணகம்
(நட்சத்திர வகை)
என ஜோதிஷ்க(ஜோதிட) தேவர்கள் ஐந்து வகையினர் ஆவர்.
மத்திய உலக பூமி பாகத்திலிருந்து 790 யோஜனை உயரம் சென்ற பிறகு
தாரகைகள் சஞ்சரிக்கின்றன.
இதிலிருந்து பத்து யோஜனை உயரம் சென்ற பிறகு சூரியன் சஞ்சரிக்கிறது.
அதிலிருந்து எண்பது யோஜனை மேலே சென்றால் சந்திரன் சஞ்சரிக்கிறது.
அதிலிருந்து நான்கு யோஜனை மேலே சென்ற பிறகு நக்ஷத்திரங்கள்.
அதிலிருந்து நான்கு யோஜனை உயரம் சென்ற பிறகு புதன்.
அதிலிருந்து மூன்று யோஜனை மேலே சென்ற பிறகு சுக்கிரன்.
அதிலிருந்து மூன்று யோஜனை சென்றால் அங்கு பிரகஸ்பதி (குரு)
.
அதிலிருந்து 3 யோஜனை மேலே சென்றால் செவ்வாய் சஞ்சரிக்கிறது.
மேலும் அதிலிருந்து மூன்று யோஜனை சென்றால் அங்கு சனி சுற்றி
வருகிறது.
இந்த ஜோதிஷ்கர்கள் பரவியுள்ள ஆகாய பிரதேசம் 110 யோஜனை பருமனும்,
கனோததி வாத வலையம் வரை அசங்கியாத தீவு, கடல் அளவு நீளமுடையது.
இந்த மனித உலகத்தில்(பின்னர் காண்போம்) பஞ்ச மேருகளை, ஜோதிஷ்க
விமானங்கள் அந்தந்த உயரத்தில் நிலையாய் வலம் வந்து கொண்டு எப்போதும் சுற்றி வருகின்றன.
ஒரு சூரியனுக்கு ஜம்புத்தீவை (பாரதம் உள்ள பகுதி) முழுமையாக
சுற்றி வருவதற்கு இரண்டு பகல் இரண்டு இரவு காலம் பிடிக்கிறது.
சந்திரனுக்கு இருபகல், இரு இரவு மற்றும் சிறிது அதிக காலம்
பிடிக்கிறது.
இதனால் சந்திர உதயத்தில் ஏற்றத் தாழ்வு உண்டாகிறது.
சூரியன் பிரதீந்திரன் என்றும்
சந்திரன் இந்திரன்
என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஒரு சூரியன், 28 நக்ஷத்திரம், 88 கிரகங்கள், 66,000 கோடா கோடி
தாரகைகள் ஒவ்வொரு சந்திரனின் பரிவாரங்கள் ஆகும்.
ஜம்புத்தீவில் இரண்டு சூரியன் இரண்டு சந்திரன்கள் உள்ளன.
----------------------------
இலவண சமுத்திரத்தில் 4 சூரியன் 4 சந்திரன்கள்;
தாதகி கண்டத்தில் 12 சூரியன் 12 சந்திரன்கள்;
கலோததியில் 42 சூரியன் 42 சந்திரன்கள்
புஷ்கரார்தத் தீவில் 72 சூரியன் 72 சந்திரன்கள்
இவ்வாறாக இரண்டரைத் தீவில் 132 சூரியன்.
இதே அளவு சந்திரன்கள். மற்றும்
புஷ்கரவரத்தீவின் அடுத்த பகுதியில் முதல்பாகம்
புஷ்கரார்த்தத்தைப் போலவே சமமான எண்ணிக்கையுள்ள 72 சூரியன்
72 சந்திரன்கள் இருக்கின்றன.
அடுத்த சுயம்பு ரமணத் தீவிலும் கடலிலும் எண்ணிக்கையிலா தீவு
கடல்களில்
இரண்டு இரண்டு மடங்காக இருப்பதை அறிய வேண்டும்.
(இவற்றின் விபரம் மத்திம லோக வர்ணனையில் காணலாம்.)
---------------------
சூரிய பிம்பத்தில் ஆதப் நாம கர்ம உதயத்தினால் உஷ்ணமும்;
சந்திர பிம்பத்தில் உத்யோத நாமகர்ம உதயத்தினால் குளிர்ச்சியும்
ஏற்படுகிறது.
ஜோதிஷ்க தேவர்களின்
உயர் ஆயுள் சிறிது குறைந்த ஒரு பல்யோபம்.
குறைந்த ஆயுள் பல்யோபத்தின் எட்டில் ஒரு பகுதியாகும்.
------------------------------------------
கீழுலகத்தில் மஹா மேருவிற்கு கீழே அதனைச் சுற்றிலும் பவண,
வியந்திரர்கள் வாழுமிடங்கள் உள்ளன.
அடுத்து பவன(ண) தேவர்கள் :
மிகப்பெரிய மாளிகைகளில் (பவனங்களில்) வசிப்பதால் பவனவாசி தேவர்கள்
என அழைக்கப்படுகின்றனர்.
மிக அழகான வடிவமும், மென்மையான பேச்சும், இளமையுடனும் காணப்படுவர்.
இவர்கள்,
1. அசுர (வேடிக்கையான) குமார்,
2. நாக (அடர்பச்சை நிற) குமார்,
3. வித்யுத் (மின்னலையொத்த) குமார்,
4. சொர்ண (பொன்போன்ற) குமார்,
5. அக்னி(மலர்ச்சியுடைய) குமார்,
6. வாயு (மாண்புமிக்க) குமார்,
7. ஸ்தனித (ஒத்ததிர்வுடைய) குமார்,
8. உததி(அமைதியான) குமார்,
9. துவீப(திவீனன்) குமார்,
10. திக் (பத்திசை) குமார்
என பவன வாசி பத்து வகையினர்
---------------------------
மத்திய உலகத்திற்குக் கீழேயுள்ள பாதாள உலகத்தில்
இரத்னப் பிரபா என்னும் முதல் பூமியில்
கரபாகம், (தேவர்கள்
வாழுமிடங்கள்)
பங்க பாகம், (தேவர்கள் வாழும் பகுதி)
அப்பகுள(ல)பாகம் (நரகர்கள் பகுதி)
என மூன்று பாகங்கள் உள்ளன.
----------------------------------
இவற்றில் பவணவாசி தேவர்களின் இருப்பிடம்:
இரத்னப் பிரபா பூமியின் பங்கபாகத்தில் அசுர குமாரர்களுடைய
பவணங்கள் இருக்கின்றன.
கரபாகத்தில் மேலும், கீழும் ஒவ்வொரு ஆயிரம் யோஜனை விட்டு மற்ற
மீதியுள்ள ஒன்பது குமாரர்களுடைய பவனங்கள் உள்ளன.
உயர்ந்த ஆயுள்:
அசுர குமாரருக்கு ஒரு சாகரோபம்,
நாக குமாரருக்கு 3 பல்யோபம்
சுவர்ணகுமாரருக்க 2 பல்யோபம்,
தீப குமாருக்கு 2 பல்யோபம் மற்றும்
வித்யுத் குமார், அக்னி குமார், வாத குமார்,
ஸ்தனித குமார், உதிதி குமார், திக் குமார்களுக்கு 1 பல்யோபம்
அனைவருக்கும் மிகக் குறைந்த ஆயுள் 10 ஆயிரம் ஆண்டுகள்.
---------------------------
வியந்திர தேவர்கள்.
வியந்திரர்கள் தனக்கென வாழுமிடங்களைக் கட்டுவதில்லை. மலைகள்,
குன்றுகள், காடுகள், மரப்பொந்துகள் போன்றவற்றில் வசிக்கின்றனர்.
1. கின்னரர் (சிதைவுற்ற)
2. கிம்புருஷர் (உருதிரிந்த)
3. மகோரகர் (பாம்பினன்)
4. கந்தர்வர் (இசைக் கலைஞன்)
5. யக்ஷ (தெய்வத்தன்மையுடைய)
6. ராக்ஷஸ, (சாத்தான்)
7. பூத (பூதம்)
8. பிசாசர் (பிசாசு)
ஆக வியந்தரவாசி தேவர் எண் வகையினர் ஆவர்.
இவ்வகையில் யக்ஷ (நீங்கலாக) பெரும்பாலானவர்கள் தீய குணத்தவர்கள்.
அடுத்தவரை காயப்படுத்தி தனது வலிமையை நிரூபிப்பவர்கள்.
மத்திய உலகத்திற்குக் கீழே பாதாள உலகத்தில் இரத்னப் பிரபா
பூமியில் கர பாகத்தில் ஏழுவகை வியந்திரர்களுடைய வாழிடங்கள் உள்ளன.
மற்றும் பங்க, அப்பகூளா பாகத்தில் ராக்ஷஸர்களின் இருப்பிடம்
இருக்கிறது.
-------------------------
வியந்தரர்களின் மிக அதிக ஆயுள் ஒருபல்யோபமத்திற்கு கொஞ்சம்
அதிகமாகும். மற்றும் மிகக் குறைந்த ஆயுள் 10, 000 வருடங்கள் ஆகும்.
----------------------
சமவசரணத்தில் இம்மூன்று தேவர்களின் பங்குகள் அளவிடற்கரியது…
இந்திரன் ஒன்றுக்குள் ஒன்றான வட்ட வடிவ வேதிகைகளை
(rampart, கோட்டை கொந்தள சுவர்) அமைக்கிறான். அதில்…
வெளிபுறச் சுவற்றினை ஜோதிஷ்க தேவர்களும், உட்புற சுவரை வைமானிக
தேவர்களும் அமைத்து, அவர்களே நவரத்தினங்கள் கொண்டு பூவேலைகள் செய்கின்றனர்.
பிரதான வாயில் பவனலோக தேவர்களால் பொன்னும், மணியும் கொண்டு
அலங்கரிக்கப்படுகிறது. பெரிய கெண்டிகளும், தூபக்கால்களும் நறுமண பொடிகள் தூவப்பட்டு
வியந்திர தேவர்களால் நிறுத்தப்பட்டுள்ளன.
------------------------------
வியந்திர தேவர்கள் தங்க, நவரத்தினங்கள் பதித்த ரம்மியமான வடிவ
பூச்சுள்ள (motiffis) புறச்சுவர்களுடன்; குடை,
மனித உருவம், முதலை வடிவம், ஸ்வஸ்தீகம் போன்ற வடிவங்களில் தோரண நுழைவாயில்களை அமைக்கின்றனர்.
------------------------
அதன்மீது ஒன்றன் மீது ஒன்றாக மூன்று அடுக்கு விதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பலிந்தர , க்ஷாமர் தேவர்கள் கைகளில் தூவாலையுடன்(சாமரை) நிற்கின்றனர். வியந்திர
தேவர்கள் தர்மச்சக்கரத்தை அதன் எதிரே நிறுத்தியுள்ளனர்.
----------------------
பன்னிரண்டு ஒதுக்கீடுகளில்: பவனவாசி தேவியர்கள், வியந்திர
தேவிகள், ஜோதிஷ்க தேவியர்கள், பவனவாசி தேவர்கள், அடுத்தடுத்து வியந்திர, ஜோதிஷ்க, கல்பவாசி
தேவர்களும், அடுத்து மனிதர்கள், பின்னர் விலங்கு, பறவைகள் என அடுத்தடுத்த 11 ஒதுக்கீடுகளில்
அமர்ந்து தினமும் அறவுரை கேட்பர்.
-----------------------
வியந்திர தேவர்களில் யக்ஷ, யக்ஷியரை ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும்
அவர்கள் பிறந்ததும், இரு ஜின சாசன தேவ, தேவியர்களை(தம்பதிகள்) இந்திரன் வழித்துணியாக, பாதுகாவலர்களாக அமர்த்துகிறார்.
-----------------
சமவசரண நிகழ்வுகளில் பங்கு கொண்ட கணதரர், தேவதேவியர்களை ஆலயங்களில்
உருவங்களாக (தனி சன்னதிகளிலும்) அமைத்துள்ளனர்.
மேலும் பூஜை, சடங்குகள், விதானம், ஹோம நிகழ்வுகளிலும் கணதரர், யக்ஷ, யக்ஷியர்,
பவனதேவர்கள், போன்றோருக்கு அர்க்யம் தரும் வழக்கமும் உள்ளது.
இவை நாம், ஜினபகவான் மீது பக்தியும், அவர் உபதேசித்த மோட்ச
மார்க்கத்தின் வழி நடக்கும் உத்வேகத்தையும் வழங்கி; மனதில் நற்பாவனையும், அதனால் தூய்மையும்
ஏற்படவே இவ்வேற்பாடுகள் அனைத்தும்.
அக்கருத்தை ஏற்றுக் கொண்டு அவரவர் அறிவின் தெளிவிற்கு ஏற்ப
வேண்டியதை எடுத்துக் கொண்டு அவ்வழியில் நடப்பதே விவேகமான செயலாகும்.
மத்திய லோகம் (நடுஉலகம், திர்யக் உலகம்)
அடிப்படையில் நடு உலகம் ஒரு தட்டையான வட்டு (Frisbee) போன்ற
வடிவமுள்ளது.
லோகஸ்வரூபத்தின் இடுப்பு போன்ற ஒரு கயிறு (ரஜ்ஜு) பகுதியிலிருந்து
மேல் 900 யோசனை தூரமும், கீழே 900 யோசனை தூரமாக 1800 யோசனை தடிமனில் உள்ளது.
------------------------
மத்திய உலகம் தொடர்பான திரசநாளியில் ஜம்பூத் தீவு, தாதகி கண்டம்
முதலிய அயங்கிய(எண்ணிலடங்கா) தீவுகளும், (லவணோததி, கலோததி முதலிய அயங்கியம்) கடல்களும்
உள்ளன.
இந்த மத்திய உலகத்தில் மனிதர், விலங்கு, ஜோதிஷ்க தேவர்களும்
சில வியந்தரவாசி தேவர்களும் வாழ்கின்றனர்.
-----------------------
சுமேரு (சுதர்சன மேரு, மஹாமேரு) என்ற பெருமலையை மையத்தில்
கொண்ட ஜம்பூத்த்வீபம் அதனைச் சுற்றி இருமடங்கு பரப்பளவில் லவண(லவணோததி) சமுத்திரம்;
(ஜம்புத் தீவின் பரப்பளவு ஒரு லக்ஷம் யோஜனை. இதையடுத்து லவணோததி
கடலின் பரப்பளவு இரண்டு லக்ஷம் யோஜனை.)
அதற்கடுத்தார் போல்
லவண சமுத்திரத்தை விட இருமடங்கு பரப்புள்ள; வட்டமான, கண்களுக்கு புலப்படாத அடுத்த கண்டமாக(கிரஹமாக)
தாதகீகண்ட த்வீபம், அதனை விட இருஅளவு பரப்புள்ள காலோத சமுத்திரத்தினால் சூழப்பட்டுள்ளது.
அடுத்தடுத்தார்போன்று
இருமடங்கு பரப்பளவில் புஷ்கரவர த்வீபம் மற்றும் அதனை சுற்றியமைந்த புஷ்கரவர
சமுத்திரமும்:
அதே இரு மடங்கு பரப்பளவுகளில் வாருணீவர த்வீபம், வாருணீவர
சமுத்திரம்;
க்ஷீரவர த்வீபம், க்ஷீரவர சமுத்திரம்; க்ருதவர த்வீபம், க்ருதவர
சமுத்திரம்;
இக்ஷுவர த்வீபம், இக்ஷுவர சமுத்திரம்;
அடுத்து நந்தீஸ்வர த்வீபம், நந்தீஸ்வர சமுத்திரம்;
பின்னர் அருணவர என எண்ணிலடங்கா தீபங்களும், சமுத்திரங்களும்
இருமடங்கான பரப்பில் அடுத்தடுத்து அமைந்து
கடைசியாக ஸ்வயம்புரமண த்வீபம் வரை உள்ளது.
வட்டத்தைச் சுற்றி வட்டமாக அடுத்தடுத்து நிலப்பகுதிகள் அமைந்துள்ளதால்
த்ரியக் உலகம் எனவும் அழைக்கப்படுகிறது.
அனைத்து தீபங்களும் மங்கலமான நாம் உபயோகிக்கும் பெயர்களைக்
கொண்டவை.
மேலும் கடைசி தீவும் கடலுமான சுயம்புரணமத்தீவும், சுயம்புரமணக்
கடல்வரை அசங்கியாத்தீவு கடல்களின் பரப்பு இரண்டு இரண்டு மடங்காக உள்ளன.
---------------------
சுதர்சணமேரு:
(சுமேரு, மஹாமேரு)
நடுலோகத்தின் மைய வட்டிலான ஜம்பூ த்வீபத்தின் விதேக க்ஷேத்திரத்தின்
மத்தியில் சுதர்சன(சு) மேரு மலை வானுயர்ந்து
நிற்கிறது.
அதன் உயரம் 100040 யோசனைகள், விஸ்திரணம் 10000 யோசனைகள்.
பூமிக்குள் 1000 யோசனைகள் வரை புதைந்துள்ளது. மட்டத்திற்கு மேல் 99000 யோசனை
உயரத்தில் 40 யோசனை அளவில் உச்சிப்பாகம் அமைந்துள்ளது.
(1 யோசனை = இத்தனை மைல்/கி.மீ. என்பது, வெவ்வேறு அளவுத்திட்டத்தில்
ஒவ்வொரு நூலிலும் தந்துள்ளனர்.)
மேருவின் உயரத்தில் மூன்று நிலைகள் உள்ளன. 500, 62500,
36000 யோசனைகளில் மேடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 500 யோசனைகளும் கடைசி மேடை சற்றுக் குறைவான
பரப்பில் உள்ளன. பூமியிலும், மற்ற மூன்று மேடைப்பகுதியிலும் வனங்கள் உள்ளன.
இவ்வனங்கள் பத்ராஸாலம், நந்தனம், ஸெளமனஸம் மற்றும் பாண்டுகம்
என்பனவாகும். ஒவ்வொன்றிலும் நான்கு ஜினாலயங்கள், மொத்தம் 16 உள்ளன.
மேலுள்ள பாண்டுக நிலையில் நான்கு திசையிலும் பாண்டுக சிலைகள் உள்ளன. அதில் அந்தந்த திசையில் தோன்றிய (பரத, ஐராவத,
மற்றும் கிழக்கு, மேற்கு விதேகத்தினுடைய எல்லாத் தீர்த்தங்கரர்களுக்கு தேவர்கள் ஜென்மாபிஷேகம்
அக்காலங்களில் செய்கின்றனர்.
இந்த சுதர்சனமேரு மலையில் அநேக (இயற்கை) ஜிநாலயங்கள் இருக்கின்றன;
அவைகளில் வீற்றிருக்கும் வீதராக ஜின பிம்பங்களைத் தரிசிப்பதற்காக
அநேக ருத்திதாரி முனிவர்களும், தேவகணங்களும் செல்கின்றனர்.
----------------
மத்திய உலகத்தில், இந்த பூமியிலிருந்து 790 யோஜனை மேலே நூற்றுப்பத்து
யோஜனை அளவுக்குள்ளே (900 யோஜனை வரை) எல்லா ஜோதிஷ்க தேவர்களும் இருக்கிறார்கள்.
மத்திய உலகத்திலிருக்கும் சுமேரு மலையை ஜோதிஷ தேவர்கள்
1121 யோஜனை தூரத்தில் சுற்றி வருகின்றனர்.
---------------------------
ஜம்பூத்வீபம்:
(த்வீபம் – கண்டம், கிரஹம், பெரிய திவு, அண்டத்தில் ஒரு பகுதி (latest) எனவும் கூறப்படுகிறது.)
கீழ் உலகத்தின் மேல் அடுக்கான இரத்தினப்பிரபையின் மேல் மாஹாமேருவினை
மையத்தில் கொண்ட பல த்வீபங்களுடன், நடுத்வீபமாக அமைந்துள்ளது.
இவையனைத்தும் தொடக்கமற்ற காலம் தொட்டே உள்ளன.
ஜம்பூத்வீபம் - நாவல் மரம் நிறைந்த பூமி.
ஜம்புத்தீவிலுள்ள (விதேஹ) உத்திரகுரு எனும் வடபகுதியில் என்றும்
அழியா மண்ணில் சுயம்புவாக தோன்றிய நாவல் மரங்கள் மற்றும் அதன் பரிவார மரங்களினாலும்
அப்பெயர் பெற்றது.
அதனைச் சுற்றி உப்புநீர் சமுத்திரமான லவணசாகர் சூழ்ந்துள்ளது.
ஜம்புத் தீவின் பரப்பளவு ஒரு லக்ஷம் யோஜனை.
இதையடுத்துள்ள லவணோததி கடலின் பரப்பளவு இரண்டு லக்ஷம் யோஜனை.
ஜம்புத் தீபத்தில் இரண்டு சூரியன்கள் இரண்டு சந்திரர்கள் வலம்
வருகின்றனர்.
இத்த்வீபம்; - பரதவர்ஷம், ஹைமவத வர்ஷம், ஹரி வர்ஷம், விதேஹ
வர்ஷம், ரம்யக வர்ஷம், ஹைரண்யவத வர்ஷம், ஐராவத
வர்ஷம் என ஏழு பூமிகளாக இருக்கிறது.
இந்த ஏழு பூமிகளையும் பிரிப்பது ஹிமவன், மஹாஹிமவன், நிடத,
நீல, ருக்மி, சிகரி எனும் ஆறு குலாசல மலைத் தொடர்கள்.
இவை அனைத்தும் கிழக்கு, மேற்கில் நீண்டு லவண சமுத்திரத்துடன்
தொடர்பில் உள்ளன.
பரத க்ஷேத்ரம் (நாம் வாழும் பூமி) வடக்கே ஹிமவான் மலைத்தொடராலும்,
மற்ற மூன்று திசைகளில் லவண(உப்பு) சமுத்திரத்தினாலும் (வில்போன்ற வடிவில்) சூழப்பட்டுள்ளது.
விஜயார்த்த மலைத் தொடரினாலும்; கங்கை, சிந்து நதிகளாலும் ஆறு
திட்டுகளாக பிரிந்துள்ளது.
அதே போன்று ஹைமவதம்; ஹிமவான் மற்றும் மஹாஹிமவான் மலைத்தொடர்கள் மற்றும்
லவண சமுத்திரத்தினாலும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஹரிவர்ஷம்; வடக்கில் நிடதம், தெற்கில் மஹாஹிமவன் மலைத்தொடர்கள்
மற்றும் லவண சமுத்திரத்தினாலும்;
விதேஹ க்ஷேத்ரம்: தெற்கில் நிடதம், வடக்கில் நீல மலைத்தொடர்கள்
மற்றும் சுழ்ந்து உள்ள லவண சமுத்திரத்தினாலும்;
ரம்யக: நீலமலை, ருக்மி
மலைத்தொடர்களுக்கு இடையில் இருபுறமும் லவண
சமுத்திரத்தினாலும்;
ஹைரண்ரவத வர்ஷம்: ருக்மி, சிக்கரி மலைத்தொடர்களுக்கு இடையில்
லவண சமுத்திரத்தினாலும்;
ஐராவத க்ஷேத்ரம் தெற்கில் சிக்கரி மலைத்தொடர் மற்றும் மூன்று
புறம் லவண சமுத்திரத்தினால் சூழப்பட்டுள்ளது.
(படத்தில் காணவும்)
இந்த ஆறுமலைகளும் ஏழு க்ஷேத்திரங்களைப் பிரிப்பதனால் அவை வர்ஷதார
மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது.
பொன் நிறமான ஹிமவான் மலைத்தொடர் – நூறு யோசனை உயரமுடையது.
வெள்ளி நிறமான மஹாஹிமவான் – இருநூறு யோசனை
தங்க நிறமான நிடதம் – 400 யோசனை
மயில் கழுத்து நிறமான நீல – 400 யோசனை
வெள்ளி நிறமான ருக்மி – 200 யோசனை
பொன் நிறமான சிகரி – 100 யோசனை
உயரம் உடையவை.
அந்த ஆறு மலையில் ஆறு வற்றாத பொய்கைகள் உள்ளன.
அவை:
ஹிமவானில் உள்ள – பத்மம் பொய்கை; ஆயிரம் யோசனை நீளம், 500
யோசனை அகலம், பத்து யோசனை ஆழம் மற்றும் வஜ்ரம் போன்ற அடிப்பாகம் கொண்டது.
அதன் நடுவில் ஒரு யோசனை அகலமுள்ள தாமரையுள்ளது.
மஹாஹிமவான் – மஹாபத்மம்;
பத்மப்பொய்கையின் அளவில் இருமடங்கானது. தாமரையும் அவ்வாறே அமைந்துள்ளது.
நிடதம் – திகிஞ்சம்;
மஹாபத்மப்பொய்கையின் அளவில் இருமடங்கானது. தாமரையும் அவ்வாறே அமைந்துள்ளது.
(அவ்வாறே மற்ற பொய்கைகளும் அமைந்துள்ளன.)
நீல - கேசரி
ருக்மி – மஹாபுண்டரீகம்
சிகரி – புண்டரீகம்
ஆகும்.
இதிலுள்ள தாமரைகளில் சாமானிகம் மற்றும் பரிஷத் தேவர்களோடு
ஸ்ரீ, ஹ்ரீ, த்ருதி, கீர்த்தி, புத்தி, லக்ஷ்மி என்ற ஆறு தேவியர்கள்
வாழ்கின்றனர்.
இந்த ஏழு க்ஷேத்திரங்களில் பதினான்கு நதிகள் ஓடுகின்றன.
பத்மப்பொய்கையிலிருந்து – கங்கா நதி;
மஹாபத்ம பொய்கையிலிருந்து – ரோஹித் நதி,
திகிஞ்சம் – ஹரித் நதி;
கேசரி – ஸீதா நதி,
மஹாபுண்டரீகம் – நாரி நதி,
புண்டரீகம் - ஸுவர்ணகூலா, ரக்தா
என்னும் எழு நதிகள்
ஓடி லவண சமுத்திரத்தின் கிழக்குப்பகுதியில்
கலக்கின்றன.
அதேபோல்
பத்மப்பொய்கையிலிருந்து – சிந்து, ரோஹிதாஸ்யா நதி;
மஹாபத்ம பொய்கையிலிருந்து – ஹரிகாந்தா நதி,
திகிஞ்சம் – ஸீதோதா நதி;
கேசரி – நரகாந்தா நதி,
மஹாபுண்டரீகம் – ருப்யகூலா நதி,
புண்டரீகம் – ரக்தோதா
என்னும் எழு நதிகள்
மேற்கு பகுதி சமுத்திரத்திற்கு சென்றடைகின்றன.
கங்கா மற்றும் சிந்து நதிகள் ஒவ்வொன்றிற்கும் பதிநான்காயிரம்
உபநதிகள் உள்ளன.
பரத க்ஷேத்ரம் 526 மற்றும் 6/19 யோசனை பரப்புள்ளது.
வடக்கிலுள்ள ஐராவதமும் அதே அளவில் உள்ளது.
ஹைமவத க்ஷேத்ரத்தின் பரப்பு மற்றும் மலைகளின் பரப்பு, பரதபூமியை
விட இருமடங்குடையவை.
வடக்கில் ஹைரண்யவத க்ஷேத்திரமும் அதே அளவிலுள்ளது.
அதேபோல் ஹரி க்ஷேத்ரம்
ஹைமவத த்தை விட பரப்பு மற்றும் மலைகளின் பரப்பு இரு மடங்கு;
வடக்கில் ரம்யக க்ஷேத்திரமும் அதே அளவிலுள்ளது.
விதேஹ க்ஷேத்ரம் ஹரியை
விட இருமடங்கு மலைகளும் பரப்பளவும் கொண்டவை. அதனால் மஹாவீதேகஹம் என்றழைக்கப்படுகிறது.
--------------------
பரத மற்றும் ஐராவத க்ஷேத்திரங்களில் உத்ஸர்ப்பிணீ மற்றும்
அவசர்ப்பிணீ அகிய இரு யுகங்களின் காலங்கள்
ஏற்றத்தாழ்வு உள்ளவைகளாக உள்ளன.
அதனால் ஜீவன்களுக்கு ஆயுள், உருவம், ஞானம் இவற்றில் மாற்றங்கள்
உண்டாகின்றன.
அவை ஒவ்வொன்றும் ஆறுகாலப்பிரிவினைக் கொண்டவை.
காலம்:
இருவகைப்படும்.
திரவியகாலம்:
வியவகார காலம்:
திரவியகாலம்:
ஆறு திரவியங்களில் (பகுபடா
பொருள்) ஒன்றானது. அனாதி காலமாக உள்ளது. ஆதியும்
இல்லை அந்தமும் இல்லை. பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது.
மிகவும் நுண்ணிய அணுக்கள்
அடங்கியுள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இயங்குகின்றன.
மற்ற திரவியங்களான ஜீவன்,
புத்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம் இவற்றின் இயல்புக்கேற்ற மாற்றங்களுக்கு ஆதாரமாக
(சக்கர்த்தின் அச்சு போன்று) உள்ளது.
ஆகாயத்துடன் தொடர்பு
கொண்டிருக்கும் மற்ற திரவியங்கள் போன்று; நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உடல் உடைய அஸ்திகாயங்களில்
ஒன்றல்ல.
உண்மைத்திரவியங்களில்
ஒன்றானதால் சமண தீர்க்கதரிசிகள் திரவியக்காலம், உண்மைக்காலம் என்றழைக்கின்றனர்.
வியவகார காலம்:
ஆனால் நடைமுறையில் சூரிய,
சந்திரகள், கோள்களின் இடப்பெயர்ச்சியினால், பூமியில் உள்ள ஜீவன்களில், உயிரற்ற பொருட்களில் தோன்றும் மாறுகைகளைக் கண்டு கணிக்கப்பட்ட காலத்தினை
வியவகார காலம், பர்யாயகாலம் என்பர்.
இவை முன்னர் கூறிய உண்மைக்
காலத்தை அடிப்படையாக கொண்டு முன்னேறிக் கொண்டிருப்பது. மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
இது இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் என்பதான தொடர்புடையது.
-------------------
சமயம் என்பது மிககுறைந்த அடிப்படைக் கால அளவு ஆகும்.
ஓர் அணு தான் இருக்கும்
இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு சென்றடையும் (புடைப் பெயர்ச்சியின்) மிகக் குறைந்த
காலம் ஒரு சமயம் ஆகும்.
எண்ணற்ற சமயம் சேர்ந்தது
ஒரு ஆவளி (அவளி) .
கண் சிமிட்டும் நேரம்
என்றும் சொல்லப்படுகிறது.
எண்ணற்ற அவளி - ஒரு மூச்சு
ஏழு மூச்சுக்கள் – ஸ்தோகம்:
ஏழு ஸ்தோகம் – ஒரு லவம்
38.5 லவம் - நாழிகை
இரு நாழிகை – ஒரு முகூர்த்தம்
(48 நிமிடங்கள்)
-----------------
16,777,216 ஆவளிகள்
– ஒரு முகூர்த்தம்
----------------------------
முப்பது முகூர்த்தம்
(60 நாழிகை) – ஒரு நாள் (திவசம்)
பதினைந்து நாட்கள் –
ஒரு பட்சம்.
இரு பட்சம் - ஒரு மாதம்
இரு மாதம் - ஒரு ருது
மூன்று ருது – ஒரு அயனம்
இரு அயனம் – ஒரு ஆண்டு,
(வருடம், சம்வத்ஸரம்.)
84 லட்சம் சம்வத்ஸரம் - ஒரு பூர்வாங்கம்
84 லட்சம் பூர்வாங்கம்
– ஒரு பூர்வம்
எண்ணற்ற பூர்வம் – ஒரு பல்லம்.
பத்துக் கோடா கோடி –
ஒரு கடற்காலம். (சாகாரோபம்)
(மேருமந்திர புராணம்)
-----------------------------
ஐந்து ஆண்டு – ஒரு யுகம்
8,400,000 x
8,400,000 ஆண்டுகள் – ஒரு பூர்வம் (70,560,000,000,000 ஆண்டுகள்)
எண்ணற்ற புர்வம் – ஒரு
பல்யம். (Palyopa)
10 x 10,000,000 x
10,000,000 பல்யங்கள் – கடற்காலம் (Sagaropama)
10 x 10,000,000 x
10,000,000 கடற்காலம் – ஒரு சகாப்தம்(era)
உத்சர்ப்பிணி அல்லது
அவசர்ப்பிணி (Half Cycle)
20 x 10,000,000 x
10,000,000 கடற்காலம் – ஒரு காலசுழற்சி. (இரு சகாப்தங்கள்)
(பல்யம் என்பது ஏழு நாட்கள்
வயதுள்ள செம்மறிஆட்டுக்குட்டியின் முடியை ஆறுமாதத்திற்கொன்றாக எடுத்து, 512 கன மைல்கள் அளவுள்ள
ஒரு குழியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் கால அளவாகும்.)
ஒரு காலச்சுழற்றி என்பது
உத்சர்ப்பிணி எனும் ஏறுகாலமும், அவசர்ப்பிணி எனும் இறங்கு காலமும் (two era) சேர்ந்தது.
ஏறுகாலம்+இறங்குகாலம்
சேர்ந்த இந்த காலச்சுழற்சிகள் அநாதி காலமாக இரண்டும் மாறி நடந்து கொண்டிருக்கிறது.
அதன் தோற்றம் குறித்து யாரும் கூறுவதற்கில்லை
என்கிறது சமணம்.
பரத , ஐராவத க்ஷேத்திரங்களில்;
உயிரினங்களின் உடல் வலிமை, உயரம், ஆயுள் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக்கொண்டு
ஏறுகாலம், இறங்குகாலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
இரு அரைகாலச் சுழற்சியும்
சமமான கால அளவைக் கொண்டிருந்தாலும்,
அதன் இரு
பிரிவிலும் வெவ்வேறான அளவுள்ள ஆறுகாலங்களைக் கொண்டது.
அவசர்ப்பிணியான இறங்கு
காலத்தில் (தற்போதுள்ளது)
1. நன்நற்காலம் (நல்ல+நல்ல;
சுஷமா+ சுஷமா)
2. நற்காலம் (சுஷமா)
3. நற்றீக்காலம் (நல்ல+தீக்காலம்,
சுஷமா+துஷமா)
4. தீநற்காலம் (தீக்+நல்ல
காலம், துஷமா+சுஷமா)
5. தீக்காலம் (துஷமா)
6. தீத்தீக்காலம் (தீக்+தீக்காலம்,
துஷமா+துஷமா)
என ஆறு பிரிவுகள் இருக்கும்.
----------------------
1. நன்நற்காலம் :
உத்தம போக பூமி
முழுமையான மகிழ்ச்சியைத்தரும்
நாட்களைக் கொண்ட காலம். மிகுந்த உயரமும், ஞானமும், நீண்ட ஆயுளும் பெற்று பிணி, மூப்பு இன்றி தேவர்களைப் போல
சுகம் மற்றும் எழிலுடன் திகழ்வார்கள்.
உத்தமபோக பூமியாகையால்
சத்தான ரசங்கள், அநேகவித வாத்தியங்கள், பலவகையான நகைகள், பலவித புஷ்பங்கள், மணிமயமான
தீபங்களைப் போல் பிரகாசம், எக்காலமும் பிரகாசம் தரவல்லதும், பலவித அரண்மனைகளை ஸ்தாபிக்கவல்லதும்,
நல்லருசியுள்ள புஷ்டியான ஆகாரம் தரவல்லதும், பற்பல வகையான பாத்திரங்கள் தரவல்லதும்,
அநேகவித வஸ்திரங்களைத் தரவல்லதுமான பத்துவகை கற்பக விருஷங்கள் அனைவரது தேவைகளையும்
பூர்த்தி செய்து வரும்.
அனைவரும் ; ஒரே பிரசவத்தில்
ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுடன், இன்பமாக எக்குறையுமின்றி வாழ்ந்து வருவர்
கால அளவு - 4 கோடாகோடி
கடற்காலம் (4 x 10E14 Sagaropams)
உயிரினங்களின் அதிக ஆயுள்
- 3 பல்யம்
உயரம் - 600 வில்
உணவு உடகொள்ளுதல் – மூன்று
தினங்களுப்பிறகு கடுக்காய் அளவு
---------------------
2. நற்காலம்:
மத்திம போக பூமி
முதற்காலத்தை விட சற்று
குறைவான உயரம், ஆயுள், ஞானம் பெற்று இருப்பர். அனைத்து கற்பக விருஷங்களும் தேவைகளை
பூர்த்து செய்தாலும் முழுமையான மகிழ்ச்சி இருக்காது.
கால அளவு - 3 கோடாகோடி
கடற்காலம் (3 x 10E14 Sagaropams)
உயிரினங்களின் அதிக ஆயுள்
- 2 பல்யம்
உயரம் - 4000 வில்
உணவு உடகொள்ளுதல் – இரண்டு
தினங்களுப்பிறகு தான்றிக்காய் அளவு
--------------------------
நற்தீக்காலம்:
ஜகன்ய போக பூமி
இரண்டாம் காலத்தை விட
உயிரினங்களின் உயரம், ஆயுள், ஞானம் குன்றி காணப்படும். கற்பக விருஷங்கள் தேவைகளை பூர்த்தி
செய்யும் அளவுக்கு தொடர்ந்து வழங்குவதில்லை.
சென்ற மூன்றாம் காலத்தில் தான் ரிஷப தேவர் அவதரித்தார். அரசனாய், போக பூமியிலிருந்து
கர்மபூமியை எப்படி மனிதர்கள் கையாள்வது என்பதை
போதித்தார். அவரவர் தேவையை முழுமையாக
பூர்த்தி செய்ய உழைக்க வேண்டும் என்பதை உழவு, நெசவு, வியாபாரம், சமையல், தைத்தல் போன்ற ஆயகலைகள் அனைத்தையும் கற்பித்தார். பரத, பாகுபலி எனும் உடல் உறுதியான இரு பிள்ளைகளைப் பெற்றார்; எழுத்தையும், எண்ணையும் அவரது இரு மகள்களான பிராமியும், சுந்தரியும் தந்தையிடம்
பயின்று மக்களுக்கு கற்பித்தனர். நற்சிந்தனைகளையும், நல்லொழுக்கத்தையும், அஹிம்சை நெறியையும்,
இரவுண்ணாமையும், பொருள் பற்றின்மையும் போதித்தார்.
அக்காலமே இந்த சகாப்தத்தில்
(era) ஜைன சமயம் தோற்றியதாக கொள்ளலாம்.
this is where
jainism is emerging from.
(பின் வரும் ஐந்தாம்
காலத்தில் அருகி, ஆறாம் காலத்தில் அழியும் நிலை வரலாம்.)
கால அளவு - 2 கோடாகோடி
கடற்காலம் (2 x 10E14 Sagaropams)
உயிரினங்களின் அதிக ஆயுள்
- 1 பல்யம்
உயரம் - 2000 வில்
உணவு உடகொள்ளுதல் – ஒரு
தினத்திற்கு பிறகு நெல்லிக்காய் அளவு
------------------------------------
தீநற்காலம்:
உத்தம கர்ம பூமி
ஆயுள், உயரம் மற்றும்
ஞானம் மேலும் குறைவதோடு, உயிர்களிடத்தில் மகிழ்ச்சியைவிட துக்க உணர்வே மேலேங்கி நிற்கும்.
மற்ற இருபத்து மூன்று தீர்த்தங்கரர்களும் அவதரித்தது இந்த காலப்பகுதியில் தான். பகவான் மஹாவீரர்
நிர்வாணம் அடைந்து மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்களில் இந்த தீநற்காலம் முடிவுற்றது.
கால அளவு – 42000 ஆண்டுகள்
குறைந்த ஒரு கோடாகோடி கடற்காலம்
உயிரினங்களின் அதிக ஆயுள்
– 2 பூர்வ கோடி
உயரம் - 525 வில்
உணவு உடகொள்ளுதல் – ஒவ்வொரு
நாளும் ஒரு முறை
--------------------------
தீக்காலம்:
மத்திம கர்ம பூமி
தற்போது நாம் வாழ்ந்து
கொண்டிருப்பது இக்காலப்பகுதியில் தான். இந்த ஆராவில் உயிரினங்களிடம் துக்க உணர்வே மேலோங்கி
நிற்கும். . அந்த பின்னசகாப்தம் 21000 ஆண்டுகளை கொண்டது, இதில் 2500 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கழிந்து விட்டது.
எந்த ஒருவரும் முக்தியடையவற்கான சூழல் ஏற்படுவதில்லை. ஏனென்றால் யாரொருவரும் உண்மையாக
முழு சமண சித்தாந்தத்தையும் பின்பற்றுவதில்லை. அதனால் நம் தீர்க்கதரிசிகள் இக்கால முடிவில்
சமணம் அழிவுறும் நிலையை எய்தும் என்று கூறிச் சென்றுள்ளனர்.
கால அளவு – 21000 ஆண்டுகள்
(present Era passed @2500years)
உயிரினங்களின் அதிக ஆயுள்
– 120 வருஷம்
உயரம் - 7 வில்
உணவு உடகொள்ளுதல் – ஒவ்வொரு
நாளும் இரு முறை
--------------------------
தீக்தீக்காலம்:
ஜகன்ய கர்ம பூமி
இது முழுவதுமாக அனைத்து உயிரினங்களும் துன்பத்தையும்,
துயரத்தையும் அடைந்து வரும். மேலும் உயரம், ஆயுள் மற்றும் ஞானம் ஐந்தாம் காலத்தை விட
குறைவாக இருக்கும். மதம் சார்ந்த எச்செயலும் நிகழ்வதில்லை. சமூகம் சீரழிவை எட்டிம்.
அனைவரும் மாமிச உணவேற்பராய் இருப்பர். பருவ தட்ப வெப்பம் பகலில் மிகுந்த உஷ்ணமும்,
அதிக குளிரும் ஏற்பட்டு உயிரனங்களை வறுத்தெடுக்கும்.
ஆறாம் காலக் கடைசியில்
அடுத்த அரைசகாப்தமான உத்சர்ப்பிணி , ஏறுகாலம் துவங்கும். நல்ல மழை பொழிவதால் நிலத்தில் புதைந்த விதைகள் முளைத்து துளிர்விடத்துவங்கும்.
துன்பம் குறைந்து மகிழ்ச்சியின்
ஏறுகாலமாக மாறியமையும்.
கால அளவு – 21000 ஆண்டுகள்
உயிரினங்களின் அதிக ஆயுள்
– 20 வருஷம்
உயரம் – 3.5 வில்
உணவு உடகொள்ளுதல்
– நாளும் பல முறை
----------------------------
உத்சர்ப்பிணி யான ஏறுகாலத்தில்
அவசர்ப்பிணியின் ஆறுகாலம்;
ஆறு, ஐந்து என தலைகீழாக முன்னேறத் துவங்கும்.
தீத்தீக்காலம் (தீக்+தீக்காலம்,
துஷமா+துஷமா)
தீக்காலம் (துஷமா)
தீநற்காலம் (தீக்+நல்ல
காலம், துஷமா+சுஷமா)
நற்றீக்காலம் (நல்ல+தீக்காலம்,
சுஷமா+துஷமா)
நற்காலம் (சுஷமா)
நன்நற்காலம் (நல்ல+நல்ல;
சுஷமா+ சுஷமா)
என ஆறு பிரிவுகளாகவும்.
மீண்டும் அவசர்ப்பிணியைத்
தொடும்வரை ஒரு சகாப்த அரை காலச்சுழற்றியாக கொள்ளப்படுகிறது.
-----------------
இவ்வாறாக துவக்கமும்,
முடிவும் இல்லாத ஒரு சைக்கிள் சக்கரத்தைப் போன்று காலம் சுழன்று கொண்டிருக்கிறது பாரதத்திலும்,
ஐராவதத்திலும்.
இங்குள்ள உயிரினங்கள்,
உயிரற்ற பொருட்களின் மாறுகைகள்(பர்யாயம்), ஏற்றத்தாழ்வுகள் இவற்றின் போக்கை உணர்ந்த
நம் ஜினர்கள், கேவலிகளின் காலக்கணிப்புதான் இந்த விவயகார காலமாகும்.
இது போகபூமி, கர்மபூமி எனும் கருத்தமைவு ஜம்பூத்வீபத்தின்
மற்ற ஐந்து பிரதேசங்களுக்கு பொருந்தாது..
-------------------
இவ்வளவு நுணுக்கமாக இப்பூமியை,
லோகத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்தறிந்து இக்கால விஞ்ஞானம், எப்போது விளக்கம் தரும்
என்பது ஐயமே.
-------------------
மேலும் மூவுலகம் மற்றும்
நடு உலகம்பற்றி பக்தியினால் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் இக்கால வானவியல், அண்டவியல், வானபெளதிகம், நுண்பொருட் கோட்பாடு,
பூகோளம் போன்ற அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் த்வீபங்கள் எப்படி தட்டையாக இருக்கும்,
சமுத்திரங்கள் எப்படி அந்தரத்தில் இருக்கும்,
போன்ற ஐயப்பாடுகளால் அவற்றை ஏற்றுக் கொள்வது கடினமாகும்.
(அதன் விபரத்தை இன்றைய
அறிவியல் ரீதியாக தொடர்பு படுத்தி தொடரின் முடிவில்… விரும்பினால்….)
---------------------------------------
இரண்டரை த்வீபம்:
ஜம்பூத்தீவீபம் எனும்
கண்டத்தைப் பற்றி பார்த்தோம்.
அதனைச் சுற்றியுள்ள லவண
சமுத்திரத்திற்கும் அடுத்துள்ள வட்டவளை, பூண் போன்ற, (பட்டைவளையம், bolt-washer) போன்று
தாதகீகண்டம் எனும் நிலப்பகுதி ஜம்பூத்வீபத்தில் பரப்பளவில் இருமடங்காக சூழ்ந்துள்ளது.
அதற்கடுத்து காலோததி
சமுத்திரம் அதனினும் இருமடங்காய் தாதகீகண்டத்தை சூழ்ந்துள்ளது.
அதாவது தாதகீகண்டம்
16 லட்சம் யோசனை அகலமுடைய வட்டமாக உள்ளது.
(முன்னர் மத்திய உலக
அமைப்பில் இவற்றை கண்டோம்)
அக்கண்டத்தின் பூமிப்பிரதேசம்
லவணோத, காலோத சமுத்திரங்களை தொடும்வண்ணம், வடக்கு மற்றும் தெற்கில் இக்ஷ்வாகார எனும்
இருமலைகளால் பிரிக்கப்பட்டுள்ளன.
அதனால் கிழக்கு தாதகீ
மற்றும் மேற்கு தாதகீ கண்டம் என இருபகுதிகளாக உள்ளது.
அவற்றின் மத்தியில்
(கிழக்கிலும், மேற்கிலும்) இரு (மந்திர) மேரு மலைகள் உள்ளன.
மேலும் சக்கரத்தின் ஆரக்கால்
போன்று ஜம்பூத்வீபத்திலுள்ள (ஹிமவன், மற்ற மலைத்தொடர்கள் போன்று) தாதகீகண்ட த்வீபத்தை
பகுதி, பகுதிகளாக பிரிக்கின்றன.
அதனால் பரத, ஐராவதம்
போன்ற க்ஷேத்திரங்கள் இரண்டு பகுதிகளிலும் ஒவ்வொன்றும் இருமடங்கு பரப்பளவில் உள்ளன.
ஜம்பூத்தீபத்தைப் போன்றே
மனிதர், விலங்குகள் வாழும் பூமிகள் மற்றும் மலைத்தொடர்கள், அதனளவில் இருமடங்கு விஸ்திர்ணத்தில்
பரவி உள்ளது.
--------------
அவைகளுக்கு அடுத்து புஷ்கரவர
த்வீபம் காலோததி சமுத்திரத்தை விட இருமடங்கு அளவில், பட்டைவளைய வடிவில் அதனை சூழ்ந்துள்ளது.
இந்த புஷ்கரவரத்வீப அகலத்தின்
மையத்தில் வளையல் போன்று மானுஷோத்ர மலைத்தொடர் வட்டமாக த்வீபம் முழுவதும் பரவியுள்ளது.
அதனால் புஷ்கராத்த என்று இந்த பாதிபகுதி அழைக்கப்படுகிறது.
இந்த புஷ்கரார்த்த பகுதியின்
வடக்கு, தெற்கில் இஷ்வாகார் மலைகள் இருப்பதால்
கிழக்கு, மேற்கு என இருபகுதிகளாக உள்ளது.
இரண்டாக பிரிக்கும் இந்த
மலைத்தொடருக்கு முன்பகுதியில் ஜம்பூத்தீபத்தில் உள்ளது போன்றே மனித, விலங்குகள் வாழும்
பகுதிகள் ஏழும் மற்றும் மலைத்தொடர்கள் ஆறும் கிழக்கு, மேற்கு இரண்டு பகுதிகளிலும்,
தாதகீ கண்டத்தில் உள்ள க்ஷேத்திரங்களின் விஸ்தீரணத்தில் இருமடங்கான பரப்பில் உள்ளது.
ஏனெனில் புஷ்கரார்த்த
பகுதி என்பது புஷ்கரவர தீவீபத்தில் பாதியாகும்.
தாதகீகண்டம் போல் கிழக்கு,
மேற்குப் பகுதியின் மையத்தில் மேரு மலைகள் இரண்டு உள்ளன.
மானுக்ஷோத்திர மலைத்தொடருக்கு
அப்பால் மனிதர்கள், விலங்குகள் செல்லவியலாத காரணத்தால் அம்மலைக்கு அப்பெயர் வந்தது.
மனிதர்கள் மட்டுமல்லாது
வித்யாதர்களும், ரித்தி பெற்ற முனிவர்களும் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாது. (ஆனால் சமுத்காதத்தினை அடையும் பயிற்சி பெற்ற முனிவர்கள் மட்டும் சென்று வரமுடியும்.)
ஜம்பூத்வீபம், லவணசமுத்திரம்,
தாதகீகண்டம், காலோத சமுத்திரம் மற்றும் புஷ்கராத்த எனும் புஷ்கரவர தீவீபத்தில் பாதிபூமி
வரை மனிதர்கள் வாழ்கின்றனர்.
இதில் சமுத்திரங்கள் போக மீதமுள்ள இரண்டு+அரை த்வீபப்பகுதியை,
இரண்டரை த்வீபம் என்றழைக்கின்றனர்.
----------------------
இந்த இரண்டரைத் தீபத்தில்
:-
ஐந்து மேரு மலைகள் –
ஜம்பு 1 + தாதகீ 2 + புஷ்கர 2
45 க்ஷேத்திரங்கள் - 7 +
14+ 14 + உத்திரகுரு(1+2+2) + தேவகுரு (1+2+2)
(விதேஹ பூமியில் உத்தம
போகபூமி பேதங்கள் இருப்பதால் உத்திரகுரு, தேவகுருவை தனி க்ஷேத்ரங்களாக கொள்ள வேண்டும்)
ஐந்து விதேஹம் ஐந்து
பரதம் ஐந்து ஐராவதம் ஆக 15 கர்ம பூமிகளாகும்.
மீதமுள்ள (45 –
15) 30ம் போக பூமிகளாகும்.
30 மலைகள் - 6 + 12 + 12
30 குளங்கள் – 6 +
12 + 12
70 நதிகள் - 14 +
28 + 28
-------------------------
ஹைமவத, ஹரி, தேவகுரு,
உத்திர குரு, ரம்யக, ஹைரண்யக இந்த க்ஷேத்திரங்களில் எப்போதும் நிலையான போகபூமி காலங்கள்
உள்ளன.
பரதம், ஐராவதம் க்ஷேத்திரங்களில்
காலமாறுபாடுள்ளதால் நிலையற்ற போகபூமி காலங்கள் உள்ளன.
தேவகுரு, உத்திரகுரு
நீங்கலாக மற்ற விதேஹ க்ஷேத்திரங்கள் நிலையான கர்மபூமியாக உள்ளன
-------------------------
பாரதம், ஐராவதம் க்ஷேத்திரங்கள்
இன்றி வேறு பகுதிகளில் ஏறுகாலம், இறங்கு காலங்கள் இல்லை.
மற்ற பூமிகளில் காலம்
நிலையாய் இருக்கின்றன.
ஆனால் ஆயுளைப் பொருத்தமட்டில் ஒரே அளவில் இன்றி மாறுபடுகிறது.
ஹைமத வர்ஷங்களில் எப்போதும்
நற்தீக்காலமாகவே இருக்கிறது.
ஹைமவதர்களின்
ஆயுள் ஒரு பல்யோபம்;
உயரம் 2000 வில்,
ஒருநாள் விட்டு ஒருநாள்
உணவு எடுத்துக் கொள்கிறார்கள்.
நிறம் நீலத்தாமரைக்கு
ஒத்ததாக உள்ளது.
இவை ஹைரண்யவத க்ஷேத்திரங்களில்
உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
ஹரிவர்ஷங்களில் எப்போதும்
நற்காலமாகவே உள்ளது.
ஆயுள் இரண்டு பல்யோபங்கள்;
உயரம் 4000 வில்;
இரண்டுநாட்களுக்கு ஒருமுறை
உணவு;
சங்கு வெண்மை நிறத்தில்
உள்ளனர்.
இவை ரம்யக க்ஷேத்திரங்களுக்கும்
பொருந்தும்.
தேவகுரு க்ஷேத்ரங்களில்
எப்போதும் நன்நற்காலமாகவே இருக்கிறது.
ஆயுள் 3 பல்யோபங்கள்,
உயரம் 6000 வில்,
மூன்று நாட்களுக்கு ஒருமுறை
உணவு,
பொன் மஞ்சள் நிறத்தில்
உள்ளனர்.
இவை உத்திரகுரு பூமியில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும்.
விதேஹ க்ஷேத்திரங்களில்
எப்போதும் நற்தீக்காலத்தின் கடைசிபகுதி போன்று இருக்கும்.
ஆயுள் ஒரு பூர்வகோடி
ஆண்டுகள்,
உயரம் 500 வில்,
தினமும் உணவு எடுத்துக்
கொள்வர்,
பொன் மஞ்சள் நிறத்தில்
உள்ளனர்.
(பூர்வ கோடி =
7,05,60,00,00,00,000 ஆண்டுகள்)
----------------------------
ஜம்பூத்வீபத்தில் 2 சூரியன்கள்,
2 சந்திரன்கள்
லவண சமுத்திரத்தில்
4 சூரியன்கள், 4 சந்திரன்கள்
தாதகீ பூமியில் 12 சூரியன்கள், 12 சந்திரன்கள்
காலோததியில் 42 சூரியன்கள்,
42 சந்திரன்கள்
புஷ்கரார்த்த 72 சூரியன்கள், 72 சந்திரன்கள்
இவ்வாறாக இரண்டரைத்வீபத்தில்
132 சூரியன்கள், 132 சந்திரன்கள் உள்ளன.
---------------------
மனிதர்களில் இரண்டு வகை
ஆரியர், மிலேச்சர்
அவர்கள் வாழும் பகுதி ஆரியகண்டம், மிலேச்ச கண்டம் என்றாகிறது.
ஆர்யர் –
உன்னத குணமுடையவர்கள்; நற்குண, நல்லொழுக்கமுடையவர்;
மேலும் நற்குண, நல்லொழுக்கமுடையவர்களால் பாராட்டைப் பெறுபவர்.
ஆர்யர்களில் இரு பிரிவுகள்;
ரித்தியுடையவர்கள் (அமானுஷ்ய சக்தியுடைவர்கள்): சிறப்பான அறிவு, உருமாற்றம் செய்யும் சக்தியுடையவர்,
தவம், பலம், (நோய்) குணப்படுத்தும் சக்தி, எவ்வுணவையும் ருசிமிக்கதாக மாற்றும் ஆற்றல்
மற்றும் குறையா உணவு தயாரித்தல் போன்ற சிறப்புகள் கொண்டவர்கள்.
ரித்தி இல்லாதவர்கள்: அவர்களை இருக்குமிடம், ஜாதி, தொழில்,
நடத்தை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் க்ஷேத்ரார்யர், ஜாத்யார்யர், கர்மார்யர், சாரித்ரார்யர்
மற்றும் தர்சனார்யர் என ஐந்து வகையினர் ஆவர்.
மிலோச்சர் –
ஆர்யர்களுக்கு நேர்மாறான குணம், ஒழுக்கமுடையவர்கள். நீசர்கள்.
இவர்களிலும் இருவகையினர்;
அந்தர்த்வீபர், கர்மபூமிஜர் என இருவகை.
மேலும் ரித்தியுடையவர்கள்: புத்தி, விக்ரியா, தவம், பலம்,
ஒளஷதம், ரசம் போன்ற ஆர்யர் பிரிவைப்போன்று இதிலும் உள்ளனர். இவ்வளவு ரித்தி இருந்து
நீசகுணமுடையவர்கள், தவறான காரணங்களுக்கு பயன்படுத்துபவர்கள். (பயிற்சி நல்லவருக்கும்,
தீயவருக்கும் பொதுவானதே அவை மனிதனை தரம்பிரிப்பதில்லை)
லவண சமுத்திரத்தின் எண் திசைகளிலும், கரையிலிருந்து 500 யோசனை
தூரத்தில், 100 யோசனை அகலத்தில் எட்டு அந்தர்த்வீபங்கள் உள்ளன.
மேலும் அவற்றுக்கு இடையே, , கரையிலிருந்து 500 யோசனை தூரத்தில்,
50 யோசனை அகலத்தில், எட்டு அந்தர்த்வீபங்கள் உள்ளன.
ஹிமவான் மற்றும் சிகரி மலைத்தொடர் சமுத்திரத்தில் சேரும் இடத்தில் நான்கும்;
விஜயார்த்த மலைத்தொடர்கள் கடலில் சேரும் இடத்தில் நான்குமாக
மொத்தம் எட்டு அந்தர்த்வீபங்கள், இவை கரையிலிருந்து 600 யோசனை தூரத்திலும், 25 யோசனை
அகலத்திலும் உள்ளன.
இந்த 24 அந்தர்த்வீபங்களும் நீர் மட்டத்திலிருந்து ஒரு யோசனை
உயரத்தில் உள்ளன.
அந்தர்த்வீபங்களில்
பிறந்தவர்கள் அனைவரும் மிலேச்சர்கள் ஆவார்கள்.
இந்த 24 அந்தர்த்வீபங்களில் வாழும் மிலேச்சர்கள் ஒரு தொடை/கால்
உள்ளவர்களாகவும், ஊமைகள், கொம்புள்ளவர்கள், முயல்காதுடையவர்கள் ஆயும்; குதிரை, சிங்கம்,
நாய், எருமை, பன்றி,புலி, காகம், மீன், யானை, பசு, செம்மறிஆடு ஆகிய விலங்கின முகத்தையும்
உடையவர்களாகவும் பிறப்பர். அவை அந்தந்த அந்தர்த்வ்பத்தை
பொருத்து உள்ளது.
மரத்தில் வாழ்ந்து
பழம், காய்களை உண்டு வாழ்பவர்களும் உள்ளனர்.
அனைவரும் ஒரு பல்யோபம் ஆயுளுடையவர்கள் ஆவார்.
மற்ற கருமபூமியில்
பிறந்தவர்கள் நாகரீகமாயும், பழங்குடியனராயும், யவனர்களாயும், சபர(மலையேறுபவர்)ராயும்,
வேடர், இருளர்களாயும் (புலிந்தர்) இருக்கின்றனர்.
----------------------
முப்பது போகபூமியில் வாழ்பவர்களில் அரியர்கள் மற்றும் மிலேச்சர்கள்
உள்ளனர்.
15 கர்மபூமியில் வாழ்பவர்களிலும் இந்த பேதம் உண்டு.
பரதக்ஷேத்திரத்தை சுற்றி விஜயார்த்த பருவத்தை கடந்து மிலேச்சர்கள்
வாழ்கின்றனர்.
அதே இரண்டரை த்வீபத்திற்கும் பொருந்தும்.
-----------------------
இம்மூன்றுலக வாழுமிடங்களில் அனேக செயல்கள் நடந்து கொண்டுதான்
உள்ளன. இருப்பினும் கரும பூமிகளில் மிகுந்த செயல்கள் நடைபெறுகின்றன.
அவையே: தீய செயல்களால் ஏழாம் நரகத்திற்கும், நற்செயல்களால்
மிக உயர்ந்த சர்வார்த்த சித்தி எனும் சொர்க்கத்திற்கும் வழி வகுக்கின்றன; என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.
கர்மபூமியில் தான் ஸ்ரீஅதிநாத ஜினர் கற்பித்த ஆறுவகையாக தொழில்களும்
நடைபெறுகின்றன. அதில் பிற உயிருக்கு துன்பம் இழைக்காமலும், அவற்றின் துன்பத்தை போக்க
உதவும் நற்செயலை புரிந்து நற்கதியடைய முயல்பவர்கள்
உயர்ந்த் சித்த நிலையினை அடைகின்றனர்.
விரும்பிய பொருட்களையெல்லாம் தரும் கற்பகத்தருக்கள் உள்ள போகபூமியில்
இந்த நற்செயலுக்கான கருமங்கள் நடைபெறுவது இல்லை.
ஆனால் (நாம் வாழும்) பரதம், ஐராவதம், விதேஹ க்ஷேத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு
மிகுந்த அளவில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
-----------------------
இனி ஐந்தாம் கால இறுதியிலும், ஆறாம் காலத்திலும் முக்திக்கான
வழிகள் இல்லை. இருப்பினும் அஹிம்சை நெறியை கடைபிடித்து நற்காரியங்களை செய்பவருக்கு
சொர்க்கம் கிடைக்கும் என்று பலர் கருதி வருகின்றனர்.
ஆனால் சொர்க்க சுகத்திற்கான முயற்சி மீண்டும் பிறவிச் சுழலுக்கே
வித்திடும்.
அதனால்; விதேஹ க்ஷேத்திரத்தில்
பவ்ய ஜீவனாக பிறந்து, அங்கு நிகழ்கால திர்த்தங்கரராக சமவசரணத்தில் அமர்ந்துள்ள சீமந்திர
பகவான் காட்டும் வழியில் நடந்து மோட்ச பிராப்தியை
எய்தவேண்டும் என்ற சிந்தனையுடன் நற்காரியங்களை
செய்வதே மேலான நோக்கமாகும்.
கீழுலகம்,
அதோலோகம்,
நரகலோகம்…..
மத்தியலோகத்திற்கு கீழ்
7 கயிறு (ரஜ்ஜு) ஆழம்,
7 கயிறு பருமன்
மேற்புறம் 1 கயிறு அகலம்
கீழ்புறம் 7 கயிறு அகலம்
இவையனைத்தும் கனோதாதி
வாதவலையத்தின் ஆதாரத்திலும்,
அவை கனுவாத வலைய ஆதாரத்திலும்
உள்ளது.
கனுவாத வலையம் தனுவாத
வலய ஆதாரம் மற்றும்
தனுவாதவலயம் ஆகாசத்தின்
ஆதாரத்தில் உள்ளது.
(ஆகாசம் சொந்த ஆதாரத்தில்
உள்ளது.)
அதோலோகத்தில் 7 பிரிவுகள்
ஒன்றன் கீழ் ஒன்றாக தொடர்புடன் இருக்கின்றன.
ஒவ்வொரு பூமிக்கும் இடையில்
வாதவளையம் நிரம்பியுள்ளது.
நரகங்களின் வடிவங்கள்
உருண்டை, முக்கோணம், செவ்வக மற்றும் ஒழுங்கற்றும்
காணப்படுகின்றன.
ஒவ்வொரு பகுதியிலும்
அடுக்கடுக்காக வளைகள் போன்று உள்ளன. அவற்றின் வாயில் கிணறு/ குழி போன்றுள்ளன.
முதல் நரகப்பகுதியில்
13 படலங்களாகவும், அடுத்து ஒவ்வொன்றிலும் இரண்டு, இரண்டாக குறைந்து காணப்படுகின்றன.
நாரகி ஜீவன்கள் தங்கள்
ஆயுள்காலம்வரை வாழ்கின்றன. அகாலமரணம் ஏற்படாது.
---------------------
மேருவின் அடிப்பகுதிக்கு
சித்ராபூமி எனப்படுகிறது.
அதிலிருந்து
1. ரத்தினப்பிரபா (அல்லது
தம்மா) 180000 யோசனை
– இதில் மூன்று பிரிவுகள் உள்ளன.
1அ. கரபாகம் – 16000
யோசனை (புகை)
1ஆ. பங்கபாகம் –
84000 யோசனை
(இரண்டு பகுதியிலும்
நரகங்கள் இல்லை)
1இ. அப்பஹுளபாகம் –
80000 யோசனை
ஒரு யோசனை மேலும் கீழும்
விட்டு நடுப்பகுதியில்..
30 லட்சம் நரக வளைகள்(பிலங்கள்)
உள்ளன.
உயர் ஆயுள் – ஒரு கடற்காலம்
குறைந்த ஆயுள் –
10000 வருஷங்கள்
உயரம் 7 வில், மூன்று
முழம் மற்றும் ஆறு அங்குலம்.
(வில் = 8 அடி, முழம்
= 24 அங்குலம்)
------------------------
2. சர்க்ராப்ரபா (வம்சா)
– 32000 யோசனை பருமன்
அதேபோல் 25 லட்சம் நரக
வளைகள் உள்ளன
உயர் ஆயுள் – 3 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 1 கடல்காலம்
உயரம் 15 வில், 2 முழம்
மற்றும் 12 அங்குலம்.
---------------------------------
3. வாலுகாப்ரபா (மேகா) - 28000 யோசனை பருமன்
அதேபோல் 15 லட்சம் நரக
வளைகள் உள்ளன
உயர் ஆயுள் – 7 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 3 கடல்காலம்
உயரம் 31 வில், 1 முழம்.
----------------------------
4. பங்கப்ரபா (அஞ்ஜனா) - 24000 யோசனை பருமன்
அதேபோல் 10 லட்சம் நரக
வளைகள் உள்ளன
உயர் ஆயுள் –
10 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 7 கடல்காலம்
உயரம் 62 வில், 2 முழம்.
------------------
5. தூமப்ரபா (ஆரிஷ்டா) - 20000 யோசனை பருமன்
அதேபோல் 3 லட்சம் நரக
வளைகள் உள்ளன
உயர் ஆயுள் –
17 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 10 கடல்காலம்
உயரம் 125 வில் .
---------------------------
6. தமப்பிரபை (மகவீ)
– 16000 யோசனை பருமன்
அதேபோல் 99995 நரக வளைகள்
உள்ளன
உயர் ஆயுள் – 22 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 17 கடல்காலம்
உயரம் 500 வில்
-----------------------
7. மஹாதமப்ரபை (மாகவீ)
- 8000 யோசனை பருமன்
அதேபோல் ஐந்து நரக வளைகள்
உள்ளன.
உயர் ஆயுள் –
33 கடற்காலம்
குறைந்த ஆயுள் – 22 கடல்காலம்
உயரம் 250 வில்.
---------------------
நாரகியர் அனைவரும் கறுத்த
மனமுடைய(கிருஷ்ண லேஸ்யை) வர்களானதால் அசுபமான சிந்தனை, தீச் செயல்கள், விலங்குகளைக் காட்டிலும் இருக்கும்.
அது கீழே போகப்போக அதிகமாக இருக்கும்.
மேலும் உடல் அருவருக்கத்தக்கதாகவும்,
விகாரமாகவும் போகப்போக கூடுதலுடன் காணப்படும்
.
சுற்றுப்புறச் சூழ்நிலைகளால்
கடும் வெப்பம், குடுங்குளிர் இவற்றால் துன்பமுறுகின்றனர்.
வைக்ரீயக, உடல் மாறுதல்,
சக்தி இருந்தாலும் அசுபதர வைக்ரீயகத்தினால் அழகான உடல் பெற நினைத்தாலும் அழகற்ற உடலுருவே
பெறுகின்றனர்.
மேலும் சுக காரியங்களுக்காக,
என நினைத்து செயலாற்றினாலும் கஷ்டங்களையே பெறுவர்.
அவர்களுக்கு அவதிஞானமிருந்தாலும்
அது தவறாகவே செயல்படுகிறது.
அதனால் முன்னரே துக்கத்திற்கான
காரணங்களை அறிந்து கொள்வதினால்.
ஒருவருக்கொருவரைக் காணும்
போது பகையுடன் மோதிக்கொள்கின்றனர்.
தமது அசுபதர வைக்ரியக
சக்தியினால் கொடிய ஆயுங்களை உருவாக்கி, பரஸ்பரம் தாக்கிக் கொண்டாலும்; கைகால்களை இழந்தாலும் அகால மரணம் ஏற்படுவதில்லை.
மூன்றாவது பூமிவரை அசுர
குமார்கள் செல்கின்றனர். அவர்களுக்குள் கலகமூட்டி சண்டையிடச் செய்து மகிழ்கின்றனர்.
---------------------
இம்சை முதலிய மிகுந்த
பாபம், மிகுந்த பொருள் வேட்கை, மிகுந்த கஷாயம் (passion), தீய வியசனம் போன்ற வற்றால்
ஜீவன்கள் நரக கதியை அடைகின்றன.
இதுவரை மூன்றுலோகத்தின்
நான்கு பகுதிகளைப் பற்றி பல அகமங்களில் உள்ளதை என் அறிவுக்கு எட்டியவரை (புரிந்து கொண்ட
மட்டில்) சுருக்கமாக பகிர்ந்து வந்தேன். இதன் அளவுகளில், இடங்களின் பெயர்களில் மேலும்
சில பிழைகள் இருந்திருக்கலாம். அவ்வாறு இருப்பதற்கு பல நூல்களில் உள்ள மாறுபாடுகள்
என்றாலும், எனது தவறான புரிதலினால் வந்த பிழையாகவும்
இருக்கலாம்.
தோன்றிய பிழைகளுக்கு
அனைவரும் பொருத்தருள்க.
ஜினர் அண்டவியலை ஒரு
பூகோளத்தைப்போன்றே அக்காலத்திய மக்களின் அறியிவில்
அறிவுக்கேற்றாற்போல் வழங்கியுள்ளார். அவை செவிவழிச்செய்தியாக வந்ததால் அவரவர் புரிந்த
மட்டில் நூலாக்கம் செய்துள்ளனர். அதனால் நூல்கள் பல வேறுபாடுகளை கொண்டதாக காணப்படுவது
இயற்கையே.
(இக்காலத்தில் அறிவியில்
வளர்ச்சி இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் உலக வர்ணனையை உருவகமாக வழங்கியுள்ளார் என்பதை பல அறிவியலார் ஏற்றுக் கொண்டுள்ளனர்.)
இருப்பினும் ஜினரின்
நோக்கமான: உயிரினங்கள் பிறவிச்சுழலிருந்து
விடுபடும் வரை வினைப்பயனுக்கேற்றளவில், என்னென்ன பிறவிகள் எந்தந்த உலகின் பிரதேசத்தில்
ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லாமல் நூல்களை அளித்துள்ளார்கள்
என்பதை வலியுறுத்தி சொல்லலாம்.
அதனால் சமணத்தில் எந்த
பிரிவின் நூலாக இருந்தாலும் சரியான நோக்கத்துடனே படைக்கப்பட்டுள்ளது.
-------------
நம் எண்ணம், சொல், செயல்
இவற்றினால் ஏற்படும் விளைவுகளுக்கேற்ற வினைத்துகள்கள் ஆன்மப்பிரதேசத்தில் சேருகின்றன.
எண்ணங்களே மற்ற சொல், செயலுக்கும் காரணமாகிறது. ஆன்மா, மனோ பாவ(bhava)ங்களினால் அதாவது
பாவ(bhava) கர்மாவினால் உலகில் சூழ்ந்துள்ள திரவிய(substance) கருமங்களை ஈர்க்கிறது.
அதில் புண்ணிய கருமங்கள்
சொர்க்கத்திலும், பாவ கார்மண வர்கணைகள் நரகத்திலும்
பிறவி எடுப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன.
(மூவுலகில் 84 லட்சம்
யோனிகளில் உயிரினங்கள் உருவாகின்றன. எந்த உயிர் எந்த இனத்தில் சேரவேண்டும் என்பதை 93
வகையான நாம கர்மங்கள் முடிவு செய்கிறது என்பது தற்போது மிஞ்சியுள்ள ஆகமம் கூறுகிறது.
மேலும் பல விளக்கநூல்கள் அழிந்துவிட்டன என்பது நமது துரதிஷ்டமே.)
ஜீவன் சுவர்க்கத்தில்
சுகத்தை அனுபவித்தாலும் கடமையாற்ற வழியின்றி புண்ணியகருமங்கள் நீங்கியதும் மீண்டும்
பூலோகத்தில் பிறக்கிறது. ஆனால் தேவனாக இருந்தாலும் பூவுலகில் ஜினரின் சமவசரணத்தில்
பங்கு கொள்வதால் மோட்ச மார்க்கத்தினை புரிந்து கொள்கிறது.
நரக லோகத்தில் ஹிம்சையின்
வழியே துக்கம், துயரத்தையே அனுபவித்து; உதயமான பாவகர்மங்கள் நிர்ஜரையானதும், அதற்குரிய
அடுத்த பிறவியை தேர்வு செய்கிறது. (ஆனால் சமவசரணத்தில் பங்குகொள்ள நாரகியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.)
இருப்பினும் மேலுலக தேவசுகமும்,
கீழுலக நரகவேதனையும் அனுபவிப்பதனால் மீண்டும் மீண்டும் பிறவிச்சுழற்சிக்கே வழி வகுக்கிறது.
புண்ணியத்தை ஈட்டிய அதே
ஜீவன், பாவத்தை ஏற்கும் போது விலங்கு/ நரக கதியை அடைகிறது. அதனால் வினை ஈட்டா மார்க்கமாகிய
ஜினர் வழங்கிய மோட்சமார்க்கத்தின் வழியில் நடப்பதால் மட்டுமே வினையுடல் முழுவதும் நீங்கி சித்தலோக பதவி
கிட்டும்.
இதனை தெரிவிப்பது தான்
முவுலக வர்ணணையின் நோக்கமாகும்.
சிந்தாந்தமோ, மூவுலக
வர்ணணையோ முழுவதும் புரியாவிட்டாலும் ஜினரின் மீது பக்தி கொண்டு அவர் வகுத்த இயம, நியமங்களின்
வழியே உறுதியுடன் நடந்தால் கண்டிப்பாக ஒரு மனிதப் பிறவியில் கேவலஞானம் கிட்டும். அன்று
அனைத்தும் விளங்கும். பின் வினைக்கட்டிற்கு வழியேல்லை.
ஜினபக்தியின்றி என்றும்
விடுதலை கிட்டுவதில்லை.
ஞானம் எதையும் (அவ்வளவு)
சீக்கிரம் ஏற்காது. தர்க்கத்திற்கு தயாராகும். ஜினர் கூறியதில் எது சரி எது தவறு என
சீர்தூக்கிப்பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் ஆன்மீகமாக இருக்கும்.
அனைத்தும் விளங்கியவுடன்
முழுமையாக ஜினபக்தியைத் தொடங்கும். அதுவரை…..
எனவே சித்தாந்தங்கள்
புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஜினபக்தியில் உறுதியும், அவர் வகுத்த நல்லோழுக்கங்களில்
முழு ஈடுபாடும் கொண்டு செயல்படுவோம்.
அதுவே வாழ்வு உய்ய வழிவகுக்கும்.
சமண நூல்களில் நற்காட்சி,
நல்ஞானத்திற்கான வரிகளை விட பல நூறு மடங்கு நல்லொழுக்கத்திற்காக ஒதுக்கியிருப்பதிலிருந்து
அதனைப் புரிந்து கொள்ளலாம்.
முற்றும்.
நன்றி.
பத்மராஜ் ராமசாமி.
No comments:
Post a Comment