மஹாமஸ்தகாபிஷேகம் - 2018
Our family visit to Shravanabelagola …..
On 30.06.18 and 01.07.18
For seeing Mahamasthakabisheka
29.06.18
வெள்ளி
இரவு 11 மணியளவில் சென்னையிலிருந்து பெங்களூர் மார்க்கமாக சரவணபெலகுளாவிற்கு
செல்ல புறப்பட்டோம்.
30.06.18
சனிக்கிழமை
இரவு முழுவதும் 485 கி.மீ. பயணித்ததும் காலை 7.30 மணியளவில் ஸ்தலத்தை
நெருங்கினோம்.
காலை 9 மணிக்கு நெருங்கிய நண்பரின் உறவினரான பவ்யர் சாஸ்திரியார் ஒருவரின் இல்லத்தில்
தங்கினோம். உடன் சுவையான காபியை அளித்தார். அருந்தி விட்டு அளவளாவும் போது அன்றே ஜலாபிஷேகம்
செய்து விடுங்கள் என்றார். ஏனெனில் ஞாயிறன்று அதிக பக்தர்கள் வர இருப்பதால் அபிஷேகம்
செய்வதில் சிரமம் இருக்கும் என்றுரைத்தார்.
அவரது ஆலோசனையின் பேரில் அன்றே மலைமீது நின்ற மன்மதனைக் கண்டு தரிசிக்க
ஆவலுடன் விந்திய கிரி நோக்கிக் சென்றோம்.
-----------------------------------------------
விந்திய
கிரி: பெருமைமிக்கச் சாமுண்டராயர் எதிரிலுள்ள சந்திரகிரியிலிருந்து பொன் அம்பு ஒன்றை
எய்தி இம்மலையைப் பிளந்தார். ஆகவே இம்மலை வேத்யகிரி என அழைக்கப் பட்டிருக்கலாம். (வேத
எனில் பிளத்தல் என்பது பொருள்) பின்னர் வேத்யகிரி என்ற சொல் சிதைந்து நாளாவட்டத்தில்
'விந்தியகிரி' என மாறியிருக்கலாம்....
சிலர்
இந்திரர்களும் மாஹாதபசியான அந்த கருணை வடிவனை வந்து வழிபடுவதால் இதற்கு இந்திரகிரி
எனும் பெயரும் உண்டு.
-----------------------------------------------
அவர் கூற்றுப்படி 500 நபர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக அன்றே இருந்தனர்.
அதைக் காணும் போது ஞாயிறன்று சற்று நெரிசலுடன்
தான் இருக்கும் என்பதை உணரமுடிந்தது.
தென்மேற்கு பருவ மழை தொடர்வதால், முன்னர் இரு தினங்களாக பெய்த மழைநீர்ச்
சுவடுகள் சேறுகளுடன் தென்பட்டன. அன்றும் காலை 11 மணியளவில் மழைவரும் போல கரிய மேகமூட்டத்துடன்
மந்தகாரமாக இருந்தது. கதிரவனின் நேரடி ஒளியின்றி மேகத்தின் வழியே ஊடுறுவிய ஒளிபரவி இருந்ததால் சிரமமின்றி விந்தியகிரி
மலைவாசர் காமதேவனை வென்ற, மனதைக் கவர்ந்த பேரழகன்
பகவான் பாகுபலியை காண குடும்பத்துடன் மலையேற்றத்தைத் தொடர்ந்தோம்.
நல்ல சில்லென்ற காற்று அவ்வப்போது பூப்போன்ற மாரி திவலைகளாக இறங்கிக்
கொண்டிருந்தது. உடலில் பட்டு, உடன் உலர்வதும் பின் நனைவதுமாக இருந்தது. காலுறையும்,
தலைத்தொப்பியும் எடுத்துச் சென்றது உபயோகமில்லாமல் போனது.
எதிரில் “பாகுபலிக்கு ஜே! ஜெய் ஜினேந்த்ரா” எனக் கூறி தரிசனம் கண்டவர்கள் வரவேற்றபடி இறங்கிக்
கொண்டிருந்தனர்.
அறுபத்துநான்கு வயதில் ஏறமுடியுமா என்ற நினைத்துச் சென்றவன் உத்வேகத்தில் இளைஞனாக ஏறத்தொடங்கினேன்.
சிறுவயதில் , இளமையில் சென்றுவந்ததை நினைவுகூறி
அளவளாவிக் கொண்டே சென்றதில் கடைசி எட்டிற்கு
வந்தடைந்திருந்தோம்.
இது வரை ஒரு தழிழரைக் கூட
காணவில்லையே என்றெண்ணும் போது “வாங்க சார்” என்ற குரலின் திசையை நோக்கியதும்;
வந்தாவாசி திருவாளர் நேமி. பாஸ்கரதாஸ் அவர்கள்.
அவரும் அதே சிந்தனையில் இறங்கியதால் தமிழனைக் கண்ட பரஸ்பர மகிழ்ச்சி.
ஆலய பிரகாரத்தை நெருங்கியதும்
எங்கும் இரும்புகுழாய் தூண்கள், உத்திரங்களால் பிணைக்கப்பட்டு நெடிய காணப்பட்டது. முகமண்டபத்திற்கு
முன் அமைந்துள்ள குல்லக் காயஜ்ஜி யை(ஸ்ரீ கூஷ்மாண்டினி)
தரிசித்து விட்டு உள்ளே நுழைந்து சென்றதும் எதோ
புதிய ஒரு சிற்பத்தை கண்ட பிரமிப்பு.
நானும் பல தடவை வந்துள்ளேன், ஏன் இந்த புதிய
இனம்புரியாத புத்துணர்ச்சி தோன்றுகின்றன;
விடைதேடியும் கிடைக்கவில்லை.
பாகுபலி என்றுமே பிரம்மாண்டம், அற்புதம், அழகு, கருணை தான். அஹிச்சையின் வெளிப்பாட்டை அவர் தவக்கோலத்தில் அச்சிற்பி எப்படிக்
கொண்டு வந்தானோ தெரியவில்லை.
யார்
இத்தகைய பிரம்மாண்டமான சிலையை வடித்தாரோ, அவர் உள்ளத்தில் இமாலயத்தின் அடித்தளம் வரை
தன் கவர்ச்சியை பரப்பக்கூடிய அளவுக்கு வியக்கத்தக்க ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யவேண்டுமென்ற
எண்ணம் இருந்திருக்கக்கூடும்.
அவருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ, ஆனால் ஆயிரம்
ஆண்டுகளாக இந்திய ஜைனர் மற்றுமல்ல அனைத்து யாத்திரிகர்கள் தென் இந்தியாவிற்கு விஜயம்
செய்ய பகவான் பாகுபலி யின் இந்தப் பரந்த உருவம் கவர்ச்சிப் பொருளாக விளங்கி வருகிறது.
'என்ன பரந்த உருவம்? கல் என்றாலும் எவ்வளவு நேர்த்தி?
மாசு காண முடியாத வடிவம், ஆண்டுகள் ஆயிரம் கடந்து விட்டதென்றாலும் அதில் ஒரு கீரலைக்கூட
காணமுடியவில்லை. எங்கும் அன்னாந்து வாயைப்பிளந்து நிற்கும் மக்கள் நம் பார்வைக்கு கிடைப்பார்கள்.
இதை
உருவாக்கிய சிற்பி புனிதமானவன் என்றாலும், உருவாக்கக் காரணமாக இருந்தவனும் புனிதத்
தன்மையில் குறைந்தவனல்ல என்று, செய்தவர், செய்வித்தவர், அல்லது சிலையின் வடிவைப் பற்றிப்
பேசுவர் பாராட்டுக்குரியவர். எவர் இச்சிலைக்கு உரியவரோ, எவர் யுகத்தின் தொடக்கத்தில்
கடுந்தவம் புரிந்து முதன் முதல் முக்தியடைந்தவரோ,
அவரைப்பற்றிய பேச்சு இந்த கட்டத்தில் இல்லாமல் இல்லை.
வடக்கையும்
தெற்கையும் இணைக்கச் செய்யவல்ல இந்த பரந்த உருவத்தின் முன் அனைத்து மாநிலங்களிலிருந்து வந்த இருபது மொழிகளைப் பேசும்
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிற்கும்போது, எல்லா வேற்றுமைகளையும் மறந்து,
"நாம் எல்லோரும் ஒரே பரமாத்மனின் பக்தர்கள், ஒன்றானவர்கள் என்ற உணர்வை கட்டாயம்
கொள்வார்கள். இத்தகைய ஒற்றுமையின் சின்னம்தான் இந்த பரந்துவிரிந்த சிலை.
பாகுபலி
தைரியத்திற்கும், தியானத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு, அவருடைய உடலில் கொடிகள் படர்ந்தன.
அவர் நின்ற இடத்தில் பாம்புகள் புற்றை உண்டாக்கிக்
கொண்டன. ஆனால் அவருடைய தைரியம் சிதையவில்லை, தியானம் கலையவில்லை. அவர் தன்னுள் சென்றார் என்றால் சென்றே விட்டார்.
பிறகு புறத்துக்கு வரவே இல்லை, சில வினாடிகள் அவருடைய உள் உணர்வு ஆன்மாவிலிருந்து விலகினாலும்
கூட, மீண்டும் அதிலேயே (ஆன்மாவில்) நிலைக்க உன்னத
முயற்சியில் ஈடுபட்டார் என்பது அக்கோலத்தைப் பார்த்தாலே உணர முடிகிறது.
இவர்
வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும்
பின்புறம் திரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் !
மக்களுக்கு
ஆயிரம் ஆண்டு என்பது நினைவிற்கு வருகிறது; ஆயிரம் ஆண்டு பெருமைகள் தெரிய வருகின்றன.
சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் இது எவருடைய சிலையோ, அவர் தோன்றி எத்தனை
ஆயிரம் ஆண்டுகள் ஆயின? என்பவனவற்றில் எண்ணம் செலுத்த மனம் வேண்ட வேண்டும். அதுவே இதை
உருவாக்கியவனின் இலட்சியமாகும்.
இந்த
பிரம்மாண்டத்திற்குரியவர் யாருக்கு எப்போது, எங்கு பிறந்தார், எப்படி வளர்ந்தார். வாழ்வில் சுக துக்கங்களை எவ்வாறு அனுபவித்தார். அரசனாய் இருந்து ஆண்டியாய்
தவக்கோலத்தில் நின்று என்ன செய்கிறார்? ஏன் இந்த
நிலை ஏற்பட்டது, நின்றவர் நினைத்ததை
சாதித்தாரா? இந்நிலையிலிருந்து விடுதலை பெற்றாரா? என்ற வினா எழவேண்டும் என்பதே இதனை உருவாக்க முயன்ற புனிதனான
சாமுண்டராயன் எனும் கோமட்டனுக்கு நோக்கமாய் இருந்திருக்கவேண்டும்.
அதை
பூர்த்தி செய்யவதே நம் வருங்காலமாய் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் திரும்புவதே இப்பிரம்மாண்டச்
சிலை தரும் பாடமாகும்.
பகவான்
பாகுபலியின் பாதங்களில் நூறாயிரம் முறை வணங்கி இந்த மகோற்சவம் நம்முடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தட்டும்.
திகம்பர நிலையின் பெருமையை உயர்த்தட்டும் ; நம் எல்லோருக்கும் "பகவான் பாகுபலி"
யின் வழியில் முன்னேறிச் செல்வதற்கு தூண்டுகோலாக இருக்கட்டும் என்ற பவித்ர எண்ண ஓட்டத்துடன்
சாரத்தின் மேலே எறிக்கொண்டிருந்தேன்.
அப்போது
அந்த உயரத்தை மட்டுமே உன்னதமாக என்னால் உணரமுடிந்தது.
அவர் தலைக்குக்கு மேல் சென்றதும். அவரை குனிந்து பார்த்தேன். அடேயப்பா எவ்வளவு ஆழஉயரத்தில்
ஒரு உருவம் நிற்கிறது. அப்போதும் பிரமிப்பு, பிரம்மாண்டமே தோன்றியது.
அருகிலிருந்த
சாஸ்திரியார் எனக்கும், குடும்பத்தினருக்கும் கலசத்தை புனிதநீருடன் தந்தார். அவர் மந்திரங்களை
உச்சரிக்க ஒன்றாக அப்பேரழகுச்சிலைக்கு அபிஷேகம் செய்யும் பெகுபுண்ணியம் இம்முறையும்
கிட்டியதை நினைத்து மகிழ்ந்தேன்.
கிட்டாதது கிட்டிய பெருமிதம்.
கீழே
மக்கள் அவர்மீது விழுந்த நீரை தலைமேல் பெற்றுக் கொள்ள கூட்டமாய் ஆரவாரத்துடன் நின்றனர்.
அவர்களுக்கு பாப விமோசனம் கிட்டியது போன்ற உணர்வுடன் விலகினர்.
உச்சியிலிருந்து
பத்தடி யிறங்கி அடுத்த அவரது தோள் உயர தளத்திற்கு வந்தோம். அவருடைய பூலோகம் போன்ற உருண்டை
வடிவ தலைப்பகுதி. அதன் மேல் சுருள், சுருளான வட்டவடிவ தலைமுடிகள். காதுகள் இரண்டும்
மூன்றடிக்கு குறையாது தெரிகிறது. அதை தொட்டதும்
பகவானையே தொட்ட சிலிர்ப்பு, பின் பிடரியிலுள்ள சுருட்டை முடிகளை காட்டினார்,
வருடிவிட்டதில் அவரை கட்டித்தழுவிய மகிழ்ச்சி.
அடுத்தவர்
வந்தபின் அங்கு நிற்பதில் நியாமில்லை என்பதால்
அதற்கு கீழே அமைக்கப்பட்ட அடுத்த அடுக்கு மரத்தளத்திற்கு
சென்றோம். ஏறக்குறைய நெருக்க மாக ஐந்தாயிரம்பேர் வரை அமரலாம். படிப்படியான கட்டுமானம்.
அங்கிருந்து சில புகைப்படங்களை அரைவட்டத்திற்கு
சென்று எடுத்துக் கொண்டோம்.
அங்கேயே அமர்ந்து அந்த நெடிதுயர்ந்த சிலையை பார்த்துக் கொண்டே
இருந்தோம். அவரைப் பற்றிய வர்ணனைகளை தவிர வேறெதும்
அங்கிருந்தவர்களிடன் பேச்சுக்கள் தென்படவில்லை.
அவருடன்
சேர்ந்து நின்ற உணர்வுடன் புகைப்படக் “கிளீக்” எடுத்த வண்ணம் பலர் தென்பட்டனர். ஆட்டம் பாட்டம் பாடலாய்
எங்கும் இருந்தது.
சிற்பக்
கலையில் ஒப்பற்ற அறிஞனான 'பர்குசன்' என்பவர் எதிப்தைத் தவிர வேறெங்கும் சிறப்பும், பெருமையும் நிறைந்த இத்தகைய இடம் கிடைக்கவில்லை. எகிப்திலும் கூட இதைவிடப் பெரிய சிலை காணக்கிடைக்க
வில்லை என்று கூறியது நினைவில் வந்தது.
எங்ஙனம்
மனம் நிறைந்த மலரை வண்டுகள் விடுவதில்லையோ அங்ஙனமே நம் மனமும் கோமடேச்வர பகவானை விட்டு
ஏனைய பொருள்களை வருணிக்கச் செல்வதில்லை.
கோமதீச்வர
பகவானுடைய சிலைக்கு முன்னால் பற்பல அணிகலங்களால் நிறைந்து விளங்கும் ஆறு அடி உயரமுள்ள
கலைச் செல்வங்களான யக்ஷ- யக்ஷி (தேவதை) களின் கற்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
அவைகளின்
வலது கைகளில் பழங்கள் உள்ளன. இடது கைகளில் வட்டமான பாத்திரங்கள் உள்ளன. அப்பாத்திரங்களின்
பெயர் 'லலிதஸரோவரம்' என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இவைகளில்
பகவானுடைய அபிஷேக நீர் வந்து சேருகிறது. அதிக நீர் கால்வாயின் வழியாக சிலைக்கு எதிரில்
உள்ள கிணற்றில் போய் சேர்ந்து விடுகிறது. அங்கிருந்து அந்நீர் கோயிலின் மதிற்சுவருக்கு
வெளியேயுள்ள குல்லகாயஜ்ஜி பாகிலு என்ற பெயருள்ள குகையில் வந்தடைகிறது.
பின்னர்
நாங்கள் கீழ்தளத்திற்கு வந்து வந்தனை செய்துவிட்டு. அந்தச்சுற்றில் அமைந்துள்ள இருபத்துநால்வரையும் வணங்கிவிட்டு ஆலய
பிரகாரத்திற்கு வந்ததும் முகமண்டபத்திற்கு
முன் நின்றகோலத்திலுள்ள அம்பாள் குல்லிக் காயஜ்ஜி
யிடம் விடைபெற்று வெளியேறினோம்.
இந்த
யாத்திரை மட்டும் ஒவ்வொருமுறை செல்லும் போதும்
புது அனுபவமாகத்தான் அமைகிறது . அடுத்த முறை
எப்போது வருவோம் என்று பேசிக்கொண்டிருந்த போது ஏன் நாளைக்கே வரலாம். பஞ்சாமிர்த அபிஷேகத்தை காணவில்லையே என்று
கூறினர். அதனால் மறுநாளும் வர திட்ட மிட்டபடியே
மெதுவாக கீழிறங்கினோம்.
அடிவாரத்திற்கு வந்தபின்
தான் கெண்டைகால், கணுக்கால், பாத வலிகள்
தெரிந்தன. நாளை வரவேண்டுமே என்பதால் பிள்ளைகளிடன் சொல்லாமல் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.
01.07.18
ஞாயிறு
காலை
எழுந்து
குளித்துவிட்டு நண்பர், பவ்யர் விட்டில் கொடுத்த காபிநீருடன் அடிவாரம் வந்தோம். அருகிலுள்ள
சத்திரத்தில் அவல் உப்புமா உணவு, அருந்தி விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் விந்தியகிரி மலைப்பயணம்.
இன்று
லேசான வெயில் தொப்பிக்கும், காலுறைக்கும் வேலை
வந்து விட்டன. லேசான கால் வலியிருந்தாலும் தொடர்ந்தோம் பேரன், பிள்ளைகளுடன்.
இன்று
புதிதாக வெட்டிய படிகள் உள்ள பாதையில் பயணம். சற்று பெரிய இரும்புகுழாயால் அமைக்கப்பட்ட
கைப்பிடி கட்டமைப்பு. ஒரு கை தாங்கலுடன் ஒரே படியில் இரு கால்களையும் மாற்றி ஊன்றிபடியே முன்னேறினேன்.
மூன்று
வழிப்பாதையிலும் நெருக்கடியாக மக்கள் ஏறி, இறங்கியவண்ணம் இருந்தனர். இடையிடையே டோலி
தூக்கிகள், லேசான இடைஞ்சல் தான் இருப்பினும் முடியாத முதியவர்களும் பேரழகனை கண்டு தரிசனம்
செய்ய வேண்டுமே. சரி பொறுத்துக்கொள்வோம் என்று
எண்ணியபடி உச்சி நோக்கி சென்றோம்.
உலக
அதிசய மூர்த்தியான பகவான் கோமடேச்வரர் வீற்றிருக்கும் மலையை 'விந்தியகிரி' 'தொட்டபெட்டா' (பெரிய மலை) என்றும் இந்திரகிரி
என்றும் போற்றப்படுகிற இம்மலை 475 அடி உயரமுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3347 அடி
உயரத்தில் இருக்கிறது. மலையின் மீது செல்ல சுமார் 500 கற்படிகள் உள்ளன.
இம்மலையின்
சுற்றளவு கால்மைல் இருக்கலாம். மலையின் மீது செல்லும் நுழைவாயில் எடுப்பாகவும் , அழகாகவுமிருக்கிறது.
அங்கிருந்து பார்க்கும்போது மலை மிக்க இன்பகரமாக காட்சியளிக்கின்றது. மற்ற மலைகளைப்
போல் இம்மலை பார்க்க அருவருப்பாக இல்லை. இதன் வழவழப்பும் சரிவும் கொண்ட மலைத்தொடர்
உள்ளத்தில் மிகவும் கவரும் வண்ணம் உள்ளது.
இடையில்
காணும் நுழைவாயில் மண்டபத்தில் சிறிது நேர
ஒய்வு. பின்னர் மீண்டும் மலையேற்றம்.
சரியான
சமயத்தில் பகவான் ஆலய வளாகத்திற்குள் நுழைந்தோம். நல்ல நெரிசல். நடு வெட்டவெளி பிரார்த்தனைக்கூடத்தில்
அர்க்யம் கொடுக்க வசதியாக பலகைகள் வைக்கப்பட்டிருந்து. அவற்றிற்கு பின்னர் நடுவே அமர இடம் கிடைத்தது. பஞ்ச அமிர்த அபிஷேகம் துவங்க, அனைவரும் ஜெய, ஜெய கோஷம் போடஆரம்பித்தனர்.
முதலில்
பால், வெண்மை நிறத்தில் தலையிலிருந்து பாதம் வரை
அருவி போல் வழிந்தோடியது.
அடுத்து
சந்தன மஞ்சள் நிறத்தில் பொடி கலந்த நீர் அபிஷேகம்,
அதனைத்தொடர்ந்து கரும்புச்சாற்றுடன் வண்ணப்பொடி
கலந்த கரும் பழுப்பு நிறத்தில் வழிந்தது இவை
அனைத்தும் சங்கமம்.
பின்னர்
மஞ்சளுடன் சில சுண்ணப்பொடிகள் கலந்து வெளிர்
மஞ்சளாக வழிந்தோடியது. இது முன்பிருந்த வண்ணத்துடன் வானவில் தோற்றத்தில் காட்சியளித்தது.
கடைசியாக
ஜலாபிஷேகம் சாந்திதாராவுடன் பஞ்சாமிர்த அபிஷேகம் நிறைவுற்றது.
பின்னர் மற்றொரு நபர் அபிஷேகத் தொகையை செலுத்தியதால், மீண்டும்
பஞ்ச அமிர்த அபிஷேகத்தை தொடர்ந்தார். இவ்வாறாக ஜலமும், அமிர்தமுமாக வண்ணத்தில் அப்பிரம்மாண்டசிலை
மாறி மாறி பரிமளித்தது.
அனைத்தும்
காணக் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆயிரம்
காமிராக்களின் கண்களைத் திறந்து கொண்டே இருந்தன. அனைத்திலும் பகவானின் பல வண்ணச்சிலை
உருவம் அழகழகான கோலத்தில் நுழைந்து கொண்டன.
எனது
காமிராவையும் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு பக்தி
பரவசத்துடன் எதிர்பட்ட பக்தர்களுக்கிடையே மெள்ள நகர்ந்து வெளியேறினோம்.
வெளியே
வந்த பின் பாப விமோசனம் அடைந்தது போன்றிருந்தது.
பகவான்
பாகுபலிக்கு ஜே! பகவான் பாகுபலிக்கு ஜே!
என்று
எதிர்ப்பட்ட கூட்டதினருக்கிடையே கீழிறங்கி வர பயணப்பட்டோம்.
தரையில் இறங்கியதும் காலணிகளை பாதுகாக்குமிடத்தில் பெற்றுக் கொண்டவுடன் திவ்யதரிசன திருப்தியுடன் சென்னையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் புண்ணியம்கிட்ட வகை செய்த சரவணபெலிகுளா மடத்தலைவர் மற்றும் அனைத்து
நிர்வாகிகள், பணியாளர்கள் விழாக்குழிவினர் அனைவருக்கும் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி சொல்லி வாழ்த்துவோம்.
செல்லும்
பவ்வியர் அனைவருக்கும் நற்கதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனான பேரழகன் பாகுபலிநாதரை பிரார்த்திப்போமாக…
பத்மராஜ்
ராமசாமி.
-----------------------------------------------
அச்சிலையின் அளவுகள் பற்றி கிடைத்த தகவல்;
கி.பி.
1871-ல் நடைபெற்ற மாபெரும் முடி பூஜையின் போது சில அரசாங்க ஊழியர்கள் சிலையின் எல்லா
அவயங்களையும் அளந்தெடுத்தனர்.
அவைகளாவன:-
அடி.
அங்
கால்
முதல் காது வரை -- 50
காதின்
அடிப் பாகம் முதல்
தலை
வரை --
6.6
கால்களின்
நீளம்
---- 9
இடுப்பின்
அகலம்,
(சுற்றளவு) -----
10.
இடுப்பு
முதல் காது வரை -- 17.3
கை
முதல் காது வரை ------ 7.
கால்களின்
முன் அகலம் --- 4.6
கால்
விரல் ----- 2.
-
காலின்
பின்புற மேல் அளவு. -- 6.4
முழங்காலின்
பாதி மேல்அளவு - 10. -
புட்டத்திலிருந்து
காது வரை --- 20.6
பின்புறத்தில்
இருந்து காது
வரை
--- 20.
-
தொப்புளின்
கீழ் வயிற்றின் அகலம்,
(சுற்றளவு) ---- 13.
–
மார்பின்
அகலம்,
(சுற்றளவு) ---- 6. --
கழுத்தில்
இருந்து காது வரை -- 2.6
ஆள்காட்டி
விரல் அளவு -- 3.6
2வது
விரல் அளவு ---- 5.3
3வது
விரல் அளவு --- 4.7
சுண்டு
விரல்
அளவு---2.8
சிலையின்
முழு
அளவு---57 feet
சிரவண
பெளிகுளம் பற்றி அறிவோம்
Friends collections
அருமையாக எடுத்தியம்பியுள்ளீர்கள்.தாங்கள் எழுதியதை படித்தபின் அங்கு செல்லும் ஆவல் அதிகரித்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ReplyDeletewelcome sir
Deleteஅருமையான பயணகட்டுரை அங்கிள்...நேரிலே சென்று பார்த்த அனுபவம் தருகிறது...Almost like an virtual tour..Thanks.
ReplyDeletethanks
Delete