சமணமும் தமிழும்
Part - 2
பின்னிணைப்பு
1. ஆறுவகையான உயிர்கள்
சமண சமயத்தில் உயிர்களின் வகை ஆறு வகையாகக் கூறப்படுவது போலவே, தொல்காப்பியரும் ஆறுவகையான உயிர்களைக் கூறுகிறார். தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலில், தொல்காப்பியர் ஓதிய சூத்திரங்களும் அவற்றிற்கு இளம்பூரணர் என்னும் சமணசமய உரையாசிரியர் எழுதிய உரையும் கீழே தரப்படுகின்றன.
‘‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
என்னுதலிற்றோ வெனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று.
ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினாலும் வாயினாலும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினாலும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினாலும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தினானும் அறிவது; இவ்வகையினான் உயிர் ஆறுவகையினானாயின.
இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினால் கைப்பு காழ்ப்பு துவர்ப்பு உவர்ப்பு புளிப்பு மதுரம் என்பன அறியும். மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை செம்மை பொன்மை பசுமை கருமை நெடுமை குறுமை பருமை நேர்மை வட்டம் கோணம் சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும். மனத்தினா லறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும், இஃது எத்தன்மை எனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்.
இவ்வகையினான் உலகிலுள்ள வெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி, அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும்,
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
ஓரறிவுயிராமாறு புல்லும்மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக் கிளைப்பிறப்புப் பிறவும் உள என்றவாறு.
பிறவாவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன.
நந்து முரளு மீரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.
ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று.
ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு.
நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க.
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.
மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
சிதலும் எறும்பும் மூவறிவின. அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு. பிறவாவன அட்டை முதலாயின.
நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பினப்பே.
நாலறியுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று
நண்டுந் தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள வென்றவாறு.
பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க.
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.
ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய. அக்கிளைப் பிறப்பும் பிறவும் உள என்றவாறு.
பிறவாவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.
மக்க டாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.
ஆறறிவுயிர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர்; அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு.
‘‘பிறவாவது தேவர் அசுரர் இயக்கர் முதலாயினார்.’’
சமணர் கூறுவது போன்று தொல்காப்பியரும் ஆறுவகை உயிர்களைக் கூறுகிறபடியினாலே தொல்காப்பியர் சமணர் என்று கருதப்படுகிறார்.
--------------------------
2. வடக்கிருத்தல்
வடக்கிருத்தல் அல்லது ஸல்லேகனை என்பது சமண சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர்விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமய நூல் இவ்வாறு கூறுகிறது.
இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.
அஃதாவது, பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுவதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவுகொள்ளாமல் இருக்க வேண்டும். வேண்டுமானால் நீர்மட்டும் உட்கொள்ளலாம். சல்லேகனை இருக்கும்போது எதையும் மனத்தில் நினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரைத் தியானித்துக்கொண்டிருக்க வேண்டும். அடுத்த பிறவியில் அரசனாகவே அல்லது பெருஞ் செல்வனாகவோ அல்லது தேவலோகத்திலே தெய்வப் பிறவியாகவோ பிறக்க வேண்டும் என்று விரும்புவது கூடாது. அன்றியும், சல்லேகனையால் உடம்புக்கு வருத்தம் உண்டாகும்போது விரைவில் உயிர் நீங்க வேண்டும் என்று கருதவும் கூடாது. இவ்வாறு தூய எண்ணத் தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு சல்லேகனை இருக்கவேண்டும்.
சல்லேகனை செய்வது தற்கொலை செய்வதற்கொப்பாகும் என்று பௌத்தக் காவியமாகிய குண்டலகேசி கூறுகிறது. இது தற்கொலையாகாது என்று விடையிறுக்கிறது நீலகேசி என்னும் சமணசமய நூல். நீலகேசி கூறுவது வருமாறு:
‘அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலாம்
ஒழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ
வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேல்
பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ?241
இதற்கு உரை எழுதிய சமணதிவாகர வாமனமுனிவர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார்:
‘‘சல்லேகனையாவது - மரண காலத்துச் சாகின்றோமென்று சங்கிலேசம் (வருத்தம்) சரீராதியில் சங்கமெல்லா மொழியல் வேண்டுமென்று சொல்லித் சித்த சமாதானம் பண்ணுவித்துக் கலக்க நீக்கி, பரலோக சமண பாதேய (கட்டமுது) மாகிய பஞ்ச நமஸ்கார பரம மந்திரோபதேசம் பண்ணி ரத்தினத் திரய ரூபமாகிய சன்மார்க்கங் கலங்காமை, தர்மோபதேசனாதிகளாற் கட்டுதல்.
‘‘எல்லாப் படியும் விலக்கப் படாது, எரியால்
இல்லம் அழியில் அதனகத்தில் - நல்ல
பொருள்கொண்டு போவான்போற் சாம்போது பற்றற்று
அருள்கொண்டு போத லறம்.
என்பவற்றானும் சல்லேகனையாமாறறிந்து சொல்லிக் கொள்க.’’
பத்திரபாகு முதலான சமணசமயப் பெரியார்கள் பலர் சல்லேகனையிருந்து உயிர் நீத்த செய்தி மைசூர் நாட்டில் சிரவண பௌகொள என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்களினால் தெரிகிறது. சமணசமயத் துறவியாராகிய கவுந்தி அடிகள் என்னும் மூதாட்டியார் சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. கோவலன் கொலையுண்டதும், பாண்டியனும் கோப்பெருந் தேவியும் உயிர்நீத்ததும், அரண்மனை எரியுண்டதும், மாதரி என்னும் மூதாட்டி அடைக்கலமிழந்த துயரந் தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர்விட்டது ஆகிய துயரச் செய்திகளை யெல்லாம் கவுந்தியடிகள் அறிகிறார். அறிந்து ஆற்றொணாத் துயர் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண்டென்று கருதுகிறார். மாசற்ற தூய மனம் படைத்த அம் மூதாட்டியாருக்குத் தீராத் துயரம் உண்டாகிறது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார். இதனை,
‘‘தவந்தருபு சிறப்பிற் கவுந்தி சீற்ற
நிவந்தோங்கு செங்கோ னீணில வேந்தன்
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை யுறுத்த தோவென
உண்ணா நோன்பொ டுயர்பதிப் பெயர்ந்ததும்.’’
என்று சிலப்பதிகாரம் (நீர்ப்படைக் காதை) கூறுகிறது.
சல்லேகனை என்பது தமிழில் வடக்கிருத்தல் என்று கூறப்பட்டது. வடக்கிருத்தல் என்னும் பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்வோம். சமணர் சல்லேகனை இருக்கும்போது வடக்கு நோக்கி அமர்வது வழக்கம். வடக்குப் புண்ணியத் திசை என்பது அவர்கள் கொள்கை. ஏனென்றால் சமணசமயப் பெரியார்களாகிய தீர்த்தங்கரர்கள் யாவரும்வடக்கே வீடுபேறடைந்தனர்.முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபர் கயிலாயமலையில் வீடுபேறடைந்தார். நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் வட இந்தியாவில் கிர்நார் என்னும் நகரில் வீடுபேறடைந்தார். மற்ற எல்லாத் தீர்த்தங்கரர்களும் வட இந்தியாவில் வீடுபேறடைந்தார். ஆகவே, வடக்குத் திசையைப் புண்ணியத் திசையாகக் கொண்டு வடக்கு நோக்கியிருந்து சல்லேகனை செய்தனர். ஆகவே, வடக்கு அமர்ந்து நோற்கப்படுவதனால், சல்லேகனைக்கு வடக்கிருத்தல் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
சங்ககாலத்தில் இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் பரவியிருந்தது. சமண சமயத்தவர் மட்டுமின்றி, அச் சமயத்தவர் அல்லாதவர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி சங்க நூல்களில் கூறப்படுகிறது.
சேரமான் பெருஞ்சேரலாதனும் சோழன் கரிகாற் பெரு வளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் செய்தனர். அப்போரில் சேரமான் பெருஞ் சேரலாதன் முதுகில் புறப்புண் ஏற்பட்டது. புறப்புண் என்பது முதுகுப்புறத்தில் புண்படுதல். வீரர்கள், போரிடும்போது தமது மார்பில் புண்பட்டால் அதைப் பெருமையாகக் கருதுவார்கள். முதுகில் புண்பட்டால் அதை அவமானமாகக் கருதுவார்கள். தற்செயலாகப் போரிலே புறப்பண் ஏற்பட்டது பெருஞ்சேரலாதனுக்கு. அதனால் பெருங்கவலை யடைந்தான்; தீராத்துயரம் ஏற்பட்டது. ஆகவே, அவன் உண்ணா விரதம் இருந்து (வடக்கிருந்து) உயிர்விட்டான். இச்செய்தியைப் புறநானூறு 65,66 ஆம் செய்யுள்களாலும் அவற்றின் உரையாலும் அறியலாம்.
உறையூரை அரசாண்ட கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் அரசுரிமைக்காகக் கலகஞ்செய்ததைக் கண்டு சினங்கொண்டு அவர்கள்மேல் போர் செய்யச் சென்றான். அப்போது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர், அறிவில்லாத மக்கள்மேல் தந்தை போர்செய்வது தவறு என்று கூறித் தடுத்துவிட்டார். ஆனால், சோழன் தன் மக்களின் செயலுக்காக வருந்தி வடக்கிருந்து (உண்ணாவிரதம் இருந்து) உயிர்விட்டான். சோழனுடைய நண்பர் பிசிர் ஆந்தையார் என்னும் புலவர் தம் நண்பராகிய சோழன் உயிர்விடுவதைக் கண்டு மனம் பொறாமல் தாமும் அவர் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார். சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் இச்செய்தியறிந்து மனம் வருந்தித் தாமும் வடக்கிருந்து உயிர்விட்டார். இச்செய்திகளைப் புறநானூறு 212 முதல் 223 வரையில் உள்ள செய்யுள்களால் அறியலாம்.
சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலேயும் வடக்கிருத்தல் கூறப்படுகிறது.
வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயின்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார் - மெலிவொழிய
இன்னவரால் என்னாராய் தந்த ஒருதுற்று
மன்னவராச் செய்யும் மதித்து.
இச்செய்யுள், இன்னின்னாருக்கு உணவுகொடுத்தவர் மறுபிறப்பில் மன்னராகப் பிறப்பார்கள் என்று கூறுகிறது. இதில் வடக்கிருத்தல் கூறப்படுவது காண்க. பழைய உரைக் குறிப்பு, ‘‘வடக்கிருந்தார் - பழிபட்டு உண்ணாது வடக்கிருந்தார்’’ என்று கூறுகிறது.
சங்கப் புலவராகிய கபிலர் என்பவரும் தமது நண்பராகிய பாரிவள்ளல் இறந்த பிறகு பட்டினிகிடந்து (வடக்கிருந்து) உயிர்விட்டார் என்று அறிகிறோம்.
இதனால், சங்ககாலத்திலே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல் சமணர்களிடத்தில் மட்டும் அல்லாமல் மற்றவர் இடத்திலும் பரவியிருந்ததை அறிகிறோம். இதனால் கடைச்சங்ககாலத்திலேயே சமணர் செல்வாக்குச் சிறந்திருந்தது என்பது அறியப்படுகிறது.
______________________________________________________________________________
241. மொக்கலவாதச் சருக்கம், 55ஆம் செய்யுள்.
---------------------------------
3. சமணசமயத்தில் மகளிர்நிலை
பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமணசமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமணமதத் துணிபு ஆகும். அவர்களுள், சுவேதாம்பர சமணர் பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவுபூண்டு மனத்தை அடக்கி உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாத படியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவுபூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர். ஆனால், திகம்பரச் சமணர் பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவுபூண்டு நோற்றால்தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர்.
ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமணசமயக் கொள்கை.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் இருந்தவரும் இப்போது இருப்பவரும் திகம்பரச் சமணர் ஆவர். ஆகவே, திகம்பரச் சமணரால் இயற்றப்பட்ட சமணசமயத் தமிழ் நூல்களிலும் பெண்மக்களுக்கு மோட்சம் இல்லை என்று எழுதி வைத்தனர். பெண்கள் மோட்சம் அடைய விரும்பினால், முதலில் அவர்கள் ஆணாகப் பிறக்கவேண்டும்; ஆணாகப் பிறந்தாலும் துறவுபூண்டு கடுமையாக நோன்பிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் அடையமுடியும் என்பது சமணசமயக் கொள்கை.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் முதல் சூத்திரம்.
‘‘எழுத்தெனப் படுப
என்று கூறுகிறது. இதற்கு உரையெழுதிய சமணராகிய இளம்பூரண அடிகள், திகம்பர சமணசமயத்தவர் ஆகலின், இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: ‘‘அகரம் தானும் இயங்கித் தனி மெய்களை இயக்குதற் சிறப்பான், முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது.’’
இவ்வாறு, ஆண்பாலார்க்கன்றிப் பெண்பாலர்க்கு வீடுபேறு கிடையாது என்னும் தமது சமயக் கொள்கையை இலக்கண நூலிலும் வற்புறத்துகிறார் இளம்பூரண அடிகள்.
‘‘இந்திரன் தேவிமார்க்கும் இறைமைசெய்
முறைமை இல்லை
பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரியநீரார்.’’
என்று கூறுகிறது, மேருமந்தர புராணம் (738 ஆம் செய்யுள்.)
‘‘அண்ணை242 அலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருளர்? எல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.’’
என்று கூறுகிறது சூளாமணிக்காவியம். (துறவு: 145 ஆம் செய்யுள்.)
‘‘விதியினால் கதிகள் நான்கில் மேவிநின் றார்கள் தம்முள்
மதியினால் பெரிய நீரார் மக்களாய் வந்து தோன்றி
விதியினால் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைக்
கதிகளைக் கடந்துசெல்வார். காரிகை யார்கள் செல்லார்.’’
என்பது மேருமந்தர புராணம். பெண்ணாகப் பிறந்தவர், இந்தப் பிறப்பிலே அவர்களுக்குக் கூறப்பட்ட முறைப்படி நடந்தால், மறுபிறப்பிலே தெய்வலோகத்திலே (ஆண்) தேவராகப் பிறந்து இன்பம் துய்த்துப் பிறகு மீண்டும் மண்ணுலகத்திலே மனிதப் பிறப்பிலே ஆண்மகனாகப் பிறப்பார்கள் என்றும் அந்த ஆண்பிறப்பிலே துறவுபூண்டு தவம் செய்வார்களாயின் வீடுபேறு அடைவார்கள் என்றும் மேருமந்தர புராணம் கூறுகின்றது.
‘‘விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து
அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்பு செய்து
கருதிநற் கணவற் பேணும் கற்புடை மகளிர் இந்த
உருவத்தின் நீங்கிக் கற்பத் துத்தம தேவர் ஆவார்.’’
‘‘மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி
ஏதமொன் றின்றி வீடும் எய்துவர் தைய லார்கள்.’’
இதே, கருத்தைச் சீவகசிந்தாமணியும் கூறுகிறது. சீவகன் துறவுபூண்டபோது அவனுடன் துறவுபூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்காகத் தவம் செய்யவில்லை. பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர். அந்தத் தவத்தின் பயனாக அவர்கள் மறுபிறப்பிலே தேவலோகத்தில் இந்திரர்களாக (ஆண்பிறவியாகப்) பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.
அச் செய்யுள் இது:
‘‘ஆசை யார்வமோ டைய மின்றியே
ஓசை போய்உல குண்ண நோற்றபின்
ஏசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்.’’
_______________________________________________________________________________
242. அண்ணை – பேடி
---------------------------
4. சில புராணக்கதைகள்
சில புராணக் கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கிவந்தன என்பது ஆராய்ச்சியினால் அறியப் படுகின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்வோம்.
ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி என்னும் சைவசமய நூலினாலும் அதன் பழைய உரையினாலும் சில செய்திகள் அறியப்படும். இந்தப்பரணி நூலில், கோயில் பாடியது, 70 ஆவது தாழிசையில் இச் செய்தி கூறப்படுகிறது.
‘‘மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்த துசிலா வருடஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற்
கிவரிற் பிறர்யா வர்நிசா சரரே.’’
இதற்கு, பெயர் அறியப்படாத பழைய உரையாசிரியர் கூறுவதாவது: ‘‘யானைமலை நாகமலை யென இரண்டு மலை உளவென அவையிற்றைக் காட்டி. ‘பண்டு இவை அமணர் மந்திரவாத வலிகாட்டின மலைகள். மதுரையை ஒரு மலை யானையா யழிக்கவும் அவ்வியானை மதுரையில் வருவதன்முன் இந்த மலை மகாநாகமாய் அந்த யானையை விழுங்கவுங் காட்டி உயிர் பெறுத்தி நடத்திவர, என் சுவாமி (பாண்டியன்) சாதுவாதலிற் பயப்பட்டு இம்மகர நகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமுமுண்டு. உறையூரில் கல் வருஷமும் (வருஷம் - மழை)மண் வருஷமும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்) அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளி யாய்த்து’ என்றவாறு.
இதில் சமணர் செய்ததாக மூன்று செய்திகள் கூறப்படுகின்றன. 1. மதுரைக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றை ஆனையாகவும் இன்னொன்றை மலைப் பாம்பாகவும் அமையச் செய்து அவற்றிற்கு உயிர் கொடுத்து யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் செய்து பாண்டியனுக்குச் சமணர் காட்டினர். 2. ஏழுகடல்களையும் ஓர் இடத்தில் வரும்படி செய்து அதனைப் பாண்டியனுக்குக் காட்டினர். 3. உறையூரில் கல்மழை மண்மழை பெய்யச் செய்து சமணர் அவ்வூரை அழித்தனர்.
இவற்றை ஆராய்வோம்: பண்டைக் காலத்திலே, மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டு மலைகளிற் சமண முனிவர் எண்ணிறந்தோர் தவஞ்செய்திருந்தனர் என்பது சைவ சமய நூல்களினாலும், சமணசமய நூல்களினாலும் இந்த மலைகளில் உள்ள குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளாலும் பிற சான்றுகளாலும் தெரியவருகிறது. இந்த எட்டுமலைகளில் யானைமலை நாகமலை என்பவையும் சேர்ந்தவை. யானை தன் முன்னங்கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று காணப்படுவதாலும், பாம்புபோன்று காணப்படுவதாலும் இந்த மலைகளுக்கு முறையே யானை மலை, நாகமலை எனப் பெயர் அமைந்தனபோலும். இந்த மலைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் தங்கித் தவஞ்செய்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளை இந்நூல் 10 ஆம் அதிகாரத்தில் கூறினோம். இந்த மலைகள் நாகமும் யானையும் போன்று காணப்படுவதாலும் இம்மலைகளில் சமண முனிவர் இருந்தமையாலும் இந்துக்கள், சமணர் மேல் பழிசுமத்தும் நோக்கத்துடன், பாம்பு யானையை விழுங்குவதுபோன்று சமணர் மந்திரசாலம் செய்தார்கள் என்று கதை கட்டினார்கள்போலும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில், ‘யானை மாமலையாதியாய இடங்களில்’ சமண முனிவர் இருந்தனர் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் பாம்பு யானையை விழுங்கும்படி சமணர் செய்து காட்டியதாகச் சொல்லப்படும் கதையைக் கூறவில்லை. அவர் காலத்தில் இந்தக் கதை வழங்கப்பட வில்லைபோலும். அக்காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால், ஞானசம்பந்தர் இச்செய்தியையுங் கூறியிருப்பாரன்றோ? எனவே, சம்பந்தர் காலத்தில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வழங்காத இக்கதை, ஒட்டக்கூத்தர் காலத்தில் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்) வழங்கிவந்ததாகத் தெரிகிறது. (இந்த மலைகளைப்பற்றிய ஏனைய செய்திகளைச் ‘சமணத் திருப்பதிகள்’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளோம்.)
இனி, சமணர் ஏழுகடல்களை அழைத்ததாகச் சொல்லப்படும் செய்தியை ஆராய்வோம். மதுரைக்கு அருகிலே மேட்டுப்பட்டி என்னும் கிராமத்துக்கு அருகில் சித்தர்மலை என்னும் ஒரு மலையுண்டு. கோடைக்கானல் ரோட்டு அம்மையநாயகனூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே பதின்மூன்று மைல் சென்றால் இக்கிராமத்தையடையலாம். மேட்டுப்பட்டியில் உள்ள இந்தச் சித்தர்மலையில் சமணமுனிவர் இருந்த குகைகளும் கற்பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் இன்றும் காணப்படுகின்றன. அன்றியும் இங்கு ஏழுகடல் எனப் பெயருடைய சுனையொன்று உண்டு243. பண்டைக்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தபடியாலும் ஏழுகடல் என்னும் சுனை இருப்பதாலும் ஏழுகடல்களையும் ஓரிடத்தில் வரவழைத்துப் பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று இக்கதையைக் கற்பித்திருக்கக்கூடும்.
உறையூரை அழித்த செய்தியை ஆராய்வோம். உறையூரில் தொன்றுதொட்டுச் சமணர் இருந்தவந்தனர். இவ்வூருக்கருகிலுள்ள திருச்சிராபள்ளி மலைக்குகைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. சிலவேளைகளில் வெள்ளப்பெருக்காலும் மண்காற்றினாலும் வேறு காரணங்களாலும் ஊர்கள் அழிந்துபோவது இயற்கை. (இவ்வாறு அழிவுண்ட ஊர்கள் சில இக்காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.) இந்த இயற்கைப் படி உறையூரும் மண்காற்றினால் அழிந்திருக்கக்கூடும். ஆனால், சமணர் மந்திரத்தினால் அழித்தார்கள் என்பது நம்பத்தக்கதன்று.
இவ்வாறெல்லாம் சமணர்மீது சுமத்தப்பட்ட இக்கற்பனைக் கதைகள் நாளடைவில் சமணருக்குப் பெருமையையும் மதிப்பையும் உண்டாக்கிற்றுப்போலும், சமணர் மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட தெய்வ சக்தியும் மந்திர சக்தியும் உள்ளவர் என்னும் எண்ணத்தைப் பாமர மக்களுக்கு இக்கதைகள் உண்டாக்கிவிட, அவர்கள் சமணரை நன்கு மதித்தனர் போலும். ஆகையால், சமணர் செய்ததாக முதலில் கற்பிக்கப்பட்ட இக்கதைகளை மாற்றிச் சிவபெருமான் தமது ஆற்றல் தோன்றச் செய்த திருவிளையாடல்கள் என்று கூறிப் பிற்காலத்தில் புராணங்களை எழுதிக்கொண்டார்கள் போலும்.
யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் சமணர் காட்டினார்கள் என்னும் கதையை இரண்டாகப் பகுத்து, மதுரையான திருவிளையாடல் என்றும், யானை எய்த திருவிளையாடல் என்றும் பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகின்றன. மதுரையை அழிக்கச் சமணர் பாம்பையுண்டாக்கி அனுப்பினர் என்றும் அதனைச் சிவன் அம்புவிட்டுக் கொல்ல அப்பாம்பு விஷத்தைக் கக்கிற்று என்றும், பிறகு சிவன் தமது சடையில் உள்ள மது வெள்ளத்தை விஷத்தின்மேல் தௌ¤த்து விஷத்தை மதுவாக்கினபடியால் அவ்வூருக்கு மதுரை எனப் பெயர் ஏற்பட்ட தென்றும் கதை கற்பித்தனர். அவ்வாறே, சமணர் யானையை யுண்டாக்கி மதுரையை அழிக்க ஏவினர் என்றும் சிவபிரான் அதை அம்பெய்து கொன்றார் என்றும் இன்னொரு கதையையும் கற்பித்துக் கொண்டனர்.
பாண்டியனை அச்சுறுத்தி வசப்படுத்தச் சமணர் ஏழுகடல்களை அழைத்துக் காட்டினார் என்று கூறப்பட்ட கதை, பிற்காலத்தில் சிவபெருமான் செய்ததாக மாற்றி அமைத்துக்கொண்டு, எழுகடலழைத்த திருவிளையாடல் என்று பெயர் கொடுத்தனர். இதில், பாண்டியன் மகளான தடாதகைப் பிராட்டியாரைச் சிவபெருமான் மணஞ்செய்த பிறகு தடாதகையின் தாயார் நீராடுதற்பொருட்டுச் சிவபிரான் தமது ஆற்றலினால் ஏழுகடல்களை மதுரைக்கு வரவழைத்துக்கொடுத்தார் என்று கதை கூறப்பட்டுள்ளது.
சைவர் கட்டிய கதையில் ஏழுகடல் என்பது, மேட்டுப்பட்டிக் கிராமத்தில் சித்தர்மலையிலுள்ள ஏழுகடல் என்னும் சுனையையன்று, சொக்கநாத சுவாமி கோயிலுக்கு முன்பாகப் பிற்காலத்தில் ஏழுகடல் அல்லது சப்தசாகரம் என்னும் பெயரால் அமைக்கப்பட்ட குளத்ததைக் குறிக்கிறது. ஏழுகடல் தீர்த்தம் என்றும் இது கூறப்படும். இக்குளம் சக ஆண்டு 1438 இல் (கி.பி. 1516 இல்) சாளுவ நரச நாயகன் நரசையன் என்பவரால் அமைக்கப்பட்ட தென்பது இந்தச் சப்தசாகரத் தீர்த்தங்கரையில் உள்ள சாசனத்தினால் தெரியவருகிறது.244
சமணர் உறையூரை அழித்ததாகக் கூறப்பட்ட கதையும் பிற்காலத்தில் மாற்றப்பட்டு, சிவபெருமான் சாபத்தினால் மண்மாரி பெய்து உறையூர் அழிக்கப்பட்டதாகப் புராணக கதை கற்பிக்கப்பட்டது. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணம், உறையூர் அழித்த சருக்கத்தில் காண்க.
இவ்வாறு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் காலத்தில் இல்லாத கதைகள், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் காலத்தில் சமணர் செய்ததாக வழங்கப்பட்டுப் பின்னர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் செய்ததாகத் திருத்தியமைக்கப்பட்டன என்பது இதனால் அறியப்படும்.
புராணக்கதைகள் எவ்வாறு புனையப்படுகின்றன என்பதற்கும் இக்கதைகள் காலத்துக்குத் காலம் எவ்வாறெல்லாம் மாறு படுகின்றன என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
_____________________________________________________________________________
243. An. Rep. Arch.Dept S. Circle 1910-1911. P.50-51
244.161 of 1937-38, S.I. Ep. Rep. 1937-38, P.104.
---------------------------------
5. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்
ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் கந்தி அல்லது கௌந்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை?
‘‘நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப.’’
என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு,
‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’
என்றும், திவாகர நிகண்டு,
‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’
என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற கௌந்தியடிகள், சமணசமயத்துப் பெண்பால் துறவியாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத்திருப்பதிகளுள் ஒன்றுமான சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள் உள்ள சிரவண பௌகொள என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களில் சில கந்தியார்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:- நாகமதி கந்தியார், சசிமதி நந்தியார், நவிலூர் சங்கம் ஆஜிகணத்தைச் சேர்ந்த ராஜ்ஞிமதி கந்தியார், அநந்தமதி கந்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ கந்தியார் முதலியன.
சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்படுகிறது:- ‘‘ரிஷிகள் (சமண முனிவர்) பி¬க்ஷக்குப் புக்க கிருஹத்து ஆர்யாங்கனையைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்கவென்றும், அவர்களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பி¬க்ஷ கொள்ளாது மீள்க வென்றும், ரிஷிகள் இருக்கும் பள்ளியுள் ஆர்யாங்கனைகள் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்கனைகள் இருக்கும் பள்ளியுள் ரிஷிகள் இருக்கப் பெறாரென்றும், ரிஷிகள் ரிஷிகள்பாற் றுறக்க, ஆர்யாங்கனைகள் ஆர்யாங்கனைகள்பாற்றுறக்க வென்றும் , அத்யயனமும் இவ்வாறே செய்கவென்றும் விதிக்கின்ற பரமாகம முடையார் அவ்வாறே இன்றுகாறும் அனுஷ்டிக்கின்றார்கள்.’’
(நீலகேசி: மொக்கல: 57. உரை.)
குரத்தி என்னும் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்கி வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற்பெயர் ஆகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், சாசனங்கள் முதலியவற்றில் குரத்தி என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது.
‘‘சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை
நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்.’’
என்பது கயாதர நிகண்டு.
ஸ்ரீ மிழலூர்க் குரத்தியார், சிறிவிசையக் குரத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், அரிட்டநேமிக் குரத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கூடற் குரத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.
வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டைத் தாலுகா விளாப்பாக்கத்தில் உள்ள நாகநாதேசுவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகள் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்வூரில் சமணப் பெண்பள்ளியை (மடத்தை) நிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது:-
ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது, படுவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரிநாட்டு விளாப்பாக்கத்துத் திருப்பான் மலை அரிஷ்டநேமி படாரர் மாணாக்கியார் பட்டினி குரத்தி அடிகடேன் கண்ட கினறு. இது இவ்வூர் இருபத்து நால்வரை இரக்ஷ¤ப்பதாகவும், இம் மனையும் கிணறும் பெண்பள்ளி யாவதாகவும், இத் தர்மங் கெடுத்தார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவத்திற்படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான் இலாடாச்சனேன¢245.
ஆர்யாங்கனைகள் என்றும் கௌந்திகள் என்றும் குரத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து வெள்ளிய ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் சமய நூலையும் இலக்கண இலக்கிய நூல்களையும் நன்கு பயின்று இருந்தனர். இவர்கள் பெற்றிருந்த கல்வியறிவின் சிறப்புக்குச் சிந்தா மணியின் இடைச் செருகல் பாட்டுக்களே சான்று பகரும்.
திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்களை யுடையது. இக் காவியத்தில் இப்போது 450 செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அதிகப்படியான செய்யுட்களைக் கந்தியார் என்னும் ஆருகத சமயத் துறவியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்துவிட்டார் என்பர். திருத்தக்க தேவருடைய திருவாக்குப் போன்றே கந்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது கந்தியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கந்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற விளங்குகிறதன்றோ? இத்தகைய கந்தியார்களும் குரத்தியார்களும், இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு ஆருகதக் கொள்கைகளையும் அறவுரைகளையும் புகட்டிவந்தனர்.
______________________________________________________________________________
245. S.I.I. Vol. Vii. No. 56
----------------------------------
6. ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது
புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப்பௌத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்து விட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன்பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக்கொண்டனர். சமண மதத்தை ‘இந்து’ மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம்.
விஷ்ணுபுராணத்தில் கீழ்கண்ட கதை கூறப்படுகிறது; அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாலை வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர், தம் உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை246 ஆற்றங்கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி நின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தை) ப் போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன்றவே தேவர், அசுரரைப் பொருதுவென்றனர்.
இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத்தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து ‘இந்து’ மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது. மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறுக்கிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற்றல் பெற்றனர். ஆற்றல்பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப்பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிப்பாகத்தைப் பெறாதபடியுந் தடுத்துவிட்டனர். தோல்வியடைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர்நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர்களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித்தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத்தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.
தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப்பட்டடுள்ளது; இதில் காணப்படும் சிறு மாறுதல்யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.
விஷ்ணு புராணம், மச்ச புராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூறாகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும புராணம் கூறுகின்றது.
அக்கினி புராணம் கூறுவதாவது: தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டுத் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால் சுத்தோதனருக்கு மாயாமோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பொத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப்புராணம் கூறுகின்றது.
காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (19 ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பவர் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொறாமையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாலிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அபிசாரயாகஞ் செய்து கணக்கற்ற பூதங்களையுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புரதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து. ‘நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ முப்புராதியரிடஞ் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியினின்றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய் என்று கட்டளையிட்டார்.
அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதியாருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியார் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்தரும் நாரதரும் திரிபுராதியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சிபுரத்திற்குச் சென்றபோது, ‘இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்புப் பருத்திமலையைப் போல நொய்மையாயிற்று.’ இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் நாரதரும் அவ்விடத்திற்குத் ‘திருப்பருத்திக்குன்றம்’247 எனப் பெயரிட்டனர் என்று இந்த மகாத்மியங் கூறுகின்றது.
பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷபர் என்னும் அவதாரங்களை எடுத்துப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது. பாத்ம தந்திரம் என்னும் வைணவ ஆகம நூல், திருமால் பாஞ்சராத்திரம் (வைணவம்), யோகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்கத சாத்திரம் (சமணம்) ஆகிய மதங்களை யுண்டாக்கினார் என்று கூறுகின்றது. மற்றொரு வைணவ ஆகமமாகிய அஹிர்புத்நிய சம்ஹிதை, பௌத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.
திருமால் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார்:
‘‘கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்க வாறும்
கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை
விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே.’’
இதற்குப் பன்னீராயிப்படி உரை வருமாறு:-
‘‘கள்ளவேடத்தை = வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய், புரம் = த்ரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்த பேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்.’’
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5 ஆம்பத்து, 7 ஆம் திருமொழி, 5 ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது:-
‘‘எய்தக் கூவுத லாவதே எனக்கு
எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே.’’
இதற்கு ஈடு 36 ஆயிரம்படி வியாக்யானம் வருமாறு:
“கைதவங்கள் செய்யும் = கிருத்திரிமங்களைச் செய்யும். அஃதாவது - புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்குநின்ற அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலுங் கிருத்திரிமத்தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவினாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாளப் பண்ணினபடி (வாள்மாளப் பண்ணினபடி = சவப்பிராயராகப் பண்ணினபடி, அஃதாவது கொன்றபடி.) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்கமாம்படி பண்ணிவைத்தான்.
சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலலே தேவாரம் முதலிய நூல்களும் கூறுகின்றன.
‘‘நேசன் நீலக் குடிஅர னேஎனா
நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.’’ (அப்பர் தேவாரம்)
கூர்ம்புராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தியாயத்தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர் அவுணர் என்பவர்களை மயக்கும்பொருட்டுப் பௌத்த சமண மதங்ளைப் போதித்தார்கள் என்று கூறுகிறது:
‘‘சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து,
கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே
ணியன்மேல் அன்பு
நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்
ஆக்கிநல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றி னானே.’’
‘‘ஆங்கண்மா ணாக்க ரோடு நாரத னணுகி யன்பிற்
கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல்
தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும்
வாங்குவில் அவுணர் நெஞ்சம் மருண்டிட மாயை செய்தான்.’’
இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது:
‘‘மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்
வரும் அம்பு யக்கண் இறைவன்
திறமொன்று புத்த னருகன் றயங்கு
சினனென்ன வங்கண் அடையா
அறமென்று வஞ்ச மதிநூல் மருட்டி
யறைகின்ற காலை யவுணர்
நிறமொன்று பூதி மணியோ டிலிங்க
நிலைவிட்டு அகன்ற னரரோ.’’
இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்றே.
இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகின்றன. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.
‘‘அப்பணி செஞ்சடை யாதிபு ராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.’’
என்பது திருமூலர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? ‘‘முப்புரமாவது மும்மல காரியம்’’ என்று திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையையும் கூறுகிறார்:
‘‘வானவர் தம்மைவலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவன்’’
என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?
முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்கறிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக் கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக) க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது. இதற்கு உதாரணங் காட்டி விளங்குவோம்.
மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் ‘‘யானைமாமலை யாதியாய இடங்களில்’’ சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். கி.பி. 770 இல் மாரன்காரி என்னும் வைணவர் - இவர் பாண்டியனுடைய அமைச்சர் -, யானைமலைக் குகையிலே நரசிங்கப் பெருமாளை அமைத்தார் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது248. சமணக் கோயில் களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலையாகிய யானைமலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். இதற்குச் சைவர்களும் உடன்பட்டிருந்ததோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக் கொண்டார்கள். அஃது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.
‘‘இங்கித நெடுங்கோ தண்டம்
இடங்கையில் எடுத்து நார
சிங்கவெங் கணைதொட் டாகந்
திருகமுன் னிடந்தாள் செல்ல
அங்குலி யிரண்டால் ஐயன்
செவியுற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ
மத்தகங் கிழிந்த தன்றே.’’
பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நரசிங்க அம்பு நாரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது:-
‘‘வம்புளாய் மலர்ந்த ஆரான்
வரவிடு மத்தக் குன்றில்
சிம்புளாய் வடிவங் கொண்ட
சேவகன் ஏவல் செய்த
அம்புளாய்த் தூணம் விள்ள
அன்றவ தரித்தவா போல்
செம்புளாய்க் கொடிய நார
சிங்கமாய் இருந்த தன்றே.’’
யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் நரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினர் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.
______________________________________________________________________________
246. நருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களிலும் சமண மதம் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆங்குக் கிடைக்கும் சிலாசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது.
247. இக் கதையில் திருப்பருத்திக் குன்றம் கூறப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக் கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்றத்திற்குச் சினகாஞ்சி என்றும் பெயர். காஞ்சியில் பண்டைக் காலத்திலிருந்த பௌத்த சமணக் கோயில்கள் பிற் காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டது போல, திருப் பருத்திக் குன்றத்துச் சமணக்கோயிலும் ‘இந்து’ கோயிலாக மாற்றப்பட்டு விடும் என்னும் நம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர் இவ்வாறு கதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், நற்காலமாகத் திருப்பருத்திக் குன்றம் இன்னும் சமணக் கோயிலாகவே இருந்து வருகின்றது.
248. Ep. Indi. Vol VIII P. 317.
-----------------------
7. சமணசமயப் புகழ்ப்பாக்கள்
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய்
எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து
பத்துறு காவதம் பகைபசி பிணிநீங்க
உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரை செலவினோய்
எள்ளனைத்து மிடமின்றி எழில்மாண்ட பொன்னெயிலின்
உள்ளிருந்த உன்னையே யுயிர்த்துணையென் றடைந்தோரை
வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றால் விழுமிதோ.
குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு
கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப்
பிணம்பிறங்கு பெருங்காட்டில் உறைகென்றல் பெருமையோ.
விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரைத்
தடத்தரைய காடுறைக வென்பதுநின் தகுதியோ.
எனவாங்கு,
எனைத்துணையை யாயினும் ஆகமற் றுன்கண்
தினைத்துணையும் தீயவை யின்மையிற் சேர்தும்
வினைத்தொகையை வீட்டுக வென்று. (1)
வஞ்சிப்பா
கொடிவாலன குருநிறத்தான குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமா னணையேறித்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்தியலால் செப்பியோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே. (2)
ஆசிரியத் தாழிசை
நீடற்க வினையென்று நெஞ்சி னுள்ளி
நிறைமலருஞ் சாந்தமொடு புகையும் நீவி
வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று
விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்
பகவன்றன் அடியிணையைப் பற்று நாமே. (3)
இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசீரிய
இணைக்குறட்டுறை
போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தீதுறு தீவினை இலரே. (4)
கலிவெண்பா
பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா
விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாளும் வேந்தரா வார். (5)
வெண்கலிப்பா
நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு
மாதுயரம் தீர்தல் எளிது. (6)
ஆசிரியப்பா
போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே. (7)
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே. (8)
நேரிசை யாசிரிப்பா
உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே. (9)
வண்ணம்
தாழி யோங்கும்மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழையாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினைவாரா. (10)
பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியார் அணைமேல் பணியா ஒருமூ வுலகும்
கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
அணியார் கமலத் தலரா சனனே அறவா ழியனே. (11)
ஆதிநாதர் பந்தம் நீக்குறில்
பாத மூலம் அந்த மில்குணத்
நீதியாய் நின் தெந்தை பாதமே
றோது நெஞ்சே. (12) சிந்தி நெஞ்சமே. (13)
திரித்து வெங்கயம் பாடு வண்டு பாண்செயும்
உரித்து நல்லறம் நீடு பிண்டி நீழலான்
விரித்த வேதியர்க் வீடு வேண்டு வார்க்கெலாம்
குரித்தென் உள்ளமே. (14) ஊடு போக்கும் உத்தமன் (15)
முரன்று சென்று வட்டின
நிரந்து பிண்டி நீழலுள்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கும் அண்ணலே. (16)
வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே. (17)
ஆதி யானற வாழியி னான் அலர்ச்
சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
காதி வென்றபி ரானவன் பாதமே
நீதி யால்நினை வாழிய நெஞ்சமே. (18)
பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க பீடம் அமர்ந்தவெங்
கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ணானடி சேர்மினே. (19)
போது விண்ட புண்ட ரீக
மாத ரோடு வைக வேண்டின்
ஆதி நாதர் ஆய்ந்த நூலின்
நீதி யோடு நின்மின் நீடு. (20)
ஒருதிரள் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்
ஈரறம் பயந்த நான்முக வண்ண
மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்,
நால்வகை யோனியுள் இருவினை கடிந்து
முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்,
நால்வகை யளவையும் இருவகைப் பண்பும்
ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்
ஈரடி பரவினர் என்ப
பேரா நன்னெறி பெறுகிற் போரே. (21)
எழுகூற்றிருக்கை
ஒருபொருட் கிருதுணி புரைத்தனை ஒருகால்
இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி
ஈரறம் பயந்த ஓரருள் ஆழியை,
இருமலர் நெடுங்கண் அரிவையர் தம்மொடு
மூவகை யுலகில் நால்வகைத் தேவரும்
மும்மையின் இறைஞ்சும் ஈரடி ஒருவனை
இருவினை பிரித்து மூவெயில் முருக்கி
நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ
நான்மறை யாள மும்மதிற் கிழவ
இருகுணம் ஒருமையில் தெரிவுறக் கிளந்த
இருசுடர் மருட்டும் முக்குடைச் செல்வ
நால்வகை வருணமும் ஐவகைக் குலனும்
ஆறறி மாந்தர்க் கறிவுற வகுத்தனை
ஐந்நிற நறுமலர் முன்னுற ரந்தி
நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண்
டிருகையுங் கூப்பி ஒருமையின் வணங்கி
அரசர் நெருக்குறூஉம் முரசுமுழங்கு முற்றத்து
இருநிதிப் பிறங்கலோ டிமையவர் சொரிதலின்
முருகயர் வுயிர்க்கும் மும்மலர் மாரியை
நால்வகை யனந்தமும் நயந்தனை தேவரின்
ஐவகை விழைவு மையற வெய்தினை
ஆறுபுரி நிலையும் தேறினர்க் கியம்பினை
எழுநயம் விரித்த திருமறு மார்பினை
அறுபொருள் அறைந்தனை ஐம்பதம் அருளினை
நான்குநின் முகமே மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் கவரி ஒன்றுநின் அசோகே
ஒரு தன்மையை இருதிறத்தினை
முக்குணத்தினை நால்வகையினை
ஐம்பதத்தினை அறுபிறவியை
ஏழகற்றிய மாதவத்தினை
அரிமருவிய மணியணையினை
வளர்கதிரொளி மண்டலத்திணை
அதனால்
மாகெழு நீழல் கேவலந் தோற்றிய
ஆதியங் குரிசில்நிற் பரவுதும்
தீதறு சிவகதி சேர்கயாம் எனவே. (22)
வஞ்சிப்பா
வினைத் திண்பகை விழச் செற்றவன்
வனப் பங்கய மலர்த் தாளிணை
நினைத் தன்பொடு தொழுதேத்தினர்
நாளும்,
மயலார் நாற்கதி மருவார்
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே. (23)
வஞ்சிப்பா
வானோர்தொழ வண்தாமரைத்
தேனார்மலர் மேல்வந்தருள்
ஆனாவருள் கூரறிவனைக்
கானார்
மலர்கொண் டேத்தி வணங்குநர்
பலர்புகழ் முத்திபெறுவர் விரைந்தே. (24)
தாளோங்கிய தண்பிண்டியின்
நாள்மலர்விரி தருநிழற்கீழ்ச்
சுடர்பொன்னெயில் நகர்நடுவண்
அரியணைமிசை யினிதமர்ந்தனை
அதனால்
பெருந்தகை அண்ணல்நிற் பரசுதும்
திருந்திய சிவகதி சேர்கயாம் எனவே. (25)
வெள்ளொத்தாழிசை
பாதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணிப்புனல்
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவோர்
தீதார் வினைகெடுப்பர் சென்று. (26)
வஞ்சிப்பா
அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டய மவைவெய்த
நனந்தலையுலகுட னவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தர துந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை நின்றியம்ப
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்து
அருள்நெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே. (27)
வஞ்சிப்பா
பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்
அதனால்
அறிவன தடியிணை பரவிப்
பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே. (28)
வெண்கலிப்பா
வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்க
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையால் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொன்முறையால்
மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீட்டொடுகட் டிவையுரைத்த
தொன்முறைசால் கழிகுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு. (29)
நிலைவெளி விருத்தம்>
ஏதங்கள் நீங்க எழிலினம் பிண்டிக்கீழ்ப் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் - புறாவே
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே. (30)
ஆசிரிய விருத்தம்
கங்கணக்கைப் பைந்தார்க் கனைகழற்காற்
கருவரைபோல் நீண்டமார்பிற் காமர்கோலம்
பொங்கிய சாமரை பொற்பவேந்திப்
புடைநின் றியக்கர்கள் போற்றிவீசச்
சி¢௨கஞ்சுமந் துயர்ந்தவா சனத்தின்மேற்
சிவகதிக்கு வேந்தாகித் தேவர்ஏத்த
அங்கம்பயந்த அறிவனாகிய அறப்படைமூன்
றாய்ந்தானடி யடைவா மன்றே. (31)
கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத
நாத வென்று நின்று தாழ
அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
நீதி யோதும் ஆதி யாய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்வர்
சோதி சேர்ந்த சித்தி தானே. (32)
ஆசிரிய விருத்தம்
சோதி மண்டலம் தோன்றுவ துளதேல்,
சொரியும் மாமலர் தூமழை யுளதேல்,
காதிவென்றதோர் காட்சியும் உளதேல்,
கவரி மாருதம் கால்வன உளவேல்,
பாத பங்கயம் சேர்நரும் உளரேல்,
பரம கீதமும் பாடுநர் உளரேல்,
ஆதி மாதவர் தாமரு குளரேல்,
அவரை யேதெரிந் தாட்படு மன்னே. (33)
முருகு விரிகமலம்
மருவு சினகரன்
திருவ டிகள்தொழுமின்
அருகு மலமகல. (34)
துங்கக் கனகச் சோதி வளாகத்
தங்கப் பெருநூல் ஆதியை யாளும்
செங்கட் சினவேள் சேவடி சேர்வார்
தங்கட் கமரும் தண்கடன் நாடே. (35)
வஞ்சிப்பா
மந்தாநில மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
என வாங்கு
இனிதி னொதுங்கிய விறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே. (36)
பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்திமையாற் செப்பினோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
விரிவுறு நாற்கதி வீடுநனி யௌ¤தே. (37)
கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியி ணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய் (38)
அருந்தவர்கட் காதியா யைய நீங்கி
ஒளவியந்தீர்ந் தவிரொளிசே ராக்கை யெய்தி
யிருந்திரட்டை யினமருப்பின் யானை யூர்தி
யீரைஞ்ஞூ றெழினொட்டத் திமையோ னேத்த
வொருங்குலகி னூற்கற்ற வோத முந்நீ
ரொளிவளர வறம்பகர்ந்த வுரவோன் பாதம்
கருங்கயற்கட் காரிகையார் காத னீக்கிக்
கைதொழுதாற் கையகலுங் கவ்வை தானே. (39)
அனவரத மமர ரரிவையரோ டணுகி யகனமரு முவகை
யதுவிதியி னவர வணிதிகழ வருவ ரொருபாற்
கனவரையொ டிகலு மகலமொளி கலவு கரகமல நிலவு
கனகமுடி கவினு கழலரசர் துழனி யொருபால்
தனவரத நளின சரணநனி பரவு தகவுடைய முனிக
டரணிதொழ வழுவி றருமநெறி மொழிவ ரொருபாற்
சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி
தெனிரு மொழி யளவு சிவபுரம தடைத றிடனே. (40)
இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தானையை
யிலங்கு மாழியின் விலக்கியோள்
முடங்கு வாலுளை மடங்கன் மீமிசை முனிந்து சென்றுடன்
முரண்ட ராசனை முருக்கியோள்
வடங்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தர
வளங்கொள் பூமழை மகிழ்ந்தகோன்
தடங்கொள் தாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்
தமக்கு வெந்துயர் தவிர்க்குமே. (41)
ஒருமன மாந்தர் மூவகை யுலகி
னிருமனம் பட்டு நாற்கதி யுழல்வோரே
இருமனம் பட்டு நாற்கதி யுழல்வோர்
ஒருமன மாகி மூன்றுதிரி விலரே
மூன்று திரிவறிந்து முதலொன் றறிந்தோர்
ஆன்ற நாற்கதி யிரண்டன் வரவிலரே
யான்ற நாற்கதி யிரண்டன் வரவுடையோர்
மேற்செயன் மூன்றி னொன்றுணர்ந் தோரே. (42)
பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியா ரணைமேற் பணியா வொரூமூ வுலகுங்
கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
வணியார் கமலத் தலரா சனனே யறவா ழியனே. (43)
திருகிய புரிகுழ லரிவைய ரவரொடு
திகழொளி யிமையவரும்
பெருகிய கரிகுல மருவிய படையொடு
பிரிதலி லரசவைய
முருகுடை மலரொடு வழிபட முனிகளை
நனியக லாவருகன
திருவடி முறைமுறை யடைபவ ரடைகுவ
ரமரொளி யமருலகே. (44)
நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல வெடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு
மாதுயரந் தீர்த லௌ¤து. (45)
பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா
விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைச்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாலும் வேந்தரா வார். (46)
வஞ்சிப்பா
பார்பரவிய பருவரைத்தாய்
கார்கவினிய கதழொளியாய்
நீர்மல்கிய நீண்மலரவாய்
திறமல்கிய தேனினமுமாய்,
அதனால்
மொய்ம்மலர் துவன்றிய தேம்பாய்
மலரடியிணையை வைத்தவா மனனே. (47)
முரன்று சென்று வட்டின
நிரந்த பிண்டி நீழலுள்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கு மண்ணலே. (48)
முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
வருசினநா தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவிளைபோய் விழமுறியா வெதிரியகா தியையெறியா
நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே. (49)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழசையுட் சிறந்ததுநா ளுஞ்செய
வெழுந்த சேதிசத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ. (50)
வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே. (51)
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
நலங்கிளர் திருமணியு நன்பொன்னுங் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமா னெருத்தஞ்சே ரணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற
வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும்
தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.
தாழிசை
ஒல்லாத பிறப்புணர்ந்தும் ஒளிவட்டம் புடைசூழ
எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள்
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியவிழ
ஊர்களோ டுடன்முளைத்த ஒளிவட்டத் தமர்ந்தனையே;
கனல்வயிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக
இனமணி யாரமா இயன்றிருள் இரிந்தோட
அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே;
வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய குடைபுடைசூழ் திருந்துகழல் திளைத்தன்றே.
அம்போதரங்கம்
நாற்சீர் ஈரடி
மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீத்தக் கறப்புணை யாயினை
ஒருதுணி வழிய உயிர்க்கர ணாகி
இருதுணி யொருபொருட் கியல்வகை கூறினை.
நாற்சீர் ஓரடி
ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விருப்புறு தமனியம் விளக்கும் நின்நிறம்
ஒருத்தல் கூடுற வுஞற்றும் நின்புகழ்.
ழுச்சீரோரடி
இந்திரற்கும் இந்திரன்நீ; இணையில்லா இருக்கையைநீ;
மந்திரமொழியினைநீ; மாதவர்க்கு முதல்வனும்நீ;
அருமைசால் அறத்தினைநீ; ஆருயிரும் அளித்தனைநீ;
பெருமைசால் குணத்தினைநீ; பிறர்க்கறியாத் திறத்தினைநீ
இருசீர் ஓரடி
பரமன்நீ; பகவன்நீ; பண்பன்நீ; புண்ணியன்நீ;
உரவன்நீ; குரவன்நீ; யூழிநீ; உலகுநீ;
அருளும்நீ; அறமும்நீ; அன்பும்நீ; அணைவும்நீ;
பொருளும்நீ; பொருப்புநீ; பூமியும்நீ; புணையும்நீ;
எனவாங்கு,
சுரிதகம்
அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எங்கோன்
திருமிகு சிறப்பிற் பெருவரை யகலத்து
எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செருமுனை செருக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே. (52)
தலையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா
தரவு
அலைகடற் கதிர்முத்தம் மணிவயிர மவையணிந்து
மலையுறைமா சுமந்தேந்து மணியணைமேல் மகிழ்வெய்தி
யோசனைசூழ் திருநகருண் ணுலகொருமூன் றுடனேத்த
ஈசனையா மினிதமர்ந்தங் கிருடிகட்கு மிறைவற்கும்
அருளறமே யறமாக வயலார்கள் மயலாக
இருளறநன் கெடுத்தியம்பி யிருவினைகள் கடிந்திசினோய்.
தாழிசை
துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யுந் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கு நினைப்பினால்
இருளில்லா வுணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையா
யருளெல்லா மடைந்தெங்கண் ணருளுவதுன் னருளாமோ
மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி யடைந்தோரைக்
கதிர்பொருதக் கருவரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண்
மகிழ்ந்தனிர்போ
னின்மினீ ரெனவுரைத்தல் நிருமலநின் பெருமையோ
மனைதுறந்து வளம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
வினையறுக்க லுறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங்
கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ
வுலகெல்லா முடன்றுறவா வுடைமையுநின் னுயர்வாமோ.
அராகம்
அரைசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
முரைசதிர் இமிழிசை முரணிய மொழியினை.
பேரெண்
அணிகிளர் அவிர்மதி யழகெழில் அவிர்சுடர்
மணியொளி மலமறு கனலி நின்னிறம்
மழையது மலியொலி மலிகடல் அலையொலி
முறைமுறை யரியது முழக்கம் நின்மொழி.
இடையெண்
வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை
ஒருவனை யாகி யுலகுடன் உணர்ந்தனை.
சிற்றெண்
உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை
நிலவுறழ் நிறத்தினை, நிழலிய லியாக்கையை
மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை
போதிவர் பிண்டியை, புலவருட் புலவனை
எனவாங்கு,
சுரிதகம்
அருளுடை ஒருவநிற் பரவுதும் எங்கோன்
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிறங் கொடுத்த
நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்
கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே. (53)
இடையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா
தரவு
பிறப்பெண்ணும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை
அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி
இறப்பிலநின் அருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய்
மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்.
தாழிசை
அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப்
பொருளெல்லாம் நீவிளங்கப் புகரில்லா வகையினால்
இருளில்லா மனஞானம் இயம்பியதுன் இயலாமோ.
தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் லளவைகளால்
கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ.
துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகல
புணையில்லா உயிர்கட்குப் பொருளில்லா அருளினால்
இணையில்லா நல்லொழுக்க மிசைத்ததுநின் னிறைமையோ.
அராகம்
அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்
மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினை.
பேரெண்
பூமலர் துதைந்த பொழிலணி கொழுநிழல் தேமல ரசோகினை
தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.
இடையெண்
காமரு கதிர்மதி முகத்தினை
சாமரை யிடையிடை மகிழ்ந்தனை
தாமரை மலர்புரை யடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கினை.
சிற்றெண்
அறிவனைநீ. அதிசயன்ந.¦
யருளினைநீ. பொருளினைநீ.
உறுவனைநீ. உயர்ந்தனைநீ.
உலகினைநீ. அலகினைநீ.
எனவாங்கு,
சுரிதகம்
இணையை ஆதலின் முனைவருள் முனைவ
நினையுங் கால நின்னடி யடைதும்
ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து
துன்னிய தீவினைத் துகள்தீர்
முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே. (54)
கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்
உடைமையா யுலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து
மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ
அறவாழி வலனுயரி யருள்நெறியே அருளியோய்.
தாழிசை
வினையென்னும் வியன்பகையை வேரோடு முடன்கீழ்ந்து
முனையவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ.
பொருளாடல் புரியீரேல் புகர்தீரும் என அருளி
மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ.
வேந்தர்க்கும் முனைவர்க்கும் விலங்கிற்கும் மருள்துறவா
தோந்தீர்த் துறந்தநின் துறவரசுந் துறவாமோ.
அராகம்
முழுவதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள்
தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை
பேரெண்
நிழல்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்
எழில்மதி இதுவென இகலும் நின்முகம்.
இடையெண்
கருவினை கடந்தோய்நீ.
காலனை யடர்ந்தோய்நீ.
ஒருவினையும் இல்லோய்நீ.
உயர்கதிக்கு முனைவன்நீ.
சிற்றெண்
அறவன்நீ. அமலன்நீ.
அருளும்நீ. பொருளும்நீ.
உறவுநீ. உயர்வுநீ.
உலகுநீ. அலகுநீ.
எனவாங்கு,
சுரிதகம்
அருளுடை ஒருவநின் அடியிணை பரவுதும்
இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்
பாடுதற் குரிய பல்புகழ்
வீடுபே றுலகம் கூடுக எனவே. (55)
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் றெரிந்தோங்கிச்
சரிவில்லா இன்பத்தால் சங்கரனும், முழுதுலகும்
தெரிந்தொன்றி யுணர்ந்தநின் திப்பியஞா னந்தன்னால்
விரிந்தெங்கும் சென்றமையால் விண்ணுமாய் மண்ணின்மிசை
தேர்வுற்ற வாரீட நான்மையினும் திரிவில்லாச்
சார்வுற்ற நன்மையினும் சதுமுகனாய் உயர்ந்தனையே.
தாழிசை
இருக்கையு நூனெறிய தியல்வகையுந் தன்னாலும்
வருந்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய்
தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால்
அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ.
ஏதிலா வுயிர்களை எவ்வகைக் கதியகத்தும்
காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன்
வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப்
பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ.
எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம்
செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்
கொலைத்திறத்தால் கூட்டுண்ணுங் கூற்றப்பே ரரசனு
அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமே
அராகம்
தாதுறு நனைசினை தழலெழில் சுழல்சுழற்
கைவகை முகைநகு தடமலர் அசோகினை
சீருறு கெழுதகு செழுமணி முழுதணி
செறியுளை விலங்கரை சணிபொனி னணையினை.
வாருறு கதிரெதிர் மரகத நிரை நிரை
வரிபுரி தௌ¤மதி வெருவரு குடையினை.
போருறு தகையன புயலுளர் வியலொளி
புதுமது நறவின புனைமலர் மழையினை.
பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு
பொலிமலி கலிவெலும் பொருவறும் எயிலினை
வெறிகிளர் உருவின விரைவினி னினிதெழ
வெறிவரு தெரிதக வினிதுளர் கவரியை.
விறலுணர் பிறவியை வெருவரு முறைதரு
வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை.
அறிவுள ரமரர்கள் அதிபதி யிதுவெனக்
கடலுடை யிடிபட வெறிவன விசையினை.
பேரெண்
மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோடு
இன்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே.
புன்மைசால் அறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே.
இடையெண்
பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ
வீடுடைய நெறிமையைநின் மேனியே விளக்காதோ
ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே யுரையாதோ
கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ.
சிற்றெண்
அறிவினால் அளவிலைநீ. அன்பினால் அசைவிலைநீ.
செறிவினால் சிறந்தனைநீ. செம்மையால் செழுங்கதிர்நீ.
காட்சியால் கடையிலைநீ. கணஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ.
மாட்சியால் மகிழ்வினைநீ. மணிவரைபோல் வடிவினைநீ.
அளவெண்
வலம்புரி கலந்தொருபால் வால்வளை ஞிமிர்ந்தொருபால்
நலந்தரு கொடியொருபால் நலம்புணர் குணமொருபால்
தீதறு திருவொருபால் திகழொளி மணியொருபால்
போதுறு மலரொருபால் புணர்கங்கை யாறொருபால்
ஆடியின் ஒளியொருபால் அழலெரி யதுவொருபால்
மூடிய முரசொருபால் முழங்குநீர்க் கடலொருபால்
பொழிலொடு கயமொருபால் பொருவறு களிறொருபால்
எழிலுடை ஏறொருபால் இணையரி மானொருபால்.
எனவாங்கு,
சுரிதகம்
இவைமுத லாகிய இலக்கணப் பொறிகிளர்
நவையில் காட்சி நல்லறத் தலைவநின்
தொல்குணந் தொடர்ந்துநின் றேத்துதும், பல்குணப்
பெருநெறி யருளியெம் பிறவியைத் தெறுவதோர்
வரம்மிகத் தருகுவை எனநனி
பரவுதும் பரமநின் அடியிணை பணிந்தே. (59)
------------------------
No comments:
Post a Comment