சூளாமணி.
முன்னுரை :
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று சூளாமணி. இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர் என்று அறியப்படுகிறது. இயற் பெயர் தெரியவில்லை.
சமணத் துறவியான இவர், திராவிட சங்க தேவர் கணத்தைச்
சேர்ந்தவர். 15 வது தீர்த்தங்கரர் தரும நாதரின் பக்தர்.
வாசுதேவனின் அவதாரம் என கருதப்படுகிற திவிட்டனின்
வரலாற்றை, உரைக்கும் நூல் சூளாமணி. நெடுஞ்சேத்தன்
என்னும் பாண்டியன் மன்னன்
அவையில் அறங்கேற்றப்பட்டது. 308 ஆம் பாடலில்
தோலா நாவிற சச்சுதன்
என்று குறிப்பிட்டுள்ளதால், தோலா மொழி
எனச் சிறப்புப் பெயர் பெற்றார் என்பர்
சிலர். இது 9 ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்டது. சீவக சிந்தாமணிக்குப் பின் எழுதப்பட்ட நூல்.
சூளாமணி, நூலாசிரியரால்
வழங்கப்பட்ட பெயராகத் தெரியவில்லை.
இதன் பெயர் யாரால்,
எப்போது, இடப்பட்டது என்றும்
தெரியவில்லை. சூளாமணி தன்மையால்
பெற்ற பெயர் என்பது
மயிலைநாதர் கூற்று. சூளாமணி
என்னும் பெயர் இக்காப்பியத்தில் நான்கு
இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், காப்பிய
உயிர் சொல்லாக இடம் பெற்று, காப்பியப்
பெயராக அமைந்தது என்பர்
சிலர். பழைய தமிழ் காப்பியங்கள் அணிகலங்களின்
பெயரில் அமைந்திருப்பது போல், காலணி சிலம்பு,
சிலப்பதிகாரம், இடையணி மேகலை,
மணிமேகலை, நெஞ்சணி சிந்தாமணி,
சீவக சிந்தாமணி, காதணி குண்டலம்,
குண்டலகேசி, கையணி வளையல்கள்,
வளையாபதி, போல், திருமுடியில்
அணியும் சூளாமணி, சூளாமணி
நூலானது என்றும் கூறுவர்.
சமய நூலான பிரதமாநுயோக மகா புராணத்தில், உள்ள பழைய கதை ஒன்றை அடிப்படையாகக்
கொண்டது இந்நூல் என்பாரும்
உண்டு. அறம், பொருள்,
இன்பம், வீடு என்று நாற்பொருளும் உரைக்கும்
நூல் சீவக சிந்தாமணியின் கவியழகையும்,
அதனினும் மேலான ஓசையழகையும்
இம்மூலநூலில் காணலாம். இந்நூலுக்கு
மேலும் ஒரு சிறப்பு,
வித்யாதரர் உலகையும், மண்ணுலகையும்
இணப்பது. எண்வகை சுவைக்கும்
அப்பாற்பட்டது பக்தி சுவை. இப்பக்தி சுவையூறும்
பாடல்கள், இக்காப்பியத்தில் விரைவியுள்ளது, புலவருடைய
அருகன் பக்தியை அறிய முடிகிறது. இக்காப்பியம்
12 சருக்கங்களையும், 2130 பாடல்களையும் கொண்டுள்ளது.
கவியழகையும், சந்த ஓசையையும், வருணனைகளையும் முழுதும்
ரசித்து சுவைக்க மூலநூலைப்
படிக்கவும். நம் சமண சொந்தங்கள், கதையைத்
தெரிந்து கொள்ள, முக்கியமானவைகளைத் தொகுத்து, 590 செய்யுள்களாக தந்துள்ளேன்.
பிடித்தால்
சுவையுங்கள். பிழையிருந்தால் அருளுங்கள்.
நன்றி. வணக்கம்.
நாளை
முதல் சூளாமணியை அணிந்து
கொள்வோமா……….
அன்புடன்
உங்கள்,
முட்டத்தூர். அ. பத்மராஜ்.
சூளாமணி.
பாயிரம்.
கடவுள் வாழ்த்து :
காதி அகாதி வினைகள் வென்று
கடையிலா ஞானத்தில் உயர்ந்து
மூவுலகம் முழுதும்
உணர்ந்து முழு ஞானம் பெற்று
ஒளிர்ந்து
திகழ்ந்திடும் சுடரொளி
சூழுந்து திவ்விய சுடரொளி
வட்டனாகி
அருகனின் அடிகளை வணங்கியோர்
இருள் சேர் இருவினை நீங்குவர் 1
நூல் நுதலி பொருள் :
சிரேயாம்ச தீர்த்தங்கரரின் செம்மையாம்
அருளாட்சியில்
செங்கண்களில் செருக்கொளிர
சிவந்த வாயின் பற்கள்
தெரியும்
ஆண் சிங்கம்
வாயைக் கிழித்து அவனியை
உய்யச் செய்து
திவிட்டனின் வரலாறினை யான் செப்புவேன் இந்நூலின் மூலம்
2
அவையடக்கம் :
ஐம்படைகள் தன்னகம்
கொண்ட அழகிய திருமாலை
ஒத்த
திவிட்டனின் பண்பினை
கூறும் தெள்ளிய நெஞ்சத்து
ஆசையில்
கூறிடும் இக்காவிய
பெருநூலில் குற்றங்கள் வருதல்
இயல்பே
சான்றோரே பேரறிவுடையோரே சிறியோனின் பிழை பொறுப்பீர்
3
நூலரங்கேற்றிய களனும்
கேட்போரும் :
எதிரிகள் நடுங்கும்
தோளும் எழில்மலர் மாலைகள்
மார்பும்
திருமாலின் அம்சம்
சேர்ந்து தெய்வத் தமிழுக்கு உடையோன்
நெடுஞ்சேந்தன் பாண்டியனவையில் நல்திறம்
புலவர்கள் இருக்க
சான்றோரும் கற்றோரும்
ஏற்ற சிறப்புதான் இப்பெரும்
நூலுக்கு 4
திரண்டிடும் இருளைப்
பிரிக்கும் திங்களின் கலங்கம்
இயல்பில்
திங்களின் செயலின்
மாண்பால் சிதைந்திடும் கலங்கம்
போல
கற்றுணர்ந்த சான்றோர்
முன்னே திவிட்டனின் மாண்பினை கூற
கருதிய என்னுடைய
குற்றத்தை குற்றமாய் ஏற்கார் என்றும் 5
நூல் வந்த வழி :
வித்யாதரர் வித்தைகள்
தலைவன் வீசும்மண மலர்மாலை
முடியன்
சுவலனடி அரசனின்
மகள் சொக்க வைக்கும்
சுயம்பிரபை
பஞ்சிக்கு வாடும்
பாதம் கொண்ட பசுங் கொல்லிப்பாவைக்கீடாய்
பிரதமானுயோக மகாபுராணம்
பகரும் வழியில் இந்நூல் செல்லும் 6
பாயிரம்
முற்றிற்று.
1. நாட்டுச் சருக்கம்.
சுரமை நாட்டின்
சிறப்பு :
வான்முகில்கள் தவழ்ந்து சூழ்ந்து
வளப்பத்தில் நவ மணிகள்
கொண்டு
வித்யாதரர்கள் உலகம் தொட்டு விழாக்கோலச்
சிறப்புப் பூண்டு
இரப்போர்கள் யாரும்
இன்றி எல்லோரும் பெரும்
செல்வராகி
சுகத்தினில் திளைக்கும்
நாடு சுரமை என்னும்
உயர்ந்த நாடு 7
கண்களும்
கயல்களும் :
செந்தாமரைகள் பூத்த பொய்கையில் செந்நிற
கயல்கள் கூட்டமும்
சுரமைநாட்டு சுந்தரிகள் முகம் சொக்கவைக்கும் செழுமை அழகும்
செவ்வரி படர்ந்த
விழிகளில் சிறு தூண்டிலில்
விழுந்த கயலாய்
எப்போதும் நீங்கா
நிலையில் நிலைப்பதும் சுரைமை
நாட்டில் தான் 8
வயல்களும் ஊர்களும்
:
கண்களில் பசுமை கட்டும் கவிழ்ந்த அழகு
மருத நிலங்கள்
மங்கையர் மெல்லிடை
அசைய மயக்கிடும் அன்ன நடையும்
மழலையின் மயக்கும்
சொல்லால் மலர்ந்திடும் பறவைகள்
ஒலியும்
சிற்றடி சிலம்பின்
ஒலிகள் சிரித்திடும் மருதத்தில்
எப்போதும் 9
பொழில்களிலும் வீடுகளிலும்
இன்னிசை :
வித விதமாய்
மலர்கள் பூத்து விழுமிய
நிழல் தரும் பொழிலில்
குயிலொடு தத்தைகள்
சேர்ந்து குழலென இனிதாய்
இசைக்க
தேன் மலர் அணிந்த கூந்தலில்
தேனுண்ட வண்டுகள் உறங்க
மெல்லிசையும் யாழொலியும்
மிதந்திடும் வீடுகள் தோறும் 10
வண்டுகளும் கொங்கைகளும்
:
குவளையும் நீலமலரும்
மலர கொட்டிடும் மதுவை உண்ண
வண்டுகள் கூட்டம்
அங்கு வாயிசை ஒலியினில்
சுற்றும்
குங்கும குழம்புடனே
கஸ்தூரி கோதையர் கொங்கையில் அமைய
நற்றவம் செய்யும்
துறவியையும் நலிவுற்று மனம் தளரச்
செய்யும் 11
சுரமை நாட்டின்
நானில வளம் :
மலைகொட்டும் அருவியின்
குறிஞ்சி மென்மலர் மரங்களின்
முல்லை
கண் கவ்வும்
பசுமை படர்ந்த கழனிகளின்
செழுமை மருதம்
கடல் அலை காதினில் இசைக்கும்
கருநீலம் தவழும் நெய்தல்
நால்வகை நிலங்கள்
கொண்ட நல்ல வளம் மிகுந்த சுரமை 12
குறிஞ்சி :
குன்றுதோர் ஆடும் குமரனை குறவர்கள்
ஆடித் தொழுவர்
தொழுதிடும் பாட்டின்
ஒலியும் சுனை வழியும் நீரின்
ஒலியும்
தென்றலின் தாக்கம் நிறைந்த சில்லென்ற
அருவிகள் ஓசையும்
வேங்கையை கொன்று
வீழ்த்திய வேழத்தின் பிளிறல் குறிஞ்சியில் 13
சிற்றிடை மங்கையர்
விரல்போல் செங்காந்தள் மலர்கள்
மலர
நீர் நின்ற சுனைகளிலெல்லாம் நீலோற்ப
பூக்கள் பூத்து குலுங்க
வான்னுயர் வேங்கை
மரங்களில் வண்டு சூழ் பூக்கள் சிலிர்க்க
கொட்டிட்டும் தேன்மழை
சேர்ந்து குன்றினில் தவழும் குறிஞ்சியில் 14
விண்தொடும் மலையின்
உச்சியில் கார்முகில்கள் கவிழ்ந்து
நிற்க
மழை மேகம் கண்ட மயில்கள்
மகிழ்ச்சியில் தோகை கொண்டாட
குறிஞ்சி நில இடங்களெல்லாம் குறும்
பீலி நீல நிறமாய்
விரிய
காண்பவர் கண்கள்
சொக்கும் குறிஞ்சியின் அழகைக்
கண்டு 15
வான்னுயர்ந்த சந்தன மரங்கள் மலையெல்லாம்
உயர்ந்திருக்க
மதயானை கண்களில்
வழியும் மதநீரை களிக்கும்
வண்டுகளை
இளம்பிடிகள் காந்தள் பூக்களால்
இளந்தென்றலாய் வீசி ஓட்ட
மற்ற யானைகள்
கூட்டத்தோடு மரத்தழைகள் உண்டு உறங்கும் 16
மூங்கிலிடை விளைந்த
நெல்லும் மண்ணிலே விளைந்த
தினையும்
மலையினில் கவர்ந்த
தேனும் வேடுவர் வேட்டைப் பொருளும்
பின்னும் பல பொருள்கள் சேர பிறருக்கு கொடுத்து
உண்டலும்
குறையாது மிகுந்து
இருக்கும் குறிஞ்சி நிலம் கொண்ட சுரமையில் 17
முல்லை நிலம்
:
உறிகளில் பணையம்
வைத்து உறியடிக்கும் இடையர்
ஒலியும்
இசைகளின் கருவிகள்
கொண்டு இசைத்திடும் இனிய ஒலியும்
குழல் என்னும் புல்லாங்குழல் கோபாலன்
இசையை வெல்லும்
ஏர் உழும் உழவர்கள் ஒலிகள்
எப்போதும் முல்லையில் மலரும் 18
கொன்றைப் பூக்களில்
கொட்டும் தேனுக்கு அலையும்
வண்டுகளும்
குருத்திமரப் மலர்கள்
சிந்தும் மதுவுக்கு மயங்கும்
வண்டுகளும்
மலையினில் படர்ந்து
விரிந்த முல்லைகள் பரப்பும்
மணமும்
முல்லை நிலத்தின்
மதிப்பை மூவுலகும் அறிந்திடும்
சுரமையில் 19
முல்லையில் மலர்ந்த
முல்லையும் மிகப் புதிதாய் மலர்ந்த கொன்றை
பூக்களில் சிந்தும்
தாதுகளுக்கு போட்டியில் மோதும்
வண்டுகள்
நீர் அலைகள்
நனைத்த மணலை நீர் பறவை தன் அலகால்
கிளறி
உணவினை சேவல்கள் ஊட்டி பிணையினை நோக்கும்
முல்லையில் 20
குவிந்திட்ட வனப்பு
கொண்ட குளிர்ந்த நல் முல்லை நிலத்தில்
கார்கால மழையைப்
போல கொட்டும் கொன்றைத் தேனால்
காடென வளர்ந்த
புற்களைக் காராம் பசுக்கள்
மேய்ந்து கொழுத்து
கழல் அணிந்த
மழலைகள் போல் கன்றுகளுடன்
விளையாடி மகிழும் 21
பிடிக்கு எட்டு காய்கள் கொண்ட பெருவிளைச்சல்
எள்ளுச் செடியும்
பெருங்கொத்துக் கொடி தாங்காது தரை தவழும் அவரைச் செடியும்
இலை மறையும் காய்கள் கொண்ட
எழுந்து நிற்கும் துவரைச்செடியும்
முல்லை நிலத்தை மூடி நின்று
முழு அழகும் கொட்டும்
சுரமையில் 22
மருதம் :
நங்கையர் நடனத்துக்கொப்ப நயம்பட
ஒலிக்கும் முழவும்
செந்நிற கொண்டை
கொண்ட சேவற்போர் செய்வோர்
ஒலியும்
செய்கின்ற மனதில்
இசைக்கும் செவ்வார் பிண்ண முரசொலியும்
மங்கல ஒலியால்
அதிரும் மருத நிலம் சுரமை நாட்டில் 23
மருதத்தில் மண்டியிருக்கும் மணம் நிறை கருநெய்தல்
பூவிலும்
சேற்றினில் வளர்ந்து
நிற்கும் செந்தாமரை மலர்ந்த மலரிலும்
சிந்திடும் தேனை உண்ண சேர்ந்திடும்
வண்டுகள் கூட்டம்
கால்களால் மிதித்து
மோத கார்மழையாய் தேனும்
கொட்டும் 24
தாமரை மலர்கள்
நிறைந்த தடாகங்கள் மருதத்தின்
அழகு
தாமரைகள் மீது அமர்ந்து தன் இறைக்கு காத்திருந்து
மீன்களை வாயில்
கவ்விப் பற்றி மகிழ்ச்சியில்
உயரே செல்லும்
புள்ளினங்கள் பறக்கும்
ஓசை புது அழகு மருத நிலத்திற்கு 25
தாழை சூழ்ந்த
நீலமலர்கள் தடாகத்தில் நிறைந்து
இருக்க
கரு எருமை குவளை உண்ண கடைவாயில்
தேன் கசிய
கன்றின் நினைவு
மனதில் எழ காம்புகள்
நீரில் பால் சொரிய
அப்பாலுண்ட அன்னங்களால்
சேற்று வயல் ஆனது அங்கு 26
கழிகள் பருத்து
சோலையுடன் கன்னல் காடு செழித்திருக்க
கன்னலின் இடையே வளர்ந்த கதிர் ஈன்ற நெற்பயிர்கள்
கற்றறிந்த சான்றோர்
போல கதிர்கள் நிலம் நோக்க
நிற்க
எப்போதும் அம்மருத நிலம்
எழில் பெருக்கும் சுரமைக்கு 27
நெய்தல் :
பரதவரின் மரக்கலங்களிலே
பண்ணிசைக்கும் முழவொலியும்
சமுத்திரத்து நீர் அலைகள் சதிராடும்
கூச்சல் ஒலியும்
நீரலையால் மணிகள்
கோர்த்த நுரை கொண்ட கரையழகும்
சுரமை நாட்டின்
நெய்தல் நிலம் சுகமான
அழகு சொட்டுமிடம் 28
சங்குடைந்து பிளந்தாற்
போல் தாழை மலர்கள்
மலர்ந்திருக்க
காரிருள் சிதறினார்
போல் கருங்குவளைகள் இதழ் அவிழ
நீர் பூக்கள்
இன்னும் பலவும் நீராடும்
நெய்தல் நிலத்தில்
மண்மகளின் பேரழகு
கண்டு விண்ணுலகமும் நாணியது அங்கு 29
வெண்தாமரை மெல்லிதழை
முள் நாளம் என வெறுத்த அன்னம்
மூழ்கி, மூழ்கி
கலக்குவதால் தேன் கொட்டி
நீரில் மிதக்கும்
துள்ளி வரும் சுறாமீன்களை துச்சமாய்
முதலை எண்ணும்
வலம்புரி முத்துக்கள்
ஈந்து வளம் பெருக்கும்
நெய்தல் நிலம் 30
நாட்டுச்
சருக்கம் முற்றிற்று.
2. நகரச் சருக்கம்.
சுரமை நாட்டு
போதன மாநகரம் :
நீர்வளம் நிலவளம்
நிறைந்த நிகரற்ற சுரமை நாட்டில்
கட்டிடக்கலை சிற்ப வல்லோரால் கட்டிய
மாட மளிகைகளுடன்
விண்ணவர் வழியை மறைக்கும் வான் உயர்ந்த மதிலைக் கொண்ட
பொன்னெழில் கொண்ட நகரம்
போதனம் என்னும் நகரம் 31
நகரின் அமைதி
:
சங்குகள் மேய்ந்து
திரியும் சமுத்திர அலைகள்
கொண்ட
பொய்கைகள் சூழ்ந்து
கொண்டு புது அழகில்
நிற்கும் நகரம்
செந்தாமரைகள் இதழை ஒத்த செவ்வரி
படர்ந்த கண்ணான்
திவிட்டனின் பிறப்பிடமானது
திவ்விய போதன மாநகரம் 32
அகழியும் மதில் அரணும் :
செங்கதிரோன் தேரின்
பரிகள் செல்வதற்கு வழி இல்லாமல்
முகில் தாண்டி
வளர்ந்து நிற்கும் விண்முட்டும்
மதில் சுவர்கள்
ஆழியின் அலைகள்
துள்ளும் அகழியை அரணாய்
கொண்ட
போதன மாநகரம்
தோன்றும் பொற்கடலிடை மிதப்பது
போல 33
அம்மதிற் புறத்தே
அமைந்த யானை கட்டுமிட
மாண்பு :
மாமரங்கள் நிழலின்
கீழே மதக்களிறின் காலைக்
கட்டி
கரும்போடு கவளம் தந்து காத்திடும்
பாகர்கள் ஒலியும்
வேழங்கள் உடலில்
இருந்து கொட்டிடும் மும்மத
நீரை
வண்டுகள் மொய்த்து
திரியும் மதில்களின் இடங்கள்
எல்லாம் 34
மாடங்களின் மாண்பு
:
மையினை வாள் போல் தீட்டி
மயக்கிடும் விழிகளோடும்
தேனினை பூச் சாரலாக்கும் திருத்திய
மலர் மாலைகளோடு
தோளினைத் தழுவி அணைத்து துணைவனை
கொஞ்சும் மகளீர்
மாடங்கள் தோறும்
மகிழ்வர் மன்மதன் மலர் கணைகளாலே 35
அகிற் புகை வானில்
எழும்பி முகிலினை முட்டி
மோதும்
மோதிடும் முகிலின்
முழக்கம் மூவுலகும் அதிரச்
செய்யும்
ஓவியப் பாவையர்
எல்லாம் ஒளிர்கின்ற மின்னலைப்
போல்
மலையொத்த மாடங்களில்
நிற்க மாநகரத்தில் அழகு சொட்டும் 36
மாடங்களின் சிறப்பு
:
காண்பவர் கண்கள்
எல்லாம் கவர்ந்திடும் அழகில்
மயங்கும்
வெள்ளியால் அமைந்த
மாடங்கள் வெண்மதியின் ஒளியை கக்கும்
தரை பதித்த
கல்களெல்லாம் தண்மையாம் தென்றலைத்
தரும்
மாளிகை மாடங்களெல்லாம் மண்ணின்றி
பொன்னாய் ஒளிரும் 37
[
மாடத்தில் பலவகை ஒலிகள் :
மத்தளத்தின் இசை ஒலிக்கும் மகரயாழ்
மெல்லிசை சிந்தும்
பாவையர் ஆடும் கூத்தால் பாதச் சிலம்புகள் சிரிக்கும்
சுருதியோடும் தாளத்தோடும்
சுந்தரிகள் பாட்டுகள் ஒலிக்கும்
போதனநகர் பொன்மாடங்களில் பொழுதெல்லாம்
இசை ஒலிக்கும் 38
வண்டுகளின் மயக்கம்
:
தாழியில் வளர்ந்த
குவளைகள் தாதையர் விழிகளை
ஒக்கும்
தேனுக்கு அலையும்
வண்டுகள் தேடிடும் மதுமலர்கள்
எதுவென
கண்ணுக்கும் மலருக்கும்
இடையே கட்டுண்டு அலையும்
கூட்டம்
எழுப்பிடும் இனிய ஒலியோ இடியென
எழும்பி மெலியும் 39
கடைத்தெரு :
பெருங்கடைகளின் ஓரங்களில்
பளிங்குக்கல் மேடைகளும்
பூந் தென்றலால் அசையும்
பூமாலைத் தோரணங்களும்
பூக்கொட்டும் தேன் சுவைக்க போராடும்
வண்டுகளொலியும்
கடைகள் கொண்ட வீதியெல்லாம் கற்பகச்
சோலைகளாகும் 40
சிலம்பொலிக்கு மயங்கும்
சிறு அன்னங்கள் :
அகிற் புகை சூழ்ந்து
மணக்கும் அகத்தில் எழும் சிலம்பொலியை
ஆசையாய் அவர்கள் வளர்க்கும்
அழகிய பெடை அன்னங்கேட்டு
ஆண் துணையற்ற
அன்னங்கள் அதன் அச்சத்தில்
மனம் மயங்க
தடாகத்துக்குப் போய் சேர்ந்திடும் தாங்கிடா
மன வருத்தத்தாலே
41
அரசர் தெரு அழகு :
கார்க்குழலில் பூக்கள்
அணிந்து கழுத்தில் மலர் மலை கொண்டு
கால்களில் சிலம்புகள்
அமைய காலடிகள் செங்குழம்பு
பூசி
நங்கையர்கள் தெருவில்
நடக்க நடந்திட்ட பாதங்கள்
பதிய
அரண்மனை வீதியெல்லாம்
அன்றலர்ந்த தாமரையை ஒக்கும் 42
செல்வச் சிறப்பு :
கொட்டுகின்ற தேன் நிறைந்த குவலைமலர்
கொத்துகளும்
வட்டமதியின் ஒளியை ஒத்த வலம்புரி
மணி முத்துகளும்
மாநகர் போதனமே மணக்கும்
மல்லிகைப்பூ மாலைகளும்
முச்சந்திகள் தோறும்
கிட்டும் மக்களுக்கு எல்லாப்
பொருளும் 43
மாளிகையில் உணவுப் பொருள்களின் மிகுதி
:
மணத்தோடு சுவை சொரிந்த மூன்று
வகை குடி நீர்களும்
மரந்தாங்கா பழங்கள்
கொண்ட வாழை பலா மரத்தோப்புகளும்
மண் தொட்டு கண்
இழுக்கும் மாமரத்தின் பெருங் காடுகளும்
மது கொண்ட மூங்கிலோடு
மாளிகைகள் மிகவும்
உண்டு 44
இன்ப உலகம்
:
நறுமணப் பொடிகள்
கொண்ட நல் மணச் சந்தனங்கள் பூசி
இரவு பகல் அறிந்திடாத இந்திரனின்
உலகம் போல
இளைஞர்களும் கன்னியரும்
இன்புற்று இருப்பதனால்
விண்ணுலகம் இடம் பெயர்ந்து
மண்ணுலகம் வந்தது போலாகும் 45
பாயாபதி மன்னன்
மாண்பு :
போதனபுர நகரம் போற்றும் பெரும் படையுடைய மா மன்னன்
பயாபதி பெயரைக்
கொண்ட பயம் அறியா பெருந்தலைவன்
வெற்றி கொண்ட மணிமுடியுடனும் வேந்தர்க்கு
வேந்தனாவான்
வெண்கொற்றக் குடை நிழலால் உலகுக்கு
உயிர் போல் ஆனவன் 46
பயாபதி மன்னன்
சிறப்பு :
எண்ணுவர் எண்ணத்துக்கு
எட்டாத நல் சிறப்புடையான்
வேண்டுதல் வேண்டாமையிலா
வாய் நிறைச் சொல்லுடையான்
நண்பர்க்கு உயிர் கொடுப்பான் பகைவர்கள்
உயிர் எடுப்பான்
பயாபதி மன்னன்
சிறப்புகள் பாரினில் உயர்ந்ததென்பார் 47
மக்கட்கும் பகையின்மை
:
பகைவர்கள் நடுங்கி
அஞ்சும் பயாபதி அரசன் ஆட்சியில்
காமனின் மலர் கணைகளுண்டு கடும் பகையின் வேல்களில்லை
மறவர்கள் மண்ணில்
போரின்றி மஞ்சத்தில் தான் போர் கொள்வர்
தூய்ப்போரும் துறந்தோரும்
துயர் இன்றி நலம் பல
காண்பர் 48
குடிகளை வருத்தி
இறைகொள்ளாமை :
குடிமக்கள் இறை தந்தார்கள் கொண்டதில்
ஆறில் ஒன்றை
கொடுத்ததைப் ஏற்றுக்
கொண்டான் கொடுமைகள் ஏதுமின்றி
பகைவர்கள் திறை தந்தார்கள் பாசத்தில்
பெற்றுக் கொண்டான்
பகைவர்கள் மறுத்திட்டாலும் பண்பினால்
கொடுக்கச் செய்தான் 49
மன்னனின் முன் நிழல் :
மன்னனின் உடலின்
நிழல் மக்களைக் காத்து
நிற்கும்
அரசன் காலடியின்
நிழல் அயலரசர் நிலத்தைக்
காக்கும்
மணி
கொண்ட முடியின் நிழல் முனிவர்கள் திருவடி
பணியும்
வெண்கொற்றக் குடை நிழலோ வேற்றுமையின்றி உலகை காக்கும் 50
இருவகைப் பகையும்
அற்ற ஏந்தல் :
உடலினில் உள் உறங்கும் உட்பகைகள்
ஆறினை வென்று
நிலவுலகில் நேரில்
தோன்றும் நெடும் பகை எல்லாம்
வென்று
தன்
உயிர் மட்டும் இன்றி மண்ணுயிர்கள் எல்லாம்
காக்கும்
மன்னனின் உயர் மாண்புகளை மண்ணுலகம் என்றும் போற்றும் 51
( 6
பகை : காமம், குரோதம்,
லோபம், மோகம், மதம், மாற்சரியம்
)
அரசியல் சுற்றத்துடன்
உலக பொதுமை நீகுதல்
:
அருகனின் அறம் உரைத்திடும் அறிவுசார்
முனிவர்கள் இருக்க
ஆட்சி நூல்கள்
அனைத்துமறிந்த அமைச்சர்கள் அவை சூழ்ந்திருக்க
நீர் விளையாடும்
அன்னங்களின் நடுவினில் தவழுந்து ஆடி நிற்கும்
அரச
சிறப்புடைய அன்னம் போல் அரசன் பயாபதி
வீற்றிருந்தான் 52
அரசர் சுற்றத்தின்
இயல்பு :
அரசருக்கு சரியாய்
அமைந்த அமைச்சர்கள் குழக்களெல்லாம்
மன்னனின் முகக் குறிப்பறிந்து மறுமொழிகள்
கூறல் இன்றி
நீதியினை உரைத்திடும்
நேர்மை நெறிகொண்ட சான்றோராய்
அயலார்க்கு சிறிதும்
அஞ்சாத ஆன்ம நெஞ்சம்
கொண்டோராவர் 53
அரசியர் :
மலர் தவழ் கார் கூந்தலும்
மகரமீன் பொன் செவியணியும்
பிறந்திட்ட குடியின்
உயர்வும் புகுந்திட்ட இடத்தின்
பெருமையும்
இளம் மார்பின்
எடையினை தாங்கா இற்றிடும்
மெல்லிடை கொண்ட
ஆயக் கலைகள் அறுபதுமறிந்த அரசியர்கள்
பலர் மாமன்னனுக்கு 54
செம்பஞ்சின் இளம் சூட்டினிலே
சிவந்திடும் அவர்கள் சிற்றடியும்
செந்நாகம் படம் விரித்தாற் போல் செம்மணி
கொண்ட மேகலையும்
பழங்கள் தாங்கா
கிளை தளரும் பைங்கொடி
போல் மென்மேனியும்
ஓவியர்கள் வரைந்தது
போல் ஒப்பற்ற அழகுடையோர்களவர் 55
காமம் பூத்த காரிகையர் :
காமன் பூங்கணைகள்
கொண்ட காமவல்லி பைங்கொடிகள்
கற்பென்னும் பட்டு அணிந்த கள்ளமில்லா
பெண்மணிகள்
இருண்ட சுருள்
கருங்கூந்தல் இளங்கயல்கள் கண் தவழும்
இளமூங்கிலாய் தோளுடைய
இன்பம் நிறை பெட்டகங்கள் 56
பட்டத்து அரசிகள்
இருவர் :
ஆயிரம் மனைவிமார்கள்
அரசனுக்கு இருந்தாலும்
பட்டத்து ராணிப்
பெருந்தேவியாய் பயாபதியின் பக்கம்
அமர
விண்ணுலக மங்கைகளோ
விஷ்ணுவின் திருமகளோ – என
உவமை சொல்லி
கூறுதற்கு உண்டு அங்கே இருவர் மட்டும் 57
பெருந்தேவியர் இருவரின்
பெற்றி :
கன்னலில் சுவை நீர் எடுத்து கொம்புத்தேன்
அதில் கலந்து
முக்கனியின் சாறு சேர்த்தால் முதல் தேவி மிகாபதியாவாள்
இந்திரனின் மனைவியை
ஒத்து இளம் ரோசா இதழ் குழம்பில்
இனிய மது அதில் கலந்தால் இரண்டாம்
தேவி சசியாவாள் 58
மங்கையர்க்கரசியாகும் மாண்பு
:
பூங்குழை மகளீர்
இருவரும் பொன்மலர் கொம்பைப்
போல
மண்ணுலக மங்கயர்க்கெல்லாம் மதி கொண்ட
திலகமானார்
வசந்தத்தில் வளர்ந்து
நிற்கும் மாவண்ண அசோகத்
தளிராய்
மாந்தரில் மிளிர்ந்து
சிறந்து மாண்பினை பெற்றவராவார் 59
இவ்விருவரும் பயாபதியுடன்
கூடியுறைந்த இன்பநலம் :
மன்னனின் மனதில்
உறைந்து மாண்புறும் பெண்மையினால்
ஆண்
அரவம் ஒன்றைச் அணைத்து
பெண் நாகம் இரண்டும் பின்னி
திருமகளும் கலைமகளும்
ஒரு மகளாய் நெஞ்சில்
தவழ்ந்து
இல்லறக் கடலில்
மூழ்கி இன்ப முத்து
எடுத்து மகிழ்ந்தனர் 60
மன்னனும் மனைவியரும்
ஓர் உயிர் ஆகி நிற்றல் :
ஓருடல் கொள்வது
என்றும் ஒரு உயிரின்
உலக நியதி
பயாபதி மன்னன்
உடலில் பதிந்ததோ இரண்டு
உயிர்கள்
ஐங்கணையான் வெஞ்சினத்தால்
அடைமழையாய் அம்பை பொழிய
மூவுயிர்கள் மூச்சித்
திணற மூழ்கியது இன்ப வெள்ளத்தில் 61
நகரச் சருக்கம்
முடிவுற்றது.
3. குமாரகாலச் சருக்கம்.
தேவர்கள் இருவர்
மண்ணுலகில் தோன்றுதல் :
தேவர் கால வாழ்வு முடிந்து
தெய்வலேக ஆட்சியின் பின்
மண்ணுலகில் மானிடர்களாய்
மறுஜென்மம் எடுப்பதற்கு
வெண்சங்கு நிறத்துடனும்
கார்முகிலின் வடிவுடனும்
மிகாபதி சசியர்
வயிற்றில் மெங்கருவாய் அமர்ந்தார்கள் 62
மிகாபதி விசயனைப்
பெறுதல் :
பெண்ணின் பெருந்தகையாள்
பெருந்தேவி மிகாபதியவள்
கருவுற்ற நாள் முதலாய் கண்களின்
பெரு மகிழ்வில்
வெண்மதியின் முகத்துடனும்
வெம்பரிதி ஒளியுடனும்
விசயன் என்னும்
மகவை வேந்தனுக்கு பரிசளித்தாள் 63
சசி திவிட்டனைப்
பெறுதல் :
இளந்தளிர் அழகு கொண்ட இளைய கோப்பெருந்தேவி சசி
இன்னுயிரை தன்னுயிராய்
இளம் வயிற்றில் வளர்த்து
வர
வானவர்கள் மலர் பொழிய வலம்புரி
சங்குகள் முழங்க
திவிட்டன் என்னும்
மழலையை சிறப்புடனே பெற்று
தந்தாள் 64
விசய திவிட்டர்கள்
பிறந்த போது உண்டான
நன்மைகள் :
போதனநகரமே பொன்னகராகி
தேவலோகமாய் சிறப்புடன் திகழ
உயிர்களை உற்று வருத்திடும் தீவினைப்
பற்றுகள் நீங்கின
நல்வினை குறவர்கள்
நெஞ்சில் நலிவுரும் ஆசைகள்
அழிந்தன
எண்திசைகள் எல்லாம் ஒளிர்ந்தன
விசய திவிட்டர் பிறந்திட நாளில் 65
மைந்தர்கள் இருவரும்
மங்கையர் மனதைக் கவர்தல்
:
வான்மதி இளம் பிறை போல் வளர்ந்தனர் மகன்களிருவரும்
எட்டெட்டு கலைகளும்
பயின்று ஏற்றத்தைக் கண்டார்கள்
எழில் காளைப்
பருவத்தை எய்தார்கள் இருவரும் சேர்ந்து
ஏந்திழைகள் நெஞ்சத்தில்
இரவு உறக்கம் களைத்தார்கள் 66
விசயனுடைய உடல், கண், குஞ்சு, காது :
வலம்புரிச் சங்கைப்போல்
வண்ண நிறம் உடையோன்
தாமரையின் ஊள்ளிதழ்
போல் தண்மை கண்களுடையோன்
இருள் வந்து கவிழ்ந்தது போல் சுருள் கொண்ட
குஞ்சுடையோன்
சுடரொளி பொன் குண்டலத்தை
சூடியுள்ள செவியுடையோன் 67
மாலை, மார்பு,
கை, நிறம், தோள், நடை ஆகியன
:
தேவர்கள் போல் வாடா மாலை திரண்ட
பெரும் விரிந்த மார்பு
முழங்காலை முத்தும்
கரங்கள் முழுமதியாய் ஒளிரும்
உடல்
குன்றொத்து விளங்கும்
தோள்கள் குகை நீங்கும்
சிங்கம் நடை
பொருத்தமாய் பெற்றவன்
தான் பெரியவன் விசயன்
என்பான் 68
திவிட்டன் உடல் முதலியன :
கருமுகில் நிறங் கலந்த
கடல் நிறங்கொண்ட உடலும்
வாய்மையின் தூய்மை
ஒத்த வெண்தாமரை போன்ற விழிகளும்
செந்தீயின் நிறத்தை உடைய
செவ்வல்லி போன்ற வாயும்
தேரோடும் வீதி போன்ற திரண்டகன்ற
மார்பன் திவிட்டன் 69
கை
முதலியன :
சங்கொடு சக்கர ரேகையை உள்ளங்கை
உள்ளே உள்ளவன்
தாமரை மலர்கள்
போன்ற சிவந்த பெருவடிகள்
கொண்டவன்
நடையினில் பெண் யானைப்
பெற்ற களிறின் திமிர் இயல்புடையவன்
இத்தனை அம்சங்கள்
கொண்ட இளவலே திவிட்டன்
என்பான் 70
இருவரும் இளமை எய்தல் :
நிறை பெரும் வளப்பத்தாலே
நிறை பெற்ற வனப்புடனே
இருவரும் வந்தடைந்தனர்
இளமையாம் சோலைக்குள்ளே
செவ்விதழ்
நங்கையர்களின் சிந்தையில் பதிந்தனரிருவரும்
காமனின் கணைகள்
தாக்கியும் காட்டிட மனம் மறுத்தனர் 71
மங்கையர் மனதில்
விசயனும் திவிட்டனும் :
கடல் வண்ணன்
இளம் திவிட்டன் கன்னியர்
கனவைக் கலக்கினான்
மங்கையர்கள் மயங்கினார்கள்
மனம் கொண்ட பெருஞ் சுழற்சியாலே
வெண்மணி நிறத்தான்
விசயன் வீற்றிட்டான் வனிதையர்
மனதில்
விழிகளில் அவன் புலப்படாததால் வீழ்ந்திட்டார்கள் காதல் நோயில் 73
அரசன் மனைவியருடன்
அமர்ந்திருத்தல் :
ஒன்றிட்ட நவமணிகள்
கொண்டு ஒழுங்குடன் அவை பதிக்கப்பட்டு
வண்டுகள் கூட்டம்
மொய்க்கும் வாடாத மலர்மாலைகள்
அணிந்து
மணிமுடி தரித்த
மன்னன் பயாபதி தன் மனைவியரோடு
அமரிகை ஆற்றின்
கரையில் அமர்ந்திருந்தான் ஆசை மனதில் 73
அரசன் உறங்குதல்
:
மண்டபத்தின் விமானம்
வானில் முகில்களைச் சிதறச்
செய்ய
நாற்புறம் மணிமாலைகளோடு
நறுமண மலர்மாலைகள் தொங்க
அகிற்புகை ஊட்டப்
பெற்று அகவிடும் மயிலின்
தோகை யாய்
பஞ்சென இருந்த மெத்தையில்
பயாபதி துயில் கொண்டிருந்தான் 74
உடற்பாதுகாப்பாளர்கள் :
பொன்னினால் வேய்ந்த
உடையை கச்சினால் அழுந்தக் கட்டி
பின்னிய அரை ஞான்
அணிந்து பெரும் இரு விழிகள் கொண்டு
கையினில் பெரும்
வில்லை ஏந்தி மன்னனின்
அடிகளைக் காக்க
பயாபதி மன்னன் பஞ்சணை விட்டு
பையவே நித்திரை கலைந்தான்
75
திருப் பள்ளியெழுச்சி
:
மலர், பொன், மணி கண்ணடிகள் மங்கலப் பொருளாய் அமைய
மன்னனும் பஞ்சணை
விட்டான் மலர் முகம் கழுவிக்கொண்டான்
முனிவர்கள் வாழ்த்துக்கள்
கூறி மும்மலர்கள் முடியில்
தூவிட
திருப் பள்ளியெழுச்சி கொண்டன்
துயவர்களை தொழுது போற்றினான் 76
அரசன் வாயிலை
அடைதல் ;
கைகளில் கோல்கள்
கொண்ட காவலில் நிற்கும் மகளீர்
எல்லாம்
வாயிலின் ஊடே உலாவி நின்று மன்னனின்
வெளிவரவை நோக்க
வஞ்சியர்கள் கை சாமரை வீச வளைகரத்தோர் வாழ்த்துக்
கூறிட
திருவோலக்க மண்டப வாசலுக்கு தேவனனைய வேந்தன் வந்தான் 77
அரசன் அணையில்
வீற்றிருக்கும் காட்சி :
பளிங்கு கற்களைப்
பலகையாக்கி பசும் பொன்னால் மேடையமைத்து
பவழத்தால் இழைத்த
தூண்களில் பனி வெள்ளை
கூரை வேய்ந்து
யாளியின் முகங்களைக்
கொண்ட யவ்வனப் படிகள்
கடந்து
செம்பொன் சிம்மாசனத்தில் சிம்மம்
போல் அமர்ந்திருந்தான் 78
நுண்ணிய நூல் கற்ற
மறையோரும் நுண்ணறிவு அமைச்சர்களும்
அரசனின் மனக் குறிப்பறிந்து அவர்கள்
அவரவர் இடத்தில் அமர
மின்னொளி வீசும் முடிகளுடன் மிளிர்கின்ற
கடகம் அணிந்த
சிற்றரசர்கள் சிரம் அடி தொட சீரிய வரிசையில்
அமர்ந்தனர் 79
அரசனின் அன்பைப்
பெற்றும் அரிய வெற்றி
ஈட்டும் திறமையும்
பயாபதிமேல் பாசம் கொண்ட படைத்தலைவர்கள் பக்கமிருக்க
ஐம்புலங்கள் மகிழ்ச்சி
கொள்ளும் அமுத இசைப் பாடல்களெல்லாம்
புலவர்கள் சபைக்குள்
இசைக்க சபையே இசை அரங்கமானது 80
வாயில் காவலனுக்கு
ஒரு கட்டளை :
வலிய குன்றொத்த
தோளோர்களே வாயில் காக்கும்
வீரமறவர்களே
திருவோலக்க மண்டபத்திற்கு
திரள்கின்ற மக்களை எல்லாம்
ஏழுநாழிகைப் பொழுது
வரை எவ்வித தடைகளும்
இன்றி
காவலை விட்டுவிடுங்கள் என காவலர்க்கு கட்டளையிட்டான் 81
நிமித்திகன் வரவு :
எண்ணிறைந்த நூல்கள்
கற்று என் மனதில்
அடக்கம் கொண்டு
எட்டவும் கிட்டவும்
நடப்பவைகளை எடுத்தியம்பும் திறமை கொண்ட
முக்காலம் அறியும்
அறிவினை முழுமையாய் தெளிந்த
ஞானமுடைய
நான் அரசனைக்
காண வேண்டும் அறிந்து
சொல் காவலா என்றான் 82
அரசன் நிமித்தனை
வரவேற்றல் :
மன்னனின் குறிப்பினை
உணர்ந்த மலையொத்த வாயில்
காப்போன்
நிமித்திகனை செல்ல இசைந்தான் நிமித்திகனும்
சபைக்குள் சென்றான்
பெரும்படை உடைய பயாபதி பசும் வெள்ளி மலர்க்
கையோடு
உயர்ந்த
ஓர் இருக்கையை காட்ட உட்கார்ந்தான் நிமித்திகன்
அதில் 83
நிமித்திகன் தன் ஆற்றலை காட்ட தொடங்குதல் :
நல்லொழுக்கம் கொண்ட நிமித்திகன் நுண்ணிய
நூலறிவைக் காட்ட
முக்காலம் உணர்த்தும்
நிலையை மொழித்திறத்தில் கூறலானான்
வேந்தரே உம் கனவில் ஒரு வேழம் விண்ணில்
இருந்து மண்ணுக்கு வந்து
திவிட்டனுக்கு மலர்மாலை
சூட்டி சென்றது தன் இடத்திற்கென்றான் 84
வித்யாதரர்கள் அரசன் ஒருவன் விண் இறங்கி மண்ணுக்கு
வந்து
திவிட்டனுக்கு மகளைத்
தருவான் தெரிந்திடுவீர் கனவின் பயனை
ஓரேழு நாள் கடந்த பின்னர்
ஒரு தூதன் ஓலையை கையிலேந்தி
புட்பமாகரண்டம் பொழிலடைவான்
புரிந்து நீர் தெளிவீரென்றான் 85
அந்நிமித்திகன் சொல்லைக்கேட்டு அவையோர்கள்
வியப்படைந்து
திவிட்டனின் எழிலும்
புகழும் சென்றது விண்ணை
நோக்கி
நிமித்திகன் மொழிகள்
மெய்யே நடந்திடும் அவன் கூற்றுகளெல்லாம்
நிலவுலகை ஆளும் வேந்தே நிமித்திகன்
சொல் ஏற்பீரென்றனர் 86
அரசன் ஆராய்ச்சி
மன்றத்தை அடைதல் :
நாழிகை ஒன்று கடந்திட நல்லொலி
பேரிகை முழங்க
மன்னனும் அவை கலைத்து மந்திரிகட்கு
குறிப்பால் உணர்த்தி
மேனிநிலை மாடத்தில்
உள்ள மாளிகையாம் ஆராய்ச்சி
கூடத்தை
அரசனும் சென்றடைந்தான்
அமைச்சார்கள் பின் தொடர்ந்தனர் 87
இரவினில் தான் கண்ட கனவை சோதிடன் ஆய்ந்து
கூறியதை
அமைச்சர்க்கு எடுத்துச்
சொல்லி அவர்கள் முகம் பார்த்திருக்க
நற்தவம் உடைய திவிட்டனின் நல்லெழிலும்
வீரமும் புகழும்
மண்ணுலகை ஆள்வான்
என்று மன்றத்தில் மந்திரிகள்
கூறினர் 88
சங்கு உருளை வடிவ கோடுகள்
தங்கள் மகன் கைகளில்
இருக்க
திருமாலை ஒத்த வடிவன் என தெரிந்ததே உலக்குக்கெல்லாம்
வித்தியாதரர்கள் மன்னன்
மகள் விஞ்சையின் உலகுக்கு
அரசி
அவன் மகன் திவிட்டனுக்கானால் அஞ்சிடுவர் பகைவர்களெல்லாம் 89
புட்பமாகரணம் பொழிலில்
பளிங்கினால் மேடை அமைத்து
பால் வெள்ளிக்
கூரை வேய்ந்து பல மணி மாலைகள்
கட்டி
திருமகாந்தன் என்னும்
வீரனை தொடர்ந்து அங்கிருக்கச்செய்து
விஞ்சையர் தூதன் வரவினை வரவேற்க
வைப்போமென்றான் 90
மாமன்னன் மனம் மகிழ்ந்தான் மந்திரிகள்
மொழிகள் கேட்டு
துருமகாந்தனைக் காக்கச்
சொல்லி துணைவியரை நாடிச்
சென்றான்
வேந்தனின் காலடிகள்
பணிந்து வேண்டிய பொருட்களினோடு
துருமகாந்தன் உடனே சென்றான் புட்பமாகரணம்
பொழிலை நோக்கி 91
குமாரகால
சருக்கம் முற்றிற்று.
4.
இரதநூபுரச் சருக்கம்.
நுதலிப் புகுதல்
:
கடலென நீண்ட மதில்களும் காவலன்
பயாபதி ஆட்சியும்
போதன நகரத்து
மாட்சியும் போன சருக்கத்தில்
அறிந்தோம் – இனி
நல் மணம் என் திசையும் பரப்பி
நறு மலர்கள் கவிழ்ந்த பொழிலில்
நாடெல்லாம் நிறைந்திருக்கும் வித்தியாதரர்
உலகம் காண்போம் 92
வெள்ளிமலை :
சித்திரைத் திங்களின்
ஒளியும் சிறுமுத்துப் பரவிய தரையும்
விண்ணினை தொட்டு
வளர்ந்து விழிதொடும் தூரம் பரவி
முகிலெல்லாம் முகட்டில்
தவழ முழு அழகும்
கொண்டு ஒளிரும்
வித்தியாதரர் உலகம் கொண்ட
வெள்ளிமலை என்னும் மலையாம் 93
வியந்திர தேவர்கள்
எல்லாம் வெள்ளிமலையின் மீது சேர்ந்து
கார்குழல் தவழும்
கன்னியரோடு களித்து விளையாடும்
போது
அடர் பொழிலின் இடங்களெல்லாம்
அத்தேவர்கள் உடலின் ஒளியால்
செங்கதிரோன் உதயம் கண்ட செவ்வான
நிறத்தைக் கொண்டது 94
செவ்விதழ்கள் சிந்தும்
மதுவை தேவர்கள் உண்டு
மகிழ்ந்து
செந்தாமரை தனங்களைத்
தழுவ சிதைந்த மலர்கள் மணம்
பரப்ப
கின்னர வகுப்பைச்
சேர்ந்த கிரங்கிய தேவர்கள்
எல்லாம்
மங்கையர்கள் மேனி தழுவிட மலர்ந்தது
குளிர் மணம் அங்கு 95
தேனது உள்ளே பொருந்திய செழிப்புமிக்க
வனத்திடையே
சந்தனம் மணக்கும்
மலையை தேவர்கள் நாடுவர்
தினந்தினம்
நறுமணக் கூந்தல்
நங்கையர் நடந்திட்ட செம்பஞ்சுக்
குழம்பு – அவர்கள்
துகில்கின்ற பாறையில்
படிந்து செம்பவள மஞ்சம்
ஆனது 96
வெள்ளியெனக் கொட்டும்
அருவி பொன்பாறையில் பொங்கி
வீழ
நாகலோக அழகு நங்கையர்கள்
நடனம் போல் அந்நீரில்
ஆட
மதயானையின் மும்மத
நீரின் மத மணம் நீரில் மருவி கலக்க
கன்னியரின் மல்லிகை
மணமும் கலந்து மணந்தது
அருவி நீரில் 97
சேடிநாட்டின் சிறப்பு
:
வீரக்கழல்கள் காலில்
அணிந்த விஞ்சையர்கள் வாழும்
உலகில்
பொற்றாமரைகள் மலர்ந்து
பொருந்திய பூஞ்சோலைகளில்
கற்பக மரங்கள்
எல்லாம் காடு போல் வளர்ந்துள்ள காட்சி
கண்களைக் கட்டும்
அழகால் கருத்தினை மழுங்கச்
செய்யும் 98
வெள்ளிமலை உச்சியின்
மீது வீற்றிருக்கும் தேவர்கள்
போல
விஞ்சை உலகின்
தென் திசையில் விளங்கும்
நகரம் இரதநூபுரம்
தங்கநிற பழங்கள்
கொண்டு தரை தொடும்
வாழைக்குலைகள்
சிறு அசைவு கொள்ளும் போது சிந்திடும் சாறாய்த்
தெரியும் 99
வெண்பாளை வெடித்து
தெரியும் பசிய மணிகுலைகள்
கொண்ட
கமுகு மரக்கூட்டத்தின் நிழல் காதவழி தூரம் விழுந்து நீளும்
கற்பக மரங்களின்
ஊடே பாரிஜாத மரங்களும்
சேர்ந்து
பொன்மணி மாளிகைகளை
சூழ்ந்து புதியதோர் அழகைக்
கொட்டும் 100
மார்பினில் சந்தனக்
குழப்பொடு மஞ்சத்தில் மங்கையர்
கூட்டால்
மேனியில் வியர்வைத்
துளிர மென்தென்றல் மணங்கொண்டுலவ
மதுவினை உண்டு மயங்கிய வண்டுகள்
இசைத்திடும் இசையோ
மாளிகைதோறும் ஒலிக்கும்
இரதநூபுர நகரந் தன்னில் 101
புண்ணிய நதிகள்
தவழ்ந்து பூமணம் கமழும்
பொழில்கள்
சிறுமுத்து மணல் குன்றோடு சிரித்திடும்
முல்லைப் பந்தல்கள்
காமனின் ஐங்கணைகள்
தாக்க குவிந்திட்ட இன்பம்
எல்லாம்
மன்மதன் போர் முழக்கத்தேலே இரதநூபுரம்
துன்பம் கொண்டது
102
சுவலனசடி :
மதயானைகள் கொண்ட வேந்தன் மங்காத
பெரும்புகழ் உடையோன்
மூவுலகும் பெருமை
கொள்ளும் மணிமுடி கொண்ட மன்னன்
தீயிக்கு இன்னோர்
பெயரான சுவலனன் என்னும்
பெயருடைய
சுவலன சடி என்னும்
சுந்தரன் இரதநூபுர மன்னன்
ஆவான் 103
குங்குமக் குழம்பினுள்ளே
குழைத்த மணப் பொருள்கள் சேர்த்து
மேனியெல்லாம் பூசிய மார்பன் விழியெட்டா
வெண்குடை நிழலோன்
மதயானைகள் படையைக்
கொண்ட மாற்றரசர்கள் வணங்கும் வேந்தன்
சுவலனசடியின் சிறப்பைக்
கூற சொற்களே தமிழில்
இல்லை 104
வித்தையில் தேர்ச்சி
உடையான் விரும்பியதை கைவரப் பெற்றான்
செம்பொன் நீண்ட முடியுடையான் சிறந்த
விற்படையுடையான்
கருங்குன்று களிறுப் படையுடன் கனியுதிரும்
சொல்லுங்கொண்ட
உண்மை நெறியை
கடைபிடிக்கும் உத்தம குண மன்னன் ஆவான்
105
வெற்றியின் வித்தை
அறிந்த வெண்கொற்ற குடையுடைய
வேந்தன்
ஒப்பற்றத் தன் தன்மையாளும் ஓங்கியச்
நல் செங்கோலினாலும்
உலகத்தையாளும் அவனிடம்
ஓரே குற்றம் உள்ளது
எனில்
நற்குணங்கள் இல்லா உயிர்க்கு நல் அருள்
செய்யாமை ஒன்றே 106
நவமணி செம்பொன்
முடியான் நல் ஆட்சி செய்யும்
நாட்டில்
நடுங்கியவர்கள் யாருமில்லை
நடுங்கியது தூண் கொடிகள்
மட்டும்
அரசனின் ஆணை எல்லாம்
ஆடவர்களை வளைப்பதில்லை
காளையரை வளைப்பதெல்லாம் கன்னியர்கள்
விற்புருவம் மட்டும் 107
வெள்ளிய வெண்குடை
மன்னனின் கள்ளென மயக்கும்
ஆட்சியில்
உணவுண்ணா வாய்கள்
என்றால் உடல் விற்கும் பரத்தையர் வாய்களே
மதுவினை அருவியாய்
கொட்டும் நறுமண மலர்களின்
வாய்களை
வண்டுகள் தழுவியே
உறிஞ்சிட வாடின பொழில்களின்
கொடிகள் 108
அரசன் மனைவி வாயுவேகை :
அரசனின் நல்லாட்சி
தன்னில் அழிந்தன பொய்யவை
எல்லாம்
செழித்தன மெய்யவையெல்லாம் நிலைத்தன
செங்கோல் முறையில்
அமர்ந்தனள் திருமகளைப்
போல் அவன் மார்பில்
துயில்வதற்கு
வடிந்திடும் தேன் இதழ்கள் கொண்ட வாயுவேகை என்னும்
வனிதை 109
பொன் பட்டம்
அணிந்த நூதல் பொன்னாடைகள்
தவழும் மேனி
கார்குழல்கள் காலடி தவழ்ந்திட கயல்விழிகள்
காதணி நுகர்ந்திட
மன்னனின் தேவியர்களில்
மலர்ந்து ஓங்கிய செந்தாமரையாய்
வாயுவேகை பட்டத்து
ராணி சுவலன சடியின் இதயத்து
தேனி 110
கோவையாய் சிவந்த
வாயும் குளிர் மணம் தவழும் கூந்தலும்
கருங்குவளை மலரின்
வடிவில் கத்தி போல் நீண்ட கண்களும்
ஐங்கணையான் அளிக்கும்
நோயை அரசனுக்கு அயராமல்
ஈந்து
அரசன் அவளை நோக்க நோக்க அனுதினமும் புதியவள்
ஆனாள் 111
அருககீர்த்தி என்னும்
மகன் பிறத்தல் :
மலரினை வண்டுகள்
தழுவி மதுவுண்டு மயங்கியது
போல்
அரசியின் மேனித்
தழுவலாலே அருககீர்த்தி மகன் பிறந்தான்
சுந்தரன் சுவலனசடியும்
சுந்தர ராணி வாயுவேகையும்
சுவைத்திட்ட இல்லறத்தால்
சுயம்பிரபை மகளும் பிறந்தாள் 112
சுயம்பிரபையின் அழகு சிறப்பு :
செந்தாமரை மலரின்
முகமும் செவியணி குண்டல
ஒளியும்
காரிருள் கவிழ்ந்த
கூந்தலும் கெண்டைமீன் கண்களும்
கொண்டு
கங்கையின் புனித நீர் போல் பிறை திங்கள்
தவழும் வானமாய்
அச்சம், மட, பயிற்பு நாணமும்
அணிகலனாய் ஏற்றாள் சுயம்பிரபை 113
கனி
தனங்கள் தாங்கா இடையொடு
காதணிந்த கற்பகப் பூக்களில்
தாதுண்ண வந்த வண்டுகள் தவழும்
அப்பூக்களின் மேலே
தவழ்ந்திடும் நேரமெல்லாம் தாங்கொணாச்
சுமையினாலே
காமனின் வில்லாய்
வளையும் கன்னியின் புருவங்களிரண்டும் 114
பெண்ணவள் பொன்மேனி
ஒளியால் விண்ணவர் விழிகள்
வருந்த
மண்ணவர் கண்கள்
இவளால் அழகென்னும் சொல்லைக்
கண்டது
சிறு தனங்கள்
வளரும் பொருட்டு செழுமண
சுண்ணங்கள் பூசிட
அணிகலச் சுமையும்
சேர்ந்திட ஆரணங்கு கொடியென
துவண்டாள் 115
செவிவரை நீண்ட விழிகளும் செதுக்கிய
இளமை வடிவமும்
அகிற்புகை மணத்தின்
குழலும் அரும் பவள வாயின்
இதழும்
பளிச்சிடும் முல்லைப்
போன்ற பால் முத்துப்
பற்கள் வரிசை
மன்மதனின் ஐங்கணைகளில்
மலர் முல்லை அரும்பை ஒத்தன 116
வித்தைகள் அனைத்தும்
கற்றாள் விஞ்சையர் வேந்தன்
மகள்
அரசனின் நன் மகள் பிறப்பால்
அஞ்சியே அரசர்கள் பணிந்தனர்
பவளம் போல் சிவந்த வாயாள்
பாவையவள் வயந்த திலகை
சுயம்பிரபை சுந்தரியே
இன்று சுகமான வேனல் வந்ததென்றாள் 117
வேனல் வரவைக்
கூறுதல் :
மது
சொட்டும் மாலை அணிந்த
மறவர் கழல் அணிந்த வேந்தே
பூவிதழ் விரிந்த
பூக்கள் பொழில்களில் தேனைக்
கொட்ட
சிறியோர் கை செல்வம் போல சிறு
மணமும் இல்லா மலர்கள்
இளங்கோங்கு மரத்தில்
பூத்திட இளவேனிற் காலம் வந்ததென்றாள் 118
பூங்கொடிகள் சுமைதாங்காமல்
பொழிலிலுள்ள மரங்களில் படர
தேனுண்ண மொய்க்கும்
வண்டுகள் தேனினை மிகுதியாய்
குடித்து
பூந்தாதில் பெண் வண்டுகளோடு பொருந்தியே
களித்து மகிழ்வது
மாமரத்தின் பூங்கொத்துகள்
மண் தழுவுமோ என்றிருந்தது 119
பாணர்கள் கூட்டம்
போல பாடிடும் தும்பிகள்
எல்லாம்
காமனின் ஐங்கணைப்
பற்றியும் களித்திடும் வெற்றியை
கூறியும்
தொடர்ந்திடும் பாடல்கள்
கேட்ட தோகையராய் மலர்ந்த
மலர்கள்
இதழினால் ஊட்டும்
தேனை இன்பத்தில்
தும்பிகள் அருந்தின 120
மரங்களில் மலர்ந்த மலர்களின் மடியில்
சாய இயலா வண்டுகள்
செவ்வொளி நெருப்பின்
மேலே சிதறிடும் கரித்துகள் போன்றும்
அசோகமரத் தோற்றம் கண்டு அணையா
எரிமலை என விலகி பின்
அதில் பூத்த பூக்கள் தேனை அருந்திட மலர்களை மொய்த்தன 121
மாம்பிஞ்சின் துவர்ப்பு
அறிந்து மரம் விட்டு
பறந்த குயில்கள்
முருங்கமரச் சோலை மலரில் மூழ்கி
தேன் குடிப்பது போல்
பண்பிலா பொருளுடையோரிடம் பலன் பெற யாரும்
செல்லார்
அப்பொருள்களும் வீணேயாகும்
போற்றுவார் யாரும் இன்றி 122
அரசன்
மனைவி மக்களுடன் மனோவனம் எனும் பொழிலை
அடைதல் :
வேல்விழியாள் வயந்ததிலகை
வேனல் வந்த விபரம்
சொல்ல
சுவலனசடி அரசன் தனது சுந்தர
வடிவ ராணிகளுடனும்
சுயம்பிரபை, அருககீர்த்தியுடனும் சுற்றும்
பாதுகாவலருடனும்
இரதநூபுரம் நகரத்தை
விட்டு நாடினர் மனோவனம்
பொழிலை 123
தேமா மரங்கள்
பூக்கள் தூவ தேனிசையை
சிறு குயிகள் பாட
மங்கல வாழ்த்துக்கள்
பாடி மன்னனை தொழும்
மாந்தர்கள் போல
செழித்த இளம் பூங்கொடிகள் செந்துளிர்
மென் கரங்களாலே
மன்னனை வணங்கி
வரவேற்றது மனோவனம் பொழிலின்
அழகு 124
பூம்பொழிலின் பூங்கொடிகள்
பூத்தாதினை மணந்து தூவிட
குங்கும மரங்கள்
எல்லாம் மலர் கொண்டு
சாமரை வீசிட
கோங்கு மரங்கள்
விண்ணளாவி குடைகளென விரிந்து
நிற்க
மன்னனின் வரவைக்
கண்டு மகிழ்ந்தது மனோவனம்
அன்று 125
வேந்தனின் குணங்களைப்
பாடி வண்டுகள் பண்ணிசைப் பாடின
தண்ணிய நறுமணப்
பூக்கள் சாரலாய் அரசனைத்
தழுவின
மலை
அருவி நீரில் நனைந்து
மணங்கமழும் மலரில் புகுந்து
மணமகளாய் வரும் தென்றல் மன்னனை
அணைத்தது அங்கு 126
அரசன் பெண்களுக்கு
பொழில் வளம் காட்டி
விளையாடுதல் :
இளவேனில் பருவம்
ஆனது எதிர்கொண்டு மன்னனை
நோக்க
சோலை வளம் காண்பித்தான் தோகை மயில் ராணிகளுக்கு
அசோக மரத்தளிர்கள் செழித்து
புன்னைப்பூ கொட்டும் தேனும்
பெண்மையின் செல்வம்
போல பெருமை மிக்க வேனல் அது 127
கார்முகில் கூந்தல்
மங்கையீர் கனி சுவை தனங்கள்
உடையீர் – உம்
அழகிய கரங்களைக்
கண்டு அசோகத்தின் தளிர் தழைத்ததிங்கு
குருக்கத்திக் கொடிகள்
எல்லாம் குறு இடை உம் எழிலைக்
கண்டு
நாணத்தால் நெளிந்து
ஆடின நறுந் தென்றல்
வீசியதாலே 128
மங்கையர் உங்கள்
மேனி கண்டு மாமரத் தளிர்கள் வளர்ந்தன
மது
சிந்தும் செவ்விதழ் கண்டு மலர்ந்தன மலர்கள்
மரங்களில்
நீராழி மண்டப குளங்கள் நிறைந்தன
குவளையும் ஆம்பளும்
கண்
போல் தாமரை மலர்ந்து
காமனை மருளச் செய்தன 129
அரசன் திருக்கோயிலை
அடைதல் :
மயங்கிடும் மனைவியரோடு
பொழில் விளையாடல்கள் புரிந்து
இளவேனில் காலம் தந்திட்ட இன்பத்தை
தூய்த்தான் வேந்தன்
மணிக்கற்கள் பதிந்து
கட்டிய மாபெரும் மதில்கள்
சூழ்ந்த
அருகனின் ஆலயம் தொழுதிட அன்றலர்ந்தா
மலர்கள் கொண்டான் 130
வழி
வழியே முன்னோர்கள் தொழுத வாலறிவன் ஜினாலயத்தை
வலமது முறைபடி
சுற்றி வர வாயில்
கதவும் திறந்தது அங்கு
எண்வினைகள் அறுத்த
நாதன் எண்குணங்கள் அணிந்த
வேதன்
மாலவனின் இருப்பிடத்தில் மாணிக்கத்தின்
ஒளி மலர்ந்தது 131
அரசன் கடவுளைப்
போற்றத் தொடங்குதல் :
மன்னனின் மெய்யது
சிளிர்க்க மனமது அருகனை
நினைக்க
இருகரம் சிரம் மேல் விரைந்து
இளம் தாமரை மொட்டாய்
குவிய
இருவினை துறந்த
அருகனின் திருவடிகள்
சிந்தையில் பதிய
எண்குணத்தானைப் போற்றி
எழுச்சியுடன் பாடலானான் 132
அணிகலங்கள் ஏதும் அற்று அருள் ஒளி நிரம்பப்
பெற்று
இயற்கையின் ஒளியாய்
விளங்கி இயல்பினில் எல்லாம்
அறிந்து
பகைகுணம் இல்லா வடிவில் பகையினை
அழித்த இறைவா – உனை
உள்ளத்தால் அறிந்தவர்கள்
உலகினில் உயர்ந்தோராவார்கள் 133
மருவற்ற பொன் வடிவன் என்று ஆகம
நூல்கள் சொன்னாலும்
வலத்திரு மார்பு
தன்னில் சீவத்சம் மருவைப்
பெற்றாய் – என
அருகனைப் போற்றி
புகழ்ந்து அவன் திருவடி
தொழுவதற்கு
கதவினைச் சாத்தி
தாளிட்டு கருவறை முன்னே
நின்றான் 134
விண்வழியாய் இறங்கி
வந்த வெண்ணொளி முனிவரிருவர்
அனைவர்க்கும் பரமனான
அருகனின் திருவடிகள் தொழ
ஜினாலயம் தன்னில்
வந்து ஜினதேவனை வலமாய்
சுற்றி
வெண்மணிக் குரலினாலே
வினை வென்றவனைப் பாடினார்கள் 135
விண்ணவர்கள் போற்றும்
வடிவே வெண்தாமரையில் நின்ற திருவே
சான்றோர்கள் உரையும்
பாட்டும் சன்னிதியில் போற்றினாலும்
அகமயக்கம் உடையோன்
அல்ல அனைத்துயிர்க்கும் அருளும்
உருவே
நின்னிடம் யாம் கொண்ட பக்தி நிறைந்த அன்பால்
மட்டும் தானே 136
போற்றிட்டாலும் புகழ்ந்திட்டாலும் உன் பொன்மனம் மகிழ்வதில்லை
அறிந்தும் யாம் இங்கு நின்று
உன் அறநெறியால் அன்பு கொண்டோம்
குணங்களைப் போற்றிப்
பாடல் குறைவிலா அன்பினால்
தான்
பிறவிகள் அழித்த
பெருமானே போற்றினோம் போறினோம்
உன்னை 137
ஓங்கிய குரலில்
முனிகள் பாட ஒலிகள்
எட்டும் தொலைவு வரையில்
உயிர்களின் தீவினை
ஒழிந்து உவகையில் வாழ்ந்தன
உயிர்கள்
நற்குணங்கள் மலையாய்
நிறைந்த நல்மனம் கொண்ட முனிகள்
கடமைகள் முடிந்த
பின்னர் கண்டனர் மன்னன்
சுவலன சடியை 138
சமண
முனிகள் அரசனுக்கு அறவுரை
பகர விரும்பல் :
தென் தென்றல் தேனாய்
வீசிட தேன் துளிகள்
மலரினில் சிந்திட
வெண்நிலவு நின்று
ஒளிவிட வெண்படிகக் கல்லில்
அமர்ந்தனர்
ஆலய மேடையின் முன்னே
சென்ற அரசாளும் சுவலனசடியும்
முனிவர்களைக் கண்டு மகிழ்ந்து முடி தேய
திருவடிகள் தொழுதான் 139
மாமன்னனுக்கு வாழ்த்துக்
கூறி மேடையில் அமரச் செய்தனர்
மேகலை அணிந்த
தேவியர் சூழ மன்னனும் மேடையில்
அமர்ந்தான்
இருமகள்கள் வாசம் செய்யும் இரதநூபுர
அரிமா அரசே
நலமா என துறவிகள் கேட்க நாவினால் போற்றி
வணங்கினான் 140
( இருமகள்கள் : திருமகள், மலைமகள் )
முனிவரில் மூத்தோனைப்
பார்த்து முடிமன்னன் கேட்க நினைக்க
முனிவரே அன்பால்
நெகிழ்ந்து மன்னனுக்கு மனம் அருளலானார்
கருமமாம் பகைகளை
அழிக்கும் அமிர்தமாம் மொழிகளைக் கேட்க
அரசனே உன் மனம் விழைவு
என அரசனும் இருகரம்
தொழுதான் 141
உண்மை உணர்வில்லா
விதையில் உதிக்கின்ற கர்மங்களெல்லாம்
உயிரினில் கலந்து
தொடர்ந்து உறுதுன்பம் தந்திடும் போதும்
மயக்கத்தில் அதனை நுகர்ந்து மயங்கிடும் உலகின்
உயிர்கள்
எடுத்திடும் பிறவிகள்
எல்லாம் ஏழ்கடல் மணலுக்கு
ஒப்பாம் 142
பழவினைகள் விடாமல்
தொடர்ந்து பற்றிடும் கருமங்களாலே
இப்பிறப்பிலும் இழிவன செய்து இறந்தும்
மறுபிறவி எடுப்பதும்
உயிர்களிடம் அன்பொடு
அறனும் உள்ளத்தே இல்லா உயிர்களும்
ஆழ்துன்பம் நுகரும்
என்று சகநந்தன முனிவர்
சொன்னார் 143
மெய்யறிவுடையோர் ஞானம் கேட்டு
மாலவன் அறத்தை மனதிலேற்று
காதிகர்மங்கள் கடையற நீக்கி மோட்சவீட்டினை முற்றிலும் நாடிட
வேண்டுதல் வேண்டாமை
ஒழித்து முதலும் முடிவும்
இல்லா அருகனின்
திருவடிகள் சரணம் அடைய தீர்ந்திடும்
பிறவிகள் தந்திடும் சுகம் 144
பொருள்களின் தன்மையை
உணர்ந்து அதன் குணத்தை
மனதில் நிறுத்தி
ஆகமத்தின் ஒழுக்கம்
நின்றால் அருகன் கூறிய மும்மணியாகும்
ஊழ்வினைகள் துன்பம்
போக்கி உடன் வரும் தீவினைகள் அழித்து
மோட்சமாம் வீட்டினைத்
தரும் மும்மணிகள் ஒன்றே வாழ்வில் 145
பிறவியின் துன்பம்
போக்கும் பெருமையுடைய ரத்னத்திரயத்தை
சமண முனிவர்கள் அருளினாலே
சிந்தையில் பதியச் செய்து
அறவுரையைக் கேட்ட மக்கள் அனைவரும்
உள்ளம் தெளிந்து
பிறவிகள் நீங்கப்
பெற்ற பயன்களை பெற்றதற்கு
ஒத்தனர் 146
முனிவர்கள் அருளுரைக் கேட்ட முடிமன்னன்
சுவலனசடியும்
உண்மைப் பொருளினை
உணர்ந்து உள்ளத்தில் நல் ஒளியனாகி
உடன் வந்த உற்றோர்
உறவினரும் ஒரேமகள் சுயம்பிரபையும்
உற்றதோர் நோன்பினை
ஏற்க உள்ளத்தில் முடிவு செய்தனர் 147
அறிவுரைகள் கேட்டப் பின்னர் அம்முனிவர்கள்
அடிதொழுது
ஆலயத்தை வலமாய்
வந்து அங்கிருந்து அகன்றான்
அரசன்
சோலையில் தங்கி மகிழ்ந்து தேவியருடன்
ஆடி களைத்து
அனைவரும் படையாய்
சூழ அடைந்திட்டான் இரதநூபுரத்தை 148
சுயம்பிரபை நோம்பினால்
மேம்படுதல் :
கண்கவர் பொன் மேனி
கொண்ட கார்குழலாள் சுயம்பிரபை
மேற்கொண்ட நோம்பின்
செயலால் மேலுலக அழகி ஆனாள்
நோம்பினை முறைப்படி
செய்தாள் நெஞ்சத்தில் அருகனை தொழுதாள்
குறைவற்ற மனத் திடத்தால் குன்றாத
பெரும் பெருமை பெற்றாள் 149
மெய்நூலில் எழுதிய
நோன்பை மனம் ஊன்றி செய்தனாலே
நல் நெய்யின் வேள்வித் தீ போல்
நன் பொன்னாய் ஒளிர்ந்து நின்றாள்
சக்கரவாளம் சிறப்பு
நோம்பை சரிவர செய்து
முடித்த பின்பு
அருகனுக்கு திருவிழா எடுத்து அனைவரையும்
மகிழச்செய்தாள் 150
அனைத்துப் பொருள்களுக்கும் ஆதியாய்
நின்றவன் நீ
அறிதற்கரிய நல் அறங்களை
அளித்திட்ட அருளன் நீ
மெய்யறிவு அனைத்துமுடையா
மெய் ஞான முதல்வன் நீ
தாமரை மலரில்
நடக்கும் தலைவனே போற்றி போற்றி 151
காமத்தை சினந்து
வென்று கதிநான்கை அழித்தவன்
நீ
கூற்றுவனை வெற்றி
கண்ட குறைவற்ற மா வீரன்
நீ
திருவான மறுவை அணிந்த தெய்வத்திரு மார்பன் நீ
மலர் மழையை பெற்ற தேவா மங்கையை
வாழ்த்துவாய் நீ 152
அனைத்துயிர்க்கும் அருளுகின்ற
அழியாப் பரம்பொருள் நீ
அடியவர்கள் துயர் போக்கி அருளுகின்ற
உள்ளம் நீ
திவ்யத்தொனி அறம் தந்த சிறந்த
உபதேசிகன் நீ
உன்
சீரடியைப் பணிகின்றேன் சிறியவளை
வாழ்த்துக நீ 153
இருவினைகள் அழித்தவனை
இருவிழிகள் நீர் சொரிய
மலர் கொண்டு
அர்ச்சித்தாள் மலர் எடுத்து
சிரம் கொண்டாள்
வழிபாடு முடிந்த
பின்னால் வலம் வந்து கை
தொழுதாள்
வழிபாட்டுப் பொருள்
பெற்று வந்தடைந்தாள் தந்தையிடம் 154
தந்தைக்கு தன் வரவு சொல்லி
தான் சென்றாள் தந்தையிடம்
வழிபாட்டுப் பொருள்
தந்து வணங்கி நின்றாள்
மன்னனிடம்
முல்லைப் பூ மாலை அணிந்த
முத்து மகள் ரத்தினத்தை
உச்சிமோந்து உவகை கொண்டான் உலகாளும்
மன்னன் அவன் 155
அரசன் மகளைப்
புகழ்ந்துரைத்தல் :
தேன் சிந்தும் பூங்கொத்தில் இனிது செந்தளிர்
மாமரத்தின் கொத்து
தினம் மயக்கும்
வசந்தத்தின் தென்றல் ஆனாய் என் மகளே
நீ
எனக்கு பிறந்த பின்னர்
நித்திலத்தின் வேந்தர் எல்லாம்
என்
அடி பணிந்து நின்றார்கள்
என மொழிந்தான் சுவலனசடி 156
உயர் கங்கை நீர் பாய்ந்தால்
உவர்கடல் நீர் நன்னீராகும்
கடல் சூழ்ந்த
உலகத்தினோர் கற்றறிந்த சொல்லாடலாகும்
உன்
உதயம் நம் குலத்தின்
உயர் பெருமை பெற்றதாலே
கடல் எல்லை உலகத்தினோர் கடவுள்
என தொழுகின்றார்கள் 157
இளம்பரிதி கண்டு மயங்கி
தன் இதழ்
விரிக்கும் செந்தாமரைகள்
தழைத்து நின்ற பொய்கையிலே தீய உயிர்கள் செல்லாதங்கே
பாவையே நீ தோன்றிய பின் பகைவரின்றி போனார்
இங்கு
இரதநூபுர நகரம் தன்னில் நலிவடைந்தோர்
யாருமில்லை 158
வானத்தில் வளர் திங்கள் வர வையகத்து இருள் நீங்கியதால்
வையகமே மகிழ்ந்து
நின்றது வெவ்விருள் அழிந்ததனால்
புனுகொடு அகிற்புகை
மணக்கும் பூங்குழலாள் நீ பிறந்ததனால்
பகை
இருள் முற்றும் நீங்கி
பாய்ந்தது சுகம் இந்த நாட்டில் 159
மலர்களில் மல்லிகை
என்றும் மணத்தில் சிறந்தோங்குதல் போல்
செண்பகமரக் காட்டினுள்ளே
சேர்ந்திசைக்கும் வண்டுகள் போல்
மங்கையரில் சிறந்து
நிற்கும் மாசற்ற திருமகளே
உன்னால்
மண்ணுலகம் என்று புகழும் நம் உலகமும் சிறப்பு
பெறும் 160
அரசன் தன் மகளைப் பற்றி எண்ணுதல் :
அணிகலங்கள் மிகு சுமையால் அஞ்சியே
கெஞ்சும் இடையால்
சுவலனசடி சொல்லலானான்
செல்லமே நீ மெல்ல நடயென
அன்னையவள் காத்திருப்பாள் அமுதுண்ணும்
நேரம் இது
அவள் அரண்மனை
நீ சென்றாள் அவள் மனம் மகிழும் என்றான் 161
மண்ணுலகின் பெரும்
பொருளும் விண்ணுலகின் அரும் பொருளும்
நல்வினைகள் பயன்களினால்
நன் மக்கள் பெற்றிடினும்
பெண்களுக்கு அருங்கலமும்
பெண்மையின் அருஞ்சிறப்புடைய
தன்
மகளை மணங்கொள்பவன் தவப்பலனோன்
என நினைத்தான் 162
நெய்யணி நீண்ட குழலுடையாள் நெற்றி
மூன்றாம் பிறையுடையாள்
கண்ணென வளர்த்த
மகளுக்கு கணவனாய் கரம் பிடிப்பதற்கு
முகில் முத்தும்
வெள்ளி மலையில் மூத்த நெடுங்குடியில் பிறந்த
கைவேல் பெரும்
படை கொண்ட காளையவன்
யாரென நினைத்தான் 163
ஈயத்தில் தன்னைப்
பதிந்திட்டாலும் உயர் மணிகள்
மறுப்பதில்லை
நற்குணங்கள் இல்லையெனினும்
நங்கையர் கணவனை வெறுப்பதில்லை
உயிரில் கரைந்த
பெற்றோர்கள் உற்றவனைத் தேர்ந்தெடுத்தாள்
தன்
உள்ளம் சேராவிட்டாலும் தன் தடம் மாறிப்
போவதில்லை 164
காமத்தின் நோக்கம்
அதை காதலால் தான் உணர முடியும்
மற்றோரின் உணர்ச்சியினை
மனம் அளந்து அறிந்துவிடும்
அறநூலைப் படித்து
அறிந்து அதன் வழியே நடப்பவனை
சுற்றியே இருக்க
வேண்டும் சுயம்பிரபை சொல்லும்
செயலும் 165
அரசர் வாழ்க்கையும்
அமைச்சர்களும் :
அரசனின் வாழ்வும்
ஆட்சியும் அடைந்தன இரண்டுக்குள்ளே
தன்
உணர்வு ஆவது ஒன்று ஏனையோர் கூட்டுறவாவதொன்று
தன்
உணர்வில் செய்யும் செயல் தன் செயலே ஆகும்
என்றும்
அமைச்சர்கள் கூறும்
உரை அடுத்தவர் கூற்றின்
செயலாம் 166
குளிர் நீரில் தாமரை வாழினும் மலர்வது
ஞாயிறின் ஒளியால்
அரசனின் நல்வினை
வாழ்க்கை அறிஞர்களால் விளங்கி
நிற்கும்
நாடிய தன் இடத்தை அடைய நல் காற்றோடு
கப்பல் செல்லும்
அறநூல் அறிந்த
அமைச்சனால் அரசட்சி வெற்றியை
தொடரும் 167
முனிவர்கள் தவ ஒழுக்கமும்
முடிமன்னர்கள் சிறந்த வாழ்வும்
மந்திரத்தோடு இணைந்திடில்
மாண்புற்ற பெருமையடையும்
சுவலனசடி மன்னன்
மனதில் சுழன்றிட்ட இவ்வெண்ணத்தாலே
அமைச்சர்கட்கு செய்தி சொல்லி
அழைத்திட்டான் அரச அவைக்கு 168
இரதநூபுர
சருக்கம் முற்றிற்று.
5.மந்திரச்சாலை சருக்கம்.
அமைச்சர்கள் மாண்பு
:
வெண்நிறத் திண்ணைகள்
எல்லாம் வெள்ளியால் பதியப் பெற்று
வெளியார் ஒலி கேளாவண்ணம் அமைத்திட்ட மந்திரசாலையில்
நிறை கல்வி அறநெறியடைய நேர்மையின்
அமைச்சர்களெல்லாம்
மன்னனின் ஆணையை கேட்டு மந்திரசாலையில் கூடினர் 169
மண்ணுலகு ஆளும் மன்னனுக்கு மண்டிய
நல் வினை இருப்பினும்
அறநெறி ஆகம நூல்கள் பகரும்
அறிவுத்திறன் உடையாதவர்கள்
வளையாத செங்கோல்
ஆட்சியில் வருகின்ற கடும் இழிச் செயல்களை
தடுத்திடும் ஆற்றல்
எல்லாம் தகைச்சான்ற அமைச்சர்கள்
மாண்பு 170
வெண்கொற்றக் குடைநிழலில்
வீற்றிருக்கும் அரசனாயினும்
வீழாத செங்கோல்
ஆட்சிக்கு விதையென இருப்போர்
மந்திரிகள்
நன்னெறி நூல்கள்
அறிந்த நல் திறம் அமைச்சர்கள் சொல்லால்
ஆட்சியின் சுமையைத்
தாங்கி ஆள்வதும் மன்னன்
இயல்பே 171
நல்லற நூல்கள்
அறிந்தும் நல் வினைகள் எடுத்து சொல்லியும்
பழியுடை நெறிகளை
அழித்து பகைவரை ஒடுக்கும்
உபாயமும்
நற்குணம் உள்ளத்தில்
ஏற்று நன்மைகளை ஆராய்ந்து
கூறும்
அமைச்சர்கள் அரசனுக்கமைதல்
அரிய பெரும் புதையலாகும் 172
உலகினை தன் அடிபடுத்த உபாயங்கள்
இரண்டு உண்டு
மன்னனின் தோள் வலிமையும் மந்திரிகள்
சூழ்ச்சித் திறனும்
ஒருவகை நோக்கிப்
பார்க்கின் ஊழ்வினை உடன் வந்தாளும்
சூழ்ச்சியின் திறமை கொண்டு மங்கையரும்
மண்ணில் சிறப்பர் 173
நல்
நூல்கள் மன்னனுக்கு நவில்வன
மூன்று ஆற்றலாம்
அறிவு, பெருமை, முயற்சி மூன்றில்
அறிவுத்திறன் சூழ்ச்சியாகும்
அமைச்சரின் அறிவின்
சூழ்ச்சி அரசனின் அறிவோடிணைந்தால்
அரசனுக்கு இம்மண்ணுலகில்
அருந்திரு வேறொன்றில்லை 174
மங்கையரின் இன்பத்தில்
மயங்கிய மன்னனின் நல்லாட்சித்
திறன்
மந்திரிகள் நல் சூழ்ச்சி
இன்றில் மாண்பினைப் பெறாது
போகும்
அறநூல்கள் முற்றும்
அறிந்த அமைச்சனின் சூழ்ச்சி
பிறழின்
அரவத்தால் தீண்டிய
ஒருவன் அழிவது போல் அவ்வாட்சி வீழும் 175
மெய் அறநூல்கள் உணர்ந்த
மேன்மைமிகு அமைச்சர்களே
மெய் நூல்மதி நுட்பத்தோடு
நவின்றிடும் உம் அறிவின்
திறனால்
அரசனாய் நான் இருப்பதோடு
நல்லாட்சி நடத்துவதெல்லாம்
அமைச்சராய் நீங்கள்
அமைந்தது அரசன் என் சிறப்பே என்றான் 176
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன்
யாவன் என்று கேட்டல்
:
சுருள் தாழைமலர்
மாலை அணிந்த சுவலனசடி
மன்னன் கேட்டான்
சுயம்பிரபை அழகிற்கு
ஏற்ற சுந்தர உயர்குடியோன்
யாரென
சுச்சுதன் என்னும்
அமைச்சன் சூட்சும முறைகளை
ஆராய்ந்து
அவன் அறிவொளி
வெளிப்பட அரசனுக்கு எடுத்து
சொன்னான் 177
அஞ்சுதல் இயல்பே
இல்லாத அறமுடைய வெள்ளிமலை
வேந்தே
வெள்ளிமலை வடபகுதியில்
வித்யாதர் நம் உலகம் உண்டு
மண்ணுலகில் வாழ்வோர்க்கு
விண்ணுலகம் போன்றது அது
நல்வினை முற்றும்
அற்றோர் நகரினுள் செல்லல்
அரிது 178
அறுபது அழகிய நகரங்கள் அவ்வடசேடி நாட்டில் உள்ளது
இரத்தினப் பல்லவம்
என்ற பொன்மணி இழைத்த
நகரமொன்று
விண்ணுலகம் இடம் பெயர்ந்து வெள்ளிமலை
வந்தாற் போன்று
இரத்தினப்பல்லவ நகரம் இன்பத்தில் ஆழ்ந்துள்ள
நகரம் 179
மலர் அணிந்த
கார்குழலும் மெலிந்த சிற்றிடையும் கொண்ட
கன்னியர்கள் ஊடலைத்
தீர்த்தல் காளையர்கள் தொழிலேயாகும்
ஊடலில் தெளிந்த
மங்கையர் உவந்து தம் மதனை அணைக்க
மென்தனங்கள் அழுத்தத்தாலே
மலர்மாலை வண்டுகள் நசுங்கும் 180
செவ்விதழ் உறும் தேனினை உறிஞ்சி செந்தோள்
ஆடவர் கலவி ஒவ்வார்
வாளென நீண்ட வரிபடர் விழிகள்
வயப்பட்டு நிற்பது வனிதையரழகு
அப்பெரு நகரின்
அரிமா அரசன் மயூரகண்டன் மனைவி நிலாங்கனை
இருவரும் பெற்ற இளவரசன் தான் சுவக்கிரீவன் எனும் சுந்தரனாவான் 181
சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிபட்டது :
வீரக்கழல் கால்களில்
அணிந்து மாலைகள் பல மார்பில் ஏற்று
சுவக்கிரீவ மன்னன்
என்றும் சுந்தர புருஷனாய்
திகழ்வான்
விண் மதி தவழ்ந்து
திரியும் வித்யாதர மலையரசர்களும்
மண்ணுலக மன்னர்களும்
பணிந்திடுவர் அவன் கட்டளைக்கு 182
பழம் பெருமை சுற்றத்தார்களும் புகழ் பெற்ற
ஆணையுருளையும்
நற்குலத்தில் தோன்றிய
சிறப்பும் நன்கறிந்த வித்தைகள்
பயிற்சியும்
எண்ணியதை நொடியில்
முடிக்கும் எழுச்சியுடை படைகள்
கொண்டு
எவ்வுலகிலும் தன்னிகரற்று எவரும் போற்றும் சுவக்கிரீவன்
அவன் 183
சுவக்கிரீவ மன்னனின்
தம்பிகள் நீலரதன் நீலகண்டன்
இருவர்
மகரமீன் பெருவாய்
கொண்ட வயிராமா கண்டன்
ஒருவன்
ஆண் பெண் வண்டுகள்
மொய்க்கும் மலர்மாலை கொண்டவன்
என
நற்தூண்கள் போன்ற நால்வரும் நமனை மிஞ்சிய தம்பியர்கள் 184
அரசனின் அமைதிப்
படைபலம் அவன் பொருள்
சிறப்பின் நிலைமை
அவனுக்கு நிகர் மூவுலகில் அவனின்றி
வேறொருவர் இல்லை
அறநூல்கள் அறிந்த
அமைச்சன் அரிமஞ்சு என்னும்
பெயரானும்
முக்காலம் உணர்ந்து
கூறும் நிமித்திகன் சதவிந்தும் அவனவையில் 185
வேந்தனை சரணடைந்தோர்கள் வேறு தெய்வத்தை போற்றாதாவர்
திறை செலுத்தும்
அரசர்களும் தேடமாட்டார் வேறொரு
கடவுளை
களிறு நூறும்
எடுக்கா கல்லினை கரங்களால்
உருட்டி ஆடிட
அவன் ஆற்றல்
அறிவும் கண்டு அஞ்சினார்
வித்யாதரர்களெல்லாம் 186
சுயம்பிரபை பிறக்கும்
முன்னே சுவக்கிரீவனுக்கு திறை தந்தோம்
செல்வி அவள் பிறந்த பின்னே
செல்வத்தை அவன் ஏற்கவில்லை
என்னுள் எண்ணம்
கூறுகிறது சுயம்பிரபை சுவக்கிரீவனுக்கென்று
மணம் செய்து
கொடுத்தோமாகில் மலை மன்னர்கள்
நமக்கஞ்சுவர் 187
சச்சுவன் சொல்லியதெல்லாம் சத்திய
வார்த்தைகள் என்றும்
பவச்சுத அமைச்சன்
சொன்னான் பகர்ந்திடுவேன் ஒரு குறையென்று
சுயம்பிரபை உதித்த
நாளில் சுற்றி வரும் விண்கோள்கள் எல்லாம்
செவ்வனே அமைந்தது
என்று செப்புது பிறந்த
நாள் குறிப்பு 188
ஆழ்கடல் சூழ்ந்த
நாட்டின் அரசன் மகன் இளவரசாகி
அவள் மீது முழுகாதல் கொண்டு
அவளையே வினைவழி மணந்து
கோப்பெருந்தேவி என்னும்
சிறப்பினைப் பெறுவாள் சுயம்பிரபை
இவளை மணங்கொண்டு ஏற்பவன் ஏற்றிடுவான்
செங்கோல் தன்னை 189
சுவக்கிரீவன் வாழ்நாள்
காலம் ஊழி போல் கழித்தவன்
ஆவான்
இளம்பூவாய் இதழ் விரித்த மகள் ஏந்திழையாள் தேவியாவாளோ
சுவக்கிரீவன் முடிமன்னனுக்கு கனகசித்திரை
பட்டத்து அரசி
பெருந்தேவி பட்டச்
சிறப்பு சுயம்பிரபை அடைவாளில்லை 190
விண்ணுலகத்தவரும் அஞ்சும்
வாரிசுகள் ஐநூறு பேரில்
இரத்தினகண்டன் பெயருடையான்
விஞ்சையர் அஞ்சும் இளவள்
கின்னரகீதம் என்னும்
நகரின் கீர்த்தியுடை பவனஞ்சன்
என்பவன்
சுயம்பிரபைக்கு ஏற்ற கணவன் என்று பவச்சுதன் கூறுமுடித்தான் 191
அமிழ்தபதி நாட்டை
ஆளும் வேகதரன் வலிய தோளான்
மேகபுரத்து நாட்டின்
இளவரசு பதுமதரன் ஓர் சிறந்த வீரன்
ரத்தினபுர ராஜ்ஜியத்தின்
சுவர்ணதரன் நற்குலத்தோன்
கீதமாபுரம் கோலோச்சும்
அர்கண்டன் திருமாலை ஒத்தான் 192
திரிபுர பெரும்
நகரையாளும் நளிதாங்கன் கல்வியாளன்
சித்திர கூடத்தின் இளவரசன்
ஏமாங்கதன் சயந்தனுக்கு நிகர்
அச்சுவபுர நாட்டு
தலைமகன் கனகசித்திரன் மற்போரான்
திருநிலையம் நகர் அரசமகன் சித்திராதன்
தேருடையான் 193
கனகபல்லவத்து அரசமகன்
சிங்ககேது சினந்து பகையழிப்பான்
இந்திரசஞ்சயதரசன் மகன் அருஞ்சயன் அரிய போராளன்
பலநாட்டு மன்னன்
மகன்களை பவச்சுத அமைச்சன்
சொன்னான்
பார்த்து ஆய்ந்து
தேர்ந்தெடுத்து பவனஞ்சன் பெயரை மொழிந்தான் 194
சுதசாகரன் என்னும்
அமைச்சன் சுவலனசடிக்கு சொல்லலானான்
பவச்சுதன் பகர்ந்தவை
எல்லாம் பழுதற்ற உண்மை எனினும்
கின்னர நகரின்
இளவரசன் பவனஞ்சன் மணந்தானாகில்
சுவக்கிரீவ அரசன் பகைமை சுவலனசடியின்
மேல் எழுமே 195
சுரேந்திரகாந்த நாட்டை
ஆளும் மேகவாகன் மன்னன்
உள்ளான்
மேகவாகனன் பட்டத்தரசி
மேகமாலினி என்னும் மங்கை
தெய்வத்தைப் போற்றி
வணங்க தெய்வமே தந்த பிள்ளையென
சுரேந்திரகாந்தமே மயங்கும்
இளவரசன் விச்சுவன் ஆவான் 196
முன்பிறப்பில் விச்சுவன்
தேவலோகம் ஆண்டு வந்தான்
இப்பிறப்பில் விஞ்சை
ஆள வேண்டி வந்தவன்
போலவானான்
தன்னையே மேன்மையை
ஆக்கி தன்னின் அறியாமை
போக்கி
தானே தன் குறிக்கோள் ஆக தரணியர் அவனைக்
கண்டஞ்சுவர் 197
விச்சுவன் தங்கை ஒருத்தி வேல் விழியாள் சோதிமாலை
கற்பகக் கொம்பை ஒத்தாள் காண்பவர்
கள்ளுண்டாராவார்
நறுமணம் வீசும்
கூந்தலோ கார்மேகம் கவிழ்ந்ததாகும்
அருககீர்த்திக்கு ஏற்ற மனைவி அவளே என்பது
என் எண்ணமாகும் 198
சுயம்பிரபை விச்சுவனை
மணப்பாள் சோதிமாலை அருக்கீர்த்தி மனைவி
சுதசாகரன் முடிவினைக்
கூற சுமந்தரி கூறினான்
விச்சுவன் பற்றி
இன்னிசைப் பாடல் விரும்பான் ஏந்திழையார்
நடனம் காணான்
விண் மண் உலக இன்பம்
நீக்கும் கடவுளர் தன்மையுடையான் 199
மேகவாகன மன்னன்
சென்றான் அருகனின் ஜினாலயத்திற்கு
அர்ச்சனைகள் சிறப்பாய்
செய்து அருகனுக்கு திருவிழா
செய்தான்
அவதிக் ஞானம் பெற்று
திகழும் யசோதர முனிவரை
வணங்கி
தன்
மகன் விச்சுவனப் பற்றிய வரலாற்றை
விரும்பி கேட்டான்
200
பவகிரி மன்னன்
சயசேனனுக்கும் பட்டத்துராணி பிரீதிமதிக்கும்
விசயபத்திரன் பெயரில்
பிறந்து தவத்தால் சாசாரலோக
தேவனானான்
மன்னனின் மகனாய்
பிறந்திடினும் மனமது தவத்தை
நாடியதால்
தேவனாய் பிறந்து
மகிழ்வான் சேர்ந்திடான் குடும்ப
பந்தத்தில் 201
சுயவரம் அமைந்திட்டாலோ
சுவக்கிரீவனுக்கு அஞ்சவேண்டும்
சுற்றியுள்ள அரசர்கள்
செயலை சிந்தித்துணர இயலாதென்றான்
சிந்தித்து நன்கு முடியுமென்று செய்திடும்
செயல்களும் நமக்கு
எதிர் விளைவாய்
முடிவதும் கூட ஊழ்வினை
ஆற்றலினால் தான் 202
ஊழ்வினைச் செயலை அறிந்து
உறுதியுடன் உரைப்பவனும்
அரசகுலம் தழைப்பதற்கு
ஆவன அனைத்தும் செய்பவனும்
நுண்ணிய நூல்களில்
தேறிய நிறைந்த அறிவு கொண்டவனும்
நிமித்திகன் நம் சதவிந்துவே
மணம்
பற்றி சொல்லட்டும் என்றான்
203
அமைச்சர்கள் அனைவரும்
சுமந்திரியின் சொல்லை ஏற்று
அரசனே நேரில்
சென்று நிமித்திகனைக் கேட்கச்
சொல்ல
அரசனும் அவையைக்
கலைத்து அமைச்சர்களை போகச் சொல்லி
அரண்மனை சென்றடைந்தான்
அகத்தினில் மகிழ்ச்சி பொங்க 204
அரசன் நிமித்திகனிடம் செல்லல்
:
கச்சையணிந்த கன்னியர்கள்
செழும்பொன் கலத்தில் அன்னமிட
இன்னிசைக் கருவிகள்
இசைக்க இன்பமாய் உண்டான்
மன்னன்
தேன்மலர் மாலைகளோடும்
செம்பொன் அணிகலங்களோடும்
தேரினை தன் மாளிகையில் விட்டு
தெருவினில் நடந்து சென்றான் 205
காலணி வீரக்கழல்
ஒலிக்க செவியணி குண்டலம்
ஒளிர
மலரினில் சொட்டும்
மதுவுக்கு வண்டுகள் போட்டியில்
மோத
வாளொடு வேல்கள்
ஏந்திய வீர மெய்க்காப்பாளர்கள் சூழ
சோதிட நூற்கலை
வல்லோன் சதவிந்து வாயிலை
அடைந்தான் 206
என் குலம் மேன்மையடைய
என் இல்லம் வந்த வேந்தே
வெற்றியுடன் வாழ்வீர்
என சதவிந்து வாழ்த்தி
வணங்க
மன்னனவன் கொண்டு
வந்த மங்கலப் பொருள்களையெல்லாம்
இல்லத்தில் பரக்க வைத்து ஏவலர்கள்
விலகினார் வெளியே 207
அகிற்புகை நிறைந்து
மணந்து நறுமண மாலைகள்
விரிந்த
மண்டபம் தன்னை அடைந்தான் மனதினில்
மகள் மணநினைவில்
மன்னனின் மனதின்
ஓட்டம் மகளின் மணவினை
செயலே என்று
நுண்ணிய நூல் அறிவினாலே
நிமித்திகன் சதவிந்து சொன்னான் 208
மணிமுத்து மாலைகள்
அணிந்து மருளும் மான் விழிகளோடு-
உமை
வலம் கொண்ட வஞ்சியாலே வந்தது
மங்கல நிகழ்வென்றான்
பொற்கொடியாள் சுயம்பிரபையின் பொற்கரம்
பற்றும் மணவாளன்
அருகன் அருளிய
மகாபுராணம் ஐயமின்றி உரைக்கும்
என்றான் 209
நிறைமெய் புகழோன்
சுவலனசடி நிமித்திகன் மொழியில்
மகிழ்ந்து
மங்கை சுயம்பிரபைப்
பற்றி மகாபுராணத்தில் எதுவென்று
கேட்க
மண்ணுலகில் இரு கண்டங்களுள அதில் தென்திசை
பாரதகண்டம்
அங்கு கற்பக மரத்தினோடும் சங்கநிதி
பதுமநிதி கொண்ட நாடு 210
போகபூமி தன்மை நிலைமை நீங்கி
கருமபூமியாய் மாறிய பின்
உயிர்களின் துன்பம்
போக்க அறவாழி அருள் ஒளியானார்
பசி போக்கும் அறநெறிகளையும்
பாமரரில் பலப் பிரிவுகளையும்
அவர்களின் தொழில்களையும்
அவனிக்குக் கொண்டு வந்தார் 211
அருகனின் திருவருளைப்
பெற்ற அவனியை ஒரு குடையில்
ஆண்ட
பரதன் என்னும்
ஓர் அரசன் பார்புகழும் சக்கரவர்த்தியாவான்
அருகனுக்கு அர்ச்சனைகள்
செய்து அந்நாட்டின் எதிர்காலம்
கேட்க
பரதனின் கேள்விகளுக்கு
பரமன் தன் பதிலைத் தந்தார் 212
என்னோடு பன்னிருவர்
நாதர் உனைச் சேர்த்து
ஈராறோரும்
ஆழி
ஆணையர்களாக இந்த அவனியில்
அவதரிப்பார்கள்
மன்னராய் பல வாசுதேவர்களும் பகைவராய்
பிரிதி வாசுதேவர்களும்
தனித்தனியே ஒன்பதின்மராய்
தரணியிலே தலைவர்கள் ஆவர் 213
பரதனே உன் மகனான மருசி போதன
மாநகர் உரிமையனாகி
போற்றிடும் அரச குலத்தில் முதல் வாசுதேவனாய் பிறப்பான்
இரத்தினபல்லவ சுவக்கிரீவனையும் அவன் ஆழியுருளையும் அழித்து
அருந்தவப் பயனால்
அவன் அமரலோக தேவனாய்
பிறப்பான் 214
தேவ
ஆயுள் காலம் கழிந்த பின்
திவிட்டனாய் மண்ணில் பிறந்து
மாபுராணம் கூறிய வாசுதேவன் இப்பிறப்பின்
திவிட்டன் ஆவான்
சுரமையின் அரசன் பயாபதியின் இருமகன்களில்
இளைய மகன்
இங்கு கூறிய திவிட்டன் ஆவான் சுயம்பிரபையின் கணவனுமாவான் 215
இவ்விருவரின் மணம் முடிந்தால் சுவக்கிரீவனை
திவிட்டன் கொல்வான்
தென்சேடி வடசேடி
இரண்டையும் திவிட்டனே உனக்குத்
தருவான்
திவிட்டனின் திறமையைப்
போற்ற நிமித்திகன் ஒன்று சொன்னான்
தன்
கரங்கள் உதவி கொண்டு
சிங்கத்தின் வாயினை கிழிப்பான் 216
நிமித்திகன் கூறிய மொழிகள் நிறை மன மகிழ்வில்
மன்னன்
செம்பொன்னை மழையாய்
பொழிந்து சோதிமாலை நகரைத்
தந்தான்
அரண்மனை திரும்பிய
சுவலனசடி அந்தப்புரம் நேரே சென்றான்
அவன் அரசி வாயுவேகைக்கு நிமித்திகன்
மொழிந்ததை சொன்னான் 217
மக்கட்பேறின் மண்பைக்
கூறல் :
அரசகுலங்கள் என்றென்றும்
அரிய கற்பக மரம் போலாகும்
அதன் கிளைகள்
அத்தனையும் அரசர்களின் அரசிகளாகும்
கிளைகள் ஈனும் பூங்கொத்துகள் கிடைத்தற்கரிய
மக்களாகும்
பூக்களில் சொட்டும்
தேன் துளிகள் அனுபவத்தின்
ஆசான்களாகும் 218
நறுமண மலர்கள்
மலராத செந்தளிர் கொண்ட சோலையும்
தாமரையின் பூக்கள்
பூக்காத தண்ணீர் நிறை தடாகங்களும்
இளம்பிறை வானில்
இல்லாத இளமாலைத் தென்றல்
பொழுதும்
மக்கள் பேறு இல்லா மனையும்
மனையறம் இல்லாத் தன்மையாம் 219
பொன்னோடு பொருளும்
மணியும் பொற்குவை செல்வம்
பெறுதல்
மண்ணில் வாழ் மனிதர்களுக்கு மட்டில்லா
எளிய செயலாகும்
பெருமையும் புகழும்
சேர்ந்த பிள்ளைகள் பெறுவதென்பது
மண்ணுலக மாந்தர்களுக்கு மாண்பினில்
மிக அரியதாகும் 220
அகலினில் ஏற்றிய
விளக்கு அகற்றிடும் இல்லத்து இருளை
சுயம்பிரபை சிறந்த
குணங்கள் சுடர்மணிகள் போல ஓளிரும்
வலம்புரி சங்கின்
முத்துகள் வையகத்தில் உயர்ந்தது
போல்
வாய்த்திடும் மக்களால்
நம்குலம் வளர்ந்தோங்கி மண்ணில் திகழும்
221
மானின் மருள் பார்வையுடைய மன்னனின்
மாதரசி வாயுவேகை
மனமது மகிழ்ந்து
சொன்னாள் மன்னன் மகள் பெருமையுடையாள்
அரசனும் மகிழ்ந்து
போனான் அரசியை அணைத்துக்
கொண்டான்
மார்பணிந்த மலர்மாலையில்
மழையென மதுக்கள் சிதறின 222
அரசனும் அருககீர்த்தியும் அரச அவை தன்னை கூட்டினர்
மன்னனும் மந்திரிக்கு சொன்னான்
சதவிந்து சொன்ன செய்தியை
அமைச்சர்கள் அகம் மகிழ்ந்து அனுப்புவோம்
தூதரை சுரமைக்கு
நல்நூல் கற்று அறிந்த மருசீ நலம் கூறும்
தூதுவன் என்றனர் 223
சொற்களின் செல்வன்
ஆகவும் சொல்லினை ஆய்ந்து
கூறவும்
ஆற்றலில் வல்லவனாகவும்
அரச தூதினில் சிறந்த மருசீயை
சுவலனசடி மன்னன்
அழைத்து சிறப்புகள் பலவும்
செய்து
திருமுகத்தை மன்னன்
தந்திட திரண்ட மகிழ்வில் மருசீயும் பெற்றான் 224
போதனமாபுரம் நகரின்
வெளியே புட்மமாகரண்டம் பொழிலில்
பூவிதழ் விரியும்
ஓசையில் பொன்நிற தேன்துளிகள்
சொட்டும்
மதுவினை உண்ண வண்டுகள் இசைத்திடும்
ஒலிகள் பெருக
வான் வழி பயணித்த மருசீயும்
வந்து இறங்கினான் அப்பொழிலில் 225
மந்திரசாலை சருக்கம்
முற்றும்.
6.தூது விடு சருக்கம்.
பொழிலிலுள்ள மரங்கள்,
கொடிகள் :
நறுமண மலர்கள்
பூத்து குலுங்கி நல்மது சொட்டும் மகிழ மரங்கள்
நீர் முகில்கள்
நிறைந்தார் போல் நிழல் சூழ்ந்த தேமா மரங்கள்
செந்நிறத் தளிர்கள்
தழைத்த சுரபுன்னை மரங்கள்
தோப்பும்
நெற்பொரியாய்
பூக்களோடு நிறைந்த புனுகு மரங்கள் பொழிலில் 226
குளிர்நிறை தழைகள்
கொண்ட குளிர்ச் சந்தன மண
மரங்கள்
மனதினை அள்ளி விசிறிடும் மலர் மிகு செண்பக
மரங்கள்
அன்றலர்ந்த இளம்பூக்களின்
அழகு சொட்டும் குரா மரங்கள்
அசைந்து செவ்வொளி
பரப்பும் அசோகமரங்கள் பொழிலில் 227
மல்லிகையுடன் முல்லை
சேர்ந்து மணம் வீசி படர்ந்த கொடிகளும்
சில்லென குளிர்ச்சியை
சிந்தும் செழித்து நின்ற நாறை கொடிகளும்
குன்றாமணம் தன்னுள்
கொண்ட குழையும் குருக்கத்தி கொடிகளும்
குவிந்த மொட்டுகள்
கொண்ட குறுமுல்லையும் பொழிலில் உண்டு 228
குடையினை விரித்தாற்
போன்ற கோங்கு மரங்கள் அழகும்
குளிர்ந்து களிப்பினைத்
தரும் புன்னையுடன் இளவம் சிறப்பும்
பூ மணத்தை
எங்கும் பரப்பும் பாதிரி
மரங்கள் தோப்பும்
புட்பகரண்டம்
எனும் பொழிலின் பொங்கும் எழில் தன்மையாகும் 229
மரீசி பூங்காவில்
உள்ள பொய்கைக் கரையை அடைதல் :
மணம் மிக்க மாலை அணிந்த
மன்னனின் தூதுவன் மரீசி
புதுமலர் பூத்துக்
குலுங்கும் பொய்கையின் கரைக்குச்
செல்ல
மணம் நிறைந்து
தென்றலில் ஆடும் மதுவுண்ட வண்டுகள்
பாட
நீர்த்
துளிகள் வெளிச் சிதறி தூதுவன்
மரீசியை வரவேற்றன 230
வெண்முத்து பரப்பியதை
போன்ற வெண்மணல் மீது நடந்தான்
வேங்கைமரப் பூக்களின்
நடுவே ஓங்கிய ஓர் அசோகம் கண்டான்
அசோகமர நிழலை அடைந்தான் அங்கிருந்த
துரும காந்தன்
சந்திரகாந்த கல்லைக்
காட்டி சற்று அமர்ந்து மகிழ்கவென்றான் 231
அசோகமரத்தின் நிழலின்
கீழே அமைந்திட்ட இக்கல்லின்
மேலே
இப்பொழிலுக்கு உரிய தெய்வம் இருந்திடும்
இடமாகுமே என கூற
தெய்வந்தான் அமர வேண்டும் என சிந்தையில் கருத வேண்டாம்
நிலா நிழல் கல்லில் அமர நீவீரும் உயர்ந்தவர்
என்றான் 232
போதனமாபுரத்து மன்னன்
போரில் நிகர் பயாபதிக்கு
நுண்ணிய நூலறிவு
கொண்ட நிமித்திகன் அங்கதன்
சொன்னான்
வித்யாதர அரசன் தூதுவன் வீரமகனுக்கு
திருமணம் பேச
இத்தனை நாட்களுக்குள்
இப்பொழிலை அடைவான் என்றான் 233
அரிமாவை கொல்லும்
வலியுடைய அரசமகன் திவிட்டனுக்கெதிராய்
உருளைப்படையுடய வேந்தன்
சுவகண்டன் சினங்கொண்டு வர
அச்சுவகண்டன் அப்போரில்
அச்சத்தால் பயந்து தோற்க
திவிட்டன் அவனக் கொல்வானென அங்கதன் மேலும் சொன்னான் 234
நின் வரவை யாம் எதிர்பார்த்து
நிலா வட்டக்கல் இதனை செய்து
விஞ்சயர் தூதுவனை
அழைக்க துருமகாந்தன் நான்னிங்குள்ளேன்
நிலாக்கல்லின் வரலாறை
கூற மரீசியும் மனம் மகிழ்ந்து
அமர
பயணக்
களைப்பு போக்க பாவையரை
மன்னன் அனுப்பினான் 235
செம்பஞ்சு குழம்பைப்
போல சிவந்த சிற்றடிகள்
உடனும்
சிறுமணிகள் சேர்த்து
செய்த சிணுங்கும் மேகலையுடனும்
பெருமார்பு சுமைதாங்காமல்
பிழன்று நெளியும் சிற்றிடையுடனும்
பினை அன்னம்
போல நடந்து பொழிலினை
அடைந்தனர் மகளீர் 236
விண்ணுலக மங்கையர்
போல் வரவேற்க வந்த வனிதையர்
நற்கரங்கள்
கொண்ட பொருள்களை நவில்வதற்கு மொழியுமில்லை
ஒரு நங்கை கைகள் தாங்கின
உன்னத வெண்பட்டாடைகள்
பிரிதொரு பெண்ணின்
கையில் பசும் இலை வெற்றிலை பாக்கு 237
அடுத்தவளின் அழகு கரங்கள் அணிகலங்கள்
ஏந்தி வர
இன்னொரு இளமங்கை
கையில் இனிய நல் முத்துமணிகள்
வேறொருத்தி ஏந்தி வந்தாள் வீசி மணக்கும் சந்தன சிமிழ்கள்
மங்கையர்கள் கொண்டு
வந்த மணமிகு மாலைகள் நூறு 238
கன்னியரின் காதணிகள்
கதிரவன் போல் தக தகக்க
கைகொண்ட பொருள்கள்
எல்லாம் மங்கலத்தை பதிவு செய்ய
மடந்தையர்கள் மகிழ்ச்சியுடன் மரீசி அவன் பக்கம்
செல்ல
விஞ்சையர் தூதுவன்
மரீசி விண்ணுலகமிது என்றுரைத்தான் 239
நங்கையர்கள் கூடி அவனை நன்னீரில்
குளிக்கச் செய்து
நல்ல மணச் சந்தனத்தை நல்லுடல்
முழுக்க பூசினார்கள்
வெண்பட்டு ஆடைகள்
உடுத்தி வெண்மணி மாலைகள்
பூட்டி
அறுசுவை உணவுகள்
இட்டு அவன் மகிழப்
பரிமாறினார்கள் 240
பயாபதி மன்னன்
கட்டளைப்படி மரீசியை அழைக்க
விசய திவிட்டர்கள் புறப்படுதல்
:
மன்னனின் மன விருப்பப்படி மகன்கள்
விசய திவிட்டர்கள்
மதவேழம் மேல் அமர்ந்து மரீசியை
அழைக்கப் புறப்பட
குதிரையின் கூட்டங்களோடு
கொடி கட்டிய தேர்கள்
இணைய
உடன் செல்லுதற்கு
இடமின்றி உறைந்தன மக்கள்
கூட்டம் 241
மாளிகை மங்கையர்களெல்லாம் மாடங்களில்
பாடினர் சிலர்
மன்னனின் மகன்களைக் கண்டு மண்டியிட்டு பணிந்தனர் சிலர்
பல்லாண்டு வாழ்த்துகள்
கூறி பரவசத்தில் வாழ்த்தினர்
சிலர்
பாட்டோடு கூத்துகள்
ஆடிட பன்மணி மாலைகள்
அறுந்தன 242
மணப் பொடிகள்
பல கொண்டு மழையென
இறைப்பவர் சிலர்
மணிமுத்து வளைகரத்தால்
மகிழ்ச்சியில் வணங்கினர் சிலர்
நாணமது நதியென
பாய்ந்திட நவமணி மாலைகள் கேட்டனர் சிலர்
மயக்கத்தில்
எல்லாம் மறக்க மன்னர் மகன்களை கண்டனர் சிலர் 243
விசய
திவிட்டர்கள் படைசூழ விஞ்சை
தூதன் பொழிலையடைய
நறுமணம் தாங்கிய தென்றலும் நல்லிசை
வண்டுகள் எதிர்கொள
கருங்குன்று களிறிலிருந்து
காவலன் மகன்கள் இறங்க
தும்பிகளோடு வண்டுகளும்
துள்ளியே ஆடி அழைத்தன 244
மயங்கிய மங்கையர்கள்
தன் மணவாளனை அணைப்பது போல்
வீசிடும் தென்றல்
இதமாய் விசய திவிட்டர்களை அணைக்க
வண்டுகள் தழுவிக்
கொண்டு வழிகாட்டியே முன்னே
செல்ல
அசோகமர
நிலாவட்டக்கல்லை அடைந்தனர் இருவரும்
சேர்ந்து 245
விஞ்சையர் தூதுவன்
விசய திவிட்டர்களை வணங்குதல்
:
தூது
வந்த மரீசியானவன் துளிர்த்திட்ட
மகிழ்ச்சியோடு
விசய திவிட்டர்களை
நோக்கி வாஞ்சையுடன் தலை வணங்கி
நல்குணம் மிக கொண்ட நீரோ நல் ஆசிரியர்
போல் எனக்கு
எங்களை நீர் வணங்கியதேன் என்று கேட்டான் விசயன் அவரை
246
பாற்கடல் வெள்ளொளியுடைய
பெரியவன் விசயனையும்
நீலவண்ண கண்ணன்
போன்ற நிறமுடைய திவிட்டனையும்
கற்ற உடல் நூல் இலக்கணத்தை
கண்களால் நன்கு ஆய்ந்து
அத்தனையும் பொருந்தி
வர அகமகிழ்ந்தான் அந்த மரீசி
247
பார்க்க பார்க்க
அழகு கூடும் படைமன்னன்
மகன்களிருவரை
பித்தனை
போல் மலைத்து நோக்கி
பேச்சற்று நின்ற மரீசி
தெளிந்து நின்ற மனதுடனே விசய திட்டர்கள் அருகே சென்று
அங்கிருந்த கல்லின்
மீது அமர்ந்து அவன் சொல்லலானான் 248
விண்ணிருந்து மண்ணுக்கு
வந்து வான்தெய்வக் களிறிடை மறைந்து
அழகிய
பொன் மாலையணிந்த உமை அடிதொழுதோர் நற்றவத்தார்
திங்கள்
வெண் கதிர் சுடரும் கஸ்தூரி திலகத்தின்
வட்டமும்
எளிமையென
உயிர்க்கு தோன்றின் என்றுமும் பண்பேயென்றான் 249
செவ்விய
உம் மொழிகள் போதும்
செல்வோம் தந்தையை காண
வேழத்தின்
பிடரி மேல் அமரும் வேந்தன் மனை செல்வோம் என்று
இருவரும் இரு களிறுகள் ஏறி இந்திர
குமாரர்களாய் அமர
தேவர்கள் தோற்றத்துடன்
போதனமா நகரை அடைந்தனர்
250
காவலர்கள் விரைந்து
சென்று களிப்புடன் செய்தி
சொல்ல
பயாபதி மன்னன்
தன்னுடைய பட்டாடையை மேனி திருத்தி
அமைச்சர்களும் ஆன்றோர்களும்
அவன் பின்னே தொடர்ந்திட
பொன்முத்து தவழும்
முடியுடன் பொன்மண்டபத்தில் அமர்ந்தான்
251
மன்னனின் குமாரர்களோடு
மரீசியான விஞ்சை தூதுவனும்
மன்னனின் செவ்வடி
பணிந்து மகிழ்ச்சியில் இருக்கை ஏற்றான்
விண்ணிலே இயங்கும்
மரீசியை வேலுடையான் பயாபதி பார்த்து
வாஞ்சையில் இன்சொல்கள்
கூறி வரவேற்றான் சுரமை மன்னன்
252
மரீசியும் பணிந்து
எழுந்தான் மலர் மொட்டாய்
கைகுவித்தான்
மன்னனின் திருமுகவோலையை
மதிவரன் கையில் தந்தான்
திருமுகவோலையை பிரித்து
மதிவரன் தன்னுள் படித்து பழகி
வாய்விட்டுப் படிக்கலானான்
வானவன் அனுப்பிய ஓலையை
253
வெள்ளிமலை இரதநூபுர
நகரை வெற்றியுடன் ஆளும் சுவலனசடி
போதனநகரத்து
வேந்தன் பெருவீரன் பயாபதிக்கு
வணக்கம் கூறி
தங்களின் இளைய மகனும் தலைசிறந்த
பண்பாளனுமான
திவிட்டனுக்கு சுயம்பிரபையை
திருமணம் ஏற்பீர் என்றது ஓலை
254
மண்ணூலக மக்களை
விட விஞ்சையர் என்றும்
சிறந்தோர்
சுவலனசடி திருமணத் தூதின் காரணம் எண்ணி
மௌனமாக
மௌனத்தின் நிலையறியா
மரீசி மனதினில் சினமது
பொங்க
மனிதர்கள்
மற்றோரை இகழ்தல் மன்னனிடம் கண்டேனென்றான் 255
தேவர்களாகவே இருந்தாலும்
திரும்பத் திரும்ப வருவாராயின்
எவரையோ பார்ப்பது
போல் இகழ்வது மனிதர்கள்
இயல்பு
வெள்ளிமலையான் என் தலைவன்
வலிய வந்து விடுத்த தூதை
வாய்த்திறவாமல் இகழ்ந்து வதைத்திட்டீர் அரசே என்றான்
256
மணம்
வீசும் மாலைகளணிந்த மரீசியின்
முகமது நோக்கி
திருமுகத்தின் சிறப்பினாலே
செவ்விய பதில் உரைக்கவெண்ணி
சிந்தித்த
காரணத்தால் நான் சிறிது நேரம்
மௌனம் காத்தேன்
சினம் கொண்டு
போச வேன்டாம் சிந்தையில் கனவேயென்றான் 257
வித்யாதர தேவர்கள்
என்றும் மேன்மையில் சிறப்புடையோர்கள்
மென்மகளைப்
பெண்ணாய் கோடல் மன்ணுலகோர் பெருமையாகும்
நின் மன்னன்
திருமுகத்தோடு நீங்கள் இங்கு வந்த தூதும்
கனவென்று
மனம் நினைத்ததாலே கருத்தில் பதில் கூறாநின்றேன்
258
கடவுள் விதித்த
விதிபடியே அவரவர் வாழ்க்கை
அமையும்
தன்னிலைக்கு
அரியது கிடைப்பின் தன் திறன் என கொள்வாருண்டோ
விஞ்சையர்
புகழும் பொருளும் மண்ணுலகோர் அடையாரென்றும்
மாரீசே நீர் முன்
பகர்ந்ததை மன்னன் நான் ஏற்பேன் என்றான்
259
சுவலனசடி தூதுவன்
மரீசி வெட்கத்தால் நாணி சிரம் குனிய
தீவினைப் பயனினால்
நான் வேந்தனின் மனதை அறியாமல்
சுடுசொற்கள் சினந்து
கூறியும் சீரிடாத பயாபதி
பெருங்குணம்
குற்றத்தை
மறந்து பேசிட குறுகினான் உடல் நாணத்தாலே மரீசி 260
பயாபதியின் ஐயத்தை மரீசி
அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கள்
மண்ணுலக
மக்களின் மணம் விண்ணவருடன்
நிகழ்வதில்லை-என்ற
பயாபதி மன்னன்
ஐயந்தன்னை பகுத்தறிந்து தெளியச்
சொன்னான்
கலைகளில் சிறந்து
விளங்கும் கலைஞர்கள் வித்யாதரர்கள்தான்
மண்ணுலக மக்களில்
இருந்து மாறுபடு அற்றவர்காள் தான் 261
மத்தளம் போல் ஒலி எழுப்பி
மிகுந்த நீரால் சூழப்பெற்ற
பவபுரத்து மாமன்னனுக்கு
பட்டத்தரசி காந்திமதியாவாள்
வில்லொத்த இரு புருவங்களும் வாளென நீண்ட விழிகளும்
வெண்மதி முகமும்
கொண்ட வாயுவேகை அவர்கள்
மகள் 262
தந்தையின் பெயர் அஞ்சுமான் தாயார்
பெயரோ அருசிமாலை
காந்திமதி உடன் பிறந்தோன் மரீசி என்னும் மகனும்
நானே
அன்னையின் திருவருளால்
அனைத்து நூலும் கற்றவன்
நான்
அனைத்துலக வரலாற்றையும்
அரசே நான் இயம்புகிறேன் 263
மரீசி நமியின்
வரலாறு கூறல் :
அன்றொரு காலத்தில்
அரசர்க்கு ஐங்குலங்கள் உருவாக்கி
தந்து
அன்று வாழ்ந்திருந்த
மக்களுக்கு அறுதொழில்கள் எடுத்துரைத்த
எண்வகை குற்றங்கள்
அழித்த எழில் கொண்ட எம்பெருமானின்
திருவடிகள் உலகத்தைக்
காத்து செல்வத்தைக் கொடுத்ததன்று 264
காசிநாட்டு அரசன் கச்சன் கட்டிய
மனைவிதான் சுதஞ்சணை
இல்லற இன்பத்தில்
திளைத்து ஈன்ற செல்வன்
நமி என்பான்
அரசாட்சி செய்ய விழையவில்லை அரச சுகங்கள்
மனதிலில்லை
அறக்கடலை அள்ளித்
தந்த அருகன் நினைவில்
பாடலானான் 265
அறம் உரைத்த
அறவாழி அந்தணரே போற்றி
போற்றி
எல்லையில்ல
ஞானம் கொண்ட எழிலரசே
போற்றி போற்றி
மூவுலகும் உன்னுள்
கொண்ட முதல்வனே போற்றி
போற்றி
மூவுலக உயிர்கள்
காக்கும் மூலவனே போற்றி
போற்றி 266
செங்கதிரோன் ஒலியுடைய
திருமாலும் நீயே தான்
வெவ்வினைகள் அகற்றுகின்ற
பெருமானும் நீயே தான்
எப்பொருளின் தன்மையறிந்த
எல்லையில்லா அறிவன் தான்
எண்குணத்தை உன்னுள்
கொண்ட எழிலுருவும் நீயே தான்
267
வினைகள் வென்று
வீடடைந்த வெற்றித் திருமகனே
வாழ்க
கேவலக்
ஞானம் அடைந்த கீர்த்தியுடையோனே வாழ்க
அடியார்க்கு இன்பம்
தரும் அருளாளனே நீவீர்
வாழ்க
அனைத்தையும் துறந்து
விட்ட அன்புருவே வாழ்க வாழ்க
268
நமி என்பான்
நல்லிசையது நாற்திசையும் ஒலியெழுப்ப
விலங்குகள் தம் இடம்
விட்டு விலகாமல் நின்றன
அங்கு
விண்
பறக்கும் பறவைகளும் மண் தொட்டு நின்று
விட
ஐம்பொறி வென்ற அருகனின் தியானத்தில்
சலனம் இல்லை 269
அருகனின் குணங்களை
நமி அழகிய இன்னிசையில்
பாட
ஆதிசேடன் அங்கு வந்தான் தன் ஆயிரம் படங்கள்
கொண்டு
நாகரின் உலகத்து
அரசன் நன்மணிகள் உச்சி கொண்டோன்
நமிநாதனை வலமாய்
வந்து நாதனை வணங்கி நின்றான் 270
அருகனின் திருவடிகளைப் பற்றி அற்புதமாய் இன்னிசைத்தாய்
நமி என்ற மான்னவனே
நீவீர் நாடுவது யாதென கேட்டார்
ஆதிசேடனை
அன்புடன் வணங்கி தேவலோக தேவர்களைப் போல்
விரும்பியதெல்லாம் கிடைக்கும்
வரம் தர வேண்டும் என்றான் 271
விஞ்சையர் துணையினோடு
வெள்ளிமலையும் கொடுத்து- இசை
நினைத்ததை உனக்குத்
தரும் நிறை மனதில் வாழ்வென
வாழ்த்தி
ஆயிரம் படங்களையுடைய
ஆதிசேடன் வரத்தைத் தந்து
அவ்விடத்தை
விட்டு அகன்று அகமகிழ்ந்து தன் உலகம் சென்றான் 272
என்
மன்னன் சுவலனசடியோ நமி குலத்தின் தோன்றலாவன்
நமி
குலத்திற்கு சமமான நீரும் நல்லுயர் குலத்தையுடையோர்
செல்வ
சைவ சிறப்புகளுடைய இத்திருமணத்து வினைப்பயன்
நறுவிய நெய்யோடு
சேர்ந்த பாலுக்கு ஒப்பாகும்
என்றான் 273
பயாபதியின் வரலாறு
கூறத்தொடுங்குதல் :
விஞ்சையின் தூதுவன்
விளம்பிய சுவலனசடி பெருமையை
கேட்டு
அங்கத நிமித்திகன் எழுந்தான் அரசன் பயாபதி குலத்தைக் கூற
அருகனின்
அருளால் தோன்றிய அரசன் வாகுவலி என்பானின்
செங்கோல் நடத்திய ஆட்சி
சிறப்புடன் தொடர்கிறது இன்றும் 274
வீரக்கழல் அணிந்த மகனுக்கு வாகுவலி
அரசைத் தந்தான்
துறவறம் முற்றும்
ஏற்றான் தொடர்ந்திட்டான் தவத்தை நோக்கி
கண்ணிடை உயர்ந்து
தோன்றி கதலி வனத்தை
வேலியாக்கி
கார்முகில் என்றும்
தவழும் கைலாயகிரியில் தவத்தில் நின்றான் 275
வாகுவலி வலிய தவத்தில் நிற்க வளர்ந்தன
பாம்பு புற்றுகள்
ஐந்தலை
கொண்ட அரவங்கள் அலைந்தன அவர் மேனியெங்கும்
கால்களைக்
கொழு கொம்பாய் பற்றி படர்ந்தன கொடிகள் எல்லாம்
சிரசினில்
அடர்ந்த குழலில் சிறு பறவைகள் கட்டின கூடுகள்
276
அனிச்சை
மலர் மெத்தை மேலே ஆரணங்குகள் வளைகரம் தழுவ
பூக்களால்
தொடுத்த மலர்கள் பொன்மேனியில் புரள்வது போல்
பொன்கொடியை
ஒத்த மகளீர்கள் போர்களம் போன்ற மார்பில்
புரள்வது போல இருந்தது வாகுவலி
வேந்தனின் மாதவம்
277
எண்
குற்றங்கள் விலக்கி நின்று எண்குண மாலைகள் அணிந்து
கடையிலா
காட்சி வீர்யத்தோடு கேவலக் ஞானமும் கொண்டு
வானவர்கள் வந்து
வாழ்த்த வானலோகமும் மணந்து
வீச
தேவர்களுக்கும் அரியவனாகி
தெய்வலோகம் சென்றடைந்தார் 278
என்
தலைவன் பயாபதி மன்னனும் வாலிவாகு வம்சத்தில்
வந்தோன்
சுவலனசடியும்
பயாபதியும் செறிந்த குலத் தோன்றல்கள் என்றான்
உலகத்து
அறிவு நூல்களும் குலங்களை ஆய்ந்திடும்
திறனும்
மருசியே உன்னைத்
தவிர யாருளர் என புகழ்ந்தான் மன்னன்
279
அரசன்
உருவம் கொண்டவனுக்கு அமைச்சர்கள் இரு கண்களாகும்
குடிமக்களும் நண்பர்களும்
குன்று ஒத்த தோள்கள்
ஆகும்
செய்தி கொண்டு வரும் ஒற்றர்கள் சிறந்த இரு
காதுகளாகும்
தேனினிக்க சொல்லும்
தூதுவன் செவ்விய நல் நாவுடை வாயாம்
280
அமைச்சனின்
நல்லியல்புகள் அனைத்டும் பெற்ற ஓர் தூதுவன்
அறிந்து
ஆய்ந்து சொல்லும் செய்தி தெள்ளிய நல்லுரைக்கொப்பும்
சுவலனசடி
மன்னன் உம்மை தேர்ந்தெடுத்து அனுப்பியதாலே
இப்பிறவி
பெற்ற பயன்கள் இரு நாடுகளுக்கும் இன்பமாகும் 281
வெற்றியோடு விளங்குகின்ற
விஞ்சை மன்னன் சுவலனசடிக்கு
இரு
கண்களாய் இருந்து கொண்டு எப்போதும் வாழ்த்து சொல்லும்
வந்த
தூதுவன் மன்னனிடம் வலம் வந்து தொழுது
விடை கேட்டு
பயாபதி பட்டும்
பொன்களும் பரிசளித்து சிறப்பு
செய்தான் 282
தூதுவிடு சருக்கம் முடிவுற்றது.
7. சீயவதைச் சருக்கம்.
போதனபுரத்தை
விட்டு மரீசி இரசநூபுரத்தை அடைந்தான்
முப்பெரும் வாசலைக்
கடந்து மன்னன் சுவலனசடியை வணங்க
சடி மன்னன்
தன் கையால் சிறந்ததோர்
ஆசனம் காட்ட
தூதுவன் மகிழ்ந்து
அமர தூதின் முடிவை அறிந்தான் மன்னன் 283
மரீசியின் கூற்று
:
மதகளிறுகள் கொண்ட வேந்தே
வாழ்க நின் திருவடிகள் என்றும்
திருநாட்டின் தீமைகள் ஒழிக
தெள்ளன என் செயலை முடித்தேன்
போதனபுரம் சென்றதையும்
பயாபதி மன்னனிடம் சினந்ததையும்
மன்னனின்
பெருந்தன்மையும் மரீசி சொல்வேன் கேட்பீரென்றான்
284
புட்பமாகரண்டம்
பொழில் செல்ல விசய திவிட்டர்கள் வந்தழைக்க
திவிட்டனின்
தந்தையைப் பார்த்து திருமுகத்தை கரம் பணிந்து
தர
மன்னனோ சற்று மௌனம் காக்க மரீசி நான் மனம்
சினந்து சீற
நல்
ஞானத்தில் பயாபதி பேச நாணத்தால்
சிரம் கவிழ்ந்தேன் 285
மன்னனே உம் வரலாறு
சொன்னேன் பயாபதி வரலாறுமறிந்தேன்
திருமுகச் செய்தி
அறிந்ததும் திங்கள் ஒளி போல் முகம்
மலர்ந்து
மன்னனும் மனைவியரும் மகிழ்ந்து மதுசொல்லால் முகமன் கூறி
பல
பொருள் பொன்னோடு தந்ததை பகர்ந்திட்டான் சுவலனசடிக்கு 286
பயாபதி மன்னனின்
இரண்டு பார்புகழ் வீர மகன்களும்
பகைவனாம் மான்கள்
முன்னே பாய்ந்திடும் அரிமாக்களாவார்
ஐங்கணையான்
மன்மதன் தனை அவனியில் உள்ளோரெல்லாம்
விசய
திவிட்டர் உருவம் மூலம் உருவத்தை அறிந்து கொள்வர் 287
வலம்புரி வெண்சங்கை
ஒத்த வெண்ணிறமுடையோன் விசயன்
கார்மேக
கண்ணன் நிறத்தில் களைகொண்டோன் திவிட்டனாவான்
திருமால்
நாபி செந்தாமரையில் சேர்ந்து வசியும் திருமகளைப் போல்
திவிட்டனை
அடைந்து வாழ தேவி சுயம்பிரபை பெருந்தவத்தாளே 288
போதனபுரத்து
திவிட்டனுக்கு விஞ்சையின் சுயம்பிரபையை
திருமணம்
செய்து வைத்தால் வியந்திடும் விஞ்சையர் உலகம்
மரீசியின் சொல்லைக் கேட்டான் மலை ஆளும் சுவலனசடியும்
பொன் முத்து நவமணிகளை புது வெள்ளம்
போல் வழங்கினான் 289
சடி மன்னன் அமைச்சரை
வினாவுதல்
:
வெற்றியுடைய
விஞ்சையின் வேந்தன் மரீசியை மனைக்கு அனுப்பி
மந்திரிகள்
அனைவரோடும் மேற்கொண்டு செய்வதைக் கேட்டான்
சதவிந்து
நிமித்திகன் சொன்ன ஒரு திங்கள் எல்லை நாளில்
திவிட்டன்
அரிமா வாய் கிழித்து கொல்வான் எனும் செய்தியுண்டு 290
சதவிந்து கூற்றில்
நிகழ்வது சரியாய் அமைந்ததா
என அறிய
ஒற்றற்கே உரிய மாண்புகள் உள்ள ஓர் ஒற்றனை
அனுப்பி
உண்மையைக்
கண்டறிவோம் என அமைச்சர்கள் கூட்டம் கூற
அகமகிழ்ந்து
மன்னன் கூறினான் அனுப்புக நல் ஒற்றனை என்று
291
இனி அச்சுவகண்டன் செய்தியை கூறுவாம்
எனல் :
வடசேடியை
ஆளும் மன்னன் வளமிக்க
அச்சுவகண்டன்
மெல்லிடை
மங்கைகளோடு மென்பஞ்சு மெத்தையின் மீது
ஐங்கணையான் அம்புகள் பாய
ஆர்த்திடும் காமத்தோடு
உறக்கத்தை
அறவே ஒழித்து ஒன்றினான் கமக்கடலில் 292
பகைவர்கள்
உளர் என சொன்னால் பகர்வதைப் பொறுக்கமாட்டான்
சொல்லியதை
தேர்ந்து ஆயாமல் சொன்னவனை கொல்வானுடனே
நண்பன்
பகைவன் யாரிவர் என ஆராயாமல் அவனைக் கொல்வான்
சுவகண்டன்
செய்யும் ஆட்சியின் அரசியல் அறம் இதுவேயாகும் 293
அறநூல்கள்
பலவும் கற்ற அறிவுக் கடல்லன சதவிந்து
அச்சுவகண்டன்
அவையில் ஆசனமேற்றான் நிமித்திகனாக
அந்நிமித்திகன் கூறலானான்
அறமிழந்த அச்சுவகண்டனிடம்
உட்பகை ஆறையும்
ஒழியுமென உரைத்து முகம் நோக்கினான்
294
(உட்பகை
6 : காமம், வெகுளி, மயக்கம், பற்று, செருக்கு, பகை )
அறுபகை அறுத்த
அரசனை அவனியில் வெல்லுதல்
அரிது
அவன் ஆளும் நாட்டில் என்றும்
அடைமழை பொழிய செழிக்கும்
குற்றமே இல்லா செங்கோலால்
குறையற்ற வானுலகம் புகழும்
காப்பதில் கடவுள்
இவன் என காலத்தால் கடந்து நிற்பான்
295
மெய்யறிவு
எனும் கதிரவனான திரு என்பது மன்னன் அறமே
தாமரை இதழ் மேல் அமர்ந்த
செருக்கெனும் பனியை போக்கும்
மனதினில்
நிறைந்த மகிழ்ச்சியால் மனம் தடுமாறும் போது
அறம்
கெட்டு அழிவார்களென அறநூல்கள் கூற்றை அறிவாய்
296
அரசியல் நடத்தும்
முறையும் அதில் வரும் நீதியும்
நேர்மையும்
அரசே நீ நன்கு அறிவாய் எனினும் ஆயினும் அன்பால் உரைத்தேன்
சதவிந்து
கூறிய மொழிகள் சுவகண்டன்
செவியினில் பதிய
உன்
கூற்றின் உறுதிப் பொருளினை உரைத்திடு சதவிந்தென்றான் 297
போதனபுர நகரின் மா மன்னன் பயாபதிக்கு
இரண்டு மகன்கள்
விசய திவிட்டன்
இருவருமே வீரத்தில் நிகர் அற்றவர்கள் ஆவர்
இளையவன்
திவிட்டன் என்பான் உன் பெரும் பகைவனாவான்-என
நிமித்திகம்
மூலம் அறிந்தேன் நெஞ்சத்தில் வருத்தம் கொண்டேன்
298
அப்பகை மூள்வதற்கு
முன் அதனை முறியடித்து
வெல்லும்
நல்லதோர்
வழியை காண்னென கூற சுவகண்டன் சொல்லை தடுத்து
விஞ்சையின்
வேந்தர்கள் என்மேல் வெஞ்சினத்தால் தாக்கிய போது
மன்னர்களை
அழித்தேனன்று மனிதபகை என் செய்யுமென்றான் 299
மென் விசிறியால் வீசும் காற்று மாமேரு
மலையினை அசைக்குமா
மனிதர்கள்
அறிவின் திறத்தால் மன்னன் என் தோள் அசையுமா
வேழத்தின் கூரிய கோம்புகள் வாழையை
குத்தி மழுங்குமா
விஞ்சையர் படைகளை
வென்ற வேந்தனுக்கு மானிடர் நிகரோ 300
நீ சொல்லிய
திவிட்டன் படை மேல் என் மாயவித்தையை ஏவினால்
அவன் படை நொறுங்கி ஓடும் அறநூல்
நிமித்திகம் பொய்க்கும்
அவனியில் உள்ள அரசர்கள் அனைவரும்
எதிர்த்து வரினும்
அஞ்சாது
எதிர்த்து போரிட்டு அனைவரையும் கொல்வேன் என்றான்301
அச்சுவகண்டன் அமைச்சர்
கூறல் :
சுவகண்டன் உணர்வுக்கேற்ப
தெளிவிலா சித்தம் கொண்ட
பொய்
நூல்கள் கற்றறிந்த பகுத்தறிவு
இல்லா அமைச்சர்கள்
சிறு
நெருப்பு பற்றி எரிந்து
பெருங்காட்டை அழிப்பது போல்
பழம் பகைமை சிறிதெனினும் பலம் மிக்க நம்மை அழிக்கும் 302
நஞ்சினைக் கொட்டும்
மரங்கள் நிலம் விட்டு
முளைக்கும் போதே
நகத்தினால் கிள்ளிவிடலாம்
நமக்கு அது எளிதாய்
முடியும்
அச்செடி மரமாய்
வளர்ந்து அடிமரம் வைரம் பெற்றுவிட்டால்
வாளோடு கோடரியும்
கொண்டு வெட்டிடல் அறிவுடைமையன்று 303
அரிமஞ்சு அமைச்சன்
சொன்னான் நிமித்திகன் கூற்றைப் நோக்கில்
திவிட்டன் நமக்கு
தகுதியுடைய திடமான பகைவன்
ஆகலாம்
திறைப் பொருள்கள்
கேட்டு நாம் திறமிக்க
தூதரை அனுப்பினால்
திறை
பொருள் முழுதும் தந்தால் சிறிதும் பகையில்லையெனலாம்
304
அரக்கூட்டிய கோல்களுடனும் அலங்காரம் மிகு ஒளியுடனும்
இலச்சினைப்
பொறிக்கப்பட்ட திருவோலையை கையில் ஏந்தி
கூத்தியல் வல்லுனர்களான
ஈரிரண்டு நல் தூதுவர்களை
சுவகண்டன்
அனுப்பி வைக்க தூதர்கள் அடைந்தனர் போதனத்தை 305
அச்சுவகண்டன் தூது விடுதல்
:
கருமுகில்கள் தவழும்
மாளிகை கதிரவனின் வழியை மறைக்க
போதனாபுரம் செல்வம்
நோக்கில் விஞ்சையர் செல்வம்
தாழ்வே
மேகங்கள் மோதும்
முழக்கமோ மயில்கள் தோகை விரியச்
செய்யும்
முழங்கிடும் முரசைக் கேட்டு மயங்கினர் தூதர்கள் நால்வரும் 306
தவழ்ந்திடும் முகில்கள் பொதியை பிளந்திடும் இலையின் நுனிகள்
கொட்டிடும் அருவிகள்
தோற்றம் கிட்டிடும் கண்கள்
இரண்டை
களிறுகளின் மும்மத நீரோடு குதிரைகள்
வாய் நுரை சேர்ந்து
வெறியாடும் களங்களைப்
போல் இருந்ததை தூதர்கள் கண்டனர் 307
குவளைமலர் மலர்ந்ததாலே
கொட்டிடும் தேனை உண்ண
வண்டுகள் அலைந்து
திரிந்து வாசிக்கும் இன்னிசையோடும்
பெடையின் நடை கண்டு மயங்கிய
ஆண் அன்னம் கொண்ட மகிழ் ஒலி
அத்தனை ஒலிகளும்
ஆர்த்திடும் அரண்மனையை அடைந்தனர் தூதர் 308
அச்சுவகண்டனின் தூதர்கள் அரண்மனை
வாயிலில் உள்ளனர் – என
அரசன் பயாபதியிடம் சென்று
அறிவித்து வருவாய் என்றனர்
வாயில் காப்போன்
வாய் மொழி கேட்டு வாடாமாலை நெடுமுடி
மன்னன்
அனுப்பவும் என்று அவனிடம் கூற தூதுவர்
நால்வரும் சேர்ந்தனரங்கு 309
தூதுவர் வணங்கினர்
மன்னனை தூதோலைத் தந்தனர்
அவையில்
ஏடு படிப்போன் ஓலை படித்தான்
தூதுவர் கூறினர் அவர் தம் வாயால்
ஓராயிரம் கோடி செம்பொன்களும் ஆயிரம்
ஆடும் அணங்குகளும்
திறை பொருளாகத் தந்தாளும்
மேலும் பல கூறுவோம் கேளீர் 310
திரைகடல் தந்த சங்குகளும் சிவந்த ஒளியுடை பவழங்களும்
வெண் முத்து மணிகளும் ஆடைகளும் மென்மணம்
அமைந்த அகிலும்
கவரிமான் மயிற்கற்றையும் களிறுகளின்
வெண் கொம்புகளும்
திறையாகச் செலுத்த
வேண்டும் தெளிவீர் சுவகண்டன் ஆணையை 311
கட்டிய தறியில் இருக்கும் களிறு கல்லடி
பட்ட தன் சினத்தை
மனதினில் அடக்கிய நிலையில்
மன்னன் பயாபதி இருந்தான்
கல்வியோடு குலமும் புகழும் சமம் ஒத்து இருவரும்
இருக்கையில்
ஒருவன் கட்டளையிடுதல்
ஊழ்வினை என எண்ணினான் மன்னன் 312
மனம், மொழி, மெய்களால்
ஈட்டிய பொருளை மற்றவர் கை பற்றுதலும்
மாண்புடன் பொருள் பெற்றோனிடம் மகிழ்ச்சியில்
வாழும் ஆசையும்
அதனால் வரும்
நல் தீவினைகளை ஆய்ந்து அறியா தன்மைகளும்
முற்பிறப்பில் நாம் செய்த இம்மையின்
ஊழ்வினை என்றான் 313
பயாபதி தன் மனதின்
உள்ளே பாய்ந்திட்ட சிந்தனைகளோடு
தூதரைப் பார்த்துச்
சொன்னான் திறை பொருள்கள் தருவோமென
விசய திவிட்டர்
அறியுமுன்னே விரைவாக தூதர்களை
அனுப்பிட
மொழிந்திட்ட பொருள்கள் அனைத்தும் முறைபடி
அளிக்கச் சொன்னான் 314
கொவ்வைக் கனியாய்
சிவந்த வாயூம் கொட்டும் உடுக்கை இடையும்
வாள் போல் நீண்ட மைவிழிகளும் வெண்மதி
ஒத்த முகங்களுடன்
முழவோடு இசை கருவிகளுக்கு முறைப்படி
ஆடி மயங்கச் செய்யும்
ஆயிரம் ஆரணங்குகளையும் பொன் பொருளும்
திரையாய் தந்தான் 315
விஞ்சை தூதுவர்களின் வித்தையால் வந்தன விமானங்கள் சுரமைக்கு
பொன் பொருள்கள் அணிகலங்களுடன் பொற்கொடியர்
ஆயிரமரையும்
விமானத்தில் ஏற்றிய பின்னர் பொன் திரையிட்டு மூடிடும்
போது
விசய திவிட்டர்கள் நேரில் காண விபரம் யாதென காரணம் கேட்டனர் 316
நின்றவர்கள் அஞ்சி ஒதுங்க நடக்கப்
போவதை அறிந்து நடுங்க
கொலைத் தொழில் வல்ல குறளன்
துணிவுடன் முன் வந்து கூறினான்
சுவகண்டன் மன்னனுக்கு
நமது மன்னன் திறை பொருள் தந்ததை
தூதுவர் கொண்டு
செல்கின்றனர் விஞ்சை மாநகரம்
நோக்கி 317
கடுஞ்சொல்லைக் கேட்ட திவிட்டன் கண், உடல்
சினந்து சிவக்க
முடியடியில் முத்துக்கள் போல் முகமதிலும்
வியர்வைத் துளிர்க்க
நெய் துளிகள் ஊற்றப்பட்ட நெருப்பது
கனன்று எழுவது போல்
கோபத்தில் திவிட்டன்
அடிக்கடி குமுறி குமுறி
சிரிக்கலானான் 318
திவிட்டன் சின மொழிகள் :
குடிமக்கள் உழைத்து
சேர்த்து கொற்றவனுக்கு தரும் இறையை
பகை
மன்னன் கேட்கும் திறையை
பகிர்ந்து உயிர் வாழ்தலில்லை
உம் மன்னன் கேட்ட திறைபொருளை என் மன்னன் அள்ளித் தந்து
அவனருள் பெற்று
வாழ்ந்தால் அடியேனின் தோள் ஆற்றல் எங்கே 319
கடுஞ்சினம் கொண்ட பாம்பின் படம் மீது
அமைந்த மணியை
அச்சுவகண்டன் எடுப்பதும் அவன் அறியாமையை
உணர்த்துவதாகும்
திறை பொருள் வேண்டும் எனில் உம் மன்னன் கூத்தியல் மகளீரோடு
யாழேந்தி இசைத்து
ஆடி வந்து பரிசலாய்
பெறச் சொல் என்றான் 320
மெலிந்தவர் இடத்தே
சென்று சக்கரப் படை வலிமையை காட்டி
திறை கொண்ட காலம் போனது இனி அச்சுறுத்தல் செல்லாதிங்கு
திறை
பொருள் பெறுவேனென்றால் சுவகண்டன் இவ்விடம் வந்து
போரினில்
எங்களை வென்று பொருள் கொண்டு செல்கவென்றான்321
தூதரே
உம் அரசனிடம் சொல் திவிட்டன் நான் சொன்ன செய்தியை
திறை
பொருள் மறுப்போரிடம் பெரும் முறை பிறிதுளதோ என
மொழியினைக் கேட்ட தூதர்கள் மேனி எல்லாம் நடுங்கி
அஞ்சி
வலிமை
மிக்க பகை ஒன்றெண்ணி விஞ்சைக்கு சென்றனர் உடனே 322
மன்னனை
காண அஞ்சிய தூதர்கள் மனதினில் கொண்ட பயத்தால்
அரிமஞ்சு அமைச்சரைப் பார்த்து அனைத்தையும்
கூறினார்கள்
அச்சுவகண்டனின் பகையான்
திவிட்டனின் சொற்களை கேட்கில்
மன்னனும்
பொறுக்கமாட்டான் மாற்று வழி யாதென எண்ணினான்323
இளங்கன்று
பயம் அறியாமல் இத்தகைய வார்த்தைகள் சொன்னான்
மலைக்குகை மாய சிங்கத்தால் திவிட்டனை கொல்ல திட்டமிட்டான்
திரண்ட
திண்ணிய தோள் கொண்ட அரிகேது என்னும் விஞ்சனை
அரிமாவின் உருவம் கொண்டு அழிக்கச் சொன்னான் திவிட்டனை324
கவிழ்ந்து
படர்ந்த பிடரி முடியும் கற்பாறையை பிளக்கும்
நகமும்
முகில்
மோதும் முழக்கம் போல முழங்கிடும் குரலைக் கொண்டு
பிறயொத்த
ஒளியை உடைய பெரும் பற்கள் வாயில் இருக்க
தீக்கனல்
கண்களில் ஒளிர பெருஞ் சிங்கமாய் உருவெடுத்தான் 325
இளம்
பொழில்கள் வேலியாக்கி இமயத்தின் விசும்பை தாண்டி
விசய
திவிட்டர்கள் வாழும் விரிந்த சிந்து நாட்டை அடைந்தான்
நெடுநிலம்
முழுதும் நடுங்கிடவும் நீண்ட மலைகள்
பிளந்திடவும்
திரைகடல் கலங்கி எழும்ப
கர்ஜித்தது அரியகேதான சிங்கம்
326
மணல்வெளி
எதிரொளி எழுப்ப மலையோடு காடுகள் அதிர
விலங்கினங்கள்
நெலிந்து வீழ வேழங்கள் கலக்கத்தில் பிளிர
முறத்திடை
நெல்லில் இருந்து முன் வாய்
பதர்களைப் போல்
கற்களும்
குண்டுகளும் சிதற கலங்கினர் மக்களெல்லாம் 327
அரிமஞ்சு அமைச்சன் மீண்டும் அனுப்பினான்
தூதுவர்களை
திறை மறுத்த வீரன்
திவிட்டன் சிங்கத்தை ஏன் கொல்லவில்லை
தூதுவர்கள்
கூறிய செய்தியை துவக்கத்தில் அறியா திவிட்டன்
சுரமையின்
மலைக் குகையில் சிங்கம் உண்டா என்று கேட்டான் 328
மலைக்குகையில்
சிங்கம் உண்டென மக்களும் மற்றோரும்
கூடி
உயிர்களைக் கொன்று தின்று
உயிர்வதை செய்கிறதென்று கூற
ஏனைய
வீரரும் மறவர்களும் எனைத் தொடர வேண்டாமென கூறி
சிங்கத்தின்
வாயினை கிழித்து சிதைத்திடுவேன் உடலை என்றான் 329
கடல்
ஒத்த திவிட்டன் சொல்ல சங்கொத்த விசயனும் தொடர்ந்தான்
அண்ணலும்
இளவளும் சேர்ந்து அரிமா இருக்கும் இடம் வந்தனர்
இருவரையும்
பார்த்த சிங்கம் இடியென சினந்து முழங்கிட
குன்றுடன்
கற்கள் நெலிந்து நெற்பொறியாய் பறந்து உதிர்ந்தன
330
கருநிறம்
கொண்ட திவிட்டன் கடகத்தை கையினில் ஏற்றி
சூளாமணி
மாலையை கொண்டு சுருள்குழலை இறுகக் கட்டி
ஆழியின் அலை போல் அதிர்ந்து ஆரவாரம் செய்ததைக் கண்டு
விஞ்சையின்
அரிகேதுவான அரிமா விலகி அஞ்சி ஓடலாயிற்று 331
ஓடிடும்
சிங்கத்தைத் தொடர்ந்து ஓடினான் திவிட்டனும்
பின்னே
கால்கள்
நிலம் தொடாத நிலையில் கழல்களும் ஒலித்தன அங்கு
விலங்குகளும்
பறவைகளும் வீழ்ந்தன அங்கு நிலத்தின் மேலே
திவிட்டனின்
தோள் வலியாலே துவண்டன மலைச் சிகரங்கள் 332
பயந்தோடும்
மாயச் சிங்கமோ பாய்ந்தோடும் வகையறியாமல்
மலையினது
குகையின் உள்ளே மாயமாய் மறைந்து ஒளிந்தது
குகையினுள் வாழ்வுற்றிருந்த காட்டரசன் நிஜ சிங்கமானது
திவிட்டனின்
முழக்கத்தாலே திகைத்து விழித்தெழுந்தது அரிமா 333
திவிட்டனின்
உருமல் கேட்டு சினந்து கனன்ற கண்களுடன்
சிங்கமும் அதிர்ந்து கர்ஜிக்க சிதைந்தன மலைகள் அங்கே
தன்
குணம் அறியாத வேறொரு பகைச் சிங்கம் வந்தது
என்று
உள்ளத்தில்
மகிழ்வு கொண்டு உள்ளிருந்து வெளியே வந்தது 334
பிடரி
முடிகள் சிளிர்த்து எழ திவிட்டன் மேல் சிங்கம் பாய
பிடரி
மேல் தன் கால் பதித்து பிளந்திட்டான்
அரிமா வாயை
சிங்கத்தைக்
கொன்றதை நோக்கி தேவர்கள் வியப்பில் ஆழ
இப்பெருஞ்
செயலினாலே வியந்தனர் மக்களும் தேவர்களும் 335
வேங்கையை
ஒத்த திவிட்டன் அண்ணனின் அருகில்
வந்தான்
அழிந்தது
கொடும் சிங்கம் என்று அண்ணனுக்கு செய்தி சொன்னான்
தீமையை அழித்து
விட்டோம் திரும்புவோம் போதனம் என்றான்
மன்னனும்
அச்செய்தி அறிந்து மகன்களைத் தழுவிக் கொண்டான்
336
தம்பியின் ஆற்றல்
கண்டான் தமையன்னா விசயன்
அன்று
திவிட்டனுக்கு குறிஞ்சியின் அழகை தெள்ளன எடுத்து சொன்னான்
மலை
முகட்டில் மேகம் தழுவ மழை அருவி இறைச்சலாய் வீழ
அவரைக்
கொடியை கவரி தின்று அருந்திடும் மலையருவி நீரை 337
சுரபுன்னை
மரங்கள் வாழையும் செறிந்து நீண்ட பெரிய காடும்
கன்னலோடு
மூங்கில் தழைத்து கடும் இருளைத் தழுவச் செய்யும்
கருமேகக் கூட்டம்
திரண்டு கவிழ்த்திடும் மேலும்
இருளை
பகற்காலம்
என்ற ஒன்றை பார்பதற்கே அரியவை ஆகும் 338
பெருங்குகை
ஒத்த வாயுடன் பெரிய மலைப் பாம்புகளோடும்
கருமுடிகள்
உடலில் கொண்ட கரடிகள் கூட்டத்தோடும்
பிடிகளை அணைத்துச் செல்லும் பெருங்குன்று
களிறுகளோடும்
பரந்த
இந்த குறிஞ்சி நிலம் மனிதர்களுக்கு இன்னலே
தரும் 339
தேனுண்ட வண்டுகள் மயங்கி தேன்குழல் இசை
எழுப்பும்
நீ
விரைந்து செல்வாயாகில் நின் வீரக்கழல் ஒலி
எழுப்பும்
கழல்
ஒலி கேட்ட முகில்கள் கலங்கியே கண்ணீர் சொரியும்
கண்ணீரின் வெள்ளத்தாலே
காமனின் சோலைகள் மூழ்கும்
340
தாவுகின்ற மான்கள்
இடத்தில் தாமரை தடாகங்கள் இருக்கும்
சந்தன
குங்கும மரங்களோடு சண்பக மாதுளை மரங்களிருக்கும்
சந்தனத்தழை
ஒடித்த வேழம் தன் மேல் மொய்க்கும் ஈயை ஓட்டும்
குறிஞ்சியின்
மலைகள் எல்லாம் தேவலோகத்தை எள்ளி நகைக்கும் 341
திவிட்டா உன் கர்ஜனையில் திகைத்தோடிய சிங்கம் கண்டு
மாயம் என்று எண்ணிய நான் மலை அருவியாய் குருதி ஓட
உண்மையே
நிகழ்ந்ததென்று உணர்ந்து வியப்புற்றேனின்று
நின் ஆற்றலைக் காணும்போது அமரருக்கும் உடலது வேர்க்கும் 342
உலகினில்
வாழும் உயிர்கள் உற்றிடும் பெரும் இன்னல் கண்டு
மலையொத்த
தோளுடை மறவர் மதித்திலார் தம் வாழ்வினை
அரச
குடியில் பிறந்த மக்கள் அரச இலக்கணம் யதெனில்
அனைத்துயிரையும்
கப்பதுவே அறமாய் அமையும்
அரசனுக்கு 343
அரிதிற்
கிடைத்த மானிடவாழ்வை அரியநூல்களை ஓதியுணர்ந்து
அனைத்துயிர்க்கும்
இன்னல் போக்கி அருள்வதே மனித வாழ்க்கை
பிறவுயிர் இன்னல்
கண்டும் போக்காது அதை இருப்பானாகில்
ஆண்
தன்மை அறவே அற்ற ஆண் பெண் அற்ற பேடியை ஒப்பான்
344
விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலம் விட்டு
பாலைநிலம் எய்தல் :
குறிஞ்சி
நிலம் கடந்த இருவரும் கொதிக்கும் பாலைநிலத்தை அடைய
பாலையின் தன்மைகள்
பற்றி தம்பிக்கு உரைக்கலானான்
வெப்பக்
காற்றின் மிகுதியாலே மிதந்திடும் தரை கானல்நீரை
தண்ணீரென எண்ணிய மான்கள் தாவியே
ஓடோடி இறக்கும் 345
பாலையில்
விளைந்த மூங்கில் பகலவன் கடும் வெப்பத்தாலே
தீப்பற்றி
கொழுந்தாய் எரிய சிதறிய மூங்கில் நெற்கள்
பாறையின்
மேல் பனிபோல் வீழ்ந்து தகித்திடும் வெப்பத்தாலே
நெற்பொறியாய்
பொறிந்திருக்கும் நித்தமும் பாலை நிலத்தில்
346
அயலாரை
விரும்பி ஏற்காத அன்பிலார் மனை அழிதல் போல
ஞாயிறின்
வெண் கதிர்களாலே நிழல் அஞ்சி நீங்கிடும் இங்கே
நிலச்
சூட்டுக்கு பாம்புகள் அஞ்சி வளை விட்டு நீங்கா
வெளியே
காந்தள்
மலர் இருகரம் கூப்பி கார் பருவம் வேண்டி
நிற்கும் 347
விசய திவிட்டர்கள் பாலை கடந்து முல்லை
நிலம் ஏகுதல் :
சிங்கத்தைப்
பிளந்து கொன்ற செங்கண்ணான் திவிட்டனுடன்
பொன்மாலை
அணிந்த விசயன் போதனம் நோக்கி ஏகினான்
மாதம்
மும்முறையும் பெய்து வற்றாத நீர்வளம் கொண்ட
தெய்வம்
போல் நின்று காக்கும் தந்தையின் முல்லையடைந்தனர்
348
வட
கீழ் திசைக் காற்று வந்து வசந்த மென் தென்றலாய் வீச
பெருமலர்
பூம்பொழில்களில் பூவிரியும் ஓசைகளோடும்
பூங்கொடிகள்
என்னும் மங்கையர் பாவையர் கூத்தாடி களிக்க
கொன்றை என்னும் மாமன்னன் கொட்டினான்மலரை பரிசாக
349
செம்பவளம் போல் இதழை ஒத்த செழித்த கொவ்வைக் கனிகளும்
வளைந்திடும் இடையை ஒத்த வண்டுகள் மொய்க்கும் கொடிகளும்
மதி முகமாய் ஒளி வழங்கும் மலர்ந்த முல்லை மலர்களும்
முல்லை நிலத்தின் வனப்பினை மூவுலகோர் வந்து காண்பர்
350
கருநாவல் மரத்தின் பழங்கள் காற்றினால் தரையெல்லாம் பரவ
கரும்பழங்களை மொய்த்து நுகர கரிய நிற வண்டுகள் சூழ
பகலினை இரவாய் காட்டும் பரந்த அம்முல்லைய் நிலத்தை
பார்த்திட கண்கள் வேண்டும் ரசித்திட ஞானம் வேண்டும் 351
கறந்திடும் பசுக்கள் தன் கன்றுகட்கு பாலை ஊட்டிட
மிகுதியாய் சொரியும் பாலோ முல்லையில் ஓடையாய் ஓட
ஓடிடும் பாலினை உண்டிட ஓரணியாய் பறவைகள் நிற்க
முல்லைகள் முறுவலித்திடும் முல்லையின் அழகோ அழகு
352
விசய திவிட்டர்கள்
மருதநிலம் எய்தல்:
நீர் நிறைந்த வயலின்
ஒலி நெஞ்சத்தில் இசையாய்
எழ
இள அன்னக் குஞ்சுகலெல்லாம் இடம் விட்டு பறந்து செல்ல
வேர்பலா பழுத்த பழத்தில் சுளையது பொன்னாய் ஒளிர
மலைவாழைக் குலைகளோடு மாங்கனிகள் விளையும் மருதம் 353
கதலியது மடலின் உள்ளே கருங்குரங்கு மறைந்து கொள்ள
பெண்குரங்கு துணையைப் பிரிந்து பேதமையில் தனித்து வருந்த
பெரு எருமை முட்டியதாலே வழைப்பூ தேனினை கொட்டிட
கொட்டிய தேனோ மருதத்தில் தாமரை இதழில் தங்கின 354
கரும்புகளை ஆலையில் அறைத்து கன்னலின் சாறை எடுத்து
காய்ச்சிட எழுந்திடும் புகை கருமுகில் போல் தவழும் மருதம்
நெற்பயிரின் ஊடே வளர்ந்த நீலோற்பல பூக்காடுகளும்
மருதத்தின் மாண்பு தன்னை மற்றவுலகும் அறிந்து பொருமும்
355
நால்வகை நிலத்தின் அழகை நவின்றிட்ட
வெண்நிற விசயனும்
போதனபுரத்தை அடைந்தனர்
பொதுமக்கள் வாழ்த்தொளியுடன்
பயாபதி மன்னன் அழைத்தான்
பாசத்தில் மகன்கள் இருவரையும்
கருங்குழல் தரையில் பதிய தந்தையை வணங்கினர் இருவரும் 356
மகன்களை மார்புடன் தழுவினான் மகிழ்ச்சியில் உச்சி மோந்தான்
விசயனும் தந்தைக்கு
உரைத்தான் திவிட்டனின் ஆற்றலைப் போற்றி
சினந்து எழுந்த சிங்கம்
தனை திருமார்பன் என் தம்பி திவிட்டன்
வாய்பிளந்து கிழித்ததை கூற மன்னனும் போற்றினான் மகனை 357
சீயவதை சருக்கம் முற்றுபெற்றது.
8. கல்யாணச் சருக்கம்.
திவிட்டன் அரிமாவைக்
கொன்ற செய்தியை சடி மன்னன் அறிதல்
திருமாலின் நிறமுடை
திவிட்டன் அரிமாவைப் பிளந்து அழித்து
வெண்மதி நிறமுடை விசயனோடு அழகிய போதனத்தையடை
விசும்பின் வழியோன் ஒற்றன் திவிட்டனின் திறமையை சொல்ல
சுவலனசடிஇன்பம்கொண்டான் நிமித்திகன் சொல் நிறைந்ததாலே
358
கரிய கயல் மீன்கள் இரண்டு கண்களாய் முகத்தில் அமைய
கார் கூந்தல் நிலம் தழுவ கன்னமதில் செவ்வானம் பதிய
சித்திரமாய் விளங்குகின்ற செல்வமகள் சுயம்பிரபைக்கு
திருமணம் செய்து வைக்க சிந்தித்தான் அமைச்சரோடு 359
வருத்தமானம் என்னும் நாட்டின் வண்ண மாளிகையில் வசிக்கும்
பிரீதிவருத்தனன் அரசன் பொன்னொளி மேனியுடையான்
காந்தருவ நகரை காக்கும் கண்ணோட்டம் மிகுந்த பெரியோன்
ஏழிசை தினமும் ஒலிக்கும் இல்லத்தில் வாழும் விருககடி என்பான் 360
பொன்னிறைந்த
மதில்களையுடைய கந்தமாதனம் நகரையாளும்
தேன்
சிந்தும் மார்புமாலை சூடிய திவாகரன் வேந்தனாவான்
சக்கரவாளகிரிக்கு
மன்னன் விண்ணுலக இந்திரனாய் அழகன்
மலையோடு
மோதி சிதைக்கும் மதவேழம் கொண்ட வச்சிரதாடன்
361
இயற்கையின்
எழிலினோடு எழுந்து நிற்கும் மாளிகையுடைய
தேவரவணவம்
நகரத்தரசன் இரமியதரன் என்னும் பெயரோன்
மாடத்தின்
கொடிகள் தன்னை மேகங்கள் மகிழ்ந்து தழுவும்
விஜயகூட
நகரின் வேந்தன் வேகமாதரன் என்னும் வீரன் 362
மெல்லிய
யாழ் நரம்பு மீட்டும் சொல்லுடைய மாந்தரிசையின்
கிருதனமா
நகரின் காவலன் கருடாங்கதன் என்னும் தீரன்
ஆழியும்
மதிளும் சூழ்ந்த நீர்வள நிலங்களைக் கொண்ட
சோபன
நகரத்தின் நாயகன் சித்ரதரன் என்னும் மன்னன் 363
ஈண்மரையும்
அழைத்தான் சடி இரதநூபுரத்தை காக்க செய்தான்
ஒப்பற்ற தன் படைகளையெல்லாம் ஒப்பனை செய்ய
ஆணையிட்டான்
களிறுகளை அழகு செய்தான் கருவிகளை அதன்
மேல் ஏற்றினான்
பரிகளின் பொருள்களைப் பூட்டி பார்ப்பவரை
வியக்கச் செய்தான் 364
சுடர் தரும் மணிகள் பதித்த சுந்தரத் தேர்களைக்
செய்தான்
கால் ஒட்டி ஆடையை திரைத்து அரைக் கச்சையை
அசைய கட்டி
வீரக்கழல் மாலைகளோடு வீரார்களை திரளச்
செய்தான்
சுவலனதரன் மகளைத் தொடர துவங்கியது படையணி
வகுப்பு 365
அரிபுரம் நகரின் வேந்தனும் சடிமன்னன்
மருமகனுமான
வியாக்கிர ரதன் தன் படையோடு மாமனுடன்
கலந்து கொண்டான்
அருமை மகன் அருககீர்த்தி அதிர்ந்திடும்
பெரும் முரசுகளோடு
நிலமகள் நெளிந்து நடுங்க நெடும் படையுடன்
சேர்ந்து கொண்டான் 366
அத்தனை சடியின் படைகளும் அணி வகுத்து
நின்ற பின்பு
சுவலனசடி மனம் நினைத்தது சொக்க வைக்கும் வின் ஊர்தி படைக்க
பசும்பொன் ஒளிர்ந்து நிற்க பல வளங்கள்
கொண்டதாக
நீலநிற நெடு வானம் தொட்டு நின்றது அந்த
வான் ஊர்தி 367
வலம்புரி முத்துமாலைகளுடன் வண்டு சூழ் மலர்மாலைகள் தொங்க
வைரமிழைத்த தூண்கள் நிறுத்தி
வின் ஒளிரும் பொன் கூடம் அமைத்து
மகரமீன் முகத்தின் வடிவில் மாசறு பொன் குவியலின் ஒளியியுடன்
ஞாயிறின் வெண் ஒளி மழுங்க விண்ணுலகம்
ஒளிர நின்றது ஊர்தி 368
வாழையோடு கமுகு குலைகள் வண்ண தோரணங்கள் பல கட்டி
முத்துக்கள் குவியலின் மீது பொன் பூரண
கும்பங்கள் வைத்து
பசும் பொன் சங்கிலியில் கோர்த்த பொன்மணிகள்
மென்னொலியோடு
அகிற்புகை விண்ணில் சூழ்ந்து அனைத்து
திசைகளும் மறைந்தது 369
பொன்குழம்பால் தரையை மெழுகி
புதுப் புது சித்திரங்கள்வரைந்து
சிற்றிடை மெல்லியளார்கள் சிறப்புடன் நடனமாடும் கூடமும்
அணங்குகள் உறைங்கி எழ அரும் பொன் தகடிட்ட அறைகளும்
மொத்தத்தில் சொர்கலோகமே வின்னூர்தியாய்
வந்திருந்தது 370
இரதநூபுர மாநகர் மன்னன் சுவலனசடி மகளை அழைத்தான்
பஞ்சொத்த பஞ்சணையில் இருந்து பைங்கொடியாள்
சுயம்பிரபை
கார்முகில் கூட்டத்தினிடையே கண் பறிக்கும் கொடி மின்னலாய்
பேடிகள் காவல் சூழ்ந்திருக்க செவ்வடிகள் தரை பதிக்கலானாள் 371
கஸ்தூரி மணம் கமழ்ந்து வீச அகிற்புகை படர்ந்து சூழ
கன்னிமாடம் விட்டு வந்தாள் கன்னியவள் தாயிடம் சென்றாள்
சிற்றிடையும் செவ்விதழுமுடைய திருமகள்
ஒத்த சுயம்பிரபை
செவிலித் தாயுடன் வந்தவள் செவ்விய நற்தாயை
தொழுதாள் 372
கோப்பெருந்தேவி மனம் குழைந்து குலக்கொடி சுயம்பிரபையை
மார்புடன் அணைத்து மகிழ்ந்து மன்னன் மகளை
உச்சி மோந்தாள்
வல்லணிகள் அணியப் பெற்றால் வனிதை மேனி வாடும் என்று
மெல்லணிகள் அணைத்தும் பூட்டி பொன்மகளை
ஒப்பனை செய்தாள் 373
சோதிட நூல்கள் கற்றறிந்த சோதிடர்கள் நல்ல நேரம் சொல்ல
சுயம்பிரபை மென்னடி எடுத்து சுந்தர விமானத்தில்
பதித்தாள்
பவளவாய் மங்கையர்கள் சூழ பாசத்தில் செவிலித்தாய் தொடர
விமானத்தில் ஏறிய நங்கை விண்ணுலக பெண்ணாய் திகழ்ந்தாள்
374
பொன்னோடு பொருள்கள் எல்லாம் பொதிந்தன
விமானத்தில் சீராய்
பெட்டகம் நிறைந்த பெருங்கலம் பறந்தது வானில் அருங்கலமாய்
ஆர்த்தன முரசுகள் சங்கும் அதிர்ந்தன கொம்புகள் சிறு பறைகள்
நெருங்கின தேர்களோடு பரிகள் சடிமன்னன் யானையில் ஏறினான் 375
மேகங்கள் வந்து குவிந்தன மலைகளின்
உச்சியின் மேலே
வாட்படை வீரர்கள் கரங்களில்
வாள்கள் அசைந்து மின்னின
இன்னிசை கருவிகள் முழங்கின எதிரொளியாய்
சிகரங்கள் ஒலித்தன
விஞ்சை மன்னன் பெருஞ்சேனை விண்ணிடை பரவி ஒளிர்ந்தன 376
கங்கையின் இருகரை எல்லாம் கற்பகச் சோலைகள் உண்டு
சிந்துவின் இருகரை எல்லாம் பொங்கிய வெண் நுரையுண்டு
சந்தன சோலைகள் நிறைந்து பெருமலை
அகில்களுமுண்டு
தேன் பால் கலந்த தீம்பாலான சுரமை நோக்கி
புறப்பட்டது படை 377
சடி
முதலியோர் போதன நகரில் உள்ள திருநிலயத்தை எய்துதல் :
நீர்வளம் நிறைந்து பெருகி நெடு வயல்கள் சூழ்ந்த சுரமையில்
திருநிலையம் அகமெனும் பொழிலில் திருமண
விஞ்சையர் இறங்கினர்
மலரினில் கொட்டிய மதுவை மாந்திய வண்டுகள் எல்லாம்
மதுரமாய் கீதம் இசைத்து மன்னனை மகிழ்ச்சியில் அழைத்தன 378
சந்தன மரங்களின் அடியில் சினந்திடும்
வேழங்களைக் கட்டினர்
குங்குமப் பூக்களின் படுக்கையில் குதிரைகள் புரண்டு களித்தன
கொடி கொண்ட தேர்களெல்லாம் கொட்டிலின் வாயிலில் நின்றன
சடிமன்னன் தங்கும்
மனையோ இந்திரன் அரண்மனை ஆயின 379
செவ்விய பொன் மாளிகைகளும் செம்பொன் ஆடல் அரங்குகளும்
அகிற்புகை சூழ் படுக்கைகளும் அளவிடா பெரும் அம்பலங்களும்
காண்பவர் மனதைக் கவரும் கண் கட்டும் பொய்கைகளும்
அத்தனையும் கொண்ட பொழிலில் அரசர்கள் மகிழ்ந்து
தங்கினர் 380
செவிலித்தாய் தாதியர்
தொடர செம்பொன் விமானத்தை விட்டு
கன்னியர்கள் காவல் சூழ காண்பவர் மயங்கும் சுயம்பிரபை
மெல்லடி எடுத்து
இறங்கி மென்பாதம் மலர்களில்
பதிய
கன்னிமாடம் உள்ளே சென்றாள் கந்தர்வலோக
தேவதையாக 381
சடியரசன் தூதுவன்
மரீசி சுரமை மன்னன்
பயாபதியை
சந்தித்து தொழுது மகிழ்ந்து
தன் மன்னனின் வரவைச் சொன்னான்
மன்னனும் மகிழ்ந்து
மலர்ந்து மந்திரிகளுக்கு ஆணையிட்டான்
நாடெல்லாம் இவ்வரவையறிய
முரசறைந்து செப்பும் என்றான் 382
பொன்மணிகள் பொழியுமாறு
புங்கவனுக்கு விழா எடுத்தான்
பொன் கருவூலம் திறந்து
பொதுமக்களுக்கு அள்ளித் தந்தான்
சுரமை நாட்டு தூதுவரை
அனுப்பி சுவலனசடியை மகிழச் செய்தான்
அத்தனைக்கும் காரணமான அருகனின் அடி தொழுது
நின்றான் 383
சுயம்பிரபைக்கு நல்லுரை
கூறி சுரமைக்கு வரவேற்பளிக்க
சொக்கவைக்கும் அழகிகளோடும்
சொட்டும் தேன் மொழிகளோடும்
பொன்னணிகள் அனைத்தும்
பூண்ட பைங்கொடி மகளீர் தம்மை
பணிமகளீர்கள் சூழச் சென்று பாங்குடன்
வரவேற்கச் செய்தான் 384
சுவலன்சடி தூதுவன்
மரீசிக்கு சுத்தப் பொன்மணிகள் தந்தான்
சுந்தர மதுர மொழிகள்
கூறி தூதன் மரீசியை
மகிழச் செய்தான்
சுவலனசடி மன்னனைக்
காண அவனைத் தன்னுடன் வரப் பணிந்தான்
அவனையும் உடன் அழைத்து அருகனை
வணங்கச் சென்றான் 385
இருமன்னர் குணங்கள்
ஆய்ந்தால் இருவருக்கும் சமமே ஆகும்
ஆற்றலை ஆய்ந்து
பார்க்கின் ஆற்றலும் சமமாய்
தெரியும்
நற்குணங்கள் தேர்ந்து நோக்கில் நல்லதோர்
சமமே கிட்டும் – என
அமைச்சர்கள் கூறக் கேட்டு
அரசனும் ஆழ்ந்தான் மகிழ்வில் 386
மற்றுயிர் கொல்லும்
களிறுகளும் மதநீர் பொழியும்
களிறுகளும்
மேல் வைக்கும்
பொருளைத் தூக்கி மேகமாய் சிதைக்கும்
களிறுகளும்
வைர
அங்குசத்தைக் கொண்டு வயப்படுத்தும்
களிறுகளும்
வன் சங்கிலிக்கடங்கா களிறுகளும்
வரிசையில் நிறுத்துமென்றான் 387
செம்பொன் முத்துக்கள்
கோர்த்து பசும்பொன் தகடுகள்
பதித்து
உருண்டிடும் சக்கரங்களில்
உயர்நிலை கண்ணாடிகள் பொறுத்தி
முத்துமணி மாலைகளோடு
மணநிறை தேன் மாலைகள் கட்டி
உச்சியில் கொடிகள் பறக்க உடன் திரளட்டும்
தேர்கள் என்றான்
388
பசும்பொன் சுடருடன்
படாகம் பரிகளின் முகத்தில்
கட்டி
உடலெல்லாம் மணப்பொடிகள் தூவி உயர்மணி
மாலைகள் இணைய
புரவிக்கு மேல் அணிவிக்கும் பொருந்திடும்
பொருள்களோடு
பிடரிமுடிகள் மடிந்து
ஒளிர புறப்படட்டும் புரவிகள்
என்றான் 389
ஊழ்வினையால் கொல்வதென்பது
உறுபகையால் விளையும் போரால்
போரினில் வீரத்தைப் போற்றி
பொன்னுயிர் துறக்கும் மறவர்கள்
வீரக்கழல் கால்களில்
அணிந்து வரிந்து கட்டிய
கச்சையுடன்
வாள்களைக் கரங்களில்
ஏந்தி வரிசையில் வந்து நின்றார்கள் 390
பஞ்சாடைகளும் பட்டாடைகளும்
பலவிதமான பிற துகில்களும்
நவமணிகள் பதித்து
செய்த நல்ல பல அணிகலன்களும்
வலம்புரி சங்குகள்
ஈன்ற வளமான முத்துக்
குவியலுடன்
வைரக் குவியலையும்
வைத்து விஞ்சையன் பாடியில் வைத்தான் 392
தேன் கனி சுவையுடைய நீரும்
செவ்விளநீர் குறும்பைகளும்
தேன்மா, பலா, வாழை கொண்ட செவ்விய
பழக் குவியல்களும்
கஸ்தூரி வாசனையோடு
வெற்றிலை கன்னல் சாறு கற்கண்டுகளும்
சாதிக்காய் இன்னோரன்ன
என சகலமும் அனுப்பி
வைத்தான் 392
முடிமாலையுடன் மணங்கமழும்
தண்டமாலையும் பூச்செண்டும்
தொடையணி பொன்மாலையும்
சல சலக்கும் கிண்கிணிகளும்
ஆய்ந்தப் பன்மணி
மாலையும் அணங்குகளின் ஒப்பனைப் பொருளும்
அழகிய அரண்மனை
எல்லாம் அமைந்திடச் செய்தான்
மன்னன் 393
குங்குமச் செங்குழம்பு கொட்டி சந்தனக் குவியலை சேறாக்கி
இன்னும் மணப் பொடிகளைக் கூட்டி அகிற்புகை ஊடே ஊட்டி
அழகிய பல கலவைச் சாந்தை
அதனுடன் சேர்த்து கலக்கி
திருமணம் நிகழ்தற்குமுன் சாரளென
பொன்துகள் தூவச் செய்தான் 394
போதனத்தின் பொன்முடி
மன்னன் பயாபதி பாகனுக்குரைத்தான்
பட்டத்து யானையை
அலங்கரித்து படை முன்னே
நிற்கச் செய்தான்
சித்திரதரனை அழைத்தான்
திவிட்ட விசயரை வரப் பணித்தான்
அரசுவா என்ற களிறின் மேல் அரசனும் ஏறி அமர்ந்தான் செல்ல 395
பிறநாட்டு மன்னர்களோடு
பயாபதி மன்னன் புறப்பட
கொட்டியது இடியென
முரசம் தட்டின மத்தள ஒலிகள்
வேய்குழலின் இன்னிசை ஒலியும் வெண்சங்கு கொம்புகள் ஒலியும்
எண்திசையும் அதிர்ந்து ஒலிக்க இயங்கியது பயாபதி படைகள் 396
சுரமையின் மன்னன்
பயாபதி சுவலனசடியை காண வருவதை
மரீசி எனும் நல்லிய தூதன் மன்னனுக்கு செய்தி
அனுப்பினான்
வெண்மலை அரசன் சடியும் மலை சூழ்
சுரமையின் மன்னனும்
சோதிடர்கள் குறித்த
நேரத்தில் சந்தித்தனர் ஒருவரை ஒருவர் 397
மன்னர்கள் தொழுது
கொண்டனர் மகிழ்ச்சியில் நனைந்து
நின்றனர்
வெண்சங்கு நிற விசயனும்
நீல வண்ண திவிட்டனும்
கூடி
சுவலனசடியின் திருவடி
வணங்க தூக்கிய வெண்மலை
வேந்தன்
இருவரையும் மார்புடன்
தழுவி இன்பத்தில் மிதந்து
நின்றான் 398
விஞ்சையின் வேந்தன்
சாடியின் வீரத்திருமகன் அருககீர்த்தி
பொன்கழல் அணிந்த
அரசன் போதனம் போற்றிடும்
மன்னன்
பயாபதியின்
பாதம் பணிந்திட பண்புடன்
அவனைத் அணைத்து
அரசுவா எனும் களிறின் மீது
அவனுடன் அமர்ந்திடச் செய்தான் 399
சடியின் தம்பி சுவலனரதனும் மருமகன்
வியாக்கிரரதனும்
சுரமையின் அரசனைப்
பணிந்திட சூழ்ந்தது அன்பு வெள்ளமங்கு
அரசர்கள் இருவரும்
அங்கு அன்பினால் அளாவிய
பின்னர்
திருநிலையம் விட்டு
புறப்பட்டு திருநகரின் உள்ளே புகுந்தனர் 400
திண்ணிய தோள்கள்
உடைய விசய திவிட்டர்
இருவரும்
சேர்ந்த மன்னர்கள்
பலருடன் சித்திரகூடத்தை அடைந்தனர்
செவ்விய மங்கையர் எல்லாம்
செங்கரத்தால் சாமரை வீச
திவிட்ட விசயர்
மன்னர்களுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தனர் 401
வித்யாதரர் உலகம் போற்றும் வெண்மலை
வேழ வேந்தரே
மண்ணுலக மனிதனை
மதித்து மகளை அளிக்க
இசைந்த ஏறே
கருத்தினில் மகிழ்ச்சி
எனினும் காரணம் ஏதும் அறியேன்
இந்திரனை ஒத்த மன்னரே இயம்புவீர்
எண்ணத்தை என்றான் 402
இக்குவாகு மரபில்
வந்த இமயம் ஒத்த மண்ணின் மன்னா
எம் தூதுவன் மரீசி உமக்கு சொல்லிய
விபரம் உண்ண்மையே
மெய்நூல்கள் ஓதியுணர்ந்தோர் மேம்பட
சொல்லிய உம் மகன்
திவிட்டனே சுயம்பிரபையின் திருவுக்கு
உரியவன் என்றான் 403
மன்னர்கள் இருவரும்
சேர்ந்து மகிழ்வுடன் அளாவிடும்
போது
விஞ்சையின் வேந்தன் சொன்னான்
விசய திவிட்டரை போதனம் செல்ல
அருககீர்த்தியை யானையில்
அமர அவர்களும் களிறுகள்
மேலேறி
போதனபுரம் நகரை நோக்கி போக்கினார்கள்
தம் வேழங்களை 404
பொன் அணிகளின்
சிற்றொலியும் புகழ்ந்து பாடும்
பாவையர் பாவும்
மலர் மாலையில்
தேங்கிய தேனுக்கு மயங்கிய
வண்டுகள் இசையும்
எழில்மேனி தென்றலால்
அணைக்க ஏழாம் மாடத்தில்
சுயம்பிரபை
விழிகளும் இமைக்க
மறந்திடும் வெண்மயிலின் அழகினை ஒத்தாள் 405
அமிர்தப்பிரபை என்னுமோர்
தாதி அழகிய விமானக்
கதவு திறந்து
முன்னே செல்பவன்
உன் அண்ணன் பின்னவன்
பயாபதி முதல்மகன்
இறுதியில் செல்லும்
எழிலோன் இதயங்கவர் உன் திவிட்டனாகும்
ஏந்திழை சுயம்பிரபையே நான் இயம்பினேன் இதயங்கொள்ளென்றாள் 406
விழிகளால் அவனை நோக்கினாள் விழிகளோ
பின் அசைய மறுத்தன
உள்ளத்தில் எழுந்த
உணர்வோ உயிர் வரை நுழைந்து
நின்றது
காளையவன் கட்டழகு
உருவம் கன்னியவள் கண்களைக்
கவ்வ
சுயம்பிரபை நெஞ்சத்து
நெகிழ்ச்சி நினைவினை மழுங்கச்
செய்தது 407
சுவலனசடி மன்னன்
தனது திங்களொத்த சுயம்பிரபையை
தன்னிடம் வரப் பணித்தான் தாரகையாய்
அருகே வந்தாள்
தந்தையின் திருவடி
தொழுதிட தாயென பரிவுடன்
தூக்கியவன்
சுரமையின் மாமன்னன்
அடியை தொழுதிட பணித்தான்
அவளை 408
விஞ்சையின் மன்னன்
திருமகள் வணங்கினாள் சுரமையின்
வேந்தனை
மன்னனோ மகிழ்ந்து
வாழ்த்தி மணமகளை வியப்புடன்
நோக்கி
மங்கலம்
அனைத்தும் பெற்ற திருமகளோ
இவள் என்று எண்ணி
திவிட்டன் உலகாள்வான்
என்று திட்டமாய் உரைத்தான்
மன்னன் 409
திவிட்டனின் அழகில்
உள்ளம் தேன்மழையில் நனைந்திருக்க
சுயம்பிரபை தன் நெஞ்சத்துடன் சுணக்கத்தில்
பிணக்கம் கொண்டாள்
காமநோய் மனம் கொண்டோர்க்கு நோய் போக்கும் மருந்துகளில்லை
நோய் கொண்ட மனம் கண்களுக்கு நிறையென்னும்
பண்புகளில்லை 410
பயாபதி வேந்தனின்
மனைவி பட்டத்துராணி சசிதேவியோ
திவிட்டனை அடையப்
போகும் திருமகளை கண்டுவரப்
பணித்தாள்
மதுகரியும் வசந்தசேனையுடன் மங்கலப்
பொருள்கள் ஏந்தி
மலருக்கு விரையும்
வண்டாய் மலைமகளைக் காணச் சென்றனர் 411
கவரிமான் முடிக்கற்றையின் சாமரைகள்
வலப்புறம் வீச
கட்டிலில் அமர்ந்திருந்தாள் கலைமகள் போல்
சுயம்பிரபை
வனிதையர்கள் வலமாய் வணங்கி
வாழ்த்துக்கள் கூறி நிற்க
சேடியர்கள் முகமன்
கூறிட செவ்விதழ் மலர நகைத்தாள் 412
மாதவசேனை என்னும்
மங்கை மெல்லிய ஓர் பலகையின்
மேலே
சுயம்பிரபை என்னும்
உருவை சுந்தர வண்ணக்
கலவையில்
தேர்ந்த ஓர் ஓவியன் போல சித்திரமாய் வரைந்து
கொடுத்து
மெல்லிய துகில்
கொண்டு மூடி மாமியார்
சசிதேவிக்கு தந்தாள் 413
சுயம்பிரபையின் சொக்கும்
அழகை சொல்லோவியமாய் சொன்னதை
மாதவசேனை வணங்கிச்
சொல்லி வரைந்த ஓவியப் பலகையை தந்தாள்
வண்ணக் கலவைகள்
கொண்டு வரைந்திட்ட ஓவியந்
தன்னை
சசிதேவியின் விழிகள்
நோக்கின திருமகளே இவள் தான் என்றனள்
414
பளிங்குப் பலகையின்
ஓவியத்தை பாசத்துடன் தழுவிய
ராணி
யாம் யாற்றிய
நோம்பின் பலனை இன்று யாம் பெற்றோம்
என்றாள்
மாதவசேனையை நோக்கியவள்
மகிழ்வுடன் அவளிடம் சொன்னாள்
திவிட்டனுக்கு காட்டுவாய் இதை திவிட்டனும்
வியப்பான் என்றாள் 415
திவிட்டனின் அரண்மனை
வாயிலை சேனையவள் மெல்லக்
கடந்து
திவிட்டனின் செவ்வடி
பணிந்து தங்களுக்கோர் அருங்கலமென
சுடர்மணிப் பளிங்கு
பலகையின் சுடர்விடும் ஓவியத்தை
நீட்ட
சுயம்பிரபை என்று அறியாமல் சொக்கியது
விழிகள் இரண்டும் 416
விண்ணுலகம் பெயர்ந்த மகளோ
விஞ்சையரின் வஞ்சி இவளோ
மண்ணுலகின் பேரழகி
தானோ மாதவசேனையே பகர்வாய்
என்றான்
விண்ணுலக வஞ்சியும்
இல்லை மண்ணுலக மங்கையுமில்லை
விஞ்சையின் சடி பெற்றெடுத்த வெள்ளிமலை
சுயம்பிரபையிவள் 417
அண்ணலும் அவளை நோக்கினான் அவள் நோக்கா
ஓவியமானாள்
அனலில் இட்ட வெண்ணெயாய் மனம் அகத்தினில் கரைந்து
நின்றான்
பிறை ஒத்து ஒளிரும் நூதலும்
பித்தனாக்கும் இருவிழிகளும்
காமனின் கணைகளாய்
தாக்க காமவெப்பம் கொண்டான்
திவிட்டன் 418
சுயம்பிரபையின் மணமதை நாளை சுற்றத்துடன்
காண வேன்டுமென
கதிரவன் மேற்றிசை
மறைந்து கண்ணுறங்கச் சென்றான்
அன்று
மயக்கிடும் மாலைப்
பொழுதும் மாசிலா இளந்தென்றலும் வீச
மணமகள் சுயம்பிரபையும் மாலவன்
அருகன் கோயில் சென்றாள் 419
தாதியர்கள் பூஜைப்
பொருளுடன் தத்தை போல் சூழ்ந்து வந்திட
மலர்களைக் கைகளில் ஏந்தி மணமிகு அகிற்புகை
மணந்திட
அருகனின் திருவடிகள்
தன்னில் அர்ச்சித்துப் பூக்களை
சொரிந்து
எண்குணத்தான் பெருமையினை
ஏந்திழையாள் பாடலானாள் 420
தாமரை மலர் மேல் நிற்கும்
தயவுள்ளம் கொண்டவர் நீயே
செருக்கற்று மலர்ந்து
நிற்கும் செவ்வடி செம்மல்
நீயே
எண்வினைகள் சுழலை வென்ற ஏகாந்த
பெருமான் நீய
எண்குணங்களை உன்னுள்
கொண்ட எழில் கொண்ட நாதன் நீயே
421
அறநெறி எடுத்துரைத்த
அறவாழி அந்தணன் நீயே
அனைத்துயிர்க்கும் அன்பு காட்டும் அருள் உரு உடையோன்
நீயே
காதி கர்ம வினைகள் வென்ற கடவுளாம் அருகன்
நீயே
கன்னியவள் சுயம்பிரபை
கசிந்துருகி வணங்கி நின்றாள் 422
காமனை அறவே வென்று நிற்கும்
வாமனனை வாழ்த்தி வணங்கி
கன்னிமாடம் சென்றடைந்தாள்
காமவேட்கை அவள் மனதில் ஓட
காமத்தை மறைத்தாளாயினும் கன்னிமேனி
பசலைப் பரவிட
கண்டவர் அறியும்
வண்ணம் அவள் காமமும்
வெளியாயிற்று 423
தோழியர் இணைந்து
சொல்லினர் இங்கித மொழிகள்
பலவும்
நீர் முகில்
தவழும் பொழில்கள் நிரைந்தது
தான் சுரமை நாடு
மனதிற்கு இனிய மன்னவன் மனை கொண்டு வாழும்
இடம்
பாலையாய் இருந்திட்டாலும் பாவைக்கு
துன்பமிலையென்றனர் 424
காதலில் கலந்திட்டோர்க்கு சுற்றமும்
உறவும் துன்பமாம்
காதற்துணை பிரியும்
போது கடும் நெருப்பாய்
தன்னைச் சுடுமாம்
ஐங்கணையான் வீசும்
கணையை நம் தலைவி தாங்காளென்று
நகைச்சுவை பலவும்
பேசி நங்கையை நாணச் செய்தனர் 425
கூத்தர்கள் மத்தளங்களில்
கொட்டிடும் இசை மறைந்தன
யாழொடு பாணர்கள்
பாடும் யாழிசையும் பாடலும்
தேய்ந்தன
கள்ளுண்டு பலி ஊன் உண்ணும்
பேய்களும் கண்ணுறங்கின
சோலையின் பறவைகள் தூங்கின திவிட்டனின்
மணவிழா கண்டிட 426
புள்ளினங்கள் மெல்லொலியால்
பூமியின் வைகறைப் பொழுதாய்
இளங்காலை ஞாயிறு
எழுந்தான் இருளது மெல்ல கரைந்தது
பரிதியின் வெம்மைக்
கதிரால் பனிமலைக் குன்றுகள்
உருகிட
குலத்திடை ஆம்பல்
மலர்கள் குவிந்தன மன வருத்தத்தாலே 427
அருகனுக்கு திருவிழா
செய்ய யானை மேல் முரசுகள் முழங்கின
மத்தளத் தோல் கருவிகளோடு மணப்புகையும்
நிறைந்தன தெருவில்
பிடியொடு களிறுகள்
குதிரைகள் பெரும் நெருக்கம்
வீதியில் பெருக
அருகனின் மங்கல நீராட்டு அறநூல்
கூற்றினின் வழி நடந்தது 428
துகில் கொடிகள்
நெருங்கி பறந்திட தூய அகிற்புகை
விண் மறைத்திட
பகலவன் தன் மறைவினாலே பகல் பொழுது இரவாய்
மாறிட
கூத்துடன் கூத்தரும்
பாணரும் கூடியே இசைக்கும்
ஒலியினை
குவலயத்தில் உள்ளோர்
எல்லாம் கூடியே நுகர்ந்தனர்
மகிழ்வை 429
அணிகலன் விரும்பினோர்க்கு அமைந்தன
இடங்கள் தனியே
மணிபொருள் விரும்பினோர்க்கு மாடங்கள்
உள்ளன அங்கே
மதுவுண்டு மகிழ்வோர்
கூட்டமும் மாண்பினில் அமிர்தம் உண்போரும்
இன்னும் பிற கூட்டங்களும் இணைந்து
கலந்து கிடந்தன அங்கு 430
பொன்மழை எண்திசையும்
பொழிய மழையினில் திரண்டனர்
மக்கள்
வண்டுகள் மொய்க்கும்
மாலையை மார்பினில் அணிந்த
மகளீர்
இளம்பெண்கள் யானை மேல் ஏறி எட்டு திக்கும்
நிற்கும் காட்சி
மலைகளின் மேல் நின்று
ஆடும் மயில் கூட்டத்தை
ஒத்திருந்தது 431
பன்னீரில் குளிர்
நன்னீர் ஆடி பட்டாடைகள்
மேனியில் உடுத்தி
பசும்பொன் அணிகலன்
கொண்டு திவிட்டனின் மண மன்றம்
செல்ல
நறுமணச் சாந்துகள்
மேனி கொண்டு நளினமான
ஒப்பனை பூண்டு
கயல் நெடிய கண்கள் உடைய சுயம்பிரபையும் பையவே வந்தாள் 432
மணக்கும் சந்தன சாந்தெடுத்து மணவேள்வி
தரையினை மெழுகி
பொன்மணிகள் பலவும்
பொருத்தி சிறு முத்துகளை
மணலாய் நிரப்பி
தருப்பைப் புல்லின்
முனைகள் கீழ்வட திசைகளை
காண வைத்து
மங்கல சங்குகள்
முழக்கத்தில் மறையோன் அவன் செய்து முடித்தான் 433
நான்மறை வேதங்கள்
கற்று நன்குணர்ந்த வேள்வி
அரசன்
முறைப்படி மந்திரங்கள்
ஓதி மூட்டினான் வேள்வித்
தீயை
சுவலனசடி தன் சுற்றத்தோடு சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு
நீர் வார்த்து
கன்னிகாதானம் நிறை மகிழ்வில்
தந்தான் அங்கு 434
செந்தீயுடன் மண வேள்விகள் செம்மையாய்
நடக்கும் போது
திவிட்டனின் வலது புறத்தில் சித்திரை
நிலாவாய் அமர்ந்தாள்
வேள்வியின் சடங்குகள்
முடிய வேங்கையாம் அத்திவிட்டன்
சுயம்பிரபை விரலினைப்
பற்றி சுற்றினான் மும்முறை
வேள்வியை 435
நங்கையின் மென் கரம்
பற்றிட நாணத்தால் உடலது சிவந்தாள்
நூதலில் வியர்வை
முத்துக்கள் நுண்ணிய அரும்பாய்
துளிர்த்தன
உற்றோரும் சுற்றத்தோர்களும் ஒருசேர
பொன் குவியல் தந்து
திவிட்டனோடு சுயம்பிரபையை
சிறப்புடன் வாழ வாழ்த்தினர் 436
மேகங்கள் தவழ்ந்து
அலையும் மேனிலை மாடத்தின்
உச்சியில்
நறுமண மலர்கள்
கொண்டும் நல் அகிற் புகையினோடும்
மாணிக்கக் கட்டிலின்
மேலே மலரனைய பஞ்சணை
மீது
கரங்களால் சேர்த்தணைத்து
கன்னியின் நாணம் போக்கினான் 437
இளமை வெள்ளம்
புரளும் ஆற்றை இதயக் காதல் அணைத் தடுக்க
காமம் என்னும்
களிறது மோத கன்னியென்னும்
கால்வாய் தன்னில்
பொங்கிய இன்ப வெள்ளம் ஓட பொன்
அணிகலங்கள் சிதறிட
திவிட்டனும் சுயம்பிரபையும் சேர்ந்து
மூழ்கித் தத்தளித்தனர் 438
பருவத்தே அரும்பி
மொட்டாகி பையவே மலர்ந்து
முதிர்ந்து
உள்ளத்தே கனிந்து
பிழிந்த காமமாம் கனியின்
சாற்றினை
இருவரும் நிறையே
உண்டு இருமனமும் நிறைவு
அற்று
உடல் மட்டும்
இரண்டதாகி உள்ளத்தால் ஒன்றிணைந்தனர் 439
திவிட்டன் நங்கையின்
நலம் பாராட்டல் :
செங்கழுநீர் மலரின் மணம்
செந்நிற மேனியில் கமழும்
செம்பவள வாயும்
இதழும் செவ்விய ஆம்பல்
தேனை நிகர்க்கும்
முகிலிடை தோன்றும்
மின்னல் முழுமதி அவள் இடையை
ஒக்கும்
இறைவனால் படைத்த
இவளோ எனக்காக பிறந்தவள்
தானோ 440
இணைந்த இருகயல்
கண்களும் தாமரை வாழ் திருமகளாகும்
காமன் மலர் ஐங்கணைகளும் கன்னியிவள்
விழியில் மங்கும்
பாற்கடல் தந்த அமுதம் போல் பாவையிவள் இதழ்கள்
இனிக்கும்
பைங்கொடியாள் இவளை அடைய பல தவங்கள் நானும்
செய்தேன் 441
நாண
கள்ள நோக்குடைய இவள் நல் நெஞ்சில்
என்னைக் கொண்டாள்
அவள் மனதில்
என் உருவத்தை அறியாமல்
அமர்த்தி வைத்தாள்
என்
தோளில் பொருந்துவாளென என் நெஞ்சமே நீயும்
அறியவில்லை
உள்ளத்து பேதமை இதுவென உள்ளுக்குள்
எண்ணிக் கொண்டான் 442
திவிட்டனும் சுயம்பிரபையும் சென்றனர்
பூம்பொழிலுக்குள்ளே
செவ்வளை மங்கையர்கள்
ஆடிடும் செவ்விய நடனம் கண்டனர்
யாழொடு குழலிசைக்கப்
பாடும் பாடலை மகிழ்ந்து
கேட்டனர்
மாலையின் பெரும்
மயக்கம் போக்க மாளிகை
மாடம் புகுந்தனர் 443
கல்யாணச்
சருக்கம் முற்றிற்று.
9. அரசியற்
சருக்கம்.
தோற்றுவாய் :
திவிட்டனின் மார்பில்
அமர்ந்து உயிரினில் கரைந்து
உறைந்த
தாமரையில் வீற்று
இருக்கும் திருமகளை ஒத்த சுயம்பிரபை
அவன் மனதின்
கிழத்தியாகி அவனோடு நிகர் போட்டி இட
நிலமகளும் வந்து சேரும் நெடும்
வரலாற்றை இனி அறிவோம் 444
சுரமை மாநாட்டில்
இருந்து சுவலனசடி மன்னனைக்
காண
விண்வழியே பயணம் செய்து வித்தியாதர
ஒற்றன் வந்தான்
வடசேடி விஞ்சையின்
வேந்தன் அச்சுவகண்டனுடன் கூடி
அரசர்கள் பலரும்
சேர்ந்து நம்மீது படையெடுப்பார்
என்றான் 445
அச்சுவகண்டன் நம் மேல் அரும் பகை கொள்வான்
என்று
முன்னமே அறிந்தது
தான் முடித்திடு அச்செய்தியை
என்றான்
அடலேறு திவிட்டன்
இங்கு ஆண் சிங்கத்தை கொன்ற செய்தி
விஞ்சையர் உலகம் தன்னில் நிகழ்ந்ததை
சொல்வாய் என்றான் 446
திண்ணிய தன் கரங்களாலே திவிட்டன்
அரிமா வாய் பிளக்க
வித்யாதர ஒற்றன்
ஒருவன் விஞ்சைக்கு சென்று
சொன்னான்
அரிமஞ்சு அமைச்சன்
சிலநாள் அச்செய்தியை மறைத்த
பின்பு
மாயன் அரிகேதுவை
அழைத்து மன்னனுக்கு சொல்லச் சொன்னான் 447
அரசன் அச்சுவகண்டன்
தன் அவையில் கொலு வீற்றிருக்க
அரிகேது அவைக்கு வந்தான்
அரிமா வாய் பிளந்ததைச்
சொன்னான்
வடசேடியின் மன்னன் மனதில்
வாளாக அச்செய்தி பாய்ந்து
வட்டவடிவ கண்கள் இரண்டும்
வனத்தீயாய் சினந்து சிவந்தன 448
விஞ்சையர் அஞ்சிடும்
மனதால் மானிடர் வலிமையாய்
தோன்றும்
எமையொத்த மன்னர்களுக்கு அவ்வலிமை
இலையளவு ஆகும் என
கடகமணிந்த கரங்களாலே
கடுஞ்சினத்தால் தூணை அறைய
பொடித்தது அறைந்த
அத்தூணும் பயந்தனர் அவையில்
இருந்தோர் 449
அரிமாவை அழித்த நிகழ்வை
அண்மையில் கண்ட அரிகேது
மன்னனின் மடமையை
எண்ணி மனதுக்குள் நகைக்கலானான்
செய்தியை மேலும்
சொன்னால் சினங் கொள்வான்
மன்னன் என்று
முகமன்கள் பலவும்
சொல்லி முகம் தாழ கைகூப்பி
நின்றான் 450
மற்றொரு ஒற்றன வந்தான் சுயம்பிரபை
மணச் செய்தி கூற
சினத்தீயால் உள்ளம்
கொதிக்க இருகரங்கள் செவியை
பொத்த
மேனி எல்லாம்
வியர்வைத் துளிர வெறிச்
சிரிப்பு சினத்தால் அதிர
முரசறைந்து முழங்கச்
செய்து முழுப் படையும்
திரட்டச் சொன்னான் 451
அடங்கிய அரசர்கள்
எல்லாம் அச்சுவகண்டன் முன்னே
வந்து
அவன் சினத்தின்
காரணம் அறியா அச்சத்தில்
நடுங்கி நின்றனர்
விஞ்சையரும் அரக்கர்களும்
இவன் அடியை முன்பே
பணிந்தனர்
தேவர்களும் இவனுக்கஞ்சுவர் இவன் வெகுளக்காரணம்
எண்ணினர் 452
தென் சேடியின் மன்னன்
சடியும் தன் மகளை மானிடனுக்கு தந்த
செய்தியை ஒற்றன்
சொல்ல சினங்கொண்டான் என அவையோர் கூற
திவிட்டனைக் கொன்று
அவன் சிரசை திருவடியில் வைப்போமென சிலர்
சுயம்பிரபையை சிறை பிடித்து சுவகண்டனடி
வைப்போமென்றனர் சிலர்453
சினமெனும் தீயில்
பிறந்ததும் செருக்கென்னும் நன்னீரானதும்
மானமாம் கூர்மை
நிலைத்ததும் மனமென்னும் உணவையுண்டதும்
பகைவரை அறவே அழிக்கும் இகல் எனும் ஒளியுடைய
வாள்
தன்னிடம் உள்ளது
என்றும் கனகசித்திர மறவன் சொன்னான் 454
வாட்படையால் ஆற்றும்
போரோ மாயத்தால் நிகழ்த்தும்
போரோ
ஆற்றாலால் நிகழ்த்தும்
போரோ அதைப்பற்றி பேச்சை
விட்டு
திவிட்டனுடன் சுயம்பிரபையை
உயிருடன் பற்றிக் கொணர்ந்து
உன்
திருவடியில் வைப்பேன் உம் சினத்தினை விடுக என்றான் 455
மகன் கனகசித்திரனின் மொழி மனதினை மிகக் குளிரச்
செய்ய
தம்பி வச்ரகண்டன்
என்பான் தனயன் சினம் தணிக்கச்
சொன்னான்
மகரமீன் வாழும்
கடல்லன்றி மரக்கலங்கள் குளத்தில்
செல்லா
தன்
நிகர் அற்றோர் அன்றி தாழ்ந்தோரின் போருக்கு
ஒப்பாம் 456
தம்பியும் தன் மக்களும் கூற தன்
செருக்கால் சினம் தணிந்து
மந்திரசாலையுள் சென்றான்
மந்திரிகள் அவன் பின் தொடர
அறிவோடு ஆற்றல்
சொல்திறம் அனைத்துடைய அரிமஞ்சு அமைச்சன்
அரசனின் சீற்றம்
தணிந்தது அடுத்ததை பேசுவோம்
என்றான் 457
மேகக்கூடம் நகரின்
மன்னன் தூமகேது மன்னனைப்
போற்றினான்
அனலபுரம் அங்காரவேகன்
போர் தொடுக்க பொங்கி பேசினான்
வாய் சொல்லில்
பகைவரை வெல்லல் வாய்த்திடும்
ஆற்றல் என்றால்
பேசலாம் எதிரி வலியறியாது
என அரிசேன அமைச்சன்
சொன்னான் 458
பகைவர்கள் பகை வெல்வதற்கு போர்படை
நூலில் நீதியுமுண்டு
ஆய்ந்து கூறிய மொழிகள் எல்லாம்
அரசனுக்கு மகிழ்வைத் தந்தது
மானிடருடன் செய்யும்
போரா தேவர்களுடன் செய்யும்
போரா
இருமையும் கலந்த போரா
என கருடத்துவன் கேட்டான்
சபையில் 459
போர் செய்யும்
படைகலங்கள் போர்நூலில் மூன்றது
ஆகும்
மானிடப் படைகலன்
ஒன்று மற்றது தேவப்படைகலனாகும்
இருமையும் கலந்த படைகலனாக இருப்பது
மூன்றாம் வகையாகும்
மானிடப் படைகலங்களோ
நாற்கூற்று என்றான் சிறிசேனன் 460
எய்வன எறிவன என்றும் வெட்டுவன
குத்துவன என்றும்
நான்கினைக் கொண்டதாகும்
மானிடப் படையின் இயல்பு
மானிடருடன் செய்யும் போரில் தெய்வக்
கலப்பு போரதுவானால்
விஞ்சையர்க்கு பழியுண்டாகும்
என விவரித்து சொன்னான் சிறிசேனன் 461
விச்சாதரர் நம்மோடு
பொருதினால் தெய்வப் போர் செய்து வெல்வோம்
வஞ்சமற்ற மானிடப்
போரில் மானிடப்போர் செய்து
அழிப்போம் – என
சிறிசேனன் விளக்கிச்
சொல்ல அச்சுவகண்டன் நன்றென்று
கூறி
அவ்வாறே செய்யச்
சொல்லி அவைக் கலைத்தான்
அச்சுவகண்டன் 462
ஒற்றன் கூறிய செய்தியைக் கேட்டு
விஞ்சையின் மன்னன் சுவலனசடி
பயாபதி விசய திவிட்டர்களையும் பண்புடை
மகன் அருககீர்த்தியையும்
தன்பால் உடனே வரவழைத்து தன் ஒற்றன் கொணர்ந்த
செய்தியை
அனைவரும் அறிந்திடச்
செய்ய ஆய்வினில் அமர்ந்தனர்
அனைவரும் 463
அவையினில் இருந்தோர்
எல்லாம் அச்சுவனுடன் போர் எதிர்கொள்ள
தத்தம் நெஞ்சினில்
எழுந்த திண்ணிய போர் வலிமைகள்
பற்றி
எழுச்சியுடன் போரிட எண்ணி எடுத்துரைத்து வீரம் பேசிட
விஞ்சை இளவல் அருககீர்த்தி வீரத்தை
அன்று காட்டுவேனென்றான் 464
வெண்சங்கின் நிறம் உடைய விசயன்
முன் வந்து வணங்கி
நின்று
பகைவரின் செங்குருதி
தன்னில் செந்நெல்லை விளைப்பேனென்றான்
திவிட்டானோ தன் மாமனை வணங்கி
வேற்படை விஞ்சையின் வேந்தே
விளைவுகள் இனி அனைத்துக்கும் விரும்பியே
பொறுப்பேற்பேனென்றான்465
திவிட்டனின் கூற்றைக் கேட்ட சுவலனசடி
மன்னன் மகிழ்ந்து
வித்தையும் மந்திரங்களையும் வேதம் போல் உரைப்பேனென்றான்
அத்தனை வித்தைகளையும்
அவன் மனதில் ஓதி உணர்ந்து
சிந்தையில் பதியச்
செய்து சிரம் தாழ்த்தி
வணங்கி நின்றான் 466
மந்திரங்கள் மனதில்
பதிய மந்திரத்திற்குரிய தெய்வங்கள்
திவிட்டனின் முன்னே
தோன்றி தெரிவியுங்கள் கட்டளையென
தெய்வங்களுக்கு சிறப்பு
செய்து தேவையில் அழைப்பேனென்றான்
விஞ்சையின் தூதுவர்
இருவர் வந்து நின்றனர்
திவிட்டன் முன்னே 467
தூதர்கள் இருவரும்
கூறினர் அசுவகண்டன் தூதுவர்கள்
என்று
வடசேடி மன்னன்
சொல்லிய விருப்பத்தை சொல்வேனென்றனர்
எங்களின் மன்னன்
கேட்டார் சுயம்பிரபையை காணிக்கையாக
காணிக்கை இல்லையென்றால்
திவிட்டனின் உயிரைக் கேட்டார் 468
செருக்குடன் தூதுவர்கள்
கூறிய சுயம்பிரபையின் பெயரைக் கேட்டு
திவிட்டனின் சினத்தீப்
பற்றி செந்நெருப்பைக் கக்கின
கண்கள்
வெம்புண்ணில் பாய்ந்த
வேல்போல் வியர்வை மேனியில் முத்தாய் உதிர
தெய்வத்தன்மையுடைய நம்பி மனிதத்தன்மையுடன் கூறினான்
469
தொன்மையில் பழக்கம்
உண்டு தூதுவரை நலியாதிருத்தல்
அறிவிலியே ஆனாலும்
அரசர் அவர் பிழைப்
பொறுத்தல் அறமே
திவிட்டனின் சொல்லைக்
கேட்டு திரண்டிருந்த மன்னர்களெல்லாம்
அச்சுவகண்டனை எள்ளி நகைத்து ஆண்மை வாய்ச்சொலோனென்றனர்470
திவிட்ட நம்பியை
நாடி இங்கு வந்து திருவடிகளைப் பணிந்து தொழுதால்
கிட்டிடும் வடசேடி
அவனுக்கு கிடைத்திடும் ராஜசுகம்
அங்கு
அவ்வாறு செய்ய மறுத்தால் அவனது இன்னுயிர் பிரியும்
இரண்டினில் எது வேண்டுமென கூறி இங்கு
மீண்டும் வருவீர் என்றான் 471
மன்னனின் உரையினைக்
கேட்டு மதியிழந்த தூதுவர்கள்
நிற்க
தெய்வமாம் அசரீரியின்
குரல் திவிட்டனே நிலைப்பான்
என்றது
தேவதுந்துபிகள் ஓங்கி முழங்கின செவ்விய
வரிசங்குகள் ஆர்த்தன
சுந்தரிகள் இடவிழிகள்
துடித்தன சுரமைநாடே சுடராய்
ஒளிர்ந்தது 472
அச்சுவகண்டன் வடசேடியில்
ஆளும் குடையை வண்டுகள்
துளைத்தன
தேர்குடையில் காக்கைகள்
கத்தின திக்கெட்டும் தீ பற்றி
எரிந்தன
குறுமுகில்கள் குருதி
பொழிந்தன குறைத்தலை பிணங்கள்
கூத்தாடின
ஆண் பகைமை பெண்னொடு பொருந்த செவியணி மண்ணில்
சிதறியது 473
வேற்படை வேல்கள்
எல்லாம் கூர்மையும் ஒளியும்
மழுங்கின
வெற்றியின் வளைந்த
வில்கள் விண் அதிர தாமே முறிந்தன
ஆடவர் இடவிழிகள்
துடித்தன மங்கையர் வலது கண்கள் துடித்தன
அச்சுவகண்டன் கேடினை
உரைக்க அத்தனை உற்பதமும்
நிகழ்ந்தன 474
மண்ணகம் சென்ற தூதர்கள் விஞ்சைக்கு
திரும்பி வந்தனர்
சுரமையின் மன்னன்
கூறிய சொற்களை முழுதும்
கூறினர்
அடங்கிடா சினத்தைக்
கொண்டு அச்சுவகண்டன் சீறினான்
அனைவரையும் சிறைபிடித்து
அழைத்துவர ஆணையிட்டான் 475
முகில் மோதி முழங்கும்
ஒலியில் முரசுகள் அதிர்ந்து
ஆர்த்தன
வெண்சங்குகள் ஒலியினோடு
போர் பறைகள் எங்கும்
அலறின
நால்வகைப் படைகளை
வீரர்கள் நல்லதோர் ஒப்பனை
செய்தனர்
விஞ்சையின் பெரும்
படைகள் மண்ணுலகில் வந்து இறங்கின 476
பயாபதியின் சுரைமை
நோக்கி வடசேடி படைகள்
நகர்ந்தன
காலாட்படை முன் அணி வகுக்க
தொடர்ந்தன மூவகைப் படைகள்
ஆழியின் அலைகளின்
எழுச்சியாய் அத்தனைப் படைகளும்
செல்ல
நெலிந்தது நிலமகள்
முதுகு இருண்டன எட்டு திசைகளும் 477
போதனமா நகரின்
உள்ளே புகுந்தன பகைவர்
படைகள்
பயாபதி வேந்தன்
படைகள் பெருமலையாய் எதிர்த்து
நின்றன
முகிலோடு முகில்
மோதலும் கடலோடு கடல் கலத்தலுமாய்
எதிர்த்தன இருவர்
படைகளும் இருண்டது மண்ணுலகு
அங்கு 478
தேர்படைகள் இரண்டும்
மோத கொடியுடை தேர்கள்
முறிந்தன
குன்றொத்த களிறுப்
படைகள் குத்தி முட்டி
குன்றென சாய்ந்தன
வாட்கொண்ட காலாட்படைகளோ
வதைத்தன ஒருவரையொருவர்
வளம் கொண்ட நதியினைப்
போல வெள்ளமாய் புரண்டது
குருதி 479
வாயுவென பறக்கும்
பரிகள் வன்மையான கால்களைக்
கொண்டு
வாகாக எம்பிப்
பாய்ந்து தைக்க வேந்தர்கள் அணிகலன்கள் சிதற
வில் கொண்டு
தாக்கிய வீரர்கள் விற்களின்
நாண்கள் அறுபட
விண்ணவரும் வியந்து
பார்த்தனர் வெஞ்சினப் போரின்
தன்மையை 480
தென்சேடி விஞ்சையின்
மைந்தன் கீழ்திசைப் பிறப்போன்
பேரான்
அருகக்கீர்த்தியின் தோள் வலிமை அம்புகளை
கார்மழையாய் பொழிய
பகைவர்கள் சிரங்கள்
எல்லாம் பனங்காய்களாய் மண்ணில்
உருள
அன்னவன் சென்ற இடமெல்லாம் ஆறென குருதி வெள்ளம்
ஆனது 481
அருகக்கீர்த்தியின் அம்பு மழையால் ஆதவன் கண்கள் அச்சத்தில்
மூட
வெள்ளிய பகலினை இருளது விலக்க அஞ்சிய
பகைவர்கள் பஞ்சென பறக்க
மணிமுடிகள் குருதியில்
மிதக்க மன்னவர் உடல்கள்
மண் உரமாக
அருகக்கீர்த்தியின் அரும் திறத்தால் அச்சுவகண்டன்
படை சிதறியதங்கு 482
கடுங்காற்றின் வீச்சின்
முன்னால் கடல் உடைந்து
ஓடுவது போல்
நம்
படை புறமுதுகிட்டது என சுவகண்டனுக்கு தூதுவர்
சொல்ல
இருதோள் கொண்டு
ஓர்வில்லாலே தன் படை தோற்றதை
அறிந்து
நம்
மன்னர்கள் ஆற்றல் திறன் நன்று
நன்று
எனச் சினந்தான் 483
மூத்த அவன் தம்பி நீலரதனும்
உடன் பிறந்த நீலகண்டனும்
ஒளியுடை பற்கள்
கொண்ட வயிரகண்டன் என்றோர்
தம்பியும்
நான்காம் தம்பி சுககண்டனும் நஞ்சுடை
நாகமாய் சினந்து சீறி
பகைவரைக் கொல்வோமென்றனர் பாசத்தில் மகிழ்ந்தான்
அச்சுவன் 484
ஒரு
நஞ்சை மற்றோர் நஞ்சு சுட்டெறிக்கச் செல்வது
போல
வடசேடி படைகள்
வெகுண்டு தென்சேடி படைகளைத்
தாக்க
திவிட்டனின் படைகளும்
சேர்ந்து தீரமாய் மோதித்
திரள
கடலொடு கடல் கலந்தாற் போல் கலந்தன இரு படைகளுமங்கு 485
அச்சுவகண்டனின் நண்பன்
அரிசேனன் போரிட வந்தான்
வியாக்கிரரதன் வாளுடன்
வதைத்திட்டான் அரிசேனனை
அரிசேனன் மாண்டதைக்
கண்டு குணசேனன் குன்றென
வந்தான்
இந்திரகாமன் குணசேனனை
இந்திரலோகம் அனுப்பி வைத்தான் 486
வரசேனன் என்ற வில்லாளன் வதைக்கப்பட்டான் காமுகனால்
அரிகேதனன் வந்து போரிட சார்த்துலன்
சாய்த்திட்டான் அவனை
தூமகேதனன் மதவேழம்
ஏறி சுவலனரதனை எதிர்க்க
வந்து
விண்ணுலகம் எய்தது
கண்டு விசனத்தில் திகைத்தனர்
மன்னர்கள் 487
அழல்வேகன் என்ற இளைஞன் அரிமா போல் எதிர்த்து
வந்து
தேவசேனன் தன் வாளால் வெட்ட சிரம் சிதறி மண்ணில் வீழ்ந்தது
சுவர்ணகேது போரிட வந்தான் சூழ்ச்சிகள் பல செய்து
பார்த்தான்
சடி மன்னன் அனைத்தையும் அழித்து சாய்த்திட்டான்
சுவர்ணகேதுவை 488
சிதறிடும் படையை எல்லாம் சிறிசேனன்
ஒன்றாய் சேர்த்து
புரவிமேல் அமர்ந்து
தாக்க சிறீபாலன் எதிர்த்து
நின்றான்
சிறீபாலன் போர் திறத்தால் சிதறின
படைகள் எல்லாம்
சிரிசேனன் தலையை வெட்டிட சிரம் விண்மீனாய் விழுந்தது 489
புறமிடும் படையைத்
தடுத்து கனகசித்திரன் திரட்டி
வந்து
கடல் போன்ற பகைவர்கள் படையில்
கடும்புயலாய் தோற்றமளித்தான்
குன்றொத்த யானைகளையும்
குமுறிப் பாயும் குதிரைகளையும்
முகிலிடை மறையும்
திங்களாய் முன்னேறியே தன் வழிசென்றான் 490
போர்கள வயலின்
இடத்தில் விஞ்சையர்கள் குருதி
பெருகிட
சினம் நெஞ்சில்
சீறிக் கொண்டு கலப்பைப் படையால்
உழுது
வெண்நிறம் கொண்ட விசயன் புகழ் என்னும் விதையை
விதைக்க
அச்சுவன் தம்பி நால்வரும் அவ்வீரன்
யாரென கேட்டனர் 491
பெருஞ்சினம் கொண்ட நால்வரும் விசயனை
வளைத்துக் கொள்ள
விசயன் தோற்றொழிந்தான் என்று பொய்குரல் ஒலியொன்றெழுப்ப
ஆண் சிங்கம் தெய்வத்தன்மையால் அவ்விடம்
சீறி வந்ததும்
அதன் மேல் அரசச் சிங்கம்
அமர்ந்தது கரத்தில் கலப்பையுடனே 492
நால்வருடன் கனகசித்திரன்
ஐந்தாவதாய் வந்து சேர்ந்தான்
மணிகண்டன் மயங்கி
நின்றான் மாண்டனர் நால்வரும்
விசயனால்
அனல் கொண்ட நெஞ்சால் மணிகண்டன் அங்கோர்
பெரும் மலையை தூக்க
அருகக்கீர்த்தியின் அம்பு ஒன்று அழித்தது மணிகண்டனை அங்கு 493
அனைவரும் மாண்ட செய்தியை அச்சுவகண்டன்
கேட்டான்
மாயவித்தைகளையெல்லாம் மனமதில்
தியானம் செய்தான்
சண்டவேகை என்னும்
பேய் ஒன்று தியானத்தால்
வந்து பணிய
அனைவரையும் கொன்றொழிக்க ஆணையிட்டான் கொடுங்கோலன் 494
சண்டவேகை தனைச் சார்ந்த சகல பேய் கணங்களை
அழைத்து
மலை
உருளும் சூறைக் காற்றால்
மலைகளை உருட்டித்தள்ளி
வானுயர செந்தீயை
எழுப்ப மரங்களும் மலைகளும்
கருகி எரிய
சண்டவேகையின் மாயப்போரால்
திவிட்டனின் படைகள் சிதறின 495
சிதறிடும் படைகளைப்
பார்த்து திருமாலை ஒத்த திவிட்டன்
அருககீர்த்தியைக் கேட்டான் அங்கு நடப்பது
என்னவென்று
சண்டவேகையை அச்சுவகண்டன்
மாயப்போஎர் செய்ய அனுப்ப
அத்தெய்வம் அழிக்கிறது
படையை அதிலிருந்து தப்புதல்
கடினம் 496
வலக்கையில் வலம்புரிச்
சங்கும் இடக்கையில் நெடிய ஓர் வில்லும்
நீலவண்ணத் திருமேனியின்
ஒளி எண்திசையும் பரந்து
எழும்ப
திண்ணிய தோளோன்
திவிட்டன் தோற்றத்தை கண்ட சண்டவேகை
அச்சமது அதன் நெஞ்சில் தோன்ற அப்போர்களம் விட்டு
மறைந்தது 497
சண்டவேகை போர்களம்
அகல சினங்கொண்ட அசுவகண்டன்
மதயானை மீது அமர்ந்து வர திவிட்டனின் தேர் படை அஞ்சியோட
விண்ணில் இருந்த
பறவை வேந்தன் கருடன்
திவிட்டனை அடைய
கருடனை வலம் சுற்றி வணங்கி
கையில் வில் கொண்டு
நின்றான் 498
அசுவகண்டன் அம்புகள்
பொழிய அத்தனையும் கருடன்
அழிக்க
அரவக்கணை சுவகண்டன்
விட அழித்தான் கருடக்கணையால்
அதை
தீக்கணை வடசேடியான்
விட வருணக் கணையால்
அழித்தான் அதனை
ஆழித்தீப் படையை அனுப்பினான் அது வலம் சுற்றி வந்து
திவிட்டனை 499
அச்சுவகண்டனின் ஆழிப்படை
திவிட்டனை வணங்கி நிற்க
அக்கணையை எடுத்து
திவிட்டன் அச்சுவகண்டன் மீது வீசிட
அச்சுவகண்டன் மார்பது
பிளக்க அமர்ந்திருந்த களிறுடன்
வீழ
அச்சுவகண்டனின் ஆழியே அவனையே அழித்தது
போரினில் 500
அச்சுவகண்டன் இறந்தான் அவன் மணந்த தேவியரெல்லாம்
அச்சுவகண்டனைச் சூழ்ந்து
அடங்கிடா துயரம் கொண்டனர்
அச்சுவகண்டனோடு அவன் தம்பிகள் உடல்களையும்
எடுத்து
மங்கலப் பொருள்கள்
நீக்கி ஐம்பொறி வாயில்
அடைந்தனர் 501
வரிசங்கம் முரசுகளோடு
வான் எட்ட ஒலியினை
எழுப்பி
திவிட்டனின் வெற்றியைப்
போற்றி அசரீரி முழக்கம்
ஒலித்தது
விஞ்சையர் வணங்கினர்
திவிட்டனை தென்சேடி திளைத்தது
மகிழ்ச்சியில்
கருட ஊர்தியை
விட்டிறங்கி கால் பதித்தான் பாசறையில் திவிட்டன்
502
விசயனும் திவிட்டனும்
சேர்ந்து வணங்கினர் தந்தை பயாபதியை
மைந்தர்கள் ஆற்றல் கண்டு
மகிழ்ச்சியில் முடி சூட்ட விழைந்தான்
கொட்டியது மங்கல முரசுகள் கொடிவரி
சங்குகள் முழங்கின
விசய திவிட்டன்
முடி விழாவுக்கு சுரமை நாடே சுந்தரமானது 503
வாசுதேவன் என திவிட்டனைப் பலதேவன்
என விசயனையும் புகழ
ஆழியும், தடியும், வாளும், சங்கும், வில்லும்
குடையுடன் கூடிய மேனியை
சங்க, பதும இரு நிதிகள் சொரிய நல்லிசைப் புலவர்கள் வாழ்த்திட
மன்னரும் மக்களும்
வணங்கும் தெய்வத்தின் அம்சமாய்
திகழ்ந்தனர் 504
வெண்மூங்கிலாய் பருத்த
தோளும் மென்மணசந்தனம் பூசிய மேனியும்
சித்திரை நிலவின்
முகமும் தேன் சிந்தும்
செவ்விய இதழும்
வலம்புரி முத்துமாலைகள் கழுத்தில் நறுமண மாலைகளோடு தொங்க
விஞ்சையின் அழகி சுயம்பிரபை
விமானத்தில் வீற்றிருந்தாள் 505
பளிங்கில் நீலமணிகள்
பதித்து செவ்வரக்கால் வரிகள்
வரைந்து
செவ்விய கண் புருவம் திருத்தி
செவ்விழியில் கருமை தீட்டி
செவ்விளநீர் தனத்தின்
முனையில் சந்தனக் குழம்பு
எழுதி
பொன்முத்து மாலைகளுடன்
பூவைக்கு ஒப்பனை செய்தனர் 506
களிறு மேல் பூட்டிய முரசை காவலர்கள்
அதிர அறைந்து
காலையில் சுயம்பிரபைக்கு கோப்பெருந்தேவி பட்டத்தை
சுரமை நாட்டின்
மாமன்னன் வழங்குவார் என்ற செய்தியை
மாநகர் முழுதும்
எதிரொளிக்க மக்களுக்கு செய்தியாய்
சொன்னான் 507
விஞ்சையர்களும் தேவர்களும்
மண்ணுலக மக்களும் சேர்ந்து
ஒளியுடைய மணிமாலைகளையும் ஒளிர்கின்ற
பொன்னணிகளையும்
தன்னகத்தே ஒப்பனை
கொண்டு திருமகளாம் சுயம்பிரபைக்கு
அரசியலில் பாதியுரிமையாம் கோப்பெருந்தேவி பட்டத்தை ரசித்தனர் 508
விச்சாதரர் நாட்டையெல்லாம் விஞ்சை
மன்னன் சடிக்கு வழங்கினான்
இரதநூபுரம் நோக்கிச்
செல்ல நாடே திரள வழியனுப்பினான்
உட்பகையும் நாட்டில்
இல்லை உறுபகையும் எண்திக்கில்
இல்லை
திவிட்டனும் விசயனும்
மகிழ்ந்து செம்மாப் புகழில் வாழ்ந்தனர் 509
அருகனின் கோயில்கள்
தோரும் அரும்பெரும் விழா எடுக்க
அத்தனை வசதிகளும்
தந்தான் அருகனின் திருவடி
சேவைகளுக்கு
பொருள்களை அள்ளித்
தந்து பொதுமக்களுக்கு விருந்தளிக்க
போதனமா நகரம் முழுவதும் பொங்கிடும்
மகிழ்வில் ஆழ்ந்தது 510
அரசியற்
சருக்கம் முற்றிற்று.
10. சுயம்வரச் சருக்கம்.
தோற்றுவாய் :
தேவர்களும் மனிதர்களும்
திறமை மிக்க வித்யாதரர்களும்
தேர்ந்த செல்வங்களுடனும் செருக்குற்ற
பெருமைகளுடனும்
செஞ்சின அரிமா வாய் பிளந்த
திவிட்டனின் அவையிலிருக்க
திவ்விய பெருஞ்செல்வம்
ஒன்று திவிட்டனுக்கு வந்ததையுரைப்பேன் 511
பால்நிற ஒளியைத்
திங்கள் பாரெல்லாம் பரப்பியதைப்
போல்
விசும்பிடை நிலவொளி
பரப்பும் வெண்கொற்றக் குடையினாலே
விண்ணோரையும் ஓம்பச்
செய்து விஞ்சையர்க்கு அரசியல்
தந்து
விண் நிற திவிட்டன் நம்பி வேல்விழியால் வளையில்
சிக்கினான் 512
ஞாயிறு இருளைப்
போக்கும் நற்செயல் போல் திவிட்டன்
செய்து
சங்கநிதி பதுமநிதிகளை
தன் கருவூல முதல் பொருளாக்கி
எண்திசையும் தேவர்கள்
காக்க எண்ணிலா அரசர்கள்
அடி தொழ
கையினில் ஆழியை பொருத்திய காமவேள்
திவிட்டன் ஆனான் 513
திவிட்டனின் கோப்பெருந்தேவி திங்கள்
முகத்தாள் சுயம்பிரபை
விஞ்சையில் இருந்து
கொணர்ந்த பாரிசாதம் எனும் தேவ தருக்கு
காமவல்லி எனும் தெய்வக்கொடியை கடிமணம்
செய்து வைக்கும்- தன்
எண்ணத்தைத் திவிட்டருக்கு
எடுத்தியம்ப அனுப்பினாள் தாதியை 514
மன்னனும் மகிழ்ந்து
சொன்னான் மனைவி மகன் பாரிசாதத்திற்கு
காமவல்லியை மணம் செய்விக்கும் கருத்தினை
மனம் ஏற்றதென்றான்
அவைநாடி ஒரு விதூடகன் வந்தான்
ஆடிப்பாடி மகிழச் செய்தான்
திவிட்டனும் அவையோரெல்லாம்
அவன் செய்கையால் மகிழ்ந்தனர் 515
திவிட்டனும் விதூடகனுடன்
தென்றலாடும் பொழிலுக்கு சென்றான்
மங்கையர்கள் காவல் செய்யும் மதிலின்
பெரு வாயிலையடைந்தான்
பால் நிலவை சூழ்ந்த முகிலாய்
பணிமகளீர் தன்னை சூழ்ந்து
வர
திவிட்டனும் பொழில்
நுழைந்தான் திங்கள் தவழும்
வானைப் போல 516
மன்னனை விதூடகன்
கேட்டான் மகிழமரம் கவசம் கொண்டதேன்னென
அந்தணனே அச்சம்
வேண்டாம் ஆரணங்குகள் வாய் மதுவினாலே
வண்டுகள் அந்நறுமணத்தால் வந்து மொய்த்து நுகர்வதாலே
அடிபருத்து இருண்டு
போக அம்மரம் கவசம் கொண்டதென்றான் 517
சிற்றடி சிலம்பது
சிரிக்க சிறு இடை மேகலை ஒலிக்க
வேல் போன்ற விழிகள்
இரண்டும் விரகதாபத்தில் நம்பியை
தேட
தாதியரும் பணிமகளீரும்
தண்மதியை சூழ்ந்த விண்மீனாய்
கோப்பெருந்தேவி சுயம்பிரபை
கொடியென பொழிலில் நுழைந்தாள் 518
சுயம்பிரபை திவிட்டனோடு
சிறு ஊடல் விளையாடல்
செய்ய
தான் கற்ற ஒரு வித்தையாலே
அத்தத்தை ஒரு மயிலாய்
தொழ
செம்பஞ்சு குழம்பு
பதித்த சிற்றடி யாதென விதூடகன் கேட்க
விஞ்சையின் மகள் அடியென்றான் மஞ்சையை
கண்ட திவிட்டன் 519
திவிட்டனின் சொல்லைக்
கேட்டு சினம் கொண்டாள்
சுயம்பிரபை
திருத்திய பிறை நூதல் தனில் சிறு துளியாய்
வியர்வை துளிர
அரசனின் உயிரும்
உருகிட அதிர்ந்திடும் மின்னல்
கொடியென
தன்
திருமேனி துடிக்க நின்றாள்
திவிட்டனின் நெஞ்சத்தரசி 520
வெள்ளிமலை வேந்தன்
மகளே வெண் அன்னம்
போன்ற சிலையே
பாற்கடல் அமுதத்திற்கும் பேரமிர்தம்
போன்ற என்னவளே
என்
உயிரின் இனிய உயிரே இங்கு இன்றும்
நடக்கவில்லை
என்
குற்றம் காண்பாயானால் எனைப் பொறுத்து அருள்கவென்றான் 521
நம்பியின் மொழியின்
பணிவாலே நங்கையும் நாணத்தில்
மயங்கி
ஊடலை நெஞ்சில்
போக்கினாள் உள்ளத்தில் முறுவல்
கொண்டாள்
மனைவியின் பேரருளைப்
பெற்றேனென மனதினில் மகிழ்ச்சி
பொங்க
மான் மருள் விழிகள் கொண்டாளை மார்புடன்
அணைத்துக் கொண்டான் 522
பொன்மணிகளால் மேடை அமைத்த பாரிசாத
மரத்தின் பொழிலுக்கு
வரிகொண்ட சங்குகள்
முழங்க வார்கட்டிய நல் முரசுகள்
அதிர
திவிட்டனும் சுயம்பிரபையும் வர திக்கெட்டும் ஒலிக்கும்
ஒலி கேட்டு
திவிட்டனின் மற்ற தேவியர்கள் திரண்டனர்
அப்பூம்பொழிலில் 523
நல்
அருவி நீர் நிரம்பிய
நீர் விசிறும் பொறியினைக்
கொண்டு
பாரிஜாத மணமகன்
தன்னை பலர் கூடி மண நீராட்டி
தூண் என திரண்ட கிளைகளில்
துலங்கிடும் பொன்னணிகள் பூட்டி
பூம்பொழில்கள் அனைத்திற்கும்
பாரிஜாதத்தை அரசனாக்கினர் 524
கன்னிமை தன் அகத்தேயுடைய காமவல்லி
எனும் நற்கொடியினை
தேவியர் அனைவரும்
கூடி செவ்விய தன் கரங்களாலே
திருமணப் பெண்ணுகு
உரிய திருத்திய ஒப்பனைகள்
செய்து
பாரிஜாத மணமகனோடு
மணவிழா செய்து மகிழ்ந்தனர் 525
மாதரார் தம் மனத்தினுள்ளும் மன்னன்
நம்பி எண்ணத்துள்ளும்
ஐங்கணையான் அப்பொழிலில்
அவர்களிடம் தன் போரைத்
துவக்க
காதலும் காமமும்
நிரம்பிட களித்து மகிழ்ந்து
இருக்கையிலே
திவிட்டன் ஒரு சூழ்ச்சியால் தன் உருவை மறைத்துக்
கொண்டான் 526
மன்னவன் மறைந்ததை
எண்ணி மாபெருந்தேவி சுயம்பிரபை
மகளீரை பொழில்
விளையாட்டில் மகிழ்ச்சியுடன் ஆடச் செய்தாள்
இளந்தளிரும் மலரும்
கொண்டு இணைத்து கட்டிய
மாலைச் சூடி
செவ்வடி சிலம்புகள்
ஒலிக்க சிற்றிடை நெளிய ஆடினர் சிலர் 527
மானிடப் பதுமைகள்
போலும் மற்றும் பல விலங்குகள் போலும்
பறந்திடும் பறவைகள்
போலும் பூக்களால் வடிவம்
செய்தும்
மயக்கத்தை மனதில்
தூண்டும் மகரயாழ் இன்னிசை
மீட்டியும்
மென்விரல் துரிகையைக்
கொண்டு ஓவியங்கள் தீட்டினர்
சிலர் 528
மயில்கள் தோகை விரித்து ஆட மகிழ்ந்து நோக்கும்
மங்கையர் சிலர்
கூவிடும் குயில்
ஒலிக்கேற்ப குரலெழுப்பும் கொங்கையர்
சிலர்
மடல்வாழைக் குருத்தினை
எடுத்து மென்நகத்தால் உருவமைப்பார் சிலர்
மெல்லிதழ் பூக்களைக்
கொய்து மென்விரல்கள் சிவந்தனர்
சிலர் 529
செம்பஞ்சுக் குழம்பு
பூசிய சிற்றடி சிவந்த
மகளீர்கள்
பசும்பொன் பாறையின்
மேலே பவளத்தால் செய்த உரலில்
புதுமணி செந்நெல்லைக்
கொட்டி வெண்யானைக் கொம்பால்
குத்தி
அம்மாணைப் பாடல்களோடு
அரசன் புகழ் பாடி மகிழ்ந்தனர் 530
கோடி குன்றத்தைக் கையில் ஏந்தி கொடூர சிங்கம்
வாய் பிளந்து
வடசேடி அச்சுவனைக்
கொன்று வெள்ளிமலையை தன் கைப்பற்றி
வலம்புரி சங்கை வாய் முழங்க
சாரங்கமெனும் வில்லை கையேந்த
திருமகள் சுயம்பிரபையை
தழுவிய திவிட்டனே எம் அரசனென்றனர் 531
மன்மதன் கணைத் தாக்குதலாலே மனமது காம வேட்கை
கொண்டு
கன்னியருடன் சேர விழைந்து
களிறொன்றை மந்திரத்தால்
ஆக்கி
பூவையர் ஆடும் பொழிலுக்கனுப்ப பூங்கொடியர்கள் அஞ்சி நடுங்க
சுயம்பிரபை திவிட்டனை அழைக்க திருமகளே யான் வந்தேனென்றான் 532
திவிட்டனோ மதயானையை
தடுத்து தேவி சுயம்பிரபையை
அணைத்து
களிறினை சூழ்ந்து
பின் செல்லும் பிடிகளைப் போல் தேவியர் தொடர
சந்தன மணநீர்
நிறைந்துள்ள நறுமண மலர்கள்
கொண்ட பொய்கையில்
நீர் விளையாட்டில்
மூழ்கினான் நீல வண்ணன்
திவிட்டன் நம்பி 533
நெஞ்சத்தின் மனைவியர்களோடு
நீர் விளையாடி முடித்த
பின்
பூவொத்த தேவியர்கள்
தொடர பொழில் மன்றம்
புகுந்தான் நம்பி
தேவியர்கள் தத்தம்
அறையில் தேவதை போல் ஒப்பனை செய்து
திவிட்டன் அமர்ந்த
இடம் வந்து தேனீக்களாய்
சூழ்ந்து அமர்ந்தனர் 534
விண்வழியே வந்து இறங்கிய விஞ்சையின்
தூதுவன் ஒருவன்
அவன் வரவை அரசன் அறிய அரண்மனை காவலர்கள்
சொல்ல
வெள்ளிமலையின் தூதுவன்
வந்து நீலவண்ணன் திருவடி
வணங்க
மாமன் சுவலனசடி
அரசனின் மாண்பையும் நலனையும்
கேட்டான் 535
துல்லியமாய் அனைத்தும்
கூறி தூதன் அவன் நம்பியை வணங்கி
முத்திரை பதித்த
ஓலை தன்னை முடிமன்னன்
முன்னே நீட்ட
அரசனின் குறிப்பறிந்த
மங்கை அவ்வோலையை கை நீட்டி வாங்க
மன்னனே தூதனிடம் சொன்னான் மங்கல செய்தியை நீயே சொல்லென 536
சுந்தர வடமலையில்
உள்ள சுரேந்திர காந்தம்
நகரின்
மன்னனின் பெருந்தேவி
மகளை மாவீரன் அருககீர்த்தி
மணந்தான்
செய்தியை விஞ்சை
தூதன் சொல்ல சித்தத்தில்
பெருமகிழ்வு பொங்க
சிறப்புகள்
பலவும் செய்து செவ்வனே
அனுப்பினான் தூதனை 537
செவ்விய கடல்கயல்
கண்ணாள் செம்பவள இதழ் பொன் மேனியாள்
சுயம்பிரபை திவிட்டனை
அணைக்க சுழல் கொண்ட இன்பத்தாலே
நங்கையவள் படல் வயிற்றில் நாட்டிற்கோர்
வாரிசு தங்கிடும்
மனம் நிறைந்த
கனவினைக் கண்டாள் மங்கையவள்
உறக்கம் தனில் 538
கனவினை கணவனுக்குரைத்தாள் கணவனோ அணைத்து சொன்னான்
பாவையே உன் மணிவயிற்றில் பாராள ஓர் மகன் உதிப்பான் என
பையப் பையவே வளர்ந்தது கரு பாவையவள் மேனி தளர்ந்தாள்
விண்கோள் நன்னிலையில்
நிற்க மண் ஆள ஓர் மகன் பிறந்தான் 539
ஆழ்கடலின் ஆரவாரத்தோடு
அதிர்ந்தன மங்கல முரசுகள்
மக்களின் வாழ்த்தொலி
ஓசையால் மாநகரம் மகிழ்ச்சியில்
மூழ்க
கொம்பொடு சங்குகள்
முழங்க கொட்டிடும் மலர் மழையாலே
போதனமா நகரம் ஒளிர்ந்தது பொன்கதிரோன்
ஒளியினைப் போலே 540
அரிமா நிகர் மகன் பிறப்பால்
அந்நகரின் சிறைகள் திறந்தனர்
அருகனின் கோயில்களெல்லாம் அன்றாடம்
விழாக்கள் நடத்தினர்
அரசனின் கருவூலம்
திறந்தது அரும்பொருள்கள் அளிக்கப்பட்டது
வேந்தனின் குலக்கொழுந்துக்கு விசயன்
என பெயர் சூட்டினர் 541
திவிட்டனோ திகட்டா
இன்பத்தில் செய்தியை விஞ்சைக்கு
சொல்ல
முகில் தவழும்
விண்ணிலிருந்து முழுப்பொன் விமானம்
வந்தது
விமானத்து விஞ்சையர்கள்
கூடி வெற்றி வேந்தன்
திவிட்டனுக்கு
மணிமுடியில் நல் நெய்
பெய்து மனதார வாழ்த்தி
வணங்கினர் 542
சுவலனசடி தூதன் ஒருவன் சுயம்பிரபையின் கணவனுக்கு
திருவடி பணிந்து
வணங்கி தேனென ஓர் செய்தி சொன்னான்
அரசனாம் வீரன் அருககீர்த்தி சுரேந்திரகாந்த சுந்தரியாம்
சோதிமாலையை மணம் முடித்து சோர்விலா
இன்பம் கண்டான் 543
சோதிமாலையின் அணைப்பினாலும்
கீர்த்தியின் உடல் தவிப்பினாலும்
வலம்புரி வெண்சங்கின்
உள்ளே வாய்த்திட்ட வெண்முத்து
போல்
விஞ்சை அரசி சோதிமாலையின் வெளிறிய
வயிறு கருவுற்றதால்
இளம் திங்கள்
நாணும் வகையில் இளவளாய்
ஓர் மகன் பிறந்தான் 544
அமிதசேனன் என்னும்
பெயரை அம்மகவுக்கு இட்டுள்ளார்கள்
வெள்ளிமலை முழுதும்
விரிந்த வெண்கொற்றகுடை நிழலை
முன்னோர்கள் தழைக்க
வாழ்ந்து முழு மகிழ்ச்சி
கொண்டதனால்
வெற்றி பெற்ற அத்திருப்பெயரை வெள்ளிமலை
அரசர் வைத்தார் 545
திவிட்டன் மகன் விசயனை தேவர்கள்
காத்து ஓம்பவும்
செந்தாமரை மலரில்
வாழும் திருமகள் வாழ்த்தி
நிற்கவும்
செவியணி பொன் குண்டலம்
மின்ன சதங்கைகள் கால்களில் ஒலிக்க
திங்களென வளர்ந்து வந்தான்
திவிட்டன் பெற்ற இளவரசன் 546
திவிட்டனின் பெருந்தேவியான
தேவமகளாம் சுயம்பிரபை
அண்ணலை அணைத்து
மகிழ் அடிவயிற்றில் கரு உதிக்க
ஸ்ரீ தேவியே
வந்தது போல் செந்தீ
ஒத்த பெண்மகவை
ஈன்றெடுத்தாள் மகிழ்ச்சியுடன் சோதிமாலையென பெயரிட்டாள் 547
விஞ்சைக்கு செய்தி
சொன்னான் வஞ்சியவள் பிறந்த
நிகழ்வை
வண்ணப் பூங்கொடியைப்
போல வளர்ந்து வந்தாள்
சோதிமாலை
சிலம்புகளுடன் கிண்கிணியும்
செவ்விய சிற்றடிகளில் ஒலிக்க
செவியிரண்டில் பொன்சுருளையுடன் சிரித்து
விளையாடி வந்தாள் 548
கருமேகக் குழல் மங்கையர் களைத்து
கை சோர்ந்து நிற்க
கொத்துமலர் பூங்குழலும்
கோதையவள் மாலைகளும் நிற்க
கொய்து கட்டிய
கொய்ச்சகம் பொன்னாடை தூக்கி ஆடா நிற்க
பொற்செல்வி சோதிமாலை
பொற்சிலையாய் வந்து நின்றாள் 549
சோதிமாலை கரம் பட்ட பந்துகள்
சுழன்று வானில் உயர்ந்து
சென்று
விசும்பை அணைத்து
தரையைத் தொட விரைந்து
கீழே வருகையிலே
செம்பொன் மணிமாலைகளை
சில சிற்றிடை மேகலையையும்
சில
பந்துகள் தொட்டு
மகிழ்ந்து பரவசத்தில் பறந்தன
வானில் 550
பந்துகள் பட்டு மோதலாலே
பாவை மேனி வருந்தும்
என்பார்
ஓடி எம்பி பந்து அடிக்கையிலே ஒடிந்து
விடும் மெல்லிடை என்பார்
சோதிமாலை மேனி துன்பங்கண்டு சுயம்பிரபை
சினப்பாள் என்பார்
செவிலியரும் தோழியரும்
கூடி திவிட்டன் மனம் நோகுமென்பார் 551
முகில் கண்டு ஆடும் மயிலாய்
மனம் களித்து ஆடும் போது
முடிமன்னன் திவிட்டன்
நம்பி திருமகளை அழைக்கச்
சொன்னான்
மடியிருத்தி உச்சி மோந்து மணியரும்பு
வியர்வை போக்கி
சுயம்வரச் செய்தி சொல்லி சுப முரசு கொட்டச்
சொன்னான் 552
மன்னனின் சுயம்வரச்
செய்தியால் மண்ணாளும் மன்னர்கள்
வந்தனர்
வெள்ளிமலை எட்டையும்
ஆளும் விஞ்சை வேந்தர்கள்
வந்து கூடினர்
அருககீர்த்தியும் தன் மக்கள் அமிதசேனன்
சுதாரையுடன் வர
ஆழி வண்ணன் திவிட்டன் சென்று அவர்களை
எதிர்கொண்டழைத்தான் 553
பொன்மணிகள் பதிக்கப்
பட்ட பொன்கோபுர வாயில்கள்
நான்கும்
நவமணிகள் தளமிடப்பட்டு
நாட்டிய பளிங்குத் தூண்கள்
நான்கும்
வெண்கதிரோன் ஒளியாய்
திகழும் வெள்ளி தகடிட்ட
கூடமும்
சுயம்வர மண்டபத்தை
மன்னன் சுந்தரமாய் செப்பனிட்டான் 554
விண்ணிடை தவழ்ந்து
உலாவும் வெண்ணிலா பரப்பும்
ஒளியாய்
பலதிசைகள் ஒளியைக்
கக்கும் பளிங்கினால் மேடையமைத்தனர்
ஐந்து கோல்கள்
தொலைவிடத்தே அணங்குகள் ஆடும் அரங்கமைத்து
மரகதமணிக் கற்கள் கொண்டு
மகிழ்ந்திட சிம்மாசனம் அமைத்தான் 555
வலம்புரி முத்துக்கள்
கொண்ட வெண்நிற மாலைகள்
பலவும்
பசும்பொன் மணிகள்
கொண்ட செங்கதிர் மாலைகள்
பலவும்
நறுமணம் நிரம்பித்
தவழும் நவமலர் மாலைகள்
பலவும்
சுயம்வர அரங்கில்
தொங்கி சொல்லொண்ணா அழகில்
நின்றது 556
அருமணிகள் உடல் தரித்த அயோத்தி
அரசன் வந்தான்
ஆழி
சூழ் மதில்கள் கொண்ட அஸ்தினாபுர வேந்தன்
வந்தான்
குங்குமக் குழம்பு
தோளான் குண்டலபுரத்து மன்னன்
வந்தான்
வளமிக்க நாடுகள்
கொண்ட வாரணாசி முடியன்
வந்தான் 557
சூரியபுரத்தை ஆளும் மன்னன் அரிகுலத்தோன்றல் வந்தான்
மறம் அற்ற மாண்புடைய மதுரையின்
மன்னன் வந்தான்
விஞ்சையின் மன்னன்
மகன் அமிதசேனனும் அங்கு வந்தான்
அரசர்களை வரவேற்கும்
ஓசை ஆழியின் அலையோசை
ஆயின 558
மணம் நிறைந்த
கூந்தலுடன் மெல்லியல்பு அகம் உடைய
சோதிமாலை மலரணை விட்டு தேகை மயிலாய் இறங்கி
கச்சை சூடிய தனத்துடனும் கையில்
வேலேந்திய கன்னியர் சூழ
செஞ்சாந்து சிற்றடி
எடுத்து செல்லமகள் மண்டபம்
வந்தாள் 559
இட்சவாகு குலத்தோன்றல்
இளமாறன் இந்த மன்னன்
செங்கதிரோன் நாணமுறும்
சிறந்த ஒளி வடியுடையோன்
விருஷபதேவர் மரபில்
வந்த விண்ணளவு ஆற்றல்
கொண்டோன்
வேந்தர் இவர் வேந்தர்களில் ஒப்பான
மிக வலியுடையார் 560
பூங்கொடியாள் சோதிமாலையின்
பொற்கரத்தை தோழி பற்றி
மேனியெல்லாம் நாணம் பூச மெல்லடிகள்
எடுத்து வைத்து
அரசர்கள் அமர்ந்திருந்த
அரியாசனம் முன்னே சென்று
வந்திருந்த மன்னர்களின்
வரலாற்றை உரைக்கலானாள் 561
குருகுல மரபில்
தோன்றிய குறையில்லா கோமான்
இவர்
அருகன் அறம் பின்பற்றி அருந்துன்பம்
அகற்றியவன்
சூழ்ந்து வரும் கடல் படையை சூறாவளியாய் தாக்குகின்ற
பெறற்கரிய இவர் வீரத்தினை பேருலகம்
வியந்து போற்றும் 562
உக்கிரமன்னன் வழி வந்த ஒளி மிக்க வேலுடை
மன்னன்
விண்ணவரும் இவர் அழகில் வெட்கமுற்று
தலை குனிவர்
குறிஞ்சி நிலம் செழித்திருக்கும் குண்டலபுரத்து
மன்னன்
நாதவகுலம் ஒளிரச்
செய்யும் நாற்படைகள் கொண்ட வேந்தன் 563
அரி மரபில் தோன்றிய
அரிமா சூரியபுரத்து சுந்தரன்
சுற்றியுள்ள பகைவர்களை
சுழன்று வீழ்த்தும் மன்னரிவர்
யாழ் ஒலியும்
குழல் ஒலியும் எப்போதும்
இசையெழுப்பும்
மதுரை என்னும்
கூடல் நகரின் மாமன்னன்
பாண்டியரிவர் 564
கன்னல் கணுவில்
முத்து ஈனும் கபாரநகர
அரசன் இவர்
உறந்தை நகரை ஆளுகின்ற உத்தம சோழ மன்னரிவர்
எல்லா வளங்களும்
நிறைந்த ஏமாங்கத வேந்தன்
இவர்
களிறுகளின் பெரும்
படை கொண்ட கலிங்க நாட்டு
காளையிவர் 565
மலையருவிகள் புரளுகின்ற
மகத நாட்டு மன்னன் இவர்
அங்க நாட்டு
வேந்தன் இவர் அவந்தி
நாட்டு அரசன் இவர்
கோசல நாட்டு
கோமான் இவர் கொடிகள்
கொண்ட அரசர் பலர்
மண்ணுலகை ஆள்வோர்கள்
மணம் முடிக்க வந்துள்ளார்கள் 566
விச்சாதரர் உலகையாளும்
வெள்ளிமலை வேந்தர்களையும்
வேல்விழியாள் சோதிமாலையே
விவரிக்கிறேன் செவி மடுப்பாய்
விஞ்சை நாட்டு
வளம் பற்றியும் வரலாற்று
மரபை கூறுமுன்பு
அழகுமயில் சோதிமாலை
விழிகள் அமிதசேனன் தோளில்
பதிந்தது 567
மதக்களிறின் கவுளி கொட்டும் மதநீரின்
மணத்துக்காக
நீலமணி வண்டுகள்
எல்லாம் நீரை சுற்றி வீழ்தலைப்
போல்
பவளமாலையை ஒத்த மார்பன்
வெள்ளிமலையின் இளவரசன்
அமிதசேனனின் அழகு கண்டு சோதிமாலையின்
விழிகள் வீழ்ந்தன 568
அமிதசேனனின் பெருமைகளை
அத்தோழி பகரும் முன்னரே
அடம்பிடித்த கண்களிரண்டும்
அவள் வசத்தை இழந்ததாலே
ஊழின் பயனும்
உடன் அமைய உள்ளத்தில்
மகிழ்ச்சி நிறைய
சோதிமாலை கை கொண்ட மாலை அணைத்தது அமிதசேனன்
தோளை 569
சங்கோடு முரசுகள்
முழங்கின செஞ்சுண்ணம் திசைகளை போர்த்தின
ஏனய
அரசர்கள் மேனியில் இளந்துளி
வியர்வைகள் பூத்தன
ஊழ்வினை அமையுமேயன்றி உள்ளத்து ஆசைகள் அமைவதில்லை – என
மன்னர்கள் சிந்தை
தெளிந்து மனம் அது ஆறுதல் எய்தனர் 570
பொற்குடங்கள் நிறைய பரப்பி புனித நீரை அதில் நிரப்பி
அமிதசேனனையும் சோதிமாலையையும் அந்நீரில்
நன்னீராட்டி
வெண்மணி முத்துக்கள்
பரப்பி வேதத்துடன் வேள்வித்
தீ மூட்டி
சிந்தையில் மகிழ்ச்சி
பொங்க திவிட்டன் மனம் முடித்து வைத்தான்
571
சுவலனசடி பெற்ற மகன் செங்கோல்
தாழா அருககீர்த்தி
செல்லமகள் சுதாரைக்கு
சுயம்வர முரசு அறைந்தான்
சுயம்வர மண்டபத்தில்
தோழி சுதாரையின் மென் கரம் பற்றி
அரசர்களின் இயல்புகளை அடுக்கடுக்காய்
எடுத்துரைத்தாள் 572
திவிட்டன் பெற்ற திருமகனும் சோதிமாலை
உடன் பிறந்தானும்
விசயன் என்னும்
வேலவன் மேல் விழிபதித்தாள்
விஞ்சை மகள்
மணமலர் மாலை கழித்தில் விழ மங்கலக் கருவிகள்
இசைக்க
மணவினை முடித்து
வைத்தான் மாமன்னன் அருக்கீர்த்தியும் 573
விஞ்சையை நாடிச்
சென்றனர் சோதிமாலையும் அமிதசேனனும்
விஞ்சையை விட்டு
மண்ணில் வந்தனர் விசயனும் மனைவி சுதாரையும்
இல்லறக்கடலில் வீழ்ந்து
இணைந்த இரு தம்பதிகளும்
இன்பமாம் வெண்முத்தை
தேடி இதயத்தால் பிணைந்தனர் அங்கு 574
சுயம்வர
சருக்கம் முற்றிற்று.
11. துறவுச்
சருக்கம்.
மன்னன் பயாபதி
மகிழ்ந்தான் மகன் திவிட்டனின்
மழலைகளால்
கிண்கிணி கொலுசு
ஒலிக்க ஆடி வேந்தன் பாட்டனை வண்டாய்
சுற்றினர்
விழிகளில் களங்கம்
இன்றி வாய் உதிர்க்கும்
புன்சிரிப்பால்
முற்பிறப்பில் செய்த பலனே இப்பிறப்பில்
என் மகிழ்வென்றான் 575
வெண்கொற்றக் குடை நிழலில் வேழத்தின்
மீது அமர்ந்து
வேந்தர்கள் பலர் சூழ்ந்து வர வேற்றரசர்கள் பணிந்து
நிற்க
ஒப்பற்ற மன்னனாய்
பிறந்து உலகையாள செய்த நல்வினை
மும்மையில் என்னுடன்
சேர்ந்த நல்லூழின் நற்பயன்
என்றான் 576
கழிந்த நம் வாழ்நாள் மீண்டும்
காத்து நம் முன் நிற்குமாயின்
செல்வத்தையும் செருக்கையும்
சேர்த்து செம்மையாய் மனதிருத்தி
பொறியடக்கம் சிறிதும்
இன்றி போதும் என்ற மனமும்
இன்றி
இறப்பில்லை என்று இறுமாந்து இன்பத்தில்
இன்னல் புரிவோம் 577
நம்மோடு நாமாய்
பிறந்து நாம் நினைவில்
பெரிதும் போற்றும்
நாளுக்கு நாள் மாறிடும் தன்மையில்
நல்லறிவில்லாத இவ்வுடலை
பற்றுடன் பற்றிப்
போற்றும் பற்றுதல் அழிந்தொழியுமாயின்
பிறர்களில் சிறந்தவராவோம்
பேதமை நிறை நெஞ்சே
அறிவாய் 578
நறுமண மலர் மாலை அணிந்து
நறுமணச் சுண்ணங்கள் பூசி
போற்றியே வளர்க்கும்
உடல் புரையோடிப் போகும்
சிறுமுள்ளால்
மலத்தோடு மூத்திரம்
ஒழுக மண்ணில் தடிகொண்டு காலூன்ற
கழுகொடு காகங்கள்
உண்ண காத்திருக்கும் இளமையழிந்தால் 579
நல்வினைகள் தம் பயனை ஊட்ட நல்வினைப் பயன்களில்
விலகி
இன்பத்தைப் பெரிதும்
விரும்பி இன்புறும் மக்கள்
எல்லாம்
தீவினை விதைத்த
மாந்தராகி தீயென தீவினைக்
காடுகள் சூழ
புலியின் வாய் அகப்பட்ட புள்ளிமானாய்
துன்பம் கொள்வர் 580
தவநெறி புகாது
வாழ்ந்தது தவறான குற்றம்
என்றெண்ணி
அறநெறி தவறாத பயாபதி அமைச்சர்களை
அழைத்தான் அவைக்கு
நிலைபெற்ற செல்வத்திற்கு நீங்காத
கேடு எது என்றான்
மந்திரிகள் உரைத்த
பதில் கோள் வினை பயின்ற மறமேயாகும் 581
மெய்நூல்கள் எடுத்துக்
கூறும் கோள்வினை யாதென அரசன் கேட்க
மன்னனின் எண்ண ஓட்டத்தை
மந்திரிகள் குறிப்பாலுணர்ந்து
ஆயுளது முடிவுறும்
நாளையும் அவரவர் ஊழின் தன்மையையும்
ஆராய்ந்து அலசி நின்று அவரவர்
உயிரைக் கவருமென்றனர் 582
கூற்றுவனை எதிர்த்தல்
நன்றா கூற்றுவன் பால் பணிதல் நன்றா
அவனுடன் பகைத்துக்
கொண்டு அரண் செய்து
தடுத்தல் நன்றா
போர் செய்து
வெல்லக்கூடுமா என பயாபதி மன்னன்
கேட்டான்
கூற்றுவனின் சூழ்வினை
தன்னை கூறிடும் வழியறியோம்
என்றனர் 583
மெய்நூலை ஆய்ந்து
அறிந்த மெய் ஞானத் துறவியை
அடைந்து
அருகனடியை சேர்வதற்கு
அறநெறிகளைக் கற்றுத் தேர்ந்து
அனைத்துயிர்க்கும் அருளனாகி
அருந்தவத்தார் அடி பணிதல்
அமைதியின் புகலிடமாகும்
அதுவன்றி பிரிதொன்றில்லை 584
அழகிய திவ்ய ஒளியுடைய அறவாழி
அந்தணன் ஆகிய
அசோக மர நிழலில்
அமர்ந்த அருகனுக்கு திருவிழா
எடுக்க
அரசனின் ஆணையின்
படியே அறைந்திட்ட முரசொலி கேட்டு
ஆனந்தத்தில் நகர் மக்கள் அழகு அணி செய்தனர்
ஆங்கே 585
பொன்னிற தோரணங்கள்
கட்டி பொற்குடங்களை நிரலாய்
வைத்து
வெண்பட்டால் கொடிகள்
ஏற்றி சந்தனத்தால் தரையை மெழுகி
சலித்தெடுத்த முத்துக்கல்
தூவி சங்கோடு முரசுகள்
முழங்கிய
போதனமா நகரின்
அழகை போற்றாத வாய்கள்
இல்லை 586
வெண்மை நிற பட்டாடை அணிந்து
வேதியர்கள் ஒருபுறம் சேர்ந்திட
நவமணிகள் பதித்து
ஒளிரும் நீள் முடி தரித்த மன்னர்கள்
கூடிட
பொன் பொடிகள் மின்னும் மேனியில்
பொளிர்கின்ற வணிகர்கள் சூழ
போதனநகர மக்களெல்லாம்
போர்படைப் போல் ஆலயம் வந்தனர் 587
பட்டத்து வேழத்தில்
ஏறி பயாபதி மன்னன்
வந்தான்
பரிகளில் சிரந்த
பரிமேல் பரிதி போல் திவிட்டன் வந்தான்
பூப்பலிகள் மாரியாய்
சொரிய பொற்கூடைகள் நிறைந்தன
அங்கு
பொன்னொளி நிறைந்த
அருகனை பயாபதி அரசன் தொழுதான் 588
மூவுலகும் தடையின்றி
சுற்றும் முழுமதியும் ஞாயிறும்
நாணும்
ஒளிதிகழும் அழகுடைய
உத்தமனே போற்றி போற்றி
தாமரை மலர் மேல் நின்று
தரணிக்கு அறம் உரைத்த
வெண்குடை நிழல் அமர்ந்த வினை வென்ற வீரனே போற்றி 589
இருவினைகள் பொடியச்
செய்து இரண்டிரண்டு கதி அறுத்த
இறுதியற்ற அறிவுச்
சுடரே எம்மானே போற்றி
போற்றி
நற்காட்சி நல் ஞானம்
நல்லொழுக்கம் அறம் உரைத்து
மும்மணியாய் திகழ்கின்ற
மூலவனே போற்றி போற்றி 590
உன்
இயல்பில் பரவியுள்ள ஒளியாயும்
உலகங்களாவும்
உயிர்களுக்கு அருளும்
உத்தமனே போற்றி போற்றி
அழிவற்ற மெய்பொருளின்
அளப்பரிய தன்மையினை
தெளிவுற எடுத்துரைத்த
தெய்வமே போற்றி போற்றி 591
ஆயிரம் கண்ணுடைய
ஐராவதத்தான் இந்திரனும் காணவொன்னா
எழில் ஒளி பிழம்பாய் திகழும்
ஏகாந்தனே போற்றி போற்றி
எவ்வுயிர்க்கும் இன்னலின்றி
எப்போதும் அருளுகின்ற
அன்பு ஆறாய் பெருகி நிற்கும்
அருள் ஆழியே போற்றி
போற்றி 592
இருட்கடலில் மூழ்கியுள்ள
ஏழுலகுக்கும் ஒளியன் நீயே
இமைத்தல் தொழில்
இல்லாத தேவர் போற்றும்
திவ்யன் நீயே
தர்மச் சக்கரம்
முன் செல்ல தர்ம உருவான தத்துவன்
நீயே
உலகமனைத்தும் உள்ளடக்கி
உன் அருள் தந்து உயர்ந்தவன் நீயே 593
அசோகமர நிழலில்
அமர்ந்த அருட்செல்வ அருகன்
நீயே
எண்வினைகள் எடுத்தெறிந்த
எண்குணத்து நாதன் நீயே
முக்குடையின் கீழ் அமர்ந்த மூவுலக
முதல் நாதன் நீயே
அறுவினைகள் தீர்த்து
வைக்கும் அறவாழி வேந்தன்
நீயே 594
என்
பிறவி துன்பம் அகற்றும்
என் ஞான குருவும்
நீயே
என்
வினையனைத்தும் போக்குகின்ற என் குலத்து நாதன் நீயே
திருமகள் வாழும்
மார்பன் தேவர்களின் தேவன் நீயே
திரும்பப் பிறவா பேறு தர திருவடி பற்றினேன்
எனத்தொழுதான் 595
நிர்மாலயத்தை தலையில்
சூடி நெஞ்சுருக நிர்மலனை
வேண்டி
ஆலயத்தை மீண்டும்
வலம் வந்து அழகியதோர்
மண்டபம் வந்தான்
அப்பொன் பெரும்
மண்டபத்தின் அனைத்தும் துறந்த
முனிவரின்
அடிகளை மலரால்
தூவி அறம் கேட்க அமர்ந்தான் பயாபதி 596
உயிர்கள் செல்லும்
பிறப்பும் பிறப்பினுள் நுகரும்
நிகழ்வும்
நுகர்ச்சியால் வரும் வினைகளும் வினைகளை
வெல்லும் உபாயமும்
மெய்யறிஞசர் விரும்பும்
முக்தியும் முக்தியின் மாட்சியும்
மேன்மையும்
மன்னனே உனக்கு
சொல்வேன் மனம் ஒன்றி கேள் என்றார் முனிவர் 597
வண்டியின் உருளைகள்
மேல் வடித்திட்ட இரும்பு
வளையம்
வட்டமிட்டு சுழல்வது
போல் உயிர்கள் சுழலும்
கதிநான்கில்
நரகர், விலாங்கு,
மனிதர், தேவர் நாற்கதியை
விளக்கிக் கூறின்
நால் திசை போல் விரியும்
என்று நெகிழ்ந்துருக சுருங்கச் சொன்னார் 598
நரகங்கள் ஏழாய் விரிந்து நாற்பத்தொன்பது உட்பிரிவில்
நரகர்கள் புகும்
புரைகள் எண்பத்து நான்கு
நூறாயிரமாகும்
பேரிருளும் இருளும்
புகையும் சேறும் மணலும்
பரற்கற்களும்
வியப்புடைய மணியும்
என்று நரகங்கள் ஏழும் ஆகும் 599
பிறவுயிரை வதைத்தோரெல்லாம் புழுக்களைப் போல் தீயில்
வறுப்பர்
பிறன்மனை சேர்ந்தோரெல்லாம் தீப்பிழம்பை
அணைக்கச் செய்வர்
ஊன் உணவை விரும்பி
உண்டோர் உடல் உறுப்பை
அறிந்து தின்பர்
ஊரான் பொருள்
கவர்ந்தோரெல்லாம் சம்பட்டியால் நசுங்கி
வீழ்வர் 600
பிறர் நோகக் கடுஞ்சொல் மொழிந்தோர்
நாக்கறிந்து நகங்கள் இழப்பர்
செக்கிலிட்டு சிதைப்பதுமன்றி கோடாரி
கொண்டு மார்பைப் பிளப்பர்
அறமற்ற செயல்கள்
புரிந்தோர் அவரவர் செயலுக்கு
ஏற்ப
அடைவார்கள் பெருந்தண்டனை
அரசே நீ அறிந்து
கொள் என்றார் 601
விலங்குகதி துன்ப வகைகளை விரித்துரைத்து சொல்வேனாகில்
விண்வெளியின் பரப்பைப்
போல விரிந்து கொண்டே
செல்லும்
ஒன்றறிவு கொண்ட ஜீவன் முதல் ஐந்தறிவு உயிர்கள்
வரை
அனைத்தையும் நீயே ஆய்ந்து அறிந்து
கொள் வேந்தா என்றார் 602
ஒன்றறிவு உயிராய்
பிறந்து துன்புறும் தாவரங்களெல்லாம்
உயிரினமே என்றறியா
மதியால் உலகத்தோர் அழித்து
விடுவர்
ஊன்
விற்றுப் பிழைப்போரால் உயிரினங்கள்
கொல்லப்பட்டும்
உழ
தொழிலில் சுமையைத் தாங்கி விலங்கினங்கள் துன்பங்கொள்ளும் 603
தம்மின் வலிய விலங்குகளின் தாளாத சின முழக்கத்தாலே
அஞ்சிய எளிய விலங்குகள் அலறி ஓடி துயரங்கொள்ளும்
தெய்வங்கள் காக்கும்
என்று உயிர்போக்கும் தறிகெட்டோரின்
கைகளில் அகப்பட்டு
அழியும் கடுந்துன்பம் விலங்குகட்குண்டு 604
தமையீன்ற தாய் விலங்குகள் தன் கண்களால் காத்தும்
பார்த்தும்
அன்பினை நெஞ்சில்
நினைத்தும் அதை நிலங்களில்
ஆட விட்டும்
உடன் இருந்து
தழுவி வளர்த்த இளம் பருவ விலங்கினங்கள்
எண்ணிறைந்த துன்பங்கொள்ளும் இயற்கையில்
எய்தும் துன்பம் 605
பெரிய தவ ஒழுக்கத்தில் நின்று
பின்னர் வஞ்சம் களவு சேர்ந்து
ஆசையால் பொருள்களை
வஞ்சித்து அயலாரை வஞ்சத்தால் மயக்கி
அவாவினால் பெருங்கேடு செய்து அகிம்சையற்று
கொலைகள் புரிந்து
வெறுப்புடன் பகைமை கொண்டோர் விலங்கினமாய்
பிறப்பாரென்றும் 606
உயிர் ஒன்று இல்லை என்றும்
அவ்வுயிர்க்கு மறுமை இல்லையென்றும்
அறம் மறம் நீதிகளில்லையென்றும் அவனியில்
உண்டென்பதை மறுத்தும்
உயிர்களைக் கொன்று
தின்னும் மறச் செயல் உடையோரெல்லாம்
விலங்குகதியில் பிறப்பு
எடுப்பார் வினைத் தொடர்ந்து
வருவதாலே 607
மனிதகதி துன்பம்
:
மனிதகதி உயிர்கள்
எல்லாம் மனிதராய் பிறப்பெடுத்திடினும்
மனிதத்தன்மை ஒன்றெனினும்
வேற்றுமையில் ஐவர் ஆவர்
சேகர், மிலேச்சர்,
மனிதர், திப்பியர், போகமனிதர் – என
ஐவகை இனத்தவர்களாகி
அரிய மனித பிறவி எடுப்பர் 608
பாரத கண்டம் ஐந்தில்
வாழ்வர் வாழத்தக்க காலம் எல்லாம்
குணத்தினில் இழிந்தோராகி
குறைந்த அறிவும் தெளியாதோராய்
ஒழுக்கநெறி சிறிதும்
இன்றி ஒடுங்கிய சீலத்தில்
மூழ்கி
அறிவற்ற மனிதர்கள்
எல்லாம் சேகர இன மனிதர்களாவர் 609
தீவுகளில் வாழ் மனிதர்களும் தேசத்தில்
வாழும் மனிதர்களும்
மிலேச்சர்களில் இருவகையாகும்
மிருகங்கள் ஒத்த ஒழுக்கத்தாலே
தீவில் வாழும்
மனிதர்களெல்லாம் தீய ஒழுக்கம்
உடையோர் ஆவர்
தேசத்து மிலேச்சர்கள்
எல்லாம் தேய்ந்தவர்கள் மக்கள்
பண்பில் 610
மனிதர்கள் வாழ்ந்து
மகிழும் மண்ணில் சிறந்த
நாடுகளில்
மனிதரும், திப்பியரும்,
போகரும் ஒழுக்கத்தோடு தீச்செயலுடையார்
மும்மூடங்கள் உடைய இவர்கள் மனிதராய்
கருதத்தக்காததால்
நெல்லினுள் பிறந்த
பதராவர் நல் வேந்தே
நெஞ்சில் கொள் என்றார் 611
அறநெறி நிறைந்த
நாட்டில் அவதரித்த மனிதரானாலும்
அகம் புறம் ஊனங்களற்று அருள் நிறை இல்லறம்
பெற்றும்
நல்
நிலம் பொருள் நன்மைகளோடும்
நங்கையர் பிறப்பு தவிர்ப்பும்
அரிதிலும் மிக அரிதேயாகும் அரசனே நீ அறிவாய்
என்றார் 612
மழலைப் பருவம்
என்னும் மணல் பாலை நிலம் கடந்து
இளமைப் பருவம்
என்னும் இருள் காட்டை
அரிதிற் கடந்தால்
முதுமைப் பருவம்
என்னும் எல்லையில் இறந்த பின்னர்
மறுமையில் வேறாய்
பிறப்பது மக்களின் வினைகளுக்கேற்ப 613
களிறு துரத்த
பயந்து ஓடி கடும் கிணற்றில் விழும்
போது
கொடி பற்றித்
தொங்குகையில் கொடும் நாகம் கீழிருக்க
எலி
ஒன்று கொடியை அறுக்க
தேனடையில் சொட்டும் துளியை
சுவைக்கும் நிலைக்கொப்பாகும் மனிதகதியில்
நுகரும் இன்பம் 614
அறத்தினோடு அன்பு சேர்ந்து அமைந்திட்ட
இல்லறத்தில்
இன்னல் பல எதிர் வருதல்
இயற்கையான இயல்பேயாம்
இருபற்றாம் நான் எனது என்பதை
இல்லாது விட்டொழித்தால்
இருவினைகள் கெட்டொழியும்
இல்லறமும் இனிது பெறும் 615
தானமும் தவமும்
பூசையும் தன்னியல் இவைகள்
நான்கும்
நற்செயலை தெளிந்து
கொள்ளும் நல் ஆய்வாம்
மனிதகதியில்
ஐந்து ஒழுக்க
துறவிகளுக்கு ஏழுகுண இல்லறத்தார்கள்
ஈனுகின்ற நல் ஆகாரந்தான் எச்சமில்லா
அறமாய் அமையும் 616
துறவுடன் அடக்கமுடமை
சுற்றத்தைப் பேணிச் செய்தல்
மெய்யுணர்வை நன்கு அறிதல் மெய்குணங்கள்
ஏற்போர்க்கு
அன்பேடு பொருள்
பற்றின்றி அறிந்துணரும் குறிப்பாற்றலும்
ஆற்றலுடன் கண்ணோட்டமும்
அமைய வேண்டும் ஈவோரிடம் 617
பிறர் கலங்க ஈட்டிய பொருளை
பொல்லாதோர்க்கு வழங்கிய ஒருவன்
கைப்பொருள்கள் இழப்பதுமின்றி
கீழ்குடியில் பிறப்பதுண்மை
மெய்யுணர்ந்த குணங்களோடு
துறவிகளுக்கு வழங்கிய ஒருவன்
தேவகதி சென்று
பிறப்பான் சிந்தையில் கொள் வேந்தே என்றார் 618
அருளோடு அறிவும்
குணமும் மெய்யுணர்வு தவமும்
ஞானமும்
மயக்கமற்ற தியான நிகழ்வென மாண்பின்
ஏழு அறவாயில்களுண்டு
நற்காட்சி விளக்கைக்
கொண்டு நல்லொழுக்க ஓளியினாலே
இருவினை காரிருளைப்
போக்கி ஏழுவாயிலால் வீடடையலாம் 619
விசயனும் திவிட்டனும்
முதல் பதினெண்மர் தெய்வமனிதர்கள்
பயாபதி மன்னனே
நீயும் கூட தெய்வத்தன்மை
பெற்றவன் தான்
இருவினை வெல்லும்
இயல்புடைய உன் மரபினன்
பரதன் உள்ளிட்ட
உதித்திட்ட சக்கரவர்த்திகள் தெய்வீக
மனிதர்கள் ஆவர் 620
தேவகதி துன்பம் :
தேவகதியில் பிறப்பெடுத்தாளும் பிறப்புகளில்
நால்வகை உண்டு
ஈரைந்து பாவணர்கள்
என்றும் நாலிரண்டு வியந்தரர்கள்
என்றும்
ஐந்து வகை சோதிடர்களோடு ஈரெட்டு
கற்பகர்கள் என்றும்
மேலுலகின் தேவர்களாவர்
மேன்மைமிகு மன்னா மனங்கொள் 621
நால் வகை தேவர்களுக்கும் நன்குயர்ந்தோர் ஒன்பதின்மர்
அவ்வொன்பதின்மர் ஆய்ந்ததில்
அவர்க்குயர்ந்தோர் ஒன்பதின்மர்
ஈரொன்பது உயர்ந்தோர்க்கு ஏற்றமுடையோர்
ஐவர் உளர்
தேவர்களின் வகைகள்
இவை தெரிந்து கொள் பயாபதி மன்னா 622
தீச்சொரி தலைச் சூட்டுடனும் சிறந்த
மணிக்குவியல்களுடனும்
பவணலோகத்தில் வாழும்
பத்துவகை பவணதேவர்கள்
இன்னிசை மகிழ்ந்து
நுகரும் தேவர்கள் கின்னரர்
வியந்தரர்கள்
விண்கோள் வாண்மீன்களாய்
விளங்கும் தேவர்கள் சோதிடராவர் 623
நற்காட்சி சுடர்விளக்கோடும் நல்லொழுக்க
அறத்தினோடும்
கள், ஊன், தேன் தவிர்த்தொழித்து கணவனுக்குப் பிழையா
மாந்தரும்
இல்லறத்தில் சிறந்த
அறமொடு இரு நான்கு
குணங்களோடும்
மண்ணுலகில் வாழும்
மக்கள் மூவகைத் தேவராய்
பிறப்பர் 624
மந்தரம் என்னும்
நீள் மலையின் மேல் உள்ள அந்தரலோகத்தில்
வாழுகின்ற தேவர்கள்
எல்லாம் வானவில்லின் ஒளியுடையோராவர்
ஏனைய தேவர்கள்
வணங்கும் எழில் ஒளிகொண்ட
மேனியர்
சிறந்த நிலை உடையவர் ஆவர் அத்தேவராய் பிறபோரெல்லாம் 625
நீராடுதல் இல்லாவிடினும்
நிறை ஒளி திகழும்
உடலும்
வாடுதல் இல்லா மலர்மாலைகளும் மழுங்கிடாத
பூந்துகிலும்
இமைத்தலில்லா இருவிழிகளும்
இரவு பகல் காலங்களின்றி
தீர்த்தங்கர்க்கு திருவிழா
செய்யும் சிறப்பு பெற்ற தேவர்களாவர் 626
அச்சுத உலக தேவர்களுக்கு இருபத்திரெண்டு கடற்காலம்
வயது
அகமிந்திர லோக தேவர்கள் மும்மூன்று
வகையினர் ஆவர்
ஒன்பது பிரிவினர்கட்கும் ஒவ்வொரு
கடற்காலம் உயர்ந்து
பஞ்சாநுத்தரத்து தேவர்க்கு
முப்பத்திமூன்று கடற்காலமென்பர் 627
தீவினைகள் அறவே ஒழித்து நற்காட்சி
நல்லொழுக்கத்தில் நின்று
தவஒழுக்கம் கொண்டோமாகில்
நற்செல்வம் அகலாது என்றார்
அறிவுரைகள் அளித்த துறவியின்
அடிகளைத் தொழுதான் பயாபதி
முடிவிலா வீட்டின்பம்
அடைய மூலமான தவத்திற்கு
அருளினார் 628
துறவுச்
சருக்கம் முற்றிற்று.
12. முக்திச்
சருக்கம்.
முக்திநெறி
:
நல்வினை தீவினைகள்
என்னும் இருவகைத் தொடர்புகளற்று
நாற்கதிகள் பிறப்பு
நீங்கி நற் தவம் ஏற்ற முனிவர்கள்
செல்லுதற்கு சிறந்த
வழியான சான்றோர்களால் கூறப்படும்
முக்தி நெறி ஒன்றேதான் மோட்சமாம்
வீட்டை அடைய 629
நாற்கதியில் பிறந்த
உடல் ஐம்பொறியின் புலன் நுகர்ந்து
அடைகின்ற அவா வெகுளியால் நல் தீவினைகள் கலந்து
அவ்வினை ஈட்டிய
பயனால் அடுத்தெடுக்கும் கதியில்
கூட
அவ்வினையை ஈட்டும்
இயல்பை அந்த உயிர் பெற்றே தீரும் 630
பிறப்பதும் இறப்பதுமான
பிறவிப் பெருங்கடலைக் கடக்க
பொறியடக்கம் தன்னுள்
கொண்டு துறவொழுக்கம் துணிந்து
ஏற்று
மெய்ப்பொருள் தனை உணர்ந்து நல்லொழுக்கம்
பாதுகாக்க
நற்காட்சி நல் ஞானம்
கிட்ட நல்வீட்டை அடைவது
உண்மை 631
கடையிலா எண்குணங்களோடு
காமத்தை அறவே அழித்து
இல்லறப் பற்றினை
நீக்கி இயங்கிடும் அவா வெகுளி போக்கி
ஆகம
மெய்நூல் நெறியோடு அறம் செய்யும் பேராண்மையே
மோட்சமாம் வீட்டை
அடையும் முக்திநிலையாகும் இயல்பு 632
துறவியின் அற அமிழ்துண்ட சுடர்மணி
முடியான் பயாபதி
துறவினை மனதில்
ஏற்றான் துணிந்தனன் தவத்தை
ஏற்க
விசய திவிட்டர்கள்
இருவரையும் வேந்தன் பயாபதி
அழைத்தான்
வேதனைகள் மனதில்
இன்றி தன் முடிவினைக்
கூறலானான் 633
திருமகள் இயல்பு
என்றும் சேர்ந்து வாழாள்
ஒருவரிடமே
மருவியே மாறிச்
செல்லும் மனதுடையாள் லட்சுமியாவாள்
திண்ணிய மனதினோடு
ஒரிடம் சேர்ந்து நிலைத்து
விடுவாளாயின்
அன்பு அறன் ஈகை வாய்மை
அத்தனையும் அழித்துவிடுவாள் 634
கயல்விழி கணிகையரைச்
சேர்ந்த காளையர் செல்வம்
கரைவதுபோல்
திருமகளை விரும்பியவர்களின் தெய்வகுணங்கள்
அழிந்து போகும்
பொருளின் மேல் கொண்ட காதலை பகைவர் போல் அழித்திடுங்கள்
மெய்நூல்கள் பகரும்
நெறியை மனம் விரும்பி
ஏற்றிடுங்கள் 635
உயர்குடி பிறந்தோர்
என்றும் உயர்குணங்கள் கொண்டோரென்றும்
நிலமகள் என்றும்
நினையாள் வினையுடையோர் வழியே செல்வாள்
காலந்தோறும் புதிது
புதிதாய் பிறப்பெடுத்து வரும் மக்களோடு
நிலமகளும் மாறிச்
செல்லும் நிரந்தர குணம் அவளுக்காகும்
636
தன்
அடி வீழ்ந்து வணங்கி
தன்னை ஆட்சி செய்த தலைமகன்
மண்மீது பிணமாய்
கிடக்க மருவுவால் புது தலைமகனோடு
நிலமகள் தன்மை என்றும் நிலையென
என்று எண்ணி விரும்பும்
தன்மையை வென்று
அழித்து தவமதை மேற்கொள்வீரென்றான் 637
மெய்நூல் ஓதி உணர்ந்த மாட்சிமை
உடைய என்மக்களே
என்னோடுறைந்த நாட்கள்
சில இனி பிரியும்
நாட்கள் பலவாம் – என
பயாபதி மன்னன்
பகர்ந்திட பதைத்தனர் விசய திவிட்டர்கள்
கரம் கூப்பி
தொழுது வணங்கி பிழை பொருத்தருள்வீரென்றனர் 638
அகம் கொண்ட துறவினாலே அயலானாய்
விலகி நின்று
விசய திவிட்டர்களுக்கு விளக்கினான்
தன் துறவு தன்னை
தன்
மனைவி பயாபதியை நோக்கி
தங்கள் எண்ணம் யாதென வினவ
தவ ஒழுக்கம் முன்பே
ஏற்றேன் தங்கள் உள்ளம்
அறிந்ததாளென்றாள் 639
அமைச்சர்களும் துறவு ஏற்றனர் அரசன் பயாபதி அருளைப் பெற்று
பாற்கடலின் அழிழ்த
நீரால் பயாபதியும் நன்னீர்
ஆடி
மணியணிகலன்கள் களைந்து
மண்டிய பெருங்குழலை நீக்கி
பளிங்கு வெள்ளித்தட்டில் இட்டு பாற்கடலில் விட்டு
வந்தனர் 640
வேற்று அரசர்கள்
ஆயிரவர் வேந்தன் பயாபதியோடு
தத்தம் மணிகலங்கள்
நீக்கி தவத்தினை தழுவச்
சென்றனர்
விசயனும் திவிட்டனும்
கூடி எம் தந்தை அயலார் ஆனார்
இச்செயல் கொடியதென்றழுது இருள் மனதில்
அவ்விடமகன்றார் 641
நிலையில்லா உலகியல்
வாழ்வின் நிலையினை மனதில்
அகற்றி
நிலைத்து நிற்கும்
ஆற்றலினை உலகெல்லாம் தொழுதிடச்
செய்யும்
உன்னத செயல் செய்தமைக்கு உள்ளத்தில்
மகிழ வேண்டும்
வருத்தத்தை அற்வே ஒழியென விசய திவிட்டரை தேற்றினார்
துறவி 642
மண்ணுலக ஆட்சியினை
துறந்து வீட்டுலக அரசினை
விரும்பி
மெய்நூலைப் படைகளாக்கி
ஐவகை ஒழுக்கப் படைத்தலைவனாய்
துறவிகளை அமைச்சராக்கி
தூய விரதங்கள் கேடயமாக
தாக்கிடும் தீவினைகளையெல்லாம் தடுத்திட
தவநிலை கொண்டான் 643
மனம் வாக்கு
காயம் என்ற மதில்களை
திண்ணியதாக்கி
வினைவரும் வாயில்கள்
ஐந்தை வெண்கலக் கதவுகளால்
மூடி
அறிவோடு கூடிய தியான மகளை அனுதினமும் போற்றிக்
காத்து
அகப் புறப்பற்று
தாக்குதலின்றி அரண் என நின்று காவல் செய்தான் 644
நால்வகை தியானங்களையும் நான்கு
கால்கள் உடையதாகிய
நல்லியல் அமைந்த
அறிவாம் நற்களிறின் பிடரிமேல்
அமர்ந்து
மெய்நூல்களால் உரு பெற்று பொறிகளைப்
பொறியில் செலுத்தும்
மெய்யுணர்ச்சி அங்குசத்தோடு
அக்களிறினை செலுத்தலானான் 645
யான் எனது என்னும் செருக்கின்
வினைப்பகை அழியும் பொருட்டு
மூவகை அடக்கம்
கொண்டு மும்மூடமற்ற தியானத்தாலே
மோகனீயம் என்னும்
வினைகளை முழுமையாய் வேரோடழித்து
எண்வினைகள் அனைத்தும்
அழிய எதிர்த்து நின்றான்
பயாபதி முனி 646
சுவை, வெண்மை
பதின்மருடனும் ஞானாவரணீயம் நால்வர்
சேர்ந்து
தலையறுபட்டு இறந்தொழிய
கடையிலா நான்கும் கைக்கொண்டு
ஏனய
தவ வேந்தர்களோடு இடியென
முரசங்கள் முழங்கி நிற்க
விண்ணுலக தேவர்கள் சேர்ந்து கேவலக் மாதோடு
மணவிழா நடத்தினர் 647
கடத்தற்கரிய மயக்கமான
இருவினைத் தொடர்பை அழித்து
தேவர்கள் நாள்தோறும்
அவன் திருவருளை வாழ்த்தப்
பெற்று
கேவலக் ஞானம் என்னும்
ஒளியால் உலகங்கட்கெல்லாம் உயர்ந்த
வீட்டுலக சிகரத்திற்கேற்ப சூளாமணியாய்
திகழ்ந்தான் பயாபதி 648
தங்கள் தலைவனான
பயாபதி தன்னிகரற்ற வீட்டுலகை
ஆள
ஆழி
சூழ்ந்த உலகை எல்லாம்
அவன் குடையின் கீழ் கொணர்ந்து
அனைத்துயிர்க்கும் அருளனாகி
அறம் சாயா செங்கோலுடன்
தெய்வங்கள் வாழ்த்தி
நிற்க திவிட்டன் பேராட்சி
செய்தான் 649
வலம்புரி சங்கொத்த
விசயனும் வானத்தின் நீல திவிட்டனும்
அனைத்துலகமும் அவர்களடி தொழ
வினைவென்ற வீதராகமூர்த்தியின்
செந்தாமரை திருவடிகளை
வணங்கி திருவிழாக்கள் சிறப்புடன்
செய்து
தினம் தினம் மகிழ்ச்சியில் மூழ்கி
செவ்வனே ஆட்சி செய்தனர் 650
முக்திச்
சருக்கம் முற்றிற்று.
சூளாமணி கடைச் சுருக்கம் நிறைவு.
No comments:
Post a Comment