Yasodhara kaviyam - யசோதர காவியம்




யசோதர காவியம்



இக்கவிதை நடை யசோதர காவியத்தை வடித்தவர் 
திரு. பத்மராஜ் அப்பாண்டைநாதன் அவர்கள்
முட்டத்தூர்.


^^^^^^^^^^^^^^^^^^^^^ # ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 


முன்னுரை  :

          யசோதர  கவியம்  ஐஞ்சிறு  காப்பியங்களில்  ஒன்றாகும்.  இதன்  நூலாசிரியர்  சமணர்  என்பதைத்  தவிர,  அவரைப்  பற்றிய  செய்தி  ஏதும்  தெரியவில்லை.  சீர்திருத்தவாதியான  மத்வாசாரியார்    ஒரு  மாற்றத்தைக்  கொண்டு  வந்தார்.  யாகத்தின்  போது,  உயிர்பலிக்கு  பதிலாக,  அரிசி  மாவினால்  செய்த  உருவங்களைத்  தெய்வத்திற்கு  பலியிடலாம்  என்ற  சீர்திருத்தம்  அது.

          அதனையும்  மறுத்து  எழுதியது  தான்  இந்நூல்.  பாவனைக்  கொலை  கூட  வினைக்குக்  காரணம்  ஆகும்.  மனதில்  கொலை  ( பலி )  என்னும்  எண்ணமே,  தீவினைப்  பயனாகி,  பல  பிறவிகள்  வரை  தொடர்ந்து  வந்து  துன்புறுத்தும்  என்பதை   வற்புறுத்துகிறது  இச்சிறுங்  காப்பியம்.  ஒரு  உயிருக்கு  நேரிடுபவை  அனைத்தும்,  அதனது  முன்வினைப்  பயனால்  என்பதைத்  தெளிவாக  கூறும்  நூல். 

          இந்நூலில்  வரும்,  தாய்,  அரசி  சந்திரமதியும்,  அவளது  மகன்,  மன்னன்  யசோதரனும்,  ஏழு  பிறவிகளை  எடுத்து,  துன்புற்று,  இப்பிறவியில்  அபயருசி,  அபயமதியாய்  பிறந்து,  வீடுபேறடைந்ததற்கு  காரணம்,  மாக்கோழி  பலியினால்  ஏற்பட்ட  தீவினை  தொடர்ந்ததே  என்பதை  அழகுற  விவரிக்கிறது.  நான்கு  சருக்கங்களையும்,  320  செய்யுள்களையும்  கொண்ட  காவியம். நான்,  பொருள்  குறையாமல்,   260  செய்யுள்களாகச்  சுருக்கி,  அனைவரும்  காப்பியத்தின்  பொருளைத்  தெரிந்து  கொள்ளவேண்டும்,  என்ற  ஆசையில்,  எளிய  தமிழில்  கவிதைகளாகக்  கொடுத்துள்ளேன்.  வீடூர்  பூர்ணச்சந்திர  சாஸ்திரியாரின்  உரையைத்  தழுவி  எழுதியது.  அன்னார்க்கு  நன்றி

மனம்,  சொல்,  செயல்  ஆகிய  மூன்றும்  தூய்மையுடன் இருக்க
வேண்டும்.  மனதால்  ஏற்படும்  பாவனை  பலியும்,  கர்ம  வினைக்கு  வித்திட்டு,  பல  பிறவிகள்  துன்பத்தில்  உழல  வேண்டும்  என்பதை  உணர்த்துவது  யசோதர  காவியம்.  தமிழறியாத,  ஒரு  பொறியாளனாக,  நான்  எழுதியுள்ள  என்  தமிழில்  காணும்  குறைகளை,  மழலையின்  தமிழ்  என  ஒதுக்கி,  ஏற்றுக்கொள்ள  வேண்டுகிறேன்.

                                  அன்புடன்  உங்கள்,

                             முட்டத்தூர். அ. பத்மராஜ்.

****************************** 


   கடவுள்  வாழ்த்து:

1
மூவுலகம்  முழுவதையும்  முழுதுணர்ந்த  திருநாதன்
     முடிவற்ற  ஞானகுணம்  ஆழியாய்  கொண்ட  அருகனின்
செங்கமலத்  திருவடியை  தீவினைகள்  நீக்கி  விட்டு
     அடி  தொழுது  நாம்  பெறுவோம்  மோட்சமாம்  வீடு  தன்னை       

2
முனிசுவ்ரத  தீர்த்தங்கரரின்  முழு  ஞான  உபதேசம்
     திவ்யத்  தொனியாக  திகழ்கின்ற  காலத்தில்
திருவறப்  பெருமையினால்  தீவினைகள்  போக்கிவிட்ட
     யசோதரனின்  சரித்திரத்தை  இனி  இயம்பப் 
போகின்றேன்      

அவையடக்கம் :
3
தீபத்தின்  ஒளியைப்  போல  திருவறத்தின்  நெறி  தன்னை
     இக்கவியில்  காண்கின்ற  ஏற்றமிகு  சான்றோரே
என்  சொல்லின்  குற்றங்களை  இகழாத  மனம்  கொண்டு
     என்  தமிழை  ஏற்க  என்று  இறஞ்சுகிறேன்  உங்களிடம்              

நூல்  நூவல்  பொருள்  :
4
தீவினை  வரும்  வழியை  திட்டமாய்  தடுப்பதையும்
     நல்வினை  இன்பந்தன்னை  நலமுடன்  அடைவதையும்
தீவினை  பயன்  உயிர்க்கு  தெள்ளென  உரைப்பதையும்
     இந்நூல்  மக்களுக்கு  இனிதாக  எடுத்து  இயம்பும்               


முதல்  சருக்கம்.

நாட்டுச்  சிறப்பு  :
5
மலை  அரசன்  மாமேரு  மத்தியில்  மருவி  நிற்கும்
     நாவலந்தீவினிலே  நல்வளமுற்ற  பரதநாட்டில்
மது  சொட்டும்  மலர்வனமும்  முகில்  தவழும்  விண்  கொண்டு
     மண்ணுலக  சொர்க்கம்  என்ற  மாட்சி  பெற்ற  ஔதயநாடு 
    
நகர்  சிறப்பு  :
6
விண்ணுலக  வானவர்கள்  வேண்டும்  சுகம்  பெறுவது  போல்
     அழிவற்ற  அழகாபுரியின்  அத்தனை  செல்வமும்  கொண்டு
எண் திசையும்  மண்ணுலகில்  எந்த  நாடும்  இல்லையென்ற
     எண்  வகைச்  சிறப்புடனே  இருக்கும்  நாடு  ராசமாபுரம்  
      
7
மதில்  வளர்ந்து  விண்ணை  முட்ட  முகில்கள்  அதன்  மேனி  தழுவ
     மாளிகைகள்  வானவரின்  வலம்  வரும்  வழி  மறிக்க
பண்ணிசையும்  பாட்டொலியும்  கேட்பவர்கள்  செவிகிறங்க
     பவணலோக  தேவர்களே  நகர்  அழகில்  சொக்கி  நிற்பர்       

அரசன்  சிறப்பு  :
8
முன்னோர்கள்  முடிகொண்டு  முறைநெறியில்  ஆண்டது  போல்
     மும்மடங்கு  ஆட்சியினை  முகில்  தரும்  மழையினை  போல்
ஔதேய  மக்களுக்கு  அறநெறியில்  நலங்களெல்லாம்
     மாரிதத்தன்  மன்னன்  தந்தான்  மங்கலங்கள்  பெருகி  நிற்க  
   
9
மாரிதத்தன்  தந்த ஆட்சியிலே  நாட்டு  மக்களும்  தேவரானார்
     மறம்  நீங்கி  அறம்  பெருகி  மாநிலம்  மாண்பு  பெற
திருவறம்  செழித்ததனால்  திரும்பாத  வீடு  அடையும்
     செவ்விய  வழிகாணும்  தேர்ந்தாய்வோர்  யாருமிலர்         

வேனல்  வரவு  :
10
சுருண்ட  நீள்  கருங்குழலும்  சூடிய  அணிகலன்களும்
     மேனியில்  தாங்கி  நிற்கும்  மென்னிடை  மங்கையராய்
கார்கால  மழையினை  போல்  காதலைக்  கொட்டுகின்ற
     இளவேனிற்  காலம்  வந்து  இன்பத்தை  வழங்கியது             

வசந்த  மன்னனை  வரவேற்றல்  :
11
கோங்கு  மரம்  பூச்சொரிய  வாகை  மரம்  தென்றல்  வீச
     கொட்டுகின்ற  தேன்  துளிக்கு  வண்டினங்கள்  யாழிசைக்க
கருங்குயிலின்  கானத்திலே  காமன்  அவன்  மயங்கி  நிற்க
     வசந்தமன்னன்  வருகையினை  வனிதையர்கள்  வரவேற்றார்  
     
12
பூங்கொடிகள்  மாதராக  பூமியிலே  நடனமாட
     மாமரங்கள்  தன்  கிளையில்  பொன்  தளிரை  பூசிவிட
மல்லிகையும்  மாதவியும்  மணம்  எழுப்பி  சூழ்ந்து  வர
     இளவேனில்  இளவரசன்  இன்பமுற்றான்  அக்காதலிலே          

அரசனும்  நகர  மாந்தரும்  வசந்த  விழா  அயர  முற்படுதல்.
13
சோலைகளும்  தோப்புகளும்  தோரணம்  போல்  வரவேற்க
     வசந்த  கால  வேந்தனவன்  வந்துவிட்ட  செய்தியினை
மாரிதத்தன்  மன்னனுக்கு  அந்நகர்  மாந்தர்  செய்தி  சொல்ல
     வசந்தவிழா  கொண்டாட  வேண்டியதை  செய்க  என்றான் 

14
வேந்தனும்  மாந்தர்களும்  வசந்த விழாவை  விரும்பிட
     மாந்தரில்  ஒருசாரார்  மன்னனிடம்  பகர்ந்து  நின்றார்
மாரிதேவியின்  மங்கலத்  திருவிழா  ஐப்பசி  அஷ்டமி  நன் நாளில்
     செய்திட  மறந்தால்  வந்திடும்  மாபெரும்  தீங்கென்றார்கள்  
    
15
நோய்  பல  தோன்றிடும்  மனம்  நொந்திட  செய்திடும்
     போர்  பகை  கூடிடும்  பொய்த்திடும்  வான்மழை
இன்னுயிர்  கொல்லுவாள்  இன்னும்  பல  வினை  செய்வாள்
     தேவிக்கு  சிறப்பினை  செய்வதே  நலம்  என்றார்கள்            

அரசன்  தேவிக்கு  பூசை  செய்தல்  :
16
திருவறம்  அற்றதால்  தெளிந்த  நற்காட்சி  இன்மையால்
     தேவிக்கு  பூசை  செய்யும்  தேவமூட  குற்றத்தால்
அரச  சின்னங்கள்  அத்தனையும்  அணிந்து  கொண்டு
     தென்  திசை  தேவிக்கு  சிறப்பினை  செய்க  என்றான்          

தேவியின்  கோயிலை  அடைதல்  :
17
ஏழுவகை  தத்துவத்தின்  கூர்  அறிவு  அற்றவர்கள்
     என்றென்றும்  அகமகிழ்வில்  ஏற்றமுடன்  தொழுகின்ற
வெஞ்சினம்  கொண்டவளும்  வணங்கும் தகுதி  அற்றவளுமான
சண்டமாரி  தேவதையின்  சன்னிதிக்கு  மன்னன்  சென்றான் 
                                
அரசன்  மாரியை  வணங்குதல்  :
18
வீரக்  கழல்  அணிந்த  தோள்  வலியான்  மாரிதத்தன்
     பாவமே  உருவெடுத்து  பதுமையாய்  நிற்பது  போன்ற
சண்டமாரி  தேவியின்  தனிச்சிலை  வைத்திருந்த
     கோயிலை  வலம்  வந்து  கும்பிட்டு  தொழலானான்        

19
மயில்  கோழி  பன்றி  ஆடு  எருமை  பிற  விலங்கினங்கள்
     ஆண்  பெண்  இரட்டைகளாய்  கட்டியதை  கண்ட  மன்னன்
அங்க லட்சனங்கள்  அழிவற்ற  ஆண்  பெண்  இரட்டயரை
     அரசன்  பலி  ஈந்த  பின்பு  மாந்தர்  பலி  தொடங்குமென்றான்       

20
கொலைவதை  குற்றம்  என்று  கொஞ்சமும்  வருந்தா  மன்னன்
     வேலியே  பயிரை  மேய்ந்தால்  பயிர்  நிலை  அறியா  அரசன்
நரபலி  ஒன்றைத்  தந்தால்  தன்நிலை  உயரும்  என்று
     நல்குடி  இரட்டையரை  இவ்விடம்  கொணர்க  என்றான்             

சண்டகருமன்  தேடி  சென்றபோது  
அந்நகர்  சோலையின்  கண்  முனிவர்  சங்கம்  வருதல்.
21
குன்றொத்த  தவத்துடனும்  குற்றமில்லா  மனதுடனும்
     ஐநூறு  நிர்கந்த  முனிகளோடு  சிராவகர்  கூட்டம்  தொடர
சுதத்தர்  என்னும்  மாமுனிவர்  ராசமாபுரம்  சோலை  ஒன்றில்
     திருத்தலங்கள்  வழிபட  சங்கத்தோடு  வந்து  சேர்ந்தார்          

சங்கத்தார்  உபவாச  தவம்  கைகொள்ளுதல்  :
22
மலர்நிறை  வனம்  புகுந்த  மாதவத்தார்  சுதத்தாச்சாரியார்
     தாம்  வந்த  வழியினிலே  தாமறியா  நிகழ்ந்த  வினைகள்
தன்னை  விட்டு  நீங்குதற்கு  தமக்குரிய  ஆசனம்  கொண்டு
     குறிப்பிட்ட  காலம்  வரை  உபவாச  விரதம்  ஏற்றார்       

சிராவகர்  கூட்டத்தில்  உள்ள  
இளைஞசர்  இருவரின்  வணக்கம் :
23
மனதில்  நல் ஒழுக்கங்கொண்ட  மட்டில்லா  ஞானங்கொண்ட
     அபயருசி  அபயமதி  அண்ணன்  தங்கை  இருவரும்
சிராவகர்  கூட்டம்  தன்னில் தளர்ந்திட்ட  மேனியுடன்
     உளம்  தளரா  உறுதியுடன்  சுதத்தரை  தொழுது  நின்றனர்      

சுதத்தாச்சாரியார்  கருணையால்  
இளைஞரை  சரிகை  செல்ல பணித்தல்.   
24
இளம்பிறை  ஒத்த  இருவரின்  இளம்  மேனி  வாடல்  கண்டு
     அவர்களின்  பசி  அறிந்து  அனசன  தவத்தை  நீக்கி
விதிப்படி  உணவு  உண்டு  தம்மிடம்  வருக  என்ற
     சுதத்தரின்  சொல்லை  ஏற்று  தொழுத  பின்  செல்லலானார்    
( அனசன  தவம் :  குறிப்பிட்ட  நாள்  உபவாசம் )

இளைஞர்  சரியை  செல்லுதல்  :
25
மண  மலர்  மாலை  இன்றி  மணம்  கமழ்  சாந்து  நீக்கி
     பொன்மணி  அணிகள்  போக்கி  தூய  வெண்ஆடை  ஏற்று
சுல்லக  வேடம்  கொண்ட  அபயருசியும்  அபயமதியும்
     ராசமாபுரத்தின்  உள்ளே  சரியைக்கு செல்லலானார்கள் 

26
நல்லற  அமுதம்  கொள்ள  மெல்லடி  எடுத்து  வைத்து
     நுண்ணிய  உயிர்களிடத்து  நல்லருள்  விரும்பிக்  காத்து
இல்லறத்தார்  எதிர்கொண்டு  ஈயும்  துல்லிய  தூய  உணவை
     ஏற்றிடும்  நியமத்தோடு  இருவரும்  நடந்து  சென்றனர்      


மன்னனேவல்  பெற்ற  சண்டகருமன்  
இளைஞர்களை  கண்டு  கலங்குதல்.   
27
இளமையில் கொண்ட  துறவால்  ஏற்பட்ட  வனப்பினாலே
     பகைவரும்  நேரில்  கண்டால்  பகை  நீங்கி  அன்பு  கொள்வர்
மன்மதன்  அழகினோடும்  திருமகள்  எழிலினோடும்
     எதிர்வரும்  இருவரை  கண்டு  சண்டகருமன்  கலக்கமுற்றான் 


இளைஞரை  பலியிடப்  பிடித்து  ஏகுதல்  :  
28
மனமது  இரங்கினாலும்  மன்னனின்  கட்டளையால்
     இருவரையும்  வலிதிற்  பற்றி  சினம்நிறை  உருவம்  கொண்ட
சண்டமாரி  கோயில்  நோக்கி  சண்டகருமன்  செல்லும்  போது
     அபயருசி  அபயமதி  அவர்கள்  நிலை  எண்ணலானார்                

29
அறமற்ற  மறவர்  சூழ  அபயருசி  அபயமதி  செல்ல
     அஞ்சுவாள்  தங்கையென  அபயருசி  துணிவு  சொல்ல
ஆன்மா  ஸ்வரூபமில்லை  அழிவது  உடல்  மட்டும்  தான்
     அவ்வுடல்  பற்றுதனை  துறவுற்ற  அன்றே  விட்டோம்  என்றான்     
  
30
வருவதை  எண்ணி  அஞ்சினால்  வரும்  துன்பம்  வந்தே  தீரும்   
     அஞ்சுதல்  துன்பம்  நமக்கு  அதன்  தீவினை  வருத்தும்  நம்மை
அன்னையே  நீயும்  நானும்  விலங்குகதி  சென்றோம்  முன்னர்
     சுதத்த  முனிவர்  சொல்ல  இப்போதும்  கேட்டு  அறிந்தோம்  
   
31
காற்றாடி  போன்ற  வினைகளால்  கதிநான்கில்  சுழன்றிருந்தோம்
     எடுத்திட்ட  பிறவிகளோ  எண்ணிக்கையில்  அடங்கிலாது
தீ நல் வினைகளுக்கு  ஒப்ப  அமைந்திடும்  பிறப்பும்  இறப்பும்
     இப் பிறவியும்  அப்படியே  கழிந்திடும்  கலங்காதென்றான் 
       
32
எடுத்திடும்  பிறவிகளில்  அவ்வுடல்  பேண  எண்ணி
     ஐம்பொறி  நுகர்ச்சி  இன்பம்  அதைவிட  வேறில்லை  என்று
செய்திடும்  செயல்கள்  எல்லாம்  சேர்ந்திடும்  வினைகளாக
     கழிந்திடும்  பிறவிகளாய்  கருமத்தின்  வினைகளுக்கு  ஏற்ப        

நரககதி  வரலாறு  :
33
அனலினில்  விழுந்தாற்  போல்  அளித்திடும்  துன்பம்  நரகில்
     முதல்  நரகில் நரகன்  உயரம்  ஒரு  வில்லாய்  உயர்ந்திருக்கும்
ஏழினில்  ஐநூறாகி  எண்ணிலா  துன்பம்  தாக்கும்
     செய்திடும்  வினைகளுக்கு  ஏற்ப  துவங்கிடும்  நரக  வாழ்க்கை   
(  ஒரு  வில்  :  8  அடி  )

விலங்குகதி  வரலாறு  :
34
ஆன்மனில்  கலக்கும்  வினைகள்  அளித்திடும்  பிறவி  தன்னை
        அணுவினில்  தொடங்கும்  விலங்கு  ஆயிரம்  யோசனையில்  முடியும்
ஒரு  பொறி  விலங்கில்  பிறந்து  ஐம்பொறி  விலங்கில்  சென்று
       எண்வினை  செயலுக்கேற்ப  எண்ணிலா  உடல்கள்  பெறுவோம்    

மனுஷ்யகதி  வரலாறு  :
35
உத்சர்பிணி  அவசர்பிணி  காலம்  மனித  உயரத்தை  முடிவு  செய்யும்
     ஒரு  முழம்  உயரம்  தொடங்கி  ஆறாயிரம்  வில்லில்  முடியும்
மனிதவுடல்  எடுத்து  இழந்தவை  கடல்  மணலுக்கு  ஒப்பதாகும்
      அவரவர்  வினைகளுக்கு  ஏற்ப  மனிதகதி  வாழ்க்கை  மாறும்        

தேவகதி  வரலாறு  :
36
நல்வினையும்  தவமும்  சேர்ந்தால்  நாடிடுவார்  தேவலோகம்
     செய்திடும்  நல்வினைகட்கேற்ப  தேவகதி  எடுத்து  மகிழ்வர்
இரண்டு  முழம்  உயரம்  ஆகி  ஐந்தைந்து  வில்லை  அடைவர்
     தேவகதி  பிறவிகள்  கூட  எண்ணிக்கையில்  அடங்காதாகும் 


தேவ  நரக  யாக்கையின்  விருப்பும்  வெறுப்பும்  :
37
தேவ  நரக  யாக்கை  எல்லாம்  இடையில்  மரணம்  அடைவதில்லை
     விருப்பு  வெறுப்பு  ஏற்படினும்  வினைகாலம்  வரை  அங்கிருப்பர்
அன்பு  கொண்ட  தேவ  யாக்கை  அழிந்திடும்  தன்  எல்லை  தனில்
     மனிதனாக  பிறந்த  உடல்  அழிவதில்  ஐயம்  உள்ளதோ         

38
மண்ணுலகில்  மனிதகதியில்  மன்னராகப்  பிறந்திடினும்
     எட்டு  திக்கு  வேந்தரையும்  தன்  அடியில்  வீழ்ந்திடினும்
எடுத்து  விட்ட  மனித  உடல்  என்றென்றும்  நிலைப்பதில்லை
     அன்று  தொட்டு  இன்று  வரை  அழியா  யாக்கை  ஒன்றுமில்லை


39
எழில்  நங்காய்  அறிந்து  கொள்  எவ்வகையில்  ஆய்ந்திடினும்
பிறப்பு  இறப்பு  எல்லாம்  பழையன  விட்டு  புதியன  கொள்ளலே
இப் பிறப்பின்  இவ்வுடலை  எப்போதும்  நாம்  விடலாம்
     இன்னலைப்  புறந்தள்ளி  இவ்வுடல்  பற்றை  ஒழித்திடுக
           
அபயமதி  தன்  உள்ளக்கிடக்கையை  வெளியிடல்  :
40
அண்ணலே  இவ்வுடலும்  பொருளும்  என்னதே  என்போர்க்கெல்லாம்
     ஆற்றிய  உம்  அறிவுரைகள்  அனைத்துமே  பொருத்தமாகும்
பற்றினை  முற்றும்  துறந்த  பாலராம்  துறவிகளுக்கு
     இம்மொழி  தேவை  தானா  என்று  கேட்டாள்  அபயமதி   
          
41
தீவினை  உதயத்தாலே  தீ  அனைய  துயர்கள்  உற்றோம்
     நடுங்கிய  நம்  மனதை  நல்  தவ  சுதத்தாச்சாரியார்
திருவறப்  பயன்கள்  தன்னை  தெளியவே  நமுக்குரைத்தார்
     துஞ்சுதல்  கண்டு  அஞ்சல்  துளியும்  நமக்கு  இல்லை  என்றாள்  

42
மங்கையாய்  பிறந்ததால்  நான்  மென்மனம்  உடையேன்  என்றும்
     மனதினில்  வல்லிய  அறிவும்  திண்மையும்  இல்லை  என்றும்
அண்ணலே  அருள்  உரைத்தீர்  ஆயினும்  நான்  பகர்வேன்
     நற்காட்சி  உடைய  எனக்கு  பிறவியில்  பற்றில்லை  என்றாள்        

இறுதியில்  நினைக்க  வேண்டியது  எதுவெனில்  :
43
உயிரோடு  தேன்றும்  உடம்பில்  உயிர்  உருவம்  வேறென  எண்ணி
     உயிரினை  உள்ளே  நினைத்து  உயர்  அற  மாட்சி  ஆய்ந்து
ஐம்பொறி  வாயில்  வென்ற  அருகனின்  அபயம்  பெற்றால்
     உடலினை  விடுவோம்  என  இருவரும்  முடிவை  கொண்டார்        

இருவரும்  உயிரின்  இலக்கணம்  உன்னுதல் :
44
கடையிலா  அறிவினோடும்  கடையிலா  காட்சியோடும்
     எண்வகை  குணங்களோடும்  ஐம்பொறி  அறிய  இயலா
உரையினில்  இருக்கும்  வாள்  போல்  உடலில்  இருந்து  வேறதாகி
     வடிவமும்  மலமும்  அற்ற  உயிரென  உள்ளம்  ஏற்றார் 
                 

இரு  மும்மணிகளை  எண்ணி  மகிழ்தல்  :   
45
உயிர்க்கு  நல்  வினையை  பெருக்கி  உலகிற்கு  இறையாமை  அருளி
     பிறவியாம்  சுழற்சி  போக்கி  பேரின்ப  வீட்டைத்  தரும்
நற்காட்சி  நல் ஞானம்  நல்  ஒழுக்கம்  மூன்றும்  கொண்டு
     மும்மணியாய்  அடைந்ததாலே  முழுமகிழ்வு  என்றுரைத்தார்   

சித்தர்  வணக்கம்  :
46
மூவுலக  உச்சியின்  மேல்  முடிமணி  ஒளியில்  விளங்கும்
     எண்குணம்  விளங்கப்  பெற்று  எக்குற்றம்  இல்லாராகி
பிறவியாம்  துன்பம்  நீங்கி  எண்வினைகள்  போக்கச்  செய்யும்
     சித்த  பரமேஷ்டிகளை  சிந்தையில்  வைத்து  வணங்கினர்         

அருகர்  வணக்கம்  :
47
பெருமலை  ஒத்த  காதிவினையை  பெரும்பகை  படுத்தி  வென்று
     கடையிலா  நான்கும்  பெற்று  சமவசரண காட்சி  தந்து
திரிலோக  உயிர்கள்  கேட்க  திவ்யத்  தொனியை  அருளிய
     தீர்த்தங்கர  தேவர்களின்  திருவடியை  மனதில்  தொழுதனர்      

ஆச்சாரியர்  வணக்கம்  :
48
ஐவகை  ஒழுக்கம்  தன்னை  அணிகலனாய்  அணிந்து  நின்று
     எண்வகை  மெய்ப்  பொருளை  எளிமையாய்  விளக்கிச்  சொல்லி
மேன்மையாம்  திருவறத்தை  மேன்மையுற  உபதேசித்து
     அறங்கூறி  தீட்சை  தரும்  ஆச்சாரியர்களை  பணிந்தனர்     

உபாத்தியாயர்  வணக்கம்  :
49
ஆகம  நூல்களையெல்லாம்  ஐயமற  தெளிந்து  கற்று
     தீமைகளின்  பிரிவு  நீக்கி  சிறந்த  நல்  ஒழுக்கம்  பயின்று
ஆறேழு  ஆகமங்களை  அவர்  தம்  மனதில்  தொகுத்து
     நம்  மன  அழுக்கைப்  போக்கும்  உபாத்தியாரை  வணங்கினர்

சர்வசாது  வணக்கம்  
50
பிறவியை  போக்கும்  உருவம்  அறுகுணம்  நிறைந்த  உள்ளம்
     குணங்களுக்கேற்ற  செயலும்  முக்தியை  அடையும்  வழியும்
திகம்பர  உடலினோடு  விதிப்படி  உணவை  ஏற்கும்
     சர்வசாதுக்கள்  அடியை  தொழுதனர்  இருகை  கூப்பி            

இது  முதல்  சண்டமாரி  கோயிலில்  நிகழும்  நிகழ்ச்சி  :
51
தூய்மையாம்  நினைவை  ஆயும்  சுடர்  முக  இளைஞர்களை
     சண்டமாரி  ஆலயத்தின்  கொலைகள  பீடம்  முன்னே
சண்டகருமன்  நிற்க  வைத்து  தள்ளியே  நின்ற  பின்பு
     வீரக் கழல்  அணிந்த  வேந்தன்  மாரிதத்தன்  வாளெடுத்தான்     

இளைஞர்  புன்முறுவல்  செய்தல்  :
52
அங்க  லட்சன  நூலின் அமைப்புகள்  அனைத்தும்  கொண்டு
     நற்காட்சி  நற்குணத்தால்  நடுக்கங்கள்  ஏதும்  இன்றி
மன்னனை  வாழ்த்தச்  சொல்லும்  மக்களின்  கூச்சலிடையே
     முற்பாவ  நிகழ்ச்சி  நினைவில்  புன்முறுவல்  பூத்து  நின்றனர்     

இளைஞர்  மன்னனை  வாழ்த்துதல்  :
53
மோகனீய  கர்மம்  நீங்கி  உயிர்வதை  அனைத்தும்  போக்கி
     அறம்  நிறை  மனதினோடு  அரிய  பல்  உயிர்க்கும்  அருளி
பிறவியை  போக்கும்  நல்ல  திருவறம்  தழுவி  ஏற்று
     நீடூழி  வாழ்க  மன்னா  என  நிறைமதி  இளைஞர்  வாழ்த்தினர்  

மன்னன்  மனமாற்றம்  அடைதல்  :
54
இளைஞர்கள்  இருவரையும்  இமைக்காமல்  நோக்கிய  மன்னன்
     மின்னொளி  மேனியையும்  மதியொளி  முகமும்  கண்டு
மரணத்தில்  நகைமுகம்  காட்ட  மனதினில்  தளர்ச்சியுற்று
        வித்யாதர  தேவர்களோ  என  விம்மினான்  மனதிற்குள்ளே       

அச்சமின்மை,  நகைத்தல்  ஆகிய இவற்றின்  காரணம்  வினவிய 
வேந்தனுக்கு  இளைஞர்  விடையிருத்தல். 
55
மரணத்தைக்  கண்ட  பின்னும்  மனதினில்  அச்சம்  இன்றி

     நயனத்தில்  நகையை  காட்டும்  காரணம்  என்னவென்றால்

பழையவினை  வெளியில்  வர  பயமது  நீங்கிப்  போக

     நற்காட்சி  சிந்தையாலே  நடுக்கத்தைத்  துறந்தோம்  என்றார்     


56
மாவினால்  செய்த  கோழியை  மதிகெட்டு  பலியிட்ட  பாவம்
     பல  பிறவி  எடுத்து  நாங்கள்  பட்ட  துன்பம்  எல்லையில்லை
உயிர்வதை  செய்யும்  உன்னை  ஊர்மக்கள்  வாழ்த்த  சொன்ன
     மடமையை  எண்ணி  நாங்கள்  மனதினில்  நகைத்தோம் என்றார் 


அங்கு  குழுமியுள்ள  நகர்  மாந்தர்  வியத்தல்  :
57
காண்பவர்  மயங்கும்  மேனியும்  கனியினும்  இனிய  சொல்லும்
     ஆண்  இன  ஆண்மை  அழகும்  அபயருசிக்கு  அமைந்தபோதும்
மென்மையில்  பெண்மை  கொண்டும்  மனதினில்  திண்மை  கொண்ட
     இப்பெண்ணின்  ஆண்மை  கண்டு  வியப்பினில்  நின்றார்  மக்கள்


மன்னனும்  வியத்தல்  :
58
அபயருசி  கன்னல்  சொல்லும்  அந்நகர்  மக்கள்  மொழியும்
     அரசனின்  நெஞ்சம்  எல்லாம்  அடைமழையாய்  இன்பம்  கொட்ட
நீர்  எடுத்து  கழிந்த  பிறப்பும்  நிலை  பெற்ற  இம்மை  குலமும்
     இளமையில்  தவத்தை  ஏற்ற  விபரங்கள்  கேட்டான்  மன்னன்        

அபயருசி  மறுமொழி  :
59
அருள்நிறை  நெஞ்சத்தோர்க்கும்  அறநெறி  விரும்பினோர்க்கன்றி
     தீசெயல்  புரிவோன்  மனதில்  என்  மெய்மொழி  பதியாதென்றான்
ஆதலின்  அரசே  நீர்  உன்  அகத்தினில்  நினைத்ததைப்  போல்
     ஆகவேண்டிய  நியதிகளை  அருள்கூர்ந்து  செய்க  என்றான்      

வேந்தன்  கருணைக்கு  பாத்திரமாகி  மீண்டும்  வினவல்  :
60
அபயருசி  உதிர்த்த  சொல்லால்  அருள்நிறை  நெஞ்சனாகி
     வாளினை  உரையில்  இட்டு  மனதினில்  தீ நினைவை  போக்கி
மாக்கோழி  பலியினாலே  பலபிறவி  துன்பம்  தூய்த்த
     தெய்வமே  என  தொழுது  தெரிவியும்  உம்  பிறவிகள்  என்றான்


அபயருசி  அறிவுரை  :
61
மின்னலோடு  இணைந்த  முகில்  மேதினியில்  உள்ளவர்க்கு
     பொன்மலை  அருகில்  சென்று  பெருமழை  பெய்வது  போல்
அபயமதி  அருகில்  இருக்க  அரசன்  மகன்  அபயருசி
     மாரிதத்தன்  மன்னனுக்கு  அறம்  உரைக்க  ஆரம்பித்தான்    

62
மன்னனே  உன்  மனதின்  எண்ணம்  மாறியதில்  மகிழ்ச்சியே  தான்
     உயிர்க்கு  உறுதி  பொருளாம்  அருகன்  அறம்  மனதில்  ஏற்று
அனைத்துயிர்க்கும்  கருணை  கொண்டு  உயர்கதிக்கு  செல்வாய்  வேந்தே
     நீ  வினவிய  யாவும்  நான்  வரிசையில்  புகல்வேன்  என்றான்       


இது  முதல்  மூன்று  கவிகளால்  
இவ்வறவுரையின்  பயன்  கூறுகின்றனர்.
63
நெஞ்சில்  நம்பிக்கை  வைத்து  இவ்வறநெறி  கேட்டோர்க்கெல்லாம்
வினைகளின்  ஊற்று  அடையும்  பழைய  வினை  உதிர்ந்து  போகும்
இருவினை  அழுக்கு  நீங்கும்  மெய்வதை  தெரிந்து  தெளியும்
     வீடுபேறடைவதற்கு  மனம்  பக்குவ  நிலையை  அடையும்    

64
மலம்  நிறை  உடலின்  மேலே  மனம்  கொண்ட  ஆசை  அகலும்
     ஐம்புலன்  நுகரும்  ஆசை  அனலிடை  மெழுகாய்  கரையும்
கொலைவதை  கொடுமையெல்லாம்  கதிரவன்  பனியாய்  மறையும்
     நெறிதவர்  மாதர்  மோகம் நீரின்  மேல்  குமிழாய்  அழியும்       

65
இறந்தவர்  பிறந்ததில்லை  இருவினை  ஏதும்  இல்லை
     பிறந்தவர்  முயற்சியாலே  பெரும்பயன்  அடைவார்ரென்றும்
அஞ் ஞான  வாதத்தாலே  அறிவினில்  மயக்கம்  கொண்டோர்
     மயக்கத்தை  விட்டு  நீங்கி  நல்மதி  கொள்வார்  என்றும்        

இளைஞர்  தம்  பழம்பிறப்பு  
முதலியன  அறிந்த  வரலாறு  கூறல் .
66
நற்காட்சி  தவமும்  கொண்ட  நல்லான்மா சுதத்தாச்சாரியார்
     எம்  தந்தைக்கு  அருளினார்  எங்களின்  பிறப்பு  பற்றி
பழம்பிறப்பு  உணர்வால்  மீண்டும்  நாங்களே  அறிந்ததையும்
     இளைஞர்கள்  இயம்பியதை  எல்லோரும்  நம்பி  கேட்டனர்      
    
 முதல்  சருக்கம்  முடிவுற்றது.
  

  
இரண்டாம்  சருக்கம்.


உஞ்சனியின்  சிறப்பு  :
67
வரப்புயர்ந்த  நீர்  வளத்தால்  வயல்கள்  எல்லாம்  செழித்திருக்க
     கன்னலும்  கமுகும்  நெல்லும்  கழனி  எல்லாம்  நிறைந்திருக்க
போகத்தில்  அமரரும்  போற்றும்  அழகிய  அவந்தி  நாட்டின்
     பல  நகரில்  தலைநகரம்  உஞ்சயனி  எனும்  பெருநகரம்    

அசோகன்  சிறப்பு  :
68
கட்டுத்தறிகள்  முறிக்கும்  களிறு  படையுடையவனும்
     இந்திரனே  இடம்  பெயர்ந்து  இந்நகரம்  வந்தது  போன்ற
அவந்தி  நாட்டு  மன்னன்  அசோகன்  என்னும்  பேரரசன்
     சந்திரமதி  மனவியுடன்  தனி  இன்பம்  கொண்டிருந்தான்    

இக்காப்பியத் தலைவனான  யசோதரன்  பிறப்பு  :
69
முழுமதி  பெற்றெடுத்த  இளம்பிறைச்  சந்திரன்  போல்
     சந்திரமதி  பெற்றெடுத்தாள்  தங்கமென  ஒரு  மழலை
மகப்பேறு  இல்லாத்  துயரை  அசோகனின்  மனம்  கலைய
     குலம்  தழைக்கும்  மழலைக்கு  யசோதரன்  என  பெயரிட்டான்

யசோதரன்  மணம்  :
70
நாளொரு  மேனியுமாய்  பொழுதொரு  வண்ணமுமாய்
     மதக்களிறு  போல்  வளர்ந்தான்  மாபெரும்  வீரத்துடன்
திருமகளின்  முழுஅழகும்  சேர்ந்திருந்த  அமிர்தமதியை
     ஔபாசன  விதிப்படியே  யசோதரனும்  கைபிடித்தான்       


யசோமதியின்  பிறப்பு  :
71
இளவரசன்  யசோதரனும்  இளம்  நங்கை  அமிர்தமதியும்
     இல்லற  இன்பத்திலே  இருவரும்  இணைந்து  மகிழ்ந்திருக்க
மங்கையவள்  மணிவயிற்றில்  மன்னன்  குலம்  வளர்வதற்கு
     மழலை  ஒன்று  பிறக்க  யசோமதி  என  பெயரிட்டனர்     

அசோகன்  துறவெண்ணம்  நிறைதல்  :
72
அசோகன்  வழி  வளர  பெயரன்  யசோமதி  பிறந்ததிலே
     ஆனந்தத்தில்  மாமன்னன்  ஆழ்ந்திருந்த  காலத்தில்
கண்ணாடி  முன்  நின்று  தன்  கம்பீர  உருவம்  நோக்க
     மின்னலென  கருங்குழலில்  நரைத்த  முடி  கண்டு  நொந்தான்


இளமை  நிலையாமை  :
73
மலர்  கணையான்  விடும்  அம்பு  மங்கைகளின்  மனம்  மயக்கும்
     காளையரின்  இளமை  கண்டு  கன்னியர்  கண்   நிலம்  நோக்கும்
முதுமை  என்ற  மூப்பாலே  மங்கையர்கள்  சுகம்  இழக்கும்
     இளமையென்றும்  மனிதருக்கு  பழுத்த  இலை  போலகுமென்றான் 


துறவின்  இன்றியமையாமை  :
74
மனிதருக்கு  உடல்  இளமை  மாலை  வீசும்  தென்றலைப்  போல்
     வீசுகின்ற  தென்றல்  என்றும்  நிரந்தரமாய்  இருப்பதில்லை
சுற்றத்தோடு  சொந்தங்களும்  துணையென்று  வருவதில்லை
     நிலையாத  இவற்றை  விட்டு  நிலையான  தவம்  பெரிதே       

75
முற்பிறப்பின்  நல்வினையால்  இப்போது  நான்  முடிமன்னன்
     இப்பிறப்பில்  மும்மடங்கு  நல்வினையை  நான்  செய்தால்
அகமிந்திரலோகம்  சென்று  தேவசுகம்  தூய்ப்பதற்கு
     அருகன்  அறம்  கைகொண்டு  துறவு  ஏற்க  மனம் துணிந்தான்


யசோதரனுக்கு  முடி  சூடல்  :   
76
நிலையாமை  தன்  மனதில்  நிலைபெற்று  நின்றுவிட
     மாமன்னன்  தன்  மகன்  யசோதரனை  உடன்  அழைத்து
மணிமுடியை  சிரம்  வைத்து  மண்ணுலகை  ஆள்க  என்று
     சந்திரமதி  மனம்  வருந்த  தான்  சென்றான்  துறவு  கொள்ள        

அசோகன்  துறவு :
77
வீரக்கெண்டை  அணிந்த  அவந்தி  மன்னன்  அசோகன்
     ஈரைம்பது  அரசர்கள்  எல்லோரும்  பின்  தொடர
மெய்யொழுக்கம்  மெய்யுடைய  மெய்  குணதர  முனிவரை  நாடி
     அறங்கேட்டு  துறவு  கொண்டு  மலையேறி  தவம்  செய்தனர்    
      
யசோதரன்  அரசியல்  :
78
இமைக்கும்  ஒளி  ரத்தினங்கள்  எழில்  தவழும்  அணிகலங்கள்
     நவமணிகள்  பதித்து  செய்த  நகையணிந்த  மேனியோடு
வெண்கொற்ற  குடைநிழலில்  வேற்றரசர்  அடிபணிய
     இருநிலத்து  அரசன்  யசோதரன்  இனிய  ஆட்சி  செய்து  வந்தான்   


மன்னனின்  மனமாட்சி  :
79
செல்வம்  நிறைந்த  யசோதரன்  செல்வச்  செருக்கினாலே
     பொருள்  இன்பம்  ஆசையாலே  அறம்  வீடு  மனம்  நீக்கி
கடுங்காற்று  வீசுவதால்  கடல்  பொங்கி  கலங்குதல்  போல்
     ஆறு  பகை  உள்ளிருக்க  மனங்கலங்கி  வாழ்ந்திருந்தான்    
(6  பகை  :  காமம்,  குரோதம்,  உலோபம்,  மோகம்,  மதம்,  மாச்சரியம் )

80
பணிந்திடா  பகை  அரசர்களை  படை  கொண்டு  வாகைசூடி
     பொன்  பொருள்  நாடுகளை  அடைந்திடும்  வழியை  தேடி
மண்  பொன்  ஆசையாலே  மனதினில்  தினம்  திட்டம்  தீட்டி
     கண்  உறக்கம்  மட்டுமின்றி  மன உறக்கம்  மறந்து  போனான்

81
கனிமொழி  மாந்தர்களின்  கமல  இதழ்  பாட்டு  ஒலிக்க
     பைங்கொடியர்  கையிரண்டும்  யாழ்  எடுத்து  பண்ணிசைக்க
மின்னற்கொடி  அசைவது  போல்  மென்  இடையார்  நடனமிட
     மன்னவன்  யசோதரன்  மயக்கத்தில்  நாள்  கழித்தான்           


யசோதரன்  பள்ளியறை  சேர்தல்  :
82
அரசவைக்கு  வந்திருந்த  அரசர்களை  அனுப்பிய  பின்
     அந்தப்புரம்  நாடி  சென்றான்  ஆண்  களிறாய்  யசோதரன்
அகிற்புகையும்  சந்தனமும்  அறையெங்கும்  மணம்  வீச
     கவரிமுடி  சாமரை  காற்றில்  காத்திருந்தான்  மனைவிக்காக      

அமிர்தமதி  பள்ளியறை  சேர்தல்  :
83
சிற்றடி  சிலம்பு  ஒலிக்க  தேன்மலர்  வண்டிசைக்க
     கைவளை  மென்சிரிப்பில்  இடை  மேகலை  கலகலக்க
கருங்குழல்  பின்  தவழ  நறுமணம்  முன்  நுழைய
     அன்னமென  அமிர்தமதி  நடைபயின்றாள்  பள்ளியறைக்கு         

இருவரும்  இன்பம் நுகர்தல்  :
84
ஐங்கணையான்  விடும்  அம்பு  அடைமழையாய்  மேல்  பாய
     அமிர்தமதி  யசோதரனும்  அடுத்தடுத்து  தழுவிக்  கொள்ள
இருவுடலும்  ஓருயிராய்  இணைய  மென்படுக்கை  அசைந்தொலிக்க
     காமக்கடல்  மூழ்கி  இன்பமுத்து  தேடினார்கள்              

இருவரும்  இன்பம்  நுகர்ந்த  பின்  கண்  உறங்குதல்  :
85
சிலம்பிசையும்  வண்டிசையும்  சிற்றின்ப  யாழ்  இசையும்
     தென்றலென  தழுவிவிட்டு  தாலாட்டுப்  பாடிவர
மன்மதனின்  சினம்  கொட்டி  மருவிய  நல்  கலவியாலே
     மன்னனும்  மடந்தையும்  மகிழ்ச்சியுடன்  துயில்  கொண்டார்      

பண்ணிசை  கேட்டு  அரசி  துயிலெழல்  :
86
களிறு  கட்டும்  சாலையிலிருந்து  காதுக்கினிய  கீதம்  ஒன்று
     அமிர்தமதி  செவி  நுழைய  ஆரணங்கு  கண்  விழித்தாள்
கல்லையும்  கரைத்து  விடும்  கானத்தின்  இன்னிசையால்
     அனலிலிட்ட  மெழுகாக  அரசி  அறநெறி  தவறிவிட்டாள்                             
அரசி  மயங்குதல்  :
87
அவந்தி  நாட்டு  அரசன்  தேவி  அமிர்தமதி  இசையில்  மயங்கி
     செம்பவள  வாய்  சிந்தும்  இச்சிறந்த  இசை  அமிர்தமாகும்
இவ்விசையரசன்  மங்கையர்க்கு  ஈனுகின்ற  இன்பம்  அது
     விண்ணுலக சுகத்துக்கிணை என ஊழ்வினையால் மயங்கலானாள்   

பெண்மையின்  புன்மை  :
88
பெண்பிறவி  எடுத்த  உயிர்கள்  மின்னல்  மனம்  உடையதாகும்
     விழையும்  செயல்  அத்தனையும்  விரும்பி  உடன்  பெற்று  தீரும்
உளத்தூய்மை  அற்று  போகும்  உறுபழிக்கு  அஞ்சாமல்  நிற்கும்
     இத்தகைய  சொற்களுக்கு  இலக்கணமானாள்  அமிர்தமதி
      
குணவதி  என்னும்  தோழி  அரசியை  உற்றது  வினவல்  :
89
செவ்விய  அவ்விரவு  கழிய  தனித்திருந்த  அமிர்தமதி
     இன்னிசை  இசைத்தவனை  இதயத்து  மன்னன்  ஆக்கி
நெஞ்சத்தில்  பதித்த  நேரம்  நெருங்கிய  தோழி  வந்து
     தலைவனை  பிரிந்த  தலைவியாய்  தனித்திருப்பதேன்  என்றாள்   

அரசி  தன்  கருத்தினை  குறிப்பாக  தெரிவித்தல்  :
90
சென்று  விட்ட  முன்  இரவில்  ஒருவன்  செம்பவள  வாயுடன்
     சிந்தையை  மயக்கிவிடும்  தேன்  கொட்டும்  இசை  பாடி
மனம்  என்னும்  மதக்களிறை  கீதம்  என்னும்  அங்குசத்தால்
     குத்தி  துன்புறுத்தி  என்னை  துவளுர  செய்தான்  என்றாள்      

தோழி  அறிந்தும்  அறியாள்  போலக்  கூறல்  :
91
நறுமணக்  கருங்குழலாள்  நற்குணத்தால்  குணவதியும்
     அமிர்தமதி  மனச்செயலை  ஐயமறத்  தெரிந்திருந்தும்
கனவினிலே  கண்ட  பொருள்  உன்  தகுதிக்கு  இழிந்ததென்று
     அறியாதாள்  போல  அவள்  அன்புடனே  கூறி  நின்றாள்             


அரசி  மீண்டும்  தன்  கருத்தை  வெளிப்படையாக  கூறல்  :
92
என்  மனக்  களத்தினிலே  எரிகின்ற  காமத்தீயால்
     நான்  அவனை  கலவி  கொள்ளும்  ஆசையினை  நீ  அறியவில்லை
என்றுரைத்த  செய்தி  கேட்டு  இரு  செவியும்  பொத்திக்கொண்டு
     இந்த  இழிசெயல்  எண்ணம்  உன்  கற்பனையா  என்  கேட்டாள்

அரசி  ஆற்றாமையால்  உயிர்  விடுவேன்  என்றல்  :
93
பண்ணிசை  பாடியவன்  பவளவாய்  அமுதம் பருகி
     பாட்டினை  கேட்டு  மகிழ்ந்து  பரவசம்  அடையேனாயின்
என்  சொல்லை  மறுத்ததனால்  நாமிருவர்  நட்பினேர்  அல்ல
     இசை  கேட்டு  மகிழ்வேன்  இல்லை  எனுயிர்  பிரியும்  என்றாள்


தோழி  பாகனைக்  கண்டு  மீளல்  :
94
மாளவ பஞ்சமம்  இசைத்தோன்  மன்மதன்  போல்  இருப்பானென
     நாடியே  சென்றவள்  அங்கு  நடுங்கினாள்  உருவத்தைக்  கண்டு
பண்ணிசைத்த  அட்டபங்கனின்  பேய்  போன்ற  உருவம்  கண்டு
     களிப்பினில்  மகிழ்ந்து  போனாள் கள்ளக்  காமம்  கழியுமென்று   


தோழி  பாகன்  வடிவம்  கூறல்  :
95
கோப்பெருந்தேவியே  உனக்கு  கொடுந்துன்பம்  தந்த  பாடலோன்
     அட்டபங்கன்  என்னும்  அவன்  அவலட்சண  பாகன்  ஆவான்
கண்டதும்  விழி  தெறிக்கும்  என  கண்களைக்  கரத்தால்  மூடி
     கருத்தினை  தெரிவிக்காமல்  திரும்பினேன்  உமக்கு  அஞ்சி        

96
முடிச்சு  போல்  நரம்புகள்  கட்டி  முகமது  மிகச்  சிறியதாகி
     நடையினில்  கழுதையாகி  நைந்திட்ட  விரலும்  கையும்
குரங்கு  போல்  கூன்  விழுந்து  குழிகொண்ட  கண்களோடு
பற்களின்  வரியும்  சந்தும்  பார்பதற்கு  பேய்  போல்  உள்ளான்

97
குங்குமப்பூ  போன்ற  மேனியாள்  குணவதி  மேலும்  சொன்னாள்
     மெய்யில்  முடை  நாற்றம்  வீசும்  மேனியில்  புண்  சீழ்  வடியும்
சாதியும்  குலமும்  தாழ்ந்து  சரிசமம்  உனக்கு  அவன்  இல்லை
     மனதினை  சிறை  படுத்தி  உன்  மாபெரும்  கற்பை  காப்பாய்    

அமிர்தமதி  ஊழின்  வலியால்  
தன்  மனம்  காதலித்ததை  தோழிக்கு  கூறல்.
98
வலிமையோடு  செல்வம்  அழகும்  வஞ்சியரை  கெஞ்சச்  செய்யும்
     தேவ  இசை  இசைத்து  எந்தன்  தேகம்  எல்லாம்  பரவி  விட்டான்
பழவினையின்  பயனோ  இது  பாவை  என்  நெஞ்சில்  வீழ்ந்தான்
     எக்குறை  இருந்தால்  என்ன  இசைக்காக  அணைபேன்  அவனை

99
காரியம்  தொடங்கும்  முன்பே  காரணம்  பயன்  ஆய்தல்  வேண்டும்
     காரியம்  முடிந்த  பின்பு  ஆய்தலில்  பலனும்  இல்லை
காமத்தின்  கடவுள்  எனக்கு  இப்பாகன்  மேல்  கருணை  தந்தான்
     தாமதம்  ஏதும்  இன்றி  தோழியே  முடித்துவை  என்றாள்  

      
தோழியின்  அச்சம்  :
100
கோப்பெருந்தேவியே  நீ  மலர்  அமர்  தேவியாவாய் – உன்
     காதலின்  அருள்  உடையோன் உயிர்  விடும்  தொழுநோயாளன்
மலர்கணை  காமன்  ஈந்த  இந்த  மாறுபட்ட  சேர்க்கை  எண்ணி
     மனமது  வருந்தினாலும்  நெஞ்செல்லாம்  நடுங்கி  நின்றாள்       

இக்காபியத்தின்  ஒரு  நீதியினை  
ஆசிரியர்  தோழியின்  வாயிலாக கூறுகிறார்  :
101
இல்லற  வாழ்க்கை  தன்னில்  இணைந்திட்ட  ஆண்  பெண்  இருவரும்
     வாழ்க்கையில்  வெறுப்பு  கொண்டு  மனமது  தவத்தைக்  கொள்ள
துறவற  நோன்பு  ஏற்று  தீவினை  அழிக்கும்  நோக்கில் இவளை
     படைத்தான்  பிரம்மன்   என  எண்ணியே  மீண்டும்  சென்றாள்  

102
கொஞ்சும்  மொழியாள்  அமிர்தமதி  குணவதி  கொண்டு  சேர்த்த
     குஷ்டனோயன்  பாகனோடு  காமத்தால்  முதிரப்  பெற்று
தனியிடம்  நாடிக்  கலவி  களித்து  இன்பம்  அடைந்து  வர
     மனைவி  மனமாற்றம்  ஏன்  என  மன்னன்  மனம்  எண்ணியது   

மன்னனின்  பொய்யுறக்கமுணராத  அரசியின்  செயல்  :
103
அவைவிட்டு  வந்த  அரசன்  அருஞ்சினம்  கொண்டவன்  போல்
     படுக்கையில்  வந்து  வீழ்ந்தான்  பொய்  துயில்  கொள்ளலானான்
அரசியோ  அறைக்கு  வந்தாள்  அரசனின்  உறக்கம்  கண்டாள்
     தன் காதலன்  மேல்  ஆசையாலே தனியிடம்  நாடிச்  சென்றாள்  
                    
மன்னன்  மனைவியின்  செயலைக்  காண  பின்  தொடர்தல்  :
104
கள்ளத்துயில்  களைந்து  எழுந்து  கையிலே  வாளை  ஏந்தி
     நடப்பதை  அறிந்து  கொள்ளும்  நெஞ்சத்தின்  ஆசையாலே
மயிலினை  பின்  தொடரும்  மாபெரும்  சிங்கத்தைப்  போல்
     மனைவியின்  பின்  சென்று  மறைவிடத்தில் பதுங்கி  நின்றான்    104

அரசி  தாழ்ந்து  வந்ததற்காக 
பாகன் வெருளல்  : 
105
கடைமகன்  அட்டபங்கன்  காலம்  தாழ்த்தி  வந்த  ராணியை
     கருங்குழல்  பற்றி  இழுத்து  காரணம்  கேட்டு  சினந்து
இருகரம்  ஓங்கி  அடித்து  துடியிடை  மண்ணில்  துவள
     கடுஞ்சின  முகத்தினோடு  கால்களால்  மிதித்து  உதைத்தான்      

அரசி  மூர்ச்சை  எய்தல்  :
106
ராகுவின்  தாக்குதலால்  கலையிழந்த  முழுமதி  போல்
     அடி  உதையால்  மிதிக்கப்பட்டு  தெளிவிழந்த  அமிர்தமதி
பேச்சிழந்து  மூச்சிழந்து  சில  நிமிடம்  தளர்ந்திருக்க
     பாகன்  மனம்  பதைத்து  பாதத்தில்  சிரம்  தொழுதான்          

அரசி  மூர்ச்சை  தெளிந்து  
காலம்  கடந்ததற்கு  காரணம்  கூறல்  :
107

மென்  உடலால்  அமிர்தமதி  மெல்லத்  தெளிந்து  எழுந்து
     மனக்கள்ளக்  காதலனை  களிப்புடனே  நோக்கியவள்
என் மனதின்  நாயகனே  வெஞ்சினம்  நீ  கொள்ளாதே
     அரசன்  அவை  விட்டு  வர  காலம்  கடந்தது  என்றாள்             

அரசியின்  உறுதி  மொழி  :
108
உன்  மீது  கொண்ட  காதல்  உயிர்  தழுவி  சென்றுள்ளது
     உன்னை  விட  இவ்வுலகில்  வேறொருவர்  என்  மனதிலில்லை
உன்னை  நான்  விட்டகலேன்  உறுதியுடன்  பகர்கின்றேன் – என
அட்டபங்கன்  பாகனுக்கு  அமிர்தமதி  சொல்லுரைத்தாள்

மறைந்து  நின்ற  மன்னன்  செயல்  :
109
தன்  தேவி  சொல்லனைத்தும்  தனித்திருந்த  மன்னன்  கேட்டு
     கடுஞ்சினத்தால்  கண்சிவக்க  கை  வீர  வாளெடுக்க
உள்ளுணர்வு  உள்ளம்  எழ  உடைவாளும்  உணர்ந்தது போல்
     தெளிந்த  மனதினனாய்  தன்செயலை  விட்டு  நின்றான்   
 
110
எப்பாவம்  செய்திடினும்  மாதர்  கொலைவதைக்கு  உரியர்  அல்லர்
     அறிவிலா  இப்பாகன்,  ஆண்  என்னும்  பெண்  அனையன்
பகைநாட்டு  மன்னர்களின்  தலைகொய்யும்  இவ்வாளால்
     இழிசாதி  கொண்டோரை  சிரம்  கொள்ளல்  வீரமில்லை  
  
111
இத்தனை  எண்ணங்கள்  இணைந்தன  அரசனின்  இதயத்தில்
     மங்கையர்  மோகம் களைந்தான்  மகளீரின்  போகம்  துறந்தான்
மதகளிறு  போல்  சினங்கொண்டு  மலரணை  வந்து  அமர்ந்து
     இனி  செய்வதை  எல்லாம்  சிந்திக்கத்   தொடங்களானான்      

மன்னன்  காமத்தாலாகும்  தீமைகள்  கருதுதல்  :
112
இழிசெயல்  காமம்  என்றும்  எதிர்மறை  எண்ணம்  வளர்க்கும்
     மண்ணிய  புகழை  அழிக்கும்  வருகின்ற  பழியும்  செழிக்கும்
மானத்தின்  வன்மை  உடைக்கும்  மனதினை  கலங்கச்  செய்யும்
     ஆண்மை குணத்தை  சிதைக்கும்  அழித்திடும்  செல்வம்  எல்லாம்  
   
113
திருமகள்  அனைய  மனைவி  திமிரிய  காமத்தீயால்
     உயர்குடி  பிறப்பை  மறந்து  உயரிய  ஒழுக்கம்  துறந்து
சாக்கடை  புழுவைப்  போல  சாதியில்  கடைமகனுக்கு
     அடிமையாய்  பேணச்  செய்யும்  காமத்தை  விடலே  சிறப்பு     

மண்ணாசை  துறக்க  எண்ணுதல்  :

114
மண்  என்னும்  பெருமடந்தை  மருவினார்க்கு  சொந்தமில்லை
     புண்ணியமும்  நல் வினையும்  சேர்ந்திருந்தால்  உடனிருப்பாள்
கருமவினை  சேரும்  போது  கைவிட்டு  அவள்  பிரிவால்
     மண்  பெண்  ஆசைகளை  மனம்  விட்டு  துறத்தல்  நலமே      

மன்னன்  தன்  உள்ளக்கிடக்கையை  மறைத்திருத்தல்  :
115
உள்ளத்து  துறவு  தன்னை  உடனிருந்தோர்  அறியாமல்
     யசோதரன்  வீற்றிருந்தான்  இன்முகத்தோர்  பணி  செய்ய
முறைப்படி  அரசி  வந்தாள்  மதிமுகப்  புன்முறுவலுடன்
     அரசனின்  பக்கம்  இருந்த  ஆசனத்தில்  அவள்  அமர்ந்தாள்  
    
116
அரசன்  மன  அன்பை  நீக்கி  ஊடலால்  வாடுதல்  போல்
     கருங்குவள  மலரினாலே  கன்னியின்  மேல்  மெல்லடிக்க
அடித்த  அடி  தாங்காதவளாய்  அமிர்தமதி  நடிப்பில்  கீழே  விழ
     பணிமகளீர்  கூடி  அங்கு  பன்னிர் துளியால்  தெளியச்செய்தார்  
 
117
மனதில்  அவள்  துரோகம்  தாக்க  முகத்தில்  பொய்  நகையுடனே
     மலர்  அடியை  மெய்தாங்காமல்  மண்  விட்டு  சென்ற  உயிர்
அருமையாய்  மீண்டதென்று  அரசனும்  மெய்போல்  பரிகாசித்து
     எண்ணத்தில்  துயரம்  தீய்க்க  ஏகினான்  தனிமை  நாடி    

மன்னன்  தாயிடம்  சேரல்  :
118
மன்னனும்  மனதில்  கொண்டான்  மணிமுடியைய்  துறப்பதற்கு
     அன்னையை  நாடிச்  சென்றான்  அவள்  அடியைச்  சேயாய்  தொழ
சந்திரமதி  மகன்  பாசத்தால்  யசோதரனை  உச்சி  மோந்து
     வெண்கொற்றக்  குடை  நிழலில்  நீடூழி  வாழ்க  என்றாள்       

சந்திரமதி  ஐயுறல்  :
119
பவழமாய்  ஒளிரும்  மேனி  பனி  சூழ்ந்த  மதி  போல்  மங்கி
     பால்லொத்த  அழகிய  வதனம் சூல் முகில்  மறைத்த  பரிதியாய்
பெற்றவள்  நெஞ்சம்  தன்னில்  மகன்  துயரில்  உள்ளான்  என்று
     கலங்கிய  மனதினோடு  காரணம்  கேட்டாள்  அன்னை          

அரசன்  அமிர்தமதியின்  செய்கையை  தன்  தாய்க்கு  உள்ளுறையாக தெரிவித்தல்  :
120
மதியோளி  மதியை  விட்டு  மண்ணிருளில்  சேர்ந்தது  போல்
     அன்னையே  இன்றிரவு  கனவில்  அக்காட்சி  கண்டேன் என கூற
சண்டமாரி  கோவில்  சென்று  தேவிக்கு  சிறப்பு  செய்தாயானால்
     தீமைகள்  விலகும்  என்று  அன்னையும்  அவனிடம்  சொன்னாள்
 
121
பூர்வபட்ச  ஐப்பசி  திங்கள்  அஷ்டமி  திதி  செவ்வாய்  அன்று
     தேவிக்கு  நின்  கரத்தால்  சிறுபலி  கொடுத்தாயானால்
காளியின்  கடுஞ்சினம்  தணிந்து  கனிவுடன்  உன்  பலியை  ஏற்று
     ஆசி  உனக்கு  அளித்திடுவாள்  அருந்துன்பம்  மறைந்தே  போகும் 

122
மாதரசி  மகனின்  மேலே  மண்டிய  நல் பாசத்தாலே
     மேலும்  அவள்  மொழிந்தாள்  உயிர்பலி  தருவதற்கு
இளங்குட்டி  ஆடு  ஒன்றை  நீ  நின்  வாளால்  பலி  கொடுத்து
     தேவியின்  அருளப்  பெற்றால்  தீக்கனவு  தீரும்  என்றாள்       

மன்னன்  நெறியறிந்து  கூறல்  :
123
அன்னையின்  மொழியைக்  கேட்ட  அறநெஞ்சன்  யசோதரனின்
     செங்கரங்கள்  செவியை  மூட  செம்மையாம்  மனது  கலங்க
என்  உயிர்  பலனை  நாடி  மண்ணுயிரை  வதைத்தேனாகில்
     காவலன் என்ற பெயர்க்கு கண்ணியம் இன்றி போகுமென்றான்      

124
என்னுயிர்  வாழ்தல்  எண்ணி  எளியவர்  உயிரைக்  கொன்றால்
     விண்ணவரின்  உயர்ந்த  இன்பம்  வரும்  நெறி  நீங்கிப்  போகும்
உடலோடு  உயிர்  நுகர்  இன்பம்  நிலையென  எண்ணி  வாழ்ந்தால்
     மண்ணினில்  மக்கள்  வாழ்வு  மாய்வது  இயல்பு  தானே
                
125
அன்னையே  உன்  குலத்து  முன்னோர்  உயிர்வதை  செய்தாரில்லை
     கொலைவதை  என்றும்  தீமை  உம்  குலவழி  ஒன்றே  நன்மை
இன்று  நாம்  உயிரைக்  கொன்றால்  இடர்பல  தொடர்ந்து  வரும்
     இம்மையில்  இன்பம்  போகும்  மறுமையில்  மோட்சம்  நீங்கும்           

மன்னனை  மாக்கோழி  பலியிடப்  பணிதல்  :
126
மன்னனின்  மறுமொழி  கேட்ட  மறம்  நிறை  மதியாள்  சந்திரமதி
     மனதினில்  கோபம்  கொண்டு  மகனிடம்  கூறலானாள்
உயிர்பலி  தர  அஞ்சினால்  நீ   அரிசி  மாவில்  கோழி  செய்து
தேவிக்கு  பலியை  ஈந்து  சிறப்புகள்  செய்வாய்  என்றாள்             

127
அமிர்தமதியின்  அழுகிய  மனதை  அன்னைக்கு  குறிப்பால்  உணர்த்த
     கனவினை  வகுத்துக்  கூற  அன்னை  கனவுக்கு  சாந்தி  சொல்ல
என்  ஊழ்வினை  உடன்  வந்து  தீவினை  பயக்கும்  நிலையை
     நீக்குபவர்  யாருளர்  என்று  எண்ணினான்  யசோதர  மன்னன்            

128
அரிசிமாவில்  உருவம்  செய்து  அளித்திடும்  பலியும்  கூட
     கொலைவதை  போன்றதாகும்  என  குற்ற உணர்  நெஞ்சனாகி
அன்னை  மேல்  கொண்ட  அன்பால்  அறிவுரை  சொல்வாரின்றி
     உருவக்கொலை  செய்வதற்கு  உள்ளத்தால்  இசைந்தான்  மன்னன்   

129
மாவினால்  செய்த  கோழியை  மன்னன்  கரத்தில்  ஏந்தி
     மறநெஞ்சாள்  தாயினோடு    மாரி வாழும்    கோயில்  சென்று
செவ்வியா  விழா  எடுத்து  சிறப்புடன்  வணக்கம்  செய்து
     தன்  வாளைக்  கையில்  ஏந்தி  கோழியின்  தலையை  கொய்தான்   

மாக்கோழியில்  ஒரு  தெய்வம்  புகுந்து  கூவுதல்  :
130
மாக்கோழி  அழகைக்  கண்டு  வான்  செல்லும்  தெய்வம்  ஒன்று
     உள்ளத்தில்  உவகை  கொண்டு  கோழியின்  உள்ளே  அடைய
அரசன்  தன்வாளால்  வெட்ட   அதன்  தலை  அறுந்து  வீழ
     கூக்குரலில்  கூவித்  துடிக்க  குலை  நடுங்க  வாளை  எறிந்தான்                   

131
மாக்கோழி  உள்ளே  தெய்வம்  மறைந்ததை  அறியா  மன்னன்
     அறமற்ற  அன்னை   சொல்லாலும்  அருளில்லா  தன்  செயலாலும்
மனைவியின்  இழிமனதாலும்  மலர்ந்த  தன்  தீ வினையாலும்
     கோழியின்  வலியக்  குரல்  கொன்றது  மன்னனின்  மனதை     

அரசன்  துறவு  மேற்கொள்ள  விழைதல்  :
132
இறைமன  நினைவுகளோடும்  இருள்  நிறை  மனதினோடும்
     மாநகர்  அடைந்த  மன்னன்  யசோமதிக்கு  முடியை  சூடி
துறவறம்  கொள்ளும்  நோக்கை  கொடியவள்  அமிர்தமதி  அறிய
     மன்னனை  மாய்ப்பதற்கு  மனதினில்  சதியைக்  கொண்டாள் 

133
  மணவறம்  எனை  ஏற்ற  வேந்தே    துறவறம் நீர்  ஏற்பாயாகில்
     உம்முடன்  துறவு  ஏற்க  என்  உள்ளத்தில்  விழைவு  கொண்டேன்
அன்னையும்  நீரும்  மகனும்  என்  கையால்  அமுதம்  கொண்டால்
     அரசுரிமை மகனுக்காகும் அதன் பின்பு  துறப்போம்  என்றாள்      

134
தீவினை  உதயம்  ஆனால்  நயவஞ்சகமும்  நல்நீதியாகும் – என
     மனைவியின்  புழுத்த  மனதை  மன்னனும்  அறிந்து  கொண்டான்
நஞ்சோடு  கலந்த  உணவை  மாமிக்கும்  மணாளனுக்கும்  ஈந்து
     நஞ்சற்ற  உணவை  பிறரொடு  நயமாக  உண்டு  மகிழ்ந்தாள்    

மன்னனும்  தாயும்  விஷத்தால்  
மடிந்து  விலங்கிற்  பிறத்தல்  :
135
நஞ்சது  உடலில்  பரவ  நடுக்கத்தில்  அறிவு  மயங்க
     அஞ்சினர்  மரணத்தாலே  ஆர்த்தத்தியானம்  மனதில்  எழ
தீவினைகள் உயிரில்  சேர்ந்து  ஐம்பொறிகள்  உணர்வும்  கெட
     விலகினார்  இவ்வுலகை  விட்டு  விலங்குகதி  சென்றடைந்தார்     

( தியானம்  4  விதம் : 1.  ஆர்த்தத்தியானம் :  விலங்குகதிக்கு  காரணம். 2. ரௌத்திரத்தியானம் : நரககதிக்கு  காரணம். 3. தர்மத்தியானம் : மனிதர், தேவர்கதிக்கு  காரணம். 4. சுக்லத்தியானம் : மோட்சகதிக்கு காரணம் )


உழையர்  தம்  அரசியை  இகழ்ந்து  வருந்துதல்  :
136
அரசியின்  செயல்கள்  இல்லை  ஆன்றோர்கள்  எண்ணம்  போல
     அரசனாம்  கணவனை  நீங்கி  அவலட்சண  பாகனை  அணைத்தாள்
கொண்டவனுக்கு  விஷம்  கொடுத்து  கொன்ற  கொடும்  பாவியாவாள்
     பெண்களில் கொடிய நெஞ்சாள் என தாதிகள் இகழ்ந்தனரிவளை     


விஷத்தால்  இறந்ததை  அறியாது  
மாக்கோழியை  கொன்ற  பாவத்தால் மரணம்  நேர்ந்ததென்று  
நகர  மாந்தருட்  சிலர்  தம்முட்  கூறிக்கொளல்.
137
தெள்ளியதோர்  உருவம்  அமைத்து  தெய்வமாக  தொழுவார்  என்றும்
     பக்தியில்  பணிந்து  கேட்டால்  பயன்களைத்  தரும்  அவ்வுருவம்
அறிந்தும்  மாக்கோழி  பலியால்  அகாலமரணம்  வந்ததென்று
     மாந்தரில்  சிலர்  கூறலானார்  விஷம்  என  அறிந்திடாமல்       

நகரத்து  அறிஞர்  கூறுதல்  :
138
அறப்பொருளைக்  காணவில்லை  அருந்தவத்தோர் காட்சி  இல்லை
     மறப்பொருளில்  ஆட்சி  செய்து  மங்கையரின்  காமங்கொண்டு
இவ்வுலகப்  பற்றின்  மீது இணையற்ற  ஆசை  கொண்ட
     இந்நகர  மன்னனுக்கு  இயற்கை  மரணம்  இல்லை  என்றார்
      
யசோமதி  முடி  புனைந்து  அரசனாதல்  :
139
மங்கல  முரசு  கொட்ட  மக்களின்  வாழ்த்து  ஒலிக்க
     நவமணி  பதித்த  முடியை  யசோமதி  சிரசில்  ஏற்று
அருகனின்  அறத்தை  விட்டு  அணங்குகளை  அணைத்து  மகிழ்ந்து
     காமமாம்  கடலில்  மூழ்கி  களித்து  இன்பம்  காணலானான்  
   
140
மலர்  மகுட  மாரிதத்தா  வினைகளால்  நேரும்  தன்மையும்
     வேல்விழி  மாந்தர்  இன்பமும்  கொலைவதை  கொண்ட  பாவமும்
பெருநிலம்  ஆளும்  மறமும்  பெறக்கரிய  நற்காட்சி  இன்மையும்
     நெஞ்சினில் நினைவு  கொள்  என  அபயருசி  மேலும்  சொன்னான்   


இரண்டாம்  சருக்கம்  முடிவுற்றது.


   
 மூன்றாம்  சருக்கம்.


யசோதரனும்  சந்திரமதியும்  மயிலும்  நாயுமாய்  பிறத்தல் :
141
அருகன்  நெறி  ஏற்கவில்லை  அகப் புறப்  பற்று  அகலவில்லை
     ஈட்டிய  வினைகளோடு  இருவரும்  இறந்து  போன  பின்
விலங்குகதி  சென்றடைந்து  விலங்கிடை  துன்பம்  கொண்டு
    பல  பிறப்பு  எடுத்த  அவர்கள்  பிறப்புகளைப்  பகருகின்றேன்    
     
 142
விந்தியகிரி  என்னும்  மலையில்  விழி  கவரும்  அழகிய  மயிலின்
வயிற்றினில்  கருவாய்  வந்து  யசோதரன்  வளரும்போது
நாயோடு  வேடன்  ஒருவன்  விந்தியகிரி  மலைக்கு  வந்து
     கூரிய  அம்பைக்  கொண்டு  கொன்றிட்டான்  அம்மயிலை  
      
 143
அம்படி  பட்ட  மயிலின்  அழகிய  உடல்  பிளக்க
     அகவிடும்  மயிலின்  முட்டையை  அரும்பிடும்  மொட்டாய்  எடுத்து
பூங்கொடி  வேடுவச்சியின்  மென்மலர்  கையில்  வைத்து
     புதுக்கோழி  முட்டைகளுடன்  பொரிக்கச்செய்  என்றான்  வேடன்

 144
அவந்தி  என்னும்  அழகிய  நாட்டின்  அரசியான  சந்திரமதி
     தான்செய்த  வினைப்  பயன்கள்  தன்னோடு தொடர்ந்து  வர
உஞ்சயனி  சேரி  ஒன்றில்  ஒளிரும்  கூரிய  பற்களுடன்
     பெண்  நாயாய் பிறப்பெடுத்தால்  விலங்குகதி  சென்றதனால்  
   
145
வளர்ந்தன  அவ்விடத்தில்  வளமுடன்  மயிலும்  நாயும்
     வளர்த்தவன்  எடுத்து  வந்து  வழங்கினான்  மன்னனுக்கு
காமுகன்  வாசம்  செய்யும்  கன்னிகள்  சூழ்ந்த  மனையில்
     அரண்மனை  சுகத்தினோடு  அவையிரண்டும்  வளரலாயின        

146 
மாமன்னன்  யசோதரனாய்  மமதையில்  வாழ்ந்த  மாளிகையில்
     அழகிய  மயிலாய்  வந்து  அஞ்சினான்  ஏவலர்க்கெல்லாம்
பஞ்சினால்  பொதிந்த  படுக்கையில்  பாவைகள்  பாதம்  வருட
     தூங்கிய  யசோதரன்  மயிலாய்  தரையினில்  உறங்கலானான்    


147
ஆவின்  மடி  கறந்த  பாலில்  அருசுவை  அன்னம்  கலந்து
     பசும்பொன்  கிண்ணத்திலிட்டு  பைங்கொடியர்  கொஞ்சி  நிற்க
விருப்பின்றி  உண்ட  மன்னன்  விலங்குகதி  எடுத்ததனால்
     காலத்தில்  கிடைக்கா  உணவுக்கு  காத்திருக்கும்  மயிலாயானான்  

148
ராசமாபுர  ராணி  சந்திரமதி  நல்லறம்  அனைத்தும் நீங்க
     நாய்  பிறவி  இங்கு  எடுத்து  எச்சில்  உணவை  இனிதே  உண்டு
நல்தவ  விரதம்  முற்றும்  அற்று  கொலை  பலி  கொண்ட  மனதால்
     தீவினை  முழுதும்  சேர  தீராத  துன்பம்  அடைந்தாள்          

149
கயமையே  உருவம்  ஆன  காமமே  அறமாய்  கொண்ட
     அழுகிய  மனதை  உடைய  அமிர்தமதி  மறைவாய்  சென்று
அட்டபங்கனை  அணைத்து  அவனிடம்  கலவி  கொள்வதை
     அந்த  இடம்  வந்த  மயில்  அவ்விழிச் செயலைக்  கண்டது 
     
 150
முப்பிறப்பு  உணர்வால்  மயில்  தன்  தேவி  இழிச் செயலால்
     பாய்ந்து  சென்று  கொத்தியது  பாகனின்  கண்கள்  இரண்டை
சினங்கொண்ட  அமிர்தமதி  திரண்ட  ஒரு  கல்  எடுத்து
     மயில்  தலையை  நோக்கி  வீச  மஞ்சை  வீழ்ந்து  மயங்கியது 
       
 151
முன்பிறப்பில்  தாயான  நாய்  முன்னே  ஓடி மயிலைக்  கவ்வ
     கல்லடி  பட்ட  மயில்  கலக்கத்தில்  உயிர்  துறக்க
நாய்கடி  பட்டதாலே  நடுங்கி  மயில்  இறந்தது  என்று
     மன்னனும்  பலகை  கொண்டு  நாயினை  அடித்துக்  கொன்றான் 

யசோதரனாகிய  மயில் 
( 2வது )  முள்ளம்பன்றியாய்  பிறத்தல் :
152
மன்னனாய்  இருந்த  மயில்  மறுபடியும்  மரித்துப்  போக
     முள்ளுடல்  கொண்ட  பன்றியாய்  விந்தியகிரி  மலையில்  பிறக்க
சந்திரமதி  ராணியாகிய  நாயும்  தன் பேரன் யசோமதி கையால்  மாள
     கரும் பாம்பாய்  பிறப்பெடுத்து  விந்தியகிரி  மலையில்  ஊர்ந்தது  

 153
முள்ளம்பன்றி  பசியினாலும்  முன்  பகை  மனதினாலும்
     ஊர்ந்திடும்  பாம்பின்  மீது  முள்ளோடு  உருண்டு  கொன்று
உடலினில்  வலிமை  குன்றி  சோர்வோடு  இருக்கும்  சமயம்
     வெஞ்சினக்  கரடி  ஒன்று  கொன்றது  முள்ளம்பன்றியை
      

மன்னனாகிய  முட்பன்றி 
( 3 வது )  லோகித  மீனாய்  பிறத்தல் :
 154
மன்னன்,  மாமயில்  பன்றியாய்  மாறி  மாறி  எடுத்த  உயிர்
     இருகரை  நீரால்  நிரம்பி  மறுகரை  தெரியா  ஆறும்
உஞ்சயினி  நகர்புறம்  ஓடும்  சிருப்பிரை  ஆற்றின்  உள்ளே
     லோகித  மீனாய்  பிறந்தான்  பிறப்பினில்  மூன்றாதாகி     

     
சந்திர்மதியாகிய  நாகம்  
( 3 வது )  முதலையாய்  பிறத்தல்  :
 155
சந்திரமதி,  நாய்  கருநாகம்  என  சந்தித்த  பிறவிகள்  உயிர்
     சிருப்பிரை  ஆற்றின்  நீரில்  முதலையாய்  பிறப்பெடுத்து
தீவினை  கர்மத்தாலும்  மனதின்  வைரபாவத்தாலும்
     மீனினை  முதலை  விழுங்க  வர  கூனியை  கொண்டது  முதலை 

 156
மும்மலர்  சூடிய  கூனியை  முதலை  ஒன்று  விழுங்கிய  செய்தி
     யசோமதி  செவிக்குச்  செல்ல  முதலையை  கொல்க  என்றான்
மீன்  வலை  கொண்டு  மீனவர்  மின்னலென  விரைந்து  சென்று
     வலையில்  முதலையை  பிடித்து  வாளினால்  வெட்டி கொன்றனர்
  

சந்திரமதியாகிய  முதலை  
( 4 வது )  பெண்  ஆடாய்  பிறத்தல்  :    
157
சந்திரமதி  நாயாய்  பிறந்தாள்  நாய்  இறந்து  கருநாகமானாள்
     நாகத்தை  பன்றி  கொல்ல  முதலையாய்  பிறப்பெடுத்தாள்
மீனவர்  கை  வாளினாலே  முதலையும்  மரித்துப்  போக
     புலையர்கள்  வாழும்  சேரியில் பிறந்திட்டாள்  பெண்  ஆடாக              

 158
மன்னனின்  மூன்றாம்  பிறவி  உலோகித  மீனாய்  மாற
     அறம்  அற்ற  அந்தணர்  சிலர்  அரசன்  யசோமதியை  நாடி
உன்  குல  முன்னோர்கட்கு  உயர்ந்த  ஜீவ  சிராத்தம்  செய்ய
     உன்னத  உலோகித  மீன்  ஒன்று  சிருப்பிரை  ஆற்றில்  என்றனர்    

 159
உயிருடன்  வாழும்  மீனின்  உருப்பினை  கொஞ்சம்  வெட்டி
     யசோமதி  வேந்தன்  புவியை  ஏற்றமுடன்  சிறப்பாய்  ஆள
உள்ளத்தில்  கொடிய  அந்தணர்  ஓமாக்கினியில்  மீனை  வாட்டி
     மீனினை  உண்டு  உண்டு  வாழ்த்தினர்  மன்னன்  குலத்தை
            
            160           
மிஞ்சிய  மீனின்  உடலில்  எஞ்சியே  செல்லும்  உயிரால்
     அவதிக்  ஞானம்  பெற்ற அந்த  மீன்  தன்  பிறப்பறிந்து
என்னுடலை  மெல்லத்  தின்று  எனை  தேவலோகம்  செல்ல  வாழ்த்தும்
     அறமற்ற அந்தணரை  எண்ணி  முற்பிறவி  யசோதரன்  இறந்தான்  


மன்னனாகிய  உலோகித  மீன் ( 4 வது )  தகராய்  பிறத்தல்  :
 161
உலோகித  மீனாய்  பிறந்து  உயிரினை  விட்ட  யசோதரன்
     பெற்றாள்  மீண்டும் விலங்குகதி  பெண்  ஆட்டின்  கருவில்  மலர்ந்து
முட்டும்  ஆண்  ஆடாய்  பிறந்து  முதிர்ந்த பருவத்தை  அடைந்து
     ஈன்ற  தன்  தாயை  அணைத்து  இணைந்தது  உடல்  காமத்தாலே    

தகர்  ( 5 வது )  மீண்டும்  தன்  தாயின்  கருவில்  தகராதல்  :
162
தாயினை  வன் காமத்தாலே  தகரது  புணரும்போது
     அந்த  ஆட்டினை  கூடுதற்கு  அதிசினம்  கொண்ட  ஓர்  ஆடு
தகரினை  தாக்கி  மோத  தகரான யசோதரன்  மாய
     தான்  புணர்ந்த  விந்தினாலே  தாய்  வயிற்றில்  கருவானான்     
( தகர் :  ஆண்  ஆடு )

163
அன்னையின்  கருவில்  சேர்ந்து  கரு  முற்றி  ஆடாய்  வளர
     வேட்டைக்கு  விழைந்து  சென்ற  வாள்  கொண்ட  யசோமதி
வனத்தில்  சினை  ஆட்டைக்  கண்டு  வாளினால்  வெட்டி  கொன்றான்
வயிற்றிலிருந்த  குட்டியதை  புலையனை  வளர்க்க  சொன்னான்
  

யசோமதி  பலியிடும்  செய்தி  கூறல்  :
164
சண்டமாரி  கோயில்  சென்றான்  சக்கரவர்த்தி  யசோமதி ஒருநாள்
     முறைபடி  தேவியை  வணங்கி  மோகத்தில்  வேட்டைக்கு  சென்று
பலவுயிர்  கொன்று  மகிழ்ந்து  படையுடன்  ஆலயம்  வந்து
     எருமையை  பலியாய்  ஈந்து  அம்மனுக்கு  சிறப்பு  செய்தான்  
   
 165
எருமையின்  கறியைக்  கொண்டு  எரிகின்ற  தீயில்  இட்டு
     நின்குல  முன்னோர்கட்கு  சீர்பெரும்  சிராத்தம்  செய்து
ஊனினை  உண்டோமாகில்  உன்குலம்  உயரும்  என்றும்
     வேறுபல  நீதிகள்  சேர்த்து  வேதியர்  விளம்பினர்  வேந்தனுக்கு 
 
 166
கதிரவன்  கடுங்  கதிரினாலே  காய்ந்து உலர்ந்த  ஊனினை
     காகங்கள்  எச்சில்  ஆக்க  கரைந்திட்ட  புனிதம்  தன்னை
யோனியில்  பிறவா  ஆட்டின்  வாயில்  ஊன்  நுகருமாயின்
     மீண்டிடும்  ஊனின்  புனிதம்  தொடரலாம்  யாகம்  என்றனர்     

 167
அந்தணர்  கூற்றைக்  கேட்ட  அரசன்  யசோமதி  சொன்னான்
     அம்பினால்  பிளந்த  ஆட்டின்  அகத்தினில்  எடுத்த  குட்டி
புலையனின்  வீட்டில்  வளர  போய்  அதை  கொணரும்  என்றான்
     வேதியர்  நயந்து  ஏற்று  வேதயாகத்தை  செய்யலானார்     1

 168
நான்மறை  ஓதும்  மறையோர்  யாகத்தை  நன்கு  வளர்த்து
     எருமையின்  ஊனை  எடுத்து இளம் ஆட்டின்  வாயில்  வைத்து
தீயினில்  ஊனை  வாட்டி  தின்றிடும்  வேதியரெல்லாம்
     யசோதர  மன்னனோடு  சந்திரமதியும்  வாழ்க  என்றனர்    


இது  முதல்  ஏழு  கவிகளில் 
யசோதரனாகிய  ஆடு  எண்ணியது கூறப்படும்.
 169
புலயனிடம்  பறித்த  ஆடு  பொங்கும்  தீ  யாகசாலையில்
     பழம்பிறப்பு  உணர்வினாலே  தான்  யசோதரன்  என்றறிந்து
பல பிறவி  எடுத்து இன்று  நற்பிறப்பு  ஆடாய்  நின்று
     இந்நாட்டு  மன்னன்  யசோமதி  என்  மகன்  என்றெண்ணியது

      ( நற்பிறப்பு  ஆடு  :  யோனியில்  பிறவா  ஆடு )

 170
உஞ்சயினி  மாநகரம்  என்  உரிமையான  நந்நகரம்
     இவ்விண்  தொட்ட  மாளிகையோ  நான்  வசித்த  அரண்மனையாம்
பொன்னோடு  பொருள்களெல்லாம்  என்  புழக்கத்தில்  இருந்தனவாம்
     தான்  மட்டும்  ஆடாய்  இருக்கும்  காரணத்தை  எண்ணியது     

 171
தான்  திரட்டிய  செல்வமெல்லாம் தன்  மாளிகையில்  இருக்கிறது
     தான்  வளர்த்திட்ட  களிறும்  பரியும்  தத்தம் சுகத்தில்  திரிகிறது 
தன்  தீவினைப்  பயனினாலும்  தான் சேர்த்திட்ட  கருமத்தாலும்
     தகராக  நான்  பிறந்தேன்  என  யசோதரன்  எண்ணலானான்        

 172
அரண்மனை  காவல்  புரிவோர்  ஆடிடும்  நடன  மாந்தர்
     படையினை  நடத்தும்  தலைவர்  பாடிடும்  இசைப்  பாட்டாளர்
இடும்  பணி ஏவல்  செய்வோர்  என்  அடி  பணியும்  அரசர்
     அனைவரும்  உள்ளார்  இங்கு  ஆடாக  நானும்  உள்ளேன்  இங்கு

 173
அன்ன  மெல்  நடையுடைய  என்  மனைவி  அமிர்தமதி
     நஞ்சினை  இட்டுக்  கொன்று  நடுங்கிடும்  துயர்வுறச்  செய்து
அட்டபங்கனை  அணைத்து  காமத்தில்  களிக்கிறாளோ
       கண்களில்  படவேயில்லை  என  கலக்கத்தில்  எண்ணியதாடு   

 174
முற்பிறவி  யசோதரன்  நான்  இப்பிறவியில்  ஆடாய்  பிறந்து
     பொருத்தமே  சிறிதும்  இன்றி  பொல்லாத  துன்பம்  கொண்டிருக்க
இறச்சியை  உண்ணும்  இவர்கள்  என்னை  வானுலகம்  செல்வதற்கு
     வாழ்த்தினால்  நிகழுமோ  என  இகழ்ந்து  மனம்  வருந்தலானான் 

 175
பேய்  மனது  போதை  மாது  அமிர்தமதி  ஆசைத்  தீயால்
     அமுதத்தில்  நஞ்சு  கலந்து  அரசனாம்  என்னை  கொன்றபின்
தீவினைப்  பயனினாலே  நான்  செய்த  செயல்  அறியேன்  என்றும்
     இனியாது  செய்வதென்றும்  தெரியாது  வருத்தங்கொண்டான்

சந்திரமதியாகிய  பெண்  ஆடு ( 5 வது )  எருமையாகப்  பிறத்தல்  :
 176
  எண்ணில்லா  சிந்தனையில்  யசோதரன்  (ஆடு) மனதிலிருக்க
     ஊழ்வினை  கருமத்தாலே  உறுதுயரில்  நெஞ்சம்  உருகி
தன்  மகன்  யசோமதியின்  மாளிகையில்  நொந்திருக்க
     தன்னைப்  பெற்ற  பெண்  ஆடு  கலிங்கத்தில்  எருமையானது         

 177
கலிங்கத்து  வணிகர்களுடன்  கடும்  சுமையை  முதிகில்  தாங்கி
     நாடு  நகரம்  எல்லாம்  கடந்து  எருமை  நடந்து  திரிந்து  வர
 உஞ்சயினி  நகர்  அருகே  சிருப்பிரை  நதிக்  கரையில்
     களைப்புற்று  தங்கினார்கள்  களைப்பினை  போக்கிக்  கொள்ள   

 178
பாரம்  சுமந்த  உடல்  பட்ட  துன்பம்  நீங்குதற்கு – எருமை
     சிருப்பிரை  ஆற்று  நீரில்  மூழ்கி  களைப்பை  நீக்கிக்  கொள்ள
அரசன்  ஏறும் பரி  ஒன்று  அக்கரைக்கு  வந்து  சேர
     எருமை  அதை  முட்டியதால் குதிரை  உயிர்  விட்டதங்கு          

 179
உடன்  வந்த  ஏவலர்கள்  குதிரை  உயிர்  விட்ட  நிலை  கண்டு
     வேந்தனிடம்  உரைத்தார்கள்  வணிகர்  எருமை  முட்டி  மாய்ததென்று
வணிகர்களின்  பொருள்  கவர்ந்து  அவ்வெருமையை  பிணத்திழுத்து
     என்னிடம்  வருக  என  சினங்கொண்டு  ஆணையிட்டான்        

 180
அரசனின்  ஆணை  ஏற்று  அருள்  ஏதும்  இல்லா  ஆட்கள்
     ஆற்றுக்கு  விரைந்து  சென்று  வணிகர்கள்  பாசறை  கண்டு
வணிகர்கள்  பொருள்  கவர்ந்து  எருமையின்  கால்களைப்  பிணைத்து
     கொணர்ந்தனர்  அரசன்  முன்னே  கொற்றவன்  மகிழ்ச்சியுற்றான் 

 181
காதுகள்  இரண்டை  அறுத்து  காரநீர்  வயிற்றில்  நிரப்பி
     நீரினை  கொதிக்கச்  செய்து  நீண்ட  வாளால்  வயிற்றைக்  கீறி
காய்ச்சிய  இரும்புக்  கோலை  வயிற்றினில்  விட்டு  கடைந்து
     கூர்முள்  சமட்டி  கொண்டு  கொன்றனர்  எருமை  மாட்டை     

 182
அருளற்ற  ராணி  அமிர்தமதி  அவ்வெருமையின்  வெந்த  ஊணை
     வாயினில்  வைத்து  சுவைத்து  வயிற்றினை  நிரப்பிய  பின்
அரண்மனை  வாழும்  ஆட்டின்  தொடையினை  ரசித்து  உண்டால்
     தீர்ந்திடும்  என்  ஆசை  என்று  சேடிக்கு  உரைக்கலானாள்      

இது  முதல்  5 கவிகள்  
ஆட்டின்  அருகே  சேடியர்  பேசிக்கொள்ளுதல் :
 183
கனன்றிடும்  காமநெஞ்சால்  காமனை  ஒத்த  அரசனை
     நஞ்சிட்டு  உயிரைக்  குடித்த  ராட்சசி  இவள்  தன்  என்றும்
மண்ணுலகம்  காணா  குரூபியை  மானிட  நாயாம்  நீசனை
     கலவியால்  கூடிக்  களித்த  கடைமகள்  இவள்தனென்றனர்       

 184
குட்டமாம்  கொடிய  நோய்  குடியிருந்த  மேனியுடைய
     அட்டபங்க  பாகனுடன் அமிர்தமதி  கலவிய  வாழ்வால்
பொன் மலர்  மேனி  கெட்டு  பொங்கிடும்  எழில்  குலைந்து
     குட்டமாய்  நோயில்  வீழ்ந்து  கொடூர  உருவம்  பெற்றாள்      

 185
அழுகிய  நைந்த  உடலும்  அவயவங்கள்  குறையினோடும்
     நீர்  ஒழுகும்  புண்களோடும்  சீழ்முடை  நாற்றத்தோடும்
பால்  வண்ண  மேனியெல்லாம்  பல  நோய்கள்  படர்ந்திருக்க
     திருமகளாய்  இருந்த  ராணி  தெரு  சாகடையாய்  மாறிபோனாள்

 186
முற்பிறப்பின்  தீவினையால்  அட்டபங்கனோடு  சேர்ந்தாள்
     இப்பிறப்பில்  தீயநெஞ்சால்  ஏற்றுவிட்டாள்  குட்ட  நோயை
மறுபிறப்பில்  நரகம்  செல்வாள்  மனமறிந்து  செய்த கொலையால்
செய்த வினை அத்தனையும்  தொடர்ந்திடும்  வரும்  பிறவிதனில்     

 187
தொழுநோய்  விளைத்த  வினையாலும்  தெளிந்த  அறிவு  இன்மையாலும்
     திருவறத்தை  மறந்து விட்டு  தீவினையை  சேர்த்துக்  கொண்டு
திரண்ட எருமை  தசையினையும்  தகரைக் கொன்று  ஊனை  உண்ணும்
     கடைமகளாய்  கழிக்கின்றாள் என  சேடியர்கள் இகழ்ந்துரைத்தார்  


பவஸ்ம்ருதி  அடைந்த  ஆடு  ஆகலின்  
சேடியர்  கூறியதை  அறிந்து வருந்தியது.

 188
சேடியர்  வெளியே  வந்து  சென்றனர்  ஆட்டின்  அருகே
     இதயத்தின்  துயரத்தாலே  இகழ்ந்தனர்  அமிர்தமதியை
தாதிகள்  சொற்கள்  எல்லாம்  யசோதரன்  ஆடு  கேட்டு
     தன்  மரணம்  உணர்ந்ததாலே  தன்வினையை எண்ணி  நொந்தது   

 189
பொருந்திய  மன்னனை வெறுத்து  பாகனை  மகிழ்ந்த  பலனே
     புழுத்திடும்  தொழுநோய்  கொண்டு  தாதியால்  இகழப்பட்டாய்   
துரோகத்தின்  நெஞ்சத்தோடு  நஞ்சால்  மாமியுடன் மகனைக்  கொன்றாய்
     எருமையின்  ஊன்தின்று ஆடான என்னை உண்ணத்துணிந்தாய்   

 190
வஞ்சக  நெஞ்சம்  கொண்ட  விஷக்கொடி  அமிர்தமதியை
     அனல்  தகிக்கும்  உள்ளத்தோடு  ஆண்  ஆடு  அவளை  நோக்கி
மொறு மொறு  என்று  கத்தி  மனதின்  எண்ணத்தைக்  கொட்ட
     இழிந்தவள்  கொல்லச் சொல்ல  இறந்தான்  தகரான  யசோதரன்


எருமையும்  ஆடும் ( 6  வது )  கோழிகளாய்  பிறத்தல்  :
 191
எருமை  ஆடு  உடலை  நீங்கி  உயிரது  பிரிந்த  பின்னே
     உஞ்சயினி  நகரின்  புறத்தே  அமைந்த  புறச்சேரி  தன்னில்
இரு  உயிரும்  கோழியின்  வயிற்றில்  குஞ்சுகளாய்  பிறப்பெடுக்க
     யசோமதி  கண்டான்  அதனை  உள்ளத்தால்  கவர்ந்தான்  உடனே  

 192
குஞ்சுகள்  இரண்டையும்  கண்ட  கொற்றவன்  யசோமதி  உடனே
     சண்டகருமனை  அழைத்தான்  கோழிகளை  வளர்க்க  பணித்தான்
கூண்டுக்குள்  கோழிகளை  வைத்து  கொடுத்திட்டான்  பயிற்சி  அதற்கு
     போர்  திறன்  மிகவும்  கொண்ட கோழியாய் வளர்த்தான்  அதனை  

 193
கூர்  நோக்கு  விழிகளோடும்  கொஞ்சிடும்  அழகிய  சிறகுகளோடும்
     மாணிக்க  மணியாய்  ஒளிரும்  முடியொத்த  கொண்டைகளோடும்
வைரத்தை  ஒத்த  கால்களில்  பொன்னிற  நகங்களோடும்
    போர்  குணம்  நெஞ்சத்தோடு  பொருந்தியே  வளர்ந்தன  கோழிகள்     

மூன்றாம்  சருக்கம்  முற்றிற்று.
             
             
நான்காம்  சருக்கம்.

 194
செந்தளிர்  புதைந்த  சோலை  தேன்மலர்  தூவும்  தோட்டம்
     வண்டுகள்  பாடும்  இசையும்  வளப்பத்தில்  வளர்ந்த  மரங்கள்
மதுவென  பாடும்  குயில்கள்  மயக்கிடும்  தென்றல்  தழுவ
     நறுமணம்  எங்கும்  வீச  இளவேனிற்  பருவம்  வந்தது           

 195
மணங்கமழ்  பூக்களெல்லாம்  மழையென  தூவி  நிற்க
     வளரிளம்  அசோகத்தின்  கீழ்  வசந்த  மண்டப  மஞ்சம்  ஏறி
சுருள்  கருங்  கூந்தலுடனும்  சுந்தர  செவ்விய  வதனத்துடனும்
     பட்டத்தரசி  புஷ்பாவலியுடன்  பாராளும் யசோமதி   இருந்தான்  

 196
யாழ்ழது  மீட்டும்  இசைக்கு  யவ்வனப்  பாவையர்  பாட
     செந்நிற  சிற்றடியோடும்  சிறுகொடி  மென்னிடையோடும்
பொன்வளை  அணிந்த  மகளீர்  புரிந்திடும்  நடனங்கண்டு
     அரசனும்  அரசியும்  இணைந்து  அகமகிழ்ந்து  இருந்தனர் அங்கு   

 197
வளர்மரம்  மலர்  சொரியும்  வளம்  மிகு  வனத்தின்  உள்ளே
     தீவினை  புரியும்  கள்ளவர்கள  தீயன  செய்யும்  விலங்குகளை
மலையன  மார்பன்  சண்டகருமன்  மடக்கியே  விரட்டும்  போது
     முனிவரை  தவத்தில்  கண்டு  முழுவுடல்  பதிய  தொழுதான்      

 198
அருவினை  வெல்லும்  தன்மையை  அகம்  கொண்ட  அகம்பன  முனி
     காலத்தின்  எல்லை  கொண்ட  யோகத்தின்  தியானம்  தெளிய
கூர்முனை  அம்பும்  வில்லும்  தாங்கிய  சண்டகருமன்  வணங்கி
     தியானத்தின்  செயலும்  பயனும்  செப்புவீர்  எனக்கு  என்றான்  

 199
அருள்நிறை  மனதைக்  கொண்ட  அகம்பனன்  மாமுனியும்
     நுண்ணிய  அறிஞர்  எல்லாம்  உணர்ந்திடுவர்  உயிரை  பற்றி
கடையிலா  எண்குணங்களோடு  மூவுலக  உச்சியில்  நின்று
     மோட்சமாம்  வீடடையும்  தன்மையாம் அவ்வுயிர்க்கென்றார்       

 200
அரசனின்  ஆணை  ஏற்று    தண்டனை  தருவது  என்  வேலை
     கள்வனை  இரு  பிளவாய்  கத்தியால்  வெட்டிடுவேன்
பெருங்குற்ற  தண்டனையாயின்  பலதுண்டாய்  வெட்டுவேன்  உடலை
     உயிர்  என்ற  ஒன்றை  மட்டும்  சண்டகருமன்  நான்  கண்டதில்லை  

 201
கள்வனை  கொல்லும்  முன்பே  காண்பேன்  அவன்  உடல் எடையை
     கள்வனை  கொன்ற  பின்பு  எடையினில்  பேதம்  காணேன்
குழியினில்  உயிருடன்  புதைத்து  மூடியே  சிலநாள்  வைத்தும்    
உயிர் சென்ற வழியை காணேன் உயிரில்லை என்று கொண்டேன்   

       முனிவர்  தளவரன்  ஐயத்தைப்  போக்கல் :      
 202
காய்ந்திட்ட  கட்டை  விறகை  கணுக்  கணுவாய்  வெட்டினாலும்
     கட்டையின்  உள்  உறங்கும்  கடுந்தீயைக்  காண்டோரில்லை
கட்டையை  கட்டை  கடையும்  போது  கனல்  எழுந்து  தீயாய்  மாறும்
     உடம்பினில்  உறையும்  உயிரும்  தீக்கடைக்கோல்  போன்றதகும்  

 203
தோல் துருத்தி  பையினுள்ளே  பை  நிறைய  காற்றை  ஏற்றி
     வாயினை  இறுகக்கட்டி எடை  செய்து  நோக்கிய  பின்
காற்றினை  வெளியே  நீக்கி  துருத்தியின்  எடையைக்  கண்டால்
     இரண்டுமே  ஒரே  எடைதான்  இதுபோல்  தான்  உயிரும்  உடலும்   

 204
கடையிலா  எண்குணமும்  கலந்ததே  உயிரின்  இயல்பு
     இயல்பினில்  மாறும்  போது  இருவினை  உயிரில்  சேரும்
நல் தீவினை உயிரில் கலந்து  நாற்கதி  உழன்ற  உயிரையும்
     இயல்பினதான  உயிரையும்  மும்மணி சான்றோர்  அறிவர்        

 205
ஆகமம்  அனைத்தும்  அறிந்த  அறநெறி  முனிவர்  நீங்கள்
     உயிரது  தத்துவத்தை   முற்றிலும் இயல்பில்  அறிந்தோராவர்
ஐம்பொறி  வழியே  செல்லும்  மும்மூடம்  கொண்டோர்க்கெல்லாம்
     அறத்தினை  ஏற்கும்  வழியை எளிமையில்  சொல்வீர்  என்றான்  

  206
உயிர்கொலை, பொய்,  களவும்  பிறன்மனை  சேரும்  செயலும்
     பொருளிடம்  மனதின்  பற்றும்  பொருந்திய  இவ்வைந்தினோடும்
ஊனோடு  தேன்  கள்ளுண்ணாமை  உதறிய  இவ்வெட்டு  நிலையே
     நல்லொழுக்கம்  மனிதர்கட்கு  நாடிடும்  அறத்தை  நோக்கி        

 207
கொல்லாமை  ஆகிய  அறம்  குவலயத்தில்  மன்னன்  மாட்சி  தரும்
பொய்யாமை  ஏற்றோர்க்கெல்லாம்  புவியில்  பொன்  மதிப்பு  தரும்
களவின்மை  கைகொண்டோர்க்கு  விலையில்லா  அருளை  தரும்
     பிறன்மனை  நயவாதோற்கு  பெருமையுடன்  வலிமை  தரும்      

 208
பொருளினில்  பற்றில்லார்க்கு  தெளிந்த  நல்  ஞானம்  கிட்டும்
     ஊண்  தேன்  உண்ணாதோர்க்கு  உயர்ந்திடும்  ஞானம்  என்றும்
கள்ளுண்டு  மயங்காதோர்க்கு  கீர்த்தியும்  புகழும்  கிட்டும்
     இப்பண்புகள்  கொண்டோரை  பல்லுயிரும்  வணங்கிச்  செல்லும் 

 209
திண்ணிய  தோள்கள்  கொண்ட  தளவர  சண்டகருமனே
     இல்லற  தருமம்  இவற்றை  ஏற்று  நீ  மகிழ்  என்று  அருள
கொலை  தொழில்  தவிர்த்து  ஏனை அறங்கள்  அனைத்தும்  ஏற்பேன்
     கொலை  தொழில்  ஒன்றே  எனது பிழைபென  வாழுகின்றேன்

முனிவரர்  மீண்டும்  கூறல்  :
 210
உயிர்களின்  வதையைக்  கண்டால்  உருகிடும்  விழியில்  கண்ணீர்
     தன்னுயிர்  போல்  எண்ணி  அவற்றை  கருணையால்  காத்து  போற்றி
அறப்பயன்  விரதங்கள்  யாவினும்  தலையாய  நோன்பாய்  நினைத்து
     கொல்லா  விரதத்தை  ஏற்று  நடுநிலை  கொண்டு  வாழ்க   
    
 211
இன்றய  நாட்கள்  வரை  இதயத்தில்  இரக்கம்  இன்றி
     உயிர்களை  வதைத்துக்  கொன்று  ஊனினை  உண்டு  வாழ்ந்து
திருவறம்  மனதில்  நீக்கி  தீவினைப்  பெருகச்  செய்தாய்
     அவ்வினை  தீர்வதற்கு  இனி  அகிம்சையே  விரதம்  ஆகுமென்றார்

 212
நிலையில்லா  உடலின்  வாழ்க்கை  நிலைத்தது  என்று  எண்ணி
     கொற்றவன்  ஆணைபடி  கொலைதொழில்  செய்து  வந்தாய்
முடிகொண்ட  வேந்தனுக்கும்  முடிந்திடும்  வாழ்க்கை  சிலநாளில்
     தீவினை  சேர்ந்ததனால்  செக்கு  போல்  கதிநான்கில் உழல்வோம்

 213
ஐயனே  ஒன்று  கேளாய்  சான்று  நான்  ஒன்று  சொல்வேன்
யசோமதி  தந்தை  யசோதரன்  அவன்  தாய்  சந்திரமதியும்
மாக்கோழி  பலியிட்ட  பாவம்  பிறவிதோறும்  பின்  தொடரந்து
     அடைந்திட்ட  பெரும்  துன்பங்கள்  அளவிட்டு  இயம்ப  இயலாது

214
பெருகிய  தீவினைப்  பயனால்  பெருகிடும்  துன்பங்கள்  தாங்கி
     பல  பல  பிறவிகள்  எடுத்து  விலங்கினில்  பிறந்து  சுழன்று
செய்தவினை  இன்னும்  துரத்த  நீ  தாங்கிய  கூண்டு  தன்னில்
     இரு  கோழியாய்  பிறப்பில்  உள்ளார்  யசோதரனும்  சந்திரமதியும்

 215
மாவினால்  செய்த  கோழியில்  உயிர்  ஒன்று  இல்லையாயினும்
     உயிர்பலி  கொடுக்கும்  எண்ணம்  உயிரிடம் கருணை  நீங்க
சிந்தையில்  உவகைக்  கொண்டு  செய்திடும்  பாவ  பாவனை
     மறுமையில்  நரகம்  சேர்க்கும்  என  அருளினார்  அகம்பன முனி  

 216
அகம்பன  முனிவர்  கூற்றால்  அகம்  நடுங்கிய  சண்டகருமன்
     செற்றமும்  சினமும்  நீங்கி திருவறம்  மேல்  காதல்  கொண்டு
இல்லற  விரதம்  யாவும்  முனிவர்  முன்  முழுமனதில்  ஏற்று
     நற்காட்சி  அடைந்தேன்  என்று  அகம்பனரை  தொழுது  அகன்றான்   

( செற்றம் : வைராக்கிய  பகைமை )

 217
அகம்பனர்  அருளிய  மொழியை  அடைபட்ட  கோழிகள்  கேட்டன
     அறிந்தன  அதனதன்  பிறப்பை  உணர்ந்தன  தம்  தீவினையை
சினத்தினை  நீக்கின  மனதில்  சிந்தையில்  அணுவிரதம்  ஏற்றன
     நல்லூழின்  தன்மை  அதனை  சொல்லுதல்  பெருமையன்றோ     

 218
அருகனின்  திருவடி  வணங்கி  அறம்  மேல்  கொண்ட ஆசையலே
     அகமது  குளிர்ந்து  மகிழ  ஆனந்த  கூச்சலில்  கரைய
யசோமதி  மன்னன்  நெஞ்சில்  அவ்வொலி  சினத்தை  எழுப்ப
வில்லினை  கரத்தில்  எடுத்து  வளைத்திட்டான்  அம்பை  எய்ய         


219
கூர்முனை  அம்பினாலே  குரல்  வந்த  திசையை  நோக்கி
     ஒலியினை  மனதில்  பதித்து  ஒன்றிய  குறியினை  பார்த்து
அம்பினை  எய்ததாலே  அறம்  கேட்ட  கோழிகள்  இரண்டும்
     விரைவினில்  உயிரை  இழந்து  உயிர் விரைந்தது  மனிதகதிக்கு       

 220
வசந்ததின்  மயக்கத்திலே  வண்ணமலர்ச்  சோலையிலே
     யசோமதியும்  புட்பாவலியும்    அமர்ந்து  இன்பம்  தூய்த்த  பின்பு
அரண்மனை  அடைந்து  அவர்கள்  அகம்  தழுவி  வாழ்ந்த  நாளில்
     இரட்டைமகவு  பெற்ற  பின்னர்  ஓர்  ஆண்மகவை  பெற்றிட்டார்கள்   

 221
இரட்டையரில்  முன்  பிறந்தவனை  அபயருசி  என்றழைத்தனர்
     அடுத்து பிறந்த  பெண்மகவு  அபயமதி  என  பெயர்  கொண்டாள்
அபயருசி  அபயமதி  இருவரும்  அடியெடுத்து  வளரும்  போது
     இளங்குமரன்  வந்துதித்தான்  இயசோதரன்  எனும்  பெயரில்     

 222
அரசன்  மகன்  யசோதரன்  அரச  கல்வி  பயிலலானான்
     குதிரை  யானை  ஏற்றமதை  குலத்தொழிலாய்  கற்கலானான்
எட்டெட்டு கலைகளோடு  வாள்போரில்  வல்லவனாய்
     நிலம்  அதிர  ஓடும்  தேரின்  சூட்சமத்தில்  சூரனானான்         

 223
நூலினால்  அமைத்த  வலையும் நுண்ணிய  கருவிகளோடு
     நால்வகைப்  படைகள்  சூழ  வேட்டைக்கு  பொருள்களோடும்
நடுநிலை  நின்று  செய்யும்  நமனை  ஒத்த    யசோமதி  வேந்தன்
     வேலாயுதம்  கையில்  கொண்டு  வேட்டைக்கு  விரைந்திட்டான்   

 224
உயிர்களுக்கு  நன்மை  செய்யும்  திருவறம்  நல்கும்  சுதத்தர் முனி
     இருவினைகள்  அறவே  அழிக்கும்  ஆற்றலுடைய  சிரேஷ்டர் அவர்
மதகளிறு போல்  தனித்து அங்கு பிரதிமா  யோகத்தில்  நிற்க
     சகுனத்தடை  என  எண்ணி  சினம்  கொண்டு  இழிவு செய்தான் 

 225
வனத்தினில்  ஒரு  விலங்கும்  விழிகளில்  காணவில்லை
     வேட்டைக்கு  சென்ற  வேந்தன்  வேட்டையில்  தளர்வு  கொண்டான்
வெஞ்சினம்  முனிமேல்  கொண்டு  வேங்கையாய்  திரும்பி  வந்தான்
     கொல்லுவேன்  முனியை  என்று  கோபத்தில்  இரையலானான்   

 226
அருள்மழை  பொழியும்  நாதன்  அறமுனி  சுதத்தரின்  மேல்
     சினம்  மிகு  கொண்ட மன்னன்  சிவந்த  அவர்  மேனி  சிதைக்க
வேட்டைக்கு  அழைத்து  வந்த  வேட்டைநாய்  ஐநூறையும்
     ஏவினான்  முனியின்  மேலே  இரக்கமே  இல்லா  மனதால்      

 227
திருவறப்  பெருமைதனை  தினம்  உபதேசம்  செய்யும்
     தவத்தினை  மனதில்  ஏற்று  இருவினைகள்  அழித்து  நிற்கும்
முனிவரை  அணுக  அஞ்சி  ஒருவில்  தொலைவில்  நிற்க
     கருநிற  நெஞ்சன்  யசோமதி கத்தி  எடுத்தான்  முனியை  கொல்ல


இது முதல்  நான்கு  கவிகளில்  
வணிகன்  முனிவர் சிறப்பை  உரைத்தல் :
 228
மனமது  ஒத்த  நண்பன் மேனியில்  இளமை  கொண்டோன்
     குணத்திலே  குன்றை  ஒத்தான்  சொல்லிலே  வன்மை  வாய்ந்தோன்
கல்யாணமித்திரன்  எனும்  கடும்  ஆற்றல்  உடைய  வணிகன்
     மன்னனின் எதிரில்  வந்து  மாற்றினான்  மன்னன்  செயலை      

 229
வெற்றியே  மாலையாய்  அணிந்த  வீரவாள்  ஏந்திய  வேந்தே
     தருமமாம்  பெரிய  மலையை  தவத்தினால்  தாங்கி  நிற்கும்
இல்லறப்  பற்றுகளோடு  எண்வினைகள்  அறுத்த  முனியை
     வணங்குதல்  முறையை  விட்டு  வாளினால்  கொல்லல்  தகுமோ 

 230
வான்மழை  போல்  செல்வமதை  வழங்குகின்ற  வள்ளல்  வேந்தே
     வான்மழையை  தரை  கொணரும்  வலியதவம்  பெற்றவர்  இவர்
வாய்  திறந்து  அருள்  மொழிந்தால்  எப்பொருளும்  விருத்தி  கொள்ளும்
     கெடுக  என  மனம்  நினைத்தால்  கெட்டொழியும்  அத்தனையும்  

 231
வேண்டுதல்  வேண்டாமையின்றி  வெவ்வினைகள்  வென்ற  இவர்
     அருள்  நிழலை  மக்களுக்கு  அளிக்கின்ற  விருட்சம்  இவர்
அடிபணிந்து  தொழுவோர்கள்  அமரலோகம்  சென்றடைவர்
     வெறுப்புடன்  இகழ்வோர்கள்  வெந்நரகில்  வீழ்ந்து  உழல்வர்     

 232
விண்ணுலக  தேவர்  எல்லாம்  விரும்பி  வந்து  பணிந்திடினும்
     உன்னைப்  போல்  அறமிழந்தோர் ஊறு பல  அவர்க்கு  தந்திடினும்
அந்த  செயல்கள்  அத்தனையும்  அவரவர்  தம்  வினையென்று
     தன் மனதில்  நினைக்கின்ற  தவத்தரசர்  இம்  முனிவர்            

 233
வெற்றிவேல்  கையில்  கொண்ட  வேங்கை  நிகர்  காவலனே
     தரணிவாழ்  உயிர்கள் எல்லாம்   தம் உயிராய்  கொண்ட இவரின்
திருவடிகள்  நீ  வணங்க  உன்  தீவினைகள்  அகன்று  போகும்
     அறம்  நினைத்து  வணங்கி  நீ  ஆன்மநலம்  பெறுக என்றான்    

 234
வணிகனின்  சொல்லைக்  கேட்ட  அவந்தி  மன்னன்  யசோமதி
     வாளினை  உரையில்  இட்டு  கடுஞ்சினம்  கரையப்பட்டு
புழுதி  மிகப்  படிந்திருக்கும்  கருமுகில்  மேனி  கொண்ட
     முனிவர்  இவர்  யாரென்றும்  முனி  வணக்கம்  வினவு  என்றான்

 235
கலிங்க  நாட்டின்  மன்னன்  கங்கை  குலத்  திலகன்  இவர்
     வேற்றசர்  நெஞ்சினிலே  பயத்தை  வேரொடச்  செய்த  மன்னன்
இவ்வுலக  உயர்ந்தோர்  எல்லாம்  இவர்  அடி  தொழுதிடுவார்
     சுத்த  ஆத்மா  கொண்ட  சுதத்த  மாமுனிவர்  இவர்              


இது  முதல் ஆறு கவிகளால் வணிகன் அரசனுக்கு  முனிவர்
பெருமையை  தெரிவிக்கிறான் 
 236
போகமும்  பொருளும்  போகும்  பொன்கதிரோன்  கண்ட  இருளாய்
     இளமையும்  இன்பம்  மறையும்  இடி  எழுப்பும்  மின்னலை போல்
நிலவுலகில்  இருக்கும் அத்தனையும்  நிலையாமை  கொண்டதுதான்
     வீடு  பேறு  அடைவதற்கு  துறவு ஒன்றே  எனத்துணிந்தான்      

 237
மணிமுடி  துறந்தனன்  மாலைகள்  நீக்கினன் 
     கார்குழல்  போக்கினன்  காதணி  கழற்றினன்
ஆடைகள்  அகற்றினன்  அரசியை  மறந்தனன்
     திகம்பர  உருவுடன்  திருவறத்  துறவியானான்              

 238

வானுலக  தேவர்களும்  மண்ணுலக  மன்னர்களும்
     வந்து  வணங்குகின்ற  வலிய  தவ  கோலம்  பூண்டு
உள்ளத்தில்  பற்று  நீக்கி  உயிர்களிடம்  கருணை  கொண்டு
     துறவிகளின்  நியமப்படி  சரியை  ஏற்று  செல்லலானார்     

 239
தவத்தினில்  மனதை  ஊன்றி  தலை  சிறந்த  தபஸியாகி
     தாங்கிய  தன்  திருமேனியை  தன்  உடல்  இல்லை  என்றும்
உடலினை  போற்றாதவனாய்  உயிரினில்  தீவினை  நீக்கி
     ஞானமாம்  ஒளியைப்  பெற்று  மும்மணியை  நாளும்  அணிந்தான் 

 240
ஒப்பிலா  இவர்  தவத்தினாலும்  ஓங்கிய  நல் அறத்தினாலும்
     ஏவிய  நாயகள்  எல்லாம்  அவர் முன்  எட்டடி தள்ளி  நின்றன
கடுந்தவமுனியை  நீ  கண்டதாலே  கொலைவினை  நீங்கி  நின்றாய்
     தீவினைக்  குற்றங்களும்  உனை  தீண்டாது  காத்துக் கொண்டாய்

 241
வணிகனின்  கூற்றைக்  கேட்டு  வேந்தனின்  மனதும்  மாற
     முனிவரின்  அருகில்  சென்று  மென்னடியில்  சிரசை  வைத்து
தான்  செய்த  பிழைகள்  எல்லாம்  தன்னை  விட்டு   நீங்குதற்கு
     தன்  சிரம்  கொய்து  அவர்  திருவடியில்  வைக்க  எண்ணினான்

 242
மன்னனின்  மனதின்  ஓட்டம்  மாமுனிவர்  அறிந்து  கொண்டு
     தற்கொலை  தடுக்காதாயின்  தன்னை  அப்பாவம்  சேரும் – என
யோகத்தை  கலைந்த  முனிவர்  மன்னனின்  செயலைத்  தடுக்க
     வேந்தே  உன்  எண்ணம்  தனை  விரைவினில்  விடுவாய்  என்றார்   

 243
எனைக்கொல்ல வந்த  பிழையும்  தற்கொலை என  தவறிய  பிழையும்
     மாபெரும்  பிழைகளாகி  தீவினையாய்  படிந்திடும்  உயிரில்
தன் மனம்  எண்ணிய  செயலை  தவநெறி  முனிவர்  அறிந்து  சொல்ல
     அரசனும்  அவரை  வணங்கி  முன்னோர்கள்  பிறப்பை  கேட்டான்

 244
யசோத  மன்னனே  கேள்  உன்  பாட்டன்  அசோக  அரசன்
     நல்வினைகள்  படிந்ததாலும்  நற்காட்சி பெற்றதாலும்
பிரம்ம கல்ப  தேவனாகி  பத்து  கடற்கால  வயதில்
     தெய்வ மகளீர்  பணி  செய்ய  திகட்டாத  இன்பம்  கொண்டான் 

 245
உன்  அன்னை  அமிர்தமதி  உள்ளத்தில்  கபடத்தால்
கணவனையும்  அவன்  தாய்யையும்  கடும்  நஞ்சு  இட்டு  கொன்று
அட்டபங்கன்  பாகனோடு  அழியாகாமத்தால்  கலவி கொன்டு
     தொழுநோய்  உடல்  பரவ  துஞ்சி  ஐந்தாம்  நரகடைந்தாள்      

 246
உன்  தந்தை  யசோதரனும்  உன்  பாட்டி  சந்திரமதியும்
     சண்டமாரி  கோயிலிலே  மாக்கோழியை  பலி  தந்து
மனதில்  உயிர்  பலி  என்ற மாபெரும் தீவினை    பயனினால்
     பல  பிறவி  எடுத்து  இன்று  அபயமதி அபயருசி  ஆனார்கள்     

 247
அருந்தவ  முனிவர்  சொன்ன  அத்தனையும்  மன்னன்  கேட்டு
     அகமது  மிகவும்   சோர்ந்து  அஞ்சியே  நடுங்கி  நின்றான்
தீவினை  மனதில்  சேர  தினம்  பல உயிர்   மடிய
     காரணமான  நான்  கடும்  நரகம்  செல்வேனோ  என்றான்      

 248
மாக்கோழி  பலியிட்டோர்கள்  மருவின்னர்  பல  ஜென்மங்களை
     உயிர்களை  வதைத்த  எனக்கு  உரிய  துன்பங்கள்  என்ன –என
மனமது  கலங்கிய  யசோமதி  மாமுனிவர்  பாதம்  தொழுது
     அருகனின்  அறத்தை  அருளி  அபயம்  அளியுங்கள்  என்றான்    

 249
மோக  மயக்க  மனதினாலே  முறையற்ற  செயலைச்  செய்து
     ஆன்மனில்  கறையாய்  படிந்த  தீவினைகள்  கரைந்து  போக
ஆகம  நெறி  விலகாமல்  அணுவிரதம்  ஏற்று  நடந்தால்
     எண்வினை  கலந்த  உயிரில்  தீவினைகள்  உதிர்ந்து  போகும்         

 250
அருள்  கொண்ட  மனதினாலே  அபயதானம்  உயிர்க்கு  நல்கி
     கொலை  களவு  காமம்  பொய்யை  குற்றமாய்  புறத்தே  நீக்கி
கடும்  பொருள்  பற்று  போக்கி  காதி  இருவினைகள்  தள்ளி
     திருவறத்தை  ஏற்போமாயின்  தேவகதி  செல்வது  உண்மை       

 251
சுதத்தமுனி  அருளிய  மொழியால்  திருவறத்தை  மன்னன்  ஏற்றான்
     நண்பனை  புகழ்ந்து  போற்றி  நாட்டோரிடம்  தன்  பிழைக்கு  வருந்தி
மணிமுடியை  மகனுக்கீந்து  மற்ற  நாட்டு  அரசர்களுடனும்
     நண்பனுடனும்  மன்னன் ஏற்றான்  நல்வினைக்கு  தீட்சை  தன்னை  

 252
தந்தையின்  துறவைப்  போற்றி  அபயருசி  அரசியல்  ஏற்றான்
     துறவறம்  மேல்  கொண்ட  காதலால் தம்பிக்கு  அரசைத்  தந்தான்
அண்ணனும்  தங்கையும்  சேர்ந்து  அருகனறம்  ஏற்பதற்கு
     நாடினார்  வனத்தை  நோக்கி  சுதத்தரிடம்  துறவு  தீட்சை  ஏற்க 

 253
தவவேந்தர்  சுதத்தமுனியின்  தாள்களை  தாழ்ந்து  வணங்கி
     செறிதவம்  வழியே  செல்ல  தீட்சையை  அருளிட  வேண்ட
தங்கள்  ஆற்றலுக்கு  ஏற்றவாறு  பதினோறாம்  நிலையை  ஏற்று
     சுல்லக  வேடம்  கொண்டு  சரியை  மேற்கொள்  என்றார்       


254
எம்  குரு  ஆணை  ஏற்று  சரியைக்கு  வந்த  எங்களை
தங்களின்  ஆணை  ஏற்ற  சண்டகருமன்  பிடித்து  வந்தான்
மாக்கோழி  தந்த  பலியால்  மாளாத  துயரில்  வெந்தோம்
  நீ  செய்யும்  கொலைகளாலே  உம்  நிலை  எண்ணி நொந்தோம்   

 255
அபயருசியின்  அருளுரையாலே  மாரிதத்தன்  மனது மாறினான்
     மங்கையர்கள்  தரும்  சுகத்தை  மறம்  என  மனதில்  போக்கினான்
அழித்திடும்  தீயென  எண்ணி  அரசினை  அறவே  துறந்தான்
     தன்  மகன்  புட்பதந்தனுக்கு  பொன்முடி  சூட்டி  நீங்கினான்     

 256
துறவற  தீட்சை  ஏற்க   சுதத்த  மாமுனியை  நாடி
     எட்டங்க  தொழுகை  செய்து  ஏற்றிட்டான்  தீட்சை  தன்னை
அருகனின்  அறத்தை  ஏற்று  ஐம்புலன்  அடக்கி  ஆண்டு
     மண்ணுலகம்  விட்டு  நீங்கி  விண்ணுலக  தேவன்  ஆனான்      

 257
அண்ணனும்  தங்கையுமான  அபயருசி  அபயமதியும்
     அருந்தவர்  சுதத்தமுனியால்  தங்களின்  ஆயுள்  அறிந்து
நவின்ற  நற்குணங்களை  ஏற்று  நற்காட்சி  நல்லொழக்கத்தலே
     ஈசான  கல்பலோகத்தில்  தேவனாய்  பிறப்பெடுத்தார்கள்    

 258
­
பொன்முடி  சிரசில்  அமர  செவியினில்  குண்டலம்  ஒளிர
     நவமணி  மாலைகள்  மார்பில்  நட்சத்திரமாய்  ஜொலிக்க
கால்களில்  வீரக்கழலும்  கைகளில்  அஸ்தகடங்களும்
     செவ்விய  பல  அணிகலங்களுடன்  தேவனாய்  பிறந்தனர்  அங்கு

 259
மலர்மழை  இதமாய்  தூவ  மாலை  இளந்தென்றல்  வீச
     தேவதுந்துபிகள்  எல்லாம்  தேனிசை  மிதமாய்  இசைக்க
அளித்திடும்  இசைக்கு  ஏற்ப  அரம்பையர்  நடனம்  ஆட
     சாமான்ய  தேவர்கள்  எல்லாம்  திசைதோறும்  வந்து  வணங்கினர்

 260
அருகனின்  அறநெறி  எல்லாம்  திருவறம்  கொண்டதாகும்
     அஞ்சிடும்  வினைகள்  எல்லாம்  அவ்வறம்  இனிதே  வெல்லும்
ஐம்புலனை  அடக்கி  வைக்கும்  அழியாத  மோட்சம்  தரும்
     அத்தனை  அறங்களையும்  இந்நூலில்  காண்பீராக          

     
    
 யசோதர  காவியம்  முற்றும்.


No comments:

Post a Comment