தமிழ் நூல்
பதிப்புக்களைப்பற்றி ஆராய்வதும் விவாதிப்பதுமான ஒரு நல்ல சூழல் இக்காலத்தில்
உருவாகி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆய்வாளர்கள் சங்க இலக்கியத்தையும்
தொல்காப்பியத்தையும் பற்றித் தான் கவனம் செலுத்துகின்றார்கள். பிற தமிழ் நூல்களைப்
பற்றி எழுதுவது மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் நாம் கவனம் செலுத்த வேண்டிய தமிழ்
நூல்கள் ஏராளமாக உள்ளன.
அத்தகைய இலக்கிய,
இலக்கண நூல்கள்தான் தமிழ் மொழிக்கு
ஒரு நீண்ட வரலாற்றை உருவாக்கித் தந்து, மற்ற இந்திய மொழிகளிலிருந்து தமிழின் தனித்தன்மையை நிறுவிக் காட்டுபவையாக அமைத்த பெருமை
சமணர்களைச் சாரும். அத்தகைய
நூல்களுள் ஒன்று ‘யசோதர
காவியம்’. யசோதரன் சரிதம்
தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஞ்சிறு
காப்பியங்களில் யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக
குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ‘காவியம்’ என்ற பெயரால்
சுட்டப்படுகின்றன. எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு சுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் ‘காவியம்’ என்று பெயர் பெற்ற இம்மூன்றின் காப்பியக்
கட்டமைப்பு மற்றும் கலைச் சிறப்பு சூளாமணி, நீலகேசி ஆகியவற்றை விடக் குறைவு என்பது
குறிப்பிடத்தக்கது.
வடமொழியில் வாதிராஜர்
இயற்றிய யசோதர சரிதத்தின் மொழி பெயர்ப்பு எனத் தெரிகிறது. அதனால் இதன் ஆசிரியர் வடமொழிப் புலமை
கொண்டவர் என்பதை உணரலாம். இக்காப்பியத்தலைவன் யசோதரன் இருபத்து
நான்கு தீர்த்தங்கரர்களில், இருபதாவது ஜினரான முனுசூவ்ரத நாதர்
காலத்தவன் என்பது யசோதர சரிதம் என்ற நான்கு சருக்கங்களில் அடங்கிய இதிகாஸ காவியத்தில்
கூறப்படுகிறது.
கதை சில
படைப்புகளில்மட்டுமே இடம் பெறுகின்றது. ஜைன புராணங்களில் உத்தர புராணத்தை
ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர
புராணத்திலும்இக்கதைதென்படவில்லை. சிலர்வடமொழிபத்மபுராணத்தில்உள்ளதாகதெரிவிக்கின்றனர். ஜீவதயாஷ்டமிநோன்புக்கதையிலும்இவ்யசோதரன்கதைகாணப்படுகிறது.
நூல் வரலாறு
யசோதரன் சரிதத்தை
வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி
என்பார். இவர் யசஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். ‘யசோதர சரிதம்’ என்ற பெயரில் வாதிராஜ சூரியும், பூர்ண தேவர் என்பாரும் யசோதர
காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின்
காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப்
பட்டுள்ளதாகக் கூறுவர்.
தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு
நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும்
அக்காவியத்தைப் படைத்தது போல, வடமொழியில் ‘யசோதர சரிதம்’
படைத்த,பத்தாம்நூற்றாண்டில்வாழ்ந்த, வாதிராஜ
சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்பதுபலதமிழ்ஆராய்ச்சியாளர்களின்கருத்தாகும்.
ஜைன்பீடியா (JAINpedia)
என்ற இணையதளத்தில்
யசோதர காவியம் பற்றிய செய்திகள் உள்ளன. ராய்து என்றகவிஞரால்
15ம்நூற்றாண்டில்
நீர் வண்ணத்தால்
(watercolour) காகிதத்தில் ஆக்கப்பட்டுள்ளது. இடது புறம் படங்களுடன் கதை வலது புறமாக விளக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இவர் வாழ்ந்திருப்பதாக
சொல்லப்படுகிறது. 36 பக்கங்களில் கதை முழுவதுமாக
சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபப்ரம்சா (Apabhraṃśa Prākrit) பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கிலேயரால் லண்டனுக்கு
கொண்டு செல்லப்பட்டு, தற்போது வெல்கம் நூலகத்தில் (Wellcome Library, London.) வைக்கப்பட்டுள்ளது. திகம்பர பிரிவினரின் பேராக்கமாக
அதனை சுட்டுகின்றனர். கதை யமைப்பில் சற்றுமாறுதல்
இருப்பினும் தமிழில் கருத்தும் காட்சியும் மாறாமல் படைத்துள்ளனர்.
அந்த நூலின்
பதிப்பு வரலாறு சுவாரசியமானது.
சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம் ஆகிய இந்நூல்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று தமிழ் மரபில் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சூளாமணி,
நீலகேசி, யசோதர காவியம் ஆகிய மூன்றும் முழுமையாக நமக்குக்
கிடைத்துள்ளன.
நீலகேசி நூலுக்கு ‘சமய திவாகர முனிவர்’ என்பவர் எழுதிய பழமையான உரையும் கிடைத்துள்ளது. இந்த
உரை இந்தியத் தத்துவங்கள் என்று சொல்லப்படுகின்ற பல பொருள்களைப் பற்றி மிகவும்
முற்பட்ட காலத்திலேயே விமர்சனத்துடன் விவாதித்துத் தமிழ் மொழியில் எழுதப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
சூளாமணியின்
கவிதைச் சுவை சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
போன்றவற்றிற்கு ஈடானது என்றும், சில பகுதிகள் அவற்றைவிட மேலாகவும் உள்ளது என்றுபன்மொழிப்புலவர் தெ. பொ.
மீனாட்சிசுந்தரம்போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யசோதர காவியம்
காஞ்சிபுரம் பாகுபலி நயினார் என்பவரால் முதன்முதலாக அச்சிடப்பட்டு வெளிவந்தது.
அச்சிடப்பட்ட ஆண்டு 1887,
என்று ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரையுடன் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1944-ஆம் ஆண்டில் வெளியிட்ட முதல் பதிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதே
நிறுவனம் ஐந்தாவது முறையாக வெளியிட்ட 1982ஆம் பதிப்பில் 1881 என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வீடுர், பூரணச்சந்திர சாஸ்திரி பதிப்பில் முதல் பதிப்பு பாகுபலி நயினாரால் 1869-இல் வெளியிடப்பட்டதாகக் குறிப்பு உள்ளது.
1908இல் இந்நூலை
இரண்டாவது முறையாகப் பதிப்பித்த தில்லையம்பூர் வேங்கடராம ஐயங்கார் பதிப்பில் முதல்
பதிப்பைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை.
பவானி, இராதாபுரம், வீடூர் ஆகிய மூன்று ஊர்களிலிருந்து கிடைத்த
ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து இந்நூலை வெளியிட்டார் வேங்கட ராம ஐயங்கார்.
எந்தச்
சுவடியிலும் பாடல்களுக்கான உரைகள் இல்லாததால் மூலபாடத்தை மட்டும் அச்சிட்டுள்ளார்.
இந்நூல் கூறுகின்ற கதையை சுமார் 50 பக்கங்களில் தெளிவாக எழுதி உள்ளார். செய்யுள் முதற்குறிப்பு அகராதி, பாடபேதம், அபிதான விளக்கம் என்ற பெயரில் நூலுள் வருகின்ற ஊர்ப்பெயர்கள்,
மக்கள் பெயர்கள், இடப்பெயர்கள் போன்றவற்றிற்கு விளக்கம்
கொடுக்கின்றார்.
இந்த நூலுக்கு ஒரு அழகான சிறு முன்னுரையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளவர் ஆர்தர் மாத்யூஎன்ற ஆங்கிலேயர். இவர் தமிழ் மொழியின்
மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர் என்றும், எனவே அவருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.
நூலில் உள்ள
பதிப்புரை மிகவும் வித்தியாசமானதாகவும், வியப்பூட்டுவதாகவும், இக்காலத்தில்
பார்ப்பன அறிஞர்களைப்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துக் களைத் தகர்ப்பனவாகவும்
அமைந்துள்ளது. வேங்கடராம ஐயங்கார் பதிப்புரையில் சில பகுதிகள் :
1. தமிழ் மொழிக்கு
மேன்மையும் அழகும் சேர்க்கும் நூல்கள் சமண சமயம் சார்ந்தவைதான்.
2. தமிழர்களின்
கருத்தியலை வெளிப்படுத்தும் நூல்கள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்றவைதான்.
3. சமணர்களைக்
கழுவேற்றியும், செக்கிலிட்டும்
கொன்றவர்கள் திருஞானசம்பந்தரும், இராமானுசரும் தான். இத்தகைய பாதகச் செயல்களால் சமண சமயத் தமிழ் நூல்களில் பல
அழிந்தொழிந்தன.
4. தாய்மொழிக்
கல்விதான் ஒரு மனிதனை மேம்படுத்தும். ஒரு தேசத்திற்குப் பெருமை சேர்க்கும்.
அத்தகைய பணியின் ஓர் அங்கமே இத்தகைய நூல்களை வெளியிடுதலாகும்.
அடுத்த பதிப்பு 1944இல் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால்
வெளியிடப்படுகின்றது. ஒளவை துரைசாமிப் பிள்ளை உரை எழுதி உள்ளார்.
முன்னுரையில் இந்நூலில் வருகின்ற இசைக்
குறிப்பில் “மாளவபஞ்சமம்”என்ற
பண் பற்றிய விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இசைத் தமிழ் வரலாற்றில் விடுபட்ட
ஒரு பகுதியை விளக்கும் பகுதியாகவும் இப்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்நூலில் வந்துள்ள சமண சமயக்
குறிப்புக்கள் பலவற்றை ஒளவை துரைசாமிப் பிள்ளை சரியாக விளக்கவில்லை என்றும்,
பல பகுதிகள் பிழையாக உள்ளதென்றும் 1951இல் இந்நூலுக்கு உரையெழுதிப் பதிப்பித்த
வீடூர் - பூரணச் சந்திரசாஸ்திரியார் குறிப்பிடுகின்றார்.
இந்தத் தகவல்களை
சமணரான வீடூர் - பூரணச் சந்திரன் ஒளவை துரைசாமிப் பிள்ளையிடம் எடுத்துக்
கூறுகின்றார். துரைசாமிப்பிள்ளையோ தவறுகளை அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடலாம்
என்று கூறாமல் ‘ஒரு நூலுக்குப்
பலர் உரை எழுதலாம். நீங்களே இதற்கு ஓர் உரை எழுதி வெளியிடுங்கள்’ என்று சொல்லிவிடுகின்றார்.
எனவே
பூரணச்சந்திரசாஸ்திரியார்அவர்கள் புதிதாக ஏழு ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பிடித்து
அச்சான மூன்று புத்தகங்களுடன் ஒப்பிட்டு, பல திருத்தங்களைச் செய்து சமண சமய மரபில் சொல்லப்படுகின்ற தத்துவ விளக்கங்களை
முறையாக விளக்கி வெளியிடுகின்றார்.
இதில் துரைசாமிப்
பிள்ளை உரைப் பகுதிகளில் தவறாக உரை எழுதப்பட்டுள்ள 23 இடங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்; பாடபேதங்கள் சிலவற்றையும்
குறிப்பிடுகின்றார். இத்துடன் தான் பார்த்த எந்த ஏட்டுச் சுவடியிலும் இல்லாத,
அச்சிட்ட புத்தகங்களிலும் இல்லாத
பத்துப்பாடல்களை துரைசாமிப் பிள்ளை இணைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அவை நூற்போக்கிற்கு இயைவாக இல்லை என்றும்
கூறுகின்றார்.
இதனால்
மற்றவர்களின் பதிப்புக்களில் 320 பாடல்கள் உள்ள நூல் துரைசாமிப் பிள்ளையின் பதிப்பில் 330 ஆக மாறி விடுவதையும் நாம் புரிந்துகொள்ள
முடிகின்றது. 219, 275, 315
ஆம் பாடல்களில் சில பகுதிகள் விளங்கவில்லை என்கிறார்.
கன்னட மொழியில்
கவி ‘ஜன்ன’ என்பவர் ஒரு யசோதர காவியம்
எழுதியுள்ளதாகவும், அதனைப்
படித்தாலும் மேற்படி இடங்கள் விளங்கவில்லை என்கிறார். இப்படி ஒரு சிறிய தமிழ் நூல்
பதிப்பில் இத்தனை வகையான சிக்கல்களைக் காணும் நாம், இன்னும் பல நூல்களைக் கவனத்துடன் பரிசீலிக்கவேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம்.
இத்தகைய தொடர்
செயல்பாடுகள் தான் ஆராய்ச்சி என்று பெயர் பெறும். சமணர்களால் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டபெரும் நூல் பரப்பை, தமிழ் மொழிக்கு இத்தகைய பணிகளைச் செய்யப் பலர்
முன்வர வேண்டும். அப்பொழுது தான் நம் மொழி உயரும், நாமும் உயர்வடைவோம்.
--------------------
சமண
ஜினாலயங்களைத்தவிர, மற்ற ஆலயங்களில் பலி கொடுப்பது என்கிற வழக்கம் இன்றளவும்
பல்வேறு விதங்களில் நடத்தப்படுவதை நாமறிவோம். பொதுவாக பெருந்தெய்வ வழிபாடு,
சிறுதெய்வ வழிபாடு என இருவித
வழிபாட்டு முறைகள் மற்ற சமூகத்தில் நிலவுகின்றன என்பதும் நாமறிந்ததுதான்.
சிறுதெய்வ வழிபாட்டில்
வரும்,காளி போன்ற சிலவகை அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி ஒருசில இடங்களில்
நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
உயிர்ப்பலி
எவ்வளவு தவறு என்பதை உணர்த்தும் வரலாற்றுக்கதை ஒன்றை நாம் இப்போது பார்ப்போம்.
--------------
கதைச்சுருக்கம்.
(விரிவான விளக்கத்திற்கு
முன்)
வடதேசத்தில் ஒளதேய
நாடு என ஒரு தேசம் இருந்தது. அதன் தலைநகரம் ராஜமாபுரம். அங்கே மாரிதத்தன் என்றொரு
மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான். நாடும் மக்களும் நலம்பெற வேண்டும், பருவம் தப்பாமல் மழை பொழிந்து தேசம்
சுபிட்சம் பெற வேண்டும் என்று கருதிய அம்மன்னன், காளி தேவிக்கு ஒரு சிறப்பு வழிபாடு நிகழ்த்த
எண்ணினான்.
மக்களும் அவ்வாறே
வசந்தகால வழிபாடு அவசியம் என ஒரு
வேண்டுகோளை மன்னனிடம் முன்வைத்திருந்தனர். அதனால் தடபுடலான பூஜை ஏற்பாடுகள்
நிகழ்ந்தன.
காளி தேவியை
மகிழ்விக்க ஆடு, மாடு, பன்றி, கோழி என எல்லாமே இரண்டு இரண்டாகப் பலிதர
வேண்டுமென்பது மன்னனின் திட்டம். மக்களும் அவ்வாறே பிராணிகளைக் கொண்டு வந்து
நிறுத்தினர்.
மன்னன் தன்
வகையில் நரபலியும் கூடுதலாகத் தரவேண்டுமென்று எண்ணித் தன் தளபதி சண்ட கருமனிடம்,
‘இரு மனித ஜீவன்களைக் கொணர்க’ என ஆணை பிறப்பித்தான்.
தளபதி சண்டகருமன்,
ராஜமாபுர நகரில் நரபலிக்கான ஆட்களைத்
தேடியலைந்தான். அன்று அந்நகரின் வெளியே நதிக்கரை உபவனமொன்றில் சுதத்தாசாரியார்(முனிவர்) என்னும்
ஞானகுரு, தன்
சீடர்களோடு வந்து தங்கியிருந்தார்.
அவர் தன்
சீடர்களில் இருவரான அபயருசி, அபயமதி
ஆகியோரை அழைத்து, ‘நீங்கள்
நகருள் சென்று பிட்சையெடுத்துப் பசியாறி வருக’ வென உத்தரவிட்டார்.
அவ்விருவரும் ராஜ மாபுர வீதிகளில் பிட்சை ஏற்க
நடந்து சென்றபோது, தளபதி சண்ட
கருமன் அவர்களைப் பார்த்தான்.
‘நரபலிக்கு இந்த
ராஜ லட்சணங்கள் பொருந்திய இருவருமே சரியானவர்கள்’ என்றெண்ணி, அவர்களைப் பிடித்து இழுத்து வந்து அரசன் முன் நிறுத்தினான்.
மன்னன் மாரிதத்தன் பூசாரிகளை அழைத்து, “மற்ற பிராணிகளை பிறகு பலி கொடுக்கலாம். கொடுவாளுடன்
ஆயத்தமாக இருங்கள். முதலில் நான் என் கரங்களால் நரபலியை நிறைவேற்றி விடுகிறேன்” என்று கூறி, ராஜவாளை உருவி ஓங்கியவாறு அபயருசி, அபயமதி என்கிற அவ்விரட்டையர்கள் அருகே சென்றான்.
அவர்கள் தரதரவென
இழுக்க முனைவதற்குள் தாமாகவே முன்வந்து, அவன் குறிப்பிட்ட இடத்தில் அச்சமின்றி நின்றனர் அவ்விருவரும்.
அவர்கள் முகத்தில்
அமைதியும் சாந்தமும் தவழப் புன்னகையுடன் நிற்பது கண்டு, மன்னன் வியப்படைந்தான்.
பலியிடும்முன்பணியாட்கள்
அவ்விருவரையும் ‘அரசர் வாழ்க’
என்று கூறுங்கள் எனப் பணித்தான்.
அப்பொழுது அபயருசி,
“உயிர்களைப் பலிகொடுத்தபின் உங்கள் மன்னன்
எப்படியப்பா நிம்மதியாக வாழ முடியும். உயிர்வதை நீக்கி, உமது அரசன், புண்ணிய ஜீவனாக வாழ மட்டுமே எங்களால் வாழ்த்த முடியும்” என்றுரைத்தான்.
இதைக்கேட்ட மன்னன் மாரிதத்தன், “நீங்கள் உரைப்பதன் பொருள் என்ன? பலி பூஜை தவறு என்பது உங்கள் கருத்தா?
நாடும் மக்களும் நலமுடன் வாழ வேண்டும்
என்கிற நல்லெண்ணத்தால்தானே இவ்வழிபாடு நிகழ்த்தப்பெறுகிறது...” என்றான்.
“மன்னா! உன் எண்ணம் தவறு. ஜீவ வதையை ஒரு
போதும் தெய்வம் ஏற்று மகிழாது. உயிர்களைப் பலியிட்டு வழிபடுகிற எவனும் பெரும் குற்றம் செய்தவனேயாவான்.
அதற்காக அவன் நிச்சயம் அதற்கான தண்டனையைப் பெற்றே தீர
நேரும். இதற்கு எங்கள் இருவரின் வரலாறே சாட்சி. அதைக்கேட்டால், நீ நிச்சயம் மனமாற்றம் அடைவாய். உன்னால்
ஊரும், உலகும் திருந்திய
நல்வழியை அடைவது திண்ணம்...”என்றான் அபயருசி.
தளபதி சண்டகருமன்,
“அரசே! இவர்களிடம் பேச்சு எதற்கு? உயிர் தப்பும் உபாயமாக ஏதோ பேசுகிறார்கள்” என்றான்.
“இல்லையில்லை. இவர்கள் அச்சம், நடுக்கமற்று நிற்பதைப் பார்க்கவில்லையா நீ?
மேலும் இவர்களின் அமைதியான பேச்சு,
புன்னகை தவழும் முகம் என்னை என்னவோ செய்கிறது...”என்ற மன்னன், அபயருசியைப் பார்த்து, “நீங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லுங்கள். உங்கள்
பூர்வீக வரலாறுதான் என்ன...?”என வினவினான்.
“நன்று மன்னா! நாங்கள் இப்போது சுதத்த
முனிவரின் சீடர்கள். தவமேன்மையால் தெய்வீக நற்காட்சி கண்ட அனுபவம் எங்களுக்கு
உண்டு. அதன் காரணமாகவே அச்சமின்றி இங்கு நிற்கிறோம். முற்பிறவி ஒன்றில் நாங்கள்
உன்போல் உயிர்ப்பலி வழிபாட்டை நிகழ்த்த நேர்ந்தது.
ஆனால், அது நிஜ உயிரல்ல. மாவினால் செய்யப்பட்ட ஒரு
கோழி பொம்மையை வெட்டிப் பலி கொடுத்து வழிபட்டோம். அதன் பலனாக நாங்கள் பல
பிறவிகளில் இன்னலுற நேர்ந்தது. நீயோ இங்கு இத்தனை உயிர்களைப் பலிகொடுக்க
முனைந்துள்ளாய். இதில் நரபலி வேறு. இதற்கெல்லாம் எப்படிப்பட்ட இன்னல்களை நீ,
எத்தனை பிறவிகளில் அனுபவிக்க நேருமோ
என எண்ணினோம். அதன் காரணமாகவே முறுவல்பூத்து நின்றோம்.”
என்றனர்.
“மாவினால் செய்த ஒரு கோழி உருவைப்பலி கொடுத்ததற்கே
பல பிறவிகளில் துன்பம் அனுபவித்தீர்களா? அந்த வரலாற்றை எனக்கு விவரியுங்கள்.”
என கேட்டுக்கொண்டான்அரசன்.
“ஆகட்டும் மன்னா! புகழ்மிக்க அவந்தி நாட்டு
உஞ்சயினி நகரை அசோகன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மகாராணி சந்திரமதியாவாள்.
இந்த அரச தம்பதியர்களுக்கு யசோதரன் என்று ஒரு புதல்வன் பிறந்திருந்தான்.
வீரக்கலைகள்
பயின்ற இளவரசனான யசோதரனுக்கு அமிர்தமதி என்கிற பெண்ணைத் திருமணம் செய்துவைத்த அசோக
மன்னன், யசோமதி என்ற பெயரக்குழந்தை
பிறந்தபின் அரச பீடத்தில் தன் மகனை அமர்த்திவிட்டுத் துறவறம் ஏற்று வனம் நோக்கிச் தவமியற்ற
சென்று விட்டான். யசோதரன் நல்ல விதமாகவே நாடாண்டு வந்தான். 'தீ'வினை அவன் வாழ்வைச் சூழும் நேரம் வந்தது.
அவனுடைய ராணி
அமிர்தமதி, இசைக்கலை ஆர்வம்
காரணமாக, வீணை மீட்டுவதில்
வல்லவனாக இருந்த யானைப் பாகன் ஒருவன்மீது இச்சை கொண்டாள். அவன் அங்கம் பழுதுபட்ட ஒரு பெருநோயினன் என்ற
போதும், அவன் மீது கொண்ட இசைமயக்கம்
அவளது இச்சையை தூண்டி அவனை அடைய முற்பட்டாள்.
அவர்கள் இருவரும்
ஒருநாள் அந்தப்புரத்தில் கூடி இன்பம் துய்ப்பதை நேரில் கண்டு மனம் துடித்தான்
யசோதரன். இந்த அவலத்தை வெளியே சொல்லவும் வெட்கிய மன்னன் மனம் புழுங்கினான்.
பித்துப்பிடித்தவன் போன்று உணவை வெறுத்து உலவிய மகனிடம் பரிவுகொண்டு, காரணம் வினவினாள் அவன் தாய் சந்திரமதி.
அவன் கெட்ட
சொப்பனம் ஒன்று கண்டதாகச் சம்பவத்தை மாற்றி உரைத்தான் அன்னையிடம்.
அவள் ஆறுதல் பல
சொல்லி, ‘தேவியின் ஆலயம்
சென்று கோழி பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றாள். யசோதரனுக்கு இதில் விருப்பமில்லை. உயிர்பலி
தவறு என்று எத்தனையோ முறை எடுத்துச் சொன்னான்.
அவன் தாய் அதைச்
செவிமடுக்கவில்லை. “அம்மனின் கோபம் பொல்லாதது. என் பேச்சைக்
கேள். உயிருள்ள கோழியை பலி தரவேண்டாமென நீ எண்ணினால், ஒரு மாவினால் செய்யப்பெற்ற பொம்மைக்கோழியை யாவது பலி
கொடுத்து விடு. அம்மன் சாந்தப்படுவாள்” என்று வற்புறுத்தினாள்.
அதன்படி யசோதரன்
மாக்கோழி ஒன்றை உருவாக்கி, நிஜக்கோழி
போல் வண்ணம் பூசி எடுத்துச்சென்று, அம்மன் கோயிலில் பலியிட்டான். அவன் பலிதரும் வேளையில், அக்கோழி உருவில் வான் வழி வந்த ஒரு தேவனின் ஆவி
புகுந்திருந்தது.
அதனால் கழுத்தில்
கத்தி விழுந்ததும் அது அலறித்துடித்து வீழ்ந்தது. பொய்க்கோழி நிஜக்கோழியாகிய
புதிர் விலகாமல் யசோதரன் மனம் பதறினான். பாவம் செய்துவிட்டோம் என்றெண்ணிய அவன்,
ஆட்சியைத் துறந்து வனம் புகுந்து தவம்
இயற்ற விரும்பினான்.
அவனுடைய பலநாள்
சோகத்தையும், திடீரென்று துறவு
மேற்கொள்ள முயல்வதையும் எண்ணிப்பார்த்த அவன் மனைவி அமிர்தமதி, தனது தீய ஒழுக்கம் அவனுக்குத்
தெரிந்துவிட்டது என்பதை ஊகித்தவளாய், வஞ்ச மனத்துடன் கணவனை அணுகிப் பசப்பு மொழிகள் பல பேசினாள்.
திருந்தியவள்போல்
நடித்து, மன்னனை நம்ப வைத்தவள்,
ஒருநாள் உணவில் விஷம் வைத்து
கணவனையும், அவன் வழியே இவ்வுண்மையை
உணர்ந்து விட்டதாக எண்ணி அவன் தாய் சந்திரமதியையும் கொன்று விட்டாள்.
சிறுவன் யசோமதியை
மன்னனாக்கி அரியணையில் அமர்த்திய அமிர்தமதி, எதிர்ப்பார் யாருமற்ற நிலையில் தன் இன்ப வாழ்வைத்
தொடர்ந்தாள்.
விஷம் உண்டு
மடிந்த மன்னன் யசோதரன் மயிலாகவும் அவன் தாய் சந்திரமதி பெண் நாயாகவும்
பிறப்பெடுத்தனர். இந்த இரு வளர்ப்புப் பிராணிகளும் அரண்மனைக்கே பரிசுப் பொருள்களாக
வந்து சேர்ந்தன.
அமிர்தமதியுடன்
தனிமையில் அமர்ந்து யானைப் பாகன் பேசி மகிழ்வது கண்ட மயில்(யசோதரன்), தன் பழம் பிறப்பின் பகையால் அவன்மீது
பாய்ந்துகண்களை கொத்திக் குதறியது. அவள் சினம்
கொண்டு பெரியகல்லால் மயிலின் தலையை நோக்கி எறிந்தாள்.
அமிர்தமதி
ஆவேசத்துடன் எறிந்த கல் தாக்கி, மயிலும் குற்றுயிராக வீழ்ந்தது. அதை வாயில் கவ்வியபடி தூக்கிக்கொண்டு ஓடிய
நாய் (தாய்சந்திரமதி),
அரசன் முன் போட்டது. மயில் நாயின்மீது
வைரங்கொண்டு இறந்து, விந்தியமலைச்
சாரலில் முள்ளம்பன்றியாய் பிறந்தது. நாய்தான் மயிலைக்
கொன்றது என்றெண்ணிய மன்னன் சுதாடும் பலகையால் அதைத்தாக்க நாயும் மடிந்தது.
நாய் (தாய் சந்திரமதி) கரும்பாம்பாகப் பிறக்கிறது. மயில்(யசோதரன்) இறந்து முள்ளம் பன்றியாய்ப் பிறந்துள்ளது. முள்ளம் பன்றி, மயில் தான் குற்றுயிராய் இருந்தபோது
நாய்தான் கொன்றது என்ற வைரத்தால் பாம்பைக் கடிக்க, அது இறந்து உஞ்சயினியின் அருகிலுள்ள சிருப்பிரையாற்றினுள்
முதலையாய்ப்(சந்திரமதி) பிறக்கிறது.
முள்ளம் பன்றி (யசோதரன்)யை காட்டுக்
கரடி கொல்ல அது உலோகிதம் என்னும் மீனாய் அவ்வாற்றிலேயே பிறக்கிறது.
முதலையாய் பிறந்த சந்திரமதி
அம்மீனை(யசோதரன்) விழுங்க விரட்டிய போது அங்கு நீராடிய அரணமனை தாதியை விழுங்கிவிட்டது.
அதனை யறிந்த மன்னன் காவலரை ஏவி முதலையைப் பிடித்து வதைத்தான்..
அம்முதலை பெண்
ஆடாக(தாய் சந்திரமதி)ப் பிறக்கிறது. மீன் அந்தணரால் கொல்லப்பட்டு அப்பெண் ஆட்டின் குட்டியாகப்(யசோதரன்) பிறக்கின்றது.
பின்னர் வேட்டைக்கு
சென்ற யசோமதி கருமுற்றிய ஆட்டை பானத்தால்தாக்க, தாய் ஆடு இறந்து, எருமையாய்ப்(தாய் சந்திரமதி) பிறந்தது. அம்புபட்ட
இடத்தின் வழியே பிறந்த ஆட்டுக்குட்டியை, அரசன் ஒரு புலையனிடன்
கொடுத்து வளர்க்கும் படி பணித்தான்.
அரசனிடம் அந்தணர்கள்
யோனிவழியே பிறக்காத இந்த ஆட்டினை சிரார்தத்திற்கு ஆகும் என்று கூற, புலையனிடமிருந்து திரும்பப்பெற்று சிரார்த்தம்
செய்யும்போது அது(யசோதரன்) தனது பழம்பிறவியை
உணர்ந்து துன்புற்று அரண்மனையிலேயே தங்கியிருந்தது.
தாய்ஆடு (தாய் சந்திரமதி) கலிங்கதேசத்தில் ஒரு வணிகன் வீட்டில் எருமையாய் பிறந்தது. அவனது வர்த்தகப்பொருள்களை சுமந்து திரிந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஆற்றின் கரையில் வந்து அவ்வணிகன் எருமையுடன் தங்கினான். அவ்வெருமையை அவ்வாற்றில் அமிழ்த்த அங்கு நீரருந்த வந்த அரசனின் குதிரையை பாய்ந்து
கொன்றது.
அதனால் ஏவலர்கள் அவ்வெருமையை
தீயிலிட்டு பொசுக்கிக் கொன்றனர். அவ்வமயம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிந்த அமிர்தமதி அவ்வெறுமை ஊனை உண்டதோடு அரண்மனையில்
உள்ள அவ்வாட்டையும் சமைத்துண்ண விரும்பினாள்.
அவளால் அழிக்கப்பட்ட
எறுமையும்(தாய் சந்திரமதி),
ஆடும் (யசோதரன்) இருவதும்
கோழிப்பிறப்பெய்தினர். அவைகளை சண்டகருமனிடம் கொடுத்து வளர்க்கச்
செய்தான். ஒருநாள் மன்னன் அரண்மனையில் தனது தேவி புட்பவலியுடன்
ஆடிக்களித்திருந்த போது, காவல் காத்து வந்த சண்டகருமன்,
அவ்வனத்திலிருந்த அகம்பனர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி அவரிடம் அறவுரை
கேட்டான். அதன் வழியே அவரிடம் அஹிம்சாவிரதத்தை ஏற்றுக்கொண்டான்.
அவனுடன் இருந்த இருகோழிகளும்
அவ்வறவுரையைக் கேட்டதால் தமது பழம்பிறப்பை யுணர்ந்து உரிய விரமேற்று கூவி மகிழ்ந்தன.
அங்குத் தூங்கிக்
கொண்டிருந்த அரசன் தன் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்த கோழிகளைக் கொல்ல, அவை முனிவரிடம் அறம் கேட்ட அறப்பயனால்,
அரசன் தேவி புட்பாவலிக்கு இரட்டைக்
குழந்தைகளாகப் பிறக்கின்றன. அக்குழந்தைகளே அபயருசி, அபயமதியாவர்.
புட்பாவலி
மீண்டும் கருவுற்று யசோதரன்(கதாநாயகன்அல்ல) என்ற மகனைப் பெறுகிறாள். மக்கள்
மூவரும் வளர்கின்றனர்.
வேட்டைக்குச்
சென்ற மன்னன் யசோமதி எதிரில் சுதத்தர் என்ற முனிவரைக் காண்கிறான். அவர் திகம்பரக்
கோலத்தில் (ஆடையின்றி) இருக்கிறார். வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு
அந்த முனிவரை முதலில் கண்டதுதான் காரணம் என்று கருதிய யசோமதி அரசன், 500 வேட்டை நாய்களை ஏவி அவரைக் கொல்ல
முயல்கிறான். அவரது தவ வலிமையால் நாய்கள் அவரை நெருங்க முடியாமல் நிற்கின்றன.அதனால்
தானே அவரைக் கொல்ல வாளை உயர்த்தினான்.
அதனைக் கண்ட கல்யாணமித்தரன்
என்பவன் தடுத்து அம்முனிவரின் பெருமையை எடுத்தியம்பினான். அதனால் மன்னனும் தனது பெருந்தவறை உணர்ந்து,
தன் தீமையைப் போக்க தன் சிரசை அரிந்து முனிவர் பாதங்களில் வைக்க எண்ணியபோது,
அதனை ஞானத்தல் உணர்ந்த முனிவரவர் அவனது தற்கொலையை தடுத்த்தோடு அவனுக்கு
அறம் பகின்றார்.
மேலும் அசோகமன்னன்
வானுலகில் இன்புறுவதையும், அமிர்தமதி நரகத்தில் துன்புறுவதையும், யசோதரனும்,
தாய் சந்திரமதியும்மு றையே அபயருசியும், அபயமதியுமாக
பிறந்துள்ளதையும் தெரிவித்தார்.
அதன்பின் அரசனும், அபயருசியும், அபயமதியும்
முதலிய யாவரும் தன்செயலுக்காக வருந்தி திருவறம் மேற்கொண்டு சுதத்தமுனிவர் சங்கத்தில்
சேர்ந்தனர்.
யசோதரனும்
சந்திரமதியும் அபய ருசியாகவும் அபய மதியாகவும் இதோ உங்கள் முன் நிற்கிறோம்.
இதுதான் எங்கள் சரிதம். ஒரு மாக்கோழி பலி எங்களை என்ன படுத்தி விட்டது
பார்த்தாயா...?”என்றனர்.
மன்னன் மாரிதத்தன்,
உயிர்ப்பலி தீது என்பதை உணர்ந்து
திருந்தினான். அங்கே பலிக்காக இருந்த அத்தனை பிராணிகளையும் விடுவித்தான். அபயருசி,
அபயமதி ஆகியோருடன் உபவனம் சென்று,
சுதத்த முனிவரை வணங்கி, தீட்சை பெற்றான் என்கிறது ‘யசோதர காவியம்’ என்னும் நூல்.
(பின்விரிவாக
நிகழ்வுகளை செய்யுள் வழியே சென்று காண்போம்.)
------------
உயிர்ப்பலிகூடாது.
ஒன்றல்ல, இரண்டல்ல; பல்வேறு அறிஞர்களும் தவயோகிகளும் இக்கொடிய
உயிர்ப்பலி வழக்கத்தைச் சாடியுள்ளனர். பல நீதிக்கதைகளையும் எடுத்தியம்பியுள்ளனர்.
ஒரு மகான்
இப்படிக் கேட்கிறார்: “ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள். அதில்
ஒன்று ஊமை. அக்குழந்தையைப் பலியிட்டு, விருந்தளித்தால் அதை அத்தகப்பன் மகிழ்வுடன் ஏற்பானா? அது எவ்வளவு தவறான, கொடிய செயலோ, அது போன்றதே வாயில்லாப் பிராணிகளை வதைத்துப் பலி
பூஜை நடத்துவதும்...”
-------------
ஒரு மகான்
வனத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். ஓர் அசுரன் அவர்முன் தோன்றி, “வா என்னோடு உன்னை இன்று நான் காளிக்குப் பலிதரப்
போகிறேன்”என்றான். அவன் கையில் பெரிய கொடுவாள்
இருந்தது. தப்பிச்செல்ல வழியில்லை. முனிவர் அவனிடம், “வருகிறேன். முதலில் நீ இந்த மரக்கிளையை வெட்டு”என்று ஒரு மரத்தைக் காட்டினார்.
அந்த அசுரனும்
கொடுவாளால் ஒரே வீச்சில் அம்மரக்கிளையை வெட்டிச்சாய்த்துவிட்டு, “பார்த்தீரா என் பராக்கிரமத்தை”என்றான். “சரி, நீ பெரிய பலசாலி என்பதை ஒப்புக்கொள்கிறேன். காளிக்கு
நிறைய பலி பூஜைகள் செய்து அபூர்வ சக்திகளும் பெற்றிருப்பாய் அல்லவா...?”
“ஆம்; அதிலென்ன சந்தேகம். பார்க்கிறீரா என் சக்தியை...”“பார்க்கிறேன்... முதலில் நீ இப்போது வெட்டிய கிளையை
திரும்பவும் மரத்துடன் ஒட்டி விடு.”
அசுரன்
யோசித்தான். “அது எப்படி? வெட்டிய மரக்கிளையை மீண்டும் அதே இடத்தில் ஒட்டுவது நடக்கக்கூடிய செயலல்லவே...”என்றான். “வெட்டிய மரக்கிளையை மட்டுமல்ல, பறித்த ஒரேயொரு இலையைக்கூட உன்னால் திரும்ப
அதில் பொருத்த முடியாது. இதை உணராமல், உயிர்களை வெட்டிப் பலியிடுகிறேன் என்கிறாய். இறைவன் படைத்த உயிர்கள் மீது
உனக்கு என்ன அதிகாரமிருக்கிறது? நீ கொடிய நரகில் வீழ்வது உறுதி”என்றார். அசுரன் மனம் திருந்தி, முனிவரின் பாதம் பணிந்து, தனக்கு நற்கதி அளிக்கும்படி வேண்டினான்.
இப்படி எத்தனையோ நீதிக் கதைகள் போதிக்கப்படுகின்றன.
அருளல்லது
யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது
அவ்வூன் தினல். - (குறள்: 254)
கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும்
தொழும். - (குறள்: 260)
என்கிறார்
வள்ளுவப் பெருமான். எனினும் பலிபூஜைகள் தொடர்கின்றனவே!
----------------------
காப்பியத்
தத்துவம்
மக்களுக்குத்
தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுப்பதும், அதனால் வரும் நல்வினை உதயத்தால் வரும் போகத்தை கழித்தாலும், விடுதலைப் பேறே உணர்வின் நோக்கமாக
அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும்.
மறுபிறவிகள்,
சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது
இந்நூல்.
வினைப்பயன்
தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்;
அது கீழான விலங்குப் பிறவிக்கு
இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும்.
உயிர்பலியிடுதலும்,
பாவனையால் பலியிடுதலும் கொலையே.
அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம்.
இசை உலக இன்பத்தை
மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப்
போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம் ஆகும்.
இலக்கிய நயம்
கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால்
உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச்
செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது. சொல்லும் முறையில் உள்ள
எளிமை, இனிமை நம்மைக்
கவர்கிறது.
‘கொலையினது இன்மை
(கொல்லாமை) கூறில் குவலயத்து இறைமை செய்யும்; மலைதல் இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை
ஆக்கும்’ (237: 1-2) என்று
அறக் கருத்துகளை மிக எளிமையாக எடுத்து மொழிகிறது இந்த நூல்.
-----------------------
தற்சிறப்புப் பாயிரம்
கடவுள் வாழ்த்து
1) உலக மூன்றும் ஒருங்குணர்
கேவலத்து
அலகி லாத அனந்த
குணக்கடல்
விலகி வெவ்வினை
வீடு விளைப்பதற்கு
இலகு மாமலர்ச்
சேவடி யேத்துவாம்.
2) நாதன் அம்முனி சுவ்வதன் நல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏதம் அஃகி யசோதரன் எய்தியது
ஓத உள்ளம் ஒருப்படு கின்றதே.
அவையடக்கம்
3) உள்வி ரிந்த புகைக்கொடி உண்டென
எள்ளு கின்றனர் இல்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருள் திறம் ஓர்பவர்
கொள்வர் எம்முரை கூறுதற் பாலதே.
-----------------------
முழுதுணர் ஞானியும்,
மூவுலகங்களையும் கணத்தில் ஒரு சேர உணர்ந்து அறியும் சிறப்பினையுடையவரும், கடல்போல் நற்குணங்கள் நிரம்பிய அருகப்பெருமானின்,
தாமரைமலர் போன்ற சிவந்த திருவடிகளை தீ
வினைகள் விலகவும், வீடுபேறு வேண்டியும்
வணங்குவோம்.
-----------------------
முனிசுவிரத தீர்த்த
சந்தானகாலத்தில் அவர் அருள்மொழி நடைமுறையில் இருந்த போழ்து மன்னன் யசோதரன் அடைந்த துன்பங்களை
கூற முயல்கிறேன்.
----------------------
திருவறநெறியை விளக்கொளி
போல இந்நூற்பொருளை நோக்கும் சான்றோர் என் சொல்லின் கண் உளவாகும் புகைபோன்ற குற்றத்தைக்
கருதி இகழாமல் ஏற்பர்: ஆதலின்,
யான் கூறுதலையும் ஏற்றுக்கொள்வர்.
------------------------
நூல் நுவல் பொருள்
4) மருவு வெவ்வினை
வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணிய
போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும்
வினைப்பயன் இற்றெனத்
தெரிவு றுப்பதும்
செப்புதல் உற்றதே.
-----------------------
முதற் சருக்கம்
நாட்டுச் சிறப்பு
5) பைம்பொன் நாவல் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவது
இம்பர் ஈடிலது ஓளதயம் என்பதே.
நகரச் சிறப்பு்
6) திசையு லாம்இசை யும்திரு வும்நிலாய்
வசை யிலாநகர் வானவர் போகமஃது
அசைவி லாவள காபுரி தானலால்
இசைவி லாதஇ ராசபு ரம்மதே.
7) இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொல் ஆரவர் பாடலொடு ஆடலால்
விஞ்சை யார்உல கத்தினை வெல்லுமே.
அரசனியல்பு
8) பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி
பூரி தத்துஒளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்
மாரி தத்தன்என் பான்உளன் மன்னவன்.
9) அரசன் மற்றவன் தன்னொடு அந்நகர்
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ துஒன்றிலர் செல்வ மயக்கினால்.
--------------------------------
பொன்னிற மகா மேருமலையை
நடுவில் உடைய, நாவல் மரங்கள்
நிரம்பிய நாவலந்தீவின் தென்பகுதியில் இருக்கிற பரதகண்டத்தில் மணம் பரப்பும் சோலைகள்
நிறைந்த மேகக்கூட்டங்கள் தவழும் ஓளதேயம் என்ற நாடுள்ளது. அதன்
தலைநகர் இராசமாபுரம் விண்ணுலகு பேரனின் அளகாபுரியை ஒத்தது.
அந்நகரத்து மதிலானது
வானுயர்ந்தும், மாளிகைகள்
நிலாவை தலைமுடியாக கொண்டது போன்று காட்சியளித்தது. அந்நாட்டினை
மாரிதத்தன் என்ற மன்னன் தன் முன்னோர்களைக் காட்டிலும் மும்மடங்கு சிறப்புற , மழை போன்று
மக்களுக்கு நன்மைகள் அளித்து ஆட்சி புரிந்து வந்தான்.
ஆனால் மன்னனும், மக்களும் தாம்பெற்ற செல்வத்தால் செருக்குண்டு
வீடுபேறு தரும் ஒப்பற்ற நல்லறத்தினை மறந்தனர்.
-------------------
10) தெரிந்த நுண்குழல் நேரிழை யாருழை
சரிந்த காதல் தடையில தாகவே
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்தது இன்னிள வேனிற் பருவமே.
வசந்தமன்னனை வரவேற்றல்
11) கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூங்கு யில்இல மின்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.
இதுவுமது
12) மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர்
தலந்த லம்தொறும் ஆடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.
அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா கொண்டாட முற்படுதல்
13) உயர்ந்த சோலைகள் ஊடஎதிர் கொண்டிட
வயந்த மன்னவன் வந்தனன் என்றலும்
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
வயந்த மாடு வகையினர் ஆயினர்.
14) கானும் வாவியும் காவும் அடுத்துடன்
வேனில் ஆடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் தன்னுழை
ஏனை மாந்தர் இறைஞ்சுபு கூறினார்.
ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்
15) என்றலும் இப்பரு வத்தினோடு ஐப்பசி
சென்று தேவி சிறப்பது செய்துமஃது
ஒன்றும் ஓரலம் ஆயினம் ஒன்றலா
நன்ற ஆலாதன நங்களை வந்துறும்.
இதுவுமது
16) நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வும்செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிதெழுக என்றனர்.
அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்
17) என்று கூறலும் ஏதமிது என்றிலன்
சென்று நல்லறத்து இத்தெளி வின்மையால்
நன்றி தென்றுதன் நன்னகர் அப்புறத்து
தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்.
தேவியின் கோயிலை அடைதல்
18) சண்ட கோபி தகவிலி தத்துவம்
கொண்ட கேள்வியுங் கூரறி வும்இலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
கண்ட மாரி தனதிடம் எய்தினான்.
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
19) பாவ மூர்த்தி படிவம் இருந்தவத்து
தேவி மாட மடைந்து செறிகழன்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி எம்மிடர் சிந்துக என்றரோ.
20) மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகரம் ஆடுஎரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கில் இரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.
--------------
பகைவரை விரட்டும் வில்லினையுடைய
வேந்தன் மாரிதத்தன், அடந்த நீண்ட
கூந்தலையுடைய, அணிகலங்கள் அணிந்த
தம்மகளிர் மீது காதலுடன் இருந்தான். அவ்வேளையில் இராசமாபுரத்திற்கு இளவேனிற்காலமும் வந்தது. பூங்கொடிகளைப் போன்ற மகளிர் அன்பை வெளிப்படுத்துவது போன்று
ஆங்காங்கே நடனங்கள் ஆடினர் மன்னன் வருகையின் போது.
மன்னனும், தம்மக்களும் வசந்தவிழா விளையாட்டிற்காக தயாராயினர்.
நீர்நிலைகளும், சோலைகளும், அடர்ந்த மரங்களும் உடைய பகுதிக்கு வந்தடைந்தனர். அவ்வமயம் மன்னனிடம் நகர மக்கள் சிலர் வணங்கி,
“மன்னா, இவ்வேளையில், ஐப்பசி அஷ்டமியில்
மாரியம்மன் கோவிலுக்கு சிறப்புப்பூசை செய்தல்வேண்டும். இல்லாவிடில் பலவித நோய்களை உண்டு பண்ணி பலர் உயிரை உண்ணுவாள்.
மேலும் பலதுன்பங்கள் நம்மை வந்தடையும்.
அப்பூசையை செய்தலால் பலவகை தீங்குகள் நம்மைத்
தீண்டாவண்ணம் தடுக்கலாம், ஆகவே ஏற்பாடு செய்யுங்கள் அரசே’ என்றனர்.
நல்லறத்தில் நம்பிக்கை
குறைந்த அம்மன்னன் அவர்கள் கூறியது உண்மை என்று நம்பியதோடு, சிறப்பு பூசை நன்மைதரும் என்று எண்ணி, அந்நகரத்தென்பகுதியில் அமைந்த தேவியின் ஆலயம்
நோக்கி உரிய ஏற்பாட்டுடன் பரிவாரங்கள் புடை சூழப்புறப்பட்டான்.
உண்மையான தத்துவப்பொருளை
உணர்த்தும் கேள்வி அறிவோ, நல்லற வழியோ இல்லாமையால், அத்தீய தேவதையாகிய சண்டமாரிக் கோவிலை அடைந்தான்.
அவாலயத்தை வலம் வந்து “தேவியே, எங்கள் துயரம் ஓழிய அருள்வீராக’ என்று வேண்டினான்.
அவன் கட்டளைக்கிணங்க
அத்தேவியை மகிழ்விக்க கோரி பலியிட மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலான விலங்குகள் இருபாலுடன் பிணைக்கப்பட்டுள்ளதைக் கண்டான்.
----------------------------------
21) யான்இவ் வாளினின் மக்கள் இரட்டையை
ஈன மில்பலி யாக வியற்றினால்
ஏனை மானுயர் தாம்இவ் விலங்கினில்
ஆன பூசனை ஆற்றுதல் ஆற்றென.
22) வாடல் ஒன்றிலன் மக்கள் இரட்டையை
ஈடுஇ லாத இயல்பினில் இல்வழி
ஏட சண்ட கருமதந்து ஈகென
நாட ஓடினன் அன்னகர் தன்னுளே.
அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்
23) ஆயிடைச் சுதத்தன் ஐஞ்ஞூற் றுவரரும் தவர்க ளோடும்
தூயமா தவத்தின் மிக்க உபாசகர் தொகையும் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன்று என்ன மாதவர்க்கு இறைவன் வந்தான்.
சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்
24) வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்
சிந்தையால் நெறிக்கண் தீமை தீர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனம்கொண்டண்ண லஅனசனத் தவம் அமர்ந்தான்
முந்துநாம் உரைத்த சுற்றம் முழுவதி னோடு மாதோ.
சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்
25) உளங்கொள மலிந்த கொள்கை உபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கல்வி அபயமுன் னுருசி தங்கை
அளம்பிறை அனைய நீராள் அபயமா மதிஎன் பாளும்
துளங்கிய மெய்ய ர்உள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.
சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்
26) அம்முனி யவர்கள் உம்மை அருளிய மனத்த னாகி
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முடன் உண்டி மாற்றாது இன்றுநீர் சரியை யாகி
நம்மிடை வருக என்ன நற்றவர் தொழுது சென்றார்.
இளைஞர் சரிகை செல்லுதல்
27) வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனும் இன்றாய்
வெள்ளிய துடையோன் றாகி வென்றவர் உருவ மேலார்
கொள்ளியல் அமைந்த கோலக் குல்லக வேடம் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.
இதுவுமது்
28) வில்லினது எல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யிர்க்கண் ணகைமுத லாய நாணி
இல்லவர் எதிர்கொண் டீயின் எதிர்கொளுண்டியரு மாகி
நல்லற அமுதம் உண்டார் நடந்தனர் வீதி யூடே.
---------------------
பலிக்கான விலங்குகளைக்
கண்டு மகிழ்ந்த மாரிதத்தன்; என் வெற்றிவாளால் அங்கஹீனம் இல்லாத இரட்டையரை நரபலியிட்டு பூசைசெய்வேன், அதன் பின்னர் அனைவரும் விலங்குகளைப்பலி
இடட்டும், எனக்கருதினான்.
தான் தரும் பலிபூசை
மற்றவர்கள் தரும் பூசைக்கு இணையற்றதாக இருக்கவேண்டும் என எண்ணி, ‘ ஏசண்டகருமா மக்களுள் ஆண், பெண் இரட்டையரை இராசமாபுரத்துள் தேடி கொணர்க’ என கட்டளையிட்டான். அவனும் அதனை சிரமேற்கொண்டு தேடுதற்கு
நகருக்குள் விரைந்து சென்றான்.
அவ்வமயம் நற்குணங்கள்
நிரம்பிய ஐந்நூறு சாதுவர்களுக்கும், பல இல்லற நோன்பிகளுக்கும் தலைவராக, நற்றவத்தில் சிறந்தவருமாகிய சுதத்தஆசாரியர்
நீண்ட நடைப்பயணத்திற்கு பின், தீர்த்த வந்தனை செய்யும் நோக்குடன்
அச்சோலைக்கு வந்தடைந்தனர்.
துறவியற்குரிய தவநெறிகளில்
ஒன்றான அனசன தவம் (புறத்தவம்)
எனும் உண்ணாநோன்பை ஏற்றதால், அனைத்து முனிவர்களும்
அவ்வழியே நோன்பினை ஏற்றனர். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களான
அபயருசி, அவன் தங்கை அபயமதி ஆகிய இருவரும் முனியரசரை வணங்கி நின்றனர்.
தளராமனம் உடையவராயினும் நடந்து வந்த களைப்பினால் சோர்வுடன் கண்டதினால்
‘ நீங்கள் இருவரும் எங்களுடன் உண்ணாநிலையைத் தழுவவேண்டாம். சரியை சென்று (அதாவது உத்தம சிராவகரிடம் உணவு ஏற்கச்செல்வது)
முறைப்படி உணவேற்று திரும்புக’ என்றார்.
மாலையோ, மணிகளோ அணியாது சாதாரண வெண்மையாடை உடுத்திய,
சுல்லக நிலையில் உள்ள அபயருசி, அபயமதியாகிய இருவரும்
சரியை வேண்டி காண்போர் வியக்கும் வண்ணம் நகருக்குள் நுழைந்தனர்.
மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்
29) அண்டலர் எனினும் கண்டால் அன்புவைத்து அஞ்சு நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
கொண்டிளம் பருவம் என்கொல் குழைந்திவண் வந்தது என்றான்.
இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்
30) என்மனத் தெண்ணி நெஞ்சத்து இரங்கியும் மன்னன் ஏவல்
தனைநினைந்து அவர்கள் தம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினம்மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான்.
இனையது பட்டது இன்றென்று இளையரும் எண்ணி னாரே.
31) வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொடு இன்றித்
தன்பரி வேடம் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினால் ஐயன் தங்கை அஞ்சுதல் அஞ்சி நெஞ்சில்
தன்கையான் முன்கை பற்றித் தானவள் கொண்டு செல்வான்.
32) நங்கைநீ அஞ்சல் நெஞ்சின் நமக்குஇவண் அழிவொன் றில்லை
இங்குநம் உடம்பிற்கு ஏதம் எய்துவது இவரின் எய்தின்
அங்கு அதற்கு அகழுங்கல் என்னை அதுநமது அன்றென் றன்றோ
மங்கையாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்ததுஎன்றான்
33) அஞ்சினம் எனினு மெய்யே அடையபவந் தடையும் ஆனால்
அஞ்சுதல் அதனின் என்னை பயன்நமக்கு அதுவும் அன்றி
அஞ்சுதல் துன்பம் தானே அல்லதும் அதனில் சூழ்ந்த
நஞ்சன வினைகள் நம்மை நாடொறு நலியும் என்றான்.
34) அல்லதும் அன்னை நின்னோடு இயானுமுன் னனேக வாரம்
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல்லுயிர் நமர்கள் தாமே நலிந்திட விளிந்தது எல்லாம்
மல்லன்மா தவனின் நாமே மறித்துஉணர்ந் தனமும் அன்றோ.
35) கறங்கென வினையிந் ஓடிக் கதியொரு நான்கின் உள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன இறந்து போக எய்துவது எய்திப் பின்னும்
பிறந்திட இறந்தது எல்லாம் இதுவும் அவ் வியல்பிற் றேயாம்.
36) பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தநம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
சிறந்ததை இதுவென்று எண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன இறந்த காலத்து எண்ணிறந்தனகள் எல்லாம்.
(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
நரககதி வரலாறு
37) முழமொரு மூன்றில் தொட்டு மூரிவெஞ் சிலைகள் ஐஞ்ஞூறு
எழுமுறை பெருகி மேன்மேல் எய்திய உருவ மெல்லாம்
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகம் தம்முள்
உழைவிழி நம்மொடு ஒன்றி ஒருவின உணர லாமோ.
விலங்குகதி வரலாறு
38) அங்குலி யயங்கம் பாகம் அணுமுறை பெருகி மேன்மேல்
பொங்கிய ஈரைஞ் ஞூறு புகைபெறு முடைஉ டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன அனந்த மன்றோ.
மனுஷ்யகதி வரலாறு்
39) ஓரினார் முழங்கை தன்மேல் ஒரொரு பதேசமேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிரம் உற்ற உற்ற விட்ட
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாம் கொண்டு
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.
தேவகதி வரலாறு
40) இருமுழம் ஆதி யாக எய்திய வகையின் ஓங்கி
வருசிலை இருபத் தைந்தின் வந்துறும் அங்கம் எல்லாம்
திருமலி தவத்திற் சென்று தேவர்தம் உலகிற் பெற்றது.
ஒருவரால் உரைக்க லாமோ உலந்தன அனந்தமன்றோ
--------------
நல்லறம் என்னும் வழியை
தேர்வு செய்த அபயருசி, அபயமதி ஆகிய
இருவரும் தூய உணவை ஏற்கும் வண்ணமாக வீதிவழியே வந்த போழ்து; அரசன் ஏவலோடு வந்த சண்டகருமன் அவ்விருவரையும் கண்டான்.
திருமகளும், மன்மதன் போன்ற வடிவம் கொண்ட இருவரும் ஏன் ஓராடை உடுத்த
வேடத்தினை ஏற்றனர். மிகவும் மெலிந்த
உடலுடன் இவ்விடம் வந்ததேனோ என எண்ணினான்.
இரங்கிய சண்டகருமன்,
தம்மன்னனின் கட்டளையை நினைவு கூர்ந்தமையால்
அவ்விருவரையும் வலிய இழுத்தபடி கோவில் இருந்த திசை நோக்கிச் சென்றான். தமக்கு இதுதான் இன்றைய விதியென எண்ணி அவன் இழுத்த
திசைக்கு இணங்கி சென்றனர்.
அபயருசி ‘நங்கையே சிறிதும் அச்சம் கொளத்தேவையில்லை,
உயிருக்கு எத்தீங்கும் நேராது,
உடலுக்கு மட்டுமே கேடு நேரலாம்.
அவ்வுடல் நம்பொருள் அல்லவே, அதன் மீதுள்ள பற்றை நாம் விலக்கி விட்டோமே’
என்றான்.
மேலும் ‘ அச்சம்கொளினும்வரவேண்டியதுன்பங்கள்வந்தேதீரும்.
அஞ்சுதலும்ஒருதுன்பமே, அதனால்நாட்தோறும்தீவினைகள்நம்உயிரைவந்துசேரும்,
அதனால்வருத்தங்கள்அதிகமாகும்’ என்றும்அறிவுருத்தினான்.
அன்னையே (துறவறம் ஏற்றதால் தங்கையை அவ்வாறு அழைத்தான்)
‘ நாம் இருவரும் பழம் வினையால் பல பிறவிகளை
எடுத்து துன்புற்றதையும், நம் உறவினர்களே
நம்மை வருத்தமடைய செய்ததையும், நம் முனிவர் பெருமான் மூலம் அறிந்தோம் அல்லவா! அவ்விதமே பிறவியின் இயல்பால், இறந்து இறந்து பிறக்கவேண்டிய நிலையில் உள்ளோம். உடலைப்
பேணாது துறந்திருந்தால்; ஏழுநரகங்களில்
உள்ள துன்பங்களையும், விலங்கு கதியில்
உள்ள இன்னல் களையும் நம்முயிரும்
துய்த்திருக்காது என்பதை உணர வேண்டாமா?
அதேபோல் மனிதப்பிறவியில்
நாம் பெற்றபிறவிகளை எண்ண முடிந்தால் கடற்கரை நுண்மணலின் எண்ணிக்கைக்கு ஈடாகாது.
நல்வினைப்பயனால் ஒருவரது
உயிர் தேவருலத்தில் பிறந்து எடுத்த தேவ உடம்புகள் எண்ணற்றவை. அதனால் அப்பிறவிகளை அவரால் உரைக்க இயலுமோ’
என எடுத்தியம்பினான்.
------------
தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்
41) துன்பகாரணம் இன்றே துடக்கறுக எனவும் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை அவைகளும் அமரர் கற்பத்து
இன்பக்காரணம் இதென்றே எம்முடன் இயல்க என்றே
அன்புசெய் தனகள் தாமும் அழியுநாள் அழியு மன்றே.
42) வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி
தந்திரு வடிகள் ஏந்தும் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவர் ஏனும்
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தனர் அனந்த மன்றோ.
43) மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
திக்கெலாம் அடிப்ப டுத்தும் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத்து உடம்பு தோன்றி அன்றுதொட்டு இன்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத்து ஒருவரும் இல்லை அன்றே.
44) ஆடைமுன் னுடீஇய திட்டோர் அம்துகில் அசைத்த லொன்றோ
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல்
நாடினெவ் வகையும் அஃதே நமதுஇறப் பொடு பிறப்பும்
பாடுவது இனியென் நங்கை பரிவொழிந் திடுக என்றான்.
அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்
45) அண்ணனீ அருளிற்று எல்லாம் அருவருப்பு அடைய மெய்யின்
கண்ணிய நமதுஎன் னுள்ளத் தவர்களுக்கு உறுதி நாடி
விண்ணின்மேல் இன்பம் அல்லால் விழைபயன் வெறுத்துநின்ற
கண்ணனாய் நங்கட்கு இன்ன கட்டுரை யென்னை என்றாள்.
இதுவுமது.
46) அருவினை விளையுள் ஆய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறும்
திருவுடை அடிகள் அந்த திருவறப் பயனும் தேறி
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ
இதுவுமது
47) பெண்ணுயிர் எளிய தாமே பெருந்திறல் அறிவும் பேராத்
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி
அண்ணல்நீ அருளிச் செய்தாய் அன்றிநல் லறத்திற்காட்சி
கண்ணிய மனத்தர் இம்மைக் காதலும் உடைய ரோதான்.
48) இன்றிவண் ஐய என்கண் அருளிய பொருள் இதெல்லாம்
நன்றென நயந்து கொண்டேன் நடுக்கமும் அடுத்த தில்லை
என்றுஎனக்கு இறைவன் நீயே எனஇரு கையும் கூப்பி
இன்றுயான் யாது செய்வது அருளுக தெருள வென்றாள்.
இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.
49) ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உண்ணி
நன்று என நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடலம் என்றான்
நன்றுஇது செய்கை என்றே நங்கையும் நயந்து கொண்டான்.
இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.
50) ‘அறிவொடுஆ லோகம் உள்ளிட்டு அனந்தமாம் இயல்பிற் றாகி
அறிதலுக் கரியது ஆகி அருவமாய் அமலம் ஆகிக் (வேறா
குறுகிய தடற்றுள் வாள்போல் கொண்டியல் உடம்பின்
இறுகிய வினையும் அல்லது எமதியல்பு என்று நின்றார்.‘
-------------
மேலும் அபயருசி தன்
தங்கையான அபயமதியிடம் ‘நரகப்பிறவி
மிகுந்த துன்பத்தை தருவதால் அதன் ஆயுள் முடியட்டும் என்றாலும், தேவ கதி சுகத்தையே மிகுதியாக தரும் என்பதால்
அதன் ஆயுள் நீளட்டும் என்றாலும் கட்டிய ஆயுள் முடியும் வரை அதனை விலக்கவோ, நீட்டவோ முடிவதில்லை. ஏனெனில்
இருகதியிலும் அகால மரணம் சம்பவிப்பதில்லை.
தேவர்களின் தலைவனான
இந்திரனை வானவர்கள் வணங்கினாலும் ஆயுள் முடிவுக்குவர, மனம்
தளர்ந்து இறத்தல் உறுதியாகும். அவனுக்கே இந்நிலை யெனில் மற்றவர்களின் நிலை கூறவும் வேண்டுமோ? அவர்களும் மனம் தளர்ந்து இறந்தவர்கள் ஏராளம்
அன்றோ.
எண்திசை வென்ற மாமன்னராயினும்,
சக்கராயுதத்தை பெற்ற சக்கரவர்த்தியாயினும்
இன்று வரை நிலையாக வாழ்ந்தவர் உண்டோ? நம்முடைய இறப்பும், பிறப்பும்
பழைய ஆடையை களைந்து புதிய ஆடையை அணிவது போலத்தான். பழைய வீட்டை விலக்கி புதிய இல்லத்தில் புகுவது போன்றதை
ஒக்கும். இவ்வுடம்பின் மீதுள்ள
பற்றினை முழுவதும் நீக்குவாயாக!’ என்றுரைத்தான்.
‘அண்ணலே, அழுகும் இவ்வுடலை தன்னது என்றெண்ணும் மனத்தினர்க்கே
இவை பொருந்தும். பிறவிக்கு காரணமான
பற்றை விடுத்து, சித்தநிலையை அடைய
விழைவோருக்கு இத்தகைய உரைகள் ஏனோ’ எனஅபயமதி பதிலுரைத்தாள்.
மேதகு சுதத்தாச்சாரியர்
அவர்கள் தீவினைகள் நம்மை விடாது தொடர்கின்றன, அதனால் ஒவ்வொரு பிறவியிலும் பெருந்துன்பங்கள் அடைகிறோம்
என்பதை தெளிவாக விளித்துள்ளார்கள். அதனால் இல்வாழ்வு நெறியை விட்டு விலகுதற்கு நாம் எப்போதும் அஞ்சுவதில்லை!’
என கூறினாள்.
மனத்துணிவும்,
உறுதியான அறிவும் அற்றவர்கள் அல்ல மென்மையான
பெண்டிர் என எண்ணி எனக்கு நீங்கள் அருளுரை வழங்கியுள்ளீர்கள். எனது உயிருக்கு நன்மை பயக்கும் என உணர்ந்து எற்றுக்கொண்டேன்.
எந்த ஒரு அச்சமும் இல்லை. இனி நான் யாது செய்ய என உரையுங்கள்’ என வணங்கி நின்றாள்.
அறிவையும்,
காட்சியையும் தன்னகதே கொண்டு, எண்ணிலடங்கா குணங்களைக் கொண்ட நம்முயிரே நாம்
என்பது ஆகும். ஐம்பொறிகளால் அறிய
முடியாததும், வடிவமில்லாததும்,
வினை மாசான மலமற்றதாயும், உறையினுள் உள்ளவாள் போன்று உடலினுள் இருந்தாலும் வேறானதும், வினை தன்மையற்றது மாகும் என்ற சிறப்பினை எண்ணலாயினர்.
----------------------
இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்
51) உறுதியைப் பெரிது மாக்கி உலகினுக்கு இறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினில் தெளிந்த மாட்சி அரதனத் திரயம் என்னும்
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதும் என்றார்.
சித்தர் வணக்கம்
52) ஈங்குநம் மிடர்கள் தீர்க்கும் இயல்பினார் நினைதும் ஏல் இவ்
ஓங்கிய உலகத் துஉம்பர் ஒளிசிகாமணியின் நின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்தர் ஆகித்
தீங்கு எலாம் அகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார்.
அருகர் வணக்கம்
53) பெருமலை அனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
திருமலி கடையின் நான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையிந் உயிர்கட் கெல்லாம் ஒருதனி விளக்கமாகித்
திருமொழி அருளும் தீர்த்த காரர்களே துயர்கள் தீர்ப்பார்.
ஆசார்யர் வணக்கம்
54) ஐவகை ஒழுக்கம் என்னும் அருங்கலம் ஒருங்கு அணிந்தார்
மெய்வகை விளக்கம் சொல்லி நல்லறம் மிக அளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போல் பஞ்சநல் லொழுக்கம் பாரித்து
அவ்வியம் அகற்றும் தொல்லா சிரியர்எம் அல்லல் தீர்ப்பார்.
உபாத்தியாயர் வணக்கம்
55) அங்க நூலாதி யாவும் அரில்தபத் தெரிந்து தீமைப்
பங்கவிழ் பங்கம் ஆடிப் பரமநன் னெறிப யின்றிட்டு
அங்கபூ வாதி மெய்ந்நூல் அமிழ்த அகப் படுத்து அடைந்த
நங்களுக்கு அளிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.
சர்வசாது வணக்கம்
56) பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக்கு ஏற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் அனைய ராகிச்
சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவர் அன்றி யாரே சரண்நமக்கு உலகின் ஆவார்.
------------------
இவ்வுலக துன்பங்களிலிருந்து
விடுவிக்கும் தன்மையை ஆராய்ந்தால், மூவுலகின் உச்சியில் உறைபவரும், எண் வகை வினைகளை வென்று, எண்வகை
சிறப்புகளைப் பெற்றவரும், எல்லாக்
குற்றங்களையும் நீக்கிய சித்தபரமேஷ்டியே யாவர். அவர்களே நம்பிறவித் துன்பங்களை நீக்குவதால், அவர்களை வணங்குவோம்.
மாமலை போன்ற காதிவினைகள்
நான்கின் பகையை வென்று, அதனால்
வரம்பிலா நான்மைகளைப் பெற்றவரும், இந்திரனால் தருவிக்கப் பெற்ற சமவசரணம் பெற்றவரும், அனைத்து ஜீவன்களுக்கும் விளக்கம் தரும் திவ்யமொழியை அருளிய
வரும், வீடுபேற்றினை பெறுக்கூடிய வரும், அந்நிலை எய்திய தீர்த்தங்கரர்களே பிறவித்துன்பத்தை
போக்க கூடியவர். அந்த அருகப் பெருமானை
வணங்குவோம்.
ஞானம், தரிசனம், சாரித்ரம், தவம், வீரியம் என்னும் ஐவகை ஒழுங்கங்களை அளிப்பவரும்;
கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை
எனும் பற்றின்மை, காமமின்மை முதலான
ஐவகை நடத்தைகளை ஏற்குமாறு செய்து ஆறுவிதமான அவிநயங்களை அகற்று பவரும்; எக்காலமும் நல்லாசிரியராய் திகழ்பவரும் ஆனவரின்
நல்லுரைகளே நம்பிறவித்துன்பத்தை போக்கும். ஆதலால் அந்த ஆச்சாரிய பரமேஷ்டியை வணங்குவோம்.
அங்க அகமங்களை பிழையின்றி
தெளிந்து, தீமையற்ற ஏழுநயங்களை
மேற்கொண்டு, சிறந்த நல்லொழுக்கங்களை
ஏற்றவர் உபாத்தியாய பரமேஷ்டியாவார். அம்மேன்மையை பெற்றவர்களை வணங்குவோம்.
மயங்கி உழலும் பிறவியை
அழிக்கும் சிறந்த திருவுருக்கு ஏற்றவராகிய, குற்றமற்ற குணங்கள் பெய்யப்பெற்று நிரம்பிய நன் கலமாகிய
வருமாகிய, மோக்ஷமார்க்கத்தை தவிர்த்து
வேறு சுகங்களக் சிந்திக்காத வருமாகிய சர்வ சாது பரமேஷ்டிகளை வணங்குவோம்.
---------------
57) இனையன நினைவை ஓரும் இளைஞரை விரைவிற் கொண்டு
தனைஅரச அருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னர் உய்த் திட்டு நிற்பக்
கனைகழல் அரச னையோ கையில்வா ளுருவி னானே.
இளைஞர் புன்முறுவல் செய்தல்
58) கொலைக்களஙம் குறுகி நின்றும் குலுங்கலர் குணங்கள் தம்மால்
இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் இயைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென உரைமின் என்றார்.
மலக்கிலா மனத்தார் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.
இளைஞர் மன்னனை வாழ்த்துதல்
59) மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம் செய்யாது
அறவியன் மனத்தை யாகி ஆருயிர்க்கு அருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
நிறைபுகழ் உலகங் காத்து நீடுவாழ்க என்று நின்றார்.
மன்னவன் மனமாற்ற மடைதல்
60) நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
மின்திகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்
அன்றியில் உருவம் மண்மேல் அவர்களுக் கரியது என்றால்
நின்றவர் நிலைமை தானு நினைவினுக்கு அரியது என்றான்
அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்
61) இடுக்கண்வந்து உறவும் எண்ணாது எரிசுடர் விளக்கின் என்கொல்
நடுக்கம் ஒன்று இன்றி நம்பால் நகுபொருள் கூறுக என்ன
அடுக்குவது அடுக்கு மானால் அஞ்சுதல் பயனின்று என்றே
நடுக்கமது இன்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்.
இதுவுமது
62) முன்னுயிர் உருவிற்கு ஏத முயன்றுசெய் பாவம் தன்னால்
இன்னபல் பிறவி தோறும் இடும்பைக் தொடர்ந்து வந்தோம்
மன்னுயிர்க் கொலையினால் இம் மன்னன்வாழ்க என்று
என்னதாய் விளையும் என்றே நக்கனம் எம்முள் என்றான்.
அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்
63) கண்ணினுக்கு இனிய மேனி காளைதன் கமல வாயில்
பண்ணினுக்கு இனிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக்கு அழகியது ஆண்மை அழகினுக்கு அமைந்த தேனும்
பெண்ணினுக்கு அரசி ஆண்மை பேசுதற்கு அரியது என்றார்.
மன்னனும் வியத்தல்
64) மன்னனும் அதனைக் கேட்டே மனமகிழ்ந்து இனியன் ஆகி
என்னைநும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனும் என்னை வளர்இளம் பருவந் தன்னில்
என்னைநீர் இனைய ராகி வந்ததும் இயம்புக என்றான்.
அபயருசியின் மறுமொழி
65) அருளுடை மனத்த ராகி அறம்புரிந் தவர்கட்கு அல்லால்
அருளுடை மறவ ருக்குஎம் வாய்மொழி மனத்திற்சென்று
பொருள இயல்பாகி நில்லா புரவல் கருதிற்று உண்டேல்
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.
வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்
66) அன்னண மண்ணல் கூற அருளுடை மனத்த னாகி
மன்னவன் தன்கை வாளும் மனத்திடை மறனும் மாற்றி
என்னினி இறைவன்நீயே எனக்கென இறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்.
---------------
சண்ட கருமன் விரைவாக
தூய சிந்தனை கொண்ட இளைஞரைக் கொண்டு பலி பீடத்தில் முன்நிறுத்தி, தான் தள்ளி நின்றான். மாரிக்கு பலியிடக்காத்திருந்த வேந்தன் தன் உரையிலிருந்த
வீரவாளினை உருவி ஓங்கினான். ஐயகோ!
நற்காட்சிக்கு உதாரணமாய்
இருந்த இருவரும் கொலைக்களத்தில் நின்றிருந்தாலும் மனம் கலங்காது நின்றனர். கூடியிருந்தமக்கள் ‘நாடாளும் மன்னன் நீடு வாழ்வானாக’ எனக்கூறுக என்றதும், இளைஞர் புன்னகை புரிந்தனர்.
‘ உலகியல் இன்பத்தினின்று
தெளிந்து நின்று, உயிர்களை எவ்விதத்திலும்
துன்புறுத்தாமல் அறம்காத்து, உலகவாழ்
உயிர்களிடத்து அருளைப் பொழிந்து, புகழ் நிறைந்த நாட்டைக்காத்து நீடூழிவாழ்க’ என்று வாழ்த்தினர்.
புன்முறுவல் பூத்தமுகத்துடன்
சற்றும் மனம் கலங்காமல் மரணத்திற் கஞ்சாமல் நின்ற இருவரையும் வியப்புடன் மன்னன் கண்டான்.
‘இளைஞரே இருவருக்கும் இறுதி வந்துள்ளதை
எண்ணாமல் ஒளிமுகத்துடன் இருப்பது எவ்வாறோ? பலிஇட வந்த என்னைக்கண்டு அஞ்சாமல் புன்முறுவல் பூத்தது எவ்வாறோ? என்று வினவிய அரசனைப்பார்த்து அபயருசி,
மன்னா பழம்வினை பயன் தரும் காலத்தில் நடக்கவேண்டியவை
நடந்தே தீரும். அதைக்கண்டு அஞ்சுவதால்
பயனேது. நல்லறவழி செல்வதால் நடுக்கமின்றி
நின்றோம்.
அரசே முற்பிறவி ஒன்றில்
நாங்கள் மாவினால் கோழி ஒன்றைச்செய்து, உயிருள்ள பொருளான பாவனை செய்து பலியிட்ட பாவத்தால் பலபிறப்புகள் எய்தி தொடர் துன்பங்கள்
எய்தினோம்.
இங்கு எண்ணற்ற உயிர்களை
பலியிட துணிந்துள்ளீர்கள்! இக்கொலை
பாவத்தால் இம்மன்னன் எத்தகைய தீங்கினை பெறுவானோ என்று எண்ணியே நகைத்தோம்’ என்றான் அபயருசி.
இவனது இனிய சொற்கள்
அங்குக் குழுமியிருந்தோரை வியப்புறச் செய்தது. ‘வீரமிக்க
இவ்வாண் மகனுக்கு ஏற்ற அழகேயாகும் இவன் சொற்கள்’ என்றனர். உடனுள்ள பெண்களுக்கு‘ அரசி
போன்ற இவள் வீரம் வார்த்தைகளுக் கடங்காது’ என்றனர்.
அபயருசியும்,
மக்களும் கூறியதைக் கேட்டு மன்னன் மனம்
மகிழ்ந்து இனியனாகி பழம் பிறப்பினையும், இம்மையில் பிறந்துள்ள குலமும், இல்லறம் நடத்தவேண்டிய இளம் பருவத்தில் தவவாழ்வை மேற்கொண்ட காரணத்தையும் கூறுக என்றான்.
‘அரசே யான்கூறும் சொற்களை
அருளுடைய மனத்தினரே கேட்பர். மயக்கமுடைய
தீ நெஞ்சினரால் ஏற்க வியலாது. அதனால் தாங்கள் எதை செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்யுங்கள். நடப்பது நடந்தேதீரும்’ என்றான் அபயருசி.
அபயருசி கூறுவதைக்
கேட்டு, மன்னன் அருளுடையவனாகி,
மனதில் தீயஎண்ணங்கள் விலகிட, ஓங்கியவாள் உறைக்கு திரும்பியது. ‘இளைஞரே, எனக்கு
நீயே இறைவன், உங்கள் முற்பிறவி
வரலாற்றையும், அப்போது அடைந்த துன்பங்களையும்
உரைப்பீராக’ என்றான்.
------------------
அபயருசியின் அறவுரை
67) மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக்கு ஏதம் நீங்கப்
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
அன்னமென் னடையி னாளும் அருகணைந் துருகும் வண்ண
மன்னவ குமரன் மன்னற்கு அறமழை பொழிய லுற்றான்.
இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.
68) அரசநின் னகத்து மாட்சி அகோபெரி தழகி தாயிற்று
உரை செய்தால் உறுதி யாயது உணர்ந்துகொண்டுயர்தி போலும்
விரைசெய்தார் வரைசெய் மார்ப வினவிய பொருளி தெல்லாம்
நிரைசெய்தே புகல்வன் யான்நீ நினைவொடு கேளிது என்றான்.
69) எவ்வளவு இதனைக் கேட்பார் இருவினை கழுவு நீரார்
அவ்வளவு அவருக்கு ஊற்றுச் செறித்துடன் உதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.
70) மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விருப்பை மாற்றும்
புலமவி போகத் தின்கண் ஆசையை பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோலச்
சிலைமலி நுதலி னார்தங் காதலின் தீமை செப்பும்.
71) பிறந்தவர் முயற்சி யாலே பெறுபயன் அடைவர் அல்லால்
இறந்தவர் பிறந்த தில்லை இருவினை தானு இல்லென்று
அறைந்தவர் அறிவி லாமை யதுவிடுத்து ஆறநெ றிக்கண்
சிறந்தன முயலப் பண்ணும் செப்புமிப் பொருண்மை என்றான்
இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்
72) அறப்பொருள் விளைக்கும் காட்சி அருந்தவர் அருளிற்று அன்றிப்
பிறப்புணர்ந்து அதனின் யாமே பெயர்த்துஉணர்ந் திடவும் பட்டது
இறப்பவும் இதன்கண் தேற்றம் இனிதுவைத் திடுமின் என்றான்
உறப்பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்க லுற்றார்.
------------
மக்களின் துயர் நீங்க
மேகம் மழை பொழிவது போல, அங்குள்ளோரின்
உள்ளங்கள் உருகும் படி மாரிதத்த அரசனுக்கு அறமழை பொழியத் தொடங்கினான் அபயருசி.
அரசன் மனம் நல்வழியில்
திரும்பியதற்கு வியந்த அபயருசி, ‘யான் எனது முற்பிறவி வரலாற்றைக் கூறுனால், அஃது உனது
உயிர் நலத்திற்கு உறுதியளிக்கும். தாங்கள் கேட்ட பொருளை தற்போது
கூற துவங்குகிறேன், கவனமுடன் கேட்பீராக’ என்றான்.
அரசே எவரொருவர் என்கதையை
கவனமுடன் கேட்கிறார்களோ அவரெல்லாம் உண்மையான அறத்தை அறிந்து, உயிரை சூழ்ந்த காதி, அகாதி வினைகளை விலக்கும் வழியை தேடுவர். வினையூற்று தடைபெற்று,
உதிர்ப்பும் உண்டாகும். பிறவி சுழற்சிக்கு அச்சம்
கொண்டு வீடுபேறு அடையும் நெறியை ஏற்பர். மனப்பக்குவம் எய்தி வாழ்வில்
சிறப்பினை எய்துவர் என்பது நிச்சயம்.’ என்றான் அபயருசி.
‘அரசே,
துர்நாற்றம் மிகுந்த இவ்வுடலிலுள்ள மனத்தினில் எழும் விருப்பு,
வெறுப்புகளை மாற்றும். பொறிவழி இன்பத்தை நாடும்
ஆசையைப் போக்கும். பலி செய்தல் போன்ற கொலை உணர்வை நீக்கும்;
தீயபெண்களின் மீதுள்ள காதலினால் வரும் தீமைகளை அறிவிக்கும்.
யான் கூறும் நல்லறம், மனிதராப் பிறந்தோர் தம்முயற்சியால் பெறுதற்கரிய
நற்பயன்களைப் பெறச்செய்யும். மறுமையை மறுப்பது, இருவகையான வினைகளை ஏற்காத மடமையை விலக்கி, சிறந்த அறநெறி வழிசெல்லும் முயற்சியை வழங்கும்.’ என்றான்.
என் பழம் பிறப்பின்
வரலாற்றை, நல்லறத்தை வளர்க்கும்
சுதாச்சாரியார், தம் தந்தைக்கு அருளிய போழ்து யாமும் அறிந்திட்டோம்.
பின்னர் எம்மாலும் அறியவும் முடிந்தது. ஆகவே யாம்
கூறும் அறவுரையினால் மிகவும் தெளிவு பெறுங்கள்.’ என தன்கதையை கூற துவங்கினான்.
அங்கிருந்த மாந்தர்களும் மிகவும் பணிந்து அவனுரையைக் கேட்கலாயினர்.
முதற்சருக்கம் முற்றிற்று.
--------------------------
இரண்டாவது சருக்கம்
உஞ்சயினியின் சிறப்பு
73 ) வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபதம் அவந்தி யாம்அதின்
விளைபயன் அமரரும் விரும்பு நீர்மையது
உளதொரு நகரதுஉஞ் சயினி என்பவே.
அசோகன் சிறப்பு
74) கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திரன் எனுந்திறல் அசோகன் என்றுளன்
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
அந்தமில் உவகையின் அமர்ந்து வைகுநாள்
இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு
75) இந்துவோர் இளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொடு தனயன் தந்தனள்
எந்துயர் களைபவன் எசோத ரன்என
நந்திய புகழவன் நாமம் ஓதினான்.
யசோதரன் மணம்
76) இளங்களிறு உழுவையின் ஏதம் இன்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை அமிழ்தமுன் மதியை வேள்வியால்
உளங்கொளப் புணர்ந்துடன் உவகை எய்தினான்.
யசோமதியின் பிறப்பு
77) இளையவள் எழில்நலம் ஏந்து கொங்கையின்
விளைபயன் எசோதரன் விழைந்து செல்லுநாள்
கிளையவர் உவகையிறல் எழும ஈன்றனள்
வளையவள் எசோமதி மைந்தன் தன்னையே.
-------------------------
நீர் வளத்தால் வயல்
வளம் முதலியன நிறைந்த நகரங்களைக் கொண்டது அவந்திநாடு. அளவற்ற சுகத்திற்கிடமாக பலபொருட்களை கொண்டதானதால் அமரர்களும் விரும்பும் வண்ணமாக,
தலைநகராக விளங்கியது உஜ்ஜயினியாகும்.
மதக்களிப்பில் கட்டுத்தறிகளை
முறிக்கும் யானைகளையுடைய வேந்தன் அசோகன் என்பான், தேவேந்திரனே என்று சொல்லத்தக்க வலிமைகொண்ட அவன் சந்திரமதி என்னும்
பட்டதரசியைக் கொண்டவன். அளவற்ற இல்வாழ்க்கை இன்பத்தினை எய்தியவன்.
முழுநிலவு போன்ற சந்திரமதி
இளம்பிறை யொத்த ஒருமகனை ஈன்றெடுத்தாள்.
மன்னன் தன் இடர்களை களையவந்தவன் என எண்ணி அவனுக்கு யசோதரன் என்னும் பெயர்
சூட்டினன்.
களிறு போன்ற நடையும், புலியை போன்ற வீரமும் கொண்ட யசோதரன்
வளம் பொருந்திய இளமையும், துன்பங்களின்றியும் வளர்ந்து இளவரசனானான்.
அப்போது அணிகலன்களை அணிந்த அமிர்தமதி என்னும் அழகிய மாதை ஒளபாசன விதிமுறையுடன்
மனம் செய்து கொண்டு கூடி இன்புற்றிருந்தான்.
இளவரசனும் அமிர்தமதியும் இணந்து இன்புற்றிருந்த நாளில், உறவினர் மனம் மகிழும் வண்ணம், யசோமதி எனும் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்.
----------------------
இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.
78) மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயிர் உச்சி வெண்மையை
உற்றுறா வகையதை உளைந்து கண்டனன்.
இளமை நிலையாமை
79) வண்தளிர் புரைதிரு மேனி மாதரார்
கண்டுஅகல் உறவரு கழிய மூப்பிது
உண்டு எனில் உளைந்துஇகல் உருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க்கு என்றன்.
துறவின் இன்றியமையாமை
80) இளமையில் இயல்பிது வாய என்னின்இவ்
வளமையில் இளமையை மனத்து வைப்பதுஎன்
கிளைமையும் அனையதே கெழுமு நம்முளத்
தளைமையை விடுவதே தகுவ தாம்இனி.
81) முந்துசெய் நல்வினை முளைப்ப இத்தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வம் எய்தினோம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்
இந்திர வுலகம் எய்தல் பாலதே.
யசோதரனுக்கு முடி சூட்டுதல்
82) இனையன நினைவுறீஇ யசோதரன் எனுந்
தனையனை நிலமகள் தலைவ ன்ஆகுஎனக்
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன்
புனைவளை மதிமதி புலம்பப் போயினன்.
யசோதரன் அரசியல்
அசோகன் துறவு
83) குரைகழல் அசோகன் மெய்க் குணதரன் பணிந்து
அரைசர்கள் ஐம்பதிற் றிருவர் தம்முடன்
உரைசெயல் அருந்தவத் துஉருவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ.
84) எரிமணி இமைக்கும் பூணான் இசோதரன் இருநி லத்துக்கு
ஒருமணி திலதம் போலும் உஞ்சயி னிக்கு நாதன்
அருமணி முடிகொள் சென்னி அரசடிப் படுத்து உயர்ந்த
குருமணி குடையின் நிழல் குவலயம் காவல் கொண்டான்.
--------------
மன்னவன் அசோகன் ஒப்பனையின்
போது நிலைக்கண்ணாடியில் தன் தலைமுடி ஒன்று நரைத்திருந்தததை கண்ணுற்றான். இளமை நிலையில்லாதது முதுமை வந்துள்ளது
என்பதைக் காட்டுவதாக எண்ணி மனம் வருந்தினான்.
இளமைப் பருவத்தின்
இயல்பே இப்படித்தான் என்றிருப்பின் தானும், சுற்றத்தாரும் அவ்விளம்பருவத்தை போற்றுதல் வீணே! இனி மனதில் எழும் பந்தங்களை விலக்குதல் நல்ல செயலாகும் என அசோகன் எண்ணினான்.
முற்பிறப்பில் செய்த
நல்வினைப் பயனால் அவ்வரச போகமும், எண்ணிய பொருளும் கிடைத்தது. அதனால் இப்பிறப்பில் மேலும்
நல்வினைக்கு வித்திட்டால் அடுத்து அமர சுகமும் கிட்ட வாய்ப்புள்ளது என நினைத்தான்.
துறவுச்சிந்தனையை எட்டிய
மன்னன் அசோகன், அந்நிலமகளின்
பொறுப்பை தன் மைந்தன் யசோதரனுக்கு வழங்கி, பின் துறவறம் ஏற்க
புறப்பட்டான். அவன் மனைவி சந்திரமதி தனித்து நின்று வருத்தம்
கொண்டாள்.
அழகு நிரம்பிய உஜ்ஜயினிக்கு
தலைவனாக, பலசி ற்றரசர்கள்
கீழ்ப்பணியச் செய்த, வெண்கொற்றக்குடையின் நிழலில் நாடாளும் பொறுப்பினை
ஏற்றிருந்தான்.
--------------
85) திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்தெறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன னாகி
உருத்தெழு சினத்தில் சென்ற உள்ளமெய் மொழியோடு ஒன்றி
அருத்திசெய்து அருத்த காமத்து அறத்திறம் அறத் துறந்தான்.
86) அஞ்சுதல் இலாத தெவ்வர் அவியமேல் அடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளும் நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
துஞ்சுத லிலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான்
87) தோடலார் கோதை மாதர் துயர்இயல் தொடுத்து எடுத்தப்
பாடலோடு இயைந்த பண்ணின் இசைச்சுவைப் பருகிப் பல்கால்
ஊடல்அங் கினிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும்
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.
யசோதரன் பள்ளியறை சேர்தல்
88) மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக்
கொற்றவே லவன்தன் கோயிற் குளிர்மணிக் கூடம்ஒன்றில்
சுற்றுவார் திரையின் தூமங் கமழ்துயில் சேக்கை துன்னி
கற்றைவார் கவரி வீசக் களிசிறந்து இனிது இருந்தான்.
அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்
89) சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல அணிந்த அல்குக் கலையொலி கலவி யார்ப்ப
நலம்நவின்று இனிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கல்அம் குழல்பின் தாழ அமிழ்தமுன் மதிய ணைந்தாள்.
இருவரும் இன்பம் நுகர்தல்
90) ஆங்கவள் அணைந்த போழ்தில் ஐங்கணைக் குரிசில் தந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந்து அலைப்பப் புல்லி
நீங்கலர் ஒருவ ருள்புக்கு இருவரும் ஒருவ ராகித்
தேங்கமழ் அமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளார்.
இதுவுமது.
91) மடங்கனிந்து இனிய நல்லாள் வனமுலைப் போகம் எல்லாம்
அடங்கலன் அயர்ந்து தேன்வாய் அமிர்தமும் பருகி யம்பொன்
படம்கடந்து அகன்ற அல்குல் பாவையே புணைய தாக
இடங்கழித்து ஒழிவில் இன்பக் கடலினுள் மூழ்கி னானே.
இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.
92) இன்அரிச் சிலம்பும் தேனும் எழில்வளை நிரையும் ஆர்ப்ப
பொன்னவிர் தாரோடு ஆரம் புணர்முலை பொருது பொங்க
மன்னனு மடந்தை தானும் மதனகோ பத்தின் மாறாய்த்
தொன்னலம் தொலைய உண்டார் துயில்கொண்ட விழிகள் அன்றே.
-----------------------
அரசன் யசோதரன், தான் பெற்ற அளவிலா செய்வத்தினால் செருக்குடன்,
காமம் முதலிய வேட்கை கொண்டு சலனமடைந்த மனம் உடையவனானான். சினம் கொள்பவனாக பேச்சும்,
செயலும் உடையவனாகி, பொருளாசை கொண்டு நல்லறத்தை
கைவிட்டான்.
தன்னை அடிபணியா மன்னர்கள்
மீது படை எடுத்துச் செல்வதும், அதற்கான சூழ்ச்சி சிந்தனியுடனும், அவர்கள் நாட்டையும்,
பொருளையும் கவரும் முறைகளுக்கான ஆராய்ச்சியுடன் இருந்ததினால் தூக்கம்
இன்றி தவித்தான்.
பூமாலை அணிந்த மகளிரின்
பாடலோடும், இசையோடும் இன்பத்தை
நுகரும் வண்ணமாக பொழுதைக் கழித்து வந்தான். நாட்டிய மகளிரின்
ஊடல் பொருந்திய நாட்டியத்தில் நாட்டம் கொண்டு களித்தான். இவ்வாறு
பொருளாசை யுடனும், புலனின்பத்துடனும் மூழ்கி காலத்தை கழித்தான்.
ஒருநாள் வருகை புரிந்திருந்த
சிற்றரசர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்ட அந்தப்புர மண்டபத்துக்கு சென்றான்.
பள்ளியணையில் அமர பணிப்பெண்கள் சாமரம் வீசினர். தன் அன்பு மனையாளை எதிர்நோக்கி காத்திருந்தான்.
பூமாலை சூடிய அழகிய
கூந்தலையுடைய அமிர்தமதி யசோதரன் இருந்த மண்டபத்திற்கு வந்தடைந்தாள். பின் இருவரும் காம இன்பத்தில் வயப்பட்டு,
ஒருவரை ஒருவர் நீங்காத நிலை பெற்றனர். பின் உறக்கத்தில்
ஆழ்ந்தனர்.
---------------
பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்
93) ஆயிடை அத்தி கூடத்து அயலெழுந்து அமிர்தம் ஊறச்
சேயிடைச் சென்றோர் கீதம் செவிபுக விடுத்தல் ஓடும்
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே.
அரசி மதிமயங்குதல்
94) பண்ணினுக் ஒழுகு நெஞ்சில் பாவைஇப் பண்கொள் செவ்வாய்
அண்ணலுக்கு அமிர்தம் ஆய அரிவையர்க்குஉரிய போகம்
விண்ணினுக்கு உளதுஎன்று எண்ணி வெய்துயிர்த்துஉய்தல் செல்லாள்
மண்ணினுக்கு அரசன் தேவி மதிமயக்கு உற்றிருந் தாள்.
பெண்மையின் புன்மை
95) மின்னினு நிலையின்று உள்ளம் விழைவு உறின் விழைந்த யாவும்
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும்
பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா
என்னும் இம் மொழிகள் அந்தோ இலக்கியம் ஆயினாளே
குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்
96) துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
இன்னிசை அவனை நெஞ்சத்து இருத்தினள் இருந்த எல்லை
துன்னினன் தோழி துன்னித் துணைவர்இல் தமியரே போன்று
என்னிது நினைந்தது உள்ளத்து இறைவிநீ அருளுக என்றாள்.
அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்
97) தவழும் மாமதிசெய் தண்தார் மன்னவன் தகைமை என்னும்
கவளம் ஆர் அகத்து என்னுள்ளக் கருங்களி மதநல் யானை
பவளவாய் மணிக்கை கொண்ட பண்ணியல் தோட்டி பற்றித்
துவளுமாறு ஒருவன் எல்லி தொடங்கினன் என்றாள்.
தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.
98) அங்கவள் அகத்துச் செய்கை அறிந்தனன் அல்லவே போல்
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிகல் கண்ட
பங்கமது உள்ளி உள்ளம் பரிவு கொண்டனை என் என்றாள்.
அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.
99) என்மனத்து இவரும் என்னோய் இவண் அறிந் திலைகொள் என்றே
தன்மனத் தினை அவட்குத் தானுரைத்திடுதல் ஓடும்
நின்மனத்து இலாத சொல்லை நீபுனைந்து அருளிற்று என்கொல்
சின்மலர்க் குழலி என்றே செவிபுதைத்து இனிது சொன்னாள்.
அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.
100) மாளவ பஞ்சம் அப்பண் மகிழ்ந்தவன் அமுத வாயில்
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி
நாளவம் ஆகி இன்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளைவு உண்கண் மாதே மறுத்துரை மொழியின் என்றாள்.
---------------------
யசோதரனும், அமிர்தமதியும் பஞ்சணையில் உறங்கிக் கொண்டிருந்த
போது, யானைச்சாலை (தொழுவம்) யிலிருந்து இனிமையான இசையொலி எங்கும் பரவியது. அதனை கேட்டு
தூக்கத்திலிருந்து அமிர்தமதி எழுந்தாள். அவ்விசையைக் கேட்டு,
அனல் பட்ட மெழுகுபோல் உருகி தன்னிலை மறந்தாள்.
இசைக்கு மயங்கும் பாவையான
அமிர்தமதி, சிவந்த வாயினை
உடைய இசையோனுடன் கூடி மகிழ்வது பேரின்பமாகும் என நினைத்தாள்.
அந்நினைப்பிலிருந்து மீளாது பெருமூச்செரிந்தாள். மதி மயக்கத்தில் அறிவிழந்தாள்.
மனித மனமோ மின்னலைப்
போன்று நிலையில்லாதது. விரும்பியதை
எல்லாம் சீர்தூக்காமல் அடையத்துடிக்கும் இயல்பினது. அமிர்தமதியும்
அவ்வாறே தன் செயலுக்கு பழி பாவத்திற்கு அஞ்சாது, இழிகுலத்தவளாகி, குலப்பெருமையைக் தவறவிட்டாள். அனைவரும் தூற்றும் இடி
மொழிக்கு எடுத்துக்காட்டாகி நின்றாள்.
அவ்விரவு கழிய அமிர்தமதி
தனித்து, இனிய கீதம் பாடிய
பாகனை காதலனாக எண்ணி இருந்த சமயத்தில், தோழி குணவதி அவளிடம்‘
தலைவனை பிரிந்த மகளிரைப்போல மனதில் உருத்தும் எண்ணத்தை எடுத்தருளுக’
என வேண்டினாள்.
மன்னனின் காமப்பசியை
போக்கும் கவளம் போன்றிருந்த அமிர்தமதி மனத்தில் மதயானை போனதையும், அதனை இனியகீதம் பாடிய பாகன் அங்குசத்தால்
தாக்கியதையும் வருத்தத்துடன் சொன்னாள். அவ்வழியே தன் தீயகாம இச்சையை
வெளிப்படுத்தினாள்.
அரசியின் எண்ணத்தை
புரிந்த குணவதி என்னும் அத்தோழி, அறிந்தும் அறியாதவள் போல், ‘அரசியாரே, இழிவான சொப்பனப் பொருளை, நேரில் கண்டதாக எண்ணி மனம் வருந்தலாமா?
உன் பெருமை நன்றல்லவா!’ என பகன்றாள்.
காமக்கடலில் மூழ்கிய
அரசியும் தன் வேட்கையை வெட்கம் விட்டு அவளிடன் தெரிவித்தாள். அதிர்ச்சியடைந்த அத்தோழி ‘அரசியே, மனதிற்கு ஒவ்வாத சொற்களை நீ, கற்பனையாக சொல்வது எதனால்?’ என்றாள்.
அரசியும் மதிமயங்கி
தோழியிடம், ‘மாளவ பஞ்சமம்
எனும் ராகத்தை மகிழ்ந்து கேளாது போயின் எனக்கு இக்கதி நேர்ந்திருக்காது. நீ என் வார்த்தையை மறுத்து பேசினால், இப்போதே என் உயிர்பிரிந்து
விடும்’ என அச்சுறுத்தினாள்.
--------------------
அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.
101) என்னுயிர்க்கு அரண் நின்னோடு இன்னிசை புணர்த்த காளை
தன்னின் மற் றொருவ ரில்லை தக்கது துணிக என்ன
என்னுயிர்க்கு ஏதம் எய்துஇனிது பழி பெருகும் என்றே
துன்னும்வாய் அவளோடு எண்ணித் தோழியும் உன்னி னாளே.
தோழி, பாகனைக் கண்டு மீளல்.
102) மழுகிருள் இரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்
ஒழுகிய மிடற்று ஓர் காளை உள்ளவன் யாவன் என்றே
கழுதுரு அவனை நாடிக் கண்டனள் கண்டு காமத்
ஒழுகிய உள்ளத் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள்
(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்
103) மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்து
அன்னவன் அத்தி பாகன் அட்டமா பங்கன் என்பான்
தன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன்
என்னைநீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கீ தென்றாள்..
104) நரம்புகள் விசித்த மெய்யன் நடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரில்
குரங்கினை அனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சிலபல் என்றாள்.
105) பூதிகந் தத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்கது அன்றால் அவன்வயின் தளரும் உள்ளம்
நீதவிர்ந் திட்டு நெஞ்சின் நிறையினைச் சிறைசெய்க என்றாள்
கோதவிழ்ந் திட்ட உள்ளக் குணவதி கொம்ப னாளே
அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்
106) என்றலும் இவற்றி னால் என் னிறைவளை யவன்கண் ஆர்வம்
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும்
ஒன்றிய அழகும் கல்வி ஒளியமை குலத்தோடு எல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுதல் அன்றோ
107) காரியம் முடிந்த பின்னும் காரண முடிவு காணல்
காரியம் அன்றிது என்றே கருதிடு கடவுள் காமன்
ஆருழை அருளைச் செய்யும் அவன் நமக் கனைய னாக
நேரிழை நினைந்து போகி நீடலை முடியிது என்றாள்.
------------------
மதி மயங்கிய அரசி தன்தோழியிடம்
‘ அவனது வாயிலிருந்து வெளியேரும் பண்ணை
கேளாது போனாயின் நாம் இருவரும் தோழியர் அல்லர். என் வார்த்தையை மறுத்துப் பேசுவாயேயாயின் என் உயிரும் இப்போதே
பிரிந்துவிடும்’ என்றாள்.
‘என் உயிருக்கு அரணாய்
இருப்பது நீயும், இசைக்காரனும்
ஆகும். இனி என்ன செய்யவேண்டும்
என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்றாள் அரசி. இவள் உயிருக்கு
ஏதும் பங்கம் ஏற்பட்டால்
பழிஉண்டாகு மென்றெண்ணி இனி என் செய்வது என நினைத்தாள்.
தோழியும் அவ்விரவில்
சென்று, அவ்விசைபாடிய குரலுக்கு
சொந்தக்காரனை தேடினாள். அங்கே பேயின்
உருவம் போன்ற அட்டபங்கனைக் கண்டாள். அவனது கீழான தோற்றத்தைக்கண்டு, காமத்தில் மூழ்கியுள்ள அரசியின் மனம் மாறிவிடும் என்றெண்ணி மகிழ்வுடன் திரும்பினாள்.
அரசியிடன் திரும்பிய
குணவதி ‘ உன் மனதைக் கவர்ந்த இசையைப்
பாடியவன் அட்டபங்கனான யானைப்பாகன் ஆவான். அவனது இழிந்த உருவத்தை கண்டதும் அவனிடம் ஏதும் கூறாமல் கைகளால் கண்ணை மூடி கொண்டு
திரும்பி விட்டேன் ‘ என்றாள்.
மேலும் ‘உடலில் எட்டு விதபங்கங்களை உடையவன்,
(நரம்புமுடிச்சுகள், கழுதைநடை, சுருங்கியகையும்,
விரலும் கொண்டிருத்தல், சிறுமுகமுடைமை, சினம்கொண்ட குரங்கு போலிருத்தல், கூனன், குழி விழுந்த கண்ணுடையவன், நெருக்கமோ, வரிசையோ இல்லாத பற்கள் உடையவன்) அட்டபங்கனான அவன் மீது முடை நாற்றம் வீசுகிறது. உடல் எங்கும் புண்களை உடையவன், அவன் குலமோ தகாத ஒன்று. அவனிடத்து விட்ட மனதை நீக்கி, கற்பு நெறியில் உள்ளத்தை கட்டுப்படுத்துவாயாக’
என்றாள்.
அரசி குணவதி கூறியதை
ஏற்காமல்,’ நீ கூறிய குற்றங்கள்
ஒன்றும் பெரிதல்ல. அதனால் ஏதும்
நேரப்போவதில்லை. செல்வம்,
உடற்கட்டு, ஒளிவீசும் தன்மை, கல்வி, உயர்குலம் ஆகிய யாவும் நெஞ்சினைக் காதலிப்பவளுக்கு பொருந்தாது’ என்றாள். காமக்கடவுள் யாரைக் காதலிக்க கூறுகிறானோ அவனையே காதலிக்கிறோம்.
எனவே உடன் சென்று காரியத்தை நீ முடி’ என்றாள்.
-----------------
108) தேவிநீ கமலை ஆவாய் திருஉளத்து அருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோய் அருநவை ஞமலி ஆகும்
பூவின்வார் கணையன் என்னே புணர்த்தஆறு இதனை என்ன
நாவினால் உளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.
இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.
109) ஆடவர் அன்றி மேலார் அருவருத்து அணங்க னாரும்
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந்துஉயர்தற் காகப்
பீடுஉடை அயனார் தந்த பெருமக ளிவள் என்றுள்ளே
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள் .
110) தனிவயின் இகுளை யானே தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல்நாள்
முனிவினை மன்னன் தன்மேல் முறுகினள் ஒழுகு முன்போல
இனியவ ளல்லள் என்கொல் எனமனத்து எண்ணி னானே..
மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்
111) அரசவை விடுத்து மெய்யால் அறுசினன் ஒப்ப மன்னன்
உரையலன் அமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயில் என்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடம் துன்னி னாளே.
மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.
112) துயிலினை ஒருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவடன் பின்னே கரந்தனன் ஒதுங்கி யாங்கண்
செயலினை அறிதும் என்று செறிந்தனன் மறைந்து நின்றான்.
அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்
113) கடையன்அக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலம் செல்ல வீர்த்திட்டு இருகையி னாலும் ஓச்சிப்
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க என்றே.
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே
அரசி மூர்ச்சை யெய்துதல்
114) இருளினால் அடர்க்கப் பட்ட எழில்மதிக் கடவுள் போல்
வெருளியான் மதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்ற ளாகித்
தெருள்கலான் உரையும் ஆடாள் சிறிதுபோது அசையக் கண்டே
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.
அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்கா ரணம் கூறல்
115) தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக்கு இறைவன் தன்னோடு
ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை யிருந்து கண்டாய்
வெய்யபா வங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்தது என்றாள்.
அரசியின் உறுதிமொழி
116) பொற்பகம் கழுமி யாவும் புரந்தினிது அரந்தை தீர்க்கும்
கற்பகம் கரந்து கண்டார் கைஅகன் றிடுதல் உண்டோ
எற்பகம் கொண்ட காதல் எனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந்து அருளு காளை துணைவரா பவரும் உண்டோ.
-----------------
அரசியின் காதல் மயக்கத்தினைக்
கண்டு மனம் நடுங்கி குணவதி ‘ திருமகளைப் போன்ற அழகியான நீ, தொழுநோயால் பாதிக்கப்பட்ட,
குற்றமுடைய நாயைப் போன்ற அவனை காதலிக்க வைத்த மன்மதன் செயல் வியக்கத்தக்கது’
என வருந்தினாள்.
பின்னர் தோழியால் கூட்டு
விக்கப்பட்ட அட்டபங்கனுடன், தனியான இடத்தில், பெருக்கெடுத்த
காமம் உதிர கூடிக்கலந்தாள். இத்தீயபழக்கம் தொடரும் வேளையில்;
மன்னன் தன் மனைவி முன்போல தன்மீது இனியவளாய் இன்றி வெறுப்புடன் காண்பதை
உணர்ந்து காரணம் என்ன என மனதிற்குள் எண்ணினான்.
மன்னன் ஒருநாள் அரசவை
முடிந்து, அமைதியாக ஏதும்
பேசாதவனாய், படுக்கையில் உறங்குவது போல் படுத்திருந்தான்.
அங்கு வந்த அமிர்தமதி மன்னன் உறங்கிவிட்டான் என தவறாக எண்ணி,
தோழி ஏற்பாடு செய்த தனியிடத்தில் அட்டபங்கனைக் காணச்சென்றாள்.
பொய்த்தூக்கத்தை நீக்கிய
மன்னன், ஆங்கே என்ன நிகழ்கிறது
என்பதை காண மெதுவாக நடந்து சென்று ஒருபுறமாக மறைந்து நின்றான்.
அங்கே யானைப்பகன் மலர்
போன்ற அமிர்தமதியின் கூந்தலைப் பிடித்து, தரைமீது தள்ளினான். பின்
ஏன் இவ்வளவு தாமதம் என்று இருகைகளாலும் ஓங்கி பலமுறை அடித்தான். அவள் இடையில் காலால் மாறிமாறி உதைத்தான். அரசியும் ஐயோ
என சிறிது நேரம் மயங்கிக் கிடந்தாள். யானைப்பகனோ அச்சம் கொண்டவனாய்
அவள் பாதத்தில் தலை வைத்து வணங்கினான்.
கண்விழித்த அரசி ‘அன்பரே கோபம் கொள்ள வேண்டாம்,
நாடாளும் என் கணவனுடன் அரசவையில் யான் இருக்க வேண்டியதாயிற்று அதனால்
இத்தாமதம்’ என வருந்தினாள். ‘ காளையைப்
போன்ற உன்னை விட மற்றோர் துணை எனக்கேது, சொல்லியருள்வாய்’
என்றாள்.
------------
மறைந்து நின்ற மன்னனின் செயல்
117) என்றலும் ஏனை மன்னர் எரியெழ விழித்துச் சீறிக்
கொன்றஇவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவமல் என்றே
ஒன்றினன் உணர்ந்த துள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தெளிந்துணர் எழுந்ததன்றே
118) மாதரார் எனையர் ஏனும் வதையினுக் குரியர் அல்லர்
பேதைதான் இவனும் பெண்ணின் அனையனே பிறிது ஒன்றுண்டு
ஏதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளில் (றுண்
தீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலும் திறமன்று என்றான்.
119) இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில்
புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே
கனவரை யனைய மார்பன் கடகமழ் அமளி யேறித்
தனிமுனி களிறு போலத் தான் நினைவு எய்து கின்றான்.
மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
120) எண்ணம் அதலாமை பண்ணும் இல்பிறப்பு இடிய நாறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்
திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடுசிதைக்கும் சிந்தை
கண்ணொடு கலக்கும் அற்றிக் கடைப்படுகாம் என்றான்.
இதுவுமது
121) உருவினொடு அழகு தானும் ஒளியமை குலனும் பேசின்
திருமகள் அனைய மாதர் இவளையும் சிதையச் சீறிக்
கருமலி கிருமி யன்ன கடைமகற்கு அடிமை செய்த
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்பது என்றான்
மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்
122) மண்ணியல் மடந்தை தானும் அருவினர்க்கு உரியள் அல்லள்
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணியல் அதுவது அன்றோ பெயர்கமற்று இவர்கள் யாமும்
கண்ணிய இவர்கள் தம்மைக் கடப்பதே கருமம் என்றான்.
---------------------
அமிர்தமதியின் துரோகச்
செயலை வேறாய் மறைந்திருந்து கண்ட யசோதர மன்னனின் கண்களில் தீப்பொறி பறக்க,
‘ இவ்விருவரையும் வாளால் வெட்டி விழ்த்தி
காலனுக்கு விருந்திடுவேன் என்று ஆவேசப்பட்டான். அவள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியை அவன் வாளும் உணர்ந்தது.
அப்பொழுதே விழிப்புணர்வு
பெற்று தெளிந்த மன்னன் அச்செயலை தடுத்து நிறுத்தினான். எத்துனை கொடுமையராயினும் பெண்கள் கொலைத்தண்டனைக்கு உரியவரல்லர், மேலும்
அறிவில்லா இப்பாகனும் பெண்டிருக்கு ஒப்பானவனே. பகைவரசர்களை வெல்லும் இவ்வாளால் அற்பர்களை கொல்ல பயன்படுத்துவது
வீரமாகாது என எண்ணினான்.
அவ்வித சிந்தனையுடைய,
மலை போன்ற மார்பினையுடைய மன்னன் இழிசெயல்
புரிந்த அவ்விருவரையும் தாழ்வாக எண்ணி, பெண்களால் அடையும் சிற்றின்பத்தை வெறுத்து நீக்கிய மனத்தினாக திரும்பினான்.
கோபமுடன் தனித்து நிற்கும் யானை போல மலரணையில்
அமர்ந்து சிந்திக்கலானான்.
திருமகளை யொத்த இவளுடைய
மனதை சிதைத்து, சாக்கடையில் நீந்தும்
புழுபோல கடை மகனுக்கு அடிமைப்படுத்த தூண்டிய அக்காமனை அப்போதே துறந்தான். மண்மகளும் யாரிடம் உள்ளாளோ அவருக்கே சொந்தமாக
மாட்டாள். நல்வினை உள்ளவரிடமே சேர்வாள்.
அதுபோல பெண்களால் பெறும் சுகமும் நிலையற்றதே.
அதனால் மண்ணாசையையும், பெண்ணாசையையும் என்னை விட்டு விலகட்டும்,
உரியவருக்கே அவை சென்று சேரும்,
அதனை துறப்பதே நலம் பயக்கும் என்றெண்ணினான்.
----------------
123) மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை
சுற்றம் ஆயவர்கள் சூழத் துணிவில் இருந்த எல்லை
மற்றுமா மன்னன் தேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பால் இருந்தாள்.
இதுவுமது
124) நகைவிளை யாடல் மேவி நரபதி விரகில் நின்றே
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்
மிகைகமழ் நீரில் ஏற்ற மெல்லியல் ஏறி னாளே.
இதுவுமது.
125) புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளல் இவ் வுருவிற்று ஆய
இருநிற மலரி னால் இன்று இவள் உயிர் ஏகல் உற்ற
அரிதினில் வந்தது இன்றென்று அவளுடன் அசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனன் இருந்தான்.
126) ஆயிடை அரசன் ஊள்ளத்து அரசினை விருப்ப எண்ணித்
தாய் அமர் கோயில் எய்திச் சந்திர மதிதன் முன்னர்ச்
சேயிடை இறைஞ்ச மற்றுஇத் திரைசெய்நீர் உலகம் எல்லாம்
நீஉயர் குடையின் வைகி நெடுதுடன் வாழ்க என்றாள்.
சந்திரமதி ஐயுறல்.
127) மணிமருள் உருவம் வாடி வதனபங் கயமு மாறா
அணிமுடி யரசர் ஏறே அழகழிந்து உளதுஇது என்கோ
பிணிஎன எனது நெஞ்சிற் பெருநவை உறுக்கு ஐய
துணியலென உணரச் சொல்வாய் தோன்றல்நீ என்று சொன்னான்
அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.
128) விண்ணிடை விளங்கும் காந்தி மிகுகதிர் மதியம் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருள் பகுதி சேரக்
கண்ணிடை இறைவி கங்குல் கனவினில் கண்ட துண்டஃது
எண்ணுடை உள்ளம் தன்னுள் ஈர்ந்திடு கின்றது என்றான்
---------------
மறுநாள் நிலையாமை உணர்ந்தாலும்
துறவு கொள்ளத்துணியா மனமுடன், யான் அறிந்த ரகசியம் பிறர்க்கு தெரியா வண்ணம் சகஜமாய் அரசன் பரிவாரங்களுடன் வீற்றிருந்தபோது,
பட்டத்துராணி அமிர்தமதி வழமை போல் முறைப்படி
வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.
அரசன் பொய்யான அன்புடன்
கையிலிருந்த நீலமலரால் மெதுவாக அவளை தட்ட, அதனைத் தாங்காதவள் போன்று பொய்யாக தரையில் வீழ்ந்தாள். பின்னர்,
சேடியர் பனிநீர் முதலயவற்றால் தேற்றத்
தெளிந்தெழுந்தாள்.
இவள் உயிர் பிரியாமல்
நின்றது என வெறுப்பாக எண்ணி, அவளைப் பார்த்து ஏளனச் சிரிப்பை உதிர்த்து, பெருமூச்சு விட்ட படியே அவ்விடம் விட்ட கன்றான்.
துறவு ஏற்கத் துணிந்த
மன்னன் மூத்தோரிடம் ஆசிபெற தன் தாய் இருந்த அரண்மனைக்குச் சென்றான். தொலைவில் வணங்கி நின்ற மகனைக் கண்ட தாய் சந்திரமதி
‘நிலமுழுதும் நின் கொற்றைக்குள் கொண்டு,
நீ நீடுழிவாழ்க’ என்று வாழ்த்தினாள்.
மேலும் அவன் முகவாட்டம்
கண்டு வருந்தி ‘ மகனே, தாமரை போன்ற உன் முகம் வாடியது ஏன். நோய் வாய்ப்பட்டுள்ளாய், என் மனம் துயர் உருகிறது, பதில் கூறுவாயாக’ என்றாள்.
‘அன்னையே நேற்றிரவு
வானில் ஒளி வீசும்நிலவு, மங்கி
இம்மண்ணில் வீழ்ந்து எங்கும் இருள் சூழ்ந்ததைப் போல் கனவு கண்டேன். அதை நினைத்து மனம் துன்பப்படுகிறது’ என்றான் அத்தீயசெயலை வெளியிட மனமில்லா யசோதர
மன்னன்.
---------------------
129) கரவினில் தேவி தீமை கட்டுரைத்து இட்டது என்னா
இரவினில் கனவு தீமைக்கு ஏது என்று அஞ்சல் மைந்த
பாவிநற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால்
விரவிமிக்கு இடுதல் இன்றி விளியும் அத் தீமை எல்லாம்
130) ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம் தன்னின்
மைப்படல் இன்றி நின்ற மங்கலக் கிழமை தன்னில்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியின் காளை
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள்.
131) மண்டுஅமர் தொலைத்த வேலோய் மனத்துஇது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளில் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனம்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல்
கண்டநின் கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும் என்றாள்.
மன்னன் நெறியறிந்து கூறல்
132) ஆங்குஇவள் அருள்ஒன்று இன்றி அவண்மொழிந் திடுதலோடும்
தேங்கலன் அரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்குஅருள் செய்தது என்கொல் இதுபுதிது என்று நெஞ்சில்
தாங்கலன் உருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.
133) என்னுயிர் நீத்த தேனும் யான் உயிர்க் குறுதி சூழாது
என்னுயிர்க்கு அரண நாடி யான் உயிர்க்கு உறுதி செய்யின்
என்னைஇவ் வுலகு காவல் எனக்கினிய் இறைவி கூறாய்
மன்னுயிர்க்கு அரண மண்மேல் மன்னவர் அல்லரோ தான்.
134) யானுயிர் வாழ்தல் எண்ணி எளியவர் தம்மைக் கொல்
வானுயர் இன்ப மேலால் வருநெறி திரியும் அன்றி
ஊனுயிர் இன்பம் எண்ணி எண்ணமற் றொன்றும் இன்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடும் இயல்பில் அன்றே.
135) அன்றியும் உன்னின் முன்னர் அன்னைநின் குலத்து ளோர்கள்
கொன்றுயிர்கன்றும் உள்ளக் கொடுமைசெய் தொழில் அல்லர்
இன்றுயிர்கொன்ற பாவத்து இடர்பல விளையு மேலால்
நன்றிஒன்று அன்று கண்டாய் நமக்குநீ அருளில் எல்லாம்.
மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்
136) என்றலும் எனது சொல்லை இறந்தனை கொடியை என்
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங்
கொன்றுயிர் களைதல் அஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி என்றாள்.
----------------
யசோதரனின்தாய்
‘ அன்புமகனே, நேற்று இரவு நீ கண்ட கனவின் மூலம், சண்டமாரியம்மன் ஏதோ தீமை வருவதை மறைமுகமாக கனவின்
வழியே சுட்டுகிறாள். அஞ்சவேண்டாம். அத்தேவிக்கு சிறப்புபூசை செய்து வணங்கி
விட்டால் வரும் தீமையும் ஒழியும் ‘ என்றாள் நற்காட்சியற்ற அச்சந்திரமதி.
மேலும் ‘போரிடுவதை விரும்பா வேந்தே! உனது வெற்றிவாளால் ஒரு ஆட்டுக்குட்டியை அத்தேவிக்கு
பலியிடுவதால், கனவில் கண்ட தீமையிலிருந்து
உனைகாப்பாள் ‘ என்றாள்.
அருள் உணர்வின்றி தாய்
கூறியதை கேட்ட மன்னன் யசோதரன் உடன் இரு செவிகளையும் தன் கைகளால் அடைத்து, ‘
தாயே தாங்கள் கூற்று புதியதாய் உள்ளதே
‘ என்று மனம் கலங்கி பதிலுரைத்தான்.
‘தாயே அரசன் உயிர்களை
காத்து நன்மை செய்ய வேண்டுமே யன்றி, தன்னை மட்டும் காப்பதற்கு துணிவேனேயானால், காவலன் என்ற சொல் எப்படிப் பொருந்தும்! நன்னெறி தவறிய செயலாகும். அதனால் வானுலகப் பேறும் கிட்டாது போகுமன்றோ,
நீங்களே சொல்லுங்கள்’ என்றான் மன்னன்.
மேலும் நம் குலத்து
முன்னோர்கள் எவரும் இது போன்று உயிர்களைக் கொல்லும் தொழிலைச் செய்ததில்லை. நீ கூறுவது போல் பலி தரும்பாவச் செயலால் பல இன்னல்கள்
நம்மை வந்து சேரும். உன் கூற்று
எவ்விதத்திலும் நன்மை அளிக்காது’ என்று தொடர்ந்து கூறினான்.
அவன் கூற்றை ஏற்கா
அத்தாயும், சிந்தையில் நன்மை தீமைகளைப்பற்றி
சிந்திக்காதவளாகி ‘நீ என் சொல்லை
கடந்து விட்டாய்’ என கோபம் கொண்ட
தாய் வேறொரு கருத்தைக் கூறினாள். ‘நீ உயிரைப்பலியிட துணியாதாயின்,
மாவினால் செய்த ஒரு கோழியை அம்மாரியின்
கோவிலுக்கு சென்று பலி கொடுத்து அத்தேவியை மகிழ்விப்பாயாக’ என மாற்றுவழியைக் கூறினாள்.
-------------------
137) மனம் விரி அல்குல் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிஒன் றாயிற்று
எனைவினை உதயம் செய்ய இடர்பல விளைந்த என்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குநர் என்று நின்றான்.
138) உயிர்ப்பொருள் வடிவு கோறல் உயிர்க்கொலை போலும்என்னும்
பயிர்ப்புளம் உடையன் ஏனும் பற்றறத் துணிவின் மன்னன்
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற்கு இசைந்ததுஎன்றான்
அயிர்ப்பது என் அறத்தின் திண்மை அறிவதற்கு அமைவிலாதான்.
139) மாவினில் வனைந்த கோழி வடிவுகொண்டு அவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக்கு இடம் அதாய
தேவிதன் னிடைச்சென்று எய்திச் சிறப்பொடு வணக்கம் செய்த
ஆவவன் தன்கை வாளால் எறிந்துகொண்ட அருளிது என்றான்.
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
140) மேல் இயல் தெய்வம் கண்டே விரும்பினது அடையப் பட்ட
சாலியின் இடியின் கோழி தலைஅரிந் திட்டது ஓடி
கோலியல் அரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலியல் அரசன் தன்கை வாள்விடுத்து உருகி னானே.
141) என்னைகொல் மாவின் செய்கை இவ்உயிர் பெற்ற பெற்றி
சென்னிவாள் எறிய ஓடிச் சிலம்பிய குரலிது என்கொல்
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற்கு ஒத்த
கொன்னியல் பாவம் என்னைக் கூவுகின் றதுகொல் என்றான்.
142) ஆதகாது அன்னை சொல்லால் அறிவிலேன் அருளில் செய்கை
ஆதகாது அழிந்த புள்வாய் அரிகுரல் அரியு நெஞ்சை
ஆதகாது அமிர்தம் உன்னா மதியவள் களவு கொல்லும் .
ஆதகா வினைகள் என்னை அடர்த்துநின்று அடுங்கொல் என்றாள்
அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்
143) இனையன நினைவு தம்மால் இசோதரன் அகர மெய்தித்
தனையனில் அரசு வைத்துத் தவவனம் படரல் உற்றான்
அனையதை அறிந்து தேவி அவமதித்து எனை விடுத்தான்
எனநினைந்து ஏது செய்தாள் எரிநர கத்து வீழ்வாள்.
--------------------
அமிர்தமதியின் தீய
செயலை மறைத்து, கண்ட கனவு
என கூறியதால் இவ்வுயிர்ப்பலி உபாயம் வந்தது. அதனால் வரும் விளைவை எண்ணி கலங்கினான் மன்னன். தன் தீவினைப்பயன் தர தொடங்கி விட்டதால், சேரும் துன்பங்கள் வந்தடைகின்றன. அதன் வினையின் விளைவைத் தடுப்பவர் யாரும் உண்டோ என எண்ணினான்.
உயிர் பலி போலவே மாவு
போன்ற பொருட்களால் செய்த உருவை பலியிடுதலும் பாவச் செயலே என்பதை யசோதரன் நன்குணர்ந்திருந்தாலும், அன்னை சினந்து விடுத்த கட்டளையை நிறைவேற்ற
முடிவெடுத்தான்.
அரிசி மாவால் செய்கு
விக்கப்பட்டு, பொருந்த வண்ணம்
தீட்டிய கோழி வடிவச்சிலையை எடுத்துக்கொண்டு, அன்னையுடன் சண்டமாரியம்மன் கோவிலுக்கு
சென்றான். அவ்வழகைக்கண்டு வானத்தில் வலம் வரும் தெய்வம் அவர்கள்
அறியா வண்ணம் அதனுள் நுழைந்து கொண்டது.
பின் வணங்கி அக்கோழியுருவை ‘ யான் இடும் இப்பலியை ஏற்று எனக்கருள்வாய்!
‘ என வெட்டினான் பாவத்தை வேண்டி நின்ற மன்னன். அதனுள் புகுந்த தெய்வம் தலை துண்டிக்கப்பட்டதும்
கூவி துடிதுடித்து வீழ்ந்தது. அதனைக்கண்டு மனம் உருகி வாளை வீசி
எறிந்தான் மன்னன்.
மாக்கோழி உயிர் பெற்றது
எங்ஙனம்! வெட்டுண்டதும் துடித்து
கூவியது எவ்வாறு! என நடுங்கி, ‘எனது பிறவித்தொடரினது
மிக்க துன்பத்தை விளித்துக்கூவியதோ’ என வருந்தி சிந்தித்தான்.
‘தாய் சொல் கேட்டு
நான் இரக்கமற்ற இத்தகாத செயலை செய்திட்டேன். கோழியின் கூக்குரல்
நெஞ்சை உருத்துகின்றது. கற்பிழந்த குறை மதியாளின் தீயொழுக்கம்
என்னைக் கொல்லுகின்றது. அந்தோ வரக்கூடாத தீவனைகள் எனை தொடர்ந்து
வாட்டப்போகின்றன’ என வருந்தினான்.
இவை போன்ற எண்ணங்களுடன் அரண்மனை புகுந்தான். இளவரசன் யசோமதிக்கு முடிசூட்டி, தான் வனம்
புகுந்து தவமேற்க கருதினான். அதையறிந்த அமிர்தமதி தன்னை அவமதித்து விட்டான் எனக் கருதி, அவனுக்கு துன்பம் தரத்துணிந்தாள் நரகத்தில் சென்று
வீழ்வதற்கான பாவச் செயலை மேற்கொண்டாள்.
------------------------------------------
144) அரசுநீ துறத்தி ஆயின் அமைக மற்றுஎனக்கும் அஃதே
விரைசெய்தார் இறைவ இன்றுஎன் வியன்மனை மைந்தனோடும்
அரசநீ அமுது கைக்கொண்டு அருளுதற்கு உரிமை செய்தால்
அரசுதான் அவனது ஆக விடுதுநாம் அடிகள் என்றாள்.
145) ஆங்குஅவள் அகத்து மாட்சி யறிந்தனன் அரசன் ஏனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டியது அமைக என்றே
தாங்கலன் அவ்வை தன்னோடு அவள்மனை தான் அமர்ந்தான்
தீங்கது குறுகில் தீய நயமுநன் னயமது ஆமே.
146) நஞ்சொடு கலந்த தேனின் அறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்க ள் இருவரும் அருந்துக என்றே
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக்கு ஈந்தாள்
நஞ்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.
மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்
147) நஞ்சது பரந்த போழ்தின் அடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதல் தாங்கண்
புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரம் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.
உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்
148) எண்களுக்கு இசைவி லாத இறைவியாம் இவள் தன் செய்கை
கண்களுக்கு இசைவு இலாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள்
பெண்களில் கோது அனாளே பெரியபா வத்தன் என்றார்.
----------------
யசோதர மன்னனின் அரசைத்துறக்கும்
எண்ணம் தனக்கு அவமானம் அளிக்கும் என்றெண்ணிய அமிர்தமதி ‘மலர்மாலை சூடிய வேந்தே, அரசை துறப்பது எனக்கும் பொருந்துவதாகும். இன்று
நீங்கள் நம்மகனோடு என் அரண்மனைக்கு வந்து உணவருந்திச் செல்லல் வேண்டும். அதன்பின் யசோமதிக்கு அரச பொறுப்பினை அளிப்பீராக!
என் விருப்பத்தை ஏற்பீராக’ என்றாள் அத்தீயோள்.
அவள் மனத்து இழிநிலையை
அறிந்த மன்னன், அவள் விரும்பியபடியே
ஆகட்டும் என்று பதிலுரைத்தான். பின் தன் தாயுடன் அவள் அந்தப்புரம் நோக்கி சென்று அமர்ந்தான். தீங்கு தரும் தீவினை உதயமாகில், நய வஞ்சகமும் நன்மை பயப்பதை போல் தோன்றும்.
தேனை விட சுவையான லட்டுகளில்
விஷம் கலந்து, யசோதரனுக்கும்,
சந்திரமதிக்கும் தான் நினைத்ததை வஞ்சனையால்
முடிக்க பரிமாறினாள். நஞ்சு கலவாத லட்டுகளை எதிரில் தான் உண்டு நல்லவள்
போல் நடித்தாள்.
விஷம் கொண்ட உணவினை
உண்ட இருவரும் மயங்கி, அறிவு கலங்கி
தனக்கு நேர இருக்கும் மரணத் துன்பத்தை, ஆர்த்த தியானத்தை, சிந்தையில்
ஏற்றி வீழ்ந்தனர். உடன் தீவினைகள்
உயிரில் கலந்தன. ஐம்பொறிகள் உணர்வை
இழந்தன. மரணம் எய்திய இருவுயிரும்
விலங்கு கதியில் துன்பம் துய்க்க பிறந்தனர்.
--------------------
விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முள் கூறிக்கொள்ளல்
149) தீதுஅகல் கடவுளாகச் செய்ததுஓர் படிமை யின்கண்
காதரம் உலகு இதன்கண் கருதிய முடித்தல் கண்டும்
சேதன வடிவு தேவிக்கு எறிந்தனர் தெரிவுஒன் றில்லார்
ஆதலால் வந்தது இன்று என்று அழுங்கினர் சிலர்கள் எல்லாம்.
நகரத்து அறிஞர் கூறுதல்
150) அறப்பொருள் நுகர்தல் செல்லான் அருந்தவர்க்கு எளியனல்லன்
மறப்பொருள் மயங்கி வையத்து அரசியல் மகிழ்ந்து சென்றான்
இறப்பவும் இளையர் போகத்து இவறினன் இறிது யின்கண
சிறப்புடை மரண மில்லை செல்கதி என்கொல் என்றார்.
151) இனையன உழையர் தாமும் எழில்நக ரத்து உளாரும்
நினைவன நினைந்து நெஞ்சி நெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழல் அரசன் மெவி கருதியது அதுமு டித்தாள்
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.
152) இனையனீ தனியை ஆகி இறைவனில் பிரிந்தது என்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந்து ஆள்க என்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக்க அமுத மாவாள்.
யசோமதி முடிபுனைந்து அரசனாதல்
153) வாரணி முரசம் ஆர்ப்ப மணிபுனை மகுடம் சூடி
ஏரணி யார மார்ப ன் இசோமதி இறைமை எய்திச்
சீரணி யடிகள் செல்வத் திருவறம் அருவல் செல்லான்
ஓரணி ஆர மார்பர் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான்.
154) இனையன வினையின் ஆகும் இயல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவர் ஆகு இளையரின் விளையும் இன்பம்
இனையது தெளிவு இலாதார் இருநிலம் அரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியிது என்றான்.
இரண்டாம் சருக்கம் முற்றிற்று.
-----------------------------
கடவுள் உருவமாக ஓற்வடிவமைத்து
அதன் மீது பக்தி செய்வர். அவர்கள் கருதியவற்றை அவ்வுருவம் நிறைவேற்றும்
என்ற நம்பிக்கை வாழ்வளிக்கிறது. சண்டமாரியும் அவ்வழி தெய்வமே. அறிவில்லாமல் அத்தெய்வம் முன்னே கோழியுருவம்
மாவினால் செய்து அதனைக் கொன்றதால் வந்த பாபமே அவர்கள் இருவரையும் அழித்தது என பொய்க்காட்சியில்
வீழ்ந்த அவ்வூர் மக்கள் கருதினர்.
நகர மாந்தரும்,
அரண்மனை ஊழியரும் வருந்திய அவ்வேளையில் தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்வில் திளைத்தாலும்,
மனம் வாட்டம் மிக்கவள் போல் புறத்தே காட்டிய
அமிர்தமதி மைந்தன் யசோமதியை அழைத்து வருமாறு பணித்தாள்.
கள்ளக்காதலனுக்கு சோரம்
போனவள் தன் மகனை நோக்கி, ‘ நடந்தவை
யாவும் நம் தீவினைப்பயனே என்றெண்ணுவாயாக. வருத்தம் நீக்கி மன்னன் இன்றி தவிக்கும் இந்நகருக்கு நீ முடிசூட்டி உன் உரிமையாக்கி
பேரசனாய் ஆள்வாயாக!’ என்று கூறிதான்
நினைத்தது நிறைவேறிய மகிழ்வில் திளைத்தாள்.
வார்களால் இழுத்துக்கட்டப்பட்டு,
மணிகளால் அலங்கரிக்கப்பட்ட முரசுகள் முழங்க,
பொன்னும் மணியும் சேர்த்து செய்த ஆரத்தை
சூடிய யசோமதி, மணிமுடி சூடி மன்னனான்.
நல்லறநெறி தவறி யசோமதியும் மாதர்களின்
காமக்கடலில் மூழ்கலானான்.
மன்னர்மாரிதத்தனே
‘ யான் கூறிய வரலாற்றில் வினைகளால் விளையும்
தீமையையும், தீயமகளிரால் கிடைக்கும்
இன்பம் எத்தகையது என்பதையும், நற்காட்சியின்றி நாடாளும் மன்னனின் செயல்களால் விளையும் தீமையையும் நன்றாய் உணர்வீராகுக’
என்றான் அபயருசி
மாரிதத்த மன்னிடம்.
-------------------
155) மற்றுஅம் மன்னன் மதிமதி என்றிவர்
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்பு
உற்ற தாகு முரைக்குறு கின்றதே.
156) விந்த நாம விலங்கலின் மன்னவன்
வந்தோர் மாமயி லிவையிற்று அண்டமாய்
நந்து நாளிடை நாயொடு கண்டகன்
வந்தோர் வாளியினான்மயில் வாட்டினான்.
157) அம்பின் வாய்விழும் அண்டம் எடுத்தவன்
வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
கொம்பு அனாய்இது கொண்டு வளர்க்கென
நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.
158) சந்தி ரம்மதி யாகிய தாயவள்
வந்து மாநக ரப்புறச் சேரிவாய்
முந்து செய்வினை யான்முளை வாளெயிற்று
அந்த மிக்க சுணங்கமது ஆயினாள்.
159) மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்கு
இயல்உ பாயனம் என்று கொடுத்தனர்
மயரி யாகும் இசோமதி மன்னவன்
இயலு மாளிகை எய்தின என்பவே.
160) மன்ன னாகிய மாமயில் மாளிகை
தன்னின் முன்எழு வார்க்குமுன் தான் எழாத்
தன்னை அஞ்சினர் தங்களைத் தான் வெருண்டு
இன்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .
161) அஞ்சில் ஓதியர் தாம்அடி தைவரப்
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
துஞ்சு மன்னவன் மாமயில் தோகையோ
அஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.
162) சுரைய பால்அடி சிற்சுவை பொற்கலத்து
அரைய மேகலை யாரின் அர்ந்துணும்
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய்
இரைய வாவி இருந்தயில் கின்றதே.
-------------------
ஜினவரர் நல்கிய நல்லறத்தை
ஏற்காமல், கடும் பற்றில் மூழ்கி
மாண்ட யசோதரனும், தாய் சந்திரமதியும்
தொடர்ந்து பல பிறவிகளை எய்தினர். இனி அவற்றை தெரிந்து கொள்வோம்.
விந்தியகிரி மலையிடத்தே
ஓர் மயிலின் கருவில் முட்டையாய் வளர்ந்து வந்தான் யசோதரன். வேட்டை
நாயுடன் வந்த ஓர் வேடன் அம்மயிலை குறிவைத்து தன்அம்பினால் வீழ்த்தினான். அதன் வயிற்றில் ஏற்பட்ட பிளவின் வழியே கருவின்
முட்டை வெளியேறியது. அதனை எடுத்துச் சென்று தன் மனைவியிடம் தந்து,
கோழி முட்டையுடன் சேர்த்து வைத்து பொரிக்கச்
செய்து வளர்க்க கூறினான்.
தாய் சந்திரமதியோ,
அவள் ஈட்டிய தீவினையால் உஜ்ஜயினி நகரத்தின்
புறத்தேயுள்ள சேரியில் அழகான பெண் நாயாகப் பிறந்தாள்.
வளர்ந்த அம்மயிலையும்,
நாயையும் அதனை வளர்த்தவர்கள் மன்னன் யசோமதிக்கு
காணிக்கையாய் தந்து சென்றனர். அவ்வாறு காமுக மன்னனிடம் இரண்டும் வந்து சேர்ந்தன.
எவலர் கண்டு நடுங்க
மன்னனாய் மாளிகையில் வாழ்ந்த யசோதரன் அவ்வேவலர்களைக் கண்டு அஞ்சி வாழும் மயிலாகும்
நிலையாயிற்று. (வினையின்வலிமைஎன்னவென்றுஉணரவே.)
அன்று மெல்லிய பஞ்சினால்
ஆன மெத்தையில் உறங்கும் மன்னனின் பாதங்களை அழகிய மலர்களைச் சூடிய மகளிர் பலர் வருடிக்
கொடுப்பர். ஆனால் இன்றோ அதேமாளிகையில்
மயிலாய் தரையில் தோகையினை ஒடுக்கி அஞ்சிய நிலையில் உறங்க வேண்டியதாயிற்று.
யாரும் இரையிடுவாரோ
என்று ஏங்கி வாழும் மயில்,
அன்று மன்னனாய் பாலில் சமைத்த உணவை மகளிர்
அன்புடன் வேண்ட, விரும்பி உண்டவன்
அந்த யசோதரன், இன்று அனைவரும் உண்டபின்
உண்ணும் நிலையாயிற்று.
------------------
சிந்தும் எச்சில்கள் சென்று கவர்ந்துதின்று
அந்து ளும் அகழ் அங்கணத்து ஊடுமாய்ச்
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே
164) நல்வ தத்தொடு அறத்திற நண்ணலார்
கொல்வ தற்குளம் உன்செய் கொடுமையான
ஒல்வ தற்குஅரும் மாதுய ருற்றனர்
வெல்வ தற்குஅரி தால்வினை யின்பயன்.
165) மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
அற்றம் ஆவிருந்து அட்டபங் கன்தனை
முற்று வார்முலை யாண்முயங் கும்திறம்
மற்ற மாமயில் வந்தது கண்டதே.
166) அப்பி றப்பில் அமர்ந்த தன் காதலி
ஒப்பில் செய்கை உணர்ந்ததுஉணர்ந்தபின
தப்பி லன்னது சாரன்தன் கண்களைக்
குப்பு றாமிசைக் குத்தி அழித்ததே.
167) முத்த வாள்நகை யாள்முனி வுற்றனள்
கைத்த லத்துஒரு கல்திரள் வீசலும்
மத்த கத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.
168) தாய்முன் னாகி இறந்து பிறந்தவள்
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
தீமை செய்வினை செய்திறம் இன்னதே.
169) நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
ஆயும் ஆறுஅறி யாத விசோமதி
நாயை எற்றினன் நாய்பெய் பலகையால்.
------------------------
எச்சில் இலைக்கு ஏங்கி
நின்று, வந்து விழும் மீத உணவைக்
கவ்விச் செல்லும் நாய் ஆனாள், அன்று அந்தப்புரத்தில் வாழ்ந்த சந்திரமதி. அன்று பஞ்சனையின் உறங்கியவளோ நாயாய் அருகிலுள்ள மண்குழியில்
கால் மடித்துறங்கும் அவலம் கிட்டியது.
முற்பிறப்பில் அறத்தின்
இயல்பை அறியாது, நல்விரதமும் ஏற்காததாயும்,
மகனும் தீவினை புரிந்தமையால், இப்பிறப்பில் சொல்லொனா துயரம் எய்தினர்.
வினை வலியது.
ஓர்நாள் மண்டபத்தின்
மறைவிடத்தில் கச்சை அணிந்த அமிர்தமதியும், அட்டபங்கனும் கூடி மகிழும் செயலை அப்பெருமயில் (யசோதரன்)
காண நேர்ந்தது. முற்பிறப்பில்
விருப்பமுள்ள தன் தேவியின் ஒவ்வா செயலை உணர்ந்து, தான் செய்வது தவறில்லை என அப்பாகன் மேல் பாய்ந்து அமர்ந்து
அவன் கண்களை கொத்தி அழித்தது.
அதனக்கண்டு வெகுண்ட
அமிர்தமதியோ ஒரு பெரிய கல்லால் அம்மயிலைத் தாக்கினாள். அச்செயலால் தலையில் அடிபட்ட மயில் மயங்கித் தள்ளாடி தரையில் வீழ்ந்தது.
உயிர் பிரியும் சமயம் முற்பிறவித்தாயான
இப்பிறவி நாய் அதனை கவ்வியதும் மயில் இறந்தது.
ஆராய்ந்து அறியாமல்
மன்னன் யசோமதியும் மயிலைக்கொன்ற அந்நாயை சூதாடும் பலகையால் அடித்துக் கொன்றான்.
------------------------
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170) மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
துன்னும் சூழலுள் சூழ்மயிர் முள்ளுடை
இன்னல் செய்யும்ஓர் ஏனமது ஆகிய
அன்ன தாகும் அருவினை யின்பயன்..
171) சந்தி ரம்மதி நாயும்அச் சாரலின்
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய்
அந்தில் ஊர்தர வேர்த்துஉரு ளக்குடர்
வெந்து எழும்பசி விட்டது பன்றியே.
172) தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினில்
சீயம் ஒன்று எனச் சீறுளி யம்எதிர்
பாய நொந்து பதைத்துடன் வீழ்ந்தரோ
போயது இன்னுயிர் பொன்றுபு பன்றியே.
மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173) மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
இன்னல் செய்யும் சிருப்பிரை ஆற்றினுள்
உன்னும் ஒப்பில் உலோகித இப்பெயர்
மன்னு மீனின் வடிவினது ஆயிற்றே.
சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
முந்து சன்று முதலைய தாயது
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான்
உந்தி உந்தி உளைந்திடு போழ்தினில்.
175) அந்த ரத்தொரு கூனிநின்று ஆடுவாள்
வந்து வாயின் மடுத்தது கொண்டது
கொந்து வேய்குழல் கூனியைக் கொல்கராத்
தந்து கொல்கஎன மன்னவன் சாற்றினான்
176) வலையின் வாழ்நரின் வாரில் பிடித்தபின
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்
கொலைவ லாளர் குறைத்தனர் ஈர்ந்தனர்
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.
---------------------
மன்னானாயிருந்து மாமயிலாய்
பிறந்து தற்போது இறந்த யசோதரன், விந்தியமலைச்சாரலில் முள்ளம் பன்றியாய் பிறந்தான். அவனது
தீவினைப்பயன் அத்தன்மை வாய்ந்ததாகும்.
நாயான சந்திரமதியும்
இறந்து அம்மலைச்சாரலில் கருநாகமாய் பிறந்தாள். ஊர்ந்து சென்ற நாகத்தைக்கண்டதும், முற்பிறவி
பழியுணர்வில் (மயிலாய் பிறந்த போது நாயாய் வந்து கவ்வியதால்)
முள்ளம்பன்றி உயிர் நீங்கும் வரை உருள வைத்து, குடற்வெந்த பசியை நீக்கியது.
தாயைக்கொன்ற (யசொதரன்) பன்றி
தளர்ந்து போன தருணத்தில், சிங்கத்தைப் போல் சீறிப்பாய்ந்த கரடி
ஒன்று, அதனை துடிதுடித்து கீழேவிழுந்து உயிரை விடச் செய்தது.
மயிலாக, முள்ளம்பன்றியாய் பிறந்து இறந்த மன்னன்
உஜ்ஜயினியில் கரை புரண்டோடும் சிருப்பிரை ஆற்றில், உலோகித மீனாகப்
பிறந்தான். ஆனால் அவ்வாற்றில் அவன் தாய் சந்திரமதி நாயும்,
நாகமாக பிறந்து இறந்தபின் முதலையாய் பிறந்தாள். அவளும் முன்பிறவிக் கோபத்தால் அவ்வுலோகித மீனை துரத்தி விழுங்க முயற்சித்தது.
ஆனால் கூனியொருத்தி அவ்வாற்றில் நீராடியதைக் கண்டதும் அவளை பசியாற விழுங்கிற்று.
கூனியை விழுங்கிய முதலையை கொல்ல மன்னன் ஏவலர்க்கு கட்டளையிட்டான்.
வலை வீசி மீனவர் சிலர்
அம்முதலையைப் பிடித்தனர். அதனை சிலர் நன்கு காய்ச்சிய கம்பியால் குத்தினர். கொலைத்தொழில்
புரிவோர் அவ்வுடலை வாளால் அறுத்தனர். தாங்கொணாத் துயரத்தை ஏற்க
முடியாமல் வீழ்ந்தது.
----------------
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து வார்வலைப் பட்ட கராமரித்து
அந்தில் வாழ்புலை யாளர்தம் சேரிவாய்
வந்துஓ ராட்டின் மடப்பிணை யாயதே.
178) மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
அற்றம் இல்லருள் அந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்கு
உற்ற செய்கைக் குஉரித்தென ஓதினார்.
179) அறுத்த மீனின் அவயவம் ஒன்றினைக்
கறித்து இசோமதி இப்புவி காக்கவோர்
இறப்பர் அரும்துறக் கத்தில் இசோதரன்
சிறக்க என்றனர் தீவினை யாளரே.
180) நின்ற கண்டத்து நீளுயிர் போமது
சென்ற தன்பிறப்பு ஓர்ந்து தெளிந்தது
தின்று தின்று துறக்கத்து இருத்துதல்
நன்று நன்றுஎன நைந்துஇறந் திட்டதே
மன்னனாகிய உலோகித மீன் (4 வதாக) தகராய்ப் பிறத்தல்
181) மன்னன் மாமயில் சூகரம் ஆயமீன்
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
மன்னும் ஆண்உருவு எய்தி வளர்ந்தபின்
தன்னை ஈன்றஅத் தாய்மிசைத் தாழ்ந்ததே.
தகர் (5 ஆவதாக) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.
182) தாயின் நன்னலம் தான்நுகர் போழ்தினில்
ஆய கோபத்து அடர்த்துஒரு வன்தகர்
பாய ஓடிப் பதைத்துஉயிர் போயபின்
தாய்வ யிற்றினில் தாதுவில் சார்ந்ததே.
183) தாய்வ யிற்கரு வுட்டகர் ஆயது
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன்
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்
தாயை வாளியில் தான்உயிர் போக்கினான்.
184) வாளி வாய்விழும் வன்தகர்க் குட்டியை
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
தாள்வ ருத்தம் தவிர்த்து வளர்க்கென
ஆளி மொய்ம்பன் அருளினன் என்பவே.
-----------------------
நாயாகவும், மலைச்சாரலில் நாகமாகவும், வலையில் மாட்டிய முதலையாகவும் பிறந்து இறந்த அரசி சந்திரமதி இறந்து,
மலை வாழ்மக்களான புலையர் வாழும் சேரியில் ஒரு ஆட்டின் வயற்றில் பெட்டையாகத்
தோன்றினாள்.
சிருப்பரை ஆற்றில்
வாழ்ந்த யசோதரனின் பிறவியாகிய மீன், அருள் நெறியற்ற அந்தணர்கள், மீனவர்
வலைவீசிப் பிடித்தபோது கண்டனர். அம்மீன் நேர்த்திக்கடன் தீர்ப்பதற்கு
உலோகித மீன் ஏற்றது என அரசனிடம் கூறினர். பொய்க்காட்சியில் வாழும்
அவ்வந்தணர்கள் தீவினையால், அம்மீனை துண்டாக்கி சிறுபாகத்தை,
ஹோமத்தீயில் காட்டி கடித்து தின்று கொண்டே ‘ நாடாளும்
மன்னன் யசோமதி இந்நாட்டை நன்கு காப்பானாக! மேலும் சொர்க்கத்தில்
வாழும் யசோதரன் சிறப்படைவானாக’ என வாழ்த்துக் கூறினர்.
(இச்செயல் கொல்லாமை
விரத விதிமீறல் என்கிறது அருங்கலச்செப்பு)
உடல் பகுதி துண்டிக்கப்பட்ட
அம்மீன்(யசோதரன்)
முற்பிறப்பு வரலாற்றை அறிந்தது. மேலும் இம்மூடர்கள்
என்னுடலைத் தின்றுகொண்டே சொர்க்கத்தில் தான் இருப்பதாக நினைத்து வாழ்த்தியதை எண்ணி வருத்தமுற்றது. (மீனும் மனமுடைய
ஓர் விலங்காகும் என்பது தெளிவாகிறது)
மன்னன் யசோதரன் மயிலாகவும், பன்றியாகவும், மீனாகவும் பிறந்து இறந்து தற்போது தனக்கு முன் தோன்றியதாயாக இருந்து நாயாகவும்,
கருநாகமாகவும், முதலையாகவும் பிறந்து பின் இறந்து
பெண்ஆடாக இருக்கும் சந்திரமதியின் வயிற்றில் ஆட்டுக்கிடாவாக உருவாகி பிறந்தான்.
அவ்வாடு வளர்ந்து பெரியஆடான போதுதாய் ஆட்டின் மீதேறி உறவுகொள்ள முயன்றது.
அதனைக்கண்டவேறொருஆட்டுக்கிடாதன்னைவிரட்டிஉறவுகொண்டஆட்டின்மீதுபாய்ந்தது. அத்தாக்குதலில் (யசோதரன்) ஆடுபதைத்துவீழ்ந்துஇறந்தது. அதனால்அத்தாய்ஆடும்கருவுற்றது. அக்கருவில்மீண்டும்கருவாகதங்கியது(யசோதரன்உயிர்).
அக்கருமுற்றிய போது, மணிமுடி யணிந்தமன்னன் யசோமதி வேட்டைக்குச்
சென்று திருப்பும் போது, அத்தாய் ஆட்டின் மீது விளையாட்டாக அம்பு
தொடுக்க, கருமுற்றிய நிலையில் தாய் ஆடு இறந்தது.
வலிமைபடைத்த அம்மன்னன்
யசோமதியும் அருகில் நின்ற அப்புலையனை அழைத்து இறந்த வருத்தம் தவிர்த்து, அவ்வாட்டின் வயிற்றில் உள்ள குட்டியை
முயன்று எடுத்து வளர்ப்பாயாக என்றான்.
---------------------------
யசோமதி பலியிடும் செய்தி கூறல்
185) மற்றொரு நாள்மற மாதிற்கு மன்னவன்
பெற்றி யால்பர விப்பெரு வேட்டைபோய்
உற்ற பல்லுயிர் கொன்றுவந்து எற்றினான்
கொற்ற மிக்கஎரு மைப்பலி ஒன்றுஅரோ.
186) இன்றுஎ றிந்த எருமை இதுதனைத்
தின்று தின்று சிராத்தம் செயப்பெறின்
நன்றுஇது என்றனர் அந்தணர் நல்கினார்
நின்று பின்சில நீதிகள் ஓதினார்.
187) ஆத பத்தில் உலர்ந்ததை ஆதலால்
காது காகம் கவர்ந்தன வானம் எனின்
தீது தாமும் சிராத்தம் செயற்குஎன
ஓதி னார் இனி ஒன்றுளது என்றனர்.
188) தீதுஇது என்ற பிசிதம்உம் தேர்ந்துழி
சாத நல்ல தகர்முகத் துப்படின்
பூதம் என்றனர் புண்ணிய நூல்களின்
நாத னால்அத் துராதிகள் நன்றரோ.
189) என்ற லும்இணர் பெய்முடி மன்னவன்
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
சென்று தம்மெனச் சென்றனர் ஒற்றர்பின்
நன்றிது என்று நயந்தனர் அந்தணர்.
190) சென்று நல்லமிர்து உண்டது தின்றனர்
அன்று மன்னன் இசோதர ன்அன்னையோடு
ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்கென
நன்று சொல்லினர் நான்மறை யாளரே.
இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்
191) அத்த லத்துஅகர் ஆங்கது கேட்டபின்
ஒத்த தன்பிறப் புள்ளி உளைந்துடன்
இத்த லத்து இறை யான இசோமதி
மத்த யானையின் மன்னவன் என்மகன்.
192) இதுஎன் மாநகர் உஞ்சயி னிப்பதி
இதுஎன் மாளிகை யாம்என் உழைக்கலம்
இதுஎலாம் இவர் என்னுழை யாளராம்
இதுவென் யான்இவன் இன்னணம் ஆயதே.
193) யான்ப டைத்த பொருட்குவை யாம் இவை
யான்வ ளர்த்த மதக்களிறு ஆம்இவை
யான் அளித்த குலப்பரி யாம்இவை
யான்வி ளைத்த வினைப்பயன் இன்னதே.
194) இவர்கள் என்கடைக் காவலர் ஆயவர்
இவர்கள் என்படை நாயகர் ஆயவர்
இவர்கள் என்னிசை பாடுநர் ஆடுநர்
இவர்க ளும்இவர் என்பரி வாரமே.
195) என்னை நஞ்சுபெய்து இன்னண மாய் இழைத்து
அன்னம் மென்னடை யாள் அமிர்தம்மதி
மன்னு தன்மறை யானொடு வைகுமோ
என்னை செய்தன ளோஇவண் இல்லையால்.
196) அசைய தாகி அரும்படர் ஒன்றிலா
இசையி லாதன யான்உற வித்தலைத்
தசைதி னாளர்கள் தங்களின் என்னையிவ்
வசையின் மன்னவன் வானுலம் உய்க்குமோ.
197) பேதை மாதர்பெய் நஞ்சினில் எஞ்சியிம்
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
யாது செய்தனனோ வினை யேன் இடை
யாது செய்குவ னோஉண ரேன் இனி.
--------------
மற்றும் ஓர்நாள் சண்டமாரியம்மன்
ஆலயம் சென்றான். முறையாக
வணங்கி வேட்டைக்கு சென்றான். பல விலங்குகளைக் கொன்று,
திரும்பும் போது மாரிக்கு பெரிய காட்டெறுமை ஒன்றை பலியிட்டான்,
பாவி மகன்.
யாகங்களினால் நன்மை
தரும் என்றெண்ணும் அந்தணர்கள் மன்னனை வணக்குமுடன் அணுகி, பலியிட்ட அவ்எறுமையின் ஊனை ஊண்டால் உம்முன்னோர்க்கு
நேர்த்திக்கடன் செய்த பலன் கிட்டும் என்றும் மேலும் சில நீதிகளைக் கூறினர்.
பாவத்தை தரும் செயல்களைச் செய்யத் தூண்டினர்.
எறுமையின் ஊன், வெயிலால் உலர்ந்து விடுமாயின் காகங்கள்
எச்சில் பட்டு விடும். அதனால் சிரார்த்தம் செய்ய தகுதியற்று விடும்
என்றனர். மேலும் அவ்வாறு நடந்தால் அதற்கு ஒரு பிராயச்சித்தம்
உள்ளது என்றனர் நன்னெறியறியா அந்தணர்கள்.
எச்சிலால் குற்றமடைந்த
அவ்வூனை நற் பிறப்பினையுடைய ஒரு ஆடு முகந்தால் குற்றம் நீங்கி யாகம் செய்ய தகுதியாகி
விடும் என்றனர் பேதமையுடன். மூடத்துடன் கூறிய அந்தணர்கள் வாக்கை
ஏற்ற மன்னன், தன் காவலரிடம் புலையனிடம் வளர்க்க பணித்த அவ்வாட்டினை
கொணர்க என்று ஒற்றர்களிடம் கூறினான்.
ஒற்றர்களால் கொண்டு
வந்த ஆட்டினால் குற்றம் நீங்கியதும், நான்கு மறை ஓதும் அந்தணர்கள், யாகசாலையில் நல்ல தென கருதிய
எறுமை ஊனை உண்டு களித்தனர். அப்போது தேவருலகில் வாழும் யசோதரனும்,
அவன் தாய் சந்திரமதியும் வாழ்க என வாழ்த்து கூறினர். என்னதோர் அறியாமை.
அந்தணரின் வாழ்த்துரை
கேட்டு நின்ற ஆடு(யசோதரன்)
தன் முற்பிறப்பு பற்றி எண்ணி வருந்தியது. இந்த
யசோமதி மன்னனும் தன் மகனே என உணர்ந்தது. மேலும் உஜ்ஜயினி தான்
ஆண்டநகரம் என்றும், அரண்மனை, பயன்படுத்திய
பொருட்கள், இந்த ஏவலர்கள் அனைத்தும் என்னுடையவையே. அவ்வாறு இருக்க நான் மட்டும் ஏன் ஆடாகப் பிறந்தேன்? யானைகளும், குதிரைகளும், செல்வங்களும் என்னால் காப்பாற்றப்பட்டவை.
விதிப்பயனால் நான் இப்போது ஒரு ஆடாகியுள்ளேன் என்றெண்ணியது.
அரசி அமிர்தகதி எனக்கு
விஷமிட்டு கொன்றாள். அவள்
கள்ளக் காதலனுடன் வாழ்கிறாளா அல்லது வேறு வாழ்க்கையை மேற்கொண்டாளா என தன் மனதுக்குள் ஆடு நினைத்தது.
விஷ மருந்திய பின்
நான் என்ன பிறவிகள் எடுத்தேனோ, இனியும் என்ன நடக்கப் போகிறதோ அறியேன் என மற்ற மயில் போன்ற விலங்குப்பிறவிகள்
நினைவுக்கு வராமல் கலங்கினான்.
---------------------------
சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்
198) இனைய வாகிய சிந்தைகலள் எண்ணிலா
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன்னுள் நோகமுன்
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.
199) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து இடங்கரு மாகிய ஆடது
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிடம் ஆகி வளர்ந்ததே.
200) வணிகர் தம்முடன் மாமயி டம்மது
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
அணிகொள் உஞ்சயி னிப்புறத்து ஆற்றயல்
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.
201) தூர பாரம் சுமந்த துயரது
தீர ஓடுஞ் சிருப்பிரை ஆற்றினுள்
ஆர மூழ்குவது அம்மயி டங்கரை
சேரும் ஆவினைச் சென்றுஎறிந் திட்டதே.
202) வரைசெய் தோள்மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச அன்னம் எனும்பெய ராகும்நம்
அரைச வாகனம் ஆயது போயதென்று
உரைசெய் தார்அர சர்உழை யாளரே.
ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203) அணிகொள் மாமுடி மன்னன் அழன்றனன்
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
பிணிசெய்த எம்முறை வம்மெனப் பேசினான்
கணிதம் இல்பொருள் சென்று கவர்ந்தனர்.
204) அரசன் ஆணை அறிந்தருள் இல்லவர்
சரண நான்கினை உம்தளை செய்தனர்
கரணம் ஆனவை யாவும் களைந்தனர்
அரணம் ஆம் அறன் இல்லது தன்னையே.
205) கார நீரினைக் காய்ச்சி உறுப்பரிந்து
ஆர ஊட்டி அதன்வயி றீர்ந்தவர்
நெய்பெய் சலாகை கடைந்தபின்
கூர்முள் மத்தி கையில்கொலை செய்தனர்.
206) ஆயி டைக்கொடி யாள் அமிர் தம்மதி
மேய மேதித் தசைமிக வெந்ததை
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தனக் என்றனர் மற்றையார்.
207) இன்னும் ஆசை எனக்குள் இவ்வழித்
துன்னி வாழ்தகர் ஒன்றுளது இன்றது
தன்னின் ஆய குறங்குக டித்தது
தின்னின் ஆசை சிதைந்திடும் என்றனள்.
இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்
208) அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
மனங்கொ ளாஒரு மானுட நாயினை.
209) குட்ட மாகிய மேனிக் குலமிலா
அட்ட பங்கனோ ஆடி அமர்ந்தபின்
நட்ட மாகிய நல்லெழில் மேனியள்
குட்ட நோயில் குளித்திடு கின்றனள்.
210) அழுகி நைந்துடன் அஃகும் அவயவத்து
ஒழுகு புண்ணின் உருவினள் ஆயினள்
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
தொழுவல் பல்பிணி நோய்களும் துன்னினாள்.
211) உம்மை வல்வினை யால் உணர்வு ஒன்றிலாள்
இம்மைச் செய்த வினைப்பயனேஇவை
எம்மை யும்இனி நின்றிடும் இவ்வினை
பொய்ம்மை அன்றிவள் பொன்றினும் பொன்றல்.
212) நோயின் ஆசைகொல் நுண்ணுணர் இன்மைகொல்
தீய வல்வினை தேடுதல் ஏகொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்றுஇது தன்னையும் வவ்வுமே.
--------------------
முற்பிறவி சிந்தனையை
அசை போட்ட வண்ணம் ஆடு(யசோதரன்)
யசோமதி மாளிகையின் புறத்தே நின்றது. இதற்கிடையே
கருவுற்ற நிலையில் மன்னனின் அம்பினால் வீழந்த பெண் ஆடான சந்தரமதி நாயாகி, கரும் பாம்பாகி, முதலையாகி, பின்னர்
ஆடாகிய பின் தற்போது கலிங்க தேசத்தில் எருமையாய் பிறந்து வளர்ந்தது.
அவ்வெருமை கலிங்க நாட்டின்
வணிகர்களோடு மிக்க சரக்குகளை சுமந்து திரிந்த நாட்களில் உஜ்ஜயினி நகரத்தில் ஓடும் சிருப்புரை
ஆற்றங்கரையில் ஓய்வெடுக்க அவர்கள் தங்கினர்.
பாரம் சுமந்த களைப்புதீர
அவ்வெருமை சிருப்பிரை ஆற்றினுள் மூழ்கி குளித்து கரையேறிய போது எதிரில் மூழ்க வந்த
குதிரையை கொம்பினால் குத்திக் கொன்றது.
அதனை பார்த்த அரச பணியாளர்கள் மன்னனை கண்டு வேந்தே நம்முடைய ராஜஹம்சம்
என்னும் ராஜ வாகனமாகிய நம் குதிரையை கலிங்கத்து வணிகர்கள் கொணர்ந்த எருமை கொன்று விட்டது’
என உரைத்தனர்.
அழகிய மணிமுடி யணிந்த
யசோமதி மிகவும் கோபம் கொண்டு, அவ்வணிகர்களின் பொருள்களையும், அவ்வெருமையையும் உடனே
கொண்டு வாருங்கள் என கட்டளை யிட்டான். ஏவலர்களும் சென்று அவற்றை
கவர்ந்து வந்தனர்.
அரசகட்டளை நிறைவேற்றும்
பொருட்டு அவ்வெருமையை கயிற்றால் கால்களை இறுகக்கட்டினர். அதன் முதுகிலுள்ள சரக்குகளை ஏற்றும்
உபகரணங்களை அகற்றி அருளில்லாத அந்த ஏவலர்கள், கொடூரமாய்
அதன் காது போன்ற உறுப்புக்களை அரிந்தனர். (மிளகு,
கடுகு, உப்புகலந்த) கார நீரினை
எருமையின் வயிற்றில் நிரம்பும் வரை ஊற்றினர். அந்நீர் கொதிக்கும்
படி செய்து வாளால் அறுத்து , நெய் ஊற்றிய ஈட்டி போன்ற இரும்புக்
கம்பியால் வயிற்றைக் கடைந்த பின், சம்மட்டியால் அடித்து கொன்றனர்.
அச்சித்ரவதையை என்னென்று சொல்வது.
கொடுசூரியான அமிர்தமதி
வெந்த அவ்வெருமையின் ஊனை பிறர் காண தின்று வயிற்றை நிரப்பினாள். அதனைக் கண்ட மாந்தர் பாவி என தூற்றினர்.
எருமை யூனைத்தின்ற
பாவி அமிர்தமதி, அவளது ஊன்
ஆசை தீராததினால் சேடியரிடம், ‘ இன்னும் ஒரு ஆசை இவ்வரண்மனையில்
வாழும் ஆட்டுக்கிடாய் ஒன்றுள்ளது. அதன் ஊனைத்தின்று பசி யாறியானல்
தான் என் ஆசை நிறைவேறும், அதைக் கொணர்க’ என்று ஏவினாள்.
அதனைக்கேட்டு சென்ற
தோழியர் ‘ அழகு மன்மதன் போன்ற
அரசனை விஷம்வைத்துக் கொன்றாள். பொருந்தா காமவேட்கை கொண்டு குட்ட
நோயாயுள்ளவனும், நற்குலத்தில் பிறவாத அட்டபங்கனுடன் கூடி சிற்றின்பம்
கண்டாள். இவள் அழகு மேனியும் குட்டநோயால் பற்றப்பட்டுள்ளது.
அங்கங்கள் குறையலாயின் புண்களில் உள்ள சீயினால் முடைநாற்றம் வீசுகிறது.
தொழுநோய் மட்டுமில்லாது வேறு பிணியும் சேர்ந்துள்ளது.
முற்பிறப்பு தீவினையால்
நல்லணர்வு கெட்டவளாய், இப்பிறப்பில்
செய்த தீவினையால் தொழுநோய் போன்ற துன்பங்கள் வந்துற்றன. இவள்
இறந்தாலும் இவள் ஈட்டிய வினை தொடரும் என்பது உறுதி.
எருமையின் ஊனைத் தின்று
தீர்த்தாள், போதாதென்று ஆட்டின்
தசையையும் விரும்புகின்றாளே! தீயவினைகளை மேலும் தேடிக்கொண்டே போகிறாளே!’ என மனம் கலங்கினர்.
இவை யனைத்தும் ஆட்டின்
அருகே நின்று பேசினர்.
---------------
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்
213) என்று தன்புறத்து இப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய அத்தகர்
ஒன்று முற்ற உணர்ந்தவள் தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.
214) தேவி என்னை முனிந்தனை சென்றொரு
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
பாவி நின்உரு இன்னணம் ஆயது
பாவி என்னையும் பற்றினை இன்னணம்.
215) நஞ்சில் அன்னையோடு என்னை நலிந்தனை
எஞ்சல் இல்சினம் இன்னம் இறந்திலை
வஞ்ச னைமட வார்மயி டம்அது
துஞ்சு நின்வயிற்று என்னையும் சூழ்தியோ.
216) என்று கண்ட மொறுமொறுத்து என்செயும்
நின்று நெஞ்சம் அதனுள்சுட நின்றது
அன்று தேவி அலைப்ப வழிந்துயிர்
சென்றது அம்மயி டத்தொடு செல்கதி.
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
217) மற்றுஅம் மாநகரத்து மருங்கினில்
சிற்றில் பல்சனம் சேர்புறச் சேரியின்
உற்று வாரணப் புள்உரு ஆயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.
218) கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
சண்ட கன்மியைத் தந்த வளர்கஎனக்
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர்வினை வல்லவும் ஆயவே.
219) தரளம் ஆகிய நயனத்தொடு அம்சிறை சாபம்போற் சவியன்ன
மருளம் ஆசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த
ஒளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமுள் ஒப்பிலபோரின் கண்
தளர்வில் வீரியம்தகைபெற வளர்ந்தன தமக்கிணைய வைதாமே.
--------------------
அமிர்தமதியின் மதி
கெட்ட செயல் அனைத்தையும் ஆட்டின் அருகே நின்று பேசினர். அதனைக்கேட்ட அவ்வாடு(யசோதரன்) மனம் வருந்தியது. அப்போது
அச்சேடியர் அந்த ஆட்டைப்பிடித்து அரசி இருக்குமிடம் சென்றனர். அங்கு சென்றதும் ஆடு அப்பாவியைக் கண்டு நின்றது.
வஞ்சகமுள்ளவளே! என் தாயோடு என்னையும் விஷம் அருந்த செய்து
கொன்றாய். இன்னும் உன்
சினம் தனியவில்லை எருமை ஊனைத்தின்றும் உன் வயிறு நிரம்பாமல்,
என்னையும் கொன்று தின்ன எண்ணுகிறாய், தீயவளே’
என நினைத்து நினைத்து வருந்தியது. அப்போழ்து அவ்வாட்டினைக்
கொன்றாள். உயிர் துறந்ததும், எருமையைப்
போல் மறுபிறப்பில் சேர்ந்தது.
எருமையும் ஆடும் அந்நகரின்
அருகே றச்சேரியில் சிறு வீடுகளில் கோழிகளாக பிறப்பெடுத்தன. யசோமதி மன்னன் அக்கோழிகளைக் கண்டதும்,
முன் பிறப்பின் தொடர்பால் அவற்றை விரும்பினான்.
அரசன் தன் தளபதி சண்டகன்மியிடம்
கொடுத்து வளர்த்து வருமாறு பனித்தான். அவனும் கூட்டில் வைத்து வளர்த்து கொழுத்து சண்டையிடும்
வல்லமை பெற்றன.
முத்தைப் போன்ற கண்களும், இந்திர வில் போன்ற சிறகுகளும்,
மாணிக்க மணிகள் போல் ஒளிரும் கொண்டையும், பொன்னைப்
போன்ற நகங்களை யுடைய கால்களும் உடைய கோழிகள் இரண்டும் போர்த்தொழிலுக்கு தயாராய் இருந்தன.
அவைகளுக்கு இணை அவைகளே என்ற வாறு வளர்ந்திருந்தன.
இத்துடன் மூன்றாம்
சருக்கம் முற்றும்.
---------------
நான்காஞ் சருக்கம்
220) செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டும் தேனும்
கொந்துகள் குடைந்து கூவும் குயிலொரு குழுமி ஆர்ப்பச
செந்துணர் அணைந்து தென்றல் திசைதிசை சென்று வீச
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.
221) இணர்ததை பொழில் உள்ளால் இசோமதி என்னு மன்னன்
வணர்ததை குழலி புட்பா வலிஎனும் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளர்இளம் பிண்டி வண்டார்
இணர்ததை தவிசின் ஏறி இனிதினின் அமர்ந்தி ருந்தான்.
222) பாடகம் இலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொன்
சூடக மணிமென் தோளில் தொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளிர் ஆடு நாடக நயந்து நல்லார்
பாடலின் அமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.
223) வளையவர் சூழல் உள்ளான் மனமகிழ்ந்து இருப்ப மன்னன்
தளைஅவிழ் தொடையன் மார்பன் சண்டமுன் கருமன்போகி
வளமலர் வனத்துள் தீய மனிதரோடி அனைய சாதி
களைபவன் கடவுள் கண்ணில் கண்டுகை தொழுது நின்றான்
224) அருவினை முனைகொல் ஆற்றல் அகம்பனன் என்னு நாமத்து
ஒருமுனி தனியன் ஆகி ஒருசிறை யிருந்த முன்னர்த்
தருமுதல் யோகு கொண்டு தன்னளவு இறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.
225) வடிநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
அடிகள் நீர் அடங்கி மெய்யி ருள்புரி மனத்திர் ஆகி
நெடிதுடன் இருந்து நெஞ்சி நினைவதோர் நினைவு தன்னான்
முடிபொருள்தானு என்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.
226) ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி அவனை நோக்கிச்
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலும் என்றே
பேரறி வாகித் தம்மில் பிறழ்விலா உயிரை யன்றே
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.
227) அனந்தமாம் அறிவு காட்சி அருவலி போகம் ஆதி
நினைந்தஎண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்
சினஞ்செலு வாதி யின்றித் திரிவித உலகத்துஉச்சி
அனந்தகா லத்து நிற்றல் அப்பொருள்தன்மை என்றான்.
---------------------------
செந்நிற தளிர்கள் நிறைந்த சோலையில், நீல நிற வண்டுகளும், தேனீக்களும் பூங்கொத்துக்களைக் குடைந்து தேன் உண்டு இசைபாடும். குயில்களும் அவற்றுடன் சேர்ந்திசைக்கும். இளந்தென்றல் நான்கு திசையெங்கும் மணம் பரப்பும். அவ்விளவேனிற் பருவம் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை தந்தது.
அச்சோலையில் யசோமதி அரசன் கருங்சுருளாய் அமைந்த கூந்தலையுடைய தனது புட்பாவலி தேவியுடன், அழகிய கொடிகள் சூழ்ந்த அசோகமரத்தினடியில் அமைந்த மண்டபத்தில் அமர்ந்து இனிதே பொழுதை கழித்தான்.
சிலம்புகளை தம் சிவந்த காலகளில் அணிந்த நாட மகளிர் இரு கரங்களால் தொழுது இசை நடனத்துடன் கூடிய நாடகத்தையும்,
மகளிரின் அமிர்தம் போன்ற பாடலுடன் கலந்த இசையையும் மன்னன் மகிழ்வுடன் விரும்பி பருகினான்.
அவ்வேளையில் தளபதி சண்டகருமன் தீவினை புரியும் மனிதர்களையும்,
அவரையொத்த விலங்கினங்களையும் தீய மனத்தை மாற்றும் திறனறிந்த ஒரு முனிவரை யோகநித்திரையில் கண்டான்.
(இராசமாபுரத்து சண்டகருமன் வேறு; இச்சண்டகருமன் வேறு என்பதை புரிந்து கொள்க.)
மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்த, உயிரைச் சூழ்ந்த வினைகளை விரட்டும் ஆற்றல் பெற்ற அகம்பனன் என்னும் முனிவர் தன் தியானத்திலிருந்து விலகினார். அப்போது தனை வணங்கி நின்ற சண்டகருமனை கண்டார். சண்டகருமனும் அவரது மலரடிகளை வணங்கி ‘ முனிபுங்கவா, ஐம்பொறிகளை அடக்கி, அன்பு நெஞ்சினன் ஆகி தியானத்தில் நெடுநேரம் அமர்ந்தீர். அவ்வமயம் தாங்கள் எண்ணத்தில் சிந்திப்பதால் விளையும் நன்மைதான் யாது என்பதை அருள்கூர்ந்து சொல்வீராக’ என்றான்.
அருள் நிறைந்த உள்ளத்தினையுடைய முனிபுங்கவர் அவனை நோக்கி, சிறந்த பான்மையானவனே எனக் கருதி, ‘பவ்வியனே! நுண்ணிய அறிவினையுடைய தன்மையாளர் அறிவின் உருவாகவும், இயல்பில் மாறாத குணமுடியதான உயிரின் சிறப்பை அப்போது சிந்திப்பர்’ எனக் கூறினார்.
மேலும் ‘ கடையிலா காட்சி, கடையிலா அறிவு, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் போன்ற எண்குணங்களோடு,
நிர்மலமாகி (முழுத்தூயத்தன்மை) நிரந்தரப்பொருளாக; கோபம், மானம், மாயை, உலோபம் முதலான குற்றங்கள் ஏது இன்றி, மூவுலகின் உச்சியில் உறைவதே உயிரின் இயல்பு’ என சீரிய விளக்கம் தந்தார்.
-------------------
228) கருமனும் இறைவ கேளாய் களவுசெய் தோர்கள் தம்மை
இருபிள வாகச் செய்வன் எம்அர சுஅருளி னாலே
ஒருவழி யாலும் சீவன் உண்டு எனக் கண்டது இல்லை
பெரியதோர் சோரன் தன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.
229) மற்றொரு கள்வன் தன்னை வதைசெய்யும் உன்னும் பின்னும்
இற்றென நிறைசெய் திட்டும் இறைவனே பேதம் காணேன்
உற்றதோர் குழியின் மூடி ஒருவனைச் சிலநாள் வைத்தும்
மற்றவ னுயிர்போ யிட்ட வழிஒன்றும் கண்டி லேனே.
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
230) பையவே காட்டம் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
வெய்யெரி கண்டதுஉண்டோ விறகொடு விறகை ஊன்ற
ஐஎன அங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
இவ்வகைக் காணல் ஆகும் என்றுநீ உணர்தல் வேண்டும்.
இதுவும் அது
231) சிக்கென வாயு ஏற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்
புக்கஅவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்
ஒக்குமே ஒருவன் சங்கோடு ஒருநில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய் திட்டது எவ்வழி வந்த தாகும்.
232) இவ்வகை யாகும் சீவன் இயல்புதான் இயல்பு வேறாம்
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையல்உற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமிச் செல்வர்
ஐயமில் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவ தாகும்.
233) ஆகமத் தடிகள் எங்கள் அதுபெரிது அரிது கண்டீர்
ஏகசித் தத்தர் ஆய விறைவர்கட்கு எளிது போலும்
போகசித் தத்தோடு ஒன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்கு
ஆகுமற்றுஉறுதிக்கு ஏது அருளுக தெருள வென்றான்.
234) அற்றமில் அறிவு காட்சி அருந்தகை ஒழுக்க மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத்து ஒழுகு வாருக்கு
உற்றிடு உம்பர் இன்பம் உலகிதற்கு இறைமை தானும்
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமைஎன்றான்.
--------------
அகம்பன முனிவரர் சண்டகருமனுக்கி
உயிரின் இயலபை எடுத்துரைத்தார். அவனோ ‘ முனிவ ‘களவு செய்த குற்றவாளிகளை
வேந்தன் கட்டளைக்கிணங்க இரு துண்டாக்கியுள்ளேன். அவ்வுடல் துண்டாடும்
முன்னும், பின்னும் அதே
எடையுடன் தான் இருந்துள்ளது. ஓர்நாள் இரு திருடனை துண்டு துண்டாக
வெட்டிய போதும் உயிர் போன வழியை என் கண்களால் காணமுடியவில்லையே’ என சந்தேகமுடன் உரைத்தான்.
காய்ந்த விறகினை வெட்டும்போது
தீயினைக் கண்டவர் இல்லை. ஆனால்
அவ்விரண்டு துண்டும் மீண்டும், மிண்டும் உரசி தீ உண்டாகி விறகையே
எரித்ததை காணலாம். காணமுடியா நெருப்பு போல உயிரையும் உண்டு என
ஏற்றல் வேண்டும்’ என எடுத்துரைத்தார்.
தோல்துருத்தியில்(leather blader) காற்றை நிரப்பி வாய்புறத்தை
மூடி எடையிட்டாலும், பின்னர் காற்றை நீக்கி எடையிட்டாலும் அதிக வேறுபாடு
இன்றி ஒன்றாகத்தான் இருக்கும். அதேபோல் சுரங்கத்தில் ஒருவன் சங்கூதினாலும்
வெளியில் அவ்வொலி கேளாது அன்றோ’ என்றார் முனிவர்.
(காற்று முதலிய
அணுத்திரளுக்கும் எடையுண்டு என்று சமணம் கூறுகிறது. இருப்பினும்
உயிர் காற்று போன்றது என்ற உவமையை புரிந்து கொள்ள எளிதாகும் என முனிவர் கூறுகிறார்.)
மேலும் ‘உயிரின் இயல்பும் அவ்விதமே! ஆனால் அவ்வுயிர் இருவினைகளால்
கட்டுண்டு, அஞ்சத்தக்க துன்பத்தில் மூழ்குகின்றது.
மயக்கமுற்று நாற்கதியில் சிக்தி தவிக்கிறது. ஐயமற்ற
நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய
மும்மணிகளை ஏற்ற சான்றோரே இருவகை உயிரினை உணர்வர்.
(காதி,
அகாதி இருவகை வினைகள்; தேவ, மனித, நரக, விலங்கு என நான்கு கதிகள்
சம்சார உயிர், முக்தி உயிர் என இருவகை உயிர்கள்)
‘பரம ஆகமம் உணர்ந்த
அடிகளே! உயிரின் இயல்பினை அறிவது அறிவிலியாகிய எனக்கு கடினம்.
ஏக சிந்தனை தியானத்திலிருக்கும் தங்களைப் போன்ற துறவியர்க்கு எளிதாக அமையும். இல்லறச்
சுகங்களை விரும்பி ஐம்பொறிகளின் வழியே சிந்திக்கும் மானுடருக்கு புரியும் வண்ணம் தெளிவாக
கூற வேண்டுகிறேன்’ என்றான் சண்டகருமன்.
--------------
235) உறுபொருள் நிலைமை தன்னை உற்றுணர் அறிவ தாகும்
அறிபொருள் அதனில் தூய்மை அகத்தெழு தெளிவு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவும் என்றான்.
236) பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை ஐந்தோடு ஒன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுதல் ஒழுக்கம் என்றான்.
237) கொலையின் தின்மை கூறின் குவலயத்து இறைமை செய்யும்
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதலில் பெருமை திட்பம் உறுவலி ஒழிந்த தீயும்.
238) தெருளுடை மனத்தில் சென்ற தெளிந்துணர் வாய செல்வம்
பொருள்வயின் இறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.
ஒருவிய பயனு அஃதே ஒளியினோ அழகு வென்றி
பொருள்மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகு மாதோ.
239) சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளிது எல்லாம்
உலைதலில் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்னக்
கொலையினில் ஒருவல்இன்றிக் கொண்டனன் அருளிற்றுஎல்லாம்
அலைசெய்வது ஒழியின் வாழ்க்கை அழியுமற்று அடிகள்என்றான்.
முனிவரர் மீண்டும் கூறல்
240) ஆருயிர் வருத்தம் கண்டால் அருள்பெரிது ஒழுகிக் கண்ணால்
ஒருயிர் போல நெஞ்சத்து உருகிநைந்து உய்ய நிற்றல்
வாரியின் வதங்கட்கு எல்லாம் அரசமா வதம்இ தற்கே
சார்துணை யாகக் கொள்க தகவும்அத் தயவும் என்றான்.
241) இறந்தநாள் என்றுஉள்ளத்து இரங்குதல் இன்றி வெய்தாய்க்
கறந்துஉயிர் உண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை உறுவது எல்லாம்
சிறந்தநல் லறத்தின் அன்றித் தீருமாறுஉளதும் உண்டோ.
--------------
சண்டகருமன் உயிர் உய்ய வழிகேட்டமைக்கு அம்முனிவர் பெருமான் ‘உற்ற உயிர் முதலிய பொருட்களை உள்ளவாறு உணர்தல் நல்ஞானம் ஆகும். அறிந்த அப்பொருளின் தூய தன்மையில் மனத்தில் தோன்றும் தெளிவு நற்காட்சியாகும். ஆதிபகவன் அருளிய சிறந்த அறிவு, காட்சி இரண்டின் சீர்மையிலும் மகிழ்வுடன் பொருந்தி நிற்றல், அவர் அருளிய அறத்தின் பிரிவான நல்லொழுக்கமாகும்.’ என்று
கூறினார்.
(அறிவது ஞானம், அதனைத் தெளிவது தரிசனம், அவையிரண்டுமே நல்லறம். அவ்வறத்தில் மிகுந்த மிகிழ்வோடு நிற்றல் ஒழுக்கம் ஆகும்.)
மேலும் ‘ அவ்வழியே உயிரின் தன்மையை நன்குணர்ந்து காத்திடல் வேண்டும். அவ்வாறு ஒழுகுபவர்க்கு அடுத்த பிறவியில் தேவகதி கிட்டும். பின்னர் நாடாளும் மன்னன் பதவியும் வாய்க்கும். அப்பிறவியிலும் பற்று விட்டு துறவறம் ஏற்று தவ வாழ்வில் ஒழுகின் முன் கூறிய கடையிலா நான்மையும், முழுதுணர்ஞானமும் எய்தி முக்தி பெறலாம்.’ என்றார் முனிவர்.
‘பொறிகளுடன் உள்ள இயங்குயிர்களை கொல்லுதல்,
பொய்யுரைத்தல், களவு செய்தல்,
பிறன் மனை நோக்குதல், பொருளிடத்தே கடும் பற்று ஆகிய இவ்வைந்திலும் பொருந்திய மனத்தை மீட்டலாகிய அனுவிரதம் ஐந்தோடு, புலாலுண்ணாமை, தேன், கள்ளுண்ணாமை ஆகிய மூன்றுடனும் பொருந்தி ஒழுகுதல் இல்லறத்தாரின் நல்லொழுக்கமாகும்’
என்றார்.
கொல்லாமை எனும் பேரறத்தை இம்மையில் ஏற்று ஒழுகுபவரை மறுமையில் நாடாளும் மன்னராக்க செய்யும். வாய்மை ஏற்றிடின் உயரிய புகழைத்தரும். திருடாமை அறத்தை ஏற்பவருக்கு விலை மதிப்பில்லா பேரருளாளன் என்ற பெயர் கிட்டும். பிறன் மனை நோக்காருக்கு அழிவற்ற பெருமையை நல்கும் என்றார்.
நல்லறிவாகிய செல்வம் உலகப் பொருளிடத்து ஏற்படும் கடும் பற்றை விலக்கும். மேலும் புலால், தேன், கள் ஆகியவற்றை உண்ணாமல் இருக்கச் செய்யும். நல்லறம் கொண்டவருக்கு நற்புகழ், அழகு, வெற்றி, பெருஞ்செல்வம், நற்குலம்,
வாழ்வில் இன்பம் அகிய வற்றை அடையச் செய்யும்.
வலிமையான தோள்களையுடைய சண்டகருமா! இல்லறத்தாருகுரிய விரதங்களை அலைபாயும் மனமின்றி கடைபிடிப்பாயாக’ என்று
அறிவுருத்தினார். அதனைக் கேட்ட சண்டகருமன் ‘ முனிபுங்கவரே ‘ கொலைத்தொழில் புரிவதை விட்டு விட்டால், ஊதியமின்றி என் வாழ்வே கெட்டுவிடும். எனவே கொல்லாமை நீக்கி பிறவற்றை ஏற்கிறேன்’
என்றான்.
சண்டகருமா!
மானுடற்கான விரதத்தில் தலையானது கொல்லாமையே யாகும். உயிரினங்கள் படும் துயர்தனை தன் துயர்போல் நீக்க முற்படுதலே சிறந்த
அறமாகும். மற்றனைத்து விரதங்களும்
கொல்லாமையின் அடிப்படையில் வந்த துணைவிரதங்களாகும். சான்றோர்
ஏற்பதும், கருணை அடிப்படையானது கொல்லாமையே!’ என்றுரைத்தார் முனிபுங்கவர்.
‘இதுவரை உன் வாழ்நாளில் உள்ளத்தில் இரக்கம் சிறிதுமின்றி,
கொடுங்குணத்தால்
பல உயிர்களைக் கொன்றுள்ளாய்! அவற்றின் ஊனை உண்டு தீவினைகளை பெருக்கிக் கொண்டுள்ளாய்!
தொடர் பிறவியில் மிகுந்த துன்பங்களைப் பெற்றுள்ளாய். நல்லற நெறியில் நின்றாலன்றி இத்துன்பங்கள் விலகாது என்பதை உணரவே இல்லை.’ என்றார் முனிவர்.
-----------------
242) நிலையிலா உடம்பின் வாழ்க்கை நெடிதுடன் இறுவ என்றிக்
கொலையினான் முயன்று வாழும் கொற்றவ ரேனும் உற்றச்
சிலபகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய்
அலைதரு பிறவி முந்நீர் இழுந்துவர் அனந்தம் காலம்.
243) இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை யாய
மன்னவன் அன்னை யோடு மாவினில் கோழி தன்னைக்
கொன்னவில் வாளில் கொன்ற கொடுமையில் கூடிய துன்பம்
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.
244) வீங்கிய வினைகள் தம்மால் வெருவரத் தக்க துன்பம்
தாங்கினர் பிறந்துஇ றந்து தளர்ந்தனர் விலங்கில் செல்வார்
ஆங்குஅவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
ஈங்குநின் அயலக் கூட்டில் இருந்த கோழிகளும் என்றான்.
245) உயிர்அவண் இல்லை யேனும் உயிர்க்கொலை நினைப்பி னால் இம்
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தம் கண்டால்
உயிரினில் அருள்ஒன் றுஇன்றி உவந்தனர் கொன்று சென்றார்
செயிர்தரு நரகின் அல்லால் செல்லிடம் இல்லை என்றான்.
246) மற்றுஅவ ன்இனைய கூற மனம்நனி கலங்கி வாடிச்
செற்றமும் சினமு நீக்கித் திருவறத் தெளிவு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன அனைத்தும் கொண்டு
பெற்றனன் அடிகள் நும்மால் பெரும்பயன் என்று போந்தான்.
-------------------------
‘நல்லற நெறியில் நின்றாலன்றி இத்துன்பங்கள் விலகாது என்பதை நீ உணரவே இல்லை.’ என்று அகம்பன முனிவர் சண்டகருமனுக்கு உரைத்தார்.
‘இவ்வுடல் நிலையில்லாதது!
நீண்டநாள் நிலைத்து வாழ்வதாய் எண்ணி கொலைத்தொழிலைச் செய்தாய். ஆரசனே யானாலும், முயற்சியை மேற்கொண்டாலும் மரணம் அடையாதோர் யாரும் இவ்வுலகில் இல்லை. புரிந்து கொள். மாந்தர் பலரும் பிறவிச்சுழலில் வீழ்ந்து பலகாலம் வருந்துகின்றனர். இதுவே உண்மை. என்றார் முனிவர்.
‘தளவரனே, ஒன்றைக் கேட்பாயாக! உன் அரசன் யசோமதியின் தந்தை யசோதரன் தன் அன்னையின் ஆணையை ஏற்று மாவினால் செய்யப்பட்ட கோழி வடிவத்தை மாரிக்கு வெட்டிப் பலியிட்டான். அதன் பயனால் பின் வந்த ஒவ்வொரு பிறவியிலும், விலங்குகளாகப் பிறந்து, பெற்ற துன்பங்கள் அளவிட முடியாதவை’ என்று கூறினார் முனிவர்.
தாய் சந்த்ரமதியும்,
மகன் யசோதரனும் தாங்கமுடியா துன்பங்களை பிறந்து இறந்து விலங்குகளாய் மீண்டும் பிறந்து இறந்து தீவினை காரணங்களால், தற்போது இரு
கோழிகளாகப் பிறந்துள்ளனர்.
அருகிலுள்ள அக்கூட்டில் தான் அவையிரண்டும் வாழ்கின்றன’ என்றார் முனிபுங்கவர்.
மேலும் ‘உயிரற்ற மாக்கோழியை மாரிக்கு இருவரும் பலியிட்டாலும், அவ்விருவருக்கும் உயிர் பலியிடும் எண்ணம் இருந்த படியால், ஒவ்வொரு பிறவியிலும் பல துன்பங்களைப் பெற்றனர். அவற்றை அறிந்தால், கருணையின்றி உயிர்களைக் கொல்லும் தொழில் செய்வோர் மறுமையில் சேரும் இடம் துன்பங்கள் நிரம்பிய நரகமாகத்தான் இருக்கும் என்பது புலனாகும்’ என்றார் முனிவர்.
அகம்பன முனிவர் கூறிய
அனைத்தையும் கேட்ட சண்டகருமன் மனம் கலங்கினான். பகையுணர்வும், சினமும் நீக்கியவனாய்,
திருவறத்தில் தெளிவும், அதன்மீது பற்றும் கொண்டான். முனிவர் கூறிய அனைத்து விரதங்களையும் அவரிடமே ஏற்றான். ‘ஐயனே
உங்களால் நான் பெரும் பயன் பெற்றேன்’ என கூறி பணிவுடன் வணங்கி
விடைபெற்றான்.
-----------------
கோழிகள் தம் பிறப்புணர்தல்
247) கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள் தம்மைக்
கூட்டினுள் இருந்த மற்றக் கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு
ஓட்டிய சினத்த வாகி உறுவதம் உய்ந்து கொண்ட
பாட்டரும் தன்மைத் தன்றே பான்மையின் பரிசு தானும்.
248) பிறவிகள் அனைத்து நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே
அறவியல் அடிகள் தம்மால் அறஅமிர்து ஆரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தனம் என்ற வன்றே.
249) அறிவரண் சரண மூழ்கி அறத்தெழு விருப்பம் உள்ளாக்
குறைவில் அமுதம் கொண்டு குளிர்ந்துஅக மகிழ்ந்து கூவச்
செறிபொழில் அதனுள் சென்று செவியினுள் இசைப்ப மன்னன்
முறுவல்கொள் முகத்து நல்லார்முகத்துஒரு சிலைவ ளைத்தான்.
250) சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்த லோடும்
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
சில்லறி வினகள் ஏனும் திருவறப் பெருமை யாலே
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.
251) விரைசெறி பொழிலின் உள்ளால் வேனிலின் விளைந்த வெல்லாம்
அரைசனும் அமர்ந்து போகி அகநகர்க் கோயில் எய்தி
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோடு
உரைசெயல் அரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.
------------------
சண்டகருமன் முனிவர்
கூறிய அனைத்து விரதங்களையும் அவரிடமே ஏற்றான். ‘ஐயனே
உங்களால் நான் பெரும் பயன் பெற்றேன்’ என கூறி பணிவுடன் வணங்கி
விடைபெற்றான்.
அடிகளின் அருள் நிறைந்த அறவுரைகளை கூட்டிலிருந்த கோழிகள் இரண்டும் கேட்டு தெளிந்தன. தம் முற்பிறப்பினை உணர்ந்த பொழுது கோபத்தை விட்டன. பொருத்தமான விரதத்தினை ஏற்றன. அரிய குணத்தை ஏற்று பான்மையில் உயர்ந்தன.
தம் முற்பிறப்புகளை தம் நெஞ்சில் மீண்டும் நினைத்து, ‘மயக்கு வினையால் பல பிறவிகளில் உழன்றோம். அச்சுழற்சி நீங்க அறத்தின் இயல்பினை பெற்ற அடிகளின் நல்லறத்தினை பருகினோம். பிறவித்துன்பத்தினின்று உய்ந்தோம்’ என்று எண்ணிக் கொண்டன.
இறைவன் திருவடிகளை வணங்கி நல்லறத்தினை ஏற்கும் முகமாக அவ்விரண்டு கோழிகளும் கூவின. அவ்வொலியைக் கேட்ட யசோமதி சினம் கொண்டு அவ்விரண்டின் மீது அம்புகளைத் தொடுத்தான். சுற்றிலும் உள்ள மங்கையர் அவன் வில்லாற்றலை பாரட்டுவர் என தவறாக எண்ணினான்.
அழகிய சிறகுகளையுடைய கோழிகள அவ்வம்பினால் நடுக்கமுற்று சாய்ந்தன. முனிவர் அருளிய திருவறத்தை பருகிய காரணத்தால் அவை இரண்டும் விலங்கினத்திலிருந்து விலகி மானுடப் பிறவி பெறும் தகுதியைப் பெற்றன.
(உயிர் விடும் தருணத்தில் தழுவிய உணர்விற்கேற்ப அதன் மறுபிறவி அமையும் என்பது ஆகமம் தெரிவிக்கும் கருத்தாகும்.)
இளவேனிற்காலத்தை சோலையில் இன்பத்துடன் துயத்த யசோமதி மன்னன், தன்
தேவியுடன் அரண்மனையை நோக்கி திரும்பினான்.
முரசொலி முழங்க வரவேற்ற தன் மாளிகையை சென்றடைந்தான். அன்றிரவு வாசமலர் சூடிய கூந்தலையுடைய தன் மனையுடன் காம இன்பத்தில் மூழ்கினான்.
-------------------------------
இரட்டையர் பிறப்பு
252) இன்னணம் அரசச் செல்வத்து இசோமதி செல்லு நாளுள்
பொன்னியல் அணிகொள் புட்பா வலிஎனும் பொங்கு கொங்கை
இன்னியல் இரட்டையாகும் இளையரை ஈன்று சின்னாள்
பின்னுமோர் சிறுவன் தன்னைப் பெற்றனள் பேதை தானே.
253) அன்னவர் தம்முள் முன்னோன் அபயமுன் னுருசி தங்கை
அன்னமென் நடையி னாளும் அபயமுன் மதியென் பாளாம்
பின்னவர் வளரு நாளுள் பிறந்தவன் இறங்கொள் பைந்தார்
இன்னிளங் குமரனாம் இசோதரன் என்ப தாகும்.
254) பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
வரிசையில் கரிமேற்கொண்டும் வாள்தொழில்பயின்று மன்னர்க்கு
உரியஅத் தொழில்க ளோடு கலைகளின் செலவை ஓர்ந்தும்
அரசிளங் குமரன் செல்நாள் அடுத்தது கூறல் உற்றேன்.
255) நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோடு
ஏற்றிடை எயிற்றுஞம லிக்குலம் இரைப்ப
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.
யசோமதி சுதத்த முனிவரைக் காணல்
256) இதத்தினை உயிர்க்கினிது அளித்திடும்இயற்கைச்
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
பதத்தயன் மதக்களிறு எனப்படிம நிற்பக்
கதத்துடன் இழித்தடு கடத்திடை மடுத்தான்
257) கூற்றம்என அடவிபுடை தடவியுயிர் கோறற்கு
ஏற்றபடி பெற்றதிலன் இற்றைவினை முற்றும்
பாற்றியவன் இன்னுயிர் பறிப்பன்என வந்தான்
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.
258) கொந்தெரி யுமிழ்ந்துஎதிர் குரைத்துஅதிர்வ கோணாய்
ஐந்தினொடு பொருததொகை ஐயம்பதின் இரட்டி
செந்தசைகள் சென்றுகவர்க என்றுடன் விடுத்தான்
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.
259) அறப்பெருமை செய்தருள் தவப்பெருமை தன்னால்
உறப்புணர்தல் அஞ்சியொரு வில்கண் அவை நிற்பக்
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
மறப்படை விடக்கருதி வாள்உருவு கின்றான்.
---------------------------
யசோமதி மன்னன் அரசவையை
நடத்தி வரும் நாளில், பொன்னால்
ஆன அணிகலங்களை அணிந்த அவன் மனைவி புட்பவலி அழகிய இரட்டைக் குழந்தைகளை ஈன்றாள்.
அதன் பின்னர் சில மாதங்கள் கடந்த பின்னர் ஓர் ஆண்மகவை பெற்றெடுத்தாள்.
(சோலையில் யசோமதி
சினங்கொண்டு வீழ்த்திய கோழிகள் இரண்டும் அவனுடைய மனைவியான புட்பவலிக்கு இரண்டு குழந்தைகளாக
பிறந்தன)
இரட்டைப் பிறவியினுள்
மூத்தவன் அபயருசி என்பான். அவனது தங்கை அபயமதி என்றும் அழைக்கப்பட்டனர். சில மாதங்கள்
கழித்து பிறந்த ஆண்மகவு யசோதரன் என்றே அழைத்தனர். யசோதரன் தனது
பாட்டனைப் போன்றே அழகிய நிறம் உடியவனாய், மாலை சூடியவனாய் திகழ்ந்தான்.
அவ்விளவரசன் யசோதரன், குதிரை ஏறிச் செய்யும் போர்க்கலையும்,
யானை மீதேறிச் செய்யும் ஈட்டி எறிதலையும், தேரைச்
செலுத்தவும், தரையில் போர் செய்யும் வாட்போரினையும், அறுபத்து நான்கு கலைகளையும் செவ்வனே கற்றறிந்தான். அவ்வாறு
செல்லும் நாளில்…. என அபயருசி மன்னன் மாரித்ததனுக்கு இது வரை
தன் வாழ்வின் நிகழ்வுகளை கூறி வந்தான்.
(அபயருசி இளவரசனாகிய
தன் கதையை விரிவாக கூறவில்லை)
நால்வகை படைகள் நடுங்குமாப்போல
தன்
படையுடன் யசோமதி உயிரைக் கொல்லும் யமனைப்போல்; வலை, கூரிய பற்களையுடைய வேட்டை நாய்களுடன் வனம் நோக்கி
வேட்டைக்குச் சென்றான்.
(அவன் தீக்காட்சியுடையவனாதலால்
நல்லறமின்றி வெட்டைக்குச் சென்றான். அக்காலத்தில் கருணையின் காரணமாக
சில மன்னர்கள் வேட்டையாட செல்வதில்லை)
அறவுரையை இனிதே உயிரினங்களுக்கு
வழங்கிடும் முனிவரான சுதத்தாசாரியாரைக் கண்டான். இரு வினையையும் உடைத்தெறியும் நோக்குடன் அவர் பிரதிமா யோகத்தில்
நிற்க; திகம்பரக் கோலத்தில்
எதிர் கொண்டதால் அதனை சகுனத்தடை என எண்ணி அவர் மீது சினம் கொண்டு இழித்துரைத்து காட்டினுள்
சென்றான்.
கூற்றுவன் போல் காடு
முழுதும் தேடி வேட்டையாட விலங்கினங்களைக் காணாது, ‘இன்றைய தொழில் முழுதும் கெடுத்த அந்த (சுதத்த) முனிவனைக் கொல்வேன்’ என யாரும் மாற்றமுடியா சினத்துடன் அவரிடம் நோக்கி யசோமதி மன்னன் வந்தான்.
அருள் மழை பொழியும்
சுதத்தமுனிவரை கண்டதும், உயிர்கள் நடுங்க குரைத்தும், கடித்துக் குதறும் ஐநூறு
வேட்டை நாய்களை அவரை நோக்கி ஏவினான்.
திருவறத்தை பலருக்கும்
உபதேசிக்கும் தவப் பெருமையை உடையவராதலால் அம்முனிவர் அருகில் அணுகுவதற்கஞ்சி
ஒரு வில் அளவு தூர இடைவெளியில் நின்று விட்டன. அதனைக்கண்ட கறுத்த
மனமுடைய(கிருஷ்ண லேஸ்யை) மன்னன்
‘ நாய் நெருங்காவிடினும், உயிரைக் கொல்லும் என்
கூரிய வாளால் அவரைக் கொல்வேன்’ என சினம் கொண்டு உருவினான்.
(மனிதரின் குணத்தை
ஆறுவகை வண்ணமுள்ள லேஸ்யையாக குறிப்பிடுகிறது ஆகமம்)
-----------------
இதுமுதல் நான்கு கவிகளில் வணிகன் முனிவர் சிறப்புரைத்தல்
260) காளைதகு கல்யாண மித்திரந் எனும்பேர்
ஆளியடு திறல்வணிகன் அரசனுயிர் அனைய
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
வாள்உருவு கின்றதுஎன் மாதவன்முன் என்றான்.
261) வெறுத்துடன் விடுத்துஅர சினைத்துகள் எனப்பேர்
அறப்பெரு மலைப்பொறை எடுத்தவன் அடிக்கண்
சிறப்பினை இயற்றிலை சினத்தெரி மனத்தான்
மறப்படை எடுப்பதுஎன் மாலைமற வேலோய்.
262) ஆகஎனின் ஆகும்இவர் அழிகஎனின் அழிப
மேகஇவண் வருகஎனின் வரும்அதுவும் விதியின்
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.
263) அடைந்தவர்கள் காதலினொடு அமர் அரசர் ஆவர்
கடந்தவர்கள் தமது இகழ்வில் கடைநரகில் வீழ்வர்
அடைந்தநிழல் போல்அருளும் முனிவும்இலர் அடிகள்
கடந்ததுஇவண் உலகுஇயல்பு கடவுள்அவர் செயலே.
264) இந்திரர்கள் வந்துஅடிபணிந்தருளுக எனினும்
நிந்தையுடன் வெந்துயர்கள் நின்அனர்கள் செயினும்
தந்தம்வினை என்றுநமர் பிறர் எனவும் நினையார்
அந்தரம் இகந்தருள் தவத்துஅரசர் தாரோய்.
265) இவ்வுலகில் எவ்வுயிரும் எம்உயிரின் நேர்என்று
அவ்வியம் அகன்று அருள்சு ரந்துஉயிர் வளர்க்கும்
செவ்விமையின் இன்றவர்தி ருந்தடி பணிந்துன்
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.
மன்னனின் செருக்கு
266) என்றுஇனிது கூறும்வணி கன்சொல்இக ழாதே
கன்றுசினமும்கர தலப்படையும் மாற்றி
இன்றிவனை என்னைதொழும் ஆறளியன் யாவன்
கன்றுதுகலள் துன்றுகரு மேனியினன் என்றான்.
267) இங்குலகு தொழுமுனியை யாவன் எனி இதுகேள்
கங்கைகுல திலகன் இவன் கலிங்கபதி யதனைப்
பொங்குபுய வலியில்பொது வின்றிமுழு தாண்ட
சிங்கமிவன் என்றுதெளி தேர்ந்துணரின் வேந்தே.
இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர் பெருமையைத் தெரிவிக்கின்றான்
268) மேகம் என மின்னினொடு வில்லுமென வல்லே
போகமொடு பொருள் இளமை பொன்றுநனி என்றே
ஆகதுற வருள்பெருகும் அறனொடுஅதன் இயலே
போகமிகு பொன்னுலகு புகுவன் என நினைவான்.
269) நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
சூடுமுடி மாலைகுழை தோள்வளையோடு ஆரம்
ஆடைமுதல் ஆயினவொடு அகல்கஎன விட்டான்.
270) வானவரும் மண்ணின்மிசை அரசர்களும் மலைமேல்
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
ஊனமன மின்றிஉயிர் களுக்கு உறுதி உள்ளிக்
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.
271) யானும் அலது எனதுஅலது இதமும் அலது என்று
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
ஏனைவினை மாசுதனது உருவின்இறு வாதே
ஞானவொளி நகைசெய்குணம் நாளும்அணி கின்றான்.
272) ஈடின்முனி யோகினது பெருமையினில் இறைவ
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
கூடுவது ஒழிந்ததுகொல் இன்றுகொலை வேலோய்
நாடுவதுஎன் ஞமலியிவை நணுகல்கள் காணாய்.
------------------------
கல்யாணமித்திரன் எனும் வணிகன், மன உறுதி படைத்தவன், இளம்காளை, சிங்கத்தை வெற்றி கொள்ளும் வீரன், யசோமதியின் உயிர் நண்பன் அவ்விடன் வந்தான். விரைவில் இருவருக்கும் இடையே புகுந்து ‘ அரசே தவமுனிவர்மேல் வாளோங்கியதன் காரணம்?’ என வினவினான்.
வெற்றி மாலை சூடிய வீரவேலேந்திய வேந்தே! தான் பெற்ற அரச வாழ்வை துச்சமெனக் கருதி, துறவறமேற்று, சீர் அறம் தாங்கி, பெருமலை போன்று பொறுமையைக் கைக்கொண்டுள்ள முனிவ பெருமானின் திருவடிகளை வணங்காது, வாளை ஓங்கியது ஏனோ?’ என மேலும் வினவினான் அவ்வணிகன்.
மதங்கொண்ட யானை போன்ற வலிமையும்,
மழை போல் அள்ளித்தரும் ஈகைகுணமும் கொண்ட மன்னா! இம்முனிகன் ஆக எனின் ஆகும், கெடுக எனுன் கெட்டுவிடும். இங்கே மழை பொழிக என்றாயின் உடன் மழை கொட்டும்; தவத்தில் ஒன்றி நிகழும் ஒரே மனமுடைய இம்முனிவரின் பெருமை இத்தகையதாகும்’ என்றான்.
‘இவரை பக்தியோடு வணங்குபவர் மறுமையில் அமர சுகம் எய்துவர். மதியாது செல்வர் இகழ்வினால் மறுமையில் ஏழாம் நரகமெய்துவர். தம்மிடம் வந்தவர்க்கு பெருமரம் போல் அருளுரையால் பிறரை மகிழ்விப்பவர்.
சினம் தவிர்த்து, உலகப் பற்றினை விட்டவர். இறைநிலை எய்தும் முயற்சியை மேற்கொண்டு வாழ்பவர்’ என்றும்.
‘இத்தவமுனிவரின் கால்களில் இந்திரர்கள் வந்து வீழ்ந்தாலும்,
அருள் புரிக என வேண்டுவராயினும் மனம் மகிழ்வதில்லை. உனைப்போன்று கோபம் கொண்டு நிந்தனை செய்தாலும் சினமின்றி பொறுமை காப்பர். புகழ்ச்சியும், இகழ்ச்சியும் ஈட்டிய வினை வழியே என்ற தெளிந்த ஞானமுடையவர். உறவு, பகை என்று எவரையும் நினைக்காதவர் ‘ என அவர் சிறப்பியல்புகளை கூறினான்.
மேலும் ‘ வேந்தே, உலகுயிர்கள் அனைத்தும் தம்முயிரே என வேற்றுமை அகற்றி, அருள் மனம் கொண்டு, பல உயிர்களைக் காக்கும் சிறப்பான நன்னெறியில் நிற்கும் இம்முனிவர் திருவடிகளை வணங்கி, உனது தீவினைகளைப் போக்கி ஆன்ம நலம் பெருக!’ என்றுரைத்தான் கல்யானமித்திரன் எனும் வணிகன்.
வணிக நண்பன் கூறியதைக் கேட்ட மன்னன் யசோமதி உயிரறுக்க உருவிய வாளை உறைக்குள் வைத்தான். அவன் சொற்களை இகழாமல்’ வணிகரே! ‘ புழுதி படிந்து கரிய மேனியராய் இருக்கும் இவர் காலடியில் யான் எப்படி வணங்க கூடும்’ என தான் என்ற எண்ணம் மேலோங்க வினவினான்.
வேந்தே! அனைவராலும் போற்றி வணங்கப்படும் இம்முனிவர் பற்றி கூறுகிறேன்,கேளுங்கள். கலிங்க நாடாளும் மன்னர், சிறந்த தோள் வலிமை மிக்கவர், மற்ற அரசர்களுடன் ஒப்பிட முடியாத சிறப்புடையவர். நாட்டை யாண்ட அரசன் என நான் கேட்டறிந்தது.
அரச வாழ்வும், செல்வமும்; மேகம் போலவும், மின்னலும், வானவில்லும் போன்று நிலையில்லாதது எனக் கருதி துறவறத்தை ஏற்றவர்.
அருள் பெருகும் நல்லறத்தை அறிந்தவர். அதனை ஏற்பவர் தேவருலகம் அடைவர் என்பதையும் தெளிந்தவர்.
மேலும் தன் கலிங்கநாடு, அவற்றுடன் அமைந்த நகரங்கள், அழகிய தேவியர், அரசக் கொடி, யானை, குதிரை, தேர்,
காலாள் ஆகிய நாற்படைகளையும், மணிமுடியையும், ஆரம் முதலான அணிகலங்களையும் நீக்கி, முறைப்படி தீக்ஷை ஏற்று திகம்பர துறவேற்றவர்.
தேவர்களும்,
வித்யாதரர்களும், நாடாளும் மன்னர்களும் வந்து வணங்கும் தவமுனிவரின் கோலத்தை கொண்டவர். குற்றமற்றவராகிய இவர் உயிர்கள் அறவழியில் செல்லும் வழியை உரைப்பவர். ஓரிடத்தில்
தங்காது காடு, மலை,பல நாடு என சுற்றித்திரிந்து கொண்டே இருப்பவர்.
உடல் தனதல்ல, நிரந்தரப்பொருளல்ல,
அது நன்மைதருவதும் அன்று என
உணர்ந்த பெருந்தவ பெரியோன் இவர். எட்டு வகையான வினைக்குற்றங்களை உடன் கலவாது, ஞானத்தினால் உயர்வும், பிறர் போற்றும் குணம் கொண்டவர்.
அரசே! ஒப்புயர்வற்ற இவரின் யோகவாழ்வைக் கண்டாய். காடுகளில் வாழும் விலங்குகளைக் கொன்ற தீவினை உன்னிடம் சேராமல் காத்தவரன்றோ! உன்னால் ஏவிப்பட்ட வெறி நாய்களும் நெருங்காமல் நின்றதைக் கண்டாய். இவர் சிறப்பரிய வேறென்ன வேண்டும். சிந்திப்பீர்!’ என்றான் நண்பனான கல்யாணமித்திரன்.
------------------------
மன்னனின் மனவருத்தம்
273) என்றுஅவன் உளங்கொள இயம்பினன் இயம்பச்
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
இன்றுஎனது பிழைதணிய என்தலை அரிந்து
நின்றமுனி சரணில்இடல் என்றுநினை கின்றான்.
274) இன்னதுநி னைந்ததிவன் என்றுகை எடுத்தே
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதகவு ஆனால்
நின்னுயிரை நீகளையின் நின்னருளது என்னாம்.
275) முன்னம்உரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
பின்னுமிகை பிறவும்உரை பேசுகிற நினைவும்
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்
பின்னைநினை கின்றஇது பிழைபெரிதும் என்றான்.
276) மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
சொன்னவில் சுதத்தமுனி தொன்மலர் அடிக்கண்
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
பன்னியருள் இறைவஎமர் பவமுழுதும் என்றான்.
277) ஆங்குமுனி அவதியின் அறிந்தபொருள் அதனை
வாங்கிஅவன் உணரும்வகை வைத்தருள் செய்கின்றான்
ஈங்குமு னியற்றிய தவத்தினில் அசோகன்
ஓங்குபுகழ் அமருலகம் ஒன்றினுள் உவந்தான்.
சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்
278) அருமணியின் ஒளிதிகழும் அமரனவன் ஆகிப்
பிரமன் உல கதனுள்மிகை பெறுகடல்கள் பத்தும்
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு
அருமையிலன் அகமகிழ்வின் மருவும்அவன் மாதோ.
279) வஞ்சனையில் அன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
அஞ்சின் மொழி அமிர்தமதி அருநரகின் வீழ்ந்தாள்
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.
------------------
அரசனின் மனம் கொள்ளுமாறு வணிகன் கல்யாணமித்திரன் முனிவர் சிறப்பை விளக்கிக் கூறியதைக் கேட்ட
மன்னன் அவர் திருவடிகளில் சிரம்பட வணங்கி நின்றான். ‘ஐயனே யான்
செய்த பிழை நீங்க, இப்போதே என் தலையை வாளால் கொய்து தங்கள் பாதங்களில்
வைப்பேன்’ என மனதிற்குள் நினைத்தான்.
அதனியுணர்ந்த அம்முனிவர்
தன் தியான நிலையிலிருந்து நீங்கி, அரசே உன் எண்ணத்தை நீக்கி விடு, உலக உயிர்களை ஒருவன்
தன் உயிர் போல் காத்திடல் வேண்டும். அதுவே கொல்லாமை பேரறமாகும். உன்னை நீயே மாய்த்துக் கொண்டால் உன் அற உள்ளம் என்னவாகும்?’ எனக் கூறி தடுத்தார்.
மன்னா, நான் கூறிய கருத்துடன் அறத்தின் விளக்கம் முடிந்து விட வில்லை.
சற்று முன் என்னை கொல்ல முயன்றாய். தற்போது உன்னையே
வெட்டிக் கொள்ள முயல்கிறாய்! இது தவறுக்கு மேல் பெரும் தவறாகும்.
‘ என்றார் முனிவப் பெருந்தகை.
(கொலை செய்வது,
தற்கொலை செய்து கொள்வதும் நரகத்தில் தள்ளும் தீவினையாகும் என ஆகமங்கள் கூறுகின்றன.)
அருள் உணர்வை விதைத்த
முனிவரின் காலில் அரசன் தன் மணிமுடி படும் படி மீண்டும் வணங்கி, ‘முனிவரே, யானும்
என் முன்னோர்களும் எய்திய
பழம்பிறப்புகளைப் பற்றி முழுதும் அறிய விரும்புகிறேன். அருள்வீராக!’
என விண்ணப்பித்தான்.
முனிவர் பெருமானும்
அதனை ஏற்று தனது அவதி ஞானத்தால் அறிந்த செய்திகளை அவனுக்கு கூறினார். அரசே உனது பாட்டன் அசோகன் தான் புரிந்த நற்றவத்தால் புகழ்மிக்க
கல்ப தேவருலகத்தில் இன்புற்று வருகிறான்’ என்றார்.
(அவதி ஞானத்தால் முற்பிறவி பற்றி அறிய முடியும் என
ஆகமங்கள் உரைக்கின்றன)
‘துறவறமேற்ற
அசோகன் அருந்தவத்தால் ஐந்தாம் கல்பமாகிய பிரம்ம கல்ப தேவருலகத்தில் மாணிக்க மணி போன்ற நிறம் கொண்ட தேவனாக வாழ்கிறான். அத்தேவசுகம் துய்க்கும் காலம் பத்துகடற்காலத்திற்கும் அதிகமாகும். நாடாண்ட போது
அழகிய மகளிருடன் இன்பம் துய்த்த அவன் அதனிலும் (பெண் சுகத்தை
விட) மேலான தேவசுகத்தை துய்த்தான்.’ என்றார்
-----------------
280) இருளின் இருள் இருள்புகையொடு அளறுமணல் பரலின்
மருள்செய்உரு வினபொருளின் வருபெயரும் அவையே
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில இசையத்
தெருளின்எழு வகைநரகக் குழிகள்இவை தாரோய்.
281) மேருகிரி உய்த்திடினும் வெப்பமொடு தட்பம்
நீரென உருக்கிடுநி லப்புரைய ஐந்தாம்
ஓரின்உறு புகைநரகி உருகியுடன் வீழ்ந்தான்
ஆருமிலள் அறனுமிலள் அமிர்தமதி யவளே.
282) ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழுது அருநரகர் ஓடிச்
சூழ்ந்துதுகை யாஎரியுள் இட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்தறிபு டைத்தார்
மூழ்ந்தவினை முனியும் எனின் முனியலரும் உளரோ.
283) செந்தழலின் வெந்தசைகள் இன்றனைமுன் என்றே
கொந்தழலின் வெந்துகொது கொதுகென உருகும்
செந்தழலின் நிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெந்தழலின் நைந்துருகி விண்டொழுகு முகனே.
284) கருகருக ரிந்தனன் உருவின் ஒரு பாவை
பெருகு எரியின் இட்டுருகும் இதுவும் இனி தேஎன்று
அருகனைய நுந்துதலும் அலறியது தழுவி
பொருபொருபொ ரிந்துபொடி யாம்உடல் எல்லாம்.
285) நாவழுகி வீழ்அமுது நஞ்சுஉண மடுத்தார்
ஆஅலறி அதுவுருகி அலமரினும் ஐயோ
சாவ அரிது இவண் அரசி தகவில்வினை தருநோய்
யாவும்விளை நிலம்அதனின் இனியவுள வாமோ.
286) முன்னுநுமர் தம்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு
இன்னும்இனிது உன்அவய வங்கள்தினல் என்றே
தன்அவய வம்பலத டிந்துஉழல வைத்துத்
தின்னஎன நொந்துஅவைகள் தின்னுமிகைத் திறலோய்.
287) திலப்பொறியின் இட்டனர்தி ரிப்பவும்நெ ருப்பின்
உலைப்பெருகு அழற்றலை உருக்கவும் உருத்துக்
கொலைக்கழுவின் இட்டனர் குலைப்பவும்உ ருக்கும்
உலைப்பரு வருத்தம்அது உரைப்பஅரிது கண்டாய்.
288) ஒருபதினோடு ஒருபதினை உந்தியதன் உம்பர்
இருபதினொடு ஐந்துவில் உயர்ந்தபுகை என்றும்
பொருவரிய துயரின்அவை பொங்கியுடன் வீழும்
ஒருபதினொடு எழுகடல்கள் அளவு ஒளித் தாரோய்.
289) தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்
அல்லல்இவை அல்லனவும் அமிழ்தமதி உறுவ
எல்லையில் இதுஇதுஎன வெண்ணியொரு நாவில்
சொல்லஉலவா ஒழிக சுடருநெடு முடியோய்.
----------------------
முனிவர் சுதத்தாச்சார்யார் மேலும் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசிய பாவி அமிர்தமதி, தொழு நோயாளி அட்டபங்கனிடன்
கள்ளத்தனமாய் கூடிக் குலவியதாலும், கணவனையும், அவன் தாயையும் விஷம் வைத்துக் கொன்றதின் தீவினையினால்
உடல் முழுதும் தொழுநோய் பரவி துன்புற்று மாண்டு போனாள். அவள்
செய்த தீவினையின் பயனால் நரகத்தில் வீழ்ந்தாள்.
மாலை சூடும் மன்னனே, துயரங்கள் விளையும் பூமியான நரகம் ஏழாகும்.
இருளின் இருள், இருள், புகை,
சேறு, மணல், கற்கள்,
மருளச்செய்யும் சிவந்த நிறமுள்ளதும் ஆகிய ஏழு நரகங்களாகும். அத்தகைய நரகங்களில் தீவினைப் பயனால் அங்கு உயிரினங்கள் பிறந்து அச்சத்துடன்
துன்பங்களை துய்க்கும்.
மேரு மலையை அங்கு வைத்தாலும் வெப்பத்தினால் உருகி நீராக ஓடும். கீழ் செல்லச் செல்ல
குளிரால் சூழ்ந்திருக்கும். அத்தகைய துயரங்கள் கொண்ட ஐந்து புரைகள்
(படலங்கள்) உள்ள ஐந்தாம் நரகத்தில் அமிர்தமதி உழலுகிறாள்.
அவளுக்கு உதவிசெய்ய யாருமில்லை. திருவறத்தை புறக்கணித்ததால்
இக்கதியை அடைந்தாள்.
ஐந்தாம் நரகில் உள்ள
பெருங்குழியில் வீழ்ந்த அப்பாவியானவளை, முன்பிருந்த நரகர்கள் விரைவாக ஓடிவந்து சூழ்ந்து, மிதித்து,
எரியும் நெருப்பில் இட்டு சுட்டனர், வாளால் பிளந்தனர்,
புண்மிகும் படி வலிய
முள் தடியால் ஓங்கி அடித்தனர். முன் செய்த வினை சினம் கொண்டால்
தப்பிப்பவரும் உண்டோ?(இல்லை யென்றே சொல்லவெண்டும்)
முன் வந்த நரகர்கள், தற்போது வந்தவர்களை, முற்பிறவியில் நெருப்பில் சமைத்த ஊனை உண்டவர்களை, நெருப்பில்
இட்ட செப்புப் பாளங்களை வாயில் திணிப்பர். வெப்பத்தால் வாய் பிளந்து
நீர் ஒழுகும். அவரோ துடிதுடித்து போவர்.
நெருப்பினால் கறுத்துப்
போன அந்நரகனிடம், செப்பினால்
செய்து நெருப்பால் உருகிய பொம்மையை’ முன்பிறவியில் கள்ளக் காதலனுடன்
தொடர்பு கொண்டு கட்டித் தழுவியது போல், இப்பாவையையும் கட்டுத்தழுவு’
என்று அதனைக் கட்டி அணைக்கச் செய்வர். அப்பாவையை
அணைத்த நரகனின் உடல் தீக்காயமுற்று பொரிந்து துடிதுடித்து வீழ்வான்.
அங்கிருந்தோர் அழுகிய
நஞ்சை உணவாக உண்ணுமாறு ஊட்டினார்கள். அலறினாலும் அந்த நஞ்சுணவினை உண்ண வேண்டியதாயிற்று. அகால
மரணம் நரகத்தில் இல்லையாதலால் மரணம் நேரவில்லை. அதனால் துன்பமே
நீடித்தது. துன்பத்தின் விளைநிலமான நரகத்தில், அரசியாக இருந்து முற்பிறப்பில் ஈட்டிய தீவினை காரணமாக
இது போன்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.
மேலும் “மிக்க வலிமையுடையோனே! முன்னர் உன் உறவினர் (கணவன், மாமியார்) எருமையும்,
ஆடாகவும் பிறந்த போது அவர்களது ஊனை தின்று திருப்தி யடைந்தாய். சற்றும் வெறுப்பில்லாமல் ஊனை உண்ட உனக்கு உன் உடம்பை துண்டாக்கி அரிந்து தருகிறோம்
இனிமையாய் உண்டு மகிழ்வாய்”. எனச்சொல்லி (அமிர்தமதி) அந்நரகனின்
உடம்பை வெட்டி, வெட்டி அவன் வாயில் தினித்தனர். அவனும் மனம் ஒடிந்து தன்னுடைய உறுப்புகளை தானே உண்ணும் நிலை ஏற்பட்டது.
முன்வினைப்பயனால் கோபங்கொண்ட
அந்நரகர்கள் இவனை எள் இட்டு அரைக்கும் செக்கில் இட்டு ஆட்டினர். நெருப்பை கக்கும் உலையில் இட்டு உருக்கினர். கொலை கழுமரத்தில்
இட்டனர். அந்நரகன் அடைந்த துன்பங்கள், துயரங்களை
சொல்லுதல் அரிதாகும்.
மாலை சூடும் மன்னவ! நூற்றி இருபத்து வில் உயர்ந்த அளவுள்ள
அந்நரகவுயிர்கள் பதினேழு கடற்காலங்களாக தன் வாழ்நாள் முழுவதும் நூற்றி இருபத்தைந்து
யோசனை உயரம் மேலே எழும்பி உடனுக்குடன் தலைகீழாக விழுந்து வருந்தும் துன்பமுடையதாகும். அது தொடர்ந்து நடைபெறும் துன்பமாகும்.
மணிமுடி சூடிய வேந்தே! முன் செய்த வினைகள் உயிருடன் தொடர, வருத்தமிகு
ஐந்தாம் நரகத்தில், உன் தாயாகிய அமிர்தமதி இப்பொது அடையும் துன்பங்கள் இவை மட்டுமல்ல,
எல்லையில்லாதவை. அவை அனைத்து துன்பங்களையும் ஒரே தடவையில் சொல்லி முடியாது.
----------------
290) எண்ணமில் இசோதரனொடு அன்னையிவர் முன்னாள்
கண்ணிய உயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
வண்ணமிது வடிவமிவை வளர்ஒளிய பூணோய்.
291) மன்னன் மயிலாய்மயிரி முள்எயின மீனாய்
பின்இருமு றைத்தகரும் ஆகியவன் ஏகி
மன்னுசிறை வாரணமது ஆகிவத மருவி
மன்னவநின் மகன் அபய னாகிவளர் கின்றான்.
292) சந்திரமுன் மதிஞமலி நாகமொடு இடங்கர்
வந்துமறி மயிடமுடன் வாரணமும் ஆகி
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
வந்துன்மகள் அபயமதி யாகிவளர் கின்றாள்.
293) இதுநுமர்கள் பவம்வினை கள் விளையும்இயல் பிதுஎன்று
எதுஇல்முனி அருளும்மொழி அவைஅவைகள் நினையா
விதுவிதுவி திர்த்து அக நெகிழ்ந்துமிகை சோரா
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.
294) ஆங்குஅப வுருசியுடன் அபயமதி தானும்
தாங்கலர்கள் சென்றுதவ அரசன் அரு ளாலே
நீங்கிய பவங்களை நினைந்தனர் உணர்ந்தார்
ஆங்கு அவர்கள் உறுகவலை யாவர்பிறர் அறிவார்.
295) தந்தையும் தந்தை தாயும் அகிய தழுவு காதல்
மைந்தனு மடந்தை தானும் ஆற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொ(நொ)ந்துஎரிஅழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்னன் ஆனான்.
296) எந்தையும் எந்தை தாயும் எய்திய பிறவி தோறும்
வெந்துயர் விளைவு செய்த வினையினேன் என்செய் கேனோ
அந்தமில் உயிர்கள் மாய வலைபல செய்து நாளும்
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன் என்செய்கேனோ.
297) அருளொடு படர்தல் செய்யா தார்உயிர்க் கழிவு செய்தே
பொருளோடு போக மேவிப் பொறியிலே என்செய் கேனோ
அருளினது உருவ மாய அடிகள்நும் அடிகட் கேயும்
தெருளலன் இனைந்த தீமைச் சிறியன் என்செய் கேனோ.
298) மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே
ஆகுஇனி யளின் ஏதும் அஞ்சிலேன் அவதி யென்கொல்
காவல அருளுக என்னக் கலங்கினன் அரசன் வீழ
மாவல அஞ்சல் என்றம் மாதவன் உரைவ ளர்த்தான்.
-----------------------
முனி சுதத்தாச்சாரியார் மேலும் ‘ஒளி பொருந்திய மணிகளை அணிந்த யசோமதி மன்னா! யசோதரனும், அவன் தாய் சந்திரமதியும் முன்னாளில் மாவினால் கோழி செய்து உயிருள்ளாதாக பாவித்து மாரிக்கு பலியிட்ட காரணத்தால் தீவினை ஏற்று தொடர்ந்து விலங்குப்பிறவியில் உழன்று பல துன்பங்களுக்கு ஆளாயினர். இதுவே தீவினையின் தாக்குதல் ஆகும்.
வேந்தே இந்நாட்டை ஆண்ட யசோதரன் மன்னன் தீவினையால் ஆண்மயிலாகவும், முள்ளம்பன்றியாகவும், உலோகித மீனாகவும், இருமுறை ஆட்டுக்கிடாவாகவும் பிறகு கோழியாகவும் பிறந்து அக்கதிக்கேற்ற விரதமேற்றதினால் தற்போது உன் மகனாகவும் பிறந்து அபயருசியாக வளர்ந்து வருகின்றான்.’ என அவதிஞானத்தின் வழியே பகன்றார்.
சந்திரமதியான அரசி நாயாகி, கரும்பாம்பாகி, முதலையாகி, பெண்தகராகி(ஆடு), எருமையாய், கோழியாக பிறந்து அகம்பன முனிவர் இயம்பிய நல்லறங்களைக் கேட்டு தகுந்தவிரதங்களை கைக்கொண்டு இப்போது உன் மகளாய் அபயமதியாய் வளர்ந்து வருகிறாள்’ என்றார் முனிபுங்கவர்.
மன்னவ, இதுவே உன் முன்னோர்கள் அடைந்த முற்பிறப்புகளாகும்’ என அருளினார் ராகதுவேஷமில்லா சுதத்த முனிவர். தன் தாயும், தந்தையும், பாட்டியும் எய்திய பிறவிகளை முனிபுங்கவர் வாயிலாக அறிந்த யசோமதி மனம் நடுங்கி மயக்கமுற்றான்.
அவ்வழியே அபயருசியும், அபயமதியும் தாம் பெற்ற பிறவிகளை அறிந்து, தாங்கொணாத் துயரம் அடைந்தனர். அருந்தவம் புரியும் சுதத்த ஆச்சாரியர் வாயிலாக இன்றி வேறு வழியில் பிறவி வரலாற்றின் வழிவந்த துன்பங்களை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்.
(யசோமதியிடன் முனிவர் கூறியதை பிறர் மூலம் அபயருசியும், அபயமதியும் தெரிந்து கொண்டனர் என உணரவேண்டும்)
தன் தந்தையும், தந்தையின் தாயுமான அபயருசியும், அபயமதியும் பல விலங்கு பிறவிகளில் பெற்ற துன்பங்களை மன்னன் யசோமதி எண்ணி, எண்ணி தேம்பி அழுது புலம்பினான். கொழுந்து விட்டு எரியும் தீயில் விழுந்த செயலைப் போன்று பெருந்துன்பம் எய்தினான்.
எனது தந்தையும், தந்தையின் தாயும் ஒவ்வொரு பிறவியிலும் அடைந்த துன்பத்தை கேட்டபின் யானும் தீயோன் என்பது புரிகிறது. எண்ணிலடங்கா உயிர்களை தினமும் கொன்றவன். தனக்குத்தானே தீவினையாகிய வலையைபின்னி அதில் சிக்கி கொடிய நரகத்தில் வீழ்கின்றன. யானும் அத்தீவினைகளைச் செய்துள்ளேன்’ என மனம் வருந்தினான் மன்னன்.
அருளறம் இன்றி உயிர்கட்கு பெரும் துன்பதை தந்து பொருளையும், சுகத்தையும் விரும்பிய நான் நல்வினையற்றவன் ஆனேன். மாவினால் கோழி செய்து கொன்ற காரணத்தினால் இவ்வளவு பிறவிகள் என்றால், சற்றும் அறிவில் தெளிவில்லாமல் கருணையுள்ளம் கொண்ட உங்களையும் கொல்ல துணிந்தேன். அற்பனாகிய என்வினைகழிய என்ன செய்வேனோ? என மனம் உருகி நின்றான். எனக்கு நேரும் நிலைதான் என்னவோ என முனிவர் திருவடிகளில் வீழ்ந்தான்.
அம்முனிவர் பெருமான் மாவீரனே, நீ அஞ்ச வேண்டாம்’ என அவனைத்தேற்றி;
வேந்தே இந்நாட்டை ஆண்ட யசோதரன் மன்னன் தீவினையால் ஆண்மயிலாகவும், முள்ளம்பன்றியாகவும், உலோகித மீனாகவும், இருமுறை ஆட்டுக்கிடாவாகவும் பிறகு கோழியாகவும் பிறந்து அக்கதிக்கேற்ற விரதமேற்றதினால் தற்போது உன் மகனாகவும் பிறந்து அபயருசியாக வளர்ந்து வருகின்றான்.’ என அவதிஞானத்தின் வழியே பகன்றார்.
சந்திரமதியான அரசி நாயாகி, கரும்பாம்பாகி, முதலையாகி, பெண்தகராகி(ஆடு), எருமையாய், கோழியாக பிறந்து அகம்பன முனிவர் இயம்பிய நல்லறங்களைக் கேட்டு தகுந்தவிரதங்களை கைக்கொண்டு இப்போது உன் மகளாய் அபயமதியாய் வளர்ந்து வருகிறாள்’ என்றார் முனிபுங்கவர்.
மன்னவ, இதுவே உன் முன்னோர்கள் அடைந்த முற்பிறப்புகளாகும்’ என அருளினார் ராகதுவேஷமில்லா சுதத்த முனிவர். தன் தாயும், தந்தையும், பாட்டியும் எய்திய பிறவிகளை முனிபுங்கவர் வாயிலாக அறிந்த யசோமதி மனம் நடுங்கி மயக்கமுற்றான்.
அவ்வழியே அபயருசியும், அபயமதியும் தாம் பெற்ற பிறவிகளை அறிந்து, தாங்கொணாத் துயரம் அடைந்தனர். அருந்தவம் புரியும் சுதத்த ஆச்சாரியர் வாயிலாக இன்றி வேறு வழியில் பிறவி வரலாற்றின் வழிவந்த துன்பங்களை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்.
(யசோமதியிடன் முனிவர் கூறியதை பிறர் மூலம் அபயருசியும், அபயமதியும் தெரிந்து கொண்டனர் என உணரவேண்டும்)
தன் தந்தையும், தந்தையின் தாயுமான அபயருசியும், அபயமதியும் பல விலங்கு பிறவிகளில் பெற்ற துன்பங்களை மன்னன் யசோமதி எண்ணி, எண்ணி தேம்பி அழுது புலம்பினான். கொழுந்து விட்டு எரியும் தீயில் விழுந்த செயலைப் போன்று பெருந்துன்பம் எய்தினான்.
எனது தந்தையும், தந்தையின் தாயும் ஒவ்வொரு பிறவியிலும் அடைந்த துன்பத்தை கேட்டபின் யானும் தீயோன் என்பது புரிகிறது. எண்ணிலடங்கா உயிர்களை தினமும் கொன்றவன். தனக்குத்தானே தீவினையாகிய வலையைபின்னி அதில் சிக்கி கொடிய நரகத்தில் வீழ்கின்றன. யானும் அத்தீவினைகளைச் செய்துள்ளேன்’ என மனம் வருந்தினான் மன்னன்.
அருளறம் இன்றி உயிர்கட்கு பெரும் துன்பதை தந்து பொருளையும், சுகத்தையும் விரும்பிய நான் நல்வினையற்றவன் ஆனேன். மாவினால் கோழி செய்து கொன்ற காரணத்தினால் இவ்வளவு பிறவிகள் என்றால், சற்றும் அறிவில் தெளிவில்லாமல் கருணையுள்ளம் கொண்ட உங்களையும் கொல்ல துணிந்தேன். அற்பனாகிய என்வினைகழிய என்ன செய்வேனோ? என மனம் உருகி நின்றான். எனக்கு நேரும் நிலைதான் என்னவோ என முனிவர் திருவடிகளில் வீழ்ந்தான்.
அம்முனிவர் பெருமான் மாவீரனே, நீ அஞ்ச வேண்டாம்’ என அவனைத்தேற்றி;
--------------------------------
299) அறிவிலர் ஆய காலத் து அமைவுஇல செய்த எல்லாம்
நெறியினில் அறிவது ஊற நின்றவை விலகி நிற்பர்
அறியலர் வினைக ளாலே அருநவை படுநர்க்கு ஐய
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கண் காணாய்.
300) அருள்புரி மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அபய நல்கிப்
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்டு
இருள்புரி வினைகள்சேரா இறைவனது அறத்தைஎய்தின்
மருள்செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால்.
301) என்றலும் அடிகள் பாதத்து எழின்முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைகள் தீரக் கருணையின் உருகி நெஞ்சில்
சென்றனன் அறிவு காட்சி திருவறத்து ஒருவன் ஆனான்
வென்றவர் சரண் அடைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.
302) வெருள்செயும் வினைகள் தம்மை வெருவிய மனத்த னாகி
மருள்செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
அருள்பெருகுஉவகை தன்னால் அமைவிலன் அளியன் உம்மைத்
தெருள்அலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்
303) ஓருயிர்த் தோழ னாகி உறுதிசூழ் வணிகள் தன்னை
ஆருயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு உடைய நீயும்
நேர் எனக்கு இறைவ னாக நினைவலென்று இனிய கூறிப்
பார்இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன்மன்னன் ஆனான்.
304) மணிமுடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை
அணிமுடி அரசர் தாமும் அவனுயிர்த் துணைவன் ஆய
வணிகனும் மற்று ளாரும் மாதவத்து இறையை வாழ்த்தித்
துணிவனர் துறந்து மூவார் தொழுது எழும் உருவம்கொண்டார்.
---------------------
அரசே, மாந்தர் நல்ல அறிவு இல்லாதவராயிருந்த காலத்தில் பொருத்தமற்ற செயல்களைப் பின்னர் உணர்ந்து, நல்லற நெறியில் மனத்தைச் செலுத்தி வாழ்வர். அறத்தின் மாண்பை உணராமல் தீவினைகளால் பொறுத்தற்கரிய துன்ப முற்றவர்களுக்கு அணுவிரதங்கள் அருளிய நன்மையை நீயும் அவ்விதம் மேற்கொண்டு நன்மையடைவாயாக! என்றார் முனிவர்.
அரசே! இவ்வுலகில் அருள் புரிகின்ற மனத்தினராகி, பல்லுயிர்களுக்கும் அபயம் நல்கி, கடும் பொருட்பற்றின்மை, கொல்லாமை, களவின்மை, காமமின்மை,
பொய்யாமை ஆகிய அணுவிரதங்களை ஏற்க வேண்டும். அருகன் அருளிய நல்லற நெறியில் நின்று, இருவினைகளும் உயிரினில் சேராமல் தடுக்க வேண்டும். அவ்விதம் மேற்கொள்வாயாயின் மறுமையில் அமரசுகம் கிடைக்குமேயல்லாது துன்பம் தொடராது’ என்றார் முனிவர்.
இவ்வாறு சுதத்த முனிவர் கூறியருளியதும்,
அம்முனிவரர் திருவடிகளில் அழகிய முடியில் இருந்த மலர்கள் விழும் வண்ணம் வீழ்ந்து வணங்கினான். நெடுநாட்பட்ட தீவினைகள் தீர வேண்டி, கருணையை உள்ளத்தில் கொண்டவனாகி, அன்புள்ளம் கொண்டவனான். நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய மும்மணி ஏற்கும் மனஉறுதி படைத்தான். வினைகளை வென்ற அருகனை சரண் அடைந்தோர், வெற்றியே பெறுவர் அன்றோ?
மன்னன் யசோமதி தான் செய்த தீவினைகளை நினைத்து வருந்தமுற்று,
அருட்குணம் மிகுந்த தன் மகன் அபயருதி, மகள் அபயமதியை நோக்கி அன்பு கொண்டவனாகி அறிவில் தெளிவுறாமல் முன்பிறவியில் உங்களுக்கு நான் செய்த தீமைகளை பொருத்தருள்க’ என வேண்டினான்.
யசோமதி அரசன் தனக்கு ஒப்பில்லாத உயிர்த்தோழனாகி நன்மையை ஆராய்ந்து உரைத்த வணிகனான நண்பன் தன்னை நோக்கி ‘ ஐயனே! உயிர்களுக்கு அருள் புரிவராகிய இம்முனிவரோடு, உன்னையும் ஆச்சார்யராகவே யான் கருதுகிறேன்’ என்று கூறினான்.
நாட்டை துறக்கும் எண்ணம் கொண்ட மனத்தினராய் இருந்திட்டான்.
யசோமதி இரத்ன கீரீடத்தை தன் மகன் அபயருசிக்கு சூட்டி நாடாளும் பொறுப்பை அவனுக்கு அளித்தான். அவனும் அவனது அரச நண்பர்களும், உயிர் நண்பனான கல்யாணமித்திரன் எனும் வணிகனும் மற்றும் பலரும் தவவேந்தராகிய சுதத்த முனிவரை வணங்கி, மனஉறுதியுடன் பற்றுக்களை நீக்கி, தேவரும் வணங்கி எழும் திகம்பர முனித்துறவு ஏற்றனர்.
-----------------------------
305) தாதைதன் துறவு முற்றத் தான்உடன் பட்டது அல்லால்
ஓதநீர் வட்டம்தன்னை ஒருதுகள் போல உள்ளத்து
ஆதரம் பண்ணல் செல்லா அபயனும் அரசு தன்னைக்
காதலன் குமரன் தம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.
306) மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
பேதையம் பிணைஅ னாளும் பிறப்புஇனில் உணர்ந்த பின்னர்
ஆதரம் பண்ணல் போகத்து அஞ்சினர் நெஞ்சின் அஞ்சாய்
மாதவன் சரணம் ஆக வனமது துன்னி னாரே.
307) வினைகளும் வினைகள் தம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
தனசரண் அணையு ளார்க்குத் தவஅர சர் அருளத் தாழ்ந்து
வினையின விளைவு தம்மை வெருவினம் அடிகள் மெய்யே
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்தும் என்றார்.
308) ஆற்றல் அமையப் பெற்றால் அருந்தவம் அமர்ந்து செய்மின்
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
ஏற்றஅந் நிலைமை தன்னை இதுபொழுதுஉய்மின் என்றான்
ஆற்றலுக்கு ஏற்ற ஆற்றால் அவ்வழி ஒழுகு கின்றார்.
309) அருங்கல மும்மை தம்மால் அதிசயம் உடைய நோன்மைப்
பெருங்குழு ஒருங்குசூழப் பெறற்கரும் குணங்கள் தம்மால்
கருங்கலில் சுதத்தன் என்னும் துறவினுக்கு அரசன் இந்நாள்
அருங்கடி கமழும் சோலை அதனுள்வந் தினிது இருந்தான்.
310) அனசன அமர்ந்த சிந்தை அருந்தவன் இசோ மதிக்குத்
தனயர்கள் தம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
எனஅவர் இறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
அனையவ ராக வெம்மை அறிகமற்று அரச என்றான்.
311) இணையது பிறவி மாலை எமரதும் எமதும் எண்ணின்
இனையதுவினைகள்பின்னாள் இடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின்
இனையது பெருமை தானும் இறைவனது அறத்தது என்றான்.
312) செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுஉறும் பவம் தோறும்
எய்து மாயிடில் தீர்ந்திடாக் கொலையிஃது இருநில முடிவேந்தே
மையல் கொண்டுஇவண்மன்னுயிர் எனைப் பல வதைசெயவரு பாவத்து
எய்தும் வெந்துயர் எப்படித்து என்றுஉளைந்து இரங்குகின்றனம் என்றான்.
--------------------
தன் தந்தையின் துறவு ஏற்க வேண்டியே நான் அரச பொறுப்பை ஏற்க உடன்பட்டேன் அன்றி கடல் சூழ்ந்த நில உலகை முழுவதையும் ஆளும் பொறுப்பை ஒரு துகளுக்கு சமமாகவே யான் கருதுகின்றேன்.
அதில் பற்றில்லாதவனாகிய அபயருதியும் தன் அன்பு சகோதரன் அசோகனிடம் அரசை ஒப்படைத்தான்.
சுதத்த முனிவர் திருவாய் மலர்ந்து அருளிய உரையால் அபயருசியும், மங்கை அபயமதியும் தம் பழம்பிறப்புகளை உணர்ந்தனர். அதனால் உலகியல் பொருட்களை விஷமாக கருதி அஞ்சியவர்களாய், அம்மாமுனிவரையே தமக்கு புகலிடமாய் கருதி அவர் இருந்த வனம் சென்றனர்.
அவ்விளைஞர்கள் இருவரும் வினைகளையும், அவ்வினைகளால் விளையும் பயனும் நினைத்து வாழ்வில் வெறுப்புற்று தன் பாதங்களையே ஆதாரமாகவுடைய சங்கங்களுக்கு, தவவேந்தராகிய சுதத்தமுனிவர் அறம் உரைத்த போழ்து அங்கு சென்று வணங்கி, ஐயனே! வினைகளின் விளைவுகளுக்கு யாம் அஞ்சினோம். அருகன் திருவடிகளை வணங்கி, நற்றவம் மேற்கொள்ள துணிந்தோம். எமக்கு அருள்வீராக!’ என இருவரும் (தீக்ஷை ஏற்க) வேண்டினர்.
அவ்விருவரையும் வாழ்த்தி ‘ தவம் ஏற்றுச் செய்யத்தக்க வல்லமை வரும் வயதில் அருந்தவம் ஏற்றலாம். இப்போது சய்யமா சய்யமம் என்று சொல்லக் கூடிய இல்லறத்தின் பதினோராம் நிலையாகிய உத்திஷ்ட பிண்ட விரதத்தை ஏற்று ஒழுகுங்கள்’ என்று கூறினார். அவர்களும் முனிவர் கூறிய வண்ணமே அவ்விரதத்தை ஏற்று ஒழுகினர்.
நற்காட்சி,
நல்ஞானம், நல்லொழுக்கம் எனும் மும்மணி என்னும் அதிசயம் உடைய நோன்மைப் பெரும் சங்கத்தினர் ஒருங்கே நம்மைச் சூழ்ந்து வர, பெறுதற்கரிய நற்குணங்களால் குற்றங்கள் இல்லாத சுதத்தன் என்னும் துறவரசன், மாதவத்தலைவர்நல்மணம் வீசும் நம் நகரச்சோலைக்கு தம் குழுவினருடன் விஜயம் செய்துள்ளார்கள்’
என அபயருசி மாரிதத்தனுக்கு கூறினான்.
உண்ணாநிலை விரதத்திற்கு அமர்ந்த தூய சிந்தனையராகிய சுதத்த முனிவர் யசோமதியின் மக்களாகிய நீங்கள் இருவரும் அனசன (உண்ணாவிரதம்) தவத்தை ஏற்காதவராயின்; சரியைக்கு (தூய சிராவகர்கள் இல்லம் நோக்கி உணவு வேண்டி செல்லுதல்) செல்லுங்கள் என்று கூறினார். அதனால் இருவரும் முனிவபெருமானை வணங்கி இந்நகரத்துக்குள்ளே மெல்ல நடந்து வந்தனர். அவர்களே நாங்கள் இருவரும் எனபதை அறிவீர்களாக! என அபயருசி மாரிதத்த மன்னனிடம் தெரிவித்தான்.
ஆராய்ந்து பார்த்தால் எமது உறவினர்களும் யாமும் எய்திய பிறவிச் சுழற்சி இத்தன்மையதாகும் என்பது புரியும். நம் தீவினைகள் பயன் அளிக்க வேண்டிய காலத்தில் துன்பம் அளிப்பதும் இது போன்றதே. சினம், காமம் முதலிய குணத்தின் இயல்பை ஆராயுமிடத்து இத்தகையதாகும். அருகப்பெருமான் அருளிய நல்லறத்தின் பெருமையும் இத்தகையதாகும் என்பது தெளிவாகும் என்றான் அபயருசி.
வேந்தே! மாவினால் செய்த தோழியின் உருவை பலியிட்ட(கொலை) செய்த சிறிய தீவினையின் காரணமாக பெற்ற பிறவிகளிலும் தொடர்ந்து கொடுந்துன்பமமே விளைந்ததை நோக்கும் போது, இங்கே விலங்குகளையும்,மானிடரையும் பலியிடுகின்ற பெருங்கொலை தீரா பெரும்பாவத்தை உண்டாக்கு மல்லவா? அறிவில் தெளிவின்றி செய்யும் உயிர்வதையினால் ஏற்படும் கொடுந்துன்பம் எத்தகையது என மனம் வருந்தி இருவரும் இரங்குகிறோம்’ என மன்னன் மாரிதத்தனிடம் அபயருசி கூறினான்.
--------------------
313) ஐய நின்னரு ளால்உயிர்க் கொலையினில் அருவினை நரகம்தாழ்ந்து
எய்தும்வெந்துயர்எனைப்பல கோடி கோடியின்உறுபழிதீர்ந்தேன்
பொய்யது அன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக
மையின் மாதவத்து ஒருகடல் ஆடுதல் வலித்தனன் இதுவென்றான்.
314) இன்சொல் மாதரும் இளங்கிளைச் சுற்றமும்
எரித்திரள் எனவஞ்சிப்
பொன்செய் மாமுடிப் புதல்வருள் புட்பதந்
தற்கிது பொறைஎன்றே
மின்செய் தார் அவன் வெறுத்தனன் அரசியல்
விடுத்தவர் உடன்போகி
முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரர்
தொழுதுநன் முனியானான்.
315) வெய்ய தீவினை வெருவுறு
மாதவம் விதியினின்று உதிகொண்டான்
ஐய தாம்அதி சயமுற
அடங்கினன் உடம்பினை இவண்இட்டே
மையல் வானிடை அனசனர் குழாங்களுள்
வானவன் தானாகித்
தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
தொகுதியின் மகிழ்வுற்றான்.
316) அண்ண லாகிய அபயனும் தங்கையும்
ஆயுகம் இகையின்மை
நண்ணி நாயக முனிவனி அறிந்தனர்
நவின்றநற் குணம் எல்லாம்
கண்ணி னார்தமது உருவின்
உடலங்கள் கழிந்தன கழி போகத்து
எண்ணில் வானுல கத்திரண்டு ஆவதின்
இமையவர் தாமானார்
317) அம்பொன் மாமுடி அலர்கதிர்க் குண்டலம் அருமணி திகழ் ஆரம்
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழல்முதலாக
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களின் நலம்பொலிந்து அழகார்ந்த
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவர் ஆனாரே.
318) வந்துவானவர்திசைதொறும் வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
மந்த மாருதம் துந்துபி வளர்இசை மலிந்தன மருங்கெங்கும்
அந்தில் ஆடினர் பாடினர் விரும்பிய அரம்பையர் அருகெல்லாம்
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந்தார்
319) மாசின் மாமணி மேனியின் வாசம்ஓர் ஓசனை மணநாற
தேசு ஓர்ஓசனை திளைத்திட முளைத்தெழு தினகரன் அனையார்கள்
ஆசில் எண்குணன் அவதியொடு அமைந்தனர் அலைகடல அளவெல்லாம்
ஏசுஇல் வானுலகு இணையில் இன்பத்தினில் இசைந்துடன் இயல்கின்றார்.
320) வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
தருவது சுரகதி தந்து பின்னரும்
பொருவறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்மினே.
--------------------------
மன்னன் மாரிதத்தனும் மனம் நெகிழ்ந்து ‘ ஐயனே உனது கிருபையால் உயிர்களைக் கொலை செய்யும் பாவத்திலிருந்து விலகினேன், அன்றி நரகத்தில் அழுந்தி அடைகின்ற கொடிய துன்பங்கள் எத்தனையோ கோடி யிருந்திருக்கும், உன்னுடைய கருணையினால் விடுதலை பெற்றேன்.
நீ உரைத்த
நன்னெறியை யான் தெப்பமாக கொண்டு, குற்றமற்ற அருந்தவமாகிய ஒப்பற்ற
கடலில் நான் குளித்தெழுவேன் என்பது உறுதி’ என்றான்.
இனிய சொல்லையுடைய மகளிரும், இளைஞராகிய சுற்றத்தையும் தீயைப்போன்றது
என அஞ்சினான். அரசியலில் வெறுப்புற்று தனது புதல்வர்களில் புட்பதந்தன்
என்பவனுக்கு மணிமுடி சூட்டினான். பின் அபயருசி, அபயமதி இருவருடன் பூஞ்சோலைக்கு சென்று அங்கு தங்கியுள்ள சுதத்தமுனிவரை வணங்கி,
அவரிடம் துறவு ஏற்றான்.
பின்னாளில் துறவறத்தை
ஏற்ற மாரிதத்தன் தீவினைகளை அழிக்கக்கூடிய மகாவிரத்தினை ஏற்றதினால் வியப்புறும் சாதனையை
பெற்றான். ஐம்பொறிகளை அடக்கியதினால்
அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததும் அமரர் உலகத்தினை அடைந்தான். அங்கு அழகிய தேவமாதர்களுடன் கூடி இன்புற்றிருந்தான்.
சிறந்த குணங்களையுடைய
அபயருசியும், அபயமதியும்
சுதத்த ஆச்சாரியரை வணங்கிய போழ்து அவருடைய ஆயுட்காலம் சொற்பம் என்பதை உணர்ந்தனர்.
எனவே அருகப் பெருமான் அருளிய நன்னெறிகளை இறக்கும் சமயத்தில் மனதில் சிந்தித்தனர்.
தூய எண்ணங்களுடன் இறந்த அவர்கள் இருவரும் இரண்டாம் கல்பமாகிய ஈசான சொர்க்கத்தில்
தோன்றினர். ஆழகிய முடியும், காது குண்டலங்களும்,
மணி யாரங்களும், தோள் வளை கடகங்களும், இருவரும் அணிந்து அமரசுகமும் பெற்று மகிழ்ந்தனர்.
(இறுதி சிந்தனை இனியதாய் அமைந்தால் மறுபிறப்பு சிறப்பானதாய் அமையும் என்பது சமண ஆகமக் கருத்து)
அவர்கள் இருவரும் தேவருலகத்தில் தோன்றியவுடன் எத்திசையிலும் மலர் மழையும், இளந்தென்றலும்,
துந்துபியின் மிக்க ஓசையும் நிறைந்தன. சாமனிக தேவர்கள அதனை
அறிந்து எல்லாத்திசைகளினின்றும் வந்து வாழ்த்தி வணங்கினர். அவ்விடத்தில் ஆடிப்பாடினர். தேவியர் காமக் கணை தொடுத்து காதலுற்று ஒரு சேர இருவரையும் சூழ்ந்தனர்.
கடலில் தோன்றும் காலைக்கதிரவனைப் போன்ற அவ்விரு தேவர்களும் பதினாறு குற்றங்கள் நீங்கிய மாணிக்கம் போல் விளங்கினர். அவர்கள் மேனியின் வாசம் ஒரு யோசனை தூரம் மணம் கமழவும், தேகத்தின் ஓளி ஒரு யோசனைதூரம் ஒளிரவும் குற்றமற்ற அணிமா முதலிய எண்குணங்களுடன்,
அவதிஞானமும் பெற்று விளங்கினர். அவ்விண்ணுலகில் இருவரும் இரு கடற்காலம் இணையிலா தேவசுகம் களித்திருந்தனர்.
திருவற நெறியானது வந்தடையும் அஞ்சத்தக்க வினைகளின் வலிமையை விலக்கும் தன்மையது. தேவகதியை நல்கி, பின் மனிதகதியில் பிறந்து ஒப்பற்ற வீடுபேற்றை அளிக்கும். எனவே மாந்தர்கள் அனைவரும் நல்லற நெறியினை உணர்ந்து ஏற்று ஆன்ம விழிப்பு பெறுவோமாகுக.
யசோதர காவியம் மூலமும் கதை விளக்கமும் நிறைவுபெற்றன.
-----------------
No comments:
Post a Comment